Friday 21 January 2022

நாவல் பிறந்த கதை - மணல் கடிகை-சொல்லிலே கண்ட கலைவண்ணம்


அம்மன் நெசவு’ நாவல் வெளிவந்து சில மாதங்கள் ஆகியிருந்தன. சென்னையில் ஒரு நாள் மாலையில் தமிழினி அலுவலகத்தில் நண்பர்கள் சிலர் கூடியிருந்தோம். புதிதாக நான் எழுதியிருந்த சிறுகதை ஒன்றை நண்பர் வாசித்துக் கொண்டிருந்தார். கதை நேர்த்தியாக உள்ளதென்று அவர் அபிப்ராயம் சொன்னபோது வசந்தகுமார் அதை வாங்கிப் பார்த்தார். எட்டுப் பக்கங்கள் கொண்ட அந்தக் கதையை நிதானமாக வாசித்தார். ஒன்றும் சொல்லாமல் வெளியில் இறங்கி நடந்தார். தெரு முனையில் இருந்த கடையில் தேநீர் குடித்துவிட்டு சிகரெட்டை பற்றவைத்தார் “அடுத்த நாவலைப் பத்தி யோசிச்சீங்களா?”.

புதிய நாவலைக் குறித்து உத்தேசமான ஒரு சித்திரம் மட்டுமே அப்போது எனக்குள் இருந்தது. “திருப்பூரைப் பத்தி எழுதலாம்னுதான் யோசிக்கறேன்.”

“யோசிச்சிட்டே இருந்தா நாவல் எழுத முடியாது. சுறுசுறுப்பா உக்காந்து எழுதிப் போயிட்டே இருக்கணும்.”

கதையைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று யோசித்தபடியே அறைக்குத் திரும்பியதும் கதையை எடுத்து நீட்டினார் “நாவலுக்கான மெட்டீரியல கதையா எழுதி வீணடிக்கப்படாது.”

ஊருக்குத் திரும்பியதும் எழுதத் தொடங்கினேன். சுறுசுறுப்பாக நகரவில்லை. ஆனால் தினமும் எழுதினேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு ஒழுங்கு கூடி கதை சீராக நகர்ந்தது.

நான்கு மாதங்களுக்குப் பின் நாவலின் முதல் வரைவு இருநூறு பக்க அளவில் தயாராகியிருந்தது. நாவலின் மையக் கதாபாத்திரமான சிவாவின் கதையை மட்டுமே எழுதியிருந்தேன். அன்பழகன், திரு, பரந்தாமன், சண்முகம் ஆகிய நால்வருமே ஓரிரு அத்தியாயங்களில் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அசுர வேகத்தில் வளரத் தொடங்கிய பனியன் தொழிலின் காரணமாக மேட்டுப்பாளையம், நெசவாளர் காலனி, குமரானந்தபுரம் ஆகிய பகுதிகளிலிருந்த கைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்து மட்டுமே எழுதியிருந்தேன். வசந்தகுமாருக்கு அனுப்பிவிட்டு காத்திருந்தேன்.

மறுநாள் மாலையில் அழைத்தார். எழுதிய பகுதிகளிலிருந்த சிறப்பம்சங்களை உற்சாகத்துடன் சொல்லிவிட்டு நாவலின் கூடுதல் சாத்தியங்களைக் குறித்து யோசிக்கும்படி சில ஆலோசனைகளைக் கூறினார்.

உற்சாகத்துடன் மீண்டும் எழுதத் தொடங்கினேன். சிவாவின் நண்பர்கள் நால்வரின் கதாபாத்திரங்களும் திரண்டு வந்தன. உமா, விமலா, அருணா, பூங்கொடி, சித்ரா என பெண்கள் வலுவாக உருவாகினர். சின்னச் சின்ன கதாபாத்திரங்களும் நான் முன்பு உத்தேசித்திருக்காத பல சம்பவங்களும் உரையாடல்களும் அதனதன் இடத்தில் கச்சிதமாக அமைந்தன. தொழில் நகரத்தின் அசுர வளர்ச்சியின் போக்கில் பொருளாதாரத்தின் பொருட்டு நேரும் சமரசங்கள், மதிப்பீடுகளின் வீழ்ச்சி, சூழல் சீர்கேடு, வேலை வாய்ப்புகள் என அடுக்குகள் பலவும் பொருந்தி வந்தன. வேலை நாட்களில் காலையும் மாலையுமாக ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று மணி நேரமும் விடுமுறை நாட்களில் எட்டு மணி நேரமுமாய் வேறு எதிலுமே கவனம் செலுத்தாது எழுதிக் கொண்டிருந்தேன். முதல் வரைவை எழுதும்போது ஒவ்வொரு பக்கமாக நாவலை நான் எழுதி நகர்த்திக்கொண்டிருந்த அனுபவத்துக்கு மாறாக இந்த முறை நாவல் ஒவ்வொரு நாளும் வேகமாய் என்னை உள்ளிழுத்துச் சென்றது. சமயங்களில் தாங்க முடியாத பெரிய அவஸ்தையாகக்கூட நினைத்ததுண்டு.

கணினியில் அல்லாது கையால் எழுதிய காலம். மொத்தமாய் அறுநூறுக்கும் அதிகமான பக்கங்கள். எழுதி முடித்ததும் தாள்களைக் கட்டி அனுப்பிய நாளன்று இரவு நிம்மதியாகத் தூங்கினேன்.

முதல் வரைவை எழுதி ஆறு மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது வரைவு தயாரானது. அச்சுக் கோர்த்து, மெய்ப்புப் பார்த்த பிரதி எனக்கு வந்து சேர்ந்தது. முதன்முதலாக நாவலின் அச்சுப்பிரதி என் கையிலிருந்தது. நிறைய ஒற்றுப் பிழைகள் திருத்தப்பட்டிருந்தன. பல இடங்களில் பொருத்தமற்ற சொற்களுக்கு பதிலாக சரியான சொற்கள் குறிக்கப்பட்டிருந்தன. சில அத்தியாயங்கள் முன்னும் பின்னுமாக இடம் மாறியிருந்தன. கூடுதலாய் சில வரிகளையும் பத்திகளையும் எழுத வேண்டிய இடங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.

எல்லாவற்றையும் சரிசெய்து அனுப்பிய அந்த வார இறுதியில் சனிக்கிழமை காலை திருப்பூருக்கு வந்து சேரும்படி அழைப்பு. சென்னையிலிருந்து வசந்தகுமார் வந்திருந்தார். மகுடேசுவரனின் மாருதி 800 காரில் மூவரும் புறப்பட்டோம். லட்சுமி நகர், மேட்டுப்பாளையும், பி.என்.ரோடு, நஞ்சப்பா பள்ளி, இரவு நேர வண்டிக் கடைகள், பேக்கரிகள், நொய்யலாறு, ஒரத்துப்பாளையம் என நாவலில் இடம் பெற்றிருந்த இடங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கத் தொடங்கினோம். நாவலின் ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்திலும் ஒரு மலைக்கோயில் இடம்பெறும். கொங்கணகிரி, கைத்தமலை, சிவன்மலை, சென்னிமலை, ஒதியமலை ஆகிய அந்த ஐந்து மலைகளிலும் ஏறி இறங்கினோம். இரண்டாவது நாள் காலையில் காரில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக திட்டமிட்ட நேரம் கடந்து மாலையில்தான் சென்னிமலைக்கு செல்ல முடிந்தது. அந்திப்பொழுதில் கோயிலுக்கு பின்னால் சரிவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த வேளை நாவலில் முக்கியமான இடமாக அமையும் என்று அப்போது நான் நினைத்திருக்கவில்லை. அந்த மூன்று நாட்களிலுமே நாவலைத் தவிர வேறெதைக் குறித்தும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.

அடுத்த சில நாட்களுக்குப் பிறகு திருத்தப்பட்ட மூன்றாவது படி வந்து சேர்ந்தது. இப்போதும் சில பகுதிகள் நீக்கப்பட்டிருந்தன. புதிதாக எழுதிச் சேர்க்க வேண்டிய இடங்களும் அடையாளமிடப்பட்டிருந்தன.

சில கதாபாத்திரங்களின் பெயர்களில் இருந்த குழப்பங்களை நீக்கி, புதிய பத்திகளையும் அத்தியாயங்களையும் எழுதி அனுப்பினேன். நான்காவது வரைவு தயாரானது. இந்த முறை அது எனக்கு அனுப்பப்படவில்லை. பதிலாக நானே சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது.

ஆழ்வார்ப்பேட்டை ஈஸ்வரி வாடகை நூலகத்துக்கு எதிர் சந்திலிருந்த தமிழினி அலுவலகத்துக்கு நான் சென்றபோது பரபரப்பாக இருந்தது. அந்த இடத்திலிருந்து அலுவலகத்தை ராயப்பேட்டைக்கு இடம் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாகத் தொடங்கியிருந்தன. அருகில் இருந்த நண்பர் சீனிவாசனின் அலுவலகத்துக்கு என்னை அழைத்துச் சென்று நாவலின் நான்காவது படியைத் தந்தார் வசந்தகுமார். பொறுமையாகப் படித்துப் பார்க்கும்படி சொல்லிவிட்டு போய்விட்டார். நாவலின் சில பக்கங்களில் துண்டு அட்டைகள் செருகப்பட்டிருந்தன. ஓரிரு வரிகளில் குறிப்புகளும்கூட. நிதானமாகப் படிக்கத் தொடங்கினேன். நான் நினைத்திருந்ததற்கும் மேலாக நாவல் நல்லபடியாக உருவாகியிருந்தது.

மாலை நான்கு மணிக்கு தேநீருக்குப் பிறகு ஒரு கத்தை வெள்ளைத்தாள்களை எடுத்துக்  கொடுத்தார். அடையாளமிட்டிருந்த பகுதிகளில் சேர்க்க புதிய அத்தியாயங்களை எழுதுங்கள் என்றார். ‘‘இடம் மாற்றும் வேலை முடிய நெடுநேரமாகும், எனவே பொறுமையாக எழுதுங்கள்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். எழுத வேண்டியவை ஒன்பது அத்தியாயங்கள். மலைப்பாக இருந்தது. கீழே இறங்கி தனியாக கால்போன போக்கில் நடந்தேன். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பியபோது அறையில் யாரும் இருக்கவில்லை. முகத்தைக் கழுவிவிட்டு உட்கார்ந்து ஒவ்வொரு அத்தியாயமாக எழுதலானேன். மொத்தம் அறுபத்தி நான்கு பக்கங்கள். எழுதி முடிக்கும்போது இரவு மணி பனிரெண்டைத் தொட்டிருந்தது. களைத்திருந்தேன். எழுதிய தாட்களை ஒரு உறையில் போட்டு அப்படியே வைத்துவிட்டு அறைக்குச் சென்றுவிட்டேன்.

காலை பதினோரு மணிக்கு வந்தபோது எழுதிய பக்கங்கள் மெய்ப்புப் பார்க்கப்பட்டு கணினியில் தட்டச்சு செய்ய கொடுக்கப்பட்டிருந்தது. ‘‘நாவல் முடிந்துவிட்டதல்லவா?’’ என்று கேட்டேன். ‘‘இன்னிக்கு சாயந்திரம் இன்னொரு அவுட்புட் எடுத்துப் பாத்துருவோம்” என்றார். ‘அய்யோ’ என்றிருந்தது. ஐந்தாவது படி. “இன்னும் எழுதனுமா?” என்று தயக்கத்துடன் கேட்டேன்.

‘‘தேவைப்படாதுன்னு நெனக்கறேன், பாப்போம்” சிகரெட்டை அணைத்து ஆஷ் டிரேயில் நசுக்கினார் “அச்சுக்குப் போறதுக்கு முன்னாடி முடிஞ்ச வரைக்கும் திருத்தமா நல்லபடியா எழுதிடணும். அவசரப்பட்டா சரியா வராது.” ஐந்தாவது படியில் நாவலின் நான்காவது பகுதியில் இருந்த ஒரு அத்தியாயத்தை எடுத்து கடைசி அத்தியாயமாக வைத்திருந்தார். சென்னிமலையில் அந்தி சாயும் நேரத்தில் ஏற்பட்ட அனுபவம் அது.

ஒற்றுப் பிழைகளை சரிசெய்துவிட்டு மறுநாள் மதியம் நாவலின் இறுதி வடிவம் உறுதியானது. கடைசியாக ஒரு முறை படித்துவிடலாம் என்று மறுபடி ஒரு மெய்ப்புப் பிரதி அச்சிடப்பட்டது. அந்த ஆறாவது படியை இருவரும் மாற்றி மாற்றிப் படித்தோம். சிறிய முன்னுரையை அப்போதுதான் எழுதினேன்.

நாவலின் தலைப்பை முதலில் நான் தீர்மானித்திருக்கவில்லை. நாவலின் முக்கிய கதாபாத்திரமான சண்முகம் தான் எழுதவிருக்கும் ஒரு நாவலைக் குறித்து நண்பர்களிடம் பேசுவான். அந்தப் பகுதியை எழுதும்போதுதான் ‘மணல் கடிகை’ என்ற பெயர் அகப்பட்டது.

பல மாதங்களுக்கு முன்பு சிறுகதையாக எழுதி, ‘நாவலுக்கான மெட்டீரியலை கதையாக எழுதி வீணாக்கக்கூடாது’ என்று அறிவுறுத்தப்பட்ட அந்தச் சிறுகதைதான் நாவலின் முதல் பகுதியின் கடைசி அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. உமா தன் கணவனையும் சேர்த்துக் கட்டிக்கொண்டு தீக் குளிக்கும் அந்தக் காட்சியைத்தான் சிறுகதையாக எழுதியிருந்தேன்.

இன்றும்கூட ஒரு சிறுகதையை எழுதுவதற்கு முன்பு அந்தச் சொற்களை ஒருமுறை யோசித்துக் கொள்கிறேன்.

0

( அந்திமழை – ஜனவர் 2022 )

 

 

 

 

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...