Saturday, 30 May 2020

சித்திரக் கூடம் 2 - எங்கிருந்தோ வந்தான்



மீண்டும் ஒரு முறை புனேவுக்கு செல்ல வேண்டியாகிவிட்டது. இந்த வருடத்தில் இது நான்காவது முறை. இந்த முறை இந்த பயணத்தை எப்படியாவது தவிர்த்துவிடப் பார்த்தும் இயலவில்லை. வண்டியில் ஏறிய நிமிடத்திலிருந்து இதற்கு முந்தைய பயணம் எனக்கு தந்த அனுபவத்தின் பாரம் என்னை அமைதியிழக்கச் செய்தபடியே இருந்தது. உள்ளே செல்லாமல் வாசலில் நின்றபடியே பகலை கழித்துவிட முடியும். ஆனால் இன்றைய இரவு என்னை என்ன செய்யப் போகிறதோ என்கிற பயம் இப்போதே எனக்குள் நிறைந்திருந்தது. தர்மாவரத்திலேயே ஏதாவது ஒரு தூக்க மாத்திரையை விழுங்கிக் கொண்டு படுத்துவிடலாமா என்றெல்லாம் யோசனை வந்தது. என்னவானாலும் எப்படியாவது கூத்தி (Gooty) ரயில்நிலையமோ, பிளாட்பாரத்தின் மேற்கு கோடியில் உள்ள அந்த நீண்ட சிமெண்ட் பெஞ்சோ என் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இப்போதே இரவு என்னை அச்சுறுத்தத் தொடங்கிவிட்டது.
0
கோவையிலிருந்து புனேவுக்கு கோயமுத்தூர் குர்லா விரைவு வண்டியில் பயணிப்பதுதான் வழக்கம். காலையில் 7 மணிக்கு புறப்பட்டால் மறுநாள் காலையில் 8 மணிக்கெல்லாம் புனேவில் இறங்கிவிடலாம். இந்த வண்டியின் தொடக்க காலத்தில் உணவுக்கூட (catering) வசதி கிடையாது என்பதால் பெரிய அவஸ்தையாக இருக்கும். மூன்று வேளைக்கும் பொட்டலம் கட்டிக் கொண்டு செல்லவேண்டும். இல்லையென்றால் திண்டாட்டம்தான். சில மாதங்களுக்கு பிறகு அரக்கோணத்தை சேர்ந்த ஒரு சமையல் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுக் கொண்டது. குளிரூட்டப்பட்ட பெட்டியின் கீழ்இருக்கை கிடைத்துவிட்டால் சுகம்தான். பெரும்பாலும் இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணிப்பவர்கள் அடுத்தவர்களிடம் பேசுவதை 'அநாகரிகம்' அல்லது 'அதிகபிரசங்கித்தனம்' என்று நினைப்பவர்கள். எனவே நம்மிடம் ஒரு நல்ல புத்தகம் இருந்தால் போதும், வண்டியில் தரப்படும் மெல்லிய வெண்ணிற போர்வையை போர்த்திக் கொண்டு கால் நீட்டி சாய்ந்து படிக்கத் தொடங்கிவிடலாம். குளிரூட்டப்பட்ட பெட்டியின் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்ப்பது என்பது ஊமைப்படம் பார்ப்பது போன்றதுதான். பலசமயங்களில் நிறுத்தத்தில் நின்று புறப்படுவதுகூட தெரியாமல் போகும். கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே நகரும் ஓசையில்லா காட்சிகள் நிறமில்லாத ஓவியத்துக்கு நிகரானவை. பெட்டிக்குள்ளும் நால்வர் பயணிக்கும் ஒரு கூண்டுக்கு (Bay) தனியாக திரைபோட்டுக் கொள்ளும் 'வசதி' இருப்பதால் அந்தப் பெட்டிக்குள்ளேயே வேறு யார் பயணிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் குறைவு. அதே பெட்டியில் மோசமான இருக்கை என்றால் முதலாம் எண் படுக்கைதான். பெட்டியின் முதல் கூண்டின் தலைமாட்டில்தான் குளிரூட்டும் சாதனம் பொருத்தப் பட்டிருக்கும். எனவே முதல் கூண்டில் மேலொன்றும் கீழொன்றுமாக இரண்டு படுக்கைகள். மேல் படுக்கையின் எண் ஒன்று. அதில் படுத்துக்கொள்ளும்போது எதற்குள்ளோ நம் தலையை செருகிக்கொண்டு படுத்திருப்பதுபோலவும் எப்போதும் ஒரு பாரம் நம் தலைக்கு மேலாக அழுத்திக்கொண்டிருப்பது போலவும் தொல்லையாக இருக்கும்.

நல்ல வேளையாக இந்த முறை எனக்கு பிடித்தமாதிரியே கீழ் இருக்கை. பெட்டிக்கு நடுவில் அமைந்த கூண்டு. கோவையில் எப்போதும் இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். பெங்களூரில் மதியம் ஒரு மணிக்குத்தான் முழுக்க கன்னடத்தின் வாசனையோடு பெட்டியின் இருக்கைகள் நிறையும். தொலைவு விரைவு வண்டியில் பெட்டியை இருக்கைக்கு கீழே வைக்கும்போது கவனம். தின்பண்டங்களோ, பயணத்துக்கான உணவுப் பொட்டலங்கள் உள்ள பையையோ இருக்கைக்கு கீழே வைத்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெருச்சாளிகள் போன்ற எலிகள் உங்கள் பொட்டலங்களுக்காக நிலையத்தில் வண்டி வந்து நிற்க காத்திருக்கும் சிவப்பு நிற சட்டையணிந்த சுமைகூலிகள் போல காத்திருக்கும். வண்டி புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு கீழே ஏதோ சத்தம் கேட்கிறது என்றால் அலட்சியப்படுத்தவேண்டாம். உங்களுக்கான மதிய உணவை பிறகு நீங்கள் சாப்பிட முடியாது போகும். முன் அனுபவம் இருந்ததால் சாப்பாட்டு மூட்டையை மேலே இருந்த ஒரு கொக்கியில் மாட்டிவிட்டேன். சலவை வாசனையுடன் பணியாளர் தந்த கம்பளி, வெண்ணிற போர்வைகள், சிறிய தலையணை இவற்றை ஒழுங்கு செய்து கொண்ட பிறகு அன்றைய செய்தித் தாளை பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். நால்வர் பயணிக்கும் அந்தக் கூண்டில் நான் மட்டும்தான் இப்போதைக்கு. முதல் பக்கத்தில் கண்கள் ஊன்றும்போதே தூக்கம் வந்தது. டிசம்பர் மாதத்தின் குளிர் காலையில் கொஞ்சம் முன்கூட்டியே எழுந்த அசதி. அப்படியே சாய்ந்து கொண்டேன்.

“Excuse me” என்ற குரல் கேட்டு விழித்துக் கொண்டேன். அதற்குள்ளும் திருப்பூர் வந்துவிட்டதா என்ன என்று பரபரப்புடன் எழுந்து கொண்டேன். கூண்டின் நடுவே நெடுநெடுவென்று அவன் நின்றிருந்தான். “ட்வென்டி ஃபைவ், யா...'' என்று தன்னுடைய இருக்கையின் எண்ணை கண்டுகொண்ட உற்சாகத்துடன் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த பையை இறக்கி மேல்இருக்கையில் போட்டான். என்னுடைய இருக்கைக்கு மேலே உள்ள படுக்கை. வண்டி இன்னும் ஓடிக்கொண்டுதான் இருந்தது. திருப்பூர் வந்திருக்கவில்லை. எதிரில் இருந்த காலி இருக்கையில் உட்கார்ந்தான். மெல்லிய நீல நிறத்திலான ஒரு டீ சர்ட். மார்பில் ‘CATCH ME, IF U CAN’ என்று கோணலாக வெள்ளை நிறத்தில் எழுதியிருந்தது. காக்கி நிறத்தில் பேகி அல்லது கார்கோ என்று சொல்லப்படும் ஏராளமான பைகள் கொண்ட கால்சட்டை.

அழுக்கான நெடுநாள் உபயோத்தில் நொந்துபோனது போலான கேன்வாஸை கால்மேல் கால்போட்டபடி கழற்றியவன் நான் விழித்துக்கொண்டதை பார்த்து ''AM I DISTURBED YOU'' என்றான். அவன் செய்கைகளையே உற்றுப் பார்த்திருந்த எனக்கு அவன் கேட்டதை சட்டென்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. சுதாரித்துக் கொண்டு இல்லை என்பது போல தலையாட்டினேன். கேன்வாஸை கீழே தள்ளினான். பையிலிருந்து செய்தித்தாளில் சுற்றியிருந்த சாதாரண செருப்பை எடுத்து கீழே போட்டுக் கொண்டு செய்தித்தாளை கசக்கி எடுத்துக் கொண்டு வெளியே போனான். மீண்டும் ஈரக் கைகளைத் துடைத்தபடி உள்ளே வந்தவனிடம் ''நீங்க கோயமுத்தூர்லேயே ஏறிட்டிங்களா?'' என்று மெதுவாகக் கேட்டேன். ''ஹோ... that's a big story'' என்றவன் கால்களை நீட்டி எனது படுக்கையின் விளிம்பில் வைத்துக் கொண்டு முகத்தை துடைத்துக் கொண்டான். திடமான உடல்வாகு. சராசரிக்கும் கூடுதலான உயரம். கைகள் வலுத்திருக்க கைவிரல்கள் நீண்டு தடித்திருந்தன. ''ஆமா. ஆனா ரொம்ப சொதப்பல பிளான். I am from Palkad. மும்பை போகணும். வேற டிரெய்ன் அமையல. அதான் காலையிலே பாலக்காட்லேர்ந்து கெளம்பி இங்க வந்து. அல்மோஸ்ட் நான் வரும்போது டிரெய்ன் கெளம்பிருச்சு.'' அவன் பேசும் விதம் விநோதமாக இருந்தது. தமிழும் இல்லாமல், ஆங்கிலமும் இல்லாமல் கொஞ்சம் மலையாள வாசனையுடன் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அழுத்தமாக பற்களில் கொஞ்சம் கடித்துப் பேசுவது போல இருந்தது.

''இந்த கம்பார்ட்மெண்ட் வேற எஞ்சின்கிட்டயா? பிளாட்பாரத்துல ரெண்டு கிலோமீட்டராவது நடக்கணும். முடியல. அதான் வேற கம்பார்ட்மெண்ட்ல ஏறிட்டேன். பின்னே You are also to Mumbai?''

அலட்சியம் துலங்கும் அவனது உடல் மொழி ஒரு கல்லூரி மாணவனைப் போல அல்லது கணிப்பொறியாளனைப்போல இருந்தது. இவனும் நிச்சயமாய் ஏதேனுமொரு பன்னாட்டு நிறுவனத்தில் இரவும் பகலுமாக அந்நியனுக்கு சேவை செய்பவனாக, ‘I am going abroad, India, what a nasty land? yaar..’  என்று ஒரு வெளிநாட்டுப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவின் தூய்மையை மேன்மையை பறைசாற்றிக் கொண்டு அங்கே உள்ளூரில் வெள்ளையனிடம் நேரம்பார்க்காமல் உழைத்துச் சிரித்துக்கொண்டு டாலர் எண்ணும் கணிப்பொறி நிபுணனாகத்தான் இருக்கவேண்டும். அவனிடம் நான் அந்த கேள்வியை கேட்கவில்லை. நீ என்ன செய்கிறாய்? எங்கே செல்கிறாய்?

ஆனால் நான் கேட்டதுபோல அவன் தொடர்ந்து பதில் சொன்னான். ''I am not a Software guy. பாக்கறவங்க எல்லா அப்படித்தான் கேப்பாங்க. நெலமை அப்படி. நா ஒரு பேஸ்கட்பால் பிளேயர். எம் பேரு அனீஷ். கேரளா ஸ்டேட் பிளேயர். மும்பைல வொர்லில ஒரு டிரெய்னிங் கேம்ப். அங்க போறேன். லாஸ்ட் மினிட் அரேஞ்சமெண்ட்ஸ. சொதப்பல். இட்ஸ் ஓகே'' என்று சிரித்தான்.

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். பயணத்தின்போது இப்படி ஒரு விளையாட்டு வீரனை அல்லது ஒரு நாடக நடிகனை ஒரு பத்திரிக்கையாளரை சந்திப்பது என்பது எப்போதும் நடந்துவிடாத ஒன்று. விளையாட்டு வீரர்களின் ஆகிருதி அபாரமானது. அவர்களை மைதானத்தில் விளையாடும்போது அல்லது தொலைகாட்சியில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் ஏராளமான வித்தியாசங்கள். முதலில் அவர்களுடைய உயரம். உடல்வாகு. எளிதில் வசீகரித்துவிடும். இதுவே ஒரு கிரிக்கெட் வீரனாக இருந்தால் விமானத்தில் பறந்து கொண்டிருப்பான். ஐபிஎல் ஏலத்தில் கழுத்தில் விலைப்புள்ளி மாட்டி ஏலத்தில் எடுக்கப்பட்டவனாக இருந்தால் சொந்த விமானமேகூட வைத்திருப்பான். அமெரிக்காவின் தேசிய விளையாட்டை இந்தியாவில் விளையாடும் ஒரு சில 'தேறாத'துகளில் இவனும் ஒன்றுபோல.

''ஏசில டிக்கெட் கெடைக்காம. செகண்ட் கிளாஸ்ல புக் பண்ணினேன். டிரெய்ன்ல வந்து TTEயை செரிபண்ணி இந்த பர்த் அலாட் ஆச்சு. I hate travelling in Second Class. ஒரே குப்பை. புழுக்கம். ஒரே பெட்டியில ஆறு பேர். ஒருத்தர் படுத்தா மத்தவங்க உக்கார முடியாம. நாஸ்டி'' என்று உடலை சிலிர்த்துக் கொண்டான். என் முகம் அவனுக்கு எதையாவது உணர்த்தியிருக்க வேண்டும். இத்தனைக்கும் அவன் சொன்னதை காதில் வாங்கிக் கொண்டதைத் தவிர நான் வேறு எதையுமே உத்தேசித்திருக்கவில்லை. 'சாரி இது என்னோட பிராப்ளம். I am not complaining anybody.''

ஈரோட்டில் சில பேர் உள்ளே ஏறினார்கள். கொஞ்சம் வெயிலும் வெளிச்சமுமாய் அந்த நாள் உக்கிரம் கொள்ளத் தொடங்கியிருந்தது. யாரையோ பார்த்து அனீஷ் எழுந்துகொண்டான். நான் திரும்பிப் பார்த்தேன். பளிச்சென்று அந்த நங்கை நின்றிருந்தாள். ''what's ur number?'' அனீஷ் இயல்பாக அவள் முகம் பார்த்துக் கேட்க ''23'' என்று சக்கரங்கள் வைத்த பெட்டியை நிமிர்த்தினாள். தோள்பையை என் இருக்கையின் நுனியில் வைத்தவள் திரும்பவும் சென்று இன்னொரு பெரிய பையை எடுத்து வந்தாள். இதற்குள் அனீஷ் என்னுடைய இருக்கையில் வந்து உட்கார்ந்து கொண்டான். பெட்டியை இருக்கைக்கு கீழே தள்ளி வைத்தான். அதற்கடுத்தாற்போல கருப்பு பையையும் இருத்தித் தந்தான். சன்னமாக சிரித்துக் கொண்டே நன்றி சொன்னவள் எதிர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டாள். கைப்பையிலிருந்து டிக்கெட்டை எடுத்து ஒரு முறை சரிபார்த்துக் கொண்டாள். கருப்பு நிற சட்டை அவள் நிறத்தை எடுத்துக் காட்டியது. நீல நிறத்தில் ஒரு ஜூன்ஸ். முப்பது வயதுக்கும் கொஞ்சம் கூடுதலாயிருக்கவேண்டும். நளினமாக அதே சமயம் மரியாதையான தோற்றத்துடன் இருந்தாள். பரிசோதகர் வந்து டிக்கெட்டை சரிபார்த்துக் கொடுத்ததும் அனீஷ் அவருக்கு பிரத்யேகமாக நன்றி சொன்னான்.

“ஐ ஆம் அனீஷ். கோயிங் டு மும்பை'' என்று தன்னை அவளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். சிநேகமாய் சிரித்துக் கொண்டே அவள் ''I am பர்வதவர்தினி. புனேல ஒரு டிரெய்னிங்'' என்றபடியே என்னை பார்த்தாள். நானும் என்னைப் பற்றி சுருக்கமாக சொன்னேன்.

பெட்டிக்குள் காலை சிற்றுண்டியின் இதமான வாசனை மெல்லப் பரவத் தொடங்கியது. மணி எட்டரைக்கும் மேலாக இருக்கவேண்டும். எனக்கும் பசி. சிற்றுண்டி பணியாளன் இட்லி பொங்கல் என்று கேட்டபடியே வருவது தெரிந்தது. அனீஷ் எட்டிப் பார்த்தான். அவனிடம் நான் ''அனீஷ். நீங்க டிபன் எதுவும் வாங்காதீங்க. நா டிபன் எடுத்துட்டு வந்துருக்கேன்'' என்று கொஞ்சம் உரிமையுடனே சொன்னேன். எதிர் இருக்கை நங்கையும் பையிலிருந்து உணவுப் பாத்திரத்தை எடுத்தாள். அனீஷ் அவசரமாக மறுத்தான். ''தேங்க்ஸ் யூ. கேரீ ஆன்.  நா பாத்துக்கறேன்...'' நான் மீண்டும் அவனிடம் எதையும் வாங்க வேண்டாம் என்று வலியுறுத்தியபடியே என்னுடைய உணவுப் பொட்டலத்தை எடுததேன். எனக்கு நான்கு இட்லிகள் போதும் என்றபோதும் கூடுதலாக இன்னொரு பொட்டலம் எடுத்து வந்திருந்தேன். பக்கத்தில் யாராவது வயதானவர்களோ குழந்தைகளோ இருந்தால் பயணத்தின்போது இட்லி உபயோகப்படும். தந்து உதவ முடியும் என்பதால் அந்த கூடுதல் பொட்டலம் எப்போதும் என்னிடம் இருக்கும்.

சிறிய டப்பாவில் எண்ணெய் மிளகாய்பொடியுடன் இட்லி வாசனையுடன் இருந்தது. ஆனாலும் அனீஷ் பணியாளனிடம்தான் பொட்டலம் வாங்கினான். மரியாதைக்காக அவளிடம் எடுத்துக் கொள்ளும்படி தயங்கியபடியே கேட்டேன். அனீஷ் பிடிவாதமாய் மறுத்திருந்ததால் கொஞ்சம் தயக்கம். பெண்கள் பொதுவாக எதையும் சட்டென்று வாங்கி கொள்ளமாட்டார்கள். நாசுக்காய் மறுத்துவிடுவார்கள். டப்பாவிலிருந்த இட்லி அவளுக்கு நம்பிக்கை தந்திருக்கவேண்டும். திறந்து வைத்திருந்த சப்பாத்தி டப்பாவின் மூடியில் இரண்டு இட்லிகளை எடுத்து வைத்துக் கொண்டாள். ''இப்ப நா இட்லி எடுத்துக்கறேன். காலையில அவசரத்துல சப்பாத்தி மட்டுந்தான் செய்ய முடிஞ்சுது. நீங்க மத்தியானம் சப்பாத்தி கொஞ்சம் ஷேர் பண்ணிக்கோங்க'' என்றாள். அவளுடைய குரல் சன்னமாய் ஆனால் தீர்மானமாய் இருந்தது.

சில்வர் காயில் சுற்றிய தோசையை பிரித்து சாப்பிடத் தொடங்கியிருந்த அனீஷ் தோளைக் குலுக்கியபடியே ''I hate this thing yaa.. வீட்ல இருந்து பொட்டலத்தை கட்டி எடுத்துட்ட வர்ற இந்த பிசினஸனாலே எனக்கு அலர்ஜி. அங்க மும்பைலயோ புனேலயோ போயி ஒரு வாரமோ பத்து நாளோ கெடச்சதத்தான் சாப்பிட போறோம். இந்த ஜேர்னி ஒரு நாள். இதுக்காக வீட்ல காலைலேயே நாலு மணிக்கு எந்திரிச்சு இட்லி சப்பாத்தி எல்லாத்தையும் செஞ்சு, பேக் பண்ணி, எதுக்கு இதெல்லாம்? இதோ வேளா வேளைக்கு கேட்டரிங்ல வேணுங்கறத செஞ்சு கொண்டு வர்றான். தட்ஸ் ஆல்'' என்று பேசிக் கொண்டே போனவன் சட்டென்று எங்கள் இருவரையும் உற்றுப் பார்த்தான். 'சாரி. நா பொதுவாத்தான் சொன்னேன். வீட்ல அம்மாகிட்ட பேசற மாதிரியே உங்க கிட்டயும். அது என்னோட டேஸ்ட். உங்களுக்கு வீட்டு சாப்பாடுதான் வேணும். அது உங்க டேஸ்ட், உங்க பிரிஃபரென்ஸ்.''

பொதுவாக நான் ஒவ்வொரு பயணத்துக்கும் முன்பு இதே தியரியை என் மனைவியிடம் விளக்குவதுண்டு. ஆனால் அது எடுபடவேயில்லை இது வரையிலும். பர்வதா ஒன்றுமே சொல்லாமல் காரியமாக இட்லியை சாப்பிட்டு விட்டு, இரண்டு ஆப்பிள்களை எடுத்து நறுக்கி தட்டில் வைத்தாள். அவளுடைய பையில் கத்தி, சிறிய தட்டு, கரண்டி, கையை துடைப்பதற்கான பேப்பர் நேப்கின் என்று எல்லா சமாச்சாரங்களுமே இருந்தன. அனீஷ் ஆப்பிள் துண்டுகளை ஆட்சேபணையின்றி எடுத்துக் கொண்டான். ''என்ன இருந்தாலும் homely food தனிதானே அனீஷ். முடிஞ்ச வரைக்கும் செஞ்சு எடுத்துட்ட வர்றதுல தப்பு இல்ல. நீங்க ஸ்போர்ட்ஸ் மேன். கல்லைத் தின்னாலும் செரிக்கும். எங்களுக்கு எல்லாம் அப்பிடி இல்லியே. Always tied to the chair and the monitor. நாங்க இப்பிடி இருந்தாத்தான் செரியாகும்.'' பர்வதாவின் வார்த்தைகளை கவனமாக கேட்டவன் தலையாட்டியபடியே இருந்தான். ''Yaa.. You may be right'' என்று தோசையை மடக்கி வாயில் திணித்துக் கொண்டான்.

சேலம் தாண்டி தொப்பூர் நெருங்கும்போது கண்ணாடிக்கு வெளியே மலைகளும், சரிவுகளும், வெயிலோடிய பிரதேசங்களுமாய் காட்சிகள் வசீகரமாயிருந்தன. இருப்புப் பாதையையொட்டிய அந்தப் பள்ளத்தாக்கில் ஒரு கோயில் உண்டு. சம்பிரதாயமான அம்சங்கள் இல்லாத பாறைப் பிளவொன்றில் இயற்கையாக அமைந்த ஆஞ்சநேயர் என்று ஒரு முறை சகபயணி ஒருவர் சொன்னார். சனிக்கிழமை பயணங்களின்போது அந்த கோயிலுக்கு எங்கிருந்தோ நடந்து வரும் பக்தர்களை பார்க்க முடியும். இன்றும் மண்பாதைகளில் பக்தர்களின் கூட்டம் உற்சாகமாக கோயிலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. சற்றே தள்ளி ஒரு சிறு அணைக்கட்டும் அதில் தேங்கிய தண்ணீரும் தட்டுப்பட்டது. இரண்டு சரிவுகளுக்கிடையே எளிமையான ஒரு அணைக்கட்டு. எட்டு மதகுகள். தண்ணீர் பீறிட்டு வெளியேறும்போது கம்பீரமாக இருக்கக்கூடும். இப்போது வழிந்தோடும் சிற்றலைகளுடன் சாந்தமாக இருந்தது. சாலை வசதிகள் இவ்வளவு மேம்பட்டிராத காலத்தில் சேலத்திலிருந்து பெங்களுர் பயணிக்கும்போது தொப்பூர் ஒரு துர்கனவு என்று சொல்லுவார்கள். கனரக வாகனங்களில் ஏதேனும் ஒன்று விபத்துக்குள்ளாகிவிட்டால் இரண்டு பக்கங்களிலும் வண்டிகள் தொடராக காத்திருக்க நேரிட்டுவிடும். இப்போது நான்கு வழிப் பாதைகள். வாகனங்கள் விரைகின்றன.



''நியூஸ் பேப்பர் இருக்கா?'' என்று குரல் கேட்டு மூவரும் நிமிர்ந்தோம். திரைச்சீலையை கையில் விலக்கிக் கொண்டு எட்டிப் பார்த்தவருக்கு வயது 60க்கும் மேல் இருக்கும். நறுவிசாக வெட்டப்பட்ட தலை முடியின் பெரும்பகுதி வெண்மை கொண்டிருந்தது. கச்சிதமான கண்ணாடி. வெண்ணிற சட்டை. பழுப்பு நிறத்தில் கால்சட்டையும், முரட்டு கதர் செருப்பும் அணிந்திருந்தார். மூவரும் ஒருவரையொருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டோம். என் கையிலிருந்த செய்தித் தாளில் அப்போதுதான் தலையங்கத்தை படிக்கத் தொடங்கியிருந்தேன். அனீஷிடமோ பர்வதாவிடமோ செய்தித் தாள் இருக்கவில்லை. அனீஷ் வெகு இயல்பாக ''SORRY SIR, நியூஸ் பேப்பர் இருக்கு, ஆனா நா படிக்கணும். அப்பறமா தர முடியுமா பாக்கறேன்.'' என்றான். அவர் இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அனீஷின் பதில் அவரை எதுவுமே செய்யவில்லை என்பதுபோல சிரித்தார். அவருடைய கண்கள் பர்வதாவிடமே நிலைத்திருந்ததை சில கணங்கள் கழித்துதான் நான் உணர்ந்தேன்.

''நீங்க கோயமுத்தூர்தானே...'' என்ற பர்வதாவை உற்றுப் பார்த்துக் கொண்டே சிரித்தார். புத்தகத்தில் மீண்டும் கவனத்தைத் திருப்பியிருந்த பர்வதா கேள்வியுடன் அவரைப் பார்த்தாள். பதில் சொல்லப் பிடிக்காதவள் போல தலையை வெறுமனே அசைத்துவிட்டு மீண்டும் புத்தகத்தில் கண்களை திருப்பிக் கொண்டாள். அவர் அப்போதும் நகராமல் பிடிவாதமாய் நின்றுகொண்டிருந்தார். ''அதில்ல, உங்கள ஆர் எஸ் புரம் அன்னபூர்ணாவுல ஒரு நாள் லஞ்ச் டைம்ல பாத்தமாதிரி ஒரு ஞாபகம்...'' அவர் சிரிப்பது இப்போது ஆபாசமாக இருந்தது. பர்வதாவுக்கு அவருடைய பேச்சு அசெளகரியத்தை தந்திருக்க வேண்டும். ஒரு முறை தீர்க்கமாக அவரை ஏறிட்டு பார்த்துவிட்டு கண்களை திருப்பிக் கொண்டாள். அனீஷ் மெதுவாக ''சார், அது அவங்க ஒண்ணுவிட்ட தங்கையா இருக்கும். நீங்க உங்க சீட்டுக்கு போனீங்கன்னா நா அவங்கள போன் பண்ணி வரச் சொல்றேன்'' என்று எழுந்துகொண்டான். அவரை வெளியே தள்ளாத குறையாக திரைச் சீலையை இழுத்து மூடினான். அவருடைய முகம் மறைந்ததும் பர்வதா சிரித்தாள். ''இது மாதிரி ஆளுக எங்க பாத்தாலும் வந்துடுவாங்க மோப்பம் புடிச்சிட்டு. கொஞ்சம் எடம் குடுத்தீங்க... இங்கயே வந்து ஒட்டிக்குவாங்க'' என்றவன் மீண்டும்.. ''Believe me... இன்னும் ஒரு மணி நேரத்துல மறுபடியும் எதையாவது சாக்கு வெச்சுட்டு இங்க வராறா இல்லையா பாருங்க'' என்றான்.

இன்னும் ரயில் நிலையத்துக்கான முழுமையான அந்தஸ்தை எட்டிவிட்டிருக்காத ஒசூரில் வண்டி நின்றபோது எழுந்து வெளியே வந்தேன். தொலைவில்  மலைக்கோயில் படிகளுடன் கம்பீரமாக நின்றது. சந்திரசூடேஸ்வரர் கோயில். ஒவ்வொரு முறையும் ஒசூரை கடந்து செல்லும்போது இந்த மலைக் கோயிலை கொஞ்ச நேரம் பார்க்காமல் என்னால் செல்ல முடிந்ததில்லை. காற்றில் அந்த குரல் என்னை கோயிலின் மண்டபத்துக்கு அழைத்து சென்றது. பாவாடை தாவணியுடன் சப்பணமிட்டபடி அன்றொரு நாள் அவள் பாடிய அந்தப் பாடல் இதோ இப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறது. வண்டி நகரத் தொடங்கியது. மலைக் கோயில் மெல்ல மெல்ல என் பார்வையில் இருந்து மறைந்தது. அவளுடைய பாடல் மட்டும் இன்னும் தீர்க்கம் கொண்டு எனக்குள் நிறைந்தது. தாள முடியாதவனாய் உள்ளே வந்தேன்.

வண்டி ஒசூரைத் தாண்டியதும் திரைச்சீலையை விலக்கிக் கொண்டு அவர் எட்டிப் பார்த்தார். ''கொஞ்ச நேரம் இங்க உக்காந்துக்கறேன். அங்க டிபன் சாப்படறாங்க, தப்பா நெனக்காதீங்க.'' என்று யாருடைய அனுமதியும் இல்லாமலே உரிமையாக உள்ளே வந்தவர் பர்வதாவின் இருக்கையின் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டார். பர்வதா அப்போது தலையணையை ஜன்னலோரமாய் இருத்திக் கொண்டு சாய்ந்தபடி படித்துக் கொண்டிருந்தாள். சட்டென்று கால்களை இழுத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டாள். அனீஷ் மேலிருந்து எட்டிப் பார்த்தான். தலையில் அடித்துக் கொண்டவன் என்னை பார்த்தான். நானும் சிரிப்புடன் தலையாட்டினேன். அவனும் சிரித்தபடியே PLAYING CHESS WITH THE GOD புத்தகத்திற்கு திரும்பினான்.  அனீஷ் எதுவும் சொல்லாதது பெரியவருக்கு தைரியத்தை தந்திருக்க வேண்டும். நுனியில் உட்கார்ந்திருந்தவர் இப்போது உடலை தளர்த்தி நன்றாக சாய்ந்துகொண்டார். பர்வதாவைப் பார்த்து ''நீங்க கோயமுத்தூர்தானே... நா கேட்டதுக்கு பதிலே சொல்லலியே?'' என்றார். அவருடைய கண்கள் அலைபாய்ந்தன. பர்வதா மெல்ல முறுவலித்துவிட்டு புத்தகத்தில் ஆழ்ந்தாள்.

எனக்கு எழுத்தில் கவனமே ஓடவில்லை. பெரியவரின் நடவடிக்கைகளின் மீதே கண் இருந்தது. அனீஷூக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பதுபோல அவருடைய கண்கள் பர்வதாவிடமே நிலைகொண்டிருந்தன. ''என்ன படிக்கறீங்க?'' என்று இன்னும் சற்று அருகில் நகர்ந்துகொண்டு பர்வதாவின் புத்தகத்தை எட்டிப் பார்த்தார். எட்டிப் பார்க்கும்போது அவருடைய உடல் தாராளமாக அவள்பக்கமாக சாய்ந்தது. அவள் இதை எதிர்பார்க்கவில்லை. சற்றே பதற்றத்துடன் நகர்ந்துகொண்டவள் புத்தகத்தை அவரிடம் நீட்டினாள். சிரித்தபோதும் அது இயல்பாக இல்லை. CHASING THE MANSOON புத்தகத்தின் தலைப்பை படித்தவர் ''இதென்ன நாவலா? கட்டுரையா?'' என்று பொதுவாக கேட்டவர் ''இப்பல்லாம் யாரு படிக்கறாங்க. எங்க நேரம்?'' என்று அலுத்துக் கொண்டார். ஆனாலும் புத்தகத்தை வெறுமனே அவருடைய கைகள் புரட்டியபடியிருந்தன. பர்வதா ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். ''நா தமிழ் புக்ஸ் எதுவும் படிச்சதில்ல. இங்கிலிஷ்ல சேஸ், இர்விங் வாலஸ் னு நெறைய படிச்சேன். இப்பவும் அதுமாதிரிதான் புடிக்குது. இந்த ஆன்மிகம், தன்னம்பிக்கை இதெல்லாம் சுத்த ஜல்லியா இருக்கு.'' அவர் தனக்குத்தானே சொல்லிக் கொள்வதுபோல இருந்தது. அவர் சொன்னதை யாரும் கேட்டதுபோலுமில்லை. அவர் அதைப் பற்றி கவலைபட்டது போலவுமில்லை.

அனீஷ் கீழே இறங்கி என் இருக்கையில் அமர்ந்தான். பர்வதாவிடமிருந்து பார்வையை திருப்புவது அவருக்கு சிரமமாயிருந்தது. அனீஷ் சில நிமிடங்கள் எதுவுமே பேசாமல் அவரையே உற்றுப் பார்த்தபடியிருந்தான். என்னப்பா என்பதுபோல சிரித்தார். அனீஷின் பார்வையில் முரட்டுத்தனம் கூடியிருந்தது. ''உங்க சீட் நம்பர் என்ன?'' என்றபடியே எழுந்தான். ''வாங்க'' என்று அவர் தோளைப் பற்றினான். சற்றும் அசராமல் ''இருப்பா. டென்ஷன் ஆகாதே. நாந்தான் சொன்னேனே... அங்க எல்லாம் சாப்படறாங்கன்னு.. அதான் இங்க வந்து கொஞ்ச நேரம் உக்காரலாமேன்னு வந்தேன். நீங்க இங்க மூணு பேருதான இருக்கீங்க.'' பர்வதாவைப் பார்த்து சிரித்தபடியே வெளியே நகர்ந்தார்.

''நீங்க என்ன எதுவுமே ரியாக்ட் பண்ணாம இருக்கீங்க. இப்புடியே விட்டீங்கன்னா... ஊரு போய் சேர்ற வரைக்கும் உங்க மடிலயே உக்காந்துருவான்'' என்று சற்று உரத்த குரலில் சொன்னவன் ஒரு நொடியில் ''சாரி.. Am I crossing my limit?'' என்று சுதாரித்தான். பர்வதா இயல்பாக சிரித்தாள். ''அப்படியில்ல... எதோ வயசானவர். கொஞ்ச அசடு வழியறார். எதாவது சொல்லி அசிங்கமா போயிடும்னுதான். It's ok. அதான் போயிட்டாரில்ல.''

''நீங்க ரொம்ப கூலா சொல்றீங்க. இது மாதிரி ஆளுகள நம்ப முடியாது'' ஆத்திரம் தணியாதவனாய் அனீஷ் மேலே படுக்கைக்கு தாவி படுத்துக் கொண்டான்.

பெங்களுரில் கன்னட வாசனையுடன் காலி இருக்கைகள் மொத்தமும் நிரம்பின. ஆனாலும் எங்களுடைய கூண்டுக்கு வரவேண்டிய அந்த நான்காம் நபர் வந்து சேராமலேயே வண்டி புறப்பட்டுவிட்டது. வண்டி நின்றதுமே வெளியில் இறங்கிப்போன அனீஷ் இன்னும் திரும்பி வந்திருக்கவில்லை. ஏதாவது பெட்டியில் தாவி ஏறிக் கொண்டிருப்பான். பர்வதா எதிலும் கவனம் சிதையாதவளாய் படித்துக் கொண்டிருந்தாள். நான் கால்களை நீட்டி படுத்துக் கொண்டேன். பெட்டியிலிருந்து இரைச்சலை மீறி தூக்கம்.

முழங்காலில் எதுவோ மோதியது. கடுமையான வலி. திடுக்கிட்டு எழுந்துகொண்டேன். வலது முழங்காலில்தான் அடி. ''சாரிப்பா...'' என்றபடியே பெரியவர் பெட்டியை கீழே தள்ளிக் கொண்டிருந்தார். நிமிர்ந்து உட்கார்ந்தேன். தன்னுடைய சாமான்களை அவர் ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். முழங்காலை தடவிக் கொண்டேன். வெளியே போனவர் படுக்கை விரிப்புகள், தலையணையை எடுத்து வந்தார். டிக்கெட் பரிசோதகரின் உதவியுடன் காலி இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டார் என்று தெரிந்தது. உரிமையுடன் பர்வதாவின் அருகில் இப்போது உட்கார்ந்துகொண்டார். மேலே பார்த்தேன். அனீஷ் இன்னும் வந்திருக்கவில்லை.

அவன் நான்கரை மணிக்கு எழுந்து  கீழே வந்தபோது பெரியவர் பர்வதாவுக்கு மிக அருகில் உட்கார்ந்துகொண்டு ஜன்னலில் வெளியே எட்டிப் பார்க்கும் சாக்கில் அவளையே விழுங்கிக் கொண்டிருந்தார். அவரை முறைத்தபடியே வெளியே போனவன் முகத்தைத் துடைத்துக் கொண்டு கையில் சூடான காபியுடன் வந்தான். ''ஒரு நிமிஷம் இதப் புடிங்க. இன்னொரு கப் வாங்கிட்டு வரேன்'' என்று என்னிடம் இரண்டு  கோப்பைகளை தந்தான். நான் ஒன்றை பர்வதாவிடம் நீட்டினேன். அவள் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். பெரியவர் அவள் அசையும் ஒரு நொடியையும் தவறவிடாத கவனத்திலேயே இருந்தார். தனக்கான கோப்பையுடன் வந்தமர்ந்த அனீஷ் பெரியவரிடம் ''என்ன இங்கயே வந்து செட்டிலாயிட்டீங்களா?'' என்று எரிச்சலுடன் கேட்டான். சூடான காபியை அவர் தலையில் காபியை கொட்டிவிடுவானோ என்று பயமாக இருந்தது. பெருமையுடன் களிப்புடன் அவர் தலையாட்டியது இன்னும் எரிச்சலை தந்திருக்கவேண்டும். ''வயசாயிடுச்சில்ல, கொஞ்சம் நிதானமா இருந்தாத்தான் என்ன? அவங்க பாருங்க பாவம், மூலையில ஒடுங்கி உக்காந்துருக்காங்க, நகருங்க சார்.'' என்றான்.

''நீங்க ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க மிஸ்டர். நானும் பாத்துட்டே இருக்கேன். அப்பலேர்ந்து அவங்க ஒண்ணும் அப்ஜெக்ட் பண்ண மாட்டேங்கறாங்க. நீங்க என்னவோ ரொம்பவும்தான் நல்லவனாட்டமா டிராமா பண்றீங்க. Be Cool...''

அனீஷ் அவரை அறையப் போகிறான் என்று பயமாய் இருந்தது. அவன் பர்வதாவை முறைத்துவிட்டு கையிலிருந்து காலி கோப்பையை நொறுக்கினான். எங்களிடமிருந்து கோப்பைகளை வாங்கி எடுத்துக் கொண்டுபோய் வெளியே போட்டான்.

குளிரூட்டப்பட்ட பெட்டிக்கு வெளியே கதவோரமாய் வந்து நின்றுகொண்டோம். அவன் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான். ஆந்திராவின் பொட்டல் வெளிகளில் மாலை நேரத்து சூரிய மஞ்சள் மேலும் சிவந்து கிடந்தது. வெகு தொலைவுக்கு ஆள்நடமாட்டமே இல்லை. அனீஷ் மெல்ல பேசினான். பாலக்காட்டை அடுத்து திருச்சூர் சாலையில் உள்ள திருவில்லாமல சொந்த ஊர். அப்பா கொச்சின் துறைமுகத் துறை அதிகாரி. அம்மாவும் வயதான மாமாவும் திருவில்லா மலையில் குடும்ப சொத்துக்களை நிர்வகித்துக் கொண்டு இருக்க, அனீஷ் பள்ளிப் படிப்பை பாலக்காட்டில் முடித்திருக்கிறான். பள்ளிப் படிப்பின்போதே கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம். தொடரந்து கல்லூரி அணி, மாநில அணி என்று விளையாடி இப்போது தேசிய கூடைப்பந்து அணியிலும் விளையாடுகிறான். அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம் என்று இருக்க இவனும் தன் போக்கில் கூடைப்பந்தாட்ட குழுவினருடன் திரிந்துகொண்டிருக்கிறான். பெரிய அங்கீகாரமோ, சம்பாத்தியமோ இல்லை என்ற மனக்குறையோ நாடு முழுவதும் கிரிக்கெட்டை மட்டும் தலையில் வைத்து ஆடிக்கொண்டிருக்கிறது என்ற வழக்கமான புலம்பலோ அவனிடம் இல்லை. அவனுடைய கனவுகள் விநோதமானவைகளாக இருந்தன. திசையற்று விரிந்து காட்டாறு போல கட்டில்லாமலும் இருந்தன. திருவில்லாமலை கிராமத்தில் ஒரு பெரிய நூலகம் நிறுவ வேண்டும். உலகத்தின் அனைத்துவிதமான நூல்களையும் கொண்டு சேர்த்து எல்லா பள்ளி மாணவர்களுக்கும் பயன்படவேண்டும் என்று அதற்கான அடிப்படைகளை விளக்கினான். மொழியின் அடிப்படையில் மாநிலங்களை பிரித்தது பெரும் முட்டாள்தனம் என்றும் மாநிலங்களின் தனித்த அதிகாரங்களை நீக்கி எல்லாற்றையும் மையப் படுத்தவேண்டும் என்றும் அதன் மூலம் பல அடிப்படை பிரச்சினைகளை களைந்துவிட முடியும் என்றும் தர்க்கங்களை அடுக்கினான். இந்திய அரசு விளையாட்டுத் துறையில் கவனம் செலுத்தாமல் இருப்பதன் பலன்களை அடுத்த பத்தாண்டுகளில் உணரும் என்றும் சர்வதேச அளவில் எந்தவொரு விளையாட்டிலும், குறிப்பாக, தடகள விளையாட்டில் இந்தியா தகுதி பெறாமலே போய்விடும் என்றும் இப்படியொரு தலைமுறை வளர்ந்து வரும் போது உலக அரங்கில் தன்னை வல்லரசாக நிறுவிக்கொள்ளும் வாய்ப்பும் நம்பிக்கையும் நிச்சயமாக இருக்கப் போவதில்லை என்றும் விவாதித்தான். வண்டி தர்மாவரத்தில் நின்றபோது பருப்பு வடையும் நீண்ட பச்சை மிளகாயுமாய் வியாபாரம் அனல் பறந்தது.

அந்திப் பொழுதின் கிரணங்கள் மங்கிப் போய் இருள் சூழ்ந்து கொண்டது. தொலைவில் மின்னும் கிராமங்களின் நகரங்களின் மின்னொளி வெளியை விழுங்கும் வேகத்தில் ரயில் தடதடத்தோடியது. குளிர் காற்று நடுங்க வைத்தது. அனீஷ் கொஞ்சம் திணறினான். உள்ளே வந்தோம். பெட்டிக்குள்ளும் குளிரின் ஆதிக்கம் இருந்தது. வெளியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பெட்டியின் வெம்மையை கூட்டி வைக்க வேண்டும். இல்லையென்றால் கம்பளியைப் போர்த்திக்கொண்டும்கூட தூங்க முடியாது. பர்வதா நான் உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தாள். கூடுதலாக ஒரு ஜெர்கினை இப்போது அணிந்திருந்தாள். பெரியவர் இன்னும் மாறாத அதே பல்லிளிப்புடன் அவளிடம் பேச்சுக் கொடுத்தபடியே இருந்தார். அனீஷ் பெரியவரை உரசிக் கொண்டு உட்கார்ந்தான். பர்வதாவின் முகம் சரியாக இல்லாததை அனீஷ் நொடியில் உணர்ந்துகொண்டான். ''Any Problem?'' என்று அவரைப் பார்த்தபடியே பர்வதாவிடம் கேட்டான். ஜெர்கினை இழுத்துவிட்டுக் கொண்டவள் ''He is crossing his limits'' என்று மெல்ல கிசுகிசுத்தாள். பெரியவர் சாதாரணமாக எழுந்துகொள்வதுபோல நகர்ந்து வெளியே போனார். நாங்கள் இருவரும் வெளியே போன நேரத்தில் பெரியவர் கொஞ்சம சுதந்திரம் எடுத்துக் கொண்டு அவளைத் தொட்டு பேசத் தொடங்கியிருக்கிறார். இரண்டொரு முறை எச்சரித்தும் அவருடைய கைகள் கட்டுப்படவில்லை. மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு சட்டை விளிம்பில் எட்டிப் பார்ப்பதும், நீட்டி முறிப்பது போல கைகளை உதறிக் கொண்டு உரசுவதுமாய் சிரித்திருக்கிறார். சில்மிஷங்களைத் தாங்க முடியாமல் ஜெர்கினை அணிந்துகொண்டு எதிரில் போய் உட்கார்ந்த பிறகும் கால்களை நீட்டிக் கொண்டு தன் காரியத்தை தொடர்ந்திருக்கிறார். அவள் சொல்லும்போது முகம் சிவந்துவிட்டது. யார் காதிலும் விழக்கூடாது என்பதுபோல மெல்ல தணிந்த குரலில்தான் சொன்னாள். ஆனால் அழுதுவிடுகிற பதற்றம் இல்லை. ''I know, I know...'' என்று கைகளைப் பிசைந்தான் அனீஷ். பர்வதாவின் முகவாட்டம் அவனை மிகவுமே தொந்தரவு செய்துவிட்டது தெரிந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. எனக்குமே அந்த எண்ணம்தான் இருந்தது.

ஒரு சில நிமிடங்களில் சிரித்துக் கொண்டே பெரியவர் உள்ளே வந்தார். அவரைக் கண்டதும் அனீஷ் கைகளைத் துடைத்துக் கொண்டு எழுந்தான். ஒரு நிமிடம் முகத்துக்கு நேராக அவரை முறைத்தான். பெரியவரின் முகச்சிரிப்பு மங்கியது. ''எனக்குத் தெரியும், இவன் இப்படித்தான் செய்வான்னு எனக்குத் தெரியும், காலைலேர்ந்து இங்கயே மோப்பம் புடிச்சிட்டு திரிஞ்சான்'' என்று பேசிக்கொண்டே இருந்தவன் பளீரென்று அவர் முகத்தில் அறைந்தான். ஒரு நொடி அந்த ரயிலே நின்று புறப்பட்டது போல இருந்தது. பொறி கலங்கி பெரியவர் சாய்ந்து இருக்கையில் உட்கார்ந்தார். அவர் சுதாரிப்பதற்குள் இன்னொரு அறை விழுந்தது. ''அடிக்காதீங்க அனீஷ்'' பர்வதா சற்றே தடுமாறினாள். நான் அனீஷை பிடித்து இழுத்தேன். இதற்குள் பக்கத்தில் இருந்தவர்கள் சூழந்துகொண்டார்கள். ''அவரு அந்த சீட்லயே இப்படி பண்ணினாருன்னுதான் அனுப்பிச்சு விட்டோம். வயசுதான் ஆயிடுச்சு... புத்தி தெருப் பொறுக்குது'' என்று குரல்கள் எழுந்தன.

அனீஷ் பயணச்சீட்டு பரிசோதகரை அழைத்து வந்தான். அவர் வந்து பெரியவரை பார்த்ததுமே ''என்னய்யா நீ? பிரச்சினை பண்ணிட்டு'' என்று தலையில் அடித்துக் கொண்டார்.

வேறு இடத்துக்கு, இல்லை, வேறு பெட்டிக்கே மாற்றிவிடுகிறேன் என்ற பரிசோதகரின் எந்த சமாதானத்திற்கும் அனீஷ் ஒத்துக் கொள்ளவில்லை. அடுத்த நிறுத்தத்தில் அவரை ரயில்வே போலீஷிடம் ஒப்படைத்தாக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான். பெரியவர் எதைப்பற்றியும் கவலைப்படாதவர்போல தன்னுடைய சாமான்களை சேர்த்து எடுத்துக் கொண்டு பரிசோதகரின் பின்னாலேயே போனார். வெளியேறும்போதும் அவர் பர்வதாவைப் பார்த்து சிரிக்கத் தவறவில்லை. அனீஷ் அவர்களை பின்தொடர்ந்தான். பர்வதா சற்று நேரம் வரை ஜன்னலுக்கு வெளியே நகரும் இருட்டையே வெறித்துக் கொண்டு வந்தாள்.

வண்டி அனந்தபூரை நெருங்கிய போது அனீஷ் எழுந்து வெளியே சென்றான். நான் பின் தொடர்ந்தேன். வண்டி நிலையத்தில் நுழைந்து நிற்பதற்குள்ளாகவே ஓட்டமாய் இறங்கி ஓடினான். இரண்டு நிமிடங்களுக்குள்ளாகவே ஒரு ரயில்வே போலீஷ் காவலருடன் பெட்டிக்குள் நுழைந்தான். காவலர் பெரியவரிடம் விசாரிப்பது தெரிந்தது. அனீஷிடம் அவர் சமாதானமாக சில வார்த்தைகள் பேசினார். பரிசோதகரும் அனீஷை சமாதானப்படுத்துவதில் முனைந்தார். ஆனால் அனீஷ் எதற்கும் மசியவில்லை. அவரை இந்த நிமிடம் வண்டியிலிருந்து இறக்கிவிடாவிட்டால் மேல் அதிகாரிகளை அழைக்க வேண்டியிருக்கும் என்று அழுத்தமான ஆங்கிலத்திலும் பிறகு இந்தியிலும் எச்சரித்தான். பெரியவர் எப்படியும் பயணத்தை தொடரமுடியும் என்பதுபோல அனீஷின் பதற்றத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னும் சில பெண்களும் பெரியவர்களும் பெரியவரின் காரியங்களை காவல் அதிகாரியிடம் விளக்கினார்கள். அவரை கீழே இறக்கிவிடுவது சரிதான் என்று வாதிட்டனர்.

அனீஷ் கீழே இறங்கி நிலைய அதிகாரியை சந்திக்கப் போவதாக மிரட்ட வேறு வழியில்லாமல் காவல் அதிகாரி பெரியவரை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினார். கையிலிருந்த பெட்டியுடன் இறங்கிய பெரியவரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அடுத்த வண்டி எப்போது என்று பட்டியலில் பார்க்கத் தொடங்கியிருந்தார். வண்டி புறப்படுகிற வரையிலும் அந்த காவல் அதிகாரி அவர் அருகில் நின்று ஏதோ எச்சரிப்பது தெரிந்தது.

மீண்டும் வந்து உட்கார்ந்தபோது அனீஷிடம் மூச்சிறைப்பு தெரிந்தது. பெண்களிடம் முறைகேடாக நடக்கும் மனப்பான்மையைக் குறித்த தன் ஆத்திரத்தையும் வருத்தத்தையும் அவன் வெளிப்படுத்தியபோது அந்த மூச்சிரைப்பு சற்று தணிந்திருந்தது. பர்வதா அவனிடம் நன்றி சொன்னதோடு பெரியவரை இப்படி பிடிவாதமாய் இறக்கிவிட்டிருக்க வேண்டாம் என்றும் சொன்னாள். ''அவனுக்கு போயி நீங்க பரிதாப படறீங்களா? கடவுளே, இந்நேரம் அவன் அடுத்த டிரெய்ன்ல ஏறி வேற ஏதாச்சும் பொண்ணுககிட்ட வழிஞ்சிட்டு இருப்பான்'' என்றபடியே மேலே ஏறி படுத்துக் கொண்டான்.

இரவு உணவு எதுவும் வேண்டாம் என்று சொன்னவன் ஒன்பது மணிக்கெல்லாம் கம்பளியை போர்த்திக் கொண்டு படுத்துவிட்டான். பெட்டிக்குள் குளிர் அதிகமாக இருக்கவும் சிப்பந்தியை அழைத்து சரி செய்ய சொன்னேன். பர்வதா சற்று நேரம் படித்துக் கொண்டிருந்தாள். எனக்கு தூக்கம் வரவில்லை. சிந்தனை மொத்தமும் அனீஷைச் சுற்றியே இருந்தது. ஒரு விளையாட்டு வீரனின் உடல்வாகு, உயரம், எடை எல்லாம் அமைந்திருந்தும் அவனுடைய மூச்சிறைப்பு எனக்கு உறுத்தலாக இருந்தது. மணி பத்தே கால் இருக்கும். பெட்டியில் அநேகமாக எல்லோருமே தூங்கியிருக்கவேண்டும். முதல் கூண்டிலிருந்த ஒரு கைக் குழந்தை மட்டும் சிணுங்கிக் கொண்டிருந்தது. அந்த சிணுங்கலிலேயே கவனமாக இருந்தவன் எப்போது தூங்கிப் போனேன் என்று தெரியவில்லை.

அசாதாரணமான ஓசை. யாரோ அழைப்பதுபோல இருந்தது. திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். மூச்சிரைப்பின் அசெளகரியமான சத்தம். சட்டென்று எழுந்து அனீஷைப் பார்த்தேன். சாய்ந்து உட்கார்ந்திருந்தான். வேகமாக நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது. வாயைத் திறந்து சுவாசத்தை உள்ளிழுக்கும் முயற்சியில் இருந்தான். விளக்கை போட்டபடியே ''அனீஷ்.. என்னாச்சு?'' என்று அவனைத் தொட்டேன். பேச முடியாமல் மூச்சுத் திணறலை வலதுகை சைகையால் விளக்க முயன்றான். பெட்டியில் குளிர் கூடியிருந்தது. நான் உடனடியாக அவனை கீழே இறங்கிவிடுமாறு சொன்னேன். அவன் மறுத்தான். கைகளை அசைத்து வேண்டாமென்று பிடிவாதமாய் இருந்தவன் வாயைத் திறந்தபடியே காற்றை உள்ளிழுத்துக் கொண்டிருந்தான். பையில் எதுவும் மருந்துகள் உண்டா என்று விசாரித்தேன். அவன் தலையை அசைக்கவும் கீழே இருந்த அவனுடைய பையைத் திறந்து பார்த்தேன். துணிகளுக்கு இடையில் ஒரு சிறிய சிலிண்டர் இருந்தது. வீசிங் தொந்தரவு அதிகம் இருக்கும்போது நுரையீரலின் மூடிய வாயை திறந்து தரும், நுரையீரல் தொந்தரவிலிருந்து நிவாரணம் தரும் பஃப் அது. வாய்க்குள் வைத்து மேலே உள்ள விசையை அழுத்தினால் அதிலிருந்து உள்ளே செல்லும் மருந்து உடனடியாகவே ஆசுவாசம் தரும். மூச்சிறைப்பு மாத்திரைக்கோ, மருந்துக்கோ கட்டுப்படாத அளவு போய்விட்டால் இதை கட்டாயம் உபயோகிக்கவேண்டும். எந்த நேரத்திலும் கைவசம் வைத்திருக்க வேண்டும். சிலிண்டரை எடுத்த அவன் கையில் கொடுத்தேன். சிலிண்டரை அவசரமாக வாங்கி வாயில் வைத்து அழுத்தினான். அவன் முகத்தில் கடுமையான அதிர்ச்சி தெரிந்தது. பயத்தின் ரேகைகள் மின்னலென படர்ந்தன. ''என்னாச்சு?'' என்று கேட்கும்போதே எனக்கு ஓரளவு ஊகிக்கமுடிந்தது. அது காலியான சிலிண்டர். தேவையான அளவு மருந்து அதில் இல்லை. ''வேற சிலிண்டர் இருக்கா?'' கேட்டபோது அவன் பரிதாபமாய் தலையாட்டினான்.

''சரி, பரவாயில்ல. நீங்க இப்ப கீழே வாங்க. மேல குளிர் அதிகம்'' என்று கையை நீட்டினேன். அனீஷ் அதே பிடிவாதத்துடன் தலையை ஆட்டினான். சிலிண்டரை வாயில் வைத்து அழுத்தி அழுத்தி முயற்சித்தான். என் படுக்கையிலிருந்து கம்பளியை எடுத்து அவன் மேலே போட்டேன். இதற்குள் பர்வதாவும் விழித்துக் கொண்டாள். அவனுடைய நிலையை அவசரமாய் சொல்லிவிட்டு வண்டியில் யாரேனும் டாக்டர் இருக்கிறார்களா என்று விசாரிக்க பரிசோதகரைத் தேடிச் சென்றேன். மணி பனிரெண்டை நெருங்கியிருந்தது. அப்போதுதான் அவர் தன் கோட்டை கழற்றிவிட்டு படுத்திருக்க வேண்டும். அனீஷின் பெயரைக் கேட்டதும் ஒரு கணம் திடுக்கிட்டார். அவனுடைய நிலைமையைச் சொல்லி தேவையை சொன்னவுடன் பயணிகளின் அட்டவணையை எடுத்து AC 3 TIER ல் டாக்டர் முரளி என்பவர் இருப்பதாக சொன்னார்.

அடுத்து வண்டி எங்கே நிற்கும், எப்போது என்று விசாரித்தேன். அடுத்த நிறுத்தம் கூத்தி (Gooty) இரண்டு மணிநேரம் ஆகும் என்றார். இடையில் வேறு நிறுத்தங்கள் எதுவும் கிடையாது என்றார். இந்தத் தகவல் என் பயத்தை அதிகரிக்கச் செய்தது.

டாக்டர் முரளிக்கு இளம் வயதுதான். அனீஷை வந்து பார்த்தார். உடனடியாக அவருக்கு பஃப் கொடுத்தாக வேண்டும். நுரையீரலில் பிராண வாயு குறிப்பிட்ட அளவு செல்லாதபோது வேறு ஏதாவது உடனடி நிவாரணமாக தர முடியாதா என்று கேட்ட போது வழியில்லை என்றார். நான் பெட்டிக்குள் ஒவ்வொரு படுக்கையாக சென்று எழுப்பினேன். வீஸிங் பஃப் இருக்கா? என்று ஒவ்வொருவரையும் விசாரித்தேன். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பலருக்கு நான் கேட்டதே புரியவில்லை. சிலர் தூக்கத்தில் தொந்தரவு செய்வதாக எரிந்து விழுந்தார்கள். ஆனாலும் விடாமல் எல்லோரையும் எழுப்பி விசாரித்தேன். நேரம் கடந்தபடியே இருந்தது. ஒரு சிலிண்டரில் ஒரு சில துளிகளை அனீஷீக்கு கொடுக்க முடிந்தால் அவனை காப்பாற்றிவிடலாம் என்பதே என் எண்ணமாக இருந்தது. அடுத்த பெட்டியிலும் எல்லோரையும் எழுப்பி விசாரிக்க வேண்டிவந்தது. இருட்டில் போர்த்திக் கொண்டு படுத்திருப்பவர் ஆணா பெண்ணா என்று தெரியாமல் தொட்டு எழுப்புவதில் உள்ள அபாயம் குறித்தெல்லாம் அப்போது நான் யோசிக்கவேயில்லை. என் வாயிலிருந்து வந்ததெல்லாம் வீஸிங் பஃப் என்பது மட்டும்தான். தமிழில் ஆங்கிலத்தில் எனக்கு தெரிந்த இந்தியில் என்று மன்றாடியபடியே ஒவ்வொரு படுக்கையாக சென்றேன். அனீஷின் துரதிர்ஷ்டம் ஒருவர்கூட அது தன்னிடம் இருப்பதாக எழுந்து கொள்ளவில்லை.

அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு நான் திரும்பி வந்தபோது அனீஷ் படுவேகமாக அந்த காலி சிலிண்டரை பற்களால் கடித்தபடி இன்னும் வேகமாக உடல் திணறிக் கொண்டிருந்தான். சிலிண்டர் தன் உருவிழந்து அவன் பற்களுக்கு நடுவே சிதைந்து கொண்டிருந்தது. இன்னும் அவன் கீழே இறங்காமல் மேலும் பயந்து சுருங்கி படுக்கையில் கிடந்தான். பர்வதா அனீஷின் கைபேசியை எடுத்து அதிலிருந்து யாரையும் தொடர்பு கொள்ள முடியுமா என்று முயன்றுகொண்டிருந்தாள். சிப்பந்தியிடம் சொல்லி பெட்டியில் குளிரூட்டத்தை மட்டுப்படுத்தியதில் பலருக்கும் கோபம்.

நான் இன்னும் இரண்டு பெட்டிகளில் முயற்சிக்கலாம் என்று ஓடினேன். எனது பக்கத்து கூண்டிலிருந்த ஒரு இளைஞனும் உடன் வந்தான். ஒரு பயனுமின்றி திரும்பி வந்தபோது பரிசோதகர் அடுத்து வரப்போகும் நிலையத்துக்கான தொலைபேசி எண்ணை ஒரு வழியாக கேட்டு வாங்கியிருந்தார். நல்ல வேளையாக முதல் தடவையிலேயே நிலைய அதிகாரி தொலைபேசியை எடுத்தார். உடனடியான மருத்துவ உதவி தேவை என்பதை அவருக்கு விளக்கிச் சொன்னதும் என்னுடைய கைபேசி எண்ணையும் பரிசோதகரின் கைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டார்.

அனீஷ் இப்போது ஆழ்ந்து தூங்குவது போல கிடந்தான். உதட்டோரங்களில் லேசான ரத்தம் தெரிந்தது. சிலிண்டரை கடிக்கும் வேகத்தில் நாக்கையும் உதட்டையும் கடித்திருக்க வேண்டும் என்று டாக்டர் முரளி சொன்னார்.

ஆம்புலன்சும் மருத்துவர்களும் தயார் நிலையில் இருப்பதாக திரு பாண்டே, நிலைய அதிகாரி பரிசோதகரின் கைபேசியில் அழைத்து சொன்னபோது சற்று தெம்பு வந்தது. இன்னும் இருபது நிமிடங்களில் அனீஷை ஆம்புலன்சில் ஏற்றிவிடலாம். நான் வாசலில் வந்து நின்று கொண்டேன். தொலைவில் மின் வெளிச்சங்களுடன் கூத்தி தெரிந்தது. சீக்கிரம் சீக்கிரம் என்று மனம் அவசரப்பட்டது. அதிவேக ரயிலின் ஓட்டத்தில் பின்னோடிய இருட்டில் நான் ஏதேதோ தெய்வங்களை பிரார்த்தித்தேன். என்னவோ ஒரு பயம் அனீஷின் பக்கத்தில் செல்லவிடாமல் தடுத்தது. பர்வதா அக்கறையோடு அவனருகிலேயே இருந்தாள். டாக்டர் முரளியும் அருகிலேயே இருந்தார். நிலையம் நெருங்கும்போது பரிசோதகரும் என்னருகில் வந்து நின்றுகொண்டார்.

நிலையத்தில் பயணிகளின் கூட்டம் இல்லை. இரண்டு போலிஸ்காரர்களுடன் ஸ்வெட்டர் அணிந்த சிலர் நின்றிருந்தார்கள். வண்டி நின்றதும் எங்களுடைய பெட்டியை நோக்கி விரைந்து வந்தார்கள். நிலைய அதிகாரியிடம் பரிசோதகர் விபரங்களை சொன்னார். நான் கீழே இறங்கி அவர்கள் பேசிக் கொண்டிருப்பதின் பொருள் புரியாமல் வெறித்தேன். உள்ளிருந்த அந்த பயம் என்னை உருக்குலைத்திருந்தது. அனீஷை சிப்பந்திகள் வெளியே கொண்டுவந்தார்கள். நிலையத்தின் நீண்ட சிமெண்ட் பெஞ்சில் அவனைக் கிடத்தினார்கள். எனக்கு கோபமாக வந்தது. ஸ்டெரச்சரில் கிடத்தி உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றாமல் ஏன் தாமதிக்கிறார்கள் என்று அதிகாரியிடம் கேட்டேன். ஆம்புலன்ஸ் இதோ வந்துவிடும் நீங்கள் இனி கவலைப் படவேண்டாம் என்று சமாதானம் சொன்னார். அனீஷின் பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிய டாக்டர் முரளி, பையை அனீஷின் காலடியில் வைத்தார். அவனுடைய கைபேசியை நிலைய அதிகாரியிடம் கொடுத்தார்.

வண்டி புறப்படுவதற்கான பச்சை விளக்கு அசைவது தெரிந்தது. எனக்கு வண்டியில் ஏறுவதா வேண்டாமா என்ற குழப்பம். நள்ளிரவில் இந்த சிமெண்ட் பெஞ்சில் அனீஷை விட்டுவிட்டு போவது சரியா என்றெல்லாம் மனம் தடுமாறியது. இவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுமா, எங்கே கொண்டுபோவார்கள், எவ்வளவு சீக்கிரத்தில் சிகிச்சை தருவார்கள்? என்று கேள்விகள். நிலைய அதிகாரி அதே கனிவுடன் ‘‘இனி நாங்கள் பார்த்துக் கொள்வோம், நீங்கள் அமைதியாக வண்டிக்கு போங்கள்’’ என்று சொல்லிக் கொண்டு முதுகைத் தட்டினார்.  பர்வதா வாசலில் நின்றபடி கையசைத்து அழைத்தாள். டாக்டர் முரளி என் முதுகைப் பிடித்துத் தள்ளினார். ''வண்டியில ஏறுங்க முதல்ல. வாங்க'' என்று கையைப் பற்றியபடி ஓடினார். நான் இழுபட்டு ஓடி, வண்டியில் ஏறினேன். வண்டி நகரத் தொடங்கியது. நான் பெட்டியின் வாசலில் நின்றபடி அனீஷையே பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படி அவனை அகாலத்தில், ஏதோ ஒரு அத்துவானத்தில் விட்டுவிட்டுப் போவது சரியில்லை என்று மனம் துடித்தது. முரளியிடம் திரும்பி ''நான் இங்கயே எறங்கிக்கறேன். கூட இருந்தா பரவாயில்லேன்னு தோணுது'' என்று ஓடும் வண்டியிலிருந்து இறங்கத் தயாரானேன். முரளி என் தோளை பற்றினார். கண்ணாடியை சரிசெய்தபடியே என் முகத்தை பார்த்தார்.

''நீங்க இப்ப எறங்கி ஆகப் போறது ஒண்ணுமில்ல. அனீஷ் செத்துப் போயி பதினைஞ்சு நிமிஷம் ஆச்சு'' என்றார்.

ஒருகணம் எனக்குள் ஒரு பெரும் அமைதி கவிவதை நான் உணர்ந்தேன். இந்த செய்தியைத்தான் மனம் இதுவரையிலும் எதிர்பார்த்திருந்தது போலும். ஏற்கனவே தான் அறிந்த ஒன்றை வெளியிலிருந்து ஒரு குரல் உத்தரவாதப்படுத்தும் வரையிலான ஊசாலாட்டம்தான் அனீஷிடத்தில் என்னை நெருங்கவிடாது செய்திருக்கிறது. 

வண்டியிலிருந்து எட்டிப் பார்த்தேன். நீண்ட அந்த பெஞ்சில் அனீஷ் கிடந்தான். இன்று காலை அறிமுகமாகி இதோ இப்போது விடைபெற்று கொண்டுவிட்டான்.

( தமிழினி 2010)



No comments:

Post a Comment

யுவன் - விஷ்ணுபுரம் விருது

  1 இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு டிசம்பர் மாதம். அலுவலகப் பயிற்சி நிமித்தமாக புனே சென்றிருந்தேன். அன்று காலை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்ற...