1
இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு டிசம்பர்
மாதம். அலுவலகப் பயிற்சி நிமித்தமாக புனே சென்றிருந்தேன். அன்று காலை ஆங்கிலச் செய்தித்தாள்
ஒன்றைப் புரட்டிக்கொண்டிருந்தபோது ஒரு சிறிய புகைப்படம் என்னை ஈர்த்தது. தெரிந்த முகம்
போலிருக்கவே செய்தியைப் படித்தேன்.
புனேவில் ஆண்டுதோறும் நடந்துகொண்டிருக்கும்
அந்த இசை விழாவுக்காகச் சென்னையிலிருந்து வந்திருக்கும் ரசிகரைப் பற்றிய செய்தி அது.
சவாய் கந்தர்வா மியூசிக் பெஸ்டிவல்.
இந்திய அளவில் நடைபெறும் மாவெரும் இந்துஸ்தானி இசை விழா.
படத்தை மீண்டும் பார்த்தேன். குறுந்தாடியுடன்
இருந்த அவரையும் அவரது புன்னகையையும் இப்போது நன்றாகவே அடையாளம் தெரிந்தது. யுவன் சந்திரசேகர்தான்.
அன்று மாலை இசை விழா மைதானத்துக்கு அழைத்துச்
சென்றார் யுவன். அங்கே பலருக்கும் அவரைத் தெரிந்திருந்தது. முகமன் சொல்லிக்கொண்டார்கள்.
என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மாலையில் தொடங்கிய இசை நிகழ்ச்சி தொடர்ந்து
நடந்துகொண்டிருந்தது. பெரிய பந்தல். மேடைக்கு முன்னால் மணல் பரப்பில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம்.
இரவு கூடுந்தோறும் குளிர் அதிகரித்தபடியே இருந்தது. நிகழ்ச்சியும் தொடர்ந்தது. இந்துஸ்தானி
இசைக் கச்சேரியை நேரில் கேட்பது எனக்கு அதுவே முதல் அனுபவம். நான் முன்பு அறிந்திராத
பல கலைஞர்கள். இசைக் கருவிகள். புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது.
சிறிது நேரத்துக்குப் பிறகு யுவனைத்
திரும்பிப் பார்த்தேன்.
தமிழகத்திலிருந்து பல மைல் தொலைவில்
இருக்கும் ஒரு நகரம். மூன்று நாட்கள் நடக்கும் ஒரு இசை நிகழ்ச்சி. தெரிந்தவர்கள் யாருமில்லை..
அவருடன் நண்பர்கள் யாரும் வரவில்லை. தனியாகத்தான் வந்திருக்கிறார். இதற்கென முன்பே
திட்டமிட்டு, வங்கியில் விடுப்பு எடுத்துக்கொண்டு, விடுதி அறையை ஏற்பாடு செய்து, இங்கே
வந்து மணலில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த வருடம் மட்டும் இல்லை. ஒவ்வொரு
வருடமும் இப்படித்தான்.
யுவன் தன்னை மறந்து இசையில் லயித்திருந்தார்.
தியானத்தில் இருப்பதுபோலவும், தன்னைச் சுற்றி ஒன்றுமே இல்லாததுபோலவுமான அமைதி. பல நேரங்களில்
கண் கலங்கினார். விம்மினார். என்னவோ, மேடையில் இருக்கும் பாடகர் அவருக்காக மட்டும்
பாடுவதுபோலவும் சுற்றிலும் வேறு யாருமே இல்லாததுபோலவுமான ஒரு காட்சி.
அவரைப் பார்க்கப் பார்க்க ஆச்சரியமாக
இருந்தது. தனக்குப் பிடித்த இசையைக் கேட்பதற்காக அத்தனை தொலைவு பயணப்பட்டு வந்து அந்த
குளிர் இரவில் மணலில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த யுவனின் அந்த சித்திரம் எனக்குள்
அப்படியே பதிந்து போனது.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னை
மறந்து தனக்குப் பிடித்த இசையில் ஆழ்ந்திருக்கும் அந்த யுவனின் சித்திரம், இசைக்கு
மட்டுமல்ல இலக்கியத்துக்கும் பொருந்தும்.
அவருக்குப் பிடித்திருக்கிறது. என்பதால்
எழுதுகிறார். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.
40 வருடங்களாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.
குறிப்பிடத்தக்க பெரிய அங்கீகாரங்களோ,
பெரிய விருதுகளோ வழங்கப்பட்டதில்லை. ஆனாலும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதிக்
கொண்டிருக்கிறார் என்பதே பெரும் சாதனைதான். தீவிர தமிழ் இலக்கிய மரபின் ஒரு அம்சம்
அது.
பெரிய அங்கீகாரங்களோ, குறிப்பிடத்தக்க
விருதுகளோ இல்லை என்கிற குறையை இன்று விஷ்ணுபுரம் விருது ஈடுகட்டியிருக்கிறது. இந்த
ஆண்டு மதிப்புக்கூட்டப்பட்ட விருது என்பது கூடுதல் சிறப்பு.
இந்தந்த வகைமைகளில் இப்படியெல்லாம் சிறப்பாகப்
பங்களித்திருக்கிறார் என்று பிரித்துப் பார்ப்பதைக் காட்டிலும் ஒட்டுமொத்தமாக அவரது
புனைவுகளுக்கான, எழுத்துக்கான அங்கீகாரம் என்று இதை எடுத்துக்கொள்வதே பொருத்தமாகவும்
சரியாகவும் இருக்கும்.
0
2
மகிழ்ச்சியான இந்தத் தருணத்தில் எனக்குள்
சில கேள்விகள் எழுகின்றன. உண்மையில், இந்தக் கேள்விகள் எனக்கு மட்டும் இருக்கிற கேள்விகள்
என்று நான் நினைக்கவில்லை. யுவனது வாசகர்கள் அனைவருக்குள்ளும் இந்தக் கேள்விகள் இருக்கும்
என்றே நம்புகிறேன். எனவே, அவர்களின் சார்பாக இந்தக் கேள்விகளை இங்கே நான் கேட்டுக்கொள்கிறேன்.
முதலாவது கேள்வி, இங்கே இன்று இந்த விருதைப்
பெற்றிருப்பது சந்திரசேகரனா அல்லது யுவன் சந்திரசேகரனா அல்லது எம். யுவனா? அல்லது இவர்கள்
மூவரும் அல்லாது கேசவ்சிங் சோலங்கியா?
அடுத்த கேள்வி, இந்த விழா யுவனின் கனவில்
நடந்துகொண்டிருக்கும் விழாவா? அல்லது நம் அனைவரின் கனவிலும் நடந்துகொண்டிருக்கும் விழாவில்
யுவன் இந்தப் பரிசைப் பெற்றிருக்கிறாரா? அல்லது இவை அனைத்துமே ஜெயமோகனின் கனவில் ஏற்கெனவே
நடந்து முடிந்த ஒன்றா?
இஸ்மாயிலும் கிருஷ்ணனும் சுகவனமும் இந்த
சபையில் எங்கேனும் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் மூவரும், தாயம்மா பாட்டியும், கேசவ்சிங்
சோலங்கியும்தான் யுவனாக இங்கே, கண்கள் தழுதழுக்க தொண்டை அடைக்க, மேடையில் அமர்ந்திருக்கிறார்களா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யுவனிடம்
நான் பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதையும் சற்று உரக்கவே சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால்,
உங்கள் அனைவருக்குமே தெரியும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிப் பழக்கமில்லை யுவனுக்கு.
கேள்விகளுக்கு பதிலாக, இன்னும் சில கேள்விகளைத்தான் முன்வைப்பார். எனவே, இவை என் கேள்விகள்
மட்டுமே என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.
0
3
ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் என்று குறிப்பிட்ட
சில சிறப்பம்சங்கள் இருக்கும். அந்த சிறப்பம்சங்களே பிற எழுத்தாளர்களிடமிருந்து அவரை
வேறுபடுத்திக் காட்டும்.
கவிதை, சிறுகதை, குறுங்கதை, நாவல், மொழிபெயர்ப்பு,
கட்டுரை என எல்லா இலக்கிய வடிவங்களிலும் எழுதியுள்ளார்.
ஒரு வாசகனாக, இவை அனைத்திலும், சில தனித்தன்மைகளை நான் கவனித்திருக்கிறேன். அவையே பிற
எழுத்தாளர்களிடமிருந்து யுவனை வேறுபடுத்திக் காட்டுகின்றன என்று நினைக்கிறேன்.
1.
எழுதத் தொடங்குபோது, பொதுவாக அவரவர்க்கு நன்கு தெரிந்த
வாழ்க்கையையே எழுத முனைவார்கள். பெரும்பாலும் அவரவர் சொந்த அனுபவங்களிலிருந்து சிலவற்றை
சொல்ல முயல்வார்கள். அதுவே வசதியும்கூட. ஆனால், யுவன் அப்படிச் செய்யவில்லை. சிறுகதை
எழுதலாம் என்று எண்ணியபோது கூடவே ஒரு யோசனையும் எழுந்திருக்கிறது. “ஏகப்பட்ட நீர் ஓடித்
திரிந்த நதியில் இப்போதுதான் மிதக்க ஆரம்பித்திருப்பவன் என்பதால், எளிமையாக எதைச் சொல்ல
முனைந்தாலும், ‘வேறு யாரோ முன்பே இதைச் சொல்லிவிட்டார்களோ’ என்ற சந்தேகம். முன்பே எழுதியதை
திரும்பவும் எதற்கு எழுதவேண்டும். எனவே, அவர் இதற்கு முன்பு யாரும் எழுதாதக் களங்களைத்
தேர்ந்தெடுத்தார்.
இந்துஸ்தானி
இசை, ஜென் தத்துவம், பௌத்த தத்துவம், மாற்று மெய்ம்மை போன்று தமிழ்ப் புனைவில் அதுவரை
அதிகமும் பேசப்படாமலிருந்த களங்களை, தனது புனைவுகளுக்கான களங்களாக மாற்றிக்கொண்டார்.
அதுவே அவரது எழுத்துகளின் முதல் தனித்தன்மை.
2.
தத்துவம், தர்க்கம் இரண்டுமே ஆழம் மிகுந்த அறிவுத் துறைகள்.
இவற்றைக் குறித்து புனைவுக்குள் விவாதிப்பது என்பதோ அல்லது இவற்றை அடிப்படையாகக்கொண்டு
புனைவுகளை எழுதுவது என்பதோ சவாலான ஒன்று. அத்தனை சுலபமாக ஒரு கதையிலோ நாவலிலோ தத்துவத்தையும்
தர்க்கத்தையும் இணைத்து எழுதிவிட முடியாது.
ஆனால், யுவன்
தன் புனைவுகளில் இவற்றை மிகுந்த சாதுர்யத்துடன் கையாண்டிருப்பது அவருடைய தனித்தன்மைகளில்
இரண்டாவதாகும்.
ஒரு கதையிலோ,
நாவலிலோ முரண்கள், மோதல்கள் வழியாக ஒரு தரப்பை மிக நேர்த்தியாக உருவாக்குவார். அதை
மிக அழகாக வளர்த்து மேலெடுப்பார். வாசகன் அந்தத் தரப்பை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளும்
குறிப்பிட்ட ஒரு தருணத்தில், அந்தத் தரப்பை ஒட்டுமொத்தமாக காலி செய்யும் விதமாக சில
கேள்விகளை எழுப்பிவிட்டு நகர்ந்துவிடுவார்.
யுவனின் புனைவு
விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.
3.
காலமும் இடமும் இயற்பியலின் இரு பெரும் கூறுகள். TIME
& SPACE. இந்தக் காலம், இடம் குறித்து அறிவியல் வகுத்துள்ள வரையறைகளுக்கு அப்பாலான
சில கேள்விகளும் அனுபவங்களும் மனித வாழ்வில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுள்ளன. ‘அறிவியல்
காணாத இத்தகைய மர்மங்கள் நம் எல்லோருக்குமே பரிச்சயமானது’தான். இந்த அனுபவங்களை, மர்மங்களை
வெவ்வேறு தினுசாக சொல்லிப் பார்ப்பது யுவனுக்குப் பிடித்தமானது.
அறிவியல் முன்வைக்கும்
கருதுகோள்களை, இந்தியச் சூழலில், இந்திய அனுபவங்களோடு பொருத்திப் பார்க்கவே தொடர்ந்து
அவர் முயல்கிறார்.
அறிவியலையும்
ஆன்மவியலையும் இரண்டு இறக்கைகளாக வைத்து கொஞ்சதூரம் பறந்து பார்க்கும் ஆசையின் விளைவாகத்தான்
சில கவிதைகளும், கதைகளும், குறுங்கதைகளும் நமக்குக் கிடைத்துள்ளன.
4.
தற்செயலான நிகழ்வுகளே நம் வாழ்க்கையை ரசமுள்ளதாக ஆக்குகின்றன.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தற்செயல் அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அவ்வாறான தற்செயல்
நிகழ்வுகளினூடாக ஒரு பொதுத்தன்மையை கண்டடைய முயல்கிறார் யுவன். வெவ்வேறு காலத்தில்,
வெவ்வேறு இடங்களில் நடக்கும் வெவ்வேறு தற்செயல்கள் அனைத்தையும் ஒரு பொதுச்சரட்டில்
கோர்க்கும் யுவனின் புனைவுத்தியே அவரது எழுத்தில் காணக் கூடிய நான்காவது தனித்தன்மை.
மானுட வாழ்வென்பதே
வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்களைக்கொண்டு நடத்தப்படும்
தற்செயல் நாடகம்தான் என்பதையே அவர் தன் கதைகளில் வழியே சொல்லிப் பார்க்கிறார். ஒரு
மனிதனின் வாழ்வில் எல்லாமே தற்செயல்களாகவே அமையும் என்றால் அதுவே அவனது வரலாறாகவும்
இருக்கும். அதில் ஒரு தற்தொடர்ச்சியும் இருக்கும் என்ற அவரது தரப்பின் புனைவு வடிவங்களாகவே
பல கதைகளும் குறுங்கதைகளும் நாவல்களும் உள்ளன.
5.
கணிதத்தில் மிகப் பிரபலமான ஒரு கோட்பாடு நிகழ்தகவு.
PROBABILITY. நாம் எல்லோருமே படித்திருப்போம். ஒரு நாணயத்தைச் சுண்டிவிடும்போது தலை
விழக்கூடிய சாத்தியங்கள் எத்தனை, பூ விழக் கூடிய சாத்தியங்கள் எத்தனை என்பதுதான் நிகழ்தகவு.
இந்த அம்சத்தில் உள்ள சுவாரஸ்யமான சாத்தியங்களை யுவன் தன் எழுத்தில் முயல்கிறார். நாணயத்தைச்
சுண்டிவிடுவதற்கு பதிலாக யுவன் கதைகளையோ சம்பவங்களையோ சுண்டிவிடுகிறார். அதில் உள்ள
தகவுகளை அடுக்கியும் கலைத்தும் தனது புனைவுவெளியை உருவாக்குகிறார். ஒன்றுக்கொன்று தொடர்புடைய
சாத்தியங்களையும், தொடர்பில்லாத தகவுகளையும் இணைக்கும்போது உருவாகும் சிக்கல்களில்
அவருக்கும் பெரும் ஆர்வம் உண்டு. ஒரு சம்பவம் இப்படி நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்
என்று ஒரு சரடு. அதே சம்பவம் அவ்வாறு இல்லாமல் இன்னொரு மாதிரி நடந்திருந்தால் என்னவெல்லாம்
ஆகியிருக்கும் என்பது இன்னொரு சரடு. இப்படி பல சரடுகளை உருவாக்கி தொடர்ந்து அவற்றைப்
பின்னிச் செல்ல முடியும் அவரால்.
0
4
யுவனின் எழுத்தில்
காண முடிகிற தனித்தன்மைகளாக நான் குறிப்பிட்டவை.
1.
அதிகமும் எழுதப்படாத புதிய களங்கள்
2.
தத்துவம், தர்க்கத்தை புனைவுகளில் இணைத்தது
3.
அறிவியல் வரையறைகளுக்கு அப்பாலான அனுபவங்களை எழுதுவது.
4.
தற்செயல்களின் பொதுமையைக் கண்டடைய முற்படுவது
5.
நிகழ்தகவின் சாத்தியங்களை எழுதுவது
மேலே சொன்ன
இந்தத் தனித்தன்மைகளை, நாம் வாசித்துப் பழகிய வடிவிலோ மொழியிலோ எழுதினால் அது பொருத்தமாக
இருக்காது. வழக்கமான, சம்பிரதாயமான கதை வடிவங்களும் மொழியும் இவற்றைச் சொல்லக் கைகொடுக்காது.
ஒரு வடிவத்தின்
விளிம்புகள் போதவில்லை என்று தோன்றும்போது புதிய வேறு வடிவங்களை முயல்வதே இயல்பு.
எனவே, இதற்கு
பொருத்தமான ஒரு வடிவத்தையும் மொழியையும் கண்டடைய வேண்டியது முக்கியம். அதே நேரத்தில்
அந்த புதிய வடிவமும் மொழியும் வாசகன் ஏற்கும்படியானதாக இருக்க வேண்டும் என்பது அதைவிட
முக்கியம்.
தனது களங்களுக்கும்
உத்திகளுக்கும் பொருத்தமான வடிவத்தையும் மொழியையும் யுவன் கண்டடைந்துவிட்டார் என்றே
சொல்லலாம். அவரது பெரும்பகுதி புனைவுகளுமே அத்தகைய வடிவத்திலும் மொழியிலுமே அமைந்துள்ளன
என்பதை கவனிக்கலாம்.
முதல் நாவலான
‘குள்ளச்சித்தன் சரித்திரம்’ நாவலிலே வடிவம், மொழி, சொல்முறை சார்ந்த வித்தியாசங்களை
துலக்கமாக நம்மபால் பார்க்க முடியும்.
அதே சமயத்தில்,
நீண்ட தமிழ் நாவல்களின் மரபின் தொடர்ச்சியாகவே இந்த நாவலும் இருக்கிறது என்ற CLAIM
அதன் தலைப்பிலேயே உள்ளது. ‘பிரதாப முதலியார்
சரித்திரம்’, ‘கமலாம்பாள் சரித்திரம்’, ‘பத்மாவதி சரித்திரம்’ போன்று ‘குள்ளச் சித்தன்
சரித்திரம்’. அவ்வாறான ஒரு பெருமரபின் தொடர்ச்சியாகக் கருதிய தன் நாவலை அவர் எழுத எடுத்துக்கொண்ட
வடிவம் மீநாவல் என்று சொல்லப்படும் META FICTION வடிவம். நாவலுக்குள் ஒரு புத்தகம்,
அந்தப் புத்தகமேதான் நாவலும், எழுதியவர், வாசித்தவர், வாசிப்பவர் என எல்லோருமே அதன்
கதாபாத்திரங்கள். இதற்குள் முன்னுரை, பதிப்புரை என்று எல்லாமே உண்டு.
முதல் நாவலுக்கு
முற்றிலும் மாறாக அமைந்தது ‘பகடையாட்டம்’. கற்பனையான ஒரு மலை தேசத்தில் நிகழும் அரசியல்
மர்மக் கதை இது. இந்த நாவலிலும் ஒரு பூர்வ கிரந்தம் உண்டு. சோமிட்சுகளின் வரலாறு உண்டு.
நாடோடியாக அலைந்து திரியும் ஒரு ஆப்பிரிக்கரும் தலைமறைவாக அலையும் முன்னாள் நாஜியும்
இதன் கதாபாத்திரங்கள். இக் கதாபாத்திரங்கள் முன்னும் பின்னுமாக சொல்லும் கதையின் வடிவில்
அமைந்தது இந்த நாவல்.
நினைவுதிர்
காலமும், கானல் நதியும் தமிழ் வாசகர்களுக்கு அதிகமும் பரிச்சயமற்ற களத்தைக் கொண்டவை.
இந்துஸ்தானி இசையைப் பின்னணியாகக் கொண்டவை. இதன் கதை மாந்தர்கள் வங்காளிகள். நினைவுதிர்
காலம் நாவலின் நாயகன் கருவி இசைக் கலைஞர். வயலின் வித்வான். கானல் நதியின் நாயகனோ குரலிசைக்
கலைஞர். கானல் நதி ஒரு வாழ்க்கை வரலாற்றின் சாயலில் அமைக்கப்பட்டது. நினைவுதிர் காலம்
ஒரு நீண்ட நேர்காணலின் வடிவில் இருப்பது. இரண்டுமே ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை
என்ற வடிவத்தைக் கொண்டவை.
மொழிபெயர்ப்பு
என்ற குறிப்புடன் இன்னொரு நாவலும் உண்டு. ‘எதிர்க்கரை’ நாவல். டென்சின் எனும் திபெத்தியர்
எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு. தவிர, இந்த நாவல் இரண்டு நபர்களின் நினைவோட்டம் போன்ற
வடிவில் அமைந்திருப்பது. இல்லறத்தை ஒரு கரையாகவும், துறவை மறு கரையாகவும் கொண்டு ஓடும்
வாழ்வைக் குறித்த விசாரணை. இந்த நாவலின் காலமும் சுதந்திரம் அடைந்த காலத்தை ஒட்டி அமைந்தது.
ஒரு பயணத்தின்போது
நண்பர்கள் இஸ்மாயில், கிருஷ்ணன், சுகவனம் மூவரும் எழுதும் மூன்று கதைகளின் தொகுப்பாக
அமைந்தது போன்ற வடிவத்தைக் கொண்டது ‘பயணக் கதை’. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு மொழியில்.
ஒன்று பத்திரிக்கையாளனின் கதை, இன்னொன்று எழுத்தாளனின் கதை. மூன்றாவது, ஒரு ஆசிரமத்தின்
கதை. நாவல் முழுக்க ஏராளமான அடிக்குறிப்புகள் உண்டு. இந்த மூன்று கதையையும் நண்பர்கள்
சொல்ல அதை எழுதியது ஒருவர் என்றும் திருத்தத்துக்கான கரட்டு வடிவமே இங்கு வாசிக்கக்
கிடைப்பது என்றும் குறிப்புகள் உண்டு.
தனது சிறுகதைகளிலும்
வடிவம் சார்ந்த இந்த முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான
‘ஒளி விலக’லில் உள்ள கதைகளிலேயே அவற்றைக் காணமுடியும். தாயம்மா பாட்டி சொன்ன கதைகள்,
23 காதல் கதைகள் போன்றவற்றை யோசித்துப் பார்க்கலாம். ‘கதைக்குள் கதை சொல்பவர்’ என்று
யுவனுக்கு ஒரு அடையாளம் உண்டு. இவ்வாறான ஒரு பொது அபிப்ராயத்தை உருவாக்கியதில் இந்த
முதல் தொகுப்புக்கு முக்கியமான இடம் உண்டு. அதில் உள்ள கதைகள் அவ்வாறிருந்தன. உண்மையில்
நேரடியான, சம்பிரதாயமான வடிவம் கொண்ட கதைகளை, பல நல்ல கதைகளை, எழுதியிருக்கிறார். ஆனால்,
அந்தக் கதைகளை அவர் எழுதியதாக, யுவனே சத்தியம் செய்து சொன்னாலும், ஒப்புக்கொள்ளமாட்டோம்
என்கிறார்கள்.
வேறுபட்ட களங்களுக்கேற்ப
வடிவத்தைக் கண்டடைந்த யுவன் அதற்கேற்ற மொழியையும் அமைத்துக்கொண்டார். அவரது கதைமொழி
கச்சிதமும் செறிவும் கொண்டது. கவிதை, தத்துவம், தர்க்கம் ஆகியவற்றின் சாரத்தையும் சாயலையும்
கொண்டது.
அவருடைய வரிகள்
பலவும் மேற்கோள்களாகப் பயன்படுத்தத் தகுந்தவை. கவிதை, தத்துவம், வாழ்க்கை நோக்கு என்று
எல்லாவிதத்திலும் அவை பொருந்தும்.
அவருடைய உரையாடல்கள்
மிக நேர்த்தியானவை, வெவ்வேறு பிரதேசங்களில் பேசப்படும் மொழிகளின் நுட்பங்களை, வித்தியாசங்களை
அச்சுஅசலாக அப்படியே எழுதியிருப்பார்.
உண்மையில்,
‘நினைவுதிர் காலம்’, ‘கானல் நதி’, ‘எதிர்க்கரை’ போன்ற நாவல்களில் அவர் கையாண்டிருக்கும்
மொழி சற்று சிக்கலானது. ‘மொழிபெயர்ப்பு’ என்ற
வடிவத்தினால் வருகிற சிக்கல் இது. எழுத்தாளனின் இயல்பான மொழி அல்ல. இயல்பான மொழியை
இன்னும் சற்று தட்டிக் கொட்டி நேராக்கியது போன்ற விரைப்புத்தன்மை தென்படும். ஒரு செயற்கை
இழை அதில் ஒட்டிக்கொண்டிருக்கும். பொதுவாக, வாசிப்புக்கு அத்தனை உவப்பான மொழி அல்ல
இது. ஆனாலும், அவ்வாறான ஒரு சவாலான மொழியை உருவாக்கி அதை வாசகனுக்கு நெருக்கமான ஒன்றாக
மாற்றியதுதான் யுவனின் சாமர்த்தியம்.
0
5
கதைக்களம்,
வடிவம், மொழி என எல்லாவற்றிலும் சம்பிரதாயங்களை, வழக்கங்களை மீறும் எழுத்தாளர் யுவன்
என்று சொன்னேன். இப்படிப்பட்ட ஒருவர் எழுதுவதை வாசகர்கள் எப்படி ஒத்துக்கொள்வார்கள்?
எப்படி படிப்பார்கள்? கதை என்று ஒன்றை ஒழுங்காக சொல்லுவதில்லை. அப்படியே சொன்னாலும்
அந்தக் கதைக்கு ஒரு முடிவும் இருப்பதில்லை. பேசுகிற விஷயங்களெல்லாம் நல்லபடியாகத்தான்
இருக்கின்றன. பௌத்தம், துறவு, இசை, எழுத்து, எழுத்தாளன், சாமியார்கள், ஊர் சுற்றுவது
என்று பலவற்றையும் பேசுகிறார். விரிவாகவும் விபரமாகவும் பேசுகிறார். ஆனால், இதையெல்லாம்
நேரடியாக சொல்லுவதில்லை. இதுமாதிரியெல்லாம் எண்ணம் தோன்றும்.
உண்மையில்,
அவரது எழுத்துகள் பலவும் வாசகர்களை அத்தனை எளிதில் அனுமதிக்காத தன்மைகளைக் கொண்டவை.
தடைகளைக் கொண்டவை. அவரது புனைவுத்திகளும் வடிவங்களும் கதைமொழியும் வாசகனுக்கு சவால்
விடுப்பவை. அதிக கவனத்தையும் ஈடுபாட்டையும் கோருபவை.
அவரது தனித்தன்மைகளாக
சொல்லப்பட்டவைதான் வாசகனுக்கான சவால்களும் கூட என்பது விநோதமானதுதான்.
யுவனின் எழுத்துகளில்
வாசகன் சந்திக்க நேரும் முதல் சவால், கதைக்களங்கள். ஏற்கெனவே சொன்னதுபோல வாசகனுக்கு
அறிமுகம் இல்லாத கதைக் களங்கள். இந்துஸ்தானி இசை பற்றிய குறைந்தபட்ச ஆர்வமோ, தகவல்களோ
இல்லாத ஒரு வாசகன் நினைவுதிர் காலத்தையும் கானல் நதியையும் முதல் சில பக்கங்களிலேயே
மூடி வைத்துவிடும் அபாயம் உண்டு.
இரண்டாவது சவால்,
அந்தக் கதைகள் நிகழும் நிலம். அவரது நாவல்களில் பலவும் வாசகன் அறிந்த நிலங்களில் நடப்பவை
அல்ல. அவனை வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விடுகிறார். வங்காளம், மகாராஷ்டிரம், தில்லி, வடகிழக்கு மலைப்
பிரதேசம் என்று புதிய நிலங்களில் அலைய விடுகிறார். கரட்டுப்பட்டியிலும் மதுரையிலும்
சென்னையிலும் திரிந்தபோது ஏற்படாத ஒரு மிரட்சியும் தயக்கமும் இந்த நிலங்களில் இறக்கிவிடப்படும்போது
தொற்றிக் கொள்கின்றன.
அடுத்த சவால்,
நேரடியாக அல்லாது மொழிபெயர்க்கப்பட்டது என்பதான மொழி. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
மொழிபெயர்க்கப்பட்டது. தன்னிச்சையான எழுத்தின் மொழிக்கு உள்ள சில வசதிகளும் இயல்பும்
இவ்வாறான மொழியில் மட்டுப்படுகிறது. ஒரு வகையில் செயற்கையானது. இதுவே வாசகனுக்கு நெருக்கமான
ஒன்றல்ல.
நான்காவது சவால்,
சிதறுண்ட துண்டுகளை அமைந்த கதைகள். நேரடியாக
கதைசொல்வது போல இருந்தாலும், அவரது கதைகள் பலவும் நேர்கோட்டில் அமைந்தவை அல்ல. சித்திரம்
மொத்தமும் உடைக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் சிதறுண்டு கிடக்கும் அதன் சில்லுகளை நிதானமாகப்
பொருத்தி முழுமையை காண்பதற்கு உழைப்பும் பொறுமையும் தேவை. அதேசமயம், சிதறுண்ட ஒவ்வொரு
துண்டுமே தன்னளவில் முழுமையானது என்பதையும் மறந்துவிடக்கூடாது. ‘கடற்கரையின் ஒவ்வொரு
மணல் துகளும் ஒரு முழு பிரபஞ்சம்’ என்பது அவரது நம்பிக்கை.
இந்த நான்கு
அம்சங்களுமே வாசகனை உடனடியாக உள்ளிழுத்து விடாத அபாயங்களைக் கொண்டவை,
ஆனால், இந்த
அபாயங்களை தனக்கு சாதகமான அம்சங்களாக மாற்றிக்கொண்டிருப்பதுதான் யுவனின் புனைவுத்திறன்.
நம் எல்லோருக்குமே,
ஒளித்து வைத்திருப்பதைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் உண்டு. புதையல் வேட்டையின்போது ஒவ்வொரு
துப்பைக் கொண்டும், அடுத்த இடம் நோக்கி நகரும் ஆர்வம் எல்லோருக்குமே பிடித்தமானது.
யுவனின் எழுத்து அவ்வாறான ஒரு புதையல் வேட்டை அனுபவத்தையே அளிக்கிறது. ஒளித்து வைத்திருப்பதைக்
கண்டுபிடி என்ற சவால் வாசகனுக்குப் பிடித்திருக்கிறது. அந்த நாவலுக்குள் அல்லது கதைக்குள்
ஈர்க்கப்படுகிறான். இதனால் வாசகனும் நாவலின் ஒரு பகுதியாகிவிடுகிறான்.
சரி, இத்தனை
சவால்களையும் தாண்டி, இந்த நாவலை நான் படிக்கத்தான் போகிறேன் என்று ஒரு வாசகன் சொன்னால்,
என்ன செய்யவேண்டும். அப்பாடி, எனக்கும் ஒரு வாசகன் கிடைத்துவிட்டான் என்றால் கண்ணீர்
மல்க அவனை சந்தோஷத்துடன் ஆரத்தழுவி வரவேற்கத்தானே வேண்டும். ஆனால், யுவன் அப்படிச்
செய்வதில்லை. அவருதான் இந்த நாவலைப் படிக்கறேன்னு வந்திருக்காரே. பாவம், நிம்மதியா
படிக்கட்டுமேன்னு விடமாட்டார். அந்த நாவலிலோ கதையிலோ அவனை முழுமையாக ஒன்றிவிட அனுமதிக்கமாட்டார்.
அத்துடன் அந்த வாசகர் உணர்ச்சிகரமாக பிணைந்துவிடுவதை விரும்புவதில்லை யுவன். அதனால
என்ன பண்ணுவார்னா, காதுக்குள்ள சொல்லிட்டே இருப்பார். இதப்பாரு, நான் சொல்வதெல்லாம்
கதை, இதுவொரு புனைவு, இதை நம்பாதே என்று தொடர்ந்து சொல்லி சொல்லி அந்த நாவல்லேர்ந்து
அவரை விலக்கியபடியே இருப்பார். ஆச்சரியமா இருக்கா. ஒரு எழுத்தாளன் இப்பிடியா பண்ணுவார்னு
யோசிப்போம். ஆனால், யுவனை நம்பவே கூடாது. கள்ளன். இதுவும் அவருடைய புனைவுத்திதான்.
எதுவொன்றை நாம் வேண்டாம் என்று சொல்கிறோமோ அதில்தானே நமக்கு ஆர்வம் கூடும். எனவே, படிக்காதே,
ரொம்ப ஒட்டிக்காதே என்று யுவன் சொல்லுந்தோறும் வாசகன் இன்னும் தீவிரமாக அதில் ஆழ்ந்துவிடுகிறான்.
நீங்க என்ன சொல்றது, நா அப்பிடித்தான் ஒட்டிக்குவேன், உணர்ச்சி வசப்படுவேன்னு அநத்
நாவலுக்குள்ள ஒரு வாசகர் வந்துட்டா அதுக்கப்பறம் வெளிய போக வழியே கிடையாது.
இதை இன்னும்
வேறு மாதிரி சொல்லிப் பார்க்கலாம். யுவனது எழுத்துகள், வாசகருடன் அவர் ஆடும் சொற்களின்
பகடையாட்டம். அல்லது கதைகளின் பகடையாட்டம். இந்த பகடையாட்டத்தை ஆடவேண்டிய கட்டாயம்
வாசகனுக்கு உண்டு. முடிந்தால் வெட்டு இல்லையேல் வெட்டுப்படு. அவரது வாசகர்கள் பலரும்
வெட்டுப்பட்டு களத்தில் கிடப்பவர்கள்தான்.
0
6
40 வருட கால எழுத்து. தனக்குப் பிடித்திருக்கிறது
என்பதால் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். இப்படியான நீண்ட ஒரு காலத்தில், யார் வாசிக்கிறார்கள்
எப்படி வாசிக்கிறார்கள் என்றெல்லாம் பெரிதாக தெரியாமல், தொடர்ந்து உற்சாகத்தைத் தக்க
வைத்துக்கொண்டு எழுதுவது என்பது மிக சவாலானது. இப்படி இதற்குள் தன் வாழ்க்கையை நேரத்தை
ஒப்படைக்க பெரும் துணிச்சல் வேண்டும். அதைவிட தீராத ஆர்வமும் அர்ப்பணிப்பும் வேண்டும்.
இதுதான் நான், இதைத்தான் நான் செய்யவேண்டும் என்ற நம்பிக்கையும் சொல்லப்போனால் தலைக்கனமும்
வேண்டும்.
யுவனுக்கு அவ்வாறான தெளிவு இருந்தது.
தான் விரும்புவதை விரும்பும் நேரத்தில் செய்ய அனுமதிக்கும் வேலையைத் தேர்ந்தெடுத்துக்
கொண்டார். பதவி உயர்வுகளை தவிர்த்தார். அலுவலக நேரத்துக்கு அப்பால் அது தன்னைத் தொடரவோ
பாதிக்கவோ அவர் அனுமதிக்கவில்லை.
தெளிவு வந்துவிட்டால் ஆர்வமும் அர்ப்பணிப்பும்
உடன் வந்துவிடும். எனவே, எழுத்து அவர் அன்றாடங்களில் ஒன்று. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து
எழுதுவது. எழுதுவதைப் பற்றி பேசுவது. தேவையானவற்றை ஊன்றி வாசிப்பது, விவாதிப்பது என்று
ஒரு எழுத்தாளனாகவே இருந்துகொண்டிருக்கிறார். பயணங்கள், கூட்டங்கள்.
பலருக்கும் தெரிந்திருக்கும். யுவனுக்கு
பேனாவை பிடித்து எழுதுவது சிரமம். அவருடைய விரல்கள் ஒத்துழைக்காது. அப்படித்தான் அவர்
கவிதைகளை எழுதினார். எழுதுவதற்கு கணினியைப் பயன்படுத்த முடியும் என்ற வாய்ப்பை அவர்
தீவிரமாகப் பற்றிக்கொண்டார். கடுமையான சலிக்காத முயற்சியின் பலனாக புனைவுகளை எழுத முடிந்தது.
ஒருவேளை, கணினிப் பயன்பாட்டை அவர் பற்றிக் கொண்டிருக்காவிட்டால் அல்லது அதில் தீவிரம்
காட்டாமல் இருந்திருந்தால் அவர் கவிதையோடு நின்றிருக்கக்கூடும்.
இது தவிரவும் அவருக்கு தோல் தொடர்பான
உடல் உபாதை உண்டு. அதற்கான சிகிச்சைகள் மருந்துகள் உண்டு. ஆனாலும் அவர் எதையும் தவிர்த்தில்லை.
பயணங்கள், இலக்கியக் கூட்டங்கள், பயிற்சிப் பட்டறைகள் எதையும் அவர் தவிர்த்ததில்லை.
உடல் சார்ந்த தடைகள் தன் வேலையைப் பாதிக்க அனுமதித்து கிடையாது.
என்ன, இதன் காரணமாக கொஞ்சம் செல்லம்
கூடிப்போகும், அவ்வளவுதான்.
0
7
என்னைவிட யுவன் 5 வயது மூத்தவர். அண்ணன்.
ஆனால், எனக்குத் தெரிந்து சந்தித்த முதல் நாளிலிருந்தே ஒருமையில்தான் பேசியிருக்கிறேன்.
இந்த நாற்பதாண்டு காலத்தில், ஒன்றிரண்டு ஆண்டுகள் முன் பின்னாக இருந்திருக்கலாம், ஒன்றாகவே
இணைந்தேதான் பயணம் செய்திருக்கிறோம்.
இருவரது சிறுகதைத் தொகுப்பும் ஒரே ஆண்டில்
வெளியாயின. யுவனின் ‘ஒளி விலகல்’ சிறுகதைத் தொகுப்பும் என்னுடைய ‘பிறிதொரு நதிக்கரை’
தொகுப்பும் ஒரே ஆண்டில் 2001ஆம் வருடம் வெளியாயின.
அதேபோல, இருவருடைய முதல் நாவலும் ஒரே
ஆண்டில் வெளிவந்தன. 2002ஆம் ஆண்டு. அம்மன் நெசவும், குள்ளச் சித்தன் சரித்திரமும் தமிழினி
வெளியிட்டது.
இருவரும் மொழிபெயர்ப்பில் ஆசையுடன் ஈடுபட்டிருக்கிறோம்.
குற்றாலத்தில் தொடங்கி, உதகை, ஏற்காடு,
நாகர்கோவில் என்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு இலக்கிய முகாம்களில் தொடர்ந்து பங்கேற்றிருக்கிறோம்.
தொடர்ந்து அவர் கவிதை எழுதுகிறார். நான்
எழுதுவதில்லை.
இருவரும் சேர்ந்து சிறுகதைப் பயிலரங்குகளை
நெறிப்படுத்தியிருக்கிறோம். கவிதை அரங்குகளை ஒருங்கிணைத்திருக்கிறோம்.
இத்தனை காலம் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறோம்
என்பது ஒற்றுமை. இதைத் தாண்டி அவரது இலக்கியம் சார்ந்த நம்பிக்கைகள், அபிப்ராயங்கள்
வேறு. கொள்கைகள் வேறு. எனது நம்பிக்கைகளும் அபிப்ராயங்களும் வேறு. அவருடைய புனைவுத்திகளும்
அவர் செயல்படும் வடிவங்களும் வேறு வேறு. என்னுடைய புனைவுத்திகளும் வடிவங்களும் வேறு.
இருவருக்குமிடையே இலக்கியம் சார்ந்து கறாரான கருத்து வேறுபாடுகள் உண்டு.
ஆனால், இலக்கியம் சார்ந்த அக்கறையில்,
அர்ப்பணிப்பில் எந்த முரண்பாடும் இருந்ததில்லை. சமரசத்தையும் அனுமதித்ததில்லை. எனவேதான்,
இத்தனை வேறுபாடுகளைத் தாண்டி கருத்து முரண்களைத் தாண்டி இருவரும் நெருக்கமான நண்பர்களாக
இருக்க முடிகிறது.
யோசித்துப் பார்த்தால், இவ்வாறான இணக்கமும்
நெருக்கமும் ஒரு சில நண்பர்களுடன்தான் வாய்க்க முடியும். இந்த நட்பும் நெருக்கமும்
இலக்கியத்தால், எழுத்தால் வாய்த்ததுதான். ஆனால், அதையும் தாண்டியது. அந்த வகையில்,
நெருக்கமான என் நண்பனுக்கு கிடைத்த விருது எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது.
இதற்கு முன்பு, ‘நினைவுதிர் காலம்’ நாவலை
அறிமுகப்படுத்திப் பேசினேன். அவரைப் பற்றியோ அவருடைய எழுத்துகளைப் பற்றியோ வேறு சந்தர்ப்பங்களில்
பேசவோ எழுதவோ வாய்க்கவில்லை. இன்று, யுவன் சந்திரசேகர் பெருமைக்குரிய விஷ்ணுபுரம் விருது
பெற்றிருக்கும் இந்தத் தருணத்தில் அவருடைய எழுத்துகளைக் குறித்து சில அபிப்ராயங்களைச்
சொல்ல வாய்த்ததில் மகிழ்ச்சி.
யுவன் சந்திரசேகருக்கும், எம்.யுவனுக்கும்,
நண்பனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
0
( டிசம்பர் 2023 விஷ்ணுபுரம் விருது விழாவில் நிகழ்த்திய வாழ்த்துரை )