Monday 11 May 2020

செல் விளையாட்டு - லயால் வாட்சன்


செல் விளையாட்டு
லயால் வாட்சன்

1951 பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஒரு மழை நாள். பால்டிமோர் நகரில் உள்ள ஜான்ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் 31 வயது இளம் கருப்பின மங்கையொருத்தி அனுமதிக்கப்பட்டாள். பரிசோதனையின் போது அவளது கருப்பை வாசலில் சிறிய சிவப்புக் கட்டியொன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து ஆய்வுக்கென மாதிரியும் வெட்டியெடுக்கப்பட்டது. ஒருசில நாட்களுக்குப் பிறகு ஒரு அங்குலத்திற்கும் குறைந்த அளவேயிருந்த அந்தக் கட்டி புற்றுநோய்க்கானது என்றும் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சாதாரண புற்றுநோய் கட்டிகளில் உள்ள செல்கள் போலன்றி ஹென்ரிடா லேகஸின் உடலில் இருந்தவை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாயிருந்தன. வெகு சீக்கிரத்திலேயே அவள் உடலெங்கும் வேர் பிடித்துக் கொண்டன. தீவிர சிகிச்சைகள் எதற்கும் பலனளிக்காமல் எட்டு மாதத்திற்குள் அவள் இறந்துபோனாள்.

அல்லது அவளது உடலின் செல்களின் பெரும் பகுதி அழிந்துவிட்டது.

ஹென்ரிடாவுக்கு ரேடியக் கதிர்வீச்சு சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு அவளது உடலிலிருந்து பரிசோதனைக்கென வெட்டியெடுக்கப்பட்ட அந்தச் சிறிய சதைத்துண்டு திசுப்பகுப்பாய்வு (Tissue culture) முன்னோடியாய் விளங்கிய ஜார்ஜ் கேயின் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவர் அதை முறைப்படி ஆய்வுக்குட்படுத்தியிருந்தார். பல வாரங்களுக்குப் பின் அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. இதுவரை அவர் பார்த்த வேறெந்த செல்களையும் விட இவை வெகு வேகமாக வளர்வதைக் கண்டார். உயிருடன் இருக்க சாத்தியமான இருபத்திநான்கு மணி நேரத்திற்குள்ளாகவே திசு வளர்ச்சியின் எல்லைகளைக் கடந்து வளர்ந்து அவை சில வருடங்களுக்குள்ளாகவே சற்றேறக்குறைய உலகம் முழுவதும் பரவியிருந்தன.

திசுப் பகுப்பாய்வில் ஹெலா என்று பெயரிடப்பட்ட அந்த செல்கள் மருத்துவ ஆய்வுகளில் முக்கியப் பங்காற்றத் தொடங்கின. அது போலியோ வைரஸை பிற செல்களுக்கு கொண்டுசெல்லத் தகுந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. 1954-ல் போலியோ தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் பெரும் உதவி புரிந்தது. உலகெங்கிலும் போலியோ மறைந்தது. ஆனால் ஹெலாவின் ஆட்டம் அங்குதான் தொடங்கியது.

1974 வரை ஹெலா உலகெங்கிலுமுள்ள லட்சக் கணக்கான பரிசோதனைக் கூடங்களில் பல்வேறு ஆய்வுகளுக்கும் உபயோகப்படுத்தப்பட்டு அனைவரின் நன்றிக்குரியதாய் இருந்தது. அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது - ரஷ்ய விஞ்ஞானிகள் குழு ஒன்று தனது அமெரிக்க சகாக்களுக்கு, புற்றுநோய்க்கான வைரஸை கொண்டுள்ளதாக எண்ணி பலவித திசு வளர்ச்சி மாதிரிகளை அனுப்பியிருந்தது. உண்மையில் அவை வேறொன்றையே கொண்டிருந்தன. வெவ்வேறு ரஷ்யர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டதென சொல்லப்பட்ட அந்த மாதிரிகளின் எல்லாத் திசுக்களுமே, சோர்வின்றி வளர்ந்து வரும் ஹெலன் லேனின் திசுக்களின் பண்பைக் கொண்டிருந்தன. அதாவது அவை ஹெலாவோடு அடையாளப்படுத்த முடிகிறவையாய் இருந்தன.

அதன்பின் சில நாட்களிலேயே, உலகெங்கும் உள்ள திசுச் சேகரிப்பகங்களிலும் ஆய்வகங்களிலும் உள்ள பிரபலமான மனித திசு வளர்ச்சி மாதிரிகளில் பாதிக்கும் மேலானவை ஹெலாவை ஒத்திருந்தன என்று கண்டு பிடிக்கப்பட்டது. ஆண்டுக் கணக்காக ஆய்விலிருந்த விஞ்ஞானிகள் பலரும் தாங்கள் ஆய்வு செய்து கொண்டிருப்பவை கான்ஸாஸ் நகரிலிருந்து வந்த சிறுநீரக செல்கள் என்றும் துரின் நகரிலிருந்து வந்த மார்புப் புற்று நோய் செல்கள் என்றும் நம்பியிருக்க அவையனைத்துமே பால்டிமோரிலிருந்து வந்த ஹென்ரிடாவின் கருவறைச் செல்களை ஒத்திருந்தன.

போதிய கவனமின்றி ஒரு பிப்பெட்டிலிருந்து மாற்றப்பட்ட ஒரேயொரு ஹெலா செல் மிக கவனமாக பரிசோதித்து பெயரிடப்பட்ட வேறு திசுக்களைத் தீண்டி பல நாள் ஆராய்ச்சிகளையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்ற அச்சம் பரவியது. ஹெலாவைக்கொண்டு இதுநாள்வரை ஒரு பரிசோதனைகூட செய்திராத ஆய்வகங்கள்கூட, அது வேறெதோ பெயரில் தங்கள் ஆய்வகத்தில் பதுங்கியிருக்குமோ என்று அஞ்சினர்.

இன்று ஹெலாவின் தனிப்பட்ட மரபியல் பண்புகள் மிக கவனமாக வகுக்கப்பட்டுவிட்டன. அதை மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்தும் வருகிறார்கள். அபாயம் தற்காலிகமாய் முடிந்துவிட்டது. ஆனால் 'ஹெலன் லேன்' இன்னும் இருக்கிறாள் - இறந்துவிடவில்லை. மேலும் அவளை அத்தனை ஆற்றலுடையவளாய் ஆக்கியது எது என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

நவீன மரபணுவியல் சிந்தனைகளுக்கு ஆதாரமானது செல் உருகிணைவதாகும் (Cell fusion) பொதுவாக உபயோகமிக்க கலப்பின செல்களை உருவாக்க சென்டாய் வைரஸின் புரோட்டீன் தோலில் இருந்து பிரிந்தெடுக்கப்பட்ட ஒரு தனித்த வேதி திரவமே உபயோகிக்கப்படுகிறது. சென்டாய் வைரஸ் ஜப்பானில் உருவாகிய ஒரு வைரஸ். இணைய முடியாத செல்களை உருக்கி இணைப்பதில் இது கிரியா ஊக்கியாக செயல்படுகிறது. ஆனால் ஹெலா அவ்வாறு எந்த கிரியா ஊக்கியுமே இல்லாமல் கருப்பை புற்று நோயை கொண்டுவந்த வைரஸ்தான் இன்று ஹெலாவின் பகுதியாக உள்ளதா? அவ்வாறெனில் அது முற்றிலும் புதிய, பூமியில் இதுவரை தோன்றியிராத ஒன்றாகும். எங்கிருந்து வந்தது அது?

செல்கள் எவ்வளவு நெருக்கமான சூழ்நிலையில் இருக்க நேரும்போதுகூட அவ்வளவு எளிதில் ‘செல் இணைவு' நிகழ்ந்துவிடுவதில்லை. அவைகளுக்கிடையே பல்வேறு பரிமாற்றங்கள் இருந்தபோதும் இதுமட்டும் சாத்தியமில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்க்க, தன்னிலிருந்து தானல்லாதவற்றை அறிந்து கொள்ள ஏதோ ஒரு வகை அடையாள அமைப்பை செல்கள் கொண்டிருக்க வேண்டும்.

மிகச் சமீபகாலம் வரையிலும் எந்தவொரு முதுகெலும்பில்லாத உயிரினமும் தனது இனத்தைச் சார்ந்த வேறு உயிரிடமிருந்து செல்களை, திசுக்களை ஏற்றுக்கொள்ளும் என்றே நம்பப்பட்டு வந்தது. ஆனால் அப்படியில்லை. கடல்பாசி போன்ற எளிய, பிரதேச எல்லைக்குட்பட்ட உயிரினங்கள்கூட தங்களுக்கென தனித்த அடையாளப் பண்பைக் கொண்டுள்ளன.

இத்தகைய அடையாளப்படுத்துதல் அல்லது அங்கீகரித்தல் செல் அளவிலேயே அப்பட்டமாக நடைபெறுகிறது. இனத் தொகுதிகளில் இருந்து மாதிரித் திசுக்கள் பிரித்தெடுக்கப்படும்போதுகூட, பிறவற்றிலிருந்து தனது இனத்தைப் பிரித்தறிந்து கொள்ளும் திறனைப் பெற்றுள்ளன. நண்பர்களுடன் அவை இணங்குகின்றன. ஆனால் முகமறியாதவர்களிடம் எத்தகைய தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ள மறுக்கின்றன. அப்படி எதிர்கொள்ள நேரும் சந்தர்ப்பங்களில் இரண்டு செல் இனங்களுமே பின்வாங்கிக்கொள்ள திசுக்கள் அழிந்துவிடுகின்றன.

இத்தகைய பரஸ்பர பின்வாங்குதல் இரண்டு செல் இனங்களுமே ஒரே அளவுடையதாக இருக்கும்போது மட்டுமே நிகழ்கிறது என்னும் ஆச்சரியமான உண்மையை பாரிஸ் யுனிவர்சிட்டியின் ஜேக் தியோடர் கண்டறிந்தார். ஒன்று பெரியதாகவும் மற்றது அதைவிட சிறியதாயும் இருக்கும்போது சிறிய செல் மட்டுமே சிதைவுறுகிறது. ஆனால் பெரிய செல்லினால் அது கொல்லப்படுவதில்லை. இந்நிகழ்வில் பெரிய செல் முற்றிலும் செயலற்றதாகவே உள்ளது. சிறியது தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது. அதனுள் அமைந்துள்ள தன்னிச்சையான கட்டளைகளினால் ஏற்படுத்திக் கொள்ளும் சுய அழிவே அது. பெரிய செல்லினால் அது வெளித்தள்ளப்படுவதுமில்லை. தோற்கடிக்கப்படுவதுமில்லை. அது தானாகவே வெளியேறிவிடுகிறது. அவ்வளவுதான்.

கோடிக்கணக்கிலான செல்களைக் கொண்ட ஒரு அவுன்ஸ் மண்ணில், மண்ணைப் போலவே வளம் செறிந்த ஆனால் குறைந்தளவே கட்டமைப்பு கொண்ட நீர்ச் சூழலில் நடைபெறவியலாத சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன. உயிர்களிலேயே மிக எளிமையானது பாக்டீரியா. அவற்றில்கூட சமூகப் பண்புகொண்ட பாக்டீரியாக்கள் உள்ளன என்பது ஆச்சரியமான ஒன்று. காண்ட்ரோமைசிஸ் அவுரான்டியாகஸ் [chondromyees aurantiacus) என்பது எலுமிச்சை போன்ற ஒரு சிறிய விதை இது காற்றில் பறந்து ஈரப்பதமிக்க மண்ணை அடைந்து. பின் வெடிக்கிறது. அப்போது டிராகனின் வாயிலிருந்து சீறும் தீம்பிழம்புகள் போல ஆயிரக்கணக்கான சிறிய கம்பிகள் போன்ற பாக்டீரியாக்கள் வெளி வருகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உடலின் எந்த அசையும் உறுப்பின் துணையுமின்றி காற்றில் படிந்து, இவை போன்றே பிற விதைகளிலிருந்து பிறந்தெழும் பாக்டீரியாக்களுடன் இணைகின்றன. ஒன்றிணைந்த இவை நமது வெறும் கண்களில் பார்ப்பதற்கு நிறமற்ற வெண்சகதி போலுள்ளன. இச் சகதி மண்ணில் எல்லா திசைகளிலும் வழிந்து பரவுகிறது. கம்பி போலுள்ள பாக்டீரியாக்கள் இச் சகதியில் வரிசையில் நகரும் எறும்புகள் போல் ஒன்றையொன்று பின் தொடர்கின்றன. உணவு கிடைக்கும் வரையிலும் தொடரும் இந்நிகழ்வு, உணவுப் பற்றாக்குறை ஏற்படும் போது அதிசயிக்கத்தக்க வகையில் மாறுகிறது.

உணவு பற்றாக்குறை ஏற்பட்டவுடன் பரவியபடி இருக்கும் அந்த வெண்சகதி சட்டென்று நின்றுவிடுகிறது. மெல்லத் திரளத் தொடங்குகிறது. இத்திரளின் மீது பாக்டீரியாக்கள் கம்பிகம்பியாக இரசாயன திரவமொன்றைத் துப்பியபடி அடுக்கிக் கொள்கின்றன. அதிகாலையின் குளிர் காற்றில் ஒரு மில்லி மீட்டர் அளவு உயர்ந்து நிற்கும் வழுவழுப்பான இந்தக் கட்டமைப்பு நமக்கு பெரிய விஷயமாகத் தோன்றாது. ஆனால் ஒரு விஷயத்தை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பாக்டீரியா ஒவ்வொன்றும் ஒரு மில்லிமீட்டரில் 1/10000 அளவே நீளமானவை. இதை நமது அளவில் மாற்றிப் பார்த்தால் இந்த வெண்ணிற வழுக்கு கோபுரம் ஒருமைல் உயரத்துக்கும் மேலானதாக நியூயார்க் உலக வணிக மையக் கட்டடத்தைவிட ஐந்து மடங்கு பெரியதாகவும் இருக்கும். இந்த உயரத்திலிருந்து பாக்டீரியாக்கள் திரும்பவும் விதைகளைத் தூவி இச் சுழற்சியைத் திரும்பவும் நிகழ்த்தத் தொடங்குகின்றன. இந்தப் பாக்டீரியாக்கள் தங்களுக்குள் கலந்துகொண்டு எப்படி இவ்வாறு ஒரு கூட்டு முடிவை எடுக்கின்றன என்பதை இதுவரை யாரும் கண்டறியவில்லை.

உயிரியலுக்குச் சில அற்புதத் தருணங்களைத் தந்த பிரபல உயிரினம் அமீபா. டிக்டியோஸ்டெலியம் டிஸ்காடியம்(Dictyoto lium Discodeum) என்கிற அமீபா மெலிதான உடலமைப்பு கொண்டது. அமீபாக்கள் பொதுவாக தனித்தலைபவை. ஏகாங்கிகள். அலையும் பொய்க் கரங்களை குறிக்கோளின்றித் துழாவிக்கொண்டு ஈரமான இடங்களில் வளர்ந்து கிடப்பவை. ஆனால் குறிப்பிட்ட இந்த அமீபா சமூகப் பண்புடையது. உணவுக்கு தகுந்த பாக்டீரியாக்கள் இனி கிடைக்க வாய்ப்பில்லை என்னும் சங்கடம் நேரும்போதுதான் இப்பண்பு எதிர்வினையாற்றுகிறது.

வரப்போகும் உணவுப்பஞ்சத்தை அறியும் முதல் பாக்டீரியா வெருண்டு கதறுகிறது. அச்சமயம் ஒரு ரசாயனம் வெடித்துப் பரவுகிறது. இந்த ரசாயனம் ஒரு வகை மோனோபாஸ்பேட் ஆகும். உயிரியலில் இது Camp என்று அறியப்படுகிறது. முதல் பாக்டீரியாவிலிருந்து கிளம்பிய இச் சங்கேதம் எல்லா திசைகளிலும் பரவுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட தொலைவில் உள்ள (கூக்குரல் எழுப்பியவரிலிருந்து  பத்து செல் தூரமுள்ள வட்டச் சுற்றளவு) பிற அமீபாக்களை எச்சரிக்கை செய்கிறது. இச்சங்கேதத்தை அறிந்து கொண்ட பிறவும் அதே எச்சரிக்கையை மேலும் உரத்த குரலில் ஐம்பது நொடியளவு நேரம் கத்துகின்றன. கத்தி முடித்துவிட்டு முதல் கூக்குரலெழுந்த திசையை நோக்கி வேகமாக நகர்கின்றன.  நூறு நொடிகள் வரை நிற்காமல் நகர்கின்றன. நகரும்போது வேறெந்த குரலையும் செவிமடுப்பதில்லை. ஒவ்வொரு அமீபாவும் தனது camp அமீபாவை நோக்கி நகர, முதல் குரலெழுப்பிய camp siteஐ நோக்கி அமீபா வரிசைகள் எல்லா திசைகளிலிருந்தும் வளர்ந்து நகர்கின்றன. இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்குப்பின் முதல் மையத்தில் இவையனைத்தும் தனித்தனி குழுக்களாக இணைந்து கொள்கின்றன. ஒவ்வொரு தொகுதியும் இரண்டு மில்லிமீட்டர் நீளத்தில் சமோசா போன்ற வடிவத்தில் உள்ளது. கிரெக்ஸ் என்றழைக்கப்படும் இது இப்போது ஒரு பலசெல் உயிரினம் போன்று தனித்து இயங்கத் தொடங்குகின்றது. இவற்றுக்கென சொந்தமான உணர்வுகள் கிளைக்கின்றன. அது உள்ளடக்கியுள்ள அமீபாக்களைப் போலில்லாது வெப்பத்தையும் ஒளியையும் அறிகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு மில்லி மீட்டர் வேகத்தில் கதகதப்பான வெளிச்சமிக்க ஓரிடத்தை இனப்பெருக்கத்திற்கென தேடி நகர்கிறது.

தகுந்த இடத்தைக் சென்றடைந்ததும் க்ரெக்ஸின் அமீபாக்கள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து குறிப்பிட்ட வேலைகளைச் செய்யத் தொடங்குகின்றன. விதையாவதற்கு விதிக்கப்பட்ட சில அமீபாக்களைத் தேர்வு செய்து அவற்றை குளிகைகள் போன்று அடைத்து நீண்ட கம்பின் நுனியில் இருத்தி காற்றில் ஏவுகின்றன. ஏவப்பட்ட விதைகள் தங்களுக்குள் காற்றில் நிகழ்த்தும் உரையாடல்கள் வழியாக வளைந்தும் சாய்ந்தும் இடம் கொடுத்தும் நகரும்போது ஒவ்வொரு குளிகை முனையும் வெடித்து முழுக்க வளர்ந்த விதைகளை வெளியேற்றுகிறன.

தனியான உயிரான அமீபாவை ஒரு சமூகப் பண்புள்ளதாய் ஆக்கியது உணவுத் தேவையல்ல. உண்மையில் உணவின் போதாமையே இதைச் சாத்தியப்படுத்தியது. அமீபாக்களின் உணவான பாக்டீரியாக்களும் Camp ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன என்கிற சமீபத்திய கண்டுபிடிப்பு மேலும் வியப்பைத் தருகிறது. எனவே பஞ்சம் வருவதை உணர்ந்து எச்சரிக்கை எழுப்பிய முதல் அமீபாவின் கூக்குரலில் ஒலித்தது 'சோறு' என்ற வார்த்தையாகவும் இருக்கலாம்!

மனிதன் உட்பட எல்லா உயிர்களிலும் இதே இரசாயனம்தான் செல்களுக்கிடையிலான பரிமாற்றங்களைச் செய்கிறது. செல் சுவருக்கு வந்து சேரும் ஹார்மோன்களுக்கும் செல்லின் உட்புறம் உள்ள என்சைம்களுக்கும் நடுவே இந்த ரசாயனம்தான் தூது புரிகிறது. நமது செல்களுக்கு முற்றிலும் புதியவைகளையும் ஒரு பொது உத்தேசத்துக்காக தன்னுடன் ஒன்றிணைத்து நடத்தத் தேவையான சங்கேதங்களை எழுப்புவது முதலான பல சிக்கலான காரியங்களும் இந்த நமது பாரம்பரிய எதிர்வினைகளிலிருந்துதான் பிறக்கின்றன. இது செல்களுக்கிடையிலான அங்கீகாரம் என்கிற முதல் காரியத்திலிருந்து தொடங்குகிறது. ஒரு செல் முதலில் 'இது நான்’, ‘அது என் உணவு' என்று சொல்லிக் கொள்ளத் தொடங்கி, பின் வளர்ந்து வலுப்பெற்ற பின் இது நான் - அது நானுமல்ல, என் உணவுமல்ல, ஆனால் என் நண்பன்' என்று சொல்ல முடிகிறது.

செல்களின் பரஸ்பர எதிர்பாற்றல் என்பது மிகப் பின்னரே வருகிறது. அந்நிய உயிரணுக்களை அறிந்துகொண்டு அவைகளுக்கெதிராக மாற்றுச் செல்களை உற்பத்தி செய்கிற குணம் நமது உயிரியல் ரசாயனத்தின் முக்கிய பகுதியாகும். இப்பண்பு அந்நியத் தாக்குதல்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதுடன், நம்மை நண்பர்களிடமிருந்தும் விலக்கி வைக்கிறதென்பதுதான் துரதிர்ஷ்டவசமானது. மிக நல்லெண்ணத்துடன் தானமாகத் தரப்படுகிற சிறுநீரகங்களைக்கூட விலக்க வேண்டி வருகிறது. நமக்கே நாம் நோய்க்கிருமிகளாகிவிட்டோம்.

ஒவ்வொரு நோய் எதிர்ப்புத் திசுவும் (antobodies) பிரத்யேகமான நுண்ணுயிர் தாக்குதலுக்கென எதிர்வினையாற்றும் வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் நோய் எதிர்ப்பானும் நோய்க்கிருமியும் எதிர்த்துப் போராடும் போது அழிபவை அவை மட்டுமல்ல - நமது உடலின் சில பகுதிகளும்தான். பல நோய் அடையாளங்கள் கிருமிகளால் உண்டாகுபவையல்ல. மாறாக நோய் எதிர்ப்பாற்றலின் எதிர்வினையால் விளைபவையே. பொதுவாக இவை நோயிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் கொடுக்கும் விலை என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

நெருப்பிலிருந்து வீட்டைக் காக்கும்பொருட்டு தீயணைப்பு வீரர்கள் இரண்டொரு கதவுகளைச் சேதப்படுத்தினால் அதற்காக அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதில்லை 
.
ஒரு வகையில் இந்த ஆற்றல் கண்மூடித்தனமானதும்கூட. நோய்க் கிருமிகளை எதிர்க்கும் அதே தீவிரத்துடனேயே இவை பாதகம் ஏதும் விளைவிக்காத அந்நியப் பொருட்களையும் எதிர்த்து நிற்கின்றன. தூசியொன்று நமது கண்ணிலோ நாசியிலோ விழுந்துவிட்டதும், அதை ஏதோ உயிர்கொல்லி என்றெண்ணி எதிர்ப்பாற்றல் வேலை செய்யத் தொடங்கி விடுகிறது. பித்துப்பிடித்த படைத்தலைவன் வெற்றுப் பாறையின்மீது மோதி மடிவதற்கென்றே வீரர்களை அனுப்புவது போல நோய் எதிர்ப்பான்களை - வெள்ளை அணுக்களை தூசியை நோக்கிச் செலுத்துகிறது. தூசி ஒட்டியுள்ள இடத்தைச் சுற்றிலும் ரணகளமாகிறது. அங்குள்ள சாதாரண நல்ல திசுக்கள் கூட சிதைந்து போகின்றன. அனைத்தும் வீங்கிச் சிவக்கின்றன. நம்மால் நன்றாக பார்க்கவோ சுவாசிக்கவோ முடியாமல் போகிறது. இருமல் வருகிறது. கண்ணெரிச்சல் ஏற்படுகிறது. மூக்கு ஒழுகுகிறது. தூசி அகற்றப்படும் வரை படாதபாடு படுகிறோம். இத்தனைக்கும் அந்தத் தூசி நமக்கெந்த கெடுதலையும் செய்வதில்லை.

சமீபத்திய ஆய்வுகளின் முடிவுகள் காரியம் நம் கைவிட்டுப் போய்விட்டதையே சொல்கிறது - நோய் எதிர்ப்பாற்றல் உடலில் எந்தவித அந்நியத் தாக்குதல்கள் இல்லாத போதும்கூட தானாகவே செயலாற்றக் கூடும். இதன் மூலம் உடலின் நோய் தடுப்பாற்லை உடலுக்கெதிராகவே திருப்பிவிட முடியும். இதையே தன்னிச்சையான எதிர்ப்பாற்றல் (auto immuniting) என்கிறார்கள்.

நமது சுற்றுச்சூழலில் கொட்டி வைத்திருக்கும் புதிய ரசாயனங்களில் ஏதேனுமொன்றினால் தூண்டப்பட்டு நம் உடலின் செல்களில் இவ்வித தன்னிச்சையான எதிர்ப்பாற்றல் முளைவிடும் சாத்தியங்கள் உள்ளன. உண்ணும் உணவில் உள்ள விஷம், உடைகளில் உள்ள சாயம், உரம் அல்லது தடுப்பு மருந்தோடான தற்காலிகத் தொடர்பு - இந்த ஒவ்வொன்றும் தன்னிச்சை எதிர்ப்பாற்றலைக் கிளர்த்திவிடப் போதுமானவையே. இவ்வாற்றல் நமது உடலில் தற்செயலாக தவறுதலாய் சுட்டப்பட்ட ஏதேனுமொரு பாகத்தை நோக்கி செயலாற்றத் தொடங்கிவிடும். இவ்வாறு நடக்கிறது என்று நன்றாக தெரிந்தாலும்கூட இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உயிரைக் காப்பாற்ற நமது மருத்துவ விஞ்ஞானத்தால் இப்போதைக்கு இயலாது. ஏனெனில் நோய் எதிர்ப்பாற்றலை உற்பத்தி செய்கிற ஓய்வில்லாத சக்கரத்தின் சுழற்சியை அவ்வளவு சுலபமாக நிறுத்திவிட முடியாது.
பல நோயாளிகளிடமிருந்து இந்த எதிர் ஆற்றலின் வினைபொருட்களைப் பிரித்தறிந்தாகிவிட்டது. இவைகளின் மூலம் அறிந்து கொள்வது - இவை நோயினால் உண்டாபவை அல்ல; மாறாக நோய்க்குக் காரணமானவை என்பதுதான். வயிற்றில் நோயை உண்டாக்கும் பெரினிசியஸ் அலீமியா, தைராய்டு சுரப்பி செயல் மறுப்பது, சிறுநீரகங்களில் உண்டாகும் தெப்ரிடிஸ், பெருங்குடலைச் சேதப்படுத்தும் அல்சர் கொலிட்டிஸ், ரெமட்டாய்டு ஆர்தரிடிஸ் - இளம் வாலிபர்களின் மூளையைத் தாக்கும் செலரோஸிஸ் - இவை யாவுமே ஒருவகையில் தன்னிச்சையான எதிர்ப்பாற்றலின் விளைவுகளே! காரணமின்றி உடல் தனக்கெதிராகத் திரும்பிக் கொள்வதனால் விளையும் நோய்களுக்கு இவை உதாரணங்கள்.

சாதாரண நோய் எதிர்ப்பு சக்தியின் எதிர்வினையை, குளவி புகுந்த தேன் கூட்டில் நடப்பதுடன் ஒப்பிடலாம் - வேலைக்காரத் தேனீக்கள் பாய்ந்து சென்று குளவியைக் கொட்டி மடியச் செய்கின்றன. இதன் போது தேனீக்களில் சில காயமடையவும் மடியவும் கூடும். மொத்தமாக, தேன் கூட்டைப் பொறுத்தவரை சில கொல்லப்படுமெனில் இந்தத் தியாகங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே! ஒவ்வாமை (allergy) என்பது தேன்கூட்டின் வாசலுக்குக் காற்றில் அடித்து வரப்பட்ட மலரிதழ் ஒன்றைத் தாக்கி தேனீக்கள் தங்களையே வீணாக அழித்துக் கொள்வது போலத்தான். ஆனால் தன்னிச்சையான எதிர்ப்பாற்றல் என்பது வேறு. அதுவொரு ஒட்டு மொத்த உள்நாட்டு கலகம். மொத்த இனமே அழியும் வரை ஒன்றையொன்று பைத்தியம் பிடித்த மாதிரி கொட்டிக் கொள்ளும் தேன் கூடு போன்றது.

வட அமெரிக்காவின் கிரேட்லேக் பகுதியில் வளர்ந்து வரும் ஒரு மீன் தொழிற்சாலை இருந்தது. இது பெரிதும் குளத்து மீன்களையே நம்பியிருந்தது. 1932 - ல் வெல் லேண்ட் கப்பல் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டவுடன் நயாகரா நீர்வீழ்ச்சியின் மேற்புற ஏரிகள் பலவும் கப்பல்களுக்கு மட்டுமின்றி கடல்வாழ் பிராணிகளுக்கும் திறந்துவிடப்பட்டது. இந்தப் புதிய நீர்ச் சூழல் அமைந்ததும் இறால் வகையொன்று எரியா, ஹியூரோன், மிச்சிகன், சுப்பீரியர் போன்ற ஏரிகளுக்குள் புகத் தொடங்கியது. இவ் இறால்கள் ஒட்டுண்ணிகளாகும். தாடைகளற்ற வாயைச் சுற்றியுள்ள உறிஞ்சுகுழலின் உதவியுடன் அவை மீன்களைத் தாக்குகின்றன. கூரிய தன் நாவைக் கொண்டு மீனின் உடலைத் துளைத்து திரவமொன்றை உட்செலுத்துகிறது. இத்திரவம் மீனின் தசைகளைச் சிதைத்து அதன் ரத்தத்துடன் உறிஞ்சிக் கொள்ள ஏதுவாக்கித் தருகிறது. இதுவரையிலும் இத்தகைய ஒரு அபாயத்தைக் கண்டிராத குளத்து மீன்கள் அனைத்தும் பலியாயின. 1935-ம் ஆண்டின் போது குளத்து மீன் ஒன்றுகூட மிஞ்சவில்லை. நம்பியிருந்த தொழிற்சாலையும் நலிந்தது. மீன்கள் இல்லாது போனதும் இறால்கள் திரும்பவும் கடலுக்குத் திரும்ப நேர்ந்தது. கடல்வாழ் மீன்கள் இறால்களைக் கண்டு அஞ்சிய போதும் அவைகளோடே வாழப் பழகியவை. கோடிக் கணக்கான ஆண்டுகளில் ஒருவித எதிர்பாற்றலை இவை பெற்றுவிட்டன. இறால்களுக்கும் மீன்களுக்கும் நடுவிலான ஒரு ஒப்பந்தம் இவ்விரண்டையும் அதனதன் வாழ்வில் சுமுகமாய் இருந்து கொள்ள அனுமதிக்கிறது.

முதுகெலும்புள்ள பிராணிகளில் மிகப் பழமையான இறால்கள் எல்லாக் காலத்திலும் ரத்தம் குடித்தே வந்துள்ளன. வேறெப்படியும் வாழ அவைகளின் உடலமைப்பு அவைகளை அனுமதிக்காது. பரிணாம வளர்ச்சியின் விளைவாக இத்தன்மை மாற்றங்களுக்குட்பட்டு இன்று இறால்கள் ஒட்டுண்ணியே அல்ல என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்நிலை கைகூடுவதற்குப் பல ஆண்டுகள் ஆகியிருக்கும். இந்தக் காலகட்டத்தில் ஒட்டுண்ணிகள் தங்கள் உடலில் ஒருவித ரசாயன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு பிற ஒட்டுண்ணிகளின் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக் கொண்டன. இந்நிலையின் தனித்தன்மை என்னவென்றால் மீன்களின் திசுக்களும் ஒட்டுண்ணிகளின் திசுக்களும் ஒன்று போன்றவை - என்பதால் மரபு வழியான தடுப்பு சக்திகள் பயனற்றுப் போயின. இதே பிரச்னையைத்தான் நாம் இன்று புற்றுநோயில் காண்கிறோம். ஒரு புதிய விதிமுறைக்கேற்ப உடல் தனக்கெதிராக திரும்பிக் கொண்டதன் விளைவே புற்றுநோய்க் கட்டிகள். பரிணாமச் செடியில் இறால்களுக்கு முன்னர் வேறெந்த உயிரிலும் புற்றுநோய் இருந்தது கிடையாது என்பதைக் கவனிக்க வேண்டும்.

உயிரின் மீது திணிக்கப்பட்ட ஒரு புதிய செயல் திட்டத்தின் விளைவுதான் புற்றுநோய். இதற்கான எதிரெதிரான கட்டளைகள் பூமியிலிருந்து அல்லது வேறு கிரகங்களிலிருந்து கிடைத்திருக்கலாம். முதுகெலும்புள்ள பிராணிகள் தங்களுக்குள் இணைந்து செயலாற்றும் ஒருவித பண்பை வளர்த்தெடுத்துக் கொண்டதன் மூலமாக பிற உயிர்களிடமிருந்து வேறுபட்டிருக்க முடிந்தது. பல தடைகளைத் தாண்டி ஒரு பாய்ச்சலை நிகழ்த்த முடிந்தது. இந்த பரிணாமப் பாய்ச்சலின் விளைவே உண்மை யான மனத்தைக் கண்டுபிடிப்பதில் கொண்டு சேர்த்தது. இதற்கெல்லாம் அவை தந்த விலைதான் புற்றுநோய்.

எந்த விதத்திலும் நிலையில்லாதது நமது உடல், ஒவ்வொரு நாளும் கண்ணாடியுள்ளிருந்து வேறொரு புதிய மனிதனே உங்களைப் பார்க்கிறான். நமது தோல் வாரந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. வாயின் உட்புறம் ஒவ்வொரு கவளம் விழுங்கும் போதும் மாற்றமடைகிறது. கண்ணிமைக்கும் ஒவ்வொரு முறையும் நூற்றுக்கணக்கான செல்கள் கண்ணீர் சுரப்பிகள் மூலமாக வெளித்தள்ளப்படுகின்றன. தினந்தோறும் ஒரு தட்டு நிறைய செல்களை இழக்கிறோம். இதை நாம் சரிகட்ட வேண்டும். அதிர்ஷ்டவசமாக எலும்பு மஜ்ஜைகளும் உற்பத்தித் திசுக்களும் நமது உடலில் கணக்கற்ற செல்களைச் செலுத்திக் கொண்டேயுள்ளன. இந்த எண்ணற்ற செல்களின் நடுவே, வெளியிலிருந்து எந்தப் புதிய கட்டளையும் இல்லாமலே, மோசமான ஒரு செல் இருக்க வாய்ப்புள்ளது. - மையத்திலிருந்து சற்றே விலகிய செல் கரு; அமினோ அமிலம் இல்லாத ஒரு புரோட்டீன் - என்று பிழையான ஒரு செல் இருக்கக் கூடும். இவை மண்ணிலோ, கடலிலோ என்றால் புதைக்கலாம். கரைக்கலாம். ஆனால் உடலினுள் உள்ள அவை அழிக்கப்பட வேண்டும். எந்தவொரு தனிப்பட்ட செல்லும் தன்னிஷ்டபடி இயங்க முடியாதபடி நமது உடலமைப்பு உள்ளது.

தொடர்ந்து நம் உடலில் இருந்து கொண்டிருக்கும் இந்தப் பிழையான செல்களின் பிரச்னையை எதிர்கொள்ளவே நமது எதிர்பாற்றல் உள்ளதென்றும், அந்நிய உயிர் அணுக்களை அவை எதிர்த்து நோய் தடுப்புக்கு உதவி செய்வதென்பது ஒரு கூடுதல் பயன் மட்டுமே என்றும் நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஃப்ரான்க் மெக்பர்லேன் பர்னெட் கருத்துத் தெரிவித்தார். இந்தப் பணி சரிவர நடைபெறாத போதுதான் புற்றுநோய் உருவாகிறது என்றார். ஆனால் விஞ்ஞானிகள் பலரும் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாததால் விவாதம் தொடர்கின்றது.

நம்மைப் பொறுத்தவரை இந்த எதிர்ப்பாற்றலுக்குள் உள்ள அடையாளச் சிக்கல்தான் முக்கியம். தாவர உலகில் தோய் எதிர்ப்பு வினைக்கு நிகரான ஒன்று உண்டு. இதன் மூலம் மலர்கள் தங்கள் இனத்துக்குள்ளாகவே மகரந்தச் சேர்க்கை ஏற்படாவண்ணம் தற்காத்துக்கொள்கின்றன. 'இடைவிடாத சுய கருவுறுதலை இயற்கை வெறுக்கிறது' என்றார் டார்வின். சில தவிர்க்கமுடியாத தருணங்களில் புல் வகைகளில் சில மட்டும் நமக்குள்ளாகவே சூல் கொள்வதைத் தவிர மலர்கள் தம் சூல் மடியில் தங்களது மகரந்தமே விழுந்துவிடுவதை அனுமதிப்பதில்லை. இதற்கென தாவரங்கள் பல வழிகளைக் கையாள்கின்றன. தமது பாலுறுப்புகளை வெவ்வேறு பருவங்களில் தகுதிப்படுத்துவது; இரண்டு முறை பூப் பூப்பது - பெண் உறுப்புகள் தயார் நிலையில் இருக்கும் வண்ணம் ஒரு முறையும், ஆணுறுப்புகள் தயாராக உள்ள போது மறுமுறையும்; இவ்வழிகளின் மூலமாக ஒரு மலரின் மகரந்தம் அதே இனத்தின் வேறு மலர்களை ஒருபோதும் சென்றடைய முடியாது. முன்பின் அறியாதவர்களுடன் உறவு வைத்து கொள்வது மோசமான சந்ததிகளை உண்டுபண்ணும் என்பதால் தகாப்புணர்ச்சி விலக்கைத் தாவரங்கள் கடைப்பிடிக்கின்றன. லில்லி, பெதுனியா, க்ளோவர்ஸ் போன்ற தாவர இனங்கள் இவ்விஷயத்தில் ரசாயன ஒவ்வாமையைக் கொண்டுள்ளன. 'தான் 'தானற்றது' என்ற துல்லியமான வித்தியாசத்தைப் பற்றிய தெளிவு உள்ளது. இதற்கேற்ப எதிர்வினையும் நிகழ்கிறது. இவையனைத்தும் அந்த இனத்தின் செல் விதிகளில் நிர்ணயிக்கப்பட்டவை மட்டுமே, எனவே இவை அசலான தனித்தன்மைகள் அல்ல. தனித்தன்மை (Individuality) குறித்து பேசும்போது ஜுலியன் ஹக்ஸ்லி 'செல்களின் வரலாற்று ரீதியான தனித்தன்மையை நம்புவது நல்லது. அத்துடன் அதன் சாரத்தை ஊடுருவி அதன் பிரதிகளின் தனித்தன்மைகளை அறிந்து கொண்டு அவற்றின் எல்லா முந்தைய சுதந்திரங்களையும் அடைவதன் வழியாக உருவெடுக்கும் ஒட்டுமொத்த வடிவத்தை அறிவதும் நல்லதுதான்' என்றார்.

தனித்தன்மையின் அடிப்படை அலகுகள், ஒன்றுகூடி செல்லை வடிவமைக்கிற பாரம்பரியத் தன்மைகளே என்று நம்பலாம். ஒரு செல்லின் அல்லது செல் தொகுதியின் பல்வேறு பகுதிகளின் கூட்டுச் செயல்களோ, உணர்வுகளோ அவற்றின் தனித்தன்மையாகாது. ஒரு செல் தொகுதியை தனிப்பட்ட ஆளுமையாகவும் கொள்ள முடியாது. என்றால் இவற்றை தனித்துவம் கொண்ட ஒரு கூட்டு உயிரினம் எனலாமா? ஒரு தொகுதியில் குறிப்பிட்ட செயல்களைச் செய்யும் செல்லையும் ஒரு பாலூட்டியின் உறுப்புகளையும் எப்படி நாம் வேறுபடுத்துகிறோம்? செல் தொகுதியை வெறும் தொகுப்பாக மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் அதற்கென குறிப்பிட்ட அங்கீகாரத்தை எந்த குறிப்பிட்ட நிலையை அது அடையும்போது தர முடியும்? சமூகப்பண்பு கொண்ட பூச்சிகளின் விஷயத்தில் இப்பிரச்னை இன்னும் தீவிரமாகவே எழுகிறது.

எறும்புகள், கரையான்கள், தேனீக்கள், குளவிகள் என யாவும் சிதறடிக்கப்பட்ட உயிர்கள் என்று சொல்லுமளவுக்கு சமூகப் பண்பைக் கொண்டுள்ளன. உதாரணமாக டாரிலஸ் வில்வெர்த்தி (Dorylus wilverthi) என்னும் ஆப்பிரிக்க படையெறும்பினுடைய புற்று இருபது லட்சம் புற்றுவாய்களைக் கொண்டு பல நூறு ஏக்கர்கள் பரவிய ஒன்றாகும். இதைக் குறித்து தென் ஆப்பிரிக்க இயற்கையாளர் யுஜின் மராயிஸ் (Eugene Marais) சொன்னதை கவனியுங்கள் - 'மனிதனைப் போலவே ஒவ்வொரு புற்றும் தனித்த ஒரு உயிரினம்தான். ஒவ்வொரு புற்றிலும் மூளையுண்டு. வயிறு, இரைப்பை மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் அனைத்தும் உண்டு. உணவு சேகரிப்பதற்கென்று கால்களும் தோள்களும் உள்ளன. நகரும் ஆற்றல் மட்டுமே அதற்கில்லை.ஆனால் இயற்கையின் தேர்வு விதிகள் தொடர்ந்து கொண்டிருக்குமானால் அதன் விளைவாக இந்தப் புற்று தென் ஆப்பிரிக்கப் புல்வெளியில் மெல்ல நகரக் கூடும். தென் ஆப்பிரிக்க புல்வெளியில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தனி ஆளாக புற்றுகளைப் பற்றி ஆய்வு செய்த மராயிஸ் புற்றுகளை இப்படி ஒருங்கிணைத்து வைத்துள்ள சக்தி எது என்று புரிந்து கொள்ள முடியாதவராயிருந்தார். ஆனால் இன்று நாம் இந்த அற்புத சக்தியின் ஒரு பகுதியையேனும் அறிந்தவர்களாய் இருக்கிறோம் அவை பெரோமான்ஸ் எனும் ரசாயனத் தொகுதியே. இந்த ரசாயனம் (ஒரு வகை ஹார்மோன்) ராணிக் கரையானால் உற்பத்தி செய்யப்பட்டு புற்றில் உள்ள எல்லாக் கரையான் களுக்கும் அளிக்கப்படுகிறது. மனித உடலின் ரத்தம் போல இது புற்று முழுவதும் ஓடுகிறது.

தேனீக்களைப் பொறுத்தவரை தேன்கூடே ஒரு தனி வயிற்றைக் கொண்டது என்று சொல்லுமளவு உணவைப் பகிர்ந்து கொள்கின்றன. செய்தி பரிமாற்றங்கள் பெர்மான்கள் மூலமாகவும், பிரசித்தி பெற்ற 'நடனங்கள்' மூலமாகவும் நடைபெறுகின்றன. ஒட்டு மொத்த தேன்கூடே மத்திய நரம்பு மண்டலத்தையும் வெகு தூரம் பறக்கத் தகுந்த உணர்வு உறுப்புகளையும் கொண்ட தனித்த ஒரு உயிர் என்று கருதுமளவுக்கு அவை அமைந்துள்ளன. அத்துமீறுபவர்கள் உடலின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு இரக்கமற்ற முறையில் தண்டிக்கப்படுகிறார்கள். தேனீக்களில் எவையும் வெப்ப ரத்தப் பிராணியாக இல்லாதபோதும்கூட தேன் கூட்டின் தட்பவெப்பம் மிக கவனமாக சீராக இருத்தப்படுகிறது. நமது விந்துப்பை , கருப்பைகளை ஒத்த ஒரு சிறிய தொகுதி மூலமாக இனப்பெருக்கம் கவனித்துக் கொள்ளப்படுகிறது. தனித்த வேலைகள் பலவற்றை செய்யும் தேனீக்கள் நமது இரைப்பை, தசைகள், சிறுநீரகங்கள் போன்று கச்சிதமான வேலைகளை செய்கின்றன.

இதுபோல பூச்சிகளின் கூட்டத்தைக் கவனிக்கும்போது ஒரு கூட்டமைப்பில் உள்ள தனித்த பூச்சிகளை ஒரு அற்புத உயிரினத்தின் தனித்தனி செல்கள் என்றே சொல்ல வேண்டும். உண்மையில் ஒரு தேனீயோ கரையானோ தனியாக வாழ முடியாது. தனிப்பட்ட முறையில் ஒரு ரத்தச் சிவப்பணுவைகூட அவை உற்பத்தி செய்ய முடியாது. தனது கூட்டிலிருந்து பிரிக்கப்பட்ட வெகு சீக்கிரத்திலேயே இறந்துவிடும். அவை கூட்டை விட்டுப் பிரிந்து தனிப்பட்ட உரிமையுடன் வாழ்வது சாத்தியமல்ல. தனித்துவம் என்பது மனிதர்கள் கட்டமைத்த செயற்கையான ஒன்று - அதை அதற்கான சூழலில் மட்டுமே பொருத்திப் பார்க்க வேண்டும். தேனி ஒன்று இறந்துவிட்டால் அது தேன்கூட்டிற்கு எந்த நஷ்டத்தையும் ஏற்படுத்துவதில்லை - தலைவாரும் போது சீப்பில் வந்துவிடும் முடி மாதிரிதான்.

இந்தக் கூட்டமைப்பை சிதைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கற்பனை செய்து கொள்வோம். உதாரணமாக ஒரு பெரும் புயல் காற்றில் தேன் கூடு மொத்தமும் சிதைந்துவிடுகிறது. அதிலிருந்து தேனீக்கள் அனைத்தும் பறந்து விடுகின்றன. இந்த நிலையில் தேன் கூடு என்கிற கூட்டு உயிரினத்தைப் பற்றி நாம் என்ன சொல்வது? உடல் அழிந்து போனது; ஆனால் உயிரும் அழிந்து விட்டதா? அதன் தேனீக்கள் எல்லாம் இறந்துவிட்டதெனில் நாம் சௌகர்யமாய் சொல்லிவிடலாம். மேலும் பறந்து போன தேனீக்கள் வெவ்வேறு தேன்கூடுகளில் அடைக்கலம் புகுந்து விட்டதெனில் முன்பிருந்த கூட்டு உயிரினம் என்னவாகும். என்றால் 'தனித்துவம்' எங்கிருக்கிறது?

இந்த விவாதம் தத்துவ எல்லைக்கு நகர்வதற்கு முன்பு ஒன்று மட்டும் சொல்லலாம் - தனித்துவ அடையாளம் என்பது உயிரியல் அடிப்படையைக் கொண்டது - பௌதிக கட்டமைப்பின் பேரில் இல்லை. எனில் எது எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று என கருத இடமிருக்கிறது. எனவே பரிணாம வளர்ச்சியில் மிக பிற்பாடு வரவேண்டியது அது. என்றால் ஒரு தேனீக்கும் தேனீயை உண்ணும் உயிருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன என்ற கேள்வி எழுகிறது.

இந்தப் பூச்சியினங்களிலிருந்து முதுகெலும்புள்ள பிராணிகள் வேறானவை. சிறப்புத் தகுதி பெற்றவை. நன்கு வடிவமைக்கப்பட்ட உடலையும் தீர்மானமான இயக்க விதிகளையும் கொண்டிருப்பவை. உடலின் ஒவ்வொரு உறுப்பும் குறிப்பிட்ட ஒரு பணியைக் குறிப்பிட்ட விதத்தில் நிறைவேற்றக் கூடியவை. ஆனாலும் கூட பிற பிராணிகளிடமும் இவற்றின் சில குணங்களை நாம் பார்க்க முடிகிறது.

ஸ்குவிட் என்ற ஒருவகை மீன் நம்மைப் போலவே கண்களையும் நரம்புகளையும் கொண்டுள்ளது. நுட்பமான தொடுவுணர்வும், அதிர்வுகளைக் கண்டுணரும் திறனும் கொண்ட தேனீயால் தன் நடனங்கள் மூலம் பல்வேறு தகவல்களைச் சொல்லமுடியும். தனது ஜோடியின் நறுமணத் துளியொன்றைக்கூடச் சரியாகக் கண்டுணரும் அந்துப்பூச்சியின் திறன் ஒரு வேட்டை நாயின் மோப்ப சக்தியை விட மேலானது. புற்றிலிருந்து எறும்புகள் குப்பைகளைத் திறம்பட வெளியே எடுத்துச் செல்வது கழிவுகளைச் சுத்திகரிக்கும் நமது சிறுநீரகங்களின் காரியத்தை ஒத்ததாகும். ஒரு கரையான் புற்றில் ராணிக் கரையான் தனது ரசாயன திரவத்தை புற்றின் அனைத்து கரையான்களுக்கும் அளிப்பது தமது ரத்த ஓட்டத்தில் ஹார்மோன்கள் பயணிப்பது போன்றதாகும்.

ஒவ்வொரு செல்லும் தனித்தன்மையும் தேர்வுகளும் இலக்குகளும் உடைய தனி உயிர் ஆகும். அத்தனி உயிர்கள் ஒரு பொது உத்தேசத்திற்காக இணைந்து கூட்டு உயிர்களை உருவாக்குகின்றன. அக்கூட்டு உயிர்கள் மேலும் பெரிய உயிரினங்களை ஒரு விரிந்த பார்வையில் இந்தப் பூமியே ஒரு தனி உயிர் என்று கொள்ள முடியும். இதன் ஒவ்வொரு உறுப்பு களுக்கு இடையேயும் உள்ள விருப்பு வெறுப்புகள் இணைவுகள் பிரிவுகள் ஆகிய அனைத்தும் அவற்றின் உள் ரகசியமாக பொதிந்திருக்கும் ஒரு பொதுவான நோக்கத்தின் பொருட்டே நிகழ்கின்றன. அச்சம், ஆர்வம், ஈர்ப்பு விலக்கு என்று இவை கொள்ளும் அனைத்து உணர்வுகளும் உயிர் என்ற பெரும் அலையின் துளியாகவே உள்ளன. அவ்வகையிலேயே அவை பொருள்படுகின்றன.

மூவாயிரம் கோடி வருட பரிணாம வளர்ச்சியில் சிபோனேர்போரஸ் போன்று ஒற்றைச் செல் உயிரின் சிக்கலான தொகுதிகளும் கரையான் புற்று போல பல செல் உயிரியின் தொகுதிகளும் இதுவரை கண்டறியப்பட்ட வளர்ச்சி நிலைகளின் சிறந்த உதாரணங்கள் என்பதில் சந்தேகம் இல்லை .
மிக சிக்கலான முதுகெலும்புள்ள பிராணிகளைவிட பல வகைகளில் அவை தமது வாழ்நிலைகளை அனுசரித்துப் போக பழகி விட்டன. ஆனாலும் அவை வேறு.

அவ்வாறில்லையென்றால் இந்தக் கட்டுரையை இந்தச் சோம்பேறிக்கு பதிலாக ஒரு எறும்பல்லவா எழுதிக்கொண்டிருக்கும்.
0

இக்கட்டுரை அச்சில் இருந்தபோது 2000 வருடம் ஜூன் 26ம் நாள் விஞ்ஞானத்தின் மாபெரும் கண்டுபிடிப்பொன்று அறியபட்டது. இக்கட்டுரையின் பல கேள்விகளுக்கும் விடை தர மரபியல் விஞ்ஞானம் தயாராகி இது உறுதி செய்கிறது.  

மனித மரபியல் விதிகள் குறித்த ஆதாரங்கள் ஏறக்கும் நிர்ணயிக்கப்பட்டு விட்டன. DNA வின் 3.1 மில்லி அணுக்களில் 97% தீர்மானிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 85% மிகத் துல்லியமாக மனிதனை உருவாக்கும் ரசாயன எழுத்துக்களாகக் கருதப்படும். இவற்றை இப்போது வரிசைப்படுத்தி வாக்கியமாக கொண்டு வருவதுதான் அடுத்த சவால்.

'செல்கள் செயல் புரியவும், பகுத்துக் கொள்ளவம் தேவைப்படும் போது தங்களையே சரி செய்து கொள்ளவும் பயன்படுத்துகிற புரோட்டீன்கள் உருவாகவும், அவை சரியாக பணியாற்றவும் தேவையான கட்டளைகள் ஜீன்களிடமிருந்தே பெறப்படுகின்றன. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வெவ்வேறான விசேஷ அமைப்பைக் கொண்ட இந்த ஜீன்களில், கோளாறுகள்தான் மனித நோய்களுக்கும் குறைபாடுகளுக்கும் அடிப்படை காரணங்களாகும். போன்றவை இதன் முடிவுகளில் சில.

இந்த வகையில் இக்கண்டுபிடிப்பின் மூலம் மனிதர்களை வதைக்கும் நோய்களின், குறிப்பாக புற்றுநோய், இதய நோய் போன்றவைகள், காரணங்களையும், குணப்படுத்தல்களையும், தடுக்கும் வழி வகைகளையும் பகுத்து விட முடியும். நோயற்ற மனித சமுதாயத்திற்கு இது வழி வகுக்கும்.

மனித வரலாற்றின் மாபெரும் கண்டுபிடிப்பு என்றும் 'மனிதன் நிலாவில் கால் வைத்ததற்கு இணையானது இச்சாதனை' என்றும் உலக விஞ்ஞானிகள் பலரும் பாராட்டும் இப்பணியில் முக்கியப் பங்கு பெறுவது கேம்ப்ரிட்ஜில் உள்ள சேங்கர் மையமாகும். (The Sangar Centre) அமெரிக்காவில் நிதியுதவி அளிக்கப் பெற்ற இம் மையத்தின் இப் பணியில் 18 நாடுகள் பங்கெடுத்துள்ளன.

1950 ல் ஜேம்ஸ் டி வாட்சனால் DNA இரட்டை அடுக்கு அமைப்பு கண்டு பிடிக்கப்பட்ட பிறகு மரபியல் விஞ்ஞானத்தில் நிகழ்ந்துள்ள அடுத்த சாதனை இதுவே.

இனி ஜீன்களால் உருவாக்கப்படும் புரோட்டீன்களையும், அவை மனித உடலில் நிகழ்த்தும் பணிகளையும் நிர்ணயிப்பதே இந்த ஆய்வின் அடுத்த கட்டமாக இருக்கும்!
பேராசிரியர். லயால் வாட்சன் (1939 – 2008) தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி. விஞ்ஞானத்தின் முற்கோள் (Hypothesis) தளத்தில் முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டவர். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் தகவல்களையும் தொகுத்தும் பகுத்தும் கருத்தியல் சட்டகங்களை உருவாக்குவதில் அவருடைய பங்கு குறிப்பிடத்தகுந்தது. அவருடைய ‘உயிரலை - நனவிலியின் உயிரியல்’ என்ற நூலில் உள்ள ஒரு அத்தியாயத்தின் சுருக்கமான எளிமைப்படுத்தப்பட்ட மொழியாக்கம் இது. (Lyall Watson : LIFE TIDE: A BIOLOGY OF THE UNCONSCIOUS. CHAPTOR 7. PART 3). அவருடைய SUPERNATURE என்ற புத்தகம் மிகவும் பிரசித்திப்பெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில, The Romeo Error, Omnivore – The Role of food in Human Evolution, Heaven’s Breath – A Natural History of Wind, Dark Nature – A Natural History of Evil.

( சொல்புதிது – இதழ் 4 – ஏப்ரல் 2000 )

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...