வாசிப்பையும் எழுத்தையும் அச்சுக் காகிதத்திலிருந்து இடம் மாற்றிய நவீன தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தித் தந்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகின. இப்போது நாவல்கள் அந்த இடத்தைப் பிடித்துள்ளன. அண்மையில் வெளியாகியுள்ள நாவல்களின் எண்ணிக்கை முப்பதுக்கும் அதிகம். அவற்றில் பெரும்பாலானவை ஆசிரியர்களின் முதல் நாவல்.
இவற்றில்
பலவும் தமிழ் நாவல்கள் பழகிவந்த தடத்திலிருந்து மாறுபட்ட வடிவையும் மொழியையும் கதைக்
களத்தையும் கொண்டிருக்கின்றன. அவற்றுள் எனக்கு வாசிக்கக் கிடைத்த நான்கு நாவல்களைக்
குறித்த கட்டுரை இது.
சுனில்
கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’, கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் ‘நட்சத்திரவாசிகள்’, எஸ்.செந்தில்குமாரின்
‘கழுதைப் பாதை’, அரிசங்கரின் ‘பாரிஸ்’ ஆகிய நான்கு நாவல்களைக் குறித்த வாசிப்பனுபவமே
இந்தக் கட்டுரை.
நான்கு
நாவல்களுமே வெவ்வேறு கதைக்களத்தைக் கொண்டவை. சொல்லிய விதத்திலும் வடிவிலும் வேறுபட்டவை.
முந்தைய காலகட்டத்தைப் பற்றிய நாவலாக ‘கழுதைப் பாதை’ அமைந்திருக்க, நவீன வாழ்வின் தவிர்க்கமுடியாத
அம்சமாக விளங்கும் தொழில்நுட்பத் துறை சார்ந்தவர்களின் வாழ்வைக் குறித்து ‘நட்சத்திரவாசிகள்’
பேசுகிறது. குழந்தைப்பேறு குறித்த சமூகப் பார்வை தருகிற அழுத்தங்களையும் அதிலிருந்து
மீள நவீன மருத்துவம் முன்னிறுத்தும் சாத்தியங்களையும் குறிப்பிட்ட தம்பதி எதிர்கொள்ளும்
உளவியல் சவால்களையும் சிதைவுற்ற கதை வடிவில் ‘நீலகண்டம்’ சொல்கிறதென்றால், குடியுரிமை
கொண்ட பெண்களை மணந்துகொண்டு பாரிஸூக்கு செல்லும் கனவுடன் உலவும் பாண்டிச்சேரி இளைஞர்களின்
வாழ்வைச் சொல்கிறது ‘பாரிஸ்’.
நால்வரில்
எஸ்.செந்தில்குமாரைத் தவிர மற்ற மூவருக்கும் முதல் நாவல். சுனில் கிருஷ்ணனும் கார்த்திக்
பாலசுப்ரமணியனும் சிறுகதைத் தொகுப்புகளின் வழியாக அறிமுகமானவர்கள். இன்றைய புனைவுலகில்
அதிகமும் கவனிக்கப்படுபவர்கள். ஒப்பீட்டளவில் அரிசங்கர் புதியவர். ‘பேபல்’ இதழ் வழியாக
அறிமுகம் பெற்றுள்ளவர். அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது என்றாலும் கவனம்
பெறவில்லை. வெவ்வேறு அனுபவங்களைக் கொண்டவர்களின் நாவல்களைப் பற்றிய தனித்தனி கட்டுரைகளை
ஒட்டுமொத்தமாக உள்ளடக்கியது இந்தக் கட்டுரை.
1
உடைந்த
துண்டுகளில் உருக்கொள்ளும் சித்திரம்
சுனில்
கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ நாவலின் மையத்தை ‘குழந்தைகள்’ என்று ஒற்றைச் சொல்லில்
வகுக்க முடியும். இன்னும் கறாராகச் சொல்லப்
போனால் குழந்தையின்மை என்பது தனிமனித அளவிலும் குடும்ப உறவுகளுக்குள்ளும் சமூக
உறவிலும் ஏற்படுத்தும் உளச் சிக்கல்களை மையம் கொண்டுள்ளது என்றே சொல்லலாம்.
இதுவொன்றும்
புதியதல்ல என்றாலும் சொல்லி முடிக்கப்பட்டுவிட்ட கதை அல்ல. இன்றைய சமூக மனிதனிடம் வம்சவிருத்தி என்னும் அம்சம் ஏற்படுத்தும்
அழுத்தங்கள் வேறானவை. அறியாமையும் பெண்களை மட்டுமே
காரணமாக்கிய ஆணாதிக்கமும் வலுவாக இருந்த நேற்றைய சூழலும் தகவல்தொடர்பினால்
திறக்கப்பட்டுள்ள உலகளாவிய அறிவுப்புலமும் மருத்துவம், அறிவியல்
இரண்டின் உச்சபட்ச சாத்தியங்களாலும் பெருமளவு மாறியிருக்கும் இன்றைய நவீன சூழலும்
வெவ்வேறானவை. இன்றைய தீர்வுகள் எளிதானவை என்ற எண்ணம்
உடனடியாக எழுந்தபோதும் தனிமனித அளவில் அவை எழுப்பும் கேள்விகளும் சிக்கல்களும்
நேற்றைய சூழலில் கிளைத்தவையே. தனிப்பட்ட ஆண் பெண் சார்ந்த உள
மோதல்களில் தொடங்கி இந்தப் பிரச்சினை ஏற்படுத்தும் உடைப்புகள் பெரும் பாதிப்புகளை
விளைவிப்பவை.
இந்த
நாவல் அவ்வாறான மோதல்களையும் உடைப்புகளையும் வெவ்வேறு கோணங்களில் அணுகியுள்ளது. அந்த வகையில் நாவலின் மையம் மிக முக்கியமானது.
இந்த
நாவல் சிதறலான ஒரு வடிவத்தில் சொல்லப்பட்டுள்ளது. நேர்கோட்டு
வடிவத்திலேயே நாவல் இருக்கவேண்டிய அவசியம் இல்லைதான். வடிவத்தை
கலைப்பதும் மீறுவதும் தேவையைப் பொறுத்து செய்யவேண்டியவைதான். முற்றிலும் நேரடியான கதைசொல்லல் முறையைக் கொண்ட நாவலாக இல்லாமல் ஒரு
கோணத்தில் இது மீயதார்த்தமாகவும் இன்னொரு கோணத்தில் மாய யதார்த்த பாணியிலுமாக
அமைந்துள்ளதால் வெவ்வேறு வடிவங்களை கையாண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
குழந்தைகளைச் சுற்றிய உலகம் என்பதால் குழந்தைகளுக்கான உலகமும்,
விக்ரம் வேதாவும் உள்ளே வந்திருக்கவேண்டும். விக்ரம்
வேதாவுக்கிடையே சொல்லப்படும் புராண கதைகள் நாவலின் மையத்தை சுற்றிய கேள்விகளாகவும்
விளக்கங்களாகவும் அமைந்திருக்க குழந்தைகளின் உலகமாக அமைந்துள்ள பகுதிகள்
குழந்தைகளுக்கேயுரிய வெகுளித்தனங்கள் இன்றி புத்திசாலித்தனமாக உள்ளன. பழங்கதைகள் இரண்டும், நாடகமொன்றும், வழக்காடு மன்றத்திற்கான
விண்ணப்பமொன்றும் கதாபாத்திரங்களே எழுதும் குறிப்புகளும் நாவலின் பல்வேறு
பகுதிகளாக அமைந்துள்ளன. இவை யாவும் கதையின் முன்பின்
உறுப்புகளாக அமைந்திருப்பவை. தொடர்ச்சியை வெவ்வேறு
தளத்திலிருந்து வாசகனுக்குத் தெரிவிப்பவை. நாவலின்
புரிதலுக்கும் மேலதிக வாசிப்புக்கும் இடமளித்துள்ளன. ஆனால்
நாவலின் வாசிப்பு சுவாரஸ்யத்துக்கு இவை
இடமளிக்கவில்லை.
தமிழில் இதற்கு முன்னும் வடிவ அளவிலான பல பரிசோதனைகளும்
முயற்சிகளும் நடந்துள்ளன. ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின்
குரல்’ நாவலின் வடிவம் அதன் மையத்துக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது. அண்மையில் வெளியான விவேக் ஷான்பாக்கின் ‘காச்சர் கோச்சர்’ நாவலும் வெவ்வேறு கதாபாத்திரங்களின்
வழியாக சொல்லப்பட்ட கதைதான். அதன் வடிவ மீறல் நாவலின் மையத்துக்கு
கச்சிதமாக பொருந்தியிருந்தது.
தமிழவன், எம்.ஜி.சுரேஷ், கோணங்கி ஆகியோர்
நாவலின் புதிய சாத்தியங்களை வடிவங்களை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். நாவல் வடிவத்தில் தொடர்ந்து புதிய
பாணிகளை பரிசோதிப்பவர் யுவன். பா.வெங்கடேசனின்
நாவல்களும் அவ்வகையே. இவை இவ்வாறு தமிழின் பல்வேறு எழுத்து முறைகளையும்
வடிவங்களையும் முன்வைத்த நாவல்களின் வரிசையில்
‘நீலகண்டமு’ம் இடம்பெறுகிறது.
நாவலின்
கச்சிதமான புனைவு மொழி வெவ்வேறு வடிவங்களிடையேயும் தனித்துவத்துடன் அமைந்துள்ளது. குழந்தைகளின் உலகத்தைச் சொல்லும் பகுதிகள் தமிழில் வெகுவாக இல்லாத சிறுவர்
உலகத்தை அபாரமாக கட்டமைத்துள்ளன. மனவோட்டங்களாக அமைந்துள்ள
குறிப்புகளும் ( கரையான் போன்றவை ) பல
இடங்களில் புனைவுச்சம் பெற்றுள்ளன.
மனிதனின்
எல்லா முயற்சிகளுக்கும் ஆதாரமாக அமைந்திருப்பது தனது சந்ததிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதுதான்.
இயற்கையாக ஒரு வாரிசு அமையாதபோது அந்தத் தம்பதிகளின்மீது ஏற்படும் அழுத்தங்கள் பல்வேறு
வகையானவை. இன்றைய மருத்துவத் துறையில் பணம்பெருக்கும் மிகப் பெரும் வாய்ப்பாக மாறியிருக்கும்
இந்தச் சிக்கலின் உளவியல் கூறுகளை வெவ்வேறு வடிவங்களின் வழியாக விவாதித்துள்ளது சுனில்
கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’.
( நீலகண்டம்,
யாவரும் வெளியீடு )
2
வளங்களை
விழுங்கும் வணிகத்தின் பாதை
மனித
வரலாற்றில் வியாபார வளர்ச்சிக்கென வெவ்வேறு காலகட்டங்களில் உருவான பல்வேறு வழித்தடங்களைப்
பற்றிய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ராய் மாக்ஸிமின் ‘உப்புவேலி’, ‘பட்டுப் பாதை’, கடல்வழிகள்
ஆகியவையை உதாரணமாகக் குறிப்பிடலாம். இதற்கு இணையாக உதகைக்கு மலைப்பாதை அமைத்ததைச் சொல்லும்
‘வெல்லிங்டன்’ நாவலையும் நினைவுகூறலாம். நெருப்பைக் கண்டுபிடித்த காலந்தொட்டு மனிதன்
தொடர்ந்து தனது முன்னேற்றத்துக்கான பாதையில் ஏற்படும் தடைகளை களைவதிலேயே முதன்மையாக
கவனம் செலுத்தி வருகிறான். இயற்கையை மீறிச் செல்வதன் மூலமாகவே வளர்ச்சியின் பாதையை
எட்ட முடியும் என்ற அவனது முயற்சிகளுக்கு எல்லைகளே இல்லை. ‘தன்னிறைவு’ என்பது மனிதனது
இயல்பான குணமல்ல. ஒன்றையடுத்து இன்னொன்று, அதன் பிறகு வேறொன்று என்று அவனது இச்சைகள்
மேலெழுந்தபடியேதான் இருக்கின்றன. எங்கும் அவன் நிற்க விரும்புவதில்லை.
பொருட்களை
உற்பத்தி செய்யத் தொடங்கி, உபரியாக தன்னிடம் உள்ளவற்றை தேவைப்படுவோரிடம் பண்டமாற்றம்
செய்த காலத்தில் பாதைகளைக் கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டது. தரைவழியாக பாதைகள் அமைக்கப்பட்டபோது
மலைகளைக் கடப்பது சவாலான ஒன்றாக அமைந்தது. நெருப்யையும் ஆயுதங்களையும் கொண்டு மலைப்
பாதைகள் கண்டடையப்பட்டன. அவ்வாறான மலைப்பாதைகள் இன்று காலமாற்றத்தில் புழக்கமற்றுப்
போய்விட்டன. நவீன போக்குவரத்து வசதிகள் எதையும் எங்கும் கொண்டு சேர்க்கும் வசதிகளை
ஏற்படுத்தித் தந்துள்ளன.
இந்தப்
பின்னணியில் போடியை ஒட்டியிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல ஆண்டுகள் புழக்கத்திலிருந்த
மலைப்பாதையின் கதையைச் சொல்கிறது ‘கழுதைப் பாதை’. போடிநாயக்கனூருக்கும் மலைக்காட்டுக்கும்
இடையிலான இணைப்பாக விளங்கியது கழுதைப் பாதை. மலையிலிருந்து தரைக்கு காபிக் கொட்டைகளையும்
தரையிலிருந்து மலை கிராமங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களையும் கொண்டு
சேர்க்கும் முக்கிய வழித்தடமாக அமைந்திருந்தது. தரையிலிருக்கும் முதலாளிகள், கழுதையின்
உரிமையாளர்கள், மேய்ப்பர்கள், மலைகிராமத்தில் உழைக்கும் கூலிகள், முதுவர்கள் என இந்தப்
பாதையை நம்பி வாழ்ந்த அனைவரையும் அது ஒன்றிணைத்திருந்தது.
தலைச்சுமைக்
கூலிகள், ராவுத்தரின் உப்புச் சுமைகள், கழுதைகள் என்று மூன்று வெவ்வேறு காலகட்டங்களில்
உருவான பாதையின் வரலாற்றைச் சித்தரிக்கிறது இந்த நாவல். முத்துச்சாமியின் நூறு தலைச்சுமைக்
கூலிகளைப் பற்றியும் ராவுத்தரின் உப்பு வியாபாரத்தைப் பற்றியுமான தகவல்கள் கழுதைப்
பாதையின் காலத்தில் சித்தரிக்கப்படும் கதைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. வணிக நோக்கிலான
கழுதைப் பாதையின் பின்புலத்தில் வெவ்வேறு ஆண்-பெண் உறவுகள் விவரிக்கப்பட்டுள்ளன. இயற்கையின்
மீது கொண்டிருக்கும் பக்தியின் நம்பிக்கையின் காரணமாக எளிமையான வாழ்வை மேற்கொண்டிருக்கும்
மலைகிராமத்தின் முதுவர்கள், கடுமையான மலைப்பாதையில் கழுதைகளை ஓட்டிவரும் கூலிகள், கழுதையின்
உரிமையாளர்கள், இவர்களின் உழைப்பில் வாழும் தோட்டத்து முதலாளிகள் ஆகியோர்க்கு இடையேயான
உறவுகளும் முரண்களும் மோதல்களும் நாவலில் ஒன்றிணைந்துள்ளன.
நாவலின்
நம்பகத்தன்மைக்கு வலுசேர்க்கும் வகையில் சுமையேற்கும் கழுதைகள் குறித்த தகவல்கள், அரிசி
திருட்டு, வைத்திய முறைகள் போன்றவை துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. பச்சைக்கிளியின்
முறைமாமன் இளஞ்சி அவளை மணந்துகொள்ள முடியாத துக்கத்தில் கூரிய அரிவாளின் மேல் வயிற்றை
அழுத்தி தற்கொலை செய்துகொள்வது, உமையாள் விலாசில் மூக்குவளையம் தண்டபாணி வெந்நீரை எடுத்து
மலைகிராமத்து மக்களின்மேல் ஊற்றுவது, ராசப்பன் செட்டியார் வீட்டில் படிக்கூலி நாளன்று
நிகழும் சம்பவங்கள் என்று நாவல் உச்சமான தருணங்களைக் கொண்டுள்ளது.
முத்துச்சாமி,
சுப்பண்ணா, செல்வம், ராசப்பன் செட்டியார், கீசரு போன்ற ஆண் கதாபாத்திரங்கள் நாவலில்
முதன்மையான இடம் பிடித்திருந்தபோதும் சரசு, கோமதி, நாகவள்ளி, வெள்ளையம்மாள் ஆகிய பெண்
கதாபாத்திரங்களே நாவலை வலுவுடன் ஆக்கிரமித்துள்ளன.
தலைச்சுமை
கூலிகளை ஏற்படுத்தி நிர்வகிக்கும் முத்துச்சாமி நாய்க்கனின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடும்பொருட்டு
சௌடையன் தலைச்சுமைகளுக்கு பதிலாக கழுதைகளை ஏற்பாடு செய்கிறார். அதன்பிறகே கழுதைப் பாதை
உருவாகிறது. தலைச்சுமையிலிருந்து கழுதைப் பாதைக்கான உருவாக்கம் என்பது நாவலின் முக்கியத்
திருப்பம். முத்துச்சாமியின் தலைச்சுமைகளுக்கும் அவரிமிருந்து அனைத்தையும் பறிக்க வெள்ளையம்மாளும்
கீசருவும் செய்கிற தந்திரங்களும் கொலையும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும் அளவுக்கு
சௌடையன் கழுதைப் பாதையைத் தொடங்க மேற்கொண்ட முயற்சிகளும் சொல்லப்பட்டடிருக்கலாம்.
நாவலின்
பல்வேறு சம்பவங்களுக்கான காலம் குறித்த தெளிவுகள் போதிய அளவுக்கு இடம்பெற்றிருக்கலாம்.
தேச விடுதலையை ஒட்டிய காலத்தில் நடப்பது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தபோதும் நாவலின்
முன்பின்னாக சித்தரிக்கப்படும் மாற்றங்களை அனுமானிப்பதில் சிக்கல்கள் உள்ளன.
நாவலின்
முடிவில் ஏற்படும் காட்டுத் தீயில் கழுதைகள் மாண்டுபோகின்றன. இயற்கையாக நிகழும் இந்த
சம்பவத்தை அறம் சார்ந்த விளைவாக மாற்றியிருப்பது நாவலின் போக்குக்கு ஏற்றதாய் அமையவில்லை.
எஸ்.செந்தில்குமார்
தொடர்ந்து ஓய்வின்றி எழுதுபவர். கடுமையாக உழைத்துச் சேர்த்த தரவுகளைக் கொண்டு ‘கழுதைப்
பாதை’யை எழுதியிருக்கிறார். கதாபாத்திரங்களை வலுவுடன் அமைத்து அவர்களுக்கு இடையேயான
உறவுகளை மோதல்களை கச்சிதமாக அமைத்திருக்கிறார். மலைவாழ் மக்களும் மலைகளையொட்டி தரைவாழ்
மக்களும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் பின்னணியை அழகாகச் சித்தரித்திருக்கிறார்.
அவர்களது பண்பாட்டு அம்சங்களையும் நாகரிக வளர்ச்சி ஏற்படுத்திய மாற்றங்களையும் விரிவாகச்
சொல்லியிருக்கிறார். இவற்றின் மூலமாக அவர் இணைத்துக்காட்டும் மனிதவாழ்வின் பல்வேறு
தருணங்களும், ஆண்பெண் உறவுகளும், மனப்போக்குகளும் நாவலுக்கு வலுசேர்த்துள்ளன.
எஸ்.செந்தில்குமாரின்
முந்தைய நாவல்களிலிருந்து ‘கழுதைப் பாதை’ வெகுவாக முன்னகர்ந்திருப்பது முக்கியமானது.
( கழுதைப்
பாதை, நாவல், எழுத்து பிரசுரம் )
3
மின்னி
மறையும் விண்மீன்கள்
இன்றைய
இளைஞர்களின் நவீன வாழ்வையும் கட்டமைத்துள்ள தகவல் தொழில்நுட்பத் துறையைப் பற்றிய
நாவல் ‘நட்சத்திரவாசிகள்’. தமிழக அளவில் இளைஞர்களின்
வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் இத்துறையைப் பற்றிய பொதுக்
கருத்துகள் இரண்டு விதமானவை. ஒன்று, அதன் வழியாக சாத்தியப்பட்டிருக்கும் பொருளாதார வளம். எளிய கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து படித்து
தலையெடுக்கும் இளைஞனுக்கு வாழ்நாள் முழுக்க உழைத்து தன் தந்தையால் சாத்தியப்படாத
ஒரு வசதியான வாழ்வை சில மாதங்களில் அமைத்துத் தரமுடியும் அற்புத விளக்கு இத்துறை
என்ற பார்வை. இரண்டாவது, ஆடம்பரமான
இந்தத் துறை அளித்திருக்கும் பொருளாதார விடுதலையின் காரணமாக சீர்குலைந்திருக்கும்
வாழ்வியல் மதிப்பீடுகள். குறிப்பாக ஆண் பெண் உறவில் காண
முடிகிற நிச்சயமின்மை.
இந்த
இரண்டு பார்வையிலும் நிறைய உண்மைகளும் அதேயளவு கற்பனைகளும் உண்டு.
இந்த
நாவல் அப்படியான கருத்து நிலைகளை கற்பனைகளை மறுபரிசீலனை செய்ய கோருகிறது. வெளியிலிருந்து பார்ப்பதுபோல அத்தனை சௌக்கியமானதில்லை இந்த வாழ்க்கை
என்று அதிலுள்ள பல்வேறு சிக்கல்களை நுட்பமாகவும் தெளிவாகவும் முன்வைத்துள்ளது.
சமூகத்தின்
பிற துறைகளில் உள்ளதுபோலவே இதிலும் பதவி, அதிகாரம்,
துரோகம் என்ற அடிப்படை அலகுகள் இயங்கவே செய்கின்றன. யாரும் யாரையும் நம்புவதில்லை. நம்புவதாக
நடிக்கிறார்கள். இரண்டில் ஒருவர்தான் பிழைத்திருக்கலாம்
என்றால் அடுத்தவரை சாகடிக்கவும் தயங்குவதில்லை என்ற குரூரமான யதார்த்தத்தை,
வல்லவன் வாழ்வான் என்ற இயற்கையின் நியதியை உரக்கவே நிரூபிப்பதாக
வழிமொழிவதாக உள்ளது. வித்தியாசம் இதற்காக இத்துறை
கையிலெடுக்கும் கருவிகள். அவை நவீனமானவை, நாசுக்கானவை. அவ்வளவே.. நாவலின் மையம் என்றும் இதைக் குறிப்பிடலாம்.
ஆண்
பெண் உறவில் ஒருவித போலித்தன்மையை அல்லது உத்தரவாதமின்மையை இத்துறை கொண்டு
சேர்த்திருக்கிறது என்ற பொதுக் கருத்து உண்டு. இருவரும்
சம்பாதிக்கிறார்கள். எனவே இருவருக்கும் சம உரிமை உண்டு.
அவரவர் சுதந்திரத்தை பாதுகாக்கும் பொருட்டு அடுத்தவர்
சுதந்திரத்தை மதித்திடாத போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக
பெண்களின் மனப்பான்மையில் ஏற்பட்டுள்ள தீவிரம் கவனிக்கத்தக்கது. இதை இரண்டு விதங்களிலும் அணுகலாம். தனக்காக
வெளியை தீர்மானிக்கும் உரிமையை இயல்பாகவே கையிலெடுத்துக் கொள்கிறாள் என்பது
ஒருவிதம். இந்திய அளவில் இன்றும் வலுவாக உள்ள குடும்ப
அமைப்பின் அடிப்படையான விட்டுக்கொடுத்தல் என்ற காரணியை அது எத்தனை தூரம்
அனுமதிக்கிறது அல்லது புறக்கணிக்கிறது என்பது இன்னொரு விதம்.
காலப்போக்கில்
வளர்ந்து இது அடையப்போகிற இலக்கு பக்குவப்பட்டதாக அனுபவத்தின் காரணமாய் மேலும்
முதிர்ச்சி கொண்டதாக அமையலாம். ஆனால் இன்றளவில் இது
பெருமளவு தீர்மானிக்க முடியாததாக உள்ள காரணத்தால் பல இடங்களில் சமூக நோய்மைக்கே
இடமளித்துள்ளது என்பதை இந்த நாவல் நுட்பமாகத் தொட்டிருக்கிறது.. கணவன் மனைவிக்கு இடையிலான உரையாடலே கைப்பேசியின் வழியாக ஒரு சில
சொற்களில் முடிந்துபோகும் அவலத்தையும் அதனால் ஏற்படும் மனச்சரிவையும் முறிவையும்
உணர்த்தியுள்ளது.
Y2K விலிருந்து அலெக்ஸி, ஸ்விக்கி வரையிலான
தொழில்நுட்ப வளர்ச்சி சராசரி மனித வாழ்வை எத்தனை தூரம் இயந்திரமயமாகவும்
செயற்கையாகவும் கட்டமைத்துள்ளது என்பதன் சித்திரத்தை இந்த நாவலில் காண முடிகிறது.
இத்துறையின்
முக்கியமான சாதனைகளில் ஒன்று பெண்களின் வாழ்வில் இது ஏற்படுத்தியுள்ள ஆரோக்கியமான
மாற்றங்கள். அறிவின் பலத்துடன் தன்னம்பிக்கையுடனும்
துணிச்சலுடனும் ஆண்களுக்கு சமமாக வாழ்வை எதிர்கொள்ளும் வாய்ப்பை இது பெருமளவு
வழங்கியுள்ளது. இன்னொரு பக்கம் அதுவே அபத்தங்களையும்
கொண்டு சேர்த்துள்ளது. இந்த புள்ளியை இன்னும் சற்று ஆழமாக
நாவலுக்குள் விவாதிக்க இடமுள்ளது.
தகவல்
தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட ஆரோக்கியமான மாற்றங்களில் ஒன்று, சாதிய அடுக்குகளிலிருந்து விலகுவதற்கான பொருளாதார வாய்ப்பை இது
அளித்திருப்பது. உண்மையில் இது எந்த அளவுக்கு உள்ளே
செயல்படுகிறது என்பது தெளிவில்லை. ஆனாலும் சாதிய
மனப்பான்மையும் ஒடுக்குமுறையும் நுட்பமான அளவில் செயல்பட வாய்ப்புள்ளது. சாதி, இன அளவிலான சாதக பாதங்களைக் குறித்து
நாவல் எதுவும் பேசவில்லை. அவசியம் சொல்லித்தான்
ஆகவேண்டுமா என்று கேட்டால் இல்லை என்று சொல்லாம். ஆனால்
சமூக வாழ்வை மாற்றத்துக்குட்படுத்தும் ஒரு துறை முக்கியமான காரணியாக சாதியை எப்படி
அணுகுகிறது என்பதை சொல்லாமல் போனால் அது முழுமையாக இருக்காது.
உடையும்
உறவுகளின் சித்திரம் நாவலில் உள்ள அளவுக்கு அவை தரும் அகச் சிக்கல்களும் மனச்
சிதைவுகளும் அழுத்தமாக அமையாது
சித்தரிப்புகளாக நின்றுவிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.. உதாரணமாக, பவித்ராவைப் பற்றிய சம்பவம்.
உளவியல்ரீதியாக அவள் எப்படி தனிமைப்படுத்தப்படுகிறாள், அது அவளுக்குள் ஏற்படுத்தும் மாற்றம், அந்த
மாற்றம் அவளை எங்கே கொண்டு சென்று நிறுத்துகிறது என்பதை இன்னும் உக்கிரமாக
சொல்லியிருக்க முடியும். அதேபோல அமெரிக்காவில்
கழிப்பறையில் ஒரு இளைஞன் படுக்கையை கிழித்துப் போட்டுக் கொண்டு அழுவது போன்ற ஒரு
காட்சி உண்டு.
சித்தரிப்பில்
கச்சிதமும் நிபுணத்துவமும் கூடி வந்துள்ளது. பல
விஷயங்களை ஆங்கிலத்தில் யோசித்து தமிழ்படுத்தியிருப்பது போன்று உணர்வு எழுகிறது.
துறை சார்ந்த விஷயங்களில் இதைத் தவிர்க்க முடியாது. உரையாடல்களை இன்னும் கொஞ்சம் இயல்பாக அமைத்திருக்க முடியும்.
பளபளக்கும்
குளிரூட்டப்பட்ட கட்டடங்களுக்குள் எந்தவிதத்திலும் நம் வாழ்வோடு தொடர்பில்லாத
ஏதோவொரு வேலையை உளமாற அறிந்திராத ஏதோவொரு மொழியில் செய்துகொண்டிருக்கும் ஒரு
தலைமுறை சராசரி வாழ்விலிருந்தும் அதன் எளிமையான சந்தோஷங்களிலிருந்தும் எத்தனை
தொலைவு விலகிப் போய்விட்டார்கள் என்பதை சொல்லிய அளவிலும்,
அவரவர்
இருப்புக்கான பாதையில் அடுத்தவர்களைப் பற்றி யோசிக்க இடமில்லை என்ற போர் நியதியை
வெகு சாமர்த்தியமாக கையாளும் உத்திகளை நுட்பமாகச் சொன்ன விதத்திலும்,
ஆண்
பெண் உறவில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்களை புரிதல்களற்ற அபத்தங்களை அதனால்
ஏற்படும் உளவியல் சிக்கல்களை தொட்டுக் காட்டியமைக்காகவும்
‘நட்சத்திரவாசிகள்’ நாவலின் வருகை முக்கியமானது. தேவையானது.
(
நட்சத்திரவாசிகள், காலச்சுவடு வெளியீடு)
4
இலக்குகள்
புதிது
பாண்டிச்சேரி
அல்லது புதுச்சேரியைப் பின்னணியாகக்கொண்டு பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’, ‘மானுடம்
வெல்லும்’ ஆகிய இரண்டு நாவல்களும் பாவண்ணனின் ‘சிதறல்கள்’ நாவலும் வெளியாகியுள்ளன.
பாண்டிச்சேரியின் வரலாற்றுப் பின்னணியில் அமைந்திருந்தன பிரபஞ்சனின் நாவல்கள். விடுதலைக்குப்
பிறகு உருவாகி புகழ்பெற்ற பஞ்சாலைகளில் ஒன்றில் நடைபெற்ற வேலைநிறுத்தம் அதைத்தொடர்ந்து
தொழிலாளர்கள் சந்திக்க நேர்ந்த அவலம், இடப்பெயர்வு ஆகியவற்றை மையப்படுத்தியிருந்தது
பாவண்ணனின் நாவல்.
அரவிந்தர்
ஆசிரமம், ஆரோவில், பாரதியார், அரிக்கமேடு என பல்வேறு அம்சங்களுக்காக பாண்டிச்சேரி நினைக்கப்பட்டாலும்கூட
பொதுப்புத்தியில் உடனடியாக எழும் எண்ணம் வசீகரமான கட்டற்ற மதுச்சாலைகளின் நகரம் என்பதே.
அத்தகைய கொண்டாட்டத்தின் பொருட்டு வார இறுதிநாட்களில் தமிழகத்திலிருந்து சென்று குவிகிறார்கள்.
பிரெஞ்சு காலனியாக இருந்ததை நினைவுபடுத்தும்வகையில் நகரமே இரண்டாக வகுக்கப்பட்டிருப்பதும்
பிரெஞ்சு மொழியும் கலாச்சார அடையாளங்களும் இயல்பாக புழங்குவதையும் காணமுடியும்.
இவற்றுக்கு
அப்பால் அங்கே வசிக்கும் மக்களிடையே பெரும் ஆதர்சமாக கனவாக உலவியிருப்பது பிரெஞ்சு
குடியுரிமை. காலனி ஆதிக்கம் முடிந்த சமயத்தில் பிரெஞ்சு அரசாங்கம் தேவைப்பட்டோருக்கு
குடியுரிமையை தாராளமாக வழங்கியது. அப்போது அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டவர்களும்
அவர்தம் வாரிசுகளும் பின்னாட்களில் அடைந்த பலன்களைக் கண்ட பலரும் தவறவிட்ட வாய்ப்புக்காக
வாழ்நாள் முழுக்க வருத்தம் கொண்டனர். அவர்களின் வாரிசுகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும்
ஆளாயினர். இப்போதும் பிரெஞ்சு குடியுரிமைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடவில்லை.
பிரெஞ்சு குடியுரிமையுடன் உள்ள குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதன்
வழியாக அது ஈடேறும். அப்படியொரு பெண்ணை மணந்துகொண்டு பிரெஞ்சு குடிமகனாகி பாரிஸூக்குச்
சென்று வாழ்வதையே கனவாகவும் லட்சியமாகவும் கொண்ட புதுவையின் அடித்தட்டு இளைஞர்களின்
கதையே அரிசங்கரின் ‘பாரிஸ்’.
‘நேஷனாலிட்டி’
( பிரெஞ்சு குடியுரிமை பெற்றவள் ) பெண்ணை மணந்துகொள்வதற்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும்
போகத் தயாராக இருக்கிறார்கள். ‘நேஷனாலிட்டி’ என்கிற தகுதியை பணம்கொழிக்கும் வியாபாரமாக்கி
கோடிகளைச் சேர்க்கிறார்கள். இதற்கென ஆட்களைத் தேடி ஜோடி சேர்க்கும் தரகர்களும் பிரச்சினைகளை
சரிசெய்து பதிவுதிருமணம் செய்துவைக்கும் நபர்களும் பணத்துக்காக சாட்சியாக கையெழுத்திடும்
இளைஞர்களும் பிரெஞ்சு மொழி வகுப்புகளும் இந்த பெரும் இயந்திரத்தின் உதிரிபாகங்கள்.
புதுவைக்கேயுரிய
இத்தகைய கலாச்சார சிக்கலை நுட்பமாகவும் செறிவுடனும் சொல்லியிருக்கும் இந்த குறுநாவலின்
இன்னொரு சரடாக தன்பாலின உறவில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் இருவர் அமைந்துள்ளனர்.
கல்வியும்
தகுதியான வேலையும் கிடைத்தப் பின்பு இளைஞர்களின் வாழ்வின் அடுத்த திருப்பம் திருமணம்.
அது காதல் திருமணமாக அமையலாம். அல்லது இருவீட்டார் ஏற்பாட்டில் நிகழ்வதாகவும் இருக்கலாம்.
பெண் கல்வியும் வேலைவாய்ப்பும் பெருகியிருக்கும் இக் காலகட்டத்தில் சில இடங்களில் பட்டதாரியாக
இல்லாத அரசு வேலைக்கோ அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையிலோ இல்லாத இளைஞர்களை மணந்துகொள்ள
பெண்கள் சம்மதிப்பதில்லை. நிலம், சொத்து இருந்தபோதும்கூட பெண் கிடைப்பது பெரும்பாடாக
உள்ளது. கொங்கு வட்டாரத்தில் இத்தகைய நிலை உண்டு. வயது கூடிய பின்பும் மணமாக வாய்க்காதவர்கள்
அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து பெண்களை மணந்துகொள்கிறார்கள். உத்தரவாதத்தின்பொருட்டு
தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணின் பெயரில் நிலத்தை எழுதிவைத்தப் பின்பே திருமணம் நடக்கிறது.
சாதிக் கட்டுப்பாடு, கௌரவம் போன்றவற்றை சமரசம் செய்துகொண்டு நடக்கும் இத்தகைய திருமணங்கள்
இருதரப்புக்குமே தேவையானதை உத்தரவாதப்படுத்தும் ஏற்பாடாக அமைந்திருக்கிறது.
இந்தியாவின்
இரண்டு மாநிலங்களுக்குள்ளாக நடைபெறும் இந்த பரிமாற்றத்தில் தரகர்கள் இருந்தபோதும் அது
முழுமுற்றாக வியாபாரமாக மாறிவிடவில்லை. ஆனால் ‘பிரெஞ்சு குடியுரிமை’ என்ற பெரும் வாய்ப்பு
புதுவையில் நிகழ்த்தும் சதுரங்க விளையாட்டு அபாயங்கள் நிறைந்தது. செல்வம் கொழிப்பது.
எனவே பித்தலாட்டங்களும் சந்தர்ப்பவாதங்களும் தவிர்க்கமுடியாதவை.
கதை நிகழும்
கால அளவைக்கொண்டு இதை ‘குறுநாவல்’ என்று வகுத்திருப்பதாய் ஆசிரியர் சொல்கிறார். ஆனால்
புதுவையில் நிலவும் கலாச்சாரத் தாவலுக்கான வெவ்வேறு வழிகளையும் அவற்றினூடே நிகழும்
மோதல்களையும் அரசியலையும் பேசிய வகையில் இதை நாவல் என்றே குறிப்பிடலாம். பிஜு சார்லஸ்
ஆகியோரிடையே உள்ள தன்பால் உறவு மிகக் கச்சிதமான நோக்கில் அதன் உளம் சார்ந்த கொதிப்புகளை
மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டு பேசுகிறது.
அசோக்,
கிறிஸ்டோ, ஜென்னி ஆகிய முதன்மை கதாபாத்திரங்களில் உணர நேரும் துலக்கத்தை கதிர், சார்லஸ்,
ரஃபி, பிஜு, மதுமிதா ஆகிய கதாபாத்திரங்களில் காணமுடியவில்லை. காரணம் இவர்களின் பின்னணி
எதுவும் நாவலில் வெளிப்படவில்லை என்பதே. மாறாக டெய்லர், கிறிஸ்டோவின் அம்மா செலினா,
தரகர் ஆரோக்கியமேரி ஆகிய சிறு கதாபாத்திரங்கள்கூட நேர்த்தியுடன் அமைந்துள்ளன.
நாவலின்
சில இடங்களில் புறச் சித்தரிப்பு தேவைக்கு அதிகமாகவும் பல இடங்களில் மிகக் குறைவாகவும்
அமைந்துள்ளன.
கதை சொல்லும்
உத்தி ஒரு துப்பறியும் நாவலுக்கான விறுவிறுப்புடன் அமைந்திருப்பதும் இறுதியில் எல்லாக்
கதாபாத்திரங்களையும் ஒரு புள்ளியில் இணைத்துச் சேர்த்திருப்பதும் நாவலின் வாசிப்புத்தன்மைக்கு ஒத்திசைவாய் அமைந்துள்ளது.
பிரெஞ்சு
குடியுரிமையின் பொருட்டு புதுவையில் நிலவும் சமூக நிகழ்வுகளையும் அவற்றின் பின்னணியில்
உள்ள உளவியல் தடுமாற்றங்களையும் நேர்த்தியாக சொன்ன விதத்தில் ‘பாரிஸ்’ நாவல் ஒரு முக்கியமான
வரவு.
( பாரிஸ்,
தமிழ்வெளி )
0
No comments:
Post a Comment