Sunday, 3 August 2025

சுகுமாரன் – காலம் அறியும் ஒரு பெயர்

 


கோவை கொடீசியா அமைப்பினர் நடத்தும் ஒன்பதாவது புத்தகத் திருவிழா. கோவையின் பெருமிதங்களில் ஒன்று. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றாலும் புத்தகத் திருவிழா என்றால் கோவைப் புத்தகத் திருவிழாதான் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கோவைப் புத்தகத் திருவிழாவைப் போல நடத்தவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது. ஆசையை ஏற்படுத்துவது.

கோவை புத்தகத் திருவிழா இன்னொரு வகையிலும் சிறப்பானது. பிற இடங்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகள் தனியார் அமைப்புகளோ அல்லது மாவட்ட நிர்வாகமோ ஏற்பாடு செய்கிற திருவிழாக்கள். கோவைப் புத்தகத் திருவிழா, தொழில் கூட்டமைப்பினர் நடத்துகிற ஒன்று. கொடீசியா இந்த வளாகத்தில் ஆண்டு முழுக்க பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுகின்றன என்றாலும் தொழில் வளர்ச்சியுடன் சேர்ந்து வாசிப்பும் வாசிப்பு அனுபவமும் பெருக வேண்டும் என்ற நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்தப் புத்தகத் திருவிழா சமுக நோக்கினையும் உள்ளடக்கியது.

கோவைப் புத்தகத் திருவிழாவின் மூன்றாவது சிறப்பு கொடீசியா வழங்கும் விருதுகள். சென்னைப் புத்தகத் திருவிழாவைத் தவிர வேறு புத்தகத் திருவிழாக்களில் இல்லாத சிறப்பம்சம் இது. தமிழ் இலக்கியத்துக்கு தொண்டு புரியும் ஒரு எழுத்தாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும், இளம் எழுத்தாளர்களுக்கான இரண்டு விருதுகளையும் இந்த ஆண்டு முதல் மொழிபெயர்ப்பாளர்களுக்கான விருதையும் கொடீசியா வழங்குகிறது.

கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது இந்த ஆண்டு சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு வெளியானபோது உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. முதலில் நான் சரியான தகவல்தானா என்று உறுதிப்படுத்திக்கொண்டேன். தகுதியானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது என்பது நம்ப முடியாத ஒன்றாக ஆகிவிட்ட நிலை. கொடீசியா அமைப்பினருக்கும் விருதுக் குழுவினருக்கும் நன்றிகள், பாராட்டுக்கள். சுகுமாரனுக்கு இன்று வழங்கப்படும் விருது கொடீசியா விருதுகளின் மீதான மரியாதையை மேலும் உயரப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

0



சுகுமாரன் எனும் கவிஞர்

1985ஆம் ஆண்டு சுகுமாரனின் முதல் கவிதைத் தொகுப்பு ‘கோடைகாலக் குறிப்புகள்’ வெளியானது. என் கல்லூரி படிப்பின் இரண்டாம் ஆண்டு. தமிழ் புனைவுலகை புதுக்கவிதை தீவிரமாக ஆக்கிரமித்திருந்த காலம். நிறைய கவிஞர்கள். புதிய தொகுப்புகள்.  இவற்றுக்கு நடுவில் ஒரு புதிய குரலைக் கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருந்த சமயம்.

எனது கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும்

மரணத்தால் விறைத்திருக்கிறது என் வீடு

நான் உனக்குத் தரும் சொற்களில்

மிருகங்களில் கோரைப்பற்கள் முறைத்திருக்கலாம்.

உன்னுடன் பகிர்ந்துகொள்ளும் சிகரெட்டில்

விஷத்தின் துகள்கள் இருக்கலாம்

உன்னுடைய தட்டில் பரிமாறும் உணவில்

சகோதரர்களின் மாமிசம் கலந்திருக்கலாம்

உனக்குத் தயாரிக்கும் தேநீரில்

கண்ணீரின் உப்பு கரைந்திருக்கலாம்

 

இப்படியொரு கவிதை அந்தத் தொகுப்பில் இருந்தது. இந்த வரிகள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபடி முடியாமல் நண்பர்களிடம் அரற்றியபடியே இருந்தது இப்போது நினைவில் இருக்கிறது.

ஊன்றுகோலில் இருக்கிறது குருடனின் கண், விரல்களில் அவிழ்ந்தது தாளம் போன்ற அபாரமான வரிகள் புதிய கவிதைகளையும் ஒரு புதிய கவிஞனையும் அடையாளம் காட்டியது.

பெரும்பாலான தமிழ்க் கவிஞர்களின் முதல் தொகுப்பு அவர்களது கைக்காசு செலவில்தான் வெளியாகும். தமிழ்க் கவிதையின் மாற்ற முடியாத சம்பிரதாயங்களில் ஒன்று. சுகுமாரனின் தொகுப்பும் அப்படித்தான் வெளியானது. அம்மாவின் தோடுகளை அடகுவைத்துக் கிடைத்த பணம், சொந்த சேமிப்பில் இருந்த சொற்ப தொகை, சிறிய அளவில் கடன் எல்லாவற்றையும் சேர்த்து இரண்டாயிரம் ரூபாய் செலவில் தொகுப்பு அச்சிடப்பட்டு சென்னையிலிருந்து பார்சலில் கோவை வந்து சேர்கிறது. கவிஞர் பரபரப்புடன் பார்சல் அலுவலகத்துக்கு செல்கிறார். கிடங்கில் கட்டுக்கட்டாக பெட்டி பெட்டியாக பார்சல்கள். இரும்பு உதிர் பாகங்களுக்கும் பம்பு செட்டுகளும் கிரைன்டர்களுக்கும் நடுவே ஒரு மூலையில் கவிஞரின் பெட்டியும் கிடக்கிறது. கட்டு பிரிந்து புத்தம் புதுத் தொகுப்பின் பிரதிகள் சிதறிக் கிடக்கின்றன. அங்கிருந்த சிப்பந்தியிடம் புகார் சொல்கிறார். ‘இதெல்லாம் பெரிய விஷயமா சார். பார்சல் சரியா கட்டலைன்னா ஒடஞ்சுதான் போகும். புக் எதுவும் டேமேஜ் ஆகலையில்ல…’ என்று சொல்லிவிட்டு புத்தகங்களை சேகரிக்க அந்தப் பெண்ணும் உதவுகிறாள். ஒரு பிரதியை எடுத்துப் புரட்டுகிறார். கவிஞர் புத்தகக் கட்டை ஒழுங்குபடுத்தி எடுத்து ரசீதை கொடுப்பதற்குள்ளாக இரண்டொரு கவிதைகளைப் படித்துவிடுகிறார் அந்த பெண். ரசீதைப் பெற்றுக்கொண்டு சொல்கிறார் “வாழ்க்கை என்ன அவ்வளவு சோகமாவா இருக்கு சார். இவ்ளோ கொடுமையா எழுதி வெச்சிருக்கீங்க?”

அந்தத் தொகுப்பைக் குறித்து இதைவிட சுருக்கமாகவும் கச்சிதமாகவும் ஒரு விமர்சனம் இருக்க முடியாது. பார்சல் அலுவலகத்திலிருந்த அந்த பெண்தான் சுகுமாரனின் முதல் வாசகி. அவர் தொகுப்புக்குக் கிட்டிய முதல் விமர்சனம் அதுவே.

அந்த காலகட்டத்துக்குப் பொருத்தமான கவிதைகளைக் கொண்டிருந்த தொகுப்பு அது. வேலையின்மை இளைஞர்களை வதைத்த காலம். வாழ்வின் மீதான அவநம்பிக்கை, அன்றாடத்தின் நிச்சயமின்மையை துயரமும் வன்முறையும் கலந்த மொழியில் வெளிப்படுத்திய கவிதைகள் அவை.

வாழ்வின் மீது அவநம்பிக்கைக் கொண்டிருந்த அந்த சுகுமாரனைக் காட்டிலும் அவரை எனக்கு இன்னும் நெருக்கமாக்கியவை அவரது இரண்டாவது தொகுப்பான ‘பயணியின் சங்கீதங்கள்’ தொகுப்பில் இருந்த கவிதைகளே. 1991ஆம் ஆண்டு வெளிவந்தது.

உன் பெயர், முதல் பெண்ணுக்கு சில வரிகள், முடிச்சு என மூன்று காதல் கவிதைகள் அத்தொகுப்பில் உள்ளன.

தமிழில் இதுவரையும் வெளிவந்த ‘காதல்’ கவிதைகளில் ஆகச் சிறந்தவற்றின் சிறு பட்டியலில் நிச்சயமாக இடம்பெறத் தகுந்தவை.

உன் பெயர்

இன்று என் உற்சாகங்களை மூடும் வலை

என் இதயத்தைத் துளைக்கும் அன்பின் விஷம் தடவிய வாள்

நீயே என் ஆனந்தம், அலைச்சலின் ஆசுவாசம், குதூகலம்

நீயே என் துக்கம், பதற்றம், பிரிவின் வலி

காலம் அறியும்,

உன் பெயர் வெறும் பெயரல்ல எனக்கு

நீயே அறிபவள்,

நான் வழியில் எதிர்ப்பட்ட வெறும் பெயரோ உனக்கு?

உன் பெயர்

இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்

 

இந்த இரண்டு தொகுப்புகளைத் தொடர்ந்து ‘சிலைகளின் காலம்’, ‘வாழ்நிலம்’, ‘பூமியை வாசிக்கும் சிறுமி’, ‘நீருக்குக் கதவுகள் இல்லை’, ‘செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல’ ஆகிய தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஒரு மொத்தத் தொகுப்பும்கூட.

ஒரு கவிதை வாசகனாக சுகுமாரனின் கவிதைகளின் சிறப்பம்சங்கள் என்று இவற்றைக் கூறலாம். செறிவும் கச்சிதமும் கொண்ட மொழி,  துல்லியமான சொற் தேர்வு, நேர்த்தியான கவிதையின் அமைப்பு,  முந்தைய ஒன்றிலிருந்து அடுத்ததை வேறுபடுத்தி முன்னகர்ந்து செல்லும் முனைப்பு, மரபை நுணுகிக் கற்றிருந்தபோதும் அதன் தாக்கத்தை உள்ளீடுகளில் மட்டும் தக்கவைத்திருப்பது, கவிதையின் மர்மத்தை, ரகசியத்தை, வசீகரத்தை கண்டடைவதில் காட்டும் தீவிரம்.

தொடர்ந்து இப்பண்புகளை தன் கவிதைகளுக்குள்ளாக மறுபரிசீலனைக்கு உட்படுத்தி அவற்றை புதுப்பித்தே கொண்டிருப்பதனால்தான் இன்றும் அவரது கவிதைகளில் தனது தனித்தன்மையை தக்க வைத்திருக்க முடிகிறது.

தமிழ் கவிதை மரபில் சுகுமாரன் ஒரு சாதனையாளர். முதல் கவிதையை எழுதிய காலந்தொட்டு இன்று வரை கவிதையின் தீவிரமாக இயங்கி வருவது எளிதானதல்ல. கவிதையில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து அடுத்தடுத்து வரும் தலைமுறையினரோடு போட்டியிட்ட தன்னையும் புதுப்பித்துக்கொண்டு எழுதுவது என்பது பெரும் சவால். அதை மிக வெற்றிகரமாக சாதித்து வருபவர் சுகுமாரன்.

2

சுகுமாரன் எனும் மொழிபெயர்ப்பாளர்

ஒரு கவிஞன், எழுத்தாளனின் ஆயுதம், கருவி என்பது மொழி. அந்த மொழியை கூர் மழுங்காது வைத்துக்கொள்வது அவனது பெரும் பொறுப்பு. வளமான சொற்கிடங்கு, சமகாலத்தன்மை, புதிய சொற்சேர்க்கைகள் என்று தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டிய அவசியம் உள்ளது.

சுகுமாரன் தன் மொழியின் மீது எப்போதும் கவனம் வைத்திருப்பவர். அவரது மொழி கூர் இழக்காமல் இருப்பதற்கான காரணம் என நான் உத்தேசிப்பது 1) மரபுப் பயிற்சி 2) தீவிரமான தொடர்ந்த வாசிப்பு 3) மொழிபெயர்ப்பு.  

உலகெங்கிலும் சிறந்த கவிஞர்களும் புனைகதையாசிரியர்களும் மொழியாக்கத்தில் தீவிரமாக பங்களித்திருக்கிறார்கள்.  தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் எல்லோருமே மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

சுகுமாரன் கவிஞராக அறியப்பட்ட காலத்திலேயே மொழிபெயர்ப்பாளராகவும் கவனிக்கப்பட்டவர். முதல் தொகுப்பு வெளியான அதே 1985ஆம் ஆண்டிலேயே மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் எழுதிய ‘மார்க்சிய அழகியல் – ஒரு முன்னுரை’ நூலை தமிழில் மொழிபெயர்த்தார். தொடர்ந்து மலையாளத்திலிருந்து சக்கரியாவின் ‘இதுதான் என் பெயர்’ நாவல், பெண்வழிகள் கவிதைகள், மயிலம்மா – போரட்டமே வாழ்க்கை, உண்ணி ஆர் இன் ‘காளி நாடகம்’, பஷீரின் ‘மதிலுகள்’, ‘லீலை’ சிறுகதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார்.

ஆங்கிலம் வழியாக, பாப்லோ நெரூதாவின் கவிதைகள், அஸிஸ் பே சம்பவம், பட்டு, தனிமையின் நூறு ஆண்டுகள் ஆகிய நாவல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.

ஈரோடு இலக்கியச் சுற்றம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில், மொழிபெயர்ப்பு குறித்து அவர் ஆற்றிய உரையும் அதன் எழுத்து வடிவமும் மிக முக்கியமான ஒன்று.

3

சுகுமாரன் எனும் கட்டுரையாளர்

கவிதையும் மொழியாக்கமும் அவர் விரும்பிச் செய்பவை. ஆனால், ஒரு ஊடகவியலாளராக, பத்திரிகையாளராக அவர் கட்டுரைகளை எழுத நேர்ந்தது. உயிர்மை இதழில் தொடர் எழுதலானார். 2004ஆம் ஆண்டு வெளியான அவரது முதல் கட்டுரை ‘ஜி.நாகராஜனும் வி.மாலாவும்’ இன்னும் என் நினைவில் உள்ளது.

புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை ஒருவரை பேட்டியெடுத்த அனுபவத்தை மிக பிரமாதமாக எழுதியிருந்தார். ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட உச்ச நட்சத்திரம். தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் அவரது கொடி பறந்தது. திரைத் துறையிலிருந்து விலகி அரசியலில் சில காலம் இருந்தார். எல்லோரும் அவரை மறந்திருந்த காலம். பிரமாண்டமான மாளிகையில் புறக்கணிக்கப்பட்ட தேவதையாக வாழ்ந்திருந்தவரை சந்திக்கச் செல்கிறார். சுருக்கங்கள் விழுந்த முகம். வாடியத் தோற்றம். புறக்கணிப்பின் கசப்பும் முதுமையை ஏற்கத் தயங்கும் கோபமும் அவரிடம்.

கட்டுரையுடன் வெளியிடுவதற்காக தேர்ந்தெடுத்து வைத்திருந்த ஒரு படத்தை தருகிறார். அழகின் உச்சத்திலிருந்த போது எடுத்த படம். அதைக் கண்டதும் அவரது கண்களிலும் முகத்திலும் பழைய நாட்கள் மகிழ்ச்சியுடன் திரளுகின்றன. கொஞ்சம் நாணமும்கூட. படத்தை கையில் வாங்கிக் கொண்டு அறைக்குள் செல்கிறார்.

வெகு நேரம் வரை காத்திருந்தும் அவர் வெளியே வரவில்லை. தயக்கத்துடன் அறைக்குள் எட்டிப் பார்க்கிறார். நடிகையின் இடது கையில் அந்த கருப்பு வெள்ளைப் புகைப்படம். வலது கையில் தோளிலிருந்து விலக்கிய சேலை. நிலைக் கண்ணாடியில் தன்னுடைய பழைய நேற்றையும் இன்றையும் ஒப்பிட்டு நின்றிருந்தார்.

அந்த நடிகை வைஜெயந்தி மாலா.

மறக்க முடியாத இன்னொரு கட்டுரை உண்டு. அந்தக் கட்டுரைக்கு அவரிட்ட பெயர் ‘பொன்னகரம்’. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறித்து எழுதப்பட்டது அக்கட்டுரை  தமிழின் மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று.

செறிவான கவிதையிலும் கச்சிதமான மொழியாக்கத்திலும் காணக்கூடிய அதே மொழிநுட்பத்தை அவரது கட்டுரைகளிலும் பார்க்கமுடியும். எத்தனை எத்தனை அனுபவங்கள். அவரது கட்டுரைகள் புனைகதைகளுக்கு மிக நெருக்கமானவை. பல கட்டுரைகள் புனைகதைகளைவிட அபாரமானவை. வீட்டுக்கு அருகிலுள்ள காலி மனையில் சோமன் கட்டிவைக்கும் பசுமாட்டும் அதைத் தேடி வரும் கொக்குக்கும் உள்ள நட்பைச் சொல்லும் கட்டுரை, மாதவிக்குட்டியின் சமாதியை ஒரு கபரஸ்தானில் தேடிக் கண்டடைந்த அனுபவம், ஞானபீட விருதுகளைக் குறித்த வெளிப்படையான விமர்சனம், திரைப்பட விமர்சனத் துறையில் இந்திய அளவில் கொண்டாடப்படும் மேதையான சதீஷ் பகதூர் பற்றிய கட்டுரை, மதுரை சோமு, மைக்கேல் ஜாக்சன் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள், இந்தி இசையமைப்பாளர் நௌஷத் அலி பற்றிய கட்டுரை, முன்னால் கேரள முதல்வர் ஈ.எம்.எஸ், ஓ.வி. விஜயனின் ‘கஸாக்கின் இதிகாசம்’ நாவலை மொழிபெயர்க்க எடுத்த முயற்சி,‘சில்க்’ ஸ்மிதாவைப் பற்றிய கட்டுரை எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உண்மையில், சிறப்பான சில கட்டுரைகளை வாசித்தபோது, கவிஞர் மொழிபெயர்ப்பாளர் என்பதைவிட கட்டுரையாளர் என்பதே பொருத்தமானது என்று எண்ணியுள்ளேன். தமிழின் மிகச் சிறந்த கட்டுரை எழுத்தாளர்களின் பட்டியலில் சுகுமாரனுக்கு முதன்மையான இடம் உண்டு.

4




சுகுமாரன் எனும் புனைகதையாளர்

புனைகதைகளுக்கு நிகராகக் கட்டுரைகளை எழுதும் ஒருவர் ஏன் சிறுகதைகளையோ நாவல்களையோ எழுதவில்லை என்ற கேள்வி எப்போதும் இருந்ததுண்டு. தொடக்க காலத்தில் ‘மீட்சி’ இதழில் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். ‘தங்கப்பன் ஆசாரியின் கிளி’ என்பது தலைப்பு. தொடர்ந்து அவ்வப்போது சிறுகதைகள் எழுதியிருப்பினும் தொடர்ந்து அதில் கவனம் செலுத்தவில்லை. அண்மையில், ‘அகழ்’ இதழில் எழுதிய ‘உஸ்தாத்’ எனும் கதை அவரது புனைவுத் திறனுக்கு சிறந்த உதாரணம்.

2013ஆம் ஆண்டு அவருடைய முதல் நாவல் வெளியானது. ‘வெல்லிங்டன்’.

பிறந்த ஒன்பதாம் மாதம் முதல் பத்து வயதுவரையும் பிறகு கல்லூரி பருவத்திலும் வசித்திருந்த இடம் வெல்லிங்டன். அந்த பருவத்தில் அங்கு வாழ்ந்த மனிதர்கள், நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், அப்போது நடந்த சம்பவங்களின் வழியாக தன் பால்ய காலத்தை மீட்டுருவாக்கம் செய்யும் ஒரு முயற்சியே அந்த நாவல். ஒருவிதத்தில் பழம்நினைவுகளை அசைபோடுதல். எதிலும் கட்டுக்கடங்காத ஆர்வமும் துறுதுறுப்பும் துள்ளலும் நிறைந்த ஒரு சிறுவனின் உலகம். நுட்பமான உணர்வுகளை மிகத் துல்லியமாகவும் அதேசமயம் அந்தப் பருவத்துக்கேயுரிய தெளிவின்மையுடனும் சித்தரித்திருக்கும் நாவல்.

இரண்டாவது நாவல் ‘பெருவலி’. ஒரு சரித்திர நாவல். முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் மகளும் ஔரங்கசீப்பின் சகோதரியுமான ஜஹனாராவை நாயகியைக் கொண்ட முக்கியமான ஒரு நாவல். அரியணை ஆசையின் பின்னிருக்கும் கொடூர முகத்தையும் பெண்களை அந்தப்புரத்துக்குள் ஒடுக்கும் நிலையையும் இதனூடாக ஜஹனாரா எப்படி தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறாள் என்பதையும் விவரிக்கும் புதினம். மும்தாஜின் பதினான்கு குழந்தைகளில் மூத்தவளான ஜஹனாரா அரசியல் மதிநுட்பமும், ஆன்மிக இலக்கியங்களில் புலமையும் மிக்கவள். கவிதை, இசை, நடனம் தெரிந்தவள். ஷாஜஹானின் தர்பாரில் அவளுக்கென தனி ஆசனம் இருந்தது. அரச குடும்பத்துப் பெண்கள் யாருக்கும் இல்லாத அளவுக்கு செல்வமும் செல்வாக்கும் இருந்தன.

சுகுமாரனின் மொழி நுட்பமும் தனித்தன்மையும் இவ்விரு நாவல்களையும் தமிழின் பிற நாவல்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்றன. ஒரு சரித்திர நாவலுக்கான வழக்கமான அம்சங்களைத் தவிர்த்து மன ஆழங்களை அணுகி ஆராய்ந்து செறிவாக வெளிப்படுத்துவது பெருவலியின் சிறப்பு.

நாவலாசிரியராக சுகுமாரனின் இடம் தமிழில் முக்கியமானது.

5

சுகுமாரன் எனும் பத்திரிகையாளர்

சென்னையில் தொடங்கிய ஆயத்த ஆடை நிறுவனம் சரி வராமல் ஏதேனும் பத்திரிகையில் சேரலாம் என்று தயக்கத்துடன் முயல்கிறார். குங்குமம் நிறுவனத்திலிருந்து ‘தமிழன்’ என்ற பத்திரிகை தொடங்கும் தகவல் தெரிந்து விண்ணப்பிக்கிறார். நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார். சுகுமாரனை நேர்காணல் செய்தவர் சின்னக்குத்தூசி. ஒரு கவிஞராக சுகுமாரனை ஏற்கெனவே வாசித்திருந்தவர் என்பதால் வேலை கிடைக்கிறது.

ஆனால், சில மாதங்களிலேயே ‘தமிழன்’ இதழ் நிறுத்தப்படுகிறது. எனவே, குங்குமம் வார இதழில் உதவி ஆசிரியராக இடம் பெயர நேர்கிறது.

குங்குமம் இதழில் பணியாற்றிய காலத்தில் சில மாதங்கள் அவர் பொறுப்பாசிரியராக செயல்பட வேண்டியிருந்தது. அப்போது இளையராஜாவை பேட்டி எடுக்க நினைத்தார். 1997ஆம் ஆண்டு. அவரிடம் நேரம் பெறுவதென்பதே பெரும் சவால். முட்டி மோதி சந்திப்புக்கான நேரம் கிடைத்தது. ஒரு வாரமாக சிரமப்பட்டு கேட்கவேண்டிய கேள்விகளை தயார் செய்கிறார். அவரது இசையின் எல்லா பரிணாமங்களையும் அதன் ஊற்றையும் வெளிப்படுத்தும் விதமான கேள்விகள்.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்கிறார். அப்போது இளையராஜா ஒரு திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பில் இருக்கிறார். இடைவேளையின்போது சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. தயாராக அச்சிடப்பட்ட கேள்விகளை வாங்கிப் பார்க்கிறார். ‘இத்தனை கேள்விகளா? இதுக்கெல்லாம் பதில் சொல்லணும்னா நேரம் பத்தாதே. நீங்க ஒண்ணு பண்ணுங்க. நாளைக்கு காலையில வீட்டுக்கு வந்துருங்க.’ என்று சொல்லிவிட்டு ஒலிப்பதிவுக்கு சென்றுவிடுகிறார்.

மறுநாள் காலை இளையராஜாவின் வீடு. ‘என்ன சாப்படறீங்க?’ என்று விசாரிக்கிறார். எதுவும் வேண்டாம் என்று மறுக்கிறார். பேட்டி கிடைத்தால் போதும் என்ற மனநிலை. உண்மையில் காலையில் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. இளையராஜா உற்றுப் பார்த்துவிட்டு எழுந்து உள்ளே செல்கிறார். சிறிது நேரத்துக்கு பின் திரும்பி வருகிறார். பின்னாலேயே ஒரு பணியாள் ஒரு தட்டில் பலகாரமும் பழரசத்தையும் கொண்டு வந்து வைக்கிறார். ‘சாப்புடுங்க.’ என்று சொல்லிவிட்டு மேசை மீதிருந்து கற்றைத் தாள்களை எடுத்துப்புரட்டுகிறார். சாப்பிட்டு முடித்தவுடன் தாள்களை நீட்டுகிறார் ‘இதைப் போட்டுருங்க’.

தாள்களைப் புரட்டிப் பார்க்கிறார் சுகுமாரன். அவரே கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு அவரே எழுதிய பதில்கள்.  இவருக்கா சரியான கோபம். பத்து நாளாக தூக்கம் கேட்டு, மண்டையை உடைத்து தயாரித்த கேள்விகளை தூக்கிப் போட்டுவிட்டு இவரே கேள்வியையும் எழுதி பதிலும் எழுதுவாரென்றால் நான் எதற்காக என்ற ஆத்திரம். வாய்விட்டு எதையும் சொல்லவில்லை என்றாலும் முகமே காட்டிக்கொடுத்துவிடுகிறது.

“என்னாச்சு? இது பத்தாதா?” என்று கேட்கிறார் இளையராஜா.

இதுதான் சமயம் என்று இசையைப் பற்றியும் இளையராஜாவின் இசையைப் பற்றியும் அவரது சிறப்பம்சங்களைப் பற்றியும் சேர்த்து வைத்ததையெல்லாம் கொட்டித் தீர்க்கிறார். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார் இளையராஜா. “சபாஷ், நீங்க சாயங்காலமா ஸ்டூடியோவுக்கு வந்துருங்க. பேசிக்கலாம்” என்று சிரித்தபடி விடைகொடுக்கிறார். நிம்மதி பெருமூச்சுடன் வெளியே வந்தவர் மாலையில் ஸ்டூடியோவுக்கு போகிறார்.

மலையாளப்படமொன்றின் பின்னணி இசைப்பதிவு. விளக்குகள் அணைக்கப்பட்டு படத்தின் இறுதிக் காட்சி திரையில் ஓடுகிறது. விளக்குகள் ஒளிர்ந்ததும் இளையராஜா இசைக் குறிப்புகளை எழுதத் தொடங்குகிறார். எழுதி முடித்ததும் ‘நரசிம்மன்’ என்று குரல் கொடுத்ததும், நரசிம்மன் உள்ளே வந்து இசைக் குறிப்புகளை வாங்கிக் கொள்கிறார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு இசைக்கலைஞரும் அவருக்கான குறிப்புகளை வந்து வாங்கிச் செல்கிறார்கள். குறிப்புகளுக்கு ஏற்ப வாத்தியங்கள் தயாராகின்றன. இளையராஜா உத்தரவிட்டதும் இசைக்கோர்ப்பு தொடங்கியது. கருவிகள் ஒத்திசைந்து இசை எழுகிறது. ஓடும் மௌனப் படத்தில் அந்த இசை இணைகிறது. சற்று முன்பு வரை வெறும் பிம்பங்களோடு அசைந்த அந்தப் படத்தில் இப்போது உயிரோட்டம். அந்த சில மணித்துளிகளில் இளையராஜா ஏன் இந்த அளவுக்குக் கொண்டாடப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

“நம்ம வேலை முடிஞ்சிருச்சு. பேட்டியை ஆரம்பிக்கலாமா?” என்று கேட்கிறார் இளையராஜா. தயார் செய்து வைத்திருந்த எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொன்னார்.

இதுபோன்ற இன்னும் சில நேர்காணல்கள் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. கமல்ஹாசன், எல்லிஸ் ஆர் டங்கன் ஆகியோர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றன. ஸ்ரீவித்யாவிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் அவரது வேண்டுகோளுக்கிணங்க பிரசுரிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களைப் பற்றி பெரிய மதிப்பு கொண்டிராத ‘சில்க்’ ஸ்மிதாவை மிகுந்த முயற்சிக்குப் பிறகு சந்தித்து உரையாடுகிறார். இரண்டொரு சந்திப்புக்குப் பிறகு சுகுமாரனிடம் கேட்கிறார் “நீங்க என்னைப் பத்தி ஒரு கவிதை எழுதுங்களேன்.”

வணிக வார இதழின் விற்பனை எண்ணிக்கையை கூட்டுவதற்கான சில உத்திகளைக் கையாண்டதுடன் தனக்கு விருப்பமான இலக்கியம் சார்ந்த சில அறிமுகங்களையும் செய்வதற்கு வாய்த்தது. சிறு பத்திரிகை உலகைச் சார்ந்தவர் என்றாலும் வணிக வார இதழையும் வெற்றிகரமாக உருவாக்க முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டினார்.

6

சுகுமாரன் எனும் தீவிர இசை ரசிகர்

சுகுமாரன் தீவிரமான இசை ரசிகர். கர்நாடக சங்கீதம், இந்திய செவ்வியல் இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை என்று எந்த பாகுபாடும் கிடையாது.

ஒரு சங்கீதக்காரனாக வேண்டுமென்பது அவரது இளமைக் கனவு. கல்லூரிப் பருவத்தில் கோவையிலிருந்து ஒரு பிரபலப் பாடகியிடம் இசைப் பயிற்சி தொடங்கியது. ஆரம்பப் பாடங்களை முனைப்புடன் கற்று நாட்கள் நகர்ந்தன. இசை தொடர்பான புத்தகங்களையும் தீவிரமாக வாசித்தார். ஆனால், திடீரென வகுப்பு நிறுத்தப்பட்டது. பாடகியின் கணவர் செய்த கைங்கரியம். வகுப்பு தடைப்பட்டுப்போனபோதும் கற்றுக்கொண்ட பாடங்கள் அவரது சங்கீத ரசனைக்குக் காரணமாயின.

உதாரணமாக, மேலே சொன்ன இளையராஜாவுடனான சந்திப்பைப் பற்றி எழுதும்போது ஒரு வரியை இப்படி எழுதியுள்ளார். ‘சரி, அப்ப காலையில பேசிக்குவோம். வாங்க’ என்று மிருதங்கத்தில் தீர்மானம் வைத்த சுருக்கில் சொல்லிவிட்டு ஒலிப்பதிவுக் கூடத்துக்குத் திரும்பினார்.’

எம். டி. ராமனாதன் அவருக்குப் பிடித்த பாடகர். ஒரு கவிதையை அவருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். கோவை ‘ராகசுதா’ அரங்கில் எம்.டி.ராமனாதனின் கச்சேரி. காசு கொடுத்து டிக்கெட் வாங்கினால்தான் உள்ளே செல்ல முடியும். காசில்லை. அரங்குக்கு வெளியே அங்குமிங்குமாய் உலவுகிறார். கதவு திறக்கும்போதெல்லாம் எம்.டி.ராமநாதனின் குரல் காதில் விழுகிறது. வெகுநேரமாய் அரங்குக்கு முன்னால் உலவுவதை நிர்வாகிகளில் ஒருவர் கவனிக்கிறார். அழைத்து காரணத்தைக் கேட்கிறார். ராமநாதனின்பால் உள்ள ஈடுபாட்டையும் பாட்டு கேட்கும் ஆசையையும் கையில் காசில்லாத நிலையையும் எடுத்துச் சொல்கிறார். அப்போதுதான் அந்த அதிசயம் நடக்கிறது. ஒரு ஊழியரை அழைக்கிறார். உள்ளே அழைத்துச் சென்று உட்காரவைக்கும்படி சொல்கிறார். முதல் வரிசையில் இடம் கிடைக்கிறது. ராமநாதனின் கச்சேரியை முழுமையாகக் கேட்கிறார்.

பின்னொரு நாளில் கவிஞர் ஆத்மாநாமுடன் சேர்ந்து அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்த அனுபவமும் உண்டு.

அவரது இசை ஆர்வத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள இன்னொரு சம்பவத்தைச் சொல்லலாம்.

ஒருமுறை காசிக்குச் செல்ல வாய்க்கிறது. அங்கு அவர் பார்க்க விரும்பிய ஒரு இடம் உஸ்தாத் பிஸ்மில்லாகானின் இல்லம். இடுங்கிய சந்து ஒன்றில் இருந்த வீடு அது. அதைத் தேடி அடைந்தபோது மின்சாரம் தடைபட்டிருந்தது. மங்கிய ஒளியில் பிஸ்மில்லாகானின் படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஒரு நிமிடம் மின்சாரம் ஒளிர்கிறது. ஷெனாயுடன் பிஸ்மில்லா கான் அமர்ந்திருக்கும் பெரிய படத்தைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. கண்கள் கசிய முழந்தாளிட்டு வணங்கி எழுகிறார். அவரது பேரனையும் சந்திக்கிறார். வாரிசுகளுக்கு நடுவிலான சொத்துப் பிரச்சினையால் அந்த வீடு இடிக்கப்படும் செய்தியை அறிகிறார். துயருருகிறார். அந்தக் கட்டுரையை அவர் இப்படி முடிக்கிறார் – பிஸ்மில்லா கான் அந்த வீட்டில் வாழந்தார் என்பது உண்மை. அந்த வீட்டில் மட்டுமே அவர் வாழவில்லை என்பதும் உண்மை.

சுகுமாரன் தன் முதல் தொகுப்பிலேயே ‘இசை தரும் படிமங்கள்’ எனும் கவிதையை ஹரிபிரசாத் சௌரஸ்யாவுக்கும் யேசுதாஸூக்கும் ஸாப்ரிகானுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

7

சுகுமாரன் எனும் நல்ல சினிமா ரசிகர்

சூர்யா தொலைக்காட்சியின் செய்திப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் திருவனந்தபுரத்தில் வசித்தார். அவருக்கு பிடித்த நகரம். அங்கிருந்து கோவைக்கு இடம்பெயர நேர்ந்த சமயத்தில் மிகவும் தவித்துப் போயிருந்தார். திருவனந்தபுரத்தில் இருந்த காலத்தில் அநேகமாக எல்லா சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார்.

இந்த சினிமா ரசனை கோவையில் அவரது இளமைப் பருவத்திலேயே தொடங்கியது. எண்பதுகளின் தொடக்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்து திரைப்படச் சங்கம் ஒன்றை நிறுவினார். தர்ஷனா அதன் பெயர். அப்போதெல்லாம் இந்தியத் திரைப்படச் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர் சங்கங்களுக்கு படங்களை அனுப்புவார்கள். ரயில் நிலையத்தில் திரைப்படச் சுருள்கள் அடங்கிய அந்தத் தகரப் பெட்டியை கட்டணம் செலுத்தி எடுத்து வந்து, அதற்கான புரொஜெக்டரை வாடகைக்கு ஏற்பாடு செய்து படத்தைத் திரையிடுவார்கள். சென்னை, கோவை, திருப்பூர், உதகை, சேலம், மதுரை என முக்கியமான இடங்களில் இத்தகைய சங்கங்கள் இருந்தன.  தமிழகத்துக்கு அனுப்பப்படும் படப்பெட்டி இந்த எல்லா ஊர்களுக்கும் ஒன்றிலிருந்து ஒன்றாக பயணமாகும். அப்படித்தான் அன்றைய காலகட்டத்தின் முக்கியமான திரைப்படங்களைப் பார்க்க வாய்த்தது.

அப்படி ஒரு முறை ரேயின் ‘சாருலதா’வை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. பெட்டி ரயிலில் வந்துவிட்டது. எடுப்பதற்கு கையில் காசில்லை. கடன் சொல்ல முடியாது. பணம் கட்டினால்தான் பெட்டியை வெளியில் எடுக்க முடியும். தாமதிக்கவும் முடியாது. அடுத்த ஊரின் திட்டம் கெட்டுப்போகும். எங்கும் பணத்தைப் புரட்ட முடியாமல், திரையிடுவதற்கு முந்தைய நாள் தன் தங்கையின் கழுத்திலிருந்த சங்கிலியை அடகு வைத்து பெட்டியை எடுத்தார். படம் திரையிடப்பட்டது. படத்தின் நாயகி மாதவி முகர்ஜியில் மயங்கிப்போய் திருப்பூருக்கும் படப்பெட்டியை அவரே கொண்டுசென்று அங்கும் அந்தப் படத்தைப் பார்த்தார்.

வெகு நாட்கள் கழித்து, சென்னையில் சொந்தமாகத் தொடங்கிய ஆயத்த ஆடை நிறுவனம் நஷ்டத்தில் முடிய, நண்பரின் ஆலோசனையின்படி மொத்த கொள்முதலுக்காக கல்கத்தாவுக்கு சென்றார். வியாபாரத்துக்காக என்பதைவிட ரேயை சந்திக்க ஒரு வாய்ப்பு என்பதே பெரும் உந்துதலாக இருந்தது.

1988ஆம் ஆண்டு. கல்கத்தாவில் இருந்த தமிழ் கடை ஒன்றில் இருந்தவர் மூலமாக ரேயின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்தார். பதற்றத்துடன் எண்ணைச் சுழற்றினார். மறுமுனையில் ஒலித்த குரல், ரே உடல்நலக் குறைவால் யாரையும் சந்திப்பதில்லை என்று பதிலளிக்கிறது. பெரும் சோர்வு. கொஞ்சம் கோபம்கூட. இத்தனை தொலைவிலிருந்து வந்திருக்கும் ஒரு ரசிகனைச் சந்திக்க முடியாதா? ஆனால், சிறிது நேரத்துக்குப் பிறகு ரேயின் உண்மை நிலையை உணர்கிறார். மறுநாள் மீண்டும் அழைக்கிறார். இப்போது அதே குரல். ஆனால், ஞாயிறு மாலை நான்கு மணிக்கு சந்திக்கலாம் என்றும் பத்து நிமிடம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் சொல்கிறது. சரியாக நான்கு மணிக்கு ரேயின் முகவரியை அடைகிறார். பழைய கால வீடு. பத்திரிகைகளில் வெளிவந்த படங்களின் வழியாக அந்தப் படம் ஏற்கெனவே நன்கு அறிமுகமாயிருந்தது. ரே சாய்வுநாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மடி மீது அகலமான எழுதுபலகை. அச்சிட்டப் பக்கங்களில் பிழை திருத்துகிறார். சற்றே தள்ளி இருந்த சோபாவில் அமரச் சொல்கிறார்.

அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அவரது படங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கியதும் நிமிர்ந்து முகத்தைப் பார்க்கிறார். சொல்வது நின்றுபோகிறது. பேச நினைத்த எதுவும் நினைவுக்கு வர மறுக்கிறது. வாயடைத்து அமர்ந்திருக்கிறார்.

தோள்பையில் இருந்த மீட்சி இதழை எடுக்கிறார். அரவிந்தனின் ‘சிதம்பரம்’ படத்துக்கு எழுதிய விமர்சனம் அதில் உள்ளது. ரேயின் மேற்கோள் ஒன்றை அதில் பயன்படுத்தியுள்ளார். அந்தக் கட்டுரையைக் காட்டி தோராயமாக மொழிபெயர்த்துச் சொன்னதும் ரேயின் முகத்தில் இணக்கம். அந்த ஆமோதிப்பைப் பற்றிக்கொண்டு சொல்ல நினைத்தவற்றை கடகடவென சொல்லி முடிக்கிறார். ரேயின் படங்களைப் பற்றி, அவரது மேதமையைப் பற்றி என எல்லாவற்றையும் சொல்கிறார். ‘சாருலதா’வுக்காக தங்கையின் நகையை அடகுவைத்த கதையையும் சொல்கிறார்.

கதையைக் கேட்டுப் புன்னகை செய்கிறார். சந்திப்பு அத்துடன் முடிந்தது.

அதே பயணத்தின்போது மாதவி முகர்ஜியின் வீட்டைத் தேடி தெற்கு கல்கத்தாவிலும் அலைந்திருக்கிறார். கண்டுபிடிக்க முடியவில்லை.

உலக சினிமா, உள்ளூர் சினிமா என தான் பார்த்து ரசித்த படங்களைப் பற்றி நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை வெறும் கதை சொல்லும் கட்டுரைகள் அல்ல. சினிமா எனும் கலை எவ்வாறு அந்தப் படங்களில் வெளிப்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாகச் சொல்லும் ஆக்கங்கள்.

8

சுகுமாரன் எனும் சமரசமற்ற கலைஞன்

சுகுமாரனின் வாழ்வை அவரது எழுத்துகளின் வழியாகத் திரும்பிப் பார்க்கும்போது, அவர் விரும்பித் தேர்ந்துகொண்ட வாழ்வுதான் இது என்று தோன்றுகிறது. தான் நம்பியவற்றின் மீது அசைக்கமுடியாத பற்றுடன் எந்த சமரசத்துக்கும் ஆட்படாமல் தனக்கு உகந்ததை மட்டுமே அவர் செய்திருக்கிறார். புத்தகங்கள், கவிதை, இலக்கியம், இசை, சினிமா என்று தனக்கு விரும்பியவற்றில் நேரம் செலவு செய்வதற்கு தகுந்த வகையில் தனது வாழ்வை அமைத்துக்கொண்டார். பொருளாதார சிரமங்கள் அன்றாட வாழ்வை இறுக்கிப் பிடித்தபோதும் பெரிதாக அதை பொருட்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

இத்தனைக்கும் அவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. சிறுவனாக உறவினர் வீட்டில் வெல்லிங்டனில் கழிக்க நேர்ந்திருக்கிறது. பின் கோவையில். படித்து முடித்து வேலையின்றி அலைந்து நண்பர்களுடனான ஒரு கூட்டு தொழிற்முயற்சியும் தோல்வியுற்று கடனுடன் சென்னைக்கு இடம்பெயர நேர்கிறது. ஆயத்த ஆடைத் தொழில், விற்பனை பிரதிநிதி, பத்திரிகை பணி என்று தொடர்ந்து நிரந்தரமற்ற வருமானத்துடனே வாழ நேர்ந்தது. ஆனாலும் அதிலிருந்து விலகிச் செல்லவோ விட்டுவிடவோ இல்லை. ஒரு கவிஞனாகவும் இலக்கியவாதியாகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருந்தார்.   

ஒரு சந்தர்ப்பத்தில் கோவையில் வசித்திருந்த ஆர்.சண்முகசுந்தரம் அவர்களை சந்திக்கும் முனைப்புடன் அவருடைய வீட்டைத் தேடிச் செல்கிறார். தன்னுடைய வீட்டுக்கு மிக அருகிலுள்ள பகுதிதான் என்றாலும் தேடிக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறார். ஒருவழியாக வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டுகிறார். மெதுவாக நடந்து வந்து கதவைத் திறக்கிறார் ஆர்.சண்முகசுந்தரம். ஒரு கல்லூரி மாணவன் தன்னைத் தேடி வந்திருப்பதை வியப்புடன் கண்டு உள்ளே அழைத்துச் செல்கிறார். விசாரிக்கிறார். இரும்புக் கட்டிலில் அமர்ந்தபடி சொல்வதை கேட்டுக் கொள்கிறார். அவருக்கு பிடிக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு வாங்கி வந்த வெற்றிலையைத் தருகிறார். ஒரு வெற்றிலையை எடுத்து மெல்ல வருடி நரம்பைக் கிள்ளுகிறார் “ஒரு காலத்துல போட்டது. இப்ப போடறதில்லை.” அங்கிருந்த சிறிது நேரத்தில் அவர் இலக்கியத்தைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. “ஏதோ எழுதப் படிக்கத் தெரிஞ்சுது. படிச்சோம். எழுதினோம். அது இலக்கியமா இல்லையான்னு தெரியாது. காசு வந்துச்சு. ஆனா காசுக்காக எழுதல” என்று பட்டுக்கொள்ளாமல் பேசுகிறார். “பாடம் படிக்கறதை விட்றாதே. எழுத்தாளனாப் பிழைப்பது யோசிக்க சொகமா இருக்கும். ஆனால் அது மாய மானைத் தொரத்தற மாதிரி.”

ஆர். சண்முகசுந்தரம் அன்று அக்கறையுடன் சொன்னதைக் குறித்து சுகுமாரன் நிச்சயமாய் யோசித்திருப்பார். ஆனால், அந்த மாயத்தாகத்தை அவர் விடவில்லை. தனது முடிவில் தடுமாற்றமில்லாமல் இருந்ததின் விளைவுதான் இன்று ஒரு கவிஞனாக, புனைகதையாளராக, கட்டுரையாளராக தனித்தன்மையுடன் விளங்குகிறார்.

9



தி.ஜாவும் மார்க்கெஸ்ஸூம்

சுகுமாரனுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர்கள் இருவர். அவரது ஆதர்சம். ஒருவர் தி.ஜானகிராமன்.

‘எழுத்தெண்ணிப் படிப்பது’ என்று சொல்வார்கள் அல்லவா, அப்படி தி.ஜானகிராமனின் எல்லா எழுத்துகளையும் நுணுகிப் படித்தவர் சுகுமாரன். அவரது நாவல்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் மறுபதிப்பாகக் கொண்டு வந்தபோது அவைகளுக்காக எழுதப்பட்ட முன்னுரைகள் மிக கனமானவை. அவற்றின் வழியாக தமிழின் ஒரு மாபெரும் புனைவெழுத்தாளனுக்குத் தரப்பட்டிருக்கும் கௌரவம் மிக முக்கியமானது. அந்த முன்னுரைகளை கட்டுரைகளைத் தொகுத்து ‘ஜானகிராமம்’ என்று வெளியிட்டுள்ளார்.

பணி ஓய்வுக்குப் பின் தில்லியிலிருந்து சென்னைக்குத் திரும்பி வசித்த காலத்தில் ஓரிரு முறை அவரைச் சந்தித்திருக்கிறார். அசோகமித்திரனின் ஆசிரியப் பொறுப்பில் கணையாழி வெளிவந்த காலம். அலுவலகத்தில் தி.ஜானகிராமனை சந்திக்க வாய்த்திருக்கிறது. அதேபோல, தாம்பரத்தில் நடந்த ஒரு கூட்டத்தின்போது அவரது கையைப் பற்றிக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது. இசையைக் குறித்து சில சொற்களையும் பேசியிருக்கிறார்.   

அவருக்கு பிடித்த இன்னொரு எழுத்தாளர் கார்சியா காப்ரியல் மார்க்வெஸ்

தி.ஜாவை எந்த அளவுக்கு நுணுகி வாசித்து ரசித்திருக்கிறாரோ அதேயளவுக்கு ‘காபா’வின் மீதும் அவருக்கு பித்து உண்டு. தமிழில் வெகு காலமாகப் பேசப்பட்டு வந்தது மார்க்வெஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல். ஆனால், அது தமிழில் மொழிபெயர்க்கப்படவே இல்லை. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கழித்து, சுகுமாரனின் வழியாக அது நடக்கவேண்டும் என்பதுதான் காலத்தின் விருப்பம் போலும், காபாவின் விருப்பமுமாக இருக்கலாம். அவரைப் பற்றிய கட்டுரைகளை காலச்சுவடு இதழில் தொடர்ந்து எழுதியிருக்கிறார்.

தி.ஜாவையும் மார்க்வெஸ்ஸையும் விருப்பத்துக்குரிய இரண்டு எழுத்தாளர்களாகக் கொண்டிருப்பது என்பதே ஒரு சிறப்பான அம்சம். சற்று விநோதமான அம்சமும்கூட. அதுதான் சுகுமாரனின் தனித்தன்மைகூட.

10

சுகுமாரன் எனும் அபூர்வம்

சுகுமாரனிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசும்போது சொன்னேன். உங்கள் கைகள் அதிர்ஷ்டம் வாய்ந்தவை. எத்தனை மேதைகளின் கைகளைப் பற்றிக் குலுக்கும் வாய்ப்பைக் கொண்டிருந்தன என்றேன்.

ரே, ஜானகிராமன், எம்.டி.இராமநாதன். இளையராஜா, அசோக் வாஜ்பாயி, மதுரை சோமு என்று அதுவொரு பெரிய பட்டியல்.

அதேபோல தமிழில் சிறு பத்திரிகைகளின் வழியாக தீவிர இலக்கியம் செழிப்படையத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை அதன் எல்லா படிநிலைகளையும் நேரில் கண்ட மனிதர் சுகுமாரன். நவீன இலக்கியத்தின் முக்கியமான ஆளுமைகள் எல்லோரையுமே நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றவர். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், விமர்சனம் என எல்லாவற்றின் கால மாற்றங்களையும் கவனித்திருக்கிறார். இந்த காலகட்டங்களைப் பற்றியும் இலக்கியவாதிகள் பற்றியும் அவர் எழுதியுள்ள கட்டுரைகளைத் தொகுத்தாலே நவீன தமிழ் இலக்கியத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பார்க்க முடியும்.

அந்த வகையில் சுகுமாரன் தமிழ் நவீன இலக்கியத்தின் நேரடி சாட்சி.

 

11

சுகுமாரன் எனும் ஆசிரியர்

வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்மை வழிநடத்தும் ஆசிரியர்களை சந்திக்க நேர்கிறது. சிலர் நேரடியாக நமக்குக் கற்றுத் தருகிறார்கள். இன்னும் சிலர் தங்களது நடவடிக்கைகளின், பழக்க வழக்கங்களின் வழியாக நமக்குக் கற்றுத்தருகிறார்கள்.

அவ்வாறு விலகி நின்றும் பிறகு நெருங்கி அறிந்தும் கற்றுக் கொண்ட ஆசிரியர் சுகுமாரன். இலக்கியம் பற்றி மட்டுமல்லாது ஒரு மனிதனாக இருக்கவும் அவரிடமிருந்து கற்றுகொள்ள நிறைய உண்டு. நாம் நம்பும் ஒரு விஷயத்துக்காக எதன்பொருட்டும் சமரசம் கொள்ளாத உறுதி, சிறிய கூட்டமோ பெரிய கூட்டமோ முறையான தயாரிப்புடன் குறிப்புகளுடன் பேசுவது, முகதாட்சண்யத்துக்காக தகுதிக் குறைவான ஒன்றை பாராட்டாமல் அதன் குறைகளை சுட்டிக் காட்டும் கறார் தன்மை, எழுத்திலும் பேச்சிலும் சொற்களை அனாவசியமாக செலவு செய்யாத தன்மை, தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமை – எழுத்து பேசட்டும், எழுத்தாளன் பேசவேண்டாம் என்று அவர் கற்றுக் கொடுத்தவை மிக முக்கியமானவை.

எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற நண்பர்கள் பலருக்கும் அவர் ஆசிரியரே.

இலக்கியத்தின் அனைத்து இயல்களிலும் அவரது பங்களிப்பு மிகப் பெரியது. இன்னொருவர் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. இதற்கான உரிய விருதுகளோ பரிசுகளோ அவருக்கு வந்து சேரவில்லை. அதைப் பற்றி பொருட்படுத்துபவரல்ல. தன் பணிகளில் சற்றும் தளராத கவனத்துடனும் அக்கறையுடனும் தொடர்ந்திருப்பவர்.

எனவே, கொடீசியா அமைப்பின் இந்த விருது அவருக்குக் கொடுத்திருக்கும் மகிழ்ச்சியைக் காட்டிலும் அவரது மாணவர்களாகிய எங்களுக்கு பெரும் நிறைவைத் தந்திருக்கிறது.

ஆசிரியர் சுகுமாரன் அவர்களுக்கும் கொடீசியா அமைப்பினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

0

(கோவை கொடீசியா அமைப்பின் 2023ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது 22 ஜுலை 2023 கொடீசியா புத்தகக் கண்காட்சி அரங்கில் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டபோது ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் )

 

 

Saturday, 5 July 2025

அ. முத்துலிங்கம் கதைகள் - உயிர்களின் மீதான வற்றாத கருணை

x




( அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளைப் பற்றிய இந்தக் கட்டுரை நவம்பர் 2007, திண்ணை இதழில் வெளியானது. இதுவரை வலைப்பூவிலோ, வெளிவந்த கட்டுரைத் தொகுப்புகளிலோ இடம் பெறாமல் தவறிவிட்ட ஒன்று. தற்செயலாக நேற்று இதைக் கண்டுபிடிக்க வாய்த்தது. )

 

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழத்தின் பங்களிப்பும் கணிசமானது. அவ்வாறான பங்களிப்பை ஈழப்போருக்கு முன், பின் என்று வகுத்துக் கொள்ளமுடியும். போருக்குப் பின்னான காலகட்டத்தில் சு.வில்வரத்தினம், யேசுராசா, சோலைக்கிளி, சேரன், செல்வி, சிவரமணி, அகிலன் முதலான கவிஞர்களிடமிருந்து வெளியான தீவிரமான கவிதைகள் தமிழ் கவிதையுலகில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. எஸ்.பொ, செ.யோகநாதன் போன்றவர்களின் படைப்புகளும் சமீப காலங்களில் ஷோபா சக்தியின் நாவல்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சிறுகதைகளைப் பொறுத்தவரையில் இது பூர்த்தி செய்யப்படாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இலங்கையிலிருந்தும் அயலிலிருந்தும் வெளியான சில சிறுபத்திரிக்கைகள் வெளியானபோதும் கூட சிறுகதைகளுக்கு அவை ஆற்றிய பங்களிப்புகள் குறைவானவையே. இதற்கான காரணங்களை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக முடியும்.

புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற ஒரு வகைப்பாட்டை சுட்டுமளவு இலங்கையிலிருந்து வெளியேறி வெவ்வேறு உலக நாடுகளிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சொந்த மண் குறித்த ஏக்கமும், தவிப்பும், போரின் உக்கிரமும், அது சிதைத்தழித்த வாழ்வு குறித்த கண்ணீருமாக இந்த வகை இலக்கியம் வெளிப்பட்டபடி உள்ளது.

இந்த பிண்ணனியிலிருந்து அ. முத்துலிங்கத்தின் மொத்தத் தொகுப்பை அணுகும்போது இரண்டு விஷயங்களை நினைவில் கொள்வது முக்கியம் என்று தோன்றுகிறது.

01 அ.முத்துலிங்கம் இலங்கையைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது எழுத்துக்கள் புலம் பெயர்ந்தோர் என்ற இலக்கிய வகைமைக்குள் அடங்காதது.

02   அவரது எழுத்துக்கள் சொந்த மண் குறித்த ஏக்கம் அல்லது கவலை அல்லது கனவு என்ற எல்லைக்கு வெகு வெளியே இன்னும் விரிவான உலகளாவிய மனித குலம் சார்ந்த அக்கறையைக் கொண்டது.

1959 முதல் 2003 வரை அ.முத்துலிங்கம் எழுதி 5 தொகுப்புகளாக வெவ்வேறு காலகட்டத்தில் வெளியான கதைகளுடன் தொகுக்கப்படாத சில கதைகளும் சேர்த்து மொத்தமாய் 75 கதைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது. புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துக்கான பொது வரையறைக்குள் இத் தொகுப்பை அடக்கிவிட முடியாதவண்ணம் இதன் கதை எல்லைகளும் தளங்களும் விகாசம் கொண்டுள்ளன. உலகமெங்கும் பயணம் செய்யும் ஒரு யாத்ரீகனின் கண்களின் வழி தரிசனமாகும் காட்சிகளின் விநோதங்களையும் ஆழங்களையும் இத்தொகுப்பு வாசிப்பின் வழியாக சாத்தியப்படுத்துகிறது. தமிழ் சிறுகதை இதுவரையிலும் காட்சிப்படுத்திய வாழ்க்கையின் பரிணாமங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது இது. நமக்கு இதுவரை பழக்கப்பட்ட நிலங்களும், அதன் மனிதர்களும், பண்பாடும் நமக்குள் கட்டமைத்திருக்கும் வாழ்க்கை சார்ந்த பல அடிப்படைகளை உலுக்கும் வகையிலான பல கலாச்சார அம்சங்களின் பிண்ணனியை இத்தொகுப்பு முன்வைக்கிறது. கணவன் இறந்த பின்பு அவனது தம்பிக்கே வாழ்க்கைப்படவேண்டும், அவன் 5 வயது பாலகனாக இருந்தாலும் அவனுக்காகக் காத்திருக்கவேண்டும் என்பதையும் ( யதேச்சை ), ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டி வீட்டில் உள்ள முதியவர் ஒருவர் தானாக மரணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் ( பீனிக்ஸ் பறவை ) வாசகனுக்குத் தரும் அதிர்ச்சிகள் சாமானியமானதல்ல. பனிக்கால அக்டோபரின்போது அரசாங்கம் ஒரு மணி நேரத்தை பின்னகர்த்தி விடும் என்கிற வழக்கமோ வலதுகால் செருப்புக்கு ஒரு பெயர் இடதுகால் செருப்புக்கு ஒரு பெயர் என்பதோ நமக்குத் தரும் அனுபவங்கள் முற்றிலும் வேறுபட்டவை.

அறிமுகமற்ற சூழலில் சந்திக்க நேரும் அனுபவங்களையும், கலாச்சார அம்சங்களையும் எதிர்கொள்ளும் மனம் எப்போதும் அவற்றை தனது சொந்த கலாச்சார பிண்ணனியைக் கொண்டே தரப்படுத்த முயலும். அவ்வாறான தரப்படுத்தலின்போது மேலை கருத்தாக்கங்கள் குறித்தும், கலாச்சாரம் குறித்தும் எப்போதும் ஒரு தகுதிக் குறைவையே உத்தேசிக்கத் தோன்றும். முத்துலிங்கம் அவ்வாறான பொதுவான உத்தேசங்களுக்கு சற்றும் இடம் தராமல் உள்ளவற்றை உள்ளபடி சொல்லுவதோடு நின்றுவிடுகிறார். 

ஆனால் அதே சமயம் பல்வேறு நாடுகளின் கலாச்சாரக் கூறுகளை பகுத்துணர்வதில் எப்போதும் ஒருவருக்கு துணையாக, உரைகல்லாக விளங்குவது அவரவர் அடிமனதில் கால்கொண்டுள்ள சுய பண்பாட்டுக் கூறுகளே. கதைகளாக, பாடல்களாக, புராணங்களாக, இலக்கிய வடிவங்களாக உருக்கொண்டிருக்கும் இக் கூறுகளே முத்துலிங்கத்துக்கு அவர் சந்திக்க நேர்ந்த பல்வேறு நிறங்களையும், வெளிகளையும் உள்வாங்கிக்கொள்ள உதவியுள்ளன. கம்பரும், ஒளவையாரும், திருக்குறிப்பு நாயனாரும், புறநானூறும், புராணக் கதைகளும் அவருக்கு தன் தரப்பைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும், உறுதி செய்து கொள்ளவும் துணை நின்றுள்ளன. கதைப்போக்கில் வெகு இணக்கமாக இவற்றைப் பொருத்தி வாசகனிடத்திலும் அவ்வாறான ஒரு அனுபவத்தை உறுதி செய்திருக்கிறார். முத்துலிங்கத்திடம் நாம் காணும் இந்த அம்சம் தமிழ் சிறுகதையாளர்களிடத்தில் அவ்வளவாக காணமுடியாதது. இதுவே முத்துலிங்கத்தின் முதற்சிறப்பாகும். 



அடுத்தது ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளது போல முத்துலிங்கத்திடம் நாம் காணும் புன்னகை. கதை வடிவம், மொழி, சித்தரிப்பு நேர்த்தி என்று ஒரு சிறுகதையாளரின் அத்தனை பலங்களையும் கொண்டிருக்கும் முத்துலிங்கத்தின் கதைகளை மேலும் சிறப்புமிக்கதாக்கும் தனித்தன்மைமிக்க அம்சம் அவர் கதைகளில் காண முடிகிற அங்கதமே. அவருடைய எல்லாக் கதைகளிலுமே, அவை எந்த தளத்தில் அமைந்தவையானாலும், சின்னச் சின்ன வரிகளில் இந்த அங்கதத் தன்மை கொப்புளித்து நிற்கிறது. 'உடையார் என்ன செய்வார்? ஒண்ணுக்கு போறதை பாதியிலேயே நிற்பாட்டுகிற வித்தையை இன்னும் அவர் கற்கவில்லை. ' (செல்லரம்மான்). 'வரையாது கொடுக்கும் வள்ளல் போல இந்த என்ஜின் குறையாது ஒழுகும் வரம் பெற்றது' (பருத்திப் பூ).  கதைகளின் வாசிப்புத்தன்மையை உத்தரவாதப்படுத்தும் இந்த அம்சத்தை இவ்வளவு நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் கையாண்டிருக்கும் எழுத்தாளர்கள் தமிழில் மிகக் குறைவே. 

முத்துலிங்கத்தின் ஒட்டு மொத்த கதை உலகமும் பசி, காதல், மரணம் என்ற மூன்று புள்ளிகளை சுற்றி அமைந்திருப்பதை உணர முடிகிறது.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் தத்தமது தேசம், மொழி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலை என்று எல்லா வேறுபாடுகளையும் தாண்டி இந்த மூன்றையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இதற்கான போராட்டமே மனித வாழ்வு. இம் மூன்றையும் ஏதோவொரு விதத்தில் வெல்லும் முயற்சியில்தான் மனிதனின் சகல ஆற்றல்களும் குவிந்து செயல்படுகின்றன.

போர் எனும் தீங்கொடுமையால் சிதைத்தழிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஒரு கோப்பைக் கஞ்சிக்காக தனது சகோதரனுடனும் பசியுடனும் நாளை விடியும் என்கிற நம்பிக்கையுடனும் அலையும் சிறுவனிடத்திலும் ( நாளை ), யாருமறியாத ஆப்பிரிக்கக் காட்டில் முன்பின் தெரியாத ஒருவர் தரும் விருந்திலும் வைனிலும் பலநாள் பசி மறக்கும் விருந்தாளியிடத்திலும் ( விருந்தாளி ), அடைக்கலம் தந்தவரின் வீட்டில் தினம் தினம் நல்ல உணவு வாய்த்திருந்தபோதும், உணவுப் பண்டத்தை தன் பெட்டிக்குள் பதுக்கிவைத்துக்கொள்ளும் பாகிஸ்தானிய சிறுமியிடமும் (கிரகணம்) பசியின் கரங்களில் வதைபடும் வெவ்வேறு மனிதர்களை நாம் தரிசிக்கமுடிகிறது. 

அகதியாய் நாடு தாண்டி வந்து துப்புரவுத் தொழிலாளியாய் நிலவறையில் வாழ்ந்தபடி தனது துயர வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கும் இளைஞன் தனது இருப்பைப் பற்றிய உத்தரவாதமின்மையில் தத்தளித்திருப்பவனின் தேடலுக்கும் ( கறுப்பு அணில் ) கிழவியின் வறிய நிலைக்கு மனமிரங்கி வாய்க்காலை திசை மாற்றி வெட்டி, அதன் பொருட்டு வேலை இழக்க நேரும் பொறியாளரின் தியாகத்திற்கும் (பருத்திப் பூ) தாய்மையடைய வாய்ப்பில்லாதது உறுதியானதும் கறுப்புப் பெண்ணின் குழந்தையை ஸ்வீகரித்துக்கொண்டு தோளில் சுமக்கும் நங்கையின் தாய்மைக்கும் ( முழு விலக்கு ) பிண்ணனியில் மனிதனின் இருப்பு குறித்த கேள்வியொன்று வலுவாக முளைத்து நிற்பதை நாம் உணர முடிகிறது. 

மனித இருப்பை பசி எந்த அளவு ஆட்கொண்டுள்ளதோ அதைவிட பன்மடங்கு ஆட்கொண்டிருப்பது காதல் என்பதை பலவகைப்பட்ட நிற பேதங்களுடன் இத் தொகுப்பில் உள்ள பல கதைகளும் அடிக்கோடிட்டுள்ளன. கணவன் பிரிந்திருக்க, உள்ளுர் காதலனுடன் களவொழுக்கம் புரிவதைப் பற்றிய கதையான 'சங்கல்ப நிராகரணமும்', பதினெட்டு மைல் தினம் நடந்து தண்ணீர் சுமக்கும் கொடுமையிலிருந்து விடுபடவேண்டி கொண்ட காதலையும் துறந்திடத் துணியும் பெண்ணைப் பற்றிச் சொல்லும் கதையான 'ஒட்டகமும்', மனைவியின் மீதான தாபம் தணியாத கணவன் அவள் மார்பில் பச்சை குத்திக் கொண்டுள்ளதைக் கண்டு பின்வாங்கும் மனச் சரிவைச் சொல்லும் 'ஐந்தாவது கதிரையும்' காதலின் பல்வேறு நிறங்களை துல்லியப்படுத்தி நிற்கின்றன. 

பசிக்கான போராட்டத்தையும், காதலுக்கான தியாகம் உட்பட அனைத்தையும் பொருளற்றதாக்கி கவியும் மரணத்தின் முகங்கள் புன்னகையுடனும், புதிருடனும் வெவ்வேறு கதைகளில் வெளிப்படுகின்றன. பலர் கூடி வேடிக்கை பார்த்து நிற்கும் பொது மைதானத்தில் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் தன் தலையைத் துளைக்கப் போகும் தோட்டாக்களை எதிர்பார்த்து மண்டியிட்டிருக்கும் குற்றவாளியின் முன் கண்ணாமூச்சியாடும் சாவின் நிழல் நம்மை நடுங்கச் செய்கிறது (யதேச்சை) என்றால்,  வறுமையின் பிடியிலிருந்த சிறுமியின் மேதாவித்தனம் மெல்ல மெல்ல மொட்டவிழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் அவளை வசப்படுத்திக் கொள்ளும் மரணம் நம்மை உறைய வைக்கிறது ( கிரகணம் ). அதே சமயம் வாழ்நாள் முழுக்க பெரும்பாடுபட்டு சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள மொனார்க் வகைப் பட்டாம்பூச்சியைக் காண விசா கிடைத்து, அதைப் போய் பார்த்துவிட்ட பின்பு அவரை சாந்தத்துடன் தழுவிக்கொள்ளும் மரணம் குறித்து நமக்கு புகார் ஒன்றுமில்லை. 

முத்துலிங்கத்தின் புனைவுலகை கட்டியமைத்துள்ள பசி, காதல், மரணம் என்ற மூன்று புள்ளிகளையும் இணைக்கும் ஆதாரமான கோடாகவும் இத் தொகுப்பின் உட்சரடாகவும் அமைந்திருப்பது உயிர்களின் மீதான கருணை என்னும் அம்சமே. 

மண்ணின் மீதும் மண்ணுயிர்களின் மீதும் மனிதர்கள் கட்டவிழ்த்து விடுகிற வன்முறை சார்ந்த கவலைகள் முத்துலிங்கத்தின் கதைகளில் துலக்கமாக இடம்பெற்றுள்ளன. கானுயிர்களின் மீது ஆராய்ச்சி என்ற பெயரில் தொடுக்கப்படும் கொடுமைகளையும் ( ஞானம் ), தந்தத்தின் மீதான அளப்பரிய மோகத்தின் பொருட்டு யானைகளை கொலைசெய்யத் துணியும் மனிதர்களின் சுயநலத்தையும் ( குதம்பேயின் தந்தம் ), உடும்புகள், நாய்கள், பூனைகள், பாம்புகள், பறவைகள் என்று எண்ணற்ற உயிர்களின் மீது மனித சமூகம் தொடர்ந்து புரிந்துகொண்டிருக்கும் பாதகங்களையும், சற்றும் பிரச்சாரத் தொனியின்றி நம் உள்ளுணர்வின் ஆழத்தில் பெரும் வலியாக உணரும் வண்ணம் முத்துலிங்கம் சித்தரித்துள்ளார். இக் கருணையின் ஈரமே சாத்தியப்பட்ட இடங்களில் எல்லாம் உலகின் பல்வேறு பிரதேஷங்களில் வாழும் விதவிதமான உயிரினங்களைக் குறித்தும், பறவையினங்கள் குறித்தும் ஆர்வத்துடன் சொல்லத் து¡ண்டியுள்ளது எனலாம். ஆப்பிரிக்காவில் கிழங்குகளை உண்டு கொழுக்கும் கட்டிங் கிராஸ் என்ற பெருச்சாளிகள், பாகிஸ்தான் மலைப் பகுதிகளில் அழிந்துவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள மலை ஆடுகள், சேகர் பால்கன், டோ டோ போன்ற பறவைகள், மொனார்க் வகை பட்டாம்பூச்சி, நாய்களை சீண்டும் றக்கூன், குரங்குகள், ஆந்தை என்று ஒவ்வொரு பிராணியைப் பற்றியும், பறவைகள் பற்றியும் அவர் விஸ்தாரமாக நமக்குச் சொல்வது வெறும் தகவல்களாக மட்டும் நின்றுவிடுவதில்லை. 

உலகமயமாக்கல் மெல்ல மெல்ல மனித இனத்தின் பல்வேறுபட்ட கலாச்சார, இனக்குழு அடையாளங்களை தேய்த்தழித்து ஒற்றைத்தன்மைக்கு இட்டுச் செல்வதைக் குறித்த பல்வேறு விதமான மனவோட்டங்களை இத் தொகுப்பு சாத்தியப்படுத்தியுள்ளது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும், கணினிமயமாக்கலினாலும் மனிதர்கள் எதிர்கொள்ள நேரும் அபத்தங்களை, மனித உறவில் ஏற்படும் தலைகீழ் மாற்றங்களையும் வலுவாக முன்வைக்கும் கதைகள் ( கம்ப்யூட்டர், பூமாதேவி, .23 சதம் ) உலகமயமாக்கலின் இறுதி நோக்கமான ஒற்றைத் தன்மையைக் குறித்த பல்வேறு மனவோட்டங்களை சாத்தியப்படுத்துகின்றன. 

சிறுபருவத்தில் நாம் கண்ட காட்சிகள், சந்தித்த மனிதர்கள், நுகர்ந்த வாசனைகள் போன்றவை வாழ்வின் பிற்பகுதியில் நம் அடிமனதிலிருந்து மேலும் மேலும் துலங்கி எழுந்தபடியே உள்ளன. முத்துலிங்கத்தின் கதைகளில் அவ்வாறான சம்பவங்களும், வாசனைகளும் தனிச் சிறப்புடன் வெளியாகியுள்ளன (ஒரு சிறுவனின் கதை, உடும்பு, அக்கா, செல்லாரம்மாள், சிலம்பு செல்லப்பா ). ஆசிரியர்கள், அக்காக்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருக்க முடிகிறது. தனது சொந்த மண்ணிலிருந்து வெகு காலமாய் பிரிந்து எங்குமே கால்பாவாமல் அலைந்தபடியிருக்கும் ஒருவனின் மனம் தன்னியல்புடன் மனதின் அடியாழத்தில் உரங்கொண்டிருக்கும் இந்த நினைவுகளுக்குள் இளைப்பாறுவதன் சுகத்தையும் நிம்மதியையும் இக் கதைகளின் வழியாக உணர முடிகிறது.  அதே போல, முத்துலிங்கத்துக்கு சமையலைக் குறித்தும் ருசியைக் குறித்தும் விஸ்தாரமாக எழுதுவதில் அபாரமான ரசனை இருக்கிறது.  நாஞ்சில்நாடனுக்குப் பிறகு சமையல் வாசனை கொண்ட எழுத்தை முத்துலிங்கத்திடமே காண முடிகிறது. உணவு குறித்த இந்த ரசனையும் விஸ்தாரமும்கூட இழந்து வரும் ஒன்றைக் குறித்த மீட்டுருவாக்கத்தின் ஏக்கம் என்றே குறிப்பிடலாம். 

முத்துலிங்கத்தின் கதைகள் அனைத்துமே நேரடியான சித்தரிப்பு உத்தியைக் கொண்டவை. நவீன இலக்கியத்தின் உத்தி சார்ந்த மயக்கங்களுக்கு அவர் இடம்தராமல் நாற்பதாண்டு காலமாக தனக்கே உரிய யதார்த்தமும், அங்கதமும் இழைந்தோடும் எளிமையான சித்தரிப்பு பாணியை தொடர்ந்து கைகொண்டுள்ளார். விதிவிலக்காக அமைந்த கல்லறை, குந்தியின் தந்திரம், செங்கல், ஸ்டராபரி ஜாம் போன்ற கதைகள் முத்துலிங்கத்தின் கதையுலகிற்கு பொருந்தாமல் துருத்திக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. அதேசமயம் உத்தி ரீதியிலான சிறு பரிசோதனையுடன் அமைந்த 'வடக்கு வீதி' அந்தக் கதையின் உட்சரடு காரணமாக மிக வெற்றிகரமான கதையாக அமைந்துள்ளதையும் கவனிக்கலாம். 

முத்துலிங்கத்தின் பெரும்பாலான கதைகளிலும், கதையின் புலன் தளத்துக்கு அப்பால் அழுத்தமான உட்சரடுகள் மிக நுட்பமாக நெய்யப்பட்டுள்ளதை மிக முக்கியமான ஒன்றாக குறிப்பிட வேண்டியுள்ளது. அவரது கதைப்பாணி வாசகனை சரளமாக உள்ளிழுத்துக் கொள்ளுவது. ஆழ்ந்த வாசிப்பையும் அதிக கவனத்தையும் கோராதது. இதனால் கதைகளின் உட்சரடுகள் மேலும் துலக்கமற்றதாக்கிவிடுவதால் பல சமயங்களில் கதையின் உள் அடுக்குகளை நாம் உணரத் தவறிவிடலாம். இதுவே அவரது கதைகளை மேலும் சிறப்புமிக்கதாகவும், மீண்டும் மீண்டும் வாசிப்பிற்குரியதாகவும் ஆக்கித் தருகிறது. 

'ஐவேசு' என்றொரு சிறுகதை இத்தொகுப்பின் மிக முக்கியமான கதை. பனி மலைகள் சூழந்த ஒரு பள்ளத்தாக்கின் ஏதோவொரு நுனியில் மனித சஞ்சாரமற்ற இடத்தில் தன் மனைவி, ஒரு சிறுமி, ஒரு சிறுவன் இவர்களுடன் ஒரு குடிசையில் வசிக்கிறான் ஒரு கிழவன். வழி தப்பி வரும் பிரயாணிகளுக்கு தன்னிடத்தில் உள்ள ஆடுகளிடமிருந்து பால் கறந்து, பழைய பெட்டியொன்றில் பாதுகாத்து வைத்திருக்கும் உடைந்த விளிம்புகள் கொண்ட பீங்கான் கோப்பையில் தருகிறான், எதையும் எதிர்பார்க்காமல். அந்தக் கிழவனின் முகத்தில் காணும் கருணையின் ஒளியே, பசியின் பொருட்டும் காதலின் பொருட்டும் இருப்பிற்கான போராட்டத்தின் பொருட்டும் மனித இனம் மேற்கொள்ளும் சகலவிதமான தந்திரங்களில் இருந்தும், செய்யத் துணியும் துரோகங்களில் இருந்தும் விமோசனம் அளிக்கிறது என்று தோன்றுகிறது. 

தமிழினியின் நேர்த்தியான பதிப்பில் வெளியாகியிருக்கும் இத் தொகுப்பிற்கு க.மோகனரங்கன் எழுதியுள்ள முன்னுரை அ. முத்துலிங்கத்தின் சிறுகதை உலகை வெகு துல்லியமாக பகுத்துத் தந்திருக்கிறது.

 0

அ. முத்துலிங்கம் கதைகள், டிசம்பர் 2003

776 பக்கங்கள், விலை ரூ. 350

தமிழினி, சென்னை

Monday, 19 May 2025

இராமாயணத்தை தெலுங்கில் பாடிய முதல் பெண் கவி - ஆத்துக்குரி மொல்லா


 

 

‘ராமாயணம் பல முறை எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேளையும் சாப்பிடுகிறோம் என்பதால் அதைப் பற்றி பேசாமல் இருக்கிறோமா? ராமனின் கதையும் அவ்வாறனதுதான். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் அதைக் குறித்து எழுதலாம், வாசிக்கலாம், நேசிக்கலாம்.’

0

தெலுங்கில் புகழ்பெற்ற இராமாயண காவியங்கள் இரண்டு. முதலாவது, கவி அரங்கநாதா எழுதியது. இரண்டாவது, பாஸ்கரா என்பவரால் எழுதப்பட்டது. இவ்விரண்டுக்கும் அடுத்ததாக போற்றப்படுவது மொல்லா இராமாயணமே. தெலுங்கில் இன்று பரவலாகவும் குறைந்த விலையிலும் அதிகம் விற்கப்படுவது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பதிப்பகத்திலும் இது வெளியிடப்பட்டுள்ளது.

பதினைந்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த ஆத்துக்குரி மொல்லா எனும் தெலுங்கு கவிஞர் எழுதியது இது. வால்மீகியின் இராம காவியத்தை அடியொற்றி தெலுங்கில் எழுதிய முதல் பெண் கவிஞர் அவரே. நேரடியான எளிய மொழியில், மிகக் குறைவான சமஸ்கிருத வரிகளைக் கொண்டு எழுதப்பட்டது என்பதால் வெகு மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது. அருகாமை கிராமங்களைச் சேர்ந்த பலரும் அவர் பாடும் இராம கதையைக் கேட்க வந்து குவிந்தனர். அதைத் தொடர்ந்து அவரது இராம காதை, ‘மொல்ல இராமாயணம்’ என்று அறியப்படலாயிற்று. அவர் வாழ்ந்த காலத்தில் வாய்மொழியாக சொல்லப்பட்டு பின்னர் அச்சு வசதிகள் ஏற்பட்டபோது நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபவரம் கிராமத்தில் 1440ஆம் ஆண்டு பிறந்தவர் மொல்லா. குயவரான கேசன செட்டியின் மகள். லிங்காயத் பிரிவைச் சேர்ந்த அவர் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை வழிபடுபவர். தனது கடவுளுக்குப் பிரியமான மல்லிகை மலரைக் குறிக்கும் வகையில் தனது மகளுக்கு மொல்லா என்று பெயரிட்டார். இயல்பிலேயே பக்தி மிகுந்த மொல்லா தனது தந்தையுடைய குருவின் அறிவுறுத்தலின்படி இல்லற வாழ்க்கையில் ஈடுபடவில்லை.

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனரை வழிபட்டிருந்த மொல்லா ஒரு முறை கடவுளை எண்ணி தியானத்தில் மூழ்கியிருந்த வேளையில் அவருக்கு பிரமாண்டமான ஒரு தரிசனம் கிட்டியது. சிவனுடையது அல்ல அந்த தரிசனம், இராமனுடையது. ராம கதையை பாடும்படி அவருக்கு ஆணை வந்தது. சிறிதும் தயக்கமில்லாமல் அவர் உடனடியாக காரியத்தில் இறங்கி விரைவிலேயே மிக அழகான, செறிவான காவியத்தை இயற்றினார். 880 பாடல்களைக் கொண்ட அவரது இராமாயணம் தெலுங்கு இலக்கிய உலகில் புகழையும் மதிப்பையும் பெற்ற ஒன்று.   

கவி மரபில் அல்லாத ஒருவர் எழுதிய நூல் எப்படி இவ்வளவு பெரிய அளவில் மக்களைச் சென்றடைந்தது என்பது வியப்புக்குரியது. ஆனால், காரணங்கள் இல்லாமல் இல்லை.

முதலாவது காரணம், மக்களுக்கு எளிதில் புரியும்படியான மொழியில் அது எழுதப்பட்டிருந்தது. காவிய லட்சணங்கள் அனைத்தும் பொருந்தும்படியாக எழுதப்பட்டிருந்த அதே நேரத்தில் அது நேரடியான பேச்சுவழக்குகளுடன் மண் மணத்துடன் சாதாரண மனிதரும் கேட்டு ரசிக்கும்படியாக இயற்றப்பட்டிருந்தது. ஒரு காவியம் எழுதப்படுவது பண்டிதர்கள் படித்து அனுபவிப்பதற்காக மட்டும் அல்ல, அது மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற தெளிவு மொல்லாவுக்கு இருந்துள்ளது.

‘நாவிலிட்டதும்

தேன்

இனிப்பதுபோல

கவிதையும்

உடனடியாக சுவை தர வேண்டும்

 

புரியாத சொல்லும் பொருளும்

ஊமையனும் செவிடனும்

உரையாடுதலுக்கு ஒப்பானதன்றோ’

 

என்றே கவிதையைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்.

 

இரண்டாவது காரணம் அவர் தன்னை பெரிய பண்டிதராக, கல்வியறிவு மிக்கவராகக் காட்டிக்கொள்ளாமல் மிக எளிய, சாதாரண பெண்ணாக மட்டுமே முன்வைத்திருப்பது. ‘கல்வியறிவற்ற தன்னை எழுதச் செய்தது ஸ்ரீகண்ட மல்லேஸ்வரரின் கருணையன்றி வேறொன்றுமில்லை’ என்றே சொல்கிறார். ஆனால், அவருடைய பாடல்களை வாசிக்கும் எவரும் அவரது புலமையை குறைத்து மதிப்பிட முடியாது. மொழியை அவர் கையாண்டிருக்கும் விதம், உரையாடல் நயம், பிற காவியங்களிலிருந்தும் பிரபந்தங்களிலிருந்தும் உரிய பாடல்களை எடுத்துச் சொல்லியிருக்கும் திறன் ஆகியவற்றிலிருந்து அவரது கவித்திறனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். வட்டாரப் பேச்சு வழக்கு, இலக்கண வகைமைகள், கவித்துவ நுட்பங்கள், படிமங்கள், உள்ளுறை உவமைகள், காவிய மரபின் அடிப்படைகள் போன்றவற்றைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பட்டியலிட்டுக் குறிப்பிடும்போதே இத்தகைய நுட்பங்களில் அவரது ஆழமான புரிதலையும் திறனையும் அறிந்துகொள்ள முடியும். ஆனால், இவையெல்லாம் தனக்குத் தெரியாது, எல்லாமே மல்லிகார்ஜுனரின் கருணை என்று கூறுவதன் மூலம் வாசிப்பவருக்கு நெருக்கமாகத் தன்னை நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறார் மொல்லா. மக்கள் அவரது பாடல்களை எளிதில் நெருங்க அதுவும் ஒரு காரணம்.

உதாரணமாக, அயோத்தியைக் குறித்து வர்ணிக்கும்போது அது எப்படி இருந்தது, எப்படி இருக்கவில்லை என்று புனைந்திருப்பதைக் கவனிக்கலாம்.

சாகேதபுரத்து நாகங்கள் வெறும் பாம்புகள் அல்ல,

மதங்கொண்ட யானைகள்

இங்குள்ள குதிரைகள் வெறும் வானரக் கூட்டமல்ல,

படைவென்று திரும்பிய பரிகள்

இங்குள்ள தேர்கள் வெறும் எளிய நீருற்றுகள் அல்ல,

அழகிய ரதங்கள்

சாகேதபுரத்திலுள்ள கணிகையர் வெறும் காட்டு மலர்கள் அல்ல,

ஆடவும் பாடவும் தெரிந்த அற்புத நங்கையர்

இங்குள்ள அறிஞர்கள், முரட்டுத்தனமும் கொடூரமும் மிக்க இராட்சதர்கள் அல்ல, கருணையுள்ளம் கொண்ட புத்திஜீவிகள்

தெலுங்கு மொழியின் மண் மணத்தை மொல்லாவின் மொழியில் நுகரமுடியும். ‘இதுவென்ன வில்லா, மாமலையா?’ என்று சொல்லும் அதே நேரத்தில் ‘சந்துபொந்துகளிலெல்லாம் ஓடி மறைந்தனர்’ என்று சாதாரணமாகவும் எழுத முடிந்திருக்கிறது.

மூன்றாவது காரணம், காப்பியங்களுக்கான சில மரபுகளை அவர் துணிந்து மீறியிருக்கிறார் என்பது. பொதுவாக, அவர் வாழ்ந்த காலத்தில் காவியங்களை அரசர்களுக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், மொல்லா தனது இராமாயணத்தை அவ்வாறில்லாமல் தனது விருப்ப தெய்வமான மல்லிகார்ஜுனருக்கே சமர்ப்பித்திருந்தார்.

அடுத்த முக்கியமான காரணம், வால்மீகியின் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியபோதும் அதை அப்படியே எழுதவில்லை. தேவையான இடங்களை சுருக்கியும், சில பகுதிகளை தனது விருப்பத்துக்கேற்ப விரித்தும் எழுதியுள்ளார். சில முக்கியமான பகுதிகளை அவர் தனது படைப்பில் சேர்த்துக் கொள்ளவே இல்லை.  ‘பத்யம்’ எனப்படும் பாடல்களை மட்டுமல்லாமல் அங்கங்கே உரைநடையையும் பயன்படுத்தியதோடு தனது கருத்துகளை வலுவாக வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் கதைகள் சிலவற்றையும்கூட இணைத்துள்ளார். இது இராமாயணத்துக்கு புதிய ஒரு சுவையைத் தந்திருக்கிறது.

மொத்தமாக 880 சுலோகங்களைக் கொண்டு இராமாயணத்தை அவர் கட்டமைத்திருக்கும் விதம் குறித்து விமர்சகர்கள் பலரும் எழுதியுள்ளனர். பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம் ஆகிய முதல் நான்கு காண்டங்களை அவர் 245 பாடல்களை மட்டுமே கொண்டு புனைந்துள்ளார். சுந்தர காண்டத்தை மிகவும் விரிவாக 249 பாடல்களைக் கொண்டு பாடியிருக்கும் அவர், யுத்த காண்டதுக்கு எடுத்துக் கொண்ட பாடல்களின் எண்ணிக்கை 351. யுத்தத்துக்குப் பிறகு இராமன், சீதையைப் புறக்கணித்து ஒதுக்கும் உத்தரகாண்டத்தை மொத்தமாகவே அவர் எழுதவேயில்லை. வால்மீகியின் இராமாயணத்திலிருந்தும் தெலுங்கின் பிற இராமாயணங்களிலிருந்தும் இவ்வாறான துலக்கமான வேறுபாடுகள் இருந்தபோதும்கூட ஒரு செவ்வியல் காப்பியமாக இது கருதப்படுகிறது. 

காவிய இலக்கணங்களுக்கேற்ப முறையாக இயற்றப்பட்ட இதில் அறிமுகம், சமர்ப்பணம் உள்ளிட்ட பாடல்களும் இருந்தன. கவிதையும் உரைநடையும் கலந்து விரியும் உயர்ந்த கடவுளாக கருதிய ராமனின் மீதான பக்தியும் செறிந்திருந்தது. காப்பியத்தின் முதல் பாடலே ‘மகா குணசாலி தயாவான்’ இராமனின் மீதே பாடப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற கடவுளர்களைக் குறித்த பாடல்களும் தொடர்ந்தன. இறுதியாக, சரஸ்வதியைப் போற்றும் பாடலும் இடம் பெற்றது. சமஸ்கிருத கவிஞர்களான வால்மீகி, வியாசர், காளிதாஸன், பவபூதி, பாணபட்டர், சிவபத்ரா, தெலுங்கு கவிஞரான திக்கண்ணா ஆகியோரையும் வாழ்த்திப் பாடியிருந்தார்.

கல்வியறிவு இல்லாத தனக்கு காவிய லட்சணங்களைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்று சொல்லியிருந்தபோதும் மொல்லா ஒரு மகாகவி என்பதை அவர் தன் காவியத்தை கட்டமைத்த விதத்திலிருந்தும் அதில் பிரயோகித்திருந்த உவமை அணிகளிலிருந்தும் பாடல்களுக்கான இசை நயத்தையும் அதே சமயத்தில் சொற்சேர்க்கைகளையும் பயன்படுத்திய நேர்த்தியிலிருந்தும் விளங்கிக் கொள்ள முடியும்.



அவரது கவித்திறனுக்கு ஒரு பாடலை உதாரணமாகக் காட்டலாம். இலங்கையில் சீதை சிறைபட்டிருக்கிறாள். அவளை மீட்க வந்த அனுமன் உண்மையிலேயே இராமதூதனா இல்லை கபட வேடத்தில் வந்திருக்கும் இராவண அரக்கனா என்ற சந்தேகம் சீதைக்கு. எனவே, தன் கணவன் எப்படியிருப்பான், அவன் தம்பி எப்படியிருப்பான் என்று வர்ணிக்கச் சொல்கிறாள். அனுமன் இராமனை வர்ணிப்பதாக உள்ள இந்தப் பாடல் ஆந்திராவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. ஒவ்வொரு வீட்டிலும் வெகு சாதாரணமாக ஒலிப்பது. பள்ளிக்கூட பாடப் புத்தகங்களிலும் இடம் பெற்றிருப்பது.

மேக வண்ணம் அவன் நிறம்

தாமரைப் போன்று வெளுத்தவை அவன் கண்கள்

சங்கு போன்றது அவன் கழுத்து

அவனது கணுக்கால்கள் எழில் மிக்கன

அவனது தோள்களோ நேரானவை, நீண்டவை

அவன் குரல் முரசின் ஒலி

அவன் பாதங்களில் தாமரை வரிகள் உண்டு

அழகிய மார்பை உடையவன்

வஞ்சனை அறியாத அவன் உண்மையே மொழிபவன்

அம்மையே, நற்குணங்களைக் கொண்டவன் இராமன்

இந்த எல்லா குணங்களையும் கொண்டிருக்கும் தம்பி இலக்குவனின்

நிறமோ பொன்னையுடைத்து.

இந்தப் பாடலில் இராமனின் குணங்களை வரிசையாகப் பட்டியலிட்ட கவிஞர், ஒற்றை வரியில் இலக்குவனின் குணத்தை வகுத்துக் காட்டிவிடுகிறார்.

பெண்கள் எழுதிய பிற காப்பியங்களில், கவிதைகளில் பக்தி, கருணை ஆகிய இரண்டு ரசங்களே அதிகமும் பயன்படுத்தப்பட்ட நிலையில் மொல்லா தனது இராமாயத்தில் சிருங்காரம், வீரம், ரௌத்திரம், அச்சம், அற்புதம், அருவருப்பு ஆகிய பிற ரசங்களையும் பயன்படுத்தி கவிதைகளை புனைந்துள்ளார். வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் குறித்து பேச நேரும்போதெல்லாம் மொல்லா இளமையின் தீவிரத்தையும் காமத்தின் ஆற்றலையுமே குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். சிருங்கார ரசத்தை ஆளவேண்டிய அவசியமே இல்லாத இடங்களிலும் அதை வலுக்கட்டாயமாக கையாண்டிருக்கிறார். அயோத்தி நகரத்தின் வளத்தையும் அழகையும் வர்ணிக்கும்போதுகூட அங்கிருந்த சேணமிடப்பட்ட குதிரைகளில் தொடங்கி தந்திரமான கணிகைகள் வரை எவ்வளவு மோகப் பெருக்குடன் திகழ்ந்தன என்றே விவரிக்கிறார்.

வால்மீகியின் காப்பியத்தில் ‘யுத்தகாண்ட‘மே மிக நீண்ட ஒன்று. மொல்லாவும் தனது காவியத்தில் அதே யுத்த காண்டத்தை நீளமானதாக புனைந்துள்ளார். யுத்தக் காட்சிகளை விவரிப்பதில் மொல்லாவுக்கு பெருவிருப்பம் இருந்துள்ளது. சண்டைகள், ஆயுதங்கள், படை வரிசைகள், அமைச்சர்கள், கோரமான காட்சிகள், சிதைந்த உடல்கள் என அனைத்தையும் வர்ணித்துள்ளார். காமத்தை விவரிப்பதில் கொண்டிருந்த அதே விருப்பம் யுத்தத்தை வர்ணிப்பதிலும் இருந்துள்ளது.

இராமாயணத்தின் நாயகி சீதாவின் மீது மொல்லாவுக்கு பெரிய அளவு கவனம் இல்லை. அவள் அழகி என்பதை மட்டுமே வர்ணிக்கிறார்.

அவை பங்கயங்களா

மன்மதன் எய்தும் அம்புகளா

            சொல்வது கடினம் – அவள் கண்கள்.

பறவைகளின் இனிய இசையா

அல்லது தேவ கன்னியரின் பாடல்களா

            சொல்வது கடினம் – அவளது குரல்

நிலவா

அல்லது முகம் பார்க்கும் ஆடியா

            சொல்வது கடினம் – அவளது முகம்

பொற் குவளைகளா

அல்லது சக்ரவாகப் பட்சிகளா

            சொல்வது கடினம் – அவளது முலைகள்

நீலமணிச் சரங்களா

அல்லது தேனீக்களின் கூட்டமா

            சொல்வது கடினம் – அவளது கேசம்

மணல் மேடுகளா

அல்லது மன்மதனின் மண மேடையா

            சொல்வது கடினம் – அவளது தொடைகள்

அவளது எழில் கண்டு நிற்குந்தோறும்

காண்போர் கொள்வது பேதமை.

சீதாவின் பிறப்பைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ எங்கும் குறிப்பிடவில்லை. புகழ்பெற்ற அவளது சுயம்வரத்தைக்கூட ஒரு சிறிய முக்கியமில்லாத நிகழ்ச்சி என்பதுபோல் கடந்து போயிருக்கிறார். ஆனால், காட்டில் அவள் பட்ட துன்பங்களை சித்தரித்திருக்கிறார்.

காட்டின் வழியாக துயருடன் செல்லும் சீதையைக் கண்ட பழங்குடிப் பெண் சொல்லும் வரிகள் இவை

சீதையின் பாதங்களைப் பாருங்கள், பாவம்

முட்கள் நிறைந்த வனத்தில் நடந்து பழக்கமில்லை அவளுக்கு.

அழகிய அவரது கைகள் மென்மையின் ஒளியை இழந்துவிட்டன

கரடுமுரடான இந்தப் பாதையில் நடந்து அவை செம்மணிகள் போல்

நிறம் மங்கிப்போயின.

காய்ந்துலர்ந்த கொடியொன்று வீசும் காற்றில் அலைவதுபோல

சீதையின் மெல்லிய உடல் வெயிலில் நடுங்கி வதங்குகிறது

ஒளிமங்கும் தேய்பிறையென

சீதையின் முகம் வழக்கமான தன் பொலிவை மெல்ல இழக்கிறது.

இராம இலட்சுமணரின் நடைக்கு ஈடுகொடுத்து

நடக்க முயன்று மூச்சு வாங்கிட அவள் மார்புகள் ஏறி இறங்குகின்றன

இரக்கமற்று சுட்டெரிக்கும் வெயிலிடமிருந்து தப்ப எண்ணி

சிறு நிழல் தேடி அலையும் அவள் கண்களைப் பாருங்கள். 

அதேபோல, வால்மீகி இராமாயணத்தில் இல்லாத ஆனால் துளசி இராமாயணத்தில் இடம்பெற்றிருந்த ‘இலட்சுமண ரேகை’ பகுதி மொல்லாவின் இராமாயணத்திலும் இடம் பெறவில்லை.

 

கும்மாரா மொல்லா என்று அழைக்கப்படுவதில் கும்மாரா என்பது அவர் குயவர் இனத்தைச் சேர்ந்தவர் என்ற பொதுவான புரிதலை, குறிப்பிடுதலை மறுக்கிறார்கள் சில ஆய்வறிஞர்கள். மொல்லா தனது எழுத்தில் எங்கும் தன் சாதியைக் குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள். ‘கும்மாரா’ என் முன்னொட்டை பிற்காலத்தில் இராமாயணம் அச்சுக்கு வந்தபோது பதிப்பகத்தினர் சேர்த்திருக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.

மொல்லா வாழ்ந்த காலத்தை அறிய அவர் தன் நூலின் முகவுரையே ஆதாரமாக உள்ளது. தனது நூலின் முகவுரையில் அவர் நன்றியறிவித்திருக்கும் கவிஞர்களின் பட்டியலைக் கொண்டும் யாருடைய பெயர்களையெல்லாம் அவர் குறிப்பிடவில்லை என்பதை வைத்தும் அவர் வாழ்ந்தது பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று கணிக்க முடிகிறது.

 

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர், மொல்லாவின் கவித்திறனைக் குறித்துக் கேள்விப்பட்டு தனது அவைக்கு அழைத்ததாகவும் அரசவைக்குச் சென்று மொல்லா கவிதைப் பாடியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மொல்லாவைப் பற்றி எழுதப்பட்டுள்ள எல்லாப் பக்கங்களிலும் இது இடம் பெற்றுள்ளது. மொல்லாவின் கவிதைகளைப் பாடக் கேட்டு, அரசரும் அவரது அமைச்சர்கள், புலவர்கள் அனைவரும் அவரது திறனைக் கண்டு வியந்து ‘இவரது பாடல்களை உலகையே மேலே தூக்கும் யானைகளுக்கு சமமானவை’ என்று புகழ்ந்து பாராட்டியதாகவும் ஒரு குறிப்பு உள்ளது. அதே சமயம், ஒருசில புலவர்கள் அவரது கவிதைத் திறனை சோதிக்கும்விதமாக, உடனடியாக அதே அவையில் ஒரு பாடலைப் புனைந்து காட்டுமாறு கேட்டபோது, பாகவத புராணத்தில் இடம் பெறும் கஜேந்திர மோட்சத்தைக் குறித்து அபாரமான கவிதை ஒன்றை புனைந்து பாடியதாகவும், அதனைக் கண்டு வியந்து அவருக்கு ‘கவிரத்னா’ என்று பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

 

இன்னொரு தரப்பினர் அவர் விஜயநகரப் பேரரசைச் சந்திக்கவேயில்லை என்று இவை அனைத்தையும் மறுக்கிறார்கள். மொல்லா சூத்ரகுலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் முக்கியமாக அவர் பெண் என்பதாலும் அவர் இயற்றிய காவியத்தை அரசவையில் பாட அனுமதி மறுக்கப்பட்டது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எழுதப்படும் கவிதைகள் பண்டிதர்களும் புலவர்களும் மெச்சுவதற்கு அல்ல, எளிய சாதாரண மக்கள் கேட்டு ரசிப்பதற்கே என்பது மொல்லாவின் நோக்கம். ஆனால், அவர் தன் காவியத்தை இலக்கண சுத்தத்துடன் பாடியிருக்கும் நேர்த்தியைப் பார்க்கும்போது மரபை மீறியதையும் எளிமையான மொழியமைப்பையும் காரணம்காட்டி அரசவைப் பண்டிதர்கள் இதை நிராகரிக்க முடியாது என்று சவால் விட்டிருப்பதுபோலவும் யோசிக்க முடிகிறது. கூடவே, பெண் என்பதால் இப்படித்தான் எழுதவேண்டும் என்ற எழுதப்படாத விதியையும் துணிந்து மீறியிருப்பதையும் காண முடிகிறது.

அவரது பிற்கால வாழ்க்கையைப் பற்றி பெரிய அளவில் எதுவும் தெரியவில்லை. தனது குடும்பத்தை விட்டுச் சென்று ஸ்ரீசைலத்தில் தங்கிவிட்டதாகத் தெரிகிறது. மல்லிகார்ஜுனர் கோயில் அருகில் வசித்த அவர் ஒரு துறவிபோல வாழ்ந்திருக்கிறார். தொடர்ந்து பக்தர்களுக்கு ராமாயணத்தைப் பாடியிருக்கிறார். தனது 90 வயதில் 1530ஆம் ஆண்டு மறைந்திருக்கிறார்.

அவரது இராமயணம் தெலுங்கில் பரவலாகக் கிடைக்கிறது. ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலத்தில் இதன் மொழியாக்கம் கிடைக்கவில்லை. ஒருசில பாடல்களை சில வலைத்தளங்களில் காண முடிந்தது. (அவற்றின் மொழியாக்கமே இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.) 

ஹைதராபாத் உசேன் சாகர் ஏரிக்கரையில் டாங்க் பண்ட் சாலையில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. அவரது நினைவாக தபால் தலையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இவரது வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்தூரி வெங்கடேஸ்வரராவ் ‘கும்மார மொல்லா’ என்ற நாவலை 1969ஆம் ஆண்டு எழுதியிருக்கிறார். அது இப்போது பதிப்பில் இல்லை. இந்த நாவலை சங்கர சத்யநாராயணா என்பவர் ஒரு கதைப் பாடலாக மாற்றி எழுதியுள்ளார். அந்தக் கதைப் பாடல் இன்றும் ஆந்திராவின் பல இடங்களிலும் பாடப்படுகிறது. இவரது வாழ்வு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் தெலுங்கு நடிகர் பத்மநாபன். ‘கதாநாயகி மொல்லா’ என்ற அந்தப் படத்தில் மொல்லாவாக நடித்திருப்பவர் வாணிஸ்ரீ.

0

( மே 2025 ‘நீலி’ மின்னிதழில் வெளியான கட்டுரை ) 

 

 

    

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...