தஞ்சை பெரியகோயிலைப் பற்றி இன்று நாம் யோசிக்கும்போது அதை ராஜராஜனின் சாதனையாக மட்டும் பார்ப்பதில்லை. தமிழக வரலாற்றின் ஒரு அம்சமாக, தமிழ் கலாச்சாரத்தின் ஒரு படிமமாகவே பார்க்கிறோம். இடது கால் தூக்கி நடனமாடும் நடராசரின் செப்புச் சிலை என்பது ஒரு கலை வடிவம் மட்டும் அல்ல. பிரபஞ்ச நடனத்தின் ஒரு கணம் என்று விரிவுகொள்ளும் அர்த்தத்தைக் கொண்டிருப்பது. ஒரு நல்ல நாவலும் அப்படித்தான். மொழியின் அங்கமாகவே அது உருமாறிவிடுகிறது. நாவலாசிரியன் எனும் தனி மனிதனிலிருந்து கிளைத்து, வாசகர்களின் பலதரப்பட்ட வாசிப்பின் வழி சிதைந்தும், உருமாறியும், திரண்டும், செறிந்தும் காலவோட்டத்தில் அந்த மொழியின் இலக்கணம் போல, எழுத்து வடிவம் போல நாவலும் இணைந்துவிடுகிறது. ஒரு இலக்கிய வடிவம் என்ற ஒரு எல்லையிலிருந்து விலகி மொழியின் சாராம்சம் என்ற பெரும் வெளியில் தன்னை கரைத்துக் கொள்ளும் தகுதிகளைக் கொண்ட நாவலையே, செவ்வியல் நாவல்களையே, இவ்வுலகம் தொடர்ந்து திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறது. ஒரு நல்ல வாசகன் குறிப்பிட்ட இடைவெளியில் செவ்வியல் நாவல்களை மீண்டும் மீண்டும் வாசிப்பதும் இதனால்தான்.
செவ்வியல்தன்மையை ஒரு நாவல் எப்போது அடைகிறது? அந்த நாவல் அந்த மொழியின், பண்பாட்டின், வாழ்வின் அடையாளமாக தன்னை நிறுவிக்கொள்ளும் அடிப்படைகளை கொண்டிருக்கும்போது, காலம்தாண்டியும் அந்த அடிப்படைகள் நிறம் மங்கிவிடாத திண்மையைக் கொண்டிருக்கும்போது, தலைமுறைகள்தோறும் அந்த நாவலைத் தேடி வரும் வாசகன் ஒவ்வொருவனுக்கும் அந்த நாவல் புதிய அர்த்தங்களையும் சிந்தனைகளையும் தரவல்லதாக இருக்கும்போது அந்த நாவல் ஒரு செவ்வியல் நாவல் என்ற தகுதியை அடைகிறது.
ஒவ்வொரு வாசகனும் அவனது வாசக அனுபவத்தில் எதிர்கொள்ளும் ஒருவித இறுக்கத்தின்போது அல்லது சலிப்பின்போது அவன் தன் வாசக நிலையை புதுப்பித்துக் கொள்ள செவ்வியல் ஆக்கங்களே கைகொடுக்கின்றன. சமகால இலக்கிய வடிவங்களோ ஆக்கங்களோ அவனது வாசக அனுபவத்திற்கு ருசிக்காதபோது அவன் மனம் இயல்பாகவே செவ்வியல் ஆக்கங்களை நாடுகிறது. ஒரு வகையில் ஒரு மொழியின் இலக்கியத் தடத்தை அல்லது போக்கை இத்தகைய சுழற்சிகளே தீர்மானிக்கின்றன.
தலைகீழ் விகிதங்களின் சிவதாணு நாவலின் கதாபாத்திரம் மட்டுமல்ல. 70களில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு பெரும் துர்கனவாகவே இருந்தது. ஒவ்வொரு இளைஞனும் இந்த பாழ் வெளியை கடந்தாகவேண்டும் என்ற அவலம். அப்படிப்பட்ட ஒரு தலைமுறையின் பிரதிநிதியாகவே சிவதாணுவை நாம் காண முடியும். பள்ளிப் படிப்பைத் தாண்டி கல்லூரிக்குப் போவதென்பதே பெரும் சவால். உழவோ, நெசவோ எதுவாயினும் தனக்குப் பிறகு தன் மகனை அந்தத் தொழிலில் இருத்திவிட்டு கொஞ்சம் சுமையைக் குறைக்கலாம் என்று எண்ணத் தலைப்படும் அப்பாக்களின் மனதைக் கரைத்து, சுற்றங்களின் அண்டைஅயலார்களின் விமர்சனங்களைத் தாண்டி கல்லூரிக்கு சென்று படித்து இறுதியாண்டை நெருங்கும்போதே இனி என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வியும், குற்றம் சொல்லத் தயாராக இருக்கும் சமூகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற அச்சமும் ஒவ்வொரு இளைஞனின் வாழ்விலும் ஒரு பெரும் சாபம். படித்த படிப்புக்கு வேலை இல்லையென்றாலும் குடும்பத் தொழிலை கருத்தாக செய்யலாம் என்று அதிலும் இறங்கிவிட முடியாது. அதற்கான விமர்சனங்கள் வேறுரகம். கல்லூரியில் இறுதியாண்டின்போதே PLACMENTவாங்கிக் கொள்ளும் அதிர்ஷ்டம் படைத்த இன்றைய தலைமுறைகளுக்கு அந்த அவலமோ வலியோ தெரியாது. அந்த அவலத்தையும் வலியையும் அவமானங்களையும் சுமந்த ஒரு தலைமுறையின் வடிவம்தான் சிவதாணு. குடும்பம், மனைவி, உறவுகள் எனும் சிக்கலான தடைகளைத் தாண்டி படிப்பு, படிப்புக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற மரியாதை என்ற சமன்பாட்டை அடைய இளைஞர்கள் ஒரு காலகட்டத்தில் அடைந்த மன அவஸ்தைகளை, எதிர்கொண்ட அவமானங்களை காலந்தோறும் நமக்கு இனங்காட்டும் ஒரு பண்பாட்டு அடையாளம்தான் தலைகீழ் விகிதங்கள்.
அரசு அமைப்பின் மீதான கோபம், அரசியல் சார்ந்த விழிப்புணர்வு, எதிர்ப்புணர்வு, போராட்ட குணம், எதைக் குறித்தும் தட்டிக்கேட்கும் விமர்சனப் பார்வை என்று இளைஞர்கள் சுரணையோடு இருந்து காலகட்டமும் இதுதான். அரசியல் சார்ந்தும் மொழி சார்ந்தும் பெரும் போராட்டங்களும் மாற்றங்களும் நடந்தேறிய அச்சூழலும் அதன் தாக்கங்களும் நாஞ்சில் வட்டாரத்தின் ஒரு கிராமத்தில் வேலை தேடும் பட்டதாரி இளைஞனாக இருந்த நாஞ்சில்நாடனிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அறம் ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இன்றைய அவரது சமூக விமர்சனங்களுக்கும், அரசியல் கோபங்களுக்கும் அடிப்படை அவரை உருவாக்கிய அந்த காலகட்டம்தான். வயிற்றுப்பாட்டுக்காக சொந்த மண்ணை நீங்கிச் செல்ல வேண்டிய ஒரு துர்பாக்கியத்தை அவர் மீது திணித்த சமூகத்தின் மீதும், அரசியலின் மீதும், அமைப்பின் மீதுமான நியாயமான கோபமே அவரது படைப்புகளாக, விமர்சனங்களாக வெளிப்பட்டு நிற்கின்றன. கல்யாண பந்தியிலிருந்து கைபிடித்து இழுத்து வெளியேற்றப்பட்ட ஒரு சிறுவனின் துக்கமும், தகுதியிருந்தும் இங்கே உனக்கு வேலையில்லை என்று கண்காணாத் தொலைவுக்கு விரட்டப்பட்ட ஒரு இளைஞனின் ரோஷமும் எத்தனை காலமானாலும் தணிந்துவிடாதுதானே?
கி.ராவின் கோபல்ல கிராமம் (1976), தி.ஜானகிராமனின் மரப்பசு(1975), காசியபனின் அசடு(1978), நகுலனின் நினைவுப்பாதை(1972), எம்.வி. வெங்கட்ராமின் நித்யகன்னி(1975), கு.சின்னப்பபாரதியின் தாகம்(1975), அசோகமித்திரனின் தண்ணீர்(1973), ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி(1972) என்று தமிழின் சில முக்கிய நாவல்கள் இந்த நாவல் வெளியான காலகட்டத்தில் வெளிவந்துள்ளன. தீபம், கணையாழி, செம்மலர் போன்ற பத்திரிக்கைகளின் வழியாக ஒரு சிறுகதையாசிரியராக அறியப்பட்டிருந்த நாஞ்சில்நாடனுக்கு நாவல் வடிவத்தை கையாள்வது சுலபமாகவே இருந்திருக்கிறது. வட்டார வழக்கு சார்ந்த எல்லைகளோ மயக்கங்களோ தலைகாட்டியிராத அந்த சமயத்தில் நாஞ்சில் நாட்டுப் பிண்ணனியில் அதன் கதைமாந்தர்களை அவர்களது மொழியில் சித்தரிப்பது குறித்த சந்தேகங்களும் அவருக்கு இருந்திருக்கவில்லை. முதல் நாவல் என்ற தயக்கங்களைத் தாண்டிய நாஞ்சில்நாடனின் தன்னம்பிக்கைதான் தமிழின் முக்கியமான ஒரு நாவலை சாத்தியப்படுத்தியுள்ளது.
இயல்பான அங்கதம், தீர்க்கமான நாஞ்சில் வட்டார மொழி, சமையல் மணம், கொதிக்கும் சமூக விமர்சனங்கள் என்று நாஞ்சில்நாடனின் தனிப்பட்ட அடையாளங்கள் அவரது இந்த முதல் நாவலிலேயே இயல்பாக உருப்பெற்றுள்ளன. தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என்று அவரது ஆக்கங்களில் இப் பண்புகள் மேலும் மேலும் செழுமை பெற்று நாஞ்சில்நாடனின் படைப்புலகை உருவாக்கித் தந்துள்ளன. சிவதாணுவின் தவிப்புகளே வேறொரு தளத்தில் இருத்தல் குறித்த அச்சமாக, நிச்சயமின்மைகளாக மிதவை, சதுரங்கக் குதிரை, எட்டுத் திக்கும் மத யானை போன்ற நாவல்களில் விரிவு கொண்டுள்ளன. அடிப்படையில் நாஞ்சில் நாட்டில் வேர்கொண்டிருக்கும் எளிய ஒரு விவசாய மனம், பிற வெளிகளின் பகட்டுகளை பாசாங்குகளை ஏற்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் கொள்ளும் பதற்றங்களும் கோபங்களுமே அவருடைய கதாபாத்திரங்களாக உருவாகி நிற்கின்றன.
தலைகீழ் விகிதங்களை இன்று மீண்டும் செம்பதிப்பாக வாசிக்கும்போது, நாவலில் நாம் உணரும் தலைகீழ் விகிதங்கள் இத்தனை காலத்துக்குப் பிறகும் பெரிதாய் ஒன்றும் மாறிப்போய்விடவில்லை என்கிற கசப்பான, மரத்துப்போன யதார்த்தமே இந்த நாவலின் இன்றைய தன்மையை அடிக்கோடிட்டு நிற்கிறது.
( காலச்சுவடு
பதிப்பகம் 2010ஆம் ஆண்டு, ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை செம்பதிப்பாக வெளியிட்டபோது எழுதிய
முன்னுரை )

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.