Sunday, 10 May 2020

நிறங்களை இழந்த ஓவியனின் கதை


Oliver Sacks: the patient-focused polymath


ஆலிவர் சாக்ஸ்
ஆலிவர் சாக்ஸ் ஒருமுறை எழுதினார் - 'நரம்பியல் நோயாளிகள் கற்பனைக்கும் அப்பாலான வெளிகளில் திரிகிறவர்கள்". 'செவ்வாய் கிரகத்தில் ஒரு மனிதவியலாளன்' என்னும் நூலில் அத்தகைய ஏழு பயணிகளின் சித்திரங்கள் உள்ளன. இவை யாவும் தமக்குள் ஒருவித முரண் அமைப்பைக் கொண்டுள்ளன. நரம்பியல் நோய்கள் தம்மளவில் ஒருவித அழகியல் அம்சத்தையும் மதிப்பீட்டையும் கொண்டுள்ளன - நமது சிந்தனைக்கு அவை எவ்வளவுதான் அந்நியமாய் இருந்தாலும்! இந்த மனிதர்களின் வாழ்வை மருத்துவமனையில் இருந்தபடியோ, அலுவலகத்தில் இருந்து கொண்டோ கண்டடைவது சாத்தியமில்லை. சாக்ஸ் தனது வெள்ளை உடுப்பைக் கழற்றி எறிந்துவிட்டு, மருத்துவமனையிலிருந்து வெளியேறி ஆய்வுக்குரிய மனிதர்களது இருப்பிடங்களுக்கே சென்றுபணியை மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போக்கில், நமது மூளை சூழலுக்கேற்ப தனித்த உலகங்களை உருவாக்கிக் கொள்கிறது என்கிற புதியதொரு சாத்தியத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.
மூளையின் காரியங்கள் என நாம் மிக எளிமையாகப் புரிந்து கொண்டுள்ள காணும் செயல், நினைவின் பயணம், நிற உணர்வு ஆகியவற்றை மறு உருவாக்கம் செய்ததின் மூலம் ஒரு புதிய ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறார் - நாம் யார் என்கிற ஆச்சரியத்தை!
1986 மார்ச் மாதத் தொடக்கத்தில் எனக்கொரு கடிதம் வந்தது.
அறுபத்திஐந்து வயதான நானொரு பிரசித்த பெற்ற ஓவியன். ஜனவரி மாதத்தில் எனக்கு ஒரு விபத்து நேர்ந்தது. எனது காரில் டிரக் ஒன்று மோதியது. உள்ளூர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றபோது மூளையில் அதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. கண் பரிசோதனையின் போது என்னால் எழுத்துக்களையோ வண்ணங்களையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லையென கண்டுபிடிக்கப்பட்டது. எழுத்துக்கள் கிரேக்க எழுத்துக்கள் போலத் தெரிந்தன. எல்லாமே கருப்பு வெள்ளை தொலைக்காட்சித் திரையில் பார்ப்பது போலிருந்தன. சில நாட்களுக்குள்ளேயே என்னால் எழுத்துக்களை இனம்பிரிக்க முடிந்தது. பார்வை பருந்தினைப் போன்று கூர்மை பெற்றது. புழுவொன்று மண்கட்டியை நகர்த்திச் செல்வதைக்கூட என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் நான் முற்றிலுமாய் நிறக் குருடனாயிருந்தேன். நிறக்குருடுபற்றி எதையுமே அறிந்திராத கண் மருத்துவர்களை சென்று பார்த்தேன். பயனேதுமில்லாமல் நரம்பியல் வல்லுநர்களிடம் சென்றேன். ஆழ்மன மயக்க நிலையில்கூட என்னால் நிறங்களைப் பிரித்தறிய முடியவில்லை. எல்லாவிதப் பரிசோதனைகளும் நடந்தன. எனது செங்கல் நிற நாய் சாம்பலாகவும், தக்காளிச்சாறு கருப்பாகவும் தெரிந்தது" என்று கடிதம் நீண்டது.
அதை ஒரு வித்தியாசமான கடிதம் என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக ‘நிறக்குருடு’ என்று புரிந்து கொள்ளப்பட்டுள்ள ஒன்று பிறவியிலேயே ஏற்படும் குறையாகும். சிவப்பை, பச்சையை அல்லது பிற நிறங்களை பிரித்தறிய முடியாத அல்லது நிறங்கள் எதையுமே அறிய முடியாத ஒரு குறையாகும். விழித்திரையின் நிறங்களுக்கான செல்களில் உள்ள குறைப்பாட்டினாலோ விழித்திரையிலோ அல்லது .. லோ உள்ள குறைப்பாட்டினால் ஏற்படுவது அது.
இக்கடிதத்தை எழுதிய ஜனாத்தன்.ஐயின் பிரச்சினை இதுவல்ல. இதுவரையிலான தன் வாழ்க்கையில் சாதாரணமான பார்வையையும் விழித்திரையில் ஆரோக்கியமான தசைகளையும் கொண்டிருந்த அவர், ‘கருப்புவெள்ளைத் தொலைக்காட்சித் திரையைப் பார்ப்பதுபோல’ திடீரென நிறக்குருடனாகிவிட்டார். இச்சம்பவத்தின் திடீர்த்தன்மை, விழித்திரையின் தசைநார்களை மெல்ல மெல்ல செயலிழக்கச் செய்யக்கூடிய ஒன்றோடு பொருந்தி வரவில்லை. பதிலாக இன்னும் மேலான நிலையில், வண்ணங்களை பிரித்தறிகிற மூளையின் ஏதோவொரு பகுதியில் ஏற்பட்டுள்ள சிதைவையே காட்டுகிறது.
மூளைச் சிதைவினால் உண்டாகும் நிறக்குருட்டுத் தன்மை மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே குறிப்பிடப்பட்ட ஒன்றெனினும் மிக அரிதான முக்கியமான நிலையாகவே இருந்தது. எல்லா நரம்பியல் தீர்வுகளையும் சிக்கல்களையும் போலவே இதுவும் அத்துறையின் வல்லுநர்களை ஆர்வம்கொள்ள வைக்கும் விஷயமே. நரம்பியல் கட்டமைப்பின் நுணுக்கங்களைக் கண்டறிய இது உதவும் என்பதுதான் காரணம். குறிப்பாக வண்ணங்களை மூளை எவ்வாறு பார்க்கிறது என்பதை அறிய முடியும். இந்தக் குறிப்பிட்ட நபரைப் பொறுத்தவரை உள்ள கூடுதல் வசீகரம் என்னவென்றால் வண்ணங்களைக்கொண்டு வித்தைகள் புரியும் ஒரு ஓவியக் கலைஞனுக்கு இந்தப் பழுது நேர்ந்துள்ளது என்பதுதான்.
மேலோட்டமான அளவில் நிறம் என்பது அவ்வளவு முக்கியமில்லாத விஷயமாகத் தெரிந்தாலும்கூட மாபெரும் ஓவியர்கள், தத்துவ அறிஞர்கள், இயற்கை விஞ்ஞானிகளிடையே அலாதியான ஈர்ப்பை அது கொண்டுள்ளது. இருந்தும் நாம் பெரும்பாலான சமயங்களில் நிறங்களின் மகத்தானப் புதிரை உணராதவர்களாகவே இருக்கிறோம். இக்குறிப்பிட்ட பிரச்சினையின் மூலமாக நிறத்தின் அடிப்படை நுட்பங்கள் பற்றியும் உடல் சார்ந்த அதன் இயக்கங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். மேலும் நிறங்களிலுள்ள அற்புதத்தன்மையைக் கண்டுகொள்ள இயலும். தனி மனித அளவில் நிறம் என்பதை எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என்பதையும் நம்மால் தெரிந்துகொள்ளமுடியும்.
ஏப்ரல் மாதத்தில் ஜனாத்தன்.ஐயை என் மருத்துவ நண்பர் ராபர்ட் வாசர்மேனுடன் சந்தித்தேன். ஜனா உயரமான, திடகாத்திரமான மனிதர். புத்திகூர்மை மிளிரும் முகம். அவர் தனது பிரச்சினையால் தளர்ந்திருந்தபோதும்கூட உற்சாகமாகவே வரவேற்றார். தொடர்ந்து புகைபிடித்துக்கொண்டிருந்தார். நடுங்கிய விரல்களில் நிகோடின் கறை படிந்திருந்தது. 1940களில் மெக்ஸிகோவில் ஜார்ஜியா ஒகே என்ற ஓவியருடன் ஹாலிவுட்டில் பின்னணி ஓவியங்கள் வரையத் தொடங்கிய தனது இளமைக்காலம் தொடங்கி 50களில் நியூயார்க்கில் அரூப ஓவியங்கள் வரைந்ததையும் பின்பு சினிமாத் துறையில் கலை இயக்குநராகவும் வணிக ஓவியராகவும் தொடர்ந்ததையெல்லாம் விரிவாகச் சொன்னார்.
குறிப்பிட்ட விபத்து ஜனவரி மாதம் இரண்டாம் தேதி பிற்பகலில் நடந்தது. விபத்து நடந்தவுடன் அதன் எல்லா விபரங்களையும் அவரால் போலீஸாரிடம் சொல்ல முடிந்திருக்கிறது. தாங்க முடியாத தலைவலியினால் வீட்டுக்குப் போய்விட்ட அவர் நீண்ட தடங்கலற்ற தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். அடுத்த நாள் காலையில் காரிலிருந்த சேதத்தைப் பார்த்து அவரது மனைவி விபரங்களைக் கேட்ட போது அவரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை “எனக்குத் தெரியவில்லை எங்காவது இடித்திருக்கும்.”
ஓவியக் கூடத்தில் அவரது மேசையிலிருந்த முதல் தகவல் அறிக்கையைப் பார்த்த போதுதான் ஏதோ விபத்தொன்றில் தான் சிக்கியிருந்ததை உணர்ந்தார். அறிக்கையின் எழுத்துக்கள் தெளிவாக இருந்தாலும் அவை கிரேக்க எழுத்துக்களைப் போலவும், ஹீப்ரு எழுத்துக்களைப் போலவும் தெரிந்தன. உருப்பெருக்கியை பயன்படுத்திப் பார்த்தபோதும் பெரிய அளவில் பயன்தரவில்லை. அதேபோன்று கிரேக்க, ஹீப்ரு எழுத்துக்களையே பெரிய அளவில் அது காட்டியது. ஆனால் இவ்வாறான எழுத்துக்களை வாசிக்க முடியாததன்மை ஐந்து நாட்களுக்குப் பின் மறைந்துவிட்டது.
அவர் தனது மருத்துவர் மூலமாக உள்ளூர் மருத்துவமனையொன்றில் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தார். அப்போதுதான் கடிதத்தில் எழுதியிருந்ததுபோல, நிறங்களைக் காண முடியாததையும் எழுத்துக்களை வாசிக்க முடியாததையும் தெரிந்து கொண்டார்.
அடுத்த நாள் காலை ஓவியக்கூடத்திற்கு செல்லும்போது அதிகாலைப் பனியினூடாக செல்வதுபோல இருந்தது. அன்றைக்கு மிகப் பிரகாசமான வெயிலென்று அவருக்குத் தெரியும். ஆனால் எல்லாமே பனி மூடியது போலவும், வெளுப்பாகவும், சாம்பல் பூசியவையாகவும் தெரிந்தன. தனது அலுவலகத்தருகே போக்குவரத்துக் காவலர்களால் சூழப்பட்டார். இரண்டு முறை சிவப்பு விளக்கைக் கடந்ததாக கூறினார்கள். அதை மறுத்த அவர், சிவப்பு விளக்கு எதையும் மீறியதாகத் தனக்குத் தெரியவில்லை என்றார். காரிலிருந்து வெளியே வரும்படி சொன்னார்கள். சோர்வாகவும் உடல் நலக் குறைவுடனும் அவர் இருப்பதைக் கண்டு வெறுமனே எச்சரிக்கை மட்டும் செய்து விட்டு மருத்துவரைப் பார்க்குமாறு அறிவுறுத்தினார்கள்.
பெரும் நிம்மதியுடன் தனது பணியிடத்திற்கு வந்த அவர் அந்த பயங்கர பனி மூட்டம் விலகியிருக்க வேண்டுமென்றும், எல்லாமே தெளிவடைந்திருக்க வேண்டுமென்றும் நம்பினார். ஆனால், அவரது ஓவியக்கூடத்தில் அவருக்கு பேரதிர்ச்சிக் காத்திருந்தது. ஓவியங்கள் அனைத்தும் வண்ணங்களை விலக்கிவிட்டு சாம்பல் பூசிக்கொண்டிருந்தன. அவருக்கு புகழ் சேர்த்த வண்ணங்களுடன்கூடிய அரூப ஓவியங்கள் இப்போது கறுப்பு வெள்ளையில் நின்றிருந்தன. ஒழுங்கமைப்பும் உள்ளர்த்தங்களையும் கொண்டிருந்த அவரின் ஓவியங்கள் இப்போது அவருக்கே அந்நியமாகவும் அர்த்தமில்லாதவைகளாகவும் இருந்தன. இடிந்து போனார் அவர். எப்பேர்ப்பட்ட ஒரு இழப்பு நேர்ந்துள்ளது என்பதை அவர் உணர்ந்தார். ஜீரணித்துக் கொள்ளவே முடியாத பேரிழப்பு. இனி என்ன செய்யப் போகிறோம் என்று அவரால் கற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை .
தொடர்ந்து வந்த நாட்கள் கொடுமையாயிருந்தன. 'நிறங்களைப் பார்க்காவிட்டால் என்ன குடியா குழுகிப் போய்விடும்?' என்று நண்பர்கள் சிலர் மட்டுமல்ல, அவரது மனைவியும் நினைத்தார்கள். ஆனால் அவருக்கு அது சகிக்க முடியாததாய், வெறுப்பூட்டுவதாய் இருந்தது. எல்லாவற்றின் நிறங்களையும் அவற்றின் அபரிமிதமான துல்லியத்துடன் அவர் அறிந்திருந்தார். வெகு காலமாய் அவர் பயன்படுத்திவரும் பான்தூன் நிற அட்டவணையிலிருந்த நிறங்களின் பெயர்களையும் அவற்றுக்கான எண்களையும் அவரால் துல்லியமாகச் சொல்ல முடியும். அவருக்குப் பிடித்தமான அவரது ஓவியங்களிலுள்ள வண்ணங்களை அறிந்திருந்த போதும் இப்போது அவற்றை தன் கண்ணாலும் சரி, மனத்தாலும் சரி அவரால் பார்க்க முடியவில்லை .
நிறங்கள் இல்லாமல் போனது மட்டும் பிரச்சினையில்லை. கண்களால் பார்க்கும் அனைத்துமே உற்சாகமற்ற, மட்டமான தன்மையுடனிருந்தன. முகத்தில் அறையும் வெண்மையும் ஒளியற்ற சாம்பலும் அடர்ந்த கருப்புமாய் எல்லாமே சீரிழந்து, செயற்கையாய் கறைபடிந்த பாவத்தன்மையுடன் இருந்தன.
நிறங்களற்ற மனிதர்களை அவரால் பார்க்க முடியவில்லை. அவர்களை 'அசையும் சாம்பல் நிறச் சிலைகள்’ என்றார். கண்ணாடியில் காண நேர்கிற தனது பிம்பத்தைக் கூட அவரால தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனிதர்களுடன் தொடர்புகொள்வதே கூச்சத்தை அளித்தது. உடல் உறவும் சாத்தியமற்றதாய் தோன்றியது. பிற மனிதர்களின் உடலையும் சொந்த மனைவியின் உடல் தசைகளையும் மட்டுமல்லாமல் தன் சொந்த உடலையும்கூட அருவருப்பான சாம்பல் நிறம் கொண்டதாகவே அவரால் காண முடிந்தது. ‘சதையின் நிறம்’ இப்போது ‘எலியின் நிறமாக'த் தெரிந்தது. இதுவரையில் ஞாபகங்களில் நிறம்கொண்டிருந்த காட்சிகள் அனைத்துமேகூட இப்போது நிறமிழந்திருந்தன.
எல்லாவற்றின் நிறங்களற்ற ஒழுங்கீனம் அவரைத் துன்புறுத்தின; வெறுப்பூட்டின. வாழ்வின் சகல தருணங்களிலும் அத்துமீறி தலைகாட்டுவதாய் இருந்தன. சாம்பல் நிறத்துடன் சவத் தோற்றத்துடன் காண நேர்ந்த உணவு பதார்த்தங்கள் வெறுப்பேற்படுத்தின. சாப்பிடும்போது கண்களை மூடிக்கொள்ள நேர்ந்தது. அதுவும் பெரிய அளவு உதவவில்லை. மனதிலிருந்த தக்காளியின் பிம்பமும் அதன் அசல் தோற்றத்தைப்போலவே கருப்பாயிருந்தது. வெவ்வேறு உணவுப் பதார்த்தங்களின் மனப் பிம்பங்களை சரியாக பிரித்தரிய முடியாத நிலையில் கருப்பும் வெள்ளையுமான உணவையே தஞ்சமடைய வேண்டி வந்தது. வெள்ளை ரொட்டி, கருப்பு சூப், கருப்பு காபி, வெள்ளை பிஸ்கட் என்று! இதுவாவது பரவாயில்லை. சாதாரண நிறங்கள் கொண்ட பிற எல்லா பதார்த்தங்களுமே அச்சமூட்டுவதாயிருந்தன. அவருக்கு சொந்தமான பழுப்புநிற நாய் விநோதமானதாய் தென்பட்டது. பேசாமல் ஒரு டால்மேஷியன் நாயை வாங்கிக்கொள்ளலாமென்று நினைத்தார்.
மிக முக்கியமாக, வசந்த காலத்தின் வண்ணங்களை அவர் பார்க்கமுடியாமல் போனது. பூக்கள் மீது எப்போதும் அவருக்கு பிரியமுண்டு. ஆனால் இப்போது வடிவத்தையும் மணத்தையும்கொண்டே அவற்றை அடையாளம் காணமுடிந்தது. நீலப்பூக்கள் இப்போது வசீகரமாய் இல்லை. வானத்து மேகங்களை ரசிக்க முடியவில்லை. வண்ணத்தொலைக்காட்சி சகிக்க முடியாததாயிருந்தது. அதன் உருவங்கள் இனிமையற்றவையாய், அர்த்தமற்றவையாய் தெரிந்தன. கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியைப் பார்ப்பது நல்லது என்று நினைத்தார்.
தனது உலகம் எப்படிப்பட்டது, அதில் உலவும் கருப்பு வெள்ளை சித்திரக் கலவைகள் எவ்வளவு உபயோகமற்றவை என்பதை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்று முயன்றார். சில வாரங்களுக்குப் பிறகு ஓவியம் ஒன்றை வரைந்தார். முழுக்க சாம்பல் நிறம் கொண்ட அறையொன்றில் மேசைகள், நாற்காலிகள், பரிமாறத் தயாராய் இருந்த இரவு உணவு என்று எல்லாமே சாம்பலின் பல்வேறு தினுசுகளில் வரையப்பட்ட மொத்தமான சாம்பல் உலகம். அந்தப் படம் மற்றவர்களுக்கு பயங்கரமானதாகத் தோன்றியது. சாதாரண கருப்பு வெள்ளைப் புகைப்படம் போலவோ ஓவியம் போலவோ இல்லாமல் சகிக்க முடியாததாய் அமைந்திருந்தது. இதையறிந்த ஜனா, தன் ஓவியத்தைக் காணும் மற்றவர்களுக்கு தன் உலகத்தை உணர்த்த வேண்டி முற்றிலும் சாம்பல் நிறமுள்ள ஒரு அறையை அமைப்பதுதான் வழி என்று எண்ணினார். ஆனால் அப்போதுகூட பார்வையாளனும் சாம்பல் நிறம் பூசிக்கொண்டவனாய் இருப்பது அவசியம் என்றும் பார்வையாளர் வெறுமனே ஒரு அந்நியராக இல்லாமல் வண்ணங்களற்ற அந்த உலகில் ஒருவராக இருந்தால்மட்டுமே தன்னுடைய உலகத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்றும் கருதினார். இத்தனைக்கும் மேலாக தன்னைப்போலவே பார்வையாளரும் தனது நிற உணர்வுகளை உதிர்த்துவிடுவது அவசியம் என்று சொன்ன அவர் ‘இந்த அனுபவம் முற்றிலும் காரீயத்தால் உருவாக்கப்பட்ட ஒரு உலகத்தில் வாழ்வது போன்றது’ என்று குறிப்பிட்டார்.
ஒருநாள் வானவில்லைப் பார்த்துவிட்டு நொந்து போனார். நிறங்களற்றவொரு வெற்று வளையமாகவேத் தெரிந்தது. அவ்வப்போது ஏற்படும் தலைவலியும் கூட இப்போது வீரியமிழந்திருந்தது. முன்பெல்லாம் தலைவலியோடு அற்புதமான வண்ணங்களில் ஜியோமிதி வடிவங்கள் கண்ணுக்குள் கலைந்து சுழன்று கொண்டேயிருக்கும். இப்போது அவைகளும் வண்ணங்களைத் தொலைத்துவிட்டு வெறும் கருப்புவெள்ளைச் சுழல்களாயிருந்தன. தனது கண்களை அழுத்தித் தேய்ப்பதன் மூலம் நிறங்களை மீட்க அவர் முயன்றார். அப்போது தோன்றிய வெளிச்சங்களும் ஒழுங்கற்ற வடிவங்களும் கூட நிறமிழந்திருந்தன. இனிய நிறங்கள் நிறைந்த கனவுகள் கூட சலவை செய்யப்பட்டவைகளாய் குரூரமாகவும் முகத்தில் அறைவதுபோலவும் இருந்தன.
அதிர்ச்சிகரமான இன்னொரு விளைவு, இசையும் நிறமிழந்துவிட்டதுதான். முன்பு நிறத்துக்கும் இசைக்குமான ஒரு உள்ளார்ந்த இசைவு அவருக்குள் இருந்தது. அதன் மூலமாக வெவ்வேறு வகையான இசை வடிவங்கள் உடனடியாக பலவித நிறங்களாக மாற்றம் கொண்டன. இதனால் இசையை அவர் உள்ளார்ந்த நிறங்களின் ஒத்திசைவாகவே அனுபவித்தார். நிறங்களை உண்டாக்க முடியாத இயலாமையினால் அவர் இசையை ரசிப்பதையும் இழக்க நேரிட்டது. இப்போது அவரது மனதிலிருந்த உள்ளார்ந்த நிற வீணை இசைக்கவில்லை. இப்பொதெல்லாம் அவர் எந்தவித காட்சி அழகுமின்றி வெற்றிசையை மட்டுமே கேட்கிறார். அந்த இசை அவரைப் பொறுத்தவரை தனது நிற எழிலை இழந்த தரித்திர இசையே!
இந்த நாட்கள் பெரும் போராட்டமாகவே இருந்தன. வெறுப்பாகவும் இருந்தன. திடீரென்று ஒருநாள் காலையில் விழித்தெழும்போது தனது நிற உலகம் கதவைத் திறந்து கொள்ளுமென்று அவர் தொடர்ந்து நம்பினார். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இந்த மனப் போராட்டம் சிறிது அமைதி பெற்றது. தான் ஒரு நிறக்குருடன், இனி காலம் முழுக்க இப்படியேதான் இருக்க வேண்டியிருக்கும் என்பதை மனப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினார். முதலில் கொண்டிருந்த கையாலாகத்தனம் விலகி இப்போது புத்திபூர்வமான தீர்வொன்று அவருக்குத் தென்பட்டது. நிறங்கள் இல்லாவிட்டால் என்ன? அவைகளில்லாமல் ஓவியம் எழுத முடியாதா?
தன்னால் இயன்றவரை கறுப்பு வெள்ளை உலகத்தில் வாழ்ந்துவிட முயற்சிப்பதாய் முடிவு செய்தார். விபத்து நடந்து ஐந்து வாரங்களுக்குப் பிறகு ஏற்பட்ட அனுபவத்திற்குப் பின் இப்படியொரு முடிவை அடைந்தார். ஒருநாள் காலை ஓவியக் கூடத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது சூரியோதயத்தைக் காணநேர்ந்தது. எப்போதும் தகதகக்கும் சிவப்பு நிறம் மொத்தமும் இப்போது கறுப்பாக, ஒரு வெடிகுண்டு போலத் தெரிந்தது.. பெரும் அணுகுண்டு வெடித்துச் சிதறியது போல சூரியன் உதித்துக்கொண்டிருந்தான். இப்படியொரு சூரியோதயத்தை வேறெவரும் பார்த்திருப்பார்களா என்று யோசித்தார்.
இந்த அனுபவத்தைத் தொடர்ந்து 'நியூக்ளியர் உலகம்’ என்ற கருப்பு வெள்ளைப் படத்தை வரைந்தார். கருப்பு வெள்ளைப் படங்களை சிறப்பாக வரைய முடியுமென்கிற நம்பிக்கைத் தோன்றியது. இதுவொன்றே நிம்மதியான காரியம் என்று அறிந்த அவர் நாளொன்றுக்கு பதினைந்து, பதினெட்டு மணி நேரங்கள் வரைவதிலேயே செலவிட்டார். அவரைப் பொறுத்தவரை இதுவொரு மறுபிறப்பாகவே இருந்தது. ‘என்னால் ஓவியமெழுத முடியாமல் போயிருந்தால் நான் உயிரோடு இருந்திருக்கவே மாட்டேன்' என்று ஒருமுறை சொல்லியிருந்தார்.
அரூபத்தன்மை கொண்ட, விநோதமான ஓவியங்கள் எழுதுவதை விட்டுவிட்டு கருத்துக்கள் செறிந்த உயிரூட்டமிக்க ஓவியங்களை வரையத் தொடங்கியது உற்சாகமான விஷயம். தன் ஓவிய வாழ்வில் முப்பது ஆண்டுகளாக இதுபோன்ற ஓவியங்களை வரைய அவர் முனைந்ததே இல்லை. இப்போது அவரது ஓவியத்தில் நாட்டியக் கலைஞர்களையும், பந்தயக் குதிரைகளையும் காண முடிந்தது. கருப்பு வெள்ளையில் இருந்தாலும் இந்த ஓவியங்கள் முழுக்க இயக்கம் கொண்டவையாகவும் அழுத்தமானவையாகவும் உணர்ச்சி ததும்புபவையாகவும் இருந்தன. ஓவியத்தில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்கள் அவரது தனிப்பட்ட வாழ்விலும் நிகழ்ந்தன. அறைக்குள் முடங்கிக் கிடப்பது குறைந்தது. பொது வாழ்வையும் பாலியல் தொடர்புகளையும் புதுப்பித்துக் கொண்டார். அச்சத்தையும் மனச்சோர்வையும் உதறினார். புதிய வாழ்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.
இந்த வேளையில், இதுவரை அவர் செய்தறியாத, சிற்பக் கலையிலும் ஈடுபடத் தொடங்கினார். வடிவம், உருவம், இயக்கம், பரிமாணம் என்று எல்லா காட்சி அமைப்புக்களையும் மிகுந்த தீவிரத் தன்மையுடன் பாசோதிக்க விரும்பியவராய் செயல்பட்டார். நேரடியாக இல்லாவிட்டாலும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களின் உதவியுடன் உருவ ஓவியங்களையும் வரையத் தொடங்கினார்.
ஜனாவின் கதையிலிருந்து, நிறக்குருடரான ஒரு ஓவியர் திரும்பவும் கருப்புவெள்ளை உலகில் வாழ முற்பட்டார் என்பதை வாஸர்மேனும் நானும் அறிந்துகொண்டோம். உண்மையில் மருத்துவ ரீதியாக அவனுக்கு என்ன ஆயிற்று, திரும்பவும் அவர் பழைய நிலைக்குத் திரும்புவாரா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து எங்களுக்குத் தெரிந்தவரையில் அனைத்துவிதமானப் பரிசோதனைகளை செய்துகொண்டிருந்தோம். தனது மூளையில் என்ன நடக்கிறது என்பதை அறிய ஆவல்மிக்கவராகவே அவரும் இருந்தார். துறைவல்லுநர்கள் பலரின் சோதனைகளுக்குப் பிறகும்கூட அவரின் மூளையில் எதனால் சேதம் ஏற்பட்டது என்று தீர்மானிக்க முடியவில்லை. கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுப் பொருளினாலா, கார் விபத்தினாலா அல்லது மூளையில் பார்வையைத் தீர்மானிக்கிற பகுதிக்கு ரத்தம் செலுத்தும் தமனிகளில் ஏற்பட்ட சேதத்தினாலா என்று சொல்ல முடியவில்லை.
நிறங்களை இழப்பது என்பது கற்பனையை, ஞாபகத்தை, கலையை, கலாச்சாரத்தை இழப்பதாகும். குறிப்பாக ஒரு ஓவியனுக்கு இது பேரதிர்ச்சி தருகிற விஷயம். இந்த இழப்பை அறிந்த ஆரம்ப நாட்களில் ஜனா தற்கொலை முயற்சியில் கூட இறங்கியிருக்கிறார். சீர்கெட்ட, அந்நியமான, தொடர்ச்சிகளற்ற, பயங்கர கனவுகள் சூழ்ந்தவொரு உலகில் தான் வாழ்வதாகவே உணர்ந்தார். ஆனால் 'நியூக்ளியர் சூரியோதயம்' ஓவியத்திற்குப் பின் அவரது வாழ்க்கை திசை மாறியது.
இப்போது தான் இழந்ததைப் பற்றிய பெரிய கவலையொன்றும் அவருக்கு இருக்கவில்லை. நிறங்களிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டவராகவே பேசுகிறார். நிறங்கள் குறித்து அவர் மணிக்கணக்கில் பேசினால்கூட அவரது வார்த்தைகளில் ஒரு வெறுமை இருப்பதை உணர முடிந்தது. அவரது கடந்த கால அறிவிலிருந்து சொல்லப்பட்டவையாகவே இருந்தன. நிறத்தைப் புரிந்து கொண்டவரிடமிருந்து வந்த சொற்களாக இருக்கவில்லை.
65 வருடங்கள் வரை நிறங்கள் சூழ்ந்த உலகில் வாழ்ந்த அவர் இப்போது பிறவி நிறக்குருடன் போல இயல்பாகவே இருந்தார். நிற இழப்பின் துக்கமும் ஏமாற்றமும் மெல்ல மெல்ல மறைந்து தலைகீழாக மாறத் தொடங்கியது. தனது இழப்பை அவர் மறுக்காபோதும்கூட, அதற்காக வருந்தியபோதும்கூட இப்போது தனது பார்வை 'தூய்மையான‘தாக, 'சிறப்பான’தாக ஆகிவிட்டது எனவும் அதன் மூலம் நிறங்களால் கறைபடியாத சுத்தமான உலகத்தை காண்பதாகவும் சொன்னார். இதன் மூலம் தனக்கு ஏற்பட்ட இழப்பு ஒருவிதத்தில் தனக்கு அளிக்கப்பட்ட விநோதமான பரிசு என்று கருதத் தொடங்கினார். இதன் மூலம் புதியதொரு நுண்ணுணர்வும் ஆக்கத் திறனும் ஏற்பட்டதையும் உணர்ந்தார்.
ஓவியங்களைப் பொறுத்தவரை பரீட்சார்த்தமான நிலையற்றதொரு நாட்களுக்குப் பிறகு தீர்மானமான ஒரு நிலையை அடைந்தார். தனது நீண்ட ஓவிய வாழ்வில் எப்போதுமில்லாத அளவு ஓவியங்களை அவர் எழுதினார். அவரது கருப்பு வெள்ளை ஓவியங்கள் பிரசித்தி பெற்றன. ரசிகர்களும் விமர்சகர்களும் அவருடைய படைப்பு ரீதியான மறுபிறப்பைப் பற்றியும் அவர் அடைந்துள்ள நிறமற்ற வெளியைப் பற்றியும் வெகுவாகப் பாராட்டத் தொடங்கினார்கள். அவரது இந்த நிறமற்ற வெளி அவருக்கு நிகழ்ந்த மாபெரும் இழப்பிற்குப் பின் அவருக்குக் கிடைத்தது என்பதை அறிந்தவர்கள் வெகு சிலரே!
அவரது மூளையில் ஏற்பட்ட முதன்மையான சேதத்தை நம்மால் வகைப்படுத்த முடியும். அவரது மூளையில் நிற அடுக்கை நிர்ணயிக்கும் முக்கியப் பகுதி செயலிழந்துள்ளது. எனினும் தொடர்ந்த மனம் தளராத பயிற்சியினால் அவரது மூளையில் நிகழ்ந்த ஆச்சரியமான மாற்றங்களைப் பற்றி முற்றிலும் எங்களால் வகைப்படுத்த முடியவில்லை. நிறம் குறித்த அடிப்படை அறிவை அவர் இழந்து விடவில்லை. ஆனால் நிறம் குறித்த கற்பனைத் திறனையும், கனவு காணும் திறனையுமே இழந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து கடைசியில் நிறங்கள் பற்றிய தன் நினைவுகளையே அவர் இழந்ததாகத் தெரிந்தது. அவரது மனத்தின், அறிவின் ஒரு பகுதியாக நிறம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
நாளடைவில் நிறத்தை வாழ்வில் அறிந்திராத ஒரு நபரைப் போல நிற மறதி கொண்ட ஒருவராகவே இருக்கத் தொடங்கினார். அதேசமயம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமும் நிகழ்ந்தது. அவரது முந்தைய வண்ண உலகமும் அதன் நினைவுகளும் மறைந்துபோனதும் பார்வை, கற்பனை மற்றும் நுண்ணுணர்வு அளவிலான புதிய வேறொரு உலகம் பிறந்தது.
இந்த மாற்றங்கள் எல்லோருக்கும் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு. எனினும் அந்த மாற்றங்களை தெளிவுடன் வெற்றிகரமாக வெளிக்கொண்டு வர ஜனாவைப் போன்றவொரு படைப்பு மனம் தேவை. அத்தகைய வியத்தகு மாற்றங்கள் குறித்து நரம்பியல் துறை எதையும் திட்டவட்டமாக நிறுவ முடியாது. இத்தகைய நுண்ணிய மாற்றங்களை, பார்வை இழப்பினைத் தொடர்ந்து ஏற்படுகிற மிக நுட்பமான நரம்பியல் விளைவுகளைக் கண்காணித்து பதிவுசெய்யத் தேவையான கருவிகள் நம்மிடம் இல்லை. ஆனால் அவை எவ்வளவு அவசியம் என்பதையே ஜனாவின் உதாரணம் நமக்கு வலியுறுத்துகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த ஆய்வுகளிலிருந்து மூளையின் மேற்பரப்பு (Cereberal cortex) எவ்வளவு மாற்றியமைக்கத்தக்கதாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். விபத்துக்களினாலோ, வேறு காரணங்களினாலோ சேதமடைய நேரிடும் இப்பகுதியை மறுபடியும் புதுப்பிக்கச் செய்யமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, பிரெய்ல் முறையில் படிப்பதற்கு தொடர்ந்து ஒரு விரலை உபயோகிப்பதனால் மூளையின் மேற்பரப்பில் அந்த விரலின் பெரியதொரு மறுபதிவு (Hyper Trophy) நிகழ்கிறது. சிறிய வயதிலேயே காது கேட்கும் திறனையிழந்து சைகை மொழியை உபயோகிப்பவர்களின் மூளையில் காட்சிப் புலன்களுக்கான மூளை மேற்பரப்பின் பகுதியில் பெரும்பாலானது செவிப் புலன்களுகென ஒதுக்கப்பட்டு மறுபதிவு செய்யப்படுகிறது. அதுபோல, ஜனாவைப் பொறுத்தவரை அவரின் பழைய அமைப்பு மறைந்த பிறகு புதியதொரு அறிதல்முறை மூளையின் மேற்பரப்பில் உருப்பெற்றுள்ளது.
இறுதியாக ஒரு கேள்வி. ஏன் ஒரு குறிப்பிட்ட உணர்வை நாம் குறிப்பிட்ட நிறமென்று கொள்ள வேண்டும்? இது சிவப்பு, இது பச்சை என்று எவ்வாறு நிர்ணயித்துக் கொள்கிறோம்?
வண்ணங்களின் புகழ்பெற்ற கொள்கையை விளக்கிய நியூட்டன் நிறங்களை உணர்வது தொடர்பான அனுமானங்களைக் குறித்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். 'எந்தவொரு குறிப்பிட்ட செயலினால் அல்லது எதனால் ஒளி நம் மனதில் வண்ணங்களை வாரியிறைக்கிறது?' என்ற கேள்விக்கு எவ்வித அனுமானத்தையும் முன் வைக்க அவர் தயாராக இல்லை. மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகும் நமக்கு இன்னும் இது குறித்த அனுமானங்கள் இல்லை. ஒருவேளை அத்தகையதொரு கேள்விக்கு எப்போதுமே பதில் இல்லாமலே போகலாம்.
0

ஆலிவர் சாக்ஸ் லண்டனின் பிறந்தவர். லண்டன், ஆக்ஸ்போர்ட், கலிஃபோர்னியா, நியூயார்க் ஆகிய இடங்களில் கல்விகற்றவர். வாழ்வின் பெரும்பகுதியை அமெரிக்காவில் கழித்தவர். நரம்பியல் வல்லுநர். இயற்கையியலாளர். மனித மூளை சார்ந்த ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டவர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறை பேராசிரியர். Migraine, Awakening, A Leg to stand on, The man who mistook his wife for a hat, seeing voices: A journey into the world of the deaf, The Mind's Eye ஆகியவை அவர் எழுதிய நூல்களில் சில. இந்தக் கட்டுரை An anthropologist on mars என்ற நூலில் உள்ள The case of the colorblind painter என்னும் கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.
சொல்புதிது – இதழ் 2 – நவம்பர் 1999

No comments:

Post a Comment

யுவன் - விஷ்ணுபுரம் விருது

  1 இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு டிசம்பர் மாதம். அலுவலகப் பயிற்சி நிமித்தமாக புனே சென்றிருந்தேன். அன்று காலை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்ற...