Sunday, 2 January 2022

‘உலையில் போட்ட சிலுவை’ ஜெ.பிரான்சிஸ் கிருபா (1974-2021)




….

எனினும் அவன் இறந்துவிட்டான்

அவன் பாவங்கள் அநாதையாகிவிட்டன

0

‘மெசியாவின் காயங்கள்’ தொகுப்பை வெளியிட்டுப் பேசவேண்டும் என்ற கோரிக்கையுடன் அத்தொகுப்பின் திருத்தப்படாத பிரதி வந்து சேர்ந்தபோதுதான் ஜெ.பிரான்சிஸ் கிருபா என்ற பெயர் எனக்கு அறிமுகமாகிறது. கவிதைகளை வாசிப்பதற்கு முன்பே இனந்தெரியாத ஒரு பதற்றத்தை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது தொகுப்பின் தலைப்பு. அவரது கவிதைகள் ஏற்படுத்தும் பதற்றத்துக்கும் கிருபாவுக்கும் பாரதூரமான வித்தியாசம். ஆனாலும் அவரது கவிதைகளும் ‘கன்னி’ நாவலும் ஏற்படுத்திய பதற்றத்தை இப்போதும் உணரமுடிகிறது.

அத்தொகுப்பில் இருக்கும் நான்கு வரிக் கவிதை ஒன்று கிருபாவை எனக்கு அடையாளம் காட்டியது. இன்று அந்தக் கவிதைதான் அவரை அடையாளப்படுத்தும் கவிதையாகவும் அமைந்திருக்கிறது.

சிலிர்க்கச்  சிலிர்க்க அலைகளை மறித்து

முத்தம் தரும்போதெல்லாம்

துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து

அப்பறவைக்குத் தருகிறது

இக்கடல்

 

நவீன தமிழ்க் கவிதையின் வழக்கமான போக்கிலிருந்து மாறுபட்ட ஒரு பாணியிலானவை அவரது கவிதைகள். வயிற்றில் இறங்கும் கத்தியை தலை தூக்கி எட்டிப் பார்க்கும் ஆமையின் கண்களில் மெசியாவின் கண்களைக் காணும் முதல் கவிதையிலேயே இத்தன்மையை உணர முடிந்தது. அவமானம் மிகுந்த இரவில், வானத்தை பூமியில் வைத்து சூதாடக் கூடாது என்ற குரல் அசாதாரணமானது. ‘கட்டி முடித்த கண்ணாடித் தீவிற்கு விளக்கேற்றுகிறது விடிவெள்ளியின் முகம்’ என்பதுபோல எதிர்பாரா கணங்களில் வியப்பையும் விநோத அனுபவங்களையும் சாத்தியப்படுத்துவது.  

கிருபாவின் கவிதை மொழி தன்னிச்சையானது. தடையேதுமற்று பெருகி நிறைவது. ஒன்றையடுத்து ஒன்றாக சொற்கள் தாமாக வந்தமையும் வித்தைகொண்டது.

 

சொற்களிலிருந்து அர்த்தங்கள்

மௌனத்துக்குத் திரும்பும் வழி இது

 

என்ற வரிகளை மந்திரம்போல் ஒலிக்கச் செய்வது அவற்றில் உள்ள எளிமையும் அடர்த்தியுமே.

 

மிளகிலுள்ள மேடுபள்ளங்கள்

கடுகில் இல்லை.

கடுகிலுள்ள கள்ளச்சுவை

மிளகில் இல்லை.

குலையில் தொங்கும் திராட்சை

ஒரு கூட்டுக் கனவு.

அதிகாலையில் உதிரும் நாவற்பழங்கள்

இரவின் துளிகள்

 

என நகரச் சாலையோரத்தில் இரை தேடும் எலியின் கண்களை ஒப்புமைப்படுத்தும் இந்த வரிகளும் இதனுள் அமைந்த சொற்களும் சேர்ந்து சாத்தியப்படுத்தும் தனித்துவமான அனுபவத்துக்கான இன்னொரு காரணம் இதில் உள்ளார்ந்து ஒலிக்கும் சொற்களின் இசை. கிருபாவின் பல கவிதைகளிலும் இந்த இசையை அதன் துடிப்பை உணர முடியும்.

 

பாறையின் மீது தூவிய

தானிய மணிகள்

பட்சிகளாக முளைத்து

வளர்ந்து பறவைகளாகி

வானேகிப் போகும் கணத்தை

எப்போதேனும் காண சித்தித்தால்

அப்போது அங்கே

நீயின்றி நின்றிருப்பாய் நீ.

 

சொற்களும் அவற்றின் இசையும் சேர்ந்து ஒரு காட்சியை கவிதைக்குள் வரைந்து காட்டுகின்றன. கவிதையின் கடைசி சொல் ஒலித்து முடிந்ததும் அந்தக் காட்சி மட்டும் எதிரில் இருக்க சொற்கள் காணாமல் போய்விடும் அனுபவத்தை இக்கவிதையில் அடைய முடியும்.

 

கிருபாவின் கவிதைகளில் இடம்பெறும் சொற்கள் சாதாரணமான புழங்குசொற்கள்தான். அநேகமாய் பிற அனைவரது கவிதைகளிலும் இடம்பெறுபவைதான். ஆனால் கிருபா அவற்றைக் கவிதையில் இருத்தும்விதத்தில் அச்சொற்கள் துலக்கம் பெற்று ஒளிர்கின்றன.

நெற்கதிர்களில் பால் குடிக்க

இறங்கி வந்தன தேன்சிட்டுகள்

அப்போதுதான் கொக்குகள்

நரைக்கத் தொடங்கின

மழை தன்னைத்

துளித்துளியாகப் பங்கு பிரித்தது

வில் வானத்தின் வரலாற்றை

வண்ணங்களில் சுருக்கியெழுதியது.

 

கிருபா சொற்களை தேவையில்லாமல் விரயமாக்குவதில்லை. ஆகப் பெரும் தரிசனத்தையும் சுருக்கமும் செறிவுமான சொற்களைக் கொண்டு தெளிவாக சொல்லிவிட முடியும்.

ஆமென்

பசியை சமைத்தபடி

பன்னெடுங் காலமாய்

பட்டினி கிடப்பவன்

வீட்டுக்கு

விருந்துக்கு செல்லாதோர்

பேறு பெற்றோர்.

 

கடலும் மழையும் ரயிலும் தண்டவாளங்களும் வானமும் பூமியும் சிலுவையும் மரமும் மெழுகுவர்த்தியும் அவரது கவிதைகளுக்குள் தொடர்ந்து வெவ்வேறு அர்த்தங்களுடன் இடம் பெறுகின்றன. பொதுவாகவே கவிதைகளுக்குள் அதிகமும் பயின்றுவரும் இச்சொற்களை குறியீடுகளாகவோ படிமங்களாகவோ உள்ளிடும்போது தேய்வழக்காகிவிடும் சாத்தியங்கள் உண்டு. கிருபாவின் கவிதைகளில் ‘கூர் செதுக்கிய மேகங்களைச் சீவி அம்பாக நாணேற்றிய வில் பூட்டி பல்லாயிரம் கரங்களில் கடவுள் மழையால் பூமியை ஆசிர்வதிக்கிறார்’ என்றும் ‘வானத்தில் வலியோடு முறியும் மின்னல்’ என்றும் ‘கைதேர்ந்த மீனவனின் தந்திர வலைகளுக்குள் சிக்கி வெளியேறும் விதியற்று கடலின் பெரும் கவலைகளை’ என்றும் அவை அவரது கவிதை உலகத்துக்கான தனித்த ஒரு அர்த்தத்தை ஏற்று அமைகின்றன. ‘நீரில் நித்திரை கலைந்த மீன் குஞ்சு விளிம்பில் கடித்திழுத்து கிணற்றுக்கு வெளியே எறிகிறது அதே நிலவை’, ‘மெழுகுவர்த்தியின் உச்சியிலேறி வெளிச்சத்தை திரியில் கட்டும் சுடர் பதறி இடறும்போதெல்லாம் தடுமாறித் தரையில் விழுமோ’, ‘சுவாசக் காற்றின் இரக்கமற்ற புறக்கணிப்பில் பறக்கும் கானல் தோணிகள்’ போன்ற வரிகளில் அமையும் தன்னிச்சையான சொல்லிணைவுகள் அச் சொற்களுக்கு கூடுதலான வனப்பை சாத்தியமாக்குகின்றன.

 

கவிஞர் என்றால் காதலைப் பாடாமல் அல்லது காதலின் துயரைச் சொல்லாமல் இருக்க முடியாது என்ற விதிக்கு கிருபாவின் கவிதைகளும் உட்பட்டவையே.

 

காதலியைப் பற்றிய அவரது கற்பனை ‘நிறுத்தி வைத்த வீணையை விடச்

சற்றே உயரமாக இருப்பாளா?’ என்று கேட்டுவிட்டு ‘வாழ்க்கைக்கும் கனவுக்குமான இடைவெளியில் பாதைகளுக்கு மணல்சடை பின்னி நடப்பாளா?’ என்றும் யோசிக்கிறது.

 

தெரிந்தோ தெரியாமலோ

உன் காலடி மண்ணெடுத்து

ஒரு பூமி செய்துவிட்டேன்

உன் ஈரக்கூந்தலை

கடலாகச் செய்யும் முன்னே

கடந்து போய்விட்டாய்

உயரத்திலிருந்து சூரியனாய்

வருத்துகிறது ஒற்றைப் பார்வை

வெப்பத்தில் வறள்கிறது

எனது சின்னஞ்சிறிய பூமி

நீருற்ற தேடிக் கிணறுகள் தோண்டினால்

பீறிட்டடிக்கிறது ரத்தம்.

கண்ணே

இரண்டொரு தீர்த்தமணிகளைத்

தானமிடு

 

என்று மன்றாடுவதில் தொடங்குகிறது அந்தக் காதல்.

 

முத்தமிட்டு என்னை

சாம்பலாக்கித் தந்துவிட்டு

கவலைப்படும் பூக்களாக

உன் கண்களை மாற்றிக்கொள்ளும்போது

இலக்கின்றி நடக்கத் தொடங்குகிறேன்

கொலைவாள் நீட்டி

மன்னித்துக் காட்டிய வழியில்

 

என்று புறக்கணிப்பை ஒப்புக்கொண்டு சரணடைகிறது. இறுதியில் அந்தக் காதல் அப்படியே இருக்கிறது. 

 

மின்னல் கடவுள் போல் மின்னுகிறது

இடி சாத்தானைப் போல் துள்ளுகிறது

இரவு உன்னைப் போல் கவிகிறது

மழை என்னைப் போல் பெய்கிறது

குளிர் நினைவு போல் அலைகிறது

தூக்கம் மரணம் போல் தழுவுகிறது

காதல் மட்டும் அப்படியே இருக்கிறது

 


குழந்தைகளின் உலகம் அவரது கவிதைகளில் அவர்களுக்கேயுரிய குதூகலத்துடன் விரிகிறது. ‘நடை நடையாய் நடந்து குடம் குடமாய் நீர் சேந்தி கடல் சமைக்கும்’ சிறுமி பந்து விளையாடும் போது ‘ஒரு மாயக் கணத்தில் பூமியே ஒரு பந்தாகி’ அவள் கைகளில் துள்ளுகிறது.

 

கெட்டிக்காரக் குழந்தைகளைப் பாராட்ட

புன்னகை வயலில் பூவொன்று பறித்துக்கொண்டு

சந்தோஷ வரப்புகளில் ஓடோடி வருவாள்

ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி

திங்கட்கிழமையைத் தள்ளிக்கொண்டு போவாள் பள்ளிக்கு.

 

‘புனல் வற்றி நதி மெலிந்து எழும் கூழாங்கல் மாளிகை’யின் நடை வாசலில் தூக்கக் கலக்கத்துடன் கால் நீட்டி அமர்ந்திருக்கும் மழலைச் சிறுவனின் மனமே கிருபாவின் நிலைத்த புன்னகைக்குக் காரணமாக இருக்க முடியும்.

 

அனுபவ எல்லைக்கு அப்பாற்பட்ட உண்மைகளை தொட்டுக்காட்ட வல்ல அல்லது நிழல்போலேனும் காட்டும் சாத்தியங்களைக் கொண்ட கவிதைகளே காலந்தாண்டி நிலைக்கும் பேறுகொண்டவை. மகாகவியால் தன் கவிதைகளின் வழியே அத்தகையை நிலையை எட்ட முடிகிறது. எண்ணற்ற சொற்பெருக்குகளுக்கு நடுவே அவ்வாறான கவிதைகள் மட்டுமே அவனது சுவடுகளாக நிலைத்திருக்கும். கிருபாவின் வரிகள், கவிதைகள் பல அவ்வாறான தருணங்களைக் கொண்டிருப்பவை.

 

பெண்ணைக் கண்டு

பேரிரைச்சலிடுகிறாயே மனமே,

பெண் யார்?

பெற்றுக் கொண்டால் மகள்

பெறாத வரையில்

பிரகாசமான இருள்

வேறொன்றுமில்லை

 

0

 

அலகில் காலம்

காலில் பூமி

வாலில் வானம்

தோளில் சிறகு

நாவில் இசை

கண்ணில் ஒளி

சின்னஞ்சிறு கிளையில்

மின்னல் தனிமையில்

பறவைபோல் ஒருவன்

ஏறக்குறைய இறைவன்

 0

 

மோட்ச விளக்கொளியில் கல்லறைக்குள்

அவன் இருதயத்தை மண் தின்னும்போது

மேலே காவல் நிற்கும் சிலுவைக்காக

பச்சை மரத்தையோ பளிங்குக் கல்லையோ

வானவில்லையோ துன்புறுத்த வேண்டாம்

கல் களைந்த அரிசியைக் கொட்டும்முன்

ஈரக்கைகளால் மறக்காமல் அவன்

அம்மா உலையில் போட்ட சிலுவைகளில்

ஒன்றை அங்கே நிறுத்துங்கள்.

0

‘யாரையும் காயப்படுத்தக்கூடாதென்று, தன் வலிகளை வானில் எறிந்த’ கவிஞன் கிருபா. ‘விழிகளற்ற ஒருவர் செவி ஓர்மையில் ஒளியை நோக்கிக் கனவில் நடந்து செல்கிறார், தன் கைக்குச்சியால் தரையில் வழிக் குறிப்புகளை எழுதிச் செல்கிறார்’ என்று விவரித்திருப்பது தனது பாதையைத்தான்.

இருட்டில் வெடிக்கும் உன்

கைத்துப்பாக்கியிலிருந்து வெளிப்படும்

ஒரு சிட்டிகை வெளிச்சத்தில்

என் மொத்த கவிதைகளையும்

படித்து முடித்துவிடலாம்

நீ

அதுவரையில்

உயிரை கையில் பிடித்துக்கொண்டு

செத்துத் தொலையாமல் இருக்கவேண்டும்

நான்

என்ற கவிதை அவர் இல்லாது போன இக்கணத்தில் மிகவும் தொந்தரவு செய்கிறது. 

0

 (காலச்சுவடு)

 

 

 

துலா முள்ளின் அசைவுகள் – திருச்செந்தாழையின் கதைகள்

 


ஒழுங்கான கோடுகள் கொண்ட ஒரு பக்கத்தில் சற்றே கோணலாக வளைந்திருக்கும் கோடு உடனடியாக எல்லோரது கவனத்தையும் கவரும். ஒருவழிப்பாதையில் எதிரில் வரும் ஒழுங்கு மீறிய வாகனம் அனைவரையும் பதற்றத்துக்கு உள்ளாக்கும். மீறல்கள் உருவாக்குகிற சமன்குலைவை முதன்மைப்படுத்தும் கதைகளுக்கென்று இலக்கியத்தில் தனித்த செல்வாக்கு எப்போதுமே உண்டு. ஒருவகையில் இலக்கியத்தின் பணி அத்தகைய மீறல்களையும் அதற்கான காரணங்களையும் அவற்றின் விளைவுகளையும்  யோசிக்கச் செய்வதுதான்.

‘உலகமே ஒரு நாடக மேடை’ என்ற சொற்றொடருக்கு நிகரான செல்வாக்குக் கொண்ட இன்னொரு கூற்று ‘எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு’ என்பது. திருச்செந்தாழையின் கதைகள் துலக்கிக் காட்ட முயல்வது வாழ்வின் உள்ளும் புறமுமாய் பின்னிக் கிடக்கும் கொடுக்கல் வாங்கல்களைத்தான். வணிக உலகின் ஒவ்வொரு அங்குலத்திலும் படிந்திருக்கும் தந்திரங்களின் நெடியை, ஈவிரக்கமற்ற அதன் உக்கிரத்தை, கால்களுக்கு அடியில் மிதிபடும் எவற்றையும் பொருட்படுத்தாது தன் இலக்கை நோக்கி மட்டுமே விரையும் வேகத்தை முதன்மைப்படுத்துபவை அவரது கதைகள்.

வியாபாரம் ஒரு சூது. தரவுகள், உலக நடப்புகள், உற்பத்திக்கும் தேவைக்குமான சமன்பாடு என அனைத்தையும் துல்லியமாக கணக்கிடும் மதி நுட்பம், ஆண்டாண்டுகளாக பொட்டுப்பொட்டாய் சேர்த்த அனுபவம், காரணகாரியங்களுக்கு அப்பால் இதுதானென்று துலாமுள் போல துடித்து நிற்கும் உள்ளுணர்வு ஆகிய மூன்று படைக்கலன்களையும் கொண்டே இதில் இறங்கமுடியும். இத்தனை இருந்தபோதும் வெற்றியோ அல்லது குறைந்தபட்சம் இழப்பின்மையோ உறுதியில்லை என்பதுதான் இது கற்றுத்தரும் பாடம்.

இவ்வாறான வெளிப்படையான கணக்கு வழக்குகளுக்கு பின்னால் உள்ள சிக்கலான மனக்கணக்குகள் இன்னும் வலிமையானவை. அத்தகைய கணக்குகளையும் அவற்றின் ஆழத்திலுள்ள காரணங்களையும் இலக்காகக் கொண்டிருப்பவை திருச்செந்தாழையின் கதைகள்.

வணிகத்தையும் அதன் சூட்சுமங்களையும் கற்றுக்கொள்வது குருகுலபாடம் போன்றுதான். அல்லும் பகலுமாய் குருவின் காலடியில் கிடந்து அவரது ஒவ்வொரு அசைவையும் தவறவிடாது கவனித்து ஏவல்களை நிறைவேற்றி வசவுகளை தாங்கி அவமானங்களை விழுங்கி மிகப் பொறுமையாய் தனக்கான காலம் கனியும் வரை காத்திருந்து கற்றுக்கொள்ளும் பெரும் கல்வி. பிரிந்து தனியாகச் செல்லும் மாணவன் ஒவ்வொருவனும் ஆசிரியரின் போட்டியாளன்தான். ‘நீங்கள் இட்ட பிச்சைதான்’ என்று அவன் பணிந்து வணங்கும்போதே அவனது கணக்குகள் என்ன என்பதை அறிந்தவர் ஆசிரியர். ராம பவனத்தின் வீழ்ச்சியையும் அங்கிருந்து உருவாகி வளர்ந்து நிற்கும் தன்ராஜின் வெற்றியையும் விவரிக்கும் ‘விலாஸம்’ கதை இந்த ஆசிரிய மாணவ உறவின் உள்மடிப்புகளைத் துல்லியமாக கணித்திருக்கிறது.

வியாபாரம் செழிப்பதோ அழிவதோ வெற்றியும் தோல்வியும் அல்ல. அது வரவு செலவு கணக்கு, அவ்வளவுதான். ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான போட்டியாளரை உள்ளுக்குள் நிறுத்தியே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். யாரை வீழ்த்தவேண்டும் யாரை மிஞ்ச வேண்டும் என்ற தெள்ளத் தெளிவான கணக்கு உண்டு. எது இலக்கு என்பதை அவரைத் தவிர வேறு யாரும் அறிந்துவிட முடியாது. போட்டியாளருக்குத் தெரியும், தானே அந்த இலக்கு என்பதையும். சமயங்களில் அவரை வெற்றியின் நிறைவையோ சாகச உணர்வையோ தரக்கூடாது என்பதற்காக ‘விலாஸம்’ கதையின் தன்ராஜைப் போல விட்டுக்கொடுத்துவிடுவதும் உண்டு.

ஒவ்வொரு வியாபார சாம்ராஜ்யத்துக்குப் பின்னும் பழைய வெற்றிகரமான தொழிலாளி ஒருவரின் உழைப்பும் அனுபவமும் உண்டு. அவரது கணிப்புகள் தவறுவது அரிது. அவர்களில் ஒருசிலரே முதலாளியாக முடிகிறது. அவ்வாறு அவர்கள் ஆக முடியாதபடியான சூட்சுமங்களை தங்கள் கைக்குள்ளேயே முதலாளிகள் இருத்திக் கொள்கிறார்கள். முதலாளிக்காக வியாபார கணக்குகளை துல்லியமாகக் கணிக்கமுடிகிற ‘துலாத்தான்’ அய்யாவுவால் தன் மகளின் வாழ்க்கைக் கணக்குகளை எதுவும் செய்ய முடியவதில்லை.

 

வியாபாரம் போலவே தந்திரங்களையும் கணக்குகளையும் அடிப்படையாகக் கொண்டவை மனித உறவுகள். மனித உறவுகளின் பல்வேறு திரிபுகளையும் வியாபாரத்தின் தந்திர நுட்பங்களையும் இணைத்து கதைகளாக்கும்போது அவை அடையும் கூடுதல் பரிமாணங்களின் அழகை உறுதிப்படுத்துகின்றன திருச்செந்தாழையின் கதைகள்.

மனிதர்களின் சுயநலமும் வியாபாரிகளின் லாபநோக்கும் ஒரே கணக்குதான். நஷ்டமடையும்போது அவனை கைதூக்கி காப்பாற்றுபவர்களைவிட அந்த நிலையைப் பயன்படுத்தி அவர்களிடமிருந்து எதையேனும் கைபற்ற முடியும் சுரண்ட முடியும் என்று திட்டமிடும் மனமே ‘த்வந்தம்’ கதையில் செயல்படுகிறது. ரத்த உறவாக இருந்தாலும்கூட சுயநலமே வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் தீர்மானிக்கிறது எனும் யதார்த்தத்தை திரவியம், மரியம் கதாபாத்திரங்களின் வழியாகச் சொல்லும் ‘ஆபரணம்’ கதையிலேயே அவர்களின் போக்குக்கு நேர் எதிரான குணாம்சங்களைக் கொண்ட திலகரையும் சித்திரையையும் கொண்டு துலாக்கோலை சமன்செய்திருக்கிறார் திருச்செந்தாழை. பொருட்செல்வத்தை இலக்காகக் கொண்ட மரியத்தையும் மக்கட்செல்வமே மகிழ்ச்சி தருவது என்பதை இயல்பாக உணர்ந்த சித்திரையையும் ஒரு சமன்பாட்டில் இருத்துகிறது இந்தக் கதை. தந்திரங்களைக் கொண்டு திலகரைத் தோற்கடிப்பதன் வழியாக உயர்ந்திருத்த திரவியத்தின் தட்டு இறுதியில் தாழ்ந்து போவது அந்த சமன்பாட்டை உறுதிசெய்கிறது. ஆனால், கதையின் எந்த இடத்திலும் இந்த துலாக்கால் விளையாட்டிலிருந்து விலகி நிற்கிறார்கள் சித்திரையும் திலகரும்.

நுட்பமான தகவல்களுடன் கச்சிதமான விவரணைகளுடன் கூடிய கதைமொழி கனிந்து திருச்செந்தாழையின் கதைகளுக்கு தனித்த அடையாளத்தைத் தருகின்றன. சம்பவங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் அந்த நேரத்தில் கதையின் உணர்வுதளத்துக்கும் பொருத்தமான உவமைகள் மிக இயல்பாக அமைந்துள்ளன. ‘தங்கத்திற்கேயுரிய சுறுசுறுவென நாசியைத் தீண்டுகிற மின்மணத்தோடு பாலின் வெம்மையான கவுச்சி வாசனையும் சேர்ந்தெழுந்தது’, ‘அவள் தனது ஒவ்வொரு நகையாகக் கழற்றிக் கொடுத்துவிட்டு பொட்டுத் தங்கம் இல்லாத, கலங்கலான நீர் நிரம்பிய கண்ணாடிப் பாத்திரத்தைப் போல தூணில் சாய்ந்துவிட்டாள்’ (ஆபரணம்) போன்ற வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் உவமைகள் வலிந்து தம்மைக் காட்டிக்கொள்வதில்லை. ஆனால் அவை தம் வலுவான இருப்பை உணர்த்திவிடுகின்றன. ‘குத்தவைத்திருந்த காலருகே மக்காச்சோளத்திலிருந்து உரித்து எறியப்பட்ட காய்ந்த சோகை தலைவிரி கோலம்கொண்ட பெண்ணின் முகச்சாயலோடு உருண்டு வந்தது’ (துலாத்தான்) என்பது வெறும் சித்தரிப்பாக நின்றுவிடாமல் கதையின் குறிப்பிட்ட தருணத்தில் அய்யாவு கதாபாத்திரத்தின் உளப்போக்கைக் காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.

 

கதையின் போக்குக்கும் வார்ப்புக்கும் பொருத்தமாக, இயல்பாக சூழலை சித்தரிப்பு என்பது கதையின் வாசிப்புத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கியமான காரணி. ‘பாதி அணைத்து வைத்திருந்த சுருட்டை மீண்டும் உதட்டில் கவ்வக் கொடுத்தபடி தீக்குச்சியைக் கிழித்தார் அய்யாவு. மொரமொரப்பான தாடியின் வெண்ரோமங்களுக்கிடையே பொன் வெளிச்சம் பூத்து வந்தது. குச்சியை அணைத்து வீசிவிட்டு கண்மாய்ச் சரிவின் இருளுக்குள் பார்வையை விட்டார். நீர் நிறைந்து கிடக்கும் வாகைக்குளம் கண்மாயின் மீது நிலவு வெளிச்சம் துணியைப் போல மிதந்துகொண்டிருந்தது’ (துலாத்தான்) என்று தொடங்கும்போதே கதை திருத்தமாக உருவாகிவிடுகிறது.

‘வெளியே நாங்கள் வந்திருந்த செர்ரி நிறத்துக் காரை டிரைவர் மேலும் மேலும் பழமாக மாற்றிவிடுபவனைப் போலத் துடைத்து மெருகேற்றிக்கொண்டிருந்தான். அருகிலேயே அந்த வீட்டுக்காரர்கள் உபயோகப்படுத்துகிற பிஸ்தா நிற பியட் கார் மெழுகு பொம்மையைப் போல் நின்றிருக்க, அதன் வயசாளியான டிரைவர் அருகேயிருந்த பூந்தொட்டியின் விளிம்பில் சாய்ந்து நின்று பீடி புகைத்தவாறே எங்களது காரையும் டிரைவரையும் பார்த்தபடியிருந்தான்’ விலாஸம் கதைக்கு அழுத்தம் தரும் வகையில் கதையின் ஆரம்பத்திலேயே அமைந்துள்ளன இந்த வரிகள்.

 

சொற்களின் வழியாக கதை மாந்தர்களின் தோற்றத்தை உருவாக்கிக் காட்டுவதைக் காட்டிலும் அவர்களது குணவிசேஷங்களை வெளிப்படுத்தவே அதிகமும் முனைகின்றன திருச்செந்தாழையின் கதைகள். கதாபாத்திரங்கள் கோட்டுச் சித்திரங்களாக அல்லாமல் கண்முன் உயிரூட்டத்துடன் உலவும் மனிதர்களாவதன் நுட்பம் அதுவே.

‘காய்ப்புப் பிடிக்காத கையும் புளிக்கறை படியாத நகங்களுமாக கல்லாவில் அமர்ந்து பணம் எண்ணிச் சிரிக்க வைப்பது அண்ணன் தம்பி வியாபாரத்தில் ஒரு நீண்ட நாளுக்கான சூதுகளில் ஒன்று’ (ஆபரணம்) என்ற ஒற்றை வரி அண்ணன் தம்பி இருவரின் குணாம்சங்களையும் தீர்க்கமாக வகுத்துவிடுகிறது.

‘வியக்க ஒன்று கிடைத்தவுடன் எல்லாத் துயரங்களையும் மூட்டையாகக் கட்டி கண்காணாமல் எறிந்துவிட்டு அந்தப் புதிய வியப்பின் முன் குத்துக்காலிட்டு அமர்ந்துவிடுவாள்.’ ‘துலாத்தான்’ கதையின் பரமுவின் வெகுளித்தனத்தை இதைவிட நேர்த்தியாக சொல்ல முடியாது.

‘அப்பாவால் இன்னமும் மொடமொடப்பான ஒரு வெள்ளை நிறச் சட்டைக்குள் முழுமையாகத் தன்னை நுழைத்துக் கொள்ளமுடியாமல் திணறச் செய்கின்ற சிரிப்பு’ என ‘விலாஸம்’ கதையின் அப்பாவும், ‘தவறான காலத்தில் தவறான விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்ட நவதானிய மூடைகள் தகப்பனைச் சூழ்ந்திருக்கும் மக்குப் பிள்ளைகளைப் போல பம்மிக் கிடக்க அதன் நடுவே அபத்தமான புன்னகையோடு நின்றிருந்தான்’ என தீபனும், ‘கல்லாப் பெட்டியின் இரும்பு கைப்பிடியைப் பிடித்தபடி கேட்கின்ற லீலாவின் கண்களுக்குள் இந்தப் பேச்சின் போதையை விரும்புகிற கிறக்கம் தெரியும். பராமரிமிப்பிலில்லாத தெய்வமொன்று புதிய குருதி வாசனையை நுகர்ந்தபடி கண்களில் ஒளிபடர ஒரு எட்டு முன்னால் எடுத்து வைத்து வருகின்ற கிறக்கம்’ என்று ‘த்வந்தம்’ கதையின் லீலாவும் உணர்ச்சிப் பரிமாணங்களுடன் உருவாகி நிற்கிறார்கள்.

திருச்செந்தாழையின் கதையுலகை மேலும் நம்பகத்தன்மைக் கொண்டவையாக ஆக்குபவை வியாபார உலகில் புழங்கும் சொற்களுடன் அமைந்த உரையாடல்கள். “லாபத்துல நட்டம் விழும். அப்படி நட்டம் விழும்ங்கறது இந்த சம்சாரிகளுக்கும் தெரியும். தெரிஞ்சேதான் இந்த நட்டத்தை சுமக்கறோம்ங்கறத அவங்களுக்கு உப்பு ஒறப்பா புரிய வைக்கணும். ஏன்னா நாகலாபுரத்துலருந்து விளாத்திகுளம் வரைக்கும் அடுத்தடுத்து வரப்போற மல்லிக்கும் வத்தலுக்கும் இப்ப இவங்ககிட்ட நம்மபேர்ல உண்டாக்குற கரிசனந்தான் தூண்டில் புழு. ஒருவகையில இது நட்டம் கூட கிடையாது. அந்த கரிசனத்துக்கான முதலீடு.” (த்வந்தம்)

வியாபார களத்தையும் மனிதர்களின் அகத்தையும் இணைத்து அ.மாதவன் உருவாக்கிய ‘சாலைத் தெரு’வுக்கு இணையானது திருச்செந்தாழை உருவாக்கும் ‘மண்டி’ உலகம். சின்னச் சின்ன தகவல்கள், செறிவாக உருவாக்கும் கதாபாத்திரங்கள், வாசனையும் வண்ணமுமான சூழல் என திருச்செந்தாழை உருவாக்கும் வணிக உலகம் தமிழ்ச் சிறுகதைக்கு புதியதொரு களத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கூடவே, அதனுடன் இணைந்த மனிதர்களின் அக அசைவுகளையும் முன்னுதாரணமற்ற புதிய மொழியில் அது கூர்மையுடன் எழுதிக் காட்டுவதால் கூடுதலான கவனத்தையும் வீச்சையும் பெறுகிறது.

0

 (தமிழினி - டிசம்பர் 2021 இதழில் வெளியானது )

கதை சொல்லாத கதைகள் - கமலதேவியின் கதைகள்


இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண் சிறுகதையாளர்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது கமலதேவியின் பெயரை சுனில் கிருஷ்ணன்தான் பரிந்துரைத்தார். அதுவரை நான் கேள்விப்பட்டிராத பெயர். பதாகையில் வெளிவந்திருந்த ‘அலைவு’ கதையை வாசித்தேன். அதைத் தொடர்ந்து ‘ஜீவனம்’. அந்த இரண்டு கதைகளும் உடனடியாக வசீகரிக்கவில்லை. ஆனால், கிராமம் சார்ந்த சில நுட்பங்களும் இயல்பான அனுபவத்திலிருந்து வெளிப்படும் சொல்முறையும் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்திருந்தன.

கதை என்பதே ஒரு சம்பவத்தைச் சொல்வதுதான். நடந்தது நடந்தபடியோ அல்லது கூட்டிக் குறைத்தோ அது விவரிக்கப்படும். சிறுகதையின் ஒரு பொதுவான, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கணம். வடிவமோ மொழியோ எப்படியாயினும் அதற்குள் ஒரு கதை இருக்கும். நம் மரபான கதை வடிவமே அவ்வாறானதுதான். பாட்டி சொன்ன கதையிலிருந்து விக்ரமாதித்யன் வேதாளம், ஆயிரத்தோரு அராபிய இரவுக் கதைகள் என்று எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. வாய்மொழி மரபிலிருந்து எழுத்து மரபுக்கு வந்து ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டபோதும் அடிப்படையான ‘கதை’ என்பதில் மாற்றம் இல்லை.

கமலதேவியின் கதைகளைப் படித்தபோது முதலில் பிடிபடவில்லை. என்னவோ ஒன்று குறைபடுகிறது, ஏதோவொன்று நழுவிப்போகிறது என்ற எண்ணமே எழுந்தது. இரண்டு முறை படித்த பிறகும் என்னவென்று அதைக் கண்டுணர முடியவில்லை. ஆனால், மீண்டும் ஒரு முறை கதைகளைப் படித்தபோதுதான் இதுவரையிலும் பிடிபடாது கைநழுவிப்போன அந்த குணாம்சத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது.

கமலதேவியின் கதைகளில் கதையே இல்லை. அதனால்தான் அது பிடிக்குக் கிட்டவில்லை. கதை இல்லாமல் ஒரு கதையா? எப்படி அது சாத்தியம் என்ற கேள்வி எழுந்தது. கமலதேவியின் கதைகளில் கதை எதுவுமே முழுமையாகச் சொல்லப்படுவதில்லை. உடைந்த கண்ணாடிச் சில்லுகளாகி கதை அங்கங்கே சிதறிக் கிடக்கிறது.  மையக் கதாபாத்திரத்தின் உணர்வுகளின் வழியே ஒளிர்ந்தும் மறைந்தும் கதை கண்ணாமூச்சியாடுகிறது. இந்த ஆட்டத்தைப் புரிந்துகொள்ள முடியாதபோது அது நழுவியோடுகிறது.

இத்தனைக்கும் கமலதேவி கதைகள் நேரடியானவை. எளிமையும் நேர்த்தியும் கொண்ட கதைமொழி. இயல்பான சித்தரிப்புகள். சற்றே நீண்ட உரையாடல்கள். மெனக்கெட்டு கதையை ஒளித்துவைக்கும் சித்துவிளையாட்டு இல்லை. ஏதேனும் ஒரு வரியில், உரையாடலில் போகிற போக்கில் இடம்பெறுகிறது கதையின் முடிச்சு. ஆனால், அதன் பிறகு வேறெங்கும் அதைப் பற்றி விளக்கவோ விவரிக்கவோ முனையாமலே கதை முடிந்துவிடுகிறது.  உதாரணமாக, ‘ஜீவனம்’ கதையில் என்ன காரணத்துக்காக அம்மா, அப்பாவின் திதியையோ, சாவுக்குப் பிறகான சடங்குகளையோ செய்ய மறுக்கிறாள் என்பது சொல்லப்படுவதில்லை.

வெவ்வேறு தருணங்களில் கதாபாத்திரங்களின் பல்வேறு உணர்வு நிலைகளே கதை மொத்தத்தையும் ஆக்கிரமிக்கின்றன. இனி சேர்ந்து வாழ்வதில்லை என கணவனும் மனைவியும் பிரிய முடிவெடுத்திருக்கும் கனமான பின்னணியில் சொல்லப்படும் ‘நிலவறையில் ஒற்றை ஒளிக்கீற்று’ கதை நெடுக மூன்று கதாபாத்திரங்களின் மன அலைவுகளே சித்தரிக்கப்பட்டுள்ளன. பிரிவதற்கான காரணத்தைப் பற்றிய சிறு குறிப்புகூட சொல்லப்படுவதில்லை. அதுவே கதைகக்கு வலு சேர்க்கிறது. கதையின் முடிவில் மூவரும் மழையில் ஒதுங்கி அது ஓய்வதற்காகக் காத்திருக்கிறார்கள்.


முன் எப்போதோ நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் துண்டுத் துண்டான சித்திரங்களை கதைக்கு நடுவே கோர்த்துத் தரும்போது முன்னும் பின்னுமான காலத்தில் உணர்வுகளிலும் பார்வையிலும் ஏற்படும் மாற்றங்களை பக்குவங்களைச் சொல்வது எளிதாகிவிடுகிறது. ‘அந்தியில் பச்சை மலையின் மண் மலைக்குன்றின் அடிவாரத்திலிருக்கும் தாத்தா வீட்டுக் களத்தில் கட்டிலில் அமர்ந்திருந்தேன். கிழக்கே குச்சி வள்ளிக் கிழங்கு செடிகளின் பெரிய கை போன்ற இலைகள் காற்றிலசைந்து கொண்டிருந்தன’ (கிரகணப் பொழுது) என்று தொடங்கும் தாத்தாவைப் பற்றிய நினைவு மெல்லத் திரண்டு பாட்டிக்கும் அவருக்குமான இணக்கம், மனிதர்களின் மீதான நம்பிக்கை, வாழ்வின் பொருள், இழந்துவிட்ட மதிப்பீடுகள் என மேலும் மேலும் துலக்கம் பெறுவதைக் காணமுடிகிறது.

கதை முழுமையாகச் சொல்லப்படாமல், உணர்வுகள் மட்டுமே காட்டப்படுவதால் பெரும்பாலான கதைகளில் கதாபாத்திரங்களும்கூட  மெல்லிய கோட்டுச் சித்திரங்கள்போலவே அமைந்துள்ளன. கொல்லிமலை அடிவார கிராமமொன்றின் எளிய மனிதர்கள் என்று தொகுத்துச் சொல்லலாம். பல கதைகளிலும் பெண்களே முதன்மை கதாபாத்திரங்கள். எல்லாக் கதைகளில் இருப்பதும் ஒரே பெண்தான் என்று நினைக்கிற அளவுக்கு அவை பொதுவான குணாம்சங்களுடன் வனையப்பட்டிருக்கின்றன. பொதுவாக புனைவில் இது மிக பலவீனமான ஒன்று. ஆனால், உணர்வுகளின் பல்வேறு அலைகழிப்புகளை மையமாகக் கொண்டுள்ள கமலதேவியின் புனைவுலகில் அந்த பலவீனம் பொருட்படுத்த வேண்டாத ஒன்றாகிவிடுகிறது.

நேர்கோட்டில் கதை சொல்லப்படாமல், கச்சிதமான கதாபாத்திரங்களின்றி சொல்லப்படும் கதைகள் வாசகரின் கவனத்தில் குவியாமல் சிதறி அலைவுறும் அபாயம் உண்டு. ஆனால், கமலதேவி அமைக்கிற இயல்பான நிகழ்களமும் சூழலும் கதைகளை திண்மையாக்கி கவனத்தை சிதற விடாமல் கூர்மைப்படுத்துகின்றன.

தமிழ்ச் சிறுகதைகளில் அரிதாகக் காணப்படும் கிராமத்துச் சித்திரங்கள் கமலதேவியின் கதைகளில் மிக இயல்பாக இடம்பெற்றுள்ளன. உழவர்களும் பாட்டாளிகளும் வயல்வெளியும் மலைச்சரிவும் கதைகளின் பகுதிகளாகவே அமைந்திருக்கின்றன.

‘ஏதோ ஒரு பசு இட்ட சாணியிலிருந்து எழும் நீராவி தெருவிளக்கு வெளிச்சத்தில் கண்களுக்கு புலப்பட்டது. கழுநீர்ப்பானையில் நீர் ஊற்றிவிட்டு அருகிலிருந்த நித்யமல்லிச் செடியின் வெண்மலர்களின் செறிவைப் பார்த்து நின்றேன். எதிர்வீட்டு பொற்கிளியம்மா சாணியை உருட்டி கையிலெடுத்து நடக்கையில் புல் நொதித்த மணமும் உடன் சென்றது.’ ( புலன் விசாரணை )

இதுபோன்ற சூழலைப் பின்னணியாகக் கொண்டு உணர்வுகளைச் சொல்லும்போது அவை மேலும் அழுத்தம்பெறுகின்றன.

’நிலவின் ஒளி மெல்லிய படலமாக விரிந்து நிற்கும் இரவு அது. இடதுபறம் பச்சைமலைக் குன்றுகள் நிழலாக எழுந்து நின்றிருந்தன. மெல்லிய தண்காற்று. மேட்டுநிலம் பையப் பைய சரியும் பாதை அது. காளை ஒரே தாளத்தில் நடந்துகொண்டிருக்க அதன் திமிலசைவு நடனம்போல இருந்தது.’ (நீலகண்டன்)


விவசாயத்தையும் அதைச் சார்ந்த சிறு தொழில்களையும் கைவிட்டு பிழைப்புக்காக கிராமங்களிலிருந்து வெளியேறி திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இடம் பெயரும் அவலமும் கையறு நிலையும் பல கதைகளின் மையமாக அமைந்துள்ளன. ஆனால், அந்த அவலத்தை கண்ணீர் ததும்பும் சித்திரங்களாகவோ புகார்கள் உரத்தொலிக்கும் விமர்சனங்களாகவோ சொல்லப்படுவதில்லை. மாறாக, உலர்ந்த கண்ணீரின் உப்புத் தடங்களின் மீது ஒரு கணம் விழும் வெளிச்சமாகவே காட்டப்படுகிறது. ‘எஞ்சும் சூடு’ கதை ஒரு கச்சிதமான உதாரணம்.

காற்றால் திசையழிந்து ஆடிய சோளக்காட்டின் சத்தம் விலங்கின் ஓலம் என கேட்டது. “என்னா வேகம் பாரு. இப்ப சருகு ஒன்னொன்னும் சவரகத்தியாகும்,” “அறுக்கறது தெரியாம அறுத்திரும்,”என்று புன்னகைத்தான். (அலைவு)

‘சருகு ஒன்னொன்னும் சவரக் கத்தியாக்கும்’ என்ற வரி திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது. தேவையற்ற பழக்கங்களால் சீரழிந்து நகரத்தின் ஜவுளிக் கடையில் வேலை செய்யும் ஒரு கூத்துக் கலைஞன் கிராமத்துக்குத் திரும்பி வந்து தன் உறவுகளைக் காணும் ஒரு தருணத்தில் அவனுக்குள் தத்தளிக்கும் கொந்தளிப்புகளை சூழலின் அழுத்தத்தை கதையினூடாக வெளிப்படுத்தியிருக்கும் விதம் நுட்பமானது.

‘ஜீவனம்’, ‘செங்காந்தளின் ஒற்றை இதழ்’ போன்ற கதைகள் இயல்பாகவே பெரும் உணர்ச்சி மோதல்களையும் உறவுகளுக்குள் நிகழும் சிக்கல்களையும் கொண்ட களங்கள். பெண்களின் அகத்தில் உறைந்திருக்கும் உறுதியையும் புறத்தில் அது வெளிப்படுத்தும் மௌனத்தையும் மிக அடங்கிய தொனியில் பேசுபவை. அதனால் வெகு சாதாரணமாக எழுதப்படும் காட்சிகளும்கூட கூடுதல் செறிவு பெற்றுவிட முடிகின்றன.  

பெண்களின் அகம் சார்ந்த புதிர்களைத் தொடும்போது கதைகள் தம்மளவிலேயே ஆழம் பெற்றுவிடும் என்பதற்கான உதாரணங்களாக ‘பூ முள்’, ‘உள் புண்’, ‘நெடுஞ்சாலைப் பறவை’ போன்ற கதைகளைச் சுட்டலாம். உறவுகளையும் குறிப்பாக ஆண்களைச் சார்ந்திருக்கும் தளையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள விழையும் பெண்ணின் முனைப்பை கமலதேவியின் கதைகள் வெவ்வேறு விதங்களில், களங்களில் முன்னிறுத்துகின்றன.

இவர்கள் யாவரும் சராசரியான நிலையில் வாழ்வின் கடும் சவால்களை எதிர்கொள்பவர்கள். பணியிடங்களிலும் குடும்பத்திலும் சூழலிலும் வெவ்வேறுவிதமான அழுத்தங்களை சமாளிப்பவர்கள். கல்வியும் வேலைவாய்ப்பும் அளித்திருக்கும் சாத்தியங்களைக்கொண்டு தங்களுக்கான புழங்குவெளியை விசாலப்படுத்த முயல்பவர்கள். அன்றாடம் பேருந்துகளிலும் அலுவலகங்களிலும் கடைத் தெருக்களிலும் களைத்த முகத்துடன் காண நேரும் பெண்களே கதாபாத்திரங்கள்.

இளமைக்காலத்தில் பெண்களின் ஆளுமையை உருவாக்குவதில் பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் தோழிகள், ஆசிரியர்களுக்கு முக்கிய பங்குண்டு. கல்விக்கூடங்களிலும் விடுதிகளிலும் அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் பல மனத்துள் ஆழமாக பதிந்துவிடுகின்றன. பின்னாட்களில் வாழ்வின் பல்வேறு சூழல்களிலும் அவை மேலெழுகின்றன. உறவுகள் சார்ந்த திருகல்கள் தோழிகளிடமிருந்து தொடங்கி சொந்தபந்தங்கள் வரையிலும் நீளும் புதிரை நுட்பமாகச் சொல்லும் ‘மித்ரா’ கதை அதன் பல்வேறு சாயல்களை நேர்த்தியாகத் தந்திருக்கிறது. இவ்வனுபவம் வாழ்வைக் குறித்த பெரும் திறப்பாக அல்லது பார்வையாக உச்சம் பெறும்  கதையாக அமைந்திருப்பது ‘நெடுஞ்சாலைப் பறவை’.

0

‘குருதியுறவு’, ‘சக்யை’, ‘சுடுவழித் துணை’ என கமலதேவியின் மூன்று தொகுப்புகளை வாசக சாலை வெளியிட்டுள்ளது. குறுகிய காலத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருக்கிறார். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அவரது கதைகள் வெளிவருகின்றன. பதாகை, சொல்வனம் ஆகிய இரு இதழ்களிலேயே அவரது அதிகக் கதைகளும் வெளியாகியுள்ளன. ஒன்றிரண்டு மட்டுமே பிற இதழ்களில் வெளியாகியுள்ளன. அவரது கதைகள் இன்னும் பிற இணைய, அச்சு இதழ்களிலும் வெளியாகுமென்றால் இன்னும் பலருக்கு அவரைத் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்.

கதைகள் எளிமையாகவும் இயல்பாகவும் அமைந்திருக்கும் அதே நேரத்தில் ‘சுடுவழித் துணை’, ‘நிலவறையில் ஒற்றை ஒளிக்கீற்று’, ‘செங்காந்தளின் ஒற்றை இதழ்’ போன்ற தலைப்புகள் கமலதேவியின் கதை உலகத்துக்கு பொருந்தாதவையாக இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

0

இயல்பும் நேரடித்தன்மையும் கொண்ட யதார்த்தமான கிராமத்துச் சித்திரங்களின் வழியாக கமலதேவி காட்டும் பெண்களின் அக உலகம் தமிழ்ச் சிறுகதைக்கு முக்கியமானது. வீழ்ந்துவிட்ட கிராமப்புற பொருளாதாரத்தையும் அதன் காரணமாக வாழ்வுதேடி இடம்பெயரும் உழைப்பாளிகளின் அவலத்தையும் அவரது சிறுகதைகள் செறிவும் துலக்கமுமான புனைவு மொழியில்  அக்கறையுடன் வெளிப்படுத்துகின்றன.

சிறுகதை வடிவத்தின் வலுவைப் புரிந்துகொண்டு அதனை தனக்கேயான புனைவுத்தியுடன் அணுகுகிறார் கமலதேவி. அதன் வழியாக அவர் எழுப்ப முனையும் கேள்விகள் சமகாலத்தன்மையுடனும் தீவிரத்துடனும் உள்ளன. இயல்பும் எளிமையும் கொண்டவை கமலதேவியின் கதைகள் என்பதால் அவற்றை சுலபமாக வாசித்துவிட முடியாது. தோற்றப் பிழையினால் குறைத்து எடைபோட்டுவிடக்கூடிய அபாயம் உண்டு. மொழியும் வடிவமும் நேரடியானது போல தோற்றமளித்தபோதும் கதையின் ஊடு பாவுகளையும் சிதறுண்டு கிடக்கும் முடிச்சுகளையும் கவனமான வாசிப்பின் மூலம் மட்டுமே கண்டடைய முடியும்.

(தமிழினி - நவம்பர் 2021 இதழில் வெளியானது )

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...