5
கலையும்
வண்ணங்களும் மறையும் காட்சிகளும் – கிருஷ்ணமூர்த்தியின் கதைகள்
0
தூயனின் சிறுகதைகளைக் குறித்த முதல்
பகுதியையும், சுரேஷ் பிரதீப்பின் சிறுகதைகளைக் குறித்த இரண்டாவது பகுதியையும்
தொடர்ந்து மூன்றாவதாக இப் பகுதி கிருஷ்ணமூர்த்தியின் கதைகளைக் குறித்தது.
இந்த வரிசை தகுதியின் அடிப்படையிலானது
அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும்.
தொகுப்புகளை வாசித்த பின் எழுதிய குறிப்புகளின் அடிப்படையில்
அவ்வப்போது எழுதப்பட்டவை. அவ்வளவே.
0
நூற்று இருபது ஆண்டுகளைக் கடந்துவிட்ட
தமிழ்ச் சிறுகதையில் இனியும் புதிதாய் சொல்ல எதுவும் இருக்கிறதா? என்று பொதுவாய்
கேள்வி எழுவது இயல்பே. மனித வாழ்வின் ஒவ்வொரு கணமும்
புதிய கதைகளை உருவாக்கித் தந்தபடியே உள்ளன. மாறும்
வாழ்நிலையும் அடியாழங்காணவியலா மனதின் புதிர்களும் கதைகளை பின்னித் தருகின்றன.
‘காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு’ தொகுப்பைத் தந்திருக்கும்
கிருஷ்ணமூர்த்திக்கும் அவ்வகையான நம்பிக்கை இருந்திருப்பதை தொகுப்பிலுள்ள கதைகள்
உறுதிசெய்கின்றன.
இரண்டு நாவல்களையும் ‘சாத்தானின் சதைத்
துணுக்கு’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் ஏற்கெனவே எழுதியிருக்கும்
கிருஷ்ணமூர்த்தியின் இரண்டாவது தொகுப்பு ‘காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு’.
சிறுகதையின் ஆரம்பகாலம் தொட்டே
புதுவகையான சொல்முறைகளில் கதைசொல்லும் முனைப்பு இருந்து வந்துள்ளது. தமிழ் சிறுகதையின்
வியத்தகு சாதனையாளரான புதுமைப்பித்தன் அவ்வகையில் பல கதைகளையும் எழுதியுள்ளார்.
குறிப்பிட்ட சில கதைகளை எழுதும்போது யதார்த்தவாத எழுத்து முறை
சரியாக பொருந்திவராத நிலையில் புதியதொரு பாணியை கைகொள்ள வேண்டிய அவசியம் நேர்கிறது.
‘கடவுளும் கந்தசாமிபிள்ளையும்’ எழுதிய அதே பாணியில் ‘சிற்பியின்
நரக’த்தை எழுதியிருந்தால் கதை இன்று அடைந்துள்ள உச்சத்தை பெற்றிருக்காது. ‘செல்லம்மா’ளையும் ‘சாப விமோசன’த்தையும் ஒரே சொல்முறையில் எழுதியிருக்க
முடியாது.
1980களில் லத்தீன் அமெரிக்கக் கதைகளின் மொழியாக்கங்களைத் தொடர்ந்து மாய யதார்த்தவாத பாணியிலான கதைகள் தமிழில்
எழுதப்பட்டன. கோணங்கி, டி.தர்மராஜன், சில்வியா, சுரேஷ்குமார் இந்திரஜித், கௌதம சித்தார்த்தன்
முதலானோரின் கதைகள் சிறுபத்திரிக்கை உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தின. காலப்போக்கில் இதன் தாக்கம் குறைந்து நேரடியான கதை மரபு மேலோங்கியது.
இன்றைய காலகட்டத்தில் ஜீ.முருகன்,
பா.வெங்கடேசன் ஆகியோர் தங்களது கதைகளை
யதார்த்தவாத கதைகளுக்கு மாறான முறையிலேயே எழுதுகின்றனர்.
கிருஷ்ணமூர்த்தி தான் சொல்ல
தேர்ந்தெடுத்துள்ள கதைகளுக்கு நேரடியான இயல்புவாத கதைசொல்லும் பாணி ஒத்துவராது
என்பதால் மாய யதார்த்த சாயல்களைக் கொண்ட புதிய சொல்முறையை
தெரிந்தெடுத்திருக்கிறார்.
இந்தத் தொகுப்பில் உள்ள கதவு எண் 8, காணாமல்
போனவர்கள் பற்றிய அறிவிப்பு, தாயம், ஞமலி ஆகிய நான்கு கதைகளும் இவ்வகையானவை.
‘கதவு எண் 8’ தபால்காரர்கள், தபால் அட்டைகளின் இன்றைய பரிதாப நிலையிலிருந்து தொடங்குகிறது. கதை வளர்ந்து தபால்காரனே தபால் பெறுபவனாக மாறி தபால் அலுவலகத்தின்
மூடப்பட்ட அறையே முகவரி இலக்கமிட்ட கதவாக மாறும் புனைவுத்தியுடன் முடிகிறது.
காலாவதியாகிப்போன ஒரு தகவல் தொடர்பு துறையினைக் குறித்தும்
மனிதர்கள் அவற்றை புறக்கணித்திருப்பதைப் பற்றியதுமான இக்கதை பொருள் அளவில் தனி
அடையாளங்களை இழக்கச் செய்யும் இன்றைய நவீன உலகப்போக்கினைச் சுட்டி நிற்கிறது.
இதே கதையை இன்றைய தபால் ஊழியரின் கதையாக மட்டுமே நேரடியான
மொழியில் சொல்லியிருக்க முடியும்.
இயற்கை பேரழிவைக் கண்ட அதிர்ச்சியினால்
பேய்வீடுகளின் மேல் பித்துகொண்டிருக்கும் ஜெனோபில் சுழல் பாதைகள் கொண்ட ‘இருள்
கூடு’ என்ற வீட்டை கண்காட்சிப் பொருளாக்கி காத்திருக்கும் கவான் டஃபேவை
சந்திப்பதும் அதன் பின்னான புதிர்வழிகளுமே ‘காணாமல்போனவர்கள் பற்றிய கதை’. உளமுறிவுக்கு உள்ளான
இருவரின் பித்துலகை மையமாகக் கொண்டிருக்கும் இக்கதையும் யதார்த்தமும் மாயமுமான
பின்னல்களைக் கொண்டுள்ளது.
தாயக் கட்டைகளின் உலகத்தில் தன்னை
இழந்தவனின் மன உலகத்தை சொல்லும் ‘தாயம்’ கதையும் இன்னொரு விதத்தில் யதார்த்தத்தை
மீறிய ஒன்றே. ஒரு ஜதை உலோகத் துண்டுகளும் உருளும் அதன் ஓசையுமே மொத்த வாழ்க்கையாக
அமைந்த ஒருவனின் அக உலகுக்கும் புற உலகுக்கும் இடையேயான நிரப்ப முடியாத இடைவெளி
எந்த மருத்துவத்தாலும் குணப்படுத்த இயலாத ஒன்று.
தெரு நாய்களையும் அவற்றைச் சுற்றியுள்ள
உலகத்தையும் சித்தரிக்கிற ‘ஞமலி’ மனிதர்களின் பல்வேறு மனத் திரிபுகளை சொல்கிற
கதையாகும். யதார்த்தமான கதையாகத் தொடங்கியபோதும் வளருந்தோறும் இயல்பை மீறிய ஒன்றாக
மாறிவிடுகிறது.
தொகுப்பின் முதல் கதையான ‘அளகபாரம்’
புகழ்பெற்ற ‘மேகியின் பரிசு’ கதையை சட்டென நினைவுபடுத்தும் ஒன்று. தகவல் தொழில்நுட்ப
ஏற்றங்கள் உருவாக்கி வைத்திருக்கும் இன்றைய நவீன வாழ்வின் பொருளாதாரத்
தடுமாற்றங்களால் உறவுகளுக்குள் நிகழும் மோதல்களையும் சமரசங்களையும் அடிப்படையாகக்
கொண்ட கதை இது.
முதுபெரும் எழுத்தாளரை சந்திக்கச்
செல்லும் இளம் எழுத்தாளரின் அனுபவமாக விரிகிறது ‘நிர்தாட்சண்யம்’. கதையின் முடிவில்
அசோகமித்திரனை நினைக்காதிருக்க முடியவில்லை.
காலங்காலமாக தமிழ் கதையுலகில்
புழங்கியிருக்கும் முயல் ஆமை கதையை மீண்டும் உருவகக் கதையாக சொல்கிறது ‘மண்டூகம்’. வேறுவகையாக
கதைசொல்லும் முறையில் மிகுந்த ஆர்வம்கொண்டுள்ள கிருஷ்ணமூர்த்திக்கு இவ்வகையான
கதைகள் செறிவான அனுபவங்களை தரவல்லவை.
சமகால பிரச்சினைகளை குறிப்பாக அரசியல்
சார்ந்த விஷயங்களை கதைக் களங்களாகக் கொண்டு கதைகள் எழுதுவது தமிழில் வெகு அரிதானது. இந்திய அளவில் பெரிதும்
விமர்சிக்கப்பட்ட பணமதிப்பின்மை நடவடிக்கையை சரடாகக் கொண்டு ‘புனைசுருட்டு’ கதையை
எழுதியுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. பொதுவாக இத்தகைய கதைகளில்
இயல்பாகவே அமைகிற புனைவின் எல்லைகள் இக்கதையையும் விட்டுவைக்கவில்லை.
மரணத்துக்குப் பிறகான அப்பாவின்
நினைவுகளைச் சொல்லும் ‘அப்பாவின் ரகசியம்’ கதை கிருஷ்ணமூர்த்தியின் கதை
உலகிலிருந்து முற்றிலும் வேறானது.
மழை நாள் மாலையொன்றில் தவித்து நிற்கும் வங்கியின் உதவியாளர்
கணேசனின் மன உலகத்தைச் சொல்லும் ‘கறை’ கதையும்கூட இவ்வாறானதே.
சமகாலத்தில் தன் இருப்பின்
பொருத்தமின்மையுடன் உலவும் தபால்காரர்கள்,
தெருநாய்களை பிடிப்பவர்கள், பேய்
வீட்டின் உரிமையாளன், தாயம் உருட்டுவதில் நாட்களைக்
கழிப்பவன் என கிருஷ்ணமூர்த்தியின் கதாபாத்திரங்கள் தமிழ் கதையுலகிற்கு புதியவர்கள்.
பேசப்படாதவர்கள். இவர்களை மையமாகக்
கொண்ட கதைகள் நேரடி சொல்முறையை விடுத்து காலத்தையும் நிகழ்வுகளையும் கலைத்துப்
போட்டு புதிய வேறொரு உத்தியை சற்றே மாய யதார்த்த சாயலுடன் சொல்ல முயன்றுள்ளார்.
பெரும்பாலான கதைகள் ஏராளமான தகவல் செறிவுடன் சற்றே விரிவான
அளவில் எழுதப்பட்டுள்ளன. ஆசிரியரின் உத்வேகத்தினாலும்
ஆர்வத்தினாலும் கதையில் அமைந்துள்ள இத்தன்மைகளால் கதைகளின் வடிவ ஒருமை கூடி
அமையாமல் உள்ளது. மேலும், சீரற்ற
வாக்கியங்களும் பொருத்தமற்ற சொற்களும் வாசிப்பு அமைதியை மட்டுப்படுத்துவதாக
அமைந்துள்ளன. இக்கதைகளில் பேசப்படும் கதைமாந்தர்களும்
வாழ்வும் இத்தகைய தன்மைகளைப் பின்னுக்குத் தள்ளும் உக்கிரத்தையும் அனுபவங்களையும்
கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ள வடிவங்களையும்
உத்திகளையும் மீறி புதிய கதைமொழியை கண்டடைய முனையும் எவருக்கும் நேர்கிற புனைவு
சார்ந்த சவால்களே இவை. நீண்ட அடர்த்தியான கதைகளை எழுதும் உத்வேகமும் ஆர்வமும்
கிருஷ்ணமூர்த்தியால் இவ்வாறான சவால்களை உறுதியுடன் சந்திக்கமுடியும்.
இலக்கியத்தை சொற்களாலான
கலைடாஸ்கோப்பாகவே கருதுவதாக தன் முன்னுரையில் சொல்லியுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. கணந்தோறும்
உருமாறும் வண்ணங்களுடனும் உருவங்களுடனுமான கலைடாஸ்கோப்பின் தோற்றங்கள் வசீகரமானவை.
காணுந்தோறும் உவகையளிக்கக்கூடியவை. ஆனால்
கண்ணை எடுத்தவுடன் அந்தத் தோற்றங்களும் வண்ணங்களும் நினைவில் மீள்வதில்லை. சிறுகதையில் பயிலும் வடிவங்களும் உத்திகளும் அவ்வகையானவையே. கிருஷ்ணமூர்த்தியின் இத்தொகுப்பு கவனம் பெறுமென்றால் அதற்கான காரணம்
தொகுப்பிலுள்ள புதிய சொல்முறையோ அல்லது உத்திகளோ அல்ல. வாழ்வின்
புதிர்வழிகளை நோக்கிய திறப்பாகவோ இதுவரையிலும் பேசப்படாத மாந்தர்களின்
அன்றாடத்திலிருந்து சிற்சில கணங்களையோ சொல்லும் கதைகளைக் கொண்டிருப்பதால் மட்டுமே.
0
காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு
கிருஷ்ணமூர்த்தி
டிசம்பர் 2018 யாவரும்
பப்ளிஷர்ஸ்.
No comments:
Post a Comment