Monday, 18 August 2025

நகரும் படிக்கட்டுகள் - திவ்யா ஈசனின் கவிதை


ஒரு கவிதை என்ன செய்யும் - 2


0

நவீன உலகத்தைத் தாண்டுதல்

திவ்யா ஈசன்

அவன் கைகள் சோர்ந்து

நான் பார்த்ததேயில்லை

வெட்டி வெட்டி

மண்வெட்டிதான் மழுங்கிப் போகும்

அதை கூர்த்தட்டதான் ஓய்வான்

இரண்டு ஆள் வேலை செய்வான்

 

ஓங்கி உயர்ந்த பனைகளில்

நெஞ்சுபடாமல் ஏறி

நுங்கு வெட்டித் தருபவன்

ரத்த வாடைப் பழகாத தெருநாய்யை

காட்டுக்கு கூட்டிச் சென்று

வேட்டைநாயாய் மாற்றுபவன்

 

பெரும் வரைக்கட்டில்

தனியாளாய் வள்ளியில் இறங்கி

தேன் அருக்கும் உரம் மிகுந்தவன்

 

ஓடும் நதியில் எறிதூண்டி இட்டு

பெருமணாலி மீன்பிடிப்பதில்

நல்ல கைத் தேர்ந்தவன்

 

மலைப்பெருவை நடக்கையில்

மிருகத்தின் நாற்றமறிந்து

வரும்முன் விலகத் தெரிந்தவன்

 

திருவிழா நாட்களில்

வீர விளையாட்டின் பரிசுகளை

ஒன்றுவிடாமல் வாங்கி குவிப்பவன்

 

களரி சிலம்பம்

வாள் வீச்சை எல்லாம்

காலில் மண்டியிட வைப்பவன்

 

கணியன்பூங்குன்றனுக்கு

பாடம் கற்பிக்கும் அளவுக்கு

அறிவுச் செருக்கு உடையவன்

 

முதலைகள் வாழும் காயலில்

அக்கரைக்கு நீந்தும் அளவுக்கு

உயிர்பயம் அற்றவன்

 

பெண்களை விரும்பும் ஊரில்

பெண்களே விரும்பும்

பேரழகன் அவன்

 

நான் கண்டு கண்டு

எப்போதும் வியக்கும் ஒருவன்

 

நான் மேல்தளம் போனப் பிறகும்

அகலமான ஓடையைத் தாண்ட

எத்தனிப்பவனைப் போல்

என் மாமன்

எக்ஸ்லேட்டர் முன்பு நின்று

நிதானமாக

இந்த நவீன உலகத்தைத் தாண்டுவதை

மேலிருந்து மறுமுறைப் பார்த்தேன்.

 

அவன் கையை

நான் பிடித்து நடப்பதை

மாற்றி

என் கையை

அவன் பிடித்து நடப்பது

இதுதான் முதல்முறை

வாழ்க சென்னையும் அதன் சுற்றமும்

 

உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவா இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம் ‘தெர்சு உசாலா’. ரஷ்ய துருவப் பிரதேசத்தில் நில அளவைக்காக பயணம் மேற்கொள்ளும் கேப்டன் அர்சனேவுக்கு உதவியாளராக செல்கிறார் நாடோடி வேட்டையரான தெர்சு உசாலா. பயணத்தின்போது சந்திக்க நேரும் பல இன்னல்களிலிருந்து தன் அனுபவ ஞானத்தின் உதவியால் காப்பாற்றி உதவுகிறார் உசாலா. பயணத்தின் முடிவில் உசாலாவை தன்னுடன் நகரத்துக்கு வந்துவிடும்படி அழைக்கிறார் கேப்டன். வனவாசியான உசாலா அதை மறுத்துவிடுகிறார். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்கள். இம்முறையும் அவரை பெரும் விபத்தொன்றிலிருந்து காப்பாற்றுகிறார் உசாலா. ஒரு துப்பாக்கியைப் பரிசாக கேட்டுப் பெறுகிறார். வனத்துக்குள் ஒரு சிறுத்தை அவரை கண்காணித்து தொடர்வதை கவனிக்கிறார். அது தன் வழியில் போகச் செய்வதற்கான வழிமுறைகளை முயல்கிறார். ஆனால் எதிர்பார்த்தபடி நடக்காத நிலையில் துப்பாக்கியால் அதை சுட நேர்கிறது. குறி தவறிவிட சிறுத்தை காயத்துடன் தப்பிச் செல்கிறது. அபாயத்தை உணர்ந்த உசாலா கேப்டனுடன் நகரத்துக்கு வர ஒப்புக்கொள்கிறார். ஆனால், பெட்டிகள் போல் சுவர்களால் தடுக்கப்பட்ட வீடுகள் நிறைந்த நகர வாழ்க்கை அவருக்கு ஒத்து வருவதில்லை. திணறுகிறார். வனத்துக்கே திரும்ப நினைக்கிறார். இம்முறை உயர்ரக துப்பாக்கியை அவருக்கு பரிசாக அளிக்கிறார் கேப்டன். பார்வைத் திறன் குறைந்திருக்கும் உசாலா வெகுநாள் வனத்தில் பாதுகாப்பாக இருப்பது கடினம் என்று உணர்ந்திருக்கும் கேப்டனுக்கு அவரது மரணச் செய்தி வந்து சேர்கிறது. சிறுத்தையால் கொல்லப் பட்டிருக்கலாம் அல்லது அவரிடம் இருந்த துப்பாக்கிக்காகவும் கொலையுண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படியிருப்பினும் உசாலா தான் விரும்பியபடி வனத்துக்குள்ளேயே உயிர் துறக்கிறார்.

எந்த அடிப்படை வசதிகளுமில்லாமல் வனத்துக்குள் வாழ்பவர்களை பார்க்கும்போது வியப்படைவதுண்டு. இவர்களால் எப்படி இந்த வனத்துக்குள் வாழ முடிகிறது என்று யோசிப்போம். வனத்தின் ஊடுபாதைகளை அவர்களின் பாதங்கள் அறியும். ஓசைகளின் மூலமும் வாசனைகளின் வழியாகவும் காட்டின் சலனங்களை அறிந்தவர்கள் அவர்கள்.

நகரம் அவர்களுக்கு நெருக்கடியின் கூடாரம். மாசடைந்த நிலமும் நீரும் காற்றும் கொண்ட நஞ்சுப் பிரதேசம். காலையில் எழுந்தது முதல் எல்லாவற்றுக்கும் பதற்றமும் அவசரமுமான நகர வாழ்க்கை அவர்களுக்கு ஒத்துவராதது.

அண்மையில் ஆந்திராவிலுள்ள அரக்கு வேலிக்கு செல்ல வாய்த்தது. கிழக்கு தொடர்ச்சி மலையில் ஒரிசா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 1000 மீட்டர் உயரம். விசாகப்பட்டினத்திலிருந்து சாலை வழியாகவும் ரயில் மூலமாகவும் செல்ல முடியும். மலைகளும் பள்ளத்தாக்குகளும் ஓடைகளும் அருவிகளுமான இந்தப் பாதையில் பயணம் செய்வது நல்ல அனுபவம். ஆனால், பசுமையான மலைகளினூடே பயணம் செய்கையில் அங்கங்கே ஏராளமான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதைக் காண முடிந்தது. ராஜமுந்திரியிலிருந்து நேரடியாக விஜயநகரத்தை அடைவதற்கான பசுமை இருப்புப் பாதையை மலைகளினூடாக இடுகிறார்கள். இங்குள்ள பாக்ஸைட் கனிமத்துக்காகவே இந்தப் பாதை என்றும் விமர்சனங்கள் எழுகின்றன. அரக்குப் பள்ளத்தாக்கில் ஏராளமான பழங்குடி வசிப்பிடங்கள் உள்ளன. இங்கு பயிரிடப்படும் காபி புகழ்பெற்றது. அரக்கு ஒரு சிற்றூர். தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குவிவதால் சிற்றூரின் அடையாளங்கள் வேகமாக மறைந்து வருகின்றன. பயணிகள் விடுதிகளுக்கான கட்டுமானப் பணிகள் மலைச் சரிவுகள் எங்கும் தொடர்கின்றன. வார இறுதி நாட்களில் வந்து குவியும் வாகனங்களின் எண்ணிக்கை மலைக்கச் செய்கிறது. எல்லாவிடங்களிலும் சாலையோரங்களில் காணப்படும் மூங்கில் பிரியாணிக் கடைகள் திணற வைக்கின்றன. இங்கு பழங்குடி காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பழங்குடிகளின் தனித்தன்மைகளை, அடையாளங்களை, வனம் சார்ந்த வாழ்க்கையை நவீன முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.  

காட்சிக் குகையின் ஒரு பகுதியில் மரத்திலிருந்து ஈட்டியுடன் தாவும் இளைஞனின் உருவத்தைக் கண்டதும் அண்மையில் வாசித்திருந்த திவ்யா ஈசனின் கவிதை வரி உடனடியாக நினைவுக்கு வந்தது. ‘பெரும் வரைக்கட்டில் தனியாளாய் வள்ளியில் இறங்கி தேன் அருக்கும் உரம் மிகுந்தவன்.’ கண்காட்சிக் கூடத்தை சுற்றிவரும்போது அந்த வரி மீண்டும் மீண்டும் ஒலித்தது. அவனுக்கே சொந்தமான காட்டில் அவனை ஒரு குகையில் சித்தரிப்பாக மாற்றியிருக்கும் அபத்தம் தொந்தரவு செய்தது.

 

படியேறவும் நடக்கவும் முடியாத நவீன வாழ்க்கை எல்லோரையும் நகரும் படிக்கட்டுகளில் (எஸ்கலேட்டர்) ஏற்றி வேகமாய் நகர்த்துகிறது. உலகம் மொத்தமுமே நகரும் அதிவேகப் பாதையில் நகர்ந்து கண்மறைந்து போகிறது. மலையிலும் மரத்திலும் தாவித் திரிந்தவனுக்கு நகரும் படிக்கட்டில் கால் வைக்க பயம். நகரும் அந்தப் படிக்கட்டுகளில் எதில் எப்போது கால் வைக்கவேண்டும் என்ற தடுமாற்றம் முதன்முறையாக அதைப் பயன்படுத்தும் எல்லோருக்கும் ஏற்படும் ஒன்று. ஏற்கெனவே அதில் ஏறிச் சென்றவர் நம் கையைப் பிடித்துக்கொண்டாலும்கூட சந்தேகத்துடன்தான் கால்வைக்க நேரும். அந்த முதன்முறை பதற்றத்தை கடந்துவிட்டால் அதன் பின் படியேற கால்கள் வளையாது. எல்லா இடங்களிலும் நகரும் படிக்கட்டுகளையே தேடத் தோன்றும்.

நான் மேல்தளம் போனப் பிறகும்

அகலமான ஓடையைத் தாண்ட

எத்தனிப்பவனைப் போல்

என் மாமன்

எக்ஸ்லேட்டர் முன்பு நின்று

நிதானமாக

இந்த நவீன உலகத்தைத் தாண்டுவதை

மேலிருந்து மறுமுறைப் பார்த்தேன்.

 

இந்த இடத்தில் கவிதையின் காட்சிக் கோணம் மாறியிருப்பதை கவனிக்கலாம். தான் கண்டு கண்டு வியந்த ஒருவனை இப்போது அவள் மேலிருந்த காண்கிறாள். அப்போதும் அவன் நகரும் படிக்கட்டில் கால் வைத்து ஏறுவதில்லை. அகலமான ஓடையைத் தாண்ட எத்தனிப்பவனைப் போலவே இந்த நவீன உலகத்தையும் அவன் தாண்டுகிறான்.

நகரவாசிகள் நவீனத்தின் படிகளில் மேலேறிப் போய் வெகு காலத்துக்குப் பிறகு மலையும் காடுமே வாழ்வென்று இருந்தவர்கள் அச்சத்துடன் தயங்கி முதல் படியில் கால்வைக்கிறார்கள். இந்த இடைவெளி நகரத்துக்கும் மலை கிராமங்களுக்கும் உள்ள இடைவெளி மட்டுமல்ல. பழமைக்கும் நவீனத்துக்குமான இடைவெளி. இயற்கைக்கும் இயற்கை அல்லாததுக்குமான இடைவெளி.   

கல்வி, மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து என்று அடிப்படை வசதிகள் மலைக் கிராமங்களை எட்டுவதும் கல்வியின் மூலமாக அவர்கள் உயரங்களைத் தொடுவதும் பொருளாதார சமூக வளர்ச்சியின் முக்கியமான படிநிலை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில், வணிக நோக்கில் மலை வளங்கள் சுரண்டப்படுவதும் அதற்கு விலையாக தரநேரும் சீரழிவுகளின் அபாயங்களைக் குறித்து கவலைகொள்ளாமல் அலட்சியப்படுத்துவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது.

மரபும் பாரம்பரியமும் தனித்திறன்களும் இனி காட்சிக்கூடங்களின் செயற்கை சித்தரிப்புகளாக மட்டுமே எஞ்சி நிற்கும் என்றால், மலைக்கும் அடிவாரத்துக்கும் இடையே நகரும் அந்த அதிவேகப் படிக்கட்டுகள் யாருக்கானவை?    

அதே நேரத்தில் இந்தப் பாய்ச்சல் இன்னொரு பெரிய மாற்றத்தை சாத்தியப்படுத்தியிருப்பதை கவிதையின் இறுதிக் கண்ணி கச்சிதமாக சுட்டியுள்ளது.

அவன் கையை

நான் பிடித்து நடப்பதை

மாற்றி

என் கையை

அவன் பிடித்து நடப்பது

இதுதான் முதல்முறை

வாழ்க சென்னையும் அதன் சுற்றமும்


பற்றியிருக்கும் கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் அந்தப் பெண்ணுக்கு அளித்திருக்கும் உவகையினால் குதூகலத்தினால்தான் அந்த இறுதி வரி சாத்தியமாகியிருக்க வேண்டும். வளங்களைச் சுரண்டியிருப்பினும் வாழ்வை மாற்றியிருப்பினும் இயற்கை இல்லாது போனபோதும் கையை மாற்றிப் பற்றவைத்தமைக்காக எழுகிற வாழ்த்தும் அதில் தொனிக்கிற நம்பிக்கையும் இந்தக் கவிதையின் அழகை மேலும் அழுத்தமாக்கியுள்ளது.

0

( ஆவநாழி 50ஆம் இதழ், ஆகஸ்டு 25 )

No comments:

Post a Comment

கவிதையும் ஞானமும் - 4 • எடிசன் புன்னகைக்கிறார்

  அற்புத விளக்கு பெரு விஷ்ணுகுமார் 0 நள்ளென் யாமத்தில் உறக்கம்கலைந்து தட்டுத்தடுமாறி சுவரில் கைவைத்துத் தடவியபடி அறையின் விளக்கை எரியவைக...