Thursday, 22 January 2026

கொடுங்காற்றில் ஒரு விளக்கு - லல்லா






 

பதினான்காம் நூற்றாண்டில் காஷ்மீரில் வாழ்ந்தவர் லல்லா. கலகக்காரத் துறவியும் கவிஞருமான அவர் லல்லா யோகினி, லல்லா அர்ஃபிகா, லல்லேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். தற்கால காஷ்மீர் மொழி இலக்கியத்துக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த காஷ்மீர் பண்பாட்டுக்கும் அடித்தளமாக அமைந்தவை அவருடைய ‘வாக்கு’கள். இன்றைய நமது புரிதலின்படி, அவரது ‘வாக்கு’களை ‘கவிதை’கள் என்றும், அவரை ‘கவிஞர்’ என்றும் சொல்ல முடியாது.  வாய்மொழியாக அவரிடமிருந்து வெளிப்பட்ட ‘வாக்கு’கள், நூற்றாண்டுகள் கடந்தும் காஷ்மீர் மக்களிடையே இன்றும் தொடர்ந்து உயிர்ப்புடன் புழங்கி வருகின்றன. அவற்றுள் பல பழமொழிகளாகவும், உதாரண வாக்கியங்களாகவும் மருவியுள்ளன.

பழங்காலத்திலும் மத்திய காலத்திலும் பெரும் சிந்தனையாளர்களும் ஆன்மீக ஞானிகளும் காஷ்மீரில் தோன்றினர். ஆனால், அவர்களுடைய ஆக்கங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்திலேயே இருந்தன. பதினொன்றாம் நூற்றாண்டில் காஷ்மீருக்குள் இஸ்லாமியர்கள் நுழைந்தபோது, பல்வேறு அரசியல், மத, சமூக, காரணங்களால் காஷ்மீர் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்திக்க நேரிட்டது. முன்னோர்கள் சேர்த்து வைத்த பாரம்பரியமான அறிவுச் செல்வங்கள் அவர்களுக்கு எட்டாமல் போயின. காலப்போக்கில் இஸ்லாமுக்கு முந்தைய காஷ்மீருக்கும் இஸ்லாமிய காஷ்மீருக்குமான ஒரு இடைவெளி விழுந்தது. மிக முக்கியமான இந்த வரலாற்றுப் பள்ளத்தின் இரு முனைகளையும் இணைக்கும் மிக உறுதியான பாலமாக விளங்கியவர் லல்லா. பல நூற்றாண்டுகளாக காஷ்மீரில் உருவாகியிருந்த ஆன்மீக மரபின் முக்கியமான ஆளுமையான லல்லாவுக்கு உடனடி முன்னோடிகளாய் இருந்தவர்கள் வசுகுப்த ரிஷி, ஆச்சாரிய சோமாநந்த், ஆச்சாரிய உத்பல் தேவ், ஆச்சாரிய அபிநவகுப்தா உள்ளிட்ட துறவிகளும் ஞானிகளுமாவர்.

லல்லாவின் கவிதைகள் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டவை அல்ல. அவரால் சொல்லப்பட்டவை. தன்போக்கில் தனியே அலைந்து கொண்டிருந்த அவர் அவ்வப்போது சொன்ன சொற்கள் அல்லது சொற்றொடர்களே ‘வாக்கு’கள் என்று வழங்கப்படுகின்றன.  அவரது வாக்குகளைக் கேட்டவர்கள் அவற்றை மந்திரங்களாகவும் பாடல்களாகவும் உள்வாங்கிக் கொண்டு மனப்பாடம் செய்து மற்றவர்களிடம் அதை திருப்பிக் கூறினர். அவ்வாறு வழிவழியாக சொல்லிக் கேட்கப்பட்ட லல்லாவின் வாய்மொழிகளே இன்று காஷ்மீர் முழுக்கவும் மந்திரங்களாக, பாடல்களாக, கவிதைகளாக ஒலிக்கின்றன. காலங்கள் கடந்தும் அவை காஷ்மீர் மக்களின் ஒட்டுமொத்த நினைவில் பதிந்திருக்கக் காரணங்கள் மூன்று. முதலாவது, லல்லா தன் ‘வாக்கு’களை மக்களிடையே புழங்கிய காஷ்மீர் மொழியிலேயே வெளிப்படுத்தினார். இரண்டாவது, அந்த வாக்குகள் சாதாரண மனிதர்களும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் எளிதாக மனப்பாடம் செய்யத்தக்கதாகவும் இருந்தன என்பது.  அவை அன்றைக்கு வழக்கிலிருந்த பல நடைமுறைகளை விமர்சித்தன, கேள்விகேட்டன என்பது மூன்றாவது முக்கியமான காரணம். 

மனிதனின் இயல்பான ஆன்மீக உணர்வை சுயநல நோக்குடன் திசைதிருப்பி அழிக்கும் எல்லாவிதமான அடக்குமுறை அமைப்புகளுக்கும் எதிராக குரல் கொடுத்தார் லல்லா. தனது காலத்தில் நிலவிய சமத்துவமின்மை, அநீதி, மூடப்பழக்கங்கள் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்தார். லல்லாவின் கவிதைகள் மரபின் தொடர்ச்சி மட்டுமல்ல, கூடவே மரபை எதிர்ப்பதும் விமர்சிப்பதும் உடைப்பதுமாகும். அவர் எழுப்பிய கலகக் குரல் முன்மாதிரியற்றது. அப்போதிருந்த அனைத்து சமூக, அரசியல், மத அமைப்புகளின் இருப்பைக் குறித்து அவர் கேள்விகளை எழுப்பினார். இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு கடந்து போகவேண்டும் என்ற மனநிலைக்கு முற்றிலும் எதிரானவராக இருந்தார். அறிவுக்கும் மரபுக்கும் பாதுகாவலர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டிருந்த கற்ற, உயர்குடி சமஸ்கிருத பண்டிதர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். தான் குருவிடமிருந்து கற்றும் தன் அனுபவத்திலிருந்து நேரடியாக கண்டும் உணர்ந்த ஆன்மீகப் பாதையையும் அதன் செய்திகளையும், சாதாரண மக்களின் மொழியான காஷ்மீரியில் வெளிப்படுத்தினார். தனது சொற்களையும் வாக்குகளையும் காஷ்மீரியில் வெளிப்படுத்தியதன் மூலம் சாதி, இனம், நிறம், பால், மதம், பிரதேச வேறுபாடுகளின்றி அவை அனைத்துத் தரப்பினருக்கும் உரியதாக அவர் உறுதிப்படுத்தினார். இதனால், ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு சமூக ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக அவர் பார்க்கப்பட்டார். இந்தக் கலகக்குரலை அடக்கும்பொருட்டு அப்போதிருந்த மேல்வர்க்கத்தினரும் மரபின் பாதுகாவலர்களும் அவரை பைத்தியக்காரியாக, புத்திபேதலித்தவராக சித்தரித்தனர். இதன் விளைவாக அவரது சமகாலத்திலும், பிற்காலத்திலும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட எந்தவொரு வரலாற்றுக் குறிப்பிலும் லல்லாவைப் பற்றிய செய்திகள் எதுவும் இடம் பெறவில்லை.

லல்லா சைவ மரபைச் சேர்ந்தவர். ஆனால், அதன் சடங்காச்சாரங்களை முற்றிலுமாக புறக்கணித்தார். தன் கவிதைகளின் வழியாக இந்தப் புறக்கணிப்பை வலுவாக வெளிப்படுத்தினார். சடங்குகளின் வழியாக கடவுளை வழிபடுவதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எந்தவிதமான ஆன்மீகப் பலனும் இல்லாத இதுபோன்ற காரியங்களில் முதிர்ச்சியற்றவர்களே ஈடுபாடுவார்கள் என்று கடிந்தார். தனக்கென்று எந்தவித உடமைகளையும் கொண்டிருக்காத அவருக்கு வீடோ வாசலோ கிடையாது. சிலை வழிபாடு, உயிர் பலி, விரதங்கள், புனித யாத்திரைகள், மந்திரங்களை ஓதுவது ஆகியவற்றைக் குறித்தும் அவருக்கு கடுமையான விமர்சனங்களே இருந்தன. தனது சுய ஆன்மீக அனுபவங்களின் அடிப்படையில் இவற்றை மறுபரிசீலனை செய்த பிறகே அவற்றைக் குறித்து தன் ஆழமான கருத்துகளை வெளிப்படுத்தினார். சைவ சமய நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடுவது குறித்த ஆட்சேபணைகளை அவர் கடுமையாக எதிர்த்தார். சமயச் சடங்குகளில் பெண்களை இரண்டாம் நிலையினராக நடத்தப்படுவதை முற்றிலும் ஒப்புக்கொள்ளாத லல்லா அதற்கு எதிராகவும் உரக்கக் குரல்கொடுத்தார்.

இதன் மூலம் காஷ்மீர் சைவ மரபுக்கு புத்துயிர் அளித்ததோடு லல்லா அதன் கொள்கைகளை எளிய மக்களின் மொழியில் வெளிப்படுத்தினார். ரகசிய சம்பிரதாயமாக இருந்தவொன்றை அனைவருக்கும் உரியதாக மாற்றினார். முக்திக்கான வழிமுறைகளை தன்னை அறிந்திட ஆர்வமுள்ள அனைவருமே புரிந்துகொண்டு பின்பற்றும் வகையில் மறுஉருவாக்கம் செய்தார். ஆன்மீகத்தை தனிமனித விடுதலைக்கான கருவியாக மட்டுமல்லாமல் சமூக ஒற்றுமைக்குமான வழிமுறையாக உருமாற்றினார். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று சார்ந்தும் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் வகையிலுமான ஆரோக்கியமான உறவைக் கொண்டிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

‘திரிகாமத்’ என்று அறியப்படும் காஷ்மீர் சைவ மரபில் காலப்போக்கில் சிறிய பிளவு ஏற்பட்டது. அபிநவகுப்தர் நெறிப்படுத்திய அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு சடங்குகளை தொடர்ந்து பேணினர் ஒரு சாரார். இன்னொரு பக்கம், சடங்குகளற்ற திரிகாமத் மரபை முன்வைத்தார் லல்லா. யோகம், பௌத்தம், சூஃபி ஆகிய மரபுகளின் சத்துமிக்கக் கூறுகளை ஒத்திசைவுடன் இணைத்துக்கொண்ட ஒன்றாக அமைந்திருந்தது. புத்த சமயத்தில் போதி சத்துவராய் இருப்பதென்பது கருணையும், உண்மையைக் குறித்த நுண்ணுணர்வும், அனைத்தின் சாரத்தை அல்லது ஏதுமின்மையை அறிவதும் ஆகும். லல்லாவின் பல கவிதைகளில் இத்தன்மையைத் தெளிவாக உணரமுடியும். இந்த வகையில் லல்லாவை கபீருடன் இணைத்துப் பார்க்கலாம். சைவம், பௌத்தம், ஜைனம், சூஃபி மார்க்கங்களில் புழங்கும் குறியீடுகள் லல்லாவின் கவிதைகளில் உள்ளன. சுவாசத்தைக் கட்டுக்குள் வைத்து ஆன்மீக அனுபவத்தை எட்டும் ‘பிரணாயாம’த்தின் கூறுகள் பல கவிதைகளிலும் இடம்பெற்றுள்ளன. சில கவிதைகளில் தாந்தீரீக மரபின் அம்சங்களையும் காணமுடியும்.

இந்தியாவின் பிற பகுதிகளில் பக்தி இயக்கம் தோன்றுவதற்கு முன்பே ஆறாம் நூற்றாண்டில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழகத்தில் பக்தி இலக்கியத்தை தோற்றுவித்தனர். சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவின் பிற பகுதிகளில் உருவாகி வளர்ந்த பக்தி இயக்கம் சமூக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்களிடையே செல்வாக்கையும் பெற்றது. கடவுள் வழிபாட்டு முறையில் அதுவரையிலும் பேணப்பட்ட பிராமணிய அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தியது பக்தி இலக்கியம். கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையில் இன்னொருவரின் தலையீடு தேவையில்லை என்றது. அதுவரையிலும் பக்திக்கென வலியுறுத்தப்பட்ட ‘தேவ பாஷை’யான சமஸ்கிருதத்தை விடுத்து அந்தந்த பகுதிகளில் புழங்கிய மக்கள் மொழியில், பாடல்களை எழுதிப் பாடினார்கள். இந்த இயக்கத்தின் மூலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு ஆளுமைகள் தோன்றினர். ராமானந்தர், துளசிதாஸ், கபீர், குருநானக் உள்ளிட்டோரின் வட இந்திய சாண்ட் இயக்கமும், ஞானேஸ்வர், நாமதேவர், துக்காராம் ஆகியோர் மேற்கிந்தியாவில் தோற்றுவித்த இயக்கமும், வங்காளத்தில் சைதன்யர் உருவாக்கிய வைணவ மரபும், கர்நாடகத்தில் பசவண்ணர், அக்கமாதேவி ஆகியோர் ஏற்படுத்திய லிங்காயத் இயக்கமும் அந்தந்த பகுதிகளில் பெரும் செல்வாக்கைப் பெற்றன.

ஒரு தரப்பினர் லல்லாவை இந்த பக்தி இலக்கிய மரபுக்கு முன்னோடி, மீரா, பஹினா போன்ற பெண் கவிஞர்களுக்கு அவரே முன்மாதிரியாக விளங்கினார் என்றும் கருதுகிறார்கள். இன்னொரு தரப்பினர் லல்லாவே பக்தி இயக்கக் காலகட்டத்தைச் சேர்ந்தவர்தான் என்றும் எண்ணுகிறார்கள். ஆனால், இந்த இரண்டு தரப்பினரின் கருத்துகளும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இந்து மதக் கோட்பாடுகளின்படி கடவுளை அடைய பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம், ஞான மார்க்கம் ஆகிய மூன்று வகையான மார்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. சடங்குகளை அடிப்படையாகக் கொண்ட கர்ம மார்க்கத்துக்கு முற்றிலும் எதிரானவர் லல்லா. அதே சமயத்தில் அவரை பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்றும் அடையாளப்படுத்த முடியாது. தன்னையே உணர்ந்து தனக்குள்ளேயே கடவுளைக் காணும் ஞான மார்க்கத்துடனே அதிகமும் அவர் பொருந்துவார். அது மட்டுமல்லாது, பக்தி இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர்கள் பலரும் சமூக வாழ்வில் ஈடுபட்டவர்கள், குழுவாக இயங்கியவர்கள். ஆனால், லல்லாவின் பாடல்களிலிருந்து அவர் யாருடனும் சேராமல் தனியாகவே அலைந்தார் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். எனவே, அவரை ஞான மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்றே கருதமுடியும்.

0

காஷ்மீர் வாழ் மக்களின் வாழ்வின் அன்றாடத்தில் இயல்பாய் கலந்திருந்தபோதும் லல்லாவின் வாழ்க்கையைக் குறித்து ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை என்பது வியப்புக்குரியது. அவரை நினைவுகூரும் வகையில் ஒரு கோயிலோ சமாதியோகூட காஷ்மீரில் இல்லை. அவரைப் பற்றி பல்வேறு செய்திகள் வாய்மொழிக் கதைகளின் வழியாகக் கிடைத்தவையே. இப்போது அவரைப் பற்றி நம்மிடம் உள்ள காலக் குறிப்புகள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டில், அதாவது அவரது மரணத்துக்கு நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, எழுதப்பட்ட பாரசீக வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து பெறப்பட்டவை. காஷ்மீரைச் சேர்ந்த வரலாற்று அறிஞர்கள் பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைப் பற்றிய வரலாற்றை எழுதியுள்ளனர். ஆனால், அவற்றில் எங்கும் லல்லாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இவர்களது அக்கறை முழுவதும் அரசவம்சங்களின் தலைவிதிகள், மாறும் அரசியல் சூழ்நிலைகள், பொருளாதாரம், பருவநிலை, அரசியல் மாற்றங்களின் காரணமாக உண்டான மத மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றியதாகவே இருந்தது.

ஸ்ரீநகரின் பிரபலமான துறவியான மக்தும் சாஹிப்பின் சகோதரர் முல்லா அலி ரெய்னா, 1587ஆம் ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த துறவிகளின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றில்தான் லல்லாவைப் பற்றி குறிப்பு இடம்பெற்றிருந்தது. இதன் பிறகு சில வருடங்கள் கழித்து, 1654ஆம் ஆண்டில் பாபா தௌத் மிஸ்கதி எழுதிய நூலில் லல்லாவைக் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு, எண்பது ஆண்டுகள் கழித்தே, லல்லாவைப் பற்றிய நம்பத்தகுந்த விரிவான செய்திகள் குவாஜா தித்மரி 1736ஆம் ஆண்டு எழுதிய நூலில் வெளியாயின.

லல்லா எங்கு, எப்போது பிறந்தார் என்பதைப் பற்றிய உறுதியான செய்திகள் எதுவும் இல்லை. அதேபோல அவர் எப்போது, எங்கு மறைந்தார் என்பதைப் பற்றிய விபரங்களும் கிடையாது. வாய்மொழிக் கதைகள், வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் லல்லா 1317ஆம் ஆண்டுக்கும் 1320ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஸ்ரீநகருக்கு அருகில் உள்ள பண்ட்ரேதன் என்ற ஊரில், காஷ்மீர் பிராமண குடும்பத்தில் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் கணக்கிடுகிறார்கள். 1373ஆம் ஆண்டு அவர் மறைந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். லல்லாவின் வாழ்வில் நடந்ததாக சில வாய்மொழிக் கதைகள் இன்றும் காஷ்மீரில் சொல்லப்படுகின்றன. எழுதப்பட்டுள்ளன. அந்தக் காலத்து வழக்கப்படி சிறு வயதிலேயே அவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. புகுந்த வீட்டில் அவர் பத்மாவதி என்று அழைக்கப்பட்டிருக்கிறார். கணவராலும் மாமியாராலும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். சரியாக அவருக்கு உணவளிக்காத மாமியார் லல்லாவின் தட்டில் ஒரு கல்லை வைத்து அதன் மீது சோற்றைப் போட்டு மூடி வைப்பாராம். இதைப் பார்க்கும் அடுத்தவர்கள் லல்லாவுக்கு எந்தக் குறையும் இல்லாமல்தான் பார்த்துக் கொள்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வார்களாம். இந்தக் கதை அவரது கவிதையிலிருந்துதான் உருவாகியிருக்க வேண்டும்.

பெரியதோ, சிறியதோ

ஆடு ஒன்றை

அவர்கள் வெட்டிச் சமைத்தாலும்

எந்த வித்தியாசமும் இல்லை.

லல்லாவுக்கு

எப்போதும் உண்ணக் கிடைப்பது

ஒரு கல்.

 

இந்த வாக்கு இப்போது காஷ்மீரில் பிரபலமான பழமொழியாக உலவுகிறது.

 

தன் வீட்டுக்கு அருகிலிருக்கும் சிறிய ஆற்றைக் கடந்து அங்குள்ள கோயிலில் நாத கேசவ பைரவனை வழிபட லல்லா தினமும் செல்வதுண்டு. திரும்பும்போது குடத்தில் தண்ணீர் சுமந்து வருவார். இதைக் கவனித்த அவரது கணவர் அவர் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு ஆத்திரத்தில் தலையிலிருந்த மண் குடத்தை உடைத்திருக்கிறார். ஆனால், குடம் உடைந்தபோதும் அதிலிருந்த தண்ணீர் அப்படியே லல்லாவின் தலையில் உறைந்திருந்ததாகவும் வீட்டுக்குள் சென்று பாத்திரத்தில் நீரைக் கொட்டிவிட்டு வெளியில் வந்து தலையிலிருந்த நீரைச் சுண்டி உதறியதாகவும் அதுவே ‘லல்லா குள’மாக உருமாறியதாகவும் ஒரு வாய்மொழிக் கதை சொல்லப்படுகிறது.

 

இருபத்தி ஆறு வயதில் லல்லா தன் வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறி துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். சைவத் துறவி சித்த ஸ்ரீகந்தரிடம் சென்று தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அவரை சீடராக ஏற்றுக்கொண்டு ஆன்மீகப் பாதைக்கு வழிகாட்டினார். சில காலத்துக்குப் பிறகு அவரிடமிருந்து விடைபெற்று வெளியேறி தன்னிச்சையாக தன் தேடுதலைத் தொடங்கி அலைந்தார். இந்த சமயத்தில்தான் லல்லா ஒளியும் ஈர்ப்பும் மிக்க, சிந்திக்கச் செய்யும் தன் ‘வாக்கு’களை வெளிப்படுத்தியுள்ளார். பதினான்காம் நூற்றாண்டில், பிராமண குலத்தைச் சேர்ந்த ஒரு பெண், குடும்ப வாழ்க்கையை உதறிவிட்டு தன்னிச்சையாக அலைந்து ஆன்மீக அனுபவத்தைப் பெறுவதென்பது அத்தனை எளிதல்ல. தன் குருவிடம் இருந்த காலத்தில் அவருக்கு பாதுகாப்பு இருந்தது. ஆனால், அவரிடமிருந்து வெளியேறிய பிறகே உண்மையான சோதனையை சந்திக்க நேர்ந்தது. அளப்பரிய ஆற்றல்மிக்க சமூக நியதிகளுக்கு எதிராக நிராயுதபாணியாக  நிற்க வேண்டியிருந்தது.

 

அவர்கள் என்னை அவமதித்து விளாசுகிறார்கள்

சாபங்களால் இன்னிசை பொழிகிறார்கள்

அவர்களது குரைப்புகளால் எனக்கு எதுவுமில்லை

ஆன்ம மலர்களை ஏந்தி அவர்கள் வந்தபோதும்

நான் பொருட்படுத்தமாட்டேன்.

கவலைப்படாமல் நான் போய்க்கொண்டே இருப்பேன்.

 

இந்து மதத் துறவிகள் பலர் காஷ்மீரின் வனங்களில் வசித்திருந்தபோதும் காஷ்மீரின் சைவ மரபைச் சேர்ந்த லல்லாவின் முன்னோடிகளாக விளங்கிய ஆண்கள் எவரும் துறவிகளாக இருக்கவில்லை. அறிஞர்கள், ஆசிரியர்கள், கவிஞர்களாக விளங்கிய அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டிருந்தார்கள். திருமணம் செய்துகொள்ளாதவர்களும் கூட லௌகீக வாழ்க்கையையே கழித்தனர். ஆன்மீகத் தேடுதல் வேட்கைக் கொண்ட ஆண்கள் துறவறம் மேற்கொள்ளாமல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியும் என்ற நிலையில் ஒரு பெண்ணாக அதே வழிமுறை லல்லாவுக்கு அனுமதிக்கப்படவில்லை. அன்றாட வாழ்வின் கடமைகளையும் காரியங்களையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு ஒரு ஆணைவிட பெண்ணுக்கே அதிகம் என்ற நிலையில் லல்லாவால் அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றியபடி ஆன்மீகத் தேட்டத்தையும் மேற்கொள்ள முடியாத நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டையும் குடும்பத்தையும் துறக்க நேரிட்டது.

0

1898ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய மொழியியல் ஆய்வு மையத்தின் முதல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றவர், அறிஞரும் இனவரைவியலாளருமான சர் ஜார்ஜ் கிரியர்சன். 1914ஆம் ஆண்டு தன்னுடன் பணியாற்றிய முகுந்த ராம சாஸ்திரியிடம் லல்லாவின் வாக்குகளைக் கொண்ட கையெழுத்துப் பிரதியை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொண்டார். அப்படியொரு கையெழுத்துப் பிரதியைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தர்மதாஸ தர்வேஸ் என்ற வயதான ஓதுவாரின் உதவியை நாடினார் சாஸ்திரி. குகா என்ற கிராமத்தில் ( இப்போது அது பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் உள்ளது ) உள்ள சாரதாபீட கோயில் அருகில் வாழ்ந்து வந்த தர்வேஸ் ஒரு கதாகாலசேட்ப கலைஞரும் கூட. தர்வேஸ் லல்லாவின் 109 பாடல்களை தன் நினைவிலிருந்து சொல்லச் சொல்ல சாஸ்திரி அவற்றை எழுதிக் கொண்டார். அதற்கான விளக்கங்களை இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் எழுதி கிரியர்சன்னுக்கு அனுப்பி வைத்தார். ஆக்ஸ்போர்ட் இண்டியன் இன்ஸ்டிட்யூட்டுக்கு சொந்தமான, சர் மார்க் ஆரல் ஸ்டீன் திரட்டியதன் ஒரு பகுதியாக இருந்த, ‘சாரதா’ எழுத்துருவில் எழுதப்பட்ட இரண்டு காஷ்மீரிய பிரதிகளுடனும், இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜநாக பாஸ்கரா என்பவர் தொகுத்து சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்திருந்த 60 பாடல்களைக் கொண்ட தொகுப்புடனும், சாஸ்திரி அனுப்பிய பிரதியை ஒப்பிட்டுப் பார்த்தார். லயோனல் டி பர்னட் எழுதிய மொழி, பா இலக்கணம், வரலாறு பற்றிய குறிப்புகள், யோகாவைப் பற்றிய விளக்கங்கள் ஆகியவற்றையும் இணைத்து லல்லாவின் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கத்தை கிரியர்சன் தயார் செய்தார். 1920ஆம் ஆண்டில் ‘லல்லா வாக்யானி – லால் மூதாட்டியின் விவேக மொழிகள், பண்டைய காஷ்மீரின் ஆன்மீக கவிஞர்’ என்ற பெயரில் அந்த நூலை வெளியிட்டார். 109 கவிதைகள் இதில் இடம் பெற்றிருந்தன. முதன்முதலாக அச்சில் வெளியான லல்லாவின் கவிதைத் தொகுப்பு இதுவே. இதன் பிறகு, ‘லல்லா யோகேஸ்வரி’ என்ற தன் நூலில் மேலும் 75 கவிதைகளைச் சேர்த்து பதிப்பித்தார். இந்த இரண்டு தொகுப்பிலுள்ள கவிதைகளுடன் மேலும் சில கவிதைகள் கண்டுபிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டு இன்று மொத்தமாக நமக்கு 258 கவிதைகள் கிடைக்கின்றன.

வாய்மொழியாக வழங்கப்பட்ட லல்லாவின் வாக்குகள், நூல் வடிவை அடைவதற்கு மூன்று நிலைகளைக் கடந்து வந்துள்ளன. காஷ்மீர் கிராமங்களைச் சேர்ந்த இந்து, முஸ்லிம் பாடகர்கள் இந்த வாய்மொழிவாக்குகளை காதால் கேட்டு மனனம் செய்து மக்களிடையே பாடினார்கள். இந்தப் பாடல்கள் மக்களிடையே தலைமுறைகள் தோறும் தொடர்ந்து ஒலித்திருந்தன. இதற்கு அடுத்த நிலையில் வாயால் பாடப்பட்ட இந்த வாக்குகள் காஷ்மீர் பிராமண தொகுப்பாளர்களால், உரையாசிரியார்களால் எழுத்து வடிவை அடைந்தன. மரப்பட்டைகளிலும் ஓலைகளிலும் எழுதப்பட்டன, வாசிக்கப்பட்டன. வாக்குகளுக்கு குறிப்புகளும் விளக்கங்களும் அளிக்கப்பட்டன. லல்லாவின் தன்னிச்சையான சொற்களும் அனுபவங்களும் மரபான ஒழுக்கக் கோட்பாடுகளாக முன்வைக்கப்பட்டன. மூன்றாவது முக்கியமான நிலையின்போதுதான் எழுத்து வடிவிலிருந்த இந்த வாக்குகள் அச்சு நூல்களாக மாறின. உரையாசிரியர்களும் தொகுப்பாளர்களும் இந்த வாக்குகளை நவீன அறிவுத்துறை கோட்பாடுகளுக்கு ஏற்ப வார்த்தனர், உருமாற்றினர். ஆங்கிலேய அதிகாரிகள், மொழி அறிஞர்கள், சைவ சமய ஆர்வலர்கள் உள்ளிட்டோர் விரிவான உரைகளையும் விளக்கங்களையும் எழுதினர். ஆங்கிலம் வழியாகத் தொடங்கப்பட்ட இந்த காரியம் பின்னர் ஆங்கிலம், காஷ்மீரி, உருது, ஹிந்தி மொழிகளில் தெற்காசிய அறிஞர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. வாய்மொழி வாக்குகள் இப்போது அச்சு அமைப்புக்கு ஏற்ற வடிவங்களாக மாறின. நவீன இலக்கியப் பகுப்பாய்வு முறைகளின் வழியாக பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டன.

லல்லாவின் வாக்குகளை ஆராய்வதில் தம் வாழ்நாளை செலவிட்டிருக்கும் சில முக்கியமான அறிஞர்கள் ஏற்கெனவே லல்லாவின் வாக்குகள் என்று சொல்லப்பட்டவற்றுள் பலவற்றையும் இடைச்செருகல்கள் என்றும் வேறு நூல்களைச் சேர்ந்தவை என்றும் அடையாளம் கண்டு நீக்கிவிட்டனர்.

இன்று கிடைக்கும் நூல்களில் உள்ள கவிதைகள் தெளிவான எந்தவொரு வரிசையிலும் தரப்பட்டிருக்கவில்லை. லல்லா தன் வாக்குகளை இலக்கியத்துக்கு அல்லது தத்துவத்துக்கு பங்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லியிருக்க முடியாது. பக்தியுடன் பாடவேண்டும் என்ற நோக்கத்தில் கீர்த்தனைகளாகவும் வடித்திருக்கவும் வாய்ப்பில்லை. லல்லா சமய போதகரோ நற்செய்தி அளிப்பவரோ அல்லது சமூக சீர்திருத்தவாதியோ அல்ல. அவை அனைத்தும் அக அனுபவத்தின் வெளிப்பாடுகள். சில சமயம் தன்னைச் சுற்றி நிகழ்ந்தவற்றைக் குறித்த கருத்துகளாகவும் அமைந்தன. எனவே, இவற்றைத் தொகுத்த ஆசிரியர்கள் அவரவர் அனுமானத்தின்படி பாடல் வரிசையை அமைத்தனர்.  

லல்லாவின் கவிதைகளில் உள்ள சொற்கள் எளிமையானவை. ஆன்மீகத்தை, தத்துவத்தை சொன்னபோதும் சொற்களில் கனம் கூடவில்லை. கற்றோர் மட்டுமல்லாது பாமரரும் புரிந்துகொள்ளும்படியாகவே தன் வாக்குகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். உற்று கவனித்தால், காஷ்மீர் மக்கள் தங்கள் தத்துவக் கருத்துகளை வெளிப்படுத்த அவை பயன்படுகின்றன என்பது புரியும். இந்தக் கவிதைகளில் உள்ள புதிய, இதற்கு முந்தைய நூல்களில் கிட்டாத சில சொற்கள் அவர்களுக்கு உதவின. உலகியல் நடப்புகளில் ஈடுபாட்டுடன் இருப்பதைக் குறிக்க ‘இரும்பு நங்கூரம்’, பலனில்லாத காரியங்களில் ஈடுபடுவதற்கு ‘மணலில் கயிறு திரிப்பது’, பேராசை, இச்சை, ஆணவம் ஆகியவற்றைக் குறிக்க ‘வழிப்பறி கொள்ளையர்கள்’, போதிய வலுவில்லாத முயற்சிக்கு ‘பாறையின் மீது கல்லெறிவது’ ஆகியவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இத்துடன் மக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளவும் பொருத்தமான இடத்தில் சொல்லவும், லல்லா தனது ஊர்ப்புறத்தின் நன்கறிந்த சூழலிலிருந்து எடுத்தாண்ட படிமங்களும் உதவின. ஆற்றின் குறுக்கே மிதக்கும் படகு, கால்வைத்தால் முனகும் தரைப்பாலங்கள், பருத்திப் பூ வெடிப்பது, காய்கறித் தோட்டம், குங்குமப் பூ வயல், தண்ணீர், பனியும் பனிக்கட்டியும், துணிவெளுப்பவர் கல்லின் மீது துவைப்பது, தானியங்களை கல்லில் அரைப்பது, மந்தையும் மேய்ப்பனும் போன்றவற்றை கவனிக்கலாம்.

லல்லாவின் வாக்குகள் நான்கு வரிகளில் அமைந்தவை. வாய்மொழியில் அவர் எவ்வாறு கூறினார் என்பது தெரியாது என்றாலும் பிற்காலத்தில் காஷ்மீர மொழியில் எழுத்து வடிவில் அவை நான்கு வரிகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. சில கவிதைகள், இணை கவிதைகளாக அமைந்துள்ளன. முதல் கவிதை கேள்விகளாகவும், இரண்டாவது கவிதை அதற்கான பதிலாகவும் அமைந்துள்ளது. இந்தக் கவிதைகளைத் தொகுத்திருக்கும் ஆசிரியர்கள் அனைவருமே ஒவ்வொரு கவிதைக்கும் விரிவான விளக்கங்களை, குறிப்புகளைத் தந்துள்ளனர். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் உள்ள சமய, தத்துவ, ஆன்மீக ஆழங்களை தொட்டுக் காட்டியுள்ளனர். கவிதைகள் இடம்பெற்றுள்ள பக்கங்களைக் காட்டிலும் இத்தகைய குறிப்புகளும் விளக்கங்களும் கூடுதல் பக்கங்களை எட்டியுள்ளன. லல்லாவின் காலம், சமயம், வாழ்க்கை, கவிதையின் பல்வேறு கூறுகள் ஆகியவற்றை விரிவாக அலசியுள்ளனர். குறிப்பாக, ஜவஹர் லால் பட்டும் ரஞ்சித் ஹொசகோட்டேவும் லல்லாவின் பாடல்களை தொகுத்து மொழியாக்கம் செய்வதற்காக பல ஆண்டுகளை செலவு செய்துள்ளனர்.   

லல்லாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு She, of the Four Names (2012), Laila Aur Satt Geet (2020) ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. அவரது கவிதைகள் சில பாடல்களாகவும் ஒலிக்கின்றன.

0

சென்ற ஆண்டின் தொடக்கத்தில் பணி இடமாற்றம் காரணமாக கோவையிலிருந்து விசாகபட்டிணத்துக்கு செல்ல நேர்ந்தது. ஆந்திராவின் வடகிழக்கு மூலையில் அமைந்த அழகிய கடற்கரை நகரம். வசிப்பிடத்தில் தெலுங்கைத் தவிர வேறு மொழியே ஒலிக்கவில்லை. தமிழில் பேசுபவர்களைப் பார்ப்பதே அரிது. அலுவலகமும் வீடுமாக கழிந்த இறுக்கமான தொடக்க நாட்களில் மனம் வாசிப்பிலோ எழுத்திலோ குவியவில்லை. வழக்கமாக இதுபோன்ற சமயங்களில் எழுத்தை தடங்கல் இல்லாமல் தக்கவைக்க மொழியாக்கத்தையே நாடுவேன். இந்தியப் பெண் கவிஞர்களின் கவிதைகளை மொழியாக்கம் செய்யும் திட்டம் ஏற்கெனவே இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை சேகரித்து அவற்றில் சரிபாதியை மொழியாக்கம் செய்து வைத்திருந்தேன். அவற்றைப் புரட்டிக் கொண்டிருந்தபோது சட்டென்று மனம் லல்லாவின் கவிதைகளைப் பற்றிக் கொண்டது. இணையத்தில் தேடத் தொடங்கினேன். லல்லாவின் கவிதைத் தொகுப்புகளை வரவழைத்தேன். அச்சில் கிடைக்காதவற்றை இணைய சேகரிப்பிலிருந்து தேடி எடுத்து குறிப்புகளை எடுத்தேன். கவிதைகளை எழுதித் தொகுத்தேன். லல்லாவைப் பற்றிய குறிப்புகளை, விபரங்களை எண்ணற்ற இணைய தளங்களிலிருந்து, கட்டுரைகளிலிருந்து விரிவாகப் படித்து அறிந்தேன். பிறகு நேரம் வாய்க்கும்போது ஒவ்வொன்றாக மொழிபெயர்க்கத் தொடங்கினேன். இந்த ஆண்டு மே மாதம் ஊருக்குத் திரும்பிய பிறகு வேறு வேலைகளில் கவனம் குவிய, லல்லாவை தற்காலிகமாக மறந்துவிட்டேன். நண்பர் செங்கதிர் மீராவின் கவிதைகளை மொழிபெயர்த்து இறுதி செய்தபோது, ‘லல்லா’ மறுபடி நினைவுக்கு வந்தார். நாவல் வேலைகளுக்கு நடுவே நேரம் கிடைக்கும்போது கவிதைகளை ஒப்பிட்டு சரிபார்த்து இறுதி செய்தேன்.

இந்த மொழியாக்கத்தில் எனக்கு உதவிய, ரஞ்சித் ஹொஸகோட்டேவின் ‘லல்லாவாகிய நான்’ ( பெங்குவின் ), ஜவஹர் லால் பட்டின் ‘லால் டே – மறுவாசிப்பு’, ஜெயலால் கவுலின் ‘லால் டே’ ( சாகித்திய அகாதமி ) ஆகிய மூன்று புத்தகங்கள் முக்கியமானவை. இவற்றைத் தவிர கவிதைகளை ஒப்பிட்டு சரிபார்க்க, ஜெயஸ்ரீ காக்கின் ‘லல்லாவின் ஆன்மீகக் கவிதைகள்’, ஜார்ஜ் கிரியர்சன்னின் ‘லல்லா வாக்யானி’, பி.என்.பரிமூவின் ‘சுயத்தின் ஏற்றம்’, நீல் காந்த் கொட்ருவின் ‘லால் டே – வாழ்வும் வாக்கும்’ ஆகிய நூல்களையும் உபயோகித்தேன். காஷ்மீர் மொழியின் நான்கு அடிகளுக்கு இணையாக ஆங்கிலத்தில் கச்சிதமாக மொழியாக்கம் செய்திருந்த நீல் காந்த் கொட்ருவின் பாணியிலேயே தமிழில் எழுத முயன்றேன். ஆனால், தமிழ் நவீன கவிதையின் வடிவத்துக்கும் மொழிக்கும் பழகிய மனம் இயல்பாகவே இப்போதிருக்கும் பாணியில் கவிதைகளை எழுதச் செய்தது. மேற்சொன்ன ஜெயஸ்ரீ காக்கின் ‘லல்லாவின் ஆன்மீகக் கவிதைகள்’ தொகுப்பு என் மனம் கவர்ந்த ஒன்று. மோதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தார், ஜோசப் சிங்கரின் அழகிய ஓவியங்களுடன், லல்லாவின் கவிதைகளை எட்டு பிரிவுகளில் தொகுத்து வெளியிட்டுள்ளனர்.

பதினான்காம் நூற்றாண்டில், இந்தியாவின் வட முனையில் வாழ்ந்த ஒரு பெண் கவிஞரின் சொற்களை தமிழில் மொழிமாற்றுகையில் கிடைக்கும் அனுபவம் தனித்தன்மைமிக்கது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கவிதைகளை தமிழின் பக்தி கவிதைகளுடன் ஒப்பிடவே மனம் விரும்பும். ஆனால், அந்த ஆவலை வலுக்கட்டாயமாக விலக்கியபடியேதான் இந்த காரியத்தில் ஈடுபட்டேன். பக்தி இலக்கியம் தமிழகத்தில் தோன்றி வளர்ந்த காலத்துக்கும் சூழலுக்கும் முற்றிலும் மாறுபட்ட காலத்தில், சூழலில் லல்லா வாழ்ந்திருக்கிறார். பல்வேறு சமயங்கள், மதங்கள், அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவே தனித்தன்மையுடன் தன் எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சமூக, மத, அரசியல், ஆன்மீக அமைப்புகளுக்கு எதிராக விமர்சனங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆன்மீக வெறுமையிலிருந்து காஷ்மீர் மக்கள் வெளியேற லல்லாவின் கவிதைகள் கருவியாக அமைந்துள்ளன. அந்த வகையில் அவரை தமிழில் அறியச் செய்வது முக்கியம் என்று எண்ணினேன். உச்சமான கவிதை அனுபவத்தை நல்கும் கவிதைகளுக்கு நடுவே சாதாரணமான நேரடி வெளிப்பாடுகள் அமைந்த சில கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. லல்லாவின் கவிதையுலகின் பல்வேறு மாதிரிகளை இடம்பெறச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே அவை இதில் உள்ளன.

லல்லாவின் கவிதைகள் இதற்கு முன்பு தமிழில் அறிமுகம் செய்யப்பட்டுள்னவா என்று தேடிப் பார்த்தேன். ஓரிரு கவிதைகளை க.மோகனரங்கன் மொழியாக்கம் செய்திருக்கிறார். பெண் கவிஞர்கள் பற்றிய கட்டுரைத் தொடர் ஒன்றில் கவிதா முரளிதரன் லல்லாவைப் பற்றி எழுதியிருக்கிறார்.   

இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு கவிதை வாசகனாக லல்லாவின் கவிதைகளை அணுகும்போது உடனடியாக கவரும் அம்சம் அவற்றின் எளிமையும் நேரடித்தன்மையும்தான். தன் கவிதைகளில் அவர் பயன்படுத்தும் படிமங்களும் உவமைகளும் மக்களின் வாழ்வுடன் தொடர்புடையவை. பக்தி இலக்கியத்தில் நமக்குப் பரிச்சயமான சில அம்சங்களையும் இந்தக் கவிதைகளில் காணமுடிகிறது. வாய்மொழியாக காலங்கள் பல கடந்தபோதும், மொழிபெயர்ப்புகளினால் ஏற்படும் இடைவெளிகளைத் தாண்டியும், அவர் சொன்ன மூலச் சொற்றொடர்களில் இருந்த செறிவையும் ஆழத்தையும் உணரமுடிகிறது. சமய, மத நம்பிக்கைகளைக் கடந்து மனிதன் தன்னையறிந்து கொள்வதே எல்லோருக்குமான மார்க்கமாக இருக்கும் என்ற மேன்மையான தத்துவத்தை, எக்காலத்துக்குமான பாதையை காட்டுவதாலேயே லல்லாவின் கவிதைகள் அனைவருக்கும் நெருக்கமானவையாக அமைகின்றன.  

எப்போதும்போல மொழியாக்கத்தை செம்மைப்படுத்துவதில் துணை நின்ற க.மோகனரங்கனுக்கும் செங்கதிருக்கும் லல்லாவின் சொல்லாசி வாய்க்கட்டும். ‘பாதி பழுத்த கொய்யாவைப் போல் பூமி’ இந்திக் கவிதைகளின் தொகுப்புக்குப் பின் இத்தொகுப்பை நூல்வனம் மணிகண்டன் வெளியிடுகிறார். அவரது நூலாக்கத்தைப் பற்றி புதிதாக சொல்லத் தேவையில்லை. நேர்த்தியும் புதுமையுமான அவரது நூல்களின் தொடர்ச்சியாக லல்லாவின் இத்தொகுப்பும் இடம் பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.


( நூல்வனம் வெளியீடாக வந்திருக்கும் ‘கொடுங்காற்றில் ஒரு விளக்கு’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள முன்னுரை )

 

 

 

 

 

 

 

 

 

 

 



No comments:

Post a Comment

இலட்சியவாதத்தின் எஞ்சும் நிழல்கள் - நிழல்கள் மாறும் நொடி • விவேக் ஷான்பாக்

    0 ‘காச்சர் கோச்சர்’ நாவல் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. அதன் மூலமாக விவேக் ஷான்பாக்கும் தமிழில் பிரபலமடைந்துள்ளார...