2
அன்னையின் சித்திரங்களும் சாதியின்
முகங்களும் - சுரேஷ் பிரதீப் சிறுகதைகள்
0
சமகால தமிழ்ச் சிறுகதைகளில்
நம்பிக்கையளிக்கும் விதத்தில் எழுதி வரும் சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றிய
கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.
சென்ற பகுதியில் தூயனின் கதைகளைப் பற்றி அமைந்திருந்தது.
‘ஒளிர்
நிழல்’ நாவலின் வழியாக தமிழ்ச் சூழலில் கவனம் பெற்ற சுரேஷ் பிரதீப் தொடர்ந்து
ஊக்கத்துடனும் தெளிவுடனும் எழுதி வரும் இளம் எழுத்தாளர்.
இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல்,
ஒரு கட்டுரைத் தொகுப்பு வெளியாகியுள்ளன.. அவரது
சிறுகதைகளைக் குறித்தது இந்த இரண்டாம் பகுதி.
0
பதினைந்து கதைகளைக் கொண்ட சுரேஷ்
பிரதீப்பின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘நாயகிகள் நாயகர்கள்’ 2017ம் ஆண்டு
வெளியானது. அடுத்த ஆண்டில் வெளியான இரண்டாவது தொகுப்பு
‘எஞ்சும் சொற்கள்’ பனிரெண்டு கதைகளைக் கொண்டிருந்தது.
இரண்டு தொகுப்புகளிலும் உள்ள கதைகளின்
அடிப்படையில் சுரேஷ் பிரதீப்பின் கதையுலகில் இரண்டு மையங்கள் தன்னிச்சையாகவே
அமைந்திருப்பதை எளிதில் உணரமுடியும்.
ஒன்று, அம்மாவின் பல்வேறு சித்திரங்கள்.
அடுத்தது, சாதியும் சாதியம் சார்ந்த
விவாதங்களும்.
1
அன்னையின் வெவ்வேறு சித்திரங்கள்
சுரேஷ் பிரதீப்பின் கதைகளை ‘அம்மா’வின்
வெவ்வேறு சித்திரங்கள் என்று சொல்லமுடியும்.
உயிர்களின் முதன்மையான தலையாய உறவான ‘அம்மா’ கதைகள் பலவற்றையும்
ஆக்கிரமித்திருக்கிறது. இதுவரையிலும் வெகுவாக சொல்லப்பட்ட
உணர்ச்சிக் கொந்தளிப்பும் மனநெகிழ்வும் மிக்க புனித நிலையில் அல்லாமல் நடைமுறை
யதார்த்தத்துடன் ‘அம்மா’க்களை முன்னிறுத்துகின்றன இக்கதைகள். ‘அம்மா’வின் மீதான பாசம் ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு பரிமாணங்களை
கொள்கிறது. உருமாறுகிறது.
‘பெரியம்மா வீடு’ கதையில் உள்ள சித்திரம் ‘அம்மா’ இல்லாதவனுக்கு நிகழும்
ஒன்று. ‘அம்மா’வைத் தேடுவது என்பது பாதுகாப்பையும்
ஆறுதலையும் அடைக்கலத்தையும் தேடுவது.
அதேசமயத்தில், தன் மகன் மீது அவனது
மனைவி செலுத்த நினைக்கும் ஆளுமை அவளது இருப்பை காலிசெய்யும் துக்கம் அவளை பெற்ற
மகன் மீதே வன்மம் கொள்ளச் செய்கிறது. இதுவரையிலும் மகன்
உணர்ந்த பாதுகாப்பு என்கிற அம்சத்தை அவளே பயங்கரமாக மாற்ற முடிகிறது. (குற்றுளம்)
‘அவள் என் மீது கொண்டிந்தது அன்பென நடிக்கும் முற்றதிகாரம் என நான்
நன்கறிவேன். அவளும் அதை அறிவாள்.’
‘ஒப்புக்கொண்டு அடிபணியாவிட்டால் இருவரில் ஒருவரின் இறப்பு உறுதி என்பது
வரையில் என்னை என் வார்த்தைகளைக்கொண்டே இழுத்து வந்து, தன்
மதிப்பும் சுயாணவமும் துளியும் எஞ்சிவிடாதவாறு என்னை வீழ்த்தியபின், இறந்த உடலுக்குச் சிகிச்சை தொடங்குவாள். அந்த
ரண சிகிச்சையை, இல்லாத ஒன்றிலிருந்து என்னைத்
திரட்டிக்கொண்டு மீளும்போது நிறுத்துவாள்.’
ஆனால், இந்த வதையை அனுபவிக்கும் பிள்ளையால்
அவளிடமிருந்து வெறுத்து ஒதுங்கிவிட முடிவதில்லை.
அவளது போக்கைக் கண்டு மனதார அவள் மீது
வெறுப்பும் வருத்தமும் கொண்டபோதிலும் மற்றொருவர் அவளைப்பற்றி குறைசொல்ல
அனுமதிப்பதில்லை. அவள் இல்லாமல் போகும்போது உருவாகும் வெற்றிடத்தை தாங்க முடிவதில்லை.
அந்த வெற்றிடத்தை ‘மனைவி’யால் நிரப்பமுடியாது என்பதை அவன்
நன்கறிவான். ஆனால், ‘மனைவி’
உடனடியாக அந்த இடத்தை பூர்த்திசெய்ய விழைகிறாள். அதுவரையிலான
இடைவெளியை இல்லாமல் ஆக்க முயல்கிறாள்.
காலங்காலமாக சொல்லப்பட்டுவரும் கதைதான்
எனினும் மூவருக்கும் இடையிலான அகமோதல்களையும் அவற்றினால் சிதைந்தும் சேர்ந்தும்
உருமாறும் உறவு நிலைகளையும் இக்கதை துல்லியமாகக் காட்டியுள்ளது.
‘சொட்டுகள்’ கதையில் காட்டப்பட்டிருக்கும் அம்மாவுக்கும் மகளுக்குமான
முரண் உறவு தலைமுறை இடைவெளியினாலும் இன்றைய நடைமுறைகளினால் ஏற்பட்டிருக்கும்
விரிசலினாலும் உண்டான ஒன்று. இக்கதையில் வெளிப்படும்
அம்மாவின் நிறைவேறாத விருப்பமும் வளரும் மகள் அம்மாவின்மேல் கொள்ளும் எரிச்சலும்
இயல்பானவை.
‘கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும்’ கதையில் வரும்
அம்மாவின் சித்திரம் வெகு நுட்பமானது. ‘அப்பாவின் தலையில்
இருக்கும் நரைமுடிகளை அம்மா அழகாகப் பிடுங்குவாள்.’ ‘அம்மா
அவரின் (அப்பாவின்) கண்ணாடிப்
பேச்சுகளை, நெஞ்சில் பொங்கும் அழுகையையும் ஆற்றாமையையும்
பற்களில் தேக்கி உதட்டைக் கடித்தபடிக் கேட்டு நிற்பாள்.’ அப்பாவுக்கும்
அம்மாவுக்குமான உறவின் சிக்கல்களும் புதிர்களும் பிள்ளைகளால் அவிழ்க்க முடியாதவை.
ஆனால் அந்த உறவின் சிக்கல்கள் பிள்ளைகளின் உளப்பதிவாகி அவர்களது
குணாதிசயங்களை உருவாக்குவதில் கணிசமான பங்கு வகிக்கின்றன.
வீடு திரும்புகையில் இல்லாத அம்மாவின்
மேல் மகன் கொள்ளும் கேள்விகளும் எண்ணங்களும் வெளியில் சொல்ல முடியாதவை. எவரிடமும் விசாரிக்க
இயலாதவை. அப்படிப்பட்ட வேளைகளில் பிள்ளைகளின் மனம்
அடையும் பதற்றத்தையும் சீற்றத்தையும் சொல்கிற ‘வீட்டில் அம்மா இல்லாதபோது’ கதை
இந்த உளப்பதிவை மிகக் கச்சிதமாக சித்தரித்துள்ளது.
அதேசமயத்தில் அம்மாவின் மீறல்களைப்
புரிந்து அதை ஒத்துக்கொள்ளாமல் எதிர்க்க நேரிடுகையில் புறக்கணிப்பே அதற்கு
பதிலாகக் கிடைக்கிறது. சமூகத்தின் ஒழுக்க நியதிகளுக்காக தவறென்று பிள்ளைகள்
உணர்ந்திருந்தபோதும் வாழ்வின் இருப்பை அத்தகைய ஒழுக்க நியதிகள் ஒருபோதும்
உத்தரவாதப்படுத்துவதில்லை என்பதையே அம்மாக்கள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.
‘பதினோறு அறைகள்’ கதையில் சொல்லப்பட்டுள்ள அம்மாக்களும்
பிள்ளைகளும் உலவும் யதார்த்த உலகில் சமூகமும் வீடும் வெவ்வேறு திசையில்
எதிரெதிராகவே நிற்கின்றன.
சாதியைத் தூக்கிப் பிடிக்கும் அம்மாவின்
போக்கை ‘மாசிலன்’ கதையில் சொல்ல முடிந்த அதே உக்கிரத்துடன் சாதியினால் புறக்கணிக்கப்படும்
வாதையையும் ‘ஆலரசுக்குளம்’ கதையில் சொல்ல முடிந்துள்ளது.
இக் கதைகளில் உள்ள அகவயமான
அலைச்சல்களுக்கும் நிச்சயமின்மைகளுக்கும் தத்தளிப்புகளுக்கும் ‘அம்மா’ என்ற உறவின்
மீதுள்ள விமர்சனங்கள், ஆசை, ஏக்கம் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
2
சுரேஷ் பிரதீப்பின் கதைகளில் உரக்கவும்
அழுத்தமாகவும் விவாதிக்கப்படும் அடுத்த விஷயம் சாதி.
சமூகத்திலிருந்து களையப்பட முடியாமல்
இன்னும் வன்மம் கொண்டிருக்கும் சாதியக் கொடுமைகளைச் சுட்டுவதோடு நின்றுவிடாமல்
சாதியிலிருந்து வெளியேற உதவும் வழிமுறைகளாக முன்வைக்கப்படும் கல்வி, பொருளாதாரம்,
நகர வாழ்வு உள்ளிட்ட பல்வேறு உத்திகளுக்குப் பின்னும்
அதிலிருந்து வெளியேற முடியாமல் திகைத்து நிற்கும் இன்றைய இளைஞர்களின்
தத்தளிப்புகளை கோபங்களை ஆற்றாமைகளை நுட்பமான கேள்விகளை இக்கதைகள் பேசுகின்றன.
அதுவே இக்கதைகளுக்கு கூடுதலான பரிணாமங்களைத் தருகிறது.
‘உலகிலிருந்து நான் வெளியே நிறுத்தப்பட்டிருப்பவன்தான். நான் மட்டுமா? என்னைப் போன்றவரும்தான்.
நாங்கள் வெல்லலாம். வாழலாம். ஆனால் எவ்வுயரத்தில் நின்றாலும் நடுக்கம் அடங்கப் போவதில்லை.’ (வதை) என்ற குரலே பல்வேறு கதைகளிலும் வெவ்வேறு
வகையில் ஒலிக்கிறது. தெளிவின்மையும் மோதல்களும்
சிக்கல்களாலும் நிறைந்த இன்றைய இளைஞர்களின் உளவியலை பகுத்து ஆராய்கின்றன கதைகள்.
உறவுகளிலிருந்தும் கிராமத்திலிருந்தும் முக்கியமாக
சாதியிலிருந்தும் விலகியிருக்க முடிகிறத என்றாலும் அந்த ஆசுவாசம் நிறைவைத்
தரவில்லை. சாதியிலிருந்து விடுதலை என்பது போதாமைகளுடன்
இருப்பதைக் குறித்த சோர்வும் கோபமும் ஆற்றாமையும் வெவ்வேறு விதத்தில்
வெளிப்படுகின்றன.
சாதியத்தின் இரண்டு எதிரெதிர்
எல்லைகளையும் தொட்டிருக்கும் ‘வரையறுத்தல்’ ஒரு முக்கியமான கதை. சாதிய ஒடுக்குமுறையை
உக்கிரமாகச் சொல்லும் பின்கதையுடன் இன்றைய கல்வியும் பிற கருவிகளும் அவ்வகையான
ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை ஒலிக்கச் செய்வதில் உள்ள நடைமுறை முரண்களையும் அதே
அழுத்தத்துடன் சொல்லியுள்ளது.
சாதி சார்ந்த அரசு நடைமுறைகளையும் சாதிய
விடுதலையின் நடைமுறைப் படுத்தலில் உள்ள போதாமைகளையும் பேசுகிற ‘எஞ்சும் சொற்கள்’ சிறுகதையும்
இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.
சற்றே உரத்த குரலென்றாலும் அதில் உள்ள யதார்த்தின் வெம்மை
சற்றும் மட்டுப்படாதது.
அன்னையின் சித்திரங்கள், சாதி சார்ந்த
பகுப்பாய்வுகள் என்ற இரு நிலைகளைக் கடந்து சுரேஷ் பிரதீப் எழுதியுள்ள பிற கதைகளில்
உறவு சார்ந்த சிக்கல்களே மையம் கொண்டுள்ளன.
‘சாதி அழுத்தமும் உறவு சார்ந்த சிக்கல்களும் கொண்ட நவீன வாழ்வின்
போதாமைகளை சந்திக்கும் இன்றைய தனி மனிதன் பெரும் மனப் பிறழ்வுக்கு உள்ளாகி.
அந்த மனப் பிறழ்வு அவனை தர்க்கங்களையும் விவாதங்களையும் நோக்கி
நகர்த்துகிறது’ என்று சுரேஷ் பிரதீப்பின் கதை உலகை வகுத்துக் கொள்ள முடியும்.
3
சுரேஷ் பிரதீப்பின் கதைகள் அனைத்திலும்
காண முடிகிற சில பொதுத்தன்மைகள் இவை.
ஒன்று, அகமோதல்களை, முரண்களை
நிகழ்வுகளால் அல்லாது எண்ணவோட்டங்களால் கட்டமைப்பது.
இரண்டாவது, பாவனைகளின் மீது
உணர்வுகளை ஏற்றும் தன்மை. அனைத்தையும் பாவனைகளாக மட்டுமே
பார்க்கும் உளச்சிக்கல் உறவுகளிலும் கடுமையான உடைவுகளை ஏற்படுத்தும் நிலை.
மூன்றாவது, கதையின் எல்லாத்
திறப்புகளையும் அல்லது முடிச்சுகளையும் வெளிப்படையாக சொல்லாமல் சிலவற்றை மறைத்து
வைப்பது. அல்லது சொல்லாமல் விட்டுவிடுவது.
அடுத்தது, ‘உறவுகள் தற்காலிகமானவை, சந்தர்ப்பவசத்தால் மட்டுமே நெருக்கமும் விலக்கும் ஏற்படுகின்றன.
புனிதமென்று எதுவுமில்லை என்ற பாவனை. அனைத்துமே
ஏதேனும் ஒருவிதத்தில் போலியானவை, சுயநலத்தின் விளைவுகளே
என்ற அடிப்படை.
இவ்வாறான பொதுத் தன்மைகளைக் கொண்ட
கதைகளை எழுதும்போது சுரேஷ் பிரதீப்பின் சொல்முறையில் இயல்பாகவே நேர்கோட்டுத்
தன்மையை துறந்துவிட நேர்கின்றன.
அது பொருத்தமானதும்கூட. பல கதைகளிலும்
கதையின் மையத்தையொட்டி ஆசிரியனின் கூற்று, மன எண்ணம்,
விளக்கம் என கதைகளில் அவரது இடையீடுகள் ஊடுருவியுள்ளன. ‘மடி’ போன்ற சில கதைகளில் ஆசிரியரின் சுய விமர்சனங்களும் ஒலிக்கின்றன.
தர்க்கங்கள், மோதல்கள், வாதங்களில் ஆசிரியருக்கு உள்ள ஆர்வம் மிதமிஞ்சியுள்ளது. தர்க்கங்கள் என்ற எல்லையில் சுவாரஸ்யமானவை. ஆனால்
அவை ‘கதை’ என்ற அளவில் உருப்பெறுவதில் உள்ள சிக்கல்களை ஈர்ப்பு, அகம், ச்சீ போன்ற கதைகளில் உணர முடிகிறது.
குற்றுளம், வரையறுத்தல்,
மறைந்திருப்பவை, ஆழத்தில் மிதப்பது
போன்ற சில கதைகள் அதிகமும் தத்தளிப்பும் வேகமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்டவை
என்றாலும் அவை சித்தரிப்பு உத்தியினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
உரையாடல்களுக்கு குறைந்த இடம் தருகிற
கதைகள் மன அலைவுகளுக்கு தாராளமாக வாய்ப்பளித்துள்ளன.
பொதுவாக, கதைகள் அதிகமும் அகத்துக்குள்
ஊடுருவும்போது புறச்சித்திரங்களில் கவனமிருக்காது. சுரேஷ்
பிரதீப்பின் கதைகளிலும் இத்தன்மையை உணர முடிகிறது. அதேபோல,
கதாபாத்திரங்களை நம்பகத் தன்மையுடன் நிறுவ முனையாமல் அவற்றின்
மனஅழுத்தங்களே முன்னிற்கும் குணாம்சமும் பல கதைகளில் அமைந்துள்ளன.
0
வெவ்வேறு உத்திகளைக் கொண்டு மாறுபட்ட
கதைசொல்லல் முறைகளை கையாண்டபோதிலும் சுரேஷ் பிரதீப்பின் பேசுபொருள் சாதிய
அழுத்தங்களாலும் சீர்கெட்ட உறவுகளாலும் நவீன வாழ்வில் பெரும் மனச் சிதைவுக்கு
உள்ளாகியிருக்கும் இன்றைய இளைஞர்களின்,
சமூகத்தின் தீர்வுகளற்ற கையறு நிலை என்பதால் இக்கதைகள் அழுத்தம்
பெறுகின்றன.
0
( தமிழினி )
No comments:
Post a Comment