0
இரா.முருகன் எழுதத் தொடங்கியது 1977ஆம்
ஆண்டு. இன்று கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐம்பது ஆண்டுகளில் ஐம்பதுக்கும்
மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இன்றும் தனது வலைத்தளத்தில் அன்றாடம் எழுதிக்
கொண்டிருக்கிறார்.
எல்லோரையும் போலவே கவிதைகளில் தொடங்கியது
அவரது இலக்கியப் பயணம். அவர் சிவகங்கையைச் சே
ர்ந்தவர். அன்னம் மீரா அவரது தமிழாசிரியர்.
அழ.வள்ளியப்பா அவரது ஆதர்சமான கவிஞர். எனவே, அவர் கவிதைகள் எழுதியதில் எந்த ஆச்சரியமும்
இல்லை. அவரை தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்திய கவிதையின் பெயரிலேயே ஒரு தொகுப்பு
வெளிவந்துள்ளது. அவர் எழுதிய வெண்பாக்கள் இரு தொகுதிகளாக வெளியாகியுள்ளன. நடையானந்தா
கவிதைகள் என்றொரு தொகுப்பும் உண்டு.
கவிதைகளை எழுதத் தொடங்கிய அவர் விரைவிலேயே
கவிதையிலிருந்து சிறுகதைக்கு நகர்ந்துவிட்டார். கணையாழி, சுபமங்களா போன்ற இதழ்களில்
வெளியான அவரது சிறுகதைகள் கவனம் பெற்றவை. இதுவரை எழுதியிருக்கும் 200 கதைகள், பத்து
சிறுகதைத் தொகுதிகளாக வெளியாகியுள்ளன.
இராப் பத்து, பகல் பத்து, தகவல்காரர்
உள்ளிட்ட அவரது குறுநாவல்களும் மூன்று தொகுதிகளாக வெளியாகியுள்ளன.
இரா.முருகன் இதுவரை 12 நாவல்களை எழுதியிருக்கிறார்.
அவரது முதல் நாவல் ‘மூன்று விரல்’. கணினி உலகை பின்னணியாக கொண்டது. கணினித் துறை சார்ந்த
எழுத்துகள் என்று ஒரு தனி வகைமையே இன்று தமிழில் உருவாகியுள்ளது. முக்கியமான பல நாவல்கள்
வெளிவந்துள்ளன. நவீன வாழ்வை கட்டமைத்துள்ள இத்துறை சார்ந்தவர்களின் வாழ்வைக் குறித்து
2006இல் இரா.முருகன் எழுதிய இந்த நாவலே இவ் வகைமையில் எழுதப்பட்ட முதல் நாவல்.
‘அரசூர் வம்சம்’ நாவல் தொடர் இரா.முருகனின்
சாதனை. திண்ணை இணைய இதழில் ‘அரசூர் வம்சம்’ தொடராக வெளியானது. மாய யதார்த்த பாணியில்
இரு குடும்பங்களின் கதையைச் சொல்வது இந்த நாவல்.
விஸ்வரூபம், அரசூர் வம்சத்தின் இரண்டாம்
பாகம். அளவில் சற்று பெரிய நாவல். 102 அத்தியாயங்களைக் கொண்டது. மிக விரிவான களத்தையும்
காலத்தையும் கொண்டது.
மூன்றாவது பாகமாக எழுதப்பட்ட நாவல்
‘அச்சுதம் கேசவம்’ கிட்டத்தட்ட சம்பிரதாயமான நாவல் வடிவைக் கொண்டது. முந்தைய இரண்டு
நாவல்களைப் போலன்றி நேரடியான சித்தரிப்பு முறையிலானது.
நான்கு பாகங்களைக் கொண்ட அரசூர் வம்ச
தொடர் நாவல்களின் நான்காம் பகுதி வாழ்ந்து போதீரே. இதுவே இத்தொடர் நாவலின் நிறைவுப்
பகுதியும்.
அடுத்த முக்கியமான பெருநாவல் மிளகு.
நானூறு வருட மிளகு வணிகத்தின் சமூக பொருளாதார அரசியலை விரிவாகப் பேசிய நாவல்.
இவற்றைத் தவிர இன்னும் ஐந்து நாவல்களை
எழுதியிருக்கிறார்.
இரா முருகன் நாடக ஆசிரியரும்கூட. சாவடி
என்றொரு நாடகம் அவர் பட்டியலில் உண்டு. சென்னைத் துறைமுகத்தில் எம்டன் கப்பல் குண்டு
போட்ட நூற்றாண்டையொட்டி இதை எழுதியிருக்கிறார். சென்னையின் புகழ்பெற்ற கொத்தவால் சாவடியே
இதன் களம்.
இரா முருகன் ஒரு கட்டுரை எழுத்தாளரும்கூட.
கணினிகள் குறித்த அவரது கட்டுரைகள் பிரபல இதழ்களில் வெளியானவை. எளிமையும் நகைச்சுவையுமாய்
கணினி தொழில்நுட்பத்தை பயன்பாடுகளை விளக்குபவை. ராயர் காபி கிளப், இலக்கிய அரட்டைக்கான
இணையக் குழுமத்தில் பேசப்பட்டவற்றின் எழுத்து
வடிவம். தனது லண்டன் அனுபவங்களை, அதன் வரலாற்றுத் தகவல்களோடு சேர்த்து ‘லண்டன் டயரி’யாக
எழுதியிருக்கிறார். அவரது வலைப்பூவின் பெயர் ‘வேம்ப நாட்டு காயல்’. அதில் எழுதியவற்றை
அதே பெயரில் தொகுத்திருக்கிறார். கல்கியில் தொடராக வெளிவந்த கட்டுரைகள் அடங்கியது
‘டிஜிட்டல் கேன்டீன்’. புனைவு, இலக்கியம், கணினி அல்லாமல் பிற துறை சார்ந்த கட்டுரைகளையும்
எழுதியிருக்கிறார். திட்ட மேலாண்மையைக் குறித்தும் இஸ்லாமிய வங்கியியல் குறித்தும்
நூல்களை எழுதியிருக்கிறார்.
மொழிபெயர்ப்பையும் விட்டுவைக்கவில்லை.
அருண் கொலாத்கர் என்ற மராட்டிய கவிஞரின் எல்லாக் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
பிரபல மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவனின் நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். ‘பீரங்கிப்
பாடல்கள்’.
இத்தனையையும் செய்துவிட்டு சினிமாவில்
கால்வைக்காமல் அல்லது கைவைக்காமல் இருக்க முடியாதல்லவா. இரண்டு திரைப்படங்களுக்கு வசனம்
எழுதியிருக்கிறார்.
0
இதுவரை சொல்லப்பட்ட விபரங்களிலிருந்து
இரா முருகனைக் குறித்து ஒரு சித்திரம் கிடைத்திருக்கும். இரா.முருகன் தொடர்ந்து எழுதுபவர்.
கதை, கட்டுரை என்று எதையாவது எழுதிக் கொண்டேயிருப்பவர். அவரால் எழுதாமல் இருக்க முடியாது.
அவர் எழுத வந்த காலம் சிற்றிதழ்கள் கோலோச்சிய
காலம். கணையாழி, தீபம் போன்ற இதழ்கள் தொடர்ந்து வெளியாகின என்றாலும் பிற சிற்றிதழ்கள்
பலவும் அற்ப ஆயுசுகள் கொண்டவையாகவே இருந்தன. குறைந்த எண்ணிக்கையிலான சந்தாக்கள், அரிதான
விளம்பரங்கள் ஆகியவற்றை வைத்து இதழை நடத்துவது சிரம்ம. ஒத்த சிந்தனையுள்ள ஒரு குழுவின்
ஆர்வமும் ஆசையும் அவர்களது பொருளாதாரம் பலம் அனுமதிக்கும் காலம் வரை நீடிக்கும். பிறகு
அது இயலாதபோது இயல்பாகவே வடிந்துவிடும். இதழும் நின்றுவிடும். ஒரு கவிதையையோ கதையையோ
அனுப்பினால் அது பிரசுரமாகும் என்ற உத்தரவாதம் கிடையாது. அதற்காக இன்னொரு இதழுக்கு
அதை அனுப்பிவிடவும் முடியாது. ஒரு கதையை அனுப்பிவிட்டு ஒரு வருடத்துக்குக் காத்திருக்க
நேரும். பிறகு இதழ் நின்றுபோனதை உறுதி செய்துவிட்டு இன்னொரு சிற்றிதழுக்கு புதிதாக
பிரதியெடுத்து அனுப்ப நேரிடும். இப்படியாக ஒரு வருடத்தில் ஒரு கதையோ அல்லது இரண்டு
கதைகளோ பிரசுரமானாலே பெரிய விஷயம். அந்த உற்சாகத்தில் இன்னுமிரண்டு கதைகளை எழுதி அடுத்த
சில வருடங்களுக்கு காத்திருக்க வேண்டும். இயல்பில் நிதானமும் காத்திருப்புமான ஒரு போக்கு
அது. பொருளாதார நெருக்கடி, அச்சு வசதிகள் மேம்படாத சூழல் என்று பல காரணங்கள். அப்படிப்பட்ட
நெருக்கடியான சூழலில்தான் சிற்றிதழ்களின் வழியாக தமிழ் தீவிர இலக்கியம் வளர்ந்தது.
அதே சமயத்தில் வணிக இதழ்களும் பெருமளவு
வெளியாயின. சிற்றிதழ்களைப் போல அல்லாமல் குறித்த நேரத்தில் வழவழப்பான தாளில் வண்ணங்களுடன்
அவை வெளியாயின. இரண்டுக்கும் இடையே வலுவான பிரிவினை இருந்தது. தீவிர இலக்கிய எழுத்தாளர்கள்
வணிக இதழ்களுக்கு எழுதுவது செய்யக்கூடாத காரியமாக பார்க்கப்பட்டது.
இரா.முருகன் நிறைய எழுதுபவர். தொடர்ந்து
எழுதுபவர். சிற்றிதழ்களின் நிதானம் அவருக்குக் கட்டுப்படியாகாதது. அவரது மொழியும் கதைப்
பாணியும் அதிகமும் வணிக இதழ்களுக்கானவை. வாசகர்களை ஆர்வத்தோடு தொடர்ந்த வாசிக்கச் செய்ய
வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டவை. வாசகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது என்பதே முதன்மை
நோக்கம். ஒரு வகையில் வணிகப் பத்திரிகைகளின் போக்குக்கு நெருக்கமானவை. அவரது வேகத்துக்கும்
எழுத்துப் பாணிக்கும் வெவ்வேறு வகைமைகளுக்கும் அவை உகந்தவையாக இருந்தன. எனவே அந்தப்
பாதை இயல்பாகவே அவருக்கு பொருந்திப் போனது.
காலப்போக்கில் சிற்றிதழ்களுக்கும் வணிக
இதழ்களுக்குமான கோடு மெலிந்தது. இடைநிலை இதழ்கள் வெளிவந்தன. சுபமங்களா, இந்தியா டுடே,
புதிய பார்வை போன்ற இதழ்கள் இந்த இடைவெளியைக் குறைத்தன. தீவிர இலக்கிய இதழுக்கான அடர்த்தியையும்
வணிக இதழ்களுக்கான எளிமையையும் கொண்ட இவ்விதழ்கள் இரண்டுக்கும் பொது வாசகர்களை சென்றடைந்தன.
எழுத்திலும் அச்சிலும் கணினியின் பயன்பாடு
அதிகமானபோது சூழல் மாறியது. இணைய இதழ்களும், மின்னிதழ்களும் வெளிவரலாயின. அவரவர்க்கான
வலைத்தளங்களிலும் இணையத்திலும் எழுத்தாளர்கள் எழுதலாயினர். உலகளாவிய வாசகர்களை சென்றடைய
இவை உதவின. இத்தனை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து தங்களையும் அந்தந்த காலத்துக்கும்
ஊடகத்துக்கும் ஏற்ப மாற்றிக்கொண்டு தொடர்ந்து எழுத வேண்டிய அவசியம் எழுத்தாளர்களுக்கு
ஏற்பட்டது. இரா.முருகனுக்கு இத்தகைய களமும் மிக வசதியாக அமைந்து போனது. தான் விரும்பிய
வேகத்தில், விரும்பிய விதத்தில் எழுத முடிந்தது.
எழுதுவதற்கு கணிப்பொறி ஒரு கருவியாகவும்,
வலைத்தளங்கள் மின்னிதழ்கள் ஊடகமாக மாறின. இதனால் பக்க எண்ணிக்கையைப் பற்றியோ பிரசுர
வாய்ப்பைப் பற்றியோ யோசிக்காமல் கவலைப்படாமல் எழுத முடிந்தது. பெருநாவல்களின் வருகைக்கு
முக்கியமான காரணம் இது. இரா முருகன் கணினித் துறையைச் சார்ந்தவர் என்பதால் அதன் சாத்தியங்களை
உடனடியாகவே பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். அதன் காரணமாகவே இன்று பெரும் எண்ணிக்கையிலான
பக்கங்களை அவர் எழுதிக் குவித்திருக்கிறார்.
0
இரா முருகன் நிறைய எழுதுபவர் என்று சொன்னேன்.
நிறைய எழுதுவதற்கு கற்பனை மட்டுமே உதவாது. நிறைய வாசிக்கிறார். தொடர்ந்து பயணங்களை
மேற்கொள்கிறார். பணி நிமித்தம் காரணமாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமாக பல்வேறு ஊர்களில்
வசித்திருக்கிறார். இதன் காரணமாக பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க வாய்த்திருக்கிறது.
அவர்களது இயல்புகளை, உரையாடல்களை, மொழியை, அன்றாடங்களை உற்று கவனிக்க முடிந்திருக்கிறது.
காணும் காட்சிகளும் கேட்கும் ஒலிகளும் பேசும் உரையாடல்களும் அவருக்குள் பதிந்து போகின்றன.
வெளியூர்களில் வேடிக்கைப் பார்த்தபடி, அடுத்திருப்பவரிடம் பேச்சுக் கொடுத்தபடி திரியும்
போக்கு அவரது புனைவுலகுக்கு பெரிய ஒரு சேகரத்தை பெற்றுத் தரும் கருவியாக அமைந்திருக்கிறது.
நிறையப் பேசுவதற்காக, நிறைய கதைகளைச்
சொல்வதற்காக, கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருப்பவர் இரா.முருகன். காட்சியும்
ஒலியும் சொல்லும் அவருக்குள் துல்லியமாகப் பதிந்து போகின்றன.
அதனால்தான் எந்தக் களத்தை எடுத்துக்கொண்டு
எழுதினாலும் அதில் நம்பகத்தன்மையை வெகு எளிதாக கொண்டுவந்துவிட முடிகிறது. மொழியை, உரையாடலை
சூழலை கச்சிதமாக உருவாக்கிக் காட்ட முடிகிறது.
கதைகளுக்காக அவர் தேர்ந்தெடுத்த களங்கள்
வெவ்வேறானவை. சுவாரஸ்யம் மிகுந்தவை. அன்றாட வாழ்வில் சாமான்யர்கள் சந்திக்க நேரும்
அபத்தங்கங்களே அவரது கதைகளின் மையம். குறைந்த சொற்களைக் கொண்ட செறிவான வாக்கியத்தில்
விபரங்களை அடுக்கிச் சொல்வது அவரது கதைப் பாணி. ஒரு வரி முடிந்ததுமே அதைப் பற்றி யோசிப்பதற்கு
முன்பே அதேபோன்ற இன்னொரு வரி விழுந்திருக்கும். உரையாடல்களும் அவ்வகையானவையே. இவரது
சிறுகதைகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் எளியோர்களின் சாமான்யர்களின் நோஞ்சான்களின்
உலகம் அவ்வாறானவைதான். நொடியில் யாரும் கடந்துபோய்விடக் கூடியவை. கேலியாக, பகடியாக,
கிண்டலாக விமர்சிக்கப்படுபவை. யாரும் அக்கறை காட்டாதவை.
கதைக்களம், சூழல், கதாபாத்திரங்கள்,
உரையாடல் ஆகியவற்றை நம்பகத்தன்மையுடன் சித்தரிப்பது என்பதோடு இரா.முருகனின் தனித்தன்மையாக
அமைந்தவை அவரது கதைகளின் வார்ப்பும் மொழியும். துண்டுத் துண்டாக காட்சிகளை வெட்டி நேர்வரிசையிலும்
பல சமயங்களில் மாற்றியும் அடுக்குகிறார். அதற்கேற்ப கதைமொழியும் தாவி தாவிச் செல்லும்.
இயல்பாக அமைந்திருக்கும் பகடி இவ்விரண்டுக்கும் மிகப் பொருத்தமாக அமைந்துவிடும்.
இவற்றைத் தவிர, இரா.முருகனின் எழுத்தில்
உள்ள அம்சங்கள் சிலவற்றை குறிப்பிடலாம்.
ஒன்று, வரலாற்றை அவர் தன் எழுத்தில்
கையாண்டிருக்கும் விதம்.
ஒரு குடும்பத்தின் கதையை சொன்னால் அதிகபட்சம்
நூறு வருடங்கள் சொல்ல முடியும். நீண்ட காலப் பரப்பு என்றால் தலைமுறைகளின் கதையைச் சொல்ல
வேண்டும். தலைமுறைகளின் கதை என்று தீர்மானித்தால் வரலாற்றுப் பின்புலம் தேவைப்படும்.
ஒரு பெரும் வரலாற்று நிகழ்வு நடக்கும்போது
அதே காலத்தைச் சேர்ந்த மனிதர்களின், குடும்பங்களின் வாழ்க்கையும் வரலாற்றின் ஒரு பகுதிதான்.
ஆனால் சொல்லப்பட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியிருக்காது. இரா.முருகன் அந்த மனிதர்களின்
வரலாற்றைத்தான் எழுதுகிறார். அனைவரும் அறிந்த வரலாற்றை பின்புலமாக வைத்து தனி மனிதர்களின்,
குடும்பங்களின் கதையைச் சொல்கிறார். அறிந்த வரலாற்றிலிருந்து சில கதாபாத்திரங்களையும்
சம்பவங்களையும் மட்டும் எடுத்துக்கொண்டு பிறவற்றை தனது புனைவின் வழியாக உருவாக்குகிறார்.
இதுவும் வரலாறுதான். இங்கும் மோதல்கள், சூழ்ச்சிகள், பழிவாங்குதல்கள், காதல், காமம்,
துரோகம், கண்ணீர், ரத்தம் என்று எல்லாம் உண்டு. எனவே, இரா.முருகன் காட்டுவது பெரு வரலாற்றின்
ஒரு பகுதியை.
அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும்
சம்பவங்களும் முதன்மையானவையோ முக்கியமானவையோ இல்லை. வரலாற்றின் பெருநிகழ்வு ஒன்று நடந்திருக்கும்
அதே சமயத்தில் இன்னொரு மூலையில் கவனிக்கப்படாமலிருந்தவர்கள். அந்த சம்பவத்துடன் நேரடித்
தொடர்பில்லாதவர்கள். அந்த கதாபாத்திரங்களும் சம்பவங்களும் அனைவரும் அறிந்த, ஆவணப்படுத்தப்பட்ட
பெரிய வரலாற்றின் நுண்ணிய பகுதிகள்.
அதேபோல, அவரது பெருநாவலிலுள்ள கதாபாத்திரங்கள்
சாகச நாயகர்களோ நாயகிகளோ அல்ல. எளிமையானவர்கள். எல்லா பலவீனங்களையும் கொண்ட சராசரி
மனிதர்கள். வரலாற்று பெருநிகழ்வின்போது ஏதோவொரு மூலையில் சிறு புள்ளிகள் போலக் கிடந்தவர்கள்.
நாம் அறிந்த வரலாறு என்பது கலைநுட்பங்கள்
மிகுந்த ஒரு பெரும் கோபுரத்தைப் போன்றது. தள்ளி நின்று அதன் உயரத்தையும் அங்கிருந்து
கண்ணுக்குத் தெரிகிற சிற்பங்களையும் பார்த்து வியக்க முடியும். இரா.முருகன் அந்த கோபுரத்துக்கு
அருகில் செல்கிறார். கோபுரத்தின் வெவ்வேறு தளங்களருகே சுற்றுச்சுவர்களருகே சுட்டிக்
காட்டுகிறார். பெரிய சிற்பங்களோடு விரலளவே கொண்ட சின்னஞ்சிறு சிற்பங்கள் பலவும் அங்குள்ளன.
குதிரை வீர்ர்கள், பல்லக்குத் தூக்கிகள், சாமரம் வீசுபவர்கள், ஆடல் அழகிகள், இசைக்
கலைஞர்கள் என்று எண்ணற்ற மனிதர்கள். இரா.முருகன் ஒரு உருப்பெருக்கியைக் கொண்டு அவர்களை
இன்னும் நெருக்கமாக காட்டுகிறார். கோபுரத்தின் ஒரு பகுதிதான் அவர்கள். ஆனால் தள்ளி
நின்று பார்க்கும்போது நாம் கவனிப்பதில்லை. ஆனால், உருப்பெருக்கியின் வழியாக இரா.முருகன்
காட்டும்போது அதன் நுட்பங்களை வியக்கிறோம்.
இரா.முருகன் புனைவை உருப்பெருக்கியாக
மாற்றி வரலாற்றின் ஒரு பகுதியான மனிதர்களையும்
சம்பவங்களையும் காட்டுகிறார்.
அடுத்தது, மாய யதார்த்த உத்தி.
பெருநாவல்களை எழுதும்போது வழக்கமான கதை
உத்திகள் ஓரளவே கைகொடுக்கும். அகண்ட காலத்தையும் விரிவான களத்தையும் சித்தரிக்க முனையும்போது
புதிய உத்திகள் தேவைப்படும். காலம் பெரியது. களமும் பெரியது. ஆனால், கதாபாத்திரங்களின்
ஆயுட்காலம் குறுகியது. ஒரு எல்லைக்கு மேல் நீட்டிக்க முடியாது. இந்த வரம்புகளை மீறி
நீண்ட கால அளவுக்கு கதாபாத்திரங்களை தக்க வைக்கவேண்டும். அல்லது இருவேறு காலத்துக்கு
நடுவே கதாபாத்திரங்களை ஊடாடவிட வேண்டும். இதற்காக அவர் கையில் எடுத்த உத்திதான் மாய
யதார்த்தம். எல்லையில்லாத காலங்களுக்கு நடுவே எல்லைகள் மிகுந்த கதாபாத்திரங்களை உலவ
விடுவதற்கு இந்த உத்தி அவருக்கு பயன்பட்டது. அதே சமயம் வாசகர்களுக்கும் இந்த ஊடாட்டம்
புதிய ருசியை அளித்தது. இரா.முருகன் இந்த உத்தியை அவரது ஆரம்ப காலக் கதைகளிலேயே இந்த
உத்தியை அவர் பயன்படுத்தியிருக்கிறார். பார்க்க முடியும்.
மாய யதார்த்தம் நமக்கு புதிய உத்தியல்ல.
காலங்காலமாக கையாளப்பட்ட ஒன்றுதான். அம்புலிமாமா, புராண இதிகாச கதைகளை வாசித்த எவருக்கும்
இது தெரியும். கூடுவிட்டு கூடு பாயும் கதைகள் நமக்கு புதிதல்ல. தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது
இந்த உத்தி. அதே சமயம் எளிமையாகவும் ரசிக்கும்படியாகவும் இந்த உத்தியை பயன்படுத்த முடியும்
என்பதை இரா.முருகன் எழுதிக் காட்டியிருக்கிறார்.
வாசகர்களை பயமுறுத்துவதுபோல சிக்கலான
வாக்கிய அமைப்புகளைக் கொண்ட மேலை நாட்டு சரக்குகளை இறக்குமதி செய்யப்படாமல், அன்னியத்தன்மை
இல்லாமல் நமது கதை மரபிலிருந்து இந்த உத்தியைக் கையாண்டிருப்பது இன்னொரு முக்கியமான
அம்சம்.
மூன்றாவது, சமையலையும் காமத்தையும் தன்
எழுத்தில் கையாண்டிருக்கும் விதம்.
பெருநாவல்களை எழுதும்போது பொதுவான வாசகர்களுக்கு
விருப்பமான சில கூறுகளையும் அதில் சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. மனித இயல்பில் யாருக்கும்
எந்த நேரத்திலும் திகட்டாத இரண்டு அம்சங்கள் உணவும் காமமும். இரண்டுமே பசி. இரண்டுமே
ருசி. இந்த இரண்டுமே அளவுக்கு மீறினால் போகம். உடலின் எல்லைகளை மீறி மனம் இவற்றை தொடர்ந்து
நாடியபடியேதான் இருக்கும். இதன் மீறல்களை, வினோதமான ருசிகளை இரா.முருகன் தன் பெருநாவல்களில்
திறம்பட கையாண்டிருக்கிறார்.
சமையல் நுட்பங்களை கதையில் கையாள்வது
ஒருவகை புனைவு உத்தியே. இரா.முருகன் அந்த உத்தியை வெகு நுட்பமாக கையாள்கிறார். வாசகர்கள்
அந்தப் பதார்த்தங்களை முகர்கிறார்கள், ருசிக்கிறார்கள்.
அதேபோல, காமத்தை அவர் கையாண்டிருக்கும்
விதத்தை கவனித்தால் ஒன்று புலப்படும். முகம் சுளிக்கும்படியாகவோ, அத்துமீறியோ அதை சித்தரிக்காமல்,
பகடியாக்கியிருப்பதன் மூலம் அதன் தீவிரத்தை மட்டுப்படுத்தி நமுட்டுச் சிரிப்பாக மாற்றிவிடுகிறார்.
இது மிக முக்கியமான ஒரு புனைவுத் திறன்.
கம்பி மத்தாப்பிலும் புஸ்வானத்திலும்
வண்ணங்களுடனும் ஒளியுடனும் பொறிகள் எழும்போது அவற்றை நாம் ரசிக்கிறோம். நெருப்பின்
துளிகள்தான் அவை என்று தெரிந்தாலும் அவற்றைக் கண்டு அஞ்சுவதில்லை. இரா.முருகன் கதையிலுள்ள
காமம் மத்தாப்பின் பொறிகள் போல ரசிக்கவே வைக்கிறது. பயப்படச் செய்வதில்லை.
நான்காவதாக குறிப்பிட விரும்பும் அம்சம்,
பீபத்ஸம்.
சில விஷயங்களை பொதுவெளியில் எழுதக் கூடாது,
பேசக்கூடாது என்ற தயக்கம், மனத்தடை உள்ளது. ‘இதையெல்லாம் எழுதியே ஆகணுமா?’ என்ற கேள்வி
எப்போதுமே உண்டு. கழிப்பறையை ‘கக்கூஸ்’ என்றோ ஏன் ‘டாய்லெட்’ என்று சொல்வதையேகூட இன்றைய
தலைமுறையினர் விரும்புவதில்லை. ‘வாஷ் ரூம்’ அல்லது ‘ரெஸ்ட் ரூம்’ என்றுதான் சொல்லவேண்டும்.
ஆனால், எழுத்தில் கலையில் அப்படி எதுவும் விலக்கப்பட்டதில்லை. மனித உணர்வுகள் சார்ந்த
அனைத்துமே எழுதத் தகுந்தவைதான். நவரசங்கள் என்று பகுக்கப்பட்டிருப்பவை அனைத்தையுமே
எழுதலாம். ஆனால் அதை எந்த நோக்கில் எழுதுகிறோம் என்பதுதான் கவனிக்கவேண்டியது, கவலைப்பட
வேண்டியது. பீபத்ஸம் என்றொரு ரசம் உண்டு. அருவருப்பு அல்லது அசிங்கம் என்று சொல்லலாம்.
முருகனின் எழுத்தில் கையாளும் சில உணர்வுகளை, வெளிப்பாடுகளை ‘அருவருப்பு’ என்ற வகைமையில்
வைக்க முடியும். உடல் அழுக்கு, கழிவுகள், அதன் நாற்றங்கள் சார்ந்த சித்தரிப்புகளை வெளிப்பாடுகளை
குறிப்பிடலாம். முருகனின் எழுத்தில் பல இடங்களில் நுட்பமாக அவை சுட்டப் பட்டபடியே உள்ளன.
ஆனால் அவற்றை வாசகன் எளிதில் கடந்து செல்லும்விதமாக அது கேலியாக, பகடியாக மாற்றப்பட்டுவிடுகிறது.
அருவருப்பு ஏற்படுத்தும் அம்சங்களை இதெல்லாம் உள்ளதுதாம்ப்பா என்று போகிறபோக்கில் கடந்துபோக
இந்த பகடியும் கேலியும் தேவைப்படுகிறது. குளோரியா என்ற கதாபாத்திரத்தைக் கொண்டு அவர்
எழுதியுள்ள ‘வாயு’ என்ற கதையை இதன் உதாரணமாகச் சொல்ல வேண்டும். அந்தக் கதையை இங்கு
சொல்ல முடியாது.
உதாரணமாக, தொலைதூர விமானப் பயணங்களில்,
இரவா பகலா என்ற மயக்கம் இருக்கும் நிலையில், பல் துலக்காத சமயத்தில் விமானப் பணிப்பெண்
வந்து பேசுவதைப் பற்றிய ஒரு இடத்தைச் சொல்லலாம். அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்
போது வாய் நாற்றம் எழுந்திருக்கவே செய்யும் என்று சொல்லிவிட்டு, சிரித்தபடியே அதை சகித்துக்
கொள்ளத்தானே அவளுக்கு சம்பளம் என்று ஒரு வரி. அவளிடமும் வாய் நாற்றம் இருந்திருக்குமல்லவா?
இல்லை, வாடையைத் தவிர்க்க அவள் கவனமாக பெப்பர் மின்ட் போட்டிருக்கிறாள். ஆனால், முருகன்
பெப்பர் மின்ட் வாசனை என்று எழுதியிருந்தால் அது முருகன் இல்லை. ‘சூடமிட்டாய் வாசனை’
என்று எழுதும்போதுதான் அது முருகனின் எழுத்தாகிறது.
0
இரா.முருகனின் எழுத்தில் சுஜாதாவின்
சாயல் உண்டு. இரா.முருகனின் ஆரம்ப காலக் கதைகளில் உள்ள மொழி நடையில் அதைப் பார்க்க
முடியும். அவரைப் போலவே விஞ்ஞானம் குறித்த கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரே
அதைப் பற்றி பல இடங்களில் தொடர்ந்து குறிப்பிட்டிருக்கிறார். இரா.முருகனின் வாசகர்கள்
பலர் வலைதளங்களில் ‘சின்ன வாத்தியார்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
சுஜாதாவுக்கும் இரா.முருகனுக்கும் இன்னொரு
முக்கியமான ஒற்றுமை உண்டு. இருவருமே தான் படித்தவற்றை,
கேட்டவற்றை, பார்த்தவற்றை வாசகர்களுக்குச் சொல்வது என்பது. குறிப்புகள், பத்திகள்,
கட்டுரைகளின் வழியாக பலதரப்பட்ட விஷயங்களையும் சொல்வது. அறிவியல், கணினிகள், மனோதத்துவம்,
கவிதை, இலக்கியம், வரலாறு, சங்கப்பாடல்கள், மாந்திரீகம், விளையாட்டு என்று சகலமும்
அடங்கும். சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதுவதன் மூலம் வாசகர்களுக்கு புதிய செய்திகளை,
தகவல்களை தொடர்ந்து தந்துகொண்டேயிருக்கும் போக்கு.
சுஜாதா சந்திக்க நேர்ந்த தீவிர இலக்கியத்துக்கும்
வணிக இலக்கியத்துக்கும் இடையிலான ஊசலாட்டம் இன்றில்லை. இரு தரப்புக்கும் இடையிலான பிரிவினைக்
கோடு அழிந்து போய்விட்டது.
இன்று வார, மாத இதழ்களில் பொறுப்பில்
இருப்பவர்கள் தீவிர இலக்கியம் சார்ந்தவர்கள். எனவே, தீவிர இலக்கிய எழுத்தாளர்களின்
கதைகள் இயல்பாகவே வார மாத இதழ்களில் வெளியாகின்றன. கட்டுரைத் தொடர்களும்.இலக்கிய வாசிப்பு
அறிமுகம் இல்லாத பலரும் அவ்வாறான கட்டுரைகளின் வழியாக இலக்கிய வாசிப்புக்கு நகர்ந்துள்ளனர்.
நாஞ்சில்நாடனின் ‘தீதும் நன்றும்’ தொடரின் வழியாக அவரை அறிந்த பொது வாசகர்களின் எண்ணிக்கை
மிக அதிகம். எஸ் ராமகிருஷ்ணனின் ‘துணையெழுத்து’ வழியாக இன்று தீவிர இலக்கியம் வாசிக்கும்,
எழுதுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமானது. ‘சங்கச் சித்திரங்கள்’ வழியாக ஜெயமோகனை வாசிக்கத்
தொடங்கி அவருடைய தீவிர வாசகர்களாக ஆனவர்கள் இங்கு பலர் உண்டு. அதே சமயத்தில், தீவிர
எழுத்தைச் சேர்ந்தவர்கள் வணிக இதழ்கள் கணினியை மின்னிதழ்களை ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்
என்றாலும் அவர்கள் எழுதுவது தீவிர வாசகர்களுக்காகவே. அவர்களது எழுத்து ஊடகங்களுக்கு
ஏற்ப மாற்றங்களுக்கு உட்படவில்லை.
வணிக எழுத்துக்கும் தீவிர எழுத்துக்கும்
இரண்டுக்கும் இடையிலான கோடு இல்லை என்றாலும் எழுதும் வகையில் அழுத்தமான வித்தியாசம்
உண்டு. தீவிர இலக்கியத்துக்கும் வணிக இலக்கியத்துக்கும் இடைப்பட்ட ஒரு பிரிவு எப்போதும்
உண்டு. தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் எடுத்துக்கொள்கிற களங்கள் ஆனால் அதைச் சொல்வது
வணிக எழுத்துக்கான எழுத்து முறை. இந்தப் பிரிவை ஒரு வசதிக்காக ஜனரஞ்சக எழுத்து என்று
வைத்துக் கொள்ளலாம். பொது வாசகர்களும் அணுகும் வகையிலான எழுத்து முறை.
பொது வாசகர்களின் தரத்தை மேம்படுத்த
இவர்களது இத்தகைய எழுத்துகள் உதவின. பெரும் வாசகத் திரளிலிருந்து குறிப்பிட்ட சிலர்
மட்டும் மேலும் தீவிரமான இலக்கியத்தை நோக்கி வர இவர்களது பரிந்துரைகள், குறிப்புகள்
உதவுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் அத்தகையோரின் தேவை
கூடுதலாக உள்ளது. மின் ஊடகங்களை வாசிக்கும் பயன்படுத்தும் எண்ணற்ற பயனாளர்களில் வாசிப்புப்
பழக்கம் உள்ளவர்களை இலக்கியத்தின் பக்கம் திருப்ப சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதும்
எழுத்தாளர்களின் அவசியம் உள்ளது. வாசிப்புப் பழக்கமுள்ளவர்களை தக்க வைத்துக் கொள்ளவும்
கூடுதலாக்கவும் வசீகரமான எழுத்துக்கான தேவை உள்ளது. வார, மாத இதழ்களிலோ அல்லது பிற
ஊடகங்களின் மூலமாகவோ வாசிக்கிறவர்களை எளிமையும் சுவையுமான எழுத்துகளே இலக்கியத்தை நோக்கி
வரச் செய்கின்றன.
இன்று இரா.முருகன் அடைந்துள்ள இடமும்
அவ்வாறானதுதான். தனது வலைத்தளத்தில் தொடர்ந்து தீவிரமாக வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு
விஷயங்களை எழுதுகிறார். பாம்பு சட்டையுரிப்பதுபோல, ஒரே நாளில் வெவ்வேறு நேரத்தில்,
நான்கு வெவ்வேறு விதமான கதைகளை எழுதுவதாக அவரே குறிப்பிட்டிருக்கிறார்.
இணைய இதழ்களின் வழியாக இரா.முருகன் எழுதிய
பெருநாவல்கள் குறிப்பிடத்தக்க வாசகப் பரப்பை உருவாக்கியுள்ளன. பொது வாசகர்களிலிருந்து
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வாசகர்களை தீவிர இலக்கியம் நோக்கி நகர அவரது எழுத்து
உதவியிருக்கிறது. இன்று வழங்கப்பட்டுள்ள இந்த ‘விஷ்ணுபுரம்’ விருது, ஐம்பதாண்டு காலம்
தொடர்ந்த அவரது பங்களிப்புக்கான அங்கீகாரமாக இருக்கும்.
0
( 2024ஆம் ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம்’
விருது இரா.முருகனுக்கு வழங்கப்பட்ட விழாவில் ஆற்றிய உரை )

No comments:
Post a Comment