கிரிராஜ் கிராது
நவீன ஹிந்தி இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத பெயர் கிரிராஜ் கிராது.
1975ல் ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் பிறந்தவர். பிரதிலிபி என்ற
இருமொழி மாத இதழின் நிறுவனர். கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, பத்திரிக்கையாளர் என்று
பலதுறைகளிலும் பங்களிப்பவர். இவருடைய கவிதைகள் இந்தியில் மிகவும் புகழ்பெற்றவை
என்றாலும் இதுவரையிலும் தொகுப்பாக வெளியிடப்படவில்லை.
வழக்கமான கவிதையின் வடிவத்தில் அல்லாமல் உரைநடையின் வடிவத்தில்
இவரது பெரும்பாலான கவிதைகள் அமைந்துள்ளன. பல கவிதைகளில் இவர் முற்றுப்புள்ளிகளையோ பிற
நிறுத்தற்குறிகளையோ இடுவதில்லை. காலங்காலமாக கவிதையில் சொல்லப்பட்டுள்ள பாடுபொருள்களை
இவர் கவிதைகளில் காணமுடிவதில்லை. நவீன மனத்தின் சலனங்களை அபத்தங்களை கையாலாகத்தனங்களை
நுட்பமாக சித்தரிக்கின்றன கிரிராஜ் கிராதுவின் கவிதைகள்.
அண்மையில் எழுதப்பட்ட அவரது இந்த ஏழு கவிதைகளும் ‘சமாலோசன்’ என்ற
இணைய இதழில் வெளியானவை.
0
1
SPB
கிராமிய மக்களின் எழுச்சிப் பாடலாக ஒலிக்கவிருந்த ஒன்று
குறும்புக்கார வாலிபர்களின் துடுக்குப் பாடலானது
பிரிவுத்துயரொலிக்க வேண்டிய ஒன்றோ ஆக்ரோஷமானது
காதல் கவிதையோ ஒப்பாரியானது
சோகப் பாடலோ சமூக அவலம் சொல்லும் உபதேச கீதமானது
தமிழென்று நினைத்தது மலையாளமானது
மலையாளமோ தெலுங்கானது
போபர்ஸ், ரதயாத்திரையின் நிழலில் கழிந்த
1990ஆம் ஆண்டின் அந்த வசந்த காலத்தின்போது
பழைய ஒரு புகைப்படத்தில்
நீயென்று எண்ணிய உருவம் இளையராஜாவின் உருவமானது.
மனோவோ, ராஜேஷ் கிருஷ்ணனோ
உன்னுடைய குரலில் பாடிய எத்தனையோ பேரையும் நீ என்றே நினைத்திருந்தேன்
உன் குரலிலிருந்து அவர்கள் தங்கள் குரலைக் கண்டடைந்திருக்க வேண்டும்
எனக்கென்று குரல் இல்லை, உன் குரலின் நகல்தான் அது.
ஏதேனும் ஒரு நாள் நான் உன்னுடைய ‘மன்றம் வந்த’ அல்லது ‘இது ஓர் பொன்
மாலை’
அல்லது ‘நகுவா நயனா’ அல்லது ‘நா நிச்சலி’ யை பாடுவேன்
ஏன் இத்தனை பக்திப் பாடல்களை பாடினாய் நீ
ஏன் இத்தனை தன்மையானவனாக இருந்தாய் நீ
உன்னுடைய உடல் நலம் குறித்த செய்திகளை
சக்தி வாய்ந்த தலைவர்கள் ஏன் மூடி மறைத்தார்கள்
அவர்கள் செய்த கெடுதல்களையெல்லாம் மன்னிப்பதற்கு
நீ பாடிய அனைத்து கானங்களும் சேர்ந்து முயன்றால்கூட முடியாது.
இரண்டு முறை நாம் சந்தித்திருக்க முடியும், முயலவில்லை நான்
ஆனால் ஏழாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவனின் வாழ்வில்
மரியா அல்லது ஜானியின் பாடல்களை பாடியபடி வந்திராமல் போயிருந்தால்,
பெருமைமிக்க பிரதேசப் பேச்சு வழக்கை
இந்தியல்லாத உச்சரிப்புடன் மாற்றியும் தேற்றியும் நீ பாடாமல் இருந்திருந்தால்
கலைகளின் வர்ணாசிரமம் புரிந்திருக்காது
முன்பின் அறியாத மொழி எழுத்துகளின் நடுவே மூன்று ஆங்கில எழுத்துகளைக்
கொண்ட
அந்த மேக்னா சவுண்ட் கேசட்டை எடுக்காமல் போயிருந்தால்
சுத்த சங்கீதக் காவலர்களின் நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டிருக்க முடியாது
உனக்கான பிரிவுப் பாடல் என்னிடம் கிடையாது
அது தமிழோ தெலுங்கோ இந்தியோ தெரியாது
அது உங்களது ‘நீ கூடு செதிரிந்தி’யாக இருக்கலாம் வேறு ஏதேனும் இருக்கலாம்
ராஜேஷ் மனோ ரகுமான் ராஜா அனைவரும் உனக்கு விடை தந்துவிட்டார்கள்
என்னால் எப்போது சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை
‘ரம்பம்பம் ஆரம்பம்’ பாடல் சோகப் பாடலுக்கு சரியாக வராது
உஷா உதூப்போ ராஜேஷோ மனோவோ நானோ புனித் சர்மாவோ அமித் ஸ்ரீவத்ஸாவோ
இருந்திருந்தால் அது எப்படிப்பட்ட வழியனுப்புதலாக இருந்திருக்கும்
தேசத்தின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தின் முன்னால் நின்று
உன்னை அழைத்துப் பாடத் தொடங்குவோம்
‘ரம்பம்பம் ஆரம்பம் ரம்பம்பம் ஆரம்பம்’.
2
செல்ஃபி
கிளிக் செய்யும் சமயத்தில் பார்க்க முடியவில்லை
துக்கம் மூன்று டிகிரி குனிந்திருந்தது
டிராஃபிக் சிக்னலில் புத்தகம் விற்கும் சிறுவனுடன் நிற்கிறது ஒரு குழந்தை
பின்னால் விளம்பர பதாகையில் சுதீர் சௌத்ரி சிரித்துக் கொண்டிருக்கிறார்
மூன்று நாட்களுக்குப் பிறகு வரவிருக்கும் ஹார்ட் அட்டாக் குறித்து
தெரியாமல்
இரவு ஒன்பது மணிக்கு போஸ்ட் போடவேண்டும்
மதியம் இரண்டு மணிக்கான எனது ஆன்ட்ராய்டு முகத்தை
3
பெங்களூரு 4.0
கார்கள் மூழ்குகின்றன ஸ்கூட்டர்கள் நீந்துகின்றன
துணிகளும் காண்டமும் காமவாசனைகளும் ஏழு வாரங்களுக்கு ஈரமாகவேயிருக்கும்
ஸ்விகி பிளிங்கிட் ஜமோடா அமேசான் அலிபாபாக்களின் டிரோன்கள்
கவலைகளுடன் சுற்றுகின்றன.
சிலைகள் சிலைகளாக கிடக்கும்
ஏரியின் கல்லறையின் மீது திருவிழா கொண்டாடினால் எத்தனை பிரமாதமாக இருக்கும்.
0
4
லைவ்
ஒரு கொலையை நேரடி ஒலிபரப்பு செய்வதென்பது சிறிதும் கஷ்டமில்லை,
அதிக ஆரவாரம் கூடாது.
ஒரு ஸ்மார்ட் போனும் ஐம்பது நூறு ரூபாய்க்கு டேடாவும் வைத்து
யார் வேண்டுமானலும் யூ ட்யூப் சேனலை உருவாக்க முடியும்
ராத்திரி அவசியமில்லை, பகல் வெளிச்சமிருந்தாலே வீடியோ நன்றாக வரும்
ஒரேயடியாக யாருமில்லாமல் இருப்பது ஆகாது,
எத்தனைக்கெத்தனை கூட்டம் உள்ளதோ அத்தனைக்கத்தனை நல்லது
கத்தி இருந்தால் நல்லதுதான் ஆனால் கட்டாயமில்லை.
மனிதனின் கையும் காலுமே போதுமானது.
போரை நேரடியாக ஒலிபரப்புகிறது சி என் என்
கொலை எண்ணத்தால் உற்சாகமடைந்து
கொலையை மக்களுக்குப் பிடித்த எண்ணமாக உருவாக்குகிறது பிரைம் டைம்
கொலையை நேரடியாக ஒலிப்பரப்பும் நாடாக ஆக்குகிறதா?
5
ஒரு அலைபேசி எண்ணைப் போல
உங்களை அழைப்பதாக இருந்தேன் நான்.
ஒரு நாள் நாம் இருவரும் ஒன்றாகவே படப்பிடிப்பை முடித்தோம்
இத்தனை சீக்கிரம், மூன்று நாட்களுக்கு உள்ளாகவே,
வேறுமாதிரியாகும் என்று எனக்குத் தெரியாது
இந்த மூன்று நாட்களில் பல முறை உங்களைப் பற்றி யோசித்தேன்
எந்த ஊரில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதுபோல
மந்தமாக, ஆகவே சற்று பின்தங்கியவராக,
இருபதாம் நூற்றாண்டிலேயே மாட்டிக் கொண்டவர் என்றும்
இப்போதெல்லாம் உங்கள் வேலையை நீங்கள் சொன்னபடி சரியாக செய்வதில்லை
இந்து குடும்பத்திலிருந்து வந்த உங்கள் மனைவி எப்படி இருக்கிறார்கள்
உங்களுக்குக் குழந்தைகள் உண்டல்லவா? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?
இந்த ஊரிலிருந்து போய் விட்டீர்களா?
என்றெல்லாம் நான் யோசித்தேன்
உங்கள் கேமரா பழைய தூர்தர்ஷனின் தரத்துக்கு சமமாக இல்லாமல் இருந்திருக்கலாம்
ஆனால் அதன் உணர்வுகள் சரியாக பொருந்தியிருந்தன.
நாள் முழுவதும் உங்களுடைய கண்கள் மனிதர்களை அல்ல, ஒளியையே பார்த்திருக்கும்
ஜே பி, இந்திரா இருவரையும் நீங்கள் இதே கண்களால் நேரில் பார்த்திருக்க
வேண்டும் என்று நான் நினைப்பது ஏனென்று எனக்குத் தெரியவில்லை
ஆனால் ஏதாவது செய்யுங்கள், உங்கள் உபகரணங்கள் பழசாகிவிட்டன
தூர்தர்ஷனை நீங்கள் வேலையாக மட்டும் பாருங்கள், காதலைப் போல் அல்ல.
ஆனால், உங்களைப் பற்றி பேச நான் உங்களிடம் வரவில்லை
அடுத்த படப்பிடிப்பு எப்போது என்று தெரியாது
உங்களுக்கான சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது
இன்னும் நாம் நண்பர்களாகவில்லை
ஒருவேளை அது நடக்காமலும் போகலாம், ஏனெனில் எனக்கு நண்பர்கள் யாருமில்லை
இப்போதும் நான், இந்த எளிய நகரத்தில்
தற்பெருமை, அகங்காரம், சுயவிரக்கத்துடன் அலைந்து திரியும் கைவிடப்பட்டவன்தான்
நல்லது, நான் என்னைப் பற்றியும் உங்களிடம் பேச வரவில்லை
தவிர வேறெதையும் செய்வதுகூட இப்போது மேலும் சிரமமாக இருக்கிறது.
உங்களிடம் நான் ஒரு தாங்க முடியாத துயரத்தைப் பகிரவே வந்திருக்கிறேன்
என்ன நடந்தது என்றால் உங்களை நான் அழைப்பதாக இருந்தேன்
என்னுடைய அலைபேசியில் உங்களைப் பெயரை இட்டு,
தேடி வெகு நேரத்துக்குப் பிறகு கிடைத்தது
என் வாழ்வில் உள்ள இஜாஸ் நீங்கள் மட்டுமே அல்ல.
நண்பர்களற்று கைவிடப்பட்டு வருடக்கணக்கில் ஊர் ஊராக திரியும்
என்னுடைய அலைபேசியில் அந்த இன்னொரு இஜாஸின் எண்
எப்படி தங்கியதென்று எனக்குத் தெரியவில்லை
அந்த எண்ணையும் பெயரையும் கண்ட அந்த நொடியில்
எஞ்சியிருந்த இறகுகள் உடைந்து நொறுங்கின
நண்பர்களற்ற, கைவிடப்பட்ட ஒருவன் அழுவதுபோல அழுது கொண்டிருக்கிறேன்
நாற்பத்தி ஆறு டிகிரி கொதிக்கும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலில்
மோட்டர் சைக்கிள் ஓட்டியபடியே அழுது கொண்டிருக்கிறேன்.
உங்களுக்குப் புரிகிறதல்லவா? இஜாஸ் அகமது இந்த உலகில் இல்லை
இப்போது அவர் என் அலைபேசியில் உள்ள ஒரு எண்.
இஜாஸ் அகமது இல்லை என்பது
இப்போது எத்தனை துக்கம் அளிக்கக் கூடியதென்பதை
உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?
0
6
புதிய யுகத்தில் நட்பு
பெண்களை இழிவுபடுத்திய ஒரு அதிகாரிக்கு எதிரான
கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர்
அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கவில்லை.
அப்போது என்னை தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்
“நானொரு அரசியல்வாதி.”
அன்று முதல் அவரை நான் மரியாதையுடன் அவ்வாறே ஏற்றுக்கொண்டேன்.
அதிகாரிகள் ஏற்பாடு செய்யும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் செல்லக்கூடாது
என்பது
இந்திக் கலாச்சாரம் என்றவர்
ஒருமுறை அதில் சென்று கலந்து கொண்டார்
அப்போது அவர் என்னிடம் சொன்னார் “எனக்குத் தெரியாது”
இதை நான் மரியாதையுடன் ஒப்புக்கொள்ளவில்லை
இலக்கிய அமைப்புகள் தில்லியில் ஏற்பாடு செய்யும் மாலை நிகழ்ச்சிகளில்
ஒரு நாள் மாலையில்
வெளியில் நின்று சிகரெட் புகைத்தபடியே கேட்டார்
“இந்த ஒலிப்பதிவு வேலையில் போதுமான சம்பளம் கிடைக்கிறதா?”
என்னுடைய சம்பளத்தைச் சொன்னவுடன் அவர் கூறினார்
“இதுபோன்ற வேலைகள் இருந்தால் சொல். இதைவிட குறைவு என்றாலும் பரவாயில்லை”
அன்றிலிருந்து ஒவ்வொரு முறை சம்பளம் கிடைக்கும்போதும்
அவருடைய முகம், சிகரெட்டுடன் சேர்த்து நினைவில் எழுகிறது
அப்போது அவருக்கு வயது எழுபது, சாவதற்கு இரண்டு வருடத்துக்கு முன்பு.
அவருடைய பிரசித்திபெற்ற ‘துணை’ கவிதையைப் பற்றி இரண்டு முறை எழுதினேன்
முதல் முறையில் சில கேள்விகள் இருந்தன,
இந்தி மொழிக்குள் உள்ள அரசியலின் தாக்கம் குறித்து.
இரண்டாம் முறையில் பாராட்டு இருந்தது,
இவ்வுலகில் கலை சார்ந்த அரசியலின் தாக்கம் பற்றி
முதலாவதை எழுதும் வரையில் நாங்கள் இருவரும்
ஹிந்தியின் இரு வேறு முகாம்களைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணியிருந்தேன்
இரண்டாவதை எழுதுகையில் ஹிந்தியில் அவ்வாறான முகாம்கள் இல்லையென்று
கருதினேன்
ஆனால் இரண்டு முறையும் இக் கவிதையைக் குறித்தோ அல்லது
அதைப் பற்றியது எழுதியது பற்றியோ அவரிடம் பேசவில்லை
ஒருபோதும் பேசிக்கொள்ளவே இல்லை
எப்படி அவர் கவிஞராக இருக்கிறாரோ அதுபோலவே
மனிதனாக, தொழிலாளியாக, கூலியாக, பொறியாளராக, ஆசிரியராக, வழக்கறிஞராக,
தலைவராக, பெயின்டராக என யாராகவும் ஆகக்கூடிய வாய்ப்பு எத்தனைக் குறைந்திருக்கிறதோ
அந்த அளவுக்கு அப்படி ஆவதற்கான தேவைகள் கூடியுள்ளன.
படுகொலைகளை எதிர்த்து கண்டன அறிக்கைகளில்
எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், ஓவியர்கள் கையெழுத்திட்டபோதும்,
அவ்வப்போது ஆழமான புரிதலுடனும் வேறு வழியற்ற அப்பாவித்தனத்துடனும்
அத்தகைய சக்திகளுக்கு எதிராக போராடியுமிருந்தனர்.
நாம் இருவரும் நண்பர்களாக இருக்கவில்லை, இருந்திருக்க முடியும்
ஆனால் சந்தித்தபோது நண்பர்களைப் போலவே சந்தித்தோம்
விடைபெற்றுச் சென்றபோதும் நண்பர்களைப் போலவே விடைபெற்றோம்.
7
வணக்கம், நான் ரவீஷ் குமார்
தவறாக நினைக்காதீர்கள், உங்களுடைய பார்வையல்ல
என்னுடைய பயமே என்னைக் காப்பற்றியது
உங்களுடைய நேசமல்ல, என்னுடைய அமைதியற்ற அகங்காரமே காப்பாற்றியது
உண்மையாக இருக்க விரும்பியதும்
என்னையே நான் உண்மையானவனாக எண்ணியதுமே என்னைக் காப்பாற்றியது
என் குடும்பமும் நட்புமே என்னைக் காப்பாற்றியது
என்னைப் பற்றி என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?
பொதுமக்கள் என்பது ஒருவரல்ல, பலர்
என்னை விசாரணையின்றி கொல்வதை பிரைம் டைமில் பார்க்க ஒரு பொதுஜனம் விரும்பினார்
இன்னொரு பொதுஜனம் என்னை அழைத்துப் பேசினார்
வெல்லமும் பழங்களும் தானியங்களும் இனிப்புகளையும் பரிசாக அனுப்பினார்
வேறொருவர் என்னுடன் செல் ஃபி
எடுத்துக் கொண்டு அதற்காக பிறரது வசைகளைப் பெற்றார்
எப்போதும் உண்மையான, நிபந்தனையற்ற வெறுப்பைக் கொண்டிருக்கும்
ஒரு பொதுஜனம் எப்போதும் உண்டு
உன் மீதும், என் மீதும்
மறைந்த, முழுவதுமாக மறந்துபோன ரகுவீர் சகாயின் மீதும்.
( இக் கவிதைகள் அனைத்தும் ‘கவிதைகள்’ மின்னிதழ் ஜனவரி, பிப்ரவரி 2025 இதழ்களில் வெளியாயின. )
No comments:
Post a Comment