எளிய கைத்தறி நெசவாளர் குடும்பத்தின் நான்கு ஆண் குழந்தைகளில் மூன்றாமவன் நான். உடன்பிறந்தவர்களாய் பெண்கள் இல்லையென்றபோதும் பிறந்ததிலிருந்தே பெண்களால் தூக்கி வளர்க்கப்பட்டவன் நான். பெண்கள் சூழவே வளர்ந்தவன். கைத்தறி நெசவுக்குத் தேவையான நூல் நூற்பதற்காக எங்கள் பாட்டியிடம் வரும் தாவணி போட்ட இளம்பெண்கள் எப்போதும் என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு திரிவதாக அம்மா சொல்லியதுண்டு.
வளர்ந்து எனக்கு விபரம் தெரிந்த நாளில்கூட
என்னைச் சுற்றிலும் பெண்கள்தான் இருந்தார்கள். கைத்தறி நெசவு என்பது குடும்பத்திலுள்ள
அனைவரும் கூடி உழைக்கவேண்டிய ஒரு தொழில். சிறியவர் முதல் பெரியவர் வரை அவரவர் பங்கை
சரியாக செய்யாமல் தறியில் ஒரு சீலையை நெய்வதோ அதை ஒரு பொருளாக சந்தைக்குக் கொண்டு வருவதோ
சாத்தியமில்லை. எங்களது தெருவிலிருந்து எல்லா வீடுகளிலும் பெண்கள் நிறைய. என்னைவிட
வயதில் மூத்தவர்கள். எல்லோருமே வீட்டு வேலைகளை செய்வதோடு தறி வேலைகளையும் செய்பவர்கள்.
பலரும் தறியில் இறங்கி நெய்பவர்கள். எனவே, அவர்களுடைய குரல்கள் எப்போதுமே என் காதுகளில்
விழுந்துகொண்டிருந்தன. வேலை செய்தபடியே சினிமாக் கதைகளை பேசுவார்கள். அமாவாசை நாட்களில்
டூரிங் டாக்கீஸில் காட்டப்படும் எம்ஜிஆர் படங்களுக்கு உற்சாகத்துடன் நடக்கும்போது என்னையும்
அழைத்துச் செல்வார்கள். ஆடிப் பெருக்கு நாளன்று வேப்ப மரத்து தூரிகளில் பாவாடையை இடுப்பில்
செருகிக்கொண்டு காற்றில் பறந்து ஆடுவார்கள்.
உழைக்கும் நெசவாளப் பெண்களின் அந்தக் குரல் மெல்ல மெல்லத்
தேய்ந்து பனியன் கம்பெனிகளில் தையல் இயந்திரங்களுக்கு நடுவே ஒலிக்கும் பெண்களின் குரலாக
மாறிற்று.
குடும்பத்தின் தேவைக்காக பள்ளிக்கூடங்களை
மறந்து பனியன் ஆலைகளுக்கு தூக்குவாளிகளைத் தூக்கிக் கொண்டு ஓடும் சிறுமிகளின் குரலாகக்
கேட்கலாயிற்று.
ஆலைகள் வேலை வாய்ப்பைத் தந்தன. பொருளாதார
சுதந்திரத்தை சாத்தியப்படுத்தின. பெண்களின் உடல்மொழி மாறிற்று. குரல் மாறிற்று. ஆண்களைச்
சார்ந்திருக்கும் நிலையும் மாறியது. மாறாக, பெண்களை நம்பியே குடும்பம் என்று உறுதியானது.
கைத்தறி நெசவிலிருந்து பனியன் ஆலைகள்
வரையிலும் இந்தக் குரல்கள் என்னைச் சுற்றிலும் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இன்றும்
தொடர்ந்து ஒலிப்பவை. ஆடை ஏற்றுமதி உச்சம்தொட்ட காலங்களில் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து
தொழிலாளர்கள் திருப்பூரை நோக்கி படையெடுத்தனர். அப்போது கொங்குத் தமிழுடன் சேர்ந்து
பிற மாவட்டங்களின் தமிழும் ஒலித்தது. இப்போது வட மாநிலங்களின் மொழிகளும் ஒன்று கலந்துள்ளன.
இவையே என் கதைகளில் ஒலிக்கும் குரல்கள்.
கடந்த நாற்பதாண்டுகளாக திருப்பூரிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் வாழ்வில் ஏற்பட்ட,
குறிப்பாக பெண்களின் உலகில், ஏற்றங்களையும் ஏமாற்றங்களையும் வாய்ப்புகளையும் சுரண்டல்களையும்
கதைகளின் வழியே காட்ட முற்பட்டிருக்கிறேன்.
என் எழுத்துகளில் பெண் கதாபாத்திரங்கள்
வலுவாக அமைந்திருப்பதின் ரகசியம் இதுதான். ‘மல்லி’ போன்ற சிறுகதைகளிலும் ‘மணல் கடிகை’
நாவலிலும் திருப்பூர் பனியன் ஆலைகளிலுள்ள பெண்களையும் அவர்களது குணாதிசயங்களையும் வெளிப்படுத்த
முனையும்போது ‘சூடக்கொடுத்தவள்’, ‘சிவகாமி’ போன்ற கதைகளும் ‘மனைமாட்சி’ நாவலும் பெண்
எனும் ஆற்றலின் சாத்தியங்களைக் காட்ட முயன்றுள்ளன.
எனது எழுத்தில் உள்ள கதாபாத்திரங்கள்
தன்னிச்சையானவை. அவரவர் நியாயங்களை அவரவர் சூழலில் அழுத்தம்திருத்தமாக நிறுவ முயல்பவை.
நான் எந்தப் பக்கச் சார்பும் கொள்வதில்லை. சரி தவறு என தீர்ப்பளிக்க நினைப்பதில்லை.
இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று காட்டிவிட்டு நகர்ந்துவிடுகிறேன். அதுதான் என்
வேலை என்றும் நம்புகிறேன்.
‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்பது
அய்யனின் வாக்கு. அதுவே என் ‘மனைமாட்சி’ நாவலின் உப தலைப்பும்கூட.
பெண்களைக் குறித்த ஆவணங்களுக்கான அமைப்பான
‘ஸ்பாரோ’ என் எழுத்துக்களை அடையாளம் கண்டு, தேர்ந்தெடுத்து விருதளித்திருப்பது தற்செயல்
என்று நான் நினைக்கவில்லை. என் எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கும் பெண் கதாபாத்திரங்களே
இந்த விருதுக்கு சொந்தக்காரர்கள் என்று எண்ணுகிறேன். அந்த விதத்தில் இந்த விருது என்னளவில்
முக்கியமானது, தனித்தன்மை வாய்ந்தது.
முப்பதாண்டு காலமாக எழுதுகிறேன். நான்கு
நாவல்கள், அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என எல்லா
வடிவங்களிலும் பங்களித்திருக்கிறேன். ‘சொல் புதிது’ பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்திருக்கிறேன்.
சொல்லிக்கொள்ளத்தக்க அங்கீகாரங்கள் எதுவும் இல்லை என்ற நிலையிலும் நான் தொடர்ந்து செயல்படுகிறேன்.
தீவிரமாக எழுதுகிறேன். எங்கேனும் சிலர் என் எழுத்தை வாசிக்கக்கூடும் என்ற நம்பிக்கையும்,
‘நான் எழுதவேண்டிய சிலவற்றை வேறு யாரும் எழுத முடியாது’ என்கிற உறுதியும் என்னைத் தொடர்ந்து
எழுதச் செய்கின்றன.
‘ஸ்பாரோ’ போன்ற ஒரு அமைப்பு என் எழுத்துகளை
கௌரவப்படுத்துவதென்பது என் பணியை மேலும் ஊக்கத்துடன் தொடர்வதற்கான உற்சாகத்தையும் ஆற்றலையும்
அளிக்கும்.
விருதுக்கான என் பெயரைப் பரிந்துரைத்த
ஆலோசகர்களுக்கும், ‘ஸ்பாரோ’ அமைப்புக்கும் மனமார்ந்த நன்றிகள்.
( 2021ஆம் ஆண்டுக்கான ஸ்பாரோ இலக்கிய விருது அக்டோபர் 2021இல் அறிவிக்கப்பட்டது. பெருந்தொற்று காலம் என்பதால் விருது விழா நடைபெறவில்லை. விருதுப் பட்டயம் அஞ்சலில் அனுப்பப்பட்டது. விருதேற்பு படம் வீட்டில் எடுக்கப்பட்டது. ஏற்புரை எழுதப்பட்டு ஸ்பாரோ அமைப்புக்கு அனுப்பப்பட்டது.)
No comments:
Post a Comment