Wednesday, 21 January 2026

சிற்பியின் இரு மொழியாக்க நூல்கள்


 1

‘ஒரு சங்கீர்த்தனம்போல’

பெரும்படவம் ஸ்ரீதரன் எழுதிய மலையாள நாவல். தமிழில் மொழிபெயர்த்தவர் சிற்பி.


இந்த நாவலைக் குறித்து பல வருடங்களுக்கு முன்பே கேள்விப்பட்டிருந்தபோதும் வாங்கவோ வாசிக்கவோ முடியாமல் போனது.

இப்போது மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் மறுபதிப்பு செய்துள்ளது.

ஸ்டெல்வோவ்ஸ்கியிடம் வாங்கிய மூவாயிரம் ரூபிள் கடனுக்காக, அக்டோபர் 30ஆம் தேதிக்குள், ஒரு மாதத்துக்குள், ஒரு நாவலை எழுதி முடித்து ஒப்படைக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் தஸ்தவெஸ்கிக்கு. தர முடியாது போனால் அதன் பிறகு தஸ்தவெஸ்கியின் எல்லா படைப்புகளுமே அவனுக்குச் சொந்தமாகிவிடும் என்பதுதான் கடன் பத்திரத்தில் உள்ள நிபந்தனை. எழுத்தாளர்களின் ரத்தம் குடிக்கும் பேயிடமிருந்து தப்ப, நாவலை எழுத வேண்டும். வேகமாக எழுதும் பொருட்டு, வசதியில்லாத நிலையிலும், ஒரு சுருக்கெழுத்தாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம். அந்த வேலைக்காக வருகிறாள் அன்னா.

தஸ்தவெஸ்கியைப் பற்றி ஊரார் பேசும் செய்திகள் எதுவும் அன்னாவுக்கு உவப்பானவையல்ல என்றாலும் அவருடைய எழுத்துகள் அவளுக்குப் பிடிக்கும். தந்தை அவருடைய வாசகர். 

முதல் நாள் அனுபவமே சிறப்பானதாக அமையவில்லை. தனக்கேயுரிய குணக்கேட்டின் காரணமாக எரிந்து விழுந்து அவளை விரட்டியடிக்கிறார் தஸ்தவெஸ்கி. மனமுடைந்து வெளியேறுகிறாள் அன்னா.

மீண்டும் அவள் செல்கிறாள். தஸ்தவெஸ்கியின் குணங்களைப் புரிந்துகொண்டு பரிவுடன் அவருக்கு உதவ முன்வருகிறாள். சூதாட்டத்தின் மோகத்திலும் கடன் தொல்லைகளாலும் உறவினர்களின் தொந்தரவுகளினாலும் அலைவுற்று கவனமும் மனமும் சிதறி தடுமாறும் அவரைப் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி நாவலை நிறைவுசெய்ய உதவுகிறாள். அவருடன் பணியாற்றும் 26 நாட்களில் அவர்மேல் காதல் கொள்ளுகிறாள். அவள் காட்டும் அன்பும் பரிவும் தஸ்தவெஸ்கியின் மனத்திலும் காதலை விதைக்கிறது. காதலை ஒப்புக்கொள்வதோடு நாவல் நிறைகிறது.

தஸ்தவெஸ்கியின் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட பருவத்தை களமாக எடுத்துக்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்றாலும் அவருடைய குணாதியங்களையும் தடுமாற்றங்களையும் வாதைகளையும் முடிந்த வரை நெருக்கமாகக் காட்டியுள்ளது இந்த நாவல். ‘தீபிக’ ஆண்டு மலருக்காக ஒரு நாவல் வேண்டும் என்று அதன் ஆசிரியர் கேட்க, குறைந்த நாட்களில் எழுதப்பட்டது இந்த நாவல். அன்னாவின் நினைவுக் குறிப்புகளின் அடிப்படையில் தஸ்தவெஸ்கியின் வாழ்க்கையை எழுதிக் காட்டியிருக்கிறது.

தஸ்தவெஸ்கியின் பல்வேறு நாவல்கள், கதாபாத்திரங்கள் அவற்றின்பால் அவர் கொண்டிருந்த பற்றுதல், எழுதப்பட்ட சூழல் என்று எல்லாவற்றையும் குறுகிய எல்லைக்குள் தொட்டுக்காட்டவும் இந்த நாவல் முயன்றுள்ளது. நாவலின் பெரும்பகுதி தஸ்தவெஸ்கியின் குரலாகவே ஒலித்திருக்கிறது.

ஒரு மாபெரும் எழுத்தாளனை கதாபாத்திரமாகக் கொண்டு சிறுகதையை, நாவலை எழுதுவது பெரும் சவாலான காரியம். இந்த நாவலை எழுத எண்ணி அதை நினைத்தபடி முடித்திருப்பது, பெரும்படவம் ஸ்ரீதரன் தஸ்தவெஸ்கியின் மீது கொண்டுள்ள ஆழமான பற்றையும் வாசிப்பையும் புரிதலையும் உறுதிசெய்துள்ளது.

சிற்பியின் மொழிபெயர்ப்பு மிகுந்த வாசிப்புத்தன்மையுடன் இலகுவாக அமைந்திருப்பது இன்னொரு சிறப்பு.

‘தஸ்தயேவ்ஸ்கியின் இதயத்தின் மீது கடவுளின் கையொப்பம் உள்ளது’, ‘ஒரு புனித துக்கம் போன்றிருந்தது டெவூஷ்கினுடைய மௌனமான காதல்’, ‘காதல் தரும் எல்லையற்ற கடுந்துயரம் எனக்குப் பிரியமானது. என் காதலைப் போன்றதுதான் மரணமென்றால் நான் செத்துப் போகிறேன்’, ‘மரணம் என் முன்னால் நிற்கும்போது, முதல் நாள் எழுதிய கதையை யாரிடமும் சொல்ல முடியவில்லையே என்ற திணறல் எனக்கு’, ‘தெய்வத்துக்கு ஓர் ஆசை இருந்தது. சாபங்களையே ஒருவனுக்கு வரமாகத் தரவேண்டும் என்று’, ‘என் விஷயத்தில் கடவுளுக்கு ஏற்பட்டுவிட்ட கைக் கோணல் பற்றி நான் யோசிப்பதுண்டு. பறவைக்கென உருவாகிய ஆன்மாவை மனித வடிவத்துள் வைத்துவிட்டார்’, ‘கடவுளின் வழிதவறிய கலை’, ‘இப்படியும் காதல் உண்டு. எந்தக் காயத்தையும் தாங்கிக்கொண்டு, எந்த அவமானத்தையும் சகித்துக்கொண்டு, சில சமயம் எதுவும் திரும்பக் கிடைக்காது என்று தெரிந்துகொண்டு’, ‘எழுதுவது மிகவும் துன்பம் தருவது. தன்னைத்தானே பலிகொடுப்பதற்கு நிகரானது. ஒரு நாவல் எழுதி முடித்ததும் நான் இடிந்து போகிறேன்.’,‘ஆன்மாவின் தனிமைத் துயரத்தை மறப்பதற்காகவே காதலிக்க வேண்டியிருக்கிறது’, ‘இளம்பெண்ணுக்கு காதல் செக்கச் செவேலென்று பூத்த ஒரு பூவைப் போலவோ, வசந்தத்தின் தெய்வீகக் கனவு போலவோ இருக்கலாம். அல்லது கண்களின் இமை விளிம்பில் உதிர்ந்து விழக் காத்திருக்கும் கண்ணீர்த் துளியாகவும் இருக்கலாம்’ போன்று தஸ்தவெஸ்கியின் அகத்தை உணர்த்தும் அபாரமான வரிகள் இந்த நாவலின் சிறப்பு.

 

2

வாராணசி

எம் டி வாசுதேவன் நாயர் மலையாளத்தில் எழுதிய இந்த நாவலின் முதல் பதிப்பு 2002ஆம் ஆண்டு வெளியானது.

காசி என்று பொதுவில் அறியப்படும் வாராணசி (வாரணாசி என்றே நமக்குப் பழக்கம். ஆனால், சரியான உச்சரிப்பு வாராணசி என்பதை முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் சிற்பி. வருண், அசி என்ற இரு சிற்றாறுகள் சங்கமிக்கும் இடம் இது என்பதால், வாராணசி என்றாயிற்று)

வாராணசியில் கங்கையில் மூழ்கினால் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் இல்லாமலாகிவிடும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்தவன் வாழ்வில் ஒரு முறையேனும் காசியில் உள்ள கங்கையில் தலை முழுக வேண்டும் என்பது இன்னொரு நம்பிக்கை.  முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்வதற்கும் இதுவே உரிய இடம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியாவின், உலகின், மிகத் தொன்மையான நகரம் என்றும் கூறப்படுகிறது.

காசியைக் குறித்து நமக்குச் சொல்லப்பட்டுள்ள இதுபோன்ற பல்வேறு கதைகள், தகவல்கள் அந்த நகரத்துக்கு செல்லவேண்டும் என்ற ஆவலைத் தூண்டக் கூடியவை. ‘பனாரஸ்’ என்று முன்பு அழைக்கப்பட்ட இந்த நகரின் இந்து பல்கலைக் கழகம் தொன்மை வாய்ந்தது. பாரதி உள்ளிட்ட பலர் இங்கு பயின்றுள்ளனர். இங்குள்ள நகரத்தார் மடமும் அதே அளவுக்கு புகழ்பெற்றது.

நெரிசலான தெருக்கள், சுதந்திரமாய் உலவும் பசுக்கள், கை ரிக்ஷாக்கள், துருத்திக்கொண்டு நிற்கும் கடைகள் என்று இதைப் பற்றிய கற்பனை வரைபடங்கள் பல உண்டு. அதேபோல புனித கங்கையைப் பற்றிய சித்திரங்களும். கரித்துகள் கலந்தது போன்ற நீர், பழங்காலப் படித்துறைகள், நதி மேவும் படகுகள், மாலை வேளையில் ஒளிகொள்ளும் ஆரத்தி, இன்றும் அணையாமல் சிதைகளை எரிக்கப் பயன்படும் அரிச்சந்திரன் பற்ற வைத்த மயான நெருப்பு, எந்த நேரத்திலும் பிணங்கள் எரியும் மணிகர்ணிகா என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த பழமையான புனித நகரைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்த நாவல். இந்து பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு அதை முடிக்காமல் காசியிலிருந்து வெளியேறும் சுதாகரன் சில வருடங்களுக்குப் பின் அதே ஊருக்கு வருகிறான். பழைய நினைவுகளை அசைபோட்டபடி தான் சந்தித்த நண்பர்கள், ஆசிரியர்களை சந்திக்க முனைகிறான். இதற்கு முன்னும் பின்னுமாக தன் வாழ்வில் தான் சந்தித்த பெண்களை, அலைச்சல்களை எண்ணிப் பார்க்கிறான். செய்தவை அனைத்தும் எத்தகைய பாவக் கணக்கில் சேரும் என்று யோசிக்கிறான். இறுதியில் தன் பெற்றோர்களுக்காக, உறவுகளுக்காக, ஆசிரியர்களுக்காக இறுதிக் கடன் செய்யும் அவன் தனக்குத்தானேயும் கூட ஒரு சடங்கை நிறைவேற்றுகிறான்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குள்ளாக ( கோயமுத்தூர் கூட கதையின் இறுதியில் இடம் பெற்றுள்ளது ) தாவித் தாவி பயணம் செய்யும் இந்த நாவல் அதன் மையமாகக் கொண்டிருப்பது காசி மாநகரை. அதன் பல்வேறு நம்பிக்கைகள், நம்பிக்கைகள் சார்ந்த கேள்விகள், அன்றாடங்கள், மனிதர்கள் என்று சந்துபொந்தாகத் திரிந்து ஆழமாகவும் அழுத்தமாகவும் சித்தரித்திருக்கிறது. எது நல்லது, எது கெட்டது, எது பாவம், எது புண்ணியம், யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற கேள்விகளுக்கு இறுதிப் பதில் என்பது இருக்க முடியாது என்பதைத் தொடர்ந்து விவாதிக்கிறது நாவல்.

காசியின் பல்வேறு திசைகளை மனிதர்களை காட்டும் இந்த நாவல் உஸ்தாத் பிஸ்மில்லா கானைப் பற்றி ஒரு வரியும் சுட்டாமல் எழுதப்பட்டிருப்பது வியப்பைத் தருகிறது. என்ன காரணம்?

சிற்பியி மொழிபெயர்ப்பு வழக்கம்போல எளிமையாகவும் இயல்பாகவும் அமைந்துள்ளது.

0


No comments:

Post a Comment

இலட்சியவாதத்தின் எஞ்சும் நிழல்கள் - நிழல்கள் மாறும் நொடி • விவேக் ஷான்பாக்

    0 ‘காச்சர் கோச்சர்’ நாவல் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. அதன் மூலமாக விவேக் ஷான்பாக்கும் தமிழில் பிரபலமடைந்துள்ளார...