Tuesday, 31 May 2022

வரப்புயர்த்தி உயரும் கோன்

 



வழக்கம்போல ஒரு சனிக்கிழமையன்று கோவையில் விஜயா பதிப்பகத்துக்கு சென்றபோது வேலாயுதம் நிலைகொள்ளாத பரவசத்திலிருந்தார். ‘வாங்க கோபால், இந்த நாவலைப் பாருங்க’ என்று உற்சாகத்துடன் ஒரு புத்தகத்தைக் கையில் தந்தார். நான் புரட்டிக் கொண்டிருக்கும்போதே தொடர்ந்து பேசினார் ‘என்னமா எழுதிருக்கான்யா. சின்ன வயசுதான். ஆனா எழுத்து எப்பிடி பேசுது பாருங்க. எத்தனையோ நாவலை நானும் படிச்சிருக்கேன், ரசிச்சிருக்கேன். இப்பிடி ஒரு நாவலைப் படிச்சு ரொம்ப வருஷமாயிருச்சு. நீங்க அவசியம் படிக்கணும்.’

‘அடுத்த வாரம் இங்க ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ணிருக்கேன். அவசியம் வந்துருங்க’ என்றும் சொன்னார்.

அந்தக் கூட்டத்துக்கு சற்று தாமதமாகச் சென்றேன். நாவலாசிரியர் மிகுந்த நம்பிக்கையுடன், அந்த வயதுக்கேயுரிய துடுக்குத்தனத்துடன் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது.

அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து தமிழ் நாவல்கள் குறித்த அவரது கருத்து தமிழகமெங்கும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

வேலாயுதம் பரிந்துரைத்த அந்த நாவல் ‘ரப்பர்’.

அன்று கோவையில் ஜெயமோகனை அந்தக் கூட்டத்தில் பார்த்தபோதும் சந்திக்கவோ அறிமுகப்படுத்திக் கொள்ளவோ இல்லை. கொஞ்சம் தயக்கமாக இருந்தது, பயமாகவும். தன் கருத்துகளை எடுத்துரைக்கும்போது எந்தத் தயக்கமும் இல்லை. கோவை ஞானி, நாஞ்சில்நாடன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று யோசிக்கவில்லை. இத்தனைக்கும் மூத்த எழுத்தாளர்கள் பலரையும் அன்றுதான் அவர் முதன்முதலாகச் சந்திக்கிறார்.

0

அதே காலகட்டத்தில் சேலத்தில் ஒவ்வொரு மாதமும் நண்பர்களின் ஏற்பாட்டில் எழுத்தாளர் சந்திப்பு நடப்பதுண்டு. வெவ்வேறு துறைகளில் வேலை பார்க்கும் நண்பர்கள் தங்குவதற்கான வீடு அது. நண்பர்களுடன் சேர்ந்து எழுத்தாளரும் தரையில் அமர்ந்திருக்க காலை முதல் மாலை வரையிலும் உரையாடல் தொடரும். சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், தேவதச்சன், ஆகியோர் அந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். ஜெயமோகன் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

அன்றைய சந்திப்பில் அவசியம் வாசிக்கவேண்டிய மொழிபெயர்ப்பு நூல்களின் பட்டியலைக் குறிப்பிட்டார் ஜெயமோகன். அவ்வளவு எளிதில் புத்தகங்களைக் கண்டடைய முடியாத காலம் அது. அந்த நூல் பட்டியலை வைத்துக்கொண்டு வெவ்வேறு ஊர்களில் நூலகங்களில் அலைந்ததுண்டு. நண்பர்களிடம் சொல்லிவைத்து கடனாகப் பெற்று வாசித்ததுண்டு. ‘நீலகண்ட பறவையைத் தேடி’, ‘ஆரோக்கிய நிகேதனம்’, ‘கறையான்’, ‘தர்பாரி ராகம்’, ‘அக்னி நதி’, ‘ஒரு குடும்ப சிதைகிறது’ போன்ற நாவல்களை அறிந்ததும் பிறகு தேடி வாசித்ததும் அந்தச் சந்திப்புக்குப் பிறகுதான்.

தமிழில் வாசிக்கவேண்டிய புத்தகங்களை சீராகவும் திட்டமிட்டும் வாசித்தால் அதிகபட்சம் ஒரே வருடத்தில் முக்கியமான அத்தனை நூல்களையும் வாசித்துவிட முடியும் என்ற தெளிவு கிட்டியது. கூடவே, எழுத்தாளனாகும் எண்ணமிருந்தால் இதைச் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் புரிந்தது.

0

ஜெயமோகனின் வளர்ச்சிக்கு தொடக்கத்தில் உறுதுணையாக அமைந்தவை என்று மூன்று பத்திரிக்கைகளைக் குறிப்பிடலாம். முதலாவது, கோவை ஞானியின் ‘நிகழ்’ காலாண்டிதழ். ஜெயமோகனின் முக்கியமான சிறுகதைகளான ‘படுகை’, ‘திசைகளின் நடுவே’, ‘போதி’ உள்ளிட்ட கதைகளை ‘நிகழ்’ வெளியிட்டது. தொடர்ந்து கடிதங்களின் வழியாக ஞானிக்கும் ஜெயமோகனுக்கும் இடையே பல விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.

அடுத்தது, கோமல் சுவாமிநாதனின் பொறுப்பில் வெளிவந்த ‘சுபமங்களா’ மாத இதழ். தொடர்ந்து ஒவ்வொரு இதழிலும் ஜெயமோகனின் எழுத்துகள் இடம்பெற்றன. வரலாறு, தத்துவம், ஓவியம், மேற்கத்திய சிந்தனை மரபு, புகழ்பெற்ற நாவல்கள் என பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகளையும் மொழியாக்கங்களையும் செய்வதற்கு இடமளித்தது. ராஜன், கெ.விஸ்வநாதன் உள்ளிட்ட பெயர்களில் அவரது ஆக்கங்கள் வெளியாயின. ‘ஜகன்மித்யை’, ‘வெள்ளம்’, ‘ரதம்’ போன்ற புகழ்பெற்ற கதைகளும் வெளியாயின.

மூன்றாவது ‘இந்தியா டுடே’ தமிழ் மாத இதழ். ‘விஷ்ணுபுரம்’ நாவல் வெளியான சமயத்தில் ‘தமிழ் இலக்கியத்தின் நம்பிக்கை நட்சத்திரம்’ என்று குறிப்பிட்டது. ‘ஆயிரம் கால் மண்டபம்’, ‘நாகம்’, ‘தாண்டவம்’, ‘காடேற்றம்’ உள்ளிட்ட கதைகளை வெளிட்டது.

அதே சமயத்தில் அப்போது வெளியான எல்லா இதழ்களிலுமே அவர் எழுதியிருக்கிறார். கதைசொல்லி, சதங்கை, புதிய நம்பிக்கை, ஓம் சக்தி, கணையாழி, கனவு போன்ற இதழ்களில் அவரது கதைகள் வெளிவந்துள்ளன.

ஆரம்பத்தில் அவர் கவிதைகள் எழுதியதுண்டு. காலச்சுவடு சிறப்பு மலர், மீட்சி இதழ்களில் வெளியாயின. தொகுப்பாக்கப்படவில்லை. ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் உள்ள கவிதைகள் அவர் எழுதியவையே. 1990களில் சுப்ரபாரதிமணியன் தொகுத்த ’12 நெடுங்கவிதைகள்’ தொகுப்பில் ஹம்பியைக் குறித்து ஒரு நெடுங்கவிதை எழுதியிருக்கிறார்.

நாடகங்கள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. ‘வடக்கு முகம்’ என்ற நாடகத் தொகுப்பு முக்கியமானது.

0

1995ம் ஆண்டில் மருத்துவர் ஜீவா உதகையில் ஏற்பாடு செய்த ‘சோலைச் சந்திப்பு’ ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தது. கோவை ஞானி, எஸ்.என்.நாகராசன், நாஞ்சில்நாடன், நம்மாழ்வார் என முக்கியமான ஆளுமைகள் பலரும் அதில் பங்கேற்றிருந்தனர். அப்போது ஜெயமோகன், பாவண்ணன், செல்வராஜ், கோவிந்தராஜ் ஆகிய நண்பர்கள் ஒரு குழுவாக சேர்ந்து உரையாடவும் விவாதிக்கவும் சந்தர்ப்பம் வாய்த்தது.

நிர்மால்யா உதகை நாராயண குருகுலத்தைப் பற்றியும் குரு நித்ய சைதன்ய யதியைப் பற்றியும் சொல்கிறார். ஆனால், அப்போது சந்திக்க வாய்க்கவில்லை.

உதகை சந்திப்பைத் தொடர்ந்து வார இறுதி நாட்களில் தர்மபுரியில் நண்பர்கள் ஒன்றுகூடினோம். செங்கதிர், ஆர்.குப்புசாமி, ரிஷ்யசிருங்கர், செல்வராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்ட நண்பர்கள் ஒன்றுகூடினோம்.

அந்தச் சந்திப்பு சனிக்கிழமைக் காலை பத்து மணிக்குத் தொடங்கும்.  ஒரு புத்தகத்தை அல்லது ஒரு கட்டுரையை வாசிப்பது, புதிதாக வெளியான நாவலைப் பற்றிய விவாதம், பிற மொழி நாவல்கள் கவிதைகளை சிறுகதைகள் குறித்த உரையாடல் என்று திட்டமிட்டபடி நகரும். இரண்டு நாட்களுக்கான வரைவுத் திட்டம் முன்பே கடிதம் வழியாகச் சொல்லப்பட்டிருக்கும். பதினோரு மணிக்கு தேநீர், உணவு இடைவேளை, மூன்றரை வரைக்கும் மீண்டும் வாசிப்பு, மாலை ஐந்து மணிக்கு நீண்ட ஒரு நடை, ஏழு மணியிலிருந்து ஒன்பது மணி வரை வாசிப்பு, இரவு உணவு, அதன் பிறகு தூக்கம் வரும்வரை உரையாடல் விவாதம் அனுபவப் பகிர்வுகள் என்று நீளும்.

காலையிலேயே அருண்மொழி எல்லோருக்கும் சமைத்து வைத்திருப்பார். இரண்டு நாட்களும் தேநீர், உணவு எல்லாம் வீட்டில்தான். அஜிதன் அப்போது சிறு குழந்தை. ஆனாலும், எந்தத் தடங்கலும் இல்லாமல் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும்.

மறுநாள் மதியம் நான்கு மணிவரையிலும் தொடரும். பிறகு நண்பர்கள் ஊருக்குப் புறப்படுவோம். அடுத்த வாரத்துக்கான திட்டங்கள் தயாராகி இருக்கும். அந்த நாட்களில் நாங்கள் வாசித்த மிக முக்கியமான கட்டுரை டி.எஸ்.எலியட்டின் Tradition and Individual Talent என்ற நீண்ட கட்டுரை. தொடர்ந்து நான்கு வாரங்கள் அதை வரிவரியாக வாசிக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது. அப்போது ஒளிநகல் வசதிகள் அவ்வளவாக இல்லை. எனவே, எழுதும்போதே கார்பன் வைத்து எழுதப்பட்டது. பிறகு நண்பர்கள் அதை பிரதியெடுத்துக்கொள்வார்கள்.

அந்தக் கட்டுரை மொழிபெயர்க்கப்பட்ட பிறகு இரண்டு நாட்கள் விவாதங்கள். முடிவில், அந்தக் கட்டுரையை ஒட்டி ஆளுக்கொரு கட்டுரை எழுதவேண்டும் என்பது வீட்டுப்பாடமாக அமைந்தது. ‘கலாச்சாரம் என்றால் என்ன?’ என்ற தலைப்பில் எழுதினேன். அந்தக் கட்டுரையைப் பற்றி ஜெயமோகன் யாரிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை, சில நாட்கள் கழித்து பாவண்ணன் அதை அனுப்பச் சொன்னார். சில மாதங்கள் கழித்து அவரே தகவல் சொன்னார், கனடாவிலிருந்து வெளியான ஒரு மலரில் அது பிரசுரிக்கப்பட்டிருப்பதாக. அந்தக் கட்டுரைக்கான சன்மானமாக நான் பெற்றது பத்தாயிரம் ரூபாய்.

அதே சமயத்தில், நித்ய சைதன்ய எழுதிய ஈஸா வாஸ்ய உபநிஷத் – ஓர் அனுபவம் என்ற நூலை நான் மொழிபெயர்த்தேன். நண்பர்களுடன் சேர்ந்து நூலை ஒப்புநோக்கி மொழியாக்கத்தை செப்பனிட்டோம்.

இந்தச் சந்திப்புகள் இலக்கியம், வாசிப்பு என்பதைப் பற்றிய தெளிவைத் தந்ததோடு எழுத்தைக் குறித்த தீவிரத்தை நோக்கி நகர்த்தியது. அதுவரை எந்த இலக்கோ தீவிரமோ இல்லாமல் மனம்போன போக்கில் புத்தகங்களை வாங்குவேன், வாசிப்பேன். அதை ஒருமைப்படுத்தவும் ஒழுங்கமைக்கவும் உதவியாக அமைந்தன. மொழிபெயர்ப்பின் சில அடிப்படைகளை அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு கட்டுரையை மொழிபெயர்ப்பதற்கும் கவிதையை மொழி மாற்றம் செய்வதற்குமான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடிந்தது.

எழுதவேண்டும் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியதோடு அந்த எண்ணத்தை தீவிரமாக மாற்றியது தர்மபுரி சந்திப்புகள்தான்.

பகல் முழுக்க வாசிக்கும்போதும் விவாதிக்கும்போதும் இருந்த தீவிரமான ஜெயமோகன் உருமாறி வேறொரு ஆளாக இருப்பார். மலையாள, தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய நினைவுகள், சுவாரஸ்யமான சம்பவங்கள், பகடி, கிண்டல், விமர்சனம் என்று வெடிச் சிரிப்புடன் உற்சாகம் பெருக்கெடுக்கும். அடுத்தடுத்து உரத்த சிரிப்பலைகள். சமயங்களில் பக்கத்து வீட்டிலிருந்து யாரும் ஆட்சேபிக்கக்கூடும் என்று பயமாகவும் இருக்கும். ஒரு சனிக்கிழமை இரவில் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

கோணங்கியைப் பற்றிப் பேச்சு வந்தது. பல்வேறு ஊர்களில் அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களைப் பற்றி சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒரு இலக்கிய வாசகர், நண்பரின் வீடு. ஒண்டுக்குடித்தனம். மிகச் சிறிய வீடு. வசதிகளை எப்போதும் பொருட்படுத்தாத கோணங்கியிடம் மறுநாள் காலையில் எழுந்ததும் நண்பர் கேட்கிறார் ‘கோணங்கி, உங்களுக்குப் பாடத் தெரியுமா?’

‘இல்லையேப்பா. என்ன விஷயம்?’

‘இல்லேன்னாலும் பரவால்ல. உங்களுக்குத் தெரிஞ்சதை சத்தமா பாடுங்க.’

‘எதுக்கு?’

‘இந்த டாய்லட் கதவுக்கு தாப்பாழ் இல்ல.’

ஓயாமல் அலைந்து திரியும் கோணங்கியின் சாகசக் கதைகளைப் பேசிக் கொண்டிருந்துவிட்டு இரவு ஒரு மணிக்கு உள்ளே செல்கிறோம். வாசல் விளக்கு அணைக்கப்பட்டது. கதவைச் சாத்திவிட்டு படுத்தோம். இன்னும் பேச்சு ஓயவில்லை. அரைமணி நேரம் கடந்திருக்கும். வாசலிலிருந்து ஒரு குரல். செங்கதிர் என் தோளைத் தொட்டு கவனிக்கும்படி சொல்கிறார். மீண்டும் அந்தக் குரல் ஜெயமோகனின் பெயரைச் சொல்லி அழைக்கிறது. எழுந்தேன். விளக்கைப் போட்டுவிட்டு கதவைத் திறக்கிறேன்.

மடித்துக் கட்டிய வேட்டியும் தோளில் ஜோல்னா பையுமாய் வாசலில் நின்றார் கோணங்கி.

‘என்னடா நடக்குது இங்க?’ ஆச்சரியத்துடன் எங்களைப் பார்த்தார்.

வாசலில் அப்படியே அமர்ந்தோம். சொம்பு நீரை முழுக்கக் குடித்துவிட்டு ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்துவிட்டு மறுபடி கேட்டார் ‘எல்லா ஒண்ணா சேந்துட்டு என்னடா பண்றீங்க?’

சத்தத்தையும் சிரிப்பொலியையும் கேட்டு தூக்கக் கலக்கத்துடன் அருணா வெளியில் வந்தார் ‘இன்னும் தூங்கமா இப்பிடி அரட்டையடிச்சிட்டிருந்தா நாளைக்கு காலையில என்ன…’. கோணங்கியைப் பார்த்ததும் திகைத்து நின்றார்.

‘நீங்க எப்ப?’

‘வாம்மா. இந்தக் கூட்டத்துல நீயும் ஒருத்தியா?’

அருணாவுக்கு தூக்கம் போய்விட்டது. ‘டீ போடவா?’

கோணங்கி சந்தோஷத்துடன் தலையாட்டினார் ‘பசிக்குது’ என்றவர் உடனடியாகவே ‘இதுக்காக நீ அடுப்பு மூட்டாதம்மா. எதாவது இருந்தா சொல்லு. இல்லேன்னா டீ போடு. போதும்.’

அருணாவுடனே உள்ளே சென்றவர் ஒரு பாத்திரத்தில் சோறும் குழம்புமாக வந்தார். ‘அருணாவுக்கு தெரியும், இன்னிக்கு வருவேன்னு. அதான் எடுத்து வெச்சிருக்கு’ பிசைந்து அள்ளித் தின்றபடியே பேசலானார்.

சற்று நேரம் ஓய்ந்திருந்த சிரிப்பும் சத்தமும் மீண்டும் அந்த இரவில் ஒலிக்கத் தொடங்கிற்று.

இரவு முழுக்கப் பேச்சு. விடிந்ததும் அப்படியே எழுந்து நடந்தோம். தர்மபுரி ரயில் பாதையோரமாய் நீண்ட நடை. ஓயாத பேச்சு. உற்சாகம். சிரிப்பு. வீட்டுக்கு திரும்பியபோது வாசல்களில் கோலங்கள் பூத்திருந்தன.

குளித்துவிட்டு எங்களுடன் சாப்பிட்டதும் பையைத் தூக்கித் தோளில் போட்டார் ‘உங்களுக்கு தொந்தரவு வேணாம். நான் கௌம்பறேன்.’

எங்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. அவர் போன பின் வருத்தத்தைச் சொன்னதும் ஜெயமோகன் சிரித்தார் ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. இன்னொரு நா இதேமாதிரி அர்த்தராத்திரில வந்து கதவைத் தட்டுவார். சொல்லிட்டு சரியான நேரத்துல வந்துட்டு ரெண்டு நா தங்கிட்டுப் போனா அது கோணங்கி இல்ல.’

அந்தச் சந்திப்புகள் நடந்த சமயத்தில் அதைக் குறித்து சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லத் தவறியதில்லை. சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, கோமல் சுவாமிநாதன், நாஞ்சில்நாடன் என்று எல்லோரிடமும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் நீட்சியாக உதகையில் நித்ய சைதன்ய யதியைச் சந்தித்தோம். திருக்குறள், சங்கப் பாடல்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் நித்யா. தமிழ் இலக்கிய ஆர்வம்கொண்ட இளைஞர்களைச் சந்திப்பது அவருக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்திருந்தது. இன்னும் பல இளைஞர்கள் அங்கு வரவேண்டும், கவிதையும் இலக்கியமும் பேசவேண்டும், அங்குள்ள நூலகத்தை அனைவரும் பயன்படுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டார். கவிதை வாசிப்பு, விவாத அரங்குகளை ஒருங்கிணைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ச்சியாக அவரைச் சந்தித்து உரையாடினோம். சுபமங்களா இதழில் ஓவியங்கள் குறித்த நித்யாவின் சில கட்டுரைகளை நிர்மால்யா மொழிபெயர்த்திருந்தபோதும் தமிழில் அவரைப் பற்றிய குறைந்தபட்ச அறிமுகம்கூட இல்லை என்பதை அறிந்தோம். அதற்கென ஒரு இதழைத் தொடங்கலாம் என்று ஜெயமோகன் தீர்மானித்தார். கூடவே, அப்போதைய தமிழ் சிறுபத்திரிக்கைகளின் பொதுவான சில அம்சங்கள் அல்லாமல் அமைந்த இதழாகவும் அமையவேண்டும் என்று எண்ணினார்.  குருகுலத்திலிருந்து அதை வெளியிடலாம் என்று யோசனை.

உதகையில் நித்யாவிடம் இந்த எண்ணத்தை வெளிப்படுத்தினார் ஜெயமோகன். அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. “பத்திரிக்கை நடத்துவது என்பது ஒரு புனைவாசிரியனின் வேலையல்ல. கடுமையான உழைப்பைக் கோருவது. அது அவனது கற்பனையாற்றலை, படைப்பாற்றலை உறிஞ்சிவிடும். படைப்பாளனாக இருக்க வேண்டுமா, பத்திரிக்கையாளனாக இருக்கவேண்டுமா என்று நீயே முடிவு செய்துகொள்” என்று கறாராகவே சொல்லிவிட்டார்.

நித்யாவின் இந்த முடிவு எல்லோரையும் சோர்வடையச் செய்தது. ஆனால், ஜெயமோகன் பின்வாங்கவில்லை. பத்திரிக்கையைக் கொண்டு வருவது என்பதில் உறுதியாக இருந்தார். உதகையிலிருந்து திரும்பி வருகையில் பேருந்திலேயே ஈரோடு ராஜேந்திரன், தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த ‘எழுத்து’ இதழின் தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்ற பொருளில், இதழுக்கு  ‘சொல் புதிது’ என்ற பெயரை முன்மொழிந்தார். ஆசிரியர் குழுவில் ரிஷ்யசிருங்கர், க.மோகனரங்கன். செந்தூரம் ஜெகதீஷ், யூமா வாசுகி, அருண்மொழிநங்கை ஆகியோர். தன்னுடைய பெயர் இடம் பெறவேண்டாம் என்பதை முதலிலேயே சொல்லிவிட்டார் ஜெயமோகன்.

இதழ் குறித்து விரிவான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஈரோட்டில் இரண்டு முறை சந்திப்பு, எண்ணற்ற கடிதங்கள், தொலைபேசி உரையாடல்கள் வழியாக செம்மைப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு இதழிலும் நேர்காணல், இதழ் முகப்பில் படைப்பாளியின் முகம், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இயல் சார்ந்த புத்தகப் பகுதி, பிற அறிவுத்துறைகள் சார்ந்த செறிவான கட்டுரைகள், மொழியாக்கங்கள், ஒன்றிரண்டு சிறுகதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் என்று மாதிரி இதழ் உருவாக்கப்பட்டது. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டன. நேர்காணல்கள் திட்டமிடப்பட்டன. படைப்பாளிகளிடமிருந்து ஆக்கங்கள் கேட்டுப் பெறப்பட்டன. சந்தாதாரர்களை சேர்க்கும் முயற்சியும் நடந்தது.

இதழ் அச்சாக்க வேலையை வசந்தகுமாரிடம் ஒப்படைக்கலாம் என்று சொன்ன ஜெயமோகன் ‘தமிழினி’ புத்தக வெளியீட்டுக்காக கோவை வரும் அவரை சந்திக்கவேண்டும் என்று தெரிவித்தார். கோவை ஆருத்ரா ஹால் அருகிலுள்ள கொடீசியா அரங்கில் புத்தக வெளியீடு நடந்தது. தமிழினி முதன்முதலாக வெளியிட்ட புத்தகங்களின் அறிமுகம். எனக்கு வசந்தகுமாரைத் தெரியாது. விழா முடிந்து அனைவரும் உணவுக்காக ரயில் நிலையம் அருகில் உள்ள கீதா கபேவுக்கு நடந்தார்கள். கோவை நண்பரிடம் வசந்தகுமார் யார் என்று விசாரிக்க அவர் அடையாளம் காட்டினார். சாப்பிட்டு முடித்துவிட்டு கீதா கபே வாசலிலிருந்த வேப்பமரத்தின் அடியில் அமர்ந்தோம். சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு விசாரித்தார். ‘விஷ்ணுபுரம்’ நாவலைப் பற்றிக் கேட்டார். அடுத்தடுத்து கேள்விகள், அதைப் பற்றிய என் அபிப்ராயங்கள் என்று சிகரெட்டுகள் புகையாகிக் கொண்டிருக்க உரையாடல் நீண்டது. கடைசியில் கையிலிருந்த ஒரு கடித உறையின் பின்பக்கத்தில் இதழ் அச்சாக்கத்துக்கான செலவைப் பட்டியலிட்டுக் கொடுத்தார். ஆயிரம் பிரதிகளுக்கான செலவு ரூ.16670.

முதல் இதழின் வேலைகள் உற்சாகத்துடனே நடந்தன. ஜெயமோகனிடமிருந்து அன்றாடம் கனத்த கடித உறைகள் வரும். கட்டுரைகள், மொழியாக்கங்கள் என்று எண்ணற்ற ஆக்கங்கள். எழுத்தாளர்களிடமிருந்து படைப்புகள். எல்லாவற்றையும் படித்து, தேர்ந்தெடுத்து அச்சுக்கு அனுப்பவேண்டும். சில நாட்களில் மெய்ப்பு பார்ப்பதற்காக அவை திரும்ப வரும். ஒவ்வொன்றையும் படித்து மெய்ப்பு நோக்கவேண்டும். கடைசியில் இறுதி வடிவத்தை தீர்மானிப்பதற்காக இரண்டொரு நாள் சென்னைக்கு செல்ல வேண்டும். அப்போது ராயப்பேட்டையில் இருந்த பஷீரின் அலுவலகத்தில் தங்கி இதழ் வேலையை முடித்துவிட்டு திரும்புவேன்.

1999 ஜுலை ஏழாம் தேதி என் மனைவியை தலைப் பிரசவத்துக்காக ஈரோடு மருத்துவர் அம்சா சுப்ரமணியத்தின் மருத்துவமனையில் சேர்த்தேன். காலை பதினோரு மணிக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், இரவான பின்னும் சுகப்பிரசவத்துக்காக மருத்துவர் காத்திருந்தார். அன்று மாலை மருத்துவமனைக்கு வந்த ராஜேந்திரன் அஞ்சலில் வந்திருந்த உறையைத் தந்தார். உள்ளே நித்ய சைதன்ய யதியின் முகப்புப் படத்துடன் ‘சொல்புதிது’ முதல் இதழின் இரண்டு பிரதிகள். மருத்துவமனை வாசலில் வைத்து இதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன். கவனம் குவியவில்லை. ஆனாலும் மனம் நிறைந்திருந்தது. எட்டாம் தேதி விடிகாலையில் மகன் பிறந்தான்.

இதழின் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. 1999, ஜுலை பத்தாம் தேதி மயிலாப்பூர், கற்பகாம்பாள் நகரில் உள்ள கோகலே சாஸ்திரி இன்ஸ்டிட்யூட்டில் விழா நடந்தது. சுந்தர ராமசாமி முதல் பிரதியை வெளியிட ஜெயகாந்தன் பெற்றுக்கொண்டார். ராஜமார்த்தாண்டன், சா.கந்தசாமி, மருத்துவர் ஜீவா, பிரேம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். விழா நாளில் ஜெயமோகன் கோவையில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கெடுக்க நேர்ந்ததால் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.

எதிர்பார்த்தபடியே இதழுக்கு இரண்டு விதமான எதிர்வினைகளும் இருந்தன. ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டபடி இதழ் வடிவமைக்கப்பட்டது. ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், முத்துலிங்கம் உள்ளிட்ட முன்னோடிகளின் பேட்டிகளும் பாவண்ணன், யுவன் சந்திரசேகர் ஆகிய முன்னணி எழுத்தாளர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றன. மொழி, அறிவு, தொல்படிமம், மானுட உணர்வுகள், விஞ்ஞானப் புனைவு அறிவியல், தத்துவம், வரலாறு எனும் தேடல் போன்றவற்றை மையமாகக் கொண்ட புத்தகப் பகுதிகள் வெளியாயின. நித்ய சைதன்ய யதி, ஜெயகாந்தன், ஓஷோ, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், வெங்கட் சாமிநாதன், பாவண்ணன், யுவன் ஆகியோரின் படங்கள் முகப்பில் இடம்பெற்றன. குறிப்பிடத்தக்க புத்தக மதிப்புரைகள், கவிதைகள், சிறுகதைகள் இடம் பெற்றன. ஒவ்வொரு இதழிலும் எம்.எஸ் அவர்களின் மொழியாக்கக் கதை இடம்பெற்றது.

அலுவலகப் பணிச் சூழல், கோவைக்கு இடமாற்றம் என்று பல்வேறு காரணங்களால் தொடர்ந்து இதழை நடத்த முடியாத சூழலில் ஐந்தாவது இதழுக்குப் பின் பொறுப்பிலிருந்து நான் விலக நேர்ந்தது.

ஈரோட்டில் அந்த இதழை பொறுப்பெடுத்து நடத்திய காலகட்டம் உண்மையிலேயே மிகுந்த நெருக்கடியான சமயம். அன்றாடம் தீராத வேலைகள். சந்தாதாரர்களுக்கு இதழை அனுப்பவேண்டும். மணியார்டரில் பணம் அனுப்புவோர்க்கு தபாலில் அனுப்பவேண்டும். இதழ் எனக்கு வரவில்லை என்று புகார் வரும். உடனே அவருக்கு மாற்று இதழை ஏற்பாடு செய்யவேண்டும். கட்டுரைகள், கதைகளை படித்து தேர்ந்தெடுத்து அச்சுக்கு அனுப்பி அவற்றை மெய்ப்புப் பார்த்து இதழை அச்சுக்கு அனுப்பவேண்டும். உடனே அடுத்த இதழ் வேலை தொடங்கிவிடும். அந்த காலகட்டத்தில் என்னால் வேறு எந்த வேலையையும் செய்ய இயலவில்லை. அப்போது நித்யாவின் சொற்களை அடிக்கடி நினைத்துக்கொண்டதுண்டு.




இதழ் நடத்தும் பணி கடுமையான உழைப்பையும் அதனால் மன நெருக்கடியையும் அளித்திருந்தது என்றாலும் இன்று திரும்பிப் பார்க்கும்போது முக்கியமான பல அனுபவங்களை அளித்திருக்கிறது என்பதை உணர்கிறேன்.

இதே காலகட்டத்தில் இன்னொரு முக்கியமான பணியைத் தொடங்கினார் ஜெயமோகன். தமிழ் மலையாளக் கவிஞர்கள் பங்கேற்ற ஒரு கவிதை அரங்கை குற்றாலத்தில் ஏற்பாடு செய்தார். குற்றாலத்தில் உள்ள கலாப்ரியாவின் இல்லத்தில் 1999 நவம்பர் 20, 21ம் தேதிகளில் நடந்தது. மலையாளத்திலிருந்து டி.பி.ராஜீவன், கல்பற்றா நாராயணன், ஆற்றூர் ரவிவர்மா, பி.ராமன், அன்வர், பி.பி.ராமச்சந்திரன், கெ.ஆர்.டோனி, ஜோசப் ஆகிய கவிஞர்கள் பங்கேற்க தமிழிலிருந்து சுந்தர ராமசாமி, கலாப்ரியா, தேவதேவன், மனுஷ்யபுத்திரன், எம்.யுவன், பிரேம், க.மோகனரங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர். இன்றும் வியப்பையளிக்கும் முக்கியமான சந்திப்பு அது. மலையாளத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து மலையாளத்துக்கும் கவிதைகளை மொழிபெயர்த்து பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியிருந்தார் ஜெயமோகன். அத்துடன் இரண்டு நாட்களும் தொடர்ந்து கருத்துகளை மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தார். மலையாளக் கவிஞர்கள் கவிதைகள் சந்தத்துடன் பாடியது தமிழ்க் கவிஞர்களுக்கு வியப்பை அளித்தது. அப்படியல்லாது சொல் ஒழுங்கையும் உள்ளார்ந்த இசைமையையும் கொண்ட தமிழ்க் கவிதைகள் அவர்களுக்கு ஆச்சரியம் தந்தன. ஆனால், அந்தச் சந்திப்புக்குப் பின் மலையாளக் கவிதைகளில் தமிழ்க் கவிதைகளின் பாதிப்பு கணிசமாக அமைந்தது. இன்றும் மலையாளக் கவிதை உரையாடல்களில் ‘குற்றாலம் எஃபக்ட்’ என்று குறிப்பிடப்படுகிறது.

‘நித்யா ஆய்வரங்கம்’ என்ற பெயரில் நடந்த இருமொழிக் கவிஞர்களின் இந்தச் சந்திப்பும் பரிமாற்றமும் தொடர்ந்தது. உதகை நாராயண குருகுலத்திலும் இத்தகைய சந்திப்புகள் நடந்தன. கல்பற்றா நாராயணன், கெ.ஆர்.டோனி, டி.பி.ராஜீவன், அனிதா தம்பி ஆகியோரும் தமிழிலிருந்து நிஷா மன்சூர், முகுந்த் நாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இவை தவிர, நாஞ்சில்நாடன், மு.தளையசிங்கம் உள்ளிட்ட பல மூத்த படைப்பாளிகளின் எழுத்துகள் குறித்த உரையாடல்களும் உதகையில் ஏற்பாடு செய்யப்பட்டன.

உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ‘காவிய முகாம்’ என்பது இந்தச் சந்திப்புகளின் தொடர்ச்சி என்றே குறிப்பிடலாம். பத்து அல்லது பதினைந்து பேர் என்ற அளவில் தொடங்கி இன்று நூற்று ஐம்பது நபர்கள் பங்கேற்கும் பெரிய சந்திப்பாக மாறியிருக்கிறது.

ஒழுங்கான திட்டமிடல், கால அளவுகளுடன் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல், உணவு இருப்பிடம் பயணம் என எல்லாவற்றிலும் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் என ஒவ்வொன்றுமே முன்பே தெரிவிக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்டன. செலவு செய்து அத்தனை தொலைவு வந்தவர்கள் அதிலிருந்து பெற்றுக்கொள்ள நிறைவான ஒரு அனுபவத்தை இந்த நெறிப்படுத்தல்கள் உறுதிப்படுத்தின. திட்டமிடப்பட்ட ஒரு சந்திப்புக்கென குருகுலத்துக்கு முதலில் வருபவர் ஜெயமோகன்தான். வந்ததிலிருந்து தொடங்கி அன்றிரவு தூங்கும் வரைக்கும் பிற எவரையும்விட அதிகமாய் பேசுவது அவராகத்தான் இருக்கும். ஆனால் ஒருபோதும் அவரிடம் அந்தக் களைப்பைப் பார்க்க முடியாது.  எல்லோரும் தூங்கச் சென்ற பிறகும்கூட, ஒவ்வொருவருக்கும் வசதிகள் சரியாக உள்ளனவா என்று சரிபார்ப்பார். தேவதேவன், நாஞ்சில்நாடன் போன்ற மூத்த படைப்பாளிகள் தலைக்கு குல்லா அணிந்திருக்கிறார்களா, காதுகளை மூடியிருக்கிறார்களா, காலில் சாக்ஸ் அணிந்திருக்கிறார்களா என்று தனிப்பட்ட முறையில் ஒவ்வொன்றிலும் அக்கறை எடுத்துக் கொள்வார்.

தொடக்கத்தில் ஐந்து அல்லது ஆறு பேராக குருகுலத்துக்குப் போகும்போது அங்குள்ள சாமியார்கள் சமைக்கும் உணவையே நாங்களும் எடுத்துக்கொள்வோம். பெரும்பாலும் கஞ்சி, கிச்சடி போன்ற உணவு. கட்டன்சாயா எப்போதும் உண்டு. திடீரென்று ஒரு சில நாட்களில் தம்பான் சாமிகள் அவியல் சமைத்துத் தருவார். ஆனால், பிற நண்பர்கள் வரத் தொடங்கியபோது அவர்களின் வசதியைக் கருதி உணவு முறையில் சிறிய மாற்றங்களைச் செய்ய நேர்ந்தது. முன்பே நிர்மால்யாவுக்கு குறிப்பிட்ட தொகையை அனுப்பி சமையலுக்கு வேண்டிய பொருட்களை ஒழுங்கு செய்து அதற்கான ஆட்களையும் ஏற்பாடு செய்தார். பின்னர், அதுவே ஒரு கல்யாண விருந்துபோல அறுசுவை பந்தியாக மாறிவிட்டது. தங்குவதற்கு அருகிலிருந்த சில விடுதிகளில் அறைகள் ஏற்பாடு செய்ய வேண்டி வந்தது.

அதுவரையும் தமிழில் பெரும்பாலான இலக்கிய கூட்டங்கள் அல்லது சந்திப்புகள் என்றால் அவை சுதந்திரமானவை. எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. அரங்கில் இருக்க விருப்பமில்லை என்றால் வெளியில் எழுந்து சென்றுவிடலாம். புகைக்கலாம். அரட்டை அடிக்கலாம். கூட்ட அரங்குக்கே வராமல்கூட இருக்கலாம். அரங்கினுள் பத்துபேர் இருந்தால் வெளியில் அதற்கும் கூடுதலான ஆட்கள் இருப்பார்கள். உதகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் இதற்கு நேர்மாறானவை. கலந்து கொள்வோர்க்கு முதலிலேயே எல்லா விதிகளும் தெரிவிக்கப்பட்டுவிடும். விருப்பம் இருந்தால் கலந்துகொள்ளலாம். பலரும் அவ்வாறான கட்டுப்பாடுகளைக் குறித்து விமர்சனங்கள் சொன்னதுண்டு. இப்போதும் சொல்வதுண்டு. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து இன்று இலக்கியத்துக்கென இரண்டு நாட்கள் சரியாக திட்டமிடப்பட்ட, கச்சிதமான முறையில் ‘விஷ்ணுபுரம் விருது’ விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இளைஞர்களை இலக்கியத்தின் பக்கமாக ஈர்க்க இந்த நடைமுறை மிக முக்கியம். இந்த நடைமுறை முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து சிறிய அளவிலிருந்து திட்டமிடப்பட்டு இன்று எல்லோரும் ஒப்புக்கொள்கிற வழக்கமாக மாறியிருக்கிறது.

0

ஈரோடு இடையங்காட்டு வலசில் நான் குடியிருந்தபோது ஜெயமோகன் பல நாட்கள் அங்கு வந்து தங்கியிருக்கிறார். ஒரு முறை அவர் வந்திருந்தபோது இமயத்தின் ‘ஆறுமுகம்’ நாவல் என் மேசையில் இருந்தது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவையில் நடந்த ஒரு கண்காட்சியில் அதை வாங்கி வந்திருந்தேன். மறுநாள் காலையில் நடைப் பயிற்சிக்குப் பின் அந்த நாவலை கையில் எடுத்துக்கொண்டு வாசலில் பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தார். வாசிக்கத் தொடங்கினார். இரண்டு மணி நேரம் எந்தச் சலனமும் இல்லை. எதிலும் கவனம் சிதறவில்லை. இடையில் என்னுடைய அம்மா இரண்டு முறை தேநீர் மட்டும் கொடுத்தார். நாவலைப் படித்து முடித்துவிட்டுத்தான் அங்கிருந்து எழுந்து வந்தார்.

விறுவிறுவென ஒரு குளியல். எப்போதும் அவர் குளிப்பதற்கும் உடுத்திக்கொள்ளவும் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. சாப்பிட உட்கார்ந்தவர் அந்த நாவலைப் பற்றிப் பேசலானார்.

ஊருக்குச் சென்றவரிடமிருந்து மறுநாள் தபால் வந்தது. அந்த நாவலைப் பற்றிய கட்டுரை.

‘ஒரு புத்தகத்தைப் படித்ததும் நம்மைத் தொகுத்துக் கொள்ளவேண்டும், ஏற்கெனவே நம் அனுபவ அடுக்கை அது குலைத்துப் போடக்கூடும் என்பதால் மீண்டும் ஒருமுறை தொகுத்துக்கொள்வது முக்கியம், அதன் பிறகு அந்த நாவல் எந்த வரிசையில் எப்படிப்பட்ட இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது என்பதை எப்போது வேண்டுமானால் நீங்கள் எந்த குறிப்பும் இல்லாமல் சொல்ல முடியும்’ என்பதை பலமுறை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு படைப்பாளியைப் பற்றியும் இவ்வாறான பகுப்பும் தொகுப்பும் நமக்குள் உறுதிப்படும்போதுதான் நமக்கான ஒரு தேர்வை தெளிவாக அடையமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

0

சந்திப்புகளில்போது காலையிலும் மாலையிலும் நடப்பது வழக்கம். அன்று முதல் இன்றுவரை அந்தப் பழக்கம் தொடர்கிறது. நடக்கும்போது ஓயாமல் பேசிக்கொண்டே நடப்பார். அந்த சமயத்தில் தான் ஆழ்ந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட பொருளைக் குறித்ததாகவே அந்த உரையாடல் இருக்கும். ஏதேனுமொரு கட்டுரையை எழுதுவதற்கு முன்பு அதைப் பற்றிய பல்வேறு தரப்புகளைத் தெரிந்துகொள்ளவும் அவற்றிலிருந்து கட்டுரையில் முன்வைக்க வேண்டியவற்றை தொகுத்துக் கொள்ளவும் இத்தகைய உரையாடல்கள் அவசியம் என்பதைச் சொல்வார்.

ஒரு குறிப்பிட்ட கருத்தைக் குறித்தோ அல்லது எண்ணத்தைக் குறித்தோ யோசித்துக்கொண்டிருக்கும்போது சந்திக்கும் அனைவரிடமும் அதைக் குறித்து விவாதித்து தன் கருத்தை அல்லது எண்ணத்தை செறிவாக்கிக் கொள்வதுண்டு. சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, கோவை ஞானி, சேலம் ஆர். குப்புசாமி, நாஞ்சில்நாடன், ராஜமார்த்தாண்டன், வசந்தகுமார் ஆகியோரிடம் அவர் தொடர்ந்து உரையாடுவதுண்டு. தன் சமகாலப் படைப்பாளிகள் பலரிடமும் விவாதிப்பார். கவிதையைப் பற்றிய நீண்ட இவ்வாறான உரையாடலை அடுத்தே ‘நவீன தமிழ்க் கவிதை-தேவதேவனை முன்வைத்து’, ‘நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்’, ‘நாவல்’ உள்ளிட்ட நூல்களை எழுதினார்.

நண்பர்கள், மூத்த படைப்பாளிகள், துறைசார் அறிஞர்களுடனான இவ்வாறான உரையாடுவதை அறிதலின் ஒரு முறையாகவே கடைபிடித்தார். இப்போது காவிய முகாம், விஷ்ணுபுரம் விருதுவிழா ஆகிய நிகழ்வுகளில் அதுவே தொடர்கிறது.

0

உதகையிலிருந்து மசினகுடி செல்லும் சாலையில் கல்லட்டி என்றொரு இடம் உண்டு. அடர்ந்த வனத்துள் அருவி கொட்டுவதை மலைப் பாதை வளைவுகளில் திரும்பும்போது பார்க்கலாம். கல்லட்டி பள்ளத்தாக்கில் அமைந்த எஸ்டேட்டில் ஒரு பழைய கால கல் கட்டடம். குருகுலத்துக்கு அடிக்கடி வரும் ஒருவருக்கு சொந்தமானது. அதைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை பிரபு தத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரபு தத்தா பிரம்மச்சாரி. அப்போது குருகுலத்தில் தங்கியிருந்தார். அமைதியான தனியான ஓர் இடத்தில அவர் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவரை அங்கே அனுப்பினார் நித்யா. குருகுலத்தில் சந்திக்க நேரும்போதெல்லாம் கல்லட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

ஒரு முறை உதகை குருகுலத்தில் இரண்டு நாள் தங்கிவிட்டு மாலையில் கல்லட்டிக்குப் புறப்பட்டோம். நிர்மால்யா அழைத்துச் சென்றார். அந்த கல் பங்களாவுக்கு செல்ல மசினகுடிக்குப் போகும் சாலைதான் சரியான பாதை. ஆனால், அந்தப் பாதையைவிட தூரம் குறைவு என்று சொல்லவும் எதிர்த்திசையில் இருந்த மலைப் பாதையை அடைந்தோம். இரண்டு மலைச் சரிவுகளுக்கு நடுவே பள்ளத்தில் இருக்கிறது அந்தக் கட்டடம். மேலேயிருந்த பார்ப்பதற்கு அத்தனை ஒன்றும் தொலைவோ சிரமமோ இல்லை என்றுதான் தோன்றியது. ஜெயமோகனும் நானும் மட்டுமே. நிர்மால்யா எங்களிடம் இப்படியே சரிவில் இறங்கிப் போய்விடலாம் என்று சொன்னார். ஆழத்தில் கட்டடம் கண்ணுக்குத் தெரிந்தது. சற்று நேரம் நின்று உற்றுப் பார்த்தபோது சிறிய அசைவு தென்பட்டது. பிரபுதத்தா எங்களைப் பார்த்து இரண்டு கைகளையும் அசைத்து வரச் சொல்கிறார் என்று புரிய சிறிது நேரம் பிடித்தது. தோளில் பையை மாட்டிக்கொண்டு சரிவில் இறங்கலானோம். முன்பின் பழக்கமில்லாதது. நேராக தலைக்குப்புற அல்லாது திரும்பி இறங்கவேண்டும் என்பதே தெரியவில்லை. நான்கைந்து எட்டுகள் வைத்த பிறகுதான் தவறு புரிந்தது. பின்னர் திரும்பி புதர்ச் செடிகளைப் பற்றிக் கொண்டு இறங்க முயன்றோம். புதர்ச் செடிகள் பலதிலும் முட்கள் இருந்தன. ஆனால் வேறு வழியில்லை. பற்றிக்கொள்ளாவிட்டால் சரியும் அபாயம். மூச்சு வாங்க ஒவ்வொரு எட்டாய் வைத்து இருவரும் இறங்கினோம். எதுவும் பேசவில்லை. முகம் பார்க்கவில்லை. அந்தி மயங்கிவிட்டது. ஆனால், சிறிது நேரத்தில் பிரபு தத்தாவின் குரல் செவிகளை எட்டியதும் தெம்படைந்தோம்.

ஒருவழியாக அடிவாரத்தை எட்டி சிறிய ஓடையைக் கடந்து மேட்டில் இருந்த கல் பங்களாவை அடைந்தோம்.

“இதுல எதுக்கு வந்தீங்க? மசினகுடி பஸ்ல வந்து எறங்கிருக்கலாமே?” என்று கேட்டபோது இருவரும் பதில் சொல்லும் தெம்புடன் இல்லை. உள்ளங்கைகளில் முட்கள் கீறியதில் ரத்தம். தலை கை கால்களில் புழுதி. தொட்டியில் நிறைத்திருந்த தண்ணீரை இறைத்து முகம் கழுவினோம். படிகளில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டு இறங்கி வந்த மலை உச்சியை ஏறிட்டுப் பார்த்தோம். அப்போதுதான் பயம் அதிகமானது.

பிரபு தத்தா இரண்டு தம்ளர்களில் எலுமிச்சை பானத்தைக் கொடுத்தார். அப்போதுதான் செடியில் பறித்த எலுமிச்சைகள். தேவாமிர்தமாக இருந்தது. ஒடுங்கிய முகத்தை முற்றிலும் மூடிய தாடி. அதையும் மீறிய துலக்கமான வெள்ளைச் சிரிப்பு.

சட்டென்ற இருட்டிவிட ஓடையருகே மரங்களுக்கு நடுவே மின்மினிக் கூட்டம். காற்றில் குளிர் ஏறியிருந்தது. ஒரு கணத்தில் காடும் இருளும் ஒன்றரக் கலந்துவிட பூச்சிகளின் இரைச்சல் கூடியது. பிரபுதத்தா பேசியபடியே சமைக்கத் தொடங்கினார்.

“வாசல்ல எதுக்கு இரும்பு பைப் போட்டிருக்கு?” நான் கேட்டதும் சிரித்தார்.

“ராவுல ஆனெ வரும்.”

ஒருகணம் வெளியில் எட்டிப் பார்த்தேன். கம்பி வேலிகள், குறுக்காகப் போடப்பட்ட இரும்புக் குழாய்கள், மூங்கில் கழிகள். இதெல்லாம் எம்மாத்திரம் என்று நினைத்த கணத்தில் சொன்னார் “இதெல்லாம் யானைக்காக இல்ல. நமக்கொரு தைரியம் வேணுமில்ல.”

சமையலின் மணம் திரண்டு வந்தபோது ஜெயமோகன் ஓடையருகே மினுமினுத்த அசைவுகளைச் சுட்டிக் காட்டினார்.

“என்னன்னு தெரியுதா?”

“பல்புமாதிரி தெரியுது.”

“காட்டெருமைக நிக்குது. நாலஞ்சு இருக்கும்.”

அந்த பங்களாவுக்கு மின்சாரம் கிடையாது. பழைய கால கல் கட்டடம். ஆனால், பிரபுதத்தா தங்குவதற்கு தேவையானவற்றை ஒழுங்கு செய்திருந்தார். தொலைதூர அருவியிலிருந்து சிறிய குழாய்களை இணைத்து தண்ணீரை சேமித்து, விறகு அடுப்பைக் கொண்டு சூடுபடுத்தி குளியலறையில் வெந்நீரையை வரவழைத்திருந்தார். மாதமொரு முறை உதகைக்கு வரும்போதுதான் அவர் பிற மனித முகங்களையே பார்ப்பார்.

அங்கே விளைவித்த காய்கறிகளைக்கொண்டு அருமையாக சமைத்திருந்தார். வாசலில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தபடியே அவருடைய கதையைக் கேட்டுக்கொண்டிருந்தோம். காடு மேலும் உயிர்த்திருந்தது.

காட்டுக்குள் இருக்கும் அருவியைப் பார்ப்பதற்காக விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து தயாரானோம். சிறிய பையில் அவல், நெல்லிக்காய்கள், வாழைப்பழம், தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டவரின் கையில் நீண்ட கத்தி ஒன்றும் இருந்தது. எங்கள் இருவரிடமும் நன்கு செதுக்கிய பிரம்பு போன்ற மரத்தடிகளைக் கொடுத்தார். தேவைப்படும் இடத்தில் ஊன்றிக்கொள்ளலாம், முட்செடிகளை விலக்கிக் கொண்டு நடக்கவும் உதவும் என்றார். முழங்கால் வரைக்குமான கம்பூட் அணிந்திருந்தார் பிரபு. ஜெயமோகன் கால்களில் கனத்த பூட்ஸ். நான் அலுவலகத்துக்கு அணியும் ஃபார்மல் ஷுவைப் போட்ருந்தேன். கீழே இறங்கி ஓடையருகே வந்தோம். பிரபு தத்தா ஒரே எட்டில் தாண்டினார். ஜெயமோகன் ஓடைக்கு நடுவிலிருந்து கல்லில் கால்வைத்து மறுபக்கம் தாவினார். நானும் அவரைப்போலவே கல்லின் மேல் கால்வைத்தேன். மறுகணம் ஓடையில் விழுந்திருந்தேன். கல் புரண்டிருந்தது. ஜீன்ஸ் நனைந்திருந்தது.

“பரவால்ல. இப்பவே விழுந்துட்டீங்க. இனி ஜாக்கிரதையா இருப்பீங்க” என்று ஜெயமோகன் கைகொடுத்துத் தூக்கினார்.

உண்மையில் அதன் பிறகு நான் எந்த இடத்திலும் தடுமாறவில்லை. கால் சறுக்கவில்லை.

அடர்ந்த காடு. அதற்குள் நுழைந்து அருவியை அடையும் பாதை பிரவுக்கு மட்டுமே தெரியும். ஒழுங்கான பாதையல்ல. பாறையில் தாவி, மரங்களுக்கு நடுவில் புதர்களை வெட்டிக் கடந்து ஏறியும் இறங்கியும் சென்றபடியே இருக்கவேண்டும். சிறிது நேரத்திலேயே வேர்க்கத் தொடங்கிவிட்டது. இருள் கலைந்து இளவெயில் துளைத்தக் காட்டின் வாசனையும் நிறங்களும் களைப்பைப் போக்கின. விதவிதமான ஓசைகள். பறவைகளின் சத்தங்கள். விலங்குகளின் கூச்சல். காலடியோசை கேட்டு சரசரத்து நகரும் பாம்புகள். சிற்றுயிர்கள். சிறகடித்து முகத்தில் மோதும் பட்டாம்பூச்சிகள். காட்டின் ஒவ்வொரு அடியிலும் விநோதங்கள். இதுவரை அறியாத உயிர்களின் ரகசியங்கள். பிரபுதத்தா ஓயாமல் பேசிக்கொண்டே வந்தார். மரங்களைப் பற்றிச் சொன்னார். புதர்ச் செடிகளில் அடைந்த பறவைகளைப் பற்றிக் கூறினார். மூலிகைகள், மலர்கள், பூச்சிகள், பழங்கள் என காட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் விவரித்தபடியே வந்தார். அவரது கையிலிருந்த கத்தி வழிமறித்த தாவரங்களின் கிளைகளை வெட்டும்போது பச்சை வாசனை. சில இடங்களில் பால் தெறித்து வழிந்தது. சில இடங்களில் நாசியைத் துளைக்கும் வாடை.

இடையே ஓய்வெடுக்க ஓர் இடத்தில் அமர்ந்தோம். நெடிய மரங்கள் சூழ்ந்து நின்றன. ஓடையில் பளிங்கு நீர் பெருக்கெடுத்தது. ஜெயமோகனுக்கு குளியல்போட ஆசை. பிரபுதத்தா தடுத்துவிட்டார். நீரின் தணுப்பு ஒத்துக்கொள்ளாதுபோகும் என்றார்.

அந்த வேளையில் பிடி அவலும் நெல்லிக்காயும் அத்தனை சுவை.

‘நெறைய சாப்பிட்டா நடக்க முடியாது. இது அளவாவும் இருக்கும். எனர்ஜியும் கொடுக்கும்’ பிரபுதத்தா முகத்தைக் கழுவிக்கொண்டு எழுந்தார்.

பாறைகள் செறிந்த இடமொன்றை அடைந்தபோது பொந்துபோலிருந்த இடைவெளியை எட்டிப் பார்த்தார். உள்ளேயிருந்து ஒரு பொருளை எடுத்தார். நீரில் அதை அலசிவிட்டு பாறையின் மேல் வைத்தார்.

சிறிய மண்டையோடு.

‘குரங்கோட மண்டையோடு. சிறுத்தை சாப்பிட்டுட்டு மண்டையோட்டை இந்த இடுக்கில போட்டு வெச்சிருக்கு.”

எட்டிப் பார்த்தோம். எட்டு பத்து மண்டையோடுகள் கிடந்தன.

‘சிறுத்தை இருக்குமா?’ கண்களால் காட்டைத் துழாவியபடியே கேட்டேன்.

‘அது இருக்கற எடத்துக்கு வந்துட்டு இருக்குமான கேட்டா எப்பிடி?’ ஜெயன் என் முகத்தைப் பார்த்துச் சிரித்தார்.

கழுவி வைத்த அந்த மண்டையோட்டை ஜெயன் எடுத்து பையில் போட்டுக்கொண்டார்.

நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடந்து ஒரு பாறை முகட்டை எட்டினோம். சிறிது தொலைவில் அருவி கொட்டிக்கொண்டிருந்தது. அந்த இடத்தை நெருங்க முடியாது. அப்படியே பார்த்துக் கொண்டு நின்றோம். செறிந்த காட்டின் நடுவே கரும்பாறைகள். கொட்டும் அருவி. யாரும் எதுவும் பேசவில்லை.

ஒரு மணி நேரத்துக்குப் பின் பிரபுதத்தா புறப்படலாம் என்றார்.

நாம் நினைத்துப் பார்ப்பதற்குள் இருட்டிவிடும் என்றபோது ஜெயன் சொன்னார் ‘காட்டுக்குள் இருக்கும் காலமும் காட்டுக்கு வெளியில் இருக்கும் காலமும் வேறுவேறு.’

திரும்பி நடந்து கல் பங்களாவை அடையும்போது அந்தி மயங்கியிருந்தது. ஓடை நீரில் கால் நனைத்துவிட்டு படிகளில் அமர்ந்தபோது காட்டின் இரைச்சல் தொடங்கியிருந்தது.

பிரபுதத்தா ஓய்வெடுக்காமல் இரவு உணவை சமைத்தார். யானை வந்து கட்டடத்தை மோதிய இரவின் அனுபவத்தைப் பற்றி உற்சாகத்துடன் கூறிக்கொண்டிருந்தார். ஜன்னலுக்கு வெளியே அசையும் இருள் எனக்கு யானைகள் போலவே தோற்றமளித்தன. எதுவும் பேசவில்லை.

அந்த இரண்டு நாட்கள் கல்லட்டியில் கழித்த பொழுதுகள் வாழ்வின் மறக்க முடியாத பேரனுபவம்.

அதன் பிறகு இரண்டு முறை இன்னும் சில நண்பர்களை அழைத்துச் சென்றோம். ஜெயமோகனின் பழக்கம் அது. தான் அறிந்த ஒன்றை நண்பர்களும் அனுபவிக்கவேண்டும் என்ற நோக்கில் அழைத்துச் செல்வார். ஒருமுறை மோகனரங்கன், பாவண்ணன், மகாலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர்.

மின்சார வசதியில்லாத, ஆள் நடமாட்டமில்லாத காட்டுக்குள் இரவு என்பது வேறொரு அனுபவம். கல்லட்டியில் வாய்த்த அந்த இரவுப் பொழுதுகளும் பிரபுதத்தா எங்களுக்காக காட்டிய அக்கறையும் நினைவில் உறைந்திருப்பவை.

கல்லட்டி அருவி அருகே சென்றடைந்த சமயம். காட்டின் நடுவே வெப்பம் தகிக்காத மதிய வெயில். பாறைகள் பளபளக்கின்றன. அங்கங்கே பொங்கியும் வழிந்தும் தாவியோடும் தண்ணீர். நானும் பிரபுதத்தாவும் ஓரத்தில் இருந்த பாறையின் மீது நின்றிருக்க ஜெயன் சட்டென்று அடுத்தப் பாறைக்குத் தாவினார். ஒருகணம் அவரது கால் வழுக்கியது. பற்றிக்கொள்ள எதுவுமில்லை. இடது காலை ஊன்றி சமாளிக்க முயன்றார். நிலைகொள்ள முடியவில்லை. வலதும் இடதுமாய் கால்கள் தடுமாற ஊன்றிக்கொள்ளும் பொருட்டு கைகளை உயர்த்தி சமநிலைகொள்ள முயன்றார். இருவரும் பார்த்துக்கொண்டே நிற்கிறோம். எதுவும் செய்ய முடியாது. பிரபு தத்தா பதற்றமின்றி எச்சரிக்கிறார் “கம்பை சரியா பிடிச்சுட்டு பேலன்ஸ் பண்ணுங்க. ஒண்ணுமில்லை.” அவரது காலடியில் வெறும் பாறை. விழுந்தால் நிச்சயம் அடிபடும். எலும்புகள் முறியலாம். எதுவும் நடக்கலாம். காட்டுக்குள் எங்கோ யாரும் எளிதில் வந்து சேர முடியாத இடத்தில் இருக்கிறோம். பாதைகள் கிடையாது. பாதுகாப்பும் கிடையாது.

சில நொடிப்பொழுதுதான். என்னவோ நடந்தது. எதுவோ கைகொடுத்ததுபோல் கால்களை ஊன்றியபடி குனிந்து நிமிர்ந்தார். சிரித்தார்.

கைகளை உயர்த்தியபடி கால்களை மாற்றி மாற்றி தடுமாறிய நிமிடத்தில் என்னென்வோ எண்ணங்கள் மின்னலிட்டு மறைந்ததை மீண்டும் நான் எண்ணிப் பார்க்க விரும்பாதவனாய் பாறையில் அமர்ந்து தலை குனிந்தேன்.

மாலையில் களைத்துப்போய் வீட்டுக்குத் திரும்பி வந்தபின் சாப்பிடும்போது பிரபுதத்தா சிரித்தபடியே சொன்னார் “வல்லிய டான்ஸ் அல்லே.”

பாறை இடுக்கிலிருந்து எடுத்த அந்த குரங்கு மண்டையோடு சிலகாலம் தர்மபுரி வீட்டில் இருந்தது.

0

தர்மபுரி வீட்டின் முன்னறையின் மூலையில் அவர் எழுதும் மேசை உண்டு. அதையொட்டி சுவரில் அலமாரி. அதன் கீழ் தட்டின் இடது ஓரத்தில் ஒரு இரும்புப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும். சிறிய கனமான பெட்டி. ஏதேனும் ஒரு சிறுகதையையோ கட்டுரையையோ எழுதி முடித்த பின் அதை அடுக்கி, மூலையில் துளையிட்டு, நூல் கோர்த்து கட்டிய பின் அந்தப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்து தபாலில் சேர்ப்பார்.

வெள்ளைத் தாளில் சீரான இடைவெளியில் திருத்தமான கையெழுத்தில் எழுதுவார். ஒரு பக்கத்தில் அதிகபட்சம் இருபத்தி நான்கு வரிகளே இருக்கும். அடித்தல் திருத்தல் இருக்காது. எழுதிக் கொண்டிருக்கும்போது பதினைந்தாவது வரியில் பிழை ஏற்பட்டால் அந்தப் பக்கத்தை அப்படியே கிழித்துப் போட்டுவிட்டு புதிதாகவே எழுதுவார். சில சமயங்களில் மொத்தமாக எழுதி முடித்த பின் ஏதேனும் ஒரு பக்கத்தில் பிழை இருந்ததைக் கண்டுபிடிக்க நேர்ந்தால், சரியான வார்த்தையை ஒரு சிறிய துண்டுத் தாளில் எழுதி தவறான சொல்லுக்கு மேலே அதை கச்சிதமாக ஒட்டிவிடுவார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ‘விஷ்ணுபுரம்’ நாவல் முழுக்க அவ்வாறு கையால் எழுதப்பட்டது. சில முறை திருத்தியும் எழுதப்பட்டது.

கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்களின் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட அந்த இரும்புப் பெட்டி காலியாக இருந்து நான் பார்த்ததில்லை. எப்போதும் அதில் மூலையில் நூலால் கட்டப்பட்ட  தாள்களுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் இருக்கும். இப்போது அவரிடம் அந்த இரும்புப் பெட்டி இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பெட்டியின் இடத்தை கணினி பிடித்துக்கொண்டுள்ளது. அதற்குள் எண்ணற்ற சொற்களையும் வரிகளையும் கொண்ட ஏராளமான புத்தகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்ந்து கொண்டே உள்ளன. வற்றாத ஊற்றாக புனைவுகளும் புனைவல்லாத எழுத்துகளும் பெருகி வழிகின்றன.

0

இன்று பின்னோக்கிப் பார்த்து, தர்மபுரி நாட்களை யோசிக்கிறேன். அப்போது ‘ரப்பர்’ நாவலும் சிறுகதைகளும் நாவல் பற்றிய விவாதங்களும் அவரை அறியச் செய்திருந்தன. விஷ்ணுபுரம் எழுதிக் கொண்டிருந்தார். தொடர்ந்து எழுதவேண்டியவற்றைப் பற்றிய தெளிவான வரைபடம் இருந்தது. அத்துடன், இலக்கியச் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பது, ஒத்த நண்பர்களுடன் இணைந்து ஒரு இலக்கிய இயக்கத்தை உருவாக்குவது பற்றிய ஒரு தீர்க்கமான வரைபடமும் இருந்தது என்பது தெளிவாகிறது.

எழுத்தில் அவரது சாதனைகள் அனைவரும் அறிந்ததே. தமிழில் நாவல்களைக் குறித்த தெளிவான பார்வையை உருவாக்கியதோடு புதிய ஒரு நாவல் அலை உருவாகக் காரணமானவர் ஜெயமோகன். ரப்பர், விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கொற்றவை, காடு ஆகிய நாவல்களைத் தொடர்ந்து ‘வெண்முரசு’ எனும் சாதனையை முடித்திருக்கிறார்.

கவிதை, இலக்கிய வரலாறு ஆகிய வகைமைகளில் அடிப்படையிலிருந்து தொடங்கி அதன் பல்வேறு தரப்புகளை தீர்க்கமாக முன்வைக்கும் அறிமுக நூல்களை எழுதியிருக்கிறார். நவீன கவிதை ஓர் அறிமுகம் (தேவதேவனை முன்வைத்து), தமிழ் நவீன இலக்கிய அறிமுகம், இலக்கிய முன்னோடிகள் ஆகிய மூன்று நூல் வரிசைகளும் அந்த வகையில் முக்கியமானவை. தமிழ் சங்கப் பாடல்களின் சிறப்பை நடைமுறை அனுபவங்களோடு இணைத்துச் சொன்ன ‘சங்கச் சித்திரங்கள்’ புதிய வாசகர்களை ஈர்க்கும் தன்மைகொண்டது. பல்வேறு வடிவங்களையும் மொழியமைப்பையும் கொண்ட எண்ணற்ற சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஒருவகையில் கடந்த முப்பதாண்டு சிறுகதைப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களை இவற்றிலிருந்து அறிந்துகொள்ள முடியும். அங்கதமும் பகடியும் மிகுந்த அனுபவக் கட்டுரைகள் அடங்கிய ‘அபிப்ராய சிந்தாமணி’ நூலுக்கு தனித்த இடம் உண்டு. இவை தவிர வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான பல்வேறு இடைவெளிகளை நிரப்பும்பொருட்டு கேள்வி பதில்களாக எழுதப்பட்ட நூல்கள் உண்டு.

ஒரு காலகட்டத்தில் எழுத்து என்பது தாளிலிருந்தும் பேனாவிலிருந்தும் விலகி கணினியை நோக்கி நகர்ந்தபோது அதன் வீச்சையும் ஆற்றைலையும் கண்டுணர்ந்து உடனடியாய் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டது ஒரு திருப்புமுனை. 2005ம் ஆண்டுக்கு பின்  வலைப்பூக்கள் பிரபலமான போது சிறிய கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். ‘திலகமும் தொப்பியும்’ போன்ற கட்டுரைகள் கவனம் பெற்றபோது அவரது வலைப்பூ பிரபலமானது. ஒரே சமயத்தில் உலகெங்கிலுமிருந்து பல நூறு வாசகர்கள் அதை வாசித்தபோது அதன் வீச்சை புரிந்துகொண்டு தொடர்ந்து இன்னும் விரிவான அளவில் அதை தன் எழுத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கினார். கணினித் துறையைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் அவரைப் பின்தொடர்ந்தனர், வாசித்தனர். அதுவே ‘விஷ்ணுபுரம்’ அமைப்பு உருவாகக் காரணமானது. பெரும் வாசக எண்ணிக்கையுடன் வளர்ந்து நிற்கிறது. தொடர்ந்து வாசகர் சந்திப்புகளையும் கவிதை, சிறுகதை அரங்குகளையும் ஒழுங்கு செய்கிறது.

கடந்த முப்பதாண்டு காலகட்டத்தில் நுட்பமும் செறிவும் மொழியழகும் கொண்ட பல்வேறு புனைகதைகளை எழுதி தமிழின் முதன்மை படைப்பாளியாகத் தன்னை நிறுவிக்கொண்டதோடு இதற்கு இணையாகவே தமிழகத்தில் கட்டுப்பாடும், நெறிமுறைகளும், தீர்க்கமான இலக்கும் கொண்ட, இலக்கியத்தின் மேலும் எழுத்தின் மீதும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான ஒரு இலக்கிய இயக்கம் உருவாகவும் காரணமாகியிருப்பதே ஜெயமோகனின் சாதனை. மொழியின் மீதும் இலக்கியத்தின் மீதும் அக்கறைகொண்ட ஒரு எழுத்தாளன் தன் படைப்புகளைத் தாண்டி செய்யவேண்டிய அர்த்தமுள்ள காரியமும் அதுவாகத்தான் இருக்கும்.

 0

 (ஜெயமோகனின் அறுபது வயது நிறைவையொட்டி வெளியிடப்பட்டுள்ள ‘சியமந்தகம்’ கட்டுரைத் தொகுப்புக்காக எழுதப்பட்டது.)

 

 

 

 

 

 

 

 

 

 

Wednesday, 13 April 2022

ஆலத்தூர் இளவரசி - அருண்மொழிநங்கையின் ‘பனி உருகுவதில்லை’

 


1995ம் ஆண்டு தர்மபுரியில் அறிமுகமானவர் அருண்மொழிநங்கை. அப்போது அவர் பரபரப்பான குடும்பத் தலைவி. வார இறுதி நாட்களில் ஜெயமோகனின் வீட்டில் நண்பர்கள் கூடுவதுண்டு. ஒருவகையில் தீவிர இலக்கிய வாசிப்பின் தொடக்கம் என்று சொல்லலாம்.எழுதுவதற்கான ஆரம்பப் பயிற்சியும்கூட. திருப்பூரிலிருந்து நானும் நண்பர் கோவிந்தராஜும் ஈரோட்டிலிருந்து ரிஷ்யசிருங்கர் என்ற ராஜேந்திரனும் சேலத்திலிருந்து செல்வராஜூம் அரூரிலிருந்து செங்கதிரும் சனிக்கிழமை காலையில் வந்து சேருவோம். சில சமயங்களில் சேலம் ஆர்.குப்புசாமியும் கலந்துகொள்வார். பத்து மணிக்கு நாங்கள் வருவதற்குள் எங்கள் அனைவருக்கும் மதிய உணவை சமைத்து வைத்துவிட்டு அருணாவும் தயாராக இருப்பார். வீட்டு வேலைகளையும் அப்போது சிறு குழந்தையாயிருந்த அஜிதனுக்கும் தேவையானவற்றையும் ஒழுங்கு செய்திருப்பார்.  

கவிதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள், கட்டுரைகள் என்று வாசிப்பதும் விவாதிப்பதுமாக இரண்டு நாட்கள் கழியும்.

டி.எஸ்.எலியட்டின் புகழ்பெற்ற கட்டுரை Tradition and Individual Talent. அந்தக் கட்டுரையை வரிவரியாகப் படித்து விவாதித்து மொழிபெயர்த்தோம். அந்த ஒரு கட்டுரைக்கு மட்டும் ஒரு மாதத்தின் நான்கு வார இறுதி நாட்கள் பிடித்தன. அதையொட்டி ஒவ்வொருவரும் தனித்தனியாக கட்டுரைகள் எழுதினோம்.

காலையில் பத்து மணிக்குத் தொடங்கி ஒரு மணி வரை வாசிப்பு. இடையில் தேநீர். பிறகு மதிய உணவு. எல்லோருக்கும் அருணா சமைத்து வைத்திருப்பார். மாலையில் ஐந்து மணிக்கு மேல் நீண்டதூர நடை. திரும்பி வந்ததும் மீண்டும் வாசிப்பு. இரவு உணவுக்குப் பின் பதினோரு மணி வரைக்கும் வாசிப்பதும் அனுபவக் கதைகளுடனான அரட்டையுமாக அந்த நாள் முடியும். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை மதியம் வரை இப்படியே போகும்.

இந்த நாட்களின்போதுதான் நான் முதன்முதலாக மொழிபெயர்த்த ஈஸாவாஸ்ய உபநிஷத்தை முழுக்க வரிவரியாக ஒப்பிட்டுப் பார்த்து செப்பனிட்டோம்.

இந்த நாட்களில் எல்லாம் அருணா தீவிரமான இலக்கிய மாணவி. அஜிதன் சிறு குழந்தை. இருந்தும்கூட எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு எங்களுடன் சேர்ந்து வாசித்துக் கொண்டிருப்பார். கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களை ஒழுங்காக முடித்து வைத்திருப்பார். வாசித்தவை குறித்து குறிப்புகள், விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதவேண்டும்.

அப்போது தர்மபுரியிலும் அதன் பிறகு தக்கலையிலும் நான் பார்த்த அருணா வேறொரு அருணா. இந்தக் கட்டுரைகளில் உள்ள அருணாவை அந்த நாட்களில் நான் பார்த்ததே இல்லை. சொந்த ஊர் பட்டுக்கோட்டை, திருவாரூரில் உறவினர்கள் உண்டு என்று மட்டுமே தெரியும்.

‘சொல்புதிது’ ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தும்கூட ஒருசில மொழிபெயர்ப்புகளைத் தவிர அருணா அதிகமாய் எதுவும் எழுதவில்லை.

சென்ற ஆண்டு இந்தக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அஜிதனும் சைதன்யாவும் வளர்ந்துவிட்டார்கள். வெண்முரசையும், வீடடங்கு காலக் கதைகளையும் எழுதி முடித்துவிட்டார் ஜெயமோகன். எனவே, அருணா சரியான சமயத்தில்தான் எழுதத் தொடங்கியிருக்கிறார்.

‘மரபிசையும் காவிரியும்’ என்ற முதல் கட்டுரை ஏப்ரல் 2021ல் வெளியான போது சமூக வலைதளங்களின் வழியாகக் கவனம் பெற்றது. நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த சுட்டியின் வழியாக வாசிக்க நேர்ந்தது. அதன் பிறகு ‘விட்டு வந்த இடம்’ கட்டுரையின் சுட்டியை நண்பர் அனுப்பியிருந்தார். தர்மபுரியில் நாங்கள் சந்தித்த நாட்களைக் குறித்த கட்டுரை அது. இப்போது இந்த நூலில் உள்ள வரிசையில் கட்டுரைகள் வெளியாகவில்லை. அதில் வேறொரு வரிசையில் இருந்தது. அவ்வப்போது சில கட்டுரைகளைப் படித்திருந்தேன்.

இந்தக் கட்டுரைகள் நூலாக வெளியாவதற்கு முன்பே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. பலரால் வாசிக்கப்பட்டுள்ளன. எல்லோருக்கும் பிடித்தமான கட்டுரைகளாய் அமைந்துள்ளன.

ஏன் அப்படி?  எல்லோரும் விரும்பி வாசிக்கும்படியாக இந்த நூலில் என்ன  உள்ளது? நமது சிறுவயது நினைவுகளை இவை ஞாபகப்படுத்துகின்றன என்பதாலா? முப்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த கிராமங்களை, அதன் மனிதர்களைக் குறித்து இவை யோசிக்கச் செய்கின்றன என்பதாலா? இன்று நமக்குள் ஞாபகங்களாய் மட்டும் எஞ்சியிருக்கும் கருப்பு வெள்ளைக் காலத்தைக் குறித்த ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதாலா?

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இதுபோல தனிப்பட்ட காரணங்கள் பல இருக்கக்கூடும். பொதுவான சில காரணங்களும் இருக்கலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தக் கட்டுரைகள் எல்லோரையும் கவர்வதற்கான அடிப்படைக் காரணமாக நான் உத்தேசிப்பது, இவற்றில் வெளிப்பட்டுள்ள இன்னொசென்ஸ். அப்பாவித்தனம், வெள்ளந்தித்தனம், களங்கமின்மை என்று பல சொற்கள் உள்ளபோதும் அவை அவ்வளவாய் பொருந்தவில்லை என்பதால் இன்னொசென்ஸ் என்ற வார்த்தையையே நான் பயன்படுத்துகிறேன்.

பொதுவாகவே இன்னொசென்ஸ் இருக்கிற எந்தவொரு விஷயமுமே எல்லோருக்கும் பிடித்துப்போகும். ஏனென்றால் இன்னொசென்ஸ் என்பது குழந்தைகளுக்கு உரியது. உலகை அறியத் தொடங்கும் கணம் முதல் பதின்ம வயது வரைக்குமான பருவம் வரை எல்லாக் குழந்தைகளிடமும் தன்னிச்சையாக மலர்ந்து வெளிப்படுவது இந்த இன்னொசென்ஸ்.

உலகின் ஒவ்வொரு அசைவையும் அது உற்றுக் கவனிக்கிறது. தொடுகையை உணர்கிறது. வாசனையை நுகர்கிறது. ருசியை அனுபவிக்கிறது. ஓசைகளை அறிகிறது. ஒவ்வொரு கணமும் புத்தம் புது விஷயங்களை தொடர்ந்து கவனிக்கிறது. எல்லாமே ஆச்சரியந்தான். வியப்புதான். இந்த வியப்பு உலகையே அழகாகக் காட்டுகிறது. எல்லாவற்றையுமே மகிழ்ச்சிக்குரியதாக மாற்றுகிறது. எந்த எதிர்மறையான உணர்வுகளும் தலையெடுப்பதில்லை. அச்சமோ தயக்கமோ இல்லை. எல்லாவற்றையும் முயன்று பார்க்கும் ஒரு ஆர்வம்.

அந்த இன்னொசென்ஸ் உலகின் தொடக்கமாக அன்னையை அறிகிறது. பிறகு அன்னையின் வழியாகவே மொத்த உலகையும் அறியத் தொடங்குகிறது. ஒரு வகையில் அறிதலே அந்தப் பளிங்குக் குளத்தில் விழும் முதல் கல். அறிதல்களே அனுபவங்களாக மாறுகின்றன. அறிதல்களும் அனுபவங்களுமே விசேஷமான தனித்த குணாம்சங்களுடன் கூடிய ஒரு ஆளுமையை உருவாக்குகின்றன. இவை அனைத்துக்கும் ஆதாரமாக அமைவது இன்னொசென்ஸ்.

இந்த ஆளுமை உருவாக்கத்தில் அன்னையும் தந்தையும் உறவுகளும் சூழலும் எத்தகைய பங்களிப்பைச் செய்கின்றனர் என்பதையே அருணாவின் இந்த அனுபவங்கள் நமக்கு தெளிவுப்படுத்துகின்றன.

அருணாவின் பாட்டி ராஜம்மா. கம்பீரமும் மிடுக்கும் கொண்டவர். ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கான தெரிவு அவரிடம் உண்டு. வீட்டில் உருக்கிய நெய்யில் வார்த்த தோசை, கல்லிலிருந்து நேராகத் தட்டில் விழவேண்டும், கறந்த பாலில்தான் காப்பி போடவேண்டும், சாம்பாருக்கு ஆம்பலாம்பட்டு கத்தரிக்காய்தான் வேண்டும், சாதம் குழைந்தால் பிடிக்காது, சாம்பாரில் சின்ன வெங்காயம்தான் போடவேண்டும் என்று சின்னச் சின்ன விஷயத்திலும் கறாராக இருப்பவர். ஆனால், விசால மனம் படைத்தவர். அரவை மில்லுக்கு நெல் அரைக்கப்போகும்போது, அதில் இரண்டு படி நெல்லை, பாவப்பட்ட பட்டாணிக்குக் கொடுக்கும்படி அருணாவிடம் சொல்வதன் வழியாக எளியோர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறார்.  கீரைக்காரிகள், தெரு வியாபாரிகள், தலைச்சுமைக்காரர்களிடம் பேரம் பேசக்கூடாது என்று கற்றுத் தருகிறார். பிச்சையிடும்போது மரியாதையுடனும் புன்னகையுடனுமே இடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். ‘கறுப்பே அழகு, காந்தலே ருசி’ என்பதை சொல்லித் தந்திருக்கிறார். ‘வேங்கைபோல் வாழ்ந்து பறவை போல் மறைந்தவர் அவர்’ என்று அருணா குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது. அவரது வாழ்வும் சிந்தனையும் அருணாவிடம் பெரும் செல்வாக்கு செலுத்தியுள்ளன. பாட்டி சொன்ன கதைகளும் அவருடன் கழித்த பொழுதுகளும் அருணாவின் குணநலன்களை உருவாக்கியதோடு அவற்றுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்ந்த தன் கைகளால் குழையும் ஈரக் களிமண்ணை ஒரு குயவன் வனைவதைப்போல ராஜம்மா பாட்டி அருணாவின் ஆளுமையை உருவாக்கியிருக்கிறார்.

அம்மா சரோஜா ஒரு பள்ளி ஆசிரியை. 22 வயதில் ஆசிரியர் ஆனவர். புள்ளமங்கலம் கிராமத்தில் அரசு வேலைக்குச் சென்ற முதல் பெண். இரண்டு தங்கைகளை மணம் முடித்து கொடுத்துவிட்டு 29 வயதில் மணம் செய்துகொண்டவர். 1969ல் அது அபூர்வமான ஒன்று. அதிகாலையிலேயே எழுந்து, தூங்கிக்கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில், சமையலறையில் மங்கிய வெளிச்சத்தில்  வேலைகளை சிறு சத்தம்கூட எழாமல் வேலைகளைச் செய்பவர். பாத்திரத்தில் கரண்டி மோதும் சத்தம்கூட வராது. பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் துறுதுறுப்புடன் செய்து முடிப்பவர். குழந்தைகளைத் தயார்ப்படுத்தி, கணவரையும் அனுப்பிவிட்டு பள்ளிக்கு குறித்த நேரத்தில் ஓடுபவர். அவரிடமிருந்து நேர மேலாண்மையையும் சுறுசுறுப்பாகக் காரியமாற்றும் திறனையும் கற்றுக்கொள்ள முடிகிறது.

பணியின் பொருட்டு குடும்பத்தை விட்டுவிட்டு வெளியூரிலிருந்து வந்து, பள்ளியின் இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் தங்கியுள்ள ஆசிரியர்களுக்கு இனிப்பு அடை, கார அடை என்று வீட்டில் செய்யும் பலகாரங்களைக் கொடுத்து அனுப்புவதுண்டு. உணவைப் பகிர்ந்துண்ணவேண்டும். தேவையான சமயத்தில் உதவிகளைச் செய்யவேண்டும் என்ற பண்பைக் கற்றுக் கொள்ள முடிகிறது.

செலவுகளிலிருந்து மிச்சம் பிடித்த பணத்தை புள்ளமங்கலத்திலிருக்கும் தன் அம்மாவுக்கு யாருக்கும் தெரியாமல் மணியார்டர் அனுப்பச் சொல்கிறார். நல்ல காரியங்கள் சிலவற்றை இதுபோல செய்வதில் தவறெதுவும் இல்லை என்ற சூட்சுமத்தையும் அருணா கற்றுக் கொண்டிருக்கிறார்.

கண்டிப்பானவர் அப்பா சற்குணம். சரித்திர ஆசிரியர். ஆர்.எஸ் என்று நண்பர்களால் அழைக்கப்படுபவர். படிப்பாளி என்று பெயர்பெற்றவர். பகுத்தறிவு சிந்தனைகளையும் முற்போக்குக் கருத்துகளையும் கொண்டவர். நாத்திகர். கல்வி முக்கியம் என்று வலியுறுத்துபவர். வாசிப்பும் பொது அறிவுமே வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்பதை உறுதியாக நம்புபவர். குழந்தைகளிடம் பாசமும் பிடிப்பும் கொண்டவர். அதே நேரத்தில் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பார். திட்டுவார். விசிறி மட்டையால் அடிப்பதும் உண்டு. பிள்ளைகளுக்கு அவரிடம் பயம். அப்பாவின் இந்த பாசமும் கண்டிப்புமான குணமே ஒழுக்கத்தை கற்றுத் தருகிறது. பாடப் புத்தகங்களைத் தாண்டியும் வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைக் கற்றுத் தருகிறது. வாழ்க்கையில் நண்பர்கள் முக்கியம் என்பதையும் அவரிடமிருந்து அருணா தெரிந்து கொள்கிறார். 

பிறர் செய்யும் தவறுகளைப் பொருட்படுத்தாமல் அனுசரித்துப்போகும் குணத்தை விஜயா அத்தையும், யாருடைய குறைகளையும் பெரிதுபடுத்தாமல் விட்டுத் தரும் பண்பை வடிவேலு மாமாவும் கற்றுத் தருகிறார்கள்.

வளரும் பருவத்திலேயே வீட்டு வேலைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும், பெற்றோர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் சின்னச் சின்ன வேலைகள் அருணாவுக்குத் தரப்படுகின்றன. அந்தக் காலகட்டத்தில் சிறுவர்கள் அனைவருமே வீட்டு வேலைகளை செய்ய நேரும்.

விறகுக் கடையிலிருந்து சைக்கிளில் விறகு சுமப்பது, மில்லில் நெல் அரைத்துக் கொண்டு வருவது, தண்ணீர் சுமப்பது, கடைக்குப் போய் சாமான்களை வாங்கி வருவது என்று இவை அனைத்தும் வேலைகள் மட்டுமல்ல, ஒரு வகையில் வாழ்க்கைக் கல்வியும்கூட. இவற்றைச் செய்வதன் மூலம் குழந்தைகள் பொருளாதாரத்தைக் கற்றுக் கொள்கின்றனர். மனிதர்களிடம் பழகும் விதத்தைக் கற்றுக் கொள்கின்றனர். சமூகத்துடனான உறவையும் பிணைப்பையும் புரிந்து கொள்கின்றனர். நல்லனவற்றையும் அல்லனவற்றையும் தெரிந்துகொள்கின்றனர். இந்த உலகை எதிர்கொள்வதற்கு அவர்கள் தயாராகின்றனர்.

ஆதார குணமாக அமைந்திருக்கும் இன்னொசென்ஸைக் கொண்டு இவ்வாறான மதிப்புக் கூட்டலின் வழியாக விழுமியங்களைக் கற்றுக் கொடுத்து தனித்த ஆளுமையை உருவாக்க இவர்கள் அனைவரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணியாகின்றனர்.

 

தொடர்ந்து அனுபவங்கள் கூடி, பதின்பருவத்தின் தொடக்கத்தில் அறிவும் தர்க்கமும் செரிவுறுகின்றன. நன்மை தீமை, நல்லது கெட்டது போன்ற இருமைகள் தலையெடுக்கின்றன. அப்போது அந்த இன்னொசென்ஸ் திரிபடைகிறது. இதனால் நம் ஆளுமையிலும் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. உலகைப் பற்றிய பார்வை மாறுகிறது. மனிதர்களை எடைபோடக் கற்றுக் கொள்கிறோம். தொடக்கத்தில் இருந்ததுபோல எவ்வித கணக்குகளும் இல்லாமல் நோக்கங்கள் இல்லாமல் பலாபலன்களைப் பாராமல் மனிதர்களை அணுகும்போக்கு மறைந்து அறிவைக் கொண்டும் தர்க்கத்தைக் கொண்டும் மனிதர்களையும் அவர்களது காரியங்களையும் அணுகும்போக்கு வளரத் தொடங்குகிறது.

இந்தக் கட்டுரைகள் அனைத்துமே பதினான்கு வயது வரையிலுமான அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. ஆலத்தூரில் மட்டும் ஏற்பட்டவை. அதன் பிறகான நாட்கள் இவற்றில் இடம் பெறவில்லை.  காரணம், மதுக்கூரும் பட்டுக்கோட்டையும் இத்தகைய அனுபவங்களைத் தரவில்லை என்கிறார் அருணா. உவப்பான மீண்டும் எண்ணிப் பார்க்கும்படியான அனுபவங்களை அவை அளிக்கவில்லை என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. இப்படியொரு எண்ணம் அவரது மனத்தில் எழுவதற்கான அடிப்படை உளவியல் காரணம் இந்த இருமைதான்.

பதின்பருவத்தின் தொடக்கம் வரையிலும், இன்னொசென்ஸ் என்பது அறிவினாலும் தர்க்கத்தினாலும் திரிபடையாத பருவம் வரையிலும் குழந்தைகள் யாரால் எப்படி எந்தச் சூழலில் வளர்க்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது ஆளுமை உருவாகிறது என்பதற்கான உளவியல் ஆவணங்களாகவே இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன.

இந்தக் கட்டுரைகளில் காண முடிகிற அருணாவின் இன்னொசென்ஸை நான் அவரது கண்களில் பார்த்திருக்கிறேன். கூட்டங்களில் ஜெயமோகன் பேசும்போது அவரையே ஆர்வத்துடன் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது அந்தக் கண்களில் அந்த இன்னொசென்ஸ் பளபளத்துக் கொண்டிருக்கும். இப்போதும்கூட சில புகைப்படங்களில், ஜெ யின் அருகில் இருக்கும் படங்களில், அந்த இன்னொசென்ஸைப் பார்க்க முடியும்.

அந்த இன்னொசென்ஸ் எதிலிருந்து உரம் பெற்றது என்பதற்கான ஊற்றை இந்தக் கட்டுரைகள் அடையாளம் காட்டியுள்ளன, இந்த நூலும் இதிலுள்ள கட்டுரைகளும் எனக்குப் பிடித்துப் போனமைக்கு அடிப்படையான முதன்மையான காரணம் அதுவே.

இரண்டாவது காரணம், இந்தக் கட்டுரைகளில் சில இடங்களில் காண முடிகிற புனைவுத் தருணங்கள். நேர்த்தியான கலைத்திறன் துலங்கும் இடங்கள் அவை. இந்தக் கட்டுரைகள் நேரடியாக, வெகு சரளமாக எழுதப்பட்டவை. திருத்தப்பட்டு, செதுக்கி, கச்சிதம் கூட்டி செறிவூட்டப்பட்டவை அல்ல. கொப்புளித்துப் பெருகும் நினைவுகளை சொற்களில் அவசர அவசரமாக அள்ளித் தந்திடும் ஒரு தன்மை இவற்றில் உண்டு. அருணா தனக்கு ‘சின்ன தாட்பூட்’ என்றொரு பட்டப்பெயர் உண்டென்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அவர் பேசும்போது, உடனே எங்கோ புறப்பட்டுப் போகும் அவசரத்தில் இருப்பதுபோலவே விறுவிறுவென்று பேசுவார். அந்தத் தன்மை இந்தக் கட்டுரைகளில் உண்டு. ஆனால், அவற்றுக்கு நடுவே சிற்சில இடங்களில் ஒரு புனைவாசிரியரைப்போல சில அழகான இடங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறார். அல்லது விட்டுச் சென்றிருக்கிறார்.

இரண்டு தருணங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஒன்று, விஜயா அத்தையைப் பெண் பார்க்க வருகிறார்கள். மருதாணி இலை பறிக்க பக்கத்து வீட்டுக்குச் செல்கிறார் அருணா. அந்த வீட்டில் இருக்கும் ஜெயக்கா மாப்பிள்ளையைக் குறித்து விசாரிக்கிறார். ‘ஜெயக்கா பாவம், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும். ரேடியோ கேட்கும். கதைப் புத்தகம் வாசிக்கும்’ என்று சில வரிகள் மட்டுமே உள்ளன. கூடுதலாய் ஜெயக்கா பற்றி அவர் எதுவுமே சொல்வதில்லை. ஆனால், மாப்பிள்ளையைக் குறித்த ஜெயக்காவின் விசாரிப்பும் அவரைப் பற்றிய சில சொற்களும் மட்டுமே சேர்ந்து சொல்லாத பல கதைகளை நமக்கு உணர்த்துகின்றன.

இரண்டாவது தருணம், விஜயா அத்தையைப் பெண் பார்த்துவிட்டு போய்விட்டார்கள். அவரது திருமணத்துக்கு யார் யார் என்னென்ன சீர் செய்யலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். உத்தமசீலன் சித்தப்பா, வீடு ரிப்பேர் வேலையிருப்பதால் தன்னால் ஒரு ஜோடி வளையல் மட்டுமே போட முடியுமென்று சொல்லி எடுத்துத் தர, அப்பாவுக்கு கோபம் எகிறுகிறது. ஆத்திரத்துடன் கத்துகிறார். சித்தப்பாவுக்காக அம்மா, ராஜம்மா பாட்டி, பரிந்துகொண்டு வருகிறார். மேலும் கோபத்துடன் அப்பா சீறுகிறார் ‘நீ இங்க இருக்கக் கூடாது. வீட்டை விட்டு கௌம்பு நீ. விஜயா கல்யாணத்துக்கும் நீ வரக்கூடாது’ என்று விரட்டுகிறார். ‘அப்படின்னா நானும் அவனோடே போறேன்’ என்று பாட்டியும் ஒரு பையில் துணிகளைத் திணித்துக்கொண்டு புறப்பட்டுவிடுகிறார். நட்ட நடு ராத்திரியில் இடுப்பில் குழந்தையுடன் சித்தியும் பாட்டியும், உத்தமசீலன் சித்தப்பாவுடன் புறப்பட்டுப் போகிறார்கள். அந்தக் காட்சி அத்துடன் நின்றுவிடுகிறது. உத்தமசீலன் சித்தப்பாவைக் குறித்தோ, அவரது குடும்பத்தைப் பற்றியோ, அப்பாவுக்கு அவர் மீது ஏன் அத்தனை ஆத்திரம் என்பதைப் பற்றியோ வேறெந்த செய்தியும் கட்டுரையில் சொல்லப்படவில்லை. மகிழ்ச்சியான ஒரு சந்தர்ப்பம் அந்த இரவில் ஒரு துயரக் காட்சியாக முடிந்துவிடுகிறது.

இந்தக் கட்டுரைகள் எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கியமான மூன்றாவது காரணமும் உண்டு. இந்தக் கட்டுரைகளில் அருணா தன் வாசிப்புப் படிநிலையை விவரித்திருக்கிறார். அவரது வாசிப்பு குமுதத்தில்தான் தொடங்கியிருக்கிறது. அதன் பிறகு அம்புலிமாமா, பாலமித்ரா என்று சிறுவர் இதழ்கள் இரும்புக் கை மாயாவி போன்ற காமிக்ஸ்கள் எனத் தொடர்ந்திருக்கிறது. வார இதழ்கள், தொடர்கதைகள், மாத நாவல்கள் என்று வளர்ந்து சாண்டில்யன், சுஜாதா, பாலகுமாரன், லட்சுமி என அடுத்த படிக்கு நகர்ந்திருக்கிறது. சுஜாதாவின் வழியாகவே அசோகமித்திரனையும் சுந்தர ராமசாமியையும் அறிந்திருக்கிறார். சிறு பத்திரிகைகளில் வழியே தீவிர இலக்கியத்தை வந்தடைகிறார். இதே வரிசையில்தான் என் வாசிப்புப் பருவமும் அமைந்திருந்தது. என் அப்பா குமுதம் வாசகர். அதிலிருந்த கார்டூன்களில் தொடங்கி கேள்வி பதில்கள் துணுக்குகள் ஒரு பக்கக் கதைகள் என்றுதான் வாசிக்கத் தொடங்கினேன். பத்தாம் வகுப்பு விடுமுறையில் மு.மேத்தாவும் வைரமுத்துவும் அப்துல் ரகுமானும் ஆட்கொண்டிருந்தனர். பிறகு சாண்டில்யன், கண்ணதாசன் என்று தொடர்ந்து கணையாழியை வந்தடடைந்தேன். சுஜாதாவின் வழியே தீவிர இலக்கியம், சிறு பத்திரிகைகள் அறிமுகமாயின. அருணாவின் வாசிப்புப் படிநிலையும் என்னுடைய வாசிப்புப் படிநிலையும் ஒன்றுதான். வாரப் பத்திரிகைகளில் தொடங்கி வணிய இலக்கியத்தின் வழியே நவீன இலக்கியத்தை வந்தடைந்தது, ரஷ்ய இலக்கிய வாசிப்பு, பிற இந்திய மொழி நாவல்கள், சிறு பத்திரிக்கைகள் என்ற படிநிலைகள் இருவருக்கும் ஒன்றுபோலவே அமைந்திருந்தது. டூரிங் டாக்கீஸில் மணலைக் குவித்து வைத்து சினிமா பார்த்த அனுபவம் எனக்கும் உண்டு. பிறகு மலையாள, வங்கப் படங்கள். அங்கிருந்து உலகத் திரைப்படங்கள் என்று வளர்ந்த சினிமா ரசனையிலும் பொதுத்தன்மை உள்ளது. எனவே, இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது என்னையே நான் பார்த்துக்கொள்ள முடிந்தது. என்னுடைய இலக்கிய, சினிமா ரசனையில் படிநிலைகளை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க முடிந்தது.

அருணாவைப் போலவே நம் ஒவ்வொருவருக்குள்ளும் நமது சிறுவர் பருவத்தின் நினைவுகள் உள்ளன. பனிரெண்டு பதிமூன்று வயது வரையிலான அந்த நினைவுகள் பலவும் மிகத் துல்லியமாக நமக்குள் புதைந்துள்ளன. ஏதேனும் ஒரு தருணத்தில் தற்செயலாக ஒரு நினைவு மேலெழும்போது அதனுடன் சேர்ந்த வேறு பல விஷயங்களும் திரண்டு வருகின்றன. வியக்கத்தக்க வகையில் அந்தக் குறிப்பிட்ட சம்பவம் அனைத்து நிறங்களுடனும் மணத்துடனும் ஓசைகளுடனும் நம் முன் விரிகின்றன. யோசித்துப் பார்த்தால் பலருக்கும் தம் வாழ்வின் மிக உன்னதமான பருவமாக, நினைவுகளாக அவையே எஞ்சியிருக்கும். பொக்கிஷங்கள் போல அவற்றை சமயம் கிடைக்கும்போதெல்லாம் எடுத்துப் பார்த்துக் கொள்வோம். அத்தகைய தன் நினைவுகளை அருணா எழுத்தின் வழியாக சாஸ்வதப்படுத்தியிருக்கிறார். அடுத்தத் தலைமுறைக்கு ஆலத்தூரையும் அதன் மனிதர்களையும் அறிமுகப்படுத்துகிறார். இதன் மூலமாக தன் நினைவில் உள்ள ஆலத்தூரை அருணா இன்னொரு தலைமுறையின் நினைவிலும் பதித்துவிடுகிறார். ஆலத்தூரும் அதன் மனிதர்களும் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் ஆலத்தூரைப்போல இன்னும் பல கிராமங்கள் உண்டு. கும்பகோணத்தில் நான்கு ஆண்டுகள் வசித்திருக்கிறேன். உள்ளடங்கிய கிராமங்களையும் அங்குள்ள பழைய கோயில்களையும் பார்த்திருக்கிறேன். பல நாட்களில் அங்கு ஆள் நடமாட்டமே இருக்காது. கருவறையில் மினுங்கும் ஒற்றைச் சுடரும் ஆளற்றப் பிரகாரமுமாய் தனிமையில் உறைந்திருக்கும். ஊத்துக்காடு அப்படியொரு கிராமம்தான். பலருக்கும் அறிமுகமான கிராமம். தெரியாதவர்களுக்குக்கூட ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் பெயரைச் சொன்னால் தெரிந்துவிடும். ‘அலைபாயுதே கண்ணா’, ‘தாயே யசோதா’ போன்ற பிரபலமான கீர்த்தனைகளை இயற்றியவர். கும்பகோணத்துக்கு அருகில் சின்னஞ்சிறு கிராமம். அதைவிட சிறிய கோயில். இப்போது அதை எடுத்துக் கட்டியிருக்கக்கூடும். நான் பார்த்தது பத்து வருடங்களுக்கு முன்பு. வைக்கோல் பிரிகள் காற்றில் பறந்திருக்க, பாதையெங்கும் நெல் காயவைக்கப்பட்டிருக்கும். காவிப் பட்டைகளுடன் கூடிய சிதைந்த அக்ரஹார வீடுகள் ஒன்றிரண்டு. காளிங்க நர்த்தனமாடும் கிருஷ்ணனின் விக்ரகம் மிக அழகாக இருக்கும். இத்தனை காலமும் ஊத்துக்காடு என்ற அந்த கிராமம் அந்தப் பாடல்களின் வழியாகத்தான் நிலைத்திருக்கிறது.

ஊத்துக்காடு போல பல கிராமங்களும் கோயில்களும் உண்டு. அருணாவின் கட்டுரைகள் அத்தகைய கிராமங்களையும் கோயில்களையும் நினைவுபடுத்தின. அருணா ஆலத்தூரையும், வெங்கட சுப்பையர் ஊத்துக்காடையும் எழுத்தின் வழியாக, பாடலின் வழியாக அடுத்தடுத்த தலைமுறைகளின் நினைவில் ஊர்களை சாஸ்வதப்படுத்தியுள்ளார்கள். எழுத்தின் மூலம் ஊர்களும் மனிதர்களும் காலத்தில் எழுதப்பட்டுவிடுகின்றன. தலைமுறைகளின் நினைவில் செதுக்கப்பட்டுவிடுகின்றன.

அருணா எழுதியதைப் போல ராஜம்மா பாட்டி தன் அனுபவங்களை எழுதியிருப்பாரென்றால் அது அவரது காலகட்டத்தின், அவர் வாழ்ந்த ஊர்களின் மிக முக்கியமான ஆவணமாக இருந்திருக்கும். அதுபோலவே, அருணாவின் அம்மா சரோஜா தன் அனுபவங்களை, நினைவுகளை எழுதியிருப்பாரென்றால் நாம் அறியாத காலத்தை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும். புள்ளமங்கலத்தையும் ஒரு ஆசிரியராக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் எழுத முடிந்திருக்கும். நாளை சைதன்யா தன் நினைவுகளை எழுதக் கூடும். அவரது அனுபவங்கள் முற்றிலும் வேறானவையாகவே இருக்கும். தர்மபுரியும் தக்கலையும் பார்வதி புரமுமாக அந்த நினைவுகள் அமையும். இவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்த தலைமுறைக்கான வரலாற்றுப் பதிவுகளே. ஒரு குடும்பத்தின் வரலாறாகத் தொடங்கி அதுவே சமூகத்தின், பிரதேசத்தின் வரலாறாகவும் அமையும்.

பிறரிடம் எப்படிப் பேசவேண்டும் என்று அப்பா சொன்னதாக அருணா ‘மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்’கட்டுரையில் குறிப்பிடுகிறார் ‘மத்தவங்களோட பேசும்போது அவங்க ஏரியா ஆப் இன்ட்ரெஸ்ட் என்னன்னு தெரிஞ்சு போரடிக்காம பேசணும். மத்தவங்களோட பேசும்போது நம்மள பத்தி அவங்க கேட்டாலொழிய நாமளா பேசக்கூடாது. காமன் இன்ட்ரெஸ்ட் உள்ள விஷயங்களை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா பேசணும். ஹியூமரோட பேசணும். ஒள் சைடா பேசிட்டே பேசக்கூடாது. அவங்க பேசறதையும் காது குடுத்துக் கவனமா கேட்கணும்.’ இந்தக் கட்டுரைகள் நமக்குப் பிடித்துப் போக இந்தத் தன்மையும் முக்கியமான காரணம். நமக்குப் பிடித்தமானவற்றை செறிவாகவும் நேர்த்தியாகவும் இவை சித்தரித்துள்ளன. இவை வெறும் நினைவுக் குறிப்புகள் இல்லை. ஒவ்வொன்றிலும் நிறைய சம்பவங்கள் உண்டு. உரையாடல்களின் வழியாக, சித்தரிப்புகளின் வழியாக அன்றைய சம்பவங்கள் இன்று நம் முன் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. அந்தந்த சந்தர்ப்பங்களில் ஒவ்வொருவரும் என்னென்ன நிறங்களில் உடுத்தியிருந்தார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்தச் சூழலின் ஓசைகளைக் கேட்க முடிகிறது. கிராமத்தில் நுழைந்தவுடன் எழும் நெல் வாசனை, அடுப்பில் கொதிக்கும் சாதத்தின் வாசனை, கறந்த பாலின் வாசனை, சித்தியின் கையிலிருந்து எழும் விறகுப்புகையின் வாசனை என எண்ணற்ற வாசனைகளை நம்மால் நுகர முடிகிறது. சொற்களின் வழியாக அந்த அனுபவங்கள் மிகத் துல்லியமாக நம்மிடம் நிகழ்கிறது. ஆலத்தூரை இந்தக் கட்டுரைகளில் பார்க்கும்போதெல்லாம் நாம் ஒவ்வொருவரும் நாம் வளர்ந்த கிராமத்தை, ஊரை நினைத்துக் கொள்கிறோம். நமது பள்ளிக்கூடத்தை ஆசிரியர்களை நண்பர்களை நினைத்துப் பார்க்கிறோம். நம் வாழ்வின் அனுபவங்களை எண்ணிப் பார்த்துக் கொள்கிறோம்.

இந்தக் கட்டுரைகளில் கவனிக்க முடியும் இன்னொரு அம்சம் அருணாவின் மொழியில் தெறிக்கும் அங்கதம். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு சொல், ஒரு வாக்கியத்தின் வழியே பகடியாக எதையேனும் சொல்லிவிட முடிந்திருக்கிறது. ‘சின்னச் சின்ன புரட்சிகள்’ என்ற கட்டுரை நல்ல உதாரணம். அதேபோல, ‘மாயச்சாளரம்’ என்ற கட்டுரையில் பாட்டியுடன் கிராமத்து மந்தையில் ‘அண்ணன் ஒரு கோயில்’ சினிமா பார்த்த அனுபவத்தை எழுதியிருக்கும் பகுதியையும் குறிப்பிடலாம். பல இடங்களில் சிறுவர் பருவத்துக்கே உரிய குறும்புத்தனம் கொப்புளித்து வெடித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்தப் பருவத்துக்கேயுரிய துள்ளலும் துடுக்குத்தனமும் உற்சாகத்துடன் மிளிர்வதையும் காண முடிகிறது. கூடவே வாத்தியார் பிள்ளை என்ற பொறுப்புடன் நடந்துகொள்ளும் பாங்கையும் பார்க்க முடிகிறது.

இதிலுள்ள பல கட்டுரைகளும் வடிவத்திலும் சொல் முறையிலும் கச்சிதமான சிறுகதைகளாகவே அமைந்துள்ளன. டெய்ஸி பெரியம்மாவின் வாழ்வைச் சொல்லும் ‘ஒளியும் நிழலும்’, வடிவேலு மாமாவைக் குறித்த ‘நிலை’, ‘இரண்டு அன்னப்பறவைகள்’ ஆகிய கட்டுரைகளைச் சொல்லலாம். இதிலுள்ள கதாபாத்திரங்கள், உரையாடல்கள், தருணங்கள் அனைத்துமே நுட்பமான சிறுகதைக்கான கூறுகளைக் கொண்டுள்ளன. ‘மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்’ பிரமாதமான ஒரு காதல் கதை.

இன்னும் சொல்லப்போனால் விஜி அத்தையை மையப்படுத்தி எழுதப்பட்டக் கட்டுரைகளை ஒழுங்குபடுத்தினால் அருமையான ஒரு குறுநாவலாகவே அமையும்.

அப்பா சற்குணம், வடிவேலு மாமா, ராவுத்தர் பாய், மனோகரன் சார் போன்ற ஆண் கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருந்தபோதும்கூட இந்தக் கட்டுரைகளை பெண்களே அதிகமும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். ராஜம்மா பாட்டி, சரஸ்வதி அம்மா, விஜி அத்தை, டெய்ஸி பெரியம்மா என்று நிறைய பெண்கள். எனவே, பெண்களின் இயல்புகள் மிகத் துல்லியமாக வெளிப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, விஜி அத்தையைப் பெண் பார்க்கும் படலத்தைச் சொல்லும் ‘நுரை’ கட்டுரையில் ஒரு காட்சி.

சரஸ்வதி அம்மா கேசரி கிண்டிக் கொண்டிருக்கிறார். ‘கௌரிக்கா, செத்த வாங்களேன். இந்தப் பக்குவம் போதும்ல. எறக்கிடவா?’ என்று கௌரி பெரியம்மாவிடம் கேட்கிறார்.

‘எறக்கு சரோ. அதான் அருமையா வந்துருச்சே. பலகாரத்துல ஒன்ன தட்டிக்க முடியுமா?’ என்கிறார் கௌரி பெரியம்மா.

இதைச் சொல்லிவிட்டு அருணா எழுதுகிறார், ‘அம்மா கேசரியில் கில்லாடி, ஆனால் ஏன் பெரியம்மாவிடம் கேட்கிறாள்?’.

அம்மாவுக்கும் தெரியும் கேசரி நன்றாக வந்திருக்கிறதென்று. ஆனாலும் வீட்டு விசேஷத்துக்கு வந்திருக்கும் அக்காவிடம் கேட்டு செய்வதுபோல கபடற்ற ஒரு சிறு நாடகம். பெரியம்மாவுக்கும் திருப்தி. அம்மாவுக்கும் திருப்தி.

இதுபோல, அங்கங்கே பல இடங்களில் பெண்களின் இயல்புகள் வெகு நுட்பமாக வெளிப்பட்டுள்ளன.

இந்த நூலின் கடைசி கட்டுரை ‘விட்டு வந்த இடம்’. எமிலி டிக்கின்சனின் I died for Beauty என்ற கவிதையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்தக் கவிதையே எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது என்கிறார். ‘ஜெயன், நானும் ஒரு புக் எழுதி இது பக்கத்துல அடுக்கணும்போல இருக்கு’ என்றும் சொல்கிறார். யாரும் வாசிப்பதற்காக அல்ல. அந்த வரிசையில் ஒரு மூலையிலாவது நானும் இருக்கவேண்டும்’ என்று சொன்னதாகக் குறிப்பிடுகிறார்.

இன்று அருணா தான் ஆசைப்பட்டபடி ஒரு நூலை எழுதிவிட்டார். அவரும் ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய நூலை பலரும் வாசித்திருக்கிறார்கள். புத்தக அலமாரிகளில் பல புத்தகங்களுக்கு நடுவே அவரது நூலும் இடம்பெற்றுள்ளது. அருணாவும் எழுத்தாளர்களின் வரிசையில் இன்று இடம் பிடித்திருக்கிறார்.

இதே நூலில், அருணா தன் பாட்டி ராஜம்மாவைப் பற்றிய கட்டுரைக்கு இட்டிருக்கும் தலைப்பு ‘அரசி’. அபாரமான வியத்தகு ஆளுமையைப் பற்றிச் சொல்லும் கட்டுரைக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. இந்த நூலில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது அருணா ஆலத்தூரில் ஒரு அரசியாக, அல்லது ஒரு இளவரசியாகத்தான் வாழ்ந்திருக்கிறார் என்பதை உணரமுடியும். தர்மபுரியில் ஜெயமோகனின் மனைவியாக, ஒரு குடும்பத் தலைவியாக எனக்கு அறிமுகமான அருணாவை இந்த நூல் எனக்கு ஒரு அரசியாக, இளவரசியாக இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அரசியை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு உரையாற்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி. நன்றி.

( 13,02,2022 சென்னையில் நடைபெற்ற ‘பனி உருகுவதில்லை’ நூல் அறிமுக விழாவில் ஆற்றிய உரை  - பேசும் புதிய சக்தி, ஏப்ரல் 22 இதழில் வெளியானது.)

 

 

 

 

 

Monday, 14 March 2022

எளிமையும் ஆழமும் - கமலதேவியின் ‘கடல்’ தொகுப்புக்கான முன்னுரை



கமலதேவியின் கதைகள் காட்சிகளாக விரிபவை. காட்சிகளின் வழியாகவும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்களின் மூலமாகவும் அவர்களுடைய வாழ்வு முழுவதையும் சொற்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்பவை. வெறும் கதை சொல்லலாக மட்டும் அவை நின்றுவிடுவதில்லை. உறவுகளுக்குள் ஏற்படும் பல்வேறு மோதல்களையும் அவற்றின் ஆழங்களையும் அபத்தங்களையும் தொட்டுக் காட்ட முயல்கின்றன. விவசாயத்தில் தொழிற்படும் மண் சார்ந்த நுட்பங்களைப் பேசுகின்றன. கிராமத்து வாழ்வில் இன்னும் எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை, விழுமியங்களை நினைவுபடுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக வாழ்வின் பொருள் குறித்தும் அல்லது பொருளின்மையைக் குறித்துமான பலமான கேள்விகளை எழுப்புகின்றன. எந்தவொருக் கதையையும் அவை முழுமையாக விரித்துச் சொல்வதில்லை. கதையின் மையத்தை மிகக் குறைவான சொற்களில் அவை குறிப்புணர்த்துகின்றன. சம்பவங்களை அல்லாது அவற்றுக்கு முன்னும் பின்னுமான உணர்வு நிலைகளையே முதன்மைப்படுத்துகின்றன. இதனால் கதையை வாசித்து முடித்த பின்பும் ஏதோவொன்று முழுமையடையாததுபோலொரு உணர்வை ஏற்படுத்துகின்றன. ஆனால், அந்த உணர்வுக்குப் பின்னால் அழுத்தமான சில கேள்விகளை எழுப்புவதன் வழியாக கதையைக் குறித்து மீண்டும் யோசிக்கச் செய்கின்றன. எனவே, அவை வழக்கமான கதைப்பாணியிலிருந்து மாறுபட்டு கலைத்துப் போடப்பட்ட சித்திரங்களாகவே காணக்கிடைக்கின்றன. சரியான முறையில் ஒவ்வொரு துண்டையும் சேர்க்கும்போது மட்டுமே மொத்த உருவமும் புலப்படும். 

இத்தொகுப்பிலுள்ள ‘தையல்’ என்ற கதையைக் கொண்டு மேற்சொன்ன கதையம்சங்களை சற்று விரிவாகச் சொல்லிப் பார்க்கிறேன். 

(‘தையல்’ சிறுகதைக்கான சுட்டி. நன்றி ‘சொல் வனம்’ )

https://solvanam.com/2021/11/14/%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/

தொடை வரை வெட்டுண்ட  காலுடன் குடிசையில் தனித்திருக்கும் செவந்தன்,  தவமிருந்துப் பெற்ற பெண்ணைவிட்டுப் பிரிய முடியாமல், அவளுடன் இருக்கும் செல்லம்மாள் இருவரும் ஒரு மதியப் பொழுதில் வயல்வெளியோர மரத்தடியில் சந்திக்கிறார்கள். காலையில் பொங்கி எடுத்து வந்த சோற்றையும் புளிச்ச கீரையையும் அவன் அவளுக்குத் தருகிறான். மகள் வீட்டில் சமைத்த கோழிக் கறியை அவனுக்காகக் கொண்டு வந்திருக்கிறாள் மனைவி. இதுதான் கதை நமக்குக் காட்டும் காட்சி. 

நியாயமாக செல்லம்மாள் ஊன்றுகோலுடன் சிரமப்படும் செவந்தனுடன் இருக்கவேண்டும். மகள் ராக்குவை விட்டுவிட்டு அவள் வருவதில்லை. தவமிருந்து பெற்ற மகள். தன்னைவிட வயதில் மூத்த பெரியசாமியை ராக்கு காதல் மணம் புரிந்தபோதும் அவளைவிட்டு அவன் ஓடிப்போனபோதும்கூட செல்லம்மாள் எதுவுமே கேட்பதில்லை. மகளின் சொல் பொறுக்க முடியாமல் மனம் நொந்து செவந்தன் வீட்டைவிட்டு வெளியேறும்போதும்கூட செல்லம்மாள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். பேரப் பிள்ளைகளால் அவமானப்படுகிறாள். ஏராளமான வீட்டு வேலைகளை முகம் சுளிக்காமல் செய்கிறாள். செல்லம்மாள் ஏன் இப்படி இருக்கிறாள்? எதற்காக? என்ற கேள்விகளை கதை விவரிப்பதில்லை. 

‘பாசப் பிள்ளைய கையில வெச்சுட்டு நிக்கற பெருமா மல அடிவாரத்து பிச்சாயி’தான் குலதெய்வம் என்ற ஒற்றை வரியினுள் செல்லம்மாளின் இந்த மனப்போக்கைப் புரிந்துகொள்வதற்கான சாவி கதையினூடே ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது.  

மகள் உதாசீனப்படுத்துகிறாள், மனைவியும்  உடனிருந்து உதவுவதில்லை என்றபோதும் தனித்து வாழும் செவந்தனின் குணத்தைச் சுட்டும் விதமாக கதையின் தொடக்கத்திலேயே ‘முருங்கை’மரம் ஒரு குறிப்பாக இடம் பெற்றுள்ளது. ‘உப்புத் தண்ணி கேணியில வெட்டிப் போட்டா தண்ணியோட உப்புக் குணம் மாறிப்போகும். பஞ்சத்துக்கு ஒரு முருங்கை போதும்’ என்ற வரிகள் முருங்கையை மட்டுமல்லாது செவந்தனைக் குறித்ததும்தான். மிகச் சுலபமாக எளிய காரணங்களுக்காக உறவுகள் உடைபடக்கூடும், முருங்கையைப் போலவே. அதே சமயத்தில் அவை குறுகிய காலத்தில் சிரமமில்லாது தழைவதும் சாத்தியம்தான். அன்றாட நடப்புகளிலிருந்து விவசாயத்தின் நடைமுறைகளிலிருந்து வாழ்வைக் குறித்த பெரும் புரிதலை மிகச் சாதாரணமாக போகிற போக்கில் சொல்லும்போது கதையின் அடர்த்தி பன்மடங்கு கூடிவிடுகிறது- 

மகள் என்ன செய்தாலும் அதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் அவளை இடுப்பிலிருந்து இறக்கிவிடாமல் இறுக்கி வைத்திருக்கிற செல்லம்மாளுக்கும், ‘ஒக்காந்து தின்னு’வதாய் மகள் சொன்ன சொல்லுக்காக ரோஷம் பொறுக்காமல் வீட்டிலிருந்து வெளியேறிய செவந்தனுக்கும் இடையில் எந்த சண்டையும் இல்லை. இருவரும் பிரிந்திருப்பதற்குக் காரணம் மகள்தான். இருவரும் அவரவர் புரிதலில் உறுதியாய் நிற்கிறார்கள். ஒருவரை ஒருவர் கட்டாயப்படுத்துவதுமில்லை, அனுசரித்துப்போவதுமில்லை. இந்தப் புரிதலின் அழகுதான் இந்தக் கதைக்கு வலு சேர்த்திருக்கிறது. 

‘பாம்போட ரோஷந்தான் வெஷம் தெரியுமா?’ என்று சொல்லும் செவந்தன் அந்த விஷத்தை கழுத்தில் அணிந்திருக்கிற சிவனாக தோற்றமளிக்கும்போது, தீட்டென்று எதுவுமில்லை என்று அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு எல்லையிலும் காவல் நின்று மழையாக எல்லா நிலத்திலும் பெய்யும் மாரியாத்தாவாக செல்லம்மாள் உருமாறுகிறாள். இருவேறு குணங்கள், இருவேறு அணுகுமுறைகள். ஆனால், இவை ஒன்றுக்கொன்று நிரப்பிக்கொள்பவை. ஒரு குணம் ஓங்கி எழும்போது மறு குணம் தாழ்ந்தும் அடுத்தது உக்கிரம் கொள்ளும்போது இன்னொன்று தணிந்தும் சமன்செய்து கொள்பவை. பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தின் இருவேறு ஆற்றல்கள். மோதியும் முயங்கியும் உயிரியக்கத்தைப் பேணும் ஆணும் பெண்ணுமான சக்திகள். இத்தனை செய்திகளையும், சிந்தனைகளையும் இந்தக் கதையின் எளிமையான எடையற்ற வார்த்தைகளை, உரையாடல்களை கவனமாகப் பின்தொடரும்போது மட்டுமே புரிந்துகொள்ள முடியும். மேலோட்டமாக கவனமில்லாமல் வாசிக்கும்போது இவை எதுவுமே புலப்படாமல் போகிற சாத்தியம் உண்டு. 

செவந்தனின் கால் எதனால் துண்டுபட்டது என்பதைக் குறித்து பெரிய சித்தரிப்புகள் கதையில் இல்லை. ‘பைசலை வேடிக்கைப் பார்க்க நின்றவரின் கால்களை எவன் வெட்டினான் என்றே இதுவரைத் தெரியவில்லை’ என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. அன்றாடம் சந்திக்க நேரும் அபத்தங்களில் ஒன்று ஒரு மனிதனின் எதிர்காலத்தையே நொறுக்கிச் சாய்க்கும் துயரத்தை பல சமயம் நாம் உணர்வதில்லை. உரச் சாக்குகளை வீணடிக்காமல் படுதாக்களாக மாற்றி அறுப்பு காலத்தில் பயன்படுத்தத் தெரிகிற அளவு பயன்பாட்டு மதிப்பைத் தெரிந்தவர்களுக்கு, சாதாரண உறவுச் சிக்கல்களை, சண்டைகளைப் பொருட்படுத்தாமல் விட்டுக்கொடுத்து ஒத்துப்போகத் தெரிவதில்லை. 

கிராமங்களின் உழவு சார்ந்த வழக்கங்களை கதைகளில் வெறும் தகவல்களாக அடுக்காமல் அவற்றை கதையின் செறிவான அடுக்குகளாக மாற்றும் தன்மை கமலதேவியின் கதைகள் பலவற்றிலும் பார்க்க முடியும். அறுப்பு முடிந்து சும்மா கிடக்கும் நிலத்தில் விதைகளைத் தூவி அவை முளைத்ததும் காட்டை உழும் வழக்கத்தைப் பற்றிய உரையாடல் ‘நாத்து போடற வரைக்கும் ஆடு மாடு திங்கற மிச்சம் மண்ணுக்குத்தான்’ என்று முடிகிறது. இது கதைக்குள் இடம்பெறுகிற ஒரு வரியாக மட்டும் அமையாமல் மனிதர்களைப் பற்றியும் வாழ்வின் பொருளைக் குறித்துமான ஒரு கேள்வியையும் எழுப்புகிறது. வயல்களில் உள்ள பாம்புப் புற்றுகளை தெரிந்தோ தெரியாமலோ சேதப்படுத்தவோ அல்லது அவற்றைத் தொந்தரவு செய்யவோ நேரும், அதனால் அவற்றின் கோபத்துக்கு ஆளாகலாம் என்பதற்காக சேவல் அறுத்து காவு தரும் வழக்கம் இந்தக் கதையில் சொல்லப்பட்டுள்ளது. மண்ணினி மீதும் உயிர்களின் மீதும் மனிதர்களின் கொண்டிருந்த அணுகுமுறையும் இயற்கையுடன் தன் வாழ்வையும் இணைத்துப் பார்த்த விகாசத்தையும் துலக்கிக் காட்டும்விதமாகவே அமைந்துள்ளது. 


இத்தொகுப்பிலும் இதற்கு முந்தைய மூன்றுத் தொகுப்புகளிலும் உள்ள கமலதேவியின் கதைகள், பலவும் இவ்வாறான அடர்த்தியையும் ஆழத்தையும் கொண்டிருப்பவை. உரையாடல்களால் நகர்பவை. முக்கியமல்லாததுபோலத் தோற்றம் தரும் தகவல்களினிடையே கதையின் முடிச்சை ஒளித்து வைத்துவிட்டு அவற்றை அவிழ்க்கும் யுக்தியை மனச் சலனங்கள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், அக மோதல்களினூடே தொட்டுக் காட்டுகின்றன. நேரடியான கதைகள் போலத் தோற்றம் மட்டுமே தரும் இவற்றில் உள்ள விடுபட்ட இடங்களைப் பூர்த்தி செய்வதன் மூலமாக மட்டுமே முழுமையாக புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் கமலதேவியின் கதைகள் சவாலானவை. 

சொல் விளையாட்டு, சிக்கலான வாக்கிய அமைப்பு, காலத்தை புரட்டி முன்னும் பின்னுமாக அமைப்பது போன்ற பல்வேறு யுக்திகள் எதுவுமின்றி மிக யதார்த்தமான கிராமிய வாழ்வின் பின்னணியில் துல்லியமான உரையாடல்களைக் கொண்டே ஆழமான கேள்விகளை எழுப்புவதோடு வாசிப்பில் நிறைவையும் தரமுடியும் என்பதை கமலதேவியின் இக்கதைகள் வலுவாக உணர்த்துகின்றன.

( ‘கடல்’ சிறுகதைத் தொகுப்பு, வாசக சாலை வெளியீடு )

காலம் செதுக்கிய பெயர் - க.ரத்னம்

  அகவையும் அனுபவமும் கனிந்த அறிஞர், பேராசிரியர், முனைவர்.க.ரத்னம் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டு கோயமுத்தூர் புத்தகத் திருவிழாவில் ‘வாழ்நாள் சா...