Tuesday 12 May 2020

கருப்பு வெள்ளையில் உறைந்த காலம் - யூசுப் கார்ஸ்

 




புகைப்படங்கள் காலத்தின் உறைந்த கணங்கள். உலக வரலாற்றின்
அற்புத கணங்களை, தருணங்களை ஒருநொடிப் பிடித்து நிறுத்திய
ஆவணங்கள். புகழ்பெற்ற சிற்பங்களோடு, ஓவியங்களோடு சேர்த்து
அவற்றை உருவாக்கிய ஓவியர்களை, சிற்பிகளை உலகம்
கொண்டாடுகிறது. ஆனால் புகைப்படங்களைப்
பொறுத்தவரையிலும் அவ்வாறு நிகழ்வதில்லை. புகைப்படம் ஒரு
கலையாகவோ புகைப்பட நிபுணர்கள் கலைஞர்களாகவோ
கொண்டாடப்படுவதில்லை. என்ன இருந்தாலும் ஒரு கருவியே அதை
நிகழ்த்துகிறது என்ற எண்ணமாக இருக்கலாம்.

புகைப்படக் கருவியைக் கையாளத் தெரிந்தவர்களெல்லாம் நிபுணர்கள் இல்லை. அவர்கள் எடுக்கும் எல்லா படங்களும் புகழ்பெற்றுவிடுவதுமில்லை. படமெடுப்பதோடு அவற்றை சரியான முறையில் புராசஸ் செய்வதும் எக்ஸ்போஸ் செய்வதும் முக்கியமானது.
கருப்பு வெள்ளை யுகத்தில் உலகப் புகழ் பெற்ற புகைப்படங்கள் பலவற்றை எடுத்தவர்கள் பத்திரிக்கைகளுக்காகப் படமெடுத்த புகைப்படக்காரர்களே. அவ்வாறான புகைப்படங்கள் வரலாற்றில் அழியா இடம் பெற்றிருக்கும் அதேசமயத்தில் அவற்றை எடுத்த புகைப்படக் கலைஞர்களின் பெயர்கள் காற்றில் அழிந்த சுவடுகளாக மறைந்து போயின.
20ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற மனிதர்கள் பலரது உருவங்களையும் எக்காலத்துக்குமாக நினைவில் நிறுத்திய கலைஞர் ஒருவரைப் பற்றியே இக்கட்டுரை. இருபதாம் நூற்றாண்டில் மேற்கத்திய உலகை கட்டமைத்த பெரும் ஆளுமைகள் பலரையும் இன்று நாம் காணும் புகைப்படங்கள் பலவும் இவர் எடுத்தவையே. ஆனாலும் நமக்கு அவரது பெயர் தெரியாது. அவர் எடுத்த படங்களை ரூபாய் நோட்டுகளில், அஞ்சல் தலைகளில், உலகப் புகழ்பெற்ற புகைப்பட அரங்கங்களில் நாம் கண்டுவருகிறோம், அவரது பெயரைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல்.
உலக அளவில் கறுப்பு வெள்ளையில் குறிப்பாக மனித முகங்களைப் படமெடுக்கும் உத்தியாகிய போர்ட்ரேய்ட் புகைப்படக் கலையின் உச்சமாகக் கருதப்படுபவர் யூசுப் கார்ஸ் ( Yusuf Karsh ) (December 23, 1908 – July 13, 2002)
ஒட்டாமன் பேரரசின் ( இன்றைய துருக்கி ) மார்டின் என்ற ஊரில் பிறந்தார் யூசுப் கார்ஸ். பெரும் பஞ்சமும் பட்டினியிலுமே கழிந்தது அவரது குழந்தைப் பருவம். பட்டினிக்கு தன் சகோதரி பலியானதை நேரில் பார்த்தார். ஒட்டமானம் பேரரசில் வாழ்ந்த ஆர்மீனியாவின் சிறுபான்மையினரின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரங்களினால் ஊர் ஊராக விரட்டப்படுகிறது அவரது குடும்பம்.
1925ம் ஆண்டின் புத்தாண்டுக்கு முந்தைய தினத்தன்று புயல் காற்றுக்கு நடுவே வெர்சலிஸ் என்ற கப்பல் ஹெலிபேக்ஸ் துறைமுகத்தை வந்தடைகிறது. பெய்ரூட்டிலிருந்து 29 நாள் கடற்பயணம். சிறிதளவு பிரெஞ்சும் கொஞ்சம் ஆங்கிலமும் பேசத் தெரிந்த 17 வயது இளைஞனான கார்ஸ் மிகுந்த உற்சாகத்துடன் கரை இறங்குகிறார். பனிமூடிய பொழுது. வெயில் மெல்ல எட்டிப் பார்க்கும் வேளை. சருமத்தை ஊடுருவும் குளிர். புதிய இந்த நிலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றிய எந்த எண்ணமும் அவருக்கு இல்லை. ஆனாலும் நிம்மதி. கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படும் மக்கள், தொடர்ந்து துரத்தப்படும் துயரம், அந்த வயதில் காணக் கூடாத கொடுமைகள் தந்த காயங்கள், பட்டினிக்கு பலியான சகோதரி, சொந்த மண்ணில் விட்டுவந்த குடும்பம் என எல்லாவற்றையும் தாண்டி ஏதோவொரு பாதுகாப்பை உணர்ந்தார்.
Mother Teresa
அவருக்காகக் காத்திருந்தார் அவருடைய மாமா ஜார்ஜ் நகாஸ். கியூபெக்கிலிருந்த அவர் ஒரு புகைப்படக்காரர். மருத்துவராகும் ஆசை இருந்தபோதும் பொருளாதாரச் சூழல் அனுமதிக்காததால் அவரது மாமா பரிசாக அளித்த பாக்ஸ் பிரௌனி என்ற சிறிய காமிராவுடன் வயல்வெளிகளிலும் காடுகளிலும் அலைந்திருந்தார் கார்ஸ். புகைப்படமெடுப்பதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் திறனையும் கண்ட அவரது மாமா அவரை பாஸ்டனில் அன்று பிரபலமான உருவப்படப் புகைப்படக் கலைஞரான ஜான் காரோ ( John Garo ) விடம் தொழில் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தார். ஒரு புகைப்படக் கலைஞராக கார்ஸின் பயணம் இங்குதான் தொடங்கிற்று.      1928லிருந்து 1931 வரையிலான மூன்று ஆண்டுகளில் அப்போது இருந்த மிகக் கடினமான தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வாய்த்தது. தவிர ஒரு புகைப்படத்தை எடுக்கும்போது அதில் அமைக்கவேண்டிய ஒளி அளவு, சட்டகத்தை அமைப்பது போன்ற நுட்பங்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் பலரும் காரோவின் ஸ்டுடியோவுக்கு வருவதுண்டு. உரையாடுவதுண்டு. அவர்களுடன் பழகவும் கலந்துரையாடவும் கார்ஸூக்கு வாய்ப்பாக அமைந்தது. பிரபலங்களைப் புகைப்படமெடுக்கும் ஆர்வம் அங்குதான் முளைவிட்டது. 1932ல் காரோவின் திடீர் மரணத்துக்குப் பிறகு கனடா திரும்புகிறார்.
1932ம் ஆண்டு ஒட்டாவாவில் தனக்கான ஸ்டூடியோவைத் தொடங்குகிறார். ஸ்பார்க்ஸ் வீதியில் 130ம் இலக்கமிடப்பட்ட கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் அமைகிறது அந்த ஸ்டுடியோ. நாற்பது ஆண்டுகளுக்குப் பின் 1972ல் தனது புகைப்படக் கூடத்தை ஒட்டாவாவின் புகழ்பெற்ற சாட் லாரியர் என்ற நட்சத்திர விடுதிக்கு மாற்றினார்.
ஒட்டாவாவின் நாடகக் குழுவோடு ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக ஒளியும் நிழலுமான அரங்கமைப்பிலிருந்து புகைப்படத்தில் வெளிச்சத்தைப் பயன்படுத்தும் நுட்பத்தில் ஆர்வம் ஏற்படுகிறது. அதுவே அவரது புகைப்படங்களின் தனித்துவமாகவும் அமைகிறது. நிழலும் ஒளியுமான வெளிச்சத்தின் மூலம் புகைப்படச் சூழலை உருவாக்கவும் தேர்ந்தெடுக்கவும் மாற்றவும் தேவைக்கேற்றபடி அழுத்தம் தரவும் முடியும் என்பதை அறிந்தார்.
1936ம் ஆண்டு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்டும் கனடாவின் பிரதமர் மெகின்ஸ் கிங்கும் சந்தித்தபோது அவர்களை படமெடுக்கும் வாய்ப்பு அமைகிறது. அவரது புகைப்படங்கள் கனடாவின் அன்றைய பிரதமர் மெகின்ஸி கிங்கின் கவனத்துக்கு வருகின்றன. அவற்றால் கவரப்பட்ட பிரதமர் கார்ஸூக்கு ஆதரவளிக்கிறார். இதன் வழியாகத் தொடங்குகிறது கனடாவிற்கு வருகை தரும் உலகப் புகழ்பெற்ற பிரபலங்களின் படங்களை எடுக்கும் பயணம்.
உள்நாட்டுப் போரின் காரணமாக பிறந்த மண்ணிலிருந்து உயிர்பிழைக்க விரட்டிய விதி கார்ஸூக்கு இப்போது 1941ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் மூலமாக கைகொடுத்தது. உலகப் போருக்கான ஆயத்தங்கள் தீவிரமான சமயம். ஒட்டாவாவிலிருந்த கனடாவின் நாடாளுமன்றத்தில் House of Commons உரையாற்ற வருகிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.
Vladimir Nabokov
அப்போது கார்ஸ் அவரை எடுத்த புகைப்படம் அவரை வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு பெரும் பாய்ச்சலுடன் நகர்த்தியது.
அதன் பின் அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. முதல் பதினைந்து ஆண்டுகள் அவருக்கு பயிற்சியாக சோதனையாக அமைந்த போதிலும் அதன் பிறகான நாற்பது ஆண்டுகள் பொற்காலமாகவே அமைந்தன.
ஆறு தசாப்தங்கள் தொடர்ந்து பணியாற்றிய கார்ஸ் அரசியல், ஓவியம், சிற்பம், சினிமா, இலக்கியம், விளையாட்டு என்று பலதுறைகளையும் சார்ந்த 15000க்கும் மேற்பட்ட பிரபலங்களைப் படமெடுத்துள்ளார். அவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பற்றி அவர் குறிப்பிடும்போது “இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரும் உலக நாடக மேடை” என்றார். அவர் எடுத்த புகைப்படங்கள் இருபதுக்கும் மேற்பட்டவை உலகப் புகழ்பெற்ற ‘லைஃப்’ இதழின் அட்டையை அலங்கரித்துள்ளன.
பிரபலங்கள் தங்களது உருவங்களை அழிவற்றதாக்க நினைக்கும்போது அவர்கள் அழைத்தது ஓட்டாவாவின் காஸையே. ( Karsh of Ottawa ). அவரது காமிராவுக்கு முன்னால் நிற்கும்போது அவர்களுக்குத் தெரியும், இனி அவர்கள் நிரந்தரமானர்கள், அழிவற்றவர்கள் என்று.
“அவர்கள் பிரபலமானவர்களோ அடக்கமானவர்களோ, அவர்களது ஆன்மாவில் உள்ள பெருந்தன்மையையே நான் படமெடுக்க விளைந்தேன். முன்னால் இருப்பவர்களின் மனமும் ஆன்மாவும் எத்தனைக்கெத்தனை விசாலமானதோ அத்தனைக்கத்தனை புகைப்படமெடுக்கும் என் ஆர்வம் விகாசம் கொள்ளும்” என்றே அவர் எண்ணினார்.
“எனக்கெதிரில் அவர்கள் எவ்வாறு தோன்றினார்களோ அவ்வாறாகவும் அதே சமயத்தில் இந்த தலைமுறையின் மேல் அவர்கள் செலுத்தியத் தாக்கத்தை வெளிக்கொணர்வதுமே எனது லட்சியமாக இருந்தது” என்பதில் தெளிவுடன் இருந்தார் கார்ஸ்.
ஆரம்பத்தில் பிரபலங்களைத் தேடிச் சென்ற அனுமதி பெற்று புகைப்படமெடுத்திருந்த கார்ஸ் பின்னாட்களில் பிரபலங்களே புகைப்படமெடுக்க அவருடைய ஸ்டுடியோவிற்கு தேடி வந்தனர்.
“ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கும். ஒரு புகைப்படக் கலைஞனாக அந்த ரகசியத்தை, முடிந்தால், வெளிக்கொணர்வதே எனது பணி. அவ்வாறு அது வெளிப்படுமானால் சொற்ப கணமே சுயநினைவற்ற ஒரு அசைவாக கண்ணில் சிறு ஒளியாக அது தலைகாட்டும். உலகிலிருந்து அகத்தை ஒளித்து மறைத்திருக்கும் முகமூடியை சற்றே விலக்கிக் காட்டும். அந்தவொரு நொடியில் புகைப்படக் கலைஞன் தொழிற்படவேண்டும். அல்லாவிடில் அவன் தனக்குத் தரப்பட்ட வாய்ப்பை தருணத்தை இழந்துவிடுவான்” என்று கூறிய கார்ஸ் தன் நீண்ட அனுபவத்தின் அடிப்படையில், புகைப்படக் கலை என்பது கூர்ந்த அவதானிப்பும் உள்ளுணர்வும் சேர்ந்தது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
புகைப்படமெடுக்க விரும்பும் நபர்களை அவர்களது சூழலிலேயே புகைப்படமெடுக்கவே கார்ஸ் விரும்பினார். அவர்களின் தனித்துவத்தை வெளிக்கொணரும் பொருட்டு சைகைகள், முக அசைவுகள், உடல் மொழி, பார்வை கோணம் என்று பிம்பங்களின் மொழியையே அவர் பயன்படுத்தினார். புகைப்படங்களை எடுக்க அவர் எளிமையான பின்னணிகளையே அமைக்க விரும்பினார். கவனத்தை திசைதிருப்பும் பொருட்களை படச்சட்டத்துக்குள் அவர் அனுமதிக்கவில்லை.
ஒருவரைப் புகைப்படமெடுக்கும் முன்பு முடிந்தவரையிலும் அவரைப் பற்றி எல்லா தகவல்களையும் சேகரித்து அவரைப் பற்றித் தெரிந்துகொள்வது முக்கியம். கேமிராவின் முன்பு உட்கார்ந்திருப்பவரோடு இயல்பாக உரையாட இது உதவும். அவ்வாறு அவர் இயல்பாக உரையாடும்போதே இயற்கையான முகபாவங்களும் அசைவுகளும் நிகழும். அதுவே நல்ல புகைப்படத்துக்கு முக்கியம்.
1942 ல் கனடா நாடாளுமன்றத்தில் இரண்டாம் உலகப் போர் குறித்து உரையாற்ற வந்த சர்ச்சிலைப் புகைப்படமெடுக்க கார்ஸுக்குத் தரப்பட்ட கால அளவு வெறும் இரண்டு நிமிடங்களே. சர்ச்சிலுக்கு இந்த ஏற்பாடு தெரிவிக்கப்படவில்லை. புகைப்படத்துக்கு போஸ் தரும் சூழலிலோ மன அமைப்பிலோ அவர் இல்லை. சினம் கொப்புளிக்கும் முகத்துடன் அறைக்குள் நுழைகிறார் சர்ச்சில். அவரது தோற்றமும் முகமும் புகைப்படமெடுக்க கச்சிதமாக உள்ளதை கார்ஸ் கவனிக்கிறார். ஆனால் அவரது பற்களுக்கிடையில் கடிபட்டுத் தொங்கும் சுருட்டு இடைஞ்சலாகத் தெரிகிறது. சுருட்டை எடுத்துவிடும்படி கார்ஸ் சொன்னபோது சர்ச்சில் முறைக்கிறார். விதியால் உந்தப்பட்ட கார்ஸ் முன்னால் சென்று கணத்தில் சுருட்டை அவர் வாயிலிருந்து பிடுங்கி எடுக்க சினம்கொண்ட சர்ச்சில் சினம்பொங்கும் கண்களுடன் தலையை ஆக்ரோஷத்துடன் முன்னால் நீட்டுகிறார். மறுநொடியில் புகைப்படமெடுக்கிறார் கார்ஸ். அந்த நொடி ஆக்ரோஷம் கொண்ட வெல்லமுடியாத சர்ச்சிலை மட்டும் வரலாற்றில் பிடித்து நிறுத்தவில்லை, பிரிட்டனையும்தான். வரலாற்றில் அதிக அளவு பிரதியெடுக்கப்பட்ட புகைப்படம் சர்ச்சிலின் அந்தப் படம்தான். ஆனாலும் இந்தப் படம் கார்ஸுக்கு அவ்வளவு பிடித்தமானதில்லை. சில நிமிடங்களுக்குப் பின் சர்ச்சிலின் சினம் சற்றே தனிந்த பிறகு எடுக்கப்பட்ட இன்னொரு புகைப்படமே அவருக்குப் பிடித்தமானது. ஏனெனில் இந்தப் படத்தில் சர்ச்சில் கொஞ்சம் புன்னகைத்திருப்பார்.

Winston Churchill, 1941
புகைப்படம் எடுத்து முடித்தபின் சர்ச்சில் கார்ஸிடம் சொல்கிறார் “கர்ஜிக்கும் சிங்கத்தைக்கூட உன்னால் ஒருநொடி நிற்கச் செய்து புகைப்படமெடுக்க முடியும்.”
கொஞ்ச காலத்துக்குப் பிறகு இந்த சம்பவத்தைப் பற்றி ஒரு நேர்காணலில் குறிப்பிடும்போது “பத்திரிக்கையாளர்கள் இந்த சம்பவத்தைப் பெரிதுபடுத்திவிட்டார்கள். அதன் பிறகு சர்ச்சிலை இன்னும் இரண்டு முறை படமெடுத்துவிட்டேன். அவர் வாயிலிருந்து சுருட்டை எடுத்தது அந்த கணத்தில் நிகழ்ந்தது. சட்டையில் தேவையில்லாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு நூல் இழையை எடுப்பதுபோலத்தான் அதை நான் நீக்கினேன். அவர் மீதான மரியாதையுடனும் மதிப்புடனுமே அவ்வாறு செய்தேன். அவரும் அந்த நொடியில் சட்டென எதிர்வினையாற்றினார். அவரது அந்த முகபாவம், திட்டமிடப்பட்டதில்லை என்றாலும், அந்த சமயத்துக்கு பொருத்தமாக அமைந்துபோனது, அவ்வளவுதான் ” என்று குறிப்பிட்டார்.
புகழ்பெற்ற ஓவியர் பிகாசோவை படமெடுக்க அவரது இல்லத்துக்குச் செல்கிறார். படமெடுக்க அவரைச் சம்மதிக்கச் செய்ததே சாதனை என்ற நிலையில் படக் கித்தான்கள் இறைந்து கிடந்த கூடத்தில் அவரது குறும்புத்தனம் மிக்க குழந்தைகள் சைக்கிள்களை ஓட்டிக் கொண்டிருக்க படமெடுப்பது சாத்தியமில்லாது போகிறது. வலாரசில் உள்ள அவரது செராமிக் சிற்பக் கூடத்தில் படமெடுக்கலாம் என்று பிகாசோ இன்னொரு வாய்ப்பைத் தருகிறார். கார்ஸ் தன்னுடைய உதவியாளருடனும் 200 பவுண்ட் எடையுள்ள உபகரணங்களுடனும் அங்கே சென்று காத்திருக்க அந்தக் கூடத்தின் உரிமையாளர் பிகாசோ ஒருபோதும் சொன்ன நேரத்துக்கு வந்ததில்லை, எல்லோரிடமும் இப்படித்தான் அவர் சொல்வார் ஆனால் வரமாட்டார் என்று கூறுகிறார். ஆனால் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும்படி சரியான நேரத்துக்கு வந்து சேர்கிறார் ‘முதிய சிங்க’மான பிகாசோ. புதிய சட்டை அணிந்திருக்கிறார். உற்சாகத்துடன் படமெடுக்க முழுமையான ஒத்துழைப்பு தருகிறார்.
Pablo Picasso
1957ல் ஹெமிங்வேயை படமெடுக்க ஹவானா அருகில் உள்ள அவருடைய வீட்டுக்கு ( Finca Vigia ) செல்கிறார் கார்ஸ். அவருடைய நாவல்களில் வரும் நாயகர்கள் அனைவரும் ஒன்று கலந்ததுபோல் ஒருவரைச் சந்திக்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பு. ஆனால் ஹெமிங்வே மிக மென்மையானவராக உள்ளார். ‘அதுவரையிலும் நான் படமெடுத்ததிலேயே மிகுந்த கூச்சம் மிகுந்த மனிதர் ஹெமிங்வேதான்’ என்று பின்பு குறிப்பிட்டார் கார்ஸ். வாழ்க்கையினால் மிகக் குரூரமாக அலைகழிக்கப்பட்டபோதிலும் நிலைகுலையாத நபராக இருந்தார் ஹெமிங்வே. தனது நான்காவது ஆப்பிரிக்கப் பயணத்தின்போது ஏற்பட்ட மோசமான விமான விபத்தின் பாதிப்புகளிலிருந்து அப்போதும் அவர் மீண்டிருக்கவில்லை.
புகைப்படமெடுப்பதற்கு முன்பு குறிப்பிட்ட நபர்களைக் குறித்து ஆராய்வது கார்ஸின் வழக்கம். முந்தைய நாள் மாலையில் ஹெமிங்வேயின் பிரியத்துக்குரிய லா ஃபுளோரிடா என்கிற மது விடுதிக்கு கார்ஸ் செல்கிறார். ஹெமிங்வே விரும்பிப் பருகும் ரம்மும் எலுமிச்சை ரசமும் கலந்த டைகிரி என்ற பானத்தை சுவைத்துப் பார்க்கிறார்.
Ernest Hemingway
மறுநாள் அவரைச் சந்தித்தபோது காலை மணி ஒன்பது. ஹெமிங்வே அவரது சமையலறையிலிருந்து கேட்கிறார் “குடிப்பதற்கு என்ன வேண்டும்?” கார்ஸ் மிகவும் உற்சாகத்துடன் சொல்கிறார், “டைகிரி சார்.” ஹெமிங்வே சற்றே ஆட்சேபிக்கும் தொனியில் கேட்கிறார் “இந்த நேரத்திலா, கார்ஸ்?”. பிறகு சொல்கிறார் “எழுதும்போது நான் ஒருபோதும் குடிப்பதில்லை. காத்திரமான ஒன்றை எழுதியபடியே குடிக்க முடியாது.” கார்ஸ் படமெடுத்தபோது ஐன்ஸ்டீன் அணிந்திருந்தது போன்று ஒரு ஸ்வெட்டரை அணிந்தபடி படமெடுத்துக் கொள்ள வேண்டும் என ஹெமிங்வே விருப்பம் தெரிவிக்கிறார். அவ்வாறு எடுக்கப்பட்டதுதான் ஹெமிங்வேயின் மிகவும் பிரபலமான படம். மிகுந்த கண்ணியத்துடனும் விலகலுடனுமாக தோற்றம் தரும் அந்தப் படத்தில் அவருக்குள் இருக்கும் எல்லையற்ற இருட்டிலிருந்து அவர் வெளியேறியது போல அமைந்திருந்தது.
அந்தப் படம் எடுத்து நான்கு வருடங்களுக்குப் பிறகு ஹெமிங்வே தற்கொலை செய்துகொண்டார்.
1971 ம் ஆண்டு கியூபாவின் தேசிய விடுமுறை நாளான ஜுலை 26ம் நாள் ஹவானாவை சென்றடைந்தேன். புரட்சியைக் குறித்தும் அதன் நன்மைகளைப் பற்றியும் ஆயிரக்கணக்கான மக்களிடையே அவர் உரையாற்றுகிறார். காஸ்ட்ரோவைப் பொறுத்தவரை அந்த எழுச்சிமிக்க இரண்டரை மணி நேர உரை மிகச் சுருக்கமானது. பொதுவாக அவர் ஆறுமணி நேரம் உரையாற்றக் கூடியவர். அடுத்த மூன்று நாட்களும் எனக்கு வழிகாட்டியாகவும் தோழமையாகவும் அமைந்தவர் செலியா சான்சஸ். கியூபாவின் துடிப்புமிக்க தேசிய செயலாளர். படமெடுக்கவென அவர் மூன்று இடங்களை தெரிவு செய்திருந்தார். பளிச்சென்ற சுவர்களும் புத்தக அலமாரிகளுமாய் இருந்த கூடத்தை நான் தெரிவு செய்தேன். காஸ்ட்ரோ தனது அன்றாட பணிகளை மேற்கொள்ளும் இடமும் அதுவே என பிறகு தெரிந்ததும் நிறைவாயிருந்தது.
1948ம் ஆண்டு பார்வைத்திறனற்ற ஹெலன் கெல்லரின் கண்களை முதன்முதலாகப் பார்த்தபோது எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன், ‘மூன்று வயதிலிருந்து பார்க்கவோ கேட்கவோ வாய்க்காத இவருக்கு வெளிச்சம் ஆன்மாவிலிந்து வருகிறது.’ அவரைச் சந்தித்தபோது அவர் அபாரமான தொடுவுணர்வுகொண்ட தன் விரல்களால் என் முகத்தைத் தடவினார். உணர்ச்சிக்கொந்தளிப்பான அனுபவம் அது. என்னை அவருக்கு முன்பே தெரியும் என்பது போலிருந்தது. அவருடைய விசுவாசமிக்க தோழி பாலி தாம்ஸன் அவருடைய கையில் பிரெய்லியை இருத்தினார். கெல்லரின் அன்பும் அனுசரணையும் விழிப்புமிக்க மனமும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இது நமது முதல் சந்திப்பு கிடையாது, ஏற்கெனவே நான் உங்களின் எழுத்தின் வழியாக உங்களைச் சந்தித்திருக்கிறேன் என்று சொன்னேன். ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் நான் படித்த கட்டுரைகளில் ஒன்று கெல்லரின் “சூரிய அஸ்தமனத்தை போற்றுவது எப்படி?”. “இப்போது உங்களைச் சந்தித்த பின் சூரிய அஸ்தமனத்தைப் பற்றி நான் யோசிக்கமாட்டேன், சூரிய உதயத்தைத்தான் நினைத்துக் கொள்வேன்” என்று சொன்னேன். உடனடியாக அவர் பதில்சொன்னார் “அஸ்தமனத்தின் நிழல்களை புறக்கணித்துவிட்டு சூரிய உதயத்தை மட்டும் லட்சியமாகக் கொள்ளவேண்டும் என மனிதர்களிடம் எவ்வாறு நான் சொல்லமுடியும்?”. அவர் நெற்றியில் நான் மெல்ல முத்தமிட்டபோது சிறுமியைப் போல முகம் சிவந்தார். பிறகு கெல்லர் தன் விரல்களை என் முகத்தின் மீது தடவியபடியே சொன்னார் “நான் என் விரல்களால் உன்னை படம் பிடிக்கிறேன் பார்.”
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை 1948ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன். வெகு சாதாரமான, குழந்தையைப் போன்ற மனிதர். அவரைப் பற்றிய எந்தவொரு புகழுக்கும் பொருந்தாத ஆகிருதி. அவரது மனதின் ஆற்றலையோ அல்லது அவரது ஆளுமையின் வேகத்தேயோ அறிந்துகொள்ள அறிவியலைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. மனிதனின் சிறுமைகளைப் பொருட்படுத்தாமல் பிரபஞ்சத்தைக் காணக்கூடிய ஒருவரின் துயருடனும் அமைதியுடனும் பேசினார். இன்னொரு அணுகுண்டு இந்த பூமியின் மீது விழுமானால் அதன் பின் இந்த உலகம் எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு அவர் சோர்வுடன் பதிலளித்தார் “அதன் பின்பு மோஸாரிடின் இசையைக் கேட்க முடியாமல் போய்விடும்.”

Albert Einstein, 1948
உலக அரசியல் அரங்கின் முக்கிய ஆளுமைகளான கென்னடி, மார்டின் லூதர் கிங், ஜவஹர்லால் நேரு, குருசேவ், நிக்ஸன் உள்ளிட்டவர்களை படமெடுத்த அவர் நிலவில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங், யூரி ககாரின், ஆல்டிரின் ஆகிய மூவரையும் சேர்த்து படமெடுத்திருந்தார். தாமஸ் மன், ராபர்ட் ஃப்ராஸ்ட், சாமர்செட் மாம், ஜான் ஸ்டீன்பெக், விளாடிமிர் நபகோவ், யாசுநரி கவபட்டா உள்ளிட்ட இலக்கிய மேதைகளையும் தன்னுடைய புகழ்பெற்ற புகைப்பட வரிசையில் இடம்பெறச் செய்தார். உலகப் புகழ் பெற்ற சிற்பிகளான அல்பெர்டோ கியாமெடி, ஜாக் லிசிட்ஸ், கியாகிமா மன்சு, மரினோ மரினி, அமெரிக்கப் பாடகிகள் மரியா ஆன்டர்சன், யான் பெயஸ், சர்வதேச அளவில் பிரபலமான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களான கிறிஸ்டியன் பர்னாட், மைக்கல் டி பெக்கேவையும்கூட அவர் படம் பிடித்திருக்கிறார்.  அமெரிக்க நடனமங்கை மார்தா கிராமை படம்பிடித்த கார்ஸ் ஜப்பானின் நோ இசை வல்லுநரான ரோபிடா கிட்சாவையும் புகைப்படம் எடுத்திருக்கிறார். லாரன்ஸ் ஆலிவர், மார்சல் மர்கி, சோபியா லாரன், எலிசபெத் டெய்லர், ஆட்ரி ஹெப்பன் உள்ளிட்ட நடிகர்களும் இவர் காமிராவுக்கு தப்பவில்லை. மார்க் ஷெகல், அகஸ்டஸ் ஜான், மிரோ ஆகிய ஓவியர்களை படம் பிடித்த கார்ஸ் ஆல்பர்ட் ஹிச்சாக்கையும் தவறவிடவில்லை.
இந்திய அளவில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, பண்டிட் ரவிசங்கர் ஆகியோரை அவர் படமெடுத்திருக்கிறார். காந்தியை அவர் படமெடுத்ததாக தெரியவில்லை.
Jawaharlal Nehru, 1949
அறுபது ஆண்டுகள் ஓயாது உழைத்த கார்ஸ் 1993ம் ஆண்டு தனது 84வது வயதில் புகைப்படமெடுப்பதை நிறுத்துவதாக அறிவித்தார். அவர் கடைசியாக படமெடுத்தது அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளின்டனையும் அவரது மனைவி ஹிலாரி கிளின்டனையுமே. தனது ஸ்டூடியோவை மூடினார். அதன் பிறகு அவர் தொழில்முறை ஒப்பந்தங்கள் எவற்றையும் ஏற்கவில்லை. 1997ம் ஆண்டு ஒட்டாவாவிலிருந்து பாஸ்டனுக்கு குடிபெயர்ந்தார். தனது கடைசி காலத்தில் இளம் புகைப்படக் கலைஞர்கள் பலருக்கும் பயிற்சி அளித்தார். புகைப்படங்களை பாதுகாத்து பராமரிப்பதில் ஆர்வம்கொண்ட ஜெரி பீல்டர் காஸின் லட்சக்கணக்கான படங்களை ஒழுங்குபடுத்தினார். அவரது மறைவுக்கு முன்பே 355000 படங்களுக்கான நெகடிவ்களை ஒழுங்குபடுத்தி ஒட்டாவாவில் உள்ள கனடாவின் தேசிய ஆவணக்காப்பகத்தின் வசம்  ஒப்படைத்தார்.
அவரது புகைப்படங்கள் அடங்கிய புகழ்பெற்ற பல நூல்கள் பதிப்பில் உள்ளன. தனது புகைப்பட புத்தகங்களை பிரத்தியேகமாக விசேஷ கவனத்துடன் பதிப்பித்தார். இதற்கென ஸ்விட்சர்லாந்தில் உள்ள அச்சகம் ஒன்றை அவர் தெரிவு செய்திருந்தார்.
நாடகக் குழவினரோடு பணியாற்றிய காலத்தில் கார்ஸ் அங்கு நடித்துவந்த நாடக நடிகை சலாங்கேவின் மேல் காதல் கொண்டார். 1939ல் திருமணம். 1961ல் புற்றுநோயால் அவர் மரணமடைந்தார். அதன் பின் 1962 ல் அவரைவிட 21 வயது இளையவரான, மருத்துவ எழுத்தரான எஸ்டரிலிடா மரியா என்பவரை மணந்துகொள்கிறார். இரண்டு மனைவிகள் வாய்த்தபோதும் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.
2002 ம் ஆண்டு ஜூலை 13ம் நாள் பாஸ்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில், சிக்கலான ஒரு அறுவை சிகிச்சை பலனளிக்காமல் போக, கார்ஸ் உயிர் நீத்தார்.
ஓட்டாமன் பேரரசிலிருந்து தப்பி ஓடி ஒட்டாவாவில் கோலோச்சிய யூசுப் கார்ஸ் இறுதிவரையிலும் தன்னை ஒரு ஆர்மேனியனாகவே கருதினார். அவரது தேசப்பற்றை போற்றும் வகையில் 2017ம் ஆண்டு ஆர்மேனிய அரசு கார்ஸின் மார்பளவு சிற்பத்தை கனடாவுக்கு அளித்தது. புகழ்பெற்ற கார்ஸின் புகைப்படக் கூடம் இருந்த சத் லாரியர் விடுதிக்கு முன்பாக அந்த சிற்பம் நிறுவப்பட்டுள்ளது.
காலத்தால் அழியாத புகைப்படங்களை நமக்களித்த யூசுப் கார்ஸ் அந்தப் புகைப்படங்கள் பார்க்கப்படும், பிரதியெடுக்கப்படும் ஒவ்வொரு முறையும் ஒளியும் நிழலுமாக உயிர்த்து மறைகிறார் தற்காலிகமாக.
பின் குறிப்பு

தியாகு புத்தக நிலையத்தில் ஒருநாள் மாலையில் நண்பரும் சிறந்த நுண்ணுயிர் புகைப்படக் கலைஞருமான ஜெயராமுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் தற்செயலாக உச்சரித்த பெயர்தான் யூசுப் கார்ஸ். உருவப் புகைப்படமெடுப்பதில் குறிப்பாக கருப்பு வெள்ளை புகைப்படங்களில் அவரது மேதமையைக் குறித்து சிறப்பாகச் சொன்னார். இதனால் ஏற்பட்ட ஆர்வமும் உந்துதலும் கார்ஸைக் குறித்துத் தேடத் தொடங்கினேன். அவரது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏராளமான தகவல்களும் புகைப்படங்களும் உள்ளன. இருந்தபோதும், இன்னொரு மாலை வேளையில் ஜெயராமின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த கார்ஸின் புகைப்பட நூல்களை பொறுமையாகப் பார்த்தேன். மரினா திபேத் ( Marina Tippett ) என்பவர் எழுதிய அவரது வாழ்க்கை சரிதையை தந்து உதவினார் ஜெயராம்.
இவற்றின் பலனே இந்தக் கட்டுரை. ஜெயராம் அவர்களுக்கு நன்றி.
( தமிழினி, ஆகஸ்ட் 2018 ) 

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...