Sunday, 29 September 2024

வம்ச விருட்சம் – எஸ்.எல்.பைரப்பா

 

கொடி மலர் பூக்கும் கற்பூர கிளுவை


0

இந்திய நாவல்களை வாசிக்கத் தொடங்கிய காலத்தில், சிறந்த இந்திய நாவல் என்று அப்போது குறிப்பிடப்பட்ட நாவல் தாராசங்கர் பந்தோபாத்யாயாவின் ‘ஆரோக்கிய நிகேதனம்’. தமிழில் மொழிபெயர்த்தவர் த.நா.குமாரசுவாமி.  இன்னும் சிலர் அதீன் பந்தோபாத்யாயாவின் ‘நீலகண்ட பறவையைத் தேடி’ (தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி ) நாவலைச் சுட்டுவார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய நாவல்களைப் பற்றிய பேச்சு வந்தபோது அண்ணாச்சி வசந்தகுமார் ‘குடும்பம் சிதைகிறது’ நாவல்தான் இந்திய அளவில் எழுதப்பட்ட சிறந்த நாவல் என்றார். அதை நான் வாசித்திருக்கவில்லை. நண்பர்களிடம் விசாரித்தேன். கிடைக்கவில்லை. எஸ் எல் பைரப்பாவின் ‘பருவம்’ நாவலை பாவண்ணன் மொழிபெயர்த்திருந்தார். அவரிடமும் ‘குடும்பம் சிதைகிறது’ கிடைக்கவில்லை. பிறகு வெகு காலம் கழித்தே எச்.வி.சுப்ரமணியம் மொழிபெயர்த்த அந்த நாவலை வாசிக்க வாய்த்தது. ஒரு முறை சிருங்கேரிக்கு சென்றிருந்த சமயத்தில் துங்கபத்ரா நதியில் நீராடிக் கொண்டிருந்தபோது ‘குடும்பம் சிதைகிறது’ நாவலில் வரும் ஒரு முக்கியமான காட்சியைப் பற்றி மீண்டும் பேச்சு வந்தது. சுற்றுலா முடிந்து வந்ததும் அந்த நாவலை வாசிக்கும் ஆவலுடன் புத்தக அலமாரியில் தேடினேன். கிடைக்கவில்லை. மனதுக்கு மிக நெருக்கமான ஒரு நாவல். இந்தியக் குடும்ப அமைப்பு, உறவுகளுக்குள் உள்ள நெருக்கமும் விலகலும், மனிதர்களை பகடையாக்கும் சுயநலம், பெண்களின் உள ஆழங்கள் என அந்த நாவல் கொண்டிருக்கும் நுட்பங்கள் வியப்பில் ஆழ்த்துபவை.

‘குடும்பம் சிதைகிறது’, ‘பருவம்’ நாவல்களின் மூலமாக எஸ்.எல்.பைரப்பா இந்திய நாவலாசிரியர்களின் பட்டியலில் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறார். அவரைப் பற்றி வாசிக்க நேரும்போதெல்லாம் அவர் எழுதிய இன்னொரு நாவலும் தவறாது குறிப்பிடப்படும். ‘வம்ச விருட்சம்’ என்ற அந்த நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்படவேயில்லை. ஒரு முறை பாவண்ணனிடம் அதைப் பற்றி கேட்டதும் நினைவிருக்கிறது.

‘வம்ச விருட்சம்’ 1961ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவல் தமிழில் மொழியாக்கம் கண்டுள்ளது. கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்துக்கும் வெகுவேகமாக மொழியாக்கங்களைச் செய்து வரும் கே.நல்லதம்பிக்கு இந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது.

0

2

இந்திய சமூக வாழ்வில் குடும்பம் என்பது மிக முக்கியமான, தவிர்க்க முடியாத அலகு. சொத்து, பொருளாதாரம் என அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது. மேலும், குடும்ப பாரம்பரியம் சார்ந்த பெருமிதங்களை பேணுவதும் அவற்றுக்கு சிறிதும் களங்கம் ஏற்படாதவாறு நடந்துகொள்வதும் வாரிசுகளின் கடமை என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படுவதுண்டு. இன்றும் கிராமங்களில் பாரம்பரியம் சார்ந்த பழக்க வழக்கங்களை, சடங்குகளை அக்கறையுடன் கடைபிடித்து வருவதைப் பார்க்க முடியும். அத்தகைய பாரம்பரியங்களும் சடங்குகளும் குறிப்பிட்ட பிரதேசத்தின் பண்பாட்டு கூறுகளாகவும் அமைகின்றன. ஒரு தனி மனிதனின் குணநலன்களை அவனது பாரம்பரியத்துடன் தொடர்புபடுத்திக் காட்டுவதும் உண்டு. இன்றைய நவீன உலகில் மாறிவரும் தலைமுறையினரிடம் இதுபோன்ற எண்ணங்களுக்கோ கருத்துகளுக்கோ பெரிய அளவு முக்கியத்துவம் கிடையாது. மரபும் பாரம்பரியமும் சம்பிரதாயமான அளவில் மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்ளப் படுகின்றன. ஒருசில குடும்ப நிகழ்வுகளில் மட்டும் இந்த வழக்கங்கள் இன்னும் கடைபிடிக்கப்படுகின்றன. இன்றைய தலைமுறையினருக்கு இவற்றில் அந்த அளவுக்கு ஆர்வமோ நம்பிக்கையோ இருப்பதில்லை. கல்வியும் விடுதலைக்குப் பிறகு ஏற்பட்ட வளர்ச்சியும் கருத்தளவில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

ஆதிவாசியாக வேட்டையாடித் திரிந்துகொண்டிருந்த தனி மனிதன், பிறருடன் சேர்ந்து வாழத் தலைப்பட்ட காலத்திலிருந்தே சில கட்டுப்பாடுகள், வரையறைகள் உருவாக்கினான். அவ்வாறான நிபந்தனைகள் பெரும்பாலும் சுயநல நோக்கில் அமைந்தவையே. பரிணாம வளர்ச்சியின் வெவ்வேறு காலகட்டங்களில் அவ்வறான கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் ஒன்றிணைந்து ஒழுக்க நியதிகளாக உருப்பெற்றன. சமூக வாழ்வின் அடிப்படை கூறுகளாக அமைந்தன. அவற்றை வலியுறுத்தும்பொருட்டு பாவ, புண்ணிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

தனி மனிதனுக்கும் சமூக நெறிகளுக்குமான உறவு தொடர்ந்து மறுபரிசீலனைக்கும் விமரிசனங்களும் உள்ளாகி வருகின்றன. ஒருவகையில் கலை, இலக்கியங்கள் இந்த மறுபரிசீலனைகளுக்கும் விமரிசனங்களுக்கும் பங்களிக்கின்றன. 

3

‘வம்ச விருட்சம்’ 1961ஆம் ஆண்டு வெளியானபோதும், இந்திய விடுதலைக்கு சற்று முந்தைய காலகட்டத்திலேயே நாவல் நிகழ்கிறது. மைசூர், நஞ்சன்கோடு பகுதியை களமாகக் கொண்டிருக்கிறது.

வாழ்க்கை குறித்த அடிப்படையான சில கேள்விகளை இந்த நாவல் எழுப்புகிறது. எது வாழ்க்கை?

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனுக்கான வாழ்வு உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் அவன் தன் வாழ்வை சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்றே தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. எந்தவொரு மனிதனும் தன் விருப்பப்படி வாழ்ந்துவிட முடியாது. அவனுடைய சுதந்திரத்துக்கும் எல்லைகள் உண்டு. அந்த எல்லைகளை வகுக்க குடும்பம், சமூகம், அரசு போன்ற வலுவான அமைப்புகள் உண்டு.  அந்த அமைப்புகள் வகுத்திருக்கும் சில வரைமுறைகளுக்கு ஏற்பவே தன் வாழ்வை அவன் அமைத்துக் கொள்ள முடியும். அவனுடைய பெரும்பாலான நடவடிக்கைகள் அத்தகைய அமைப்புகளின் அனுமதிக்கு உட்பட்டே இருக்க முடியும்.  

சாதாரண நடைமுறை வாழ்க்கைக்கே இத்தகைய கட்டுப்பாடுகள் இருக்கும்போது விதவை மறுமணம், இருதார மணம் போன்ற சமூகத்தின் ஒப்புதல் எளிதில் கிடைக்காதவற்றுக்கான தடைகள் எண்ணற்றவை. நேரடியாக இவை மறுக்கப்படாது போனாலும் மறைமுகமாக பல சங்கடங்களை ஏற்படுத்தும். உளவியல் அழுத்தங்களுக்குக் காரணமாக அமையும். கணவனை இழந்த பெண் தலையை மழித்துக்கொண்டு ‘மடி’யைக் கடைபிடிக்கவேண்டும், வெளியில் வராமல் இருண்ட அறைக்குள் அடைந்து தன் வாழ்வை முடித்துக் கொள்ளவேண்டும் போன்ற நிர்ப்பந்தங்கள் விதிக்கப்பட்டிருந்தன. இதுபோன்ற கட்டுப்பாடுகள் இன்றைய வாழ்வுக்கேற்ப வேறு வடிவங்களில் உள்ளன.

என்றால் ஒரு தனி மனிதனின் சுதந்திரம் எல்லைகளின்றி இருக்க வேண்டுமா? அவ்வாறு ஒவ்வொரு மனிதனும் கட்டற்ற சுதந்திரத்துடன் வாழத் தலைப்பட்டால், சமூக வாழ்வு குழப்பத்துக்கு உள்ளாகாதா? யாரும் யாரையும் நெறிப்படுத்த முடியாதபோது, கேள்வி கேட்க முடியாதபோது மனித உறவும் அதன் விளைவான பிற அமைப்புகளும் உருவாவதோ நடைமுறைப்படுத்தப்படுவதோ சாத்தியமில்லை. எனவே, மனிதன் தன்னுடைய சுமுகமான வாழ்வின் பொருட்டு தானாக ஏற்படுத்திக் கொண்ட சில வரைமுறைகளே இந்த அமைப்புகளை உருவாக்கின. அதன் பின், அந்த அமைப்புகளின் நியதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த அமைப்புகள் தனி மனித வாழ்வை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்டவையாக மாறும்போது மனிதன் மீண்டும் தன் சுதந்திரம் பற்றிய கேள்விகளை எழுப்ப நேர்கிறது.

சுதந்திரம் குறித்த இந்த கேள்வி எழும்போது தனி மனித விருப்பம் முக்கியமா, சமூக அங்கீகாரம் முக்கியமா என்ற உளமோதல் ஏற்படும். சம்பிரதாயமான மரபார்ந்த மனிதர்கள் சமூகத்தை ஒட்டியே வாழவேண்டும் என்றே சொல்வார்கள். ஆனால், தனி மனித விருப்பத்தை சமூக வரைமுறைகள் மறுப்பதால் ஏற்படும் விளைவுகளை சந்திப்பவர்கள் இதற்கு எதிரான தரப்பையே சார்ந்திருப்பார்கள். இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான இந்த மோதல்களும் மீறல்களுமே குறிப்பிடத்தகுந்த பல சமூக மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன. தனிமனிதனும் சமூகமும் தொடர்ந்து தம்மை மறு பரிசீலனை செய்துகொள்ளும் வாய்ப்புகளை இந்த முரண்களும் மோதல்களும் உருவாக்கித் தருகின்றன. இந்த மறுபரிசீலனைகளின் வழியாகவே ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் நியதிகளும் கோட்பாடுகளும் வரையறைகளும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.  

‘தனிமனிதனின் விருப்பத்துக்கும் சமூக நெறிகளுக்குமான  மோதல்களும் முரண்களும் இணைந்தே மனித வாழ்க்கையை தீர்மானிக்கின்றன’ என்ற இந்த அடிப்படையை, கிட்டத்தட்ட இருபதாண்டு கால அளவில் மைசூர், நஞ்சன்கோடு பகுதியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு முதன்மை கதாபாத்திரங்களைக் கொண்டு ஆழமான விவாதத்துக்கு உட்படுத்தியிருக்கிறார் பைரப்பா.

வம்ச தூய்மையை வலியுறுத்தும் பண்டிதர், அதற்கு எதிரான காரியத்தில் இறங்கும் மருமகள் என்பது நாவலின் ஒரு மையம். எடுத்துக்கொண்ட லட்சியத்துக்காக கட்டிய மனைவியை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை மணந்துகொள்ளும் சதாசிவ ராயர், இரண்டாவது மனைவியின் விருப்பங்களை பொருட்படுத்துவதில்லை என்பது இன்னொரு மையம். இந்த இரண்டு மையங்களை குறுக்கும் நெடுக்குமாக ஆழ்ந்து ஆராய்வதே நாவலின் பலம்.

இந்த மோதல்களுக்கு நடுவே நேரடியாக இதில் தொடர்பில்லாத ஆனால் இதன் விளைவுகளைச் சந்திக்க நேரும் பிற கதாபாத்திரங்களின் நிலையும் அதனால் எழும் கேள்விகளும் முக்கியமானவை. பண்டிதரின் மனைவி பாகீரதம்மா, ராயரின் மனைவி முதல் மனைவி நாகலட்சுமி, இரண்டாம் மனைவி கருணா ரத்னே, பண்டிதரின் பணியாள் லட்சுமி, காத்தியாயினியின் மகன் சீனி ஆகியோர் எழுப்பும் கேள்விகளும் உறவுகள் சார்ந்தும் வாழ்க்கை குறித்துமான அவரவர் தரப்புகளுக்கு வலு சேர்க்கின்றன.  

அற வாழ்வு, மரபைப் பேணுதல், லட்சியத்தை அடைதல் என ஆண்கள் தங்களின் நோக்கத்துக்காக மட்டுமே வாழும்போது அவர்களுக்கு இணையாக வாய்க்கும் பெண்களின் இருப்பு பொருளற்றுப் போகும் அவலமும் அபத்தமும் எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாதவை. ‘திருமணம் என்பது குடும்ப தர்மத்தை நிறைவேற்றும் ஒரு சடங்கு. வம்சத்தை தளைக்க உருவாக்கப்பட்ட ஏற்பாடு. பிள்ளையைப் பெற்றுத் தருவதோடு மனைவியின் கடமை முடிந்துவிடுகிறது’ என்று நம்புகிறவர் பண்டிதர், ‘மகத்தான லட்சியத்தை நோக்கிய பயணத்தின்போது குடும்ப வாழ்வும் மனைவியும் அதற்கு நிறைவேற்ற ஒத்துழைப்பவராக இல்லாதபட்சத்தில் அந்த உறவு அன்றாடத்தின் தொல்லையாகவே மாறும்’ என்றும் ‘லட்சியத்தை அடைய சமநோக்குள்ள பெண் சகபயணியாக இருக்கலாம். அதைத் தவிர்த்து பிற எளிய சாமானிய ஆசைகளுக்கு உரிமைகளுக்கு அவள் இடம்கொடுக்கலாகாது’ என்றும் வலியுறுத்துபவர் ராயர். இந்த இருவரும் சொல்லும் காரணங்கள் வெவ்வேறாக இருப்பினும் பெண்களைக் குறித்த மனநிலை ஒன்றுதான்.  

இதற்கு மாறாக, பெண்களின் மனநிலை, ஆண்களின் குறுகிய பார்வையை நுட்பமாக விமர்சிப்பதாக அமைந்துள்ளது. பண்டிதருக்கு இல்லற சுகத்தை அளிக்க முடியாத நிலையில் வீட்டுப் பணியாளான லட்சுமியை இணங்கச் செய்கிறார் பாகீரதம்மா. லட்சுமியும் அதற்கு சம்மதிக்கிறார். பண்டிதர் வலியுறுத்தும் அறத்துக்கும் தூய்மைவாதத்துக்கும் எதிரான செயல்பாடு என்பதை இருவரும் உணராதவர்கள் அல்ல. ஆனால்,  அவர்களுக்கு ஆழமான அறநெறிகளையும் கோட்பாடுகளையும்விட, அன்றாட வாழ்வின் எளிய சந்தோஷங்களே அப்போதைக்கு முக்கியம்.  அந்தந்த நாளைக் கடந்து எதிர்காலத்தை பற்றி யோசிப்பதில்லை. ஆராய்ச்சியிலும் நூல் உருவாக்கத்திலும் உதவும்பொருட்டு சதாசிவ ராயரை மணந்துகொள்ள சம்மதிக்கும் கருணா ரத்னே, வேறெந்த சாதாரண விருப்பங்களுக்குக் கூட இடம் கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் கூடவே ஏற்றுக்கொள்வது ஒருவித தியாக மனநிலை.

இந்த மூவருக்கும் மாறாக, மிகத் துணிச்சலுடன் எல்லாவற்றையும் மறுத்து தன் விருப்பத்துக்கு ஏற்ப ராஜாராவை மணந்துகொள்ளும் காத்தியாயினி தன் வயிற்றில் கருக்கள் தங்காதபோது பாவ புண்ணியம் சார்ந்த குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறார். இறுதியில் மன்னிப்பு கேட்டபின்பே மரணமடைகிறார்.

எது சரி, எது தவறு என்கிற இருமைகளின் மோதல்களால் தன் காரியங்களை தீர்மானிக்க முடியாதவர்களாக இருப்பவர்கள் சதாசிவ ராயரும் காத்தியாயினியும். அவ்வாறான இருமையின்றி தன் வாழ்வைக் குறித்த தடுமாற்றமற்ற தெளிவான பார்வையைக் கொண்டவர்கள் சீனிவாச பண்டிதரும் கருணே ரத்னாவும். இந்த இரு எல்லைகளுக்கும் நடுவில் கொடுக்கப்பட்ட வாழ்வை அதன் சாதக பாதகங்களுடன் அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் பாகம்மா, நாகலட்சுமி, லட்சுமி ஆகிய மூன்று பெண்கள்.  

கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டவர்களின் முடிவு சரியா, வேண்டியதை போராடி பெற்றுக்கொண்டவரின் முடிவு சரியா?

4

வாழ்க்கை, பண்பாடு, மனித இயல்பு ஆகியவற்றின் போக்குகள் குறித்து ஆழமாக உரையாடும் இந்த நாவல், நீண்ட விவாதங்களுடனும் உளமோதல்களுடனும் அமைந்திருப்பது இயல்பே. இதை ஒரு நாவலாக எழுதுவது என்பது சவாலான ஒன்று. எஸ்.எல்.பைரப்பாவின் புனைவுத் திறன் அந்த சவாலை பல்வேறு நுட்பங்களுடன் மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறது.  

1960களில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலின் குறிப்பிடத்தக்க புனைவம்சமாக அமைந்திருப்பது நாவலின் பகுதியாக அமைந்துள்ள இதன் உட்பிரதிகள்.      

சதாசிவ ராயர் எழுதும் ‘இந்தியப் பண்பாட்டின் வரலாறு’ என்ற பெருநூல், நாவலில் தன்னிச்சையாக இடம் பெற்றிருக்கும் ஒன்றல்ல. அவர் ஒரு பேராசிரியர். ஆய்வு செய்து எழுதுகிறார் என்பதால் இடம் பெற்றிருக்கும் ஒன்றல்ல. இந்த நூல் இந்தியப் பண்பாட்டு வரலாற்றைப் பேசுகிறது. இந்தியப் பண்பாடு தனிமனிதனின் மீது விதிக்கிற, கட்டுப்படுத்துகிற சில நியமங்களை, நிபந்தனைகளையும் அதன் சாதக, பாதகங்களையும் இந்த நாவல் ஆழமாக விதிக்கிறது. எந்தவொன்றை நோக்கி இந்த நாவல் கேள்விகளை எழுப்புகிறதோ, அது உருவாகி வந்த பாதையைக் குறித்து நாவலின் முதன்மை கதாபாத்திரம் ஆய்ந்து எழுதுகிறது. அதுவே தன் வாழ்க்கை என்று வேறெதையும் பொருட்படுத்தாமல் அதிதீவிரமாக ஈடுபடுகிறது. அந்தவொரு காரியத்துக்காக   இந்தியப் பண்பாடு விதிக்கக் கூடிய முக்கியமான அம்சத்தையே மீறவும் செய்கிறது. எனவே, நாவல் தன்னுடைய முதன்மை  கதாபாத்திரத்தைக் கொண்டே தன்னை விவாதத்துக்கு உட்படுத்திக் கொள்கிறது என்பது முக்கியமானது. அந்த வகையில் சதாசிவ ராயர் எழுதும் நூல் இந்த நாவலின் உட்பிரதியே.

இதேபோல, ராஜாராவ் எழுதி இயக்கும் ‘மூலாதாரம்’ என்ற நாடகமும் இந்த நாவலின் இன்னொரு உட்பிரதியாக அமைந்திருக்கும் ஒன்றுதான்.   ‘எப்போதும் புதியவளாக, நிரந்தர ஆற்றலுடன் இருக்கும் பிரகிருதி (இயற்கை)யை செயற்கை அறத்தால் கட்டிப்போடுவது அநீதி. இயற்கை என்றும் இளமையானவள். அதன் அழகான மெய்வடிவத்தை அழிக்க நினைக்கும் அறம் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும்’ என்பது அந்த நாடகத்தின் அடிப்படை. இது நாடகத்தின் கதாபாத்திரம் சொல்வதுதான். ஆனால், அது நாடக வசனம் மட்டுமல்ல. அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் காத்தியாயினி தன் வாழ்வைக் குறித்து எழுப்பும் கேள்விகள் அவை. ஒரே வருடத்தில் கணவனை இழந்த ஒரு இளம்பெண்ணுக்கு இயல்பாக எழும் கேள்விகளையும் விழைவுகளையும் அவற்றின் அடிப்படையில் எடுக்கும் துணிச்சலான முடிவையும் குறிப்புணர்த்துவதாகவே இந்த நாடகம் நாவலின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

கபிலை நதிக்கரையில் அமைந்திருக்கும் நஞ்சன்கூடு கிராமத்தையும் மைசூரையும் பின்னணியாகக் கொண்டிருக்கும் இந்த நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும் இயற்கைச் சூழல்கள் பல சந்தர்ப்பங்களில் அந்தந்த கதாபாத்திரங்களின் மனவோட்டங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. நஞ்சன்கோட்டுக்கும் மைசூருக்குமான காத்தியாயினியின் ரயில் பயணங்கள், சாம்ராஜபுரம் ரயில்நிலையத்தையொட்டிய சுடுகாட்டில் சிதைகள் எரியும் காட்சி, அதன் பிறகான மலையேற்றம், நந்திமலையில் சதாசிவ ராயரும் கருணாவும் மேற்கொள்ளும் நடைப்பயணங்கள் ஆகியவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். சதாசிவ ராயரும் கருணாவும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் பல்கலைக் கழக அறையின் சூழலும் அவர்களுடைய வீடும் எடுத்த காரியத்தில் அவர்கள் கொண்டிருக்கும் தீவிரத்தை காட்டுவதாக அமைந்துள்ளன.

பண்டிதரின் வீட்டுக் கொல்லையில் இருக்கும் கற்பூரக் கிளுவை மரத்தில் ஒரு மல்லிகைக் கொடி. கிளுவை மரம் காய்ந்து போவதைக் கவனித்த காத்தியாயினி பண்டிதரிடம் சொல்கிறாள். அதைக் கவனித்த பண்டிதர் ஒரு ஆளை வரவழைத்து காய்ந்த மரத்தை எச்சரிக்கையுடன் வெட்டி எடுக்கிறார். மல்லிகைக் கொடியை பழுதுபடாமல் விடுவித்து அருகில் ஒரு மூங்கில் தடியை நட்டிப் படரவிடுகிறார். இன்னொரு கற்பூர கிளுவையை பக்கத்தில் ஊன்றி தண்ணீர் ஊற்றுகிறார். இரண்டொரு வாரங்களில் மரம் தளிர்விட, மல்லிகைக் கொடியை மரத்தில் படவிடுகிறார். காய்ந்த மரத்தோடு சேர்ந்து மல்லிகையும் காய்ந்துவிடும் என்று கவலைப்பட்ட காத்தியாயினிக்கு பூத்துச் சொரியும் மலர்களும் அவற்றின் மணமும் மகிழ்ச்சியளிக்கின்றன.

பண்டிதர் வீட்டுக் கொல்லையில் காட்டப்படும் கிளுவை மரமும் மல்லிகைக் கொடியும் நாவலின் இரு ஆழமான படிமங்களாக உருமாறிவிடுகின்றன. இதேயளவுக்கு தாக்கத்தைத் தரும் இன்னொரு படிமம் நஞ்சன்கோடு கிராமத்துக்கும் மைசூருக்கும் இடையிலான ரயில் பயணம். அது மரபுக்கும் நவீனத்துக்குமான பயணமாக மாறிவிடுகிறது.

முதன்மை கதாபாத்திரங்களின் மனவோட்டங்கள் அதிகமும் இடம் பெற்றிருக்கும் இந்த நாவலின் சில அத்தியாயங்களை பைரப்பாவின் அபாரமான புனைவாற்றலுக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

அன்றிரவு சதாசிவராயர், கருணாவை திருமணம் செய்யும் தன் முடிவை மனைவி நாகலட்சுமியிடம் தெரிவிக்க நினைக்கிறார். வழக்கத்துக்கு மாறாக விரைவிலேயே படுக்கை அறைக்கு வந்து ‘நாகூ’ என்று அவளை அழைப்பதை அவரது விழைவாகப் புரிந்துகொண்டு ஆதரவாக தழுவிக்கொள்கிறாள் மனைவி. நலிந்த அவர் உடல் நலம் குறித்து கவலை கொள்கிறாள். அவரது மன உறுதி கரைகிறது. கண்ணீர் விடுவதைக் கண்டு அவரை ஆறுதல் படுத்துகிறாள். குழந்தையை இறுகத் தழுவிப் படுத்திருக்கும் அன்னையைப் போல அவரைத் தழுவிக் கிடக்கிறாள். தூங்க முடியாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்கிறார் சதாசிவ ராயர். இந்த அத்தியாயத்தில் பைரப்பா காட்டும் எளிய குடும்பச் சித்திரம் மிக முக்கியமானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தம்மைப் பொருட்படுத்தாத கணவர்களை, மனைவிகள் மிக எளிய, பாசாங்கற்ற நடவடிக்கைகளால் வெற்றிகொள்ள முடியும் என்பதைக் காட்டும் நுட்பமான பகுதி.

கர்ப்பப் பை பலவீனம் என்பதால் உடல் உறவு மறுக்கப்பட்ட நிலையில் பாகீரதம்மா, தன் கணவரின் வேட்கையை நிறைவேற்றும் பொருட்டு பணியாள் லட்சுமியை சம்மதிக்கச் செய்கிறாள். கணவரிடமும் பக்குவமாக எடுத்துச் சொல்கிறாள். லட்சுமி அறையில் காத்திருக்க, அங்கு செல்ல விரும்பியும் முடியாது தவிக்கிறார் பண்டிதர். அறம் சார்ந்த அவரது மனநிலை அவரைத் தடுக்கிறது. அதே நேரம், அவருக்காக விருப்பத்துடன் காத்திருக்கிறாள் லட்சுமி. கணவனை இழந்தவள். சிறு வயதிலிருந்தே பண்டிதரின் மீது சற்றே விருப்பம் கொண்டவள். ஆசைக்காக இல்லாவிடினும் கடமையின் பொருட்டு அவரோடு சேர்வதற்காக தவிப்புடன் எதிர்பார்த்திருக்கிறாள். மூவருக்குள் அந்த இரவில் நடக்கும் ஊசலாட்டத்தை காட்டும் இந்த அத்தியாயமும் நாவலின் மிக முக்கியமான ஒன்று. 

5

ஒரு நாவல் முடிவில் நம்முள் எழுப்பும் கேள்விகளும் சிந்தனைகளுமே அந்த நாவலின் தர வரிசையை நம்முள் நிறுவும். 1965இல் எழுதப்பட்டிருந்தாலும் இந்த நாவல் முன்னிறுத்தும் விவாதங்கள் இன்றும் பொருள்மிக்கவை. மரபுக்கும் நவீனத்துவத்துக்குமான மோதல்களும் ஊசலாட்டங்களும் காலத்துக்கும் நீடிப்பவை. முற்றுப்பெறாதவை. அந்த மோதல்களின் வழியாக அடையும் மாற்றங்களைக் கொண்டு மரபை மேலும் நெருங்கிப் புரிந்துகொள்ளவும் நவீனத்தை அணுகி விமர்சிக்கவும் வாய்ப்பிருக்கிறது. வம்ச விருட்சம் நாவலும் அத்தகைய சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

வம்ச விருட்சத்தின் புனிதத்தைப் பேணுதலையே வாழ்க்கையாக கொண்ட பண்டிதர், உண்மையில் தன் பிறப்பின் ரகசியத்தை அறிந்த பின் நொறுங்கி, மரபின் மீதான நம்பிக்கையைத் துறந்திருக்க வேண்டும். இயல்பில் அதுவே நடக்கும். ஆனால், பண்டிதர் அவ்வாறான முடிவுக்கு வருவதில்லை. எப்போதும் போல சமநிலையுடன் அணுகி முழுமையான துறவறத்தை மேற்கொள்கிறார். இவ்வாறான உறுதியான மனநிலைக்கு மரபின் வழியாக அவர் வாழ்க்கையைப் பக்குவத்துடன் புரிந்துகொள்ள முடிந்துள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு பக்கம், அறக் கட்டுப்பாடுகளைவிட தனிமனித விருப்பமே முக்கியம் என்று துணிச்சலுடன் குடும்பத்திலிருந்து வெளியேறி, மறுமணம் புரிந்துகொள்ளும் காத்தியாயினி இறுதியில் தனது வாழ்வின் துயரங்களுக்கு அத்தகைய பாவங்களே காரணம் என்று குற்றவுணர்ச்சி கொள்கிறாள். இறுதியில் பண்டிதரிடமும் தன் மகனிடமும் மன்னிப்பைக் கோரிய பின்பே மரணமடைகிறாள். காத்தியாயினியின் இந்த முடிவு நவீன மனத்தையும் அதன் முடிவுகளையும் விமர்சிக்கும் விதமாக அமைந்திருப்பதைக் கவனிக்கலாம்.

எழுதப்பட்ட காலகட்டத்தை வைத்துப் பார்க்கும்போது இந்த நாவல் எழுப்பியிருக்கும் விவாதங்கள் முக்கியமானவை. விடுதலைக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தில் இந்தியச் சூழலில் பெண்களின் வாழ்க்கை குறித்த பார்வையில் ஏற்பட்ட  மாற்றங்களுக்கு இத்தகைய விவாதங்களும் காரணமாயின. இத்தனை ஆண்டுகள் கழித்து ‘வம்ச விருட்சம்’ தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் இந்த விவாதங்களுக்கு இன்னும் இடம் இருக்கிறது என்பதே இந்த நாவலின் சமகாலப் பொருத்தத்தை உறுதிப்படுத்துகிறது.

0

வம்ச விருட்சம் – எஸ்.எல்.பைரப்பா

கன்னடத்திலிருந்து தமிழில்  - கே.நல்லதம்பி

எழுத்து பிரசுரம் வெளியீடு – மார்ச் 2024 விலை ரூ.600/-

Thursday, 12 September 2024

வேறு நிலம், வேறு முகம், ஒன்றே வலி - லதாவின் சீனலட்சுமி தொகுப்பைக் குறித்து


கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில் ‘சமகால பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ குறித்து உரைநிகழ்த்தும்படி கேட்டுக் கொண்டதையடுத்து ஏற்கெனவே வாசித்த சில சிறுகதைகளையும் புதிய சிறுகதைகளையும் தேடிப் படிக்க வாய்த்தது. அயலகச் சிறுகதையாளர்கள் சிலரது கதைகளையும் இணையத்தின் வழியே தேடிப் படிக்க முயன்றேன். ‘அறை’ என்ற ஒரு சிறுகதை கண்ணில்பட்டது. வீட்டில் நிகழ்ந்திருக்கும் ஒரு மரணம் அங்கே தங்கியிருக்கும் பெண்ணுக்குள் ஏற்படுத்தும் மனவோட்டங்களை மையமாகக் கொண்டது அந்தக் கதை. சாவு வீட்டின் சூழலில் அதற்கு சற்றும் தொடர்பில்லாத ஒருவர் சந்திக்க நேரும் உளச்சிக்கல்களை திருத்தமாகச் சொல்லியிருந்தது. அகவயமாகவே கதையை நகர்த்தவேண்டிய அசாதாரணமான களம் வெகு சாமர்த்தியமாக கையாளப்பட்டிருந்தது. இணைய இதழ் ஒன்றில் வெளியான லதாவின் கதை அது. அதைத் தொடர்ந்து காலச்சுவடு வெளியிட்ட ‘நான் கொலை செய்த பெண்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பைப் பெற்று படிக்க முயன்றேன். கிடைக்கவில்லை. ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ என்ற கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.

‘சீனலட்சுமி’ என்ற தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. எட்டு கதைகளைக் கொண்டது. ஒரேயொரு கதையைத் தவிர பிற கதைகள் அனைத்தும் பெண்களின் கதைகள். அம்பை, ஆர்.சூடாமணியில் தொடங்கி உமாமகேஸ்வரி, சந்திரா, ஜா.தீபா வரையிலுமான பெண் எழுத்தாளர்களின் கதைகளில் ஒரு பொதுவான புள்ளியை கண்டடைய முயல்வோமானால் ‘பெண்களுக்கான இடம்’ என்பதாகவே அது இருக்கும். வரலாற்றில், சமூகத்தில், அன்றாட வாழ்வில் பெண்களுக்கான இடம் குறித்து கேள்வி எழுப்பும், விமர்சனம் செய்யும், வலியுறுத்தும் குரல்களை அந்தக் கதைகளில் கேட்க முடியும். லதாவின் கதைகளில் ஒலிக்கும் குரலும் அவ்வாறான இடத்தைக் கேள்வி கேட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கிறது. காலமும் களமும் வேறு என்றாலும் எழுப்பப்படும் கேள்வியும் அதற்கான காரணங்களும் உலகளாவியதாகவே உள்ளன. பெண்கள் பொதுவாக எல்லா இடங்களிலும் எல்லா காலத்திலும் அனுபவிக்க நேர்கிற தடைகளுடன் புறக்கணிப்புகளுடன் அடக்குமுறைகளுடன் சேர்ந்து, புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் அந்நிய நிலம், அந்நியமான கலாச்சாரம் போன்ற சில கூடுதல் காரணிகளையும் கடந்து சமாளிக்க வேண்டியுள்ளது. 

புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் வாழத் தலைப்பட்ட பெண்களின் வாழ்வியல் நிலைகளை, அனுபவங்களை வரலாற்றினூடாக கால வரிசையில் அணுகுவதாக அமைந்துள்ளன இந்தக் கதைகள். விடுதலை பெறும் கனவுடன் 1943ல் சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏயில் சேர்ந்து பணியாற்றுவதற்கு முயலும் வேணியிலிருந்து தொடங்கி (தேக்காவில் ஒரு பாலம்) குழந்தைப் பேறுக்குப் பிறகான நாட்களில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தவிக்கும் நீலமலர் (இளவெய்யில்) வரையிலுமாக இக்கதைகள் தரும் பெண்களின் வரிசையைக் கொண்ட வரைபடம் இதுவரையிலுமான மனிதகுல முன்னேற்றங்களையும் சாதனைகளையும் பெருமிதங்களையும் கசப்புடன் கேலிசெய்வதாக அமைந்திருக்கிறது. உலகியல் சார்ந்த புறவயமான பெருமளவிலான மாற்றங்களை சாத்தியப்படுத்தியிருக்கும் அத்தனை சாதனங்களும் கருவிகளும் மனிதனின், குறிப்பாக ஆணின், மன ஆழத்திலும் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் பெண்களுக்கான இடத்தை அங்கீகரிப்பதில் அவனுக்குள்ள அக இயல்பில் சிறிய அளவிலான சலனத்தையும் ஏற்படுத்த இயலாதவையாக அமைந்திருப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

வரலாற்றிலும் சமூகத்திலும் இயல்பாக, நியாயமாக அமைய வேண்டிய பெண்களுக்கான இடத்தை அவர்கள் அடைய முடியாமல் செய்யும் தடைகள் எவை என்ற கேள்விகளை இக்கதைகளின் வழியாக எழுப்பிக்கொள்ள முடியும். காலங்காலமாக தொடர்ந்து பெண்களுக்கென்று வகுக்கப்பட்டு வரையறைக்கப்பட்டிருக்கும் எல்லைகளை மீறும் முயற்சிகளும் போராட்டங்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன என்பதையும் இக்கதைகள் அடிக்கோடிட்டுக் காட்ட மறக்கவில்லை.

‘தேசத்தின் விடுதலை’ என்ற ஒற்றை இலக்கின் கீழ் இனம், மொழி, பால், சாதி, பொருளாதாரம், இருப்பிடம் போன்ற பிற எல்லா மனமாச்சரியங்களும் வேறுபாடுகளும் பொருளற்றுப் போகும் என்பதே நம்பிக்கை. அப்படித்தான் வரலாறு கற்பித்துள்ளது. இந்த கற்பிதத்தை உடைத்து நொறுக்கும் உண்மைகள் தொடர்ந்து வெளிப்பட்டு வந்துள்ளன. சுபாஷ் சந்திர போசுடன் ஐ.என்.ஏவில் சேர்ந்து போராடும்போது சொந்த மண்ணுக்குத் திரும்பலாம், விடுதலை பெறலாம் என்ற கனவுடன் களத்துக்கு வரும் பெண்களை, படையணியில் உள்ள சக பெண்களே புறக்கணிப்பதற்கான காரணமாக அமைந்திருந்தது சாதி என்னும் உண்மை வரலாற்றில் சொல்லப்படாத ஒன்று. சாதி வேறுபாடுகளுக்கு முன்பு தேச விடுதலை, மானுட விடுதலை போன்ற லட்சியங்கள் பொருட்டல்ல என்ற மனப்பான்மையை ‘தேக்காவில் ஒரு பாலம்’ போன்ற கதைகளிலிருந்துதான் அடையாளம் காண முடிகிறது. சாதி மனப்பான்மைக்கு ஆட்படுவதில் ஆண், பெண் பேதமில்லை என்கிற கசப்பான யதார்த்தத்தையும் கண்டுகொள்ள முடிகிறது.

‘காவடி எடுக்க உரிமையில்லை’, ‘படகிலேறி கடலில் மீன் பிடிக்கக்கூடாது’, ‘போர் முனையில் சண்டை போட அனுமதியில்லை’ போன்று வாழ்வின் எல்லா திசைகளிலும் வாய்ப்புகளிலும் தொடர்ந்து புதிது புதிதான தடைகளை விதிக்கும் ஆண்களின் ஆதிக்கப் போக்கே பெண்களின் முதன்மையான சவால்களாக அமைந்திருப்பதை எல்லாக் கதைகளும் உணர்த்துகின்றன. கடுமையான உடல் உழைப்பைத் தந்து குடும்பத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்புணர்வுடனும் இருந்தபோதிலும் ஆண்களின் அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலை மாறவில்லை. அம்மாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக உடனிருக்கும் பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், திருமண ஏற்பாடுகள் குறித்த நேரத்தில் நடப்பதில்லை, அழைக்கும்போது பேசுவதில்லை போன்ற காரணங்களுக்காக தொடர்பிலிருந்து விலகிச் செல்லும் மணமகனின் உளநிலையும் புறக்கணிப்பும் அந்தப் பெண்ணின் மீது அவன் செலுத்தும் உளவியல் வன்முறைதான்.

தடைகளையும் சவால்களையும் கடந்து செல்ல முனையும்போது ஏற்கவேண்டிய வலிகளையும் இக்கதைகள் உணர்த்துகின்றன. நோய்மை வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. இரு கைகளையும் இழந்தவள் கணவனால் புறக்கணிக்கப்படுகிறாள். மகளையும் விட்டுத்தர நேர்கிறது. புற்றுநோய் வாதைகளைத் தாங்கிக் கொள்வதுடன் அன்றாடத் தேவைகளுக்குக்கூட இன்னொருவரின் உதவியை நாடவும் அதை சகித்துக்கொள்ளவும் வேண்டியுள்ளது. சருமத்தைத் துளைத்து வடுக்களை ஏற்படுத்தும் இன்சுலின் ஊசிகளைக் குத்திக் கொள்ள நேர்கிறது. இத்தகைய உடல் வலிகளுடன் புறக்கணிப்பின் அகவதையையும் சகித்துக்கொள்ள நேர்கிறது.

இவற்றிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளவும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் பல்வேறு நம்பிக்கைகளை பற்றிக்கொள்ள நேர்கிறது. தைப்பூச விழாவின் போது ஈடுபாட்டுடன் காவடிகளைத் தயார் செய்கிறார்கள், தேசத்துக்காக போரிட தயாராகிறார்கள், தாத்தாவிடமிருந்து மீன் பிடிக்கும் நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார்கள், மீன்களைக் கொண்டு விதவிதமாக சமைத்துப் பரிமாறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி. அலுக்காமல் வரிசைகளில் நின்று சாதிக்க எண்ணுவதும்கூட அவ்வாறான ஒரு நம்பிக்கைதான். கைபேசி விளையாட்டுகளில் மூழ்குவதும் தற்படங்களை ஏற்றி நண்பர்களின் பாராட்டுக்களைப் பெற விழைவதும்கூட தங்களது நெருக்கடியிலிருந்து விலகி சற்றே நிதானித்துக்கொள்ளும் உத்திதான். பக்தி, பாசம், சமையல், தையல்வேலை, இசை, ஒப்பனை, விளையாட்டு என்று தங்களுக்கான வழிகளில் ஒன்றில் ஈடுபடுத்திக்கொள்வதன் வழியாகத்தான் கிடைக்காத இடத்தின், அங்கீகாரத்தின் வெறுமையை நிறைவு செய்துகொள்ள முடிகிறது.

இந்தக் கதைகளின் ஊடாக சில அபாரமான நுண் உணர்வுகளை மிக நுட்பமாகக் காட்டியிருக்கிறார் லதா. ‘நிர்வாணம்’ கதையில் திரண்டு அழகுறும் அம்மா-மகள் உறவை உதாரணமாகச் சொல்லலாம். அம்மா, மகள் என்ற உறவு நிலைக்கப்பால் இருவரும் இருவேறு பெண்கள். அவரவர் அந்தரங்கங்கள் வேறு. இன்னொருவரின் உதவியுடனே தன் அன்றாடங்களைக் கழிக்க நேரும் அம்மாவின் உளநிலையைப் புரிந்துகொள்ளும்போது மகளுக்கும் அவளுக்குமான நெருக்கம் கூடுகிறது. உடல் சார்ந்த கூச்சங்கள் மறைகின்றன. சிறுமியாக இருந்த காலத்தை இருவரும் எட்டும்போது உடலின் நிர்வாணம் பொருட்டாகத் தெரிவதில்லை. உடுத்தாத உடலை ‘கோகுல் சாண்டல்’ பவுடரின் வாசனையுடன் பின்னிருந்து கட்டிக்கொள்ளும் புள்ளியைத் தொடும்போது கதை முழுமையடைகிறது. சொற்களில் எளிதில் சிக்காத இந்த உணர்வுகளை இயல்பான சித்தரிப்பின் வழியாக கச்சிதமாக திரளச் செய்யும் பெரும் சவாலை லதா மிக அபாரமாக கையாண்டிருக்கிறார்.

எழுதப்பட்டுள்ள சொற்களால் உருவாகியிருக்கும் கதையினுள் நுட்பமான உணர்வுகளைப் பொதிந்து வைத்திருக்கும் புனைவுத்திக்கு இன்னொரு உதாரணம் ‘காவடி’. கதையின் நாயகியான ஆத்தா, தாத்தாவுக்கு மூன்றாவது மனைவி. நான்கு குழந்தைகள். தாத்தாவின் சொற்ப வருமானம் போதாத நிலையில் பிள்ளைகளின் பசிபோக்க கடுமையாக உழைத்தவள். உடலெங்கும் கன்றி காய்க்கும் அளவுக்கு தாத்தாவிடம் அடி வாங்கியவள். தைப்பூசத்தின்போது அரிகண்ட காவடி எடுக்கும் தாத்தாவுக்கு உற்சாகத்துடன் உதவுபவள். காவடி ஊர்வலங்களில் சலிக்காமல் நடந்தவளுக்கு காலில் பட்ட சிறுகாயம், நீரிழவின் காரணமாக குணமாகாமல் புரையோடி தசைகளைத் தின்றுவிட்டது. சிகிச்சைக்காகக் காத்திருக்கிறாள். நினைவிழந்தும் மீண்டும் படுக்கையில் கிடப்பவளின் எண்ணம் முழுக்க காவடி எடுத்துச் செல்லும் தைப் பூச விழாவினையே சுற்றி வருகிறது. பேத்தியிடம் தொடர்ந்து காவடிக் கதைகளை சொல்வதாக அமைந்துள்ள கதையின் உள்ளே வாழ்நாள் முழுக்க உடலிலும் மனத்திலும் அலகுகளைக் குத்தி எண்ணற்ற காவடிகளை சுமந்த அவளது நெஞ்சுரத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. ‘ஊசி குத்தி குத்தி காயந்துக் கறுத்திருந்த அவரின் இடுப்புப் பகுதி அரிகண்டம் போடுபவர்களின் இடுப்பாகி இருந்தது’ எனும் கடைசி வாக்கியம் அதுவரையிலும் சொல்லப்பட்ட தாத்தாவின் கதையை மாற்றி ஆத்தாவின் கதையாக்கி விடுகிறது.

ஒரே கதையின் இரண்டு பகுதிகள்போல் அமைந்திருக்கும் ‘அலிசா’வும் ‘வலி’யும் இரு முகங்களைக் கொண்ட ஒரே பெண்ணின் கதையைத்தான் சொல்கின்றன. சிங்கப்பூருக்கு அப்பால் உள்ள உபின் தீவில் வளரும் அலிசா மீன் பிடிக்கும் நுட்பங்களைத் தாத்தாவிடம் கற்றுக்கொள்வது கதை. இதற்குள் வெவ்வேறு தரவுகளும் உணர்வுகளும் செறிவாக அடுக்கப்பட்டுள்ளன. வாழ்வின் பல்வேறு முன்பறியாத சூழல்களுக்கும் அனுபவங்களுக்கும் அலிசா தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் விதமாகவே கதையின் சம்பவங்கள் அடுக்கப்பட்டுள்ளன. ‘வலி’ கதையை இதன் தொடர்ச்சியாக அணுக முடியும். விதவிதமாக மீன் சமைப்பதில் தேர்ச்சி பெற்றவள், கைகளை இழந்து தொட்டி மீன்களைக் கொண்டு தன்னை திருப்திபடுத்திக்கொள்ளும் அவலத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறாள். கைவிடப்படுவதின் துயரத்தில் அவர்கள் இருவரும் மூழ்கிவிடுவதில்லை. அலிசா துணிச்சலுடன் மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறாள். கைகளை இழந்தவளோ மகளின் வருகைக்காக மீன் தொட்டியுடன் தயாராகிறாள்.

லதாவின் இக்கதைகள் வலுவான புதிய பெண் கதாபாத்திரங்களை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. எல்லா பெண்களுக்குமான வலியையும் தடைகளையும் சந்திப்பவர்கள்தான் என்றாலும் அவற்றை கடந்துசெல்லும் விதங்களே அவர்களைத் தனித்துவப்படுத்துகின்றன. இவர்களது உலகில் ஆண்கள் முக்கியமற்றவர்கள் என்றாலும் இவர்களுக்கான இடத்தையும் உரிமைகளையும் தீர்மானிப்பவர்கள் அவர்கள்தான் என்பதையும் கவனிக்க முடிகிறது. கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அடையாளம் சொல்லும் அளவுக்கு கனபரிமாணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

லதாவின் கதைமொழி எளிமையானது. சிடுக்குகள் இல்லாதது. தனித்துவமானது. இயல்பாக உரையாடுவதுபோல கதைத் தொடங்குகிறது. தெளிவுடன் நகர்கிறது. சொல்ல வேண்டியவற்றை மட்டும் சிக்கனமாகச் சொல்கிறது. கதையின் உள்ளடுக்குகளைப் குறித்த சுட்டிகளை மட்டும் அங்கங்கே மிகக் குறைந்த சொற்களில் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறது. பெரும்பாலான கதைகள் உரையாடல்களால் அமைந்தவையே. அகமோதல்களையும் உணர்வுகளின் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும் அடங்கிய தொனியில் அழுத்தமாகக் காட்டிவிடுகின்றன.

சம்பவங்களையும் திருப்பங்களையும் கொண்டு கதை சொல்லும் உத்திக்கு மாறாக மன உணர்வுகளைத் தொட்டுக் காட்டுவதன் மூலமாக மட்டுமே முழுமையான அனுபவ உலகத்தை உருவாக்க முனைந்திருக்கும் விதத்தில் தனித்துவம் பெறுகின்றன லதாவின் கதைகள். உரையாடல்களின் வழியாக சிக்கனமான சொற்களின் மூலமாக ஆங்காங்கே கசியும் வெளிச்சத்தைக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத பகுதியை அனுமானிக்கவேண்டிய சவால்களைக் கொண்டிருக்கின்றன. பெண்களுக்கான இடம் மறுக்கப்படுவதை கேள்விக்குள்ளாக்கும் கதைகள் என்றபோதும் எந்த இடத்திலும் அரசியல் குரல் வலுத்தோ ஓங்கியோ ஒலிக்கவில்லை என்பதும் இந்தக் கதைகளுக்கான இயல்புகளில் ஒன்று.

அயல்நிலத்துக்கான துலக்கமான அடையாளங்களுடன், தனித்துவமிக்க குணாம்சங்கள் கொண்ட கதாபாத்திரங்களின் வழியாக உலகளாவிய அளவில் தொடர்ந்து விவாதிக்கப்படும் பிரச்சினை குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன என்கிற வகையில் இவை அடர்த்தியானவை, அழுத்தமானவை. 

Saturday, 17 August 2024

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2024


 

இரண்டு மாதங்களுக்கு முன்பு இரவு 8 மணிக்கு பாவண்ணன் தொலைபேசியில் அழைத்தார். பெங்களூரைச் சேர்ந்த புக் பிரம்மா அமைப்பு இலக்கிய விழா ஒன்றை மூன்று நாட்கள் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். தென்னக மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் தமிழ் ஒருங்கிணைப்பாளர் பணியைத் தன்னிடம் ஒப்படைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு சில வாரங்கள் வரை எந்தத் தகவலும் இல்லை என்பதால் அதைப் பற்றி யோசிக்கவில்லை. 

ஆனால், சில நாட்களிலேயே புக் பிரம்மா அமைப்பிலிருந்து மின்னஞ்சல் வந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்து பயண விபரங்களைக் கேட்டறிந்தனர். மூன்று நாட்களுக்கான நிகழ்ச்சி நிரலும் அனுப்பப்பட்டது. 

இந்திய அளவில் ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒன்று. இது தவிர, கேரளாவிலும் கர்நாடகாவிலும் இத்தகைய திருவிழாக்கள் நடக்கின்றன. இத்தகைய  பன்மொழி நிகழ்வுகளின் அவசியம் என்ன? தமிழைத் தவிர பிற மொழிகளில் நடப்பவற்றை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு இது. நாம் வாசித்து வியந்த பிற மொழி எழுத்தாளர்கள் சிலரை நேரில் சந்திக்க முடியும். உரையாட முடியும். அந்தந்த மொழிகளின் சமகால நடப்புகள், பிரசுர வாய்ப்புகள், நூல் விற்பனை, மொழியாக்கம்,

விமர்சனப் போக்குகள், தமிழ் இலக்கியம் குறித்து பிற மொழியினர் எந்த அளவுக்கு அறிந்துள்ளனர் என்பது போன்ற பலவற்றையும் தெரிந்துகொள்ளவும் இதுவொரு வாய்ப்பு. பிற மொழிகளில் எழுதும் இன்னும் சில பெயர்கள் அறிமுகமாகின்றன. சில களங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதுவொரு பரிமாற்றக் களம். மொழிகளுக்கிடையிலான தொடர்புக்கான பாலம். எல்லாவற்றையும்விட, மற்ற மொழிகளை அவை பேசப்படும்போது கேட்பது முக்கியமான அனுபவம். ஒரு மொழியின் சொற்கள் உச்சரிக்கப்படும் விதமும், ஏற்ற இறக்கங்களும் அவற்றின் வழியாக வெளிப்படும் ஒலிகளும் அந்த மொழியை மேலும் நெருக்கமாக உணர உதவுகின்றன.  


இந்த விழாவை ஏற்பாடு செய்யும் புக் பிரம்மா அமைப்பு, கன்னட இலக்கியம், புத்தகங்கள், நிகழ்ச்சிகள் சார்ந்தவற்றை ஒருங்கிணைக்கும் உலகளாவிய மின் ஊடக நிறுவனம். புத்தக வெளியீடுகள், எழுத்தாளர்களுடனான உரையாடல்கள் போன்றவற்றை தங்களது வலைத்தளம் வழியாக கொண்டுசெல்கிறார்கள். கன்னட சிறுகதைகளையும் கவிதைகளையும் இந்த வலைத்தளத்தின் வழியாகக் கேட்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக கன்னட இலக்கியத்துக்கு மட்டும் நடத்தி வந்த இத்தகைய விழாவை இப்போது தென்னிந்தியா மொழிகளுக்கான விழாவாக மாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்களுக்கு விருது வழங்கப்படுகின்றன. இந்த வருடம் முதல் இந்திய மொழிகளில் இலக்கியத்துக்கு முக்கிய பங்களிப்பைச் செய்திருக்கும் ஒருவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ ஒன்றை நிறுவியுள்ளனர். 2024ஆம் ஆண்டுக்கான விருது ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.       
  

பெங்களூர் சென்று சேரும் வரை பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இருக்கவில்லை. மூன்று நாட்கள் பெங்களூரில் நண்பர்களுடன் இருக்க ஒரு வாய்ப்பு என்பதே முதன்மையாக இருந்தது. கோவையிலிருந்து கவிஞர் சுகுமாரனும் ஈரோட்டிலிருந்து மோகனரங்கனும் சேர்ந்துகொண்டனர். பெங்களூர் ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல வாகனங்கள் காத்திருந்தன. வளாகத்தை அடைந்தவுடன் வரவேற்கவும் அறைகளுக்கு அழைத்துச் செல்லவும் தன்னார்வலர்கள் உற்சாகத்துடன் இருந்தனர். செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் மரங்களடர்ந்த வளாகத்தில் அழகிய விசாலமான அரங்கத்தில் விழா. அருகிலிருந்த விடுதியில் தங்குவதற்கான அறைகள். இரண்டுக்கும் நடுவில் உணவுக்கூடம். அதையடுத்து தேநீர் அருந்தியபடி உரையாட மர பெஞ்சுகளுடனான திறந்தவெளி அரங்கம். அருகில் புத்தக அரங்குகள்.

மறுநாள் காலையில் தேநீர் அருந்தும்போதே கவிஞர் சச்சிதானந்தனைச் சந்திக்க முடிந்தது. பல வருடங்களுக்கு முன்பு ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழின் சிறப்புப் பக்கத்தில் வெளியான அவருடைய ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டேன். அடுத்தடுத்து தென்னக மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் பதிப்பாளர்களும் வந்து சேர்ந்தனர். அறிமுகங்கள், கைகுலுக்கல்கள், தற்படங்கள். வளாகமெங்கும் கலந்தொலித்தன தமிழும் மலையாளமும் தெலுங்கும் கன்னடமும் ஆங்கிலமும்.

‘தென்னகத்தின் ஆன்மா’ ( Soul of South ) என்பது விழாவின் முகப்பு வாக்கியம்.


BBLF#2024 ன் இயக்குநரும் கன்னட எழுத்தாளருமான சதீஷ் சப்பரிகே வரவேற்றார். ‘தெகன நுடி கௌடி’ என்ற தலைப்பில் நடந்த தொடக்க விழாவில் கே.சச்சிதானந்தன் தலைமையில் ஹெச்.எச்.சிவபிரகாஷ், வோல்கா, ஜெயமோகன், விவேக் ஷான்பாக் ஆகியோர் உரையாற்றினர். ‘தென்னக மொழிகள் - இருப்பின் கேள்வி’ என்ற தலைப்பிலான இரண்டாம் நாள் தொடக்க விழாவில் பால் சகாரியா, பெருமாள் முருகன், நாகபூஷனம், வடரேவு சின்னபத்ருடு, பிரதிபா நந்தகுமார் ஆகியோர் உரையாற்றினர்.

மண்டபா, மதனா, அங்கலா, அக்ஷரா ஆகிய அரங்குகளில், நாவல், சிறுகதை, கவிதை, மொழியாக்கம், நூல் பதிப்பு, நவீன தொழில்நுட்பங்கள் குறித்து வெவ்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடந்தன. நான்கு மொழிகளிலிருந்தும் மூத்த, இளம் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விமர்சகர்கள், வாசகர்கள் கலந்துரையாடல்களில் பங்கு பெற்றனர். ஐம்பது நிமிட அளவிலான கலந்துரையாடல்கள். மூன்று அல்லது நான்கு பேர் பங்கேற்றனர். நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, பதிப்புத்துறை ஆகியவற்றின் சமகாலப் போக்குகள், செவ்வியல் இலக்கியத்தின் சமகாலப் பொருத்தங்கள் என தலைப்புகள் அனைத்தும் கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மொழியிலும் சமகாலத்தில் நிகழும் போக்குகள் குறித்து அறிவதற்கான வாய்ப்பாக அமைந்திருந்தது. ஆனால், குறிப்பிட்ட மொழி சார்ந்த எழுத்தாளர்கள் தங்களது மொழியிலேயே உரையாடியதால் பிறமொழியைச் சேர்ந்தவர்களால் அவர்களது கருத்துகளை, ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தபோதிலும், முழுக்க அறிய முடியவில்லை. மலையாளம், கன்னடம் குறித்து நமக்கு ஓரளவு அறிமுகம் உண்டு. ஆனால், நமக்கு பெரிய அளவில் அறிமுகம் இல்லாத தெலுங்கு இலக்கியத்தின் சமகாலப் போக்குகள் நம்பிகையளிக்கும் விதத்தில் இருப்பதை உணரமுடிந்தது. 


முதல் நாள் அரங்கில், தமிழ்க் கவிதைகளில் அகமும் புறமும் என்ற தலைப்பில் சுகுமாரன், இசை, பொன்முகலி, சாம்ராஜ் ஆகியோர் கலந்துரையாடினர். ‘தமிழ் வாசகர் குரல் - ஜன்னல்கள் வழியாகத் தெரியும் உலகம்’ என்ற தலைப்பில் சரவணன் மாணிக்கவாசகம், க.மோகனரங்கன், தங்கமணி, நாகராஜன் ஆகியோர் உரையாடினர். ‘பெருமாள் முருகனுடன் ஒரு உரையாடல்’ நிகழ்ச்சியில் பாவண்ணனும் எம்.கோபாலகிருஷ்ணனும் பங்கெடுத்தனர். இரண்டாம் நாளன்று தலித் இலக்கியம் சவால்களும் சாதனைகளும் என்பதைக் குறித்து கமலாலயன், சுகிர்த ராணி, ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரும், ‘சிறுகதைகள் - புதிய தருணங்கள், புதிய அனுபவங்கள்’ என்ற தலைப்பில் சுநீல் கிருஷ்ணன், கார்த்திக் பாலசுப்ரமணியன், ஜா.தீபா, எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாடினர். மூன்றாவது நாளில், ‘தமிழ் நாவல்-விரிவடையும் புதிய எழுத்துக் களம்’ என்பதைப் பற்றி சு.வேணுகோபால், கலைச்செல்வி, கடலூர் சீனு ஆகியோர் பேசினர். சுரேஷ் பிரதீப், கயல், காளி பிரசாத், ரம்யா ஆகியோர் ‘மொழிபெயர்ப்பு-புதிய உலகம், புதிய சிந்தனைகள்’ என்பதைக் குறித்து விவாதித்தனர். இவ்விரண்டு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் வெவ்வேறு அரங்குகளில் ஒழுங்குசெய்யப்பட்டதால் ஏதேனும் ஒன்றையே தெரிவு செய்யவேண்டிய சிக்கல். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அடுத்த முறை இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.  

அரங்குகளில் பங்கேற்றவர்களைத் தவிர பெங்களூரில் வசிக்கும் நண்பர்கள் பலரும் விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.

கன்னட மொழி சார்ந்த உரையாடல்கள், கவிதை வாசிப்பு அனைத்தும் ஒரு அரங்கில் தனியாகவும் நடந்தன. அருமையான ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மானசி சுதிர், மேக்னா ஆகியோரின் கவிதை நடனங்கள் இவ்விழாவின் இன்னொரு சிறப்பம்சம். சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் நடந்த, நண்பர் செங்கதிர் மொழிபெயர்த்த கபீர் கவிதைகள் வெளியீட்டு விழாவின்போது நடந்த இசை நிகழ்ச்சியில் வேதாந்த் பரத்வாஜுடன் இணைந்து கபீர் பாடல்களை பாடிய பிந்து மாலினியின் கச்சேரி இந்த விழாவில் இடம்பெற்றிருந்தது. தம்புராவை மட்டும் இசைத்தபடி பாடிய அவரது குரலுக்கு அத்தனை வசீகரம். அமீர் குஸ்ரு, கபீர், அக்கமாதேவி, பத்மா சுப்ரமணியம் ஆகியோரின் பாடல்களுடன் பாரதியின் ‘பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே’ பாடலையும் பாடினார். பாரதியின் ‘தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?’ என்ற வரிகளை அவர் பாடிய விதத்தை இப்போதும் மறக்க முடியவில்லை. ஞாயிறு காலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்டிட் வெங்கடேஷ் குமாரின் கச்சேரிக்கு அரங்கு நிறைந்திருந்தது. ஒருபுறம் தபலா, இன்னொரு பக்கம் ஆர்மோனியம், பக்கவாட்டில் தம்புராவுடன் ஒரு இந்துஸ்தானி இசைக் கலைஞன் மேடையில் பாடுவதை நேரில் பார்ப்பதென்பது இணையற்ற அனுபவம். மேடையில் அவர் பாடவில்லை. அந்த ராகங்களை நிகழ்த்திக் காட்டினார். ‘அக்கா கேளவா நானொந்து கனச கண்டேன்’ என்ற அக்கமாதேவியின் வசனத்தை பாடியபோது அரங்கமே குதூகலம் கொண்டிருந்தது. மேடையில் மிக லகுவாக இருந்தார். தபலாவுக்கான ஒலிவாங்கியின் அளவு  ஏறக்குறையவே இருந்ததை சரிசெய்தபடியே பாடினார். இடையிடையே அரங்கில் இருந்தோரிடமும் இயல்பாக உரையாடினார். ஒரு இலக்கிய விழாவில் இத்தகைய சில இசை நிகழ்ச்சிகள், ஓவியக் காட்சிகள், நடனங்கள், நாடகங்கள் இடம் பெறும்போதுதான் அது முழுமை அடைகிறது. 

ஞாயிறு மதியமே ஊருக்குப் புறப்பட வேண்டியிருந்ததால் பல நல்ல நிகழ்ச்சிகளைக் காண முடியாததில் வருத்தம். மாலையில் நடந்த யக்ஷகானத்தைத் தவறவிட்டது இப்போதும் வருத்தம் தருகிறது. அடுத்த முறை நிகழ்ச்சியில் முழுமையாக பங்கெடுக்காமல் முன்கூட்டியே புறப்பட்டுச் செல்லும் இந்தத் தவறைச் செய்யக்கூடாது.

 விழா தொடங்கிய முதல் நாளிலேயே முகநூலெங்கும் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் தேர்வு குறித்த விமர்சனங்களைக் காண முடிந்தது. எந்தவொரு விருது அறிவிக்கப்படும்போதும் எந்தவொரு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளிவரும்போதும் இத்தகைய விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. இது இயல்பான ஒன்றுதான். ஒரு நிகழ்வில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்ய முடியும். அந்தப் பொறுப்பில் இருப்பவர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே பங்கேற்பாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். யார் இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டாலும் இப்படித்தான் செய்ய முடியும். எந்தவொரு பங்கேற்பாளர் பட்டியலும் இவ்வாறான விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது. நாற்பது ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்தில் இயங்கி வரும் பாவண்ணன் இந்த சிரமமான பொறுப்பை எடுத்துக்கொண்டிருந்தார். இது அவரது தெரிவு, அவரது முடிவு. சிலரைச் சேர்த்திருக்கலாம், சிலரைத் தவிர்த்திருக்கலாம் என்று நாம் ஒவ்வொருவரும் எண்ணக்கூடும். நமக்கு அப்படியொரு பொறுப்பு வரும்போது முடிந்தவரை இந்த விமர்சனங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு தேர்வு செய்ய முயலலாம்.

 

கவிஞர் சச்சிதானந்தம் அவர்களின் வயது 78. மூன்று நாட்களும் உற்சாகம் குறையாது அரங்குகளில் பங்கேற்றதைப் பார்க்கும்போது வியப்பாக இருந்தது. மலையாளத்தின், பிற இந்திய மொழிகளின் சமகாலப் போக்குகளை அறிந்து வைத்திருக்கிறார். தொடர்ந்து வாசிக்கிறார், எழுதுகிறார். காலையிலிருந்து மாலை நிகழ்ச்சிகள் முடியும் வரை, அடுத்தடுத்த அரங்குகளில் பங்கேற்கவிருக்கும் எழுத்தாளர்களை தொடர்புகொண்டு அவர்களை தயார்படுத்தும் பரபரப்புடனே இருந்தார் பாவண்ணன். நிகழ்ச்சியின் இயக்குநரான சதீஷ் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தோம். ‘இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடப்பதற்கு காரணம் நீங்களெல்லாம் இங்கு வந்திருப்பதுதான். நான் ஒன்றும் செய்யவில்லை. ஒவ்வொரு வருடமும் வந்திருந்து மூன்று நாட்கள் எங்களுடன் தங்கியிருந்து இதைச் சிறப்படைய செய்யவேண்டும். அதுதான் நாங்கள் எதிர்பார்ப்பது’ என்றார். சதீஷ் கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள் எழுதுபவர். இந்த நிகழ்ச்சி நடந்த மூன்று நாட்களும் சற்றும் குறையாத உற்சாகத்துடன் வளாகத்துள் அவரைக் காணமுடிந்தது. நிகழ்ச்சி முழுக்க கச்சிதமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. நேரலையில் ஒலிபரப்பப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவியர் பலர் தன்னார்வலர்களாக பணிகளை மேற்கொண்டிருந்தனர். இந்த விழாவின் வெற்றியில் இவர்கள் ஒவ்வொருவரின் பங்கும் முக்கியமானது.

 

இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடக்கும் என்று சொன்னார்கள். அப்படித் தொடருமாயின் ‘புக் பிரம்மா இலக்கியத் திருவிழா’ தென்னகத்தின், இந்தியாவின் முக்கியமான இலக்கியத் திருவிழாக்களில் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


Tuesday, 30 January 2024

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’


மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துணையுடன் நாம் வாழும் புறவுலகை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே வருகிறோம். காலமும் இடமும் நம் முன்னே வைக்கும் சவால்களைத் தொடர்ந்து முறியடித்து முன்னேறியபடியே இருக்கிறோம். இதற்கு மாறாக மனித அகம் மேலும் மேலும் சிக்கலாகிக்கொண்டே உள்ளது. நோய்களும் உளச் சிக்கல்களும் பெருகிவிட்டன. மனத்தின் புதிர்வழிகளை ஊடறுத்து அதைப் புரிந்துகொள்ள உளவியல் சார்ந்த அறிவுத்துறைகள் தொடர்ந்து முயன்றபோதும் அதன் ஆழமும் இருண்மையும் வலுப்பெற்றபடியேதான் உள்ளன. உள்ளம் திரிபுறும்போது உறவுகளும் நிலைகுலையும். அடுத்த மனிதனுடனான உறவு சீராக இல்லாதபோது வாழும் சூழலும் இணக்கமின்றி சரியும். மனிதன் கண்டுபிடித்துள்ள அறிவுத்துறைகளும் தொழில்நுட்பங்களும் அவனது அகத்தையும் மனித உறவுகள் சார்ந்த சிக்கல்களையும் பகுத்துப் பார்த்து தீர்வுகளை தர இயலாத நிலையில் அவனுக்குக் கைகொடுக்கும் முக்கியமான, தவிர்க்கமுடியாத கருவியாக இருப்பது கலையும் இலக்கியமுமே.

ஒரு மனிதனின் வழக்கத்துக்கு மாறான, சற்றே வித்தியாசமான வாழ்வை, பிறிதொரு நோக்கில் அணுகும்போது பல கேள்விகளையும் சிந்தனைகளையும் திறப்புகளையும் அளிக்கிறது. நடைமுறைக்கு மாறான சில சாத்தியங்களையும் புனைவின் வழியாக உருவாக்கிப் பார்க்க முடிகிறது. அறிவியல் பரிசோதனைகளைப்போல புனைவின் வழியாகவும் சில சோதனைகளை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.

புறவாழ்வின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளுக்கும் அறிவியல்பூர்வமாக சில விளக்கங்களையும் பதில்களையும்கூட தந்துவிட முடியும். ஆனால், அகம் சார்ந்த வினாக்களுக்கு பதில்கள் யாவும் எண்ணற்ற சாத்தியங்களாகவே நம் முன் உள்ளது. ஒரு மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட சூழலில் செல்லுபடியாகும் ஒரு தீர்வு அதே மனிதனின் இன்னொரு சூழலுக்கும் பிரச்சினைக்கும் பொருந்திப் போவதில்லை. அதேபோல, ஒரு மனிதனின் குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வாக அமைந்த ஒன்றை இன்னொரு மனிதனின் அதே பிரச்சினைக்கு பரிந்துரைக்கும்போது அது வெற்றியடையும் என்ற உறுதியும் இல்லை. எனவே, பொதுவான எல்லோருக்கும் பொருந்திப்போகும்படியான தீர்வுகள் உளவியல், உறவுகள் சார்ந்த சிக்கல்களுக்கு இல்லை. இங்குதான் கலையும் இலக்கியமும் திரண்டு வருகின்றன. முழு முற்றான தீர்வுகளைத் தரமுடியாதபோதும் கலையும் இலக்கியமும் அந்தப் பிரச்சினைகளின் ஆதார வேர்களைக் கண்டறிந்து அவற்றைப் புரிந்துகொள்ள துணை நிற்கின்றன. தனி மனிதனின் பிரச்சினையை, துயரத்தை, வாதையை அது பொதுவான ஒன்றாக மாற்றிக் காட்டுகிறது. இந்தப் புரிதல் மனிதர்களை திடப்படுத்துகிறது. மேலும் உரத்துடனும் உற்சாகத்துடனும் முன்னகர ஊக்கந்தருகிறது.

அக ஆழத்தைக் கண்டறியும் இலக்கியத்தின் பாதையே என் கதைகளின் பாதையும். மனத்துள் இருக்கும் மர்மங்களைக் கண்டறிவதென்பது வாழ்க்கையைப் புரிந்துகொள்வதுதான். ஆனால், அது அத்தனை சுலபமில்லை. இருண்ட அதன் புதிர்வழிகள் தடுமாறச் செய்யும். தலைச்சுற்ற வைக்கும். அதே சமயத்தில் எதிர்பாராத புதிய திறப்புகளையும் ஆச்சரியங்களையும் அங்கங்கே புதைத்து வைத்திருக்கும். சரியான ஒரு சொல்லோ புனைவுத் தருணமோ அந்த இடத்தில் கைவைக்கும்போது அவை திறந்துகொள்ளும். எழுதுபவனுக்கு மட்டுமல்லாமல் வாசிப்பவனுக்கும் புதிய வெளிச்சத்தைக் கொடுக்கும். இதிலுள்ள இன்னொரு வேடிக்கை என்னவென்றால் சமயத்தில் அது எழுத்தாளனின் கைகளுக்குத் தட்டுப்படாமல் வாசகனுக்கு மட்டும் வாய்க்கும் என்பதுதான்.

சிவகாமி, சக்தியோகம், ஊதாநிற விரல்கள், முனிமேடு, சீசர், முறிவு, தருணம், உடன் பிறந்தது போன்ற பல கதைகளும் மன ஆழங்களின் பல்வேறு இடுக்குகளைத் தொட்டுக் காட்டுகின்றன. ‘தீர்த்த யாத்திரை’ அவ்வாறான ஒரு அகவழிப் பயணம் தான். ஒரு கணம் ஒளியும் மறுகணம் இருளுமாய் தடுமாறச் செய்யும் இப் புதிர்வழிகளைத் தொடர்ந்து செல்வது புனைவின் பெரும் சவால். அந்தச் சவால் எனக்குப் பிடித்திருக்கிறது. இருளை நோக்கிச் செல்லும் என்னை அது ஒளியின் முன்னால் நிறுத்தும் அற்புதம் ஏதேனும் ஒரு கணம் நிகழும். அந்த ஒரு நொடிக்காகவே பல நூறு இருட்கணங்களை பதைப்புடன் கடந்து போகிறேன்.

குகையில் வாழ்ந்த காலத்திலிருந்து இன்றைய அணுயுகம் வரையுமான பாதையில் மனிதன் தொடர்ந்து தன்னை மாற்றிக்கொண்டேதான் வருகிறான். தவறுகளை உணர்ந்து சரிசெய்கிறான். ஒழுக்க நியதிகளை வகுத்து அவற்றை கடைபிடிக்கிறான். சக மனிதனுடனான உறவையும் சமூக வாழ்வையும் முடிந்தமட்டிலும் சீராக வைத்திருக்கவே விழைகிறான். ஆனாலும், அடிப்படை உயிர் விசைகளான பசியும் காமமும் அவனை எந்த நேரத்தில் என்னவிதமான காரியத்துக்குத் தூண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடிவதில்லை.

பசி, காமம் இரண்டும் செலுத்தும் மனிதனின் பாதையையே எழுத்துத் தொடர்கிறது. என் கதைகளின் வழியாக இந்த ஆதி விசைகளின் வெவ்வேறு அலைகளைத் தொட்டுப் பார்த்து உணர முயல்கிறேன். ஆண் பெண் உறவுகளின் எல்லையில்லாத முடிச்சுகளில் ஒன்றையேனும் அவிழ்த்துவிட முடியுமா என்று வெவ்வேறு விதங்களில் அந்தக் கதைகளைச் சொல்லிப் பார்க்கிறேன்.  இரவு, நிலைக் கண்ணாடி, வால்வெள்ளி ஆகிய கதைகளும் மணல் கடிகை, மனைமாட்சி நாவல்களும் அப்படிச் சொல்லிப் பார்த்தவைதான்.

பசியே மனிதனுக்கு சேர்த்துவைக்கும் ஆசையை ஏற்படுத்துகிறது. அடுத்த வேளை பசிக்கான உணவை பத்திரப்படுத்துவதில் தொடங்கி அது அடுத்தடுத்த தலைமுறைக்கு கணக்கிலடங்கா சொத்துகளை சேர்த்து வைக்கும் பேராசையாக பயங்கரமாக உருமாறியிருக்கிறது. வேலை, தொழில், வளர்ச்சி என்று வெவ்வேறு பெயர்களில் இதைச் சுட்ட முடியும் என்றாலும் அனைத்தின் ஆதார விசையும் இந்த பசியும் அதன் உபவிளைவான சுயநலமும்தான். சுயநலம் முதலில் தன் பசி ஆற்றுகிறது. தனக்கான உணவை உத்தரவாதப்படுத்தியதும் குடும்பம், பிள்ளைகளுக்கான உணவை பின் வசதிகளை உறுதிப்படுத்துகிறது. இதற்காக அது எந்த எல்லைக்கும் செல்லும். அடுத்தவனை கெடுக்கும். துரோகம் இழைக்கும். உழைப்பை நசுக்கும். இயற்கையை சுரண்டும். வளங்களைக் கொள்ளையடிக்கும். இதில் சரி, தவறுகளுக்கான கோடுகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். நான் பிறந்த, வளர்ந்த திருப்பூர் ஒரு சிற்றூர். என் கண் முன்னே அது தொழில் நகரமாக வளர்ந்தது. உழைப்பின், திறமையின் மூலமாக எப்படிப்பட்ட உயரங்களையும் எட்டலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்தது. பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது. கடும் உழைப்பின் வழியாக உலகையேத் திரும்பிப் பார்க்க வைத்த அதே நகரம்தான் அறமும் மதிப்பீடுகளும் வேகமாக சரியும் அவலத்தையும் காட்டியது. தொழில் வளர்ச்சிக்கு முன் நிலமும் நீரும் காற்றும் மாசுபடுவதோ சூழல் சீர்கெடுவதோ முக்கியம் ஒன்றுமில்லை என்ற அலட்சியத்தை அடையாளப்படுத்தியது. பெருவளர்ச்சியின் இரு பக்கங்களையும் சிறிதும் பெரிதுமாக கண்ணெதிரில் கண்டுணர முடிந்தது. என் ஆரம்ப காலச் சிறுகதைகளான இருப்பு, விளிம்பில் நிற்கிறவர்கள், இலையுதிர்காலம், விடுதலை போன்றவை இவற்றையே மையம் கொண்டிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. இதன் உச்சமாக அமைந்தது ‘மல்லி’. இவை அனைத்தும் ஒன்றிணைந்து உருவான பெருநாவலே ‘மணல் கடிகை’. ஒருவகையில், இக்கதைகள் அனைத்துமே ‘மணல் கடிகை’ நாவலின் பகுதிகளே. ‘மணல் கடிகை’யில் உள்ள திருப்பூர் இன்று இல்லை. அங்கிருந்து வெகுதூரம் நகர்ந்துவிட்டது அந்த நகரம். அந்த மாற்றங்களையும் தடுமாற்றங்களையும் சொல்ல இன்னொரு ‘மணல் கடிகை’தான் எழுதவேண்டும்.

பசி உடலின் தீயென்றால் காமம் உயிரின் நெருப்பு. இதுவே உயிர்களை உறவுகளை இயக்கும் கனல். ஆண் பெண் உறவுகளின் எண்ணற்ற கோலங்களை, திரிபுகளை, விசித்திரங்களை, உன்னதங்களை அன்றாடம் தொடர்ந்து காண்கிறோம். அதன் தொடர்ச்சியாகவே திருமணம், குடும்பம் உள்ளிட்ட சமூக நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  மாறிவரும் சமூகச் சூழலுக்கும் மதிப்பீடுகளுக்கும் ஏற்ப அவற்றின் சமகாலப் பொருத்தங்களைப் பற்றிய கேள்விகளை நம்மால் புறந்தள்ளிவிட முடியாது. குடும்ப அமைப்பு ஒரே சமயத்தில் பெரும் பாதுகாப்பையும் கூடவே பலமான கட்டுப்பாடுகளையும் தருகிற ஒன்று. திருமணம், குடும்பம் சார்ந்த சமகாலக் கேள்விகளை வெவ்வேறு கோணங்களில் எழுப்புவதன் வழியாக அதைப் பற்றிய அழுத்தமான விவாதங்களையும் அவற்றின் மூலமாக சில தெளிவுகளையும் அடைய முடியும் என்ற நோக்கில் அமைந்ததே ‘மனைமாட்சி’ நாவல்.

இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் தொழில் கைத்தறி நெசவு. என் குடும்பத் தொழிலாக இருந்த நெசவிலிருந்து வெகு வேகமாக விலகி வந்துவிட்டது கடந்த இரண்டு தலைமுறைகள். எங்கள் பகுதி முழுவதும் ஒலித்திருந்த தறிச் சத்தங்களை இன்று அக்கம்பக்கத்தில் வெகு தொலைவு வரை எங்கும் கேட்க முடியவில்லை. புதிய தலைமுறையினருக்கு தறியையும் அதன் வெவ்வேறு உப தளவாடங்களையும் கண்ணில் காட்டுவதற்குக்கூட ஒன்றும் மிச்சமில்லை. இந்தியாவின் மத்திய பகுதியிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் இடம்பெயர்ந்து தமிழகத்துக்கு வந்து சேர்ந்த ஒரு இனத்தின் அடையாளம் இன்று மாறிவிட்டது. இந்த இனக்குழுவின் பயணத்தை, வாழ்க்கையை இலக்கியத்தின் வழியாக மட்டுமே பத்திரப்படுத்த முடியும். நெசவைப் பற்றியும் நெசவாளர்களின் பாடுகளைப் பற்றியுமான என் கதைகளின் உத்தேசம் அதுதான். ‘அம்மன் நெசவு’ம் சில கதைகளும் அந்த இலக்கை நோக்கி எழுதப்பட்டவையே.

அகமும் புறமுமாய் எதிரெதிராகச் சுழன்றபோதும் இப் புனைவுகள் ஒரு வட்டத்தைப் பூர்த்தி செய்பவையாகவே இருக்கின்றன. அதன் இன்னொரு பகுதியாகவே வரலாற்றுத் தகவல்கள், சம்பவங்களிலிருந்து புதிய புனைவை உருவாக்குவது. ஏற்கெனவே எழுதப்பட்ட ஒன்றில் உள்ள இடைவெளிகளை புனைவைக் கொண்டு நிரப்புவதன் வழியாக புதிய கோணத்தில் அந்த சம்பவத்தையோ சரித்திரத்தையோ காட்டுவது. ‘மண் வீணை’, ‘கஜாரிகா’ போன்ற கதைகள் அவ்வாறு எழுதப்பட்டவையே. அதன் தொடர்ச்சியாகவே, ‘மாயப் புன்னகை’ குறுநாவல் உருவானது. இன்னும் விரிவான அளவில், சரித்திரம் சமகாலம் இரண்டையும் சேர்த்து புலி வேட்டையை களமாகக் கொண்டு எழுதப்பட்டதே ‘வேங்கை வனம்’ நாவல். இவ்வாறான ஆக்கங்கள் சில புதிய சாத்தியங்களையும் தமிழ் களத்தில் பேசப்படாத களங்களையும் முயல்வதற்கான வாய்ப்புகளைத் தருகின்றன. புற நிகழ்வுகளை, தகவல்களைப் பேசுவது போல அமைந்துள்ள இந்த ஆக்கங்கள் யாவுமே உண்மையில் அக நுட்பங்களையே தீவிரமாக உணர்த்துகின்றன.

எழுத்து எனக்குப் பிடித்தமானது. எழுதும் கணங்கள் பெரும் பரவசங்களையும் அதே நேரத்தில் அவஸ்தைகளையும் அளிப்பவை. முன்பு உத்தேசிக்காத அபூர்வமான சில கணங்கள், காட்சிகள் தன்னிச்சையாக எழுதப்படும்போது எழுதியது நானல்ல என்பதை உணர்ந்து திடுக்கிட்டிருக்கிறேன். அபூர்வமாக எப்போதாவதுதான் வாய்க்கும் அவ்வாறான புனைவின் மாயத் தருணங்களுக்காகவே அன்றாடம் தொடர்ந்து எழுதியபடியே இருக்கிறேன். என் எழுத்து எனக்குத் தரும் நிறைவில், மகிழ்ச்சியில், உணர்வில் ஒரு பகுதியை அதை வாசிக்கும் முகம் தெரியாத ஒருவர் அடைந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வரும்போது தொடர்ந்து எழுதலாம் என்ற உற்சாகமும் ஊக்கமும் பிறக்கிறது. அவ்வாறான ஒரு நிறைவையும் மகிழ்ச்சியையும் உணர்வையும் என் எழுத்து என்னிடமோ, வாசகரிடமோ எட்ட முடியாதபோது எழுதுவதை நிறுத்திவிடுவேன். அதைவிட எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் வேறென்ன நியாயத்தை செய்துவிட முடியும்?

0

ஆகஸ்ட் 2023

(கே.பி.நாகராஜன் தொகுத்து, சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘ஏன் எழுதுகிறேன்?’ நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை)

 

 

 

Sunday, 12 November 2023

சாளரங்களின் வழியே மின்னும் வான் நட்சத்திரங்கள்


(உமாமகேஸ்வரியின் எழுத்துகள் குறித்த இந்தக் கட்டுரை, ‘நீலி’ நவம்பர் 2023 இதழில் வெளியானது)

0

மனிதனின் அவசியத் தேவைகளில் ஒன்றாகக் கருதப்படும் வீடு என்னும் பௌதீக அமைப்பு, ஆண் பெண் இருபாலருக்குமான ஒன்றாகவே பொதுவில் கருதப்படுகிறது. வீடு பாதுகாப்பானது, நமக்கான சௌகரியங்களை அனுமதிப்பது, நம்மை நாமாக இருக்க விடுவது என்பது போன்ற எண்ணற்ற சாதகமான கூறுகளை வீட்டுடன் பொருத்திப் பார்க்க முடியும். முக்கியமாக, வீடென்பதே குடும்பம். குடும்பத்தின் குறியீடு வீடுதான். இந்திய மரபின் முக்கிய அம்சம் குடும்பம். இந்தக் குடும்ப அமைப்பு ஆண்களால் உருவாக்கப்பட்டது. ஆண்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. இதில் பெண்களுக்கான இடம் என்ன? இந்த அமைப்பில் அவர்களது பங்கு என்ன? ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உண்மையில் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது எது? ஒரு வெற்றிகரமான குடும்பத்தின் இலக்கணம் என்ன? மகிழ்ச்சி என்பதை எப்படி வரையறுக்கிறார்கள்? ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் வெற்றியும் மகிழ்ச்சியும் எதைச் சார்ந்தது? ஒவ்வொரு தனி மனிதனுக்குமான இடத்தை குடும்பம் எந்த அளவுக்கு அனுமதிக்கிறது? எல்லோரையும் கட்டி நிறுத்துவது பணமா, பாசமா?

இப்படி எண்ணற்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணமே உள்ளன. இந்திய அளவில் பல முக்கியமான புனைவுகளும் குடும்ப அமைப்பின் பல்வேறு கூறுகளைக் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. எஸ்.எல்.பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’, விவேக் ஷான்பாக்கின் ‘காச்சர் கோச்சர்’, சீர்சேந்து மகோபாத்யாயவின் ‘அத்தைக்கு மரணமில்லை’ ஆகிய சில உதாரணங்களை இங்கு குறிப்பிடலாம். தமிழில் இவ்வாறான நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’, எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ ஆகியவற்றை உதாரணத்துக்குச் சொல்லலாம்.

வீட்டின் மாட்சியும் மாண்பும் பெண்கள் என்பது மரபான நம்பிக்கை. பெண்களே வீடு சமைப்பவர்கள், பெண்களே அதன் மேன்மையை கட்டிக் காப்பவர்கள், பெண்ணில்லாத வீடு மங்கலமற்றது என்பன போன்ற மரபுக் கூறுகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.

உமா மகேஸ்வரியின் புனைவுலகும் வீடுதான். நமது மரபில் பெண்களின் மாண்பாக, பொறுப்பாக, வெளியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வீடு’ ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படுத்தும் எல்லாவிதமான சாத்தியங்களையும் தன் புனைவின் வழியாக பகுத்தும், அகழ்ந்தும் வெளிப்படுத்துகிறது உமா மகேஸ்வரியின் எழுத்து. அவரது புனைவுலகு வீட்டை களமாகக் கொண்டது. அது புறவுலகைக் காட்டும்போதுகூட வீட்டுக்குள்ளிருந்துதான் காட்ட முடிகிறது. ஒரு வீட்டின் நீள அகலங்களை, ஆழங்களை, அபத்தங்களை, ஓசைகளை, மணங்களை, அமைதியை, அலைகழிப்பை அது மிகத் துல்லியமாக விவரிக்கிறது. வீட்டுக்குள்ளிருந்தேதான் அது வானத்தைப் பார்க்கிறது. தொலைதூர மலைகளை வியக்கிறது. பறவைகளின் சிறகசைப்பையும், பூக்களின்  எழிலையும் கொண்டாடுகிறது.

‘இரவின் ஆழ்ந்த அமைதியோடு வீடு ஒரு மாபெரும் கொள்கலனாகியிருந்தது’. உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை’ நாவலின் தொடக்க வரி இது. உமா மகேஸ்வரியின் புனைவுலகை மிகச் சுருக்கமாக, செறிவாக வரையறுக்கும் வரி இதுவே.

வீட்டை மட்டுமே தங்கள் உலகமாகக் கொண்ட பெண்களே உமா மகேஸ்வரியின் கதாபாத்திரங்கள். குழந்தையாகப் பிறந்து சிறுமியாக வளர்ந்து பருவமடைந்து மணம்புரிந்து மனைவியாகி கருவுற்று அன்னையாகி பிள்ளைகள் பெற்று இறுதியில் மூச்சடங்கும் வரையிலான மொத்த வாழ்வுமே வீட்டுக்குள்தான். பிறந்து, தவழ்ந்து, நடை பழகி வளரும்போது வீட்டின் எல்லைகள் விரிந்துகொண்டேயிருக்கும். தோட்டம், பின்கட்டு என்று புதிய வெளிகளை அறிமுகப்படுத்தும். பிறகு மேலும் வளருந்தோறும் அந்த எல்லைகள் மெல்லக் குறுகும். கட்டுப்பாடுகள் தலைகாட்டும். அப்போதுதான் வீட்டின் சுவர்களுக்கும் கதவுகளுக்கும் வேறொரு அர்த்தம் புலப்படும். ஒரு வீட்டின் வளர்சிதை மாற்றத்தையே வாழ்வாகக் கொண்ட பெண்களின் அன்றாடத்தையும் புழுக்கங்களையும் அலுப்பையும் மீறல்களையுமே மிக நெருக்கமாகக் காட்டுவதே உமா மகேஸ்வரியின் புனைவுலகு.

அதன் துலக்கமான ஒரு சித்திரம்தான் ‘யாரும் யாருடனும் இல்லை’ நாவல். ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழும் பெண்களின் உலகம் அது. குடும்பத் தலைவி, அவரது மூன்று மருமகள்கள், பேரன் பேத்திகள், தங்கை, வேலையாட்கள் என்று பலர் சேர்ந்தும் விலகியும் நடமாடும் ஒரு பெரிய வீடு. மூப்புற்று உடல் சோர்ந்து கிடக்கும் நிலையிலும் ஓசைகள், வாசனைகளின் மூலம் நடப்புகளை அறிந்து குடும்பத்தின் அன்றாடங்களை கச்சிதமாக நிர்வாகம் செய்யும் குடும்பத் தலைவி. முறை வைத்து சமையல் செய்து, குருட்டுத் தாம்பத்யமும் பிள்ளைப் பேறுமாக புகுந்த வீட்டுக்குப் பெருமை சேர்க்கும் மருமகள்கள். அடுத்தடுத்து பிறந்து எண்ணிக்கை கூடும் பெண் குழந்தைகள். இந்த ஒட்டுமொத்த வீடும் பெண்களாலானது. பெண்களுக்கானது. ஆண்கள் இந்த வீட்டுக்கு இரவில் மட்டுமே வருகிறார்கள். இந்த வீட்டிலிருந்து எப்போதும் வெளியேறவே விழைகிறார்கள். பெண்களுக்கான இந்த வீடும் உலகமும் அவர்களுடையதுதான் என்றாலும் அதிலிருந்து அவர்கள் வெளியே செல்ல அனுமதியில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை உண்டு. பருவமெய்தும் வரை பள்ளிக்குச் செல்லலாம். தோட்டத்திலிருக்கும் மரத்தடியில் விளையாடலாம். கோயிலுக்கும் என்றேனும் தோட்டத்துக்கு பிள்ளைகளுடன் செல்ல வாய்க்கும். அவ்வளவுதான்.

இந்த சித்திரம் நாம் அறிந்த ஒன்றுதான். இது புதியவொரு களமும் அல்ல. புனைவுகள் வழியாக இவ்வாறான ஒரு பெண்களின் கட்டுப்படுத்தப்பட்ட உலகத்தை முன்பும் நாம் வாசித்திருக்கிறோம். ஏற்கெனவே சொல்லப்பட்ட ஒன்றை உமா மகேஸ்வரி எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறார் என்பதுதான் முக்கியமானது. பெண்களின் பாடுகளை, ஆணாதிக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அவர்களது வாழ்வை சொல்ல முனையும்போதே, ‘இது ஏற்கெனவே சொல்லப்பட்டதுதானே’ என்ற ஒரு சலிப்பு தலைகாட்டும். ஆனால், அவ்வாறான ஒரு முன்முடிவை விலக்கி அறிந்தவொரு உலகையும் வேறொரு உலகமாக அணுகுவதற்கான ஈர்ப்பை உத்தரவாதப்படுத்துவது உமா மகேஸ்வரியின் சித்தரிப்பு நேர்த்தி.

இரும்பு கிரில் கேட் திறக்கப்படும் சத்தம், விளக்குமாறு தரையில் உரசும் சத்தம், தொட்டியில் நீரிறைக்கும் ஒலி, கழுவிய வாளியில் பால் பீய்ச்சுகிற சீற்றம், மாடுகளின் செருமல் என்று வெவ்வேறு நுட்பமான ஓசைகளும் மெல்லிய ஏலக்காய் மணம், மாட்டுக் கொட்டிலில் எழும் சாணத்தின் மணம், வெல்லப்பாகில் ஏலக்காய் தூவும் மணம், போர்வையில் முகப்பவுடரின் வாசனை, கொடி முல்லையின் மணம், பிரசவ அறையின் விநோத நெடி என பலவிதமான வாசனைகளாலும் அந்த வீட்டை உயிர்ப்பித்து விடமுடிகிறது.

அவரது புனைவு மொழி கவிதையும் குழந்தைமையும் கலந்தவொன்று. வீட்டின் எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட பெண்களின் வாழ்வை, குழந்தைகளின் அல்லது சிறுமிகளின் பார்வை வழியே காட்டும்போது அதில் புதியவொரு கோணம் சாத்தியமாகிறது. வீட்டுக்குள் அடங்கியிருக்கும் பெண்களின் கதையில் உள்ள இறுக்கத்தை இந்தக் குழந்தைகளின் மொழி தளர்த்துகிறது. ஒவ்வொரு காட்சியையும் சொல்லையும் அசைவையும் தீரா வியப்புடன் நம் முன் நிகழ்த்திக் காட்டுகிறது.

சிறுமிகளின் விளையாட்டு உலகம் இணையாக விரியும்போது பெண்களின் துயருலகின் அழுத்தம் தணிந்துபோகிறது. அந்த வீட்டுப் பெண்களின் மன அழுத்தங்களுக்கும் துயரங்களுக்கும் நடுவில்தான் சிறுமிகள் விளையாடுகிறார்கள், பாடுகிறார்கள், வேடிக்கைப் புதிர்களில் திளைக்கிறார்கள். கடவுளுக்குக் கடிதம் எழுதுகிறார்கள். குழந்தைகளின் இந்த களங்கமின்மையும் ஆர்வமும் துறுதுறுப்புமே நாம் ஏற்கெனவே அறிந்த, பழக்கப்பட்ட துயர உலகினை வேறொன்றாக நமக்குக் காட்ட உதவுகிறது.

நாவலில் வருகிற ஆண்கள் அனைவரும் வெறும் கோட்டுச் சித்திரங்களே, குணாவைத் தவிர. இரவில் வீடு அடைபவர்கள். விளக்கணைத்த இரவில் உடல் தேடுபவர்கள். குழந்தைகள் அவர்களை நெருங்குவதில்லை. அஞ்சுகிறார்கள். ஆண்கள் குறித்த வழக்கமான இந்தச் சித்திரம் கூட விரிவாகச் சொல்லப்படவில்லை. சுருக்கமான மிகச் சில வரிகளில் குழந்தைகளின் மொழியில் அவர்களது இருப்பை வரையறுக்கின்றன. அவ்வாறு சொல்லப்படும்போது வழக்கமாக எழும் புகார் தொனியன்றி, இவர்கள் இப்படித்தான் என்பதுபோன்ற சாதாரணத்தன்மை மேலோங்குகிறது.

பெண்கள் மட்டுமே உலவும், பெண்களுக்கான இந்த உலகில் பெண்களுக்கிடையேயான உளமோதல்கள் வலுவாக அமைந்திருக்கும். எல்லா வசதிகளும் கொண்ட பெரிய வீட்டில், ஒவ்வொருவருக்கும் உரிய இடம் உண்டு என்றாலும் ஒப்பிடுவதையும் அதைக் குறித்து மனம் புழுங்குவதையும் தவிர்க்க முடியாது. அவ்வாறான உள மோதல்களையும் பொறாமைகளையும்கூட உரத்த குரலில் சொல்லாது இயல்பான நடவடிக்கைகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.

காமத்தின் பல்வேறு சாயல்கள், தழும்பல்கள், அலைச்சல்கள், அவஸ்தைகள் அனைத்தும் சிறிதும் கூடுதல் அழுத்தங்களின்றி வெகு இயல்பாகவும் செறிவாகவும் உரிய இடங்களில் கச்சிதமாக கையாளப்பட்டுள்ளன. காமத்தின்பால் பெண்களின் உளம் ஏற்கும் பாவனைகளையும் வேட்கையையும் துல்லியமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன.

பெண்களுக்கான உலகைக் காட்டும்போது அவர்களின் ஆசைகள், ஆழ்மனக் கிளர்ச்சிகள், பொறாமை, போட்டி, சலிப்பு, அனுசரணை, தாய்மை, வேகம், ஆவேசம், குமுறல் என அத்தனை உணர்ச்சிகளுக்கும் இடம் தரப்பட்டுள்ளது. அவர்களது உடை நேர்த்தி, ஆபரணங்கள், அலங்காரம் எல்லாமே துல்லியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அன்னம்மா தூக்கி முடிந்த கொண்டையோடு உல்லிஉல்லி சேலையில் சந்தைக்குப் போகும் காட்சியை உதாரணமாகச் சுட்டலாம். அதேபோல, அன்னம்மாவின் மூக்கில் சுடர்விடும் வைரம், கழுத்தில் படிந்த கெம்புக்கல் அட்டிகை, கனம் கனமான இரட்டை வடங்கள், மூன்று சரங்கள், முழங்கை வரைக்கும் வளையல்கள் என்று ஆபரணங்கள் பட்டியலிடப்படுவதையும் குறிப்பிடலாம்.

இத்தனை பெரிய வீட்டில், இத்தனை ஆட்கள் புழங்கும் வெளியில் உண்மையில் யாரும் யாருடனும் இல்லைதான். ‘அவள் வளையல்களின் பொன்னொலி லேசாக அசைந்து கொண்டேயிருக்கும் விடியும் வரை’ என்பது போன்று பெண்களின் தனிமையைச் சுட்டும் பல நுட்பமான வரிகள் நாவலில் உண்டு.

‘அம்மா அப்பாவின் வேட்டி நுனி போலத்தான். மடிப்பதும் இறக்கிவிடுவதும் அவிழ்த்தெறிவதும் அணிவதும் அவர் விருப்பம்’ போன்ற கூரிய சொற்கள் நாவலின் ஒட்டுமொத்த மையத்திலிருந்து அங்கங்கே மேலெழுந்து ஒலிப்பதுண்டு. கூடவே, பெண்ணிய சிந்தனையை உரக்கச் சொல்லும் இடங்களும் உண்டு.

ஒட்டுமொத்தமாக அந்த நாவல், வீட்டை விட்டு வெளியே செல்லும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவானவை. சுருக்கமானவை. அவ்வாறு வெளியே செல்லும்போதுகூட அது குழந்தைகளின் உலகமாகவே காட்டப்படுகிறது.

இந்த நாவலின் பேசுபொருள் காலங்காலமாக புனைவுகளில் கையாளப்பட்டிருக்கும் ஒன்றுதான் என்றாலும் குழந்தைகளின் களங்கமின்மையின், துறுதுறுப்பின் வழியாக காட்டப்படும்போது இது இன்னும் ஆழமான பொருளை ஏற்கிறது. துல்லியமான சித்தரிப்பும், நேர்த்தியான கதாபாத்திர வார்ப்பும், கச்சிதமான உரையாடலுமாக நகர்த்தப்படும் நாவலாக மட்டுமாக இது அமையவில்லை. அவை யாவற்றிலும் பெண்களுக்கேயுரிய தனித்தன்மையை இயல்பாகவே ஏற்றியிருப்பது நாவலை மேலும் பொருண்மையுள்ளதாக ஆக்கியுள்ளது. முன்பே குறிப்பிட்டதுபோல கவிதையின் சொல்நயமும் ஆழமும் குழந்தைமையின் களங்கமின்மையும் ஆர்வமும் துலங்கும் உமா மகேஸ்வரியின் புனைவுத்தியே இந்த நாவலை தனிச்சிறப்புடையதாக மாற்றித் தந்திருக்கிறது.

0

உமா மகேஸ்வரியின் கதைகளில் அதிகமும் பெண்களை மையமாகக் கொண்டிருப்பவை. இயல்பாகவே அவ்வாறு அமையக்கூடியதுதான். அவரது முத்திரைக் கதையாகக் கருதப்படும் ‘மரப்பாச்சி’யில் தொடங்கி ரணகள்ளி, அம்ருதா, அரளிவனம், கனகாம்பரத் திரைகள் என பல முக்கியமான கதைகளும் பெண் மையம் கொண்டவையே. பொதுவாக, பெண்களை மையமாகக் கொண்ட கதைகளில் எடுத்துக் கொள்ளப்படும் பிரச்சினைகளையே உமா மகேஸ்வரியின் கதைகளும் பேசுகின்றன. அம்மாவின் பிறழ் உறவு, அக்காவின் கணவனிடமே தன்னை இழக்கும் தங்கை, பூப்படையாத பெண், கணவனுக்காக தன்னை பணயம் வைக்கும் மங்கை, கணவனின் ஆதிக்கம் போன்றவற்றையே கதைக் கருக்களாகக் கொண்டுள்ளன. காலங்காலமாக தொடரும் பெண்களின் இந்தப் பிரச்சினைகளை உமா மகேஸ்வரியும் எழுதிக் காட்டியிருக்கிறார். ஆனால், இக் கதைகளை புனைவுகளாக தந்திருக்கும் நுட்பம்தான் பிறரது ஆக்கங்களிலிருந்து உமா மகேஸ்வரியைத் தனித்து நிறுத்துகிறது. ‘பொருள்வயின் உறவு’ கதையை உதாரணமாகச் சுட்டலாம்.  

யாரும் மிக எளிதாக எழுதக்கூடிய கதைக்கருவைக் கொண்டது ‘நாற்பது பவுன் நகை’. ஆனால், திருட்டுப் போன நகைகளை அடையாளம் காட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு போகும்போது இந்தக் கதை வேறொரு பரிமாணத்தை அடைகிறது. ‘அம்மாவுக்கு முந்தானை நுனியை எப்படி வைத்துக்கொள்வதென்பது குழப்பமாக இருந்தது’ என்ற வரி இந்தக் கதையின் சாதாரணத்தன்மையை கலைத்துப் போடுகிறது.

பெண்களை மையமாகக் கொண்ட கதைகளுக்கு நிகராக குழந்தைகளை மையமாகக்கொண்ட கதைகளும் முக்கியமானவை. உமா மகேஸ்வரியின் பெண் கதாபாத்திரங்களுக்கு இணையானவை அவரது கதையில் வரும் குழந்தைகள். குழந்தைகளின் தனித்தன்மை மிக்க உலகின் அழகையும் தூய்மையையும் மிக எளிதாக கதைக்குள் அவரலால் கொண்டு வர முடிகிறது.

‘எலின்னா கொல்லணும், அணில்னா சொல்லக்கூடாது?’ (என்றைக்கு?), ‘ஏம்மா கோயிலுக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கும் ஒரே பெயிண்ட் அடிச்சிருக்காங்க?’ (நாற்பது பவுன் நகை) போன்று குழந்தைகளால் வெகு இயல்பாக எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு நம்மிடம் தீர்க்கமான பதில் கிடையாது.  உமா மகேஸ்வரியின் கதைகளினூடாக நமது குடும்பம், உறவுகள் ஆகியவற்றின் மீது இவ்வாறு எழுப்பப்படும் பல கேள்விகளுக்கும் நம்மிடம் பதில் கிடையாது. அவ்வாறான கேள்விகளை தொடர்ந்து எழுப்புவதுதான் அவரது புனைவுலகின் ஒரு முக்கியமான பணிபோலும்.

இவ்வாறான உலகிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதைகளல்லாத கதைகளையும் உமா மகேஸ்வரி எழுதியுள்ளார். இக்கதைகள் நீண்ட சித்தரிப்பாகவோ அல்லது சிந்தனைச் சரடுகளாகவோ அமைந்துள்ளன. பெண்களின் உளப் பாங்குகளை, கனவுகளை, நேரடியாகத் தகர்க்க முடியாத சில தடைகளை இவ்வாறான சரடுகடிளின் வழியாகக் கடக்கப் பார்க்கும் முயற்சிகள் இக்கதைகள். காற்றுக்காலம், கண்ணாடிச் சுவடுகள், வீடின்மை, இறகு என பல கதைகளையும் சொல்லலாம். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள குறியீடுகளும் படிமங்களும்கூட பெண்களது அகவேட்கையின் துலக்கமான அடையாளங்களாகவே அமைந்துள்ளன.

உமா மகேஸ்வரியின் கதைகளின் தனிச் சிறப்பு அவர் கதைகளை வார்க்கும் தன்மையும் கவிதையோடமைந்த கதை மொழியுமே. அவருக்கு முன்பு அவ்வாறான ஒரு புனைவுமொழி வேறெவரிடமும் இல்லை. உமா மகேஸ்வரியின் தீர்க்கமான முத்திரை. ‘மின் சித்திரம் போன்ற தேக அமைப்பு’, ‘இது நீரல்ல, நெருப்புதான். தன்னுள்ளேயிருந்து தழல்வதேயான தீத்தளிர்’, ‘கண்ணாடிக் கூடைபோல் அவள் மேல் கவிழ்ந்த ஆகாயம்’, ‘அருந்தி மீந்த கோப்பையின் அடியில் படர்ந்த காபி படலம்போல அவன் முகத்தோற்றங்கள்’ போன்ற வரிகள் எளிய கதையையும்கூட நேர்த்தியான வாசிப்பு அனுபவமாக மாற்றிவிடுகின்றன.

2003இல் வெளியான ‘யாரும் யாருடனும் இல்லை’ நாவலையும் அவரது ஆரம்பகாலத் தொகுப்புகளிலுள்ள கதைகளையும் இன்று வாசிக்கும்போது சில பகுதிகளில் பெண்ணியம் சார்ந்த குரல் சற்று உரக்க வெளிப்பட்டுள்ளது என்ற எண்ணம் எழுகிறது. பெண்களுக்கான உலகின் பொதுவான களங்களையே அவர் எழுதியிருக்கிறார் என்ற கருத்தும். அவ்வாறான குரல் இல்லாமலேகூட அந்தக் கதைகள் தம்மளவில் ஆழம் கொண்டிருப்பவையே. கடந்த சில ஆண்டுகளில், கல்வியின் வழியாக வேலை வாய்ப்பின் மூலமாக பெண்களுக்கான உலகில் பெரும் மாற்றங்கள் வாய்த்துள்ளன. பெண்களைக் குறித்தும் அவர்களது இடம் குறித்தும் நம்மிடம் உள்ள மரபான பல கருத்துகளும் சிந்தனைகளும் உடைபட்டு பலத்த மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன. குடும்ப அமைப்பு, உறவுகள் சார்ந்த வரையறைகள் மறுபரிசீலனைக்கும், மறுவரையறைக்கும் உட்படுத்தப்படுகின்றன. இவ்வாறான பின்னணியில் உமா மகேஸ்வரியின் கதைகளில் சில பலவீனமானவையாகத் தோன்றக்கூடும். ஆனால், உமா மகேஸ்வரி உள்ளிட்ட எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் தங்கள் புனைவின், எழுத்தின் வழியாக எழுப்பிய கேள்விகளின் வழியாகவே இன்றைய மாற்றங்கள் சிலவேனும் உருப்பெற்றுள்ளன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

உமா மகேஸ்வரியின் முதல் கவிதைத் தொகுப்பு ‘நட்சத்திரங்களின் நடுவே’. அவரது புனைவுலகில் நட்சத்திரங்களுக்கு தனித்த சிறப்பான ஒரு இடம் உண்டு. தொடர்ந்து நட்சத்திரங்கள் அவரை ஈர்க்கின்றன. வெவ்வேறு தோற்றத்துடன் பலவிதமான காட்சிகளை அவருக்குத் தருகின்றன. ‘பனி உதிர்வதும்கூட ஈர நட்சத்திரங்கள் போல’ தோற்றமளிக்கின்றன. ‘வான் விளிம்பில் தெரிந்த ஒற்றை நட்சத்திரத்தைப் பார்த்தாள். அது நிசப்தமான மலர்போல வாசனை பரப்பியது’, ’நட்சத்திரம் ஒரு மந்திரமலர் போல் அவள் மீது விழுந்தது’, ‘நட்சத்திரங்கள் இறைந்த வானம், அழகிய சின்னஞ்சிறு பொட்டுச் சுடர்த் தோரணம்போல’ என்று விதவிதமாக நட்சத்திரங்களின் ஒளியை, எழிலை சொல்லிப் பார்க்கிறார்.

உமா மகேஸ்வரியின் புனைவுலகும் ஒளிரும் நட்சத்திரங்களால் உருவான ஒன்று. அந்த நட்சத்திரங்கள் இருண்ட வானிலிருந்து பெண்களின் உலகமான வீட்டுக்குள் எட்டிப் பார்க்கிறது, சாளரத்தின் வழியே. தமது ஒளியையும் மினுமினுப்பையும் அந்த வீட்டுக்குள் நிறைக்கிறது. அந்த ஒளியின் வழியே மினுமினுப்பின் வழியே அந்த வீடும் வானின் ஒருபகுதியாகிறது.

0

Wednesday, 13 September 2023

தனியன் - சிறுகதை

 தனியன்

( வல்லினம் செப் 23 இதழில் வெளியானது )

0

“இரும்மா, நான் மேல போனதுக்கப்பறமா கதவத் தெற. அவங்ககிட்ட நான் இல்லைன்னு சொல்லி அனுப்பிடு. வேற எதுவும் பேசாத. புரியுதா” அம்மாவின் அருகில் குனிந்து எச்சரித்துவிட்டு விறுவிறுவென்று படிகளில் ஏறினேன்.  நான் மேலே வரும்வரை தலைதூக்கிப் பார்த்திருந்தவளின் முகத்தில் குழப்பமும் கொஞ்சம் கவலையும்.அறைக்குள் புகுந்து கதவைத் தாழிட்டேன். 

எந்தச் சத்தமும் கேட்கவில்லை. கதவைச் சாத்திவிட்டால் எப்போதுமே எதுவும் காதில் விழாது. மேற்குப் பக்கமாய் வாசலுக்கு மேலாக இருக்கும் அறை. தெருவில் விரையும் வாகனங்களில் இரைச்சலும் ஒலிப்பான்களின் அலறலும்தான் அறைக்குள் கேட்கும். விசிறியை இயக்கிவிட்டு பாயில் படுத்தேன். மதியத்தின் வெம்மை அறைக்குள் தகித்தது. இவளைக் கண்டு ஏன் இப்படி ஓடி மறைகிறேன்? அஞ்சல் வழிக் கல்வி வகுப்புகளில் பழக்கம். பழக்கம் நட்பாகி நெருங்கிய வேளையில் இன்னொருவனை மணந்துகொண்டு போய்விட்டாள். அதன் பிறகு எந்தத் தொடர்புமில்லை. அலைபேசி எண்கூட தெரியாது. வெகுநாட்கள் கழித்து இன்று காலையில் அழைப்பு வந்தது. யாரென்று தெரியாமலே எடுத்தேன். அவள் குரலையே என்னால் அடையாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும், சந்தோஷமாக இருந்தது. பெண் குரல் என் அலைபேசியில் ஒலிப்பதே அபூர்வம். அவள் என்று தெரிந்ததுமே பெரும் உற்சாகம். வருடங்கள் கழிந்தும் நினைவில் வைத்திருக்கிறாள், சந்திக்க விரும்புகிறாள் என்பதே என் வயதை சரிபாதியாக குறைத்துவிட்டது. தன்னிலை உணராமலே முகவரியைச் சொல்லிவிட்டேன். கொப்புளித்த உவகை தணிந்து சமநிலை அடைந்தபோதுதான் செய்த தவறை உணர்ந்தேன். எதற்காக அவளைப் பார்க்கவேண்டும்? தெரிந்துதான் வருகிறாளா? யாராவது சொல்லியிருப்பார்களா? எப்படியிருந்தாலும் இந்த சந்திப்பு இதமானதாய் இருக்கப் போவதில்லை. வாதையைக் கூட்டும் ஒன்றாகத்தான் இருக்கும். வேண்டாம் என்று அப்போதே தீர்மானித்தேன். அழைத்துச் சொல்லலாமா? வேண்டாம், வந்துவிட்டு போகட்டும். எத்தனை முறை எத்தனை பேரிடம் அந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியும். என்னிடம் இருப்பது ஒரே பதில். அந்த பதில் கேட்பவர்களிடம் எழுப்பும் கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் சந்தேகங்களுக்கும் என்னிடம் கூடுதலாய் எந்த விளக்கங்களும் கிடையாது.  அதைவிட அவர்கள் தரும் இலவச ஆலோனைகளை என்னால் பொறுக்க முடிவதில்லை. ‘மூடிட்டு வேலையப் பாத்துட்டு போங்கடா’ என்று கத்தவே விரும்புவேன்.

இப்போதெல்லாம் யாரையும் பார்க்கவோ பேசவோ பிடிக்கவில்லை. விடிந்ததும் எல்லோருக்கும் முன்பே எழுந்து தயாராகி ஏழு மணி ரயிலைப் பிடித்து வடகோவையில் எட்டு ஐம்பதுக்கு இறங்கும்போது என்னவோ ஒரு விடுதலையுணர்வு. அதன் பிறகு பள்ளிக்கூடம், பாடங்கள், பிள்ளைகள் என்று நான்கு மணி வரை நேரம் போவதே தெரியாது. பள்ளியில் யாரும் அந்தக் கேள்வியைக் கேட்பதில்லை. உடன் பணியாற்றும் ஆசிரியைகளில் இருவரைத் தவிர மற்றவர்கள் மணமானவர்கள். அந்த இருவரும் என்னிடம் நெருங்குமளவு வசீகரமோ வயதோ இல்லை என்பதால் இதுவரையும் எந்த பிரச்சினையுமில்லை. ‘சார்கிட்ட ஃபேமிலியப் பத்திக் கேட்டா சிரிச்சுட்டே போயிடுவார்’ என்ற பொது அபிப்ராயம் எனக்கும் வசதியாகத்தான் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் இப்படி யாரிடமாவது மாட்டிக்கொள்ளாமல் இருந்தால் இந்த அறை உண்டு, கொஞ்சம் புத்தகங்கள் உண்டு என்று பொழுதைக் கழித்துவிடுவேன். பெண்ணுடலை திரையில் பார்ப்பதில் இப்போது அதிக நாட்டம் இல்லை. அதுவும் சலித்துவிட்டது. சுயமைதுனமும் பல்லில்லாக் கிழவன் சவைக்கும் கறித்துண்டுபோல, ஒரு சடங்கு. தினவுடன் உடல் பரபரத்த காலங்களில் கற்பனையில் கூடிய பெண்ணுடல்களுக்கே இப்போது கணிசமான வயதேறிவிட்டது. ‘சீக்கிரமா முடிச்சிட்டு விடு’ என்று கால்விரித்து எங்கோ வெறிக்கிறார்கள். தனி அறைக்குள் கிடக்கும் அவஸ்தை தாளாமல் பால்கனியில் வந்து கிடப்பேன். கீழே கூடத்தில் அம்மாவின் கட்டிலுக்கு அருகில் படுப்பேன். வாசுவின் மனைவி மஞ்சுவுக்கு பிடிக்கவில்லை. என்னவோ முனகியிருக்கிறாள். அதன் பிறகு கதவைத் திறப்பதுமில்லை. வெளியில் படுப்பதுமில்லை.

வெளிச்சம் குறைந்திருந்தது. பக்கத்து அறைக் கதவு திறக்கும் சத்தம். வெளியில் போயிருந்த சுந்தரும் அவன் மனைவி சியாமளாவும் வந்துவிட்டார்களா? என் அறை உள்ளே தாழிட்டிருப்பதை அவள் பார்த்திருப்பாள். அறைக்குள் சென்று கதவைச் சாத்திய பிறகுதான் அவனிடம் எதுவும் சொல்லுவாள். என் அறையின் சுவர்களுக்கும் கூட கண்கள் இருப்பதாய் அவள் அஞ்சுவாள். உண்மையும்தான். மூடிய அறைக்குள் உடல்களைக் காணும் திருட்டுத்தனத்தை அறியமாட்டார்களா என்ன? அவர்கள் வெளியில் வருவதற்குள் கீழே போய்விடலாம். எழுந்தேன். வேட்டியை இறுக்கிக்கொண்டு சட்டையை மாட்டினேன். செல்போனை எடுக்கலாமா? வேண்டாம். யார் அழைக்கப் போகிறார்கள். மெதுவாக கதவைச் சாத்திவிட்டு ஓசைப்படாமல் கீழே இறங்கினேன்.

காத்திருந்ததுபோல அம்மா எழுந்து சமையலறைக்குள் நடந்தாள். போட்டு வைத்திருந்த காபியைக் கொண்டுவந்து நீட்டினாள்.

“உங்கூட படிச்சுதாமே. என்னவோ பேர் சொல்லிச்சு. நீ இல்லேன்னு சொன்னதுமே பாவம் பொக்குன்னு போயிருச்சு.” எழுபத்தி ஒன்று முடிந்துவிட்டபோதும் இன்னும் எனக்கு காபி போட்டுத் தரும் விதி அவளுக்கு. நான் ஒன்றும் சொல்லவில்லை. அவளுக்கு இது பழக்கந்தான். வீட்டில் நான் இருக்கும்போதே பலருக்கும் இதுபோல இல்லையென்று பதில் சொல்லி அனுப்பியிருக்கிறாள்.

ஞாயிற்றுக்கிழமைக்கான அமைதியுடன் மங்கிய வெளிச்சம்கூடிய சாலையில் கிழக்கு நோக்கி நடந்தேன். சடையப்பன் கோயில் வாசலில் அடுத்தடுத்து வாகனங்கள். வசதிகள் பெருகி வாகனங்கள் பெருகி ஊரே மாறிப்போனபோதும் சடையப்பன் மட்டும் அப்படியேதான் வீற்றிருக்கிறார். அவரும் என்னைப்போலத்தான். நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். நானும்.  வீட்டை அடையாளம் சொல்லவும் அவர் பெயரைத்தானே பயன்படுத்துகிறேன். அம்மாவையடுத்து எனக்காக யாரேனும் கவலைப்படக்கூடுமென்றால் இந்த சடையப்பனாகத்தான் இருக்க முடியும். சாலையைக் கடந்து கே பி என் காலனியின் பிரதான வீதியில் நுழைந்தேன். மரங்களுடன் கூடிய அழகான தெரு. அடக்கமான தனி வீடுகள். எல்லோரும் தொலைக்காட்சிகளில் மூழ்கியிருப்பார்கள். வீட்டிலும் அம்மா எப்போதும்போல தன்னுடைய பிரம்பு நாற்காலியில் சாய்ந்திருப்பாள். சுந்தரும் சியாமளாவும் இருக்கக்கூடும். சேலத்துக்குப் போயிருந்த வாசு ஏழு மணிக்கு வந்துவிடுவான். ரமாவையும் பிள்ளைகளையும் அழைத்து வந்துவிடுவான். ரவி போன வாரம்தான் ஆயிஷாவுடன் வந்துவிட்டு போனான். மறுபடி அடுத்த வாரம்தான் வருவான்.  பிள்ளைகளும் படம் பார்க்கிறார்கள் என்றால் கூடம் நிறைந்திருக்கும். மாடியில் கூடத்தில் எல்லா பிள்ளைகளுக்குமான என்னுடைய கணக்கு வகுப்பு இன்று இல்லை.  ராத்திரி டிபன் சாப்பிட்டு முடித்து அவரவர் அறைக்குச் செல்ல பத்து மணியாகிவிடும். அம்மாவும் கூடத்தில் கிடக்கும் படுக்கையில் சாய்ந்துவிடுவாள். எனக்காகக் கதவைத் திறந்து வைத்துக் காத்திருப்பாள். பத்தரைக்குப் போனால் சரியாக இருக்கும். இருப்பதைத் தின்றுவிட்டு மாடிக்கு ஓடிவிடுவேன். சில நாட்களில் மட்டும் காலை அமுக்கிவிடச் சொல்லுவாள் அம்மா. அவளுக்கு கால் வலிக்கிறதோ இல்லையோ என்னை இன்னும் கொஞ்ச நேரம் பக்கத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். முடிந்தால் யார் மூலமாகவேனும் புதிதாக அவளுக்குக் கிடைத்திருக்கும் ஜாதகங்களைக் குறித்தோ, பெண்களைக் குறித்தோ பேச வேண்டும். நாற்பது வயது வரைக்கும்

நானும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டுதானிருந்தேன். ‘உனக்குன்னு ஒருத்திய பகவான் நிச்சயமா படைச்சிருப்பார்’ என்று சொல்வதை நானும் நம்பினேன். இப்போது வெறுத்துவிட்டது. இதுதான் காரணம் என்று தெரியாமல் புரியாமல் அடிவாங்கி அவமானப்பட்டு அனைத்திலும் ஆர்வம் வற்றிவிட்டது. அம்மா சொல்வதைக்கூட பொறுமையுடன் கேட்கும் நிலையைக் கடந்துவிட்டேன். அந்தக் கணங்களில் என் நாவிலிருந்து பாயும் தீச்சொல்லை அஞ்சுகிறாள். எனக்குள் சேர்ந்திருக்கும் கசப்பும் வன்மமும் அவளைத்தான் முதலில் தீண்டுகிறது, பாவம். அதனாலேயே பல நாட்களில் அவளைக் கண்டுகொள்ளாமல் அறைக்குள் அடைந்துகொள்கிறேன்.

தனலட்சுமி மில் வளாகத்தையொட்டிய பாதையில் திரும்பினேன். ஒருகாலத்தில் இந்தப் பகுதியின் அடையாளம். பெரும் பஞ்சாலை. இன்று தரைமட்டமாக்கப்பட்டு வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்டு பங்களாக்கள் அணிவகுத்துள்ளன. மகிழம்பூவின் வாசனையுடன் காற்று முகத்தில் மோதிக் கடந்தது. தெருவிளக்கின் ஒளிக்கு சற்று விலகி நின்றிருந்தது அந்த இணை. அவள் பைக்கில் உட்கார்ந்திருக்க அவன் தோளணைத்தபடி நின்றிருந்தான். முத்தமிட்டிருப்பானா? என் வருகையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்களை பார்க்காததுபோல கடந்தேன். சின்னதாய் ஒரு சிரிப்பொலி. என்னைப் பார்த்துச் சிரிக்கிறாளா? இவளுமா? இருக்காது. அவன் எதுவும் சில்மிஷம் செய்திருப்பான். பரவச கணங்களில் திளைத்திருக்கிறார்கள். பாவம், அனுபவிக்கட்டும். எல்லாம் சரியாக வந்தால் மணமக்களாகி இல்லறம் காணட்டும். என்போல அணைக்க உடலும், நுழைக்கத் துளையும் வாய்க்காமல் காய்ந்து இப்படி இருட்டில் மறைந்து ஒளிந்து ஓட வேண்டாம். எனக்கு ஏன் யாருமே வாய்க்காமல் போனார்கள்? இல்லை, அப்படியும் சொல்லமுடியாது. வாய்த்ததெல்லாம் வாஸ்தவம்தான். நான்தான் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளவில்லை. அஞ்சல் வழிக் கல்வியின் முதுகலைப் படிப்புக்கான நேரடி வகுப்புகளின்போதுதானே அனுவைச் சந்தித்தேன். கோவை, அரசுக் கலைக் கல்லூரியில் நடந்த வகுப்பின் முதல் நாள். திருப்பூரிலிருந்து வருகிறேன் என்று தெரிந்ததும் அவளே வந்து அறிமுகப்படுத்திக்கொண்டாள். அந்த ஒரு வாரமும், தனித் தனி இருக்கைகள் என்றாலும், ஒரே பேருந்தில் பயணம். மரத்தடியில் ஒன்றாக மதிய உணவு. எல்லாம் சரியாகத்தான் அமைந்தது. படிப்பு முடியும் வரையிலும் வாய்க்கும்போதெல்லாம் வீட்டுக்குப் போனதுண்டு. அவளும் சிலமுறை வந்து அம்மாவைப் பார்த்ததும் உண்டு. சின்னதாய் ஒரு கற்பனை சிறகு முளைத்திருந்தது. அவள் என்ன நினைத்தாள் என்பது உறுதியாக எனக்குத் தெரியவில்லை. கால்குலஸிலும் அல்ஜீப்ராவிலும் நல்ல மதிப்பெண் வாங்கியதற்கு நன்றி கடனாக அழகான பேனா ஒன்றையும் பரிசளித்தாள். அது காதல்தானா என்று எனக்குள் நான் உறுதிசெய்ய சற்று அவகாசம் எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். அதற்குள் அவள் திருமண அழைப்பிதழை கொண்டு வந்து நீட்டிவிட்டாள். அத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது எங்கிருந்தோ யாரிடமோ எண்ணைத் தெரிந்துகொண்டு அழைத்தாள். சந்திக்கவேண்டுமெனக் கேட்டாள். நான்தான் தவிர்த்துவிட்டேன். அவளுக்கு தெரிந்திருந்தாலும் தெரியாமலிருந்தாலும் சந்திக்காமல் இருப்பதே நல்லது. சந்திக்க நேர்ந்தால் என் மீதான பரிதாபக்கணக்கில் அவளுடைய பங்கும் சேர்ந்துவிடும்.

ரயில்வே கிராஸிங் சாலையில் திரும்பாமல் நேராக நடந்தேன். கணேஷ் மெஸ்ஸில் சரியான கூட்டம். மாஸ்டர் தன் இசைத் திறனை கொத்துப் புரோட்டாவில் நிரூபிக்க வேர்வையுடன் நின்றார். சேமலைதான் கல்லாவில் இருந்தான். தலை நிமிர முடியாமல் காசு வாங்கிப்போடும் அவசரம். பாதி வழுக்கை. நரை கூடிய முள் தாடி. என்னுடைய வகுப்புதான். எனக்கின்னும் முழு வழுக்கை இல்லை என்பதுதான் ஆறுதல். ஆனால், சேமலையின் மூத்த பையன் சென்னையில் பொறியியல் படிக்கிறான். இரண்டாமவன் பதினொன்றில். பத்தாம் வகுப்பில் கணக்கில் முப்பத்தி ஐந்து வாங்கி தப்பித்து, பனிரெண்டாம் வகுப்பில் தேற முடியாதபோது கடைக்கு வந்துவிட்டான் சேமலை. இருபத்தி ஐந்தாவது வயதில் கல்யாணம். என்னுடன் படித்தவர்களில் முதலில் கல்யாணம் அவனுக்குத்தான். மணப்பந்தலில் மாலையுடன் நின்ற அவளைப் பார்த்தபோது சேமலையின் மீது பொறாமை கிளர்ந்தது. எப்போதாவது வழியில் பார்க்க நேரும்போது சில வார்த்தைகள் பேசுவான்.

‘கல்யாணமே பண்ணிக்காத. இம்சை. நமக்கு புடிச்சமாதிரி எதையுமே செய்யமுடியாது. என்னையப் பாரு எப்பப் பாரு அந்த சோத்துக் கடையிலதான். எத்தனை குளிச்சாலும் ஊத்த சாம்பார் வாடை போகவோ போகாது. அப்பல்லாம் அப்பனுக்கு பயந்து உக்காந்திருந்தேன். இப்ப இவளுக்கு.”

“நீ சொல்லாம இருப்பே. நல்லா அனுபவிச்சு ரெண்டு பசங்களையும் பெத்துப்போட்டாச்சு. நான் மட்டும் கையடிச்சுட்டே காலந்தாள்ளனுமாடா?”

“அடப்போடா. அதெல்லாம் ஆரம்பத்துல கேந்திபுடிச்சமாதிரி இருக்கும். கொஞ்சநாள்தான். இப்பல்லாம் பக்கத்துலயே வர்றதில்ல, சாம்பார் நாத்தமாம். எனக்கும் பெரிசா நாட்டமில்லாத போச்சு. இதுக்காக ஒருத்தியைக் கட்டிக்கறதுன்னா, ரொம்ப மடத்தனமா இருக்குடா.”

அவனுக்கு எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்த பிறகு வரும் அலுப்பு. எனக்கு எதையும் பார்க்காததால் வரும் வெறுப்பு.

‘காலத்தே பயிர் செய்’யும் கணக்கு எங்கே தவறிப் போயிற்று எனக்கு?

ரவி ஆயிஷாவைக் கட்டிக்கொண்ட நாளில்தான் எல்லாக் குழப்பங்களும் தொடங்கிற்று. அப்போது குடியிருந்தது பத்து வீடுகள் கொண்ட சுப்பு மேஸ்திரி காம்பவுண்டில் கடைசி வீட்டில். வீடென்று சொல்லலாமா, தெரியவில்லை. மேற்கு நோக்கி நிற்கும் பழங்கதவைத் திறந்ததுமே சிறிய வாசல். வாசலையொட்டியிருந்த ஆறுக்கு நாலு அளவிலிருந்த இடத்தை கூடமென்று சொல்லலாம். அங்கேயேதான் சமையல், சாப்பாடு, படிப்பது, அம்மா பேப்பர் திருத்துவது, காய்கறி நறுக்குவது என்று எல்லாவற்றுக்கும். வடக்குமுகமாய் ஒரு அறை. மூலையில் மர பீரோ. அதையொட்டி சிறிய கட்டில். உள்ளே போனதும் கட்டிலில் தாவிவிடவேண்டும். நடந்து திரும்புவதுகூட சிரமம். வாடகை குறைவென்பதாலா, அம்மாவுக்கு பள்ளிக்கூடம் பக்கத்தில் என்பதாலா,ஒத்தாசைக்கு சித்தியும் அதே காம்பவுண்டில் இருந்தாள் என்பதாலா என்ன காரணம் என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால், ராத்திரிகளில் ஒண்டிக்கொள்ள ஒரு இடம். பஞ்சு குடோன் ஒன்றில் கணக்கெழுதிக் கொண்டிருந்தவன் ஒரு நாள் மதியம் ஆயிஷாவை அழைத்துக் கொண்டு வந்து நின்றான்.

“கல்யாணம் முடிஞ்சிருச்சி. சொல்ல முடியாத நிலைமை. ஒண்ணு ரெண்டு நாள் இங்கதான் இருப்பா. அதுக்குள்ள வீடு பாத்துருவேன். சமாளிச்சுக்கோ” ரவி அம்மாவிடம்தான் சொன்னான். மூட்டுவலிக்கு இலைப்பத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தவளின் காலைத்தொட்டு வணங்கினாள் ஆயிஷா.

அவள் தலையைத் தொட்டாள் அம்மா “சின்னப்பொண்ணா இருக்காளே. உன்னை நம்பி வந்துட்டா. நல்லபடியா பாத்துக்கோ.” அம்மா வேறெதுவும் சொல்லவில்லை. பெரிய ரகளையை எதிர்பார்த்து கூடிநின்ற காம்பவுண்ட் பெண்கள் உதட்டை சுழித்தபடி கிசுகிசுத்தபடி நகர்ந்தனர். அன்றிரவு சித்தியின் வீட்டுத் திண்ணையில்தான் படுத்திருந்தேன்.

வாசலில் அம்மாவும் சித்தியும் பேசிக்கொண்டிருந்தார்கள். “கட்டிட்டு வந்துட்டான். என்ன செய்ய சொல்றே?”

“அதுக்காக இத்தனை சின்னஞ்சிறுசுக இருக்காங்க. எல்லாரையும் இப்பிடி வெளியில கெடத்திட்டு உள்ளே கதவைத் தாப்பாப் போட்டுக்கறது நல்லாவா இருக்கு?”

“அந்தப் பொண்ணப் பத்தி யோசிச்சு பாரு நீ. பாவம், எங்க எப்பிடி இருந்துதோ. இங்க வந்து இந்த பொந்துக்குள்ள கெடக்குது. ரெண்டு மூணு நாள்ல வீடு பாத்துருவேன்னு சொல்லிருக்கான். இருக்கட்டும்.”

அம்மா அப்படித்தான். ஆரம்ப பள்ளி ஆசிரியை. முப்பத்தியிரண்டாம் வயதில் கணவனை இழந்து, நான்கு பிள்ளைகளை வளர்த்து படிக்கவைத்திருக்கிறாள். அவளுக்கு எதிலுமே குறைகள் கண்ணுக்குத் தெரியாது. தெரிந்தாலும் வெளியில் சொல்லமாட்டாள்.

 

கருடா மருத்துவமனை வளாகத்துள் வழக்கமான பரபரப்பில்லை. நோய்மைக்கும் வார விடுமுறையா? ஒரு காலத்தில் பஞ்சு குடோனாக இருந்த இடம். இன்று பஞ்சுக்கே கடும் பஞ்சம். ஆலைகளுமில்லை நூற்புமில்லை. அந்த நேரத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியிலிருந்த ‘நீதி விநாயக’னிடம் ஒரு கிழவி கையேந்தி மன்றாடி நின்றாள். கண்ணீர் வழிந்தது. அம்மாவும் இப்படித்தான் ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டு கிடப்பாள். சீக்கிரமாக எனக்கொரு வழி பிறக்கவேண்டும் என்று இஷ்ட தெய்வங்களிடம் கெஞ்சுவாள். என்னை தனிமரமாய் நிறுத்திவிட்டுப் போய்விடக்கூடாது என்ற கவலையைத் தவிர வேறென்ன துக்கம் அவளுக்கு? அண்ணன், தம்பி உறவெல்லாம் விலகி நிற்கும் வரைதான். எப்போதும் ஒட்டிக்கொண்டிருந்தால் அசௌகரியந்தான்.

ரவி தன் வழியைப் பார்த்துக்கொண்டான். குழப்பங்கள் அடங்கி எல்லோரும் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக்கொண்ட பிறகு மூன்று வருடங்கள் கழித்து வாசுவுக்கு மணமானது. பின் அம்மா என் ஜாதகத்தை எடுத்தாள். முதல் தடையாக நின்றது ஜாதகக் கட்டத்தில் யாரோ ஒரு அதிபதி கூடாத இடத்தில் குடிகொண்டிருந்ததாக சித்தி புலம்பினாள். அதைவிட முக்கியமான தடை, எனக்கு நிரந்தரமான வேலை ஒன்றில்லை என்பது. எனக்குப் பிடித்த வேலையை நான் செய்துகொண்டிருந்தேன். கணிதம் சொல்லித்தருவது எனக்குப் பிடித்திருந்தது. காலையிலும் மாலையிலும் டியூசன். தனியார் பள்ளியொன்றில் கணித ஆசிரியர் வேலை. இதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது. கல்யாணம் செய்துகொள்ள அரசுவேலை கட்டாயம் என்ற நிபந்தனையை நான் அறிந்திருக்கவில்லை.

இளமைக் கனவுகளில் நாம் வேண்டுவதெல்லாம் ஷோபனாக்களையும் அமலாக்களையும் ரேவதிகளையும்தானே. அப்போதைய காட்சிகளில் நாம் இருக்கும் இடங்களெல்லாம் நம் கண்ணுக்குப் புலப்படாமல் மங்கிவிடுவதுதான் பிரச்சினையே. அந்த இடங்கள் தெளிவடைந்து நமது லட்சணத்தை நாமே பார்க்கும்போதுதான் பக்கத்தில் இருக்க வாய்க்கும் பெண்கள் தம்மருகே கமலஹாசன்களையும் மைக் மோகன்களையும் தேடுகிறார்கள் என்பது தெரியவரும். இந்த ஏற்றத்தாழ்வுகள் ஒருபோதும் சமன்படுவதேயில்லை. பரவாயில்லை என்று வலிய வந்த வரன்கள் சிலவற்றை அம்மாவும் சித்தியும் ஒதுக்கினார்கள். நானும் ஒன்றிரண்டை ஒப்புக்கொள்ளவில்லை.

பரிகார தலங்களுக்கும் தோஷ நிவர்த்தி தலங்களுக்கும் நடந்து களைத்திருந்த களைப்பில் சோர்ந்திருந்தபோது சுந்தர் மங்கையும் மாலையுமாய் வந்துநின்றான். எனக்கடுத்து பிறந்த கடைக்குட்டி என்றாலும் புத்திசாலி. அம்மாவுக்கு சிரமம் தரக்கூடாது என்று அவன் பணிபுரிந்த கணக்காயரே தன் மகளைக் கட்டிக்கொடுத்துவிட்டார்.

ஓய்வு பெற்று கிடைத்த பணத்தில் வீடு கட்டினாள். கீழே கூடம், ஒரு படுக்கையறை, மேலே மூன்று படுக்கையறை, ஒரு சிறிய கூடம். தனக்கென தனி வீடு கட்டிக்கொண்டதால் ரவிக்கு தேவையிருக்கவில்லை. வாசுவும் சுந்தரும் ஆளுக்கொரு அறையில் இருக்க இன்னொரு அறையில் நான் தனியன். இருவரின் பிள்ளைகள் மூவருக்கும் பக்கத்து வீட்டிலிருந்து சில பிள்ளைகளுக்குமாய் மாலையில் வகுப்பெடுக்கிறேன். வாசுவின் மகள் கோதை பத்தாம் வகுப்பு. சுந்தரின் மகள் மாயவி ஒன்பதாம் வகுப்பு. இருவரும் என்னைப்போலவே கணக்கில் புலிகள். அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் வேளைகளில்தான் நான் சுமையற்று சிரிப்பேன்.

யுனிவர்சல் தியேட்டர் சாலையில் திரும்பினேன். வரிசையாக தெருவோரக் கடைகள். உடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், செல்போன்கள், அலங்காரப் பொருட்களென்று அல்லங்காடிகள். வடக்கிலிருந்து வந்து பனியன் ஆலைகளிலும் நூற்பாலைகளிலும் அடைந்து கிடப்பவருக்கான விடுமுறை நாள். கூட்டம் கூட்டமாய் திரிந்தார்கள். இணையில்லாமல் தனியே நடந்தவர்கள் என் கண்ணிலேயே படவில்லை. எனக்கென்று இப்படித் தெரிகிறதா? குலாலர் திருமண மண்டபத்தில் அலங்கார விளக்குகள் ஒளிர்ந்தன. மணமகளின் பெயரைப் பார்த்தேன். ‘மங்கையர்க்கரசி’. அவள்தானா? சட்டென்று வேர்த்தது. நின்று வளாகத்துக்குள் பார்த்தேன். போய் பார்க்கலாமா? இருக்காது. அவளுடைய வீடு சூலூர்தானே. இங்கே திருமணம் நடக்க வாய்ப்பில்லை. அதுவுமில்லாமல் அவளிடம் பேசி, எல்லாம் முடிந்து இரண்டு வருங்களாகிவிட்டன.  

அம்மாதான் எத்தனை நம்பிக்கையுடன் இருந்தாள். உடன் பணிபுரிந்த டீச்சரின் சிபாரிசில் வந்த ஜாதகம். பெண்ணுக்கு வயது முப்பத்தி நான்கு. அம்மா அப்பா கிடையாது. ஒரேயொரு அண்ணன். அவன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை. இதுவெல்லாம் எனக்கு எந்த கேள்வியையும் எழுப்பவில்லை. ஆனால், அவள் பணிபுரிவது ஒரு வங்கியில் என்று சொன்னபோதுதான் யோசித்தேன். வங்கிப் பணியில் இருப்பவளுக்கு ஏன் இத்தனை வயது வரை மணமாகவில்லை? ஏதேனும் குறையா? காதல் தோல்வியா? எதுவும் பிரச்சினையில்லையென்றால், நாற்பத்தி ஐந்தான என்னை எதற்கு ஒப்புக்கொள்கிறாள்? கேள்விகளும் சந்தேகங்களும் இருந்தாலும் பார்க்கலாம் என்ற யோசனையுடன் வங்கியின் தொலைபேசி எண்ணைத் தேடி எடுத்து ஒரு நாள் பின் மதிய வேளையில் அழைத்தேன். அவள் பெயரைச் சொல்லிக் கேட்டேன்.

“ஹலோ…” அவள் குரல் கேட்டதுமே ஒரு நிமிடம் தயங்கினேன். அடுத்த நொடியில் அவசரமாய் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவளுக்கும் அது எதிர்பாரா அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். சிறிய இடைவெளி.

“சொல்லுங்க…”

“என்னைப் பத்தி எல்லாத்தையும் சொல்லிருக்காங்களா?”

“ம். ஓரளவு தெரியும். ஸ்கூல்ல வேலை பாக்கறீங்க. திருப்பூர்லேர்ந்து டிரெய்ன்ல வர்றீங்க.”

“பரவால்லையே. நெறைய விஷயம் தெரியும்போல.”

“ம். தெரிஞ்சிட்டாதானே முடிவெடுக்கலாம்.”

அன்றைய தினம் சுருக்கமாக பேசி வைத்துவிட்டேன். அவளும் என் அலைபேசி எண்ணைக் கேட்கவில்லை. நானும் விசாரிக்கவில்லை..

அவளுடைய அண்ணன் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு பதில் சொல்வதாக சொன்ன விஷயத்தை அன்றிரவு அம்மா  சொன்னாள். இந்த ஜாதகம் இன்னும் என்னை விட்டபாடில்லையா? இரண்டு நாட்கள் இடைவெளி. மீண்டும் நானே அழைத்தேன்.

“உங்கண்ணன் ஜாதகம் பாத்து முடியலையா இன்னும்?”

“அவன் அப்படித்தான். சீக்கிரத்துல சொல்ல மாட்டான். உங்களுக்கு அவசரமா?”

“ஆமாம் சொல்ற வயசெல்லாம் தாண்டியாச்சு. இன்னும் நாலு மாசமாகும்னு சொன்னாலும் என்ன பண்ண முடியும்?”

அவள் சிரித்தாள். குரலையும் சிரிப்பையும் வைத்து உருவத்தை தீர்மானிக்க முடியுமா?

“உங்க ஸ்கூல் பேங்க் வேலையெல்லாம் நீங்கதான் பாக்கறீங்களா?” அவள் சிரிப்பை ஒளித்துக்கொண்டே கேட்டபோது சட்டென்று உடலில் விறுவிறுப்பு கூடியது.

“ஏன் கேக்கறீங்க?” நா வறண்டது.

“நேத்து எங்கியோ பேங்க் போயிருக்கீங்கன்னு சொன்னாங்க. அதான் கேட்டேன்.”

“நீங்க போன்ல பேசினீங்களா?”

“பேசலை. பாத்தேன்.” மறுபடியும் உள்ளுக்குள் நடுக்கம்.

“பாத்தீங்களா? எங்கே?”

“வேறெங்க. நான் வேலை பாக்கற பேங்க்லதான். நீங்க வர்லையா?”

அட! பார்த்துவிட்டாளா? வெகுநேரம் நிற்கவில்லையே. உள்ளே போன சுருக்கில் வந்துவிட்டேன். அதற்குள் எப்படிப் பார்த்திருக்க முடியும்? வசமாய் மாட்டிக்கொண்டேன்.

“வந்தீங்கல்ல. பாத்து பேசிட்டு போக வேண்டிதுதானே. அதுக்குள்ள என்ன பயம்?”

“நீங்க என்ன பாத்தீங்களா?”

“பாத்தேனே.”

“எப்பிடி நான்தான்னு தெரியும்?”

“தெரிஞ்சுது. எப்பிடின்னு கேட்டா சொல்லாத் தெரியலை.”

மறுநாள் மதியம் உணவு இடைவேளையில் பக்கத்திலிருந்த உணவு விடுதியில் சந்தித்தபோது வியந்தேன். இவளுக்காகத்தான் இத்தனை நாள் வறுமையா? கடவுளே! இவளைக் காட்டத்தான் இத்தனை கால தவிப்பா? மூப்பின் அடையாளத்தை எங்கும் பார்க்க முடியவில்லை. இயல்பாகச் சிரித்தாள். எல்லா கதையையும் சொன்னாள். நான் நிலைமறந்து வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தேன். விடைபெறும்போது அவள் எச்சரித்தாள் “ரொம்ப கனவு காணாதீங்க. கீழே எறங்கி நிதானமா போங்க. இன்னும் எதுவும் முடிவாகலை. எங்க அண்ணன் அத்தனை சீக்கிரம் விட்டுற மாட்டான்.”

அவள் அப்படிச் சொன்னதை அப்போது பொருட்படுத்தும் நிலையில் இருக்கவில்லை. மறுநாள், மாலையில் பள்ளியிலிருந்து புறப்படும் நேரத்தில் அவளுடைய அண்ணன் அழைத்தான்.

“சாரி ஸார். ஜாதகம் செரியா வர்லை. பர்தரா புரசீட் பண்றதுல விருப்பம் இல்லை. இதோட விட்ருவோம். அம்மாகிட்டயும் சொல்ல சொல்லிருக்கேன்.”

நான் எதுவும் கேட்கும் முன்பே அவன் தொடர்ந்தான் “அப்பறம் அவளைக் கூப்பிட்டு பேசறது, பாக்கறதெல்லாம் இதோட நிறுத்திருங்க. நல்லா இருக்காது.”

அப்போது அவனுடைய குரலில் சிறிதும் இணக்கம் இருக்கவில்லை, மிரட்டல்தொனிதான் ஒலித்தது.

மறுநாள் அவளே அழைத்தாள் “நான் சொன்னதுதானே நடந்துச்சு.”

“உனக்குத் தெரியுமா முன்னாடியே?”

“ரொம்ப முன்னாடியே தெரியும். யாருக்கும் அவன் என்னைக் கட்டித்தர மாட்டான்.”

“ஏன்?”

“என்னோட சம்பளம்.”

ஒருகணம் நிதானித்தேன். இப்படியுமிருக்குமா?

“தெரிஞ்சும் நீ ஏன் ஒத்துக்கறே? புடிச்சவனை கட்டிக்க வேண்டிதுதானே?”

“முடிஞ்சா முன்னாடியே செஞ்சிருக்க மாட்டனா? அதெல்லாம் அவன் விடமாட்டான். நீ வேற யாராச்சும் நல்ல பொண்ணா பாத்துக்கோ. ஆல் தி பெஸ்ட்.”

அதன் பிறகு ஓரிருமுறை பேச முயன்றபோது அவள் பதிலளிக்கவில்லை. அதன் பின் நானும் விட்டுவிட்டேன். இப்போதும் அவள் அப்படியேதான் இருக்கிறாளா?

எஸ்பிஎஸ் துணிக்கடை வாசலில் கிடந்த நாற்காலியில் சாய்ந்திருந்தார் பாலு ஐயா. வெள்ளைத் துண்டை விசிறி கொசுவை விரட்டியவரின் கண்கள் மூடிக் கிடந்தன. துணிமூட்டையை சைக்கிளில் கட்டி ஊர் சுமந்த நினைவுகளில் ஆழ்ந்திருப்பார். இன்று வியாபாரம் வளர்ந்து பிள்ளைகள் தலையெடுத்து பேரப் பிள்ளைகள் குளிரூட்டிய பிரமாண்ட கடைகளில் வேர்வை தெரியாமல் முதலாளிகளாகிவிட்டார்கள். அவர் இன்னும் சைக்கிளை விட்டு இறங்கவில்லை. நானும் இப்படித்தான் எனக்கான தனி உலகில் இருந்துகொள்ள பழகிவிட்டேன். இப்போது யாரையும் பார்ப்பதில்லை. எந்த குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. என்னால் எல்லோருக்கும் அசௌகரியம் என்பதால் தவிர்த்துவிடுகிறேன். பிள்ளைகள்தான் ‘சித்தப்பா, சித்தப்பா’ என்று கேட்டுக்கொண்டிருக்கும். அம்மா இருக்கும் வரை இங்குதான். கோவையிலேயே தங்கிவிட அவள் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்குமே அவளைவிட்டுச் செல்ல மனமில்லை. ஆனாலும் பயமாகத்தான் இருக்கிறது. இப்போதெல்லாம் சகோதரர்கள் மனைவியரோடு சேர்ந்து என்னவோ பேசிக்கொள்கிறார்கள். கிசுகிசுக்கிறார்கள். அம்மாவும் எதையோச் சொல்ல நினைக்கிறாள். ஆனாலும் சொல்லாமல் புழுங்குகிறாள். ரவியின் பிள்ளையும் தலையெடுத்துவிட்டான். ஜாதகம் எடுக்கவேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள். எடுக்கத்தானே வேண்டும். அவனுக்கேனும் வயதில் வாய்க்கட்டும் வாழ்க்கை. இல்லையென்றால் என்னைப்போல அவமானங்களைச் சுமந்துகொண்டு சிரிக்கவேண்டும்.

வடவள்ளியில் தெரிந்த குருக்கள் ஒருவர் சொன்னதாக சித்தி ஒரு ஜாதகத்தைப் பார்த்தாள். பொருத்தம் கூடி வந்திருக்கிறதென்றும் மேற்கொண்டு பேசுவதற்கு முன்பு ஒருமுறை சந்தித்துப் பேசினால் பரவாயில்லை என்றும் அவர்கள் அபிப்ராயப்படுவதாக சித்திதான் சொன்னாள் “சாய்பாபா கோயில்ல பாக்கலாம்னு சொல்றா. உனக்கு ஸ்கூல் முடிஞ்சு அப்பிடியே போய்ட்டு வந்துடேன்டா” என்று சொன்னபோது நானும் மறுக்கவில்லை. “சமத்தா நடந்துக்கோ. எது கேட்டாலும் பல்லக் காட்டி சிரிக்காதே. சுருக்கா பதில் பேசு” அவளுக்குள் இருக்கும் பயத்தை புரிந்துகொண்டேன்.

கோயிலில் செவ்வாய் கிழமை என்பதால் கூட்டம் அதிகமிருக்கவில்லை. பள்ளியிலேயே முகத்தைக் கழுவி லேசாக ஒப்பனை செய்து வந்திருந்தேன் என்றாலும் மறுபடியும் முகம் கழுவித் துடைத்தேன். லேசாக விபூதி இட்டுக்கொண்டு பளிங்குத் தரையில் சம்மணமிட்டு காத்திருந்தேன். கற்பனை வரப்போகிறவளின் உருவத்தைத் தீட்டுவதை தடுக்க முடியவில்லை. தையல் வகுப்பு நடத்துகிறாள். சில வருடங்களுக்கு முன்பு நிச்சயமாகி கல்யாண நாளன்று திருமணம் நின்றுபோய்விட்டது. மாப்பிள்ளை வீட்டில் வரதட்சணைப் பணத்தை உடனே கேட்டதாக காரணம் சொன்னார்கள். அதைக் குறித்து விசாரித்து என்னவாகப் போகிறது? அதன் பிறகு திருமண ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொள்ளாதவள் இப்போதுதான் சம்மதித்திருப்பதாக சித்தியிடம் சொல்லப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். ஒருவரின் நியாயம் இன்னொருவரின் நியாயமாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.

ஒன்றரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு அலைபேசி ஒலிக்க பரபரப்புடன் எழுந்தேன். காதில் வைத்தபடி வெளியில் வந்தேன். வாகன நிறுத்தத்தின் அருகில் நின்ற இருவர் என்னை நோக்கி வந்தனர். நடுத்தர வயது பெண்மணியும் அவரைவிட சற்று இளையவராக ஒரு ஆணும். இவர்களா?

“கணக்கு வாத்தியார்?” தயக்கத்துடன் அவர் கேட்டபோது உறுதியாயிற்று. அப்படியென்றால் பெண்ணை அழைத்து வரவில்லையா?

“இவங்கதான் பொண்ணோட அம்மா. நான் இவங்க தம்பி.”

அம்மா என்னை பார்வையால் அளந்தபடியே நின்றாள். சாயமேற்றப்பட்ட கூந்தல். மல்லிகைச் சரம். தடித்த சட்டமிட்ட கண்ணாடிக்குப் பின்னே கூரிய பார்வை. இறுகிய கன்னக் கதுப்புகள். சிறிதும் இணக்கமில்லாத முகபாவம்.

பள்ளிக்கூடம், வேலை, தினசரி ரயில் என்று அவர்தான் விசாரித்தபடியே நின்றார். ஒரு சந்தர்ப்பத்தில் எதற்கு இந்த வேடிக்கை என்ற எண்ணம் எழுந்தது.

“பொண்ணைக் கூட்டிட்டு வர்லிங்களா?”

“அவ எதுக்கு வரணும்?” முதன்முறையாக அம்மா பேசினாள்.

“அவங்க என்னைப் பாக்க வேண்டாமா?”

“அதெல்லாம் தேவையில்லை. நான் பாத்தா போதும்.”

“நான் பாக்க வேண்டாமா?”

“முடிவாச்சினா பாக்கலாம். அதுக்குள்ள எதுக்கு?”

திகுதிகுவென எரிந்த கொப்பரைத் தீயை ஏறிட்டேன். இது மண பந்தத்துக்கான ஏற்பாடு போலத் தெரியவில்லை. சதுரங்க விளையாட்டு போல அவரவர் திறம் காட்டும் தருணம்.

“சரி. எல்லாத்தையும் விசாரிச்சாசு. ஜாதகமும் பாத்தாச்சு. நேர்ல பாக்கணும்னு சொல்லி பாத்தாச்சு. எப்ப முடிவு பண்ணுவீங்க?”

“இப்பதானே பாக்கறோம். முடிவு பண்ணலாம். கொஞ்ச நேரம் வேணுமில்லை.உள்ளே போயிட்டு வந்தர்றோம்.”

 இருவரும் உள்ளே நடந்தனர். எனக்கு சிறிதும் நம்பிக்கை எழவில்லை. ‘நான் பாத்தா போதும்’ என்று சொன்னபோது ‘உங்களையா கட்டிக்கப் போறேன்’ என்று கேட்க நினைத்ததை எண்ணிப் பார்த்துச் சிரித்தேன். கேட்டிருக்கவேண்டும். தப்பெதுவுமில்லை. கோயில்களுக்குரிய பரபரப்பும் சந்தடியுமின்றி நிறைந்த அமைதி கூடிய கோயிலில் நான் மட்டும் இப்படி தவித்துத் தத்தளித்து நிற்கிறேன். பற்றுகோலின்றி காற்றில் நிலைதடுமாறி அலைந்தபடியிருக்கிறேன்.

நெற்றியில் விபூதிக் கீற்றும் கையில் பிரசாதத் தொன்னையுமாய் இருவரும் வந்தனர். கல்கண்டு சாதம்.

“எடுத்துக்கறீங்களா?” அவர் தொன்னையை நீட்டினார்.

“வேண்டாங்க. நீங்க சாப்பிடுங்க” நான் தலையாட்டியபடியே அம்மாவின் முகம் பார்த்தேன்.

“தப்பா நெனக்காதீங்க. ரொம்ப வயசான மாதிரி தெரியறீங்க” விரல்களில் சாதத்தை எடுத்து வாயில் போட்டாள். “எம் பொண்ணு கூட நின்னீங்கன்னா ஹஸ்பண்ட் மாதிரி தெரியாது.”

பீறிட்ட ஆத்திரத்தை அடக்கியபடி சிரித்தேன் “வயசு நாப்பத்தி அஞ்சுன்னு தெரிஞ்சுதானே வந்தீங்க. இதான் நான். நீங்க இன்னும் யூத்தா பாக்கறீங்க போல. ஆல் தி பெஸ்ட்.”

அவள் தொன்னையிலிருந்த மீதி பிரசாதத்தை வழித்து வாயில் போட்டாள்.

சுப்ரமணியர் கோயிலில் நடை சாத்தியிருந்தது. இதற்கு மேல் யார் வரப்போகிறார்கள்? படியில் அமர்ந்தேன். வெம்மையுடன் காற்று. அரசமரத்தில் இலைகளின் சலசலப்பு. இன்னும் ஓரிரு நாட்களில் பாதாளச் சாக்கடைக்காக வெட்டிவிடுவார்கள். இத்தனை வருடங்கள் ஓங்கி நின்ற அடையாளத்தை அப்படியே அகற்றிவிடுவார்கள். மனிதர்களையும் இப்படி வேரோடு பிடுங்கி அகற்ற முடிந்தால் துன்பமில்லைதான்.

வாசற்கதவை ஓசைப்படாமல் திறந்தேன். நிலைப்படி விளக்கு இன்னும் எரிகிறது. வழக்கமாய் அணைத்துவிடுவாளே? செருப்பைக் கழற்றும்போது பேச்சுச் சத்தம் காதில் விழுந்தது.

“இத்தனை நாள் பரவால்லே. இப்ப ரெண்டுமே வயசுக்கு வந்த பொண்ணுங்க. சித்தப்பா சித்தப்பான்னு ஒட்டிக்குதுங்க. வெவரம் தெரியாது. நமக்கு இவனப்பத்தி தெரியும்னாலும் சரியா இருக்காதில்ல. சொல்றதுக்கு யோசனையாதான் இருக்கு. அவனாப் புரிஞ்சிட்டா தேவலை. நீதான் எடுத்துச் சொல்லணும்” சுந்தரின் குரல்தான். அப்படியே நின்று கேட்க எனக்கு விருப்பமில்லை. என்னைப் பற்றித்தான் பேச்சு. நேரடியாகவே தெரிந்துகொள்ளலாம். ஒருமுறை கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன்.

அம்மா கட்டிலில் அமர்ந்திருக்க சுந்தர் அருகிலும் ரவி காலடியிலும். சியாமளாவும் மஞ்சுவும் சோபா அருகே தரையில். எனக்காகத்தான் காத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகவே தெரிந்தது.

“சாதம் போடட்டுமா?” சுரத்தில்லாமல் அம்மா கேட்டபோது தலையாட்டினேன்.

“சாப்புடறா” சுந்தர் சற்று உரக்கச் சொன்னான்.

“என்னவோ சொல்லணும்னு வெயிட் பண்றீங்க. சொல்லுங்க. அப்பறமா நான் சாப்பிட்டுக்கறேன்” நான் முகத்தைத் துடைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தேன்.

“நீ தப்பா எடுத்துக்காதடா. உனக்கே தெரியும். அதான்…” வாசு முகத்தை ஏறிட்டு பேச முனைந்தபோது அம்மா கையை உயர்த்தினாள்.

“இங்க வாடா” அழைத்தாள்.

எழுந்து அருகில் சென்றேன். சுந்தர் எழுந்து நகர்ந்தான். உட்கார்ந்ததும் என் முகத்தைப் பார்த்தாள் “இனிமே நீ பொண்ணுங்களுக்கு கிளாஸ் எடுக்க வேணாம். அவங்களே பாத்துப்பாங்க. வேற யாருக்குமே இங்க எடுக்க வேணாம். ஸ்கூல்ல என்னமோ பண்ணிக்கோ. இங்க வேண்டாம். புரிஞ்சுதா?”

பெறாவிட்டாலும் என் பிள்ளைகள் அவர்கள். ஆனாலும் நான் தனியன். ஆண் எனும் அச்சம். சரிதான், யாரிடமும் எதையும் நிரூபிக்க முடியாது. “அவ்ளோதானா?”

“ரூமைக் காலி பண்ணியாச்சு. இங்கதான் இனிமேல. மேல போ வேணாம்.”

இது வெகுநாட்களாக நானே யோசித்துக்கொண்டிருப்பதுதான். “சரி. வேற.”

“நீங்க எதுவும் தப்பா நெனக்காதீங்க. நாலுபேர் நாலு விதமா…” சியாமளாவைத் திரும்பி பார்த்தேன். அப்படியே நிறுத்திக்கொண்டாள்.

“சரிடா நேரமாச்சு. நீ சாப்பிடு. அம்மா நீயும் தூங்கு. நேரமாகுது. நாளைக்கு சீக்கிரமா கௌம்பணும்” சுந்தர் என் தோள்களில் தட்டிவிட்டு படிகளில் ஏறினான். மூவரும் தயங்கியபடியே மேலேறினார்கள். யாரையும் நான் நிமிர்ந்து பார்க்கவில்லை. அம்மாவும் தரையைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள். மேலுத்தட்டோர மருவிலிருந்த ஒற்றை முடி மூச்சின் வேகத்தில் அசைந்தது.

“படுத்துக்கம்மா” நான் எழுந்து தரைக்கு நகர்ந்தேன். அறையிலிருந்த ஒற்றைப் பாய், தலையணை, போர்வை, உடைகள் இருந்த பெட்டி, புத்தகப் பெட்டி எல்லாம் அவள் கட்டிலுக்குக் கீழே கிடந்தன.

ஒன்றும் சொல்லாமல் படுத்தவள் மேல் போர்வையை போர்த்தினேன்.

சுற்றும் மின்விசிறியை வெறித்தபடியே சொன்னாள் “என்னோட புள்ளதான்டா நீ?”

புரியாதவனாய் எழுந்து அருகில் அமர்ந்தேன். “நா சொல்றதக் கேப்பியா. போயிருடா. எங்கயாவது போய் எப்பிடியோ இருந்துக்கோ. இந்த வீட்ல இருக்காதே. இத்தோட போகட்டும். அவங்க வேற எதாச்சும் தப்பா சொல்லிட்டா என்னால தாங்க முடியாதுடா.”

சொல்லிவிட்டு இதற்கு மேல் ஒன்றுமில்லை என்பதுபோல புரண்டு சுவரைப் பார்த்தபடி படுத்தாள். கண்ணோரமாய் நீர் வழிந்தது.

எழுந்தேன். விடிவிளக்கை எரியச் செய்துவிட்டு கதவைத் திறந்து வெளியே வந்தேன்.

0

 

 

 

 

 

 

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...