அகவையும் அனுபவமும் கனிந்த அறிஞர், பேராசிரியர்,
முனைவர்.க.ரத்னம் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டு கோயமுத்தூர் புத்தகத் திருவிழாவில் ‘வாழ்நாள்
சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. அவருக்கு வயது 94. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தில்
தமிழகத்தில், மக்கள் வாழ்வில், அரசியலில், இலக்கியத்தில், கல்விப் புலத்தில் நடந்த
மாற்றங்களுக்கான நேரடி சாட்சி.
க.ரத்னம் கோவையில் கீரணத்தம் கிராமத்தில்
பிறந்தவர். அந்த கிராமத்துக்கு அருகில் ஒன்று குன்று உண்டு. இரத்தினகிரி என்ற அந்த
குன்றுதான் இவருக்கு ரத்னம் என்று பெயரிடக் காரணமானது. புகழ்பெற்ற ‘கல்லும் மண்ணும்’
நாவல் இந்தக் குன்றின் பின்னணியில்தான் எழுதப்பட்டது.
கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும்
அதிக நாட்கள் அவர் கிராமத்திலோ வீட்டிலோ வசிக்கவில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும்போதே
வீட்டை விட்டு வெளியே தங்கிப் படிக்க வேண்டிய சூழ்நிலை. படித்து பட்டம் பெற்று பணியிலிருந்த
காலங்களிலும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வேலை பார்த்திருக்கிறார். சிறுவனாக இருந்தபோதிலிருந்தே
வாழ்க்கை இழுத்துச் செல்லும் வழியில் சென்றிருக்கிறார். இடம் கிடைத்த பள்ளியிலும் கல்லூரியிலுமாக
கிடைத்த பட்டப் பிரிவிலேயே சேர்ந்து படித்திருக்கிறார். இதுதான் வேண்டும் என்று திட்டமிட்டு
எதுவும் நடக்கவில்லை.
அவருடைய தந்தை அவரை ஒரு பொறியாளராக்கவே
விரும்பினார். தந்தையார் ஒரு ஆசிரியர். ஐந்தாம் வகுப்பு வரைப் படித்து ஆசிரியப் பயிற்சி
பெற்று பணியிலிருந்தவர். ஆனால், அவர் விவசாயத்தை கவனிக்கவில்லை என்பதற்காக அப்பச்சி
அவருடைய சான்றிதழைக் கிழித்துப் போட்டு ஏர்பிடிக்க வைத்தார். அந்த கோபத்தினாலோ என்னவோ
தன் மகனை அவர் படிக்கவைக்க வேண்டுமென முடிவெடுத்தார். ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும்
என்பதில் குறிப்பாக இருந்தார்.
ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆரம்பக் கல்வியை
குரும்பப்பாளையத்திலும்,. ஆறு முதல் எட்டு
வரை இடிகரை நடுநிலைப் பள்ளியிலும் ஒன்பது முதல் பனினொன்று வரை கோவை மைக்கேல்ஸ் பள்ளியிலும்
படித்து முடித்தார். கோவை அரசு கலைக் கல்லூரியில் இன்டர்மீடியட். இலக்கணம் வரலாறு உள்ளிட்ட
நான்காவது பிரிவில் படித்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ
ஹானர்ஸை முடித்த கையோடு சில மாதங்களிலேயே 1955ஆம் ஆண்டு கோவை அரசு கலைக் கல்லூரியில்
உதவிப் பேராசிரியராக பணியில் அமர்ந்தார். அதன் பிறகு இராமநாதபுரம், கும்பகோணம், முசிறி,
தஞ்சாவூர் உள்ளிட்ட கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்து 1999ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
கும்பகோணத்தில் வசித்த காலம், அவரது வாழ்வில் பல முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்திய காலம். அப்போதுதான் கதைகளை எழுதத் தொடங்குகிறார். பத்திரிகைகளுக்கு அனுப்புகிறார். 1961 ஆம் ஆண்டு ‘தாத்தா எங்கே போகிறார்’ என்ற முதல் கதை ஆனந்தவிகடனில் வெளியாகிறது. தொடர்ந்து கதைகள் தீபம், குமுதம், குங்குமம், அமுதசுரபி போன்ற இதழ்களில் வெளியாகின்றன.
1962ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் தமிழ்ப் புத்தாண்டு
மலரில் முத்திரை கதையாக ‘விளையாட்டு மைதானம்’ வெளிவருகிறது. விகடனில் ஜெயகாந்தனின் கதைகள் முத்திரைக் கதைகளாக
வெளிவந்த காலம் அது.
தொடர்ந்து கதைகள் வெளியாகும்போது அதைத்
தொகுப்பாக்கிப் பார்க்கலாம் என்று ஆசை வருவது இயல்புதான். சென்னையில் முல்லை முத்தையாவின்
தமிழகம் பதிப்பகம், பதிப்புத் தொகையாக ரூ.500ஐ பெற்றுக்கொண்டு அவரது முதல் வசன கவிதைத்
தொகுப்பு ‘பேதை நெஞ்சம்’ வெளியிட்டது. ஆனந்தவிகடனில்
வெளியான 80 உருவகக் கதைகளைக் கொண்ட 80 பக்க நூலினையும் முல்லை முத்தையாவே வெளியிட்டார்.
‘நினைவின் நிழல்’ என்ற கடித வடிவிலான
நாவலையும் பிறகு ‘கல்லும் மண்ணும்’ நாவலையும் வள்ளுவர் பண்ணை பதிப்பகம் வெளியிட்டது.
நூல் வெளியீடு தொடர்பாக வள்ளுவர் பண்ணை பழனியப்பன் அவர்களை அணுகியபோதுதான் அய்யாவின்
வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்படுகிறது. இவர் கொடுத்த சிறுகதைத் தொகுப்பை
வெளியிடுவதற்கு பதிப்பாளர் பழனியப்பன் ஒரு நிபந்தனை விதிக்கிறார். தன் அலமாரியிலிருந்து
ஒரு நூலை எடுத்துத் தருகிறார். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட
நூல் அது. புலவர் கோவிந்தன் மொழிபெயர்த்தது. இந்த நூலை வெளியிட்டதில் சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகத்துடன் ஒரு சின்ன பிரச்சனை. முதல் இரண்டு அத்தியாயங்கள் சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகத்துக்காக முன்பே மொழிபெயர்த்து தரப்பட்டுள்ளது. அதை அப்படியே இந்த
நூலில் பயன்படுத்தியிருப்பதுதான் விவகாரம். எனவே இதற்கு தீர்வாக முதல் இரண்டு அத்தியாங்களை
வேறொருவரைக் கொண்டு புதிதாக மொழிபெயர்த்து சேர்க்கவேண்டும். ‘இந்த இரண்டு அத்தியாயங்களை
நீங்கள் மொழிபெயர்த்துக் கொடுங்கள். உங்கள் சிறுகதைத் தொகுப்பை நான் வெளியிடுகிறேன்’
என்கிறார் பழனியப்பன். வேறு வழியில்லாமல் ரத்னம் அய்யா ஒப்புக்கொள்கிறார்.
ஒரு எழுத்தாளனை மொழிபெயர்ப்பாளனாக மாற்றியது
விதி.
ஒப்புக்கொண்டபடி, 12 கதைகளைக் கொண்ட
தொகுப்பை ‘நினைவுப் புற்று’ என்ற பெயரில் வள்ளுவர் பண்ணை வெளியிட்டது. அதற்கு நூலக
ஆணையும் கிடைக்கிறது. இந்த வகையில் பதிப்பாளர் அய்யாவுக்கு தரவேண்டிய தொகை ரூ.2400.
ஆனால், பதிப்பாளர் புதிதாக வீடு கட்டி பண கஷ்டத்தில் இருந்தபடியால் அந்தக் காசை கொடுக்கவில்லை.
புத்தக வெளியீட்டில் மறுபடியும் நஷ்டம்.
ஆனால், விதி வேறொரு திட்டத்தை வைத்திருந்தது.
வள்ளுவர் பண்ணை பழனியப்பன் தனது புதிய
வீட்டு கிரகபிரவேசத்துக்கு அழைப்பு விடுக்கிறார். பணத்தை அவர் கொடுக்கவில்லை என்பதை
பொருட்டாக எண்ணாமல் விழாவுக்கு சென்னை செல்கிறார் ரத்னம் அய்யா. விழா முடிந்தவுடன்
சென்னை மாநிலக் கல்லூரி விலங்கியல் துறையில் பணியாற்றும் நண்பர் சேதுவைக் காணச் செல்கிறார்.
கல்லூரிக்கு சென்ற நேரம் நண்பருக்கு பாடவேளை என்பதால் நூலகத்தில் காத்திருக்கும்படி
சொல்கிறார். அலமாரியிலிருந்து நூல்களைப் பார்க்கத் தொடங்குகிறார். சிறிது நேரத்துக்குப்
பிறகு ஒரு புத்தகம் அவரது கவனத்தைக் கவர்கிறது. எடுத்துப் பார்க்கிறார். ஆர்வத்துடன்
படிக்கத் தொடங்குகிறார். நண்பர் சேது வகுப்பு முடிந்து வந்தவுடன் அவருடன் பேசிக் கொண்டிருந்தவர்
விடைபெற்றுச் செல்லும்போது அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்று படித்துவிட்டு திருப்பித்
தருவதாகச் சொல்கிறார். நண்பரும் சம்மதிக்கிறார். புத்தகத்துடன் விடுதி அறைக்குத் திரும்பியவர்,
இரவு பகலாக அந்த நூலைப் படித்து முடிக்கிறார்.
அந்தப் புத்தகம் பர்டன் ரோஜர் என்கிற
அமெரிக்க அறிஞர் எழுதிய ‘ஹவ் டு வாட்ச் பேர்ட்ஸ்’. பறவை பார்ப்பவர்களுக்கான நூல். அய்யாவை
பறவைகளின் உலகத்துக்கு உடனடியாக இழுத்துச் செல்கிறது அந்தப் புத்தகம். பறவை பார்ப்பவர்களுக்கு
இரண்டு முக்கியமான விஷயங்களை அந்த நூல் பரிந்துரைக்கிறது. முதலாவது, ஒரு பைனாகுலர்
வேண்டும். இரண்டாவது, பறவைகள் கையேடு. அன்று மதியமே பிராட்வேக்கு சென்று காமிராக்கள்,
பைனாகுலர்கள் விற்கும் கடையில் ஒரு பழைய பைனாகுலரை 120 ரூபாய் விலைக்கு வாங்குகிறார்.
குதிரைப் பந்தயத்துக்காக பயன்படுத்தப்பட்ட பைனாகுலர். அங்கிருந்து மவுண்ட் ரோடில் ஹிக்கின்பாதம்ஸ்
புத்தகக் கடை. பறவைகள் கையேடுகளைத் தேடுகிறார். சாலிம் அலியின் ‘Handbook of
Indian Birds’ என்ற நூலைப் பார்க்கிறார். உடனே வாங்கிக் கொள்கிறார். மாலையில் நண்பர்
சேதுவைச் சந்தித்து இரவல் வாங்கிய புத்தகத்தை ஒப்படைக்கிறார். பைனாகுலரையும் சாலிம்
அலியின் புதிய புத்தகத்தையும் பார்த்த நண்பர் சேது வியந்துபோய் சொல்கிறார் ‘ஒரே நாளில்
இப்படி பைத்தியமாகிறவர்களை நான் பார்த்ததில்லை.’
கும்பகோணத்துக்கு திரும்பியவரிடம் பைனாகுலர்
இருப்பதைக் கண்ட மனைவி கேட்கிறார் ‘ரேசுக்கு போனீங்களா?’. அந்தக் காலத்தில் குதிரைப்
பந்தயத்துக்குப் போகிறவர்கள்தான் பைனாகுலர் வைத்திருப்பார்கள். ‘பறவைகள் பார்க்கப்
போகிறேன். அதற்காக வாங்கியிருக்கிறேன்’ என்று சொன்னவரை வியப்புடன் பார்த்துவிட்டு
‘மனுசனுக்குக் கிறுக்குப் புடிச்சிருச்சு’ என்று முணுமுணுக்கிறார்.
நண்பர் சேது சொன்ன பைத்தியக்காரத்தனமும்,
மனைவி குறிப்பிட்ட கிறுக்குத்தனமும் சேர்ந்துதான் தமிழகத்துக்கு அரிய ஒரு பறவையியல்
நூலைத் தந்திருக்கிறது.
மறுநாள் விடிகாலையிலேயே கீழ் அணைக்கரைச்
சாலையில் பைனாகுலருடன் பறவைப் பார்த்தலைத் தொடங்கினார். முதல் நாளிலேயே மஞ்சள் சிட்டு,
கொண்டைக் குருவி என புதிய இரண்டு பறவைகளைப் பார்க்கிறார். கல்லூரிக்கு சென்று ஒரு குறிப்பேட்டில்
தேதியிட்டு தான் கண்ட பறவைகளைப் பற்றி குறிப்புகளை எழுதி வைத்தார். பறவை பார்ப்பவர்கள்
அனைவரிடமும் அப்படியொரு பட்டியல் இருக்கும். அதற்கு ‘வாழ்நாள் பட்டியல்’ Life List
என்று பெயர். அந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து பேணி வந்தார். கும்பகோணம், கொள்ளிடம், அணைக்கரை
ஆகிய இடங்களிலும் ராமேஸ்வரம், சேதுக்கரை, தேவிப்பட்டணம் ஆகிய கடற்கரைகள், ராமநாதபுரத்தைச்
சுற்றியிருந்த கண்மாய்கள், காஞ்சிரங்குளம் என்று பல்வேறு பகுதிகளில் சுற்றிப் பார்த்து
தொடர்ந்து பறவைகளைப் பற்றிய குறிப்புகளை சேகரித்தார்.
இதன் பிறகு 1970களில் இராமநாதபுரம் சேதுபதி
அரசினர் கலைக் கல்லூரியில் பணியிலிருந்தபோது தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திலிருந்து
ஒரு கடிதம் வந்தது. தமிழ் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் படங்களுடன்கூடிய பறவைகள்
கையேடு ஒன்றை எழுதித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த காரியத்தை
ஒப்புக்கொண்டு பதில் அனுப்பிய கையோடு மதுரைக்குச் சென்றார். பழைய கேமரா ஒன்றை மூவாயிரம்
ரூபாய் கொடுத்து வாங்கினார். ஒரு தோளில் பைனாகுலரும் இன்னொரு தோளில் கேமராவுமாய் இரண்டு
வருடங்கள் அலைந்தார். எடுத்த படங்களை அச்சிட்டுப் பார்த்தபோது அவருக்கு ஒன்று புரிந்தது,
பைனாகுலர், கேமரா இரண்டையும் வைத்துக்கொண்டு பறவைகளைப் பார்ப்பதால் எதுவும் உருப்படியாக
நடக்காது என்பது. எனவே, காமிராவை வாங்கிய அதே மூவாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 450 பறவைகளைப் பற்றிய கட்டுரைகளை படங்களோடு அனுப்பி வைத்தார். ‘தென்னிந்தியப் பறவைகள்’ என்ற பெயரில் 500 பக்க நூலை 1973ஆம் ஆண்டு தமிழ்நாடு பாட நூல் கழகம் வெளியிட்டது. பறவையியலில், பறவைகள் பார்ப்போர்களுக்கென தமிழில் வெளியான முதல் நூல் இதுதான். அப்படியொரு நூல் அதுவரை தமிழில் எழுதப்படவில்லை. அதுவரையிலும் தமிழகத்தில் உள்ள பறவைகளைப் பற்றி இரண்டே புத்தகங்கள்தான், அதுவும் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தன.
பல ஆண்டுகளுக்குப் பிறகு கோவை திருச்சி
சாலையில் உள்ள ஆரிய வைத்திய சாலையில் சிகிச்சைக்காக வந்திருந்த மணிவாசகர் பதிப்பக உரிமையாளர்
மெய்யப்பன் அவர்களை சந்திக்கிறார் ரத்னம் அய்யா. ‘இப்போது அச்சில் இல்லாத உங்களுடைய
பறவைகள் நூலை வண்ணப் படங்களுடன் பதிப்பிக்க விரும்புகிறேன்’ என்று சொல்கிறார். நல்லவொரு
ஓவியரைக் கொண்டு பறவைகளின் படங்களை வரைந்து, வண்ணத்தில், உயர்தர தாளில் அச்சிடலாம்
என்று யோசனை சொல்கிறார். உடனடியா சரவணகுமார் என்ற ஓவியரை அணுகி படம் வரைய ஏற்பாடு செய்கிறார்.
இதற்காக பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை முன்பணமாக அளிக்கிறார் மெய்யப்பன்.
330 பறவைகளின் படங்கள் விபரங்களுடன்
கெட்டி அட்டையுடன் அச்சிடப்பட்டது. ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்ற பெயரில் வெளியான அந்த
நூலுக்கு தியோடர் பாஸ்கரன் முன்னுரை வழங்கியிருந்தார். இதன் முதல் பதிப்பு 2002ஆம்
ஆண்டு வெளியானது.
பறவை ஆர்வலர்கள், பறவைகளை எளிதில் அடையாளம்
கண்டுகொண்டு கொள்ள உதவும் வகையில் அவற்றின் வடிவம், வண்ணம், வாழுமிடம், குரல், உணவு
ஆகிய அனைத்து விபரங்களையும் பறவையியல் அறிவியலின் நெறியை ஒட்டி விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பும் உண்டு.
‘ஒரு புத்தகம் வாழ்க்கையையே மாற்றும்’
என்று சொல்வார்கள். க.ரத்னம் அவர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை அது உண்மைதான். பர்டன்
ரோஜரின் பறவை பார்த்தல் பற்றிய புத்தகம் அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அதன்
பலனாக தமிழில் அருமையான ஒரு பறவையியல் நூல் கிடைத்தது. இப்போதும் இந்த விலைமதிப்பில்லாத
நூல் மணிவாசகர் பதிப்பகத்தில் கிடைக்கிறது. உங்கள் எல்லோரின் வீட்டில் இருக்க வேண்டிய
முக்கியமான புத்தகம் இது.
வள்ளுவர் பண்ணைக்காக கால்டுவெல்லின்
ஒப்பிலக்கண நூலின் முதல் இரண்டு அத்தியாயங்களை மொழிபெயர்க்க நேர்ந்ததே அவரை மொழிபெயர்ப்பை
நோக்கித் திருப்பியது என்று சொன்னேன். ஆனால், தமிழ் இலக்கிய, மானுடவியல் வரலாற்றில்
க.ரத்னம் அவர்களுக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்திருக்கும் இன்னொரு முக்கியமான நூல்
உண்டு. அந்த நூலை அவர் மொழிபெயர்க்க காரணமாக அமைந்ததும் தற்செயலானதுதான். க.ரத்னம்
அவர்களின் வார்த்தையில் சொல்லப்போனால் விபத்துதான்.
1981ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்
கழகம் தொடங்கப்பட்டது. ஆய்வாளர்களுக்கு நல்கை தரப்படுவதை அறிந்து தமிழகத்தில் உள்ள
பறவைகள் சரணாலயங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்வதாக தனது திட்டத்தை சமர்ப்பித்தார். ஆனால்,
அது ஏற்கப்படவில்லை. காரணத்தை அறியும்பொருட்டு துணைவேந்தர் வ.அய்.சுப்ரமணியத்தை சந்திக்கிறார்.
தனது விண்ணப்பத்தைப் பற்றி கேட்டவுடன், துணைவேந்தர் ‘அந்த ஆய்வை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
இன்னொரு முக்கியமான காரியம் உள்ளது. நீங்கள் எட்கர் தர்ஸ்டனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’
என்று கேட்கிறார். அவரைப் பற்றியும் அவருடைய முக்கியமான நூலைப் பற்றியும் தெரியும்
என்றவுடன், அவர் எழுதிய ஏழு தொகுதிகளையும் தமிழில் மொழிபெயர்க்கவேண்டும், உடனே வேலையைத்
தொடங்குங்கள் என்கிறார் துணைவேந்தர். நூலகத்திலிருந்து முதல் தொகுதியை எடுத்து இருபது
பக்கங்களை மொழிபெயர்த்துக் கொடுங்கள் என்றும் சொல்கிறார். உடனடியாக வேலையைத் தொடங்குகிறார்
ரத்னம் அய்யா. இருபது பக்கங்களை மொழிபெயர்த்துக் கொடுத்தவுடன் அதைப் படித்துப் பார்த்து
திருப்தியடைந்த துணைவேந்தர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மொழிபெயர்த்தவற்றை எடுத்துக்
கொண்டு வந்து சந்தியுங்கள் என்கிறார். ‘பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிவிட்டதே’
என்று எண்ணியவாறே வீட்டுக்கு வந்தவர் மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு
மொழிபெயர்ப்பில் ஆழ்ந்து விடுகிறார்.
எட்கர் தர்ஸ்டன் ஆங்கிலேய அதிகாரி.
1885 முதல் 1908 வரை மெட்ராஸ் கவர்மென்ட் மியூசியத்தின் பொறுப்பாளராக இருந்தவர். அப்போதிருந்த
ஆங்கில அரசு அனைத்து மாகாணங்களும் தங்களது மாகாணத்தில் இனவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள
வேண்டும் என்று ஆணையிடுகிறது. இதற்கான பொறுப்பு அதிகாரியாக தர்ஸ்டன் நியமிக்கப்படுகிறார்.
இதற்காக அவர் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொள்கிறார்.
பலரோடு கடிதங்கள் எழுதி தனது ஐயங்களைத் தீர்த்துக்கொள்கிறார். வழக்காறுகள், நாட்டார்
கதைகள், புராண இதிகாசங்கள், பண்டைய இலக்கியங்கள், கல்வெட்டுகள், பட்டயங்கள், அரசு ஆவணங்கள்,
மக்கள் கணக்கெடுப்பு அறிக்கைகள், பயணக் குறிப்புகள், நாளேடுகள் ஆகிய அனைத்திலிருந்தும்
இனவியல் மற்றும் சாதிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டித் தொகுக்கிறார்.
இன இயல் ஆய்வாளர்களால் பெரிதும் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்ட மத்திய இந்தியாவைச் சேர்ந்த கோண்ட் பழங்குடிகள் தொடங்கி, தென் தமிழகத்தைச்
சேர்ந்த கோட்டை வேளாளர் வரையிலான 2000க்கும் மேற்பட்ட பழங்குடியினரையும் சாதியினரையும்
பற்றிய விபரங்கள், 2000க்கும் அதிகமான பக்கங்களுடன் ‘Castes and Tribes of South
India’ என்ற பெயரில் ஏழு தொகுதிகளாக தொகுக்கப்பட்டு 1909ஆம் ஆண்டு வெளியாயின.
இந்த ஏழு தொகுதிகளின் சில பகுதிகளை மட்டும்
சுருக்கித் தமிழில் வெளியிட்டுள்ளார் ந.சி.கந்தையாபிள்ளை. ஆங்கிலேய அதிகாரி 50 ஆண்டுகளுக்கு
முன்பு எழுதிய நூலை இப்போது தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் என்ன?
பழங்குடிகள், மலைவாழ் மக்கள் வாழ்க்கையை
மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்தன. நடைமுறைப்படுத்தின. அவ்வாறான
பணிகளுக்கு குறிப்பிட்ட மக்களைக் குறித்த முழு விபரங்களையும் வரலாற்றியல் சமூகவியல்
இனவியல் நோக்கில் அறிந்துகொள்வது முக்கியம் என்பதைக் கருத்தில்கொண்டே உதகமண்டலத்தில்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சார்பில் மலையின மக்கள் ஆய்வு மையத்தை துணைவேந்தர் தொடங்கிவைத்தார்.
அதன் ஒரு பகுதியாகவே இந்த மொழியாக்கப் பணியும் அமைந்திருந்தது.
துணைவேந்தர் சொன்னபடி சுறுசுறுப்பாக
முழுமூச்சுடன் மொழியாக்க வேலையில் ஈடுபடுகிறார்.
முதல் மூன்று தொகுதிகள் அச்சாகின்றன.
துணைவேந்தரின் ஆறு ஆண்டு கால பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெறுகிறார். நான்காவது தொகுதி
அச்சில் இருக்க, ஐந்து ஆறாவது தொகுதிகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். ஏழு இன்னும்
பாக்கியுள்ளது. இந்த நிலையில் புதிய துணைவேந்தர் பொறுப்பேற்கிறார். அவரிடம் சென்று
அச்சான தொகுதிகளைத் தந்து விபரங்களைத் தெரிவிக்கிறார். அவர் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை.
முதல் மூன்று தொகுதிகள் 1986, 1987ஆம்
ஆண்டுகளில் வெளியாயின. நான்காம் தொகுதி வெளியானது 1993ஆம் ஆண்டு. அதாவது ஆறு ஆண்டுகள்
கழித்து. அத்துடன் சரி. மீதியிருந்த மூன்று தொகுதிகளையும் மொழிபெயர்த்துக் கொடுத்திருந்தும்
அதை வெளியிடுவதில் அக்கறை காட்டப்படவில்லை. இதற்கிடையில் 1999ஆம் ஆண்டு அய்யா பணியிலிருந்து
ஓய்வு பெறுகிறார்.
புதிய துணைவேந்தராக சுந்தரமூர்த்தி அவர்கள்
பொறுப்பேற்ற பிறகு, இந்த நூலின் முக்கியத்துவத்தையும் ரத்னம் அவர்கள் மொழிபெயர்ப்புக்கு
செலுத்திய உழைப்பையும் உணர்ந்து 2003ஆம் ஆண்டு ஐந்து, ஆறாம் தொகுதிகளை வெளியிட ஏற்பாடு
செய்தார். கடைசி ஏழாவது தொகுதி சி.சுப்ரமணியம் துணைவேந்தராக இருந்தபோது 2005ஆம் ஆண்டு
வெளிவந்தது.
ஒரு மனிதர் 5 ஆண்டுகாலம் உழைத்து
4000க்கும் அதிகமான பக்கங்களை மொழிபெயர்த்துக் கொடுத்த நூல்களை அச்சில் முழுமையாகக்
காண 18 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பல ஆண்டுகள் மறுபதிப்பு காணாமலிருந்த
இந்த நூல் தொகுதிகள் இப்போது கிடைக்கின்றனவா என்று உறுதியாகத் தெரியவில்லை.
ஏழு தொகுதிகளையும் மொழிபெயர்த்து முடித்த
பிறகு, ஒப்பந்தப்படி தனக்கான ஊதியத்தை வழங்கக் கோரி விண்ணப்பிக்கிறார் அய்யா. ஆங்கிலச்
சொல் ஒன்றுக்கு பத்து பைசா என்பதுதான் ஊதியம். அதன்படி, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம்
ரூ.21000. இதில் காகிதம், மை, தட்டச்சுக் கூலி ஆகியவற்றைக் கழித்துவிட்டுப் பார்த்தால்,
ஐந்தாண்டு உழைப்புக்கு அவருக்குக் கிடைத்த கூலி, வயலில் களை பிடுங்கும் தொழிலாளியின்
ஒரு நாள் கூலியை விடக் குறைவு என்று குறிப்பிடுகிறார்.
ஆனால், தான் ஒப்புக்கொண்ட காரியத்தை
பொறுப்புடன் நிறைவேற்றிக் கொடுத்த மனநிறைவு அவருக்கு உண்டு. அதிகாரிகள் அவரை அலட்சியப்படுத்தினாலும்
அவர் தன் காரியத்தில் பின்வாங்கவில்லை. அச்சாவதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து
தன்னுடைய காரியத்தை மேற்கொண்டு மொழிபெயர்த்து முடித்து ஒப்படைத்துவிட்டார். அந்தப்
பொறுப்பும் அவரது உழைப்பும்தான் தமிழில் மானுடவியலுக்கு அபாரமான ஒரு நூல் தொகுதியை
சாத்தியப்படுத்தியுள்ளன. க.ரத்னம் அவர்களின் சாதனை நூலாக இன்றும் அது கொண்டாடப்படுகிறது.
இனி வரும் ஆண்டுகளிலும் கொண்டாடப்படும்.
முழுமையான இலக்கியவாதியாக நிறைய கதைகளை
எழுதவேண்டும் என்று நினைத்தார். ஆனால், மொழியாக்கப் பணி அவரது பெரும்பாலான நேரத்தை
எடுத்துக் கொண்டது என்கிற வருத்தம் அவருக்கு உண்டு. ஆனால், ‘தென்னிந்தியக் குலங்களும்
குடிகளும்’ என்ற இந்த பெருநூல் தொகுதி அவருடைய சாதனைகளில் தலையாயது என்பதில் யாருக்கும்
எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
இதுமட்டுமல்லாமல் எண்பது வயதுக்குப்
பிறகு உலக இலக்கிய மேதைகளின் ஆக்கங்களையும் மொழிபெயர்த்திருக்கிறார். சிறுகதை மேதை
என்று கொண்டாடப்படும் ஆன்டன் செகாவின் சிறுகதைகளை மொழிபெயர்த்து ‘மனபிராந்தி’ என்ற
பெயரில் வெளிவந்துள்ளது. உலக இலக்கியத்தில் பெரிதும் மதிக்கப்படும் ஜேம்ஸ் ஜாய்ஸின்
‘டப்ளின் நகரத்தார்’ என்ற தொகுப்பு மிகவும் சிக்கலானது. வரலாற்று பெருமை மிக்கது. அந்த
சிறுகதைத் தொகுப்பையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
அவரிடம் உள்ள புத்தக சேகரிப்பு இன்னொரு
கிடைத்தற்கரிய புதையல். கும்பகோணத்தில் வசித்த காலத்திலிருந்தே அரிய பழைய பதிப்புகளைத்
தேடிச் சேகரிக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. 1940இல் வெளியான புதுமைப்பித்தன் கதைகள்
முதல் பதிப்பு அவரிடம் உள்ளது. அதிலிருந்த அகல்யை கதை அவரை பெரிதும் ஈர்த்தது. அகல்யையை
வைத்து அதுவரையில் எழுதப்பட்டவற்றைத் தேடித் தொகுத்தார். காவியத்தில், மேடையில், கதையில்,
கவிதையில் என்று பிரித்து விமர்சன நோக்கில் அவற்றின் நிறைகுறைகளைக் கட்டுரையாக்கினார்.
‘இவர்கள் பார்வையில் அகலிகை’ என்ற தலைப்பில் புத்தகமானது. 1998. வால்மீகி, வியாசர்,
கம்பன், கு.பா.ரா, ஏ.ஆர்.ராஜகோபால், மாடர்ன் தியேட்டர்ஸ் குழு, வ.ரா, பிரபஞ்சன், துவிஜேந்திரலால்
ராய், புதுமைப்பித்தன், எம்.வி.வெங்கட்ராம், சிட்டி, டி.கே.சீனிவாசன், ச.து.சு.யோகியார்,
ந.பிச்சமூர்த்தி, ஞானி, சிற்பி, மஹாகவி, வாலி, தாகூர், முருகுசுந்தரம் ஆகியோரது படைப்புகள்
அதில் உள்ளன.
சிறுகதை முன்னோடிகள் – புகழ்பெற்றிராத
தொடர்ந்து கதைகள் எழுதாத ஆனால் சில நல்ல கதைகள் எழுதியவர்களின் தேர்ந்தெடுத்த கதைகளைக்
கொண்டது. நாரண துரைக்கண்ணன், சங்கர ராம், கி.சந்திரசேகரன், புரசு பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின்
கதைகள் இடம்பெற்றுள்ளன. இயக்குநர் நீலகண்டன் 1949இல் ‘இசைவாணி’ என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
புதுமைப்பித்தன் மீது மிகப் பெரும் ஈடுபாடு
கொண்டவர். அவரது பழைய பதிப்புகளை சேகரித்து வைத்துள்ளார். ‘ஸ்டாலினுக்கும் தெரியும்’
என்ற தலைப்பிலான கட்டுரை நூலை 1991இல் பதிப்பித்திருக்கிறார்.
அவர் எழுதியுள்ள நூல்களின் பட்டியலிலிருந்து
1961ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான 65 ஆண்டு காலத்தில் இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும்
நூல்களை எழுதி வெளியிட்டிருப்பதைப் பார்க்க முடியும். சிறுகதை, நாவல், கவிதை, மொழியாக்கம்,
விமர்சனம், கட்டுரை என்று எல்லா வகையான நூல்களையும் எழுதியிருக்கிறார். இந்த வயதிலும்
அவர் எழுதுகிறார், மொழிபெயர்க்கிறார். ரஷ்ய இலக்கியத்தின் மாமேதை தஸ்தாவெஸ்கியின்
The Possessed என்ற 500க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட நாவலை மொழிபெயர்த்திருக்கிறார்.
அவரிடம் பேசும்போது தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி உற்சாகத்துடன் கூறுவதைக்
கேட்க முடியும்.
ஒரு மனிதன் வாழ்நாளில் செய்த சில காரியங்களின்
வழியாகவே மதிக்கப்படுகிறான், நினைக்கப்படுகிறான். அந்த வாழ்க்கையும் பொருள்மிக்கதாகிறது.
அந்த வகையில் க.ரத்னம் அவர்கள் 65 ஆண்டு காலம் தமிழ் மொழிக்கும் புனைவுக்கும் மொழியாக்கத்துக்கும்
மானுடவியலுக்கும் பறவையியலுக்கும் தன்னுடைய எழுத்தின் மூலமாக அளித்திருக்கும் பங்களிப்பு
என்பது அளப்பரியது. போற்றத்தக்கது. மதிக்கத்தக்கது. தன் பங்களிப்புகளின் வழியாக தமிழ்
இலக்கியத்திலும், வரலாற்றிலும் தன்னுடைய பெயரை அவர் காலத்துக்கும் நிலைத்திருக்குமாறு
செதுக்கி வைத்துவிட்டார். இன்று அவருக்கு இங்கு வழங்கப்பட்டிருக்கும் வாழ்நாள் சாதனையாளர்
விருது என்பது மிகப் பொருத்தமானது, பெருமைமிக்கது. இதன் மூலம் இதுவரை அவரைப் பற்றி
அறியாதவர்களும், இன்றைய தலைமுறையும் அவரையும் அவரது சாதனைகளையும் தெரிந்துகொள்வார்கள்
என்றால் அதுவே இன்னும் மிகப் பெரிய விருதாக அமையும்.
(கோவை கொடீசியா புத்தகத் திருவிழா 2026
இல், க.ரத்னம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் ஆற்றிய
உரை )


