Tuesday 4 August 2020

எம்.கோபாலகிருஷ்ணனின் அம்மன் நெசவு-இராயகிரி சங்கர்

நன்றி - இராயகிரி சங்கர்

சென்றவாரம் முழுக்க எம்.கோபாலகிருஷ்ணனின் படைப்புகளோடு பொழுதுகள் போயிற்று. மனைமாட்சியும், மணல் கடிகையும் ஏற்கனவே படித்திருந்தேன். இரண்டும் முக்கியமான நாவல்கள் என்பது மீண்டும் உறுதியாயிற்று. அம்மன் நெசவுதான் நீண்டநெடுங்காலமாக வாசிக்க முடியாமல் தள்ளிப்போய்க்கொண்டு இருந்தது. முதல் நாவலாக இருந்தாலும் மணல்கடிகை தந்த விரிந்த வாழ்க்கை சித்திரங்களை அம்மன் நெசவின் 192 பக்கங்கள் தருமா என்ற ஒரு தயக்கம். முக்கியமாக நாவலின் இரண்டாவது அத்தியாயத்தில் நிகழும் அமானுஸ்யம் சட்டென்று இராமநாராயணின் பக்திப்படங்களைப் பார்க்கும் ஒவ்வாமையை அளித்துவிட்ட காரணமாக இருக்கலாம். அதனால்தானோ என்னவோ அந்நாவலை அதற்குமேல் வாசிக்கத் தோன்றாமல் வைத்திருந்துவிட்டேன்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இடிகை இலக்கிய வெளி சார்பாக சூம் காணொளிக்காட்சி உதவியுடன் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவரின் படைப்புகள் குறித்து நண்பர்களுக்குள் வாசிப்பனுபவங்களை பகிர்ந்துகொண்டு வருகிறோம். சென்ற ஞாயிறு எம்.கோ.வை தேர்வு செய்திருந்தோம். அதற்கு முந்திய முறை சு.வேணுகோபாலின் படைப்புக்கள் குறித்து பேசியிருந்தோம். அதனால் எப்படியும் அம்மன் நெசவினை வாசித்தே ஆகவேண்டும் என்று உறுதி செய்துகொண்டேன். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் முதல் முயற்சியின் போது வாசிக்க ஆரம்பித்து கருப்பு நாய்க்குப் பயந்து உள்ளே நுழையாமல் திரும்பிய அனுபவம் உண்டு.

எம்.கோ.வின் மூன்று நாவல்களில் மணல் கடிகையே மிகச்சிறப்பானது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அம்மன்நெசவு வாசித்தபின்னர் அந்த எண்ணம் மாறிவிட்டது. அவரின் நாவல்களில் முதன்மையானதாக அம்மன்நெசவு நாவலையே சொல்ல விரும்புகிறேன். என்னைக் கவர்ந்ததன் காரணங்களாக சிலவற்றைக் கருதுகிறேன்.

ஒன்று விரிந்த வரலாற்றின் ஊற்றுமுகத்தில் இருந்து நாவல் ஆரம்பித்த விதம். இந்திய வரலாற்றில் பெரும்பாலான இனக்குழுக்களுக்கு இருக்கச் சாத்தியமான பெரும் புலம்பெயர்வின் துன்பியல் நினைவுகளை இந்நாவல் கொண்டிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் சாபக்கேடாக பெரும்பஞ்சங்கள் உண்டாக்கப்பட்டதைப்போன்று, இஸ்லாமிய படையெடுப்பின் தீச்செயல்களாக படைநடத்தி கோவில்களை கொள்ளையிட்டதும், கலைப்பொக்கிசங்களை அழித்து தீயிட்டு எரித்ததும் இன்று வரை மீட்டெடுக்க முடியாத பெரும் இழப்பாக இருக்கிறது. ஓராயிரம் நிகழ்வுகள் இந்நோக்கில் நம்மண்ணில் எழுதப்படாமலே இருக்கின்றன.

அவ்விதம் வந்து ஒதுங்கிய செட்டியார் இனக்குழுவின் ஒரு காலகட்டத்தின் வளர்சிதை மாற்றந்தான் அம்மன் நெசவு. தொண்ணுாறுகளுக்கு முன்னர் இந்தியக் கிராமங்களின் அன்றாட இயல்புகளால் ஆனது இதன் கதையுலகம். இரண்டு பிற்பட்ட சாதியினருக்குள் ஒன்று நிலவுடைமைச் சாதியாக இருந்த ஒரே காரணந்தான் அது ஆண்ட சாதிக்குரிய மூர்க்கத்தோடு நடந்துகொண்டிருக்கிறது. நிலவுடைமைச் சாதியான கவுண்டர் சாதி செட்டியார் சாதியை எவ்வாறு ஒடுக்கியது என்பது இந்நாவலில் வலுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நமக்கு சாதிய வல்லாதிக்கம் என்றதும் பட்டியலின சாதியைத்தான் எதிரீடாக கருதத் தோன்றும்.. பட்டியலின மக்களுக்கு என்னென்னெ செய்தார்களோ அதே அளவிலான கேடுகளை, தீங்குகளை செட்டியார் இனமக்களுக்கும் அவர்கள் செய்திருக்கிறார்கள். ஒரு பிற்படுத்தப்பட்ட சாதி மற்றொரு பிற்படுத்தப்பட்ட சாதியை ஒடுக்கிய துன்பியல் நிகழ்வுகள் இந்நாவலை முக்கியமான ஒன்றாக மாற்றுகிறது. வேட்டுவக் கவுண்டர்களை வெள்ளாளக் கவுண்டர்கள் எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதில் கூட இந்த ஒப்பீட்டை நாம் செய்து பார்க்கலாம்.

.
தமிழில் பெரும் நாவலாக விரிந்து எழுந்து வரச்சாத்தியமுள்ள கதையுலகத்தை கொண்ட சிறு நாவல்கள் சில உண்டு. செந்துாரம் ஜெகதீசின் கிடங்குத் தெரு, கீரனுார் ஜாகீர்ராஜாவின் வடக்கேமுறி அலிமா சட்டென்று நினைவில் நிற்பவை. அதே போன்று பெரும் நாவல்களுக்கு உரிய அத்தனை ஆழமும் நுண்காட்சிகளும் கொண்டு 192 பக்கங்களுக்குள் அடங்கிப்போகும் சிறிய நாவலாக அம்மன் நெசவு எழுதப்பட்டுள்ளது என்பதே இதன் போதாமை. சாரு எக்ஸைல் நாவலை விரித்து தலையணை அளவில் திருத்தி எழுதியதைப்போல எம்.கோ.வும் அம்மன் நெசவினை மீள்உருவாக்கம் செய்யலாம். தமிழின் மகத்தான நாவல்களில் ஒன்றாகும் தகுதி அதற்கு இருக்கும்.

அறுபதுகள் எழுபதுகளில் இருந்திருக்கச் சாத்தியமுள்ள தமிழகக் கிராமம் ஒன்றின் யதார்த்தம் செறிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பல சித்தரிப்புகள் அன்றெல்லாம் மிகச்சாதாரணமாக நடந்திருக்கக்கூடியவை. இன்றிலிருந்து காணும்போது நம்ப முடியாத அதிசயங்களாக, அபத்த ஆச்சரியங்களாக தோன்றுகின்றன. அரிசிச்சோறு ஆக்குவது குறித்த பதிவுதான் இந்நாவலில் என்னைப் பெரிதும் கவர்ந்த ஒரு அத்தியாயம்.

நாவலின் 36 ஆவது அத்தியாயம் அது. இந்நாவலின் அத்தனை அத்தியாயங்களும் சொல்லி வைத்ததைப்போல ஒன்றரைப் பக்கத்தில் முடிந்து விடுகின்றது. ஆனால் பெரும்பாலும் அவை சொல்ல வேண்டிய உணர்வோட்டத்தை மிகக்குறைந்த சொற்களில் அடர்த்தியாக சொல்லி விடுகின்றன. பிள்ளையற்ற ராசாமணியின் வீட்டில் அடுப்பில் அரிசிச்சோறு வேகும்போதே அம்சாவின் வீட்டிற்கு தெரிந்துவிடுகிறது. பக்கத்துத் தெருவாக இருந்தாலும் அரிசிச்சோறு வேகும் மணம் எத்தனை வலுவானதாக இருந்திருக்கிறது. அந்த வாசனையே அவளின் பசியைக் கிளர்த்தி விடுகிறது. துாளியில் பசியால் அழுதுகொண்டிருக்கும் பாப்பாவைத் துாக்கி, இல்லாத பாலிற்காக முலையூட்டுகிறாள். அரிசிச்சோற்றின் வாசனை அவளைக் கிளர்ச்சியடையச் செய்கிறது. யார் வீட்டில் இன்று அரிசிச்சோறு ஆக்கி இருக்கக்கூடும் என்ற யோசனையோடு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு பாப்பாவைத் தோளில் கிடத்தியபடி கிளம்பிச் செல்கிறாள். பிள்ளைகளின் தொட்டிலின் கீழே இரும்புத்துண்டும் குண்டுக்கல்லும் கிடக்கின்ற நுண்தகவல் கதைச்சித்தரிப்பின் ஊடாக கடந்து செல்கிறது. பால் இல்லாத நிலையில் பசிக்கும் குழந்தைக்கு கேப்பைக் கூழைத்தான் புகட்டவேண்டிய நிலைமை. இரண்டுவாய் அரிசிச்சோறு கிடைக்குமா பார்ப்போம் என்று ஆற்றாமையோடுதான் அவள் கிளம்பிச் செல்கிறாள். இதுதான் பசுமைப்புரட்சிக்கு முந்திய இந்தியக் கிராமங்களின் யதார்த்தம். அன்று அரிசிச்சோறு அபூர்வம்.
.
அம்சா ராசாமணி வீட்டிற்கு போகும் வழியிலேயே ஏற்கனவே சோறு வாங்கி வந்துகொண்டிருக்கும் முத்தக்காவைப் பார்க்கிறாள். அவளைக்கண்டு கேட்கும் அம்சாவின் கண்கள் ஏக்கத்தோடு முத்தக்கா கொண்டுசெல்லும் கிண்ணத்தை உற்றுநோக்குகின்றன. சோறு வாங்கிய உடனே அதன் வாசனையில் அம்சாவின் பசியும் விழித்து அழத்தொடங்குகிறது. சோறு நிறைந்த குண்டாவைச் சேலைத் தலைப்பில் மறைத்தபடி திரும்பியவளுக்குப் பசிக்கத் தொடங்கியிருந்தது என்ற சித்தரிப்பு ஒருகணம் என்னை உறைய வைத்துவிட்டது.

இரண்டாவதாக கைத்தறிகளின் உலகம் மெல்ல மெல்ல அழிந்துவரும் சித்திரம். விவசாயத்திற்கு அடுத்து மிகப்பெரிய மக்கள் தொகையினர் ஈடுபட்ட தொழில் நெசவாக இருந்திருக்கலாம். பவர் லுாம் என்னும் அரக்கனின் வருகைக்கு முன்னர் வரை நெசவு என்பது குடிசைத் தொழில்தான். வீடுதோறும் பால்மாடு இருந்ததைப் போல. தறிகளும் ராட்டுகளும் இருந்தன. இன்று முற்றாக அழித்து ஒழிக்கப்பட்ட ஒரு குடிசைத் தொழில் கைத்தறி. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்றவற்றின் அமுத ஊற்றே கைத்தறியும் பருத்தி நுாலும்தான்.

நிதானமாக மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும். அத்தனை கதாப்பாத்திரங்கள் வந்து போகிறார்கள். அத்தனை நுட்பங்களை கோரும் சம்பவங்கள் நிகழ்ந்துவிடுகின்றன.


(முகநூலில் இராயகிரி சங்கர்...)

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...