நாஞ்சில்நாடனின் மொத்தச் சிறுகதைகளும் முழுத் தொகுப்பாக வெளிவந்திருக்கும் இத்தருணத்தில் அவரது நாவல்கள் குறித்த ஒரு மீள்பார்வை அவசியமாகிறது.
ஏறக்குறைய
முப்பது ஆண்டுகளில் ஆறு நாவல்களும் எண்பது சிறுகதைகளுமாய் விஸ்தரித்திருக்கும் அவரது
படைப்புலகின் ஒரு எல்லையில் நாஞ்சில்நாட்டு கிராமங்களும் மறு எல்லையில் பம்பாய் எனும்
பெருநகரமும் கம்பீரம்கொண்டு நிற்கின்றன. இந்த இரு எல்லைகளும் நடுவிலான ஓயாத ஊசலாட்டமே
நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள்.
‘தலைகீழ்
விகிதங்கள்’ முதல் நாவலாக 1971ல் வெளியானது. இரண்டாவது நாவல் ‘என்பிலதனை வெயில் காயும்’
இவ்விரண்டு நாவல்களுமே விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாஞ்சில்நாட்டு கிராமமொன்றில்
படித்த இளைஞன் ஒருவன் பொருளாதார ஜாதிய ஆதிக்கங்களுக்கிடையில் தன்னை நிறுவிக்கொள்ள முனையும்
துயரங்களை அழுத்தமாகச் சித்தரித்தன. மூன்றாவது நாவலான ‘மாமிசப் படைப்பு’ விவசாயம் சார்ந்த
உடல் உழைப்பாளிகள் கிராமத்தில் ஆதிக்க சக்திகளால் சுரண்டப்படுவதையும் அந்த சுரண்டல்களையும்
மீறி தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப் படுகிற பாட்டையும் கதைக்களாகக் கொண்டிருந்தது.
இந்த
மூன்று நாவல்களுமே நாஞ்சில்நாட்டு கிராமங்களில் வேர்கொண்டு விரிவாகவும் நுட்பமாகவும்
கிளை விரித்தவை. கிராமத்து மனிதர்களின் எளிய வாழ்வில் நாம் உணர நேர்கிற அசலான அன்பையும்
அனுசரணையையும் நிபந்தனைகளற்ற கருணையுத் அவற்றின் பேதங்களுடன் சித்தரிக்கும் நாஞ்சில்நாடன்
அதே மனிதர்களின் கயமைகளையும் சின்னத்தனங்களையும்
தீவிரமாகவும் காட்டமாகவும் விமர்சித்துள்ளார். இந்த விமர்சனங்கள் இடத்திற்கேற்ப சீற்றமாகவும்
எள்ளலாகவும் வடிவம் கொண்டுள்ளன.
பசித்தவனின்
துயரங்களாகவும் அலைகழிப்புகளாகவும் உருக்கொண்டுள்ள இந்த நாவல்கள் உயிர்ப்புடன் நமக்கு
அனுபவப்பட்டுள்ளன. இவை எல்லாமே மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளன. எழுதப்பட்ட கால இடைவெளிகளைத்
தாண்டியும் நீர்த்துப் போகாத வாசிப்பனுபவத்தை இந்த நாவல்கள் தக்கவைத்துள்ளன. காரணம்
நாஞ்சில்நாடனின் சித்தரிப்பு நேர்த்தியும் கதை சொல்லும் உத்தியுமே. பழகத் தொடங்கும்
வாசகனை உள்ளிழுத்துக் கொள்ளும் வலிமையான மொழியும் தொடர்ந்து அவனை இருத்தி வைத்துக்
கொள்ளும உரமுமே நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை ஜீவனுடன் வைத்துக்கொண்டுள்ளன. கிராமங்களை
அதன் எல்லாப் பரிணாமங்களுடனும் வாசனைகளுடனும் நாஞ்சில்நாடன் தனது படைப்புகளின் வழியாக
சித்தரித்த அளவு வேறொரு படைப்பாளி இன்று வரை சாத்தியப்படுத்தியதில்லை என்று சொன்னால்
அது மிகையாகாது.
இன்றைய
தமிழ் இலக்கிய வாசகன் ‘நாஞ்சில்நாடு’ என்ற பிரயோகத்தை எதிர்கொள்ளும் அதே நொடியில் அவனுக்குள்
விரியும் காட்சிகள் வெகு துல்லியமானவை. நெல்லும் வாழையும் தென்னையுமாய் விரியும் வயல்வெளிகள்
சூழ்ந்து நிற்கும் மலைத்தொடர்கள், நுரைத்தோடும் சிற்றாறுகள், அதில் குதித்து நீந்தும்
இளைஞர்கள், துடிக்கும் மீசையும் வெறிக்கும் கண்களுமாய் நெடிதுயர வீற்றிருக்கும் சுடலைமாடன்கள்,
புளிமுளம், எரிசேரி, புளிசேரி, துவரன், தீயல் என்று வக்கணையாய் மணக்கும் உணவு வகைகள்
– இத்தனையும் உயிர்ப்புடன் காட்சிப்பட்டுவிடும். முப்பதாண்டுகளாய் வாசகனுக்குள் நாஞ்சில்நாடனின்
எழுத்துக்கள் மெல்ல மெல்ல கட்டியெழுப்பிய சித்திரமே இத்தகைய உடனடி அனுபவத்தை சாத்தியப்படுத்தியுள்ளது.
நாஞ்சில்நாடனைத் தவிர்த்துவிட்டு இன்று எவரும் ஒரு நாஞ்சில் பிரதேசத்து கிராமத்தை நினைத்துக்கூடப்
பார்க்க முடியாது.
புவியியல்
அமைப்பிலும் கலாச்சார அடிப்படையிலும் இந்த முதல் மூன்று நாவல்களின் பின்னணிக்கு நேர்மாறான
ஒரு களத்தில் கால்கொண்டிருப்பவை பிந்தைய மூன்று நாவல்கள். மிதவை, சதுரங்கக் குதிரை,
எட்டுத்திக்கும் மதயானை ஆகிய மூன்று நாவல்களுமே பம்பாய் எனும் பெருநகரை மையமாகக் கொண்டவை.
கிராமங்களின் எளிமைக்கும் யதார்த்தத்திற்கும் நேர் எதிரான சிக்கல்களையும் இருண்மைகளையும்
கொண்டது பெருநகர வாழ்வு. சமூகம் என்ற அமைப்பு உருக்குலைந்து மனிதர்கள் அனைவருமே அன்னியர்களாய்
உதிரிகளாய் அலையும் வாழ்வு. இத்தகைய இருண்ட அச்சமூட்டும் இடுக்குகளுக்குள் திக்குத்
தெரியாமல் திணறியலையும் நாஞ்சில்நாட்டு இளைஞனின் அவலங்களே இந்த நாவல்களின் மையம். சக
மனிதன் மீதான குறைந்தபட்ச கரிசனைக்குக் கூட இடம்தராத மூர்க்கத்துடன் கொந்தளிக்கும்
நகரத்தில் இருக்கவும் பிழைக்கவும் அவன் பல்வேறு சமரசங்களையும் நிர்ப்பந்தங்களையும்
ஏற்க வேண்டியுள்ளது. வன்முறையும் காமமும் துரத்தும் நிழல்வெளிகளில் அவன் நிராயுதபாணியாய்
போராடி நிற்கிறான்.
இழந்துபோன
மண்ணையும் மனிதர்களையும் நினைவில் தேக்கியவாறு மொழியறியா திசையறியா பிரதேசத்தில் ஓடிக்கொண்டேயிருக்கும்
நாஞ்சில்நாட்டு இளைஞனின் வேர்வையும் அச்சமும் கொப்புளித்தோடும் முகமே இந்த நாவல்களின்
மையப் படிமமாக திரண்டெழுகிறது.
பணி நிமித்தமாக
பம்பாய்க்குச் சென்று வசிக்க நேர்ந்தபோது அந்த நகரத்தின் தனிமையையும் ஊரிலிருந்தும்
உறவுகளிலிருந்தும் விலகிக் கிடக்கும் தொலைவையும் தன் எழுத்தின் வழியாகக் கடக்க முனைந்தார்
நாஞ்சில்நாடன். இந்த எழுத்துக்களின் வழியாக அவர் தன்னை மீட்டுக்கொண்டதோடு தனது கிராமத்தையும்
அதன் மனிதர்களையும் மீட்டெடுத்துக் கொண்டார்.
நாஞ்சில்நாடன்
தனது நாவல்களினூடாக பயணித்திருக்கும் தொலைவை கூர்ந்து கவனிக்கும்போது சில அடிப்படையான
கேள்விகளை நாம் யோசிக்க வேண்டியுள்ளது.
ஒன்று
பொதுவாக கிராமத்து இளைஞர்களிடம் காணப்படுகிற நகரவாழ்வு சார்ந்த மோகம் அவர்களுக்கு எதைப்
பெற்றுத் தந்தது, அப்படி அவர்கள் எதையேனும் உள்ளபடியே பெற்றிருக்கிறார்கள் என்றால்
அதற்காக அவர்கள் தந்துள்ள விலை என்ன? இரண்டாவது இந்தியாவின் முக்கிய தொழில் என இன்றளவும்
பேசப்படுகிற உழவும் அதைச் சார்ந்த தொழில்களும் பெருமளவு நசிந்து போயிருப்பதற்கான அடிப்படையான
காரணங்கள் எவை?
மூன்றாவது
வாழ்வியல் நெறிகளுக்கும் கோட்பாடுகளுக்கும் கலாச்சார விழுமியங்களுக்கும் இன்று நாம்
தரும் மதிப்பு எவ்வாறானது?
நான்காவதாக
நகரமயமாக்கலைத் தொடர்ந்து இன்று உலகமயமாக்கல் திணிக்கப்பட்டுவிட்டது. நாஞ்சில்நாட்டை
விட்டு இன்று வெளியேற நேர்கிற ஓர் இளைஞனுக்கு 1986ல் மிதவையில் சண்முகம் உணர நேர்ந்த
அந்நியமாதலின் துயரங்களும் அழுத்தங்களும் எவ்வாறு பொருள்படும்?
நவீன
வாழ்வின் சிக்கல்கள் குறித்தும் இழந்து கொண்டிருக்கிற மாண்புகள் குறித்தும் நாஞ்சில்நாடன்
ஆதுரத்துடன் இன்றெழுதும் கட்டுரைகளின் பொதுச்சரடு அவரது நாவல்களில் கண்ணுக்குத் தெரியாத
நீரோட்டமாய் ஓடிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
சிவதாணுவும்
பூலிங்கமும் அனுபவிக்க நேர்ந்த ஜாதிய பொருளாதார ஆதிக்கங்களுக்கு அப்பால் இன்னதென்று
வகைப்படுத்து முடியாத உலகளாவிய ஒரு எதேச்சதிகாரம் இன்று இளைஞர்களை கண்காணித்துக் கட்டுப்படுத்திக்
கொண்டிருக்கிறது. இச்சூழலில் நாஞ்சில்நாடன் தன் நாவல்களின் வழியாக எழுப்பி நிற்கும்
கேள்விகள் மேலும் அழுத்தம் பெறுகின்றன. கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையேயான அமர்தலற்ற
அலைதல் வாழ்வுக்கும் சாவுக்குமான ஊசலாட்டமாகவும் இருப்பிற்கும் இன்மைககுமான போராட்டமாகவும்
விரிவுகொள்கிறது.
கோவணங்களுக்கு
பதிலாக பெர்முடாக்களைப் போட்டுக்கொண்டிருக்கும் இன்றைய கிராமங்களில் உறைந்திருக்கிற
இந்தியாவின் ஆன்மாவை எப்படிப் புரிந்துகொள்வது என்று யோசிக்கச் செய்கிறது.
‘எட்டு
திக்கும் மத யானை’ நாவலில் பூலிங்கம் ஒரு சமயம் கத்தி ஒன்றை எதற்கும் இருக்கட்டும்
என்று பத்திரப்படுத்திக் கொள்வான். அதன் பிறகு அந்த கத்தியை அவனால் கீழே போடவே முடியாமல்
அவனது ஒரு பகுதியாகவே உருமாறிவிடும்.
பொருளுக்கு
அலையும் இன்றைய வாழ்வில் நாம் எடுத்துக்கொண்டிருக்கும் ஆயுதங்களும் அல்லது நம்மை எடுத்துக்
கொண்டுள்ள ஆயுதங்களும் அப்படியானவைதான்.
மனிதர்கள்
அனைவருக்கும் சுயவேர்களற்ற பொது அடையாளத்தை நிறுவ முயல்கிற இன்றைய சூழலில் நாம் நம்மை
கண்ணாடியில் பார்க்கும்போது நாஞ்சில்நாடனின் நாவல்களில் மிதவையாகவும் சதுரங்கக் குதிரையாகவும்
மதயானையாகவும் அலையும் நாயகனின் முகமே நிழலாடுகிறது.
0
‘ரசனை’
மாத இதழ் / மார்ச் 2005

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.