Sunday 2 January 2022

‘உலையில் போட்ட சிலுவை’ ஜெ.பிரான்சிஸ் கிருபா (1974-2021)




….

எனினும் அவன் இறந்துவிட்டான்

அவன் பாவங்கள் அநாதையாகிவிட்டன

0

‘மெசியாவின் காயங்கள்’ தொகுப்பை வெளியிட்டுப் பேசவேண்டும் என்ற கோரிக்கையுடன் அத்தொகுப்பின் திருத்தப்படாத பிரதி வந்து சேர்ந்தபோதுதான் ஜெ.பிரான்சிஸ் கிருபா என்ற பெயர் எனக்கு அறிமுகமாகிறது. கவிதைகளை வாசிப்பதற்கு முன்பே இனந்தெரியாத ஒரு பதற்றத்தை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது தொகுப்பின் தலைப்பு. அவரது கவிதைகள் ஏற்படுத்தும் பதற்றத்துக்கும் கிருபாவுக்கும் பாரதூரமான வித்தியாசம். ஆனாலும் அவரது கவிதைகளும் ‘கன்னி’ நாவலும் ஏற்படுத்திய பதற்றத்தை இப்போதும் உணரமுடிகிறது.

அத்தொகுப்பில் இருக்கும் நான்கு வரிக் கவிதை ஒன்று கிருபாவை எனக்கு அடையாளம் காட்டியது. இன்று அந்தக் கவிதைதான் அவரை அடையாளப்படுத்தும் கவிதையாகவும் அமைந்திருக்கிறது.

சிலிர்க்கச்  சிலிர்க்க அலைகளை மறித்து

முத்தம் தரும்போதெல்லாம்

துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து

அப்பறவைக்குத் தருகிறது

இக்கடல்

 

நவீன தமிழ்க் கவிதையின் வழக்கமான போக்கிலிருந்து மாறுபட்ட ஒரு பாணியிலானவை அவரது கவிதைகள். வயிற்றில் இறங்கும் கத்தியை தலை தூக்கி எட்டிப் பார்க்கும் ஆமையின் கண்களில் மெசியாவின் கண்களைக் காணும் முதல் கவிதையிலேயே இத்தன்மையை உணர முடிந்தது. அவமானம் மிகுந்த இரவில், வானத்தை பூமியில் வைத்து சூதாடக் கூடாது என்ற குரல் அசாதாரணமானது. ‘கட்டி முடித்த கண்ணாடித் தீவிற்கு விளக்கேற்றுகிறது விடிவெள்ளியின் முகம்’ என்பதுபோல எதிர்பாரா கணங்களில் வியப்பையும் விநோத அனுபவங்களையும் சாத்தியப்படுத்துவது.  

கிருபாவின் கவிதை மொழி தன்னிச்சையானது. தடையேதுமற்று பெருகி நிறைவது. ஒன்றையடுத்து ஒன்றாக சொற்கள் தாமாக வந்தமையும் வித்தைகொண்டது.

 

சொற்களிலிருந்து அர்த்தங்கள்

மௌனத்துக்குத் திரும்பும் வழி இது

 

என்ற வரிகளை மந்திரம்போல் ஒலிக்கச் செய்வது அவற்றில் உள்ள எளிமையும் அடர்த்தியுமே.

 

மிளகிலுள்ள மேடுபள்ளங்கள்

கடுகில் இல்லை.

கடுகிலுள்ள கள்ளச்சுவை

மிளகில் இல்லை.

குலையில் தொங்கும் திராட்சை

ஒரு கூட்டுக் கனவு.

அதிகாலையில் உதிரும் நாவற்பழங்கள்

இரவின் துளிகள்

 

என நகரச் சாலையோரத்தில் இரை தேடும் எலியின் கண்களை ஒப்புமைப்படுத்தும் இந்த வரிகளும் இதனுள் அமைந்த சொற்களும் சேர்ந்து சாத்தியப்படுத்தும் தனித்துவமான அனுபவத்துக்கான இன்னொரு காரணம் இதில் உள்ளார்ந்து ஒலிக்கும் சொற்களின் இசை. கிருபாவின் பல கவிதைகளிலும் இந்த இசையை அதன் துடிப்பை உணர முடியும்.

 

பாறையின் மீது தூவிய

தானிய மணிகள்

பட்சிகளாக முளைத்து

வளர்ந்து பறவைகளாகி

வானேகிப் போகும் கணத்தை

எப்போதேனும் காண சித்தித்தால்

அப்போது அங்கே

நீயின்றி நின்றிருப்பாய் நீ.

 

சொற்களும் அவற்றின் இசையும் சேர்ந்து ஒரு காட்சியை கவிதைக்குள் வரைந்து காட்டுகின்றன. கவிதையின் கடைசி சொல் ஒலித்து முடிந்ததும் அந்தக் காட்சி மட்டும் எதிரில் இருக்க சொற்கள் காணாமல் போய்விடும் அனுபவத்தை இக்கவிதையில் அடைய முடியும்.

 

கிருபாவின் கவிதைகளில் இடம்பெறும் சொற்கள் சாதாரணமான புழங்குசொற்கள்தான். அநேகமாய் பிற அனைவரது கவிதைகளிலும் இடம்பெறுபவைதான். ஆனால் கிருபா அவற்றைக் கவிதையில் இருத்தும்விதத்தில் அச்சொற்கள் துலக்கம் பெற்று ஒளிர்கின்றன.

நெற்கதிர்களில் பால் குடிக்க

இறங்கி வந்தன தேன்சிட்டுகள்

அப்போதுதான் கொக்குகள்

நரைக்கத் தொடங்கின

மழை தன்னைத்

துளித்துளியாகப் பங்கு பிரித்தது

வில் வானத்தின் வரலாற்றை

வண்ணங்களில் சுருக்கியெழுதியது.

 

கிருபா சொற்களை தேவையில்லாமல் விரயமாக்குவதில்லை. ஆகப் பெரும் தரிசனத்தையும் சுருக்கமும் செறிவுமான சொற்களைக் கொண்டு தெளிவாக சொல்லிவிட முடியும்.

ஆமென்

பசியை சமைத்தபடி

பன்னெடுங் காலமாய்

பட்டினி கிடப்பவன்

வீட்டுக்கு

விருந்துக்கு செல்லாதோர்

பேறு பெற்றோர்.

 

கடலும் மழையும் ரயிலும் தண்டவாளங்களும் வானமும் பூமியும் சிலுவையும் மரமும் மெழுகுவர்த்தியும் அவரது கவிதைகளுக்குள் தொடர்ந்து வெவ்வேறு அர்த்தங்களுடன் இடம் பெறுகின்றன. பொதுவாகவே கவிதைகளுக்குள் அதிகமும் பயின்றுவரும் இச்சொற்களை குறியீடுகளாகவோ படிமங்களாகவோ உள்ளிடும்போது தேய்வழக்காகிவிடும் சாத்தியங்கள் உண்டு. கிருபாவின் கவிதைகளில் ‘கூர் செதுக்கிய மேகங்களைச் சீவி அம்பாக நாணேற்றிய வில் பூட்டி பல்லாயிரம் கரங்களில் கடவுள் மழையால் பூமியை ஆசிர்வதிக்கிறார்’ என்றும் ‘வானத்தில் வலியோடு முறியும் மின்னல்’ என்றும் ‘கைதேர்ந்த மீனவனின் தந்திர வலைகளுக்குள் சிக்கி வெளியேறும் விதியற்று கடலின் பெரும் கவலைகளை’ என்றும் அவை அவரது கவிதை உலகத்துக்கான தனித்த ஒரு அர்த்தத்தை ஏற்று அமைகின்றன. ‘நீரில் நித்திரை கலைந்த மீன் குஞ்சு விளிம்பில் கடித்திழுத்து கிணற்றுக்கு வெளியே எறிகிறது அதே நிலவை’, ‘மெழுகுவர்த்தியின் உச்சியிலேறி வெளிச்சத்தை திரியில் கட்டும் சுடர் பதறி இடறும்போதெல்லாம் தடுமாறித் தரையில் விழுமோ’, ‘சுவாசக் காற்றின் இரக்கமற்ற புறக்கணிப்பில் பறக்கும் கானல் தோணிகள்’ போன்ற வரிகளில் அமையும் தன்னிச்சையான சொல்லிணைவுகள் அச் சொற்களுக்கு கூடுதலான வனப்பை சாத்தியமாக்குகின்றன.

 

கவிஞர் என்றால் காதலைப் பாடாமல் அல்லது காதலின் துயரைச் சொல்லாமல் இருக்க முடியாது என்ற விதிக்கு கிருபாவின் கவிதைகளும் உட்பட்டவையே.

 

காதலியைப் பற்றிய அவரது கற்பனை ‘நிறுத்தி வைத்த வீணையை விடச்

சற்றே உயரமாக இருப்பாளா?’ என்று கேட்டுவிட்டு ‘வாழ்க்கைக்கும் கனவுக்குமான இடைவெளியில் பாதைகளுக்கு மணல்சடை பின்னி நடப்பாளா?’ என்றும் யோசிக்கிறது.

 

தெரிந்தோ தெரியாமலோ

உன் காலடி மண்ணெடுத்து

ஒரு பூமி செய்துவிட்டேன்

உன் ஈரக்கூந்தலை

கடலாகச் செய்யும் முன்னே

கடந்து போய்விட்டாய்

உயரத்திலிருந்து சூரியனாய்

வருத்துகிறது ஒற்றைப் பார்வை

வெப்பத்தில் வறள்கிறது

எனது சின்னஞ்சிறிய பூமி

நீருற்ற தேடிக் கிணறுகள் தோண்டினால்

பீறிட்டடிக்கிறது ரத்தம்.

கண்ணே

இரண்டொரு தீர்த்தமணிகளைத்

தானமிடு

 

என்று மன்றாடுவதில் தொடங்குகிறது அந்தக் காதல்.

 

முத்தமிட்டு என்னை

சாம்பலாக்கித் தந்துவிட்டு

கவலைப்படும் பூக்களாக

உன் கண்களை மாற்றிக்கொள்ளும்போது

இலக்கின்றி நடக்கத் தொடங்குகிறேன்

கொலைவாள் நீட்டி

மன்னித்துக் காட்டிய வழியில்

 

என்று புறக்கணிப்பை ஒப்புக்கொண்டு சரணடைகிறது. இறுதியில் அந்தக் காதல் அப்படியே இருக்கிறது. 

 

மின்னல் கடவுள் போல் மின்னுகிறது

இடி சாத்தானைப் போல் துள்ளுகிறது

இரவு உன்னைப் போல் கவிகிறது

மழை என்னைப் போல் பெய்கிறது

குளிர் நினைவு போல் அலைகிறது

தூக்கம் மரணம் போல் தழுவுகிறது

காதல் மட்டும் அப்படியே இருக்கிறது

 


குழந்தைகளின் உலகம் அவரது கவிதைகளில் அவர்களுக்கேயுரிய குதூகலத்துடன் விரிகிறது. ‘நடை நடையாய் நடந்து குடம் குடமாய் நீர் சேந்தி கடல் சமைக்கும்’ சிறுமி பந்து விளையாடும் போது ‘ஒரு மாயக் கணத்தில் பூமியே ஒரு பந்தாகி’ அவள் கைகளில் துள்ளுகிறது.

 

கெட்டிக்காரக் குழந்தைகளைப் பாராட்ட

புன்னகை வயலில் பூவொன்று பறித்துக்கொண்டு

சந்தோஷ வரப்புகளில் ஓடோடி வருவாள்

ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி

திங்கட்கிழமையைத் தள்ளிக்கொண்டு போவாள் பள்ளிக்கு.

 

‘புனல் வற்றி நதி மெலிந்து எழும் கூழாங்கல் மாளிகை’யின் நடை வாசலில் தூக்கக் கலக்கத்துடன் கால் நீட்டி அமர்ந்திருக்கும் மழலைச் சிறுவனின் மனமே கிருபாவின் நிலைத்த புன்னகைக்குக் காரணமாக இருக்க முடியும்.

 

அனுபவ எல்லைக்கு அப்பாற்பட்ட உண்மைகளை தொட்டுக்காட்ட வல்ல அல்லது நிழல்போலேனும் காட்டும் சாத்தியங்களைக் கொண்ட கவிதைகளே காலந்தாண்டி நிலைக்கும் பேறுகொண்டவை. மகாகவியால் தன் கவிதைகளின் வழியே அத்தகையை நிலையை எட்ட முடிகிறது. எண்ணற்ற சொற்பெருக்குகளுக்கு நடுவே அவ்வாறான கவிதைகள் மட்டுமே அவனது சுவடுகளாக நிலைத்திருக்கும். கிருபாவின் வரிகள், கவிதைகள் பல அவ்வாறான தருணங்களைக் கொண்டிருப்பவை.

 

பெண்ணைக் கண்டு

பேரிரைச்சலிடுகிறாயே மனமே,

பெண் யார்?

பெற்றுக் கொண்டால் மகள்

பெறாத வரையில்

பிரகாசமான இருள்

வேறொன்றுமில்லை

 

0

 

அலகில் காலம்

காலில் பூமி

வாலில் வானம்

தோளில் சிறகு

நாவில் இசை

கண்ணில் ஒளி

சின்னஞ்சிறு கிளையில்

மின்னல் தனிமையில்

பறவைபோல் ஒருவன்

ஏறக்குறைய இறைவன்

 0

 

மோட்ச விளக்கொளியில் கல்லறைக்குள்

அவன் இருதயத்தை மண் தின்னும்போது

மேலே காவல் நிற்கும் சிலுவைக்காக

பச்சை மரத்தையோ பளிங்குக் கல்லையோ

வானவில்லையோ துன்புறுத்த வேண்டாம்

கல் களைந்த அரிசியைக் கொட்டும்முன்

ஈரக்கைகளால் மறக்காமல் அவன்

அம்மா உலையில் போட்ட சிலுவைகளில்

ஒன்றை அங்கே நிறுத்துங்கள்.

0

‘யாரையும் காயப்படுத்தக்கூடாதென்று, தன் வலிகளை வானில் எறிந்த’ கவிஞன் கிருபா. ‘விழிகளற்ற ஒருவர் செவி ஓர்மையில் ஒளியை நோக்கிக் கனவில் நடந்து செல்கிறார், தன் கைக்குச்சியால் தரையில் வழிக் குறிப்புகளை எழுதிச் செல்கிறார்’ என்று விவரித்திருப்பது தனது பாதையைத்தான்.

இருட்டில் வெடிக்கும் உன்

கைத்துப்பாக்கியிலிருந்து வெளிப்படும்

ஒரு சிட்டிகை வெளிச்சத்தில்

என் மொத்த கவிதைகளையும்

படித்து முடித்துவிடலாம்

நீ

அதுவரையில்

உயிரை கையில் பிடித்துக்கொண்டு

செத்துத் தொலையாமல் இருக்கவேண்டும்

நான்

என்ற கவிதை அவர் இல்லாது போன இக்கணத்தில் மிகவும் தொந்தரவு செய்கிறது. 

0

 (காலச்சுவடு)

 

 

 

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...