துருக்கியைச் சேர்ந்த எழுத்தாளர் ஓரான் பாமுக்குக்கு 2006ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை அடுத்து உலகெங்கும் அவர் மீதும் அவரது நாவல்களின் மேலும் வெளிச்சம் விழுந்தது. தமிழில் முதன்முறையாக அவரது புகழ்பெற்ற நாவல் ‘என் பெயர் சிவப்பு’, ஜி.குப்புசாமியின் மொழியாக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியானது. அந்த நாவலுக்கு எழுதிய குறிப்பில், ‘பாமுக்கின் மற்ற நாவல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதற்கு இது ஓர் ஆரம்பமாக இருக்க வேண்டும்’ என்று குப்புசாமி குறிப்பிட்டிருந்தார். அடுத்து வந்த ஆண்டுகளில் அதைச் செய்தும் காட்டினார். இஸ்தான்னபுல், பனி, வெண்ணிறக் கோட்டை ஆகிய நாவல்களை அவர் மொழிபெயர்த்தார். அகிலன் எத்திராஜின் மொழியாக்கத்தில் ‘கருப்புப் புத்தகம்’ வெளியானது.
தமிழில் வெளியான இந்த
மொழிபெயர்ப்புகளின் வழியாக, துருக்கி இலக்கியத்தின் மீதான கூடுதலான கவனம் விழுந்தது.
ஓரான் பாமுக்கிலிருந்து தொடங்கிய இப் பயணம் தன்பினார், அய்ஃபர் டுன்ஷ் ஆகியோரிடம் தொடர்கிறது.
துருக்கி ஒரு சிறிய நாடு.
அதன் பூகோள அமைப்பே மிகச் சிக்கலானது. மேற்கு ஆசிய நாடாகவும் அதே சமயம் தென் கிழக்கு
ஐரோப்பிய நாடாகவும் இரட்டை அடையாளங்களைக் கொண்டிருக்கிறது. தனது எல்லைகளை எட்டு நாடுகளுடன்
பகிர்ந்துகொள்வதுடன் மூன்று கடல்கள் இதன் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. மத்திய தரைக்
கடலை கருங்கடலுடன் இணைக்கும் துருக்கிய நீர் இணைகள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒருபுறம்
இஸ்லாமிய நாடுகளும் மறுபக்கம் கிறித்துவ நாடுகளும் சூழ்ந்துள்ளன. பூகோள அமைப்பிலான
இந்த சிறப்பம்சங்களே துருக்கியின் கலை, அரசியல், கலாச்சார அம்சங்களுக்கு தனித்தன்மையையும்
சவாலையும் ஒருங்கே அளிப்பதாக அமைந்துள்ளன.
தொன்மையும் பாரம்பரியமும்
மிக்க துருக்கியின் கவிதை, இலக்கியம், இசை, நாடகம் உள்ளிட்ட கலைகளில் ஆழமான மரபைக்
கொண்டிருக்கும் அதே நேரத்தில் நாட்டார் கலைகள் சார்ந்த வலுவையும் கொண்டுள்ளது. உலக
அளவில் துருக்கியின் கவிதைகள் மிகவும் புகழ்பெற்றவை. ஓரான் பாமுக்கின் வருகைக்குப்
பின்னரே அதன் நாவல் இலக்கியம் பரவலாக அறிமுகமாயிற்று. ஆனால், பாமுக்குக்கு முன்பே தன்பினார்
உள்ளிட்ட நாவலாசிரியர்கள் வலுவான படைப்புகளை எழுதியுள்ளார்கள். துருக்கிய உணவு வகைகளும்
தேநீரும் ‘ராக்கி’ எனப்படும் மதுவும் கொண்டாடப்படுபவை. உலக சினிமா அரங்கிலும் மிக முக்கியமான
இயக்குநராக அறியப்படும் நூரி பீகி சிலான் துருக்கிய இயக்குநரே.
நூற்றாண்டுகால சரித்திரத்திரத்தில்
துருக்கி வெவ்வேறு பேரரசுகளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. உலகின் பழமையான நாகரிகத்தின்
நினைவுகளைத் தாங்கி நிற்கும் நிலமாக விளங்குகிறது. பழமையும் பாரம்பரியமும்கொண்ட ஒட்டாமன்
பேரரசை 1923ஆம் ஆண்டு முஸ்தபா கெமால் அட்டார்டக் (1881-1938) கலைத்துவிட்டு நவீன துருக்கியை
கட்டமைத்தார். ஒட்டாமன் இஸ்லாமிய கலாச்சாரத்திலிருந்து துருக்கியை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டு
அதனை ஒரு ‘நவீன’ நாடாக உருவாக்க முனைந்தார்.
உணவு, உடை, கல்வி முறை என்று அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் கடைபிடிக்கப்பட்ட
மரபு சார்ந்த அடையாளங்கள் அனைத்தும் கைவிடப்பட்டன. உடைகள், ஆபரணங்கள், பாத்திரங்கள்,
மேசை நாற்காலிகள், ஓவியங்கள், இசைக் கருவிகள் உள்ளிட்ட பழம்பொருட்கள் அனைத்துமே கழித்துத்
தள்ளப்பட்டு சந்தையில் குவிந்தன. பல நூற்றாண்டுகளாக துருக்கிய மொழிக்கு பயன்படுத்தப்பட்ட
அராபிய எழுத்துருவும் எண்முறையும் விலக்கப்பட்டு அவற்றுக்கு பதிலாக லத்தீன் எழுத்துருவும்
எண்முறையும் பயன்படுத்தப்பட்டன. துருக்கியர்கள் வழக்கமாக அணியும் தலைப்பாகைக்கு தடை
விதிக்கப்பட்டு அதற்கு பதிலாக தொப்பிகளை போடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. துருக்கி
மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பெண்களுக்கான சுதந்திரம் உறுதிசெய்யப்பட்டது.
நாடாளுமன்றத்துக்கு வாக்களிக்கவும் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடவும் உரிமை வழங்கப்பட்டது.
அரசு பொறுப்பேற்று நடத்தும் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. மதம் தொடர்பான
கல்வியை போதிக்கும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. எல்லா வகையிலும் மேற்கத்திய நாகரீக
முறைப்படி, நவீனமயமாக்கிக் கொள்ளும் மோகமும் அவசரமும் நடைமுறைப்படுத்தப்பட்டன. மரபுடனும்
பழமையுடனுமான உறவுகள் அனைத்தும் முற்றிலுமாக மறுக்கப்பட்டு உதறப்பட்டன. புறக்கணிக்கப்பட்டன.
நவீன துருக்கியைக் குறித்த
பெருங்கனவும் எதிர்ப்பார்ப்பும் அனைவரிடமும் இருந்த அதே சமயத்தில் நிச்சயமின்மையும்
பயமும் குழப்பமும் இருந்தன. அரசியலிலும் தன்னை ஒரு ஜனநாயகக் குடியரசாக நிறுவிக் கொண்டிருக்கவில்லை.
உலகப் போர் தொடங்கியிருந்தது. எத்தரப்பைச் சார்ந்து நின்று எந்தவிதமான பங்களிப்பைத்
தரப்போகிறோம் என்பதைப் பற்றிய தெளிவோ முடிவோ எட்டப் படவில்லை. போருக்குப் பிறகு நாடு
என்ன நிலையில் இருக்கும் என்பதைப் பற்றிய அச்சமும் இருந்தது.
நாடு மொத்தமும் பெரும்
குழப்பத்திலும் தத்தளிப்பிலும் உழன்றிருந்தது. நூற்றாண்டு காலமாக அனைத்திலும் வேர்கொண்டிருக்கும்
மரபையும் அதன் அடையாளங்களையும் முற்றிலுமாக உதறவும் முடியாமல், நவீன மேற்கத்திய கலாச்சார
அம்சங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் இயலாமல் சமூகம் மொத்தமும் ஊசலாட்டத்தின் நடுவே
அலைபாய்ந்திருந்தது.
இந்த காலகட்டத்தைப் பின்னணியாகக்
கொண்ட நாவல் அகமத் ஹம்தி தன்பினாரின் ‘நிச்சலனம்’ நாவல்.
அகமத் ஹம்தி தன்பினார்
(1901-1962) துருக்கி நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில்
முக்கியமானவர். கவிஞர், நாவலாசிரியர், விமர்சகரும்கூட. பண்டைய ஒட்டாமன் பேரரசு கோலோச்சியிருந்த
காலத்தில் பிறந்து வளர்ந்தவர். இஸ்தான்புல் பல்கலைக் கழகத்தில் ஒட்டாமன், துருக்கி
இலக்கியத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது வாழ்நாளில் பிரபலமான கவிஞராகவும்
சிந்தனையாளராகவும் கட்டுரையாளராகவும் அறியப்பட்ட அளவுக்கு புனைகதை ஆசிரியராக பெயர்
பெற்றிருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் துருக்கிய இலக்கியம் மிக அரிதாகவே மொழிபெயர்க்கப்பட்டிருந்தன
என்பதால் ஆங்கிலத்தில் வாசிக்கும் அயல்நாட்டினருக்கு அதைப் பற்றிய அறிமுகம் இருக்கவில்லை.
தன்பினார் காலமாகி பத்தாண்டுகளுக்குப் பிறகே நாவலாசிரியராக அவர் அறியப்பட்டார். தமிழில்
ப.சிங்காரத்துக்கு நேர்ந்தது போன்றே, தன்பினாரின் காலத்துக்குப் பிறகே அவருடைய நாவல்களும்
புகழ்பெற்றன. பழைய ஒட்டாமன் மரபின் இலக்கிய வளமையைத் தேடிச் செல்லும் முயற்சியின்போதுதான்
தன்பினாரின் புனைகதைகள் கண்டடையப்பட்டன. பழமையான ஒட்டாமன் கலாச்சாரத்தையும் நவீன துருக்கியின்
வளர்சிதை மாற்றங்களையும் நன்கறிந்தவர் தன்பினார். துருக்கியின் பரிணாம வளர்ச்சியை உருமாற்றத்தை
கண்டறிந்த சிந்தனையாளர் என்பதை அவருடைய புனைவுகளும் உறுதிப்படுத்தின. அதன் பிறகே அவைக்
கொண்டாடப்பட்டன. துருக்கியின் இன்றைய இலக்கிய முகமாக அறியப்படும் ஓரான் பாமுக், இருபதாம்
நூற்றாண்டின் இணையற்ற துருக்கி நாவலாசிரியர் தன்பினார் என்றும் தன்னை மிகவும் பாதித்த
எழுத்தாளர் என்றும் குறிப்பிடுவதிலிருந்து சமகால துருக்கிய இலக்கியத்தில் தன்பினாரின்
செல்வாக்கைப் புரிந்துகொள்ள முடியும்.
‘Huzur’ என்ற பெயரில்
துருக்கியில் எழுதப்பட்ட இந்த நாவல் 1948ஆம் ஆண்டு தினசரி செய்தித் தாள் ஒன்றில் தொடராக
வெளியானது. ஆங்கிலத்தில் ‘A mind at peace’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
இந்த நாவலின் காலம்
1938லிருந்து 1939வரையிலான ஆண்டுகள். இரண்டாம் உலகப் போருக்கான ஆயத்தங்கள் தீவிரம்
கொண்டிருந்த நாட்கள். துருக்கி தன்னை ஒரு ஜனநாயக குடியரசு நாடாக முன்னிறுத்தி பதினைந்து
ஆண்டுகளே ஆகியிருந்தன. நாவலின் கதை நாயகனான மும்தாஜ், நாட்டின் விடுதலைப் போரில் உயிரிழந்த
தன் பெற்றோரை நினைவு கூறுவதிலிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. நான்கு முதன்மை கதாபாத்திரங்களின்
கோணத்தில் நாவல் சித்தரிக்கப்படுகிறது. நாவலின் நாயகனான மும்தாஜ், போர் காரணமாக பற்றி
எரிந்துகொண்டிருக்கும் ஒரு ஊரிலிருந்து அமைதியான வேறொரு ஊருக்கு இடம் பெயர்கிறான்.
செல்லும் வழியில் வெறிச்சோடி பாழ்நிலமாகக் கிடக்கும் அனடோலியாவின் நிலைமையிலிருந்து
போரின் கொடுமைகளைப் புரிந்துகொள்கிறான். இஸ்தான்புல்லுக்கு செல்லும் வழியில், இரவு
தங்குமிடமொன்றில் ஒரு இளம்பெண் அவனைப் பயன்படுத்திக் கொள்கிறாள். கணப்பொழுதின் புரியாத
அந்த இன்பம், பெற்றோர்களை இழந்த துக்கத்தைப் போலவும் தேசத்தின் பெருந்துயரைப் போலவும்
வாழ்நாள் முழுக்க அவனை அலைகழிக்கிறது. இஸ்தான்புல்லில்
அவனுடைய உறவினரான இஷான், கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையிலும், அவனுக்கு மகிழ்ச்சியான
வாழ்க்கையை அளிக்கிறார். ஆனாலும், கடந்த காலத்தின் துயர நினைவுகள் அவனை நிம்மதியாக
இருக்கவிடுவதில்லை.
மும்தாஜ் இழந்த தன் காதலியின்
நினைவுகளில் தத்தளிக்கிறான். நாவலின் பெரும்பகுதி மும்தாஜ் தன் காதலியான நூரனைக் குறித்து
ஏங்கி வருந்துவதாகவே அமைந்துள்ளது. இவர்களின் காதல் கதை நீண்டவொரு பின்கதையாகவே சொல்லப்படுகிறது.
துருக்கிய படகுகளிலும் போதையில் நண்பர்களுடன் நீண்ட விவாதத்தில் ஈடுபடும் இரவுகளிலுமாக
அவர்களது காதல் வளர்வதை தன்பினார் சித்தரிக்கிறார். குழப்பத்தில் தடுமாறும் இஸ்தான்புல்
அவர்களுக்கு உல்லாச நகரமாகவே காட்சியளிக்கிறது. மும்தாஜ், நூரன் இருவருக்குமே காதலின்
வலியைத்தவிர வேறு எதுவுமே பொருட்டில்லை என்பதுபோன்ற மிதப்பில் சுற்றித் திரிகிறார்கள்.
ஆனால், விதி வலியது. இருவரும் சிதைந்த தம் ஊர்களைத் தேடிப் போக நேரிடுகிறது. தன்பினார்
இந்த சந்தர்ப்பத்தை துருக்கியின் கடந்த காலத்தை வாசகர்களுக்கு சொல்வதற்கான வாய்ப்பாகப்
பயன்படுத்திக் கொள்கிறார். காலப்போக்கில் சிதைவுகளும் அழிவுகளுமேகூட மறக்கப்பட்டுவிடும்
என்பதை அறிவார் அவர்.
கணவர் பஹீர் தனக்கு துரோகம்
இழைத்ததன் காரணமாக அவரிடமிருந்து பிரிந்து வாழும் நூரன் மும்தாஜின் மீது காதல் கொள்கிறாள்.
ஆனால், அவளுடைய மகள் பாத்திமா இந்த உறவை வெறுக்கிறாள். இதனால், புதிய காதலுக்கும் தாய்மைக்கும்
நடுவில் முடிவெடுக்க இயலாமல் தவிக்கிறாள். சேர்ந்து வாழ்வதென்று தீர்மானித்த நிலையில்,
மீண்டும் மணமுடிக்க சட்டத்தின் படி குறிப்பிட்ட காலம் முடியவேண்டி காத்திருக்கிறாள்.
காதலிக்கும் காலத்தில்
இருவரும் நகரத்தின் அறிவுஜீவிகளுடன் நேரம் செலவழிக்கிறார்கள். இசை கேட்கிறார்கள். கவிதை,
இலக்கியம் குறித்து உரையாடுகிறார்கள். நூரன் நம்பிக்கையுடன் தங்களுக்கென புதிய வீடு
ஒன்றை ஏற்பாடு செய்து தயாராகிறாள். ஆனால், மும்தாஜை இனந்தெரியா இழப்பின் அச்சம் துரத்துகிறது.
இவர்களுக்கிடையில், நூரனின் மீது முன்பே பித்துற்றிருந்த சுவாத் வரும்போது குழப்பமும்
சிக்கலும் அதிகரிக்கிறது. சொந்த வாழ்க்கையில் ஏமாற்றங்களையும் துயரங்களையும் சந்தித்து
தடுமாற்றத்தில் இருக்கும் சுவாத், எப்படியேனும் நூரனை அடையவேண்டும் என முயல்கிறான்.
ஆனால், அது நடக்காது என்ற பரிதவிப்பில் புதிதாக அவள் தயார் செய்திருக்கும் வீட்டுக்குள்
நுழைந்து தற்கொலை செய்துகொள்கிறான். சுவாத்தின் இந்த முடிவு நூரனுக்கு பெரும் அதிர்ச்சியை
அளிக்கிறது. இனி இந்த வீட்டில் நூரனுடன் வாழ்வது இயலாது என்று தீர்மானித்து அவனுடனான
தன் உறவை முறித்துக் கொள்கிறாள்.
முன்னும் பின்னுமாக ஊசலாடும்
வடிவில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல், ஒரு காதல் கதையினூடாக மரபுக்கும் நவீனத்துக்கும்
நடுவில் தன்னை நிலைநிறுத்தத் தடுமாறும் தேசத்தின் கதையை விவரிக்கிறது. போரை சந்திக்கவிருக்கும்
ஒரு நாட்டின், சமூகத்தின் ஒட்டுமொத்த மனநிலை, தனியொருவனின் மனநிலையில் ஏற்படுத்தும்
மாற்றங்களையும் குழப்பங்களையும் அழுத்தமாக பேசுகிறது. அதே நேரத்தில் ஆண்-பெண் உறவில்
தவிர்க்க முடியாத உளவியல் முரண்களையும் மிக நுட்பமாக கையாண்டுள்ளது. விவாகரத்துப் பெற்ற
ஒரு பெண்ணுக்குள், இன்னொருவனுடன் வாழத் தீர்மனிக்கும்போது ஏற்படும் அச்சம், சந்தேகம்,
தயக்கம், அவற்றின் காரணமாக கிளைக்கும் உரசல்கள் என அனைத்துமே மிக நேர்த்தியாக வெளிப்பட்டுள்ளன.
மனத்துக்குள் இறுகும் புரியின் அழுத்தம், காதலின் எத்தனை உன்மத்தமான தருணமென்ற போதிலும்,
சொற்களில் வெடித்து ஒட்டுமொத்த மனநிலையையே புரட்டிப் போடும் தன்மையை வெகு அநாயசமாக
பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. மன ஆழத்தில் நித்தமும் நிகழும் உளவியல் மோதல்கள்,
உறவின் கதியை சட்சட்டென்று திசைமாற்றிக் கொண்டேயிருக்கும் யதார்த்தத்தையும் காண முடிகிறது.
கடந்த காலத்துக்கும்
நிகழ்காலத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு சமூகத்தின் கையறு நிலையை சரடாகக்
கொண்டிருக்கும் இந்த நாவல், மேற்கத்திய அளவுகோல்களைக் கொண்டு அவசரகதியில் நவீனமயமாகத்
துடிக்கும் அறிவுஜீவிகளின் தவிப்பையும் போதாமைகளையும் விமர்சிக்கிறது.
தன்பினார் ஒட்டாமன் பேரரசின்
காலத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், அந்த மரபின் கலாச்சார அம்சங்கள் அனைத்திலும்
ஆழமான ஈடுபாடு இருந்திருக்கும். ஆனால், அத்தகைய ஒரு வாய்ப்பு நவீன துருக்கியின் தலைமுறைகளுக்கு
மறுக்கப்படுவதின் மீதான கடுமையான விமர்சனமும் நிச்சயமாக இருந்திருக்கும். அட்டார்டக்
தன் கலாச்சார மாற்ற நடவடிக்கைகளின் மூலம் முன்பிருந்த அனைத்தையும் சுவடில்லாமல் அழித்துவிட்டு,
மேற்கத்திய அம்சங்களை மட்டுமே நாட்டில் நிலைபெறச் செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக
இருந்தார். இந்தப் போக்கின் மீதான விமர்சனங்களையே தன் கதாபாத்திரங்களுக்கு இடையிலான
விவாதங்களின் வழியாக வெளிப்படுத்தினார். தலைப்பாகைகளை உதறச் செய்து தொப்பிகளை மாட்டலாம்,
இஸ்லாமிய காலக்கணக்குகளை மறுத்துவிட்டு ஐரோப்பிய
நாட்காட்டிகளை எடுக்கலாம், அராபிய எழுத்துக்களையும் எண்களையும் மாற்றி லத்தீன் எண்,எழுத்துகளை
அறிமுகப்படுத்தலாம். இவற்றின் மூலமாக மட்டும் மக்களிடத்தில் ‘நவீன’ துருக்கியை கட்டமைத்துவிட
முடியாது என்ற ஆழமான நம்பிக்கை தன்பினாருக்குள் இருந்ததையே நாவல் முழுக்க காண முடிகிறது.
1949ஆம் ஆண்டு வெளியான
இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 2009ஆம் ஆண்டில்தான் வெளியானது. இதற்கு காரணம்,
துருக்கிய மொழி மிகவும் கடினமான ஒன்று எனக் குறிப்பிடப்படுகிறது. ஆங்கில வாக்கியங்களுக்கு
மாறாக துருக்கிய வாசகங்கள் கடைசியிலிருந்து தொடங்கி நகர்பவை. பதினெட்டு எழுத்துக்களைக்
கொண்ட சொற்களும்கூட துருக்கி மொழியில் உண்டு. அவற்றின் மரபுத் தொடர்கள் மொழிபெயர்க்கவே
முடியாதவை. ஆகச் சிறந்த மொழியாக்கங்களில்கூட மிக முக்கியமான ஒரு கூறு விடுபட்டுவிடக்கூடிய
சாத்தியம் உண்டு. இன்றைய நவீன துருக்கிய தலைமுறைகளில் பலருக்குமேகூட, பழைய துருக்கி
மொழியிலிருந்த பல சொற்களுக்கு பொருள் தெரியாது. எனவே, ஆங்கில மொழியாக்கத்திலிருந்து
தன்பினாரின் நாவலை தரப்படுத்துவது என்பது மிகக் கடினமான ஒன்று என்றே விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், இந்த நாவலின்
தமிழ் மொழியாக்கத்தில் அத்தகைய சிக்கல்கள் எவற்றையும் உணர முடியவில்லை. இந்த அளவுக்கு
இயல்பான, மொழியமைதி கூடிய இன்னொரு மொழிபெயர்ப்பை தமிழில் காண்பது அரிது. துருக்கி போன்ற
முற்றிலும் வேறொரு கலாச்சாரப் பின்னணியும், வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட ஒரு நாவலை
தமிழில் மொழிபெயர்ப்பது சவாலானது. மூல நூலின் கதை அமைப்பு, சொல்முறை, மொழிநுட்பம் ஆகிய
அனைத்தையும் கருத்தில்கொண்டு தமிழ் வாசகன் இயல்பாகவும் சரளமாகவும் உணர்வோடும் வாசிக்கச்
செய்யுமளவுக்கு செம்மையான ஒரு காரியத்தை செய்திருக்கிறார் தி.அ.சீனிவாசன்.
0
நிச்சலனம் - நாவல்
அகமத் தன்பினார் ( துருக்கி )
தமிழில் - தி.அ.சீனிவாசன்
காலச்சுவடு பதிப்பகம், 2014 வெளியீடு. 424 பக்கங்கள்


No comments:
Post a Comment