0
ஈழத் தமிழ் இலக்கியத்தை மூன்று காலப் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
முதலாவது, போருக்கு முந்தைய காலகட்டம். செ.கணேசலிங்கம், எம்.ஏ.நுஃப்மான், மு.தளையசிங்கம், எஸ்.பொ, டொமினிக் ஜீவா உள்ளிட்டவர்களின் எழுத்துகளைக் கொண்ட காலகட்டம். ‘மல்லிகை’ என்ற இதழ் நினைவுக்கு வருகிறது.
இரண்டாவது, போர்க்காலம். நெருக்கடியான நிலை. அதிகமும் கவிதைகளே இக்காலகட்டத்தில் எழுதப்பட்டன. சேரன், சு.வில்வரெத்தினம், வ.ஐ.சு.ஜெயபாலன் ஆகியோரின் உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க கவிதைகள் பரவலாக கவனம் பெற்றிருந்தன. ஈழத்திலிருந்து வெளியேறிய ஷோபா சக்தி, பொ.கருணாகரன் ஆகியோரின் கதைகளும் வெளியாயின.
மூன்றாவது, முள்ளிவாய்க்கால் போருக்குப் பிந்தைய காலகட்டம். இதுவரை வெளியில் வராத உலகறியாத பல்வேறு செய்திகளும் சம்பவங்களும் செறிவான நாவல்களாக வெளியான காலகட்டம். ஷோபா சக்தி, சயந்தன், குணா கவியழகன், தமிழ் நதி, தமிழ்கவி ஆகியோரின் நாவல்கள் வெளிவந்தன. ஈழப் போருக்கு முன்னும் பின்னுமான சிக்கலான நுட்பமான பலத் திறப்புகளையும் இந்த நாவல்கள் உலகுக்களித்தன.
மூன்றாவது காலகட்டத்தின் பிந்தைய பருவம் போர் ஓய்ந்து எதுவும் எஞ்சாத நிலத்தில் தங்கள் வாழ்வைக் கண்டடைய முனையும் தலைமுறையினரின் கதைகளைச் சொல்கின்றன.
அகரமுதல்வன் மூன்றாவது காலகட்டத்தைச் சேர்ந்தவர். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் மூன்றாவது காலகட்டத்தின் பிந்தையப் பருவத்தைச் சேர்ந்தவர்.
0
அகரமுதல்வனின் ‘உலகின் மிக நீண்ட கழிப்பறை’ குறுநாவல் தொகுப்பு 2019ல் வெளியானது. அந்தத் தொகுப்புக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். அப்போது எனக்கு அகரமுதல்வனை நேரடியாக அறிமுகம் கிடையாது. முகம்கூட சரியாகத் தெரியாது.
முன்னுரை எழுதிய பிறகே அகரமுதல்வன் எனக்கு அறிமுகமானார்.
அதன் பிறகு, ஒன்றிரண்டு
வருடங்கள் கழித்து, சென்னைப் புத்தகத் திருவிழாவில் ஒரு சம்பவம். வழக்கம்போல கவிஞர் க.மோகனரங்கனும் நானும் புத்தக அரங்குகளில் நுழைந்து தேவையான சில புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தோம். நூல்வனம் அரங்கில் மணிகண்டனிடம் பேசிக்கொண்டிருந்தபோது அகரமுதல்வனைப் பார்த்தோம். அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது. சாகித்ய அகாதமி வெளியிட்டது. மோகனரங்கன் அதை வாங்கிப் பார்த்துவிட்டு ‘இந்தப் புக் ஒண்ணு வாங்கணும்’ என்று பொதுவாகச் சொன்னார்.
அங்கிருந்து நகர்ந்து இரண்டு வரிசைகளுக்கு அடுத்திருந்த சாகித்ய அகாதமி அரங்குக்கு இருவரும் மெல்ல நடந்துகொண்டிருந்தோம்.
எதிரில் வந்தார் அகரமுதல்வன். எங்களருகே வந்து நின்று மோகனிடம் ஒரு புத்தகத்தை நீட்டினார். அவர் வாங்க வேண்டும் என்று சொன்ன புத்தகம் அது.
“அங்கதான் போறோம். வாங்கிக்கறோம். இது உங்களுது இல்ல.”
“இல்லைங்க ஐயா, உங்களுக்காகத் தான் வாங்கிட்டு வந்தேன்.”
நன்றியுடன் புத்தகத்தை வாங்கிக்கொண்டு பணத்தை எடுத்தார். அகரமுதல்வன் அதை வாங்காமல் சிரித்துக்கொண்டே விலகி நடந்தார்.
அந்தச் சம்பவம் அகரமுதல்வனை இன்னும் நெருக்கமாக்கியது.
0
பொதுவாக ஈழத் தமிழ் எழுத்தை வாசிக்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு பதற்றம் ஏற்படும். நிம்மதியின்மை சூழும். அமைதியின்மை கவியும்.
ஈழத்தமிழர் போராட்டம் என்பது என் வயதொத்தவர்களின் வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்து வந்த ஒன்று. என் பதின்ம வயது முதலே தொடர்ந்த வந்த ஒன்று. வானொலியிலும் செய்தித்தாள்களிலும் இது பற்றிய செய்திகளைத் தொடர்ந்து கேட்டு வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவன். கல்லூரி நாட்களில் அடிக்கடி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஊர்வலங்கள் நடைபெறும். கடையடைப்பு, வேலைநிறுத்தங்கள் நடைபெறும். தமிழக அரசியலின் ஒரு பகுதியாகவே அது இருந்தது. கோவை மத்தியப் பேருந்து நிலையத்தின் அப்போது கண்ட ஒரு ஓவியக் கண்காட்சி நினைவில் உள்ளது. ‘முகில்களின் மீது நெருப்பு’ வீர.சந்தானத்தின் ஓவியக் கண்காட்சி. திலீபன் உண்ணாவிரதம், யாழ் நூலகம் எரிக்கப்பட்டது,
இந்திய அமைதிப் படை குறித்த செய்திகள் என்று பல்வேறு சம்பவங்களையும் இங்கிருந்து பார்க்கும் படித்துத் தெரிந்துகொள்ளும் ஒருவனாக இருந்திருக்கிறேன்.
பல வருடங்களுக்குப் பின் ஈழத் தமிழ் இலக்கியங்களை வாசிக்கும்போது அப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததின் குற்றவுணர்வு அடிக்கடி என்னை ஆட்கொண்டிருந்திருக்கிறது. அதனால்தான் அவற்றைப் படிக்கும்போது பதற்றமும் நிம்மதியின்மையும்.
0
‘கடவுள் பிசாசு நிலம்’ ஜூனியர் விகடனில் தொடராக வெளிவரவிருப்பது குறித்த செய்தியைக் கண்டபோது வியப்பாக இருந்தது.
ஒரு அரசியல் பொதுவாசகர்களுக்கான இதழில் இப்படியொரு தொடரை எழுத முடியுமா? இன்றைய தலைமுறை வாசகர்கள் ஈழத் தமிழர்களின் அனுபவங்களை எப்படி அணுகுவார்கள் என்ற பெரிய கேள்வி இருந்தது.
அதைவிடவும், ஈழத்து வாழ்க்கையை இன்றைய தமிழ் பொதுஜன வாசகர்களின் ரசனைக்கேற்ப சுவாரஸ்மாகவும் அதே சமயத்தில் செறிவுகெடாமலும் அகரமுதல்வன் எப்படி எழுதப்போகிறார் என்பது இன்னும் பெரிய கேள்வியாக இருந்தது.
ஆனால் இத்தொடர் 72 வாரங்கள் வெளிவந்துள்ளது. வாரம் இரு இதழ்கள் வெளியாகும் ஒரு வெகுஜன இதழில் இப்படியொரு அடர்த்தியான தொடர் இத்தனை வாரங்கள் வெளிவர முடிந்தது என்பதே பெரும் சாதனைதான். இதை எப்படி அணுகுவார்கள் என்ற சந்தேகத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கியிருக்கிறார்கள்.
ஈழப் போரின் இறுதிக் காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் நிகழ்ந்த சம்பவங்களை சிறுவன் ஒருவனின் பார்வையில் சொல்கிறது இத்தொடர்.
இத்தொடரில் போர் எங்குமே சித்தரிக்கப்படவில்லை. ஒரு பின்னணியாக மட்டும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் போருக்கு முன்னும் பின்னுமான நெருக்கடிகளும் துயரங்களும் சொல்லப்பட்டுள்ளன. ஈழத் தமிழ் இலக்கியம் என்றாலே போர், ஷெல்லடி, டாங்கிகள், துவக்குகள், ரத்தம், கண்ணீர், அவலம் ஆகியவற்றைத் தவிர்க்க முடியாது. அவற்றையெல்லாம் தாண்டி எளிய கிராமத்தின் மனிதர்கள் ஈழ மண்ணுடன் எத்தகைய ஆழமான பிணைப்பைக் கொண்டிருந்தனர் என்பதை இந்தத் தொடர் முதன்மைப் படுத்தியிருப்பதுதான் இதன் சிறப்பு.
மண்ணுடனான ஆழமான பிணைப்பே அவர்கள் அனைவரையும் இந்தப் போருக்குத் துணை நிற்கச் செய்கிறது. உயிரைப் பற்றி உறவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பெற்றப் பிள்ளைகளை களத்துக்கு அனுப்பும் துணிவைத் தருகிறது. கல்விக்கூடத்துக்குச் செல்வதைக் காட்டிலும் களத்துக்குச் செல்லவேண்டும் என்ற நெஞ்சுரத்தை சிறுவர்களுக்கும் இளையோர்களுக்கும் தருகிறது.
மண்ணுடனான அந்தப் பிணைப்புக்கான காரணம் என்ன?
காலங்காலமாய் தொடரும் அந்தப் பிணைப்பு தொன்மங்களின் வாயிலாக தெய்வங்களின் மூலமாக அடுத்தத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகிறது. வளருந்தோறும் அவர்களின் கனவுகளோடு அந்தத் தொன்மம் தரும் உரமும் சேர்ந்து வளர்கிறது.
பன்னீச்சையடி கிராமம், பன்னீச்சையம்மன், எழுவர் நெடு கற்கள் ஆகிய தொன்மங்களை நாவலின் தொடக்கத்திலிருந்து இறுதி வரையும் நுட்பமாக ஊடாடச் செய்திருப்பதில் அகரமுதல்வனின் புனைவுத் திறன் தனித்துத் தெரிகிறது.
அகரமுதல்வனின் புனைவு மொழி அதிகமும் கவிதைத்தன்மை கொண்டது. சொற்களின் நுட்பமான சேர்க்கையின் வழியாக உருவாகும் வசீகரத்தை உடையது. உக்கிரமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போதும், அவலத்தை விவரிக்கும்போதும் மட்டுமல்லாமல் அழகான காதலைச் சொல்லும்போதும் இந்த மொழி அவருக்கு கைகொடுக்கிறது. ஆனால், தனித்தன்மை கொண்ட இந்த மொழியை இதுபோன்ற வெகுஜன இதழின் தொடரில் அவர் கையாண்டிருப்பது மேலும் ஆச்சரியத்தைத் தருகிறது. அபாரமான சொல்லிணைவுகளைக் கொண்டிருக்கும் இந்த புனைவுமொழி சில இடங்களில் பொருத்தமின்மையையும் கொண்டிருந்தது. எழுதும் வேகத்தில் அப்படியே அமைந்துபோனவை. ஆனால் அவை எந்த அர்த்தச் செறிவையும் பெற்றிருக்கவில்லை.
இத்தொடரின் வெற்றிக்கு இன்னொரு முக்கியமான காரணம் இதில் இடம்பெற்றுள்ள உயிரூட்டமான கதாபாத்திரங்கள். எண்ணற்ற கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் அவற்றில் எதுவொன்றுமே பெயர்களாக நின்றுவிடவில்லை. சிறிய கதாபாத்திரங்களாக இருந்தபோதிலும் நினைவில் தங்குமளவுக்கு அழுத்தமாக உருவாக்கப்பட்டுள்ளனர்.
பூட்டம்மா, நாகப்பர், நெடுவல்ராசன், மருதன், கபிலன், பழம், மணியன், நகுலன், வெறுங்கால் நந்தன், பவித்ரன் என்கிற பவி மாமா, அம்பிகா, நல்லாள், காந்தியண்ணா, அல்லியக்கா, தொப்பிக் குயிலன், தணிகை மாறன் என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் வலுவாகவும் துலக்கமான அடையாளங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளனர்.
0
இது நிலத்தின் கதை. அந்த நிலத்துக்காக
நெடுங்காலமாய் தொடரும் யுத்தத்தின் கதை. ஆனால், இது யுத்தத்தைச் சொல்லவில்லை. யுத்தத்தின்
மனம் பதறச் செய்யும் கொடுமைகளை விவரிக்கவில்லை. மாறாக, யுத்தத்தை ஒரு திரையாக்கி பின்னால்
தள்ளி நிறுத்தியிருக்கிறது. போராளிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான போரின்போது
சிறிய ஒரு கிராமமும் எளிய அதன் மக்களும் சந்திக்க நேரும் துயரங்களையும் வாதைகளையும்
விவரிக்கிறது இக்கதை.
அகாலத்தில் கொல்லையில் விழுந்துத் தெறிக்கின்றன
குண்டுகள். எப்போதும் வானில் சுற்றித் திரிகின்றன போர் விமானங்கள். பள்ளிக்கூடங்களில்
இராணுவம் சூழ்ந்திருக்க, பதிகங்கள் ஒலித்திருந்த கோயில்களில் பிசுபிசுக்கிறது ரத்தக்
கறை. ஒரு சிறிய கிராமத்தின் எளிய மனிதர்களின் இயல்பு வாழ்க்கையின் மீது இருள்மூட்டம்
கவிகிறது. அச்சம் கடும் நச்சுக்காற்றாகி அனைவரையும் பதறச் செய்கிறது. எந்த நேரத்திலும்
யாரும் காணாமல் போகும் அவலம். அன்றாடம் துயரையும் வாதையையும் முற்றத்தில் கொண்டுசேர்க்கும்
இப்படியொரு கொடிய சூழலில் யாரும் சோர்ந்துபோவதில்லை. விதியே எனத் துவண்டுவிடுவதில்லை.
நெஞ்சுரம் வலுக்கிறது. ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற வழியில் போராளிகளுக்கு கைகொடுக்கிறார்கள்.
காலங்காலமாய் தொடரும் யுத்தம் இது, வெற்றி தோல்விகள் தற்காலிகமானவையே என்ற நம்பிக்கையைத்
தருகிற வலுவான தொன்மங்களும் தொல்கதைகளும் அவர்களைச் சூழ்ந்திருக்கின்றன. மண்ணுக்காகப்
போராடும் துணிச்சலைத் தருகின்றன.
துல்லியமான குணவார்ப்புகளின் வழியாக
உருவான வலுவான கதாபாத்திரங்களும் திருத்தமான உரையாடல்களும் இத்தொடரை வாசகனுக்கு நெருக்கமான
ஒன்றாக உறுதிசெய்துள்ளன.
கடவுளுக்கும் பிசாசுக்கும் இடையே உக்கிரமான
போர் மூளும்போது நிலமும், அந் நிலத்தில் வாழும் புல் பூண்டுகள், புழு பூச்சிகள் உள்ளிட்ட
ஜீவராசிகளின் கதி இன்னொரு மோசமான யுத்தமாகிவிடுகிற தீவினையை விவரிக்கிற இந்தப் புனைவுத்
தொடர், ஈழ இலக்கிய வரிசையில் இன்னொரு முக்கியமான வரவாக அமையும்.
போர்ச்சூழலில் ஒரு எளிய கிராமத்து மனிதர்களின் கையறு நிலையை, அங்குள்ள மக்களின் கனவை, அன்றாடம் எதிர்கொள்கின்ற இழப்பை, மண்ணுக்காக செய்யும் தியாகத்தை, இறுதியில் அனைத்தும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையை இந்தத் தொடர் ஒரு முதிரா இளைஞனின் பார்வையில் சொல்கிறது.
இதுபோன்ற ஒரு வலுவான கதைப் புலத்தை இப்படியொரு வெகுஜனத் தொடருக்காகப் பயன்படுத்தலாமா? என்றொரு கேள்வி எழுந்தது. நியாயமானதுதான். ஆனால், அதன் பலன்களைப் பற்றி யோசித்தால் அந்தக் கேள்விக்கான நியாயமான பதிலும் உள்ளதை உணர்ந்துகொள்ள முடியும்.
ஜுனியர் விகடன் என்ற பெரும் வாசக வெளியில் அகரமுதல்வன் என்ற பெயரை இத்தொடர் பலமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வழியாக ஒரு சில வாசகர்கள் அவரது பிற எழுத்துகளைத் தேடி வாசிப்பார்கள். அகரமுதல்வனின் எதிர்காலக் கனவுகளுக்கும் அது உதவியாக இருக்கும். அவரது அந்தக் கனவுகள் ஈடேற இத்தொடர் நிச்சயம் அவருக்கு உதவியாக அமையும்.
அப்படியொரு வெற்றியும் ஈடேற்றமும் அகரமுதல்வனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியம். என்னைப் பொறுத்தவரை ஒரு வாசகனாக நான் விரும்புவது, கவிதைகளையும், சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியிருக்கும் அகரமுதல்வன் ஒரு நாவலாசிரியராகவும் உருவாகவேண்டும் என்பதுதான்.
ஒரு திறமான நாவலுக்கான அடிப்படையான சில புள்ளிகள் இத்தொடரின் ஊடே காணக் கிடைக்கின்றன. அவரால் சிறப்பான ஒரு நாவலை எழுத முடியும். இத்தொடர் அதற்கான ஒரு பயிற்சிக் களம் என்றுகூட சொல்லலாம். அகரமுதல்வன் தனது முதல் நாவலை விரைவில் எழுதுவார் என்று நம்புகிறேன்.
0


No comments:
Post a Comment