Sunday, 2 January 2022

வல்லினம் – புதிய படைப்பாளிகள் சிறப்பிதழ்



வல்லினம் ஜூன் 2007 முதல் மலேசியாவிலிருந்து  வெளிவரும் ஒரு முக்கியமான இலக்கிய இதழ். தொடக்கத்தில் அச்சிதழாக வரத் தொடங்கி 2009 முதல் இணைய இதழாகியுள்ளது. இதுவரை 51 இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த இதழ் உருவானதைக் குறித்த ஒரு சுவாரஸ்மான கட்டுரை இணைய இதழின் முகப்பில் உள்ளது. ஒரு இலக்கிய இதழைத் திட்டமிட்டு நடத்துவதில் உள்ள ஆர்வம், உழைப்பு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளையும் வல்லினம் இதழும் சந்தித்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ‘சொல் புதிது’ இதழை நடத்திய அனுபவத்தை அந்தக் கட்டுரை நினைவுபடுத்தியது. மலேசிய எழுத்தாளர்களின் பங்களிப்புடன் உலகெங்கிலுமுள்ள படைப்பாளிகளின் எழுத்துகளையும் வல்லினம் தொடர்ந்து வெளியிடுகிறது.

செப்டம்பர் 2021 இதழ் ‘புதிய படைப்பாளி’களின் கதைகளுடன் வெளியானது. கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுதி வரும் இளம் படைப்பாளர்களுடைய கதைகள். அதில் சிலரது கதைகள் முதன்முதலாக வெளியாயின. வல்லினத்தின் முக்கியமான ஒரு முயற்சி இது. புதிய படைப்பாளிகளுக்கான களத்தை அமைத்துத் தருவதென்பது ஒரு இதழின் அடிப்படைக் கடமை.

புதிய படைப்பாளிகள் சிறப்பிதழில் பங்களித்துள்ளவர்களில் ஓரிருவரின் கதைகளைத் தவிர பிறரது கதைகளை முதன்முறையாக நான் வாசிக்கிறேன். இந்தக் கதைகளைக் குறித்த உரையாடல் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களின் மனப்போக்கையும் கதையை அணுகும் விதத்தையும் விளங்கிக் கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

புனை கதை எழுதப்பட்ட பிறகே வாசிக்கப்படுகிறது. நாம் வாசிப்பது நிகழ்ந்து முடிந்த ஒன்றை. அதன் உருவாக்கத்தில் இருப்பது ஒருவர் மட்டுமே. எழுத்தாளன். அந்த வேளையில் கதை நிகழ்கிறது, மொழியின் வழியாக அதை எழுத்தாளன் நிகழ்த்துகிறான். ஒரு கருவியாக மட்டுமே.

எனவே, அது இப்படி அமைந்திருக்கலாம், இதுபோல எழுதியிருக்கலாம் என்று சொல்வதெல்லாம் ஒரு வகையில் போஸ்ட் மார்டம்தான். ஆனால் இந்த உரையாடல், இதில் பரிமாறப்படும் கருத்துகள் அடுத்து எழுதப் போகும் கதையின் உருவாக்கத்தில் மறைமுகமாக உதவக்கூடும். கதையின் உருவம் (body) நுட்பங்கள் (technique) சார்ந்து சில தெளிவுகளைத் தரக்கூடும்.

கதையின் உருவம், மொழி, வெளிப்பாடு சார்ந்து இங்கு விவாதிக்கப்படும் சில விதிகள் கறாரானவை அல்ல. எல்லா கதைத் தளங்களுக்கும் கருப்பொருட்களுக்கும் பொருந்துபவையும் அல்ல. ஒருவித வழிகாட்டுதல்கள் மட்டுமே. ஒவ்வொரு கதையும் எழுதப்படும்போது தனக்கான விதிகளை தானே உருவாக்கிக் கொள்ளும். அவ் விதிகள் கச்சிதமாக அமைவது எழுதுபவனின் பயிற்சியையும் முயற்சியையும் வாசிப்பையும் பொறுத்தது.

ஏற்கெனவே சிறுகதைகளைக் குறித்த எனது முந்தைய கட்டுரைகளில் சொல்லியிருப்பதுபோல இன்று புனைவெழுத்தாளர்களுக்கான வெளி மிக விரிவானது. விரைவானதும்கூட. எழுதியதை உடனடியாக உலகெங்கும் உள்ள வாசகர்களுக்கு கொண்டு செல்லக்கூடிய வசதி வாய்ப்புகள் உண்டு. ஒவ்வொரு இணைய இதழிலும் குறைந்தது பத்து கதைகள் இடம் பெறுகின்றன. அதில் சரிபாதி புதியவர்களின் கதைகள்.

இதிலுள்ள சவால், இத்தனை பேருக்கு நடுவில் தன்னுடைய கதையை தனித்துவப்படுத்துவதும் வாசிக்கச் செய்வதும்தான். கதை வெளியானவுடன் அதைப் பற்றிய ஒரு கவனம் உருவாகும்போது கூடுதலாக சிலபேர் வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அந்த கவனத்தைப் பெறுவதுதான் புதிய எழுத்தாளர்களுக்கான பெரும் சவால். அப்படியொரு கவன ஈர்ப்பை நிகழ்த்தும் வகையில் கதைகள் அமையவேண்டும். பிற கதைகளிலிருந்து தன்னை தனித்துவப்படுத்திக் கொள்ளும் தகுதிகளைக் கொண்டிருக்கவேண்டும். மின்னி மறையும் எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு நடுவில் அக்கதை தனித்துவத்துடன் ஒளிர்ந்து நிற்கவேண்டும். முக்கியமானது, அந்த எழுத்தாளரின் பெயர் திரும்பத் திரும்ப நினைவில் வந்து மோதும்படியான கதையாக அது அமைந்திருக்கவேண்டும். இன்று எழுதிவரும் எண்ணற்ற புதிய எழுத்தாளர்களிடையே மயிலன் ஜி சின்னப்பனும் பா.திருச்செந்தாழையும் கவனம் பெற்றது அப்படித்தான்.

வல்லினம் சிறப்பிதழில் வெளிவந்திருக்கும் பதிமூன்று கதைகளுமே நல்ல வாசிப்புத்தன்மையைக் கொண்டுள்ளன. கதை வடிவிலும் மொழியிலும் கச்சிதமும் செறிவும் கூடி வந்துள்ளன. வாசிப்பை இடையூறு செய்யும் வகையிலான வாக்கியக் குழப்பங்களையோ இலக்கணப் பிழைகளையோ காண முடியவில்லை. இதெல்லாம் அத்தனை முக்கியமா என்று கேட்டால், ஒரு புனைவெழுத்து சீரான வாசிப்பை உறுதிப்படுத்துவதுதான் அதன் முதல் தகுதி என்பது என் எண்ணம். இந்தக் கதைகளை எழுதியிருக்கும் பலருக்கும் கதையை சரியாகச் சொல்லத் தெரிந்திருக்கிறது..

புதியவர்களின் சிறப்பிதழுக்காக இக் கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கும் ம.நவீன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவின் உழைப்பும் கதைத் தேர்வில் அவர்கள் காட்டியிருக்கும் அக்கறையும் பாராட்டுக்குரியது. சிறப்பிதழ் என்பதற்காக கதைகளின் எண்ணிக்கையில் மட்டும் கவனம் செலுத்தாமல் தகுதியான கதைகளை மட்டுமே பரிசீலித்து, தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பதினான்கு கதைகள் ஒவ்வொன்றுமே தனித்துவமானவை, வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டவை, சொல்முறையிலும் மொழியிலும் வெவ்வேறானவை. ஒரே இதழில் அமைந்த, வெவ்வேறு தன்மைகள் கொண்ட கதைகள் என்பது இதழுக்கு மட்டுமல்லாமல் பிற கதைகளுக்கும் உரிய இடத்தை உறுதிசெய்யும் சாத்தியத்தையும் கொண்டிருக்கின்றன. கதைகள் ஒவ்வொன்றும் இன்னொரு கதையின் இடைவெளியை இட்டுநிரப்புகின்றன. ஒன்றையொன்று பூர்த்தி செய்துகொள்கின்றன.

பலரும் தொடக்கநிலையில் இருப்பவர்கள், சிலருக்கு முதல் கதைகள். ஆனால் இவர்கள் அசாதாரணமான கதைக்களங்களை துணிச்சலுடன் அணுகியிருப்பது வியப்பளிக்கிறது. நம்பிக்கையைத் தருகிறது.

0

மனிதன் தன் மரணத்துக்குப் பின் தனக்கொரு தொடர்ச்சியை விரும்புபவன். நிரந்தரமற்ற இவ்வுலகில் தன்னை மரணமற்றவனாக நிலையானவனாக உணர அந்தத் தொடர்ச்சி அவனுக்குத் தேவைப்படுகிறது. அவனது வாழ்வின் மொத்த இலக்குமே அதுதான்.  “பேரன் பேத்திகளின் நினைவில் இருக்கும்வரை அழிவில்லை” என்ற உணர்வே பாசமாக கொஞ்சலாக மாறுகிறது.

இந்திய மரபில் நீத்தார் சடங்கு மிக முக்கியமானது. முந்தைய தலைமுறையுடனான தொடர்பை உறுதிப்படுத்தும் தவிர்க்கமுடியாத கண்ணியாகக் கருதப்படும் ஒன்று.

ஒரு சிறுகதை இவ்வாறான ஒரு அடிப்படை உணர்வைத் தீண்டும்போது உடனடியாக அந்தக் கதையுடனான உளப்பூர்வமான பிணைப்பு ஏற்பட்டுவிடுகிறது. தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களால் திரும்பத் திரும்ப எழுதப்பட்டபோதும் அந்த உணர்ச்சி மழுங்குவதில்லை. கதை அந்தப் புள்ளியைத் தொட்டவுடனே மனம் மேலும் தீவிரத்துடன் பொங்குகிறது.  

நீத்தார் சடங்கை அடிப்படையாகக்கொண்டு மனத்தின் ஆழங்களை ஊடுருவிப் பார்க்கும் கதை பாலாஜி பிருத்விராஜின் ‘அனல் அவித்தல்’. திருத்தமான சொல்முறை, பிசகின்றி கச்சிதமாக உணர்ச்சிகளை சரியான அளவில் கடத்தும்படியான உரையாடல்கள், மிகுதியான கொதிப்புகளோ வெதும்பல்களோ இல்லாத சித்தரிப்பு என அனைத்துக் கூறுகளும் சரிவர அமைந்திருக்கும் ஒன்று.

0

புலன்களைக்கொண்டே நாம் இந்த உலகை அறிகிறோம். அந்த அறிதல் மனத்தின் ஆழத்தில் படிந்து உருவாக்கும் சித்திரங்கள் விசித்திரமானவை. நாம் சோர்ந்திருக்கும் சில வேளைகளில் தன்னிச்சையாக அவை மேலெழுந்து பல்வேறு உணர்வுநிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்லும். இயல்பான, சாதாரண நிலையில் அவ்வாறான அனுபவம் சிறு சலனம்போல விலகிச் சென்றுவிடும். சமயங்களில் கனவாக உருப்பெற்று கலைந்து மறையும். ஆனால், கடுமையான உளச் சிக்கல்களுக்கு ஆட்பட்டிருக்கும் சூழலில் அவ்வாறான அனுபவங்களும் அவற்றைக் கொண்டு நமக்குள் படிந்திருக்கும் ஆழமான கற்பனைகளும் சேர்ந்து புதியதொரு உலகத்துக்குள் இட்டுச் சென்று அதனையே நம்பவும் கட்டாயப்படுத்தும்.

இவ்வாறான உளவியல் அனுபவங்கள் புனைகதைகளுக்கான எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டவை. அவ்வாறான ஒரு சாத்தியத்தைக் களமாகக் கொண்டது த.குமரனின் ‘சிறுத்தை’.

ஆழ்மனத்துள் கிடக்கும் அச்சம் புறத்தில் முரட்டு தைரியமாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும். எச்சரிக்கைகளை புறந்தள்ளும். சாகசவாதியாக உருப்பெருக்கிக் காட்டும். இந்த மனக்கோலங்களையும் அதனை நம்பகத்தன்மையுடன் துலக்கிக் காட்டும் காட்சிச் சித்தரிப்புமாய் அமைந்திருக்கும் விதத்தினால் இக்கதை கவர்கிறது.

மந்தி மலை குறித்த வெவ்வேறு செவிவழிக் கதைகள், சிறுத்தைகள் பற்றிய ஊகங்கள், கதைகள், மாயாவி சமூகம், காதல் மரங்கள், இனுவு பிரார்த்தனை என கதையின் மாயத்தன்மைக்கு உரமேற்றும் பல்வேறு விவரங்கள் கதைக்கு செறிவூட்டியுள்ளன.

குறிப்பிட்ட ஒன்றைப் பற்றிய பேராவலும் அதன் ஆழத்தில் திரளும் அச்சமும் கூடி அதுவாகவே தன்னை பாவித்துக்கொள்ளும் மனப்பிறழ்வு நிலையைச் சொல்லும் பல கதைகளின் முடிவை எளிதில் ஊகிக்க முடியும். இந்தக் கதையிலும் அது நிகழ்ந்திருக்கிறது.  

0

கிராமத்து மனிதர்களின் எளிமையும் இயல்புமான சித்திரத்தினூடாக அவர்களிடையே நிலவும் உறவின் ஆழம் அதிலுள்ள உள் விரிசல்கள் இரண்டையும் மிக நுட்பமாக சொல்லும் கதை பிரானாவின் ‘வெண்ணப்புட்டு’.

பிள்ளைகள், குடும்பம், உறவுகள் என்று மனிதன் தன்னை ஒரு சமூக விலங்காக அடையாளப்படுத்திக்கொள்ள முனைந்தபோதும் உண்மையில் அது பாவனைதான். அந்த பாவனையை அவன் அசலென்று நம்புந்தோறும் அவனுக்குள் இருக்கும் ஆதி உணர்வுகள் மறைந்திருக்கும் அல்லது வலுவிழந்திருக்கும். அவனது வெளிப்பாடுகளை நடவடிக்கைகளை செய்கைகளை பகுத்தபடியே செல்லும்போது இறுதியில் எஞ்சி நிற்பது சுயநலம் அல்லாது வேறொன்றில்லை. அதுவே உயிரியல்பு.

இத்தனை உக்கிரமான யதார்த்தத்தை வெளிப்படையாகச் சொல்வதை நம்மால் தாங்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடிவது அனைத்தின் மீதான நம்பிக்கையையும் குலைத்து ஒன்றுமில்லாக்கிவிடும் என்பதால்தான் கலை தன் பாவனைகளைக்கொண்டு அதனை பசப்பி வெளிப்படுத்துகிறது. வெறுமையின் மீதான வண்ணங்களைத் தூவுகிறது.

இந்தக் கதையை சிறுமியின் கோணத்தில் சித்தரிப்பதுமே அப்படியொரு பாவனைதான். அதுவே இக்கதையை எளிமையாக அணுக உதவுகிறது.

பழைய வாழ்க்கை முறையில் தம்பதிகளுக்கு இடையிலிருக்கும் அன்னியோன்னியம், கருப்பு வெள்ளைப் படங்கள், தாத்தாவின் காளிவேஷம், கருப்புக் கண்ணாடி போன்ற விவரணைகள் கதையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் அதே வேளையில் நகரவாழ்வின் நெருக்கடிகளை விவரிக்காமல் பூடகமாக உணர்த்தியிருக்கிறது. 

சிறுமியை வசீகரிக்கும் உறவுகள் உலவும் கிராமம் சார்ந்த புறச் சித்திரங்களை இன்னும் சில வரிகளில் அழுத்தமாக தந்திருக்க முடியும்.

கதையின் தொடக்கத்தில் ஒன்றும் இறுதியில் ஒன்றுமாக கிராமியப் பாடல் அமைந்திருக்கிறது. சுவாரஸ்மான பாடல்கள். முதல் கதை எழுதுபவர்களின் ஆர்வம் இவ்வாறான சில நுட்பங்களை கைகொள்வதில் ஆச்சரியமில்லை. தொடர்ந்து வாசிக்கும்போது, எழுதும்போது நல்லவொருகதைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது தன்னாலேயே புரிந்துவிடும்.

தமிழ்ச் சிறுகதையில் கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் உள்ளிட்டோரின் கதைகள் வழியாக நாம் அறிந்திருக்கும் களங்கமின்மையும் எளிமையுமான சிறுவர்களின் உலகம் எத்தனை தூய்மையானது, நிபந்தனைகளற்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

0

நவீன இளைஞர்களின் மன உலகம், பாலியல் சார்ந்த மிகைக் கற்பனை இவ்விரண்டையும் இணைத்துப் பார்க்கும் கதை பிரசன்ன கிருஷ்ணனின் ‘நட்சத்திரங்களின் வாக்குமூலம்’.

பலவீனமான உணர்வமைப்புகளின் மீதமைந்த வாழ்வின் உள்ளீடற்ற தன்மையின் உடலியல் வெளிப்பாடுகளும் அது தருகிற அச்சமும் விளக்க முடியாதது. ஒரு காட்சியாக, அது அரும் அதிர்ச்சியாக, அந்த அதிர்ச்சியின் விளைவாக ஏற்படும் உடலின் கோளாறாக, அதன் விளைவாக ஏற்படும் மனச் சரிவுகளை நுட்பமாகவும் விரிவாகவும் சித்தரித்திருக்கிறது.  முன்னும் பின்னுமாக சம்பவங்களை நகர்த்தியிருப்பதன் வழியாக கதையின் சுவாரஸ்யம் கூடியிருக்கிறது. அதேபோல கதையின் முடிவு சற்றும் எதிர்பாராததாய் நம்ப இயலாததாய் அமைந்திருக்கிறது. தீர்வற்ற ஒரு மனச் சரிவு எந்த எல்லைக்கும் ஒருவனை கொண்டு செல்லும் என்பதை மட்டுமே பதிலாக வைத்துக்கொள்ள முடியும்.

புதிதாக எழுத முனையும் இளைஞர்களில் சிலர் கதையை கவனப்படுத்தும்பொருட்டு கலவியின் புற இயக்கங்களை ஒரு அம்சமாக கதையில் சேர்க்க முனைவதுண்டு. உடனடி கவன ஈர்ப்பை அக் கதைகள் தருகின்றன என்ற ஆர்வமே அத்தகைய உத்தியை நாடச் செய்கிறது.

உடலின் காமத்தை வாசித்து கிளர்ச்சி கொள்ளும் காலம் இப்போதில்லை. அதற்கான கற்பனைக்கெட்டா சாத்தியங்களுடன் எல்லையற்ற ஊடகவெளி திறந்து கிடக்கிறது. ஆனால் காட்சிகளால் தொட முடியாத மனத்தின் ஆழங்களை இலக்கியம் மட்டுமே அடைய முடியும். காமத்தின் அக ஆழங்களை அதன் இருளை அதன் அடைபட்டிருக்கும் வாசல்களை முட்டி முட்டித் திறக்க முயலலாம். இன்னும் எத்தனை பேர் வேண்டுமானாலும் எழுதிப் பார்க்கலாம்.

0

போர்ச் சூழலில் போருக்குத் தொடர்பற்ற ஒருவன் மரணத்துக்கு அஞ்சிக் கிடப்பதும் அவனை அதிலிருந்து இன்னொருவன் நம்பிக்கையளித்து மீட்பதுமான அடர்த்தியான கதை ஜி.எஸ்.எஸ்.நவீனின் ‘மரணக்குழி’.

இனி மீட்பில்லை என்று தன்னையே கைவிட்டுவிட்ட நிராதரவற்ற நிலையில் ஒரு சொல் அனைத்தையும் மாற்றிவிடும். கைகொடுத்து மேலே தூக்கிவிடும். அதுவரையிலும் எதுவுமே தெரியாத இருளினூடே சிறு துளி வெளிச்சத்தைக் காட்டும். அங்கிருந்து அனைத்தும் மாறிவிடும். அந்தக் குறிப்பிட்டத் தருணம் வந்தமையும்போது அதை கைகொண்டுவிட்டால் இன்னொரு வாழ்க்கை.

உண்மையில் இது மரணக்குழி இல்லை. அன்றாட வாழ்வின் ஒரு குறியீடாகத்தான் அமைந்திருக்கிறது. எப்போதுமே அச்சுறுத்தும் சாத்தியங்களை கொண்டிருக்கும் வாழ்வில் இப்படி ஒரு குரல், ஒரு சொல் நம்மை தேற்றித் தர வாய்ப்பிருக்கிறது. அதிலிருந்து மீண்டு விடும் சாத்தியம் உள்ளது.

நவீனின் முந்தைய சில கதைகளைப் படித்திருக்கிறேன். அடர்த்தியான மொழியும் செறிவான வாக்கிய அமைப்பையும் கொண்டவை. ஒவ்வொரு வார்த்தையையும் வாசகன் உள்வாங்கியபடியே நகரும் கூரிய கவனத்தைக் கோருபவை. சூழலையும் பின்னணியையும் வலுவாகக் கொண்டிருப்பவை. ஆனால் இதற்கு நேர்மாறாக அவரது உரையாடல் மொழி மிக இயல்பானது. மண் மணம் கொண்டது. இவ்விரண்டும் இணையும் போது கதை தன்னளவில் உறுதிப்பட்டுவிடுகிறது.

குணா கவியழகன், சயந்தன், அனோஜன், அகர முதல்வன் உள்ளிட்ட ஈழ எழுத்தாளர்கள் பலரது கதைகளையும் நினைவுக்கு வரச் செய்தது இக் கதை.

0

உருவகக் கதை என்று எண்ணும்படியான உபதலைப்புகளையும் கதாபாத்திரங்களையும் கொண்டது விஜயகுமாரின் ‘ம்ருகமோக்ஷம்’. உண்மையில் உருவகக் கதைகள் மிக எளிமையான வடிவையும் மொழியையும் கொண்டவை, இக்கதை அவ்வாறன்றி அடர்த்தியான மொழியும் கட்டமைப்பும் கொண்டிருக்கிறது.

வழக்கமான, இயல்பான மொழியைக் கொண்ட கதைகளுக்கு நடுவே தத்துவத்தின், யோகத்தின் சொல் மொழியைக் கொண்ட ஒன்று. இந்தக் கதையின் ஆதாரம் தத்துவம். மனித வாழ்வின் பல்வேறு நிலைகளை வேற்றுயிர்களின் வடிவினைக்கொண்டு விளக்க அல்லது விளங்கிக் கொள்ள முயலும் ஒன்று.

வழக்கமான கதையைப் படிப்பதுபோல இந்தக் கதையை வாசிக்க இயலாது. மிகவும் நுட்பமான சொல்லாடலை ஒவ்வொன்றாகப் பிரித்துப் புரிந்துகொண்டே முன்னகர முடியும். யோகத்தின் கூறுகளையும் தத்துவத்தின் அடிப்படைகளையும் உருவகங்களின் வழியாக ஒரு புனைகதையாக மாற்றுவதென்பதே சவாலான முயற்சி. அதைத் துணிச்சலுடன் முயன்றுள்ளது இக்கதை.

இதுபோன்ற தத்துவ விசாரங்களை ஒரு சிறுகதைக்குள் அமைப்பது விபத்தாக முடியும் சிக்கல் உண்டு.

இந்தக் கதையை இன்னொரு கோணத்தில் ஒரு விஞ்ஞானக் கதையாக அல்லது சூழலியல் கதையாகவும் அணுக முடியும்.

0

குற்றவுணர்ச்சி ஒரு நிழலாகி தொடர்ந்துத் துரத்தி வரும் மனநிலையை அடிப்படையாகக் கொண்டது ஹரிராஸ்குமார் ஹரிஹரனின் ‘வெண்நாகம்’. இந்திய மரபில் பாம்பு முக்கியமான ஒரு படிமம். உளவியல் ஆராய்ச்சியிலும் பாம்பின் இடம் அதேயளவு முக்கியமானது. திரும்பத் திரும்ப வெவ்வேறு வடிவில் படிமமாகவும் குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிற்பம், ஓவியம், கவிதை என அனைத்து கலை வடிவங்களிலும் பாம்பின் உருவம் முக்கியமான இடத்தை வகித்துள்ளது. காமத்தின் குறியீடாகவும் இது கருதப்படும் இது கனவுகளின் பல்வேறு தோற்ற நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் ஒன்று.

உலகிலுள்ள பாம்பு வகைகளில் குறிப்பிட்ட சில வகை மட்டுமே நச்சுத் தன்மை கொண்டவை என்று உரக்கச் சொல்லப்பட்டாலும்கூட பாம்பின் மீது நம் ஆதி மனம் கொண்டுள்ள அச்சம் இன்னும் விலகியபாடில்லை.

அரவத்தின் மீதான அச்சத்தை அது தரும் மனக்குழப்பத்தைத் தொட்டுச் செல்லும் இக்கதைக்குள் நுட்பமாக அமைந்திருக்கும் காமம் கதையின் முக்கிய புள்ளியாகும்.

0

மிக நுட்பமான அந்தரங்கமான உணர்வின் அடிப்படையில் புனைகதைக்குரிய பூடகத்தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும் கதை ஸ்ரீவிஜியின் ‘பூஜா அன் ஹாத்திக்கு’.

இரு பெண்களுக்கிடையிலான அக்கறைமிக்க, உளப்பூர்வமான உறவு, இன்னவென்று வகைப்படுத்த முடியாத அதன் ஆழம், வேறுவிதமாக அதைப் புரிந்துகொள்வதில் உள்ள சாத்தியம், சட்டென்று அது துண்டுபட்டுப்போகும் யதார்த்தம் என பல்வேறு கோணங்களையும் மிக எளிமையான விதத்தில் நகர்த்திச் செல்கிறது இந்தக் கதை.

சிறிது கவனம் பிசகினாலும் வேறு விதமாக அர்த்தமாகிவிடும் அபாயம் கொண்ட கதைக்களம் கவனமாகவும் கச்சிதமாகவும் கையாளப்பட்டுள்ளது. சொல்லியிருப்பதைவிடவும் சொல்லாமல் விட்டதில் நிறைய சாத்தியங்களைக் கதையின் இடைவெளியில் நிரப்ப முடிந்திருக்கிறது.

பெண்களின் உலகம், உடல் சார்ந்த அவர்களது கவனம், கவலைகள், கண்காணிப்பு என எல்லா விஷயங்களையும் கதையோட்டம் கவனத்தில் கொண்டுள்ளது. அதே சமயத்தில் அவை பிரச்சாரத் தொனியில் எதுவும் அமையவில்லை என்பது முக்கியமானது.

இதுபோன்ற நுட்பமான கதைக்கருவைக் கொண்டிருக்கும் கதைகளில் கதாபாத்திரங்களும் கதைச் சூழலும் உயிர்ப்புடன் அமைவது முக்கியமானது. அதுவே கதையின் மேற்பரப்பில் வெளிப்பட்டிருக்காத ஆழங்களுக்கு வாசகனை இட்டுச் செல்ல உதவும். இக்கதையில் அது இயல்பாக அமைந்திருக்கிறது.

0

கைகளில் உருளும் கலைடாஸ்கோப் நொடிக்கு நொடி வண்ணங்களையும் வடிவங்களையும் உருமாற்றிக் கொண்டேயிருக்கும். மனமும் அப்படித்தான். ஓரிடத்தில் கால்கொள்ளாது ஒன்றை அடுத்து இன்னொன்று என தாவியபடியிருக்கும். அதன் போக்குகளையும் நிலைதடுமாற்றங்களையும் உற்றறியவே அறிவியலும் உளவியலும் யோகமும் பல்வேறு துறைகளும் தொடர்ந்து முயல்கின்றன. மனத்தின் ஆழத்தை அறியும் முயற்சியின் ஒரு பகுதியே இலக்கியமும் கலையும்.

அரவிந் குமாரின் ‘அணைத்தல்’ கதையும் மனத்தின் பல்வேறு நிறங்களையும் நிலைகளையும் சுட்டிக் காட்ட முனைகிறது. அறம், நீதி, கடமை, நியாயம் என்று வெவ்வேறு மதிப்பீடுகளை சார்ந்து ஒட்டுமொத்த சமூகத்தின் வரையறைகளை பொதுவாகவே ஏற்றுக் கொண்டிருந்தபோதும் தனிப்பட்ட ஒரு சூழ்நிலையில், காரண காரிய தர்க்கம் எதுவுமில்லாமல் தனக்கான ஒரு உறுதியுடன் அவற்றை மீறுவதோ அல்லது பொருட்படுத்தாமல் இருப்பதோ நடப்பதற்கான சாத்தியங்கள் எப்போதும் உண்டு. அந்தந்த சூழ்நிலையில் குறிப்பிட்ட அந்த நேரத்துக்கான மதிப்பீடு அது. அதில் பொதுவான மதிப்பீடுகள் செல்லுபடியாகாது. இது ஏன் இப்படி நிகழ்கிறது என்பதற்கான பதிலும் இல்லை. வினைப்பயன், பாவம் போன்றவை வரையறைக்குள் இருத்துவதற்கான சில கருவிகளாகச் சொல்லப்பட்டபோதும் எல்லா நேரங்களிலும் அவை செல்லுபடியாவதில்லை.

‘அணைத்தல்’ கதையின் உள்ளடுக்குகள் இவ்வாறான தர்க்கங்களைத் தொடர்ந்து அடுக்கிச் செல்கின்றன. கதையில் உள்ள சின்னஞ்சிறு கதாபாத்திரங்களும்கூட தமக்கான தர்க்கத்துடன் கதையின் ஒட்டுமொத்த உரையாடலுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

சீராகத் தொடங்கி அடுத்தடுத்து கதையின் அடுக்குகள் இயல்பாக விரிந்து கச்சிதமாக முடியும் இக்கதையின் இன்னொரு முக்கியமான பலம் மலேசியப் பின்னணி.

0

தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள் பலசமயங்களில் சுவாரஸ்யமானவை. விநோதமானவை. அதுவரையிலும் விடை தெரியாமல் முட்டி மோதிக்கொண்டிருக்கும் ஒரு புதிரை சுலபமாகத் திறந்து காட்ட வல்லவை. நடந்து முடிந்த பிறகு அது அப்படித்தான் நடந்ததா என்றே சந்தேகம் எழும். அந்த நேரத்தில் இருந்த நம் மனநெருக்கடியைத் தெரிந்துகொண்டு அப்படியொரு சம்பவம் நடந்ததா என்றுகூட நினைக்கத் தோன்றும்.

வாழ்வின் முக்கியமான ஒரு முடிவை எதிர்நோக்கியிருக்கும் ஒருவன். அப்போதுதான் தன்னுடைய வெற்றிப் பாதையில் முதலடி எடுத்து வைத்திருக்கும் இன்னொருவன். இருவரையும் ஒரு தற்செயல் பயணம் சந்திக்கச் செய்கிறது. இயல்பான உரையாடல். அது நடந்து முடியும்போது முதலாமவனுக்கும் ஒரு தெளிவு பிறக்கிறது.

தன் கனவு நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கப்போகும் பெரும் தொழிலதிபரை அந்த இளைஞன் எப்படி தன்வசப்படுத்தினான் என்பதைச் சொல்வதாக முடியும் கதை சிவமணியத்தின் ‘ஒப்புரவு’.

சீரான கதை. சிக்கலில்லாத சித்தரிப்பு. இருவருக்கும் இடையிலான உரையாடலின் போது எழும் மனஉணர்வுகளை வெளிக்காட்டுவதுபோல புறச் சித்தரிப்புகள். உதாரணமாக,

தொழிலதிபர்களுக்கு,  குருவை வெளிப்படையாத் தேடுறதுலேயோ, அவங்கிட்ட யோசனை கேட்குறதுலேயோ நெறைய தயக்கம் இருக்கு. அதுவே அவங்களுக்கு.பணிஞ்சபடி பேசுற  என்னை மாதிரியான ஆட்கள் கிட்டே யோசனை கேட்கிறதுலே பெரிய தயக்கமில்லை.”

வேகமாக வீசிய எதிர்காற்று, மணலை அள்ளி எடுத்து வண்டியின் முன்கண்ணாடியில் கொட்டியது. ரிஷி சன்னமாக நிலைதவறினான்.  காரின் கண்ணாடியில் தண்ணீர் தெளித்து,  இணை துடைப்பான்களை இயக்கித் தெளிவானான்.

பொதுவாகவே புதிய ஒரு நபரைக் கண்டதும் நம் மனம் அவரை சற்று கீழானவராகவே எடைபோடும். அது மனித இயல்பு. அவரது மேதமை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும்போது முதலில் அதை ஒப்புக்கொள்ள மறுத்து பொறாமையும் அலட்சியமும் தலைதூக்கும். இதை அவர் பொருட்படுத்தாமல் தன்னியல்பில் இருக்கும்போது ஒரு நொடியில் தணிந்து அவரை இணக்கமாக உணரத் தொடங்குவோம்.

இந்த உணர்வுகளை கதை மிக இயல்பாக கையாண்டிருக்கிறது.

மேலாண்மை நுட்பங்களை கதையில் சொல்லும்போது ஒருவித lecturing tone அமைவதுண்டு. ஆனால், இதுபோன்ற கதைகளில் அதைத் தவிர்க்க முடியாது. கதையின் வாசிப்புக்கு ஊறு செய்யாமலிருந்தால் போதும்.

இந்தக் கதையின் இன்னொரு முக்கியமான அம்சம் கதையின் முடிவு. காரில் அவன் ஏறும்போது அவன் கோவில் அடையாளத்தைச் சொன்னதும் அவன் கோவிலுக்குத்தான் போகிறான் என்று இவன் எண்ணுகிறான். அப்போதிருந்த மனநிலையில் தானுமே கோயிலுக்குப் போகலாம் என்று தீர்மானிக்கிறான்.

ஆனால், வந்தவன் கோயிலருகில் இறங்கி ஒரு உணவு விடுதியை நோக்கி நடக்கிறான், நண்பர்களுடன் விருந்துக்காக.

இதுவுமே இவன் சற்றும் எதிர்ப்பார்க்காத ஒன்று.

ஒரு குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், இந்தக் கதையின் கடைசி பத்தி இல்லாமல் இருந்தால் கதையின் முடிவு இன்னும் அழுத்தமாக அமைந்திருக்கும். இப்போது இருப்பது வலிந்து சேர்க்கப்பட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

0

போர்க் குரல்கள் இல்லாத இலங்கைக் கதை ப்னாஸ்ஹாசிமின் ‘காவல்காரன்’. வாசிக்க சற்று சிரமப்படும்படியான மொழியில் அவ்வளவாய் பழக்கப்படாத சொற்களில் பின்னணியில் அமைந்தது. நமக்குப் பழக்கமில்லாத ஒரு புலத்தில் கதை நிகழும்போது வாசிப்புக்கு சற்று கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளும் அவசியத்தை வலியுறுத்துவது.

கதையின் களம் மாந்திரீகம் சார்ந்தது என்பது அடுத்த சவால். மாந்திரீக விஷயங்களில் ஆர்வம்கொண்ட ஒருவன் அதைத் தேடிப் போய் அதிலேயே தொலைந்துபோவதுதான் கதையின் மையம்.  

பொதுவாகவே இதுபோன்ற மாந்திரீக விஷயங்களை பகுத்துணர்ந்து புரிந்துகொள்வதோ விளக்குவதோ சாத்தியமில்லை. விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சிக்குப் பின்னும், மனிதனின் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களின் மீதான நம்பிக்கை என்பது அப்படியேதான் இருக்கிறது. இன்னும் நமது கலை, இலக்கிய வடிவங்களில் இதுபோன்ற அம்சங்களுக்கு கணிசமான இடம் இருக்கிறது. மாந்திரீகம் ஒரு இலக்கிய வகைமையாகவே இருக்கிறது. அதிபுனைவுக்கான பொருத்தமான களம் என்பது கூடுதல் பலம். மாய யதார்த்தம், மீமெய்மை என்று பல்வேறு விதமான அணுகுமுறைகளில் சொல்லப்படுகிறது. உலகெங்கும் ஏராளமான கதைகள் எழுதப்படுகின்றன, வாசிக்கப்படுகின்றன.

இந்த வகைமையில் தமிழில் குறிப்பிடத்தகுந்த கதைகள் வெளியாகியுள்ளபோதும் அதிகமும் அவை எழுதப்படுவதில்லை. புதிய எழுத்தாளர் ஒருவர் அப்படியொரு கதையை எழுத முனைந்திருப்பது பாராட்டுக்குரியது.

0

சிறுகதையின் தொடக்கம் மிக முக்கியமானது என்பது பாலபாடம். நல்ல கச்சிதமானத் தொடக்கத்துடன் கூடிய கதை வாசகர்களை உடனடியாக உள்ளிழுத்துக் கொள்ளும். ‘இரத்தம் உறைந்த கழுத்து, சீவிய நுங்குபோல் கண்கள்’ என்று கதை தொடங்கும்போதே நம் புலன்கள் அனைத்தும் ஒன்று குவிந்து கதையில் ஒன்றிவிடுகின்றன.

போருக்குப் பின்பான இறுக்கமான காலகட்டத்தில் நடக்கும்  செந்தாழை கதையின் தொடக்கம் இது. முகமது ரியாஸ் எழுதியது.

தங்க நாணயங்களுக்காக நம்பி வந்தவனையும் அவன் மனைவியையும் ஜப்பானிய இராணுவத்திடம் காட்டிக் கொடுப்பவனின் கதை. அவனது குற்றவுணர்ச்சியே வெட்டி வைத்தத் தலையையும் அதன் கண்களையும் கண்டு அஞ்சுகின்றன.

மனத்தின் இருண்ட அடுக்குகளை நோக்கிச் செல்லும் கதைகள் தனித்துவம் வாய்ந்தவை. எழுதி எழுதி விலக்க முடியாத மர்மம் அது. புதுமைப்பித்தனிலிருந்து இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை தொடர்ந்து அதை முயல்கிறார்கள்.

இதுபோன்ற கதைகளில் கதைகளின் புறச் சூழல் பொருந்தி அமைவது முக்கியமானது. போருக்குப் பின் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிற நகரம். இராணுவத்திடம் சிக்கிவிடக்கூடாது என்று அஞ்சும் மக்கள். எப்படியாவது தப்பிச் சென்றுவிடவேண்டும் என்ற தவிப்பு. பிழைப்புக்காக கிடைக்கும்வேலையை செய்யவேண்டிய நிர்ப்பந்தம். கதைசொல்லியின் மீதான அவளது ஈர்ப்பு. ஆனால் கதைசொல்லியின் மனத்துள் மறைந்திருந்த கள்ளம்.  இத்தனையையும் கதையின் ஓட்டத்தில் அடுக்கடுக்காக இறுக்கமாக அமைந்திருப்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு.

இதற்கு நடுவே அன்னாசிப் பழ சாகுபடி, நண்டு சமைப்பது போன்ற விவரணைகளும் கதையின் வாசிப்புத்தன்மையை சற்றும் குலைக்காது அதை மேலும் சுவாரஸ்யப்படுத்துவதாக அமைந்துள்ளன.

கதையின் ஒற்றை வரி போகிற போக்கில் வருகிறது.

யானைக்கு முன் ஒரு உண்மை உண்டு. தான் யானையென தன்னையறிவது. அது தெரிந்துவிட்டால் எந்த மந்திரமும் யானையைக் கட்டுப்படுத்த முடியாது” என்று சிரித்தேன். மீண்டும் நாணயங்கள் ‘க்லிங்..க்லிங்’ என்றன.

இரண்டாவது முறையாக அல்லது மூன்றாவது முறையாகப் படிக்கும்போதுதான் எத்தனை அழுத்தமான அர்த்தம் பொதிந்த வரி என்பது தெரிய வருகிறது.

ஒவ்வொருவரும் அடுத்தவரை எடைபோட்டு அவர்களை அறியவே முற்படுகிறோம். நாம் யாரென அறிந்துகொள்ளும் முனைப்பு பெரும்பாலும் இருப்பதில்லை. அப்படி அறியும் போது நம்மைப் பற்றிய உண்மைகள் அத்தனை உவப்பானதாக இருப்பதில்லை. எத்தனை மலினங்கள், கயமைகள், பொய்மைகளை உள்ளடக்கி மறைத்திருக்கிறோம் என்பதை அப்படியே நேருக்கு நேர் ஒப்புக்கொள்ளும் துணிவு இருப்பதில்லை.

கதைசொல்லி அந்த நாணயங்களின் மீது ஆசை வைத்தது தொடக்கத்திலிருந்தே அவன் திட்டமா? அல்லது அந்தக் கணத்தில் நிகழ்ந்ததா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

மலேசியாவில் செந்தாழை எனப்படும் அன்னாசி கதையின் ஒரு அழுத்தமான படிமமாக திரண்டு நின்று கதையை உயரமான இன்னொரு தளத்துக்கு நகர்த்திவிடுகிறது.

0

மனித குலத்தின் ஆதி நாட்களை அவன் வாழ்க்கைப் போக்கை அதில் கிளைத்த மோதல்களை அகம் மெல்ல மேலெழுந்து அனைத்தையும் மூடுவதை என பெரும் ஒரு சித்திரத்தைக் காட்டுகிறது பிரதீப் கென்னடியின் ‘உயிர் மரம்’ குறுநாவல்.

உறுப்புகளின் குறிகளைத் தாங்கியவர்களுடைய பெயராக அந்த உறுப்புகளே நிலைப்பதில் தொடங்கி ஒவ்வொரு அடுக்காக விரிகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ராகுல சாங்கிருத்யாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலை இந்தியிலிருந்து மொழிபெயர்த்தேன். குகை வழி சமூகத்திலிருந்து தொடங்கி இந்திய சுதந்திரத்தின் காலகட்டம் வரைக்குமான மனித குல வரலாறு சுவாரஸ்யமான கதையாக விவரிக்கப்பட்டிருக்கும் முக்கியமான நூல். இந்தக் குறுநாவலைப் படிக்கும்போது அதுதான் நினைவில் எழுந்தது.

சவாலான கதைக்களம். அதற்கேற்ற அடக்கமான சீரான கதைமொழி. சொற்களையும்கூட மிகப் பொருத்தமாக தெரிவு செய்திருக்கிறார். நிறைய புதிய சொற்களையும் உருவாக்கியிருக்கிறார்.

மனித வரலாறு ஒரு பெரிய விருட்சமென விரிந்து தளைத்து உதிர்ந்து மூப்படைந்து மீண்டும் தளைத்து வளரும் ஒன்று என்ற கற்பனை தரும் எழுச்சியை ‘உயிர்மரம்’ என்ற சொல் சாத்தியப்படுத்துகிறது.

எத்தனை முறை மரத்தைப் பார்த்தாலும் சலிப்பதில்லை. ஒரே மரம் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புத்தம் புதிதாகவும் வேறு தினுசாகவும் தெரியும் விந்தையை விளக்க முடியாது.

மனித வரலாற்றின் ஒவ்வொரு ஏடும் அப்படியான வியப்புகளை உள்ளடக்கியது. இன்று இத்தனை காலத்துக்குப் பின் நமது அன்றாட புழக்கத்தில் உள்ள பழக்கங்களை அவை எப்படி தொடங்கியிருக்கும் என்று யோசிப்பதும் ஆச்சரியமானது. மனித சமூக வரலாற்றின் பல்வேறு சாத்தியங்களும் இதுபோன்ற சிந்தனைகளிலிருந்து புனைவுகளிலிருந்தே உருவாகியிருக்க முடியும்.

0

இக்கதைகளைத் தவிர, ‘கீரவாணி’ என்ற பத்தியும் இச் சிறப்பிதழில் இடம் பெற்றுள்ளது.

ராகத்துக்கும் உணர்ச்சிகளுக்கும் உள்ள தொடர்புகளைக் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மனோதத்துவ முறையிலும் இசை நுட்பங்களின் அடிப்படையிலும் அதைப் பகுத்தாயும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சாஸ்திரீய சங்கீதத்தை உயரியதாகவும் சினிமா தொடர்பான இசையை அவ்வாறல்லாத ஒன்றாகவும் அணுகும் மனோபாவமும், உயர்ந்தது தாழ்ந்தது என்ற வாதங்களும் முடிவை எட்டாது வெவ்வேறு குரல்களில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பவை. கலையின் தூய்மைவாதம் குறித்த தர்க்கங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மேலெழுந்து புதிய குரல்களில் புதிய சட்டகங்களைக்கொண்டு ஒலித்துக் கொண்டுதான் உள்ளன.

கீர்த்தனைகளைப் பாடுவது உயர்வானது என்றும் அதே ராகத்தில் அமைந்த சினிமா பாடலைப் பாடுவது கூடாது என்பதுமான கருத்தோட்டத்தின் அடிப்படையிலான விவாதத்தை இந்தப் பத்தி ஒரு அனுபவக் கதையாக முன்வைக்கிறது.  

கலை எந்த வடிவிலும் இருக்கலாம், கற்றுக் கொள்ள எதுவும் இருப்பின் அதில் உயர்வு தாழ்ச்சி எதுவும் கிடையாது என்பது அடிப்படை. அதைத்தான் இந்தப் பத்தியில் சரளமாகவும் பிசிறில்லாமலும் ஒரு தேர்ந்த புனைகதையைப்போல எழுதப்பட்டுள்ளது.

அம்மாவுக்கும் மகளுக்குமான தலைமுறை இடைவெளி, ரசனை மாற்றமே கீர்த்தனைக்கும் சினிமா இசைக்குமான இடைவெளியாக முரணாக அமைகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் இசை ஆசிரியருக்கும் சினிமாப்பாடல்களுக்குமான உறவு, அதன் முரண்கள் என்று சரட்டையும் இதில் இணைக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருவகையில் இந்தப் பத்தி இளையராஜாவுக்கான புகழாரங்களில் ஒன்று.

மோகமுள் நாவலில் இடம் பெற்றுள்ள கீர்த்தனைகளை ராகங்கள் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு பொருத்தமாக அமைத்துள்ளார் தி.ஜா என்று சொல்லப்படுகிறது. இசை தெரிந்தவர்களிடம் விரிவாக அதைக் குறித்து விசாரித்தால் நாவலுக்கு இன்னும் அது வலுசேர்க்கக் கூடும்.

0

இக்கதைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது பொதுவான சில அம்சங்களை கண்டுணர முடிகிறது.

உளவியல் சிக்கல்கள் (சிறுத்தை, வெண்நாகம்), காமம் (நட்சத்திரங்களின் வாக்குமூலம், பூஜா அன் ஹாத்திக்கு), மரணம் (அனல் அவித்தல், மரணக்குழி), போர்ச் சூழல் (மரணக்குழி, செந்தாழை), வரலாறு (ம்ருகமோக்ஷம், உயிர்மரம்), நாட்டார் மரபின் சரடு (காவல்காரன், ம்ருகமோக்ஷம்), மாய யதார்த்தம் (காவல்காரன்) போன்ற பல்வேறு தளங்களையும் இக்கதைகள் தொட்டு நிற்கின்றன.

ஏற்கெனவே எழுதப்பட்ட கதைக்களங்கள் அல்லாமல் புதியவற்றை எழுதும் முனைப்பைப் பார்க்க முடிகிறது. முன்பே எழுதப்பட்டிருந்த கதைகளை வேறு வடிவத்தில் புதிய மொழியில் எழுதவேண்டும் என்ற முயற்சி தெரிகிறது.

இதன் ஆசிரியர்கள் அனைவருக்குமே கதையை சீராக சொல்லத் தெரிந்திருக்கிறது. கதைக்குத் தேவையான புறச்சூழலை நேர்த்தியாகச் சித்தரித்திருப்பதுடன் வலுவான கதாபாத்திரங்களை அழுத்தமான அடையாளங்களுடன் உருவாக்கவும் வாய்த்திருக்கிறது.

வல்லினம் இந்த முயற்சியின் வழியாக நம்பிக்கைதரும் சில கதாசிரியர்களின் பெயர்களை தமிழ்ச் சிறுகதைப் புலத்துக்கு அறிமுகப்படுத்தியிருப்பதே இந்தச் சிறப்பிதழின் சாதனை என்று தயக்கமின்றி சொல்லலாம்.

0


வல்லினம் - அக்டோபர் 2021

கன்னி – காலத்தில் நிலைத்த தேவ மலர்.


 

‘மெசியாவின் காயங்கள்’ என்ற உக்கிரமான தலைப்புடன் ஜெ.பிரான்சிஸ் கிருபா தமிழ் கவிதையுலகுக்கு அறிமுகமானது தமிழ் புனைவுலகின் ஒரு நற்பேறு. அதுவரையிலான தமிழ்க் கவிதையின் மொழியிலிருந்தும் கூறுகளிலிருந்தும் கிருபாவின் கவிதைகள் முற்றிலும் தனித்துவமாக அமைந்திருந்தன. கவித்துவத்தின் உச்ச கணங்களை மிக அநாயசமாக எளிய சொற்களின் வழியே அவை சாதித்திருந்தன. வேதாகமத்தின் மொழி அழகை கவிதைக்குள் பொருத்தியிருந்த நேர்த்தி திரும்பிப் பார்க்கச் செய்தது.

‘வலியோடு முறியும் மின்னல்’, ‘நிழலன்றி ஏதுமற்றவன்’ என அடுத்தடுத்து வெளியான அவரது கவிதைத் தொகுப்புகளும் அவற்றில் இடம் பெற்றிருந்த கவிதைகளும் தமிழ் கவிதையுலகில் கிருபாவுக்கென ஈடற்ற ஒரு தனித்த இடத்தை உறுதி செய்தன.

நவீன தமிழ் நாவல்களின் ஒரு பெரும் திசைமாற்றம் 2000த்தில் நிகழ்ந்தது. நாவலைப் பற்றிய புரிதலும் அதன் வடிவ சாத்தியங்களைக் குறித்த தெளிவும் கொண்ட புதிய புதினங்கள் எழுதப்பட்டன. அந்த வரிசையில் 2006ம் ஆண்டு வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்த நாவல் ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’.

‘கன்னி’ தமிழின் முதல் நவீன காதல் நாவல். ‘தீக்குள் விரலை வைத்த காதல் இன்பம் இப்புதினம்’ எனும் அதன் பின்னட்டைக் குறிப்பு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

‘காதல் நாவல்’ என்றவுடனே சிறியதொரு இளக்காரம் மனத்துள் மின்னலிட்டு மறைவுது இயல்பு. தமிழில் அதுவரையிலான காதல் கதைகளும் புதினங்களும் தந்திருந்த அனுபவம். காதலைப் பற்றி இனி எழுத என்ன இருக்கிறது? சங்கமும் நவீன கவிதைகளும் திகட்டத் திகட்டச் சொல்லியாகிவிட்டது என்ற அலட்சியம். போதாக்குறைக்கு சினிமா முடிந்தவரை அதை வெவ்வேறு கோணங்களில் விதவிதமாக அலசி ஆராய்ந்த அலுப்பு.

இத்தனை இருப்பினும் ‘காதல்’ என்ற சொல் ஏற்படுத்தும் ஈர்ப்பின் விசை என்றும் குறையாத ஒன்று. அதுவே இந்த நாவலுக்கான திறப்பாகவும் அமைந்தது.

ஆனால், இந்த நாவலை வாசிக்கத் தொடங்கியபோது அதுவரையிலான அத்தனை முன் முடிவுகளையும் அது நொறுக்கியது. தொடக்கத்தில் இது காதல் நாவல்தானா என்ற கேள்வி பதற்றத்துடன் எழுந்தது. நாவலின் ஆரம்பத்திலிருந்த சில அத்தியாயங்களில் விரிந்த ஒரு உலகம் தந்த நடுக்கத்தை இன்றும் நினைவுகூற முடிகிறது.  

‘கால்களைப் பிணைத்துக் கட்டிப்போட்டிருக்கும் பன்றியைப்போல உடை மரத்தடியில் சுருண்டு ஒருக்களித்துப் படுத்திருந்தான் பாண்டி’ என்ற வரிகளும் அதன் பிறகு விரிந்த காட்சி தந்த அதிர்ச்சியிலிருந்து மீள நேரம் பிடித்தது. அதற்கடுத்த சில பக்கங்களில் பிரமாதமான ஒரு தேவதைக் கதை. கடல் கன்னியும் கிழவனும் உலவுகிறார்கள். மீன்கள் துள்ளி மறிகின்றன. ‘கடல் கன்னி முத்தமிட்டதும் கடலின் இரண்டு அலைகள் திராட்சை ரசமாக மாறின’ என்ற வரிகளைப் படித்ததும் நாவலை மூடிவைக்க வேண்டியிருந்தது. என்ன நடக்கிறது என்ற வியப்புடன் மீண்டும் அந்தப் பகுதியைப் படித்தேன்.

மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு வரியாக ஒவ்வொரு சொல்லாகப் படிக்கும் முனைப்பைக் கோரியது நாவல். நாவலின் அடுக்குகளைப் புரிந்துகொள்ள நேரம் பிடித்தது. படித்து முடித்த பின்னும் மறுபடி அந்தக் கேள்வி இன்னும் தீவிரத்துடன் ஒலித்தது ‘இது காதல் கதை தானா?’

நாவலை வாசித்து முடித்த பின்பு அது தந்த வியப்பு வெகுநாட்கள் விலகவேயில்லை. ஒரு நாவலை முழுக்க முழுக்க கவிதைகளைக் கொண்டே எழுதுவது சாத்தியமா? சிறிதும் திகட்டாமல், வலிந்து திணிக்கப்பட்ட உணர்வைத் தராமல், நாவலின் பகுதியாக, கதாபாத்திரங்களின் குரல்களாக அவற்றை ஒலிக்கச் செய்திருக்கும் மாயத்தைக் குறித்து யோசித்தபடியே இருந்தேன். இது காதல் கதைதான், ஆனால் வெறும் காதல் மட்டுமே கொண்ட கதையல்ல. காதலுக்கும் அப்பால் பெண்ணின்மேல் ஏற்படும் தூய சரணடைதலை மிக நுட்பமாகவும் செறிவாகவும் சித்தரித்திருக்கும் நிகரற்ற புனைவு என்பதை உணர்ந்தேன். பக்கங்களெங்கும் அடிக்கோடுகள். ஓரங்களில் ஒன்றிரண்டு சொற்களில் ஏராளமான குறிப்புகள். இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்தபோது ஏற்பட்ட ஜூரம் தணிய வெகுநேரமானது. ‘கன்னி’ தமிழ்ப் புனைகதையில் கனிந்த அபூர்வமான நிகழ்வு என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தேன். இப்போதும் அதை இன்னும் உரக்கச் சொல்ல முடியும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

0

இந்த நாவலைப் புரிந்துகொள்வதில் பெரும் சவாலாக அமைந்திருப்பது இதன் வடிவமைப்பு.

இதுவொரு மகத்தான காதலைச் சொல்லும் ஒரு நாவல். ஆனால் இது தொடங்குவது ஏலான ஆசாரியின் அகால மரணத்தில். கதை நாயகன் அறிமுகமாகும்போதே தன்னிலை இழந்து பித்தனாகிக் கட்டி வைக்கப்பட்டிருக்கிறான். மனிதன் இருக்கக்கூடாத ஆகக் கீழ்மையான நிலையில் இருப்பவனின் விடுதலைக்கான வழிகள் ஆராயப்படுகின்றன. தாயத்துகள் கட்டப்படுகின்றன. சரியாகும் வழியில்லையென்றால் ‘சோத்துல விஷம் வெக்க வேண்டிதுதான்’ என்று பெற்றவள் வெறித்த பார்வையுடன் சொல்கிறாள்.

நாவலின் ஆரம்பப் பக்கங்கள் கொண்டிருக்கும் இந்தப் பதற்றமும் தீவிரமுமே பிற காதல் நாவல்களிலிருந்து ‘கன்னி’யை வேறுபடுத்தும் முதல் காரணி.

பதற்றத்தைத் தணிக்கும் விதத்தில் ‘சுனை’ பகுதியில் அமலா சிறுமியாக இருந்த காலம் முதல் அவள் கன்னியாஸ்திரீ ஆவதற்காக கன்னியாகுமரி செல்லும் வரையிலான பருவம் களங்கமற்ற நாட்களின் ஒளியுடனும் குறும்புகளுடனும் சிறுவர்களுக்கேயுரிய துள்ளல்களுடனும் சித்தரிக்கப்படும்போது மனம் சற்றே ஆசுவாசம் கொள்கிறது.

‘அருவி’ பகுதியில் உள்ளுக்குள் ஊற்றெடுத்த வியப்பும் போற்றுதலும் பெருகி நிறையும் தருணங்கள், சொற்கள் மௌனத்துக்குத் திரும்பும் கவிதைகள், வெவ்வேறு பெண்களின் வழியாக ஏற்படும் இளமையின் தடுமாற்றங்கள், கன்னியாகுமரியிலும் நெல்லையிலும் கிருஷ்ணாபுரத்திலும் திருச்செந்தூரிலும் மணப்பாடிலும் இருவருக்கு நடுவிலும் வளரும் புரிதல், தெளிவுற்று நெருங்கி பின் இரக்கமின்றி தரப்படும் பிரிவை ஒப்புக்கொண்டு புனிதச் சிலுவையை ஏற்று பம்பாய்க்கு செல்லும் முடிவு என  அபாரமான காவியத்தின் அதி அழகான பக்கங்கள் விரிந்து விரைகின்றன.

‘காட்டாறு’ அடித்து வரும்போது முற்றிலும் திசையிழக்க நேர்கிறது. பாண்டியின் மனபோக்குகளும் எல்லையற்றுச் சுழலும் உன்மத்தத்தின் உச்சங்களும் பயங்கொள்ள செய்கின்றன. நிலைதடுமாறும் வரிகள் பல அடுத்தடுத்து நெருக்கியடித்து மூச்சுத் திணறச் செய்கின்றன. ‘சாரா’வைத் தேடும் ‘சாரோ’னாகி அவன் ஓடுகிறான். எங்கிருந்து வந்தாள் இந்த சாரா? என்ற குழப்பமும் அலைக்கழிப்புமாக அதுவரையிலிருந்த ஒளியை சாந்தத்தை முற்றிலுமாக சிதைத்து மீண்டும் பெரும் பதற்றத்தை விதைக்கிறது.

பிற்சேர்க்கையாக ஷெல்லியின் நீண்ட கவிதை. சொற்களும் இசையுமாய் துள்ளிச் செல்லும் ஓடையென மொழி தவழும் அற்புதமான மொழியாக்கம்.

‘கார்முகில்’ புதிய கதையைச் சொல்கிறது. தேரித்துறை திருவிழாவில் தன் அத்தைக் கன்னியின் உருவிலுள்ள சாராவைக் காண்பதும் காதல் கொள்வதும் ஊடலும் தேடலுமாக விரியும் அபாரமான தருணங்களைக் கொண்டது. எதிர்பாரா சந்திப்பையும் அதன் பிறகான அதிர்ச்சியான தகவலுடனான பிரிவுடன் சற்றும் இரக்கமின்றி முடிகிறது.

இறுதியாக மழை’. தேர் பவனி நாளிரவில் கனிந்து கைகூடி கொஞ்சி நீளும் காதல் தருணங்களைக் கொண்டது. திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்வான இதனை நாவலின் கடைசிப் பகுதியாக வைத்திருக்கும் நுட்பமே இப் பகுதியையும் நாவலையும் புனைவின் அபாரமான உச்சத்துக்கு காரணமாகிறது.

நாவலை படித்து முடித்த பிறகு உண்மையில் நாவல் எங்கு தொடங்கி எப்போது முடிகிறது என்னும் மயக்கம் நீடிக்கிறது. மெல்ல மெல்ல அதன் பக்கங்களுக்குள் மறைந்திருக்கும் மர்மங்களை விலக்கிப் போகும்போது தெளிவு கிட்டுகிறது. இந்தப் புதிர்வழிகளில் அங்கங்கே திசைகாட்டிகளாக ஆசுவாசங்களாக அமைந்திருப்பவை தமிழின் ஆகச் சிறந்த கவிதை வரிகள்.  இவற்றுக்கு நடுவே பழந்தமிழ் கவிதைகளின் அபாரமான பல வரிகளும் இணைந்து நாவலின் புதிர்வழிகளை ஒளிரச் செய்திருக்கின்றன.

இந்த நாவலை கால வரிசைப்படி அடுக்கி ஒழுங்கமைத்து மீண்டும் வாசிக்க முடியும். அத்தியாய எண்களைக் கொண்டு அப்படி வாசிப்பது சாத்தியம்தான். ஆனால் அந்த வாசிப்பின்போது கிடைக்கும் அனுபவம் நாவலின் தற்போதைய வடிவில் கிடைக்கும் அனுபவத்துக்கு முற்றிலும் வேறானது.

இப்போது பாண்டி என்னவானான் என்ற கேள்வி நியாயமாக நாவலின் கடைசிப் பக்கத்தை வாசித்து முடிக்கும்போது எழவேண்டும். ஆனால், அந்தக் கேள்விக்கான பதில் முதல் சில பக்கங்களுக்குள்ளாகவே சொல்லப்பட்டிருப்பதை மறந்துவிட்டு அவனை அவ்வாறு பித்துறச் செய்த அற்புதமான அந்த இரவின் ‘மழை’யில் ஆனந்தமாக அவன் நனைந்திருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களின் வண்ண வேறுபாடுகளின் வழியாக பாண்டியின், அமலாவின் சிறுவர் பருவத்தைச் சுட்டியிருக்கும் நுட்பமும், கடலலைகளில் தன் கை வளையல்களை அமலா கழற்றிப் போடும்போது மாறும் வண்ணங்களின் வழியாக காலத்தின் ஓட்டத்தைச் சுட்டும் நேர்த்தியும் கிருபாவின் புனைவு உத்திக்கான உதாரணங்கள்.

0

இந்த நாவல் பெண்ணின் மீதான வியப்பை, போற்றுதலை, காதலைச் சொல்வது, அது தரும் உவகையை, மயக்கத்தை, வலியை சித்தரிப்பது என்று குறிப்பிடுவது நாவலுக்கும் அதன் பொருண்மைக்கும் நியாயம் செய்யாத ஒன்றாகும். இந்த நாவலில் அமைந்திருக்கும் போற்றுதலும் வலியும் அசாதாரணமானவையாக அமையக் காரணம் நாவல் அமைந்துள்ள பின்னணி.

நாவலின் களமாக அமைந்திருப்பவை கடலோரத்தில் அமைந்த கிறித்துவ கிராமங்கள், ஊர்கள். கதாபாத்திரங்கள் அனைவரும் தூய அன்னையிடம் அடைக்கலம் தேடும் கிறிஸ்துவர்கள். காதலை தேவகுமாரன் சுமக்கும் சிலுவையாக, அவன் தலையில் சூட்டியிருக்கும் முள் கிரீடமாக இந்த நாவல் சித்தரிக்கும்போது அதன் வலியும் வாதையும் அர்த்தகனம் கூடுகிறது. ‘தேவனுக்காக நேர்ந்துவிடப்பட்ட’ கன்னியாஸ்த்ரீயை நேசிக்கும் ‘கோயில் பிள்ளை’ எனும் சரடு முக்கியமானது.

அக்கா தம்பி என்ற உறவையும் மீறி இருவரின் மனத்திலும் கிளைக்கும் பேரன்பை, ஈர்ப்பை, பாராட்டுதல்களை ஒருவருக்கொருவர் மறைப்பதில்லை. சாத்தியம் இருக்கும் வரை அதைப் பேணி அது தரும் மன உணர்வுகளையும் அது நிரந்தரமல்ல எனும் வலிகளையும் அறிந்து கடைசியாக விலகும்போது ‘புனித சிலுவை’யையும் பறித்துக் கொண்டு விலகும்போது கடலும் மௌனமுமே அவனுக்குத் துணையாகி நிற்கின்றன. ‘அக்கா’ என்றாலும் அவன் ‘அமல’தாசன். அவள் மீதுள்ள பேரன்புக்கு எந்தக் களங்கமும் வரலாகாது என்றே அவன் சாத்தியமான பிற காதலிலிருந்தும் பெண்களிடமிருந்தும் விலகி ஓடுகிறான். பிரேமா ராணியும் ஜூலியும் அவனது இளமையைத் தீண்டி தடுமாறச் செய்யும்போதும், விஜிலா தன் காதலை வெளிப்படுத்தும்போதும் அவன் நிலைமாறுவதில்லை. அமலாவுக்கான இந்த நோன்பின் முடிவு என்னவென்று தெரிந்தும் அவன் மனம் அதிலிருந்து இம்மியும் விலகுவதில்லை. அவள் ‘வார்த்தைப்பாடு’க்கு போக இவன் ‘சிலுவைப்பாடு’ அடைகிறான்.

அமலாவின் மீது பாண்டி கொண்டிருப்பதை காதல் என்று வகைப்படுத்த முடியாது. தன்னைவிட ஒரு வயது மூத்த அக்கா. சிறுவனாக இருந்த காலந்தொட்டு அவளைப் பார்த்து, வியந்து, பரவசப்பட்டு வளர்பவன் அவன். அவளது நிழலாகவே இருந்து ஒவ்வொரு நாளும் அவளையே நினைத்து அவளுக்காகவே கவிதைகள் எழுதி அவள் சொல்லையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு வாழ்பவன். அவள் மீதான அன்பின் தூய்மையை களங்கமாக்கும் எந்தவொன்றையும் அனுமதிக்காதவன். அவளை ஆராதிப்பதைத் தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது.

ஆனால், சாராவின் மேல் அவன் கொண்டிருப்பது காதல். அவளது தோற்றம் அமலாவை நினைவுபடுத்துகிறது. அதுவே அவளைத் தொடரச் செய்கிறது. கவிதைகளை அர்ப்பணித்து காதலிக்கச் செய்கிறது.

ஒரு நாவலின் சிறப்பை மேலும் வலுவாக்குவது அதன் நிலம். அது வெறும் பெயரல்ல. அதன் வரலாறும் பண்பாடும் நாவலின் களத்துக்கும் அர்த்தத்துக்கும் கனம் சேர்க்கும் வகையில் அமையவேண்டும். வரலாறும் பண்பாடும் பின்னணியில் அமையாத களங்களைக் கொண்டு எழுதப்படும் நாவல்கள் உறுதியாக ஊன்றிக்கொள்ள நிலமின்றி தள்ளாடி விழுந்துவிடக் கூடியவை.

அலைகள் துள்ளியடிக்கும் ஆக்ரோஷமான ஆண்கடல் வலப்புறமும், அமைதியே உருவான பெண் கடல் இடப்புறமும் இருக்க நடுவில் அமைந்திருக்கும் சேவியர் குகை நாவலின் மையப் புள்ளி. ஆக்ரோஷத்தையும் அமைதியையும் ஒன்று கலக்கச் செய்து உப்புச் சுவை நீக்கிய சுனை நீரை ஊற்றெடுக்கச் செய்யும் அற்புதமான காதலின் வடிவம் அது.

தென்திசை பார்த்து வீற்றிருக்கும் கன்னியாகுமரியின் முடிவற்ற தவமே ‘வார்த்தைப்பாடு’ ஏற்கும் கன்னியாஸ்திரீகளின் வாழ்வும். கைவளையல்களைப்போல, கழுத்துச் சங்கிலிகளைப்போல தத்தம் ஆசைகள், விருப்பங்கள் என அனைத்தையும் அவர்கள் துறவுக் கடலுக்கு அர்ப்பணிக்கிறார்கள், கடைசியில் அவர்களே அதற்குள் இறங்கிவிடுகிறார்கள்.

நாவலில் இடம்பெறும் எந்தவொரு இடமும் நாவலை விட்டு விலகுவதில்லை. திருச்சீரலைவாயும் சிற்பங்கள் சிறந்த கிருஷ்ணாபுரமும், பம்பாயின் அஜந்தா குகையும்கூட மனப்போக்குகளைப் பிரதிபலிக்கும் இடங்களாகவே அமைந்துள்ளன. நாவலெங்கும் இடம் பெறும் கடல், பாண்டியின் மனமன்றி வேறல்ல. அவனது மனப்போக்குகளும் கொந்தளிப்புகளும் தடுமாற்றங்களுமே கடலாகி உருமாறி அமைந்துள்ளன. கதை மாந்தர்களின் இயல்புகளையே புறக்காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

அதையடுத்து, காதலும் அதன் வலியும் ஏற்படுத்தும் மன அலைவுகள் இந்நாவலின் வெவ்வேறு பக்கங்களில் எண்ணற்ற சித்திரங்களாய் பிதற்றல்களாய் கவிதைகளாய் விரவிக் கிடக்கின்றன. தர்க்க அறிவினை மீறி கற்பனையின் தீவிர முடிச்சுகளைத் தொட்டு நிற்கின்றன. கனிந்துருகி பித்துற்று காற்றில் அலைந்து பறக்கின்றன. துயரத்தில் உறைந்த வலிகளை மீட்டுகின்றன. தேவதைக் கதைகளாகி உரையாடுகின்றன. பல இடங்களில் திசை தடுமாற நேரிடுகின்றன. கதை தன் தொடர்ச்சியை விட்டுவிட்டு தன்னிச்சையாக கிளைபாவி மனத்தின் பல்வேறு அடுக்குகளில் தாவியும் திரிந்தும் போக்கு காட்டுகிறது. அடுக்கடுக்கான வலுவான படிமங்கள் ஒவ்வொரு வரியிலும் முளைத்தெழுகின்றன. ஒரு நாவலின் கதைமாந்தர்களின் மன உணர்வுகளை இத்தனை வலுவாகவும் எழுச்சியுடனும் சித்தரித்திருக்கும் இன்னொரு நாவல் இல்லை.

0

மனிதனின் இறைநம்பிக்கைகளுக்கு இணையாகவே ஆவிகளின் மேலும் தீய சக்திகளின் மீதுமான அச்சமும் குடிகொண்டுள்ளன. தேவனின் கிருபைகளுக்கு சமமாகவே சாத்தான்களின் சாபங்களும் மனிதர்களை அலைக்கழிக்கின்றன. சாத்தான்களின், ஆவிகளின் ஆட்டங்களிலிருந்து தப்பித்திருக்கும் பொருட்டே மனிதர்கள் தேவனின் திருச்சபையை அடைகின்றனர். அன்பும் வன்மமும் கருணையும் குரூரமும் சிறுமையும் பெருந்தன்மையும் ஒளியும் இருளும் நிழலுமாக மனித இயல்பின் திரிபுகள். காத்து கருப்புகளும் பேய் பிசாசுகளும் யட்சிகளும் தாயத்துகளும் பூசைகளும் பரிகாரங்களும் அவ்வியல்புகளின் வெளிப்பாடுகள்.

பாண்டிக்கு இரும்புச் சங்கிலியை செய்து அவனை மரத்தில் கட்டி வைக்கும் ஏலான ஆசாரியை சத்ராதிதான் வீழ்த்தியிருக்கும் என்று தொடங்குகிறது நாவல். மனிதனுக்குள் தன்னை மீறிய தீய சக்திகளின் மீதிருக்கும் அச்சமும் அவற்றிலிருந்து தப்பியிருக்கவேண்டும் என்ற தவிப்பும் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை.

சித்தியின் கொடுமை தாங்காமல் ஊரை விட்டு ஓடி சிலகாலம் கழித்து செல்வந்தனாகத் திரும்பி வந்து கோலாகலமாக மணம்முடிக்கும் சூசை மணியை பித்தனாக்கி ‘சீத்தா பாத்தா குத்துரு குத்துரு’ என்று பிதற்றியபடி அலையச் செய்கிறாள் நொண்டி இசக்கி. தலைமுடியை தாயத்தில் அடைத்து மனம் கவர்ந்த பெண்ணை வசியம் செய்து மணம் முடிக்கும் முனீர் சர்புதீன் மவுல்வி ‘பெண் தொடர்பு வகையில் சிக்கல்’ உண்டான பாண்டிக்கு தாயத்து செய்து தருகிறார்.

சம்மனசுகள் சத்ராதிகளாகத் திரியும் மாயத் தருணங்கள் சுவாரஸ்யமானவை. அதிகமும் அறியாது நிகழ்பவை. அமலாவையும் சாராவையும் தேவனுக்கு அர்ப்பணிக்கச் செய்யும் உறவுகளின் மனத்தை அசைத்தவை சம்மனசுகளா சத்ராதிகளா? சிறு களங்கமும் இல்லாது தூய ஆன்மாவாய் வளர்ந்த பாண்டியை உடைமரத்தில் சங்கிலி கொண்டு கட்டிவைக்கச் செய்த காதல் சம்மனசுகளின் ஆசியா அல்லது சத்ராதிகளின் சாபமா?

காதலை விதைக்கும் கன்னியர்கள் தூய்மையின் திருவுருவாகி தெய்வமென நிற்கும்போது கண்ணீர் மல்கி நெஞ்சுருகத் தொழும் காதலர்கள் அஞ்சி கைகட்டித் தொழுது நிற்கவேண்டும் அல்லது பித்துற்று அலைந்து தன்னிலையிழந்து அரையாடையுடன் மழையிலும் வெயிலிலும் உடைமரத்தடியில் ஒடுங்கிக் கிடக்கவேண்டும்.

இவற்றுக்கு நடுவில் இடம்பெற்றுள்ள கடல் கன்னியும் கிழவனும் சந்திக்கும் கதை, கடலில் பூக்கும் கருந்தாமரைகள், ஊஞ்சலாடும் மான் போன்ற பல்வேறு கதைகள் பைபிள் கதைகளின் தன்மையைக் கொண்டுள்ளன. கற்பனையின் உச்சபட்ச சாத்தியத்தையும் தர்க்கத்தை மீறி கவிதைத் தொடமுனையும் தருணத்தையும் கொண்டிருக்கும் இக்கதைகள் நாவலின் மையத்தை இன்னும் நுட்பமாக ஆழத்துக்கு இட்டுச்செல்கின்றன.

0

தேரித்துறை திருவிழாவின் தேரோட்ட நாளன்று இரவில் தனிமையில் பாண்டியும் சாராவும் சந்திக்கும் காட்சி தமிழ் நாவல்களில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிளில் ஆகச் சிறந்தது. இருவரும் தனிமையில் சந்திக்கும் ஒரே சந்தர்ப்பம். ஆர்வமும் அச்சமும் உரிமையும் கூடிய உணர்ச்சித் ததும்பல்கள் நிறைந்த சூழலும் அதற்கேற்ற உரையாடல்களுமாய் அமைந்துள்ளது இக்காட்சி. வெகு இயல்பாய் தொடங்கி மெல்ல மெல்ல அடுத்தடுத்த கட்டத்துக்கு துடிப்புடன் நகரும் பாங்கும் இவ்வாறான தனிமையில் பொதுவில் ஆண்கள் கொள்ளும் அச்சத்தையும் பெண்களிடத்தில் கிளைக்கும் துணிச்சலையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் அபூர்வமானவை.

தேரோடும் இரவு. யாருமற்ற தனிமை. எந்த நேரத்திலும் யாரும் வரக்கூடும் என்ற அச்சம். அண்மை கிளர்த்தும் ஆர்வம். சீண்டல்கள், சிணுங்கல்களால் கனியும் வெம்மை. ‘கனவு நிஜமாகும்போது கிலிகொள்ளும் காதலை‘ காட்சிப்படுத்தியிருக்கும் அற்புதமான தருணம்.

அவளேதான் அடுத்தடுத்த நிலைக்கு முதலடி வைக்கிறாள். நாடியைக் கையில் ஏந்தி கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டுப் போகிறாள். அவன் எழுதிய கவிதைகளையே அவனுக்குப் பதிலாக்குகிறாள். விடைபெறும் கணத்தில் அவன் தாளமாட்டாமல் நிலைதடுமாறுகிறான். சாமம் முடிவற்று நீண்டு கொண்டேயிருக்க காதலின் பிடி மெல்ல மெல்ல இறுக்குகிறது இருவரையும். அவன் காதலைச் சொல்லும்போது அவள் மௌனமாயிருக்கிறாள். ‘மன்னிக்க’வென அழைத்து வந்தவள் அடுத்தடுத்து  அவனை சிலுவை சுமக்கச் செய்கிறாள். பரிசாகக் கிடைப்பது ஷெல்லியின் கவிதைத் தொகுப்பு.

திருவிழா முடியும்போது அவன் காண்பது வேறொரு சாராவை. அவள் யாரென்று அறியும்போதுதான் மூளைக்குள் இறங்குகிறது முதல் ஆணி.

நாவலின் அமைப்பில் இக்காட்சி ‘மழை’ என்ற தலைப்புடன் கடைசியாக இடம்பெற்றுள்ளது. நிகழ்வுகளின் வரிசைக்கேற்ப இதை அடுக்கியிருந்தால் இப்படியொரு அனுபவத்தை இது சாத்தியப்படுத்தியிருக்காது. ஒரு கவிதையில் ஒரு சொல்லை கடைசியாக மாற்றி வைக்கும்போது கிடைக்கும் அழுத்தமும் எழுச்சியும் இந்த இட மாற்றத்தில் கனிந்திருப்பது நாவலின் தீராச்சுவைக்கு ஒரு முக்கிய காரணம்.

தமிழ் நாவல்களிலேயே தனித்துவமான, ஒப்புமையற்ற மொழியழகைக் கொண்டது கன்னி. இப்படியொரு மொழி உச்சத்துடன் இன்னொரு நாவல் அமைவது அசாத்தியம். கிருபாவின் கவிதை மொழி தன்னிச்சையானது. அபூர்வமான சொல்லிணைவுகளைக் கொண்டது. மொழியும் உன்மத்தமும் முயங்கும் பொழுதில் கிளைக்கும் விநோத நிறங்களையும் நடனங்களையும் சொற்களில் இசைக்கவல்லது. வாதையைச் சொல்லும்போது இதயத்தை நொறுக்கும் அது காதலைச் சொல்லும்போது களிப்பேற்றி கண்மூடி தலையாட்ட வைக்கிறது. இந்த நாவலிலும் கிருபா அதே கவிதை மொழியைத்தான் கையாள்கிறார். அதில் இன்னும் சில மேன்மைகளை குழைத்து மெருகேற்றியிருக்கிறார். அரிச்சுவடிக்கு முன்பே அவருக்குள் வந்துவிட்டது பைபளின் மொழி. அதன் கதையாடல்களும் மொழியமைப்பும் கற்பனை நுட்பமும் இயல்பாகவே அவருக்கான மொழியின் ஒரு பகுதியாக அமைந்துவிட்டன. நாவலின் பல்வேறு இடங்களில் விரியும் கனவுகளும் மாயா உலகங்களும் புலன்களின் எல்லைகளையும் அறிவின் வரைகளையும் கடந்துத் தாவும் சித்தரிப்புகளையும் அது சாத்தியமாக்கியுள்ளது. கிருபாவின் பள்ளிக் கல்வி ஏழாம் வகுப்பு மட்டுமே. எனவே, ஏட்டுக் கல்வியின் வழியாக அவர் அடைந்திருக்கும் அறிவு எல்லைகள் கொண்டது. அதன் சுமைகள் அவரது மொழியில் ஏறவில்லை. ஆனால், தெளிவான தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கிய வாசிப்பு கிருபாவின் எழுத்து மொழியை செழுமையடையச் செய்திருக்கிறது. வியப்பைத் தரும் அத்தகைய அடையாளங்களை இந்த நாவல் நெடுகக் கண்டுணர முடியும். திருக்குறளும். சிலம்பும், பரணியும், நற்றிணையும், குறுந்தொகையும் பொருத்தமான இடங்களில் ஒன்றிணைந்து இந்த நாவலின் உரைநடைக்கு எழிலூட்டியுள்ளன.  

0

‘கன்னி’ இன்றளவும் வாசிப்பின் அனைத்து சாத்தியங்களையும் சவால்களையும் விரித்துக்கொண்டே செல்லும் ஒரு புனைவு. இதன் வரிகள் பலவும் கவிதைகளே. இன்னும் சில கவிதைக்கு அணுக்கமாக நின்றொளிர்பவை. பெண்களைக் குறித்து வர்ணிக்கும் பல வரிகளில் உன்மத்தமும் பேரழகை ஆராதிக்கும் பக்தியும் குதூகலத்துடன் இணைந்து ஒலிக்கின்றன. இந்த உரைநடையை பகுத்துப் பார்த்து இதன் நுட்பத்தைக் கண்டுணர முயல்வது சவாலானது. கற்பனைக்கு மொழி எங்கே வளைந்து கொடுக்கிறது, மொழியை கற்பனை எந்த இடத்தில் தனக்கேற்ப திரித்துக் கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும் எளிதல்ல. அதேபோல இதில் உள்ள பல்வேறு உபகதைகளையும் அவற்றின் உட்பொருளையும் தெளிந்துணர்வதும் சாதாரண காரியமல்ல. திரும்பத் திரும்ப வாசித்து தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கும் பொறுமையும் பக்குவமுமே உதவக்கூடும்.

0

நாவல் எனும் வடிவில் ‘கன்னி’ பல தனித் தன்மைகளைக் கொண்டது. இதுவொரு மீபுனைவு (meta fiction). பலகுரல் தன்மை (polyphony) கொண்டது. நாட்டார் கதை மரபின் சரட்டையும் பைபளின் உபகதைத் தன்மையையும் கையாண்டிருப்பது. மாய யதார்த்தத்தின் (magical realism) குணங்களைக் கொண்டிருப்பது. கன்னிமை குறித்து மானுட வாழ்வை நோக்கிய ஒரு தீவிரமான கேள்வியை எழுப்பும் விதத்தில் இந்த நாவல் செவ்வியல் (classic) அடையாளத்தைக் கொண்டது. பெண்களை இறைவனின் திருப்பணிக்கு ‘கன்னியாஸ்த்ரீ’களாக ஒப்படைக்கும் வழக்கத்தின் மீதான கூர்மையான விமர்சனத்தை இந்த நாவல் எழுப்பியுள்ளது. புனித சேவியர் எந்தவொரு சிறு குகையிலிருந்து கிறித்துவ மதத்தைப் பரப்பத் தொடங்கினாரோ அதே குகையில் நிற்கும்போதுதான் பாண்டி அந்தக் கேள்வியை எழுப்புகிறான். அவள் பதில் சொல்லாமல் அழுகிறாள். சாராவுக்குள்ளும் இந்தக் கேள்வி இருந்திருக்கும்.

உலக இலக்கியத்தில் காதலின் உன்னதத்தை மேன்மையைச் சொன்ன ஜெர்மன் நாவல் கதேயின் ‘The sorrows of young Werther’. அந்த நாவலை ‘காதலின் துயரம்’ என்ற பெயரில் நான் மொழிபெயர்த்திருந்தேன். 1774ம் ஆண்டில் கதேயின் நாவல் வெளியானபோது உலக அளவில் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காதல் தோல்விக்காக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முனைந்தனர். கதேயின் மொழியும் மிக நுட்பமானது, கவிதையை நெருங்கி ஒலிப்பது. மொழிபெயர்ப்பில் பெரும் சவாலைத் தந்தது. கிருபாவின் ‘கன்னி’ இளம் வெர்தரின் துயரை ஒத்தது. தன்னிலை இழந்து பித்துற்று அலையும் வெர்தரும் மனம் பிறழ்ந்து இரும்புச் சங்கிலியில் கட்டுண்டு மழையிலும் வெயிலிலும் சிதைந்து கிடக்கும் பாண்டியும் ஒரே நோய்மையின் இரண்டு பலிகள். காதலியான லோதே தொட்டுத் தந்த துப்பாக்கியால் வெர்தர் தன்னை மாய்த்துக்கொள்ளும்போது பாண்டியோ நினைவுகளின் சிலுவையைச் சுமந்தபடி நிறைவேறாத காதலின் சாட்சியாக எஞ்சி நிற்கிறான். உலக இலக்கியத்தில் புகழ்பெற்ற பிற காதல் காவியங்களை வாசித்த அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அவற்றில் பலவற்றையும் விட ‘கன்னி’ பல படிகள் மேலே நிற்கிறது என்பதைத் தயக்கமின்றி சொல்ல முடியும்.

0

‘கன்னி’ நாவல் தமிழின் செவ்வியல் நாவல்களில் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் இதன் பக்கங்களிலிருந்து துலங்கும் மர்மங்கள் நாவலை புதுமையாக்குகின்றன. காலம் கடந்தவொன்றாக மாற்றுகின்றன. அழியாத காலத்தில் ஒரு தேவமலரென அதன் பெயரை நிலைக்கச் செய்கின்றன, கூடவே ஜெ.பிரான்சிஸ் கிருபா எனும் மகா கலைஞனின் பெயரையும்.

0

 (தமிழினி - செப்டம்பர் 2021 )

 

 

 

 

 

 

 

 

 

‘உலையில் போட்ட சிலுவை’ ஜெ.பிரான்சிஸ் கிருபா (1974-2021)




….

எனினும் அவன் இறந்துவிட்டான்

அவன் பாவங்கள் அநாதையாகிவிட்டன

0

‘மெசியாவின் காயங்கள்’ தொகுப்பை வெளியிட்டுப் பேசவேண்டும் என்ற கோரிக்கையுடன் அத்தொகுப்பின் திருத்தப்படாத பிரதி வந்து சேர்ந்தபோதுதான் ஜெ.பிரான்சிஸ் கிருபா என்ற பெயர் எனக்கு அறிமுகமாகிறது. கவிதைகளை வாசிப்பதற்கு முன்பே இனந்தெரியாத ஒரு பதற்றத்தை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது தொகுப்பின் தலைப்பு. அவரது கவிதைகள் ஏற்படுத்தும் பதற்றத்துக்கும் கிருபாவுக்கும் பாரதூரமான வித்தியாசம். ஆனாலும் அவரது கவிதைகளும் ‘கன்னி’ நாவலும் ஏற்படுத்திய பதற்றத்தை இப்போதும் உணரமுடிகிறது.

அத்தொகுப்பில் இருக்கும் நான்கு வரிக் கவிதை ஒன்று கிருபாவை எனக்கு அடையாளம் காட்டியது. இன்று அந்தக் கவிதைதான் அவரை அடையாளப்படுத்தும் கவிதையாகவும் அமைந்திருக்கிறது.

சிலிர்க்கச்  சிலிர்க்க அலைகளை மறித்து

முத்தம் தரும்போதெல்லாம்

துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து

அப்பறவைக்குத் தருகிறது

இக்கடல்

 

நவீன தமிழ்க் கவிதையின் வழக்கமான போக்கிலிருந்து மாறுபட்ட ஒரு பாணியிலானவை அவரது கவிதைகள். வயிற்றில் இறங்கும் கத்தியை தலை தூக்கி எட்டிப் பார்க்கும் ஆமையின் கண்களில் மெசியாவின் கண்களைக் காணும் முதல் கவிதையிலேயே இத்தன்மையை உணர முடிந்தது. அவமானம் மிகுந்த இரவில், வானத்தை பூமியில் வைத்து சூதாடக் கூடாது என்ற குரல் அசாதாரணமானது. ‘கட்டி முடித்த கண்ணாடித் தீவிற்கு விளக்கேற்றுகிறது விடிவெள்ளியின் முகம்’ என்பதுபோல எதிர்பாரா கணங்களில் வியப்பையும் விநோத அனுபவங்களையும் சாத்தியப்படுத்துவது.  

கிருபாவின் கவிதை மொழி தன்னிச்சையானது. தடையேதுமற்று பெருகி நிறைவது. ஒன்றையடுத்து ஒன்றாக சொற்கள் தாமாக வந்தமையும் வித்தைகொண்டது.

 

சொற்களிலிருந்து அர்த்தங்கள்

மௌனத்துக்குத் திரும்பும் வழி இது

 

என்ற வரிகளை மந்திரம்போல் ஒலிக்கச் செய்வது அவற்றில் உள்ள எளிமையும் அடர்த்தியுமே.

 

மிளகிலுள்ள மேடுபள்ளங்கள்

கடுகில் இல்லை.

கடுகிலுள்ள கள்ளச்சுவை

மிளகில் இல்லை.

குலையில் தொங்கும் திராட்சை

ஒரு கூட்டுக் கனவு.

அதிகாலையில் உதிரும் நாவற்பழங்கள்

இரவின் துளிகள்

 

என நகரச் சாலையோரத்தில் இரை தேடும் எலியின் கண்களை ஒப்புமைப்படுத்தும் இந்த வரிகளும் இதனுள் அமைந்த சொற்களும் சேர்ந்து சாத்தியப்படுத்தும் தனித்துவமான அனுபவத்துக்கான இன்னொரு காரணம் இதில் உள்ளார்ந்து ஒலிக்கும் சொற்களின் இசை. கிருபாவின் பல கவிதைகளிலும் இந்த இசையை அதன் துடிப்பை உணர முடியும்.

 

பாறையின் மீது தூவிய

தானிய மணிகள்

பட்சிகளாக முளைத்து

வளர்ந்து பறவைகளாகி

வானேகிப் போகும் கணத்தை

எப்போதேனும் காண சித்தித்தால்

அப்போது அங்கே

நீயின்றி நின்றிருப்பாய் நீ.

 

சொற்களும் அவற்றின் இசையும் சேர்ந்து ஒரு காட்சியை கவிதைக்குள் வரைந்து காட்டுகின்றன. கவிதையின் கடைசி சொல் ஒலித்து முடிந்ததும் அந்தக் காட்சி மட்டும் எதிரில் இருக்க சொற்கள் காணாமல் போய்விடும் அனுபவத்தை இக்கவிதையில் அடைய முடியும்.

 

கிருபாவின் கவிதைகளில் இடம்பெறும் சொற்கள் சாதாரணமான புழங்குசொற்கள்தான். அநேகமாய் பிற அனைவரது கவிதைகளிலும் இடம்பெறுபவைதான். ஆனால் கிருபா அவற்றைக் கவிதையில் இருத்தும்விதத்தில் அச்சொற்கள் துலக்கம் பெற்று ஒளிர்கின்றன.

நெற்கதிர்களில் பால் குடிக்க

இறங்கி வந்தன தேன்சிட்டுகள்

அப்போதுதான் கொக்குகள்

நரைக்கத் தொடங்கின

மழை தன்னைத்

துளித்துளியாகப் பங்கு பிரித்தது

வில் வானத்தின் வரலாற்றை

வண்ணங்களில் சுருக்கியெழுதியது.

 

கிருபா சொற்களை தேவையில்லாமல் விரயமாக்குவதில்லை. ஆகப் பெரும் தரிசனத்தையும் சுருக்கமும் செறிவுமான சொற்களைக் கொண்டு தெளிவாக சொல்லிவிட முடியும்.

ஆமென்

பசியை சமைத்தபடி

பன்னெடுங் காலமாய்

பட்டினி கிடப்பவன்

வீட்டுக்கு

விருந்துக்கு செல்லாதோர்

பேறு பெற்றோர்.

 

கடலும் மழையும் ரயிலும் தண்டவாளங்களும் வானமும் பூமியும் சிலுவையும் மரமும் மெழுகுவர்த்தியும் அவரது கவிதைகளுக்குள் தொடர்ந்து வெவ்வேறு அர்த்தங்களுடன் இடம் பெறுகின்றன. பொதுவாகவே கவிதைகளுக்குள் அதிகமும் பயின்றுவரும் இச்சொற்களை குறியீடுகளாகவோ படிமங்களாகவோ உள்ளிடும்போது தேய்வழக்காகிவிடும் சாத்தியங்கள் உண்டு. கிருபாவின் கவிதைகளில் ‘கூர் செதுக்கிய மேகங்களைச் சீவி அம்பாக நாணேற்றிய வில் பூட்டி பல்லாயிரம் கரங்களில் கடவுள் மழையால் பூமியை ஆசிர்வதிக்கிறார்’ என்றும் ‘வானத்தில் வலியோடு முறியும் மின்னல்’ என்றும் ‘கைதேர்ந்த மீனவனின் தந்திர வலைகளுக்குள் சிக்கி வெளியேறும் விதியற்று கடலின் பெரும் கவலைகளை’ என்றும் அவை அவரது கவிதை உலகத்துக்கான தனித்த ஒரு அர்த்தத்தை ஏற்று அமைகின்றன. ‘நீரில் நித்திரை கலைந்த மீன் குஞ்சு விளிம்பில் கடித்திழுத்து கிணற்றுக்கு வெளியே எறிகிறது அதே நிலவை’, ‘மெழுகுவர்த்தியின் உச்சியிலேறி வெளிச்சத்தை திரியில் கட்டும் சுடர் பதறி இடறும்போதெல்லாம் தடுமாறித் தரையில் விழுமோ’, ‘சுவாசக் காற்றின் இரக்கமற்ற புறக்கணிப்பில் பறக்கும் கானல் தோணிகள்’ போன்ற வரிகளில் அமையும் தன்னிச்சையான சொல்லிணைவுகள் அச் சொற்களுக்கு கூடுதலான வனப்பை சாத்தியமாக்குகின்றன.

 

கவிஞர் என்றால் காதலைப் பாடாமல் அல்லது காதலின் துயரைச் சொல்லாமல் இருக்க முடியாது என்ற விதிக்கு கிருபாவின் கவிதைகளும் உட்பட்டவையே.

 

காதலியைப் பற்றிய அவரது கற்பனை ‘நிறுத்தி வைத்த வீணையை விடச்

சற்றே உயரமாக இருப்பாளா?’ என்று கேட்டுவிட்டு ‘வாழ்க்கைக்கும் கனவுக்குமான இடைவெளியில் பாதைகளுக்கு மணல்சடை பின்னி நடப்பாளா?’ என்றும் யோசிக்கிறது.

 

தெரிந்தோ தெரியாமலோ

உன் காலடி மண்ணெடுத்து

ஒரு பூமி செய்துவிட்டேன்

உன் ஈரக்கூந்தலை

கடலாகச் செய்யும் முன்னே

கடந்து போய்விட்டாய்

உயரத்திலிருந்து சூரியனாய்

வருத்துகிறது ஒற்றைப் பார்வை

வெப்பத்தில் வறள்கிறது

எனது சின்னஞ்சிறிய பூமி

நீருற்ற தேடிக் கிணறுகள் தோண்டினால்

பீறிட்டடிக்கிறது ரத்தம்.

கண்ணே

இரண்டொரு தீர்த்தமணிகளைத்

தானமிடு

 

என்று மன்றாடுவதில் தொடங்குகிறது அந்தக் காதல்.

 

முத்தமிட்டு என்னை

சாம்பலாக்கித் தந்துவிட்டு

கவலைப்படும் பூக்களாக

உன் கண்களை மாற்றிக்கொள்ளும்போது

இலக்கின்றி நடக்கத் தொடங்குகிறேன்

கொலைவாள் நீட்டி

மன்னித்துக் காட்டிய வழியில்

 

என்று புறக்கணிப்பை ஒப்புக்கொண்டு சரணடைகிறது. இறுதியில் அந்தக் காதல் அப்படியே இருக்கிறது. 

 

மின்னல் கடவுள் போல் மின்னுகிறது

இடி சாத்தானைப் போல் துள்ளுகிறது

இரவு உன்னைப் போல் கவிகிறது

மழை என்னைப் போல் பெய்கிறது

குளிர் நினைவு போல் அலைகிறது

தூக்கம் மரணம் போல் தழுவுகிறது

காதல் மட்டும் அப்படியே இருக்கிறது

 


குழந்தைகளின் உலகம் அவரது கவிதைகளில் அவர்களுக்கேயுரிய குதூகலத்துடன் விரிகிறது. ‘நடை நடையாய் நடந்து குடம் குடமாய் நீர் சேந்தி கடல் சமைக்கும்’ சிறுமி பந்து விளையாடும் போது ‘ஒரு மாயக் கணத்தில் பூமியே ஒரு பந்தாகி’ அவள் கைகளில் துள்ளுகிறது.

 

கெட்டிக்காரக் குழந்தைகளைப் பாராட்ட

புன்னகை வயலில் பூவொன்று பறித்துக்கொண்டு

சந்தோஷ வரப்புகளில் ஓடோடி வருவாள்

ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி

திங்கட்கிழமையைத் தள்ளிக்கொண்டு போவாள் பள்ளிக்கு.

 

‘புனல் வற்றி நதி மெலிந்து எழும் கூழாங்கல் மாளிகை’யின் நடை வாசலில் தூக்கக் கலக்கத்துடன் கால் நீட்டி அமர்ந்திருக்கும் மழலைச் சிறுவனின் மனமே கிருபாவின் நிலைத்த புன்னகைக்குக் காரணமாக இருக்க முடியும்.

 

அனுபவ எல்லைக்கு அப்பாற்பட்ட உண்மைகளை தொட்டுக்காட்ட வல்ல அல்லது நிழல்போலேனும் காட்டும் சாத்தியங்களைக் கொண்ட கவிதைகளே காலந்தாண்டி நிலைக்கும் பேறுகொண்டவை. மகாகவியால் தன் கவிதைகளின் வழியே அத்தகையை நிலையை எட்ட முடிகிறது. எண்ணற்ற சொற்பெருக்குகளுக்கு நடுவே அவ்வாறான கவிதைகள் மட்டுமே அவனது சுவடுகளாக நிலைத்திருக்கும். கிருபாவின் வரிகள், கவிதைகள் பல அவ்வாறான தருணங்களைக் கொண்டிருப்பவை.

 

பெண்ணைக் கண்டு

பேரிரைச்சலிடுகிறாயே மனமே,

பெண் யார்?

பெற்றுக் கொண்டால் மகள்

பெறாத வரையில்

பிரகாசமான இருள்

வேறொன்றுமில்லை

 

0

 

அலகில் காலம்

காலில் பூமி

வாலில் வானம்

தோளில் சிறகு

நாவில் இசை

கண்ணில் ஒளி

சின்னஞ்சிறு கிளையில்

மின்னல் தனிமையில்

பறவைபோல் ஒருவன்

ஏறக்குறைய இறைவன்

 0

 

மோட்ச விளக்கொளியில் கல்லறைக்குள்

அவன் இருதயத்தை மண் தின்னும்போது

மேலே காவல் நிற்கும் சிலுவைக்காக

பச்சை மரத்தையோ பளிங்குக் கல்லையோ

வானவில்லையோ துன்புறுத்த வேண்டாம்

கல் களைந்த அரிசியைக் கொட்டும்முன்

ஈரக்கைகளால் மறக்காமல் அவன்

அம்மா உலையில் போட்ட சிலுவைகளில்

ஒன்றை அங்கே நிறுத்துங்கள்.

0

‘யாரையும் காயப்படுத்தக்கூடாதென்று, தன் வலிகளை வானில் எறிந்த’ கவிஞன் கிருபா. ‘விழிகளற்ற ஒருவர் செவி ஓர்மையில் ஒளியை நோக்கிக் கனவில் நடந்து செல்கிறார், தன் கைக்குச்சியால் தரையில் வழிக் குறிப்புகளை எழுதிச் செல்கிறார்’ என்று விவரித்திருப்பது தனது பாதையைத்தான்.

இருட்டில் வெடிக்கும் உன்

கைத்துப்பாக்கியிலிருந்து வெளிப்படும்

ஒரு சிட்டிகை வெளிச்சத்தில்

என் மொத்த கவிதைகளையும்

படித்து முடித்துவிடலாம்

நீ

அதுவரையில்

உயிரை கையில் பிடித்துக்கொண்டு

செத்துத் தொலையாமல் இருக்கவேண்டும்

நான்

என்ற கவிதை அவர் இல்லாது போன இக்கணத்தில் மிகவும் தொந்தரவு செய்கிறது. 

0

 (காலச்சுவடு)

 

 

 

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...