0
‘காச்சர் கோச்சர்’ நாவல்
தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. அதன் மூலமாக விவேக் ஷான்பாக்கும்
தமிழில் பிரபலமடைந்துள்ளார். இந்த நாவல் இன்னொரு வகையிலும் முக்கியமானது. இன்று கன்னடத்திலிருந்து
தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்துக்கும் தீவிரமாகவும் பரவலாகவும் மொழியாக்கம் செய்துவரும்
கே.நல்லதம்பி தமிழில் மொழிபெயர்த்த முதல் நாவல் ‘காச்சர் கோச்சர்’.
0
‘ஊரு பங்கா’ என்ற தலைப்பில்
2015ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியானது இந்த நாவல். ‘காச்சர் கோச்சர்’ நாவலைப் போலவே
பெங்களூரையும், நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் களமாகக் கொண்டிருக்கிறது.
ஐந்து படலங்களைக் கொண்ட
இந்த நாவல் வாழ்க்கையைக் குறித்த இரண்டு தலைமுறைகளின் அணுகுமுறையை நுட்பமாக விவாதித்திருக்கிறது.
இலட்சியவாதமே வாழ்வென
கொண்டிருந்த ஒரு தலைமுறையே மதிப்பீடுகளை உருவாகிக் கொடுத்திருக்கிறது. சுமுகமான சமூக
வாழ்வுக்கான அடிப்படைகளை வகுத்துத் தந்திருக்கிறது. அதற்காக கடுமையான தடைகளையும் சிக்கல்களையும்
கடந்து வந்திருக்கிறார்கள் இலட்சியவாதிகள். வாழ்க்கையையே பணயம் வைத்திருக்கிறார்கள்.
ஆனால், லட்சியத்தை எட்டிய பிறகான சூழலில் அவர்கள் பலசமயங்களில் தேவைப்படுவதில்லை. பொருந்திப்போக
முடியாதவர்களாய், யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களாய் ஒதுக்கப்படுகிறார்கள். தங்களது
இடம் என்ன என்று தெரியாமல் போகும்போது அவர்கள் பிறரது கேலிக்கும் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும்
உள்ளாகிறார்கள். வரலாற்றில் அவர்களது இடம் முக்கியமானது. ஆனால், நடைமுறை சமூகத்துக்கு
அவர்கள் தேவைப்படாதவர்கள். இலட்சியவாதத்தின் கோட்பாடுகளும் யதார்த்தத்தின் அனுசரித்தலுக்குமான
பலப்பரீட்சையில் எப்போதும் கைதணிந்து ஓய்வது இலட்சியவாதமே என்பது வரலாற்றுத் துயரம்.
இத் துயரத்தின் அடித்தளத்தில் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யக்கோரும் இன்றைய நவீன
நடைமுறை வாழ்வை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது இந்த நாவல்.
குடும்ப அமைப்பு பெரும்
மறுபரிசீலனைக்கு உள்ளாகியிருக்கும் காலம் இது. இன்றைய புதிய தலைமுறையினர், ஜென் ஸீயினர்,
திருமண உறவு சார்ந்து முக்கியமான சில அடிப்படை கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பெங்களூர்
போன்ற பெருநகர வாழ்வின் பின்னணியில் இந்தக் கேள்விகள் மேலும் தீவிரம் கொள்கின்றன. ஒரு
நடுத்தர வயது ஆணுக்கும் இளம் பெண்ணுக்கும் இடையிலான உறவு இந்தப் பின்னணியில் எப்படி பரிணாமம் கொள்கிறது, வளர்கிறது,
முடிகிறது என்பது இந்த நாவலின் இன்னொரு முக்கியமான சரடு.
கிராமத்துப் பின்னணியைக் கொண்ட நடுத்தர வயது ஆணின்
சிக்கல் ஒழுக்க மரபுகளாலான கயிறு அவன் கையை எப்போதும் பிணைத்திருப்பதுதான். ‘தெங்கனகேரி
மகிமை’ என்று நாவலில் சுட்டப்பட்டிருக்கும் அந்தக் கயிறு, ஒரு இளம்பெண்ணின் வருகையால்,நட்பால்,
இருப்பால், உறவால் அறுபடுகிறது. மனைவி, பிள்ளை, கௌரவமான வேலை என்று சமூக அந்தஸ்துடன்
வாழும் அவனுக்கு இளம்பெண்ணின் நெருக்கமும், இளமையும் தேவைப்படுகிறது. தயக்கங்களும்
தடுமாற்றங்களும் இருந்தபோதும் அதற்காக அந்தக் கயிறைத் துண்டிக்காமல் இருக்க அவனால்
முடிவதில்லை. ஒழுக்கம் சார்ந்த குழப்பத்துக்கும், ஒருவகை அச்சத்துக்கும், இளம் பெண்ணின்
மீதான இச்சைக்குமிடையிலான அவனது ஊசலாட்டத்தில் பெண்ணுடலே வெல்கிறது. அவ்வளவாக பரிச்சயமில்லாமல்
அறிமுகமான முதல் சந்திப்பிலேயே தன்னை பியர் குடிக்க அழைக்கும் பெண், அவனுள் ஊறிக்கிடக்கும்
தெங்கனேரி மகிமையின் மீது முதல் கல்லை எறிகிறாள். பழக்கம் நெருக்கமாகி நட்பாகும்போது,
அவளை வசீகரிக்கவென கிராமத்துக் கதைகளைச் சொல்கிறான். கிமானி வக்கீல், சுங்காபுரர்,
சந்து போன்ற லட்சியவாதிகள், புரட்சியாளர்கள் பற்றிய கதைகள் அவளைக் கவர்வதற்கான தூண்டில்களாக
அமைகின்றன. ஒரு நாள் பிடித்தமான கதையைச் சொன்னதற்கு பரிசாக கன்னத்தில் முத்தம் தருகிறாள்.
தெங்கனேரி மகிமையின் மீது விழும் வலுவான இரண்டாவது கல் இது. கதைக்கு முத்தத்தைப் பரிசாகத்
தந்தவள், அவன் எழுதும் கவிதைகளுக்கு தன்னையே பரிசாகத் தருகிறாள். தயக்கங்களுக்கும்
தடுமாற்றங்களுக்கும் நடுவே துணிந்து இப்படியொரு சாகசத்தை மேற்கொண்ட நடுத்தர வயது மனிதருக்கு
இதைத்தாண்டி அந்த உறவில் அடுத்த அடியை எடுத்து வைக்க பயம். வெளியே தெரிந்துவிடக்கூடாது
என்கிற பதற்றம். ஆனால், இளம்பெண்ணுக்கு இது பிரச்சினையே இல்லை. இப்படி அவன் அஞ்சி நடுங்குவது
அவளைச் சீண்டுகிறது. வெறுக்கச் செய்கிறது. அவனை உதறிச் செல்கிறாள். அதுவே நடுத்தர வயது
குடும்பஸ்தனுக்கு பெரும் ஆசுவாசத்தை அளிக்கிறது.
மரபுக்கும் நவீனத்துக்குமான
மோதல்களை பல்வேறு கதாபாத்திரங்களையும், தருணங்களையும் கொண்டு விவாதிக்கும் இந்த நாவல்
ஒரு தரப்பில் லட்சியவாதம் யதார்த்த வாழ்வுடன் சமரசம் செய்து கொள்வதை பகடியாகவும் இன்னொரு
பக்கம் பரிவுடனும் விவாதத்துக்கு உட்படுத்தியுள்ளது. கைது செய்யப்படவேண்டும் என்ற நோக்கத்துடன்,
நெருக்கடி நிலைக்கு எதிராக திறந்த மைதானத்தில் அரசுக்கு எதிராக உரத்த விமர்சனங்களை
எழுப்பும் கிமானி வக்கீலை, ‘பைத்தியங்களுக்கெல்லாம் சிறையில் இடமில்லை’ என்ற காரணத்துக்காக
கைது செய்யாமல் விட்டுவிடுகிறது காவல்துறை. ஆனால், அதே சமயம் சுங்காபுரத்தார் கைது
செய்யப்பட்டாரா, என்றால் அதன் பிறகு என்ன ஆனார் என்பதைப் பற்றி எந்த விடையுமில்லை.
நாவலில் இணைச்சரடுகள்
சிலவும் உள்ளன. அவை இந்த விவாதத்துக்கு மேலும் வலு சேர்க்கும் விதமான சில கேள்விகளையும்
எழுப்புகின்றன. கதையின் நாயகனாக வார்க்கப்பட்டுள்ள மன்மோகன் ஒரு நிறுவனத்தின் தணிக்கை
அதிகாரி. தன்னுடைய இரகசியமான உறவையும் தொழில்முறை அணுகுமுறையையும் அவன் இணைத்துப் பார்ப்பதை
உதாரணமாகச் சுட்டலாம். நாவலின் இறுதிப் பகுதியில் மீண்டும் சந்துவைச் சந்தித்து மது
விடுதியில் நிகழும் உரையாடல் இன்னொரு உதாரணம்.
காமத்தின் இச்சைக்கு
போதுமென்ற மனம் கிடையாது, மேலும் மேலும் என்று வாய்ப்புகளைத் தேடியபடியே இருக்கும்.
முற்றிலுமாகத் துண்டித்துவிட்ட உறவை அல்ப ஆசை, நடுத்தர வயது மன்மோகனை வீட்டின் சுற்றுச்
சுவர் தாண்டி மரத்தில் ஏறி வாசலில் நிற்கச் செய்கிறது. அங்கிருந்து அவனால் வந்த வழியில்
மட்டுமே திரும்ப முடியும். அது சாத்தியமா? என்ற கேள்வியுடன் நாவல் முடிகிறது. சுவர்
ஏறி அங்கிருந்து மரத்தில் தாவி உள்ளே குதித்தவனுக்கு வெளியே வரவும் தெரிய வேண்டுமல்லவா?
விவேக் ஷான்பாக் தன்
புனைவுகளை வலுவான கதாபாத்திரங்களின் மூலமாகவே அடர்த்திப் பெறச் செய்வார். இந்த நாவலிலும்
அபாரமான சில கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. கிமானி வக்கீல், மன்மோகன், ஷமி, சுங்காபுரர்
போன்ற முதன்மை கதாபாத்திரங்களுக்கு நடுவே சிறிதும் பெரிதுமான அழுத்தமான கதாபாத்திரங்களும்
தனித்தன்மையுடன் இடம் பெற்றுள்ளன. கிமானி வக்கீலின் அம்மா நீலாவதியும் சதானந்த ஆசிரியரின்
மனைவி ரமாவையும் உதாரணமாக கவனிக்கலாம்.
நேரடியான, சீரான கதையாக
அல்லாமல் கதைக்குள் கதை, கதையை மீறிய கதை போன்ற உத்திகளால் புனையப்பட்டிருந்தபோதும்
இந்த நாவல் தான் எழுப்பும் கேள்வியை தெளிவாகவும் உரக்கவும் முன்வைத்திருக்கிறது. அதற்கான
பதிலை யோசிக்க வேண்டிய இன்றைய தலைமுறை, சென்ற தலைமுறையினர் உருவாக்கி வைத்திருக்கிற
மதிப்பீடுகளை ஒரு முறை திரும்பிப் பார்த்து பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்ற பரிந்துரையையும்
இந்த நாவல் செய்திருக்கிறது.
0
கே.நல்லதம்பியின் மொழியாக்கம்
சீரான மொழிநடையுடன் இலகுவாக அமைந்திருப்பது நாவலை அணுக பெரிதும் உதவியுள்ளது. 2015ஆம்
ஆண்டு வெளியான இந்த நாவல் கன்னட இலக்கிய உலகிலும் பொது வெளியிலும் எந்தவிதமான வரவேற்பை,
விமர்சனத்தைப் பெற்றது என்பது குறித்தும் ஒரு சிறிய முன்னுரையை எழுதியிருந்தால் நாவலை
மேலும் புரிந்துகொள்ள துணைநிற்கும்.
0
நிழல்கள் மாறும் நொடி
– விவேக் ஷான்பாக் – தமிழில் கே.நல்லதம்பி
ஸீரோ டிகிரி பதிப்பகம்.
அக்டோபர் 2025


No comments:
Post a Comment