0
திக்கற்றோர்க்கு
----------------------
யாராவது
யாருடனாவது
இருக்கத்தான்
வேண்டும்
அப்படித்தான்
எலும்பில்
எழுதப்பட்டிருக்கிறது
அவன்
இவளோடும்
அவள்
இவனோடும்
அவன்
இவனோடும்
அவள்
இவளோடும்
அவர்கள்
இவர்களோடும்
அவர்கள்
அவர்களோடும்
தோள்
தேடுவதும்
மடி
சாய்வதும்
உயிரின்
அனிச்சை
ஆகவே
தழுவலின்
நகக்கீறல் சகித்து
யாராவது
யாரோடாவது
இருக்கத்தான்
வேண்டும்
பூமியில்
ஒருவரது பாத்தியதை
அழிக்கமுடியாதது
என்றாலும்
நேர்கிறது
யாரோ
ஒருவர்க்கு
யாருமே
இல்லாமல் போய்விடுவதும்
நாம்
தனிமை
பழகத்தான் வேண்டும்
கைவிடப்பட்ட
காட்டுக்கோவிலில்
வீற்றிருக்கும்
சிறுதெய்வத்தைப்
போல
0
குணா கந்தசாமியின் இந்தக் கவிதை உமா
மகேஸ்வரியின் நாவல் தலைப்பை நினைவுபடுத்துகிறது ‘யாரும் யாருடனும் இல்லை’. உண்மையில்
யாரும் யாருடனும் இல்லைதான். ஆதியிலும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். ஆதாமும்
ஏவாளும் ஒருவரையொருவர் காணும்வரையிலும் தனித்தனியாகத்தான் இருந்திருப்பார்கள். பின்
ஆதியிச்சையின் விளைவாக உயிர்கள் பெருகி ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நிலை உண்டாகியிருக்கும்.
உயிர்காத்தல், உணவு, உறைவிடம், உடைமை காத்தல் என்று சுயநலம் சார்ந்த தேவைகளுக்காய்
உருவான இந்த ஏற்பாடு குடும்பம், குழு, கூட்டம் என அமைப்புகள் உருவாக வழிவகுத்தது.
மற்றபடி விதிவிலக்கின்றி அனைவரும், விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும், அனுபவிக்க வேண்டிய ஒன்று தனிமை. அனுபவிப்பது என்றாலே சுகம், துக்கம்,
வாதை, வலி, இம்சை என்று எல்லாமும் இருக்கும். தனிமையை கொண்டாடுவோரும் உண்டு. தாளமுடியாதது
என்று அஞ்சுவோரும் உண்டு.
தனிமையை மிக எளிமையாக புரிந்துகொண்டிருக்கிறோம்.
யாரும் இல்லாமல் தனியாக இருப்பதுதான் தனிமை. மனிதர்கள் யாரும் உடனில்லாமல் இருந்துவிட்டால்
தனிமை வாய்த்துவிடுமா?
என்றால், தனித்திருக்கும்போது தனிமையில்
இருக்கிறோமா என்ற கேள்வி எழும். பயணம் செய்யும் அதே பெட்டியில் அடுத்தடுத்த இருக்கையில்
முன்பின் தெரியாதவர்கள் பலரும் இருக்கும்போதும் நாம் தனியாகத்தானே இருக்கிறோம். அதை
தனிமை என்று வகைப்படுத்த முடியுமா? தனித்திருப்பது வேறு, தனிமை வேறு.
‘இளையராஜாவின் இசையும் சுவையான காபியும்
என் தனிமையை அழகு செய்கின்றன’ என்று எழுதுவதைப் படித்திருக்கிறோம் அல்லவா?
தனிமை எத்தகையது? ஓசையற்றதா, நிறமற்றதா,
ஒளியற்றதா, எதற்கும் வசப்படாததா, வரையறைகளற்றதா? ஒலியையும் ஒளியையும் நிறத்தையும் மணத்தையும்
நீக்கிவிட்ட வெளிதான் தனிமையா? நீரும் நிலமும் காற்றும் நெருப்பும் கலந்து ஒன்றாகிப்போன
அந்தரவெளியா அது?
தனிமையை, தூய தனிமையை நேரடியாக சமாளிப்பதும்
அனுபவிப்பதும் அத்தனை எளிதல்ல. பொதுவாக தனிமையில் இசை கேட்க விரும்புவார்கள். வாசிக்க
முனைவார்கள். எழுதவும் சிந்திக்கவும் தனிமை தேவை.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடும்பத்துடன்
சுற்றுலா செல்வதுண்டு. நாங்கள் அண்ணன் தம்பிகள் நால்வர், நால்வரின் மனைவியர், பிள்ளைகள்
எண்மர் என்று பதினாறு பேர். கூடவே உறவினர்கள், குடும்ப நண்பர்களில் எவரேனும் சிலர்
சேர்ந்து கொள்வார்கள். ஒருமுறை அவ்வாறான ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டபோது ‘மனைமாட்சி’
நாவலின் இறுதிக்கட்ட வேலையில் இருந்தேன். வேலையை ஒத்திப்போட முடியாத நெருக்கடி. எனவே,
போகவேண்டாம் என்று தீர்மானித்தேன். மனைவியும் பிள்ளைகளும் புறப்பட்டுப் போனார்கள்.
திரும்பி வர நான்கு நாட்களாகும். அவர்கள் ஊருக்குப் போயிருக்கும் நேரத்தில் தொந்தரவு
இருக்காது, நாவல் வேலைகளை முடித்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், வீட்டில்
தனியாக இருந்த அந்த நாட்களில் எழுத மனம் குவியவேயில்லை. அந்த நேரங்களில் என்னைப் பெரிதும்
தொந்தரவு செய்தது வீட்டின் ஓசையின்மை. குடும்பத்தினர் வீட்டுக்குள் நடமாடும் ஓசையும்
சேர்ந்ததுதான் வீடு. சமையலறையில் பாத்திரங்களின் ஓசை, மிக்ஸி அரைக்கும் சத்தம், குழந்தைகளின்
சிரிப்பு, சண்டை, சிணுங்கல் எதுவுமில்லாமல் வீடு வெறும் கட்டடமாக மாறிப் போகிறது. அந்த
சத்தமின்மை பெரும் தொந்தரவாயிற்று. கவனத்துடன் வேலையில் ஈடுபட இயலவில்லை. வீட்டின்
சத்தங்களின் நடுவே உள்ள ‘தனிமை’யே எனக்கு உகந்தது என்று அறிந்துகொண்டேன்.
குணா கந்தசாமி இந்தக் கவிதையில் தனிமையை
வேறொன்றாக வரையறுக்கிறார். உறவுகளற்றுப் போகும் நிலையை அவர் தனிமை என்கிறார். அவை உவப்பான
உறவுகளாய் இல்லாமல் இருக்கலாம். கூடிக் களித்து மகிழ்ந்திருந்தபோதும் சில வேளைகளில்
போட்டியோ பொறாமையோ சிறு சண்டையோ வாக்குவாதமோ ஏற்பட்டிருக்கலாம். கணவன் மனைவி, நட்பும்
சுற்றமும், அண்டை அயலார் என எல்லா உறவிலும் இணக்கமும் பிணக்கும் இருக்கத்தான் செய்யும்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒட்டி உறவாடிய ஒன்று இல்லாதபோது வாய்த்துவிடுவது
தனிமை என்கிறார். அவ்வாறான ஓர் தனிமை தவிர்க்க முடியாதது. என்றேனும் ஓர் நாள் எல்லோரும்
சந்திக்கத்தான் வேண்டும். அதைப் பழகத்தான் வேண்டும்.
இப்படி ஓர் வரையறைக்குப் பிறகு ஒரு வரியை எழுதி முடிக்கிறார் குணா
கந்தசாமி.
தனிமை
பழகத்தான் வேண்டும்
கைவிடப்பட்ட
காட்டுக்கோவிலில்
வீற்றிருக்கும்
சிறுதெய்வத்தைப்
போல
இந்த இறுதி வரியின் ஒவ்வொரு சொல்லும்
தனிமையின் வீரியத்தை தீவிரத்தை சுட்டுகின்றன. கைவிடப்பட்ட ஒரு கோவில் என்று நில்லாமல்
‘காட்டுக் கோவில்’ என்று துல்லியப்படுத்தும்போது அழுத்தம் கூடுகிறது. அங்கிருப்பது
ஒரு தெய்வம் என்று நிறுத்தவில்லை. அதுவொரு ‘சிறுதெய்வம்’ என்று உருப்பெருக்கியால் இன்னும்
நெருக்கமாகக் காட்டுகிறார். கைவிடப்பட்ட காட்டுக்கோவிலில் வழிபாடும் இல்லை, ‘வீற்றிருக்கு’ம்
சிறுதெய்வத்துக்கு படையலும் இல்லை. கோவிலும் சிறுதெய்வமும் தனிமை பழகிக் காத்திருக்கத்தான்
வேண்டும்.
எனக்கென்னவோ தனிமை காற்சங்கிலியிட்டு
கற்தூணில் கட்டப்பட்ட களிறென்றே எண்ணத் தோன்றுகிறது.
அவரவர் தனிமைக்கு ஆயிரம் அர்த்தங்கள்.
0
நன்றி - குணா கந்தசாமி

