Sunday, 2 January 2022

கன்னி – காலத்தில் நிலைத்த தேவ மலர்.


 

‘மெசியாவின் காயங்கள்’ என்ற உக்கிரமான தலைப்புடன் ஜெ.பிரான்சிஸ் கிருபா தமிழ் கவிதையுலகுக்கு அறிமுகமானது தமிழ் புனைவுலகின் ஒரு நற்பேறு. அதுவரையிலான தமிழ்க் கவிதையின் மொழியிலிருந்தும் கூறுகளிலிருந்தும் கிருபாவின் கவிதைகள் முற்றிலும் தனித்துவமாக அமைந்திருந்தன. கவித்துவத்தின் உச்ச கணங்களை மிக அநாயசமாக எளிய சொற்களின் வழியே அவை சாதித்திருந்தன. வேதாகமத்தின் மொழி அழகை கவிதைக்குள் பொருத்தியிருந்த நேர்த்தி திரும்பிப் பார்க்கச் செய்தது.

‘வலியோடு முறியும் மின்னல்’, ‘நிழலன்றி ஏதுமற்றவன்’ என அடுத்தடுத்து வெளியான அவரது கவிதைத் தொகுப்புகளும் அவற்றில் இடம் பெற்றிருந்த கவிதைகளும் தமிழ் கவிதையுலகில் கிருபாவுக்கென ஈடற்ற ஒரு தனித்த இடத்தை உறுதி செய்தன.

நவீன தமிழ் நாவல்களின் ஒரு பெரும் திசைமாற்றம் 2000த்தில் நிகழ்ந்தது. நாவலைப் பற்றிய புரிதலும் அதன் வடிவ சாத்தியங்களைக் குறித்த தெளிவும் கொண்ட புதிய புதினங்கள் எழுதப்பட்டன. அந்த வரிசையில் 2006ம் ஆண்டு வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்த நாவல் ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’.

‘கன்னி’ தமிழின் முதல் நவீன காதல் நாவல். ‘தீக்குள் விரலை வைத்த காதல் இன்பம் இப்புதினம்’ எனும் அதன் பின்னட்டைக் குறிப்பு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

‘காதல் நாவல்’ என்றவுடனே சிறியதொரு இளக்காரம் மனத்துள் மின்னலிட்டு மறைவுது இயல்பு. தமிழில் அதுவரையிலான காதல் கதைகளும் புதினங்களும் தந்திருந்த அனுபவம். காதலைப் பற்றி இனி எழுத என்ன இருக்கிறது? சங்கமும் நவீன கவிதைகளும் திகட்டத் திகட்டச் சொல்லியாகிவிட்டது என்ற அலட்சியம். போதாக்குறைக்கு சினிமா முடிந்தவரை அதை வெவ்வேறு கோணங்களில் விதவிதமாக அலசி ஆராய்ந்த அலுப்பு.

இத்தனை இருப்பினும் ‘காதல்’ என்ற சொல் ஏற்படுத்தும் ஈர்ப்பின் விசை என்றும் குறையாத ஒன்று. அதுவே இந்த நாவலுக்கான திறப்பாகவும் அமைந்தது.

ஆனால், இந்த நாவலை வாசிக்கத் தொடங்கியபோது அதுவரையிலான அத்தனை முன் முடிவுகளையும் அது நொறுக்கியது. தொடக்கத்தில் இது காதல் நாவல்தானா என்ற கேள்வி பதற்றத்துடன் எழுந்தது. நாவலின் ஆரம்பத்திலிருந்த சில அத்தியாயங்களில் விரிந்த ஒரு உலகம் தந்த நடுக்கத்தை இன்றும் நினைவுகூற முடிகிறது.  

‘கால்களைப் பிணைத்துக் கட்டிப்போட்டிருக்கும் பன்றியைப்போல உடை மரத்தடியில் சுருண்டு ஒருக்களித்துப் படுத்திருந்தான் பாண்டி’ என்ற வரிகளும் அதன் பிறகு விரிந்த காட்சி தந்த அதிர்ச்சியிலிருந்து மீள நேரம் பிடித்தது. அதற்கடுத்த சில பக்கங்களில் பிரமாதமான ஒரு தேவதைக் கதை. கடல் கன்னியும் கிழவனும் உலவுகிறார்கள். மீன்கள் துள்ளி மறிகின்றன. ‘கடல் கன்னி முத்தமிட்டதும் கடலின் இரண்டு அலைகள் திராட்சை ரசமாக மாறின’ என்ற வரிகளைப் படித்ததும் நாவலை மூடிவைக்க வேண்டியிருந்தது. என்ன நடக்கிறது என்ற வியப்புடன் மீண்டும் அந்தப் பகுதியைப் படித்தேன்.

மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு வரியாக ஒவ்வொரு சொல்லாகப் படிக்கும் முனைப்பைக் கோரியது நாவல். நாவலின் அடுக்குகளைப் புரிந்துகொள்ள நேரம் பிடித்தது. படித்து முடித்த பின்னும் மறுபடி அந்தக் கேள்வி இன்னும் தீவிரத்துடன் ஒலித்தது ‘இது காதல் கதை தானா?’

நாவலை வாசித்து முடித்த பின்பு அது தந்த வியப்பு வெகுநாட்கள் விலகவேயில்லை. ஒரு நாவலை முழுக்க முழுக்க கவிதைகளைக் கொண்டே எழுதுவது சாத்தியமா? சிறிதும் திகட்டாமல், வலிந்து திணிக்கப்பட்ட உணர்வைத் தராமல், நாவலின் பகுதியாக, கதாபாத்திரங்களின் குரல்களாக அவற்றை ஒலிக்கச் செய்திருக்கும் மாயத்தைக் குறித்து யோசித்தபடியே இருந்தேன். இது காதல் கதைதான், ஆனால் வெறும் காதல் மட்டுமே கொண்ட கதையல்ல. காதலுக்கும் அப்பால் பெண்ணின்மேல் ஏற்படும் தூய சரணடைதலை மிக நுட்பமாகவும் செறிவாகவும் சித்தரித்திருக்கும் நிகரற்ற புனைவு என்பதை உணர்ந்தேன். பக்கங்களெங்கும் அடிக்கோடுகள். ஓரங்களில் ஒன்றிரண்டு சொற்களில் ஏராளமான குறிப்புகள். இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்தபோது ஏற்பட்ட ஜூரம் தணிய வெகுநேரமானது. ‘கன்னி’ தமிழ்ப் புனைகதையில் கனிந்த அபூர்வமான நிகழ்வு என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தேன். இப்போதும் அதை இன்னும் உரக்கச் சொல்ல முடியும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

0

இந்த நாவலைப் புரிந்துகொள்வதில் பெரும் சவாலாக அமைந்திருப்பது இதன் வடிவமைப்பு.

இதுவொரு மகத்தான காதலைச் சொல்லும் ஒரு நாவல். ஆனால் இது தொடங்குவது ஏலான ஆசாரியின் அகால மரணத்தில். கதை நாயகன் அறிமுகமாகும்போதே தன்னிலை இழந்து பித்தனாகிக் கட்டி வைக்கப்பட்டிருக்கிறான். மனிதன் இருக்கக்கூடாத ஆகக் கீழ்மையான நிலையில் இருப்பவனின் விடுதலைக்கான வழிகள் ஆராயப்படுகின்றன. தாயத்துகள் கட்டப்படுகின்றன. சரியாகும் வழியில்லையென்றால் ‘சோத்துல விஷம் வெக்க வேண்டிதுதான்’ என்று பெற்றவள் வெறித்த பார்வையுடன் சொல்கிறாள்.

நாவலின் ஆரம்பப் பக்கங்கள் கொண்டிருக்கும் இந்தப் பதற்றமும் தீவிரமுமே பிற காதல் நாவல்களிலிருந்து ‘கன்னி’யை வேறுபடுத்தும் முதல் காரணி.

பதற்றத்தைத் தணிக்கும் விதத்தில் ‘சுனை’ பகுதியில் அமலா சிறுமியாக இருந்த காலம் முதல் அவள் கன்னியாஸ்திரீ ஆவதற்காக கன்னியாகுமரி செல்லும் வரையிலான பருவம் களங்கமற்ற நாட்களின் ஒளியுடனும் குறும்புகளுடனும் சிறுவர்களுக்கேயுரிய துள்ளல்களுடனும் சித்தரிக்கப்படும்போது மனம் சற்றே ஆசுவாசம் கொள்கிறது.

‘அருவி’ பகுதியில் உள்ளுக்குள் ஊற்றெடுத்த வியப்பும் போற்றுதலும் பெருகி நிறையும் தருணங்கள், சொற்கள் மௌனத்துக்குத் திரும்பும் கவிதைகள், வெவ்வேறு பெண்களின் வழியாக ஏற்படும் இளமையின் தடுமாற்றங்கள், கன்னியாகுமரியிலும் நெல்லையிலும் கிருஷ்ணாபுரத்திலும் திருச்செந்தூரிலும் மணப்பாடிலும் இருவருக்கு நடுவிலும் வளரும் புரிதல், தெளிவுற்று நெருங்கி பின் இரக்கமின்றி தரப்படும் பிரிவை ஒப்புக்கொண்டு புனிதச் சிலுவையை ஏற்று பம்பாய்க்கு செல்லும் முடிவு என  அபாரமான காவியத்தின் அதி அழகான பக்கங்கள் விரிந்து விரைகின்றன.

‘காட்டாறு’ அடித்து வரும்போது முற்றிலும் திசையிழக்க நேர்கிறது. பாண்டியின் மனபோக்குகளும் எல்லையற்றுச் சுழலும் உன்மத்தத்தின் உச்சங்களும் பயங்கொள்ள செய்கின்றன. நிலைதடுமாறும் வரிகள் பல அடுத்தடுத்து நெருக்கியடித்து மூச்சுத் திணறச் செய்கின்றன. ‘சாரா’வைத் தேடும் ‘சாரோ’னாகி அவன் ஓடுகிறான். எங்கிருந்து வந்தாள் இந்த சாரா? என்ற குழப்பமும் அலைக்கழிப்புமாக அதுவரையிலிருந்த ஒளியை சாந்தத்தை முற்றிலுமாக சிதைத்து மீண்டும் பெரும் பதற்றத்தை விதைக்கிறது.

பிற்சேர்க்கையாக ஷெல்லியின் நீண்ட கவிதை. சொற்களும் இசையுமாய் துள்ளிச் செல்லும் ஓடையென மொழி தவழும் அற்புதமான மொழியாக்கம்.

‘கார்முகில்’ புதிய கதையைச் சொல்கிறது. தேரித்துறை திருவிழாவில் தன் அத்தைக் கன்னியின் உருவிலுள்ள சாராவைக் காண்பதும் காதல் கொள்வதும் ஊடலும் தேடலுமாக விரியும் அபாரமான தருணங்களைக் கொண்டது. எதிர்பாரா சந்திப்பையும் அதன் பிறகான அதிர்ச்சியான தகவலுடனான பிரிவுடன் சற்றும் இரக்கமின்றி முடிகிறது.

இறுதியாக மழை’. தேர் பவனி நாளிரவில் கனிந்து கைகூடி கொஞ்சி நீளும் காதல் தருணங்களைக் கொண்டது. திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்வான இதனை நாவலின் கடைசிப் பகுதியாக வைத்திருக்கும் நுட்பமே இப் பகுதியையும் நாவலையும் புனைவின் அபாரமான உச்சத்துக்கு காரணமாகிறது.

நாவலை படித்து முடித்த பிறகு உண்மையில் நாவல் எங்கு தொடங்கி எப்போது முடிகிறது என்னும் மயக்கம் நீடிக்கிறது. மெல்ல மெல்ல அதன் பக்கங்களுக்குள் மறைந்திருக்கும் மர்மங்களை விலக்கிப் போகும்போது தெளிவு கிட்டுகிறது. இந்தப் புதிர்வழிகளில் அங்கங்கே திசைகாட்டிகளாக ஆசுவாசங்களாக அமைந்திருப்பவை தமிழின் ஆகச் சிறந்த கவிதை வரிகள்.  இவற்றுக்கு நடுவே பழந்தமிழ் கவிதைகளின் அபாரமான பல வரிகளும் இணைந்து நாவலின் புதிர்வழிகளை ஒளிரச் செய்திருக்கின்றன.

இந்த நாவலை கால வரிசைப்படி அடுக்கி ஒழுங்கமைத்து மீண்டும் வாசிக்க முடியும். அத்தியாய எண்களைக் கொண்டு அப்படி வாசிப்பது சாத்தியம்தான். ஆனால் அந்த வாசிப்பின்போது கிடைக்கும் அனுபவம் நாவலின் தற்போதைய வடிவில் கிடைக்கும் அனுபவத்துக்கு முற்றிலும் வேறானது.

இப்போது பாண்டி என்னவானான் என்ற கேள்வி நியாயமாக நாவலின் கடைசிப் பக்கத்தை வாசித்து முடிக்கும்போது எழவேண்டும். ஆனால், அந்தக் கேள்விக்கான பதில் முதல் சில பக்கங்களுக்குள்ளாகவே சொல்லப்பட்டிருப்பதை மறந்துவிட்டு அவனை அவ்வாறு பித்துறச் செய்த அற்புதமான அந்த இரவின் ‘மழை’யில் ஆனந்தமாக அவன் நனைந்திருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களின் வண்ண வேறுபாடுகளின் வழியாக பாண்டியின், அமலாவின் சிறுவர் பருவத்தைச் சுட்டியிருக்கும் நுட்பமும், கடலலைகளில் தன் கை வளையல்களை அமலா கழற்றிப் போடும்போது மாறும் வண்ணங்களின் வழியாக காலத்தின் ஓட்டத்தைச் சுட்டும் நேர்த்தியும் கிருபாவின் புனைவு உத்திக்கான உதாரணங்கள்.

0

இந்த நாவல் பெண்ணின் மீதான வியப்பை, போற்றுதலை, காதலைச் சொல்வது, அது தரும் உவகையை, மயக்கத்தை, வலியை சித்தரிப்பது என்று குறிப்பிடுவது நாவலுக்கும் அதன் பொருண்மைக்கும் நியாயம் செய்யாத ஒன்றாகும். இந்த நாவலில் அமைந்திருக்கும் போற்றுதலும் வலியும் அசாதாரணமானவையாக அமையக் காரணம் நாவல் அமைந்துள்ள பின்னணி.

நாவலின் களமாக அமைந்திருப்பவை கடலோரத்தில் அமைந்த கிறித்துவ கிராமங்கள், ஊர்கள். கதாபாத்திரங்கள் அனைவரும் தூய அன்னையிடம் அடைக்கலம் தேடும் கிறிஸ்துவர்கள். காதலை தேவகுமாரன் சுமக்கும் சிலுவையாக, அவன் தலையில் சூட்டியிருக்கும் முள் கிரீடமாக இந்த நாவல் சித்தரிக்கும்போது அதன் வலியும் வாதையும் அர்த்தகனம் கூடுகிறது. ‘தேவனுக்காக நேர்ந்துவிடப்பட்ட’ கன்னியாஸ்த்ரீயை நேசிக்கும் ‘கோயில் பிள்ளை’ எனும் சரடு முக்கியமானது.

அக்கா தம்பி என்ற உறவையும் மீறி இருவரின் மனத்திலும் கிளைக்கும் பேரன்பை, ஈர்ப்பை, பாராட்டுதல்களை ஒருவருக்கொருவர் மறைப்பதில்லை. சாத்தியம் இருக்கும் வரை அதைப் பேணி அது தரும் மன உணர்வுகளையும் அது நிரந்தரமல்ல எனும் வலிகளையும் அறிந்து கடைசியாக விலகும்போது ‘புனித சிலுவை’யையும் பறித்துக் கொண்டு விலகும்போது கடலும் மௌனமுமே அவனுக்குத் துணையாகி நிற்கின்றன. ‘அக்கா’ என்றாலும் அவன் ‘அமல’தாசன். அவள் மீதுள்ள பேரன்புக்கு எந்தக் களங்கமும் வரலாகாது என்றே அவன் சாத்தியமான பிற காதலிலிருந்தும் பெண்களிடமிருந்தும் விலகி ஓடுகிறான். பிரேமா ராணியும் ஜூலியும் அவனது இளமையைத் தீண்டி தடுமாறச் செய்யும்போதும், விஜிலா தன் காதலை வெளிப்படுத்தும்போதும் அவன் நிலைமாறுவதில்லை. அமலாவுக்கான இந்த நோன்பின் முடிவு என்னவென்று தெரிந்தும் அவன் மனம் அதிலிருந்து இம்மியும் விலகுவதில்லை. அவள் ‘வார்த்தைப்பாடு’க்கு போக இவன் ‘சிலுவைப்பாடு’ அடைகிறான்.

அமலாவின் மீது பாண்டி கொண்டிருப்பதை காதல் என்று வகைப்படுத்த முடியாது. தன்னைவிட ஒரு வயது மூத்த அக்கா. சிறுவனாக இருந்த காலந்தொட்டு அவளைப் பார்த்து, வியந்து, பரவசப்பட்டு வளர்பவன் அவன். அவளது நிழலாகவே இருந்து ஒவ்வொரு நாளும் அவளையே நினைத்து அவளுக்காகவே கவிதைகள் எழுதி அவள் சொல்லையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு வாழ்பவன். அவள் மீதான அன்பின் தூய்மையை களங்கமாக்கும் எந்தவொன்றையும் அனுமதிக்காதவன். அவளை ஆராதிப்பதைத் தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது.

ஆனால், சாராவின் மேல் அவன் கொண்டிருப்பது காதல். அவளது தோற்றம் அமலாவை நினைவுபடுத்துகிறது. அதுவே அவளைத் தொடரச் செய்கிறது. கவிதைகளை அர்ப்பணித்து காதலிக்கச் செய்கிறது.

ஒரு நாவலின் சிறப்பை மேலும் வலுவாக்குவது அதன் நிலம். அது வெறும் பெயரல்ல. அதன் வரலாறும் பண்பாடும் நாவலின் களத்துக்கும் அர்த்தத்துக்கும் கனம் சேர்க்கும் வகையில் அமையவேண்டும். வரலாறும் பண்பாடும் பின்னணியில் அமையாத களங்களைக் கொண்டு எழுதப்படும் நாவல்கள் உறுதியாக ஊன்றிக்கொள்ள நிலமின்றி தள்ளாடி விழுந்துவிடக் கூடியவை.

அலைகள் துள்ளியடிக்கும் ஆக்ரோஷமான ஆண்கடல் வலப்புறமும், அமைதியே உருவான பெண் கடல் இடப்புறமும் இருக்க நடுவில் அமைந்திருக்கும் சேவியர் குகை நாவலின் மையப் புள்ளி. ஆக்ரோஷத்தையும் அமைதியையும் ஒன்று கலக்கச் செய்து உப்புச் சுவை நீக்கிய சுனை நீரை ஊற்றெடுக்கச் செய்யும் அற்புதமான காதலின் வடிவம் அது.

தென்திசை பார்த்து வீற்றிருக்கும் கன்னியாகுமரியின் முடிவற்ற தவமே ‘வார்த்தைப்பாடு’ ஏற்கும் கன்னியாஸ்திரீகளின் வாழ்வும். கைவளையல்களைப்போல, கழுத்துச் சங்கிலிகளைப்போல தத்தம் ஆசைகள், விருப்பங்கள் என அனைத்தையும் அவர்கள் துறவுக் கடலுக்கு அர்ப்பணிக்கிறார்கள், கடைசியில் அவர்களே அதற்குள் இறங்கிவிடுகிறார்கள்.

நாவலில் இடம்பெறும் எந்தவொரு இடமும் நாவலை விட்டு விலகுவதில்லை. திருச்சீரலைவாயும் சிற்பங்கள் சிறந்த கிருஷ்ணாபுரமும், பம்பாயின் அஜந்தா குகையும்கூட மனப்போக்குகளைப் பிரதிபலிக்கும் இடங்களாகவே அமைந்துள்ளன. நாவலெங்கும் இடம் பெறும் கடல், பாண்டியின் மனமன்றி வேறல்ல. அவனது மனப்போக்குகளும் கொந்தளிப்புகளும் தடுமாற்றங்களுமே கடலாகி உருமாறி அமைந்துள்ளன. கதை மாந்தர்களின் இயல்புகளையே புறக்காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

அதையடுத்து, காதலும் அதன் வலியும் ஏற்படுத்தும் மன அலைவுகள் இந்நாவலின் வெவ்வேறு பக்கங்களில் எண்ணற்ற சித்திரங்களாய் பிதற்றல்களாய் கவிதைகளாய் விரவிக் கிடக்கின்றன. தர்க்க அறிவினை மீறி கற்பனையின் தீவிர முடிச்சுகளைத் தொட்டு நிற்கின்றன. கனிந்துருகி பித்துற்று காற்றில் அலைந்து பறக்கின்றன. துயரத்தில் உறைந்த வலிகளை மீட்டுகின்றன. தேவதைக் கதைகளாகி உரையாடுகின்றன. பல இடங்களில் திசை தடுமாற நேரிடுகின்றன. கதை தன் தொடர்ச்சியை விட்டுவிட்டு தன்னிச்சையாக கிளைபாவி மனத்தின் பல்வேறு அடுக்குகளில் தாவியும் திரிந்தும் போக்கு காட்டுகிறது. அடுக்கடுக்கான வலுவான படிமங்கள் ஒவ்வொரு வரியிலும் முளைத்தெழுகின்றன. ஒரு நாவலின் கதைமாந்தர்களின் மன உணர்வுகளை இத்தனை வலுவாகவும் எழுச்சியுடனும் சித்தரித்திருக்கும் இன்னொரு நாவல் இல்லை.

0

மனிதனின் இறைநம்பிக்கைகளுக்கு இணையாகவே ஆவிகளின் மேலும் தீய சக்திகளின் மீதுமான அச்சமும் குடிகொண்டுள்ளன. தேவனின் கிருபைகளுக்கு சமமாகவே சாத்தான்களின் சாபங்களும் மனிதர்களை அலைக்கழிக்கின்றன. சாத்தான்களின், ஆவிகளின் ஆட்டங்களிலிருந்து தப்பித்திருக்கும் பொருட்டே மனிதர்கள் தேவனின் திருச்சபையை அடைகின்றனர். அன்பும் வன்மமும் கருணையும் குரூரமும் சிறுமையும் பெருந்தன்மையும் ஒளியும் இருளும் நிழலுமாக மனித இயல்பின் திரிபுகள். காத்து கருப்புகளும் பேய் பிசாசுகளும் யட்சிகளும் தாயத்துகளும் பூசைகளும் பரிகாரங்களும் அவ்வியல்புகளின் வெளிப்பாடுகள்.

பாண்டிக்கு இரும்புச் சங்கிலியை செய்து அவனை மரத்தில் கட்டி வைக்கும் ஏலான ஆசாரியை சத்ராதிதான் வீழ்த்தியிருக்கும் என்று தொடங்குகிறது நாவல். மனிதனுக்குள் தன்னை மீறிய தீய சக்திகளின் மீதிருக்கும் அச்சமும் அவற்றிலிருந்து தப்பியிருக்கவேண்டும் என்ற தவிப்பும் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை.

சித்தியின் கொடுமை தாங்காமல் ஊரை விட்டு ஓடி சிலகாலம் கழித்து செல்வந்தனாகத் திரும்பி வந்து கோலாகலமாக மணம்முடிக்கும் சூசை மணியை பித்தனாக்கி ‘சீத்தா பாத்தா குத்துரு குத்துரு’ என்று பிதற்றியபடி அலையச் செய்கிறாள் நொண்டி இசக்கி. தலைமுடியை தாயத்தில் அடைத்து மனம் கவர்ந்த பெண்ணை வசியம் செய்து மணம் முடிக்கும் முனீர் சர்புதீன் மவுல்வி ‘பெண் தொடர்பு வகையில் சிக்கல்’ உண்டான பாண்டிக்கு தாயத்து செய்து தருகிறார்.

சம்மனசுகள் சத்ராதிகளாகத் திரியும் மாயத் தருணங்கள் சுவாரஸ்யமானவை. அதிகமும் அறியாது நிகழ்பவை. அமலாவையும் சாராவையும் தேவனுக்கு அர்ப்பணிக்கச் செய்யும் உறவுகளின் மனத்தை அசைத்தவை சம்மனசுகளா சத்ராதிகளா? சிறு களங்கமும் இல்லாது தூய ஆன்மாவாய் வளர்ந்த பாண்டியை உடைமரத்தில் சங்கிலி கொண்டு கட்டிவைக்கச் செய்த காதல் சம்மனசுகளின் ஆசியா அல்லது சத்ராதிகளின் சாபமா?

காதலை விதைக்கும் கன்னியர்கள் தூய்மையின் திருவுருவாகி தெய்வமென நிற்கும்போது கண்ணீர் மல்கி நெஞ்சுருகத் தொழும் காதலர்கள் அஞ்சி கைகட்டித் தொழுது நிற்கவேண்டும் அல்லது பித்துற்று அலைந்து தன்னிலையிழந்து அரையாடையுடன் மழையிலும் வெயிலிலும் உடைமரத்தடியில் ஒடுங்கிக் கிடக்கவேண்டும்.

இவற்றுக்கு நடுவில் இடம்பெற்றுள்ள கடல் கன்னியும் கிழவனும் சந்திக்கும் கதை, கடலில் பூக்கும் கருந்தாமரைகள், ஊஞ்சலாடும் மான் போன்ற பல்வேறு கதைகள் பைபிள் கதைகளின் தன்மையைக் கொண்டுள்ளன. கற்பனையின் உச்சபட்ச சாத்தியத்தையும் தர்க்கத்தை மீறி கவிதைத் தொடமுனையும் தருணத்தையும் கொண்டிருக்கும் இக்கதைகள் நாவலின் மையத்தை இன்னும் நுட்பமாக ஆழத்துக்கு இட்டுச்செல்கின்றன.

0

தேரித்துறை திருவிழாவின் தேரோட்ட நாளன்று இரவில் தனிமையில் பாண்டியும் சாராவும் சந்திக்கும் காட்சி தமிழ் நாவல்களில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிளில் ஆகச் சிறந்தது. இருவரும் தனிமையில் சந்திக்கும் ஒரே சந்தர்ப்பம். ஆர்வமும் அச்சமும் உரிமையும் கூடிய உணர்ச்சித் ததும்பல்கள் நிறைந்த சூழலும் அதற்கேற்ற உரையாடல்களுமாய் அமைந்துள்ளது இக்காட்சி. வெகு இயல்பாய் தொடங்கி மெல்ல மெல்ல அடுத்தடுத்த கட்டத்துக்கு துடிப்புடன் நகரும் பாங்கும் இவ்வாறான தனிமையில் பொதுவில் ஆண்கள் கொள்ளும் அச்சத்தையும் பெண்களிடத்தில் கிளைக்கும் துணிச்சலையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் அபூர்வமானவை.

தேரோடும் இரவு. யாருமற்ற தனிமை. எந்த நேரத்திலும் யாரும் வரக்கூடும் என்ற அச்சம். அண்மை கிளர்த்தும் ஆர்வம். சீண்டல்கள், சிணுங்கல்களால் கனியும் வெம்மை. ‘கனவு நிஜமாகும்போது கிலிகொள்ளும் காதலை‘ காட்சிப்படுத்தியிருக்கும் அற்புதமான தருணம்.

அவளேதான் அடுத்தடுத்த நிலைக்கு முதலடி வைக்கிறாள். நாடியைக் கையில் ஏந்தி கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டுப் போகிறாள். அவன் எழுதிய கவிதைகளையே அவனுக்குப் பதிலாக்குகிறாள். விடைபெறும் கணத்தில் அவன் தாளமாட்டாமல் நிலைதடுமாறுகிறான். சாமம் முடிவற்று நீண்டு கொண்டேயிருக்க காதலின் பிடி மெல்ல மெல்ல இறுக்குகிறது இருவரையும். அவன் காதலைச் சொல்லும்போது அவள் மௌனமாயிருக்கிறாள். ‘மன்னிக்க’வென அழைத்து வந்தவள் அடுத்தடுத்து  அவனை சிலுவை சுமக்கச் செய்கிறாள். பரிசாகக் கிடைப்பது ஷெல்லியின் கவிதைத் தொகுப்பு.

திருவிழா முடியும்போது அவன் காண்பது வேறொரு சாராவை. அவள் யாரென்று அறியும்போதுதான் மூளைக்குள் இறங்குகிறது முதல் ஆணி.

நாவலின் அமைப்பில் இக்காட்சி ‘மழை’ என்ற தலைப்புடன் கடைசியாக இடம்பெற்றுள்ளது. நிகழ்வுகளின் வரிசைக்கேற்ப இதை அடுக்கியிருந்தால் இப்படியொரு அனுபவத்தை இது சாத்தியப்படுத்தியிருக்காது. ஒரு கவிதையில் ஒரு சொல்லை கடைசியாக மாற்றி வைக்கும்போது கிடைக்கும் அழுத்தமும் எழுச்சியும் இந்த இட மாற்றத்தில் கனிந்திருப்பது நாவலின் தீராச்சுவைக்கு ஒரு முக்கிய காரணம்.

தமிழ் நாவல்களிலேயே தனித்துவமான, ஒப்புமையற்ற மொழியழகைக் கொண்டது கன்னி. இப்படியொரு மொழி உச்சத்துடன் இன்னொரு நாவல் அமைவது அசாத்தியம். கிருபாவின் கவிதை மொழி தன்னிச்சையானது. அபூர்வமான சொல்லிணைவுகளைக் கொண்டது. மொழியும் உன்மத்தமும் முயங்கும் பொழுதில் கிளைக்கும் விநோத நிறங்களையும் நடனங்களையும் சொற்களில் இசைக்கவல்லது. வாதையைச் சொல்லும்போது இதயத்தை நொறுக்கும் அது காதலைச் சொல்லும்போது களிப்பேற்றி கண்மூடி தலையாட்ட வைக்கிறது. இந்த நாவலிலும் கிருபா அதே கவிதை மொழியைத்தான் கையாள்கிறார். அதில் இன்னும் சில மேன்மைகளை குழைத்து மெருகேற்றியிருக்கிறார். அரிச்சுவடிக்கு முன்பே அவருக்குள் வந்துவிட்டது பைபளின் மொழி. அதன் கதையாடல்களும் மொழியமைப்பும் கற்பனை நுட்பமும் இயல்பாகவே அவருக்கான மொழியின் ஒரு பகுதியாக அமைந்துவிட்டன. நாவலின் பல்வேறு இடங்களில் விரியும் கனவுகளும் மாயா உலகங்களும் புலன்களின் எல்லைகளையும் அறிவின் வரைகளையும் கடந்துத் தாவும் சித்தரிப்புகளையும் அது சாத்தியமாக்கியுள்ளது. கிருபாவின் பள்ளிக் கல்வி ஏழாம் வகுப்பு மட்டுமே. எனவே, ஏட்டுக் கல்வியின் வழியாக அவர் அடைந்திருக்கும் அறிவு எல்லைகள் கொண்டது. அதன் சுமைகள் அவரது மொழியில் ஏறவில்லை. ஆனால், தெளிவான தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கிய வாசிப்பு கிருபாவின் எழுத்து மொழியை செழுமையடையச் செய்திருக்கிறது. வியப்பைத் தரும் அத்தகைய அடையாளங்களை இந்த நாவல் நெடுகக் கண்டுணர முடியும். திருக்குறளும். சிலம்பும், பரணியும், நற்றிணையும், குறுந்தொகையும் பொருத்தமான இடங்களில் ஒன்றிணைந்து இந்த நாவலின் உரைநடைக்கு எழிலூட்டியுள்ளன.  

0

‘கன்னி’ இன்றளவும் வாசிப்பின் அனைத்து சாத்தியங்களையும் சவால்களையும் விரித்துக்கொண்டே செல்லும் ஒரு புனைவு. இதன் வரிகள் பலவும் கவிதைகளே. இன்னும் சில கவிதைக்கு அணுக்கமாக நின்றொளிர்பவை. பெண்களைக் குறித்து வர்ணிக்கும் பல வரிகளில் உன்மத்தமும் பேரழகை ஆராதிக்கும் பக்தியும் குதூகலத்துடன் இணைந்து ஒலிக்கின்றன. இந்த உரைநடையை பகுத்துப் பார்த்து இதன் நுட்பத்தைக் கண்டுணர முயல்வது சவாலானது. கற்பனைக்கு மொழி எங்கே வளைந்து கொடுக்கிறது, மொழியை கற்பனை எந்த இடத்தில் தனக்கேற்ப திரித்துக் கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும் எளிதல்ல. அதேபோல இதில் உள்ள பல்வேறு உபகதைகளையும் அவற்றின் உட்பொருளையும் தெளிந்துணர்வதும் சாதாரண காரியமல்ல. திரும்பத் திரும்ப வாசித்து தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கும் பொறுமையும் பக்குவமுமே உதவக்கூடும்.

0

நாவல் எனும் வடிவில் ‘கன்னி’ பல தனித் தன்மைகளைக் கொண்டது. இதுவொரு மீபுனைவு (meta fiction). பலகுரல் தன்மை (polyphony) கொண்டது. நாட்டார் கதை மரபின் சரட்டையும் பைபளின் உபகதைத் தன்மையையும் கையாண்டிருப்பது. மாய யதார்த்தத்தின் (magical realism) குணங்களைக் கொண்டிருப்பது. கன்னிமை குறித்து மானுட வாழ்வை நோக்கிய ஒரு தீவிரமான கேள்வியை எழுப்பும் விதத்தில் இந்த நாவல் செவ்வியல் (classic) அடையாளத்தைக் கொண்டது. பெண்களை இறைவனின் திருப்பணிக்கு ‘கன்னியாஸ்த்ரீ’களாக ஒப்படைக்கும் வழக்கத்தின் மீதான கூர்மையான விமர்சனத்தை இந்த நாவல் எழுப்பியுள்ளது. புனித சேவியர் எந்தவொரு சிறு குகையிலிருந்து கிறித்துவ மதத்தைப் பரப்பத் தொடங்கினாரோ அதே குகையில் நிற்கும்போதுதான் பாண்டி அந்தக் கேள்வியை எழுப்புகிறான். அவள் பதில் சொல்லாமல் அழுகிறாள். சாராவுக்குள்ளும் இந்தக் கேள்வி இருந்திருக்கும்.

உலக இலக்கியத்தில் காதலின் உன்னதத்தை மேன்மையைச் சொன்ன ஜெர்மன் நாவல் கதேயின் ‘The sorrows of young Werther’. அந்த நாவலை ‘காதலின் துயரம்’ என்ற பெயரில் நான் மொழிபெயர்த்திருந்தேன். 1774ம் ஆண்டில் கதேயின் நாவல் வெளியானபோது உலக அளவில் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காதல் தோல்விக்காக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முனைந்தனர். கதேயின் மொழியும் மிக நுட்பமானது, கவிதையை நெருங்கி ஒலிப்பது. மொழிபெயர்ப்பில் பெரும் சவாலைத் தந்தது. கிருபாவின் ‘கன்னி’ இளம் வெர்தரின் துயரை ஒத்தது. தன்னிலை இழந்து பித்துற்று அலையும் வெர்தரும் மனம் பிறழ்ந்து இரும்புச் சங்கிலியில் கட்டுண்டு மழையிலும் வெயிலிலும் சிதைந்து கிடக்கும் பாண்டியும் ஒரே நோய்மையின் இரண்டு பலிகள். காதலியான லோதே தொட்டுத் தந்த துப்பாக்கியால் வெர்தர் தன்னை மாய்த்துக்கொள்ளும்போது பாண்டியோ நினைவுகளின் சிலுவையைச் சுமந்தபடி நிறைவேறாத காதலின் சாட்சியாக எஞ்சி நிற்கிறான். உலக இலக்கியத்தில் புகழ்பெற்ற பிற காதல் காவியங்களை வாசித்த அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அவற்றில் பலவற்றையும் விட ‘கன்னி’ பல படிகள் மேலே நிற்கிறது என்பதைத் தயக்கமின்றி சொல்ல முடியும்.

0

‘கன்னி’ நாவல் தமிழின் செவ்வியல் நாவல்களில் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் இதன் பக்கங்களிலிருந்து துலங்கும் மர்மங்கள் நாவலை புதுமையாக்குகின்றன. காலம் கடந்தவொன்றாக மாற்றுகின்றன. அழியாத காலத்தில் ஒரு தேவமலரென அதன் பெயரை நிலைக்கச் செய்கின்றன, கூடவே ஜெ.பிரான்சிஸ் கிருபா எனும் மகா கலைஞனின் பெயரையும்.

0

 (தமிழினி - செப்டம்பர் 2021 )

 

 

 

 

 

 

 

 

 

‘உலையில் போட்ட சிலுவை’ ஜெ.பிரான்சிஸ் கிருபா (1974-2021)




….

எனினும் அவன் இறந்துவிட்டான்

அவன் பாவங்கள் அநாதையாகிவிட்டன

0

‘மெசியாவின் காயங்கள்’ தொகுப்பை வெளியிட்டுப் பேசவேண்டும் என்ற கோரிக்கையுடன் அத்தொகுப்பின் திருத்தப்படாத பிரதி வந்து சேர்ந்தபோதுதான் ஜெ.பிரான்சிஸ் கிருபா என்ற பெயர் எனக்கு அறிமுகமாகிறது. கவிதைகளை வாசிப்பதற்கு முன்பே இனந்தெரியாத ஒரு பதற்றத்தை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது தொகுப்பின் தலைப்பு. அவரது கவிதைகள் ஏற்படுத்தும் பதற்றத்துக்கும் கிருபாவுக்கும் பாரதூரமான வித்தியாசம். ஆனாலும் அவரது கவிதைகளும் ‘கன்னி’ நாவலும் ஏற்படுத்திய பதற்றத்தை இப்போதும் உணரமுடிகிறது.

அத்தொகுப்பில் இருக்கும் நான்கு வரிக் கவிதை ஒன்று கிருபாவை எனக்கு அடையாளம் காட்டியது. இன்று அந்தக் கவிதைதான் அவரை அடையாளப்படுத்தும் கவிதையாகவும் அமைந்திருக்கிறது.

சிலிர்க்கச்  சிலிர்க்க அலைகளை மறித்து

முத்தம் தரும்போதெல்லாம்

துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து

அப்பறவைக்குத் தருகிறது

இக்கடல்

 

நவீன தமிழ்க் கவிதையின் வழக்கமான போக்கிலிருந்து மாறுபட்ட ஒரு பாணியிலானவை அவரது கவிதைகள். வயிற்றில் இறங்கும் கத்தியை தலை தூக்கி எட்டிப் பார்க்கும் ஆமையின் கண்களில் மெசியாவின் கண்களைக் காணும் முதல் கவிதையிலேயே இத்தன்மையை உணர முடிந்தது. அவமானம் மிகுந்த இரவில், வானத்தை பூமியில் வைத்து சூதாடக் கூடாது என்ற குரல் அசாதாரணமானது. ‘கட்டி முடித்த கண்ணாடித் தீவிற்கு விளக்கேற்றுகிறது விடிவெள்ளியின் முகம்’ என்பதுபோல எதிர்பாரா கணங்களில் வியப்பையும் விநோத அனுபவங்களையும் சாத்தியப்படுத்துவது.  

கிருபாவின் கவிதை மொழி தன்னிச்சையானது. தடையேதுமற்று பெருகி நிறைவது. ஒன்றையடுத்து ஒன்றாக சொற்கள் தாமாக வந்தமையும் வித்தைகொண்டது.

 

சொற்களிலிருந்து அர்த்தங்கள்

மௌனத்துக்குத் திரும்பும் வழி இது

 

என்ற வரிகளை மந்திரம்போல் ஒலிக்கச் செய்வது அவற்றில் உள்ள எளிமையும் அடர்த்தியுமே.

 

மிளகிலுள்ள மேடுபள்ளங்கள்

கடுகில் இல்லை.

கடுகிலுள்ள கள்ளச்சுவை

மிளகில் இல்லை.

குலையில் தொங்கும் திராட்சை

ஒரு கூட்டுக் கனவு.

அதிகாலையில் உதிரும் நாவற்பழங்கள்

இரவின் துளிகள்

 

என நகரச் சாலையோரத்தில் இரை தேடும் எலியின் கண்களை ஒப்புமைப்படுத்தும் இந்த வரிகளும் இதனுள் அமைந்த சொற்களும் சேர்ந்து சாத்தியப்படுத்தும் தனித்துவமான அனுபவத்துக்கான இன்னொரு காரணம் இதில் உள்ளார்ந்து ஒலிக்கும் சொற்களின் இசை. கிருபாவின் பல கவிதைகளிலும் இந்த இசையை அதன் துடிப்பை உணர முடியும்.

 

பாறையின் மீது தூவிய

தானிய மணிகள்

பட்சிகளாக முளைத்து

வளர்ந்து பறவைகளாகி

வானேகிப் போகும் கணத்தை

எப்போதேனும் காண சித்தித்தால்

அப்போது அங்கே

நீயின்றி நின்றிருப்பாய் நீ.

 

சொற்களும் அவற்றின் இசையும் சேர்ந்து ஒரு காட்சியை கவிதைக்குள் வரைந்து காட்டுகின்றன. கவிதையின் கடைசி சொல் ஒலித்து முடிந்ததும் அந்தக் காட்சி மட்டும் எதிரில் இருக்க சொற்கள் காணாமல் போய்விடும் அனுபவத்தை இக்கவிதையில் அடைய முடியும்.

 

கிருபாவின் கவிதைகளில் இடம்பெறும் சொற்கள் சாதாரணமான புழங்குசொற்கள்தான். அநேகமாய் பிற அனைவரது கவிதைகளிலும் இடம்பெறுபவைதான். ஆனால் கிருபா அவற்றைக் கவிதையில் இருத்தும்விதத்தில் அச்சொற்கள் துலக்கம் பெற்று ஒளிர்கின்றன.

நெற்கதிர்களில் பால் குடிக்க

இறங்கி வந்தன தேன்சிட்டுகள்

அப்போதுதான் கொக்குகள்

நரைக்கத் தொடங்கின

மழை தன்னைத்

துளித்துளியாகப் பங்கு பிரித்தது

வில் வானத்தின் வரலாற்றை

வண்ணங்களில் சுருக்கியெழுதியது.

 

கிருபா சொற்களை தேவையில்லாமல் விரயமாக்குவதில்லை. ஆகப் பெரும் தரிசனத்தையும் சுருக்கமும் செறிவுமான சொற்களைக் கொண்டு தெளிவாக சொல்லிவிட முடியும்.

ஆமென்

பசியை சமைத்தபடி

பன்னெடுங் காலமாய்

பட்டினி கிடப்பவன்

வீட்டுக்கு

விருந்துக்கு செல்லாதோர்

பேறு பெற்றோர்.

 

கடலும் மழையும் ரயிலும் தண்டவாளங்களும் வானமும் பூமியும் சிலுவையும் மரமும் மெழுகுவர்த்தியும் அவரது கவிதைகளுக்குள் தொடர்ந்து வெவ்வேறு அர்த்தங்களுடன் இடம் பெறுகின்றன. பொதுவாகவே கவிதைகளுக்குள் அதிகமும் பயின்றுவரும் இச்சொற்களை குறியீடுகளாகவோ படிமங்களாகவோ உள்ளிடும்போது தேய்வழக்காகிவிடும் சாத்தியங்கள் உண்டு. கிருபாவின் கவிதைகளில் ‘கூர் செதுக்கிய மேகங்களைச் சீவி அம்பாக நாணேற்றிய வில் பூட்டி பல்லாயிரம் கரங்களில் கடவுள் மழையால் பூமியை ஆசிர்வதிக்கிறார்’ என்றும் ‘வானத்தில் வலியோடு முறியும் மின்னல்’ என்றும் ‘கைதேர்ந்த மீனவனின் தந்திர வலைகளுக்குள் சிக்கி வெளியேறும் விதியற்று கடலின் பெரும் கவலைகளை’ என்றும் அவை அவரது கவிதை உலகத்துக்கான தனித்த ஒரு அர்த்தத்தை ஏற்று அமைகின்றன. ‘நீரில் நித்திரை கலைந்த மீன் குஞ்சு விளிம்பில் கடித்திழுத்து கிணற்றுக்கு வெளியே எறிகிறது அதே நிலவை’, ‘மெழுகுவர்த்தியின் உச்சியிலேறி வெளிச்சத்தை திரியில் கட்டும் சுடர் பதறி இடறும்போதெல்லாம் தடுமாறித் தரையில் விழுமோ’, ‘சுவாசக் காற்றின் இரக்கமற்ற புறக்கணிப்பில் பறக்கும் கானல் தோணிகள்’ போன்ற வரிகளில் அமையும் தன்னிச்சையான சொல்லிணைவுகள் அச் சொற்களுக்கு கூடுதலான வனப்பை சாத்தியமாக்குகின்றன.

 

கவிஞர் என்றால் காதலைப் பாடாமல் அல்லது காதலின் துயரைச் சொல்லாமல் இருக்க முடியாது என்ற விதிக்கு கிருபாவின் கவிதைகளும் உட்பட்டவையே.

 

காதலியைப் பற்றிய அவரது கற்பனை ‘நிறுத்தி வைத்த வீணையை விடச்

சற்றே உயரமாக இருப்பாளா?’ என்று கேட்டுவிட்டு ‘வாழ்க்கைக்கும் கனவுக்குமான இடைவெளியில் பாதைகளுக்கு மணல்சடை பின்னி நடப்பாளா?’ என்றும் யோசிக்கிறது.

 

தெரிந்தோ தெரியாமலோ

உன் காலடி மண்ணெடுத்து

ஒரு பூமி செய்துவிட்டேன்

உன் ஈரக்கூந்தலை

கடலாகச் செய்யும் முன்னே

கடந்து போய்விட்டாய்

உயரத்திலிருந்து சூரியனாய்

வருத்துகிறது ஒற்றைப் பார்வை

வெப்பத்தில் வறள்கிறது

எனது சின்னஞ்சிறிய பூமி

நீருற்ற தேடிக் கிணறுகள் தோண்டினால்

பீறிட்டடிக்கிறது ரத்தம்.

கண்ணே

இரண்டொரு தீர்த்தமணிகளைத்

தானமிடு

 

என்று மன்றாடுவதில் தொடங்குகிறது அந்தக் காதல்.

 

முத்தமிட்டு என்னை

சாம்பலாக்கித் தந்துவிட்டு

கவலைப்படும் பூக்களாக

உன் கண்களை மாற்றிக்கொள்ளும்போது

இலக்கின்றி நடக்கத் தொடங்குகிறேன்

கொலைவாள் நீட்டி

மன்னித்துக் காட்டிய வழியில்

 

என்று புறக்கணிப்பை ஒப்புக்கொண்டு சரணடைகிறது. இறுதியில் அந்தக் காதல் அப்படியே இருக்கிறது. 

 

மின்னல் கடவுள் போல் மின்னுகிறது

இடி சாத்தானைப் போல் துள்ளுகிறது

இரவு உன்னைப் போல் கவிகிறது

மழை என்னைப் போல் பெய்கிறது

குளிர் நினைவு போல் அலைகிறது

தூக்கம் மரணம் போல் தழுவுகிறது

காதல் மட்டும் அப்படியே இருக்கிறது

 


குழந்தைகளின் உலகம் அவரது கவிதைகளில் அவர்களுக்கேயுரிய குதூகலத்துடன் விரிகிறது. ‘நடை நடையாய் நடந்து குடம் குடமாய் நீர் சேந்தி கடல் சமைக்கும்’ சிறுமி பந்து விளையாடும் போது ‘ஒரு மாயக் கணத்தில் பூமியே ஒரு பந்தாகி’ அவள் கைகளில் துள்ளுகிறது.

 

கெட்டிக்காரக் குழந்தைகளைப் பாராட்ட

புன்னகை வயலில் பூவொன்று பறித்துக்கொண்டு

சந்தோஷ வரப்புகளில் ஓடோடி வருவாள்

ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி

திங்கட்கிழமையைத் தள்ளிக்கொண்டு போவாள் பள்ளிக்கு.

 

‘புனல் வற்றி நதி மெலிந்து எழும் கூழாங்கல் மாளிகை’யின் நடை வாசலில் தூக்கக் கலக்கத்துடன் கால் நீட்டி அமர்ந்திருக்கும் மழலைச் சிறுவனின் மனமே கிருபாவின் நிலைத்த புன்னகைக்குக் காரணமாக இருக்க முடியும்.

 

அனுபவ எல்லைக்கு அப்பாற்பட்ட உண்மைகளை தொட்டுக்காட்ட வல்ல அல்லது நிழல்போலேனும் காட்டும் சாத்தியங்களைக் கொண்ட கவிதைகளே காலந்தாண்டி நிலைக்கும் பேறுகொண்டவை. மகாகவியால் தன் கவிதைகளின் வழியே அத்தகையை நிலையை எட்ட முடிகிறது. எண்ணற்ற சொற்பெருக்குகளுக்கு நடுவே அவ்வாறான கவிதைகள் மட்டுமே அவனது சுவடுகளாக நிலைத்திருக்கும். கிருபாவின் வரிகள், கவிதைகள் பல அவ்வாறான தருணங்களைக் கொண்டிருப்பவை.

 

பெண்ணைக் கண்டு

பேரிரைச்சலிடுகிறாயே மனமே,

பெண் யார்?

பெற்றுக் கொண்டால் மகள்

பெறாத வரையில்

பிரகாசமான இருள்

வேறொன்றுமில்லை

 

0

 

அலகில் காலம்

காலில் பூமி

வாலில் வானம்

தோளில் சிறகு

நாவில் இசை

கண்ணில் ஒளி

சின்னஞ்சிறு கிளையில்

மின்னல் தனிமையில்

பறவைபோல் ஒருவன்

ஏறக்குறைய இறைவன்

 0

 

மோட்ச விளக்கொளியில் கல்லறைக்குள்

அவன் இருதயத்தை மண் தின்னும்போது

மேலே காவல் நிற்கும் சிலுவைக்காக

பச்சை மரத்தையோ பளிங்குக் கல்லையோ

வானவில்லையோ துன்புறுத்த வேண்டாம்

கல் களைந்த அரிசியைக் கொட்டும்முன்

ஈரக்கைகளால் மறக்காமல் அவன்

அம்மா உலையில் போட்ட சிலுவைகளில்

ஒன்றை அங்கே நிறுத்துங்கள்.

0

‘யாரையும் காயப்படுத்தக்கூடாதென்று, தன் வலிகளை வானில் எறிந்த’ கவிஞன் கிருபா. ‘விழிகளற்ற ஒருவர் செவி ஓர்மையில் ஒளியை நோக்கிக் கனவில் நடந்து செல்கிறார், தன் கைக்குச்சியால் தரையில் வழிக் குறிப்புகளை எழுதிச் செல்கிறார்’ என்று விவரித்திருப்பது தனது பாதையைத்தான்.

இருட்டில் வெடிக்கும் உன்

கைத்துப்பாக்கியிலிருந்து வெளிப்படும்

ஒரு சிட்டிகை வெளிச்சத்தில்

என் மொத்த கவிதைகளையும்

படித்து முடித்துவிடலாம்

நீ

அதுவரையில்

உயிரை கையில் பிடித்துக்கொண்டு

செத்துத் தொலையாமல் இருக்கவேண்டும்

நான்

என்ற கவிதை அவர் இல்லாது போன இக்கணத்தில் மிகவும் தொந்தரவு செய்கிறது. 

0

 (காலச்சுவடு)

 

 

 

துலா முள்ளின் அசைவுகள் – திருச்செந்தாழையின் கதைகள்

 


ஒழுங்கான கோடுகள் கொண்ட ஒரு பக்கத்தில் சற்றே கோணலாக வளைந்திருக்கும் கோடு உடனடியாக எல்லோரது கவனத்தையும் கவரும். ஒருவழிப்பாதையில் எதிரில் வரும் ஒழுங்கு மீறிய வாகனம் அனைவரையும் பதற்றத்துக்கு உள்ளாக்கும். மீறல்கள் உருவாக்குகிற சமன்குலைவை முதன்மைப்படுத்தும் கதைகளுக்கென்று இலக்கியத்தில் தனித்த செல்வாக்கு எப்போதுமே உண்டு. ஒருவகையில் இலக்கியத்தின் பணி அத்தகைய மீறல்களையும் அதற்கான காரணங்களையும் அவற்றின் விளைவுகளையும்  யோசிக்கச் செய்வதுதான்.

‘உலகமே ஒரு நாடக மேடை’ என்ற சொற்றொடருக்கு நிகரான செல்வாக்குக் கொண்ட இன்னொரு கூற்று ‘எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு’ என்பது. திருச்செந்தாழையின் கதைகள் துலக்கிக் காட்ட முயல்வது வாழ்வின் உள்ளும் புறமுமாய் பின்னிக் கிடக்கும் கொடுக்கல் வாங்கல்களைத்தான். வணிக உலகின் ஒவ்வொரு அங்குலத்திலும் படிந்திருக்கும் தந்திரங்களின் நெடியை, ஈவிரக்கமற்ற அதன் உக்கிரத்தை, கால்களுக்கு அடியில் மிதிபடும் எவற்றையும் பொருட்படுத்தாது தன் இலக்கை நோக்கி மட்டுமே விரையும் வேகத்தை முதன்மைப்படுத்துபவை அவரது கதைகள்.

வியாபாரம் ஒரு சூது. தரவுகள், உலக நடப்புகள், உற்பத்திக்கும் தேவைக்குமான சமன்பாடு என அனைத்தையும் துல்லியமாக கணக்கிடும் மதி நுட்பம், ஆண்டாண்டுகளாக பொட்டுப்பொட்டாய் சேர்த்த அனுபவம், காரணகாரியங்களுக்கு அப்பால் இதுதானென்று துலாமுள் போல துடித்து நிற்கும் உள்ளுணர்வு ஆகிய மூன்று படைக்கலன்களையும் கொண்டே இதில் இறங்கமுடியும். இத்தனை இருந்தபோதும் வெற்றியோ அல்லது குறைந்தபட்சம் இழப்பின்மையோ உறுதியில்லை என்பதுதான் இது கற்றுத்தரும் பாடம்.

இவ்வாறான வெளிப்படையான கணக்கு வழக்குகளுக்கு பின்னால் உள்ள சிக்கலான மனக்கணக்குகள் இன்னும் வலிமையானவை. அத்தகைய கணக்குகளையும் அவற்றின் ஆழத்திலுள்ள காரணங்களையும் இலக்காகக் கொண்டிருப்பவை திருச்செந்தாழையின் கதைகள்.

வணிகத்தையும் அதன் சூட்சுமங்களையும் கற்றுக்கொள்வது குருகுலபாடம் போன்றுதான். அல்லும் பகலுமாய் குருவின் காலடியில் கிடந்து அவரது ஒவ்வொரு அசைவையும் தவறவிடாது கவனித்து ஏவல்களை நிறைவேற்றி வசவுகளை தாங்கி அவமானங்களை விழுங்கி மிகப் பொறுமையாய் தனக்கான காலம் கனியும் வரை காத்திருந்து கற்றுக்கொள்ளும் பெரும் கல்வி. பிரிந்து தனியாகச் செல்லும் மாணவன் ஒவ்வொருவனும் ஆசிரியரின் போட்டியாளன்தான். ‘நீங்கள் இட்ட பிச்சைதான்’ என்று அவன் பணிந்து வணங்கும்போதே அவனது கணக்குகள் என்ன என்பதை அறிந்தவர் ஆசிரியர். ராம பவனத்தின் வீழ்ச்சியையும் அங்கிருந்து உருவாகி வளர்ந்து நிற்கும் தன்ராஜின் வெற்றியையும் விவரிக்கும் ‘விலாஸம்’ கதை இந்த ஆசிரிய மாணவ உறவின் உள்மடிப்புகளைத் துல்லியமாக கணித்திருக்கிறது.

வியாபாரம் செழிப்பதோ அழிவதோ வெற்றியும் தோல்வியும் அல்ல. அது வரவு செலவு கணக்கு, அவ்வளவுதான். ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான போட்டியாளரை உள்ளுக்குள் நிறுத்தியே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். யாரை வீழ்த்தவேண்டும் யாரை மிஞ்ச வேண்டும் என்ற தெள்ளத் தெளிவான கணக்கு உண்டு. எது இலக்கு என்பதை அவரைத் தவிர வேறு யாரும் அறிந்துவிட முடியாது. போட்டியாளருக்குத் தெரியும், தானே அந்த இலக்கு என்பதையும். சமயங்களில் அவரை வெற்றியின் நிறைவையோ சாகச உணர்வையோ தரக்கூடாது என்பதற்காக ‘விலாஸம்’ கதையின் தன்ராஜைப் போல விட்டுக்கொடுத்துவிடுவதும் உண்டு.

ஒவ்வொரு வியாபார சாம்ராஜ்யத்துக்குப் பின்னும் பழைய வெற்றிகரமான தொழிலாளி ஒருவரின் உழைப்பும் அனுபவமும் உண்டு. அவரது கணிப்புகள் தவறுவது அரிது. அவர்களில் ஒருசிலரே முதலாளியாக முடிகிறது. அவ்வாறு அவர்கள் ஆக முடியாதபடியான சூட்சுமங்களை தங்கள் கைக்குள்ளேயே முதலாளிகள் இருத்திக் கொள்கிறார்கள். முதலாளிக்காக வியாபார கணக்குகளை துல்லியமாகக் கணிக்கமுடிகிற ‘துலாத்தான்’ அய்யாவுவால் தன் மகளின் வாழ்க்கைக் கணக்குகளை எதுவும் செய்ய முடியவதில்லை.

 

வியாபாரம் போலவே தந்திரங்களையும் கணக்குகளையும் அடிப்படையாகக் கொண்டவை மனித உறவுகள். மனித உறவுகளின் பல்வேறு திரிபுகளையும் வியாபாரத்தின் தந்திர நுட்பங்களையும் இணைத்து கதைகளாக்கும்போது அவை அடையும் கூடுதல் பரிமாணங்களின் அழகை உறுதிப்படுத்துகின்றன திருச்செந்தாழையின் கதைகள்.

மனிதர்களின் சுயநலமும் வியாபாரிகளின் லாபநோக்கும் ஒரே கணக்குதான். நஷ்டமடையும்போது அவனை கைதூக்கி காப்பாற்றுபவர்களைவிட அந்த நிலையைப் பயன்படுத்தி அவர்களிடமிருந்து எதையேனும் கைபற்ற முடியும் சுரண்ட முடியும் என்று திட்டமிடும் மனமே ‘த்வந்தம்’ கதையில் செயல்படுகிறது. ரத்த உறவாக இருந்தாலும்கூட சுயநலமே வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் தீர்மானிக்கிறது எனும் யதார்த்தத்தை திரவியம், மரியம் கதாபாத்திரங்களின் வழியாகச் சொல்லும் ‘ஆபரணம்’ கதையிலேயே அவர்களின் போக்குக்கு நேர் எதிரான குணாம்சங்களைக் கொண்ட திலகரையும் சித்திரையையும் கொண்டு துலாக்கோலை சமன்செய்திருக்கிறார் திருச்செந்தாழை. பொருட்செல்வத்தை இலக்காகக் கொண்ட மரியத்தையும் மக்கட்செல்வமே மகிழ்ச்சி தருவது என்பதை இயல்பாக உணர்ந்த சித்திரையையும் ஒரு சமன்பாட்டில் இருத்துகிறது இந்தக் கதை. தந்திரங்களைக் கொண்டு திலகரைத் தோற்கடிப்பதன் வழியாக உயர்ந்திருத்த திரவியத்தின் தட்டு இறுதியில் தாழ்ந்து போவது அந்த சமன்பாட்டை உறுதிசெய்கிறது. ஆனால், கதையின் எந்த இடத்திலும் இந்த துலாக்கால் விளையாட்டிலிருந்து விலகி நிற்கிறார்கள் சித்திரையும் திலகரும்.

நுட்பமான தகவல்களுடன் கச்சிதமான விவரணைகளுடன் கூடிய கதைமொழி கனிந்து திருச்செந்தாழையின் கதைகளுக்கு தனித்த அடையாளத்தைத் தருகின்றன. சம்பவங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் அந்த நேரத்தில் கதையின் உணர்வுதளத்துக்கும் பொருத்தமான உவமைகள் மிக இயல்பாக அமைந்துள்ளன. ‘தங்கத்திற்கேயுரிய சுறுசுறுவென நாசியைத் தீண்டுகிற மின்மணத்தோடு பாலின் வெம்மையான கவுச்சி வாசனையும் சேர்ந்தெழுந்தது’, ‘அவள் தனது ஒவ்வொரு நகையாகக் கழற்றிக் கொடுத்துவிட்டு பொட்டுத் தங்கம் இல்லாத, கலங்கலான நீர் நிரம்பிய கண்ணாடிப் பாத்திரத்தைப் போல தூணில் சாய்ந்துவிட்டாள்’ (ஆபரணம்) போன்ற வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் உவமைகள் வலிந்து தம்மைக் காட்டிக்கொள்வதில்லை. ஆனால் அவை தம் வலுவான இருப்பை உணர்த்திவிடுகின்றன. ‘குத்தவைத்திருந்த காலருகே மக்காச்சோளத்திலிருந்து உரித்து எறியப்பட்ட காய்ந்த சோகை தலைவிரி கோலம்கொண்ட பெண்ணின் முகச்சாயலோடு உருண்டு வந்தது’ (துலாத்தான்) என்பது வெறும் சித்தரிப்பாக நின்றுவிடாமல் கதையின் குறிப்பிட்ட தருணத்தில் அய்யாவு கதாபாத்திரத்தின் உளப்போக்கைக் காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.

 

கதையின் போக்குக்கும் வார்ப்புக்கும் பொருத்தமாக, இயல்பாக சூழலை சித்தரிப்பு என்பது கதையின் வாசிப்புத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கியமான காரணி. ‘பாதி அணைத்து வைத்திருந்த சுருட்டை மீண்டும் உதட்டில் கவ்வக் கொடுத்தபடி தீக்குச்சியைக் கிழித்தார் அய்யாவு. மொரமொரப்பான தாடியின் வெண்ரோமங்களுக்கிடையே பொன் வெளிச்சம் பூத்து வந்தது. குச்சியை அணைத்து வீசிவிட்டு கண்மாய்ச் சரிவின் இருளுக்குள் பார்வையை விட்டார். நீர் நிறைந்து கிடக்கும் வாகைக்குளம் கண்மாயின் மீது நிலவு வெளிச்சம் துணியைப் போல மிதந்துகொண்டிருந்தது’ (துலாத்தான்) என்று தொடங்கும்போதே கதை திருத்தமாக உருவாகிவிடுகிறது.

‘வெளியே நாங்கள் வந்திருந்த செர்ரி நிறத்துக் காரை டிரைவர் மேலும் மேலும் பழமாக மாற்றிவிடுபவனைப் போலத் துடைத்து மெருகேற்றிக்கொண்டிருந்தான். அருகிலேயே அந்த வீட்டுக்காரர்கள் உபயோகப்படுத்துகிற பிஸ்தா நிற பியட் கார் மெழுகு பொம்மையைப் போல் நின்றிருக்க, அதன் வயசாளியான டிரைவர் அருகேயிருந்த பூந்தொட்டியின் விளிம்பில் சாய்ந்து நின்று பீடி புகைத்தவாறே எங்களது காரையும் டிரைவரையும் பார்த்தபடியிருந்தான்’ விலாஸம் கதைக்கு அழுத்தம் தரும் வகையில் கதையின் ஆரம்பத்திலேயே அமைந்துள்ளன இந்த வரிகள்.

 

சொற்களின் வழியாக கதை மாந்தர்களின் தோற்றத்தை உருவாக்கிக் காட்டுவதைக் காட்டிலும் அவர்களது குணவிசேஷங்களை வெளிப்படுத்தவே அதிகமும் முனைகின்றன திருச்செந்தாழையின் கதைகள். கதாபாத்திரங்கள் கோட்டுச் சித்திரங்களாக அல்லாமல் கண்முன் உயிரூட்டத்துடன் உலவும் மனிதர்களாவதன் நுட்பம் அதுவே.

‘காய்ப்புப் பிடிக்காத கையும் புளிக்கறை படியாத நகங்களுமாக கல்லாவில் அமர்ந்து பணம் எண்ணிச் சிரிக்க வைப்பது அண்ணன் தம்பி வியாபாரத்தில் ஒரு நீண்ட நாளுக்கான சூதுகளில் ஒன்று’ (ஆபரணம்) என்ற ஒற்றை வரி அண்ணன் தம்பி இருவரின் குணாம்சங்களையும் தீர்க்கமாக வகுத்துவிடுகிறது.

‘வியக்க ஒன்று கிடைத்தவுடன் எல்லாத் துயரங்களையும் மூட்டையாகக் கட்டி கண்காணாமல் எறிந்துவிட்டு அந்தப் புதிய வியப்பின் முன் குத்துக்காலிட்டு அமர்ந்துவிடுவாள்.’ ‘துலாத்தான்’ கதையின் பரமுவின் வெகுளித்தனத்தை இதைவிட நேர்த்தியாக சொல்ல முடியாது.

‘அப்பாவால் இன்னமும் மொடமொடப்பான ஒரு வெள்ளை நிறச் சட்டைக்குள் முழுமையாகத் தன்னை நுழைத்துக் கொள்ளமுடியாமல் திணறச் செய்கின்ற சிரிப்பு’ என ‘விலாஸம்’ கதையின் அப்பாவும், ‘தவறான காலத்தில் தவறான விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்ட நவதானிய மூடைகள் தகப்பனைச் சூழ்ந்திருக்கும் மக்குப் பிள்ளைகளைப் போல பம்மிக் கிடக்க அதன் நடுவே அபத்தமான புன்னகையோடு நின்றிருந்தான்’ என தீபனும், ‘கல்லாப் பெட்டியின் இரும்பு கைப்பிடியைப் பிடித்தபடி கேட்கின்ற லீலாவின் கண்களுக்குள் இந்தப் பேச்சின் போதையை விரும்புகிற கிறக்கம் தெரியும். பராமரிமிப்பிலில்லாத தெய்வமொன்று புதிய குருதி வாசனையை நுகர்ந்தபடி கண்களில் ஒளிபடர ஒரு எட்டு முன்னால் எடுத்து வைத்து வருகின்ற கிறக்கம்’ என்று ‘த்வந்தம்’ கதையின் லீலாவும் உணர்ச்சிப் பரிமாணங்களுடன் உருவாகி நிற்கிறார்கள்.

திருச்செந்தாழையின் கதையுலகை மேலும் நம்பகத்தன்மைக் கொண்டவையாக ஆக்குபவை வியாபார உலகில் புழங்கும் சொற்களுடன் அமைந்த உரையாடல்கள். “லாபத்துல நட்டம் விழும். அப்படி நட்டம் விழும்ங்கறது இந்த சம்சாரிகளுக்கும் தெரியும். தெரிஞ்சேதான் இந்த நட்டத்தை சுமக்கறோம்ங்கறத அவங்களுக்கு உப்பு ஒறப்பா புரிய வைக்கணும். ஏன்னா நாகலாபுரத்துலருந்து விளாத்திகுளம் வரைக்கும் அடுத்தடுத்து வரப்போற மல்லிக்கும் வத்தலுக்கும் இப்ப இவங்ககிட்ட நம்மபேர்ல உண்டாக்குற கரிசனந்தான் தூண்டில் புழு. ஒருவகையில இது நட்டம் கூட கிடையாது. அந்த கரிசனத்துக்கான முதலீடு.” (த்வந்தம்)

வியாபார களத்தையும் மனிதர்களின் அகத்தையும் இணைத்து அ.மாதவன் உருவாக்கிய ‘சாலைத் தெரு’வுக்கு இணையானது திருச்செந்தாழை உருவாக்கும் ‘மண்டி’ உலகம். சின்னச் சின்ன தகவல்கள், செறிவாக உருவாக்கும் கதாபாத்திரங்கள், வாசனையும் வண்ணமுமான சூழல் என திருச்செந்தாழை உருவாக்கும் வணிக உலகம் தமிழ்ச் சிறுகதைக்கு புதியதொரு களத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கூடவே, அதனுடன் இணைந்த மனிதர்களின் அக அசைவுகளையும் முன்னுதாரணமற்ற புதிய மொழியில் அது கூர்மையுடன் எழுதிக் காட்டுவதால் கூடுதலான கவனத்தையும் வீச்சையும் பெறுகிறது.

0

 (தமிழினி - டிசம்பர் 2021 இதழில் வெளியானது )

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...