ஒரு கவிதை என்ன செய்யும் - 1
0
நிபந்தனைக் காதல் - பொன்முகலியின் கவிதை
கவிதை என்றால் காதலின்றி இருக்க முடியாது.
காதலிலிருந்து கவிதையையும் கவிதையிலிருந்து காதலையும் பிரிக்கவும் முடியாது. சங்கம்
முதல் இன்று வரை எழுதப்பட்டபோதும் இந்த கருப்பொருள் மட்டும் சிறிதும் கருக்கிழக்காது
பொலிவதன் ரகசியம் காதலுக்குத் தெரியும் அல்லது கவிதைக்குத் தெரியும்.
சுனைவாய்ச் சிறுநீரை பிணைமான் இனிதுண்ண
வேண்டுதலில் தொடங்கி ஓங்குவரையடுக்கத்துப் பாய்ந்துயிர் செருகும் மந்தியும் தினைத்தாள்
அன்ன சிறுபசுங்கால் ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் வரை நீளும் சிறுகோட்டுப் பெரும்பழத்தின்
சுவையையும் வாதையையும் இன்றுவரை சொல்லித் தீரவில்லை. இன்னும் விதவிதமாய் சொல்லிப் பார்க்கிறார்கள்.
கண்ணில்லாத காதலுக்கு இலக்கணமும் கிடையாது.
இன்னதெல்லாம் அமையப்பெற்றால் கைகூடும் காதல் என்று யாரும் உறுதியளிக்கவும் வாய்ப்பில்லை.
எப்போது எங்கு யாருக்கு எங்ஙணம் நிகழும் என்று ஆருடம் சொல்வதும் கடினம். பலரும் கவனித்திருக்கக்கூடும்,
காதலில் எல்லோரும் விழத்தான் செய்கிறார்கள். எனவே, அது எதிர்பாராமல் நடக்கும் விபத்துதான்.
விரும்பி ஏற்கும் விபத்து.
காதலிக்காக காதை அறுத்து தாம்பளத்தில்
வைத்து நீட்டினான் ஓவியப் பித்தன் வான்கா. அமராவதியின் கடைக்கண் பார்வையில் எண்ணிக்கையை
தவறவிட்டு தலையைக் கொடுத்தான் அம்பிகாபதி. பிரிவென்பது இனிய துயரம் என்பது காதலின்
பொருட்டு உயிர் துறந்த ரோமியோ ஜூலியட்டின் வாக்கு. விரான்ஸ்கியின் மீதான காதல் அன்னா
கரீனினாவுக்கு துயரத்தைத் தவிர வேறெதையும் அளிக்கவில்லை என்றாலும் அவளால் அதிலிருந்து
மீள இயலவில்லை. இன்றைய தலைமுறையினரிடம் இந்தக் கதையையெல்லாம் சொன்னால் பூமர்களின் காதல்
என்று கடந்து செல்லக்கூடும்.
காவியக் காதலையும் விளக்கங்களுக்கு அப்பாலான
அதன் விளைவான பித்துக்குளித்தனங்களையும் ஓரமாக வைத்துவிட்டு ‘பீ பிராக்டிகல்’ ( be
practical ) என்று உபதேசிக்கிறது நவீன காதல். இன்றைய காதலின் வரையறைகள் வேறு. அர்த்தமும்
வேறு. யான் நோக்கின் நிலம் நோக்கும் கதையெல்லாம் இப்போது செல்லுபடியாகாது. காதலின்
மெல்லினக் குணாம்சங்களான கடைக்கண் வீச்சு, ஊடல், தேடல், நுனிவிரல்கொண்டு நடுங்கி மெய்தீண்டல்
என்பதெல்லாம் அர்த்தமிழந்துபோயின. நீதான் என் உசுரு என்று யாரும் இன்று சொன்னால் அவன்
கதி என்னவாகும் என்பது இன்றைய தலைமுறையினரை அறிந்தவர்களுக்குத் தெரியும். இதற்கு நடுவில்
பாய் பெஸ்டிகள் வேறு தலைமுடியை சிலுப்பிக்கொண்டு நாங்கல்லாம் வேற மாதிரி என்று திரிகிறார்கள்.
இந்த தலைமுறை காதலிக்கவே செய்யாதா? அதெப்படி
காதலிக்காமல் இருக்க முடியும். உடலில் இன்னும் ஈஸ்ட்ரோஜென் சுரந்துகொண்டுதானே இருக்கிறது.
காதலை வெளிப்படுத்தும் விதங்களில், அதைப் பற்றிய பார்வையில்தான் மாற்றங்கள். ஒருதரப்பில்
எனக்கில்லையென்றால் வேறு யாருக்குமில்லை என்று அமிலக்குப்பியை கையில் வைத்தபடி திரிந்தவர்களின்
கதையும் உண்டு. காதலனுக்காக கணவனையும் பிள்ளைகளையும் கொலை செய்தவர்களும் உண்டு. இதுபோன்று
தீவிரக் காதல்கள் எல்லாக் காலங்களிலும் உண்டுதான். சந்திப்பதற்கும் பேசுவதற்குமான தடைகளை
மெய்நிகர் வழிகள் இல்லாமல் ஆக்கிய பிறகு சந்திப்பதும் பேசுவதுமே சமயங்களில் ‘பிரேக்
அப்’புக்கு வழி வகுத்துவிடுகிறது.
எக்காலத்திலும் காதலில் சவாலாக விளங்குவது
பெண்களிடம் சம்மதம் பெறுவதுதான். காதலனின் சம்மதம் பெற வேண்டி விடலைக் கல்லை தூக்கிச்
சுமந்த மங்கையரின் கதையை யாரும் கேட்டதுண்டா? காதலுக்காக வாடிவாசல் விட்டு சீறிப் பாயும்
காளைகளின் திமில் பற்றித் தாவியோடிய மறத்தமிழர்கள் பாவம்தான். ஒருதலைராகம் பாடி உயிர்
துறந்த பின்னரே பல சமயம் காதலைச் சொல்லத் தெரிந்திருக்கிறது காதலிகளுக்கு.
காதலுக்காக பொன்முகலியின் கவிதைப் பெண்
விதிக்கும் நிபந்தனைகள் மிகச் சுலபமானவை. தொடக்கத்திலேயே பெரும் நம்பிக்கையைத் தருகிறார்
அவர். ‘என்னைக் காதலிப்பது மிகச் சுலபம்’ என்று சொல்லும்போதே எத்தனை ஆசுவாசமாயிருக்கிறது.
இந்தக் காலத்தில் ஒருத்தி இப்படியும் சொல்ல முடியுமா? இதில் எதுவும் வில்லங்கம் இருக்குமோ
என்று சந்தேகம் கொள்வதை தவறென்று சொல்ல முடியாது. அடிபட்ட இதயத்துக்கு எதைக் கண்டாலும்
பயம்.
எடுத்தவுடன் சாப்பிட்டியா? என்று கேட்பவர்களை, “பத்திரமாக
இரு” என்பவர்களை, வாகனம் வரை வந்து வழியனுப்புவர்களை நான் காதலித்துவிடுவேன் என்று
சொல்லும்போது, இது என்ன பெரிய விஷயமா? என்றுதான் நினைக்கத் தோன்றும். எளிமையான எதிர்பார்ப்புகள்தான்.
குற்றம் சொல்வதற்கு சிறிதும் இடமில்லை. யாரும் மிகச் சாதாரணமாக நிறைவேற்றக்கூடிய அன்றாட
காரியங்கள்தான். நண்பர்களிடம், உறவுகளிடம்கூட இவ்வாறு நடந்துகொள்ள முடியும்தானே. என்ன
அதிசயம் உள்ளதென்று இவற்றை காதலுக்கான தகுதிகளாக சொல்லவேண்டும்? இந்தப் பெண் தீவிரமானவர்தானா?
காதலின் ஆழமும் அர்த்தமும் தெரிந்தவர்தானா? புரிந்துகொள்ள தடுமாறும் கணத்தில் அடுத்த
வரியைச் சொல்கிறார்.
என்
உடலுக்குள் துள்ளும்
சின்னஞ்
சிறுமியின் தலையில்
புன்னகையோடு
முத்தமிடுகிறவர்களை
காதலிப்பேன் என்கிறார் இப்போது. சிக்கல் தொடங்கிவிட்டது.
இவரும் விடலைக் கல்லைச் சுமக்கச் சொல்லும் வீரப் பரம்பரையில் வந்தவர்தான்போல. ஒரே வரிதான்.
திரும்பத் திரும்ப படிக்கவேண்டியிருக்கிறது. ‘உடலுக்குள் துள்ளும் சிறுமி’யைச் சொல்கிறார்.
இல்லை, ‘சின்னஞ்சிறுமி’யைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பருவந்தோறும் தக்க மாற்றங்களை ஏற்கிறது உடல். எலும்பும்
தசையும் சேர்ந்து திரண்டு உருக்கொண்டு வளர்கிறது. வளருந்தோறும் உடல் கவனத்தை ஈர்க்கிறது.
சுய கண்காணிப்புக்கும் உள்ளாகிறது. புறத்தில் நிகழும் இந்த மாற்றங்கள் அகத்தையும் தக்கபடி
வனைகிறது. பார்வைகளை சந்தேகம் கொள்கிறது. தொடுகைகளை கண்காணிக்கிறது. நோக்கங்கள் பற்றி
எச்சரிக்கை கொள்கிறது. அதுவரை மாசற்ற கேண்மை சூழ் அழகுடன் விளங்கிய உலகம் கருப்பு வெள்ளையாய்
பகுக்கப்பட்டுவிடுகிறது. ஐம்புலன்களால் அறிபடும் உலகை புறாக் கூண்டுகளுக்குள் தொகுக்கத்
தொடங்கிவிடுகிறோம். நமக்குள் இருந்த குழந்தையும்
சிறுமியும் இந்த விளையாட்டு புரியாமல் அவரவர் கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்கிறார்கள்,
தற்காலிகமாய். ஒடுங்கிக் கிடக்கும் அவர்கள் ஏதேனும் சில அபூர்வமான சந்தர்ப்பங்களில்
குதூகலத்துடன் வெளிப்படுவார்கள். புறஉலகின் கணக்குகளால், தந்திரங்களால் கறைபடாத தூய
அந்த நிறைவைத் தொட்டு மீளும் கணம் மீண்டும் பிறந்ததுபோல் கிளர்ச்சி கொள்கிறார்கள்.
துள்ளும் சிறுமியின் தலையில் புன்னகையுடன் முத்தமிடத் தெரிந்தவர்கள் தந்தையருக்கு நிகரானவர்கள்.
தயாவான்கள். உண்மையில் காதலிக்கத் தகுந்தவர்கள்தான்.
அவ்வாறான
மேன்மை கொண்டவனா என்று ஆழ்ந்து நான் யோசிக்கும்போது மிக எளிமையாய் அடுத்த சில தேவைகளைச்
சொல்கிறாள் கவிதைப் பெண்.
பிறகு
நான்
விளையாட ஒரு கடற்கரையை
பசியாற
சில மீன் துண்டுகளை
கூந்தலுக்குள்
மறைய ஒரு சூரியனை மட்டுமே
அவர்கள்
அளித்தால் போதும்.
விளையாட ஒரு கடற்கரையையும் பசியாற சில மீன் துண்டுகளையும் எல்லா நேரத்திலும் எல்லோராலும் அளித்துவிட முடியாது. ஆனால், நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்றே தோன்றும். இந்த இடத்தில்தான் வில்லங்கம் எழுகிறது. ‘கூந்தலுக்குள் மறைய ஒரு சூரியன் மட்டும்’ கொடுக்கவேண்டும் என்றால் அது மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதல்லவா? மனிதகுல வரலாற்றில் காதலுக்காக இப்படியொரு காணிக்கை இதுவரை கேட்கப்படவுமில்லை, கொடுக்கப்படவுமில்லை. அதிலும் வேண்டுகோளின் அல்லது நிபந்தனையின் இறுதியில் இட்டிருக்கும் சொல்லான ‘மட்டுமே’ என்பதில் தொனிக்கும் அப்பாவித்தனத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. ‘சூரியனை மட்டுமே’ அளித்தால், காதலித்து விடலாம், ஒன்றும் சிரமமில்லை.
நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று
அவசரமாய் விலகிப் போக நினைப்பவர்கள் சற்றே நிதானமடைந்து யோசிக்கலாம். இப்படியெல்லாம்
காதலிக்க வேண்டிய அவசியமில்லை என்று மனம் சோர்ந்துவிடக் கூடாது. காதலெனும் மாபெரும்
அனுபவத்தை அடையும் பாதையில் சோதனைபோல இவ்வாறான அபத்தங்களைச் சந்திக்கத்தான் வேண்டும்.
உடலில் துள்ளும் சிறுமியை அடையாளங்கண்டு
தலையில் முத்தமிடத் தெரிந்தவனுக்கு, அவள் கூந்தலில் மறையும் ஒரு சூரியனைக் கண்டுபிடிப்பது
முடியாதா என்ன? விளையாடுவதற்கு கடற்கரையை அளிக்க முடிந்தால், அதில் உதித்து மறையும்
சூரியனைத் தரமுடியாமல் போகுமா? கவிதைப் பெண் அப்படியொன்றும் அநியாயமாய் கேட்டுவிடவில்லை.
அதே கடல், அதே கரை, அதில் துள்ளும் மீன்கள், அங்கேதான் அந்த சிறுமி விளையாடிக் கொண்டிருக்கிறாள்.
சூரியனும் அங்குதான் உதித்து மறைகிறான். இதையெல்லாவற்றையும் நிச்சயம் தரமுடியும். அவள்
உடலுக்குள் துள்ளும் சின்னஞ்சிறுமியை அடையாளம் காண முடியுமென்றால், அந்த அளவுக்கு நீ
தகுதி வாய்ந்தவனென்றால் நிச்சயமாய் தர முடியும்.
0
என்னைக்
காதலிப்பது
மிகச்
சுலபம்.
எடுத்தவுடன்
“சாப்பிட்டியா?”
என்பவர்களை
“பத்திரமாக
இரு” என்பவர்களை
வாகனம்
வரை வந்து வழியனுப்புவர்களை
என்
உடலுக்குள் துள்ளும்
சின்னஞ்
சிறுமியின் தலையில்
புன்னகையோடு
முத்தமிடுகிறவர்களை
நான்
உடனே உடனே காதலித்து விடுவேன்.
பிறகு
நான்
விளையாட ஒரு கடற்கரையை
பசியாற
சில மீன் துண்டுகளை
கூந்தலுக்குள்
மறைய ஒரு சூரியனை மட்டுமே
அவர்கள்
அளித்தால் போதும்.
பொன்முகலி
( ஆவநாழி, ஆகஸ்டு 2025 இதழில் வெளியானது )
No comments:
Post a Comment