Wednesday, 1 October 2025

கவிதையும் ஞானமும் - 4 • எடிசன் புன்னகைக்கிறார்

 


அற்புத விளக்கு

பெரு விஷ்ணுகுமார்

0

நள்ளென் யாமத்தில் உறக்கம்கலைந்து தட்டுத்தடுமாறி
சுவரில் கைவைத்துத் தடவியபடி
அறையின் விளக்கை எரியவைக்க முயற்சிப்பவனிடம்
அந்தரத்தில் தொங்கும் ஒளிக்கூடையானது
அந்த நேரத்தில்போய்
சரி தவறு என்றெல்லாம் கணக்கு பார்ப்பதில்லை
இதுபோலான இக்கட்டான சூழ்நிலையிலெல்லாம்
போனால் போகட்டுமென
தவறான சுவிட்ச்சுக்கும் ஒளிர்ந்துவிடும்
அதுதான்
தாட்சண்யம் மிக்கதோர் விளக்கு

0

பள்ளி நாட்களில் ஏதேனும் ஒரு தேர்வுத் தாளில், பாஸ் மார்க்கான முப்பத்தி ஐந்துக்கு அரை மதிப்பெண்ணோ ஒரு மதிப்பெண்ணோ குறையும்போது தாளைத் தூக்கிக்கொண்டு ஆசிரியருக்கு முன்னால் கெஞ்சி நின்ற அனுபவம் பெரும்பாலோருக்கு வாய்த்திருக்கும். சிவப்பு மையால் உழுதத் தாளை வாங்கி புரட்டும்போது இஷ்ட தெய்வங்களை வேண்டி நின்றிருப்போம். அந்த குறை மதிப்பெண்ணை நிவர்த்தி செய்ய தோதான ஏதேனும் ஒரு சொல்லை, பதிலைக் கண்டுபிடித்து ‘டிக்’ அடித்து இட்டிருக்கும் மதிப்பெண்ணை ஒட்டி அரை மதிப்பெண்ணை அல்லது ஒரு மதிப்பெண்ணை சேர்த்த பின் முதல் பக்கத்தில் உள்ள மொத்த மதிப்பெண்ணை அடித்துத் திருத்தி முப்பத்தி ஐந்தாக்கும் அத்தருணத்தில் அந்த ஆசிரியருக்கு மனதார ‘நல்லாசிரியர்’ விருதளித்திருப்போம். கெஞ்சி நிற்கும் மாணவனுக்கு இந்த அரை மதிப்பெண்ணை சேர்த்து ‘பாஸ்’ பண்ண வைக்கும் பெரிய மனசு எல்லோருக்கும், எப்போதும் வாய்த்துவிடுவதில்லை.   எப்போதேனும் எவரிடத்திலேனும் வாய்க்கும் இந்த பெரிய மனுசுதான், பரிவுதான், தாட்சண்யம்தான் இவ்வுலகை இன்னும் சராசரிகளுக்கும் நடுத்தரங்களுக்கும் விபரம் போதாதவர்களுக்கும் பிழைக்கத் தெரியாதவர்களுக்குமான சின்னஞ்சிறிய இடத்தை காப்பாற்றி வருகிறது.

ஒருவழிப்பாதை என்று தெரிந்தும் விசுக்கென நொடிப்பொழுதில் தீர்மானித்து எதிரில் வரும் சரியானவற்றை திடுக்கிடச் செய்து கடந்து போகிற ஒரு இளம் புல்லட்டை நொடிப்பொழுதி நிறுத்தி பின் அதே கணத்தில் அனுமதித்து நகர்வார் போக்குவரத்து காவலர். அப்போது அவர் முகத்தில் தோன்றி மறையும் சிறு புன்னகை. அதுவரையிலான இறுக்கமான அவரது கடமை முகத்துக்கு, அடடா எங்கிருந்தோ வந்து சேரும்  அபாரமான அழகு.

முறையான ஆராய்ச்சிகளால் சோதனைக்கூடங்களில் பலகட்டங்களுக்குப் பிறகு எட்டப்பட்ட கண்டுபிடிப்புகளும் உண்டு. பூனைகள் தாவி மேசையைக் குலைத்து பொருட்களைக் கலைத்து ஏற்படும் சிறுவிபத்துகளில் விளைந்த நன்மைகள்தான் எத்தனை! திட்டமிட்டு அடைந்த குறிக்கோளுக்கும் தற்செயலால் அடைந்த ஒன்றுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு சுவாரஸ்யம். அந்தரத்தில் விளைந்த கனியைக் கண்டு ஏற்படும் குதூகலம். இன்னொரு முறை முயன்றாலும் நிகழாத அற்புதம். 

சரியானவற்றை வேறுபடுத்தி சரியாகக் காட்ட தவறுகள் தேவைப்படுகின்றன, வெண்மையை துலக்கித் தர உதவும் சிறு கரும்புள்ளிபோல. துக்கிரிக் கண்களிலிருந்து அழகையும் தூய்மையையும் காப்பாற்றும் திருஷ்டி பொட்டுகள் அவை.

வலுத்ததே வாழும் என்பது விதியானாலும் ‘இருந்துட்டு போகட்டும் விடு’ என்று கரிசனம் காட்டும் தாட்சண்யத்தால்தான் உய்கிறது இவ்வுலகம்.

‘தயவு தாட்சண்யமெல்லாம் பாத்தா பொழைக்க முடியாது’ என்று சொல்வார்கள். அப்படி பார்ப்பவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் புறம்பேசக்கூடும். என்ன செய்ய முடியும்? சிலர் மட்டும் வாழ்ந்திருக்கும்போது இன்ன பிற அனைத்தும் பிழைத்துக்கிடக்கத்தானே வாய்த்திருக்கிறது.

தாட்சண்யம் என்பது பித்துக்குளித்தனத்தின் ஒரு கீற்றுதான். பித்துக்குளித்தனங்களால்தானே கலையும் கவிதையும் வனப்புறுகின்றன. அந்தரத்தில் தொங்கும் ஒளிக்கூடை தவறான ‘ஸ்விட்சு’க்கு ஒளிரும் பித்துக்குளித்தனத்தினால்தான் இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து யாரும் பிழைக்க முடிகிறது. அப்படி ஒளிரும்போது எடிசன் புன்னகைக்கிறார் என்றால் அவரும் ஒரு தவறான ஸ்விட்சை அழுத்தியபோதுதான் அந்த அற்புத விளக்கைக் கண்டறிந்திருக்கக் கூடும்.

பித்துக்குளித்தனங்களால் நிறையட்டும் இவ்வுலகு. தவறான ஸ்விட்சுக்கு எங்கும் ஒளிரட்டும் தாட்சண்யத்தின் ஒளிக்கூடை.

0

அக்டோபர் 2025 ஆவநாழி 32ஆம் இதழில் வெளியானது

No comments:

Post a Comment

கவிதையும் ஞானமும் - 4 • எடிசன் புன்னகைக்கிறார்

  அற்புத விளக்கு பெரு விஷ்ணுகுமார் 0 நள்ளென் யாமத்தில் உறக்கம்கலைந்து தட்டுத்தடுமாறி சுவரில் கைவைத்துத் தடவியபடி அறையின் விளக்கை எரியவைக...