திருப்பூரிலிருந்து மதுரைக்கு அப்போதெல்லாம் ( 1988ம் ஆண்டு ) ஐந்து மணிநேர பேருந்து பயணம்தான். மதுரை காமராஜர் அஞ்சல் வழிக் கல்வியில் முதுகலை வணிகவியல் தொடரவேண்டிய சூழ்நிலை. அவசியமான, நேரடியாக செல்லவேண்டிய வேலைகளுக்காக மதுரை போக நேரிட்டது. அதிகாலை 4 மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்டு பேருந்து நிலையத்திற்கு, பெரும்பாலும் நடந்து, வந்து மதுரை பேருந்தில் ஏறினால் 10 மணிக்கெல்லாம் மதுரை பெரியார் நிலையத்தில் இறங்கிவிடுவேன். பக்கத்தில் அசோக் பவனில் சிற்றுண்டி முடித்துவிட்டு, பல்கலைக் கழகம் சென்றால் வேலை முடிய ஒரு மணி அல்லது இரண்டு மணி ஆகிவிடும். திரும்பவும் அசோக் பவனில், இரைச்சல்களுக்கும் வேர்வைக்கும் நடுவே மதிய உணவு. அரை மணி நேர இடைவெளிக்கு பிறகு, சுமார் மூன்று மணிக்கு திருப்பூர் பேருந்தை பிடித்தால் எட்டு மணி சுமாருக்கு ஊர் சேர்ந்துவிடலாம்.
அந்த முறை அதிகாலை புறப்படும்போது எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. ஆனால் மதியம் வேலையை முடித்துவிட்டு அசோக் பவனில் சாப்பிட வந்தபோது உடம்பு வலியும், லேசான காய்ச்சலும் இருப்பதை உணர்ந்தேன். பேருந்தில் ஏறி சிறிது நேரத்திற்கெல்லாம் நல்ல உறக்கம். திருப்பூர் வந்து சேர்ந்தபிறகுதான் விழித்துக் கொண்டேன். கடுமையான காய்ச்சல். நல்ல உடம்பு வலி. வீட்டுக்கு போய் படுத்துவிட்டேன். காலையில் வெகுநேரமாகியும் எழுந்துகொள்ளாமல் படுத்திருக்கும் என்னை வந்து எழுப்பியபோதுதான் காய்ச்சலின் தீவிரம் தெரிந்தது அம்மாவுக்கு. அப்போதெல்லாம் வீட்டில் உடனடி நிவாரணி APC என்ற வெள்ளை மாத்திரைதான். இரண்டு மாத்திரைகளை போட்டுக் கொண்டு மீண்டும் தூங்கிவிட்டேன்.
காலையில் எட்டு மணிக்கு மேல் விழித்துக் கொண்டபோது காய்ச்சல் மட்டுப்பட்டிருந்தது. உடம்பிலும் வலி இல்லை. ஆனால் என் கழுத்தை அசைக்க முடியாதபடி ஏதோவொரு புள்ளியில் கழுத்து நிலைகொண்டிருந்தது. அந்தப் புள்ளியிலிருந்து வலப்பக்கம், இடப்பக்கம் எப்படி ஒரு டிகிரி திருப்பினாலும் தாங்க முடியாத வலி வெடித்தது.
டாக்டர் சிதம்பரம் அப்பாவின் நண்பர். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் தெருவுக்கு வைத்தியர் சிதம்பரம் டாக்டர்தான். காலை எட்டு மணிக்கு, சுத்தமாக எண்ணெய் போட்டு துடைத்த பச்சை நிற சீட் கவர் போட்டிருக்கும் ரேலி சைக்கிளில் வருவார். வெள்ளை நிற பேண்டும் சட்டை. கச்சிதமான கண்ணாடி. தாடி மீசை இல்லாமல் சுத்தமாக மழிக்கப்பட்ட முகம். சைக்கிளை நடவை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தெரு முழுக்க ரவுண்ட் வருவார். தேவையானவர்களுக்கு, ஊசியோ மருந்தோ கொடுத்துவிட்டு மேட்டுப்பாளையத்தில, கருணா நிட்டிங் அருகில் உள்ள கிளினிக்கிற்கு போய்விடுவார். அதற்கு பிறகு யாருக்கும் அவசரம் என்றால் மாலையில் அந்த கிளினிக்கிற்குத்தான் போக வேண்டும். ஈஸ்வரன் சித்தப்பாவிற்கு ஒரு முறை டைபாய்டு காய்ச்சல் வந்து (அப்போது டைபாய்டு காய்ச்சல் ஆளை கொண்டு போய்விடும் என்ற பயம் இருந்தது ) அவதிபட்டபோது சிதம்பரம்தான் வைத்தியம் பார்த்தார். 22நாளும் தினசரி கஞ்சியும் ஹார்லிக்ஸூம் கொடுத்து, கடுமையான ஊசி மாத்திரைகளுடன் சித்தப்பா தேறிவந்தார். அப்போது அவருக்கு போட்ட ஒரு ஊசியின் தடிமனைப் பார்த்து எனக்கு காய்ச்சல் வந்து விட்டது.
அவர் டாக்டர் என்று எனக்கு தெரியும். அவர் எம்.பி.பி.எஸ் இல்லை, RHMP என்று நான் அறிந்துகொண்டது இப்போது எனது கழுத்து வலிக்கு வைத்தியம் செய்ய அவரிடம் போனபோதுதான். அதே மேட்டுப்பாளையத்தில் வெண்மணி மன்றத்தின் அருகிலிருந்து ஒரு ஓட்டு வீடுதான் கிளினிக். காலையில் போனபோது அப்பாவும் உடன் வந்தார். அப்போது ஹெர்குலிஸ் சைக்கிள்தான் என் வாகனம். அப்பா என்னை வைத்து டபுள்ஸ் ஓட்டியதாக நினைவு. சுடுகாட்டு மேட்டில் மட்டும் இறங்கி பிறகு ஏறிக் கொண்டிருந்தேன்.
என் கழுத்தை பரிசோதித்துவிட்டு சிதம்பரம் டாக்டர் உச்சுக் கொட்டினார். 'என்ன கண்ணு, உனக்கு எப்படி இது வந்துச்சு?' என்றார். என் முதுகுப் பக்கமாய் அவர் நின்றிருந்தார். எனக்கு எதுவும் புரியவில்லை. ''பாருங்க முருகேசு, இந்த கொப்பளந்தான். எங்க இருக்குப் பாருங்க '' எனறு அப்பாவிடம் சொல்லியபடியே என் பின்னங்கழுத்தின் நடுவில், முதுகெலும்பின் முனையருகே விரலை லேசாக வைத்தார். ஒரே நொடியில் வலி உடலெங்கும் சுண்டி ஓடியது. உடலை நான் குலுக்கியிருக்க வேண்டும். விரலை எடுத்துவிட்டார். சற்று நேரம் கவனமாக பரிசோதித்தார். அந்த இடத்தை சுற்றி கவனமாக விரலால் லேசாகவும், சற்று அழுத்தமாகவும் அழுத்தி வலித்தால் சொல்லும்படியாக சொன்னார். வலித்தபோதெல்லாம் நான் சொல்லாமலே அவருக்கு தெரிந்துவிட்டது. ''இதுக்கு பேரு ராஜபிளவி. இந்த கொப்பளம் முதுகெலும்போட டிப்புல தொடங்கி, அதோட வேர் ஆழமாகி எலும்புக்குள்ள போயிடும். அந்த காலத்திலே இதுக்கு வைத்தியமே கெடையாது. இப்பல்லாம் டாக்டருங்க ஆபரேஷன் செய்யறாங்க. ஆனா அதுவும் காலத்துக்கு தொந்தரவுதான். நல்ல பழுக்க வெச்சு வேரோட எடுத்துட்டம்னா ஒரு பிரச்சினையுமில்ல'' என்று சொன்னவர் மாலையில் வருமாறு அனுப்பிவைத்தார். அவர் கொடுத்த வலி நிவாரணியால் சாயங்காலம் வரையில் வீட்டில் ''அந்நியன்'' படித்துக்கொண்டிருந்தேன்.
மாலையில் கிளினிக்கிற்கு சென்றபோது, அம்மியில் ஏதோ ஒரு தளையை அரைத்துக்கொண்டிருந்தார். அப்பாவிடம் ''வெள்ளை ஊமத்தை முருகேசு''என்று சொன்னவர் விழுதாய் அரைபட்டிருந்த ஊமத்தையை எடுத்து எனது கொப்புளத்தின் மீது கவனமாக பூசினார். ஊமத்தையின் நெடி பரவ முதுகில் சில்லென்றிருந்தது. கையை கழுவிக் கொண்டு ஸ்பிரிட் விளக்கை எடுத்துக் கொளுத்தினார். அப்போது டாக்டர்கள் ஊசிகளை பயன்படுத்துவதற்கு முன்பு ஸ்பிரிட் விளக்கில் சூடுபண்ணுவதுண்டு. சன்னமாய் அலாவுதீன் விளக்கு போல இருக்கும் அந்த ஸ்பிரிட் விளக்கு. மேசையின் மீது வைத்திருந்த கித்தானை எடுத்து கத்திரியில் சதுரமாக நறுக்கினார். உள்ளங்கை அளவுக்கும் சற்று சிறியதாக இருந்தது. பிறகு ஒரு இடுக்கியால் அந்த கித்தானை பற்றிக்கொண்டு எரியும் சுடரில் காட்டினார். மெல்ல கித்தான் கருகி சுருங்கியது. கித்தான் கருப்பாகி பதமானதும், அதை அப்படியே கவனமாக என் முதுகுக் கொப்புளத்தில் பூசப்பட்டிருந்த ஊமத்தை பரப்பின் மீது இருத்தினார். வெதுவெதுப்பாக இருந்தது. நுனிகளை மெல்ல விரலால் அழுத்தி சரிப்படுத்தினார்.
அறை மூலையில் வைக்கப்பட்டிருந்த வாஷ்பேசினில் ( கைகழுவும் வாஷ்பேசினை அவருடைய அறையில்தான் முதன்முதலாக பார்த்திருக்கிறேன். ஒரு சோப்புக் கட்டியும், பக்கத்தில் ஒரு வளையத்தில் சிறிய டவலும் இருக்கும். நோயாளியை பரிசோதித்து முடித்ததும், உடனே சோப்புக் கட்டி கொண்டு கை கழுவிவிட்டு துடைத்துக் கொள்வார் )கைகளை கழுவிக்கொண்டு வந்து நாற்காலியில் அமர்ந்தார். நெற்றியில் வேர்த்திருந்தது. ''நாளைக்கு சாயங்காலம் வரைக்கும் இப்படியே இருக்கட்டும். ஈரம் படாம பாத்துக்கணும். படுக்கறதும் குப்புறமா படுத்துக்க. ஒரு நாளைக்குத்தான். வலி இருக்காது. எங்கயும் வெளிய போகவேணாம்'' என்று அறிவுறுத்தினார்.
மறுநாள் மாலையில் அவரை சந்திப்பதற்கு செல்வதற்கு முன்பு ''அந்நியனை'' படித்து முடித்திருந்தேன். அம்மா அவ்வப்போது முதுகுக் கொப்புளத்தின் நிலைமையை சரிபார்த்துக்கொண்டாள். ''நல்லா பழுத்து நிக்குது.'' என்று திருப்தியாய் சொன்னபோது ''இத என்ன பண்ணுவாங்க?'' என்று சாதாரணமாய் கேட்டேன். ''போய் பாரு. என்ன பண்ணாங்கண்ணு வந்து சொல்லு'' என்று லேசான சிரிப்புடன் அம்மா சொன்னபோது எனக்கு புரியவில்லை.
டாக்டரிடம் என்னை விட்டுவிட்டு அப்பா ''டாக்டர் செளண்டம்மன் கோயில் வரைக்கும் போயிட்டு வந்தர்றேன். இருக்கட்டும்'' என்று போய்விட்டார். வேறு யாரோ ஒரு நோயாளியை டாக்டர் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அவருக்கு மருந்தெழுதி அனுப்பியதும் என்னை உள்ளே அழைத்தார். சட்டையை கழற்றி வைத்துவிட்டு உட்கார்ந்தேன். என் முதுகு பக்கமாய் வந்து நின்றவர் கொப்புளத்தை கூர்ந்து பார்த்தார். ''GOOD, நல்லா பழுத்திருக்கு தம்பி.'' என்றவர் நன்கு காய்ந்து தோலோடு தோலாக ஒட்டிக்கிடந்த கித்தான் துண்டின் ஒரு நுனியை தன் விரல் நகத்தால் சுரண்டியபடியே என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். ''எதுக்காக நீ மதுரைக்கு போன? கோவிலுக்கு போனயா? பஸ்ல இப்ப என்ன சார்ஜ் வாங்கறாங்க?'' என்று ஏதோதோ சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தார். நானும் என்ன நடக்கப் போகிறதோ என்ற ஒரு எதிர்பார்ப்புடன் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். டாக்டர் என்னவோ நான் எதிர்பார்க்காத ஒன்றை செய்யப் போகிறார் என்று என் உள்ளுணர்வில் பட்டது. மனம் மொத்தமும் கித்தான் நுனியை சுரண்டும் அவர் விரல்களிலேயே குவிந்திருந்தது.
ஒரு கணம் என் மனமும் அவர் விரல் நுனியும் சந்தித்துக் கொண்டதுபோல நான் சுதாரித்துக் கொள்ள இருந்த நொடியில் ''அவ்வளவுதான்'' என்று சொன்னபடியே விசைகொண்டு கித்தானை இருவிரல் நுனிகளில் வலுவுடன் பற்றியிழுத்தார். ஒரு நொடிக்கும் சற்று குறைவான பொழுதுதான். முதுகுத் தண்டில் வலி சொடுக்கி மறைந்தது. இருட்டிக்கொண்டு வந்தது. உடல் மொத்தமும் வேர்த்து கண்ணிருண்டு நான் மயங்கிவிட்டேன்.
ரணத்தின் வலி என்னை எழுப்ப அரை மணி நேரத்திற்குப் பிறகு நான் விழித்துக்கொண்டபோது அப்பா என்னருகில் உட்கார்ந்திருந்தார். நான் குப்புறப் படுத்துக்கிடந்தேன். டாக்டர் இன்னமும் என் முதுகில் என்னவோ செய்துகொண்டிருந்தார். டிஞ்சரின் மணம். முதுகுக் கொப்புளத்தின் உட்புற ரணத்தை டிஞ்சர் டெட்டால் கொண்டு அவர் சுத்தம் செய்திருக்கவேண்டும். வலியும் எரிச்சலுமாய் என் முதுகே கொந்தளித்துக் கிடந்தது. எனக்கு அதை கவனிக்கவே பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் கண்மூடிக் கிடக்கவேண்டும்போல மயக்கமாய் இருந்தது. ''தம்பி, அவ்வளவுதான். முடிஞ்சுது. இனி ஒண்ணும் பிரச்சினையில்ல..'' என்று டாக்டர் என் காதருகில் சொல்வது கேட்டது. அப்போதும் நான் விழித்துக் கொள்ளவேண்டாதவனாய் கண் மூடியபடிதான் கிடந்தேன். அப்பா மெல்ல என் தலையில் கை வைத்தார். என் கண்ணீரை அவர் துடைத்தார். ஒன்றுமே சொல்லாமல் தலையை தடவியபடியே இருந்தார். அம்மாவை உடனடியாக பார்க்கவேண்டும்போல ஒரு பதற்றம் உள்ளுக்குள்.
''எவ்வளவு பெரிய வேர் பாருங்க முருகேசு..'' என்று டாக்டர் சொன்னதும் நான் கண்களைத் திறந்து பார்த்தேன். மேசையின் ஓரத்தில் இருந்த அவரைவிதை வடிவிலான அந்த பீங்கான் கோப்பை சுட்டிக் காட்டினார் டாக்டர். ரத்தமும் நிணமுமாய் பஞ்சுக் கற்றைகள். நடுவில் அந்த கித்தான் பட்டையுடன் சுண்டு விரலளவு நீண்ட ஒரு சதைத் துண்டு. அது சதைத் துண்டுதானா? சீழும் நிணமுமாய் ஒரு ஆணியின் வடிவத்தில் கிடந்தது. என் முதுகில் இறங்கிய ஆணி. முதுகுத் தண்டின் நுனியில் இறங்குவதற்குள் பிடுங்கப்பட்ட ஆணி. ''இந்தளவு இப்ப முதுகில ஓட்டை இருக்குது. அதான் சுத்தம் பண்ணி காட்டன் வெச்சு டிரஸிங் பண்ணிருக்கேன். ரெண்டு நாளுக்கொரு தடவை சுத்தம் பண்ணி காய வைக்கணும். தண்ணி படாத பாத்துக்கணும்.'' என்று டாக்டர் மருந்துகளை எழுதிக் கொண்டிருந்தார்.
மருந்தும் மாத்திரைகளும் வலியில்லாமல் செய்து அந்த ரணம் காய்ந்து மூடிக்கொண்டபோதும், ஒவ்வொரு முறையும் டாக்டர் அந்த ரணத்தை சுத்தம் செய்த தருணங்களின் வலி இப்போதும் என் உள்ளங்கால்களை கூசச் செய்கிறது. டெட்டாலின் மணத்துடன் காட்டன் துண்டுகள் ரணத்தின் உட்பகுதியில் ஏற்படுத்திய எரிச்சலும் வலியும் ஒவ்வொரு முறையும் என்னை மயங்கச் செய்துள்ளன.
இப்போதும் என் கழுத்துப் பகுதியில் அந்த தளும்பு லேசான பள்ளத்துடன் இருக்கிறது. பல முறை இந்த அனுபவத்தை நான் என் நண்பர்களிடம், மாற்று மருத்துவம் குறித்த உரையாடல்களின்போது சொல்லியதுண்டு. பலரும் ''முரட்டு வைத்தியம்'' என்று இதை சொன்னதுண்டு. இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற கட்டிகளை எளிய அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றிவிடலாம். ஆனாலும் ஊமத்தையிலையையும் கித்தான் துண்டையும் கொண்டு வேரோடு அந்த பிளவியை அகற்றிய சாகசமும், அனுபவங்களின் வழியாக முதிர்ச்சி கொண்ட டாக்டர் சிதம்பரத்தின் சிகிச்சை நுட்பமும் இன்றும் எனக்கு வியக்கத்தக்கதாகவே உள்ளன.
0
சிதம்பரம் டாக்டர் எனக்குத் தெரிந்து நான்கு வீடுகளில் குடியிருந்தார். பெருமாநல்லூர் சாலை மேட்டுப்பாளையத்தில் கருணா நிட்டிங் அருகில் ஒரு வீடு. பிறகு காலனி பேருந்து நிறுத்தத்திற்கு சற்று தள்ளி கிழக்குப் பார்த்த ஒரு ஓட்டு வீடு. கொஞ்சநாட்கள் காட்டன் மில் பக்கமாய் குடியிருந்தார். பிறகு சொந்த வீடு அவர் கட்டிக்கொண்டது எங்கள் தெருவிலேயே. நான் பார்த்த வரையில் இந்த நான்கு வீடுகளும் ஒரே அமைப்பில் இருந்தன. அல்லது அப்படி ஒரு அமைப்பை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கவேண்டும். வீட்டின் முன்னறை அவர் நோயாளிகளைப் பார்க்கும் அறையாக அமைந்திருக்கும். அறையின் மூலையில் ஒரு மேசை, அழகான ஒரு வெண்ணிற விரிப்புடன். மருந்து புட்டிகளும், ஆங்கிலப்புத்தகங்கள் சிலவும் இருக்கும். டாக்டரின் நீலநிற ஹீரோ பேனாவும் அங்கேதான். மேசையை ஒட்டி ஒரு நீண்ட சற்று உயரமான பெஞ்சு போடப்பட்டிருக்கும். வாசல் கதவு, உள்ளறைகளின் கதவுகள், ஜன்னல்கள் என்று எல்லாமே திரைகள். திரைகளிட்ட ஜன்னல்களையும் கதவுகளையும் கொண்ட வீடு என்பது பெரும் அதிசயம் அப்போது.
டாக்டரை எந்த நேரத்தில் பார்த்தாலும் ஒன்று போலவேதான் இருந்தார். வெண்ணிற உடை. சுத்தமாக மழிக்கப்பட்ட முகம். பொருத்தமான தீர்க்கமான கண்ணாடி. கோல்ட்பிளேக் சிகரெட்டின் லேசான வாசனை. அவரைப் போலவே அவருடைய அறையும், கிளினிக்கும், சைக்கிளும் மிகச் சுத்தமாக இருக்கும்.
டாக்டரின் மனைவி பார்வதி. அவரை முதன் முறையாக நான் பார்த்தபோது என்னால் அவரை டாக்டருடைய மனைவி என்று நம்பவில்லை. என் மனம் அப்படி நம்புவதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. பெரும்பாலும் கிளினிக்கில் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அல்லது காலை நேரத்தில் எங்கள் தெருவுக்கு வரும்போது என்றுதான் அவரை பார்த்திருக்கிறேன். வீட்டுக்கு போய் சந்திப்பதற்கான வாய்ப்பு அதுவரையில் ஏற்பட்டதில்லை. மேட்டுப்பாளையம் வீட்டில் இருந்தபோது ஒரு நாள் காலையில் அப்பாவுடன் சென்ற சமயத்தில்தான் வீட்டுக்கு செல்ல நேரிட்டது. '' வாங்கண்ணா.. '' என்று திரைச் சீலையைத் தள்ளிக் கொண்டு பார்வதியம்மா வந்தபோது நான் ஆச்சரியமாக பார்த்தேன். அப்படி ஒரு உருவத்தை நான் அதுவரை பார்த்ததில்லை. குண்டு என்றால் அப்படியொரு குண்டு. பெரிய முகம், பெரிய உடல் என்று அந்த அறை வாசலை அடைத்துக் கொண்டு நின்றார். '' நீதான் பாலுவா.. உங்க டாக்டர் எப்பப் பாத்தாலும் உன்னப் பத்திதான் சொல்லிட்டே இருப்பாரு.. நல்லா படிக்கிறேன்னு எம் பசங்ககிட்ட உன்ன சொல்லி சொல்லித்தான் திட்டுவாரு..'' என்று என் தலையை தடவினார். எனக்கு சங்கோசமாக இருந்தது. வெறுமனே தலையை ஆட்டினேன். பிஸ்கெட்டும் சூடாக ஹார்லிக்ஸூம் தந்தாள்.
டாக்டருக்கு மூன்று பிள்ளைகள், ஒரு மகள். மூத்தவன் சண்முகம். பாலிடெக்னிக் ஏதோ படித்ததாய் நினைவு. நிச்சயம் டாக்டர் விரும்பிய படியான படிப்போ வேலையோ இல்லை. இரண்டாவது மகன், அன்பு. கொஞ்சம் அலட்டல் பேர்வழி. கச்சிதமான உடை, அசட்டையான பேச்சு என்று இருப்பான். பத்தாம் வகுப்புக்குப் பிறகு கொஞ்சம் அக்கறையாகப் படித்தான். தெருவில் கிரிக்கெட் விளையாடும்போது பிரமாதமாக பந்து போடுவான். sportstar போன்ற புத்தகங்களை அவனிடம்தான் முதலில் பார்த்தேன். மூன்றாவது வெங்கட். எனது தம்பி வெங்கட்டுடைய வகுப்பில்தான் படித்தான். அவன் அம்மா மாதிரி. கவலையில்லாமல், வஞ்சகமில்லாமல் வளர்ந்தவன். அன்புக்கும் வெங்கட்டுக்கும் நடுவில் சிவகாமி. டாக்டருக்கு பெண்வேடம் போட்டமாதிரியே இருப்பாள். தன் குழந்தைகள் யாருக்குமே சரஸ்வதி கடாட்சம் இல்லை என்ற பெரும் குறை உண்டு டாக்டருக்கு. அதனால் என்னவோ என்னை தேவைக்கதிகமாக செல்லம் கொஞ்சுவார். ''உன்ன மாதிரிதான் பாலு பசங்க இருக்கணும். நல்லா படிக்கணும். படிச்சாதான் நாளைக்கு நல்லா இருக்க முடியும். எத்தனை படிக்கணுமோ நீ படி. விட்றாதே. உங்கப்பா உன்ன தறிக்குழில எறக்கிறலாம்னு சொன்னா கேக்காத. நா உன்ன படிக்க வெக்கறேன்'' என்று என் தோளைப் பற்றிக்கொண்டு பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்.
ஒரு நாள் மாலையில் அம்மாவும் அப்பாவும் டாக்டர் வீட்டுக்குப் போய்விட்டு வந்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். டாக்டருக்கும் பார்வதியம்மாவுக்கும் பெரும் சண்டை என்பதுதான் மையம். எனக்கு புரியவேயில்லை. அந்த வீட்டிலும் சண்டையெல்லாம் வரும் என்று என்னால் அந்த வயதில் நம்ப முடியவில்லை. அதைவிட பெரிய அதிர்ச்சி டாக்டர் குடிப்பழக்கம்தான் பிரச்சினை என்பது. டாக்டர் மது அருந்துவார் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டதிலிருந்து அது சாதாரண சண்டையில்லை, ரணகளம் என்று புரிந்துகொள்ள முடிந்தது. அன்று இரவு என்னால் வெகுநேரம் தூங்க முடியவில்லை.
மறுநாள் காலையில் நான் எழுந்தபோது டாக்டர் வீட்டில் இருந்தார். எப்போதும் காலை நேரத்தில் நான் பார்க்கும் டாக்டராக அவர் இருக்கவில்லை. நேராக பார்க்கும் பார்வையில்லை. தெளிவான முகம் இல்லை. அம்மா கொடுத்த தேநீரை வெகு நேரம் கையிலேயே வைத்திருந்தார். நேற்றைய நாளின் தொடர்ச்சி போல உரையாடிக்கொண்டிருந்தனர் மூவரும். பார்வதியைப் பற்றியும், மகன்களைப் பற்றியுமான தன் வருத்தங்களை உடைந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். அம்மாவும் அப்பாவும் அவருடைய குடிப் பழக்கத்தை தவிர்ப்பது குறித்து அறிவுறுத்தினார்கள்.
அந்த நாளைத் தொடர்ந்து வந்த நாட்களில் டாக்டர் சிதம்பரத்தை திரும்பவும் என்னால் டாக்டராக பார்க்க முடியவில்லை. தொடர்ந்து வீட்டில் சண்டை. மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்து புலம்புவது. கிளினிக்கிற்கு செல்லாமல் பகலிலும் குடித்து விட்டு கிடப்பது என்று அவருடைய பொழுதுகள் மாறத் தொடங்கின. ஒரு நாள் காலையில் அவரை பார்த்தபோது நெற்றியிலும், வலது புறங்கையிலும் காயம் இருந்தது. முதல் நாள் நடந்த சண்டையில் பார்வதியம்மாவும், முதல் மகனும் அவரை அடித்திருக்கிறார்கள். நெற்றியிலிருந்த வீக்கத்தைப் பார்த்தால் பலத்த அடிபோல இருந்தது.
இனி தான் அந்த வீட்டுக்குப் போகப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் டாக்டர். இரவு வெகுநேரம் நடந்த சண்டையை தெருவே நின்று வேடிக்கைப் பார்த்திருக்கிறது. பெரியவன் ''இந்த ஆளு வீட்டுக்குள்ள வந்தா கொன்னுருவேன்'' என்று கத்தியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு பெரும் ரகளை செய்திருக்கிறான். பார்வதியம்மாதான் உள்ளே நுழைய இருந்தவரின் காலில் விறகுக் கட்டையால் அடித்திருக்கிறாள். அங்கே ஒரு ஜீவன்கூட தனக்கு ஆதரவாய் இல்லை, அங்கே எனக்கென்ன வேலை என்று மேட்டுப்பாளையத்தில் கிளினிக்கோடே தங்கிவிடுவதாக முடிவெடுத்திருந்தார். ''தனியா தங்கிட்டா எந்த நேரத்துலயும் குடிச்சிட்டு கெடக்கலாம். கேக்கறதுக்கு யாரும் இருக்கமாட்டாங்கல்ல.'' என்று அம்மா முகத்தைக் கடுப்பாய் வைத்துக்கொண்டே கேட்டாள். டாக்டருக்கு அது ரசிக்கவில்லை. வெடுக்கென்று எழுந்து போய்விட்டார். ''நீ ஏண்டி..அந்த ஆளே அடிய வாங்கிட்டு நொந்துபோயி வந்துருக்காரு.'' என்று பல்லைக் கடித்தார் அப்பா. ''தெனந்தெனம் குடிச்சிட்டு வீட்டுக்குள்ள வந்தா எந்த பொம்பளதான் பேசாம பாத்துக்கிட்டு இருப்பா?'' என்றாள் அம்மா.
அதற்குப் பிறகு டாக்டர் எங்கள் வீட்டுப் பக்கமே வரவில்லை. அப்பாவும் அம்மாவும் எப்போதாவது அவரைப் பற்றி பேசிக்கொண்டார்கள். ஒரு மாதத்திற்கு பிறகு அப்பாவுடன் மேட்டுப்பாளையம் போயிருந்தபோது வெண்மணி மன்றத்தின் அருகிலிருந்த கிளினிக்கிற்கு அழைத்துப் போனார். ஒரு டாக்டரின் கிளினிக் மாதிரி இல்லாமல் சாமியாரின் குடில் போல இருந்தது. ஓடு வேய்ந்த வீடு. முன்னறையாய் ஓலை வேய்ந்த பகுதி. நந்தவனம் போன்று பூச்செடிகளும் மூலிகைகளும் நிறைந்த வாசல். கூரையில் படர்ந்த மயில் மாணிக்கம். கண்ணில் ஒற்றிக் கொண்டதும் சில்லென்று உணர்வுதரும் நந்தியாவட்டை. கையகலத்தில் செம்பருத்தி. நிறைய தொட்டிச் செடிகள். அந்த இடமே குளுமையாக இருந்தது. அப்பாவின் அழைப்புக் குரல் கேட்டு உள்ளிருந்து வந்தவரை என்னால் நம்பவே முடியவில்லை. வெண்ணிற உடைக்கு பதிலாக இடுப்பில் காவி வேட்டி. முகத்தை மறைத்துக்கொண்டு அடர்த்தியான வெள்ளை தாடி. கழுத்தில் ருத்ராட்ச மாலைகள். நெற்றியில் அடர்த்தியாய் சந்தனப்பட்டை. எப்போதும் போல என்னை பக்கத்தில் இழுத்து வைத்துக்கொண்டார். அவரிடம் எப்போதும் இருக்கும் மருந்து வாசனைக்கு பதிலாக விபூதி வாசனை. வெகுநேரம் என்னால் அவர் பக்கத்தில் இருக்கமுடியவில்லை. அப்பாவிடம் நகர்ந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பிறகும்கூட அந்த வாசனை என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது.
மெல்ல மெல்ல எங்கள் தெருவும், வீடும் டாக்டரை மறக்கத் தொடங்கியிருந்தன. வெகு சில சமயங்களில் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொள்ளும்போது அவர் பெயர் காதில் விழும். ஆனால் அவரைப் பற்றிய பேச்சு வந்தவுடனே அம்மாவுக்கும் அப்பாவுக்குமான உரையாடல் விவாதமாகி சண்டையில் முடியும். சில மாதங்கள் கழித்து மளிகைக்கடை பாய் டாக்டரைப் பற்றி சொன்ன தகவல்கள் அதிர்ச்சியைத் தந்தன. சாந்தி தியேட்டர் அருகிலிருக்கும் சாராயக் கடை வாசலில் நினைவிழந்து கிடந்தவரை மளிகைக்கடை பாயும் ராசப்பனும்தான் கிளினிக்கில் கொண்டுபோய் போட்டிருக்கிறார்கள். அப்பா தலையைக் குனிந்து கேட்டுக்கொண்டிருந்தார். அதற்குப் பிறகு அவர் சாராயக்கடை வாசல்களில் அல்லது கிளினிக் வாசலில் குடிபோதையில் கிடப்பது பற்றிய செய்திகள் தொடர்ந்து சாதாரணமாய் உலவின. என்னால் அவரை அப்படியெல்லாம் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. அவர் மீதான அம்மாவின் வெறுப்பு வீட்டில் அவரைப் பற்றி பேசவே கூடாது என்றானது. எனக்கு அவரை அப்படி வெறுக்கவோ ஒதுக்கவோ முடியவில்லை. முதுகுத் தளும்பு கையில் தட்டுப்படும்போதெல்லாம் ஊமத்தை மணத்துடன் அவருடைய குரலும் சேர்ந்துகொண்டது. பார்வதியம்மாவிடம் ஒரு முறை அப்பா, நடவைவீட்டு நாச்சிமுத்து, அய்யாவு, மளிகைக் கடை பாய் என்று எல்லோரும் போய் பேசியிருக்கிறார்கள். பெரியவனும் பார்வதியம்மாவும் பிடிவாதமாய் இருந்திருக்கிறார்கள். வீட்டையும் நிலத்தையும் பார்வதியம்மாவின் பெயருக்கு மாற்றித் தந்தால் வீட்டுக்குள் அனுமதி பற்றி யோசிக்கலாம் என்று கறாராய் சொல்லிவிட்டார்கள். ''அந்ததாளுக்கு குடும்பத்த விட சொத்துதான முக்கியம். சொத்தே சோறு போடட்டும்'' என்று பார்வதியம்மா சொன்னதை அப்பா வருத்தத்துடன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
அன்று மாலை நூலகத்திலிருந்து சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இந்தியா ஹவுஸ் அருகில் இருக்கும் கருப்புசாமி பெட்டிக்கடையில்தான் கணையாழி கிடைக்கும். சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு கருப்புசாமியிடம் பேசிக்கொண்டிருந்தேன். ''பாலு'' என்று குரல் கேட்டுத் திரும்பினேன். அவரை உடனடியாக என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. தளர்ந்த உடல். அழுக்கான ஒரு வேட்டியும் அரைக்கை சட்டையும். கறுத்துக் கிடந்த முகத்தில் அழுக்கான தாடி. இடதுபக்கம் உடைந்த சில்லுடனான கண்ணாடி. ''பாலு, தெரியலையா?'' என்று என் கையைப் பற்றினார். முதுகெலும்பில் மின்னல் ஓடியது. கால்கள் நடுங்கின. என்னால் அந்த கைகளை உடனடியாக உணர்ந்துகொள்ள முடிந்தது. எப்போதும் என் நாடியை அறியும் அந்த தொடுகையை என்னால் இப்போது தாங்க முடியவில்லை. மெல்ல கைகளை விடுவித்துக்கொண்டேன். என்ன பேசுவதென்று தெரியவில்லை. அந்த ஒரு கணமும், சூழலும் அபத்தமாக உறைந்து என்னை தடுமாறச் செய்தன. ''அப்பா..'' என்று சொல்லத் தொடங்கியவரின் பார்வை சட்டென்று திரிந்தது. சொல்ல எண்ணியதை அப்படியே விழுங்கியவர் போல, வருத்தம்கொண்வர்போலத் தலையை ஆட்டினார்.
''சில்லறை ஏதாச்சும் இருந்தா குடேன். சாப்படவே இல்லே. பசிக்குது'' என்று தலையைக் குனிந்துகொண்டு, எனக்கு மட்டுமே கேட்கும்படியான தணிந்த குரலில் கேட்டார். பேருந்து நிலையத்தின் இரைச்சலில் எனக்கு அவர் சொன்னது என் மூளையை எட்ட சில கணங்களாகின. கையை தன் வயிற்றருகே ஏந்தியிருந்தார்.
என்னருகில் இப்போது கையேந்தி நின்றிருப்பது ஒரு பிச்சைக்காரன் என்ற உணர்வை சட்டென்று உதற முயன்றவனாய் கணையாழிக்காக கையில் வைத்திருந்த ஆறு ரூபாயை அப்படியே அவர் கையில் வைத்தேன். அவருடைய கண்கள் நாணயங்களைக் கண்டதும் ஆர்வமாய் மின்னின. நம்பமுடியாதவராய் என்னை நிமிர்ந்து பார்த்தார். அவருடைய முகத்தில் அப்போது நான் கண்ட சிரிப்பும், நைச்சியமும் அப்போது அவர் பார்வையிலிருந்த கூர்மையும் வெகு நேரத்திற்கு எனக்குள் உறைந்திருந்தன. சட்டைப் பையில் நாணயங்களைப் போட்டுக்கொண்டு தலையை ஆட்டிவிட்டு திரும்பி நடந்தார். நஞ்சப்பா பள்ளிக்கு செல்லும் பாதையில் அவர் சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றேன். நடையில் அந்த வேகம் ஆச்சரியமாக இருந்தது. ''தலைவரு நேரா எங்க போவாருன்னு தெரியுமா?'' என்று கருப்புசாமி சிரித்தார். ''எனக்கு தெரியவேண்டான்னே..'' என்று மெதுவாக சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தேன்.
டாக்டர் என்னிலிருந்து காணாமல் போயிருந்தார். களுத்திலிருந்த ராஜபிளவியின் தளும்பை விரல்கள் அனிச்சையாகத் தடவின.
(தமிழினி)
அன்புள்ள கோபால்
ReplyDeleteசித்திரக்கூடம் ராஜபிளவை பகுதியை படித்தேன். டாக்டரிடம் ஆன அம்மாவின் வெறுப்பு வீட்டில் இருக்கும் ஆண்களுக்கும் ஒரு எச்சரிக்கை தான் என்பதையும், நம் உடலானது, கருணையோடும் அன்போடும் தொடுகின்ற எந்த கரங்களையும் மறப்பதில்லை என்பதையும் புரிந்துகொண்டேன். போதையில் இருந்து வெளிவர முரட்டு சிகிச்சை தேவை. ஆனால்,அதை, மற்றவர்களுக்கு செய்பவர்கள் தங்களுக்கு செய்து கொள்ள முடியவில்லை.
சித்திர கூடத்தின் இந்த பகுதிக்கு என் மனதில் ஒரு வண்ணத்தை தர வேண்டுமென்றால் ராஜபிளவையின் ரத்தம் தோய்ந்த கரு நீல நிறத்தை த் தருவேன்.
வாழ்த்துக்களுடன் ஹரி