Tuesday, 3 November 2026

நிலத்தை எழுதுதல் - பெருமாள் முருகன்


 

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சித் தொடரைக் குறித்து செய்தி ஒன்றை வாசிக்க நேர்ந்தது. ‘நிலத்தை எழுதுதல்’ என்ற அதன் தலைப்புதான் அதைத் தேடிப் பார்க்கவும் தூண்டியது. கனடாவைச் சேர்ந்த 12 எழுத்தாளர்கள் நேர்காணலின் மூலமாக தங்களது நிலத்துக்கும் எழுத்துக்குமான உறவைக் குறித்து பேசியிருக்கிறார்கள். ஜெர்மனியில் பிறந்து கனடாவில் வாழும் ஸ்டெபானி வெய்மர்தான் இதன் இயக்குநர். வெளிச்சம், பாறை, மரங்கள், நீர் ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்ட இந்தத் தொடரில் வெவ்வேறு நிலங்களையும் வாழ்க்கை முறைகளையும் சேர்ந்த எழுத்தாளர்கள் தங்களது நிலமும் மக்களும் எவ்வாறு தங்களது எழுத்தில் இடம்பெற்றுள்ளன என்பதைக் குறித்து விரிவாக உரையாற்றுகிறார்கள்.

நிலம் இல்லாமல் அந்த நிலத்தில் மக்கள் இல்லாமல் எழுத்தும் இலக்கியமும் இருக்க முடியாது என்ற அடிப்படையொன்றும் நமக்கு புதியதல்ல. எழுத்துக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியத்தின் திணைக் கோட்பாடு வலியுறுத்துவதும் அதைத்தான். நிலத்தைக் கொண்டே அகத்திணையும் புறத்திணையும் வகுக்கப்பட்டன.

உலக அளவில் புகழ்ப்பெற்ற, இன்றும் வாசிக்கப்படுகிற, பேசப்படுகிற செவ்வியல் ஆக்கங்கள் அனைத்துமே நிலத்தில் கால்கொண்டிருப்பவையே. ரஷ்யப் பேரிலக்கிய மேதைகள் தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கியின் பெருநாவல்களினூடே ரஷ்ய நிலத்தையும் மக்களையும் வாழ்க்கையையும் நெருக்கமாக உணர்ந்திருக்கிறோம். காப்ரியா கார்சியா மார்க்வெஸ்ஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலிலும் கதைகளிலும் லத்தீன் அமெரிக்க மக்களின் வாழ்க்கை வெகு துல்லியமாக எழுதப்பட்டிருப்பதை வாசித்திருக்கிறோம். சி.மோகன் மொழிபெயர்த்த ‘ஓநாய் குலச் சின்னம்’ நாவல். ஜியாங் ரோங் எழுதியது. சீன நாவல். மங்கோலிய மேய்ச்சல் நிலத்தைப் பற்றியும் அங்குள்ள வாழ்க்கை முறை குறித்தும் விரிவாகப் பேசும் ஒன்று. ஓரான் பாமுக் தன் நாவல்களின் வழியாக துருக்கியின் வரலாறு, வாழ்க்கை, பண்பாட்டுக் கூறுகள் உள்ளிட்டவற்றை அந்த நிலத்தின் பின்னணியில் துல்லியமாக எழுதிக் காட்டியிருக்கிறார். இன்று இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் குறுங்கதைகளை எழுதுவதில் தேர்ந்தவராகக் கருதப்படும் எட்கர் கீரத்தின் கதைகளில் யூதர்களின் நூற்றாண்டு கால வாழ்க்கையின் தடங்களை காண முடியும்.

வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியைப் பற்றி அறிவோம். அவரது நாவல்கள் வரலாற்றைப் பேசியவை. அரசியலைப் பேசியவை. ஆதிவாசிகள், ஒடுக்கப்பட்டவர்கள், எளியவர்கள், கலகக்காரர்கள், நக்ஸலைட்டுகள் உள்ளிட்டோரை நமக்குக் காட்டியவை. வனத்தின், கிராமத்தின், சிற்றூர்களின் வரலாற்றையும் அவற்றின் வாழ்க்கைப்பாடுகளையும் எழுதினார். அவரது நாவல்கள் மக்களையும் அவர்களின் நிலத்தையும் பேசின. அவர் தன் எழுத்தின் வழியாக எப்போதும் ஒடுக்கப்படுபவர்களின், சுரண்டப்படுபவர்களின் பக்கமாகவே நின்றார். அவர்களின் குரலையே தன்னுடைய எழுத்தின் குரலாக வெளிப்படுத்தினார்.

தமிழில் கி.ராஜநாராயணனும் பூமணியும் கரிசல் மண்ணின் வாழ்க்கையை எழுதினார்கள். அந்த மக்களின் பாடுகளை அன்றாடங்களை எழுதினார்கள். நாஞ்சில் மண்ணை தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத பகுதியாக மாற்றியவர் நாஞ்சில்நாடன்.  விவசாய வாழ்வின் பல்வேறு இடர்களை நுட்பங்களை எழுதியவர் சு.வேணுகோபால். இந்த கொங்கு மண்ணின் வாழ்வையும் மக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே எழுத்தில் நிறுத்தியவர் ஆர்.சண்முகசுந்தரம். பெருமாள் முருகன், தேவிபாரதி, க.சீ.சிவகுமார், வா.மு.கோமு, என்.ஸ்ரீராம், சு.வெங்குட்டுவன் உள்ளிட்டோர் கொங்கு நிலத்தின் வாழ்க்கையைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

நிலத்திலும் அதன் பண்பாட்டு அம்சங்களிலும் கால்கொண்டிருக்கும் எழுத்துகளையே வாசகன் தனக்கு நெருக்கமானதாக உணருகிறான். நிலமும் இல்லாமல் வாழ்க்கையும் இல்லாமல் அந்தரத்தில் மிதப்பவை, படைப்பனுபவமாக மாறாமல் வெறும் சொற்களாகவே எஞ்சி நின்றுவிடும். 

2

நாற்பது ஆண்டுகளாக எழுதி வரும் பெருமாள் முருகனின் பலம் அவரது எழுத்து நிலத்திலிருந்து முளைப்பது என்பதுதான். கொங்குப் பிரதேசத்தின் ஒரு பகுதியான இந்த நாமக்கல் திருச்செங்கோடு சார்ந்த விவசாய வாழ்க்கையே அவரது புனைவுகளின் மையம். கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த நிலத்திலும் வாழ்க்கையிலும் ஏற்பட்ட எண்ணற்ற மாற்றங்களை அவரது புனைவுகளின் வழியாக அறிந்துகொள்ள முடியும். 

பெருமாள் முருகனின் முதல் நாவல் ‘ஏறுவெயில்’ 1991ஆம் ஆண்டு வெளியானது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு நிலப் பகுதியில் ஏற்படத் தொடங்கிய மாற்றங்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறது.

திருச்செங்கோடு, நாமக்கல் பகுதியின் விவசாயம் மழையையும் கிணற்றுப் பாசனத்தையும் நம்பியிருந்தது. சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற மானாவாரி பயிர்களே விளையும். நிலவுடைமையாளர்களாக இருந்தவர்கள் அடிப்படையில் விவசாயிகள். நிலத்தின் மீது தீவிரமான பற்றும் பிடிப்பும் கொண்டவர்கள். இவர்களை நம்பியும் சார்ந்தும் இருந்த குறிப்பிட்ட சில சாதியைச் சேர்ந்தவர்கள் பண்ணை ஆட்களாக உழைத்தனர். நிலவுடமையாளர்களின் தயவில் வாழ்ந்திருந்தனர். சாதி அடிப்படையிலான இந்த ஆதிக்கம் கல்வியும் வேலை வாய்ப்பும் ஏற்படத் தொடங்கியபோது தளர்ந்து பிறகு காணாமல் ஆகிவிட்டது. ஓரளவு நிலம் வைத்து விவசாயம் பார்த்தவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளும் விவசாயத்தில் ஆர்வமில்லாது விரைவில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் ரிக், பைனான்ஸ் போன்ற பிற தொழில்களை நாடினர். இதன் காரணமாக நிலங்கள் கைமாறிப் போயின. ரியல் எஸ்டேட் தொழில் வளர்ந்தது. கல்லூரிகள், போட்டித் தேர்வுகளுக்காக மாணவர்களைத் தயார்செய்யும் பள்ளிகள், மருத்துவமனைகள் என நிலங்கள் அனைத்தும் கட்டடங்களாக மாறின. கூரை வீடுகளும் ஓட்டு வீடுகளும் காணாமல் போய் எல்லாவிடங்களிலும் கான்கிரீட் வீடுகள் எழுந்தன. மாட்டு வண்டிகள் காணாமல் போய் மோட்டார் வாகனங்கள் ஓடின. இந்த மாற்றங்கள் அனைத்துமே குறுகிய காலத்தில் வெகு வேகமாக நடந்தன. சமூக பொருளாதார நோக்கில் இந்த மாற்றங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுக்க முடியாது. முக்கியமாக சாதிய வேற்றுமைகளை ஆதிக்கத்தை இவை கேள்விக்கு உட்படுத்தின. மட்டுப்படுத்தின. ஆனால், அதே நேரத்தில் இவற்றால் நிகழ்ந்த பாதகங்களையும் யோசிக்காமல் தவிர்க்க முடியாது. ‘ஏறுவெயில்’ நாவல் இந்த அம்சங்கள் அனைத்தையுமே உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலம் எத்தகைய மாற்றங்களுக்கு உள்ளாகும், வாழ்க்கைப் போக்குகள் எப்படி மாறும் என்பதை சுட்டிக் காட்டிய நாவலாகும்.

இத்தகைய மாற்றங்களுக்கு உட்பட்டு இன்று காணாமல் போய்விட்ட கிராமத்துத் திரையரங்கை, டெண்டு கொட்டாயை களமாகக் கொண்டது ‘நிழல் முற்றம்’. சினிமா ஒன்றுதான் உழைத்துக் களைத்த மக்களுக்கான ஒரே பொழுதுபோக்கு. தங்களின் அன்றாடத்தின் பாடுகளை சிக்கல்களை வலிகளை மறக்கச் செய்யும் உலகமாக அமைந்திருந்தது. சோடாக்கடை, டீக் கடைகளில் வேலை செய்பவர்கள், முறுக்கு விற்கும் சிறுவர்கள், டிக்கெட் கிழிப்பவர்கள், டிக்கெட் கொடுப்பவர்கள், சைக்கிள் ஸ்டேன்டுகாரர்கள், வாட்ச்மேன், மேனேஜர் என்று பலதரப்பினருக்கும் வேலை வாய்ப்புகளைத் தந்தவை இந்த டெண்ட் கொட்டாய்கள். இதைச் சார்ந்திருக்கும் வாழ்க்கை பொது வெளியில் பெரிய அளவில் யாரும் அறியாதது. சினிமாக்கள் பிரமாண்டமான மால்களுக்குள்ளும் ஓடிடி தளங்களுக்குள் அடங்கிப் போய்விட்ட நிலையில் இப்போது இப்படிப்பட்ட சிறுவர்களோ வாழ்க்கையோ இல்லை. ஆனால், நிழல் முற்றத்தில் அந்த வாழ்க்கையை அதில் உழன்று கிடக்கும் சிறுவர்களை இலக்கியத்தில் பதிந்து வைத்திருக்கிறது.

விவசாயம் என்பது நிலமும் பயிரும் மட்டுமல்ல. ஆடுகள், மாடுகள், எருமைகள், கோழிகள், நாய்கள் போன்ற நிலம் சார்ந்த உயிர்களையும் உள்ளடக்கியதுதான். இந்தப் பண்டங்களை மேய்த்து, பட்டியில் அடைத்து, பராமரிப்பதும் விவசாய வாழ்வின் ஒரு பகுதிதான். நிலம் சார்ந்த விவசாயிகளின் வாழ்க்கையில் ஆடுகளும் மாடுகளும் எருமைகளும் கோழிகளும் பின்னிப் பிணைந்திருப்பவை. ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. இத்துடன் நிலவுடமையாளர்களை பண்யையாட்களாக அண்டிப் பிழைக்கும் குறிப்பிட்ட சாதியினரின் முக்கியமான வேலையே இந்தப் பண்டம்பாடுகளை மேய்த்துப் பராமரிப்பதுதான். கட்டுத்தரையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், குளிப்பாட்டவேண்டும், மேய்ச்சலுக்கு இட்டுச் சென்று பத்திரமாக திரும்ப அழைத்து வரவேண்டும், வேளாவேளைக்கு தீவனமும் நீரும் கொடுத்து பாதுகாக்க வேண்டும் என்று கடுமையான உழைப்பைக் கோரும் வேலைகள். இவ்வாறு ஆடுகளை மேய்க்கும் சிறுவர், சிறுமிகளைக் கொண்டு, அவர்கள் வாழ்க்கைப் பாடுகளைச் சித்தரிக்கும் நாவல் ‘கூள மாதாரி’. இவர்களுக்கென்று பெயர்கள் இருப்பினும் கூளையன், வவுறி, மொண்டி, செவுடி, நெடும்பன் என்று இவர்களை விளிக்கவென இட்டிருக்கும் பெயர்களே இவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்ற நிலையைச் சொல்லும். மேய்ப்பர்களின் அவல வாழ்க்கையைச் சொல்லும் இந்த நாவல் நிலவுடமையின் இன்னொரு பகுதியை ஆழத்துடன் சித்தரித்த ஒன்று.

கங்கணம் – கொங்குப் பகுதியில் நிலவும் இன்னொரு முக்கியமான பிரச்சனை திருமணத்துக்குப் பெண் கிடைக்காதது. இதற்கான அடிப்படைக் காரணங்களில் முதலாவது, ’ஆஸ்திக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று’ என்று இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே ‘நாமிருவர் நமக்கு ஒருவர்’ என்று ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொண்டது. குறிப்பாக சொத்துகளை ஆளவும் பராமரிக்கவும் ஆண் வாரிசுகள் இருந்தால் போதும் என்று பெண் சிசுக்களை கருவறுக்கும் கொடுமை நிலவிய காலத்தை அடுத்து வந்த தலைமுறைகளுக்கு உரிய வயதில் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் போனது. ஆண் பெண் விகித்தாச்சாரத்தில் ஏற்பட்ட குளறுபடி. இன்னொரு காரணம், பெண்கள் கல்வி கற்று அடுத்தடுத்த படிநிலைகளை எட்டிய சமயத்தில் ஆண்கள் அதற்கு நேர்மாறாக சொத்து, குடும்ப செல்வாக்கின் மிதப்பில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் நின்றுவிட்டனர். இதனால் கல்வி கற்ற பெண்கள், இப்படிப்பட்ட போதிய கல்வித் தகுதியில்லாத ஆண்களை மணக்க ஒப்புக் கொள்ளாத நிலை. நிலம், சொத்து என்று எல்லாமிருந்தும் உரிய பருவத்தில் மணந்து கொள்ள முடியாத தண்டுவன்களின் சிக்கல்களை, சமூக நிர்ப்பந்தங்களை, உளவியல் அழுத்தங்களை மிக நுட்பமாக அணுகிய நாவல் கங்கணம்.

உரிய பருவத்தில் திருமணமாகாதது ஒரு பிரச்சனை என்றால் அதற்கு அடுத்தது, அதைவிட கூடுதலான சமூக அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் கொண்டது குழந்தையின்மை. குடும்பத்துக்கும் சொத்துக்குமான வாரிசு உருவாகாமல் போகும்போது சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஏற்படும் நெருக்கடிகளைவிட கூடுதலான சுமைகளைத் தாங்கவேண்டிய சூழ்நிலை பெண்ணுக்கு. இன்று இதற்கான மருத்துவத் தீர்வுகள் பெரும் வணிகமாக வளர்ந்திருப்பதை அறிவோம். இத்தகைய அறிவியல், மருத்துவ வளர்ச்சி இல்லாத காலத்தில், கல்வியறிவு இல்லாத சமயத்தில் கிராமங்களில் பல்வேறு நம்பிக்கைகளும் பரிகாரங்களும் கைவைத்தியங்களுமே நிவாரணிகளாக பரிந்துரைக்கப்பட்டன. வேப்பிலையை அரைத்து வெறும் வயிற்றில் குடிப்பது, அம்மனுக்கு பொங்கலிட்டுப் படைப்பது, மலையுச்சியில் உள்ள கல்லைச் சுற்றி வந்து வேண்டுவது என்று கடுமையாக உடலை வருத்தும் சடங்குகள் இருந்தன. குழந்தைப் பேறில்லாத பெண்கள் மங்கல நிகழ்வுகளில் தவிர்க்கப்பட்டனர். அவர்களது இயல்பான சாதாரண நடவடிக்கைகள் அனைத்துமே குழந்தையின்மை என்ற குறையுடன் இணைத்து குற்றங்களாக உருப்பெருக்கப்பட்டன. நிலத்தில் விதைத்தால் பயிர் விளையாது என்ற பழிக்கும் ஆளாயினர். தொடர்ந்து இப்படிப்பட்ட நெருக்கடிகளுக்கு ஆளாகித் தவிக்கும் பெண்களுக்கு தீர்வாக ஒரு காலத்தில் நிலவிய நடைமுறையைச் சுட்டி எழுதப்பட்டது ‘மாதொரு பாகன்’. பெரும் விவாதங்களுக்கு உள்ளானது. யோசித்துப் பார்த்தால் இன்று குழந்தையின்மைக்கு தீர்வாக உள்ள அறிவியல் மருத்துவ முறைகளுக்கு இத்தகைய நம்பிக்கைகளும் வழக்கங்களுமே அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். ஒரு காலத்தில் நிலவிய சமூக நடைமுறைகளே மனித சமூகத்தின் அடுத்த கட்ட அறிவியல் மருத்துவ வளர்ச்சிக்கு ஊற்றாகவும் விளங்கியுள்ளன என்பதை உணர்ந்தால் இதில் உள்ள உண்மைகள் புரியும்.  

‘கூட்டுக் குடும்பங்கள்’ என்று சொன்னால் அது என்ன? என்று கேட்கும் தலைமுறையின் காலத்தில் நிற்கிறோம். குடும்பம் என்ற அமைப்பு உருவாகி, வளர்ந்து, செழித்து சமூகத்தின் ஒரு வலுவான கண்ணியாக விளங்கிய காலம் மெல்ல பழங்காலமாகி வருகிறது. திருமணம் தேவையா என்ற கேள்வி இன்றைய இளம் தலைமுறையினரிடையே, குறிப்பாக பெண்களிடையே, உரக்க ஒலிக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வாய்ப்புகள் உள்ளிட்டவை தனி மனித சுதந்திரத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியபடியே உள்ளன. தேவைகளுக்கேற்ப, சூழ்நிலைகளுக்கேற்ப உறவுகளை அமைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அழுத்தம் பெற்றிருக்கிறது. பிரெண்ட்ஷிப், லிவிங் டுகெதர், சிச்சுவேசன்ஷிப், நேனோஷிப் என்று எண்ணற்ற வகைகள். யாரும் யாரையும் சார்ந்திருக்கத் தேவையில்லாத சூழலில் ‘அடுத்தவர்’ என்பதை சுமையாகவும் இடைஞ்சலாகவும் கருதுகிறார்கள். இன்றைய டிஜிட்டல் வளர்ச்சி அத்தகைய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தனிமனிதர்களால் ஆனது இவ்வுலகம் என்ற நிலையை மெல்ல மெல்ல எட்டி வருகிறோம். ஆதி மனிதர்கள் அங்கங்கே தனியாகத் திரிந்த காலத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம்.  

ஆனால், சில வருடங்களுக்கு முன்புவரை நான்கு அல்லது ஐந்து சகோதரர்களை கொண்ட ஒரு விவசாய கூட்டுக் குடும்பத்தில், எல்லோருக்கும் பொதுவான நிலத்தில் எல்லோருமே உழைக்க வேண்டும். திருமணமாகி குழந்தை குட்டிகள் பெருகும்போது சிக்கல்களும் பிரச்சனைகளும் கூடுதலாகும். வாய்த் தகராறுகள் எழும். இந்த குடும்ப ஒற்றுமையை வெகு காலத்துக்கு பாதுகாத்து வைக்கமுடியாது. சொத்து பிரிக்கப்படும். இந்தப் பிரிவினை யாருக்குமே நிறைவைத் தராதது. இவ்வாறு பாகப்பிரிவினையில் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் கடைசி மகன் தான் பிறந்து வளர்ந்து உழைத்த நிலத்தையும் ஊரையும் விட்டு வேறொரு புதிய இடத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் நிலை நிறுத்திக் கொள்ள போராடும் கதைதான் ‘ஆளண்டாப்பட்சி’. கொங்குப் பிரதேசத்தின் சாதி அடுக்குகளும் அதன் வெவ்வேறு நடைமுறைகளும் இந்த நாவலிலும் வலுவாகக் காட்டப்பட்டுள்ளன.

மனித சமூகத்தின் பலம் வாய்ந்த அலகாக இருப்பது சாதி. இத்தனை நூற்றாண்டு கால கல்வியும் அறிவியலும் நாகரிக வளர்ச்சியும் மனித வாழ்வை வியக்கத்தக்க எல்லைகளுக்கும் உயரங்களுக்கும் எடுத்துச் சென்றுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், மனிதனுக்குள் உறைந்திருக்கும் ‘சாதி’ உணர்வும் அது உருவாக்கும் விளைவுகளும் இன்னும் ஆதி உணர்வாகவே எஞ்சியிருப்பது வியப்பைத் தருகிறது. தீண்டாமை பாவம் என்று பாடப் புத்தகத்தில் முதல் பக்கங்களில் அச்சிடப்பட்டு வருடங்கள் பல கடந்துவிட்டன. ஆனால், தீண்டாமை மட்டும் அப்படியேதான் உள்ளது. அதே பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும்தான் மாணவ விடுதிகள் சாதிகளுக்கேற்ப தனித்தனியாக இருக்கின்றன. நிலவுடமை சமுதாயம் பண்ணையார்களையும் பண்ணையாட்களையும் உருவாக்கியது. நிலத்தையும் உடமையாளர்களையும் சார்ந்து உழைக்கும் ஒரு வர்க்கத்தையும் உருவாக்கியது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்தக் கொடுமையைக் களையவும் சாதிகளைக் கடந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கவும் சில தலைவர்கள் பாடுபட்டனர். ஆனால், இன்றைய தேர்தல் வெற்றிகளே சாதிகளின் வலிமையால்தான் முடிவு செய்யப்படுகின்றன. பிறகு சாதியை எப்படி ஒழிக்க முடியும்? கொங்குப் பகுதியில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளையும், சாதி மீறிய திருமணங்கள் எப்படி மறுக்கப்படுகின்றன, ஒடுக்கப்படுகின்றன என்பதையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கொலைகள், கருணைக் கொலைகள் என்று அதற்கான தீர்வுகள் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவை. இந்தப் பின்னணியை ஆழமாக விவாதிக்கும் நாவல் ‘பூக்குழி’.

புனைவுகளின் வழியே சுட்டப்படும் உண்மைகளின் சாயல்களைக்கூட நம்மால் பொறுக்க முடிவதில்லை. அது சொல்ல வருவதைப் புரிந்துகொள்ள முயல்வதில்லை. பதிலாக எழுத்தை முடக்கவே முயல்கிறோம். மனிதர்களை கதைமாந்தர்களாக வைத்து எழுதினால் சந்திக்க நேரும் பிரச்சனைகளை எப்படித் தவிர்ப்பது? விலங்குகளை வைத்து எழுதினால் போதுமல்லவா. பல ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜ் ஆர்வெல் ‘விலங்குப் பண்ணை’ மூலமாகக் கண்டடைந்த வழியைத்தான் பெருமாள் முருகனும் கையிலெடுத்தார். மாதொரு பாகன் தந்த அனுபவம், மனிதர்களைப் பற்றி எழுத அச்சத்தையும் கொடுத்த காரணத்தால் ஒரு வெள்ளாட்டை வைத்து நாவலை எழுதினார். ஒரு குறியீட்டு நாவல் என்ற அடையாளம் அந்த நாவலின் புனைவுத்தன்மைக்கு சாதகமாக அமையும் அதே நேரம் வாசிப்புச் சுவைக்கு பாதகமாகவும் அமையும் சங்கடம் உண்டு. ஆனால், பூனாச்சியின் வாழ்க்கைச் சித்தரிப்பு அவ்விதமாக அமையாமல் கொங்கு கிராமத்தின் விவசாய வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை நுட்பமாகச் சொல்ல உதவியுள்ளது. அரசு, அரசதிகாரம், அதிகாரத்தின் எண்ணற்ற கிளைகள், அவை ஆக்கிரமிக்கும் வேகம், அடக்குமுறை, நிர்வாகக் குளறுபடிகள், எளியவர்களின் மீது அவை காட்டும் அக்கறையின்மை, அசிரத்தை என்று பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் ஒரு வெள்ளாட்டின் மீது ஏற்றி விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளது இந்த நாவல்.

கொங்கு நிலப்பகுதி சார்ந்த விவசாய வாழ்வையும் அதன் மாந்தர்களையும் தனது நாவல்களில் முதன்மைப்படுத்திய எழுதிய முந்தைய நாவல்களிலிருந்து மாறுபட்டது ‘கழிமுகம்’. தலைமுறை இடைவெளி எக்காலத்திலும் உண்டென்றாலும் இன்றைய நவீன மின் ஊடகங்களும், கருவிகளும் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் யுகத்தில் இந்த இடைவெளி அகன்று ஆழம் கொண்டிருப்பதைக் கரிசனத்துடன் அணுகியிருக்கிறது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூடிப் பேசுவதும் உண்பதும்கூட இன்று அரிதாகிவிட்ட நிலையில் மரபை, பழக்கவழக்கங்களை, மதிப்பீடுகளை முழுமையாக கடைபிடிக்கவும் இயலாமல் விட்டுத் தொலைக்கவும் முடியாமல் தவிக்கும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த தந்தைக்கும், இவையெல்லாம் பொருட்டல்ல என்று கணினியிலும் இணையத்திலும் மூழ்கியிருக்கும் இன்றைய தலைமுறை மகனுக்குமான உறவுச் சிக்கலை அதன் பல்வேறு அபத்தங்களுடன் சற்றே அங்கதத்துடன் அணுகியிருக்கிறது ‘கழிமுகம்’. இன்றைய வாழ்வின் சவால்களையும் அவற்றின் முன்னே கையறு நிலையில் தவிக்கும் பெற்றோர்களின் நிலையையும் சித்தரித்துள்ள வகையில் முக்கியமானது.

நோய்த்தொற்று காலத்தில் அனைவரும் வீடடங்கிக் கிடந்த நேரத்தில் பலரும் ஊர் திரும்ப வேறு வசதிகளின்றி தொலை தூரம் நடந்து சென்றதை அறிவோம். அனைவரிடத்திலுமிருந்து விலகி எச்சரிக்கையுடன் வாழ்க்கை அவரவர் தனிமையில் முடங்கச் செய்தது. இந்தத் தனிமையில் அவரவர் இருப்பைக் குறித்தும் இதுவரையிலான வாழ்க்கையைக் குறித்துமான சிந்தனையில் ஆழ்ந்திடும் வாய்ப்பும் கிட்டியது. இழந்த காதல், அதன் வலியையும் மீட்டுக் கொடுத்தது. உறவுகள் சார்ந்தும் அதன் ஆழங்கள் சார்ந்துமான புரிதல்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டது. இந்த நாவல் இத்தகைய சிந்தனைகளுக்கு இடமளித்து பெருந்தொற்றுக் காலத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. வாழ்க்கைப் பயணம், சாலைவழிப் பயணம் இரண்டையும் இரண்டு சரடுகளாக்கி, மனித வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சமான காதலின் பல்வேறு ஆழங்களையும் இந்த நாவலில் எட்ட முயன்றிருக்கிறார். பெருமாள் முருகன் கிராமத்திலிருந்து சற்றே விலகி சமகாலச் சூழலுக்கு தன் புனைவில் இடமளித்ததன் விளைவு இந்த நாவல்.

3

பெருமாள் முருகனின் இந்த நாவல்களை ஒட்டுமொத்தமாகத் தொகுக்க முயலும்போது சில புள்ளிகளை எட்ட முடியும்.

  1. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் கொங்குப் பகுதி விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள். உழவுத் தொழிலிருந்து விலகி ரிக், போரிங், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்ற பணம் சம்பாதிக்கும் தொழிலுக்கு மாறியதும் அதற்காக நிலங்கள் கட்டடங்களாக மாறிய போக்கையும் இந்த நாவல்கள் நுட்பமாக விவரித்துள்ளன.
  2. நிலவுடமை சார்ந்திருந்த சாதிய கட்டுமானங்களின் உடைப்பை இந்த நாவல்கள் பேசியுள்ளன. கல்வியின் மூலமாக மேலெழுந்த ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நிலையைத் தாங்க முடியாத நிலவுடமையாளர்களின் நவீன தீண்டாமை முறைகளையும் சுட்டிக் காட்டியுள்ளன.
  3. உழவுத் தொழிலுக்கு அடுத்த தலைமுறை தயாராக இல்லாத சூழலில் நிலங்கள் வேறு பயன்பாடுகளுக்கு போகும் நிலை. வருடம் முழுக்க உழைத்தும் போதிய வருவாய் இல்லாமல் போவது ஒருபுறம் இருக்க, அடுத்தத் தலைமுறை இளைஞர்கள் நிலத்தில் உழைப்பதைத் தகுதிக் குறைவாக எண்ணுவதும் அதற்கு மாற்றாக வேறு வேலைகளைத் தேடிப் போவதும் நிலங்களைக் கைவிடக் காரணங்களாய் அமைகின்றன. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் விளைநிலங்கள் கைவிடப்பட்ட கணக்கை அணுகிப் பார்த்தால் இதிலுள்ள உண்மைகள் விளங்கும்.
  4. ஆண்களும் பெண்களும் சேர்ந்து புழங்கும் வாய்ப்புகள் உருவாகியிருக்கும் சூழலில் காதல் திருமணங்கள் அதிகரிக்கவே செய்கின்றன. பணிச் சூழலில், கல்விக் கூடங்களில் தனக்குப் பிடித்தவர்களை சாதியைக் கடந்து இணைகளாக ஏற்றுக் கொள்ளும் போக்கு இளையவர்களிடம் உள்ளது. ஆனால், அதற்கு மாறாக அதனை ஒப்புக்கொள்ள முடியாத சாதி இறுக்கத்துடன் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள். இதனால் சாதி மறுப்புத் திருமணங்கள் அத்தனை எளிதாக முடிவதில்லை. அப்படியே துணிந்து மணந்துகொண்டாலும் பெற்றோர்களின் மீது சாதி அபிமானிகள் செலுத்தும் அழுத்தம் மோசமான முடிவுகளை எடுக்கத் தூண்டுகின்றன. சாதியும் சமூகத்தில் அதன் தாக்கங்களும் இந்தப் புனைவுகளில் மிக வலுவாக இடம் பெற்றுள்ளன.
  5. உதிரிகளாய் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கும் இடங்களாக திரையரங்குகள் அமைந்திருந்தன. பண்ணையாட்களின் பிள்ளைகள் நிலவுடமையாளர்களின் ஆடு மாடுகளை மேய்க்கவும் கட்டுத்தறிகளை பராமரிக்கவும் நேர்ந்தது. இத்தகைய சூழல் இன்று மாறியுள்ளது. ஆனால், கடந்த காலத்தில் அத்தகைய நெருக்கடிகளையும் சவால்களையும் கடந்தே இன்றைய தலைமுறை உருவாகியுள்ளது என்பதைக் காட்டும் ஆவணங்களாய் இந்த நாவல்கள் அமைந்துள்ளன.
  6. கூட்டுக் குடும்பம், பொதுச் சொத்து, உறவுகளுக்குள் விரிசல், சண்டைகள் என்று வாழ்வின் பல்வேறு உளவியல் அம்சங்களையும் அவற்றின் விளைவுகளையும் அணுகிப் பார்த்துள்ளன இந்த நாவல்கள்.
  7. நிலம், சொத்து, கல்வி போன்ற காரணங்களால் உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வாய்க்காத இளைஞர்களைப் பற்றிய கொங்குப் பகுதியின் தனித்தன்மைமிக்க சிக்கல்களையும் இவை சுட்டிக் காட்டியுள்ளன.
  8. கொங்குப் பகுதியின் செம்மண் நிலம், வானம் பார்த்த பூமி, அதில் பிழைத்துக் கிடக்கும் மரங்கள், தாவரங்கள், அண்டி வாழும் கோழிகள், குயில்கள், புறாக்கள், மைனாக்கள் உள்ளிட்ட பறவைகள், சிறு தெய்வங்கள், காவல் தெய்வங்கள், கோயில்கள், வழிபாடுகள், சடங்குகள் உள்ளிட்ட கிராம வாழ்வின் நுட்பமான பல கண்ணிகளையும் இந்த நாவல்கள் இணைத்துள்ளன. ஒரு தனி மனிதனின் கதையாகவோ அல்லது குடும்பத்தின் கதையாகவோ மட்டும் இல்லாது ஒரு வாழ்நிலத்தின் ஒட்டுமொத்தக் கதைகளாகவே இவை அமைந்துள்ளன.
  9. கொங்கு வட்டாரத்தின் தனித்த மொழியழகை, உரையாடல் நேர்த்தியை, சொலவடைகளை, பழமொழிகளை, வசவுகளை இந்த நாவல்கள் பத்திரப்படுத்தியுள்ளன. இன்று இந்த நிலத்தைச் சேர்ந்தவர்களே இப்படியொரு மொழியைப் பயன்படுத்துவது குறைந்திருக்கிறது. பொதுத் தமிழ் பயன்பாடும், அதைவிட தமிழும் ஆங்கிலமும் கலந்த கலப்பு மொழியின் பயன்பாடும் அதிகரித்திருக்கும் நிலையில் இத்தகைய வட்டார மொழி நுட்பங்களை தானியக் களஞ்சியங்கள் போல புனைவுகளை பத்திரப்படுத்துகின்றன.

வங்காளத்தைச் சேர்ந்த மகாஸ்வேதா தேவி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ‘வரலாற்றின் திருப்புமுனை ஒன்றில் நிற்க வாய்க்கும்போது, பொறுப்புள்ள ஒரு எழுத்தாளர் எப்போதும் சுரண்டப்படும் மக்களின் பக்கமாகவே நிற்கவேண்டும். அப்படியில்லையேல் வரலாறு அந்த எழுத்தாளனை மன்னிக்காது’.

கொங்கு நிலத்தின் விவசாய வாழ்வு பெரும் மாற்றத்துக்கு உள்ளான முக்கியமான காலகட்டத்தில் எழுதத் தொடங்கிய பெருமாள் முருகன் தன் புனைவுகளின் வழியாக பாதிக்கப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் தரப்பிலேயே நின்றிருக்கிறார் என்பதை இந்தப் புனைவுகளின் வழியாக தெளிவுற அறிந்திட முடியும். எனவே, அவர் தன் பொறுப்பை சரிவரவே நிறைவேற்றியுள்ள மனநிறைவுடன் தொடர்ந்த எழுத முடியும். எழுதட்டும்.

( 01.11.2026 அன்று கொல்கத்தாவைச் சேர்ந்த லஹக் அமைப்பு 2026ஆம் ஆண்டுக்கான மான்பகதூர் சிங் லஹக் விருதை பெருமாள் முருகனுக்கு வழங்கிய விழாவில் ஆற்றிய உரை )

 

 


நிலத்தை எழுதுதல் - பெருமாள் முருகன்

  சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சித் தொடரைக் குறித்து செய்தி ஒன்றை வாசிக்க நேர்ந்தது. ‘நிலத்தை எழுதுதல்’ என்ற அதன் தலைப்புதான் அ...