1
மண்ணிலிருந்தும்
அதன் மக்களிடமிருந்தும் எழுதப்படும் எழுத்து இலக்கியத்துக்கென வகுக்கப்பட்டிருக்கும்
இலக்கணத்துக்குள் அடங்காதது. அது சொல்வதும் அதன் சொல்முறையும் ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கும்
கதைகளிலிருந்து வேறுபட்டது. அது தனக்கான இலக்கணத்தை உருவாக்கிக்கொள்கிறது. சுயமான ஒரு
திணை மரபு அந்த எழுத்துக்களிலிருந்தே அமைந்துபோகிறது. அப்படி உருவான ஒன்றை பொது இலக்கிய
மரபிலுள்ள பிற எழுத்துக்களோடு ஒப்பிட்டு மேலானது, தாழ்ந்தது என்று தராசில் நிறுத்துவதில்
பொருளில்லை. தனித்துவமே அதன் சிறப்பு. இன்னொன்றைப்போல அது இருக்காது. அதைப்போல வேறொன்று
இருக்காது.
அப்படியொரு தனித்தன்மைகொண்ட
கரிசல் இலக்கியத்தை தமிழில் உருவாக்கித் தந்திருக்கிறார் கி.ரா.
‘வெந்துபோன ஈரலைப்போல
ஒரே கறுப்பாக’ கிடக்கும் கரிசல் மண்ணில் ஆடிமாசம் குப்பையடியில் தொடங்கி புரட்டாசியில்
விதைத்து, தையில் அறுவடையில் முடியும் விவசாயத்தின் பாடுகளையே கி.ரா கதைகளாக்கியிருக்கிறார்.
பருத்தியும் கம்மம்புல்லும் விளையும் நிலம் வானத்தை நம்பியிருப்பது. அது பெய்தும் கெடுக்கும்,
பொய்த்தும் கெடுக்கும். ‘நல்ல நாயக்கனைக் கண்டால் நிலம் பயப்படும்’ என்று தெலுங்கில்
ஒரு பழமொழி உண்டு என்று சொல்கிறார் கி.ரா. உழைப்புக்கு அஞ்சாத கரிசல் காட்டு சம்சாரிகளே
கி.ரா வின் கதாபாத்திரங்கள். உழைக்கத் தயாராக இருந்தபோதும் விவசாயத்தில் தலைநிமிர்ந்துவிடும்
வாய்ப்பு சம்சாரிகளுக்கு எப்போதும் இருக்கும் என்ற உத்தரவாதமில்லாத ‘மாயமான்’ அது. ‘பருத்தி விலையும் பவுன் விலையும்
ஒன்றாக இருந்த காலம்’ போய் ‘சம்சாரி உற்பத்தி செய்யிற எதுவும் விலையில்லமலும் சம்சாரி
வாங்குகிற எதுவும் அகாத விலையில் இருப்பதுமான’ காலம் வரைக்குமான கரிசல் வாழ்க்கையை
கி.ரா விரிவாகவும் அதன் கதாபாத்திரங்களை உயிரோட்டத்துடனும் எழுதிக் காட்டியிருக்கிறார்.
சம்சாரிகளுக்கு ஈடாக கி.ரா வின் கதைகளில் மாடுகளும் காளைகளும் ஆடுகளும் கோழிகளும் பூனைகளும்கூட
கதாபாத்திரங்களே. ( குடும்பத்தில் ஒரு நபர், ஒரு வெண்மை புரட்சி, மிருக மனிதம் ) ‘கல்குளம்பு,
அதிலும் குத்துக் குளம்பு, குறுங்கால், சன்னமான ஏறுவால், ரெட்டைக் குருத்து முதுகு,
ஒட்டுத்தாடி, ரெட்டைநாடி மார்பு, பொய்க்கண் திரட்சி, உடும்புத்தலை, கிலாக் கொம்பு,
பட்டு நிறத்திலிருக்கும் அதன் உடம்பு’ என்று துல்லியமான அடையாளங்களுடன் சந்தனப் புல்லையை
அவர் கதைகளில் பார்க்க முடியும். தொட்டணன், பப்புத் தாத்தா தம்பதி, மாசாணம், பேச்சி
போன்ற கடும் உழைப்பாளிகளும் அவர்களைச் சுரண்டும் நில உடைமையாளர்களும், அதிகாரத்துடனும்
அலட்சியத்துடனும் விவசாயிகளை அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகளும்கூட (கரண்டு, மாயமான்,
ஒரு வெண்மை புரட்சி, அவுரி) விவசாய வாழ்வின் ஒரு பகுதியாகவே அமைந்திருப்பதை இக்கதைகள்
உணர்த்துகின்றன.
அன்றாட உழைப்பு
தரும் சலிப்பிலிருந்து சம்சாரிகளுக்கு கிராமத்தில் கடைபிடிக்கப்படும் சடங்குகளும் வழக்கங்களுமே
ஆசுவாசம் அளிக்கின்றன. கல்யாணம், பூப்பெய்துதல் சிறிய நிகழ்வுகளும் திருவிழாக்களும்
கிராமத்திலுள்ள அனைவருக்குமான நிகழ்ச்சிகளாக அமைகின்றன. நிலத்தின் கதையுடன் சேர்ந்தது
என்பதால் கி.ரா தனது கதைகளினூடாக இதுபோன்ற சடங்குகளையும் வழக்கங்களையும் பற்றி விரிவாகவே
சொல்லியிருக்கிறார். திருமணம், குழந்தைப்பேறு போன்ற சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படும்
நடைமுறைகளும் (மகாலட்சுமி) மரணத்துக்காகக் காத்திருக்கும் வயசாளிக்காக செய்யப்படும்
பல்வேறு சடங்குகளும் (சாவு, புறப்பாடு, நாற்காலி) கி.ராவுக்கேயுரிய மொழியில் சொல்லப்பட்டுள்ளன.
கிராமத்து மனிதர்களின்
பல்வேறு மனச்சாயல்களையும் குணக்கேடுகளையும் உன்னிப்பாகக் கவனித்து கதைகளில் காட்டியுள்ளார்
கி.ரா. ‘நெருப்பு’, ‘மனிதம்’, ‘வேட்டி’, ‘எங்கும் ஓர் நிறை’, ‘பலம்’, ‘கொத்தைப் பருத்தி’,
‘குருபூசை’, ‘சுற்றுப்புறச் சுகாதாரம்’ ஆகிய கதைகளைச் சொல்லலாம்.
பள்ளிக்கூடத்தையும்
வாத்தியார்களையும் கண்டால் கி.ராவுக்கு அறவே பிடிக்கவில்லை என்பதை ‘ஜெயில்’, ‘ஒரு சிறிய
தவறு’, ‘மிருக மனிதம்’ ஆகிய கதைகளில் வெளிப்படுத்தியிருக்கும் கி.ரா போலீஸ் அடக்குமுறைகளையும்
‘தோழன் ரங்கசாமி’, ‘வேட்டி’ ஆகிய கதைகளில் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
நிலம் உடைமையாகும்போது
அண்ணன் தம்பிகளுக்குள் ‘பாகவஸ்தி’ என்பது தவிர்க்க முடியாதது. பாடுபட்டு சேர்த்ததையெல்லாம்
பகிர்ந்து கொடுத்த பின்பு பிள்ளைகள் வீட்டில் முறைவைத்து கஞ்சிக்காய் காத்திருக்கும்
பெரியவர்களின் பாடுகள் கி.ராவை மிகவும் நோகடித்திருக்க வேண்டும். ‘இவர்களைப் பிரித்தது’,
‘உண்மை’, ‘காய்ச்ச மரம்’ ஆகிய மூன்று கதைகளுமே இந்த யதார்த்தத்தை விவரித்துள்ளன.
சங்கீதத்தில் மிகுந்த
ஆர்வம் கொண்டிருக்கும் கி.ராவின் ஒரேயொரு கதையில் (அரும்பு) மட்டுமே சங்கீதம் குறித்து
பேசப்பட்டிருப்பது ஆச்சரியமான ஒன்று. அதேபோல, கயத்தாறு, கோவில்பட்டி ஆகிய பெயர்கள்
பல கதைகளில் இடம் பெற்றிருக்கும் நிலையில் ‘எடைசெவல்’ எனும் அவரது சொந்த கிராமத்தின்
பெயர் ‘அவத்தொழிலாளர்கள்’ என்ற ஒரேயொரு கதையில் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
2
கரிசல் மண்ணையும்
அதன் வாழ்வையும் வெகு நுட்பமாக விவரணைகளோடு கி.ரா எழுதியிருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
அது அவரது களம், வாழ்க்கை. அந்த மனிதர்கள் அவருடன் வாழ்ந்தவர்கள். அவரோடு இருந்தவர்கள்.
எனவே, இயல்பாகவே அவரால் அதை எழுதிவிட முடிந்தது.
ஆனால், இன்று அவரது
கதைகளைத் திரும்பப் படிக்கும்போது ஆச்சரியப்படுத்தியது அவரது கதைகளில் உள்ள பெண்களை
அவர் எழுதியிருக்கும் விதமே.
பருவத்துக்கேற்ப
பெண்களின் தோற்றத்தில் ஏற்படும் மாறுதல்களைப்போலவே அவரது குணங்களிலும் கணிசமான மாற்றங்கள்
நிகழ்வதை தனது சிறுகதைகளில் சுட்டிக் காட்டியுள்ளார் கி.ரா. ‘சொன்னால் நம்பமுடியாதுதான்!
நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று நினைக்கவேயில்லை’ என்று தொடங்கும் ‘கன்னிமை’யில்
இந்த மாற்றங்களை துலக்கமாகப் பார்க்கமுடியும். ‘வாங்கித் திங்க’ புஞ்சையில் பருத்திச்
சுளை எடுத்தான் என்பதற்காக சுந்தரத் தேவனின் மகனை தன் தகப்பனார் அடித்தது தவறு என்று
உணர்ந்த கணத்தில் நேராக அவர்கள் வீட்டுக்குச் சென்று சிறுவனுக்கு வைத்தியம் பார்த்தத்துடன்
வீட்டிலிருந்து நெல்லும் கோழியும் கொடுத்தனுப்புகிறாள். அப்படிப்பட்ட குணவதி திருமணத்துக்குப்
பிறகு மாறிவிடுகிறாள். கல்யாணம் நாச்சியாரம்மாவிடமிருந்து அவளது தாராள குணத்தை, கரிசனையைப்
பிரித்தெடுத்துவிடுகிறது. ‘ஏகாலிக்கும் குடிமகளுக்கும் சோறுபோட எழுந்திருக்கும்போது
முகம் சுளிக்கிறாள்‘, ‘குடுகுடுப்பைக்காரன் இப்பொழுதெல்லாம் அட்டகாசமாக வந்து எங்கள்
தலைவாசலில் வெகுநேரம் புகழ்வதில்லை’. இந்த மாற்றம் வெளியாட்களோடு மட்டும் இல்லை. கட்டினவனுமே
அவளிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை கவனிக்கமுடிகிறது. அவள் கவனம் முழுக்க ‘கணக்குப்
பார்ப்பதிலும்’, ‘ரூபாய் அணா பைசா’விலும்தான் மூழ்கியிருந்தது.
‘மணமாகி பத்து
வருஷமாகி குப்பை கொட்டியும் ‘மஞ்சம்மாவை’ அவனால் புரிந்துகொள்ள முடியலைதான்’ என்று
தொடங்கும் ‘ஓர் இவள்’ கதையும் பெண்களின் குணமாறுதல்களைச் சொல்வதே. ‘எதில் அவன் மனம்
லயித்தாலும் அதுக்கு ஒரு வகை எதிர்ப்பு இருக்கும்’ மஞ்சம்மாவிடம். வீட்டுக்கு ஆசையுடன்
கொண்டுவரும் வளர்ப்புப் பூனை, நண்பன் வீட்டு சமையல் ருசி, நீண்ட கூந்தல், வீட்டில்
விளையாடும் குழந்தை என்று எல்லாவற்றையும் குறித்து அவளுக்குள் அவ்வபோது எழும் எதிர்ப்பு
குணத்தை விவரிக்கும் இந்தக் கதை பெண்களின் மன உலகைத் துலக்க முற்படுகிறது.
எருமை மாடு மேய்க்க
சின்ன வயதிலேயே வீட்டுக்கு வந்தவள் பேரக்கா. சாப்பிடுகிற நேரம் தவிர எருமை மாடுகளின்
சாணமூத்திர வாடையில்தான் அவள் வாசம். ஊமை இல்லையென்றாலும் வாய் திறந்து அதிகம் பேசமாட்டாள்.
ராத்திரி பத்து பதினோரு மணிக்கு வீட்டு ஆட்கள் பூராவும் தூங்கிக் கொண்டிருக்க, பாட்டிக்கு
கால் அமுக்கிக்கொண்டிருப்பாள் பேரக்கா. கடேசியில் அவள் ‘போதும், நீ தூங்கப்போ’ என்று
சொன்னதுமே போய் படுத்துவிடுவாள். ஆனால், மூணு மணிக்கு தொழுவின் கூரைமேல் உட்கார்ந்திருக்கும்
சேவல் இறக்கைகளைப் படபடவென்று தட்டிச் சோம்பல் முறித்து ஒரு கொக்கரக்கோ சத்தம் கொடுத்ததுமே
பேரக்கா எழுந்துவிடுவாள். எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்யும் பேரக்காவை,
இன்னொரு வேலைக்காரனான குமரேசனுக்கு மணம் முடிக்கிறார்கள். கிராமமே மணப்பெண்ணுக்காகக்
காத்திருக்கிறது. பேரக்காவோ மயங்கி விழுகிறாள். என்ன ஏதென்று கேள்வியுடன் அனைவரும்
காத்திருக்க பாட்டியே வெளியே வந்து எல்லோரிடமும் சிரித்துக்கொண்டே சொல்கிறாள் “கழுதை.
ஒரு நாளாவது தலையில் பூ வைத்திருந்தாலல்லவா? இண்ணைக்கு சிங்காரிக்கும்போது பூ வாசம்
தாங்காமல் மயக்கம் போட்டுட்டுது.”
ஆண்களுக்கு ‘மச்சினி’களின்
மேலிருக்கும் மையலைச் சொல்லும் கதை ‘வால் நட்சத்திரம்’. பெண்களைக் கூர்ந்து கவனித்த
கி.ராவின் நுட்பம் மொத்தத்தையும் இந்த ஒரே கதையில் பார்க்க முடியும். ‘பெண் வளர்ச்சி
பசலைக்கொடி’ என்பார்கள். பெண்களின் வளர்ச்சியைப் பற்றி சொல்லும்போதும்கூட அவரால் விவசாயத்தை
விடமுடியவில்லை. ‘கேட்டவர்களுக்குத்தான் தெரியும் சோளப்பயிரின் வளர்ச்சி. மத்தியான
வெயிலில் செழித்த சோளப் பயிருக்குள் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும்போது பயிர் குருத்தை
இலைவிரிக்க வெளியே தள்ளும் சத்தம் நெருக் நெருக் என்று கேட்கும். நேற்றுப் பார்த்த
பயிர் இன்று ஒரு ஒட்டை வளர்ந்திருக்கும். பயிருக்குப் பக்கத்தில் போனால் ஒருவித சாராய
நெடி வீசும். இந்தப் பெட்டைப் பிள்ளைகளுக்கும் அப்படித்தான். அதுகளுக்கென்று ஒரு வளர்ச்சி;
அதுகளுக்கென்று ஒரு நெடி.’
மாமியார் மருமகளுக்கு
நடுவிலிருக்கும் உறவை சில வரிகளில் தெளிவுபடுத்திவிடுகிறது ‘பாம்பும் கீரியும்’ கதை.
‘கிராமத்து சராசரிப் பெண்கள் நடந்துகொள்கிறமாதிரியே அவர்களும் சந்தித்தவுடன் முதலில்
நாள் பூராவும் உட்கார்ந்து பேசித் தீர்த்தார்கள். மறுநாள் ஒருவர் தலையில் ஒருவர் பேன்
பார்த்தார்கள். மூணாவது நாள் பேசிக்கொள்ளாமல் உம் என்றிருந்தார்கள். நாலாவது நாள் எரிமலை
வெடித்ததுபோல சண்டையிட ஆரம்பித்துவிட்டார்கள்.’
மேகாட்டிலிருந்து
பருத்தி வெடிக்கும் காலத்தில் மட்டும் வந்து பருத்தி எடுக்க வரும் வலசைக்காரர்களில்
ஒருத்தியான பேச்சி, யாரோ ஒருவனால் ஏமாற்றப்பட்டு, கர்ப்பமடைந்து, பிள்ளைப் பெற்று,
பின் அதுவும் இறந்து, முழுக்க பித்தாகி சுடுகாட்டில் பிணங்களைத் தின்று கடைசியில் உடங்காட்டில்
நிலைகொண்டுவிடுகிற கதை துயரம் மிகுந்தது. ஆனால், கி.ரா அந்தக் கதைக்கு ‘பேதை’ என்று
தலைப்பிடும்போது அந்தத் துயரம் இன்னும் கூடுதலாகிறது.
‘புள்ளிக்காரி’
என சொல்லப்படும் காமம்மாவும் பசி தீர்ப்பவள்தான். இளவட்டுகளுக்கும் புகல் கிடைக்காத
வயசாளிகளுக்கும் ‘மற்ற’ அந்தப் பசியை தீர்த்து வைப்பவள். பலனை எதிர்பாராத ஒரு பரோபகாரமாக
அதைச் செய்பவள். கட்டினவன் அகாலமாய் செத்துப்போக பதினாறாம் நாள் விசேஷத்தின்போது வெள்ளைச்
சேலை கட்டமாட்டேன், கண்டாங்கிச் சேலைதான் கட்டுவேன் என்று தனித்துவம் காட்டியவள். பின்னாளில்
சிறிய காப்பிக்கடையோடு வாழ்க்கையை நடத்துபவள் கிராமத்துக்கு போலீஸாரால் ஆபத்து வரும்
நேரத்தில் காவல் தெய்வமாக நிற்கிறாள்.
கி.ரா வின் கதைகளிலுள்ள
பெண்கள் அசாதாரணமானவர்கள், அழகிலும் குணத்திலும். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம்
கி.ரா அவர்களது உடல் வனப்பைக் குறித்து சில வரிகளேனும் எழுதாமல் விடுவதில்லை. ‘பித்தளைக்குடத்தின்
கழுத்துமாதிரி அப்படி ஓர் அமைப்பான இடுப்பு’ (வால் நட்சத்திரம்), ‘அவளுடைய சிவந்த கால்களில்
குதிரைச் சதையில் குத்திய மீன் பச்சை அந்த மாலையின் மயங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது
அழகாக இருந்தது’ (குடும்பத்தில் ஒரு நபர்), ‘செவந்த ரெண்டு புஜங்களிலேயும் கைகளிலேயும்
பச்சைக் கோலங்கள், உச்சி வகுடு எடுத்த சுருட்டை முடியிலே ஊடு நரை (ஒவ்வொருத்திகளுக்கு
நரைகூட பொருத்தமாயும் அழகாகவும் இருக்கு’ (எங்கும் ஓர் நிறை), ‘விளக்கின் ஒளியில்தான்
அவள் எவ்வளவு அழகாகப் பிரகாசிக்கிறாள். அழகுக்கும் விளக்கின் ஒளிக்கும் ஏதோ சம்பந்தம்
இருக்கிறது. கறிக்கு உப்பைப்போல் அழகுக்கும் அதிருசி கூட்டுகிறதுபோலும் விளக்கு’ (கன்னிமை),
‘பிரம்மன் இதுவரை எத்தனைப் பெண்களைப் படைத்தும் இன்னும் அவனுக்குப் பெண்ணுக்கு நாடியை
அமைக்கத் தெரியவில்லை’ (மகாலட்சுமி),
அழகை மட்டும் அவர்
ஆராதிக்கவில்லை. ‘ஒருமாதிரி சுபாவம்’ கொண்ட பேச்சியின் அவலமான தோற்றத்தையும் விவரிக்கிறார்.
‘உடைமரத்தைப் போன்ற பறட்டை மயிர்த்தலை, இடுங்கிய, பூளைதள்ளிய இல்லிக் கண்கள், மழை பெய்து
நனைந்த பனைமரத்தைப் போன்ற கருப்பு நிறம், கருங்கோரைப் புற்களைப்போல மயிர் நீண்டிருக்கும்
வியர்வை ஓடும் கக்கங்கள், வங்குபடிந்த வெளிர் நிறங்கொண்ட கால்கள், அதில் குனிந்து நின்று
மூத்திரம் பெய்வதால் விழுந்த தெறிப்புகள்,
நைந்துபோன அழுங்கல் சிகப்பு நிறக் கண்டாங்கிச் சேலை; இவ்வளவு பிறவிக் கோரங்களுக்கு
மத்தியில், இயற்கை அவளுடைய மேலில் ஒரு விளையாட்டைக் காட்டியிருந்தது. கோயில் சிலைகளையெல்லாம்
விஞ்சக்கூடிய ஒரு அப்சரஸின் ஸ்தன்யங்களைப் பெற்றிருந்தாள் அவள்.’
பெண்களின் அழகை
மட்டும் அவர் உற்றுப் பார்க்கவில்லை, தனித்துவமான அவர்களது குணங்களையும் வாசனையையும்கூட
கூர்ந்து கவனித்திருக்கிறார். ‘துக்கத்தின் ஒரு கோடியிலிருந்து குதூகலத்தின் மறுகோடியை
உடனே எட்டித் தொடமுடிவது பெண்மைக்கே உரிய பாங்கு’ (கனிவு), ‘அந்த மேனியிலிருந்து பழுத்த
பெண்வாடை மனசை என்னவோ செய்தது’ (ஓட்டம்).
பெண்ணின் முகவாட்டத்தைச்
சொல்லும்போதுகூட ‘மேலேயிருந்து வந்துகொண்டிருந்த கண்ணாடி வெளிச்சத்தை ஒரு மேகம் கடந்தபோது
ஏற்பட்ட வெளிச்சக் குறைவு’ (புவனம்) என்றே கி.ரா குறிப்பிடுகிறார். நாச்சியாரம்மாவின்
குறட்டை, ‘பால் நிறைந்துகொண்டே வரும் பாத்திரத்தில் பால்நுரை மீது பால் பீச்சும்போது
ஏற்படும் சப்தத்தைப்போல மெல்லிய குறட்டை ஒலி (கன்னிமை).
இவை அனைத்தையும்
ஒரே கதையில் சொல்லவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதுபோல
அமைந்த கதை ‘பாரதமாதா’. கரிசல் காட்டுப் பெண்களின் பருவமாற்றங்களை வாழ்வை அவர்களின்
பாடுகளை ரத்தினச் சுருக்கமாக சொல்லும் இந்தக் கதையின் வழியாக கி.ரா ‘சௌந்தர்யாக்கள்
அனைவரும் ஒருவளே’ என்ற மேன்மையை சுட்டுகிறார்.
கம்மங்காட்டில்
குருவிகள் விரட்டும் ராமி, கணவனால் சுடுமணலில் கால் புதைத்து நிற்க வைக்கப்பட்ட செவத்தம்மா,
உடங்காட்டில் ராத்திரிகளில் அலையும் பேச்சி, பலாப்பழத்துக்கு ஆசைப்படும் சங்கரம்மாள்,
குருபூசை கொடுப்பதற்காய் காத்திருக்கும் சிவாமி ஆச்சி போன்று இன்னும்
பல கரிசல் காட்டுப் பெண்களின் பாடுகளை, துயரைச் சுட்டும் படிமமாக அமைந்திருக்கும் கதை
‘கண்ணீர்’. ‘ஊரின் அம்மன் சிலையின் கண்ணிலிருந்து கண்ணீர் துடைக்கத் துடைக்க வந்துகொண்டேயிருக்கிறது’
என்று கதை முடிகிறது. அந்த அம்மன் சிலையின் முகத்தில் கி.ராவின் கதைகளில் வரும் பெண்களின்
முகம் ஒவ்வொன்றும் பொருந்தி நிற்கிறது.
0
3
‘பாலியல் களஞ்சியம்’,
‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ என்று தனித் தொகுப்புகளாக வாய்மொழிக் கதைகளை கி.ரா தொகுத்திருக்கிறார்.
ஆனால், அவர் எழுதியிருக்கும் அபாரமான சில காதல் கதைகள் அவரது கரிசல் அடையாளத்துக்கு
அப்பால் மிக முக்கியமானவை. மனிதனின் ஆதார சக்தியான காமத்தை, அதன் புறவெளிப்பாடான காதலை
அவர் வெகு நுட்பமாக சில கதைகளில் அணுகியிருக்கிறார். அறியாப்பருவத்தில் கிளைக்கும்
ஈர்ப்பிலிருந்து இயலாப் பருவத்தில் அணையாது உயிர்க்கும் துடிப்பு வரையிலுமான தவிப்பை,
வாதையை, சிருங்காரத்தை தனக்கேயுரிய நகைப்புடன் வெளிப்படுத்தியுள்ளன இந்தக் கதைகள்.
‘மூணாம் பனி’யில்
கம்பங்காட்டில் காவலுக்கு இருக்கும் எட்டு வயது ராமிக்கும், பக்கத்துப் புஞ்சை முதலாளியின்
மகன் ‘சேக்காளி’ ராஜாவுக்கும் இடையிலான உறவு விளையாட்டுத் தோழமை என்றே தொடங்குகிறது.
பஜனைக் கோயிலில் வாங்கிய மாஜீனி கலந்த நெல் அவலை தினமும் அவளுக்குத் தருகிறான். ‘வரகு
வரகு’ சுற்றுவது, ‘சடுகுடு மலையிலே ரெண்டானை’, கண்ணாமூச்சி என்று சலிக்க சலிக்க விளையடுகிறார்கள்.
கம்மங்கொல்லையை நெருங்கும் படைக்குருவிகளை பரண் மீது ஏறி தகரத்தைத் தட்டி ஒலியெழுப்பி
விரட்டுகிறார்கள். நாட்டுப் பாடல், கல்யாணப் பாட்டெல்லாம் பாடி, ‘ராஜா ராணி’ கதை சொல்லும்
அவளை ராஜாவுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. திடீரென்று அவள் காணாமல் போகிறாள். பதினான்கு
வருடங்கள் கழித்து, ராஜாவுக்கு திருமணமான பின்பு, அதே கிராமத்தில் இடுப்பில் குழந்தையுடன்
ராமியை அவன் பார்க்கிறான். கல்யாண வீட்டுக்குப் போகிறான். அவர்களின் உபசாரத்துக்கு
நடுவே ஒரு காடி வண்டியில் குழந்தையுடன் உட்கார்ந்து இன்னொரு பெண்ணிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும்
ராமியைப் பார்க்கிறான். அவனால் அவளிடம் போய் பேசமுடியாது. கௌரவக் குறைச்சல். ‘உன்னைப்
பார்க்க வந்துவிட்டேன்’ என்ற அர்த்தத்தில் அவளைப் பார்த்து ஒரு புன்னகை செய்யலாம்’
என்று எண்ணுகிறான். ஆனால் அவள் அவன் பக்கமாய் திரும்பவே இல்லை. அவன் தன்னைப் பார்க்கவே
வந்திருக்கிறான் என்பது ராமிக்குத் தெரியும். ஆனாலும் அவள் அவன் பக்கமாய் பார்க்கவே
இல்லை. கலகலவென்று சிரிக்கிறாள். குழந்தையை முத்தமிடுகிறாள். கொஞ்சுகிறாள். எல்லாப்
பக்கமும் எல்லோரையும் திரும்பிப் பார்க்கிறாள், அவனைத் தவிர.
சிறுவயதில் விளையாடியதுபோலவே
இப்போதும் அவள் ‘விளையாடுகி’றாள். வேறெதுவும் செய்ய முடியாத நிலையில், தன்னை மறந்துவிட்ட
அவனுக்கு ராமி தரும் சிறு தண்டனைதான் அந்த விளையாட்டு. ‘நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்’
என்ற குறிப்பிடல். வேறெதையுமே வெளிப்படையாக சொல்லாமல் மனத்தின் ஆழத்துள் நிகழும் அழுத்தமான
சலனங்களை நுட்பமாகச் சொல்லியிருக்கும் கதை.
தையல் பழகுவதற்காக
நண்பனின் வீட்டில் வந்து தங்கியிருக்கும் பதினாலு வயது புவனம், வயதுக்கு மீறிய பொறுப்புடனும்
கனிவுடனும் நடந்துகொள்வது அவனை ஈர்க்கிறது. இருவரும் தனிமையில் இருக்க நேரும்போது பேசிக்
கொள்கிறார்கள். கிழிந்த அவன் சட்டைப் பையைத் தைத்துத் தருகிறாள். அவள் ஊருக்குப் போகப்
போவதாகவும் இனிமேல் இங்கு வரப்போவதில்லை என்றும் புவனா சொல்கிறாள். ஏன் அதை அவள் திரும்பத்
திரும்ப சொல்கிறாள் என்று அவனுக்கு அப்போது புரிவதில்லை. மறுநாள் அவன் ஊருக்குப் புறப்படும்போது
சொல்லிக் கொள்ளலாம் என்று பார்க்கும்போது புவனா அங்கில்லை. ‘மார்க்கெட்டுக்கு போயிருக்கா
காய்கறி வாங்க. வர கொஞ்ச நேரமாகும்’ என்று நண்பனின் மனைவி சொல்கிறாள்.
இளம் பெண்ணின்
மனத்துள் ஏற்படும் சிறு ஏக்கம், எதிர்பார்ப்பு, அதன் சாத்தியங்கள் குறித்த யோசனையின்மை,
எளிதில் அதைக் கடந்துவிடும் பக்குவம் என சின்னச் சின்ன ஆழங்களைத் தொட்டுக் காட்டியிருக்கும்
இதே கதையில் அதைக் கண்டுகொண்ட நண்பனின் மனைவி வெகு சாமர்த்தியமாக அந்தத் துளிர்ப்பை
வெட்டிவிடும் நுட்பத்தையும் அமர்த்தலாகச் சொல்லியிருக்கிறது.
சிறுவனிலிருந்து
இளம் பிராயத்தை எட்டும்போது ஏற்படும் இளைஞர்களுக்கு ஏற்படும் மன அவஸ்தை விளக்க முடியாதது.
யாரிடமும் பகிர முடியாமல், இன்னதென்று புரிந்துகொள்ள முடியாத ஒரு மனோநிலை. உடலிலும்
மனத்திலும் ஏற்படும் மாற்றங்களை நெருங்கியும் விலகியும் பார்க்க நேரும் பருவம். ‘இந்தப்
பிராயம் அவனைக் குடும்பத்திலிருந்தும் சூழலிருந்தும் அந்நியம் ஆக்கிவிட்டதுபோல’ வேம்புலு
உணர்வதை சொல்லும் கதைதான் ‘ஓட்டம்’.
முகத்தில பருக்கள்,
படிய மறுக்கும் தலைமுடி, தெல்லுக்காய் போல் திரண்டு கனமாகும் மார்பின் நுனிகள் என்று
தான் அசிங்கமாக மாறுவதை உணரும் அவனுக்கு எங்கும் இருப்பு கொள்வதில்லை. அப்பா வெடுவெடு
என்று விழுந்துகொண்டிருக்கிறார். அண்ணனின் அறைக்குள் போக முடிவதில்லை. தங்கையும் அவள்
தோழிகளும் இடத்துக்கும் செல்ல முடிவதில்லை. எல்லோரும் அவனை விலக்குகிறார்கள். சுப்பாலு
மதினிகூட முந்திமாதிரி இல்லை. மாவாட்டும்போது அவளிடமிருந்து வரும் பழுத்த பெண்வாடை
மனசை என்னவோ செய்கிறது. தடுமாற்றத்துடன் கோவில்பட்டிக்கு
போகிறான். எதிலும் மனம் ஒன்றுவதில்லை. அங்கிருக்கும் தெரிந்தவர் ஒருவரின் வீட்டை விசாரிக்கிறான்.
அடையாளம் கேட்கும்போது அவன் சொல்கிறான் ‘அவிழ்த்துப்
போட்ட தேர் நிற்கும்’ என்று. இந்த ஒரு வாக்கியத்தில் கதை மொத்தமும் திரண்டு நிற்கிறது.
திருமணம் முடிந்து
இளம் தம்பதியினருக்குள் மெள்ள மெள்ள ஏற்படும் நெருக்கத்தையும் அதிலிருந்து கிளைக்கும்
காமத்தின் ருசியையும் ‘கனிவு’ கதை விவரிக்கிறது. முன்பு முகம் பார்த்திராத கணவனுக்கு
முதுகு தேய்ப்பதில் தொடங்குகிறது தொடுகை. (அந்த சமூக வழக்கப்படி முதல் இரவு என்ற ஏற்பாடு
கிடையாது). மல்லம்மா தயிர் கடையும்போது வெண்ணெய் வாங்கித் தின்பதற்காக காத்துக் கொண்டிருக்கும்
குழந்தைகளுக்கு நடுவே பெரிய கனமான கையொன்று. நீட்டிய அந்தக் கைக்கு மல்லம்மா வெண்ணெய்
தராமல் அதன் கருஞ்சதையில் நறுக்கென்று பலமாக ஒரு கிள்ளு தருகிறாள். இரவில் படுத்திருக்கும்போது
அவள் பக்கமாய் கை நீண்டதற்கு அவள் கொடுத்த பதில் நகங்களால் சீய்ச்சப்பட்ட காயங்கள்.
சாப்பிடும்போது அந்த காயங்களின்மேல் அவள் நெய் வார்க்கிறாள். பிறகு நிலத்தில் சேர்ந்து
உழைக்கிறார்கள். ஒரு நாள் கருவமர நிழலில் சாப்பிட உட்காரும்போது மல்லம்மாவின் வியர்வை
வாடை அவனுக்கு மோகத்தைக் கிளர்த்துகிறது. அவளது கீழுதட்டில் உள்ள அழகான கரும்பச்சை
மச்சத்தைத் தொடப் போகிறான். அவள் கையைத் தட்டிவிடுகிறாள். முதல் கவளத்தை உண்ணச் சொல்லி
அவளிடம் நீட்டுகிறான். வாயருகே கொண்டுவரும்போது அவள் மறுக்கிறாள். கோபித்துக்கொண்டு
அவன் மறுபடி ஏர்பிடிக்கப் போய்விடுகிறான். அவளும் உண்ணாமல் களை பறிக்கச் செல்கிறாள்.
இப்படி அவள் நெருங்கும்போது அவன் ஊடி விலகுவதும் அவன் நெருங்கும்போது அவள் ஊடி விலகுவதுமாக
செல்கிறது காலம். பாம்பு கடிக்கிறது. வைத்தியர் ‘அக பத்தியம்’ காக்க வேண்டுமென சொல்லி
இருபது நாட்கள் பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள். பிறகு ஆடி மாதம் வருகிறது.
ஆவணியில் மீண்டும் அவள் திரும்பி வருகிறாள். குழந்தைகள் உட்பட எல்லோருமே புஞ்சைக்குப்
போயிருக்க சமையல் காரியங்களுக்காக மல்லம்மா வீட்டில். ஏதோ காரணம் சொல்லி அவன் வீட்டுக்கு
வர, ‘முதல் பகல்’ அமைகிறது.
ஆண் பெண் இருவருக்குள்
எதிர்பார்ப்புடனும் தவிப்புடனும் சேர முடியாத தடங்கல்களுக்கு இடையில் மெல்லக் கனியும்
காமத்தை அழகுடன் விவரிக்கிறது இந்தக் கதை.
இளம்பருவத்தில்
இப்படிக் கனிந்துவிட்ட காமத்தின் தேட்டம், பிள்ளைகள் பெற்று, வயதானபோதும் முடிந்துவிடுவதில்லை.
அருகில் கிடந்து கட்டிக்கொண்டிருந்த நாட்கள் முடிந்து காலவோட்டத்தில் உள்ளே இருந்த
படுக்கை திண்ணைக்கு வந்துவிடுகிறது. ஆசையுடன் அவளை அணுகும்போது அவள் எரிச்சல்படுவதை
முகம் சொல்லவில்லை என்றாலும் உடம்பு காட்டிக்கொடுத்துவிடுகிறது. ‘மரத்துப்போன கையைத்
தொட்ட மாதிரி’ இருக்கிறது. ‘பாவம் போகட்டும் என்கிற அனுதாபம், ரசிப்பு இல்லையென்றாலும்
பெண்மைக்கு உரிய சகிப்புத்தன்மை’ என்பதாய் சில இரவுகள் கழியும். ‘என்ன பிணைப்பு இது
சை என்று எரிச்சல் படுவதெல்லாம் அந்த சமயத்தோடு சரி.
முதநாள் ராத்திரியில்
தொடங்கும் காமம் மெள்ள மெள்ள உக்கிரம் கொள்வதை கி.ரா இப்படிச் சொல்கிறார் ‘உப்போடையில்
சேறு கலக்கி கையினால் மீன் பிடிப்பார்கள் கோடையில். குரவை மீன். இந்த உப்போடை மீனுக்கு
அப்படி ஒரு ருசி. மீன் கறியோ தேன் கறியோ என்று. முதன் முதலில் இறங்கி மீன் பிடிப்பவனுக்கு
வெறும் சந்தோஷமும் உடம்பில் சேறு பூசிக்கொண்டதுதான் மிச்சம். அடுத்த நாட்களில் பிறகு
இந்த ‘அப்புராணி ஆளுக்கு’ லச்சையை ஒதுக்கி வைத்துக்கொண்டு அவளே ஒத்துழைத்து வாத்திச்சியம்
பண்ண வேண்டியிருந்தது. அதுக்கப்புறம் நாலு மீன் அஞ்சு மீன் என்றுகூட ஆயிற்று தினோமும்.
அப்படி ஒரு காலம்.’
முதுமை அடைந்த
பின் ‘பிராயத்தில் அனுபவித்த தீனியை நினைத்து நினைத்து வியந்தும் ஏங்கியும்’ போகவேண்டிய
நிலை. இந்த இடத்தில் கி.ரா ஒரு கிராமியக் கதையைச் சொல்கிறார். நடுச்சாமத்தில் ஒரு கிழம்,
தன் கிழவி தூங்கிக் கொண்டிருக்கும் இடத்துக்கு தட்டுண்டு தடுமாறி போனதாம்.“ஓனே… ஓனே”
என்று அவளைக் கூப்பிட்டு “ஒரு சொட்டுகூட இருக்கோ இல்லை அரைச் சொட்டுதான் இருக்கோ. அது
என்ன மனுசனைத் தூங்கவிடுதா?” என்றதாம்.
‘இதனால் எம்புட்டு
சிறுமைப்பட்டு போறோம்’ என்று தவிக்கிறார் கிழம். அவளோ இப்போது பேத்தியை அல்லது வேலைக்காரியை
துணைக்கு வைத்துக்கொண்டு உள்ளே படுக்கிறாள். ஜன்னலைத் தட்டி மெள்ள அவளை எழுப்பி “வாடை
வெரைக்கி…” என்று சொன்னால் ஜன்னல் வழியாக உல்லன் போர்வையைத் தருகிறாள். திண்ணை மேல்
ஏறி அவள் சொந்தப் பெயரைச் சொல்லியே கூப்பிடுகிறார். விர்ரென்று தலைக்கு ரத்தம் ஏறும்
நேரத்தில்தான் சொந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார். இப்போதும் அவள் மசியவில்லை.
விடுவிடுவென்று
வெளியே போகிறார். குப்பை அள்ள வேலையாள் வரவில்லை என்று தெரிந்ததும் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு
போய் அம்பாரமாய்க் கிடந்த மண்ணை வெட்டி வெட்டி கூடையில் நிரப்பி அவராகவே தூக்கிக் குப்பையின்மேல்
வீசினார். நேரம் ஆக ஆக உடம்பு கொஞ்சகொஞ்சமாய் சுதாரித்தது. அலுப்பு விலகி ஒரு இதம்
தெரிந்தது. பிறகு ஆனந்தமும் ஒரு நிம்மதியும்கூட.
‘காலம் கடந்து’
என்ற இந்தக் கதை ‘கனிவு’ கதையின் இரண்டாம் பாகம். இரண்டு கதைகளுமே ஒரு நாணயத்தின் இரண்டு
பக்கங்கள்.
நகைப்புடன் கூடிய
கி.ராவின் மொழி, காமத்தின் நுட்பங்களைப் பேசும் இந்தக் கதைகளுக்கு கூடுதல் அழுத்தம்
சேர்த்துள்ளது.
0
கி.ரா என்றதுமே
நம் நினைவில் எழும் ‘கதவு’, ‘கோமதி’, ‘கிடை’, ‘வேட்டி’, ‘கன்னிமை’, ‘பேதை’, ‘நாற்காலி’
ஆகிய கதைகளைப் போலவே ‘கனிவு’, ‘காலங்கடந்து’ ஆகிய இரு கதைகளையும் முக்கியமானதாகக் குறிப்பிட
முடியும். கி.ரா கரிசல் மண்ணையும் அதன் சம்சாரிகளையும் பற்றி மட்டும் சிறப்பாக எழுதினார்
என்பதுடன் பெண்களை அவர் தன் கதைகளில் சித்தரித்திருக்கும் விதத்தையும் காதலை, காமத்தை
அணுகியிருக்கும் நுட்பத்தையும் சேர்த்தே அவரை வாசிக்கவேண்டும் என்பதையே மேற்சொன்ன கதைகள்
நமக்கு உணர்த்துகின்றன.
0
( அகரம் வெளியிட்டுள்ள
‘கி.ராஜநாராயணன் கதைகள்’ ( மூன்றாம் பதிப்பு டிசம்பர் 2004 ) என்ற தொகுப்பிலுள்ள கதைகளின்
அடிப்படையில் எழுதப்பட்டது இந்தக் கட்டுரை.)