Thursday, 5 February 2026

பொருதும் யானைகளின் கால்களில் மிதிபடும் புற்கள் - அகரமுதல்வனின் குறுநாவல்கள்

 



புனைவுகளின் வழியாகவே உண்மையின் மேல் கவிந்திருக்கும் நிழல்களை நீக்கிப் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்பதால் ஈழப் போருக்குப் பின்னான இலக்கியங்கள் சரித்திரத்தின் இடைவெளிகளை நிரப்பி அர்த்தப்படுத்துவதில் தவிர்க்கமுடியாத பங்களிப்பைச் செய்கின்றன. மண்ணின் விடுதலைக்காக பொருது நிற்கும் போராளிகளுக்கும் அவர்களை அடக்கி நசுக்கும் அரசுக்கும் இடையில் சாமானியர்களின் வாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகிறது. வாழ்வின் எளிய சந்தோஷங்களையும் சிறிதும் பெரிதுமான துக்கங்களையும்கூட போர் தன்வசப்படுத்திக்கொள்கிறது. போர்க் காலத்தில் இவர்களின் குரல்கள் எடுபடுவதுமில்லை. எழுப்பப்படுவதும் இல்லை. இன்று அந்த ஊழிக்காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது எதனை விலையாகக் கொடுத்து எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்கிற கேள்விகளை இந்த ஆக்கங்கள் முன்னிறுத்துகின்றன. போருக்குப் பிறகான ஈழ எழுத்துக்கள் ஒரு இனம் கருவறுக்கப்பட்ட சரித்திரத்தைச் சொல்கின்றன. வீடும் ஊரும் நாடும் இழந்து உலகெங்கும் அகதிகள் என்ற பெயரோடு அல்லாடி நிற்பவர்களுக்கு எஞ்சி நிற்பது மொழி மட்டுமே. அதைக்கொண்டுதான் உலகின் நீதியை, அறத்தை அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

விடுதலையின் கடைசி நம்பிக்கையும் முள்ளிவாய்க்காலின் ரத்தச் சகதியில் மூழ்கிப் போன பின்பான துயரக் கதைகளை உலகுக்கு உரத்தக் குரலில் சொல்பவை ஈழப் போருக்குப் பிந்தைய எழுத்துக்கள். புதிய கவிஞர்கள், சிறுகதையாளர்கள், நாவலாசிரியர்கள் அழுத்தமான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள். இவை யாவுமே ஈழத்து வாழ்வை வெவ்வேறு கோணங்களில் அணுகின என்பதே இவற்றின் தனித்துவம். புலிகளின் மீதான காட்டமான விமர்சனங்கள் ஒருபுறம் வெளியான அதே சமயத்தில் விடுதலைப் போரின் புலிகளின் சமரசமற்ற தியாகத்தை புத்தொளியுடன் சித்தரித்தவையும் வெளியாகின. ஈழப் போரின் பல்வேறு அம்சங்களை புதிய திறப்புகளுடன் முக்கிய நாவல்கள் எழுதப்பட்டன. சயந்தன் ‘ஆதிரை’, குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’, ‘நஞ்சுண்ட காடு’, ‘அப்பால் ஒரு நிலம்’, ஷோபா சக்தியின் ‘பாக்ஸ்’, தமிழ்கவியின் ‘ஊழிக்காலம்’, தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ ஆகிய சில குறிப்பிடத்தக்கன.. 

0

அகரமுதல்கவனின் சிறுகதைகளும் குறுநாவல்களும் போருக்குப் பிந்தைய எழுத்துக்களின் தன்மைகளைக் கொண்டவையே. ஏற்கெனவே வெளிவந்திருக்கும் ‘இரண்டாம் வெப்ரினன்ட்’, ’முஸ்தபாவை சுட்டுக் கொன்ற இரவு’, ‘பான் கி மூனின் றுவாண்டா’ ஆகியக் தொகுதிகளில் காணப்படும் கதைகள் போர்ச் சுழலின் உள்ளும் புறமுமாய் உள்ளவற்றையே சித்தரித்திருந்தன.

ஐந்து குறுநாவல்களைக் கொண்ட இத்தொகுப்பு ஈழத்தில் சிதைந்த தமிழ் வாழ்வின் உதிரநெடியடிக்கும் ஆவணங்கள். இந்த மூன்று குறுநாவல்களும் ஈழத் தமிழர்களின் வாழ்வின் போருக்கு முன்பான நாட்கள், போர் தீவிரம் கொண்டிருந்த காலம், போர் முடிவுற்று அனைவரும் முகாம்களில் அடைபட்ட காலம் என முக்கியமான மூன்று காலகட்டங்களைப் பின்புலமாகக் கொண்டவை.

ஈழ மண்ணில் ஒரு தலைமுறை இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்வு உலகின் பிற பகுதிகளில் உள்ள அதே வயது இளைஞர்களின் வாழ்வைப் போன்றதன்று. வீட்டுக்கொருவரை நாட்டுக்காக தாரை வார்க்கவேண்டிய கட்டாயத்தில் இளைஞர்கள் பலரும் கட்டாய இராணுவப் பயிற்சிக்காக புலிகளிடம் செல்லவேண்டியதானது. இருக்க இடம், உடுக்க உடை, உணவு, கல்வி, காதல், திருமணம், குடும்பம் என்ற அடிப்படையான எந்தவொன்றுக்கும் உத்தரவாதமில்லாத சூழல். எதிர்காலம் என்ற ஒன்றைப் பற்றிய கனவுகளும்கூட உறுதிப்படாத அவலம். ஆனாலும் போரையோ அதன் மூர்க்கத்தையோ அறியாதவை பசியும் காமமும். பயிற்சியில் ஈடுபடமுடியாமல் மனம் யௌவனத்தின் லாகிரியில் தடுமாறியிருக்க முகாமிலிருந்து தப்பிச் செல்பவன் கிராமத்தை அடைந்ததும் காணநேர்வது காதலியின் சிதிலமடைந்த வீடும் அவள் புலிகளிடம் சென்று சேர்ந்துவிட்டாள் என்ற செய்தியுமே.

போரில் தோற்று கைதியாகி சித்திரவதைக் கூடத்தில் வதைபடும் காலத்திலும் அவன் மனம் மீண்டும் மீண்டும் தஞ்சமடைவது அவளுடன் கூடி மகிழ்ந்த அற்புதப் பொழுதுகளில்தான். மரணம் எப்போதும் தலைமேல் வாள்போல் தொங்கிக் கிடக்கிறது. மின்சாரக் கம்பிகள் உடலைப் பதம் பார்த்து வலி மறத்துப் போனது. சக போராளி தூக்கிட்டுத் தொங்கி மரித்துப் போன மின்விசிறியே அன்றிரவு தூக்கத்துக்கான சொற்ப காற்றையும் சுழற்றித் தருகிறது.

இரண்டு சூழல்களிலும் ஊசலாடிக் கிடக்கும் போராளியின் கதையே ‘அகல்’. இவ்விரண்டிலும் அவன் உயிர் பிழைத்திருக்கிறான். காதலியின் அருகாமை தந்திருந்த சொற்ப கணங்களே அத்தனை துயரையும் தாங்கவல்ல மருந்தென எஞ்சியுள்ளது.

இரண்டாம் குறுநாவல் ‘நெடுநீர் முழை’. ஈழத் தமிழ் மண்ணின் விடுதலைக்காய் நடந்த நூற்றுக்கணக்கான போர்களில் ஒன்றை நிகழ்த்திக் காட்டுகிறது. ஒவ்வொரு களமும் மரணத்தின் முற்றமாகக்கூடும் எனத் தெரிந்தும் ‘பஞ்சு வைத்து’க் கொள்வதைப் பற்றி கவலைப்படாது களமாடப் புறப்படும் போராளிகளின் நெஞ்சுரத்தைச் சொல்லும் கதை. விடாது கொட்டும் மழை. தேங்கிய நீரில் உடல் ஊர்ந்தே பலமணி நேரங்கள் செல்லவேண்டிய கட்டாயம். தலைதூக்கினால் எதிரிகளின் சன்னங்கள் துளைத்துச் சல்லடையாக்கும். மழை நீரூடே நெருப்புப் பொறிகளென பொழியும் சன்னங்கள். அங்கங்கே வெடித்துச் சிதறும் எறிகுண்டுகள்.. சகாவின் உடையோடு வழியும் மூத்திரத்தின் வெப்பக் குமிழ்களை அறிந்து ‘வெந்நீ போடிறியாண்ணே’ என்று சிரிப்புடன் விலகி ஊரும் கணங்கள்.. ‘குப்பி கடிக்க மாட்டேன். துடிச்சுக் கெடந்தா அவனிட்ட விட்றாதே. நீயே சுட்டுரு’ என்று புறநானூற்று வீரம் பேசும் நண்பன். ஒருகணமும் யோசிக்க முடியாமல் வாக்கி டாக்கியில் தொடர்ந்து வரும் கட்டளை சமிக்ஞைகள். போர்க்களத்தின் துடிப்பான தருணங்களை அச்சம் விதைக்கும் துல்லியத்துடன் நம் முன் நிறுத்துகிறது ‘நெடுநீர் முழை.’

அரசன் குளம் ஈழத்தின் ஒரு எளிய கிராமம். அதற்கு எழிலூட்டும் ஆமைக் குளம். கிராமத்தின் எல்லாத் தேவைகளுக்குமான நீர் ஆதாரம் ஆமைக்குளமே.  போர்முனையில் அகப்பட்ட பின்பு அரசன்குளமும் அதன் மனிதர்களும் அடையும் துயரச் சித்திரமே மூன்றாவது குறுநாவலான ‘உலகின் மிக நீளமான கழிப்பறை.’ இராணுவ மிருகங்களின் கரங்களில் சிக்குண்டு சின்னாபின்னமான பெண்களின் துயருக்கு இணையானது இருதரப்புக்குமிடையில் மாட்டிக்கொண்டவர்களது அன்றாடங்களில் எதிர்கொண்ட துன்பங்கள். நந்திக்கடற்கரை உலகின் மிக நீண்ட கழிப்பறையாக மாறி அங்கே துரட்டிகளைக் கொண்டு உடல்மூடி கழித்திருந்த சகோதரிகளின் அவல வாழ்வு இந்த நூற்றாண்டு கண்டிராத கொடுமைகளில் ஒன்று. இத்தனை துயரும் கண்ணீரும் அவர்களது நெஞ்சுரத்தை குலைத்துவிடவில்லை.. எதன்பொருட்டும் சொந்த மண்ணுக்கான வேட்கையை அவர்கள் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. போருக்குப் பிறகான முகாம்களில் சிதறுண்டு பின் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசர் குளத்துக்கு மீண்டு வருவோர்க்கு குளத்தில் குளிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இராணுவத்தின் கண்காணிப்பில் இருக்கும் குளத்தில் குளிக்கும் உரிமை வேண்டி போராடுகிறார்கள். எப்போதும்போல போராட்டும் கடும் கரம்கொண்டு ஒடுக்க முயல்கிறது. முடியாத வேளையில் குளத்தை சுத்தப்படுத்துவதற்காக நீரை இறைத்து சேற்றை அள்ளுகிறார்கள். வெடிக்காத பெரியவொரு கிபீர் குண்டுடன் ஏராளமானோரின் எலும்புகள் கிடைக்கின்றன. காணாமல் போன பலரும் ஆமைக்குளத்தில் எறியப்பட்டிருக்கும் துயரக் கதை வெளியில் வருகிறது. கோயில்களை சிதைத்து மண்ணாக்கி புத்தவிகாரங்களை எழுப்புவதும் ஈழத்தின் வேட்கை மிஞ்சியிருக்கும் இடத்தை துப்புரவாகத் துடைத்தெறிவதும்தான் அவர்கள் அளிக்கும் மறுவாழ்வு. அரசன்குளம் இப்போதும் இருக்கிறது. ஆனால் ஆமைக்குளத்தில் யாரும் இப்போது குளிப்பதில்லை.

0

அகரமுதல்வனின் எழுத்துக்கள் சபிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் குமுறல்கள். ஆத்திரங்கள். நீதியும் அறமும் பேசும் உலகை நோக்கி எள்ளலுடன் உமிழும் எச்சில் துளிகள். சராசரி இளைஞனுக்குரிய இயல்பான வாழ்வு மறுக்கப்பட்டு ஒவ்வொரு நொடியும் போரின் மூர்க்கக் கரங்களில் சிதறுண்டு உயிர்த் தப்பிய ஒருவனின் துயர்மிகு வரிகளையே அக் கதைகளில் நாம் வாசிக்க முடிகிறது.

அக்குரல் நம் நீதியை நோக்கி கேள்வி எழுப்புகிறது.

இதுகாறும் நாம் போதித்த அறம் குறித்து அதன் வலிமை குறித்தும் சந்தேகம் கொள்கிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் வாக்கை அதன் பொருளைப் பற்றி நம்மிடம் கேட்டு நிற்கிறது.

தலைகுனிந்து பேசாமலிருப்பதைத் தவிர நம்மால் என்ன பதில் சொல்ல முடியும்?

 

( உலகின் மிக நீண்ட கழிவறை, குறுநாவல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள முன்னுரை, நூல்வனம் வெளியீடு, பிப்ரவரி 2019 )

 

பொருதும் யானைகளின் கால்களில் மிதிபடும் புற்கள் - அகரமுதல்வனின் குறுநாவல்கள்

  புனைவுகளின் வழியாகவே உண்மையின் மேல் கவிந்திருக்கும் நிழல்களை நீக்கிப் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்பதால் ஈழப் போருக்குப் பின்னான இலக்கிய...