Wednesday 13 September 2023

என்.ஜெயராம் எனும் அறியப்படாத மேதை

இயற்கையின் இசையும் நிழலின் ஒளியும்

(காலச்சுவடு, ஜூலை 2023 இதழில் வெளியான கட்டுரை)



கானுயிர் படங்கள் என்றதும் அனைவரும் யோசிப்பது யானை, சிங்கம், புலி, காண்டாமிருகம், காட்டெருமை, ஒட்டகச்சிவிங்கி போன்ற பேருயிர்களின் படங்களே. உலகின் மிகப் புகழ்பெற்ற கானுயிர் படக் கலைஞர்கள் வெவ்வேறு கோணங்களில் பல பேருயிர்களை ஒளிப்படங்களாக தந்துள்ளனர். எம்.கிருஷ்ணனின் யானைகளும், டி.என்.ஏ.பெருமாளின் ஆந்தைகளும் உலக அளவில் கவனம் பெற்ற படங்கள். இந்த பேருயிர்களுக்கு இணையாக வண்டுகள், பூச்சிகள், தவளைகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட எண்ணற்ற சிறு உயிர்களையும் கவனிப்பதும், படமெடுப்பதும், காட்சிப்படுத்துவதும் முக்கியம் என்பதை உலகுக்கு உணர்த்திய ஒளிப்படமேதைகளில் ஒருவர் என்.ஜெயராம்.    

கேமரா தொழில்நுட்பங்கள் பெருமளவு வளர்ந்திருக்காத, படச் சுருள்களைக்கொண்டு படமெடுத்த காலத்தில் சிறு உயிர்களை படமெடுப்பது அத்தனை சுலபமல்ல. சரியான கோணமும், ஒளி அளவும் அமையவேண்டும். அவ்வுயிர்களை தொந்தரவு செய்யாமல் நெருங்கி துல்லியமாகப் படம் பிடிக்கும் ஆற்றல் மிக்க லென்சுகளோ பிற உபகரணங்களோ இல்லாத நிலை. குறிக்கோளை அடைய போதுமான கருவிகளோ வாய்ப்புகளோ இல்லாதபோது சாதாரணமானவர்கள் அவற்றுக்காகக் காத்திருக்கிறார்கள். சாதனையாளர்களோ அவற்றை தாங்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். தன்னிடமிருந்த கேமராவையே நுண்ணுயிர்களைப் படம்பிடிக்கத் தகுந்தபடி கட்டமைத்துக்கொண்டார் ஜெயராம். அவ்வாறான அர்ப்பணிப்பும் தளரா முயற்சியுமே உலகுக்கு அவரை அடையாளம் காட்டியது. இளம் வயதிலேயே சர்வதேச அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெறச் செய்தது.

ஜெயராமின் தந்தை இம்பீரியல் வங்கி(இப்போதைய ஸ்டேட் வங்கி)யில் அஸ்ஸாம், மத்திய பிரதேசம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட வட மாநிலங்களில் பணியாற்றியவர். எனவே, சிறு வயதிலேயே அடர்ந்த காடுகளுக்குள் பயணம் செல்லும் வாய்ப்பு இருந்தது. அதுவே காடுகளையும் கானுயிர்களையும் நோக்கி அவரை ஈர்த்தது. அவருடைய தந்தையார் பதினான்கு வயதில் ஒரு அக்ஃபா கேமராவை பரிசளித்தபோது தொடங்கிய அவருடைய ஒளிப்படப் பயணம் அறுபது ஆண்டுகள் தொடர்ந்தது. இந்த அறுபது ஆண்டுகளிலும் காடுகளையும் கானுயிர்களையும் தவிர அவர் வேறெதையும் திரும்பிப் பார்க்கவில்லை, திருமண வாழ்க்கை உட்பட.

தொடக்கத்தில் திருவிழாக்களையும் மனிதர்களையும் படம் பிடித்த ஜெயராமின் படங்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்க முடியும். பூச்சிகள், வண்டுகள், சிலந்திகள், தும்பிகள் உள்ளிட்ட சிறு உயிர்கள் முதலாம் பிரிவில் அடங்கும். யாரும் கவனிக்காத, கண்டுகொள்ளாத சிறு உயிர்களை ஜெயராம் உற்று நோக்கினார். இலைகளிலும் மரக் கட்டைகளிலும் பாறைகளின் மீதும் ஊர்ந்தும் ஒட்டிக்கொண்டுமிருந்த அந்த உயிர்களை கவனித்தார். சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மைகளை ஆராய்ந்தார். பத்துக்கும் மேற்பட்ட தன் குஞ்சுகளை முதுகில் சுமந்து செல்லும் தேள், சருகைப் பற்றியபடி இணைசேரும் தும்பிகள், தலையிலும் முதுகிலும் மகரந்த மஞ்சளை அப்பிக்கொண்டு சிறு பூக்களின் மேல் அமர்ந்திருக்கும் கருவண்டு, சிறு வெண் மலரில் எறும்பு போன்ற கண்களுடன் பளிங்கு மேனிகொண்ட சிலந்தி, முத்தாரம் போல மரப்பட்டை மீது முட்டைகளிட்டிருக்கும் பொன்வண்டு உள்ளிட்ட அவரது அபாரமான படங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. இதுபோல் இன்னொன்று இல்லை என்று சொல்லுமளவுக்கு சிறப்பம்சம் மிகுந்தவை. சிலந்தியின் தலையிலும் கால்களிலும் உள்ள பொடி ரோமங்களைக்கூட அந்தப் படத்தில் பார்க்க முடியும். தும்பியின் மூங்கில் போன்ற பளபளக்கும் உடலையும் அதன் கண்ணாடி இறகுகளையும் துல்லியமாகக் காட்டும். இலைகளிலும் பூக்களிலும் சருகுகளிலும் மரப்பட்டைகளிலும் வாழும் இந்த உயிர்களை சாதாரணமாகக் காண்பதே கடினம். ஆனால், அதைக் காண்பதோடு மிகச் சரியான கோணத்தில், தேவையான ஒளியுடன் படமெடுப்பது பெரும் சவால். ஜெயராமின் இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் ‘இது எப்படி சாத்தியம்?’ என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.

அவரது படங்களின் இரண்டாம் பிரிவில் வண்ணத்துப் பூச்சிகளையும் தவளைகளையும் சேர்க்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகளில் பருவமழையைத் தொடர்ந்து தவளைகள் இனப்பெருக்கம் செய்யும் சமயத்தில் ஜெயராம் எடுத்த படங்கள் பல உலகப் புகழ் பெற்றவை. அவரளவுக்கு தவளைகளை துல்லியமாகவும் அழகாகவும் இன்னொருவர் படமெடுக்க முடியுமா என்பது சந்தேகமே. தாவரத்தின் சிறிய தண்டின் மீது கால்களைப் போட்டுக்கொண்டு எட்டிப் பார்க்கும் தவளை இவருக்காகவே அப்படியொரு கோணத்தில் அமர்ந்திருந்ததோ என்று யோசிக்க செய்யும். பச்சைப் பசேலென பாசி படர்ந்த பாறையின் மீது தன் உடல்நிறத்தையும் பச்சையாக மாற்றிக்கொண்ட ஒரு தவளை, உப்பு மூட்டை தூக்குவதுபோல இணையை முதுகில் ஏற்றியிருக்கும் ஒரு தவளை, உலர்ந்த இலைகளின் மீது நிறம் மாறிய பழுப்புத் தவளை, செடியின் நுனியிலிருந்து தாவத் தயாராக உடலை வளைத்து நிற்கும் தவளை, பச்சைப் பாம்பின் வாயில் கவ்வுண்ட சிறு தவளை என எண்ணற்ற தவளைகளின் படங்கள் ஜெயராமின் முத்திரைகொண்டவை. ஓரிடத்தில் நிற்காமல் நீரிலும் நிலத்திலுமாய் தாவித் திரியும் இயல்புகொண்ட தவளைகளை இத்தனை துல்லியமாக படமெடுக்க பொறுமையும் வேண்டும், அவற்றைக் குறித்த ஆழமான அறிவும் வேண்டும். ஜெயராமிடம் இவை இரண்டும் இருப்பதால்தான் தவளைகளுடம்கூட அவரைக் கண்டு வியந்து நின்றுவிடுகின்றன.

பட்டாம்பூச்சிகளை படமெடுப்பதும்கூட அதேயளவு சவாலான காரியம். அன்றாடம் கண்ணில்படும் பட்டாம்பூச்சிகளிலிருந்து அபூர்வமான வகைகள் வரை அவர் படமெடுத்திருக்கிறார். இறகுகளின் வண்ணங்களையும் வடிவத்தையும் உணர்கொம்பின் வளைவுகளையும்கூட அவரது படங்களில் தெள்ளத் தெளிவாகப் பார்க்கமுடியும். அபூர்வமான சிறு பறவைகளையும் படமெடுத்திருக்கிறார். திராட்சைப் பழ அளவுகொண்ட ஒரு காட்டுப் பழத்தை வாயைத் திறந்து கவ்வப் பார்க்கும் குருவியின் படம் ஒரு எடுத்துக்காட்டு.

அவரது மூன்றாவது வகைப் படங்கள் நிலக்காட்சிகள். தொடர்ந்து பல ஆண்டுகளாக பயணம் மேற்கொள்ளும் அவர் பல்வேறு வகையான நிலங்களை மலைகளை சமவெளிகளை காடுகளை கவனித்து வந்திருக்கிறார். வளர்ச்சியின் பெயரால் மெல்ல மெல்ல இவை யாவும் அழிவுக்கு உள்ளாகின்றன என்று உணர்ந்தவுடன் அவற்றை படமெடுக்கத் தொடங்குகிறார். அவருக்கு மிகப் பிடித்தமான நீலகிரி மலைகளையும் சிகரங்களையும் மஞ்சுப் பொதிகள் மிதக்கும் சரிவுகளையும் பள்ளத்தாக்குகளையும் படமெடுக்கிறார். சல்லாத்துணி போன்ற பனிமூட்டம்

அந்தியின் பொன்னொளியிலும் விடியலின் சாம்பல் வெளிச்சத்திலும் வெவ்வேறு தோற்றங்காட்டும் அவரது நிலக்காட்சிகள் உலகின் மிகச் சிறந்த ஓவியங்களுக்கு இணையானவை. மலம்புழா அணை நீரின்றி வற்றிய பருவத்தில் தேக்கத்தின் நடுவே பசும் புல்வெளி. கால்நடைகள் மேயும் அந்திப்பொழுது. கதிரொளி பொன்திட்டுகள் போல் அங்கங்கே இறைந்திருக்கும் காட்சியை அவர் எடுத்திருக்கும் விதம் இன்னொருவர் யோசிக்கக்கூட முடியாத ஒன்று. உதகையின் புகழ்பெற்ற முக்குருத்தி புல்வெளிகளும் மடிப்புகளும் சிகரங்களும் அவரது படங்களில் மேலும் எழில் கொண்டிருக்கும் விநோதம் புரிபடாத ஒன்று. பொன்னொளியில் மிளிரும் பாறைகளும் குன்றுகளுமாய் ஹம்பியில் அவர் எடுத்திருக்கும் படங்கள் நினைவில் உறைந்திருப்பவை.   

திறன்மிக்க நல்ல காமிராவோ கைபேசியோ கையிலிருந்தால் யாரும் படமெடுக்க முடியும். ஜெயராம் இந்தக் கூற்றை மறுக்கவில்லை. ஆனால், ஓவியத்தைப்போல ஒரு காட்சியை காமிராவின் வழியாக படைத்துக் காட்டும்போதுதான் அது கலையாக மாறுகிறது என்கிறார். ஒரு விலங்கையோ மரத்தையோ பறவையையோ பார்த்தவுடன் அதை அப்படியே படமெடுப்பதில் எந்த பயனும் இல்லை. படத்துக்கான சரியான கோணத்தை யோசிக்கவேண்டும். போதிய வெளிச்சமும் தேவைப்படும் நிழலும்கூட அமையவேண்டும். எந்தத் தருணத்தில் விசையை சொடுக்கவேண்டும் என்ற அனுபவம் முக்கியம். இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு படத்தை சாதாரணப் படத்திலிருந்து வித்தியாசப்படுத்துகின்றன.

ஜெயராம் தன்னை ஒரு ஒளிப்படக் கலைஞனாக மட்டும் நிறுத்திக் கொண்டிருந்தால் உலகிலுள்ள எண்ணற்ற கானுயிர் ஒளிப்படக் கலைஞர்களில் ஒருவராகவே நின்றிருப்பார். அப்படியொரு எல்லையில் தன்னை நிறுத்திக்கொள்ள அவர் விரும்பவில்லை. அவரது இயல்பும் அவ்வாறானதில்லை. படமெடுக்கும் ஒவ்வொரு உயிரைக் குறித்தும் அவர் கசடறக் கற்றுக் கொண்டார். விஞ்ஞானிகள், துறைசார் நிபுணர்களுடன் தொடர்ந்து உரையாடி அறிவை சேர்த்துக்கொண்டார். தீவிரமான வாசகர் என்பதால் ஆழமாக வாசித்தார். உயிர்களின் இயல்பு, அவற்றின் வசிப்பிடம், குணநலன்கள் என எல்லாவற்றையும் அறிந்துகொண்டார். இதற்காக அவர் தாவரவியல், பூச்சியியல், உயிரியல், விலங்கியல், இயற்கை அறிவியல், வகைப்பாட்டியல் (taxonomy) உ.ள்ளிட்ட அறிவியல் துறைகளை ஆழக் கற்றுத் தெளிவுகொண்டார். தேடித் தேடிச் சேர்த்த இத்தனை அறிவுடன் இயற்கையாகவே அவருக்குள் அமைந்திருக்கும் ஒளி, நிறம், நிழல் குறித்த நுண்ணுணர்வும் சேர்ந்து அவரது படங்களை ஒப்பற்றதாக்கின.

அவரது ஒரு படம் என்பது அந்த குறிப்பிட்ட உயிரைக் கண்ணில் காட்டும் பணியை மட்டும் செய்வதில்லை. அந்த உயிரின் வாழ்நிலை, இயல்பு, இயற்கையுடனான அதன் உறவு ஆகிய ஒவ்வொன்றையும் சுட்டிக் காட்டும் அறிவியல் ஏடாகவும் விளங்குகிறது. துறைசார் விஞ்ஞானிகளுக்கு அரிதான தகவல்களை தரும் களஞ்சியமாகவும் திகழ்கிறது. இந்த வகையில் ஜெயராமின் ஒளிப்படங்கள் சூழல் பாதுகாப்புக்கும் துணைபுரிகின்றன.

ஜெயராம் ஒரு தீவிர வாசகர். அவரது நூலகத்தில் உள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றும் அரிதானவை. விலைமதிப்பற்றவை. ஒளிப்படக் கலை தொடர்பான உலகப் புகழ்பெற்ற மேதைகளின் நூல்கள் அவரிடம் இருப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால், ரெம்பிரான்ட், வான்கா போன்ற மேதைகளின் ஓவியங்கள் அடங்கிய புத்தகங்கள் அவரிடம் உண்டு. ஒரு ஓவியன் நிறத்தையும் ஒளியையும் எவ்விதம் தனது ஓவியத்தில் பயன்படுத்துகிறான் என்பதை ஒளிப்படக் கலைஞன் கற்றுக்கொள்வது முக்கியம் என்பதை எப்போதும் அவர் வலியுறுத்துவார். தோரே அவருக்குப் பிடித்த எழுத்தாளர். ஆங்கிலக் கவிதைகளை வாசிப்பதுண்டு. இலக்கியத்தில் மட்டுமல்லாமல் இசையிலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவர் தனது ‘மேக்’ கனிணியில் சேர்த்து வைத்திருக்கும் இசைத் தொகுப்புகள் மிக அபூர்வமானவை. தொடக்கத்தில் மேற்கத்திய இசையில் ஆர்வம் கொண்டிருந்த ஜெயராம் பிறகு இந்திய செவ்வியல் இசையை ரசிக்கலானார். இசை கேட்பதற்கென வெவ்வேறு ஒலிப்பெருக்கிகளை வைத்திருந்தார். குறிப்பிட்ட இசையை குறிப்பிட்ட பெருக்கியின் வழியாக மட்டுமே கேட்கவேண்டும் என்று குறிப்பிடுவதுண்டு.

தத்துவம், இலக்கியம், ஓவியம், இசை மூன்றும் கலந்த அபூர்வமான ரசனைதான் அவரது ஒளிப்படங்களில் அமைதியுடனும் ஆழத்துடனும் உறைந்துள்ள ரகசியச் சிறப்பு. வேறெவரும் அதை நகல்செய்துவிட முடியாது.

1975ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலுமான காலத்தில் அவரது ஒளிப்படங்கள் நானூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிடும் ஜெயராம், சரியாக படம் வாய்க்கும் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே காமிராவை சொடுக்குவார். கோணமும் ஒளியும் வசமாக அமையாதென்று தெரிந்தால் யானையோ புலியோ குறுக்கே நடந்தால்கூட கண்டுகொள்ளமாட்டார். அதே நேரத்தில் ஒரு பட்டாம்பூச்சி பூவில் அமரும் தருணத்துக்காக மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருப்பார். டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமாவதற்கு முன்பு அவர் தன் படங்களை ஒளிவில்லைகளாக்கி (slides) காட்சிப்படுத்துவதுண்டு. கேரளாவில் அவரது ஒளிவில்லைக் காட்சிகள் மிகப் பிரபலமானவை.

படங்களை எடுப்பதில் மட்டுமல்லாமல் அதை அச்சிடுவதிலும் சட்டமிடுவதிலும்கூட மிகக் கவனமெடுத்துக்கொள்வார். கேரளாவிலிருந்து தருவிக்கப்பட்ட மரங்களைக்கொண்டு அவரது படச் சட்டங்களை செய்துகொடுக்கவென தச்சர் ஒருவர் உண்டு. அதேபோல படங்களை அச்சிடுவதற்கான தாளையும் துணிச்சுருளையும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்வார். இவ்வாறு ஒவ்வொரு படத்துக்கும் அவர் தனது உழைப்பைத் தவிர செய்யும் செலவுகள் கணக்கிலடங்காதவை. ஆனால், அதைப் பற்றி கவலைப்படமாட்டார். செய்யும் காரியம் திருத்தமாகவும் சிறப்பாகவும் மட்டுமே இருக்கவேண்டுமென்பதில் அவர் காட்டும் உறுதி நம்பமுடியாதது. தரக்குறைவை எதிலும் அனுமதிப்பதில்லை அவர்.

சூழல் பாதுகாப்புக்கும் சிறு உயிர்களை உலகுக்கு அடையாளம் காட்டிய மேதமைக்கும் அங்கீகாரம் அளிக்கும் விதமாக மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் அவர் கண்டுபிடித்த இரு உயிர்களுக்கு ஜெயராமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எறும்பைப் போன்றிருக்கும் ஒரு சிலந்திக்கு ‘மைர்மாக்ளே ஜெயராமணி’ என்றும், அரிய தவளை இனமொன்றுக்கு ‘ராவோர்செரஸ்டஸ் ஜெயராமணி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.   

இயல்பில் அவர் தன்னைப் பற்றி அதிகமும் வெளிப்படுத்திக் கொள்ளாதவர். இத்தனை பெரிய சாதனைகளை செய்திருக்கிறோம் என்ற மிதப்போ எண்ணமோ அவரிடமிருந்து ஒருபோதும் வெளிப்பட்டதில்லை. அவரைத் தேடி வரும் நண்பர்களிடம் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும் என்ற பேரார்வம் உண்டு. எடுத்த படங்களைக் கொண்டு வந்து நண்பர்களிடம் ஆவலுடன் காட்டுவார். அதன் சிறப்பியல்புகளை விளக்குவார். அவர் கோவையில் வாழ்ந்தபோதும்கூட தமிழகத்தைவிட கேரளாவில் அதிகமும் அறியப்பட்டவர். ஒரு சிற்றூரில் நடந்த அவரது படக்காட்சியை கண்டுகளிக்க கேரள முதல்வர் வருகை புரிந்தார். கேரளாவிலும் கர்நாடகாவிலும் உதகையிலும் அவருக்கு நண்பர்கள் ஏராளம். அவர் வருகிறார் என்றால் அவருடன் பயணம் செய்யவும் அவருக்கு உதவி புரியவும் நண்பர்கள் போட்டிபோடுவார்கள்.

இளமையில் மிக வசீகரமான தோற்றம் கொண்டவர் ஜெயராம். பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் இப்போது பார்க்கும்போது ‘அழகன்ய்யா’ என்று சொல்லத் தோன்றுகிறது. அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். நேரம் பார்க்காமல் உரையாடுபவர்.  

கானுயிர் புகைப்பட மேதை டி.என்.ஏ பெருமாள் மீது மிகவும் மதிப்புகொண்டவர் ஜெயராம். அவர்கள் இருவருக்குமான உறவு மிக அபாரமானது. அவரைப் பற்றி புத்தகத்துக்காக பதினைந்து நாட்களுக்கும் மேலாக உரையாடியது ஜெயராமின் அழகிய இல்லத்தில்தான். அந்தப் புத்தகத்தின் எழுத்து வடிவத்தை வாசித்து திருத்தங்களை செய்து தந்தார் ஜெயராம்.

அண்மையில் வெளியான என்னுடைய நாவல் ‘வேங்கை வனம்’ உருவாகக் காரணமானவர் ஜெயராம். சிறிய குறுநாவலாக எழுதியதைப் பார்த்துவிட்டு அதன் விரிவான சாத்தியங்களைக் குறித்து உரையாடி அதற்கான தரவுகளையும் நூல்களையும் தந்துதவினார்.

அவரைக் குறித்த ஒரு நூலை எழுதுவதற்கான எண்ணம் இருந்தது. அவரும் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், செயல்படுத்துவதற்கு முன்பே காலம் முந்திக்கொண்டது. நோய்பட்ட நிலையிலும் ‘சரியாகி வந்தவுடன் தொடங்கிவிடலாம்’ என்று ஆனந்திடம் உறுதியளித்திருந்தார். செல்ல வேண்டிய பயணங்கள், எடுக்க வேண்டிய படங்கள், வாங்க வேண்டிய புத்தகங்கள் என்று திட்டங்களுடன்தான் அவர் சிகிச்சைக்குச் சென்றார். நெடுங்காலம் தன்னையே ஆராதித்திருந்த அன்பரை தன்னுடனே இணைத்துக்கொள்ளும் இயற்கையின் திட்டத்தை அவர் அறிந்திருக்கவில்லை, வேறு யாருமேகூட.

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...