0
தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு
குறித்து எழுத்து பற்றியும் பெரும் கனவுகளைக் கொண்டிருந்தவர் சுந்தர ராமசாமி. தன் வாழ்நாள்
முழுக்க தொடர்ந்து அதற்கான காரியங்களில் ஈடுபட்டிருந்தார். தனது கனவுகளையும் எண்ணங்களையும்
செயல்படுத்தும் முகமாக காலச்சுவடு இதழைத் தொடங்கினார். ஜனவரி 1988ஆம் ஆண்டு வெளியான
முதல் இதழில் ‘கனவுகளும் காரியங்களும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய தலையங்கத்தின் முதல்
வரி இது. ‘காலச்சுவடு
தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு காலாண்டிதழ்
ஆகும்.’
சுந்தர
ராமசாமியில் தொடங்கப்பட்ட ’காலச்சுவடு’ காலாண்டிதழாக எட்டு இதழ்கள் வெளியாயின.
1992ஆம் ஆண்டில் அதிக பக்கங்களைக் கொண்ட சிறப்பிதழுடன் அந்த இதழ் நிறுத்தப்பட்டது.
தமிழ்ச் சிந்தனையிலும் இலக்கியத்திலும்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இதழ் இவ்வாறு நிறுத்தப்பட்டது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதழ் நிறுத்தப்பட்ட பின்புதான் அது இல்லாமல் போன வெற்றிடத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தை
நிரப்பும் முனைப்புடனும் தமிழில் இன்னுமொரு இலக்கியச் சிற்றிதழாக அல்லாமல் அனைத்து
சிந்தனைத் தரப்பினருக்குமான முழுமையான ஒரு இதழாக உருவாக்கும் திட்டத்துடனும் காலச்சுவடு
மீண்டும் வெளியானது. இந்த முறை இதழின் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் சுந்தர ராமசாமியின்
மகன் கண்ணன். அவரது முயற்சியால் அக்டோபர் 1994இல் இரு மாத இதழாக மீண்டும் வெளியாகத்
தொடங்கியது. ஆரம்பத்தில் கண்ணனுடன் மனுஷ்யபுத்திரனும் லக்ஷ்மி மணிவண்ணனும் ஆசிரியர்
குழுவில் இடம்பெற்றனர். பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் ஆதவன், தேவிபாரதி, அரவிந்தன்,
நஞ்சுண்டன், பெருமாள் முருகன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். கடந்த பத்தாண்டுகளுக்கும்
மேலாக இதன் பொறுப்பாசிரியராக கவிஞர் சுகுமாரன் செயலாற்றுகிறார். 2004ஆம் ஆண்டு முதல்
மாத இதழாக வெளியாகத் தொடங்கி இப்போது முப்பது ஆண்டுகளை முழுமை செய்திருக்கிறது. ஆகஸ்டு
2026இல் 320வது இதழ் வெளிவந்திருக்கிறது. தமிழ் இலக்கியப் பத்திரிகை வரலாற்றில் இதுவொரு
மைல்கல். மூன்று தலைமுறைகளைக் கடந்து அச்சுத் தொழில்நுட்ப வளர்ச்சி, நவீன ஊடகங்களின்
பரிணாமம், வாசிப்பில் நேர்ந்திருக்கும் மாற்றங்கள் என அனைத்துவிதமான சவால்களையும் தாண்டி
தனது தனித்தன்மையில் சமரசம் ஏதும் செய்து கொள்ளாமல் காலச்சுவடு தொடர்ந்து வெளிவந்துகொண்டிருப்பது
ஒரு பெரும் சாதனை. தமிழின் பெருமை. இன்று இந்திய அளவிலும் உலக அளவிலும் இலக்கிய அரங்கில்
காலச்சுவடு என்பது தமிழின் அடையாளமாக அறியப்படுவதற்கு பின்னால் இத்தனை நீண்டகால உழைப்பும்
உறுதியான செயல்திறனுமே உள்ளன.
ஒரு மொழியில் முப்பது ஆண்டுகளாக வெளியாகும்
ஒரு இதழ் அந்த மொழி இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் தாக்கத்தையும் நிச்சயம்
ஏற்படுத்தியிருக்கும். காலச்சுவடு இதழ் தமிழ் இலக்கியத்துக்கு அத்தகையதொரு பெரும் பங்களிப்பைத்
தந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளாக வெளிவந்திருக்கும் காலச்சுவட்டின் முந்நூறு இதழ்களையும்
பார்க்கும் ஒருவரால் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு அம்சங்களிலும் ஏற்பட்டுள்ள கணிசமான
மாற்றங்களையும் ஏற்ற இறக்கங்களையும் அறிந்துகொள்ள முடியும்.
முப்பது ஆண்டுகளில், முந்நூறுக்கும்
மேற்பட்ட இதழ்களில் ஆயிரத்துக்கும் அதிகமான சிறுகதைகள் வெளிவந்துள்ளன. நூற்றுக்கும்
அதிகமான எழுத்தாளர்களின் கதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சிறுகதைகளைப் பொறுத்தவரை கதைக்களம்,
மொழி, வடிவம், உரையாடல்கள் போன்ற ஆதாரமான இலக்கணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும்
கவனிக்க முடியும். தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிப் போக்கின் படிநிலைகளையும் அதற்கு
பங்களித்திருக்கும் வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த சிறுகதை எழுத்தாளர்களையும் அறிந்துகொள்ள
முடியும்.
காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ள இக்கதைகள்
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனவா அல்லது வரலாற்றில் ஏற்பட்டுள்ள
மாற்றங்களுக்கேற்ப கதைகள் இவ்விதழில் வெளிவந்தனவா என்ற கேள்வி முக்கியமானது. இவ்விரண்டும்
ஒன்றுக்கொன்று பூர்த்தி செய்து கொள்வது. இதழ்களில் வெளியாகும் கதைகள் வரலாற்றின் மீது
தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் வரலாற்றில் நிகழும் மாற்றங்கள் இதழ்களில் வெளிவரும்
கதைகளையும் போதுமான அளவில் பாதிக்கும்.
1994ஆம் ஆண்டில் காலச்சுவடு மீண்டும்
வெளிவரத் தொடங்கிய காலம், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு குழப்பமான சமயம். எத்தகைய
பாதையில் அது முன்னகர வேண்டும் என்ற தெளிவில்லாத காலம். மாய யதார்த்தம், பின் நவீனத்துவம்,
புதுவகை எழுத்து முறை போன்ற இலக்கியம் சார்ந்த பல்வேறு கோட்பாடுகள் புனைவெழுத்தாளர்களிடையே
பெரும் சவாலை முன்னிறுத்தியிருந்தன. யதார்த்தவாதம் காலாவதியாகிவிட்டது என்று உரக்கச்
சொல்லப்பட்டது. நேரடியான மொழியில் இயல்பாகக் கதை சொன்னால் அதை யாரும் சீண்ட மாட்டார்களோ
என்ற வலுத்த சந்தேகம் எழுந்திருந்தது. எனவே, கதை சொல்லும் முறையில் புதிய பரிசோதனைகளைச்
செய்துப் பார்க்கவேண்டிய கட்டாயம் எழுந்தது. புதிய வடிவிலும் புதிய மொழியிலும் கதைகள்
எழுதப்பட்டன. அதுவரையிலும் யதார்த்தவாதக் கதைகளின் மூலம் தங்களுக்கென ஒரு புனைவுலகை
உருவாக்கி வைத்திருந்த எழுத்தாளர்களுமேகூட இத்தகைய சூழலுக்கேற்ப புதிய பாணியில் கதைகளை
எழுத வேண்டிய நிலை உருவானது.
சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்வின்
பாடுகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் கதைக் களங்கள் காலாவதியாகிவிட்டன என்ற எண்ணம்,
புதியக் கதைக் களங்களை நோக்கித் திரும்பச் செய்தது. இது கதை சொல்லும் உத்தியிலும் மாற்றங்களைக்
கொண்டு வந்தது.
மீண்டும் இதழ் தொடங்கப்பட்ட காலத்தில்
வெளியான கதைகளைக் கவனித்தால், தமிழ்ச் சிறுகதையில், குறிப்பிட்ட அந்தக் காலத்தில்,
பொதுவாக ஏற்பட்ட மாற்றத்தின் தாக்கங்கள் இருப்பதைக் காணமுடியும். தேவிபாரதி, ஜெயமோகன்,
யுவன் சந்திரசேகர், சி.மோகன், ரமேஷ் பிரேம், லக்ஷ்மி மணிவண்ணன் உள்ளிட்டோரின் கதைகள்
வழக்கமான கதைப் பாணியில் அல்லாமல் புதிய வடிவிலும் மொழியிலும் அமைந்திருந்தன.
சொல்ல வரும் கதையை கச்சிதமான அளவில்
நறுக்காக எழுதவேண்டிய கட்டாயமின்மையின் காரணமாக எழுதப்பட்ட நெடுங்கதைகளுக்கு காலச்சுவடு
இடமளித்தது. குமாரசெல்வாவின் ‘குறுவெட்டி’, ஜெயமோகனின் ‘பத்மவியூகம்’, பா.வெங்கடேசனின்
‘மழையின் குரல் தனிமை’ ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
வடிவிலும் உள்ளடக்கத்திலும் மொழியிலும்
வழக்கமான, பழகிப்போன பாணியில் அல்லாமல் எஸ்.ராமகிருஷ்ணன், தேவி பாரதி, லக்ஷ்மி மணிவண்ணன்,
யுவன் சந்திரசேகர், சுரேஷ்குமார் இந்திரஜித் போன்றோர் எழுதிய கதைகள் காலச்சுவடில் தொடர்ந்து
வெளியாயின.
தமிழ்ச் சிறுகதையின் தொடக்க காலந்தொட்டு
தனக்கென ஒரு கதைப்பாணியை உருவாக்கியிருந்த சுந்தர ராமசாமியின் பிற்காலத்துக் கதைகளில்,
இச்சூழலின் தாக்கம் இருந்ததை கவனிக்க முடிகிறது.
காலச்சுவடு இதழில் வெளிவந்திருக்கும்
கதைகளின் பட்டியலைக் கொண்டு தமிழ்ச் சிறுகதையின் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த எழுத்தாளர்களை
அறிந்துகொள்ள முடியும். தமிழின் மூத்தத் தலைமுறை சிறுகதை எழுத்தாளர்களிலிருந்து இன்றைய
தலைமுறை எழுத்தாளர்கள் வரையிலும் காலச்சுவடு இதழுக்கு பங்களித்திருக்கிறார்கள். சுந்தரராமசாமி,
அசோகமித்திரன், நாஞ்சில்நாடன், அம்பை, வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், ந.முத்துசாமி,
பிரபஞ்சன், வாஸந்தி உள்ளிட்ட மூத்தத் தலைமுறை எழுத்தாளர்கள் அனைவரின் கதைகளும் இதழ்களில்
வெளியாயியுள்ளன. அதேபோல அடுத்த தலைமுறை எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்,
சி.மோகன், சுப்ரபாரதிமணியன், சுரேஷ்குமார் இந்திரஜித், யுவன் சந்திரசேகர், தேவி பாரதி,
பெருமாள் முருகன், இமையம், கௌதம சித்தார்த்தன், அரவிந்தன், உள்ளிட்டோரின் கதைகளும்
தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. இவர்களுக்கு அடுத்த தலைமுறைகளில் இடம்பெறும் அழகிய பெரியவன்,
எம்.கோபாலகிருஷ்ணன், உமா மகேஸ்வரி, சல்மா, என்.ஸ்ரீராம், எஸ்.செந்தில்குமார், ஜே.பி.சாணக்யா,
மனோஜ்குமார் ஆகியோரின் கதைகள் வெளிவந்துள்ளன.
தமிழ் நாவல்களின் எழுச்சி 2000ஆம் ஆண்டில்
தொடங்கியது. பெரிதும் தனிநபர் வாழ்க்கை அனுபவம், சமூக நோக்கு சார்ந்தே அமைந்திருந்த
தமிழ் நாவல்களில் புதிய களங்களுடன் புதிய வாழ்க்கையுடன் புதிய நாவல்கள் பிறந்தன. களம்
காலம் வடிவம் மொழி என அனைத்திலும் புதிய முயற்சிகளுடன் நாவல்கள் எழுதப்பட்டன. அளவில்
பெரிய நாவல்கள் பதிப்புத் தயக்கமின்றி வெளியாயின. இக் காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதைகள்
தொடர்ந்து எழுதப்பட்டபோதும் சிறுகதைத் தொகுப்புகள் வெளியானபோதும், சிறுகதைகளின் மீதான
கவனமும் அக்கறையும் சற்றே மட்டுப்பட்டிருந்தன. ஆனால், இதனை ஈடுசெய்யும்விதமாக நவீன
தொழில்நுட்பமும் கணினி அறிவியலும் சாத்தியமாக்கித் தந்த இணையவழி ஊடகங்கள், குறிப்பாக
இணைய இதழ்கள், தமிழ்ச் சிறுகதைக்கு பெரும் ஒரு வாயிலைத் திறந்து கொடுத்தன. வெளிநாடுகளிலிருந்த
எழுத்தாளர்களின் கதைகளை இணைய இதழ்களின் வழியாக உடனடியாக வாசிக்க முடிந்தது. அத்துடன், கணினித் துறை ஏற்படுத்தித் தந்த வாய்ப்பின்
காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் பணியிலிருந்த இளைஞர்கள் சிறுகதைகளை எழுதலானார்கள்.
மலேசியா, சிங்கப்பூர், ஈழம் போன்று நமக்கு நன்கு அறிமுகமான அயலக நிலங்கள் மட்டுமல்லாமல்
ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் கதைகள் எழுதப்பட்டு
வெளியாயின. இதன் மூலம் புதிய இளைஞர்கள் பலர் சிறுகதையாசிரியார்களாக அறிமுகமாயினர்.
துறைசார் எழுத்துகள் என்ற புதிய வகைமைக்கு இவர்கள் பங்களித்தனர்.
இரண்டாயிரத்தின் பிற்பகுதியில் அறிமுகமான
தூயன், கார்த்திக் பாலசுப்ரமணியன், விஷால் ராஜா, சுரேஷ் பிரதீப், விஜய ராவணன், பாலகுமார்
விஜயராமன், அனோஜன் பாலகிருஷ்ணன், சந்திரா, ஜா.தீபா, எஸ்.ஜே.வயலட், பா.திருச்செந்தாழை,
சித்துராஜ் பொன்னுராஜ் ஆகியோர் காலச்சுவடில் எழுதிய கதைகளின் வழியாக தமிழ்ச் சிறுகதையில்
ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்துகொள்ள முடியும். தமிழில் அதுவரை எழுதப்படாமலிருந்த களங்களைக்
கொண்டு சிறுகதைகள் இவர்களால் எழுதப்பட்டன. தன்பாலின உறவு குறித்த கதையான சித்துராஜ்
பொன்ராஜ் எழுதிய ‘கடல்’, தன்பாலின ஈர்ப்பு, அன்னையின் மீதான் பிள்ளையின் ஈர்ப்பு ஆகியவற்றின்
ஆழத்தை உணர்த்திய பொன்முகலியின் ‘அலர்’, கணினித்துறையில் பணியாற்றும் பெண்கள் சார்ந்த
மாறுபட்ட பார்வையைக் கொண்ட கதையாக அமைந்திருந்த லாவண்யாவின் ‘பறத்தல்’. பெண்களின் உள்ளாடை
சார்ந்த உளவியல் அடுக்குகளைப் பற்றி பேசிய சுஜா செல்லப்பனின் ‘அகலாது அணையாது’ ஆகிய
கதைகளை உதாரணமாகப் பார்க்கலாம்.
தமிழ்ச் சிறுகதைக்கு பங்களித்திருக்கும்
பெண் எழுத்தாளர்களின் ஒரு பெரும் நிரையை காலச்சுவடு கதைகளின் வரிசையில் பார்க்க முடிகிறது.
அம்பை, வாஸந்தி, சல்மா, உமா மகேஸ்வரி, சந்திரா, லாவண்யா சுந்தர ராஜன், பொன்முகலி, அனார்,
ஐ.கிருத்திகா, அமுதா ஆர்த்தி, சுமதி ரூபன், லதா, சந்திரா ரவீந்திரன், ஜா.தீபா, சசிகலா
பாபு, கலைச்செல்வி, பாத்திமா மஜீதா, பெருந்தேவி, எஸ்.ஜே.வயலட், சுஜா செல்லப்பன், சுஜாதா
செல்வராஜ், ஹேமி கிருஷ், மாஜிதா, சவிதா, ச.மோகனப்ரியா என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.
இந்த காலகட்டத்தில் இளம் எழுத்தாளர்கள்
சிலரை காலச்சுவடு அறிமுகப்படுத்தியுள்ளது. கே.என்.செந்தில், விஷால் ராஜா, பத்திநாதன்,
கல்யாணராமன், ஜா.தீபா, சந்திரா, லாவண்யா சுந்தரராஜன், ஜான் சுந்தர் ஆகியோரின் முதல்
சிறுகதைகள் காலச்சுவடு இதழில்தான் வெளியாகின. இவர்களில் சிலரது முதல் சிறுகதைத் தொகுப்பையும்
(கே.என்.செந்தில் – இரவுக்காட்சி, லாவண்யா சுந்தரராஜன் – புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை,
பத்திநாதன் – நாளையும் நாளையே , கல்யாணராமன் – விபரீத ராஜயோகம், ஜான் சுந்தர் – பறப்பன
திரிவன சிரிப்பன) காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தொடக்கம் முதலே காலச்சுவடு இதழ்களில்
ஈழ எழுத்தாளர்களின் கதைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. பொ.கருணாகர மூர்த்தி,
ஆசி கந்தராஜா, அனோஜன் பாலகிருஷ்ணன், தி.மயூரன், அனார், சந்திரா ரவீந்திரன் ஆகியோரது
கதைகளும் இடம்பெற்றுள்ளன.
அயலக எழுத்தாளர்கள் கோகுலக் கண்ணன்,
சித்துராஜ் பொன்ராஜ், லதா, சித்ரா, நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோரது கதைகளும் உள்ளன.
பல்வேறு காலகட்டங்களில் சிறுகதையில்
ஏற்படும் மாற்றங்களை கவனித்து காலச்சுவடு அவற்றுக்கேற்ப கதைகளை வெளியிட்டுள்ளது. நவீன
கதை வடிவமான குறுங்கதைகளை கவனப்படுத்தும் பொருட்டு சிறப்புப் பகுதி ஒன்றை வெளியிட்டது.
சுரேஷ்குமார் இந்திரஜித், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், பா.ராகவன், பெருந்தேவி,
போகன் சங்கர், கே.என்.செந்தில் ஆகியோர் பங்களித்திருந்தனர்.
கடந்த முப்பது ஆண்டுகளில், வெளியான சமயத்தில்
வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்து, விவாதத்துக்கும் உட்பட்ட கதைகள் பல வெளியாகியுள்ளன.
சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள், விளை’, ஜெயமோகனின் ‘பத்மவியூகம்’, ஜே.பி.சாணக்யாவின்
‘ஆண்களின் படித்துறை’ ஆகிய சில கதைகள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. இவற்றைத் தவிர
தேவிபாரதியின் ‘அ.ராமசாமியின் விலகல் தத்துவம்’, ஜே.பி.சாணக்யாவின் ‘பெருமைக்குரிய
கடிகாரம்’, குலசேகரனின் ‘வெளியில் மாட்டிய சாவி’, பெருந்தேவியின் ‘மயானக் கொள்ளை’,
யுவன் சந்திரசேகரனின் ‘ ’, விஜய ராவணனின் ‘ஆரெயில் நெடுங்கொடி’ உள்ளிட்ட கதைகள் கவனம்
பெற்றன.
தமிழ்ச் சிறுகதையை வாசிக்கத் தொடங்கும்
இன்றைய தலைமுறையினரின் வசதிக்கேற்ப, தமிழ்ச் சிறுகதை மரபை அறிந்துகொண்டு தொடரும் பொருட்டு
காலச்சுவடு இதழும், பதிப்பகமும் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
காலச்சுவடு இதழில் வெளியான கதைகளை தொகுப்பாக்கும்
முயற்சி ஒரு முறை சாத்தியமாகியுள்ளது. 1994 முதல் 2000 வரையிலான 5 நெடுங்கதைகளையும்
18 சிறுகதைகளையும் கொண்ட தொகுப்பு ‘காலச்சுவடு கதைகள்’ என்ற பெயரில் மனுஷ்யபுத்திரனால்
தொகுக்கப்பட்டு வெளியானது. அதன் பிறகு அவ்வாறான ஒரு தொகுப்பு வெளியாகவில்லை.
முன்னோடிகளின் தொகுக்கப்படாத கதைகள்
என்ற சிறப்புப் பகுதியில் கு.பா.ரா, மௌனி, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி,
ப.சிங்காரம் ஆகியோரது கதைகள் இடம் பெற்றிருந்தன.
காலச்சுவடு சார்பாக ஒரு சிறுகதைப் பட்டறை
அய்யம்பாளையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது.
கதா நிறுவனமும் காலச்சுவடு அமைப்பும்
இணைந்து ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியுள்ளது. இந்தப் போட்டியில் ஜே.பி.சாணக்யாவின்
’ஆண்களின் படித்துறை’ முதல் பரிசையும், சல்மாவின் ‘இழப்பு’ கதை இரண்டாம் பரிசையும்,
ஆதவன் தீட்சண்யாவின் ‘கடவுளுக்குத் தெரியாதவர்கள்’ மூன்றாம் பரிசையும் வென்றன. இக்
கதைகள் காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ளன.
காலச்சுவடு நவம்பர்-டிசம்பர் 2003இல்
வெளியான 50வது இதழ் ‘இளம் படைப்பாளர்கள்’ சிறப்பிதழாக அமைந்தது. அழகிய பெரியவனின்
‘கண்காணிக்கும் மரணம்’, உமா மகேஸ்வரியின் ‘வடு’, அய்யப்பனின் ‘சுடலை’, என்.ஸ்ரீராமின்
‘கிணற்றில் குதித்தவர்கள்’ ஆகிய நான்கு கதைகள் இடம் பெற்றிருந்தன.
ஒரு இலக்கிய இதழ் வரலாற்று நோக்கில்
சில காரியங்களை மேற்கொள்ள வேண்டிய கடமையும் உள்ளது என்பதை உணர்ந்து காலச்சுவடு பதிப்பகம்
சிறுகதைத் தளத்தில் செய்து வரும் சில பணிகளையும் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்ச் சிறுகதை வரலாறு நூற்றாண்டைக் கடந்தது என்றாலும், அதற்குப் பங்களித்திருக்கும்
எழுத்தாளர்கள் பலரது கதைகளும் முழுமையாகத் தொகுக்கப்படாமலே இருந்தன. அத்தகையதொரு குறையை
நிவர்த்திக்கும் முகமாக காலச்சுவடு பதிப்பகம் தமிழின் சாதனை எழுத்தாளர்களின் சிறுகதைகளை
மொத்தத் தொகுப்பாகவும், கிளாசிக் வரிசை தொகுப்பாகவும் வெளியிடும் பெரும் பணியினை மேற்கொண்டது.
தமிழின் சாதனை எழுத்தாளர்களின் மொத்தத்
தொகுப்புகள் தொடர்ந்து பதிப்பிக்கப்படுகின்றன. புதுமைப்பித்தனின் சிறுகதைகள் உள்ளிட்ட
படைப்புகள் அனைத்தையும் தொகுத்து வெளியிடும் முயற்சி காலச்சுவடு மீண்டும் வெளிவரத்
தொடங்கியவுடனே ஆரம்பிக்கப்பட்டது. ஜி.நாகராஜனின் தொகுப்பு வெளியானது. சுந்தர ராமசாமி
அதன் பிறகு கு.ப.ரா, மௌனி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன், கு.அழகிரிசாமி, அம்பை, பெருமாள்
முருகன் ஆகியோரது மொத்தத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. எழுத்தாளர்களின் எல்லாக் கதைகளையும்
பெருந்தொகுப்பாக வெளியிடுவது ஆவண நோக்கில் மட்டுமல்லாமல், சிறுகதை வரலாற்றில் ஒரு எழுத்தாளர்
எல்லாக் கதைகளையும் விடுபடுதல்கள் இல்லாமல் இடம்பெறச் செய்யும் முக்கியமான பணியுமாகும்.
அத்துடன் வாசக நோக்கிலும் இத்தொகுப்புகள் முக்கியமானவை. ஒட்டுமொத்தமாக ஒரு எழுத்தாளரின்
எல்லாக் கதைகளையும் பெருந்தொகுப்பாக வாசிக்கும்போது அவரது கதைகளைப் பற்றிய தெளிவான
ஒரு சித்திரத்தை வாசகன் பெற்றுக் கொள்ள முடியும்.
பாவண்ணன், ஆர்.சூடாமணி, சி.எண்.அண்ணாதுரை
ஆகியோரது தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளைக் கொண்ட தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
கிளாசிக் வரிசை சிறுகதைகளில் ந.முத்துசாமி,
வண்ணநிலவன், அ.முத்துலிங்கம், ஆதவன், கி.ராஜநாராயணன், சுரேஷ்குமார் இந்திரஜித், ஜெயகாந்தன்,
அம்பை, ஆ.மாதவன், சி.சு.செல்லப்பா, பிரபஞ்சன், ஜி.நாகராஜன், கரிச்சான் குஞ்சு, அசோகமித்திரன்,
புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, நாஞ்சில்நாடன், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம்
ஆகியோரின் தொகுப்புகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
கிளாசிக் வரிசைத் தொகுப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட
கதைகளின் தொகுப்புகளும் வாசகர்களின் வசதிக்கேற்ப திட்டமிடப்பட்டவை. குறிப்பிட்ட எழுத்தாளரைப்
பற்றி அறிந்துகொள்ள அவர் எழுதிய சிறந்த சிறுகதைகளை மட்டும் வாசிக்க எண்ணும் ஒரு வாசகரை
நோக்கியே இத்தகைய தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரிசை நூல்களின் வழியே ஒரு
ஆரம்ப நிலை வாசகர் தமிழ்ச் சிறுகதையின் நீண்ட வரலாற்றில் தடம் பதித்த எழுத்தாளர்களின்
சிறந்த சிறுகதைகளைக் குறித்தும் ஒட்டுமொத்த வரலாற்றில் அவருடைய இடம் குறித்தும் ஒரு
தெளிவான பார்வையை எட்ட முடியும்.
மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
முதல் இதழில் சுந்தர ராமசாமி, தனது தலையங்கத்தில்
குறிப்பிட்டுள்ளார் ‘தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகள் ஆகியவற்றின் கலாச்சாரத் தளங்களைச் சார்ந்த மேலான
சிந்தனைகளையும், படைப்புக்களையும் தமிழாக்கித் தருவதில்
இது கவனம் எடுத்துக்கொள்ளும். காலச்சுவடு தமிழ்மொழியில் உருவாகும் ஒரு எளிய
முயற்சி என்றாலும், உலகக் கலாச்சாரச் செல்வங்களின்
வாரிசாகத் தன்னைக் கணித்துக்கொள்ளுவதிலும் இக்கணிப்பு தூண்டும் கனவு களில்
மூழ்குவதிலும் பெருமிதம் கொள்ளும் இதழ் ஆகும்.’ காலச்சுவடு மீண்டும்
வெளிவரத் தொடங்கியபோது, மேற்சொன்ன கூற்றுக்கு ஏற்ப, மொழிபெயர்ப்புக் கதைகளுக்கு முக்கியத்துவம்
அளிக்கப்பட்டது. முதல் இதழிலேயே சதன் ஹசன் மண்டோவின் ‘மீளல்’ கதை இடம் பெற்றிருந்தது.
இதுவரை வெளியாகியுள்ள 320 இதழ்களையும் பார்க்கும்போது, நேரடியாக எழுதப்படும் கதைகளுக்கு
சமமான அளவில் மொழிபெயர்ப்புக் கதைகளுக்கு தொடர்ந்து இடமளிக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம்.
யாசுநேரி கவபட்டா, இடாலோ கால்வினோ, பெர்னாண்டோ ஸோரண்டினோ, மார்க்வெஸ், காஃப்கா, ஐசக்
அசிமோவ், ஜான் ஸ்டீன்பெக், கான்ரட் எய்கின், ரேமண்ட் கார்வர், முராகாமி, கென் லியு,
எட்கர் கெரெத் உள்ளிட்ட அயல்மொழி எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல பால்
சக்கரியா, உண்ணி.ஆர், மதுபால், என்.எஸ்.மாதவன் ( மலையாளம் ) யு.ஆர்.அனந்தமூர்த்தி,
சுமங்களா, ஜெயந்த் காய்கினி (கன்னடம் ), சொஹரப் ஹூசேன் ( வங்கம் ), குர்தேவ் சிங்
(பஞ்சாபி) போன்ற இந்தியக் கதைகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. என்.எஸ்.மாதவனின் ‘ஹிக்விட்டா’,
ஸொரான்டினோவின் ‘அவன் என்னை குடையால் அடித்துக் கொண்டிருக்கிறான்’, டினோ புசாட்டியின்
‘விழுந்துகொண்டிருக்கும் பெண்’, மார்க்கெஸ்ஸின் ‘வெளிச்சம் போல வெள்ளம்’, லெனினை வாங்குதல்,
யாசுநேரி கவபட்டாவின் ‘மச்சம்’ ஆகியன அதிகமும் பேசப்பட்ட சில கதைகளாக நினைவில் உள்ளன.
மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதிகளையும்
காலச்சுவடு பதிப்பகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
0
முப்பதாண்டு காலத்தில் காலச்சுவடு இதழில்
வெளியான கதைகளைக் கவனிக்கும்போது, தமிழ்ச் சிறுகதைச் சூழலின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப்
புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வப்போது புதிய சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றி புதிய களங்களையும்
வடிவங்களையும் கதைமொழிகளையும் அறிமுகப்படுத்தும் அதே நேரத்தில் தமிழின் மூத்த தலைமுறை
சிறுகதை ஆசிரியர்களும் தங்களது தொடர்ச்சியான, இடைவிடாத எழுத்துகளின் மூலம் சிறுகதை
மரபின் செழுமைக்குப் பங்களித்து வருகிறார்கள்.
இன்று இருபத்தி ஐந்து அல்லது முப்பது
ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்போது, சிறுகதைகள் குறித்து 90களில் ஏற்பட்ட
குழப்பமும் கலக்கமும் தணிந்து சிறுகதைகள் சார்ந்த ஒரு தெளிவு ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.
கோட்பாடுகள் வரும் போகும், அவற்றைக் கொண்டு கதைகளின் மொழியையோ வடிவையோ மாற்றிக் கொள்ள
வேண்டிய அவசியம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கதைக்கும் வாசகனுக்கும் இடையில் எந்தவிதமான
திரைகளும் நிலைப்பதில்லை, இருக்கவும் முடியாது என்பதும் தெளிவாகியுள்ளது.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது
போல இல்லாது, பழையவற்றின் வேர்களில் புதியன அரும்பி மலர்வதையே இத்தனை ஆண்டு காலக் கதைகளிலிருந்து
உணர்ந்துகொள்ள முடிகிறது.
இந்த வகையில் காலச்சுவடு எல்லாத் தரப்பினருக்குமான
இதழாக தன்னை வரையறுத்துக் கொண்டிருப்பதன் காரணமாகவே, தமிழ்ச் சிறுகதையின் பல்வேறு போக்குகளையும்
வகைமைகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.
முப்பதாண்டு காலமாக தொடர்ந்து வெளிவரும்
ஒரு இதழ் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றவேண்டிய கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து செயல்பட்டிருப்பதன்
சாட்சிகளாகவே காலச்சுவடு கதைகள் அமைந்துள்ளன என்பதை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் சொல்லமுடியும்.
0
(கோவை குமரகுரு கலை அறிவியல் கல்லூரியில்,
28.08.2026 அன்று நடைபெற்ற ‘காலச்சுவடு 30ஆம் ஆண்டு, 300 இதழ்கள் – சிறப்புக் கருத்தரங்’கில்
ஆற்றிய உரை )
