ஒரு நாவலின் பணி குறிப்பிட்ட காலகட்டத்தின் வாழ்க்கையை காட்டுவதல்ல. அத்துடன் நின்றுவிடுமானால் அது ஆவணமாக மட்டுமே எஞ்சும். காலப்போக்கில் காணாமலாகும். இன்றைய வாழ்வின் கூறுகளை எடைபோடவும் ஒப்பிடவுமான விரிவான சாத்தியத்தைக் கொண்டிருக்க வேண்டும். இப்போது அடைந்துள்ள தொலைவையும் ஆழத்தையும் வகுத்துக் காட்டும் வலுவான தொடக்கப் புள்ளிகள் இடம் பெற்றிருப்பது அவசியம்.
சிவகாமியின் ‘பழையன கழிதலும்’ (டிசம்பர்
1989), ‘ஆனந்தாயி (நவம்பர் 1992)’ ஆகிய இரண்டு நாவல்களும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு
வெளியானவை. இரண்டுமே அறுபது ஆண்டுகளுக்கும் முந்தைய காலகட்டத்தின் வாழ்க்கையை சித்தரிப்பவை.
இந்த இரண்டு நாவல்களை இன்று புதிதாக வாசிக்கும் ஒருவருக்கு எப்படி புரிந்துகொள்வது,
எதைப் பெற்றுக்கொள்வது என்ற கேள்விகள் எழும்.
இந்த இரண்டு நாவல்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும்
நிலமும் இந்த அறுபது ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதை மிகத் தெளிவாக
பார்க்கவும் உணரவும் முடியும். நாவலின் காலத்துக்குள்ளாகவே அந்த மாற்றங்கள் சுட்டப்பட்டுள்ளன.
அதிலுள்ள வேகத்தைவிடவும் பல மடங்கு வேகத்தில் மாற்றங்கள் நடந்துள்ளன. சாலைகள், கல்விக்கூடங்கள்,
மருத்துவமனைகள், கட்டடங்கள், வாகனங்கள், உணவு, உடை என்று வாழ்வின் அனைத்து அம்சங்களிலும்
மிக நவீனமாகவும் வேகமாகவும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
பொதுவாகவே சுலபமாகவும் விரைவாகவும் பணம்
சம்பாதிக்கும் வாய்ப்புகளைத் தேடுவது மனித இயல்பு. நிலைத்த வருமானத்துக்கு உத்தரவாதமில்லாத,
அதே சமயம் கடினமான உழைப்பைக் கோரும் தொழில்களைச் செய்பவர்கள் தமது அடுத்த தலைமுறையினரை
அத்தொழிலில் ஈடுபடுத்த விரும்புவதில்லை. தாம் பட்ட சிரமங்களை தம் பிள்ளைகள் படக்கூடாது
என்னும் கரிசனம். விவசாயம், கைத்தறி நெசவு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை
கவனித்தால் புரியும். இத்தகைய மாற்றத்துக்கு முக்கியமான கருவியாக விளங்குவது கல்வி.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்திலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் நிகழ்ந்துள்ள பெரும்
பொருளாதார, சமூக மாற்றங்களுக்கு கல்வியே முதன்மையான காரணம். கல்வியால் சாத்தியமான பொருளாதார
மேம்பாடு வாழ்க்கைத் தரத்தில் கணிசமான மேம்பாடுகளை உறுதிப்படுத்தின. குறிப்பாக கணினி,
தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் கிராமப்புற பட்டதாரி இளைஞர்களின்
வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
நிலத்திலும் புற வாழ்வின் அனைத்து அம்சங்களிலும்
நிகழ்ந்துள்ள இத்தகைய மாற்றங்களின் இன்னொரு பக்கத்தில் இதுகாறும் பேணப்பட்டு வரும்
மதிப்பீடுகள், வரையறைகள், அணுகுமுறைகளிலும் கணிசமான மாற்றங்கள் அதிவிரைவாக ஏற்பட்டு
வந்துள்ளன. முக்கியமாக பெண்களின் புரிதல்களும் அவ்வாறான புரிதல்களின் வழியாக எழும்
கேள்விகளும் அழுத்தமான மாற்றங்களை வலியுறுத்துகின்றன. கல்வியும் பொருளாதார விடுதலையும்
அவர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ள நம்பிக்கையும் எவரையும் சார்ந்து நிற்கத் தேவையில்லாத
துணிச்சலும் அவர்களை சுயமான முடிவுகளை எடுக்கச் செய்கின்றன. கடந்த பதினைந்து ஆண்டுகளில்
பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமண உறவு ஆகியனவற்றில் நேர்ந்துள்ள மாற்றங்களையும்
அவற்றின் விளைவுகளையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
இந்த இரு நாவல்களில் சித்தரிக்கப்பட்டுள்ள
கிராமப்புற வாழ்க்கையை இன்றைய அன்றாட வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த முப்பத்தி
மூன்று வருடங்களில் எத்தனை தொலைவைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
குடிநீர், கல்வி, மருத்துவம், சாலைகள், தகவல் தொடர்பு என அடிப்படை வசதிகள் இல்லாத கிராமமே
இந்த நாவல்களின் களம். படிப்பறிவில்லாத விவசாயத்தைச் சார்ந்திருக்கும் எளிய மக்களின்
பாடுகளை சித்தரிக்கும்போக்கில் அந்தக் காலகட்டத்தின் மனப்போக்குகளையும் அடுத்தடுத்த
தலைமுறையினருக்கு இடையே எழும் மோதல்களையும் நாவல் நுட்பமாக அணுகியுள்ளது.
இந்த நாவல்களில் உள்ள குடும்ப அமைப்பும்
சமூக அமைப்பும் ஆண்களின் அதிகாரத்தின் பேரில் உருவாக்கப்பட்டவை. பெண்கள் குடும்பத்தின்
உறுப்பினர்கள் என்றாலும் அந்த அமைப்பில் அவர்களது பங்கு என்பது உழைப்பு மட்டுமே. அமைப்பின்
அன்றாடங்களும் நடைமுறைகளும் ஆண்களால் தீர்மானிக்கப்படுபவை. மனைவி, மகள், அம்மா, தமக்கை,
தங்கை, உறவினர், அண்டைவீட்டார் என்று பல்வேறு பாத்திரங்களை ஏற்றிருந்தாலும் அனைவருமே
கடைபிடிப்பது ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பின் நடைமுறைகளையே.
வெள்ளையம்மாளுக்கும் ஆனந்தாயிக்கும்
உள்ள இடைவெளி என்பது சம்பிரதாயமான மாமியார் மருமகளுக்கு இடையில் ஏற்படும் ஒன்று. மாமியாருக்கான
குணாம்சங்களை மருமகளான ஆனந்தாயி, விமர்சனங்கள் இருப்பினும், ஏற்றுக் கொள்கிறாள். அனுசரணையுடன்
கூடிய புரிதல் அது. மருமகளை குறைசொல்லிக் கொண்டே இருப்பினும் அவளது பாடுகளையும் துயரங்களையும்
அறிந்த வெள்ளையம்மாள் ஒரு பெண் என்ற நிலையிலிருந்து ஆனந்தாயிக்காக வருந்துகிறாள். இருவருமே
தங்களுக்கு வாய்த்ததை விதியே என்று ஏற்றுக் கொள்கிறார்கள். தங்களது வலிகளை பொருட்படுத்தாமல்
குடும்பத்துக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறார்கள்.
‘பழையன கழிதலும்’ கனகவல்லியும் நாகமணியும்
பிழைப்பதற்கு வேறு வழியின்றி, தலைவிதியே என்று காத்தமுத்துவின் மனைவியர் என்ற அடையாளத்துடன்
ஒரே வீட்டில் அனுசரித்து வாழ்பவர்கள். மூன்றாவதாக தங்கம் பங்குக்கு வரும்போதும் ஒப்புக்கொள்வதைத்
தவிர அவர்களுக்கு வேறு வழியிருப்பதில்லை. செல்வாக்கு மிக்க காத்தமுத்துவை பொறுத்துப்
போவதால் உத்தரவாதமாகக் கிட்டும் வசதி வாய்ப்புகளுக்கு முன்னால் பிற எதுவும் முக்கியமாகத்
தெரிவதில்லை.
இந்த இரண்டு தலைமுறை பெண்களும் ஆணாதிக்கத்தை
அதன் மூர்க்கத்தையும் வன்முறையையும் எதிர்க்கவோ கேள்விகேட்கவோ முடியாத சூழ்நிலை. வறுமையும்
கல்வியறிவின்மையும் அவர்களை முடக்கிப் போடுகிறது. எதிர்த்து சண்டைபோட்டு கேள்வி கேட்பதைவிட,
பிள்ளைகளுக்காக வீட்டிலும் காட்டிலும் கடுமையாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றுவதே
முக்கியமான கடமையாகிறது.
ஆனால், மூன்றாவது தலைமுறையான தனத்துக்கும்
கௌரிக்கும் இவற்றை எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள். அப்பாக்களின் பெண்ணாசையை, அதற்காக
எந்த எல்லைக்கும் போவார்கள் என்கிற மூர்க்கத்தை அறிந்தவர்கள். அதேயளவுக்கு அடியும்
உதையும் வசைகளும் ஏற்றுக்கொண்டு குடும்பத்துக்காக பிள்ளைகளுக்காக அனைத்தையும் பொறுத்துப்போகும்
அம்மாக்களையும் தெரிந்தவர்கள். தலைவிதி என்று ஏற்றுக்கொள்கிற தலைமுறையைச் சேர்ந்தவர்கள்
அல்ல. அப்பாவையும் அம்மாவையும் எதிர்க்கத் துணிகிறார்கள். கொடுமைகளை அநியாயங்களை சகித்துக்
கொள்ளாமல் கேள்வி கேட்கிறார்கள். கல்வி அவர்களுக்கு தந்த தெளிவு, நம்பிக்கை. வெள்ளையம்மாவும்
ஆனந்தாயியும் சந்திக்க நேரும் குடும்ப நெருக்கடிகளை தனமுமே பின்னர் அனுபவிக்க நேர்கிறது
என்றாலும் அவளால் துணிந்து பிறந்தகத்துக்கு பிள்ளையுடன் வரும் துணிச்சல் இருக்கிறது.
இது ஒரு தொடக்கம்தான். ஆனந்தாயி எடுக்கத் தயங்கிய ஒரு முடிவை தனத்தால் எடுக்க முடிகிறது.
கேள்வி கேட்க முடிகிறது.
இதே தெளிவையும் நம்பிக்கையை ‘பழைய கழிதலும்’
நாவலின் கௌரியிடமும் சேகரனிடமும் பார்க்க முடியும். கணவனாகவும் தகப்பனாகவும் ஒரு ஆண்
எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான உதாரணமாய் தங்களது தந்தையை அவர்கள் இருவரும் புரிந்து
கொண்டிருக்கிறார்கள்.
கல்வியின் மூலமாக அறிதலையும் புரிதலையும்
எட்டும் மூன்றாவது தலைமுறையே ஆணாதிக்கத்தின் கொடுமைகளையும் அதிகாரத்தையும் எதிர்த்து
நிற்கிறது. அவ்வாறான எதிர்ப்பின் பலன்களை உடனடியாக அவர்கள் அனுபவிக்க முடியவில்லை என்றாலும்
இந்த மூன்றாம் தலைமுறை இட்ட விதைதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உரிமைகளைப் பெறவும்
வலியுறுத்தவுமான துணிவையும் நம்பிக்கையையும் தந்துள்ளது.
பெரியண்ணனின் பெண்பித்து நாவலில் முக்கியமான
ஒரு பேசுபொருளாக அமைந்துள்ளது. ஆனந்தாயியை மணமுடிக்கும் முன்பிருந்தே அவனுக்கு நிறைய
பெண்களுக்கு தொடர்பு உண்டு. ஐந்தாவது பிரசவத்தின்போது பனிக்குடம் உடைந்து அவள் துடித்துக்
கொண்டிருக்கும்போதே மச்சுக்கு வேறொருத்தியை அழைத்து வருமளவுக்கு துணிச்சல். மிகவும்
ஆசைப்பட்டு சேர்த்துக்கொண்ட லட்சுமியை எதன்பொருட்டும் இழக்கத் துணியாதது அவன் மோகம்.
தப்பிச் செல்ல முடியாதபடி அடைத்து வைத்து வேறுவழியின்றி அவள் தற்கொலை செய்து கொள்ளும்
அளவுக்கான அடக்குமுறை நிறைந்த காமம். இதே அளவுக்கு பெண்களை பயன்படுத்திக்கொள்ளும் இன்னொரு
கதாபாத்திரம் கங்காணியின் மூன்றாவது மகன் மாணிக்கம். ‘பழையன கழிதலும்’ காத்தமுத்து
அபயம் தேடிவந்த தங்கத்தை தன்னுடன் சேர்த்துக் கொண்டபோதும் ஒப்பீட்டளவில் பெரியண்ணன் அளவுக்கு அவன் பெண்பித்து கொண்டவனல்ல.
பெண்களின் மீதான ஆண்களின் தீரா காமத்தை
மிக அழுத்தமாக சித்தரித்திருக்கும் இந்த நாவல்களில் பெண்களின் வரைமீறல்கள் போகிறபோக்கில்
சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கங்காணியின் கொழுந்தி வேணி கதாபாத்திரம் ஒரு உதாரணம்.
லட்சுமி, வேணி ஆகிய இரு கதாபாத்திரங்களைத் தவிர இத்தகைய வரைமீறல்கள் கிராமத்தில் அவ்வப்போது
நடப்பதை ‘குச்சி’ வைக்கும் வஹிதாவின் உதவியை நாடும் பெண்களின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
‘ஏதோ பண்டிகை தேர்னு வந்தா மொறமைக்காரிவளோட சிரிச்சி செளையாடுவாங்க. கண்டுங்காணாம காடோ
கரையோன்னு பூடும்’ என்ற வெள்ளையம்மாள் கிழவியின் புலம்பலும் இத்தகைய வரைமீறல்கள் மிகச்
சாதாரணமானவை, எளிதில் கடந்துபோகக் கூடியவை என்றே சித்தரிக்கப்பட்டுள்ளது. காமத்தை ஆண்கள்
மிகத் தீவிர நோக்கில் அணுகும்போது பெண்கள் அதையே அவ்வளவு முக்கியத்துவம் தராத ஒன்றாய்,
வேண்டும்போது விலக்கத்தக்கதாய் கொள்கிறார்கள் என்ற நுட்பம் முக்கியமாக கவனிக்கப்பட
வேண்டியது.
இன்றைய சூழலில் பெருமளவு விவாதிக்கப்படும்
ஒன்றான சிறுமிகளின் மீதான ஆண்களின் பாலியல் அத்துமீறல்கள், எல்லாக் காலங்களிலும் இருந்துள்ளன
என்பதையும் நாவலின் ஒரு அத்தியாயத்தில் போகிற போக்கில் எழுதப்பட்டுள்ள ஒற்றை வரி உறுதிப்படுத்துகிறது.
வீட்டு வேலைக்காரன் சின்னசாமி தனத்தின் முழங்காலிலிருந்த சிறிய கட்டிக்கு அரளிப்பால்
வைக்கிறான். அப்போது ‘ஒரு கை அரளிப்பாலைக் கட்டியைச் சுற்றிச் சொட்டு சொட்டாக வைக்க,
இன்னொரு கை அவளது தொடையருகே சென்றது’.
சாதி அரசியலை புனைவில் வெளிப்படையாக
அல்லாமல் நுட்பமாகவும் கையாள முடியும் என்பதை இந்த இரண்டு நாவல்களிலிருந்தும் புரிந்துகொள்ளலாம்.
அத்துடன் சாதிய முரண்களிலிருந்து விடுபட கலப்புமணம் ஒரு முக்கியமான வழிமுறையாக இருக்க
முடியும் என்பதையும் ‘பழையன கழிதலும்’ சுட்டிக் காட்டியிருக்கிறது.
‘பழையன கழிதலும்’ நாவலில் சாதி சார்ந்த
மோதல்களும் சண்டைகளும் வெளிப்படையாக இருக்குமளவு ‘ஆனந்தாயி’ நாவலில் இடம் பெறவில்லை.
முதல் நாவலில் சாதியினருக்கிடையேயான மோதல்களை அரசியலை அதை ஆதாயமாக்கும் நபர்களை மையம்
கொண்டிருந்தது. கல்வியும் விழிப்புணர்வும் புதியன புகும்போது இவற்றை எதிர்த்து குரல்
எழுப்புகிறார்கள். அதுவரையிலான ஆதிக்க சக்திகளின் ஓங்கிய கைகளை எதிர்த்து நிற்கும்
திறன் எழுகிறது. ஆனந்தாயி அவ்வாறன்றி ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை, ஒரு சிற்றூரின்
வாழ்க்கையை சித்தரிக்கும் போக்கில் குறிப்பிட்ட காலகட்டத்தின் சமூக நடப்புகளையும் மனிதர்களின்
போக்குகளையும் நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளன. முதல் நாவலில் உள்ளதைப் போல சமூக அவலங்களை
சாதி சார்ந்த விமர்சனங்களை இது வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவ்வாறான
கருத்துகளை கதாபாத்திரங்களின் வழியாக அன்றாட சம்பவங்களின் மூலமாக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளது.
வெளிப்படையான நேரடியான அரசியல் சித்தரிப்புகளின்
காரணமாக ‘பழையன கழிதலும்’ முழுமையான புனைவாக உருவாகவில்லை. ஒருவகையில் அது அனுபவங்களையும்
கருத்துகளையும் இணைத்து புனைவாக்கும் முயற்சி. ஆனால் இதற்கு மாறாக ‘ஆனந்தாயி’ முழுமையான
ஒரு புனைவாக அமைந்திருக்கிறது. முதல் நாவலில் உரக்கச் சொல்லப்பட்டவை இரண்டாவது நாவலில்
நுட்பமாக உணர்த்தப்பட்டுள்ளன.
அன்றைய கிராமங்களில் சாதி ஒரு சமூகக்
கூறு. மேலடுக்கில் உள்ளவர்கள் சாதியினால் கிடைக்கும் அதிகாரத்தை தம் உரிமையாக எடுத்துக்கொள்வதும்
கீழடுக்கில் உள்ளோர் அடங்கிப்போவதும் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே அமைந்திருந்தது.
இந்த இரண்டு நாவல்களும் கிராமங்களில் நிலவிய சாதியப் பிரச்சனையை கையாண்டுள்ளன. ஆனால்,
இடைநிலை சாதியினருக்கும் கீழடுக்கில் உள்ள சாதியினருக்குமான மோதல்களையே இந்த நாவல்கள்
மையப்படுத்தியுள்ளன. மேல் சாதியினரின் சாதிய அதிகாரம், அடக்குமுறை குறித்து பேசவில்லை.
நாவல்கள் கையாண்டிருக்கும் களத்தின் எல்லைக்குள் அதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு
என்பது காரணமாக இருக்கலாம். காலவோட்டத்தில் ஏற்பட்டுள்ள பல ஆரோக்கியமான மாற்றங்களை
கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது சமூக அமைப்பில் சாதி குறித்த புரிதலிலும் அணுகுமுறையிலும்
மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படும். ஆனால் அதற்கு மாறாக
சாதியின் தீவிரமும் தீமைகளும் இன்று மேலும் ஆழமாகவும் வலுவாகவும் ஊடுருவியுள்ளன. சமூக
வாழ்வின் பல்வேறு நிலைகளிலும், குறிப்பாக பள்ளி கல்லூரிகளிலும் அதன் தாக்கம் மேலோங்கியிருப்பது
சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பொருளாதாரத்திலும் வாழ்வின் புற அம்சங்களிலும்
ஆரோக்கியமான, வளர்ச்சிக்கான மாற்றங்களை ஏற்படுத்த உதவிய முக்கியமான கருவியாக விளங்கியது
கல்வி. இடைநிலை, கீழ்நிலை சாதியினரின் வளர்ச்சியில் அதன் பங்கு முதன்மையானது. அப்படிப்பட்ட
வலுவான கருவியான கல்வி, சாதியின் பெயரால் உள்முகமாக ஒன்றுதிரள்வதில் உள்ள பாதகங்களையும்
அதனால் விளையும் தீங்குகளையும் புரிந்துகொள்ள உதவாத அளவுக்கு பலவீனமானதா? அரசியல் ஆதாயங்களுக்காகவே
சாதிகளும் அவற்றுக்கிடையிலான பேதங்களும் பேணப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வகைசெய்ய
முடியாத அளவுக்கு ஆற்றலற்றதா? கல்வியறிவை மீறிய ஒரு சக்தியாக சாதியை ஓங்கியிருக்கச்
செய்யும் அரசியலுக்கு எது மாற்றாக இருக்க முடியும்? சமூகத்தின் புறவயமான வளர்ச்சிக்கு
எதிர் திசையில் இவ்வாறான சாதி ஆற்றல் செயல்படுவதை எப்படித் தடுப்பது? இந்த கேள்விகளுக்கான
விடைகளை சிவகாமி ஒரு நாவலாசிரியராக மட்டுமல்லாமல் அரசியலின் மூலமாகவே கண்டறிய முயன்று
களச் செயல்பாடுகளில் இறங்கியுள்ளவர். கட்சி அரசியலின் வழியாக சமூக மாற்றத்தைக் கொண்டு
வர முயல்பவர். அந்த வகையில் சிவகாமி ஒரு எழுத்தாளர் என்ற நிலையிலிருந்து அரசியல்வாதி,
சமூகப் போராளி என்ற நிலைக்கு தன்னை நகர்த்திக் கொண்டவர்.
ஒரு நாவலின் முதல் வரி மிக முக்கியமானது,
நாவலின் போக்கை தீர்மானிப்பது என்பது இலக்கிய கோட்பாட்டில் தொடர்ந்து சொல்லப்பட்டு
வருவது. ‘ஆனந்தாயி’, ‘பழையன கழிதலும்’ நாவல்களின் முதல் வரிகள் மட்டுமல்ல முதல் அத்தியாயங்களுமே
நாவல்களின் ஒட்டுமொத்த போக்கையும் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளன.
மனைவி ஐந்தாவது பிரசவத்துக்குத் துடித்துக்
கொண்டிருக்கும்போது கணவன் இன்னொரு பெண்ணுடன், தன் தாயாரும் கவனித்துக் கொண்டிருக்கிறாள்
என்பது தெரிந்தும், அதே வீட்டில் கூடிக்களிக்கிறான் என்பதாக அமைந்திருக்கும் ‘ஆனந்தாயி’யின்
முதல் அத்தியாயம் நாவலின் மையக் கதாபாத்திரங்கள் அனைத்தின் குணாம்சங்களையும் அவற்றுக்கிடையிலான
சமரசங்கள், மோதல்கள், பிணக்குகள் என எல்லாவற்றையும் மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.
‘பழையன கழிதலும்’ நாவலின் முதல் அத்தியாயமுமே ஒட்டு மொத்த நாவலின் மையத்தை செறிவாக
உணர்த்துவதாகவே அமைந்துள்ளது. இந்த இரு நாவல்களிலும் இடம் பெற்றுள்ள பெரிதும் சிறிதுமான
எல்லாப் பாத்திரங்களுமே அழுத்தமாகவும் துல்லியமாகவும் நாவலின் அடர்த்திக்குப் பங்களித்துள்ளன.
ஒரு மனிதனின் கதை, ஒரு குடும்பத்தின் கதை என்ற அளவில் தோற்றமளித்தபோதும் இதுவொரு காலகட்டத்தின்,
சமூக நிலையின் கதை என்ற விரிவையும் கொண்டிருக்கிறது. மனிதன் தான் இருக்கும் நிலையிலிருந்து
அடுத்த நிலையை எட்ட தொடர்ந்து போராடிவரும் பொதுப் போக்கையும் அதே நேரத்தில் தனக்குள்
உள்ள அடிப்படை குணாம்சங்களைப் புரிந்து கொள்ளவோ அவற்றை மேம்படுத்துவதைப் பற்றிய உணர்வு
இல்லாதவர்களாக இருக்கும் நிலையையும் அருகருகே நிறுத்தி இவ்விரண்டுக்கும் உள்ள முரண்களை
வேறுபடுத்திக் காட்டுகின்றன.
மாற்றங்களினூடாக அதிவேகமாக புறவயமான
வளர்ச்சிகளை எட்டிக் கொண்டிருந்தபோதும் மனிதனின் அடிப்படையான குணாம்சங்கள் மாற்றமே
இல்லாமல் இன்னும் இறுக்கமாக மூர்க்கமாகத் தொடர்வதன் ரகசியத்தைப் பற்றிய அச்சுறுத்தும்
கேள்விகளை இந்த இரு நாவல்களுமே வலுவாக எழுப்புகின்றன. முப்பதாண்டுகளுக்குப் பின்னும் இந்த நாவல்கள் தம்மை
நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு வேறு காரணங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை.
0
(‘நீலி’ இணைய இதழ் - நவம்பர் 2025இல் வெளியான கட்டுரை )
