கல்லூரி நாட்களில் சில கதைகளை எழுதியிருந்தபோதும் அவை பிரசுரத்துக்கு அனுப்பப்படவில்லை. கைப்பிரதியாகவே நின்று போயின. அவற்றில் ஒரு கதை இப்போது கிடைத்திருக்கிறது, கதையின் இறுதிப் பக்கம் மட்டும் இல்லாமல். 1994-95 ஆண்டுகளில் யூமா வாசுகி திருப்பூரில் இருந்த நாட்களில் ‘குதிரை வீரன் பயணம்’ இதழுக்காக ஒரு கதையை எழுதித் தரக் கேட்டார். அப்படித்தான் என்னுடைய முதல் சிறுகதையான ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’ 1995ம் ஆண்டு பிரசுரமானது. அதே சமயத்தில் ‘புதிய பார்வை’ மாத இதழில் நீலமலைத் தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டிக்காக ‘இருப்பு’ கதையை அனுப்பி அது பரிசும் பெற்றது. இலக்கியச் சிந்தனையின் தொகுப்பிலும் இடம்பெற்றது.
தொடர்ந்து வெவ்வேறு இதழ்களில் கதைகள் பிரசுரமாயின.
ஆரம்ப காலத்தில் எழுதிய ஒருசில கதைகளைத் தவிர பிற கதைகள் எவையுமே பிரசுரத்துக்காக காத்திருக்க
நேர்ந்ததில்லை. எழுதிய சில நாட்களிலேயே பிரசுரம் பெற்றுள்ளன.
கோவை ஐடியல் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர்
திரு.நஞ்சப்பன் அவரது பள்ளி வளாகத்தில் முக்கியமான பல இலக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன.
வண்ணதாசனின் கடிதங்களையும், மொத்தத் தொகுப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆண்டுதோறும்
புதிய நாவல் அல்லது சிறுகதைத் தொகுப்பை தனது ‘வைகறை பதிப்பகம்’ மூலமாக வெளியிட்டார்.
2000ம் ஆண்டுக்கான தொகுப்பை பரிந்துரைக்கும்படி நாஞ்சில்நாடனிடம் கேட்க அவர் என் சிறுகதைகளை
முன்மொழிந்தார். அவரே முன்னுரையையும் எழுதி எனது முதல் சிறுகதைத் தொகுப்புக்கு பெருமை
சேர்த்தார். பதினைந்து கதைகளைக் கொண்ட ‘பிறிதொரு நதிக்கரை’ வெளியானது.
2001ம் ஆண்டு சித்திரை முதல் நாளன்று நாஞ்சில்நாடனுடன்
நஞ்சப்பன் ஈரோட்டிலிருந்த எங்கள் வீட்டுக்கு வந்தார். ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு,
பழம், பூ ஆகிய மங்கலப் பொருட்களை வைத்து அவற்றுக்கு நடுவில் சிறுகதைத் தொகுப்பையும்,
பத்தாயிரம் ரூபாய் கொண்ட ஒரு உறையையும் வைத்து எனது பெற்றோர்களின் முன்னிலையில் என்னிடம்
கொடுத்தார். சிறுகதைத் தொகுப்பு வெளியான நாளிலேயே அதற்கான உரிமைத் தொகை சகல மரியாதைகளுடன்
எனக்குத் தரப்பட்ட அந்த நிகழ்வு இன்றும் எனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாக
என் நினைவில் இருக்கிறது.
1999ல் வெளியான ‘அம்மன் நெசவு’ நாவலைத் தொடர்ந்து
எழுதத் தொடங்கிய ‘மணல் கடிகை’யில் கவனம் குவிந்திருந்தபோதும் அவ்வப்போது சில கதைகளை
எழுதினேன். அவ்வாறு எழுதப்பட்ட 15 கதைகளைக் கொண்ட இரண்டாவது தொகுப்பான ‘முனிமேடு’
2007ம் ஆண்டு தேவதேவனின் முன்னுரையுடன் தமிழினி வெளியிட்டது. முதல் தொகுப்பைவிட இது
கூடுதல் கவனம் பெற்றது.
2007லிருந்து 2018 வரையிலான காலகட்டத்தில்
எழுதிய கதைகளைக் கொண்ட ‘சக்தியோகம்’ சிறுகதைத் தொகுப்பும், ‘வால்வெள்ளி’ குறுநாவல்
தொகுப்பும் கடந்த ஆண்டு வெளியாயின.
ஏற்கெனவே வெளியாகியுள்ள மூன்று தொகுப்புகளிலிருந்து
என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட .. சிறுகதைகளைக் கொண்டது இத்தொகுப்பு. கதைகளில் நான் முயன்றுள்ள
எல்லா பரிணாமங்களையும் வெளிப்படுத்தும்விதத்தில் இவற்றை தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
தொடக்கத்தில் திருப்பூரை பின்னணியாகக் கொண்ட
‘விளிம்பில் நிற்கிறவர்கள்’, ‘இலையுதிர் காலம்’, ‘மல்லி’, ‘இருப்பு’ ஆகிய கதைகளை இயல்பாகவே
எழுதியிருக்கிறேன். பின்னாளில் ‘மணல் கடிகை’ எழுதுவதற்கான தொடக்கமாக அமைந்த சிறுகதை
‘மல்லி’. திருப்பூரில் உழைக்கும் பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் அனுபவிக்க நேரும் சிக்கல்களை
அழுத்தமாக சொல்லும் இக்கதை இன்றும் வீரியம் குறையாமலே இருக்கிறது என்பதால் தொகுப்பில்
சேர்த்துள்ளேன்.
எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் மொழி சார்ந்த
ஈர்ப்பு இருந்ததை உணர்த்தும் சிறுகதைகள் சிலவற்றை எழுதியுள்ளேன். ‘கோட்டை’, ‘மண்வீணை’,
‘கையிலடங்காத தாமரை’ போன்ற கதைகளிலிருந்து ‘கஜாரிகா’ வை சேர்த்திருக்கிறேன்.
எனது குடும்பத் தொழிலான கைத்தறி நெசவாளர்களின்
பாடுகளையும் வாழ்நிலையையும் சொல்லும் கதைகள் என்னளவில் மிக முக்கியமானவை. இன்று இல்லாமலே
போய்விட்ட ஒரு தொழிலின் பண்பாட்டு புலத்தை இக்கதைகள் வரலாற்றின் பக்கங்களில் பத்திரப்படுத்தியுள்ளன
என்பது என் நம்பிக்கை. அவ்வாறு எழுதப்பட்ட ‘லச்சம்’, ‘தோஷம்’, ‘பிற்பகல் விளையும்’,
‘இறவாப் பிணி’, ‘மருதாணி’, உள்ளிட்ட கதைகளிலிருந்து ‘அக்காவின் கருப்பு வெள்ளைப் புகைப்படம்’,
’தோஷம்’ ஆகிய கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
வாழ்வின் சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் ஏற்படும்
அனுபவங்களை புரிந்துகொள்ள தர்க்க அறிவு துணைநிற்பதில்லை. அவ்வாறான நிகழ்வுகளும் அனுபவங்களும்
புதிரானவையாகவே எஞ்சிவிடுகின்றன. இத்தகைய திகைப்பை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை
‘கையிலடங்காத தாமரை’, ‘பிறிதொரு நதிக்கரை’, ‘முனிமேடு’, ‘பிறழ்வு’, ‘வலியின் நிறம்’
போன்ற கதைகள். காலப்போக்கில் வாசிப்பில் சுவை மங்காத இதுபோன்ற இதுபோன்ற கதைகளை தொடர்ந்து
ஏன் எழுதுவதில்லை என்ற கேள்வி எழுகின்றது. எனவே, ‘முனிமேடு’, ‘பிறிதொரு நதிக்கரை’ ஆகிய
இரண்டு கதைகளை தொகுப்பில் சேர்க்க முடிவுசெய்தேன்.
‘ஒற்றைச் சிறகு’ காலச்சுவடு இதழில் வெளியானது.
கதா அமைப்பினரால் தேசிய அளவில் சிறுகதைகளுக்காக வழங்கப்படும் ‘கதா’ விருதுக்காக
1999ம் ஆண்டு ஜெயமோகன் தமிழிலிருந்து பரிந்துரைத்த மூன்று கதைகளிலிருந்து இக் கதை தெரிவு
செய்யப்பட்டது. அந்த முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு தொகுப்பில் ‘ஒற்றைச் சிறகு’
இடம்பெறுகிறது.
மனித உறவுகள் சார்ந்தும் முக்கியமாக காமம்
குறித்துமான உளச் சிடுக்குகளை சற்றே திறந்துகாட்ட முனையும் விதத்தில் எழுதப்பட்ட கதைகள்
அதிகமும் கவனம் பெற்றுள்ளன. ‘இரவு’, ‘நிழல் பொழுதினிலே’ ஆகிய கதைகள் அவ்விதத்தில் முக்கியமானவை.
மனத்தின் ஆழங்களை நோக்கி அழைத்துச் செல்லவும்
விளங்கவியலா இருட்டினூடே சிறிய ஒளியைப் பாய்ச்சவும் விழையும் கதைகளிலிருந்து தெரிவு
செய்யப்பட்டவை ‘சக்தியோகம்’, ‘தருணம்’, ‘சூடக் கொடுத்தவள்’ ஆகிய கதைகள்.
ஒருசேர இந்தக் கதைகளை இன்று வாசிக்கும்போது
இன்னும் சில கதைகளை எழுதியிருக்க முடியும் என்றே நம்புகிறேன். காலப்போக்கில் என் கதைமொழியில்
ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் களங்களின் தேர்வில் நிகழ்ந்திருக்கும் முதிர்ச்சியையும்
கவனிக்க முடிகிறது. அந்த வகையில் இத்தொகுப்பு எனக்கு உதவியிருக்கிறது. எனது சிறுகதைகள்
குறித்த நிகழ்வொன்றில் ‘நல்ல கதைகளை எழுதியிருக்கும்’ நான் ‘பிரமாதமான கதைகளை எழுதவேண்டும்’
என்று கவிஞர் இசை குறிப்பிட்டார். நல்ல கதைகளிலிருந்து பிரமாதமான கதைகளை நோக்கிய முனைப்புக்கு
இத்தொகுப்பு தொடக்கமாக அமையும்.
கதைகளை வெளியிட்ட ‘சொல் புதிது’, ‘ஆரண்யம்’,
‘நிகழ்’, ‘காலச்சுவடு’, ‘இந்தியா டுடே’, ‘கதைசொல்லி’, ‘உயிர்மை’, ‘உயிரெழுத்து’, ‘மழை’,
‘அந்திமழை’, ‘சொல்வனம்’, ‘மலைகள்’, ‘தமிழினி’, ‘இடைவெளி’ ஆகிய இதழ்களை இத் தருணத்தில்
நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.
என் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகக் காரணமாக
இருந்தவர் நாஞ்சில்நாடன். எனது இலக்கிய ஆசான்களில் ஒருவரான அவரது நெருக்கமான நட்பும்
உரிய வழிகாட்டுதல்களும் இன்று வரையிலான எனது செயலாக்கங்களுக்கு ஆதாரங்களாய் அமைந்துள்ளன.
அவருக்கு இத்தொகுப்பை நன்றியுடன் சமர்ப்பிக்கிறேன்.
இந்த தொகுப்பை வெளியிட்டிருக்கும் தியாகு புத்தக
மையம் எனது கோவை வாழ்வில் முக்கியமான ஒரு இடமாகும். இங்கு நான் சந்தித்த முக்கியமான
நண்பர்கள் எனது வாசகர்கள், விமர்சகர்கள். அவர்களுடனான உரையாடல்கள் எனது வாசிப்புக்கும்
எழுத்துக்கும் உரம்சேர்த்துள்ளன. அவர்களால் வெளியிடப்படும் இத்தொகுப்பு இலக்கிய வாழ்வில்
முக்கியமானது. என் மீதும் என் எழுத்தின் மீதும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும்
பிரியத்துக்கும் நான் செய்யும் கைமாறு இன்னும் மகிழ்ச்சியளிக்கும் நம்பிக்கையளிக்கும்
விதத்தில் எழுதுவதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?
No comments:
Post a Comment