Tuesday, 23 June 2026

காலத்தின் நெசவு - வேள்வித் தீ எம். வி. வெங்கட்ராம்

 


காலத்தின் ஆடிகளென்று சொல்லப்படும் இலக்கியங்கள் அவை பேசும் சமூகங்கள் குறித்த ஆவணங்களும் கூட. குறிப்பாக நாவல், கலை சார்ந்த எல்லா தன்மைகளுக்கும் அப்பால், ஒரு சமூக ஆவணமாகவும் பங்காற்றுகிறது. எம். வி. வெங்கட்ராமின் 'வேள்வித் தீ'.  தமிழ் நாவல்களில் மிக அரிதாகவே பேசப்பட்ட செளராஷ்டிரா என்ற ஒரு சமூகத்தைப் பற்றிய நாவல். நெசவைத் தொழிலாகக் கொண்ட சமூகங்களில் முக்கியமானவை செளராஷ்டிரர்களும் தேவாங்கச் செட்டியார்களும் கைக்கோள முதலியார்களும். தமிழகத்தில் பரவலாக வசிக்கும் இவர்கள் தொன்றுதொட்டு கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். செளராஷ்டிரர்கள் பட்டு நெசவிலும், தேவாங்கர்கள் பருத்தி நெசவிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.   உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் என்ற ஆதி அத்தியாவசியங்கள் உழவர்கள், நெசவாளிகள், கட்டிடத் தொழிலாளிகள் என்று தொழில் சார்ந்த சமூக அமைப்புகளை உருவாக்கியிருந்தன. அத்தகைய சமூக அமைப்புகளில் இன்று தங்கள் பாரம்பரிய அடையாளங்களை இழந்து, நவீன வாழ்க்கைச் சூழலில் தங்களது இருப்பை எவ்விதம் பொருள்படுத்திக் கொள்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கும் முதன்மையானது நெசவாளர்கள் சமூகம். தமிழகத்தின் ஆதி குடிகள் அல்ல இவர்கள் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. வட இந்தியாவிலிருந்து வெவ்வேறு காரணங்களுக்காக குடிபெயர்ந்து தெற்கு நோக்கி நகர்ந்து வந்ததை, இவர்களின் மொழி ஓரளவுக்கு உத்தரவாதப்படுத்துகிறது. செளராஷ்டிரம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் இவர்கள் அனைவரும் சிங்க வாகனத்தவளான செளடேஸ்வரியையே குலதெய்வமாக வணங்குகிறார்கள். 

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் ஒரு சமூகக் கூட்டமாகவே வாழும் பழக்கம் உடைய இவர்களுக்கான தனிப்பட்ட கலாச்சார குணங்கள் அலாதியானவை. காலை நேரங்களில் தெருவில் பாவு பூட்டி, கஞ்சி பூசி, பாவிழைப்பதைக் காண முடியும். பிறகு மாலை வரைக்கும் தறியில் நெசவு. மாலை நேரங்களில் தெரு முனைகளில் கூடி நின்று சினிமா, அரசியல் என்று பொழுது போகும். மின்சார வசதி வாய்க்கும் காலம் வரை இரவில் நெசவு என்பது அவசரத்தைப் பொறுத்து லாந்தர் விளக்கொளியில் மட்டுமே நடக்கும். வார விடுமுறைகள். ஓய்வு நாட்கள் என்றெல்லாம் கிடையாது. அமாவாசை கட்டாய விடுமுறை. அன்றைக்கு மட்டும்தான் இட்லி கிடைக்கும். ஆண்கள் சீட்டாடுவார்கள். சினிமாவுக்குப் போவார்கள். பெண்களுக்கு அன்றும் ஓய்வு கிடையாது. வீடு முழுக்க சாணமிட்டு மெழுகிவிட்டு குளித்து உண்பதற்குள் இரவு வந்துவிடும். அருகில் இருக்கும் 'டூரிங் டாக்கீஸி'ல் ஒரு படம் பார்க்க முடிந்தால் அதுவே பெரிய விஷயம். தவிர பக்கத்து வீட்டில் ஒரு கல்யாணமோ, சாவோ என்றால் தொழில் முடங்கிவிடும். தொழிலும் வீடும் ஒன்றாக அமைந்தால் கூடுதலான சோம்பேறித்தனமும் அழைக்காமல் வந்துவிடும் என்பதற்கு இச் சமூகத்தினரை சரியான உதாரணமாய் சொல்லலாம். பெரும்பாலும் தேவைகளின் பொருட்டே உழைப்பின் உக்கிரமும் அமையும். உடல் நோக நெய்து கூலியை வாங்கிக் கொண்டுவந்து தாராளமாய் செலவழித்து விட்டு மறுநாள் உலை அரிசிக்கு தாடையை சொரிந்து கொண்டு மூன்று காலில் உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். பொதுவாக சேமிக்கும் பழக்கம் கிடையாது. வருடத்துக்கு ஒரு முறை அம்மன் பண்டிகை. சக்தி அழைப்பு என்னும் சடங்கு மிகப் பிரபலமானது. இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த சக்தி அழைப்புதான் அச் சமூகத்தினரின் தொலையாத அடையாளமாக எஞ்சியுள்ளது. 

முதலாளிகளிடம் முன்பற்று, கடன் என்று உழைப்பு முழுக்க உத்தரவாதமில்லாத ஒன்றாகவே போய்விடும். ஒரு கூலித் தறிக்காரம் சொந்தத்தறிக்காரனாய் மாறுவதும், சொந்தத் தறிக்காரன் நாலு பேருக்கு நூல் கொடுத்து நெய்து வாங்கி முதலாளி ஆவது என்பதெல்லாம் பெருங்கனவுதான். பொதுவாக இச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு கால கட்டம் வரைக்கும் படிப்பை ஊக்குவித்ததில்லை. தறிக்குழிக்கு கால் எட்டும் என்றால் பள்ளிக் கூடம் அவ்வளவுதான். தறியில் போட்டு அமுக்கிவிடுவார்கள். தொடர்ந்து நீண்ட காலமாக நெசவுத் தொழிலை எந்த ஒரு அரசாங்கம் கணக்கிலெடுத்துக் கொண்டு அந்தத் தொழிலையோ, அதை நம்பி வாழும் இச் சமூகத்தினரையோ ஊக்கப்படுத்த சிறிதளவு நடவடிக்கையும் எடுத்ததில்லை. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு இன்று இந்த கிட்டத்தட்ட தனது இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது என்றே சொல்லலாம். 

இந்தப் பிண்ணனியில் 'வேள்வித் தீ'யை மறுபதிப்பாக வாசிப்பதென்பது தொலைந்து போன ஒரு கலாச்சாரத்தின் பழைய நினைவுகளை மீட்டெடுத்துக் கொள்வதென்றே தோன்றுகிறது. 

கும்பகோணத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் 'செளராஷ்டிரா' சமூகத்தைச் சேர்ந்த ஒரு பட்டு நெசவாளியின் வாழ்க்கையை சொன்னது என்பது இந்த நாவல் வெளிவந்த காலகட்டத்தில் முக்கியமான அம்சமாக இருந்தது. அதுவரையில் பதிவு செய்யப்பட்டிருக்காத ஒரு வாழ்க்கைச் சூழலை மையமாகக் கொண்டிருந்த இந்த நாவல் அதனூடாக அக் காலகட்டத்தின் அரசியல் சூழலை அங்கங்கே தொட்டுக் காட்டியிருந்தபோதும், நாவலுக்கு வேறு நோக்கங்கள் இருக்கவில்லை. 

மழையும், மழை நாட்களும் என்றுமே நெசவாளிக்கு சாதகமானவை அல்ல. அவனது திட்டங்களை குலைத்துப்போடுபவை. இந்த நாவலும் அப்படியான ஒரு மழையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கண்ணன் படும்பாடுகள் சித்தரிக்கப்படுகின்றன. ஒரு திறமையான நெசவாளியாக அவன் உருவான விதத்தை நினைவோட்ட உத்தியில் சொல்லும்போதே, செளராஷ்டிர சமூகத்தைப் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தையும் எம்.வி.வி தந்துவிடுகிறார். மனிதர்களுக்கே இயல்பான வேஷங்களும், துரோகங்களும் எந்தவொரு வாழ்க்கைச்சூழலிலும் தவிர்க்க முடியாதவை. நாவலின் முக்கியமான கதாபாத்திரமான கண்ணன் எந்த மாதிரியான சூழலிலும் மனத்தளர்ச்சி அடையாதவனாய் தன்னுடைய உழைப்பின் மீதான அபாரமான நம்பிக்கையைக் கொண்டு அவற்றை எதிர்கொள்பவனாய் இருக்கிறான். இயற்கை சதி செய்த போதும், முதலாளிகள் அவனை சுரண்டியபோதும், உறவினர்கள் அவன் உழைப்பை உறிஞ்சியபோதும், சக நண்பன் துரோகமிழைத்த போதும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அவன் தன் நம்பிக்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதவனாய் உறுதியுடன் இருக்கிறான். அவனது மனைவியான கெளசலையும் தன் கணவனை உற்சாகப்படுத்துபவளாய் எதற்கும் தளர்ந்து விடாதவளாய் உடனிருக்கிறாள். ஆனால் இவர்களது இல்லறத்தில் இளம் விதவையொருத்தி குறுக்கிடும்போது அவர்கள் இருவரது மன நிலையும் விநோதமான முரண்களை ஏற்கின்றன. அவளுடனான உறவை கண்ணன் ஒரு தவறாகவே நினைக்க முடியாத அளவுக்குக் காமம் அவனை ஆட்கொள்கிறது. ஒவ்வொரு முறையும் அது மனைவிக்குத் தெரியாமல் இருந்திருக்கலாமே என்றுதான் நினைக்கிறான். கணவன் தடம் மாறிப் போவதை அறிந்ததும் கெளசலை தடுக்க முற்படுகிறாள். பிறகும் அது தொடர்வது தெரிந்ததும் தன்னையே மாய்த்துக் கொண்டுவிடுகிறாள். தன் கணவனின் சந்தோஷத்துக்கு தான் மட்டுமல்ல, தன் குழந்தைகளும் தடையாக இருக்கக் கூடாது என்று அவளை தீர்மானிக்க வைக்கிற உந்துதலும், கண்ணனின் மீதான தன் காமம் எந்தவிதத்திலும் துரோகமில்லை என்று வாதிடும் ஹேமாவின் உறுதியும், மனைவியைப் பறிகொடுத்த பின்னும் ஹேமாவின் உறவை ஏற்றுக் கொள்ளும் கண்ணனின் மனோ நிலையும் வெவ்வேறு கோணங்களில் மனித மனம் கொள்ளும் தடுமாற்றங்களை அடுக்கிக் காட்டுகின்றன. பொருளாதாரம் சார்ந்த எல்லாவிதமான போராட்டங்களையும், துரோகங்களையும், ஏமாற்றங்களையும் தன் உடல் உழைப்பைக் கொண்டு எதிர்கொள்ள முடிகிற மனிதனுக்கு பிறன்மனை விளையும் காமத்தினால் குடும்ப உறவில் உண்டாகும் விரிசல்களை எதிர்கொள்வதில் எப்போதும் தடுமாற்றங்களே மிஞ்சுகின்றன. ஒரு நெசவாளியின் கஷ்ட ஜீவனத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் நாவலாக மட்டும் இது நின்றிருந்தால் காலவோட்டத்தில் காணாமல் போன நாவல்களில் ஒன்றாக கரைந்து போயிருக்கும். அப்படியின்றி, புற வாழ்வின் சவால்களுக்கு நடுவிலும் மூன்று கதாபாத்திரங்களுக்கும் இடையிலான மனப் போராட்டத்தை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் குறிப்பாக யதார்த்தமாகவும் கொண்டிருப்பதன் காரணமாக இந்த நாவல் இன்றும் பொருட்படுத்தத் தக்கதாக அமைந்துள்ளது. 

யதார்த்த பாணியில், பெரிதும் உரையாடல்கள் வழியாக நகரும் இந்த நாவலின் கலை நேர்த்தி இன்றைய பார்வையில் குறைவுபட்டதாய் தெரியலாம். ஆனால் நாவல் முன்வைத்திருக்கும் ஒரு சமூகத்தின் வாழ்வு சார்ந்த கேள்விகள் இன்றைய காலகட்டத்தில் மேலும் அழுத்தம் பெற்றுள்ளன என்பது முக்கியமானது. கைத்தறி நெசவுத் தொழில் என்பதே இன்று அழிந்துபோன ஒரு தொழிலாகிவிட்டது. தறிச் சத்தமே இல்லாமல் ஒரு பெரும் சூனியத்தில் இன்றைய நெசவாளர் கிராமங்கள் புதைந்து கிடக்கின்றன. திருப்பூரில் பனியன் ஆலைகளுக்கு அதிகாலையிலேயே எழுந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தறிச் சட்டங்களும், இதர தளவாடங்களும் வெறும் காட்சிப் பொருட்களாகிவிட்டன. நெசவுத் தொழிலையும் நெசவாளர்களையும் பாதுகாக்கத் தவறிய அரசாங்கங்களின் அக்கறையற்ற போக்கினாலும்,  நவீன தொழில் நுட்பங்களின் ஆக்கிரமிப்பாலும் அருகிப் போன இந்தக் கலை நேற்றைய தலைமுறையின் வலி நிறைந்த நினைவுகளாக மட்டுமே மிஞ்சியுள்ளன. வெறுமையான தறிக் கூடங்களிலும், தறிச் சத்தம் கேட்டிராத கிராமத்தின் இருண்ட தெருக்களிலும் இச் சமூகத்தின் கலாச்சார தனி அடையாளங்கள் புதைக்கப்பட்டுவிட்டன. உலகளாவிய ஒற்றைக் கலாச்சாரத்தில் ஒன்று கலந்துவிட்ட நெசவாளர் சமூகத்தின் இன்றைய தலைமுறையிடம் தொலைந்துபோன அந்தத் தனி அடையாளங்களைப் பற்றிய குறைந்தபட்ச அக்கறையை எதிர்பார்க்க முடியாது. அடுத்த தலைமுறையினர் தாங்கள் நெசவை குலத் தொழிலாக் கொண்டவர்கள் என்பதை அறிவதற்கான வாய்ப்பே இருக்கப் போவதில்லை. 

எம்.வி.வெங்கட்ராம் தனது பதினாறு வயதிலிருந்தே எழுதத் தொடங்கியவர். நிறைய சிறுகதைகளையும், நான்கு நாவல்களையும், புத்தர் குறித்து ஒரு மேடை நாடகத்தையும் எழுதியுள்ளார். 'விக்ரக விநாசன்' என்ற பெயரில் இவர் எழுதிய கதைகள் அந்த காலகட்டத்தில் வெளியான சிறுகதைகளின் போக்கிற்கு மாறாக புதிய உத்தியிலும், மொழியிலும் அமைந்திருந்தன. 'காதுகள்' நாவலுக்காக இவருக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. 'நித்யகன்னி'க்கான முன்னுரையில் தி.ஜானகிராமன் 'இலக்கியகர்த்தாக்களுக்கு மாடம் கட்டிப் போற்றும் விமர்சகக் கொத்தனார்களுக்கு இவருடைய நினைவு வராதது வியப்பான செய்தி' என்று குறிப்பிட்டிருக்கிறார். 

ஒரு சமூகத்தின் பூர்விகமும், கலாச்சார அடையாளங்களும் உருத்தெரியாமல் மறைந்து விடும்போது இலக்கியம் மட்டுமே புதையுண்ட அத்தகைய நினைவுகளை மீட்டெடுத்து வரும் ஆற்றலையும், சாத்தியத்தையும் கொண்டது. அந்த வகையில் இந்த நாவலை காலச்சுவடு பதிப்பகம் மறு பதிப்பு செய்வதென்பது ஒரு சமூகத்தின் தொலைந்து போன கலாச்சாரத்தை மீட்டுத் தரும் வகையில் முக்கியமானது என்றே தோன்றுகிறது.  

எம்.வி.வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’ நாவல் செம்பதிப்பாக வெளியானபோது எழுதிய முன்னுரை )

 

 


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

நிழலாடும் முகங்கள் - நாஞ்சில்நாடனின் நாவல்கள்

  நாஞ்சில்நாடனின் மொத்தச் சிறுகதைகளும் முழுத் தொகுப்பாக வெளிவந்திருக்கும் இத்தருணத்தில் அவரது நாவல்கள் குறித்த ஒரு மீள்பார்வை அவசியமாகிறது...