Thursday 11 June 2020

மனைமாட்சி – நீரில் கரையும் உணர்வுகள் - ராயகிரி சங்கர்

சாதனை நாவல்கள் 5

மனை மாட்சி _ எம்.கோபாலகிருஷ்ணன்

மூன்று குறுநாவல்களின் தொகுப்பு. ஒவ்வொரு நாவலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இணைக்கதைகளோடு. ஒன்றின் சுமையை பிறிதொன்று சமன்செய்யும் விதமாக. காதல் என்று சொல்லியே ஆண் பெண் உறவை உன்னதப்படுத்த முடிகிறது. பெருந்திணையும் ஓர் ஒழுக்கம் என்கிறது நம் அக இலக்கணம். முதல் இரண்டு நாவல்களில் முதியவர்கள் கொள்ளும் காதல்களும் விவரிக்கப்படுகின்றது. அறுபதுகளை நெருங்கிய ஆண்களின் காதல்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய முதல் நாவல் இதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆ.மாதவனின் கிருஷ்ணப்பருந்து மருமகள் மீது காமுறும் மாமனாரைப்பற்றியது என்றாலும் நவீனத்துவ எழுத்திற்குரிய பூடகத்தன்மை கொண்டது. காமத்தை தம் எழுத்தின் மையப்பொருளாகக் கொண்ட தி.ஜானகிராமன், கு.ப.ராஜகோபாலன், தஞ்சைப்பிரகாஷ், சாரு நிவேதிதா, ஜே.பி.சாணக்யா,வா.மு.கோமு, ஜீ.முருகன் என்று நீளும் பட்டியலில் இந்நாவலை எழுதியன் மூலம் எம்.கோ.வும் வந்து சேர்கிறார். இந்நாவலின் மையக்கருவாக ஆண் பெண் உறவே இருக்கிறது. இதில் சொல்லப்படும் ஆண்களும் பெண்களும் எல்லைகளை மீறுவதை இயல்பாக கொண்டிருக்கின்றனர். பாலியல் வறட்சி கொண்ட தமிழ்ச் சமூகத்தின் தற்காலமுகத்தை இவை மாற்றிக் காட்டுகின்றன. ஒரே நேரத்தில் கணவனோடும் காதலனோடும் உடலின்பம் துய்க்கும் பெண்கள் . சந்தர்ப்பங்கள் உருவாக காத்திருக்கும் உடல்கள். தன் விருப்பத்திற்காக எதைச்செய்யவும் துணியும் மனங்கள். கற்பென்பதன் நம்பிக்கைகள் இல்லாமல் ஆகும் பதற்றம்.

உண்மையில் எழுதப்படுவதை விட அதிகம் நடந்துகொண்டிருக்கிறது இங்கே. எழுத்தில் வாசிக்கும்போது நமக்கு மிக நெருக்கமாக மாறும் மனிதர்கள்தான் நம்மை அசைக்கிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், ஆவேசம் கொள்ளச் செய்கிறார்கள். இதுவரை எழுதப்படாத தமிழ் வாழ்வின் சித்திரங்களைக் கொண்டுள்ள சிறந்த நாவல்.

முகநூல் பக்கம்  25 செப்டம்பர் 2018

02

மனைமாட்சி – நீரில் கரையும் உணர்வுகள் -2

”ஓவர் ஆக்டிங்” என்றார் என் மனைவி எரிச்சலோடு.

நான் மெத்தையில் ஒருச்சாய்ந்து படுத்து கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தேன். யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்ற மௌனத்தோடு. வெளியே நல்ல வெயில். மின்விசிறியின் இரைச்சலையும் மீறி கழுத்திலும் முதுகிலும் வியர்வைக்கோடுகள். மார்பில் மனைமாட்சி நாவல். மீராவின் கேள்விதான் என்னை உடைத்தது. ”அம்மாவிற்கு பால்ல துாக்க மாத்திரை கலந்து கொடுத்தது தப்பா அப்பா?” என்று அவள் தியாகுவிடம் கேட்கும் இடம். அவர்கள் விடியற்காலையில் சாந்தியை தன்னந்தனியே வீட்டிற்குள் விட்டுவிட்டு சொல்லிக்கொள்ளாமல் ஊரைக்காலிசெய்து போகிறார்கள்.

அதுவரை சாந்தியை பலமுறை திட்டியிருக்கிறேன். அவள் வெள்ளியங்கிரி தியான மண்டபத்தில் சென்றமர்ந்து தியானம் செய்யும் காட்சிகளில் என் அகம் முழுக்க வசைச்சொற்கள். முதல் அத்தியாயத்தில் இருந்து அவள் மீது சொல் சொல்லாக வளர்ந்து வந்த குரோதம். கடைசிக்கட்டத்தில் அவள் மீதான பரிதாபமாக உருமாற்றம் அடைந்தது. மறுநாள் காலையில் அவள் கண்விழித்து எழுந்ததும் என்ன செய்யக்கூடும் என்பதை என் உள்மனம் அறிந்திருந்தது. ஒரு தாய்க்குத் தன் பிள்ளைகளை இழப்பது எவ்வளவு வலிமிகுந்தது என்பதை நடுக்கத்தோடு உணர்ந்தேன். என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. அந்த நேரத்தில் நான் வேறு சாந்தி வேறு என்ற எண்ணமே எழவில்லை. அவள் துயரம் என்னுடையது. அவளைப்போல எனக்கும் அன்பை வெளிக்காட்டத் தெரியாது. தன்னிச்சையாக செயல்படத்தான் கற்றிருக்கிறோம். சார்ந்திருப்போரின் உணர்வோட்டத்தினை ’புரிந்தகொள்ளவும் இயலாது. சாந்தி என்பது ஒரு மனநிலை. ஆண் பெண் பேதமில்லாமல் எதன்பொருட்டோ இம்மண்ணில் இடைவிடாமல் தோன்றி நிலைத்திருக்கும் ஒரு பாவனை.

அரிதாகவே இதைப்போன்று நிகழ்கிறது. ஜெயமோகனின் பத்மவியூகம் சிறுகதையைப் படித்து அகஸ்தியர்பட்டி பொதுநுாலக வளாகத்தில் அமர்ந்து கண்ணீர் விட்டிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் பூ படத்தில் வரும் மாரிக்காக. இவை மிகை உணர்ச்சித்தருணங்களாக இருக்கலாம். ஆனால் . அழுவது எனக்கு ஒரு வெளியேற்றமாக இருக்கிறது. அக்கணத்தைய தன்வெளிப்பாடு. மெல்லுணர்ச்சிகளை தாழ்வாக எண்ணி ஏன் விலக்க வேண்டும்?

அறிவால் மட்டுமே வாழ்க்கையை எதிர்கொள்கிறவர்களின் தடித்தனங்களில் ஒன்று மெல்லுணர்ச்சிகளை போலிப்பாவனைகளாக எண்ணிக்கொள்வது. வெறும் பகுத்தறிவினால் மதங்களையும் வழிபாட்டுச்சடங்குகளையும் மதிப்பிடுவதைப் போல. பல நுாற்றாண்டுத் அகத்தொடர்ச்சி உள்ள ஒரு சடங்கினை ஐம்பதாண்டுகள் கூட ஆகியிருக்காத ஒரு தத்துவத்தின் துணையால் புறக்கணிப்பதைப் போல. நுண்ணுணர்வுகளின் தனித்தன்மைகளை சராசரித்தனம் என்கிற மட்டுப்படுத்தும் விசையாக மங்கச்செய்யும் விழைவு.

இலக்கியத்தின் பிரதான நோக்கமே பிறரின் உணர்வுகளை தன் உணர்வுகளாக உணரச்செய்வதுதான். இலக்கியத்தில் நிகழும் அத்தனை நாடகீயத் தருணங்களும் நம் உறைதலில் இருந்து நம்மை அசைக்கும் முயற்சிதானே. படித்தவர்கள் இப்படி அழலாமா என்பதும் ஆண்பிள்ளைகள் அழலாமா என்பதும் அகங்காரத்தில் எழும் கேள்விகள். எல்லா தீவிர உணர்ச்சிநிலைகளையும் மருத்துவம் எதோ ஒரு போபியா என்று நோய்க்கூறாக வரையறை செய்யக்கூடும்.

எதைக்கண்டாலும் உணர்ச்சிகளின் கொந்தளிப்போடுதான் அணுக முடிகிறது. தாயின் காது மடலை எவ்வி எவ்வி கடிக்க முயன்ற நாய்க்குட்டியை வண்டியில் கடந்து செல்லும் கணநேரப் பாய்ச்சலில் கண்டேன். அக்காட்சி அளித்த உணர்ச்சிகரத் ததும்பல் சாதாரண நிகழ்வல்ல. அலுவலக நெருக்கடி இல்லையென்றால் அதற்கு பத்து நிமிடங்கள் ஒதுக்கியிருப்பேன். சதா மூளையால், அதன் தருக்கங்களால் நாம் வாழப்பழகியிருக்கிறோம். நம் கல்விச்சாலைகளில் நாம் அறிமுகம் செய்துகொள்வது முழுக்க முழுக்க தகவல்கள் சார்ந்த சொற்திரட்டன்றி வேறில்லை. நமக்கு இலக்கியமும் அவ்வகை உருப்படிகளில் ஒன்றாகப் புகட்டப்படுகிறது.

ஒருவன் தன்னிலை இழந்து கண்ணீர் விட்டு அழுவது என்பது தியான அனுபவங்களில் மட்டுமே ஏற்படச் சாத்தியமுள்ள அகங்காரம் இழந்த நிலை அல்லவா? உச்சக்கட்ட பரவசத்தின் ஒரு கண நேர திறப்பு அல்லவா? ஒரு இலக்கிய வாசகனாக என்னை அழச்செய்யும் படைப்புகளின் மீது பெரும்பித்தோடு இருக்கிறேன். ஓவர் ஆக்டிங் என்று எள்ளி நகையாடினாலும் அழுவதும் சிரிப்பதும் எனக்கு வாய்த்த பெரும்பேறு என்கிற உறுதியோடு.

முகநூல் பக்கம் 13 செப்டம்பர் 2018

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...