Friday, 8 December 2017

மணல்கடிகை - கடுகி நகரும் காலம் - சுரேஷ் பிரதீப்

வாசிப்பு பழக்கம் உடைய நண்பர்கள் பலர் இப்போது அறிமுகமாகத் தொடங்கி இருக்கின்றனர். சிக்கல் என்னவெனில் அவர்கள் ஏதேனுமொரு கருத்தியல் நிலைப்பாடு (மார்க்ஸியம் தலித்தியம் பெண்ணியம் தமிழியம்...இப்படி) கொண்டவர்களாக அது சார்ந்து வாசித்தவர்களாக இருக்கின்றனர். ஆகவே இலக்கியம் குறித்து விவாதிக்க நேரும் போதெல்லாம் தங்கள் கருத்தியலுக்கு அது முட்டு கொடுக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். உதாரணமாக கம்ப ராமாயணம் குறித்தோ மகாபாரதம் குறித்தோ ஏதேனும் சொல்ல நேர்ந்தால் தமிழியர்களிடமும் திராவிடர்களிடமும் ஒரு சுருங்கல் உருவாகிறது. ஏனென்று கேட்டால் "அவை இங்கு நடைபெறவில்லை" என்பது போல பதில் கிடைக்கும். ஒருவேளை ராமனும் கிருஷ்ணனும் ஹிந்தி பேசினார்கள் என்றுகூட சொல்லிவிடுவார்களோ என ஐயுறுவேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட காவியங்களில் கூட "நில" அடிப்படையில் நம்மவர் அயலவர் என்று பாகுபாடு பார்க்கும் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் மனிதர்கள் வாழும் நிலம் தினம்தினம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒன்று சட்டையை உரித்துக் கொள்வது போல நிலம் தன் முகத்தை மாற்றிக் கொள்கிறது அல்லது கைவிடப்படுகிறது. நிலமாக அல்லது அந்த சூழலாக நம் மனதில் நீடிப்பது அங்கு வாழ்ந்த மனிதர்கள் தங்களுடைய லட்சியங்களால் கனவுகளால் மேன்மைகளால் கீழ்மைகளால் நமக்குத் திரட்டித்தரும் முழுமை நோக்கு மட்டுமே. அப்படித் திரளும் நோக்குகளை மோதவிட்டும் விவாதித்துமே நாம் நம்முடைய இன்றுக்கான நியதிகளை வகுத்துக் கொள்கிறோம்.

அவ்வகையில் சுதந்திரத்திற்கு பிறகான இந்திய நிலத்தின் முகம் பலவாறாக மாறியிருக்கிறது.  நவீன விவாசய முறைகளால் புதுப்புது தொழில்களின் வாய்ப்புகளின் வருகையால் நோய்க்கட்டுப்பாட்டு முறைகள் இறப்பு விகிதத்தை குறைத்திருப்பதால் என நம் நிலங்களின் முகமாற்றத்தை பல்வேறு காரணிகள் துரிதப்படுத்துகின்றன. இந்த பிரம்மாண்டமான மாற்றத்தை அபுனைவுகளாக நிறைய எழுதி வைத்திருக்கிறார்கள். அவை தரவுகளாக கட்டிடங்களின் எண்ணிக்கையாக நிகர வருமானமாக நம் கண்களுக்குத் தெரிகின்றன. ஆனால் இந்த மாற்றங்களால் மனிதன் அடைந்தது அல்லது இழந்தது என்ன என்பதை அதிகாரமும் கருத்தியலும் கட்டுப்படுத்தும் தரவுகள் நம்மிடம் சொல்லிவிட முடியாது. அதைச்சொல்ல மாற்றங்கள் நடைபெறும் சூழலில் வாழ்ந்த அல்லது அச்சூழலை அறிந்த ஒரு புனைக்கதையாளன் தேவை. மாற்றங்களின் பெறுமதியை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ வாசகனுக்கு கொடுக்காமல் தான் விரிக்கும் களத்தின் வழியே அவனே உணர்ந்து கொள்ளுமாறுச் செய்யும் ஒரு புனைவு வடிவமும் தேவை.

தொன்னூறுகளுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தில் நாவல் முக்கியத்துவம் பெறும் வடிவமாக மாறியிருப்பதையும் நாவலின் வடிவம் குறித்த விவாதங்கள் பெருகி இருப்பதையும் வைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்களை அதன் பிரம்மாண்டம் குறையாமல் சொல்ல ஏற்ற வடிவம் நாவலே என்று சொல்லிவிட முடியும். யதார்த்தவாத புனைவுகளும் தொன்னூறுகளுக்குப் பிறகே பெருகத் தொடங்கின. சு.வேணுகோபல், ஜோ.டி.குருல், ராஜ் கௌதமன் என தாங்கள் கண்டுணர்ந்த ஒரு வாழ்வை நவீனக் கல்வி கொடுத்த தெளிவும் சமநிலையும் அதேநேரம் கூர்மையான விமர்சனங்களும் நிறைந்த பார்வையுடனும் முன்வைக்கும் யதார்த்தவாத படைப்பாளிகள் புத்தாயிரத்தில் தமிழ் இலக்கியத்தில் வலுவான பாதிப்பினைச் செலுத்துகின்றனர். 

எம்.கோபாலகிருஷ்ணன் அவ்வகையில்  வேறொரு வாழ்க்கையை சொல்லப்போனால் நாம் அனைவருக்கும் தொடர்பிருக்கும் அதேநேரம் அனைவருமே கவனிக்கத் தவறிய ஒரு வாழ்வை முன் வைக்கிறார். 

*******

"தொழில் வளர்ச்சியும் கலாச்சார வளர்ச்சியும் எதிரெதிர் திசையில் பயணிக்கும் திருப்பூர் நகரத்தை இந்த நாவல் களமாக மட்டுமே கொண்டுள்ளது. மற்றபடி இது திருப்பூரைப் பற்றிய நாவல் அல்ல; மனிதனைப் பற்றியது."

நூலின் முன்னுரையில் ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார். தமிழகத்தின் முக்கியமான தொழில் நகரமான திருப்பூர் அதன் பாரம்பரிய நெசவுத்தொழிலில் இருந்து மீண்டு நவீன நெசவுமுறைகளையும் அதன் காரணமாக புதிய வாய்ப்புகளையும் அடையும் ஒரு காலகட்டத்தில் நாவல் நடைபெறுகிறது. உத்தேசமாக 1975 முதல் 2003 வரை. சிவராஜ், பரந்தாமன், அன்பழகன், திருச்செல்வன், சண்முகம் என ஐந்து நண்பர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்து சைக்கிளில் பேசிக் கொண்டு வருவதுடன் நாவல் தொடங்குகிறது. ஆறு பகுதிகள் கொண்ட இந்த நாவலில் ஒவ்வொரு பகுதியின் முதல் அத்தியாத்திலும் இந்த நண்பர்கள் தங்களுடைய வெவ்வேறு வயதில் திருப்பூருக்கு வெளியே பயணிக்கின்றனர். இந்த பயணங்களுக்கு இடையேயான மனிதர்களின் வாழ்வே நாவலாக விரிந்துள்ளது. நண்பர்களின் சந்திப்பு நாவலுக்கு ஒரு மெல்லிய புறச்சட்டகத்தை அமைக்கிறது. ஆனால் கதைக்களத்தில் எல்லாப் பக்கங்களிலும் மிக அடர்த்தியாகவே நகர்கிறது. 

யதார்த்தவாத படைப்புகளைப் பொறுத்தவரை அவை மனிதனின் கதையையே சொல்கின்றன. பின் நவீனத்துவம் மனிதனை அவனை இயக்கும் எல்லா காரணிகளாலும் அலைகழிக்கப்படுகிறவனாக சித்தரிக்கிறது. சாதாரணமாக கதைகள் நமக்குள் விதைக்கும் நீதியுணர்ச்சிக்கும் அறவுணர்வுக்கும் அப்பால் சென்று இந்த அலைகழிப்புகள் வழியாக மனிதன் உண்மையில் அடையக்கூடியவற்றை இவ்வகை படைப்புகள் சுட்டி நிற்கின்றன. 

சிவா அவனை விட மூத்தவளான உமாவின் மீது கொள்ளும் ஈர்ப்பு அன்பழகனின் உழைத்தாக வேண்டிய கட்டாயம் பரந்தாமனின் ஒருவகையான விட்டேத்தித்தனம் பாதுகாப்பான குடும்பத்தில் வளர்க்கப்படும் திருச்செல்வனின் நிலை கவிதையில் ஈடுபாடுடைய சண்முகத்தின் அலட்சியம் என்று தொடங்குகிறது நாவல். திருப்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்களை எல்லாப் பக்கங்களும் பிரதிபலிக்கின்றன. பரிவும் காமமும் வெறுப்பும் பொறாமையும் மனிதர்களிடம் நிறைந்து கொப்பளிக்கின்றன. நின்று நிதானிக்க நேரமில்லாத ஒவ்வொரு நொடியும் உழைப்பு பணமாக மாறிக் கொண்டிருக்கும் வாழ்வை அதே விரைவில் செல்லும் மொழி பிரதிபலிக்கிறது. தறிக்குழியில் உழைத்துக் கொட்டுகிறவர்கள் மெல்ல மெல்ல கம்பெனிகள் நோக்கி நகர்கின்றனர். பெண்கள் அதிகமாக வேலைக்கு வரும் சூழலில் மரபான கட்டுமானங்கள் சிதைந்து காமமும் உறவின் நிலைப்பாடுகளும் மாறுவதை மிகத்தெளிவாக சுட்டி நிற்கிறது இப்படைப்பு.

எம்.ஜி.ஆர் ரசிகையாக சுட்டப்டடும் உமாவின் மீது உடல் ரீதியான ஈர்ப்பும் குற்றவுணர்வும் கொண்டு தள்ளாடுகிறான் சிவா.  முதல் பகுதியின் மிகச்சிறப்பான அத்தியாயம் எம்.ஜி.ஆரை கண்ட அனுபவத்தை உமா சிவாவிடம் விவரிப்பதே. ஆனால் திறனற்ற கணவனால் அவள் உடல் மற்றொரு முதலாளிக்கு கைமாறிப் போகிறது. உமாவின் இறப்போடு முதல் பகுதி முடிகிறது. 

உமாவின் மீது அவ்வளவு ஈர்ப்புடன் இருந்த சிவா அவளை அந்த நிலைக்குத் தள்ளிய ரத்தினவேல் செட்டியாரின் வழியாகவே தொழில் முன்னேற்றம் அடைவது இந்த நாவல் உருவாக்கும் முதல் சிக்கல். யதார்த்தம் முகத்தில் அறையும் தருணம் இது. உமா குறித்த குற்றவுணர்வு சிவாவிடம் நாவல் முழுவதும் தொடர்கிறது. உடல் தேவைக்கென மட்டுமே பெண்களை பயன்படுத்திக் கொண்டு விலகுகிறான் சிவா. அவனது உழைப்பும் தெளிவும் அவனுக்கு முன்னேற்றத்தை அளிக்கின்றன. அவனினும் தொழில்திறன் மிக்கவனான அன்பழகன் ஒவ்வொரு முறையும் சருக்கி விழுகிறான். இறுதிவரை சிவாவின் மீது தொடரும் அவனது பொறாமை மற்றொரு வகையான சிக்கலை நாவலுக்குள் உருவாக்குகிறது. உறவினை பேண முடியாமல் முதல் மனைவியைப் பிரிந்து இரண்டாவது மனைவியும் தற்கொலை செய்து கொள்ள வெளிநாட்டிற்கு பயணிக்கிறான் பரந்தாமன். நேர்மையும் அன்பும் கொண்ட ஊசலாட்டம் நிறைந்தவனாக வாழ்வின் மீதான நம்பிக்கையை இழக்காதவனாக வருகிறான் திருச்செல்வம். சண்முகம் பெண்கள் மீதும் கவிதையின் மீதும் நாட்டம் கொண்டு தள்ளாடுகிறான். 

திருப்பூர் தொழில் நகரமாக உருமாறுவதை நாவல் மிக அற்புதமாக காட்சிப்படுத்துகிறது. பெண்கள் மரபான வேலைகளை கைவிட்டு இடுங்கலான ஆண்களுடன் நெருக்கமாக வேலை செய்ய வேண்டிய இடங்களில் இயல்பாகவே நடக்கக்கூடிய மீறல்களும் சுரண்டல்களும் நாவல் முழுவதுமே நிறைந்துள்ளன. உமாவின் மீது திணிக்கப்படும் வன்முறையும் தன்னுடைய துடுக்கால் அறியாமையால் அவள் அதை ஏற்கும் பரிதாபாமும் பரிதவிக்கச் செய்ய விமலா அருணா பூங்கொடி சியாமளா என அந்தப் பட்டியல் நீண்டபடியே செல்கிறது. எந்திரங்களில் சிகை மாட்டி அழகிழப்பவர்கள் உடை தூக்கப்பட்டு குறுகி நிற்பவர்கள் என புதுப்பணிச் சூழலில் பெண்கள் அனுபவிக்கும் துயர்களால் நிறைந்துள்ளன நாவலின் பல பக்கங்கள் . இந்த நாவல் பதிக்கும் வலுவான தடங்களில் இதுவும் ஒன்று. காமமும் வெற்றிக்கான போராட்டமும் வென்றதை நுகரும் வெறியும் நுகர்வில் திருப்தியுறாத வெறுமையும் என நிறைந்து நகரும் பக்கங்களில் பெண்கள் உயிர்ப்புடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். ரத்தினவேல் செட்டியார் சுப்ரமணியன் சிவா பரந்தாமன் என அத்தனை பேரும் பெண்களால் அவர்களை புரிந்து கொள்ள முனைவதால் துன்புறுகின்றனர். பொருளாதார வாய்ப்புகள் பெண்கள் முட்ட வேண்டிய எல்லைகளை அவர்களுக்கு தெளிவாக உணர்த்த அதை மோதி பலியாகும் விமலா சுயம் பற்றிய தெளிவின்மையால் மறிக்கும் உமா விட்டேத்தியாகிவிடும் அருணா தெளிவாக தன் வாய்ப்புகளை உணர்ந்து முன்னேறும் சித்ரா என வெவ்வேறு வண்ணங்களிலான பெண்கள் வந்தபடியே இருக்கின்றனர்.

பொதுவுடைமைச் சித்தாந்தங்களும் ராஜாமணி பரமானந்தம் போன்ற கதாப்பாத்திரங்களின் வழியாக விவாதத்திற்குள் வருகின்றன. அது தேய்ந்து பின் செல்வதையும் நாவல் சொல்கிறது. ரத்னவேல் செட்டியாருக்கும் சுப்ரமணியனுக்கும் திருப்பூரின் வளர்ச்சி குறித்து நடைபெறும் விவாதங்கள் ஒன்றையொன்று மறுக்க முடியாத கூர்மையுடன் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. பரந்தாமன் டீ வாங்கிக் கொடுக்கும் சிறுவன் தொடங்கி பேருந்தில் இருந்து இறங்குபவனை அழைத்துச் செல்லும் மாதவன் வரை வெவ்வேறு ஊர்களில் இருந்து பிழைப்பு தேடி வருபவர்களை காட்டிக் கொண்டே இருக்கிறது இப்படைப்பு.  உண்மையில் தமிழகத்தின் உட்கிராமங்கள் அனைத்துடனும் ஒரு உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட ஊர் திருப்பூர்.  உட்கிராமங்களில் பிறந்த பல இளைஞர்களுக்கு முதல்மாத சம்பளம் அளித்த ஊராக திருப்பூர் இருந்திருக்கிறது. குறைந்திருந்தாலும் இன்றும் அது நீடிக்கிறது. தன் ஊரில்  படிப்பும் இன்றி தொழில் திறனுமின்றி அலையும் இளைஞர்களை திருப்பூருக்கு முந்தைய தலைமுறையில் வேலைக்கு வந்தவர் வேலைக்கு அழைத்து வருவது சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

********

நாவலின் அடிப்படை அம்சங்களில் ஒன்று அது நம்முள் உருவாக்கும்  காலம் மீதான பிரக்ஞையே. பெரும்பகுதி சலிப்பாக நகரும் வாழ்வை அடர்த்தியும் தீவிரமும் நிறைந்த தருணங்கள் வழியாக காவியங்கள் கட்டமைத்துக் காட்டின. அந்த உச்சங்களில் அகம் அடையும் சஞ்சலங்களும் உச்சங்கள் வாய்க்கப்பெற்றவர்களுக்கே உரித்தான  மகத்துவமும் தீமையும் மட்டுமே காவியங்களின் இலக்கு. ஆனால் ஒரு நவீன நாவல் அந்த உச்சங்களில் பயணிக்க முடியாது. அதை எழுதுகிறவனும் அதன் வாசகனும் உச்சங்களில் சஞ்சரிப்பவர்கள் அல்ல. அதேநேரம் உச்சங்களை கற்பனை செய்ய முடியாதவர்களும் அல்ல. இவ்விரு எல்லைகளுக்கு நடுவில் தான் நாவல் பயணிக்கிறது என்பது என் எண்ணம். 

உச்சங்களுக்கும் அன்றாடத்திற்கும் இடையே தொடர்ச்சியாக வெற்றிகரமாக மணல் கடிகை பயணிக்கிறது. நாவலில் எனக்கு குறையாக தென்படுவது அதன் விரைவு தான். நிதானிக்க அவகாசம் அற்ற ஒரு வாழ்வை சித்தரிக்க விரைவான ஓட்டம் பொருத்தமானதாக இருந்தாலும் பெரும்பாலான அத்தியாயங்கள் சில பக்கங்களிலேயே முடிந்து விடுவது கற்பனையைத் தடுக்கிறது. சண்முகம் தன் மனைவியின் வழியாக சென்றடையும் ஒரு வீழ்ச்சி நிலையும் பரந்தாமனின் துயர்களும் இன்னும் விரிவாகவே சொல்லப்பட்டிருக்கலாம். குறைத்துச் சொல்வது நாவலுக்கு அவசியமெனினும் இவ்விரு கதாப்பாத்திரங்களும் தேவைக்கு அதிகமாக குறைக்கப்பட்டுள்ளன. 

நெருக்கடிகளும் தேடலும் கொண்டவனாக அதேநேரம் சுயநலமும் விலக்கமும் நிறைந்தவனாக சித்தரிக்கப்பட்டுள்ள சிவா தான் இந்த நாவலின் மிக வெற்றிகரமான சித்தரிப்பு. பாலத்தின் அடியில் அமர்ந்திருக்கும் பைத்தியம் குடுமிச்சாமி என சிறுசிறு பாத்திரவார்ப்பில் கூட கைகூடிவரும் முழுமை ஒரு முழுமையான நாவலை வாசித்த நிறைவை அளிக்கிறது. 

நிலங்களும் மாற்றத்தின் தருணங்களும் காலத்தில் நகர்ந்து பின்செல்லக்கூடியவை. அந்த மாற்றத்தை எதிர்கொண்ட மனங்களின் துயரும் உத்வேகமும் கொண்டாட்டங்களுமே நம்மை வந்து சேர்கின்றன. அவ்வகையில் திருப்பூர் தொழில் நகரமாக எழுகிறது எனும் நிமித்தத்தின் வாயிலாக மணல் கடிகை காலத்தை அதை உணரும் மனித அகத்தை மிக வெற்றிகரமாக பிரதிபலிக்கிறது. 

No comments:

Post a Comment

நூல் நாடி, நூல்முதல் நாடி… விஜயா வேலாயுதம்

  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கோவை போன்ற ஒரு பெருநகரத்தில் சிறிய அளவில் மளிகைக் கடை நடத்தியவர்களின் கனவு ரெங்கே கவுடர் வீதியில் உள்ளதுபோல மொ...