Monday, 7 October 2024

கரிசல் நிலப் பெண்களும், சில காதல் கதைகளும் ( கி ரா வின் கதைகள் )


1

மண்ணிலிருந்தும் அதன் மக்களிடமிருந்தும் எழுதப்படும் எழுத்து இலக்கியத்துக்கென வகுக்கப்பட்டிருக்கும் இலக்கணத்துக்குள் அடங்காதது. அது சொல்வதும் அதன் சொல்முறையும் ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கும் கதைகளிலிருந்து வேறுபட்டது. அது தனக்கான இலக்கணத்தை உருவாக்கிக்கொள்கிறது. சுயமான ஒரு திணை மரபு அந்த எழுத்துக்களிலிருந்தே அமைந்துபோகிறது. அப்படி உருவான ஒன்றை பொது இலக்கிய மரபிலுள்ள பிற எழுத்துக்களோடு ஒப்பிட்டு மேலானது, தாழ்ந்தது என்று தராசில் நிறுத்துவதில் பொருளில்லை. தனித்துவமே அதன் சிறப்பு. இன்னொன்றைப்போல அது இருக்காது. அதைப்போல வேறொன்று இருக்காது.

 

அப்படியொரு தனித்தன்மைகொண்ட கரிசல் இலக்கியத்தை தமிழில் உருவாக்கித் தந்திருக்கிறார் கி.ரா.

 

‘வெந்துபோன ஈரலைப்போல ஒரே கறுப்பாக’ கிடக்கும் கரிசல் மண்ணில் ஆடிமாசம் குப்பையடியில் தொடங்கி புரட்டாசியில் விதைத்து, தையில் அறுவடையில் முடியும் விவசாயத்தின் பாடுகளையே கி.ரா கதைகளாக்கியிருக்கிறார். பருத்தியும் கம்மம்புல்லும் விளையும் நிலம் வானத்தை நம்பியிருப்பது. அது பெய்தும் கெடுக்கும், பொய்த்தும் கெடுக்கும். ‘நல்ல நாயக்கனைக் கண்டால் நிலம் பயப்படும்’ என்று தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு என்று சொல்கிறார் கி.ரா. உழைப்புக்கு அஞ்சாத கரிசல் காட்டு சம்சாரிகளே கி.ரா வின் கதாபாத்திரங்கள். உழைக்கத் தயாராக இருந்தபோதும் விவசாயத்தில் தலைநிமிர்ந்துவிடும் வாய்ப்பு சம்சாரிகளுக்கு எப்போதும் இருக்கும் என்ற உத்தரவாதமில்லாத  ‘மாயமான்’ அது. ‘பருத்தி விலையும் பவுன் விலையும் ஒன்றாக இருந்த காலம்’ போய் ‘சம்சாரி உற்பத்தி செய்யிற எதுவும் விலையில்லமலும் சம்சாரி வாங்குகிற எதுவும் அகாத விலையில் இருப்பதுமான’ காலம் வரைக்குமான கரிசல் வாழ்க்கையை கி.ரா விரிவாகவும் அதன் கதாபாத்திரங்களை உயிரோட்டத்துடனும் எழுதிக் காட்டியிருக்கிறார். சம்சாரிகளுக்கு ஈடாக கி.ரா வின் கதைகளில் மாடுகளும் காளைகளும் ஆடுகளும் கோழிகளும் பூனைகளும்கூட கதாபாத்திரங்களே. ( குடும்பத்தில் ஒரு நபர், ஒரு வெண்மை புரட்சி, மிருக மனிதம் ) ‘கல்குளம்பு, அதிலும் குத்துக் குளம்பு, குறுங்கால், சன்னமான ஏறுவால், ரெட்டைக் குருத்து முதுகு, ஒட்டுத்தாடி, ரெட்டைநாடி மார்பு, பொய்க்கண் திரட்சி, உடும்புத்தலை, கிலாக் கொம்பு, பட்டு நிறத்திலிருக்கும் அதன் உடம்பு’ என்று துல்லியமான அடையாளங்களுடன் சந்தனப் புல்லையை அவர் கதைகளில் பார்க்க முடியும். தொட்டணன், பப்புத் தாத்தா தம்பதி, மாசாணம், பேச்சி போன்ற கடும் உழைப்பாளிகளும் அவர்களைச் சுரண்டும் நில உடைமையாளர்களும், அதிகாரத்துடனும் அலட்சியத்துடனும் விவசாயிகளை அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகளும்கூட (கரண்டு, மாயமான், ஒரு வெண்மை புரட்சி, அவுரி) விவசாய வாழ்வின் ஒரு பகுதியாகவே அமைந்திருப்பதை இக்கதைகள் உணர்த்துகின்றன.

 

அன்றாட உழைப்பு தரும் சலிப்பிலிருந்து சம்சாரிகளுக்கு கிராமத்தில் கடைபிடிக்கப்படும் சடங்குகளும் வழக்கங்களுமே ஆசுவாசம் அளிக்கின்றன. கல்யாணம், பூப்பெய்துதல் சிறிய நிகழ்வுகளும் திருவிழாக்களும் கிராமத்திலுள்ள அனைவருக்குமான நிகழ்ச்சிகளாக அமைகின்றன. நிலத்தின் கதையுடன் சேர்ந்தது என்பதால் கி.ரா தனது கதைகளினூடாக இதுபோன்ற சடங்குகளையும் வழக்கங்களையும் பற்றி விரிவாகவே சொல்லியிருக்கிறார். திருமணம், குழந்தைப்பேறு போன்ற சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளும் (மகாலட்சுமி) மரணத்துக்காகக் காத்திருக்கும் வயசாளிக்காக செய்யப்படும் பல்வேறு சடங்குகளும் (சாவு, புறப்பாடு, நாற்காலி) கி.ராவுக்கேயுரிய மொழியில் சொல்லப்பட்டுள்ளன.

 

கிராமத்து மனிதர்களின் பல்வேறு மனச்சாயல்களையும் குணக்கேடுகளையும் உன்னிப்பாகக் கவனித்து கதைகளில் காட்டியுள்ளார் கி.ரா. ‘நெருப்பு’, ‘மனிதம்’, ‘வேட்டி’, ‘எங்கும் ஓர் நிறை’, ‘பலம்’, ‘கொத்தைப் பருத்தி’, ‘குருபூசை’, ‘சுற்றுப்புறச் சுகாதாரம்’ ஆகிய கதைகளைச் சொல்லலாம்.

 

பள்ளிக்கூடத்தையும் வாத்தியார்களையும் கண்டால் கி.ராவுக்கு அறவே பிடிக்கவில்லை என்பதை ‘ஜெயில்’, ‘ஒரு சிறிய தவறு’, ‘மிருக மனிதம்’ ஆகிய கதைகளில் வெளிப்படுத்தியிருக்கும் கி.ரா போலீஸ் அடக்குமுறைகளையும் ‘தோழன் ரங்கசாமி’, ‘வேட்டி’ ஆகிய கதைகளில் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

 

நிலம் உடைமையாகும்போது அண்ணன் தம்பிகளுக்குள் ‘பாகவஸ்தி’ என்பது தவிர்க்க முடியாதது. பாடுபட்டு சேர்த்ததையெல்லாம் பகிர்ந்து கொடுத்த பின்பு பிள்ளைகள் வீட்டில் முறைவைத்து கஞ்சிக்காய் காத்திருக்கும் பெரியவர்களின் பாடுகள் கி.ராவை மிகவும் நோகடித்திருக்க வேண்டும். ‘இவர்களைப் பிரித்தது’, ‘உண்மை’, ‘காய்ச்ச மரம்’ ஆகிய மூன்று கதைகளுமே இந்த யதார்த்தத்தை விவரித்துள்ளன.

 

சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் கி.ராவின் ஒரேயொரு கதையில் (அரும்பு) மட்டுமே சங்கீதம் குறித்து பேசப்பட்டிருப்பது ஆச்சரியமான ஒன்று. அதேபோல, கயத்தாறு, கோவில்பட்டி ஆகிய பெயர்கள் பல கதைகளில் இடம் பெற்றிருக்கும் நிலையில் ‘எடைசெவல்’ எனும் அவரது சொந்த கிராமத்தின் பெயர் ‘அவத்தொழிலாளர்கள்’ என்ற ஒரேயொரு கதையில் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

 

2

 

கரிசல் மண்ணையும் அதன் வாழ்வையும் வெகு நுட்பமாக விவரணைகளோடு கி.ரா எழுதியிருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அது அவரது களம், வாழ்க்கை. அந்த மனிதர்கள் அவருடன் வாழ்ந்தவர்கள். அவரோடு இருந்தவர்கள். எனவே, இயல்பாகவே அவரால் அதை எழுதிவிட முடிந்தது.

 

ஆனால், இன்று அவரது கதைகளைத் திரும்பப் படிக்கும்போது ஆச்சரியப்படுத்தியது அவரது கதைகளில் உள்ள பெண்களை அவர் எழுதியிருக்கும் விதமே.

 

பருவத்துக்கேற்ப பெண்களின் தோற்றத்தில் ஏற்படும் மாறுதல்களைப்போலவே அவரது குணங்களிலும் கணிசமான மாற்றங்கள் நிகழ்வதை தனது சிறுகதைகளில் சுட்டிக் காட்டியுள்ளார் கி.ரா. ‘சொன்னால் நம்பமுடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று நினைக்கவேயில்லை’ என்று தொடங்கும் ‘கன்னிமை’யில் இந்த மாற்றங்களை துலக்கமாகப் பார்க்கமுடியும். ‘வாங்கித் திங்க’ புஞ்சையில் பருத்திச் சுளை எடுத்தான் என்பதற்காக சுந்தரத் தேவனின் மகனை தன் தகப்பனார் அடித்தது தவறு என்று உணர்ந்த கணத்தில் நேராக அவர்கள் வீட்டுக்குச் சென்று சிறுவனுக்கு வைத்தியம் பார்த்தத்துடன் வீட்டிலிருந்து நெல்லும் கோழியும் கொடுத்தனுப்புகிறாள். அப்படிப்பட்ட குணவதி திருமணத்துக்குப் பிறகு மாறிவிடுகிறாள். கல்யாணம் நாச்சியாரம்மாவிடமிருந்து அவளது தாராள குணத்தை, கரிசனையைப் பிரித்தெடுத்துவிடுகிறது. ‘ஏகாலிக்கும் குடிமகளுக்கும் சோறுபோட எழுந்திருக்கும்போது முகம் சுளிக்கிறாள்‘, ‘குடுகுடுப்பைக்காரன் இப்பொழுதெல்லாம் அட்டகாசமாக வந்து எங்கள் தலைவாசலில் வெகுநேரம் புகழ்வதில்லை’. இந்த மாற்றம் வெளியாட்களோடு மட்டும் இல்லை. கட்டினவனுமே அவளிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை கவனிக்கமுடிகிறது. அவள் கவனம் முழுக்க ‘கணக்குப் பார்ப்பதிலும்’, ‘ரூபாய் அணா பைசா’விலும்தான் மூழ்கியிருந்தது.

 

‘மணமாகி பத்து வருஷமாகி குப்பை கொட்டியும் ‘மஞ்சம்மாவை’ அவனால் புரிந்துகொள்ள முடியலைதான்’ என்று தொடங்கும் ‘ஓர் இவள்’ கதையும் பெண்களின் குணமாறுதல்களைச் சொல்வதே. ‘எதில் அவன் மனம் லயித்தாலும் அதுக்கு ஒரு வகை எதிர்ப்பு இருக்கும்’ மஞ்சம்மாவிடம். வீட்டுக்கு ஆசையுடன் கொண்டுவரும் வளர்ப்புப் பூனை, நண்பன் வீட்டு சமையல் ருசி, நீண்ட கூந்தல், வீட்டில் விளையாடும் குழந்தை என்று எல்லாவற்றையும் குறித்து அவளுக்குள் அவ்வபோது எழும் எதிர்ப்பு குணத்தை விவரிக்கும் இந்தக் கதை பெண்களின் மன உலகைத் துலக்க முற்படுகிறது.

 

எருமை மாடு மேய்க்க சின்ன வயதிலேயே வீட்டுக்கு வந்தவள் பேரக்கா. சாப்பிடுகிற நேரம் தவிர எருமை மாடுகளின் சாணமூத்திர வாடையில்தான் அவள் வாசம். ஊமை இல்லையென்றாலும் வாய் திறந்து அதிகம் பேசமாட்டாள். ராத்திரி பத்து பதினோரு மணிக்கு வீட்டு ஆட்கள் பூராவும் தூங்கிக் கொண்டிருக்க, பாட்டிக்கு கால் அமுக்கிக்கொண்டிருப்பாள் பேரக்கா. கடேசியில் அவள் ‘போதும், நீ தூங்கப்போ’ என்று சொன்னதுமே போய் படுத்துவிடுவாள். ஆனால், மூணு மணிக்கு தொழுவின் கூரைமேல் உட்கார்ந்திருக்கும் சேவல் இறக்கைகளைப் படபடவென்று தட்டிச் சோம்பல் முறித்து ஒரு கொக்கரக்கோ சத்தம் கொடுத்ததுமே பேரக்கா எழுந்துவிடுவாள். எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்யும் பேரக்காவை, இன்னொரு வேலைக்காரனான குமரேசனுக்கு மணம் முடிக்கிறார்கள். கிராமமே மணப்பெண்ணுக்காகக் காத்திருக்கிறது. பேரக்காவோ மயங்கி விழுகிறாள். என்ன ஏதென்று கேள்வியுடன் அனைவரும் காத்திருக்க பாட்டியே வெளியே வந்து எல்லோரிடமும் சிரித்துக்கொண்டே சொல்கிறாள் “கழுதை. ஒரு நாளாவது தலையில் பூ வைத்திருந்தாலல்லவா? இண்ணைக்கு சிங்காரிக்கும்போது பூ வாசம் தாங்காமல் மயக்கம் போட்டுட்டுது.”

 

ஆண்களுக்கு ‘மச்சினி’களின் மேலிருக்கும் மையலைச் சொல்லும் கதை ‘வால் நட்சத்திரம்’. பெண்களைக் கூர்ந்து கவனித்த கி.ராவின் நுட்பம் மொத்தத்தையும் இந்த ஒரே கதையில் பார்க்க முடியும். ‘பெண் வளர்ச்சி பசலைக்கொடி’ என்பார்கள். பெண்களின் வளர்ச்சியைப் பற்றி சொல்லும்போதும்கூட அவரால் விவசாயத்தை விடமுடியவில்லை. ‘கேட்டவர்களுக்குத்தான் தெரியும் சோளப்பயிரின் வளர்ச்சி. மத்தியான வெயிலில் செழித்த சோளப் பயிருக்குள் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும்போது பயிர் குருத்தை இலைவிரிக்க வெளியே தள்ளும் சத்தம் நெருக் நெருக் என்று கேட்கும். நேற்றுப் பார்த்த பயிர் இன்று ஒரு ஒட்டை வளர்ந்திருக்கும். பயிருக்குப் பக்கத்தில் போனால் ஒருவித சாராய நெடி வீசும். இந்தப் பெட்டைப் பிள்ளைகளுக்கும் அப்படித்தான். அதுகளுக்கென்று ஒரு வளர்ச்சி; அதுகளுக்கென்று ஒரு நெடி.’

 

மாமியார் மருமகளுக்கு நடுவிலிருக்கும் உறவை சில வரிகளில் தெளிவுபடுத்திவிடுகிறது ‘பாம்பும் கீரியும்’ கதை. ‘கிராமத்து சராசரிப் பெண்கள் நடந்துகொள்கிறமாதிரியே அவர்களும் சந்தித்தவுடன் முதலில் நாள் பூராவும் உட்கார்ந்து பேசித் தீர்த்தார்கள். மறுநாள் ஒருவர் தலையில் ஒருவர் பேன் பார்த்தார்கள். மூணாவது நாள் பேசிக்கொள்ளாமல் உம் என்றிருந்தார்கள். நாலாவது நாள் எரிமலை வெடித்ததுபோல சண்டையிட ஆரம்பித்துவிட்டார்கள்.’

 

மேகாட்டிலிருந்து பருத்தி வெடிக்கும் காலத்தில் மட்டும் வந்து பருத்தி எடுக்க வரும் வலசைக்காரர்களில் ஒருத்தியான பேச்சி, யாரோ ஒருவனால் ஏமாற்றப்பட்டு, கர்ப்பமடைந்து, பிள்ளைப் பெற்று, பின் அதுவும் இறந்து, முழுக்க பித்தாகி சுடுகாட்டில் பிணங்களைத் தின்று கடைசியில் உடங்காட்டில் நிலைகொண்டுவிடுகிற கதை துயரம் மிகுந்தது. ஆனால், கி.ரா அந்தக் கதைக்கு ‘பேதை’ என்று தலைப்பிடும்போது அந்தத் துயரம் இன்னும் கூடுதலாகிறது.

 

‘புள்ளிக்காரி’ என சொல்லப்படும் காமம்மாவும் பசி தீர்ப்பவள்தான். இளவட்டுகளுக்கும் புகல் கிடைக்காத வயசாளிகளுக்கும் ‘மற்ற’ அந்தப் பசியை தீர்த்து வைப்பவள். பலனை எதிர்பாராத ஒரு பரோபகாரமாக அதைச் செய்பவள். கட்டினவன் அகாலமாய் செத்துப்போக பதினாறாம் நாள் விசேஷத்தின்போது வெள்ளைச் சேலை கட்டமாட்டேன், கண்டாங்கிச் சேலைதான் கட்டுவேன் என்று தனித்துவம் காட்டியவள். பின்னாளில் சிறிய காப்பிக்கடையோடு வாழ்க்கையை நடத்துபவள் கிராமத்துக்கு போலீஸாரால் ஆபத்து வரும் நேரத்தில் காவல் தெய்வமாக நிற்கிறாள்.

 

கி.ரா வின் கதைகளிலுள்ள பெண்கள் அசாதாரணமானவர்கள், அழகிலும் குணத்திலும். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கி.ரா அவர்களது உடல் வனப்பைக் குறித்து சில வரிகளேனும் எழுதாமல் விடுவதில்லை. ‘பித்தளைக்குடத்தின் கழுத்துமாதிரி அப்படி ஓர் அமைப்பான இடுப்பு’ (வால் நட்சத்திரம்), ‘அவளுடைய சிவந்த கால்களில் குதிரைச் சதையில் குத்திய மீன் பச்சை அந்த மாலையின் மயங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது அழகாக இருந்தது’ (குடும்பத்தில் ஒரு நபர்), ‘செவந்த ரெண்டு புஜங்களிலேயும் கைகளிலேயும் பச்சைக் கோலங்கள், உச்சி வகுடு எடுத்த சுருட்டை முடியிலே ஊடு நரை (ஒவ்வொருத்திகளுக்கு நரைகூட பொருத்தமாயும் அழகாகவும் இருக்கு’ (எங்கும் ஓர் நிறை), ‘விளக்கின் ஒளியில்தான் அவள் எவ்வளவு அழகாகப் பிரகாசிக்கிறாள். அழகுக்கும் விளக்கின் ஒளிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. கறிக்கு உப்பைப்போல் அழகுக்கும் அதிருசி கூட்டுகிறதுபோலும் விளக்கு’ (கன்னிமை), ‘பிரம்மன் இதுவரை எத்தனைப் பெண்களைப் படைத்தும் இன்னும் அவனுக்குப் பெண்ணுக்கு நாடியை அமைக்கத் தெரியவில்லை’ (மகாலட்சுமி),

 

அழகை மட்டும் அவர் ஆராதிக்கவில்லை. ‘ஒருமாதிரி சுபாவம்’ கொண்ட பேச்சியின் அவலமான தோற்றத்தையும் விவரிக்கிறார். ‘உடைமரத்தைப் போன்ற பறட்டை மயிர்த்தலை, இடுங்கிய, பூளைதள்ளிய இல்லிக் கண்கள், மழை பெய்து நனைந்த பனைமரத்தைப் போன்ற கருப்பு நிறம், கருங்கோரைப் புற்களைப்போல மயிர் நீண்டிருக்கும் வியர்வை ஓடும் கக்கங்கள், வங்குபடிந்த வெளிர் நிறங்கொண்ட கால்கள், அதில் குனிந்து நின்று மூத்திரம் பெய்வதால் விழுந்த தெறிப்புகள்,  நைந்துபோன அழுங்கல் சிகப்பு நிறக் கண்டாங்கிச் சேலை; இவ்வளவு பிறவிக் கோரங்களுக்கு மத்தியில், இயற்கை அவளுடைய மேலில் ஒரு விளையாட்டைக் காட்டியிருந்தது. கோயில் சிலைகளையெல்லாம் விஞ்சக்கூடிய ஒரு அப்சரஸின் ஸ்தன்யங்களைப் பெற்றிருந்தாள் அவள்.’

 

பெண்களின் அழகை மட்டும் அவர் உற்றுப் பார்க்கவில்லை, தனித்துவமான அவர்களது குணங்களையும் வாசனையையும்கூட கூர்ந்து கவனித்திருக்கிறார். ‘துக்கத்தின் ஒரு கோடியிலிருந்து குதூகலத்தின் மறுகோடியை உடனே எட்டித் தொடமுடிவது பெண்மைக்கே உரிய பாங்கு’ (கனிவு), ‘அந்த மேனியிலிருந்து பழுத்த பெண்வாடை மனசை என்னவோ செய்தது’ (ஓட்டம்).

 

பெண்ணின் முகவாட்டத்தைச் சொல்லும்போதுகூட ‘மேலேயிருந்து வந்துகொண்டிருந்த கண்ணாடி வெளிச்சத்தை ஒரு மேகம் கடந்தபோது ஏற்பட்ட வெளிச்சக் குறைவு’ (புவனம்) என்றே கி.ரா குறிப்பிடுகிறார். நாச்சியாரம்மாவின் குறட்டை, ‘பால் நிறைந்துகொண்டே வரும் பாத்திரத்தில் பால்நுரை மீது பால் பீச்சும்போது ஏற்படும் சப்தத்தைப்போல மெல்லிய குறட்டை ஒலி (கன்னிமை).

 

இவை அனைத்தையும் ஒரே கதையில் சொல்லவேண்டும் என்று  அவர் ஆசைப்பட்டதுபோல அமைந்த கதை ‘பாரதமாதா’. கரிசல் காட்டுப் பெண்களின் பருவமாற்றங்களை வாழ்வை அவர்களின் பாடுகளை ரத்தினச் சுருக்கமாக சொல்லும் இந்தக் கதையின் வழியாக கி.ரா ‘சௌந்தர்யாக்கள் அனைவரும் ஒருவளே’ என்ற மேன்மையை சுட்டுகிறார்.

 

கம்மங்காட்டில் குருவிகள் விரட்டும் ராமி, கணவனால் சுடுமணலில் கால் புதைத்து நிற்க வைக்கப்பட்ட செவத்தம்மா, உடங்காட்டில் ராத்திரிகளில் அலையும் பேச்சி, பலாப்பழத்துக்கு ஆசைப்படும் சங்கரம்மாள், குருபூசை கொடுப்பதற்காய் காத்திருக்கும் சிவாமி ஆச்சி போன்று   இன்னும் பல கரிசல் காட்டுப் பெண்களின் பாடுகளை, துயரைச் சுட்டும் படிமமாக அமைந்திருக்கும் கதை ‘கண்ணீர்’. ‘ஊரின் அம்மன் சிலையின் கண்ணிலிருந்து கண்ணீர் துடைக்கத் துடைக்க வந்துகொண்டேயிருக்கிறது’ என்று கதை முடிகிறது. அந்த அம்மன் சிலையின் முகத்தில் கி.ராவின் கதைகளில் வரும் பெண்களின் முகம் ஒவ்வொன்றும் பொருந்தி நிற்கிறது.

0

3

 

‘பாலியல் களஞ்சியம்’, ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ என்று தனித் தொகுப்புகளாக வாய்மொழிக் கதைகளை கி.ரா தொகுத்திருக்கிறார். ஆனால், அவர் எழுதியிருக்கும் அபாரமான சில காதல் கதைகள் அவரது கரிசல் அடையாளத்துக்கு அப்பால் மிக முக்கியமானவை. மனிதனின் ஆதார சக்தியான காமத்தை, அதன் புறவெளிப்பாடான காதலை அவர் வெகு நுட்பமாக சில கதைகளில் அணுகியிருக்கிறார். அறியாப்பருவத்தில் கிளைக்கும் ஈர்ப்பிலிருந்து இயலாப் பருவத்தில் அணையாது உயிர்க்கும் துடிப்பு வரையிலுமான தவிப்பை, வாதையை, சிருங்காரத்தை தனக்கேயுரிய நகைப்புடன் வெளிப்படுத்தியுள்ளன இந்தக் கதைகள்.

 

‘மூணாம் பனி’யில் கம்பங்காட்டில் காவலுக்கு இருக்கும் எட்டு வயது ராமிக்கும், பக்கத்துப் புஞ்சை முதலாளியின் மகன் ‘சேக்காளி’ ராஜாவுக்கும் இடையிலான உறவு விளையாட்டுத் தோழமை என்றே தொடங்குகிறது. பஜனைக் கோயிலில் வாங்கிய மாஜீனி கலந்த நெல் அவலை தினமும் அவளுக்குத் தருகிறான். ‘வரகு வரகு’ சுற்றுவது, ‘சடுகுடு மலையிலே ரெண்டானை’, கண்ணாமூச்சி என்று சலிக்க சலிக்க விளையடுகிறார்கள். கம்மங்கொல்லையை நெருங்கும் படைக்குருவிகளை பரண் மீது ஏறி தகரத்தைத் தட்டி ஒலியெழுப்பி விரட்டுகிறார்கள். நாட்டுப் பாடல், கல்யாணப் பாட்டெல்லாம் பாடி, ‘ராஜா ராணி’ கதை சொல்லும் அவளை ராஜாவுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. திடீரென்று அவள் காணாமல் போகிறாள். பதினான்கு வருடங்கள் கழித்து, ராஜாவுக்கு திருமணமான பின்பு, அதே கிராமத்தில் இடுப்பில் குழந்தையுடன் ராமியை அவன் பார்க்கிறான். கல்யாண வீட்டுக்குப் போகிறான். அவர்களின் உபசாரத்துக்கு நடுவே ஒரு காடி வண்டியில் குழந்தையுடன் உட்கார்ந்து இன்னொரு பெண்ணிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் ராமியைப் பார்க்கிறான். அவனால் அவளிடம் போய் பேசமுடியாது. கௌரவக் குறைச்சல். ‘உன்னைப் பார்க்க வந்துவிட்டேன்’ என்ற அர்த்தத்தில் அவளைப் பார்த்து ஒரு புன்னகை செய்யலாம்’ என்று எண்ணுகிறான். ஆனால் அவள் அவன் பக்கமாய் திரும்பவே இல்லை. அவன் தன்னைப் பார்க்கவே வந்திருக்கிறான் என்பது ராமிக்குத் தெரியும். ஆனாலும் அவள் அவன் பக்கமாய் பார்க்கவே இல்லை. கலகலவென்று சிரிக்கிறாள். குழந்தையை முத்தமிடுகிறாள். கொஞ்சுகிறாள். எல்லாப் பக்கமும் எல்லோரையும் திரும்பிப் பார்க்கிறாள், அவனைத் தவிர.

 

சிறுவயதில் விளையாடியதுபோலவே இப்போதும் அவள் ‘விளையாடுகி’றாள். வேறெதுவும் செய்ய முடியாத நிலையில், தன்னை மறந்துவிட்ட அவனுக்கு ராமி தரும் சிறு தண்டனைதான் அந்த விளையாட்டு. ‘நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்’ என்ற குறிப்பிடல். வேறெதையுமே வெளிப்படையாக சொல்லாமல் மனத்தின் ஆழத்துள் நிகழும் அழுத்தமான சலனங்களை நுட்பமாகச் சொல்லியிருக்கும் கதை.

 

தையல் பழகுவதற்காக நண்பனின் வீட்டில் வந்து தங்கியிருக்கும் பதினாலு வயது புவனம், வயதுக்கு மீறிய பொறுப்புடனும் கனிவுடனும் நடந்துகொள்வது அவனை ஈர்க்கிறது. இருவரும் தனிமையில் இருக்க நேரும்போது பேசிக் கொள்கிறார்கள். கிழிந்த அவன் சட்டைப் பையைத் தைத்துத் தருகிறாள். அவள் ஊருக்குப் போகப் போவதாகவும் இனிமேல் இங்கு வரப்போவதில்லை என்றும் புவனா சொல்கிறாள். ஏன் அதை அவள் திரும்பத் திரும்ப சொல்கிறாள் என்று அவனுக்கு அப்போது புரிவதில்லை. மறுநாள் அவன் ஊருக்குப் புறப்படும்போது சொல்லிக் கொள்ளலாம் என்று பார்க்கும்போது புவனா அங்கில்லை. ‘மார்க்கெட்டுக்கு போயிருக்கா காய்கறி வாங்க. வர கொஞ்ச நேரமாகும்’ என்று நண்பனின் மனைவி சொல்கிறாள்.

 

இளம் பெண்ணின் மனத்துள் ஏற்படும் சிறு ஏக்கம், எதிர்பார்ப்பு, அதன் சாத்தியங்கள் குறித்த யோசனையின்மை, எளிதில் அதைக் கடந்துவிடும் பக்குவம் என சின்னச் சின்ன ஆழங்களைத் தொட்டுக் காட்டியிருக்கும் இதே கதையில் அதைக் கண்டுகொண்ட நண்பனின் மனைவி வெகு சாமர்த்தியமாக அந்தத் துளிர்ப்பை வெட்டிவிடும் நுட்பத்தையும் அமர்த்தலாகச் சொல்லியிருக்கிறது.

 

சிறுவனிலிருந்து இளம் பிராயத்தை எட்டும்போது ஏற்படும் இளைஞர்களுக்கு ஏற்படும் மன அவஸ்தை விளக்க முடியாதது. யாரிடமும் பகிர முடியாமல், இன்னதென்று புரிந்துகொள்ள முடியாத ஒரு மனோநிலை. உடலிலும் மனத்திலும் ஏற்படும் மாற்றங்களை நெருங்கியும் விலகியும் பார்க்க நேரும் பருவம். ‘இந்தப் பிராயம் அவனைக் குடும்பத்திலிருந்தும் சூழலிருந்தும் அந்நியம் ஆக்கிவிட்டதுபோல’ வேம்புலு உணர்வதை சொல்லும் கதைதான் ‘ஓட்டம்’.

 

முகத்தில பருக்கள், படிய மறுக்கும் தலைமுடி, தெல்லுக்காய் போல் திரண்டு கனமாகும் மார்பின் நுனிகள் என்று தான் அசிங்கமாக மாறுவதை உணரும் அவனுக்கு எங்கும் இருப்பு கொள்வதில்லை. அப்பா வெடுவெடு என்று விழுந்துகொண்டிருக்கிறார். அண்ணனின் அறைக்குள் போக முடிவதில்லை. தங்கையும் அவள் தோழிகளும் இடத்துக்கும் செல்ல முடிவதில்லை. எல்லோரும் அவனை விலக்குகிறார்கள். சுப்பாலு மதினிகூட முந்திமாதிரி இல்லை. மாவாட்டும்போது அவளிடமிருந்து வரும் பழுத்த பெண்வாடை மனசை என்னவோ செய்கிறது.  தடுமாற்றத்துடன் கோவில்பட்டிக்கு போகிறான். எதிலும் மனம் ஒன்றுவதில்லை. அங்கிருக்கும் தெரிந்தவர் ஒருவரின் வீட்டை விசாரிக்கிறான். அடையாளம் கேட்கும்போது  அவன் சொல்கிறான் ‘அவிழ்த்துப் போட்ட தேர் நிற்கும்’ என்று. இந்த ஒரு வாக்கியத்தில் கதை மொத்தமும் திரண்டு நிற்கிறது.

 

திருமணம் முடிந்து இளம் தம்பதியினருக்குள் மெள்ள மெள்ள ஏற்படும் நெருக்கத்தையும் அதிலிருந்து கிளைக்கும் காமத்தின் ருசியையும் ‘கனிவு’ கதை விவரிக்கிறது. முன்பு முகம் பார்த்திராத கணவனுக்கு முதுகு தேய்ப்பதில் தொடங்குகிறது தொடுகை. (அந்த சமூக வழக்கப்படி முதல் இரவு என்ற ஏற்பாடு கிடையாது). மல்லம்மா தயிர் கடையும்போது வெண்ணெய் வாங்கித் தின்பதற்காக காத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு நடுவே பெரிய கனமான கையொன்று. நீட்டிய அந்தக் கைக்கு மல்லம்மா வெண்ணெய் தராமல் அதன் கருஞ்சதையில் நறுக்கென்று பலமாக ஒரு கிள்ளு தருகிறாள். இரவில் படுத்திருக்கும்போது அவள் பக்கமாய் கை நீண்டதற்கு அவள் கொடுத்த பதில் நகங்களால் சீய்ச்சப்பட்ட காயங்கள். சாப்பிடும்போது அந்த காயங்களின்மேல் அவள் நெய் வார்க்கிறாள். பிறகு நிலத்தில் சேர்ந்து உழைக்கிறார்கள். ஒரு நாள் கருவமர நிழலில் சாப்பிட உட்காரும்போது மல்லம்மாவின் வியர்வை வாடை அவனுக்கு மோகத்தைக் கிளர்த்துகிறது. அவளது கீழுதட்டில் உள்ள அழகான கரும்பச்சை மச்சத்தைத் தொடப் போகிறான். அவள் கையைத் தட்டிவிடுகிறாள். முதல் கவளத்தை உண்ணச் சொல்லி அவளிடம் நீட்டுகிறான். வாயருகே கொண்டுவரும்போது அவள் மறுக்கிறாள். கோபித்துக்கொண்டு அவன் மறுபடி ஏர்பிடிக்கப் போய்விடுகிறான். அவளும் உண்ணாமல் களை பறிக்கச் செல்கிறாள். இப்படி அவள் நெருங்கும்போது அவன் ஊடி விலகுவதும் அவன் நெருங்கும்போது அவள் ஊடி விலகுவதுமாக செல்கிறது காலம். பாம்பு கடிக்கிறது. வைத்தியர் ‘அக பத்தியம்’ காக்க வேண்டுமென சொல்லி இருபது நாட்கள் பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள். பிறகு ஆடி மாதம் வருகிறது. ஆவணியில் மீண்டும் அவள் திரும்பி வருகிறாள். குழந்தைகள் உட்பட எல்லோருமே புஞ்சைக்குப் போயிருக்க சமையல் காரியங்களுக்காக மல்லம்மா வீட்டில். ஏதோ காரணம் சொல்லி அவன் வீட்டுக்கு வர, ‘முதல் பகல்’ அமைகிறது.   

 

ஆண் பெண் இருவருக்குள் எதிர்பார்ப்புடனும் தவிப்புடனும் சேர முடியாத தடங்கல்களுக்கு இடையில் மெல்லக் கனியும் காமத்தை அழகுடன் விவரிக்கிறது இந்தக் கதை.

 

இளம்பருவத்தில் இப்படிக் கனிந்துவிட்ட காமத்தின் தேட்டம், பிள்ளைகள் பெற்று, வயதானபோதும் முடிந்துவிடுவதில்லை. அருகில் கிடந்து கட்டிக்கொண்டிருந்த நாட்கள் முடிந்து காலவோட்டத்தில் உள்ளே இருந்த படுக்கை திண்ணைக்கு வந்துவிடுகிறது. ஆசையுடன் அவளை அணுகும்போது அவள் எரிச்சல்படுவதை முகம் சொல்லவில்லை என்றாலும் உடம்பு காட்டிக்கொடுத்துவிடுகிறது. ‘மரத்துப்போன கையைத் தொட்ட மாதிரி’ இருக்கிறது. ‘பாவம் போகட்டும் என்கிற அனுதாபம், ரசிப்பு இல்லையென்றாலும் பெண்மைக்கு உரிய சகிப்புத்தன்மை’ என்பதாய் சில இரவுகள் கழியும். ‘என்ன பிணைப்பு இது சை என்று எரிச்சல் படுவதெல்லாம் அந்த சமயத்தோடு சரி.

 

முதநாள் ராத்திரியில் தொடங்கும் காமம் மெள்ள மெள்ள உக்கிரம் கொள்வதை கி.ரா இப்படிச் சொல்கிறார் ‘உப்போடையில் சேறு கலக்கி கையினால் மீன் பிடிப்பார்கள் கோடையில். குரவை மீன். இந்த உப்போடை மீனுக்கு அப்படி ஒரு ருசி. மீன் கறியோ தேன் கறியோ என்று. முதன் முதலில் இறங்கி மீன் பிடிப்பவனுக்கு வெறும் சந்தோஷமும் உடம்பில் சேறு பூசிக்கொண்டதுதான் மிச்சம். அடுத்த நாட்களில் பிறகு இந்த ‘அப்புராணி ஆளுக்கு’ லச்சையை ஒதுக்கி வைத்துக்கொண்டு அவளே ஒத்துழைத்து வாத்திச்சியம் பண்ண வேண்டியிருந்தது. அதுக்கப்புறம் நாலு மீன் அஞ்சு மீன் என்றுகூட ஆயிற்று தினோமும். அப்படி ஒரு காலம்.’

 

முதுமை அடைந்த பின் ‘பிராயத்தில் அனுபவித்த தீனியை நினைத்து நினைத்து வியந்தும் ஏங்கியும்’ போகவேண்டிய நிலை. இந்த இடத்தில் கி.ரா ஒரு கிராமியக் கதையைச் சொல்கிறார். நடுச்சாமத்தில் ஒரு கிழம், தன் கிழவி தூங்கிக் கொண்டிருக்கும் இடத்துக்கு தட்டுண்டு தடுமாறி போனதாம்.“ஓனே… ஓனே” என்று அவளைக் கூப்பிட்டு “ஒரு சொட்டுகூட இருக்கோ இல்லை அரைச் சொட்டுதான் இருக்கோ. அது என்ன மனுசனைத் தூங்கவிடுதா?” என்றதாம்.

 

‘இதனால் எம்புட்டு சிறுமைப்பட்டு போறோம்’ என்று தவிக்கிறார் கிழம். அவளோ இப்போது பேத்தியை அல்லது வேலைக்காரியை துணைக்கு வைத்துக்கொண்டு உள்ளே படுக்கிறாள். ஜன்னலைத் தட்டி மெள்ள அவளை எழுப்பி “வாடை வெரைக்கி…” என்று சொன்னால் ஜன்னல் வழியாக உல்லன் போர்வையைத் தருகிறாள். திண்ணை மேல் ஏறி அவள் சொந்தப் பெயரைச் சொல்லியே கூப்பிடுகிறார். விர்ரென்று தலைக்கு ரத்தம் ஏறும் நேரத்தில்தான் சொந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார். இப்போதும் அவள் மசியவில்லை.

 

விடுவிடுவென்று வெளியே போகிறார். குப்பை அள்ள வேலையாள் வரவில்லை என்று தெரிந்ததும் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு போய் அம்பாரமாய்க் கிடந்த மண்ணை வெட்டி வெட்டி கூடையில் நிரப்பி அவராகவே தூக்கிக் குப்பையின்மேல் வீசினார். நேரம் ஆக ஆக உடம்பு கொஞ்சகொஞ்சமாய் சுதாரித்தது. அலுப்பு விலகி ஒரு இதம் தெரிந்தது. பிறகு ஆனந்தமும் ஒரு நிம்மதியும்கூட.

 

‘காலம் கடந்து’ என்ற இந்தக் கதை ‘கனிவு’ கதையின் இரண்டாம் பாகம். இரண்டு கதைகளுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

 

நகைப்புடன் கூடிய கி.ராவின் மொழி, காமத்தின் நுட்பங்களைப் பேசும் இந்தக் கதைகளுக்கு கூடுதல் அழுத்தம் சேர்த்துள்ளது.

 

0

 

கி.ரா என்றதுமே நம் நினைவில் எழும் ‘கதவு’, ‘கோமதி’, ‘கிடை’, ‘வேட்டி’, ‘கன்னிமை’, ‘பேதை’, ‘நாற்காலி’ ஆகிய கதைகளைப் போலவே ‘கனிவு’, ‘காலங்கடந்து’ ஆகிய இரு கதைகளையும் முக்கியமானதாகக் குறிப்பிட முடியும். கி.ரா கரிசல் மண்ணையும் அதன் சம்சாரிகளையும் பற்றி மட்டும் சிறப்பாக எழுதினார் என்பதுடன் பெண்களை அவர் தன் கதைகளில் சித்தரித்திருக்கும் விதத்தையும் காதலை, காமத்தை அணுகியிருக்கும் நுட்பத்தையும் சேர்த்தே அவரை வாசிக்கவேண்டும் என்பதையே மேற்சொன்ன கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.

0

( அகரம் வெளியிட்டுள்ள ‘கி.ராஜநாராயணன் கதைகள்’ ( மூன்றாம் பதிப்பு டிசம்பர் 2004 ) என்ற தொகுப்பிலுள்ள கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது இந்தக் கட்டுரை.)

நல்ல கதைகளிலிருந்து பிரமாதமான கதைகளை நோக்கி… (‘மல்லி’ தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பின் முன்னுரை)

 


கல்லூரி நாட்களில் சில கதைகளை எழுதியிருந்தபோதும் அவை பிரசுரத்துக்கு அனுப்பப்படவில்லை. கைப்பிரதியாகவே நின்று போயின. அவற்றில் ஒரு கதை இப்போது கிடைத்திருக்கிறது, கதையின் இறுதிப் பக்கம் மட்டும் இல்லாமல். 1994-95 ஆண்டுகளில் யூமா வாசுகி திருப்பூரில் இருந்த நாட்களில் ‘குதிரை வீரன் பயணம்’ இதழுக்காக ஒரு கதையை எழுதித் தரக் கேட்டார். அப்படித்தான் என்னுடைய முதல் சிறுகதையான ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’ 1995ம் ஆண்டு பிரசுரமானது. அதே சமயத்தில் ‘புதிய பார்வை’ மாத இதழில் நீலமலைத் தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டிக்காக ‘இருப்பு’ கதையை அனுப்பி அது பரிசும் பெற்றது. இலக்கியச் சிந்தனையின் தொகுப்பிலும் இடம்பெற்றது.

தொடர்ந்து வெவ்வேறு இதழ்களில் கதைகள் பிரசுரமாயின. ஆரம்ப காலத்தில் எழுதிய ஒருசில கதைகளைத் தவிர பிற கதைகள் எவையுமே பிரசுரத்துக்காக காத்திருக்க நேர்ந்ததில்லை. எழுதிய சில நாட்களிலேயே பிரசுரம் பெற்றுள்ளன.

கோவை ஐடியல் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் திரு.நஞ்சப்பன் அவரது பள்ளி வளாகத்தில் முக்கியமான பல இலக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. வண்ணதாசனின் கடிதங்களையும், மொத்தத் தொகுப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆண்டுதோறும் புதிய நாவல் அல்லது சிறுகதைத் தொகுப்பை தனது ‘வைகறை பதிப்பகம்’ மூலமாக வெளியிட்டார். 2000ம் ஆண்டுக்கான தொகுப்பை பரிந்துரைக்கும்படி நாஞ்சில்நாடனிடம் கேட்க அவர் என் சிறுகதைகளை முன்மொழிந்தார். அவரே முன்னுரையையும் எழுதி எனது முதல் சிறுகதைத் தொகுப்புக்கு பெருமை சேர்த்தார். பதினைந்து கதைகளைக் கொண்ட ‘பிறிதொரு நதிக்கரை’ வெளியானது.

2001ம் ஆண்டு சித்திரை முதல் நாளன்று நாஞ்சில்நாடனுடன் நஞ்சப்பன் ஈரோட்டிலிருந்த எங்கள் வீட்டுக்கு வந்தார். ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ ஆகிய மங்கலப் பொருட்களை வைத்து அவற்றுக்கு நடுவில் சிறுகதைத் தொகுப்பையும், பத்தாயிரம் ரூபாய் கொண்ட ஒரு உறையையும் வைத்து எனது பெற்றோர்களின் முன்னிலையில் என்னிடம் கொடுத்தார். சிறுகதைத் தொகுப்பு வெளியான நாளிலேயே அதற்கான உரிமைத் தொகை சகல மரியாதைகளுடன் எனக்குத் தரப்பட்ட அந்த நிகழ்வு இன்றும் எனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாக என் நினைவில் இருக்கிறது.

1999ல் வெளியான ‘அம்மன் நெசவு’ நாவலைத் தொடர்ந்து எழுதத் தொடங்கிய ‘மணல் கடிகை’யில் கவனம் குவிந்திருந்தபோதும் அவ்வப்போது சில கதைகளை எழுதினேன். அவ்வாறு எழுதப்பட்ட 15 கதைகளைக் கொண்ட இரண்டாவது தொகுப்பான ‘முனிமேடு’ 2007ம் ஆண்டு தேவதேவனின் முன்னுரையுடன் தமிழினி வெளியிட்டது. முதல் தொகுப்பைவிட இது கூடுதல் கவனம் பெற்றது. 

2007லிருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் எழுதிய கதைகளைக் கொண்ட ‘சக்தியோகம்’ சிறுகதைத் தொகுப்பும், ‘வால்வெள்ளி’ குறுநாவல் தொகுப்பும் கடந்த ஆண்டு வெளியாயின.

ஏற்கெனவே வெளியாகியுள்ள மூன்று தொகுப்புகளிலிருந்து என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட .. சிறுகதைகளைக் கொண்டது இத்தொகுப்பு. கதைகளில் நான் முயன்றுள்ள எல்லா பரிணாமங்களையும் வெளிப்படுத்தும்விதத்தில் இவற்றை தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

தொடக்கத்தில் திருப்பூரை பின்னணியாகக் கொண்ட ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’, ‘இலையுதிர் காலம்’, ‘மல்லி’, ‘இருப்பு’ ஆகிய கதைகளை இயல்பாகவே எழுதியிருக்கிறேன். பின்னாளில் ‘மணல் கடிகை’ எழுதுவதற்கான தொடக்கமாக அமைந்த சிறுகதை ‘மல்லி’. திருப்பூரில் உழைக்கும் பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் அனுபவிக்க நேரும் சிக்கல்களை அழுத்தமாக சொல்லும் இக்கதை இன்றும் வீரியம் குறையாமலே இருக்கிறது என்பதால் தொகுப்பில் சேர்த்துள்ளேன்.

எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் மொழி சார்ந்த ஈர்ப்பு இருந்ததை உணர்த்தும் சிறுகதைகள் சிலவற்றை எழுதியுள்ளேன். ‘கோட்டை’, ‘மண்வீணை’, ‘கையிலடங்காத தாமரை’ போன்ற கதைகளிலிருந்து ‘கஜாரிகா’ வை சேர்த்திருக்கிறேன்.

எனது குடும்பத் தொழிலான கைத்தறி நெசவாளர்களின் பாடுகளையும் வாழ்நிலையையும் சொல்லும் கதைகள் என்னளவில் மிக முக்கியமானவை. இன்று இல்லாமலே போய்விட்ட ஒரு தொழிலின் பண்பாட்டு புலத்தை இக்கதைகள் வரலாற்றின் பக்கங்களில் பத்திரப்படுத்தியுள்ளன என்பது என் நம்பிக்கை. அவ்வாறு எழுதப்பட்ட ‘லச்சம்’, ‘தோஷம்’, ‘பிற்பகல் விளையும்’, ‘இறவாப் பிணி’, ‘மருதாணி’, உள்ளிட்ட கதைகளிலிருந்து ‘அக்காவின் கருப்பு வெள்ளைப் புகைப்படம்’, ’தோஷம்’ ஆகிய கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

வாழ்வின் சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனுபவங்களை புரிந்துகொள்ள தர்க்க அறிவு துணைநிற்பதில்லை. அவ்வாறான நிகழ்வுகளும் அனுபவங்களும் புதிரானவையாகவே எஞ்சிவிடுகின்றன. இத்தகைய திகைப்பை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை ‘கையிலடங்காத தாமரை’, ‘பிறிதொரு நதிக்கரை’, ‘முனிமேடு’, ‘பிறழ்வு’, ‘வலியின் நிறம்’ போன்ற கதைகள். காலப்போக்கில் வாசிப்பில் சுவை மங்காத இதுபோன்ற இதுபோன்ற கதைகளை தொடர்ந்து ஏன் எழுதுவதில்லை என்ற கேள்வி எழுகின்றது. எனவே, ‘முனிமேடு’, ‘பிறிதொரு நதிக்கரை’ ஆகிய இரண்டு கதைகளை தொகுப்பில் சேர்க்க முடிவுசெய்தேன்.

‘ஒற்றைச் சிறகு’ காலச்சுவடு இதழில் வெளியானது. கதா அமைப்பினரால் தேசிய அளவில் சிறுகதைகளுக்காக வழங்கப்படும் ‘கதா’ விருதுக்காக 1999ம் ஆண்டு ஜெயமோகன் தமிழிலிருந்து பரிந்துரைத்த மூன்று கதைகளிலிருந்து இக் கதை தெரிவு செய்யப்பட்டது. அந்த முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு தொகுப்பில் ‘ஒற்றைச் சிறகு’ இடம்பெறுகிறது.

மனித உறவுகள் சார்ந்தும் முக்கியமாக காமம் குறித்துமான உளச் சிடுக்குகளை சற்றே திறந்துகாட்ட முனையும் விதத்தில் எழுதப்பட்ட கதைகள் அதிகமும் கவனம் பெற்றுள்ளன. ‘இரவு’, ‘நிழல் பொழுதினிலே’ ஆகிய கதைகள் அவ்விதத்தில் முக்கியமானவை.

மனத்தின் ஆழங்களை நோக்கி அழைத்துச் செல்லவும் விளங்கவியலா இருட்டினூடே சிறிய ஒளியைப் பாய்ச்சவும் விழையும் கதைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டவை ‘சக்தியோகம்’, ‘தருணம்’, ‘சூடக் கொடுத்தவள்’ ஆகிய கதைகள்.

ஒருசேர இந்தக் கதைகளை இன்று வாசிக்கும்போது இன்னும் சில கதைகளை எழுதியிருக்க முடியும் என்றே நம்புகிறேன். காலப்போக்கில் என் கதைமொழியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் களங்களின் தேர்வில் நிகழ்ந்திருக்கும் முதிர்ச்சியையும் கவனிக்க முடிகிறது. அந்த வகையில் இத்தொகுப்பு எனக்கு உதவியிருக்கிறது. எனது சிறுகதைகள் குறித்த நிகழ்வொன்றில் ‘நல்ல கதைகளை எழுதியிருக்கும்’ நான் ‘பிரமாதமான கதைகளை எழுதவேண்டும்’ என்று கவிஞர் இசை குறிப்பிட்டார். நல்ல கதைகளிலிருந்து பிரமாதமான கதைகளை நோக்கிய முனைப்புக்கு இத்தொகுப்பு தொடக்கமாக அமையும்.

கதைகளை வெளியிட்ட ‘சொல் புதிது’, ‘ஆரண்யம்’, ‘நிகழ்’, ‘காலச்சுவடு’, ‘இந்தியா டுடே’, ‘கதைசொல்லி’, ‘உயிர்மை’, ‘உயிரெழுத்து’, ‘மழை’, ‘அந்திமழை’, ‘சொல்வனம்’, ‘மலைகள்’, ‘தமிழினி’, ‘இடைவெளி’ ஆகிய இதழ்களை இத் தருணத்தில் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

என் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகக் காரணமாக இருந்தவர் நாஞ்சில்நாடன். எனது இலக்கிய ஆசான்களில் ஒருவரான அவரது நெருக்கமான நட்பும் உரிய வழிகாட்டுதல்களும் இன்று வரையிலான எனது செயலாக்கங்களுக்கு ஆதாரங்களாய் அமைந்துள்ளன. அவருக்கு இத்தொகுப்பை நன்றியுடன் சமர்ப்பிக்கிறேன்.

இந்த தொகுப்பை வெளியிட்டிருக்கும் தியாகு புத்தக மையம் எனது கோவை வாழ்வில் முக்கியமான ஒரு இடமாகும். இங்கு நான் சந்தித்த முக்கியமான நண்பர்கள் எனது வாசகர்கள், விமர்சகர்கள். அவர்களுடனான உரையாடல்கள் எனது வாசிப்புக்கும் எழுத்துக்கும் உரம்சேர்த்துள்ளன. அவர்களால் வெளியிடப்படும் இத்தொகுப்பு இலக்கிய வாழ்வில் முக்கியமானது. என் மீதும் என் எழுத்தின் மீதும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் பிரியத்துக்கும் நான் செய்யும் கைமாறு இன்னும் மகிழ்ச்சியளிக்கும் நம்பிக்கையளிக்கும் விதத்தில் எழுதுவதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

ஜூலை 2019 


Sunday, 29 September 2024

வம்ச விருட்சம் – எஸ்.எல்.பைரப்பா

 

கொடி மலர் பூக்கும் கற்பூர கிளுவை


0

இந்திய நாவல்களை வாசிக்கத் தொடங்கிய காலத்தில், சிறந்த இந்திய நாவல் என்று அப்போது குறிப்பிடப்பட்ட நாவல் தாராசங்கர் பந்தோபாத்யாயாவின் ‘ஆரோக்கிய நிகேதனம்’. தமிழில் மொழிபெயர்த்தவர் த.நா.குமாரசுவாமி.  இன்னும் சிலர் அதீன் பந்தோபாத்யாயாவின் ‘நீலகண்ட பறவையைத் தேடி’ (தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி ) நாவலைச் சுட்டுவார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய நாவல்களைப் பற்றிய பேச்சு வந்தபோது அண்ணாச்சி வசந்தகுமார் ‘குடும்பம் சிதைகிறது’ நாவல்தான் இந்திய அளவில் எழுதப்பட்ட சிறந்த நாவல் என்றார். அதை நான் வாசித்திருக்கவில்லை. நண்பர்களிடம் விசாரித்தேன். கிடைக்கவில்லை. எஸ் எல் பைரப்பாவின் ‘பருவம்’ நாவலை பாவண்ணன் மொழிபெயர்த்திருந்தார். அவரிடமும் ‘குடும்பம் சிதைகிறது’ கிடைக்கவில்லை. பிறகு வெகு காலம் கழித்தே எச்.வி.சுப்ரமணியம் மொழிபெயர்த்த அந்த நாவலை வாசிக்க வாய்த்தது. ஒரு முறை சிருங்கேரிக்கு சென்றிருந்த சமயத்தில் துங்கபத்ரா நதியில் நீராடிக் கொண்டிருந்தபோது ‘குடும்பம் சிதைகிறது’ நாவலில் வரும் ஒரு முக்கியமான காட்சியைப் பற்றி மீண்டும் பேச்சு வந்தது. சுற்றுலா முடிந்து வந்ததும் அந்த நாவலை வாசிக்கும் ஆவலுடன் புத்தக அலமாரியில் தேடினேன். கிடைக்கவில்லை. மனதுக்கு மிக நெருக்கமான ஒரு நாவல். இந்தியக் குடும்ப அமைப்பு, உறவுகளுக்குள் உள்ள நெருக்கமும் விலகலும், மனிதர்களை பகடையாக்கும் சுயநலம், பெண்களின் உள ஆழங்கள் என அந்த நாவல் கொண்டிருக்கும் நுட்பங்கள் வியப்பில் ஆழ்த்துபவை.

‘குடும்பம் சிதைகிறது’, ‘பருவம்’ நாவல்களின் மூலமாக எஸ்.எல்.பைரப்பா இந்திய நாவலாசிரியர்களின் பட்டியலில் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறார். அவரைப் பற்றி வாசிக்க நேரும்போதெல்லாம் அவர் எழுதிய இன்னொரு நாவலும் தவறாது குறிப்பிடப்படும். ‘வம்ச விருட்சம்’ என்ற அந்த நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்படவேயில்லை. ஒரு முறை பாவண்ணனிடம் அதைப் பற்றி கேட்டதும் நினைவிருக்கிறது.

‘வம்ச விருட்சம்’ 1961ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவல் தமிழில் மொழியாக்கம் கண்டுள்ளது. கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்துக்கும் வெகுவேகமாக மொழியாக்கங்களைச் செய்து வரும் கே.நல்லதம்பிக்கு இந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது.

0

2

இந்திய சமூக வாழ்வில் குடும்பம் என்பது மிக முக்கியமான, தவிர்க்க முடியாத அலகு. சொத்து, பொருளாதாரம் என அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது. மேலும், குடும்ப பாரம்பரியம் சார்ந்த பெருமிதங்களை பேணுவதும் அவற்றுக்கு சிறிதும் களங்கம் ஏற்படாதவாறு நடந்துகொள்வதும் வாரிசுகளின் கடமை என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படுவதுண்டு. இன்றும் கிராமங்களில் பாரம்பரியம் சார்ந்த பழக்க வழக்கங்களை, சடங்குகளை அக்கறையுடன் கடைபிடித்து வருவதைப் பார்க்க முடியும். அத்தகைய பாரம்பரியங்களும் சடங்குகளும் குறிப்பிட்ட பிரதேசத்தின் பண்பாட்டு கூறுகளாகவும் அமைகின்றன. ஒரு தனி மனிதனின் குணநலன்களை அவனது பாரம்பரியத்துடன் தொடர்புபடுத்திக் காட்டுவதும் உண்டு. இன்றைய நவீன உலகில் மாறிவரும் தலைமுறையினரிடம் இதுபோன்ற எண்ணங்களுக்கோ கருத்துகளுக்கோ பெரிய அளவு முக்கியத்துவம் கிடையாது. மரபும் பாரம்பரியமும் சம்பிரதாயமான அளவில் மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்ளப் படுகின்றன. ஒருசில குடும்ப நிகழ்வுகளில் மட்டும் இந்த வழக்கங்கள் இன்னும் கடைபிடிக்கப்படுகின்றன. இன்றைய தலைமுறையினருக்கு இவற்றில் அந்த அளவுக்கு ஆர்வமோ நம்பிக்கையோ இருப்பதில்லை. கல்வியும் விடுதலைக்குப் பிறகு ஏற்பட்ட வளர்ச்சியும் கருத்தளவில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

ஆதிவாசியாக வேட்டையாடித் திரிந்துகொண்டிருந்த தனி மனிதன், பிறருடன் சேர்ந்து வாழத் தலைப்பட்ட காலத்திலிருந்தே சில கட்டுப்பாடுகள், வரையறைகள் உருவாக்கினான். அவ்வாறான நிபந்தனைகள் பெரும்பாலும் சுயநல நோக்கில் அமைந்தவையே. பரிணாம வளர்ச்சியின் வெவ்வேறு காலகட்டங்களில் அவ்வறான கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் ஒன்றிணைந்து ஒழுக்க நியதிகளாக உருப்பெற்றன. சமூக வாழ்வின் அடிப்படை கூறுகளாக அமைந்தன. அவற்றை வலியுறுத்தும்பொருட்டு பாவ, புண்ணிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

தனி மனிதனுக்கும் சமூக நெறிகளுக்குமான உறவு தொடர்ந்து மறுபரிசீலனைக்கும் விமரிசனங்களும் உள்ளாகி வருகின்றன. ஒருவகையில் கலை, இலக்கியங்கள் இந்த மறுபரிசீலனைகளுக்கும் விமரிசனங்களுக்கும் பங்களிக்கின்றன. 

3

‘வம்ச விருட்சம்’ 1961ஆம் ஆண்டு வெளியானபோதும், இந்திய விடுதலைக்கு சற்று முந்தைய காலகட்டத்திலேயே நாவல் நிகழ்கிறது. மைசூர், நஞ்சன்கோடு பகுதியை களமாகக் கொண்டிருக்கிறது.

வாழ்க்கை குறித்த அடிப்படையான சில கேள்விகளை இந்த நாவல் எழுப்புகிறது. எது வாழ்க்கை?

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனுக்கான வாழ்வு உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் அவன் தன் வாழ்வை சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்றே தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. எந்தவொரு மனிதனும் தன் விருப்பப்படி வாழ்ந்துவிட முடியாது. அவனுடைய சுதந்திரத்துக்கும் எல்லைகள் உண்டு. அந்த எல்லைகளை வகுக்க குடும்பம், சமூகம், அரசு போன்ற வலுவான அமைப்புகள் உண்டு.  அந்த அமைப்புகள் வகுத்திருக்கும் சில வரைமுறைகளுக்கு ஏற்பவே தன் வாழ்வை அவன் அமைத்துக் கொள்ள முடியும். அவனுடைய பெரும்பாலான நடவடிக்கைகள் அத்தகைய அமைப்புகளின் அனுமதிக்கு உட்பட்டே இருக்க முடியும்.  

சாதாரண நடைமுறை வாழ்க்கைக்கே இத்தகைய கட்டுப்பாடுகள் இருக்கும்போது விதவை மறுமணம், இருதார மணம் போன்ற சமூகத்தின் ஒப்புதல் எளிதில் கிடைக்காதவற்றுக்கான தடைகள் எண்ணற்றவை. நேரடியாக இவை மறுக்கப்படாது போனாலும் மறைமுகமாக பல சங்கடங்களை ஏற்படுத்தும். உளவியல் அழுத்தங்களுக்குக் காரணமாக அமையும். கணவனை இழந்த பெண் தலையை மழித்துக்கொண்டு ‘மடி’யைக் கடைபிடிக்கவேண்டும், வெளியில் வராமல் இருண்ட அறைக்குள் அடைந்து தன் வாழ்வை முடித்துக் கொள்ளவேண்டும் போன்ற நிர்ப்பந்தங்கள் விதிக்கப்பட்டிருந்தன. இதுபோன்ற கட்டுப்பாடுகள் இன்றைய வாழ்வுக்கேற்ப வேறு வடிவங்களில் உள்ளன.

என்றால் ஒரு தனி மனிதனின் சுதந்திரம் எல்லைகளின்றி இருக்க வேண்டுமா? அவ்வாறு ஒவ்வொரு மனிதனும் கட்டற்ற சுதந்திரத்துடன் வாழத் தலைப்பட்டால், சமூக வாழ்வு குழப்பத்துக்கு உள்ளாகாதா? யாரும் யாரையும் நெறிப்படுத்த முடியாதபோது, கேள்வி கேட்க முடியாதபோது மனித உறவும் அதன் விளைவான பிற அமைப்புகளும் உருவாவதோ நடைமுறைப்படுத்தப்படுவதோ சாத்தியமில்லை. எனவே, மனிதன் தன்னுடைய சுமுகமான வாழ்வின் பொருட்டு தானாக ஏற்படுத்திக் கொண்ட சில வரைமுறைகளே இந்த அமைப்புகளை உருவாக்கின. அதன் பின், அந்த அமைப்புகளின் நியதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த அமைப்புகள் தனி மனித வாழ்வை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்டவையாக மாறும்போது மனிதன் மீண்டும் தன் சுதந்திரம் பற்றிய கேள்விகளை எழுப்ப நேர்கிறது.

சுதந்திரம் குறித்த இந்த கேள்வி எழும்போது தனி மனித விருப்பம் முக்கியமா, சமூக அங்கீகாரம் முக்கியமா என்ற உளமோதல் ஏற்படும். சம்பிரதாயமான மரபார்ந்த மனிதர்கள் சமூகத்தை ஒட்டியே வாழவேண்டும் என்றே சொல்வார்கள். ஆனால், தனி மனித விருப்பத்தை சமூக வரைமுறைகள் மறுப்பதால் ஏற்படும் விளைவுகளை சந்திப்பவர்கள் இதற்கு எதிரான தரப்பையே சார்ந்திருப்பார்கள். இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான இந்த மோதல்களும் மீறல்களுமே குறிப்பிடத்தகுந்த பல சமூக மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன. தனிமனிதனும் சமூகமும் தொடர்ந்து தம்மை மறு பரிசீலனை செய்துகொள்ளும் வாய்ப்புகளை இந்த முரண்களும் மோதல்களும் உருவாக்கித் தருகின்றன. இந்த மறுபரிசீலனைகளின் வழியாகவே ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் நியதிகளும் கோட்பாடுகளும் வரையறைகளும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.  

‘தனிமனிதனின் விருப்பத்துக்கும் சமூக நெறிகளுக்குமான  மோதல்களும் முரண்களும் இணைந்தே மனித வாழ்க்கையை தீர்மானிக்கின்றன’ என்ற இந்த அடிப்படையை, கிட்டத்தட்ட இருபதாண்டு கால அளவில் மைசூர், நஞ்சன்கோடு பகுதியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு முதன்மை கதாபாத்திரங்களைக் கொண்டு ஆழமான விவாதத்துக்கு உட்படுத்தியிருக்கிறார் பைரப்பா.

வம்ச தூய்மையை வலியுறுத்தும் பண்டிதர், அதற்கு எதிரான காரியத்தில் இறங்கும் மருமகள் என்பது நாவலின் ஒரு மையம். எடுத்துக்கொண்ட லட்சியத்துக்காக கட்டிய மனைவியை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை மணந்துகொள்ளும் சதாசிவ ராயர், இரண்டாவது மனைவியின் விருப்பங்களை பொருட்படுத்துவதில்லை என்பது இன்னொரு மையம். இந்த இரண்டு மையங்களை குறுக்கும் நெடுக்குமாக ஆழ்ந்து ஆராய்வதே நாவலின் பலம்.

இந்த மோதல்களுக்கு நடுவே நேரடியாக இதில் தொடர்பில்லாத ஆனால் இதன் விளைவுகளைச் சந்திக்க நேரும் பிற கதாபாத்திரங்களின் நிலையும் அதனால் எழும் கேள்விகளும் முக்கியமானவை. பண்டிதரின் மனைவி பாகீரதம்மா, ராயரின் மனைவி முதல் மனைவி நாகலட்சுமி, இரண்டாம் மனைவி கருணா ரத்னே, பண்டிதரின் பணியாள் லட்சுமி, காத்தியாயினியின் மகன் சீனி ஆகியோர் எழுப்பும் கேள்விகளும் உறவுகள் சார்ந்தும் வாழ்க்கை குறித்துமான அவரவர் தரப்புகளுக்கு வலு சேர்க்கின்றன.  

அற வாழ்வு, மரபைப் பேணுதல், லட்சியத்தை அடைதல் என ஆண்கள் தங்களின் நோக்கத்துக்காக மட்டுமே வாழும்போது அவர்களுக்கு இணையாக வாய்க்கும் பெண்களின் இருப்பு பொருளற்றுப் போகும் அவலமும் அபத்தமும் எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாதவை. ‘திருமணம் என்பது குடும்ப தர்மத்தை நிறைவேற்றும் ஒரு சடங்கு. வம்சத்தை தளைக்க உருவாக்கப்பட்ட ஏற்பாடு. பிள்ளையைப் பெற்றுத் தருவதோடு மனைவியின் கடமை முடிந்துவிடுகிறது’ என்று நம்புகிறவர் பண்டிதர், ‘மகத்தான லட்சியத்தை நோக்கிய பயணத்தின்போது குடும்ப வாழ்வும் மனைவியும் அதற்கு நிறைவேற்ற ஒத்துழைப்பவராக இல்லாதபட்சத்தில் அந்த உறவு அன்றாடத்தின் தொல்லையாகவே மாறும்’ என்றும் ‘லட்சியத்தை அடைய சமநோக்குள்ள பெண் சகபயணியாக இருக்கலாம். அதைத் தவிர்த்து பிற எளிய சாமானிய ஆசைகளுக்கு உரிமைகளுக்கு அவள் இடம்கொடுக்கலாகாது’ என்றும் வலியுறுத்துபவர் ராயர். இந்த இருவரும் சொல்லும் காரணங்கள் வெவ்வேறாக இருப்பினும் பெண்களைக் குறித்த மனநிலை ஒன்றுதான்.  

இதற்கு மாறாக, பெண்களின் மனநிலை, ஆண்களின் குறுகிய பார்வையை நுட்பமாக விமர்சிப்பதாக அமைந்துள்ளது. பண்டிதருக்கு இல்லற சுகத்தை அளிக்க முடியாத நிலையில் வீட்டுப் பணியாளான லட்சுமியை இணங்கச் செய்கிறார் பாகீரதம்மா. லட்சுமியும் அதற்கு சம்மதிக்கிறார். பண்டிதர் வலியுறுத்தும் அறத்துக்கும் தூய்மைவாதத்துக்கும் எதிரான செயல்பாடு என்பதை இருவரும் உணராதவர்கள் அல்ல. ஆனால்,  அவர்களுக்கு ஆழமான அறநெறிகளையும் கோட்பாடுகளையும்விட, அன்றாட வாழ்வின் எளிய சந்தோஷங்களே அப்போதைக்கு முக்கியம்.  அந்தந்த நாளைக் கடந்து எதிர்காலத்தை பற்றி யோசிப்பதில்லை. ஆராய்ச்சியிலும் நூல் உருவாக்கத்திலும் உதவும்பொருட்டு சதாசிவ ராயரை மணந்துகொள்ள சம்மதிக்கும் கருணா ரத்னே, வேறெந்த சாதாரண விருப்பங்களுக்குக் கூட இடம் கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் கூடவே ஏற்றுக்கொள்வது ஒருவித தியாக மனநிலை.

இந்த மூவருக்கும் மாறாக, மிகத் துணிச்சலுடன் எல்லாவற்றையும் மறுத்து தன் விருப்பத்துக்கு ஏற்ப ராஜாராவை மணந்துகொள்ளும் காத்தியாயினி தன் வயிற்றில் கருக்கள் தங்காதபோது பாவ புண்ணியம் சார்ந்த குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறார். இறுதியில் மன்னிப்பு கேட்டபின்பே மரணமடைகிறார்.

எது சரி, எது தவறு என்கிற இருமைகளின் மோதல்களால் தன் காரியங்களை தீர்மானிக்க முடியாதவர்களாக இருப்பவர்கள் சதாசிவ ராயரும் காத்தியாயினியும். அவ்வாறான இருமையின்றி தன் வாழ்வைக் குறித்த தடுமாற்றமற்ற தெளிவான பார்வையைக் கொண்டவர்கள் சீனிவாச பண்டிதரும் கருணே ரத்னாவும். இந்த இரு எல்லைகளுக்கும் நடுவில் கொடுக்கப்பட்ட வாழ்வை அதன் சாதக பாதகங்களுடன் அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் பாகம்மா, நாகலட்சுமி, லட்சுமி ஆகிய மூன்று பெண்கள்.  

கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டவர்களின் முடிவு சரியா, வேண்டியதை போராடி பெற்றுக்கொண்டவரின் முடிவு சரியா?

4

வாழ்க்கை, பண்பாடு, மனித இயல்பு ஆகியவற்றின் போக்குகள் குறித்து ஆழமாக உரையாடும் இந்த நாவல், நீண்ட விவாதங்களுடனும் உளமோதல்களுடனும் அமைந்திருப்பது இயல்பே. இதை ஒரு நாவலாக எழுதுவது என்பது சவாலான ஒன்று. எஸ்.எல்.பைரப்பாவின் புனைவுத் திறன் அந்த சவாலை பல்வேறு நுட்பங்களுடன் மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறது.  

1960களில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலின் குறிப்பிடத்தக்க புனைவம்சமாக அமைந்திருப்பது நாவலின் பகுதியாக அமைந்துள்ள இதன் உட்பிரதிகள்.      

சதாசிவ ராயர் எழுதும் ‘இந்தியப் பண்பாட்டின் வரலாறு’ என்ற பெருநூல், நாவலில் தன்னிச்சையாக இடம் பெற்றிருக்கும் ஒன்றல்ல. அவர் ஒரு பேராசிரியர். ஆய்வு செய்து எழுதுகிறார் என்பதால் இடம் பெற்றிருக்கும் ஒன்றல்ல. இந்த நூல் இந்தியப் பண்பாட்டு வரலாற்றைப் பேசுகிறது. இந்தியப் பண்பாடு தனிமனிதனின் மீது விதிக்கிற, கட்டுப்படுத்துகிற சில நியமங்களை, நிபந்தனைகளையும் அதன் சாதக, பாதகங்களையும் இந்த நாவல் ஆழமாக விதிக்கிறது. எந்தவொன்றை நோக்கி இந்த நாவல் கேள்விகளை எழுப்புகிறதோ, அது உருவாகி வந்த பாதையைக் குறித்து நாவலின் முதன்மை கதாபாத்திரம் ஆய்ந்து எழுதுகிறது. அதுவே தன் வாழ்க்கை என்று வேறெதையும் பொருட்படுத்தாமல் அதிதீவிரமாக ஈடுபடுகிறது. அந்தவொரு காரியத்துக்காக   இந்தியப் பண்பாடு விதிக்கக் கூடிய முக்கியமான அம்சத்தையே மீறவும் செய்கிறது. எனவே, நாவல் தன்னுடைய முதன்மை  கதாபாத்திரத்தைக் கொண்டே தன்னை விவாதத்துக்கு உட்படுத்திக் கொள்கிறது என்பது முக்கியமானது. அந்த வகையில் சதாசிவ ராயர் எழுதும் நூல் இந்த நாவலின் உட்பிரதியே.

இதேபோல, ராஜாராவ் எழுதி இயக்கும் ‘மூலாதாரம்’ என்ற நாடகமும் இந்த நாவலின் இன்னொரு உட்பிரதியாக அமைந்திருக்கும் ஒன்றுதான்.   ‘எப்போதும் புதியவளாக, நிரந்தர ஆற்றலுடன் இருக்கும் பிரகிருதி (இயற்கை)யை செயற்கை அறத்தால் கட்டிப்போடுவது அநீதி. இயற்கை என்றும் இளமையானவள். அதன் அழகான மெய்வடிவத்தை அழிக்க நினைக்கும் அறம் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும்’ என்பது அந்த நாடகத்தின் அடிப்படை. இது நாடகத்தின் கதாபாத்திரம் சொல்வதுதான். ஆனால், அது நாடக வசனம் மட்டுமல்ல. அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் காத்தியாயினி தன் வாழ்வைக் குறித்து எழுப்பும் கேள்விகள் அவை. ஒரே வருடத்தில் கணவனை இழந்த ஒரு இளம்பெண்ணுக்கு இயல்பாக எழும் கேள்விகளையும் விழைவுகளையும் அவற்றின் அடிப்படையில் எடுக்கும் துணிச்சலான முடிவையும் குறிப்புணர்த்துவதாகவே இந்த நாடகம் நாவலின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

கபிலை நதிக்கரையில் அமைந்திருக்கும் நஞ்சன்கூடு கிராமத்தையும் மைசூரையும் பின்னணியாகக் கொண்டிருக்கும் இந்த நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும் இயற்கைச் சூழல்கள் பல சந்தர்ப்பங்களில் அந்தந்த கதாபாத்திரங்களின் மனவோட்டங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. நஞ்சன்கோட்டுக்கும் மைசூருக்குமான காத்தியாயினியின் ரயில் பயணங்கள், சாம்ராஜபுரம் ரயில்நிலையத்தையொட்டிய சுடுகாட்டில் சிதைகள் எரியும் காட்சி, அதன் பிறகான மலையேற்றம், நந்திமலையில் சதாசிவ ராயரும் கருணாவும் மேற்கொள்ளும் நடைப்பயணங்கள் ஆகியவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். சதாசிவ ராயரும் கருணாவும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் பல்கலைக் கழக அறையின் சூழலும் அவர்களுடைய வீடும் எடுத்த காரியத்தில் அவர்கள் கொண்டிருக்கும் தீவிரத்தை காட்டுவதாக அமைந்துள்ளன.

பண்டிதரின் வீட்டுக் கொல்லையில் இருக்கும் கற்பூரக் கிளுவை மரத்தில் ஒரு மல்லிகைக் கொடி. கிளுவை மரம் காய்ந்து போவதைக் கவனித்த காத்தியாயினி பண்டிதரிடம் சொல்கிறாள். அதைக் கவனித்த பண்டிதர் ஒரு ஆளை வரவழைத்து காய்ந்த மரத்தை எச்சரிக்கையுடன் வெட்டி எடுக்கிறார். மல்லிகைக் கொடியை பழுதுபடாமல் விடுவித்து அருகில் ஒரு மூங்கில் தடியை நட்டிப் படரவிடுகிறார். இன்னொரு கற்பூர கிளுவையை பக்கத்தில் ஊன்றி தண்ணீர் ஊற்றுகிறார். இரண்டொரு வாரங்களில் மரம் தளிர்விட, மல்லிகைக் கொடியை மரத்தில் படவிடுகிறார். காய்ந்த மரத்தோடு சேர்ந்து மல்லிகையும் காய்ந்துவிடும் என்று கவலைப்பட்ட காத்தியாயினிக்கு பூத்துச் சொரியும் மலர்களும் அவற்றின் மணமும் மகிழ்ச்சியளிக்கின்றன.

பண்டிதர் வீட்டுக் கொல்லையில் காட்டப்படும் கிளுவை மரமும் மல்லிகைக் கொடியும் நாவலின் இரு ஆழமான படிமங்களாக உருமாறிவிடுகின்றன. இதேயளவுக்கு தாக்கத்தைத் தரும் இன்னொரு படிமம் நஞ்சன்கோடு கிராமத்துக்கும் மைசூருக்கும் இடையிலான ரயில் பயணம். அது மரபுக்கும் நவீனத்துக்குமான பயணமாக மாறிவிடுகிறது.

முதன்மை கதாபாத்திரங்களின் மனவோட்டங்கள் அதிகமும் இடம் பெற்றிருக்கும் இந்த நாவலின் சில அத்தியாயங்களை பைரப்பாவின் அபாரமான புனைவாற்றலுக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

அன்றிரவு சதாசிவராயர், கருணாவை திருமணம் செய்யும் தன் முடிவை மனைவி நாகலட்சுமியிடம் தெரிவிக்க நினைக்கிறார். வழக்கத்துக்கு மாறாக விரைவிலேயே படுக்கை அறைக்கு வந்து ‘நாகூ’ என்று அவளை அழைப்பதை அவரது விழைவாகப் புரிந்துகொண்டு ஆதரவாக தழுவிக்கொள்கிறாள் மனைவி. நலிந்த அவர் உடல் நலம் குறித்து கவலை கொள்கிறாள். அவரது மன உறுதி கரைகிறது. கண்ணீர் விடுவதைக் கண்டு அவரை ஆறுதல் படுத்துகிறாள். குழந்தையை இறுகத் தழுவிப் படுத்திருக்கும் அன்னையைப் போல அவரைத் தழுவிக் கிடக்கிறாள். தூங்க முடியாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்கிறார் சதாசிவ ராயர். இந்த அத்தியாயத்தில் பைரப்பா காட்டும் எளிய குடும்பச் சித்திரம் மிக முக்கியமானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தம்மைப் பொருட்படுத்தாத கணவர்களை, மனைவிகள் மிக எளிய, பாசாங்கற்ற நடவடிக்கைகளால் வெற்றிகொள்ள முடியும் என்பதைக் காட்டும் நுட்பமான பகுதி.

கர்ப்பப் பை பலவீனம் என்பதால் உடல் உறவு மறுக்கப்பட்ட நிலையில் பாகீரதம்மா, தன் கணவரின் வேட்கையை நிறைவேற்றும் பொருட்டு பணியாள் லட்சுமியை சம்மதிக்கச் செய்கிறாள். கணவரிடமும் பக்குவமாக எடுத்துச் சொல்கிறாள். லட்சுமி அறையில் காத்திருக்க, அங்கு செல்ல விரும்பியும் முடியாது தவிக்கிறார் பண்டிதர். அறம் சார்ந்த அவரது மனநிலை அவரைத் தடுக்கிறது. அதே நேரம், அவருக்காக விருப்பத்துடன் காத்திருக்கிறாள் லட்சுமி. கணவனை இழந்தவள். சிறு வயதிலிருந்தே பண்டிதரின் மீது சற்றே விருப்பம் கொண்டவள். ஆசைக்காக இல்லாவிடினும் கடமையின் பொருட்டு அவரோடு சேர்வதற்காக தவிப்புடன் எதிர்பார்த்திருக்கிறாள். மூவருக்குள் அந்த இரவில் நடக்கும் ஊசலாட்டத்தை காட்டும் இந்த அத்தியாயமும் நாவலின் மிக முக்கியமான ஒன்று. 

5

ஒரு நாவல் முடிவில் நம்முள் எழுப்பும் கேள்விகளும் சிந்தனைகளுமே அந்த நாவலின் தர வரிசையை நம்முள் நிறுவும். 1965இல் எழுதப்பட்டிருந்தாலும் இந்த நாவல் முன்னிறுத்தும் விவாதங்கள் இன்றும் பொருள்மிக்கவை. மரபுக்கும் நவீனத்துவத்துக்குமான மோதல்களும் ஊசலாட்டங்களும் காலத்துக்கும் நீடிப்பவை. முற்றுப்பெறாதவை. அந்த மோதல்களின் வழியாக அடையும் மாற்றங்களைக் கொண்டு மரபை மேலும் நெருங்கிப் புரிந்துகொள்ளவும் நவீனத்தை அணுகி விமர்சிக்கவும் வாய்ப்பிருக்கிறது. வம்ச விருட்சம் நாவலும் அத்தகைய சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

வம்ச விருட்சத்தின் புனிதத்தைப் பேணுதலையே வாழ்க்கையாக கொண்ட பண்டிதர், உண்மையில் தன் பிறப்பின் ரகசியத்தை அறிந்த பின் நொறுங்கி, மரபின் மீதான நம்பிக்கையைத் துறந்திருக்க வேண்டும். இயல்பில் அதுவே நடக்கும். ஆனால், பண்டிதர் அவ்வாறான முடிவுக்கு வருவதில்லை. எப்போதும் போல சமநிலையுடன் அணுகி முழுமையான துறவறத்தை மேற்கொள்கிறார். இவ்வாறான உறுதியான மனநிலைக்கு மரபின் வழியாக அவர் வாழ்க்கையைப் பக்குவத்துடன் புரிந்துகொள்ள முடிந்துள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு பக்கம், அறக் கட்டுப்பாடுகளைவிட தனிமனித விருப்பமே முக்கியம் என்று துணிச்சலுடன் குடும்பத்திலிருந்து வெளியேறி, மறுமணம் புரிந்துகொள்ளும் காத்தியாயினி இறுதியில் தனது வாழ்வின் துயரங்களுக்கு அத்தகைய பாவங்களே காரணம் என்று குற்றவுணர்ச்சி கொள்கிறாள். இறுதியில் பண்டிதரிடமும் தன் மகனிடமும் மன்னிப்பைக் கோரிய பின்பே மரணமடைகிறாள். காத்தியாயினியின் இந்த முடிவு நவீன மனத்தையும் அதன் முடிவுகளையும் விமர்சிக்கும் விதமாக அமைந்திருப்பதைக் கவனிக்கலாம்.

எழுதப்பட்ட காலகட்டத்தை வைத்துப் பார்க்கும்போது இந்த நாவல் எழுப்பியிருக்கும் விவாதங்கள் முக்கியமானவை. விடுதலைக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தில் இந்தியச் சூழலில் பெண்களின் வாழ்க்கை குறித்த பார்வையில் ஏற்பட்ட  மாற்றங்களுக்கு இத்தகைய விவாதங்களும் காரணமாயின. இத்தனை ஆண்டுகள் கழித்து ‘வம்ச விருட்சம்’ தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் இந்த விவாதங்களுக்கு இன்னும் இடம் இருக்கிறது என்பதே இந்த நாவலின் சமகாலப் பொருத்தத்தை உறுதிப்படுத்துகிறது.

0

வம்ச விருட்சம் – எஸ்.எல்.பைரப்பா

கன்னடத்திலிருந்து தமிழில்  - கே.நல்லதம்பி

எழுத்து பிரசுரம் வெளியீடு – மார்ச் 2024 விலை ரூ.600/-

Thursday, 12 September 2024

வேறு நிலம், வேறு முகம், ஒன்றே வலி - லதாவின் சீனலட்சுமி தொகுப்பைக் குறித்து


கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில் ‘சமகால பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ குறித்து உரைநிகழ்த்தும்படி கேட்டுக் கொண்டதையடுத்து ஏற்கெனவே வாசித்த சில சிறுகதைகளையும் புதிய சிறுகதைகளையும் தேடிப் படிக்க வாய்த்தது. அயலகச் சிறுகதையாளர்கள் சிலரது கதைகளையும் இணையத்தின் வழியே தேடிப் படிக்க முயன்றேன். ‘அறை’ என்ற ஒரு சிறுகதை கண்ணில்பட்டது. வீட்டில் நிகழ்ந்திருக்கும் ஒரு மரணம் அங்கே தங்கியிருக்கும் பெண்ணுக்குள் ஏற்படுத்தும் மனவோட்டங்களை மையமாகக் கொண்டது அந்தக் கதை. சாவு வீட்டின் சூழலில் அதற்கு சற்றும் தொடர்பில்லாத ஒருவர் சந்திக்க நேரும் உளச்சிக்கல்களை திருத்தமாகச் சொல்லியிருந்தது. அகவயமாகவே கதையை நகர்த்தவேண்டிய அசாதாரணமான களம் வெகு சாமர்த்தியமாக கையாளப்பட்டிருந்தது. இணைய இதழ் ஒன்றில் வெளியான லதாவின் கதை அது. அதைத் தொடர்ந்து காலச்சுவடு வெளியிட்ட ‘நான் கொலை செய்த பெண்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பைப் பெற்று படிக்க முயன்றேன். கிடைக்கவில்லை. ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ என்ற கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.

‘சீனலட்சுமி’ என்ற தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. எட்டு கதைகளைக் கொண்டது. ஒரேயொரு கதையைத் தவிர பிற கதைகள் அனைத்தும் பெண்களின் கதைகள். அம்பை, ஆர்.சூடாமணியில் தொடங்கி உமாமகேஸ்வரி, சந்திரா, ஜா.தீபா வரையிலுமான பெண் எழுத்தாளர்களின் கதைகளில் ஒரு பொதுவான புள்ளியை கண்டடைய முயல்வோமானால் ‘பெண்களுக்கான இடம்’ என்பதாகவே அது இருக்கும். வரலாற்றில், சமூகத்தில், அன்றாட வாழ்வில் பெண்களுக்கான இடம் குறித்து கேள்வி எழுப்பும், விமர்சனம் செய்யும், வலியுறுத்தும் குரல்களை அந்தக் கதைகளில் கேட்க முடியும். லதாவின் கதைகளில் ஒலிக்கும் குரலும் அவ்வாறான இடத்தைக் கேள்வி கேட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கிறது. காலமும் களமும் வேறு என்றாலும் எழுப்பப்படும் கேள்வியும் அதற்கான காரணங்களும் உலகளாவியதாகவே உள்ளன. பெண்கள் பொதுவாக எல்லா இடங்களிலும் எல்லா காலத்திலும் அனுபவிக்க நேர்கிற தடைகளுடன் புறக்கணிப்புகளுடன் அடக்குமுறைகளுடன் சேர்ந்து, புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் அந்நிய நிலம், அந்நியமான கலாச்சாரம் போன்ற சில கூடுதல் காரணிகளையும் கடந்து சமாளிக்க வேண்டியுள்ளது. 

புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் வாழத் தலைப்பட்ட பெண்களின் வாழ்வியல் நிலைகளை, அனுபவங்களை வரலாற்றினூடாக கால வரிசையில் அணுகுவதாக அமைந்துள்ளன இந்தக் கதைகள். விடுதலை பெறும் கனவுடன் 1943ல் சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏயில் சேர்ந்து பணியாற்றுவதற்கு முயலும் வேணியிலிருந்து தொடங்கி (தேக்காவில் ஒரு பாலம்) குழந்தைப் பேறுக்குப் பிறகான நாட்களில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தவிக்கும் நீலமலர் (இளவெய்யில்) வரையிலுமாக இக்கதைகள் தரும் பெண்களின் வரிசையைக் கொண்ட வரைபடம் இதுவரையிலுமான மனிதகுல முன்னேற்றங்களையும் சாதனைகளையும் பெருமிதங்களையும் கசப்புடன் கேலிசெய்வதாக அமைந்திருக்கிறது. உலகியல் சார்ந்த புறவயமான பெருமளவிலான மாற்றங்களை சாத்தியப்படுத்தியிருக்கும் அத்தனை சாதனங்களும் கருவிகளும் மனிதனின், குறிப்பாக ஆணின், மன ஆழத்திலும் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் பெண்களுக்கான இடத்தை அங்கீகரிப்பதில் அவனுக்குள்ள அக இயல்பில் சிறிய அளவிலான சலனத்தையும் ஏற்படுத்த இயலாதவையாக அமைந்திருப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

வரலாற்றிலும் சமூகத்திலும் இயல்பாக, நியாயமாக அமைய வேண்டிய பெண்களுக்கான இடத்தை அவர்கள் அடைய முடியாமல் செய்யும் தடைகள் எவை என்ற கேள்விகளை இக்கதைகளின் வழியாக எழுப்பிக்கொள்ள முடியும். காலங்காலமாக தொடர்ந்து பெண்களுக்கென்று வகுக்கப்பட்டு வரையறைக்கப்பட்டிருக்கும் எல்லைகளை மீறும் முயற்சிகளும் போராட்டங்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன என்பதையும் இக்கதைகள் அடிக்கோடிட்டுக் காட்ட மறக்கவில்லை.

‘தேசத்தின் விடுதலை’ என்ற ஒற்றை இலக்கின் கீழ் இனம், மொழி, பால், சாதி, பொருளாதாரம், இருப்பிடம் போன்ற பிற எல்லா மனமாச்சரியங்களும் வேறுபாடுகளும் பொருளற்றுப் போகும் என்பதே நம்பிக்கை. அப்படித்தான் வரலாறு கற்பித்துள்ளது. இந்த கற்பிதத்தை உடைத்து நொறுக்கும் உண்மைகள் தொடர்ந்து வெளிப்பட்டு வந்துள்ளன. சுபாஷ் சந்திர போசுடன் ஐ.என்.ஏவில் சேர்ந்து போராடும்போது சொந்த மண்ணுக்குத் திரும்பலாம், விடுதலை பெறலாம் என்ற கனவுடன் களத்துக்கு வரும் பெண்களை, படையணியில் உள்ள சக பெண்களே புறக்கணிப்பதற்கான காரணமாக அமைந்திருந்தது சாதி என்னும் உண்மை வரலாற்றில் சொல்லப்படாத ஒன்று. சாதி வேறுபாடுகளுக்கு முன்பு தேச விடுதலை, மானுட விடுதலை போன்ற லட்சியங்கள் பொருட்டல்ல என்ற மனப்பான்மையை ‘தேக்காவில் ஒரு பாலம்’ போன்ற கதைகளிலிருந்துதான் அடையாளம் காண முடிகிறது. சாதி மனப்பான்மைக்கு ஆட்படுவதில் ஆண், பெண் பேதமில்லை என்கிற கசப்பான யதார்த்தத்தையும் கண்டுகொள்ள முடிகிறது.

‘காவடி எடுக்க உரிமையில்லை’, ‘படகிலேறி கடலில் மீன் பிடிக்கக்கூடாது’, ‘போர் முனையில் சண்டை போட அனுமதியில்லை’ போன்று வாழ்வின் எல்லா திசைகளிலும் வாய்ப்புகளிலும் தொடர்ந்து புதிது புதிதான தடைகளை விதிக்கும் ஆண்களின் ஆதிக்கப் போக்கே பெண்களின் முதன்மையான சவால்களாக அமைந்திருப்பதை எல்லாக் கதைகளும் உணர்த்துகின்றன. கடுமையான உடல் உழைப்பைத் தந்து குடும்பத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்புணர்வுடனும் இருந்தபோதிலும் ஆண்களின் அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலை மாறவில்லை. அம்மாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக உடனிருக்கும் பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், திருமண ஏற்பாடுகள் குறித்த நேரத்தில் நடப்பதில்லை, அழைக்கும்போது பேசுவதில்லை போன்ற காரணங்களுக்காக தொடர்பிலிருந்து விலகிச் செல்லும் மணமகனின் உளநிலையும் புறக்கணிப்பும் அந்தப் பெண்ணின் மீது அவன் செலுத்தும் உளவியல் வன்முறைதான்.

தடைகளையும் சவால்களையும் கடந்து செல்ல முனையும்போது ஏற்கவேண்டிய வலிகளையும் இக்கதைகள் உணர்த்துகின்றன. நோய்மை வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. இரு கைகளையும் இழந்தவள் கணவனால் புறக்கணிக்கப்படுகிறாள். மகளையும் விட்டுத்தர நேர்கிறது. புற்றுநோய் வாதைகளைத் தாங்கிக் கொள்வதுடன் அன்றாடத் தேவைகளுக்குக்கூட இன்னொருவரின் உதவியை நாடவும் அதை சகித்துக்கொள்ளவும் வேண்டியுள்ளது. சருமத்தைத் துளைத்து வடுக்களை ஏற்படுத்தும் இன்சுலின் ஊசிகளைக் குத்திக் கொள்ள நேர்கிறது. இத்தகைய உடல் வலிகளுடன் புறக்கணிப்பின் அகவதையையும் சகித்துக்கொள்ள நேர்கிறது.

இவற்றிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளவும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் பல்வேறு நம்பிக்கைகளை பற்றிக்கொள்ள நேர்கிறது. தைப்பூச விழாவின் போது ஈடுபாட்டுடன் காவடிகளைத் தயார் செய்கிறார்கள், தேசத்துக்காக போரிட தயாராகிறார்கள், தாத்தாவிடமிருந்து மீன் பிடிக்கும் நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார்கள், மீன்களைக் கொண்டு விதவிதமாக சமைத்துப் பரிமாறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி. அலுக்காமல் வரிசைகளில் நின்று சாதிக்க எண்ணுவதும்கூட அவ்வாறான ஒரு நம்பிக்கைதான். கைபேசி விளையாட்டுகளில் மூழ்குவதும் தற்படங்களை ஏற்றி நண்பர்களின் பாராட்டுக்களைப் பெற விழைவதும்கூட தங்களது நெருக்கடியிலிருந்து விலகி சற்றே நிதானித்துக்கொள்ளும் உத்திதான். பக்தி, பாசம், சமையல், தையல்வேலை, இசை, ஒப்பனை, விளையாட்டு என்று தங்களுக்கான வழிகளில் ஒன்றில் ஈடுபடுத்திக்கொள்வதன் வழியாகத்தான் கிடைக்காத இடத்தின், அங்கீகாரத்தின் வெறுமையை நிறைவு செய்துகொள்ள முடிகிறது.

இந்தக் கதைகளின் ஊடாக சில அபாரமான நுண் உணர்வுகளை மிக நுட்பமாகக் காட்டியிருக்கிறார் லதா. ‘நிர்வாணம்’ கதையில் திரண்டு அழகுறும் அம்மா-மகள் உறவை உதாரணமாகச் சொல்லலாம். அம்மா, மகள் என்ற உறவு நிலைக்கப்பால் இருவரும் இருவேறு பெண்கள். அவரவர் அந்தரங்கங்கள் வேறு. இன்னொருவரின் உதவியுடனே தன் அன்றாடங்களைக் கழிக்க நேரும் அம்மாவின் உளநிலையைப் புரிந்துகொள்ளும்போது மகளுக்கும் அவளுக்குமான நெருக்கம் கூடுகிறது. உடல் சார்ந்த கூச்சங்கள் மறைகின்றன. சிறுமியாக இருந்த காலத்தை இருவரும் எட்டும்போது உடலின் நிர்வாணம் பொருட்டாகத் தெரிவதில்லை. உடுத்தாத உடலை ‘கோகுல் சாண்டல்’ பவுடரின் வாசனையுடன் பின்னிருந்து கட்டிக்கொள்ளும் புள்ளியைத் தொடும்போது கதை முழுமையடைகிறது. சொற்களில் எளிதில் சிக்காத இந்த உணர்வுகளை இயல்பான சித்தரிப்பின் வழியாக கச்சிதமாக திரளச் செய்யும் பெரும் சவாலை லதா மிக அபாரமாக கையாண்டிருக்கிறார்.

எழுதப்பட்டுள்ள சொற்களால் உருவாகியிருக்கும் கதையினுள் நுட்பமான உணர்வுகளைப் பொதிந்து வைத்திருக்கும் புனைவுத்திக்கு இன்னொரு உதாரணம் ‘காவடி’. கதையின் நாயகியான ஆத்தா, தாத்தாவுக்கு மூன்றாவது மனைவி. நான்கு குழந்தைகள். தாத்தாவின் சொற்ப வருமானம் போதாத நிலையில் பிள்ளைகளின் பசிபோக்க கடுமையாக உழைத்தவள். உடலெங்கும் கன்றி காய்க்கும் அளவுக்கு தாத்தாவிடம் அடி வாங்கியவள். தைப்பூசத்தின்போது அரிகண்ட காவடி எடுக்கும் தாத்தாவுக்கு உற்சாகத்துடன் உதவுபவள். காவடி ஊர்வலங்களில் சலிக்காமல் நடந்தவளுக்கு காலில் பட்ட சிறுகாயம், நீரிழவின் காரணமாக குணமாகாமல் புரையோடி தசைகளைத் தின்றுவிட்டது. சிகிச்சைக்காகக் காத்திருக்கிறாள். நினைவிழந்தும் மீண்டும் படுக்கையில் கிடப்பவளின் எண்ணம் முழுக்க காவடி எடுத்துச் செல்லும் தைப் பூச விழாவினையே சுற்றி வருகிறது. பேத்தியிடம் தொடர்ந்து காவடிக் கதைகளை சொல்வதாக அமைந்துள்ள கதையின் உள்ளே வாழ்நாள் முழுக்க உடலிலும் மனத்திலும் அலகுகளைக் குத்தி எண்ணற்ற காவடிகளை சுமந்த அவளது நெஞ்சுரத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. ‘ஊசி குத்தி குத்தி காயந்துக் கறுத்திருந்த அவரின் இடுப்புப் பகுதி அரிகண்டம் போடுபவர்களின் இடுப்பாகி இருந்தது’ எனும் கடைசி வாக்கியம் அதுவரையிலும் சொல்லப்பட்ட தாத்தாவின் கதையை மாற்றி ஆத்தாவின் கதையாக்கி விடுகிறது.

ஒரே கதையின் இரண்டு பகுதிகள்போல் அமைந்திருக்கும் ‘அலிசா’வும் ‘வலி’யும் இரு முகங்களைக் கொண்ட ஒரே பெண்ணின் கதையைத்தான் சொல்கின்றன. சிங்கப்பூருக்கு அப்பால் உள்ள உபின் தீவில் வளரும் அலிசா மீன் பிடிக்கும் நுட்பங்களைத் தாத்தாவிடம் கற்றுக்கொள்வது கதை. இதற்குள் வெவ்வேறு தரவுகளும் உணர்வுகளும் செறிவாக அடுக்கப்பட்டுள்ளன. வாழ்வின் பல்வேறு முன்பறியாத சூழல்களுக்கும் அனுபவங்களுக்கும் அலிசா தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் விதமாகவே கதையின் சம்பவங்கள் அடுக்கப்பட்டுள்ளன. ‘வலி’ கதையை இதன் தொடர்ச்சியாக அணுக முடியும். விதவிதமாக மீன் சமைப்பதில் தேர்ச்சி பெற்றவள், கைகளை இழந்து தொட்டி மீன்களைக் கொண்டு தன்னை திருப்திபடுத்திக்கொள்ளும் அவலத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறாள். கைவிடப்படுவதின் துயரத்தில் அவர்கள் இருவரும் மூழ்கிவிடுவதில்லை. அலிசா துணிச்சலுடன் மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறாள். கைகளை இழந்தவளோ மகளின் வருகைக்காக மீன் தொட்டியுடன் தயாராகிறாள்.

லதாவின் இக்கதைகள் வலுவான புதிய பெண் கதாபாத்திரங்களை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. எல்லா பெண்களுக்குமான வலியையும் தடைகளையும் சந்திப்பவர்கள்தான் என்றாலும் அவற்றை கடந்துசெல்லும் விதங்களே அவர்களைத் தனித்துவப்படுத்துகின்றன. இவர்களது உலகில் ஆண்கள் முக்கியமற்றவர்கள் என்றாலும் இவர்களுக்கான இடத்தையும் உரிமைகளையும் தீர்மானிப்பவர்கள் அவர்கள்தான் என்பதையும் கவனிக்க முடிகிறது. கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அடையாளம் சொல்லும் அளவுக்கு கனபரிமாணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

லதாவின் கதைமொழி எளிமையானது. சிடுக்குகள் இல்லாதது. தனித்துவமானது. இயல்பாக உரையாடுவதுபோல கதைத் தொடங்குகிறது. தெளிவுடன் நகர்கிறது. சொல்ல வேண்டியவற்றை மட்டும் சிக்கனமாகச் சொல்கிறது. கதையின் உள்ளடுக்குகளைப் குறித்த சுட்டிகளை மட்டும் அங்கங்கே மிகக் குறைந்த சொற்களில் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறது. பெரும்பாலான கதைகள் உரையாடல்களால் அமைந்தவையே. அகமோதல்களையும் உணர்வுகளின் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும் அடங்கிய தொனியில் அழுத்தமாகக் காட்டிவிடுகின்றன.

சம்பவங்களையும் திருப்பங்களையும் கொண்டு கதை சொல்லும் உத்திக்கு மாறாக மன உணர்வுகளைத் தொட்டுக் காட்டுவதன் மூலமாக மட்டுமே முழுமையான அனுபவ உலகத்தை உருவாக்க முனைந்திருக்கும் விதத்தில் தனித்துவம் பெறுகின்றன லதாவின் கதைகள். உரையாடல்களின் வழியாக சிக்கனமான சொற்களின் மூலமாக ஆங்காங்கே கசியும் வெளிச்சத்தைக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத பகுதியை அனுமானிக்கவேண்டிய சவால்களைக் கொண்டிருக்கின்றன. பெண்களுக்கான இடம் மறுக்கப்படுவதை கேள்விக்குள்ளாக்கும் கதைகள் என்றபோதும் எந்த இடத்திலும் அரசியல் குரல் வலுத்தோ ஓங்கியோ ஒலிக்கவில்லை என்பதும் இந்தக் கதைகளுக்கான இயல்புகளில் ஒன்று.

அயல்நிலத்துக்கான துலக்கமான அடையாளங்களுடன், தனித்துவமிக்க குணாம்சங்கள் கொண்ட கதாபாத்திரங்களின் வழியாக உலகளாவிய அளவில் தொடர்ந்து விவாதிக்கப்படும் பிரச்சினை குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன என்கிற வகையில் இவை அடர்த்தியானவை, அழுத்தமானவை. 

Saturday, 17 August 2024

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2024


 

இரண்டு மாதங்களுக்கு முன்பு இரவு 8 மணிக்கு பாவண்ணன் தொலைபேசியில் அழைத்தார். பெங்களூரைச் சேர்ந்த புக் பிரம்மா அமைப்பு இலக்கிய விழா ஒன்றை மூன்று நாட்கள் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். தென்னக மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் தமிழ் ஒருங்கிணைப்பாளர் பணியைத் தன்னிடம் ஒப்படைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு சில வாரங்கள் வரை எந்தத் தகவலும் இல்லை என்பதால் அதைப் பற்றி யோசிக்கவில்லை. 

ஆனால், சில நாட்களிலேயே புக் பிரம்மா அமைப்பிலிருந்து மின்னஞ்சல் வந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்து பயண விபரங்களைக் கேட்டறிந்தனர். மூன்று நாட்களுக்கான நிகழ்ச்சி நிரலும் அனுப்பப்பட்டது. 

இந்திய அளவில் ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒன்று. இது தவிர, கேரளாவிலும் கர்நாடகாவிலும் இத்தகைய திருவிழாக்கள் நடக்கின்றன. இத்தகைய  பன்மொழி நிகழ்வுகளின் அவசியம் என்ன? தமிழைத் தவிர பிற மொழிகளில் நடப்பவற்றை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு இது. நாம் வாசித்து வியந்த பிற மொழி எழுத்தாளர்கள் சிலரை நேரில் சந்திக்க முடியும். உரையாட முடியும். அந்தந்த மொழிகளின் சமகால நடப்புகள், பிரசுர வாய்ப்புகள், நூல் விற்பனை, மொழியாக்கம்,

விமர்சனப் போக்குகள், தமிழ் இலக்கியம் குறித்து பிற மொழியினர் எந்த அளவுக்கு அறிந்துள்ளனர் என்பது போன்ற பலவற்றையும் தெரிந்துகொள்ளவும் இதுவொரு வாய்ப்பு. பிற மொழிகளில் எழுதும் இன்னும் சில பெயர்கள் அறிமுகமாகின்றன. சில களங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதுவொரு பரிமாற்றக் களம். மொழிகளுக்கிடையிலான தொடர்புக்கான பாலம். எல்லாவற்றையும்விட, மற்ற மொழிகளை அவை பேசப்படும்போது கேட்பது முக்கியமான அனுபவம். ஒரு மொழியின் சொற்கள் உச்சரிக்கப்படும் விதமும், ஏற்ற இறக்கங்களும் அவற்றின் வழியாக வெளிப்படும் ஒலிகளும் அந்த மொழியை மேலும் நெருக்கமாக உணர உதவுகின்றன.  


இந்த விழாவை ஏற்பாடு செய்யும் புக் பிரம்மா அமைப்பு, கன்னட இலக்கியம், புத்தகங்கள், நிகழ்ச்சிகள் சார்ந்தவற்றை ஒருங்கிணைக்கும் உலகளாவிய மின் ஊடக நிறுவனம். புத்தக வெளியீடுகள், எழுத்தாளர்களுடனான உரையாடல்கள் போன்றவற்றை தங்களது வலைத்தளம் வழியாக கொண்டுசெல்கிறார்கள். கன்னட சிறுகதைகளையும் கவிதைகளையும் இந்த வலைத்தளத்தின் வழியாகக் கேட்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக கன்னட இலக்கியத்துக்கு மட்டும் நடத்தி வந்த இத்தகைய விழாவை இப்போது தென்னிந்தியா மொழிகளுக்கான விழாவாக மாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்களுக்கு விருது வழங்கப்படுகின்றன. இந்த வருடம் முதல் இந்திய மொழிகளில் இலக்கியத்துக்கு முக்கிய பங்களிப்பைச் செய்திருக்கும் ஒருவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ ஒன்றை நிறுவியுள்ளனர். 2024ஆம் ஆண்டுக்கான விருது ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.       
  

பெங்களூர் சென்று சேரும் வரை பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இருக்கவில்லை. மூன்று நாட்கள் பெங்களூரில் நண்பர்களுடன் இருக்க ஒரு வாய்ப்பு என்பதே முதன்மையாக இருந்தது. கோவையிலிருந்து கவிஞர் சுகுமாரனும் ஈரோட்டிலிருந்து மோகனரங்கனும் சேர்ந்துகொண்டனர். பெங்களூர் ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல வாகனங்கள் காத்திருந்தன. வளாகத்தை அடைந்தவுடன் வரவேற்கவும் அறைகளுக்கு அழைத்துச் செல்லவும் தன்னார்வலர்கள் உற்சாகத்துடன் இருந்தனர். செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் மரங்களடர்ந்த வளாகத்தில் அழகிய விசாலமான அரங்கத்தில் விழா. அருகிலிருந்த விடுதியில் தங்குவதற்கான அறைகள். இரண்டுக்கும் நடுவில் உணவுக்கூடம். அதையடுத்து தேநீர் அருந்தியபடி உரையாட மர பெஞ்சுகளுடனான திறந்தவெளி அரங்கம். அருகில் புத்தக அரங்குகள்.

மறுநாள் காலையில் தேநீர் அருந்தும்போதே கவிஞர் சச்சிதானந்தனைச் சந்திக்க முடிந்தது. பல வருடங்களுக்கு முன்பு ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழின் சிறப்புப் பக்கத்தில் வெளியான அவருடைய ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டேன். அடுத்தடுத்து தென்னக மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் பதிப்பாளர்களும் வந்து சேர்ந்தனர். அறிமுகங்கள், கைகுலுக்கல்கள், தற்படங்கள். வளாகமெங்கும் கலந்தொலித்தன தமிழும் மலையாளமும் தெலுங்கும் கன்னடமும் ஆங்கிலமும்.

‘தென்னகத்தின் ஆன்மா’ ( Soul of South ) என்பது விழாவின் முகப்பு வாக்கியம்.


BBLF#2024 ன் இயக்குநரும் கன்னட எழுத்தாளருமான சதீஷ் சப்பரிகே வரவேற்றார். ‘தெகன நுடி கௌடி’ என்ற தலைப்பில் நடந்த தொடக்க விழாவில் கே.சச்சிதானந்தன் தலைமையில் ஹெச்.எச்.சிவபிரகாஷ், வோல்கா, ஜெயமோகன், விவேக் ஷான்பாக் ஆகியோர் உரையாற்றினர். ‘தென்னக மொழிகள் - இருப்பின் கேள்வி’ என்ற தலைப்பிலான இரண்டாம் நாள் தொடக்க விழாவில் பால் சகாரியா, பெருமாள் முருகன், நாகபூஷனம், வடரேவு சின்னபத்ருடு, பிரதிபா நந்தகுமார் ஆகியோர் உரையாற்றினர்.

மண்டபா, மதனா, அங்கலா, அக்ஷரா ஆகிய அரங்குகளில், நாவல், சிறுகதை, கவிதை, மொழியாக்கம், நூல் பதிப்பு, நவீன தொழில்நுட்பங்கள் குறித்து வெவ்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடந்தன. நான்கு மொழிகளிலிருந்தும் மூத்த, இளம் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விமர்சகர்கள், வாசகர்கள் கலந்துரையாடல்களில் பங்கு பெற்றனர். ஐம்பது நிமிட அளவிலான கலந்துரையாடல்கள். மூன்று அல்லது நான்கு பேர் பங்கேற்றனர். நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, பதிப்புத்துறை ஆகியவற்றின் சமகாலப் போக்குகள், செவ்வியல் இலக்கியத்தின் சமகாலப் பொருத்தங்கள் என தலைப்புகள் அனைத்தும் கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மொழியிலும் சமகாலத்தில் நிகழும் போக்குகள் குறித்து அறிவதற்கான வாய்ப்பாக அமைந்திருந்தது. ஆனால், குறிப்பிட்ட மொழி சார்ந்த எழுத்தாளர்கள் தங்களது மொழியிலேயே உரையாடியதால் பிறமொழியைச் சேர்ந்தவர்களால் அவர்களது கருத்துகளை, ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தபோதிலும், முழுக்க அறிய முடியவில்லை. மலையாளம், கன்னடம் குறித்து நமக்கு ஓரளவு அறிமுகம் உண்டு. ஆனால், நமக்கு பெரிய அளவில் அறிமுகம் இல்லாத தெலுங்கு இலக்கியத்தின் சமகாலப் போக்குகள் நம்பிகையளிக்கும் விதத்தில் இருப்பதை உணரமுடிந்தது. 


முதல் நாள் அரங்கில், தமிழ்க் கவிதைகளில் அகமும் புறமும் என்ற தலைப்பில் சுகுமாரன், இசை, பொன்முகலி, சாம்ராஜ் ஆகியோர் கலந்துரையாடினர். ‘தமிழ் வாசகர் குரல் - ஜன்னல்கள் வழியாகத் தெரியும் உலகம்’ என்ற தலைப்பில் சரவணன் மாணிக்கவாசகம், க.மோகனரங்கன், தங்கமணி, நாகராஜன் ஆகியோர் உரையாடினர். ‘பெருமாள் முருகனுடன் ஒரு உரையாடல்’ நிகழ்ச்சியில் பாவண்ணனும் எம்.கோபாலகிருஷ்ணனும் பங்கெடுத்தனர். இரண்டாம் நாளன்று தலித் இலக்கியம் சவால்களும் சாதனைகளும் என்பதைக் குறித்து கமலாலயன், சுகிர்த ராணி, ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரும், ‘சிறுகதைகள் - புதிய தருணங்கள், புதிய அனுபவங்கள்’ என்ற தலைப்பில் சுநீல் கிருஷ்ணன், கார்த்திக் பாலசுப்ரமணியன், ஜா.தீபா, எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாடினர். மூன்றாவது நாளில், ‘தமிழ் நாவல்-விரிவடையும் புதிய எழுத்துக் களம்’ என்பதைப் பற்றி சு.வேணுகோபால், கலைச்செல்வி, கடலூர் சீனு ஆகியோர் பேசினர். சுரேஷ் பிரதீப், கயல், காளி பிரசாத், ரம்யா ஆகியோர் ‘மொழிபெயர்ப்பு-புதிய உலகம், புதிய சிந்தனைகள்’ என்பதைக் குறித்து விவாதித்தனர். இவ்விரண்டு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் வெவ்வேறு அரங்குகளில் ஒழுங்குசெய்யப்பட்டதால் ஏதேனும் ஒன்றையே தெரிவு செய்யவேண்டிய சிக்கல். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அடுத்த முறை இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.  

அரங்குகளில் பங்கேற்றவர்களைத் தவிர பெங்களூரில் வசிக்கும் நண்பர்கள் பலரும் விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.

கன்னட மொழி சார்ந்த உரையாடல்கள், கவிதை வாசிப்பு அனைத்தும் ஒரு அரங்கில் தனியாகவும் நடந்தன. அருமையான ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மானசி சுதிர், மேக்னா ஆகியோரின் கவிதை நடனங்கள் இவ்விழாவின் இன்னொரு சிறப்பம்சம். சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் நடந்த, நண்பர் செங்கதிர் மொழிபெயர்த்த கபீர் கவிதைகள் வெளியீட்டு விழாவின்போது நடந்த இசை நிகழ்ச்சியில் வேதாந்த் பரத்வாஜுடன் இணைந்து கபீர் பாடல்களை பாடிய பிந்து மாலினியின் கச்சேரி இந்த விழாவில் இடம்பெற்றிருந்தது. தம்புராவை மட்டும் இசைத்தபடி பாடிய அவரது குரலுக்கு அத்தனை வசீகரம். அமீர் குஸ்ரு, கபீர், அக்கமாதேவி, பத்மா சுப்ரமணியம் ஆகியோரின் பாடல்களுடன் பாரதியின் ‘பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே’ பாடலையும் பாடினார். பாரதியின் ‘தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?’ என்ற வரிகளை அவர் பாடிய விதத்தை இப்போதும் மறக்க முடியவில்லை. ஞாயிறு காலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்டிட் வெங்கடேஷ் குமாரின் கச்சேரிக்கு அரங்கு நிறைந்திருந்தது. ஒருபுறம் தபலா, இன்னொரு பக்கம் ஆர்மோனியம், பக்கவாட்டில் தம்புராவுடன் ஒரு இந்துஸ்தானி இசைக் கலைஞன் மேடையில் பாடுவதை நேரில் பார்ப்பதென்பது இணையற்ற அனுபவம். மேடையில் அவர் பாடவில்லை. அந்த ராகங்களை நிகழ்த்திக் காட்டினார். ‘அக்கா கேளவா நானொந்து கனச கண்டேன்’ என்ற அக்கமாதேவியின் வசனத்தை பாடியபோது அரங்கமே குதூகலம் கொண்டிருந்தது. மேடையில் மிக லகுவாக இருந்தார். தபலாவுக்கான ஒலிவாங்கியின் அளவு  ஏறக்குறையவே இருந்ததை சரிசெய்தபடியே பாடினார். இடையிடையே அரங்கில் இருந்தோரிடமும் இயல்பாக உரையாடினார். ஒரு இலக்கிய விழாவில் இத்தகைய சில இசை நிகழ்ச்சிகள், ஓவியக் காட்சிகள், நடனங்கள், நாடகங்கள் இடம் பெறும்போதுதான் அது முழுமை அடைகிறது. 

ஞாயிறு மதியமே ஊருக்குப் புறப்பட வேண்டியிருந்ததால் பல நல்ல நிகழ்ச்சிகளைக் காண முடியாததில் வருத்தம். மாலையில் நடந்த யக்ஷகானத்தைத் தவறவிட்டது இப்போதும் வருத்தம் தருகிறது. அடுத்த முறை நிகழ்ச்சியில் முழுமையாக பங்கெடுக்காமல் முன்கூட்டியே புறப்பட்டுச் செல்லும் இந்தத் தவறைச் செய்யக்கூடாது.

 விழா தொடங்கிய முதல் நாளிலேயே முகநூலெங்கும் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் தேர்வு குறித்த விமர்சனங்களைக் காண முடிந்தது. எந்தவொரு விருது அறிவிக்கப்படும்போதும் எந்தவொரு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளிவரும்போதும் இத்தகைய விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. இது இயல்பான ஒன்றுதான். ஒரு நிகழ்வில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்ய முடியும். அந்தப் பொறுப்பில் இருப்பவர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே பங்கேற்பாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். யார் இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டாலும் இப்படித்தான் செய்ய முடியும். எந்தவொரு பங்கேற்பாளர் பட்டியலும் இவ்வாறான விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது. நாற்பது ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்தில் இயங்கி வரும் பாவண்ணன் இந்த சிரமமான பொறுப்பை எடுத்துக்கொண்டிருந்தார். இது அவரது தெரிவு, அவரது முடிவு. சிலரைச் சேர்த்திருக்கலாம், சிலரைத் தவிர்த்திருக்கலாம் என்று நாம் ஒவ்வொருவரும் எண்ணக்கூடும். நமக்கு அப்படியொரு பொறுப்பு வரும்போது முடிந்தவரை இந்த விமர்சனங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு தேர்வு செய்ய முயலலாம்.

 

கவிஞர் சச்சிதானந்தம் அவர்களின் வயது 78. மூன்று நாட்களும் உற்சாகம் குறையாது அரங்குகளில் பங்கேற்றதைப் பார்க்கும்போது வியப்பாக இருந்தது. மலையாளத்தின், பிற இந்திய மொழிகளின் சமகாலப் போக்குகளை அறிந்து வைத்திருக்கிறார். தொடர்ந்து வாசிக்கிறார், எழுதுகிறார். காலையிலிருந்து மாலை நிகழ்ச்சிகள் முடியும் வரை, அடுத்தடுத்த அரங்குகளில் பங்கேற்கவிருக்கும் எழுத்தாளர்களை தொடர்புகொண்டு அவர்களை தயார்படுத்தும் பரபரப்புடனே இருந்தார் பாவண்ணன். நிகழ்ச்சியின் இயக்குநரான சதீஷ் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தோம். ‘இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடப்பதற்கு காரணம் நீங்களெல்லாம் இங்கு வந்திருப்பதுதான். நான் ஒன்றும் செய்யவில்லை. ஒவ்வொரு வருடமும் வந்திருந்து மூன்று நாட்கள் எங்களுடன் தங்கியிருந்து இதைச் சிறப்படைய செய்யவேண்டும். அதுதான் நாங்கள் எதிர்பார்ப்பது’ என்றார். சதீஷ் கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள் எழுதுபவர். இந்த நிகழ்ச்சி நடந்த மூன்று நாட்களும் சற்றும் குறையாத உற்சாகத்துடன் வளாகத்துள் அவரைக் காணமுடிந்தது. நிகழ்ச்சி முழுக்க கச்சிதமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. நேரலையில் ஒலிபரப்பப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவியர் பலர் தன்னார்வலர்களாக பணிகளை மேற்கொண்டிருந்தனர். இந்த விழாவின் வெற்றியில் இவர்கள் ஒவ்வொருவரின் பங்கும் முக்கியமானது.

 

இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடக்கும் என்று சொன்னார்கள். அப்படித் தொடருமாயின் ‘புக் பிரம்மா இலக்கியத் திருவிழா’ தென்னகத்தின், இந்தியாவின் முக்கியமான இலக்கியத் திருவிழாக்களில் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


Tuesday, 30 January 2024

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’


மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துணையுடன் நாம் வாழும் புறவுலகை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே வருகிறோம். காலமும் இடமும் நம் முன்னே வைக்கும் சவால்களைத் தொடர்ந்து முறியடித்து முன்னேறியபடியே இருக்கிறோம். இதற்கு மாறாக மனித அகம் மேலும் மேலும் சிக்கலாகிக்கொண்டே உள்ளது. நோய்களும் உளச் சிக்கல்களும் பெருகிவிட்டன. மனத்தின் புதிர்வழிகளை ஊடறுத்து அதைப் புரிந்துகொள்ள உளவியல் சார்ந்த அறிவுத்துறைகள் தொடர்ந்து முயன்றபோதும் அதன் ஆழமும் இருண்மையும் வலுப்பெற்றபடியேதான் உள்ளன. உள்ளம் திரிபுறும்போது உறவுகளும் நிலைகுலையும். அடுத்த மனிதனுடனான உறவு சீராக இல்லாதபோது வாழும் சூழலும் இணக்கமின்றி சரியும். மனிதன் கண்டுபிடித்துள்ள அறிவுத்துறைகளும் தொழில்நுட்பங்களும் அவனது அகத்தையும் மனித உறவுகள் சார்ந்த சிக்கல்களையும் பகுத்துப் பார்த்து தீர்வுகளை தர இயலாத நிலையில் அவனுக்குக் கைகொடுக்கும் முக்கியமான, தவிர்க்கமுடியாத கருவியாக இருப்பது கலையும் இலக்கியமுமே.

ஒரு மனிதனின் வழக்கத்துக்கு மாறான, சற்றே வித்தியாசமான வாழ்வை, பிறிதொரு நோக்கில் அணுகும்போது பல கேள்விகளையும் சிந்தனைகளையும் திறப்புகளையும் அளிக்கிறது. நடைமுறைக்கு மாறான சில சாத்தியங்களையும் புனைவின் வழியாக உருவாக்கிப் பார்க்க முடிகிறது. அறிவியல் பரிசோதனைகளைப்போல புனைவின் வழியாகவும் சில சோதனைகளை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.

புறவாழ்வின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளுக்கும் அறிவியல்பூர்வமாக சில விளக்கங்களையும் பதில்களையும்கூட தந்துவிட முடியும். ஆனால், அகம் சார்ந்த வினாக்களுக்கு பதில்கள் யாவும் எண்ணற்ற சாத்தியங்களாகவே நம் முன் உள்ளது. ஒரு மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட சூழலில் செல்லுபடியாகும் ஒரு தீர்வு அதே மனிதனின் இன்னொரு சூழலுக்கும் பிரச்சினைக்கும் பொருந்திப் போவதில்லை. அதேபோல, ஒரு மனிதனின் குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வாக அமைந்த ஒன்றை இன்னொரு மனிதனின் அதே பிரச்சினைக்கு பரிந்துரைக்கும்போது அது வெற்றியடையும் என்ற உறுதியும் இல்லை. எனவே, பொதுவான எல்லோருக்கும் பொருந்திப்போகும்படியான தீர்வுகள் உளவியல், உறவுகள் சார்ந்த சிக்கல்களுக்கு இல்லை. இங்குதான் கலையும் இலக்கியமும் திரண்டு வருகின்றன. முழு முற்றான தீர்வுகளைத் தரமுடியாதபோதும் கலையும் இலக்கியமும் அந்தப் பிரச்சினைகளின் ஆதார வேர்களைக் கண்டறிந்து அவற்றைப் புரிந்துகொள்ள துணை நிற்கின்றன. தனி மனிதனின் பிரச்சினையை, துயரத்தை, வாதையை அது பொதுவான ஒன்றாக மாற்றிக் காட்டுகிறது. இந்தப் புரிதல் மனிதர்களை திடப்படுத்துகிறது. மேலும் உரத்துடனும் உற்சாகத்துடனும் முன்னகர ஊக்கந்தருகிறது.

அக ஆழத்தைக் கண்டறியும் இலக்கியத்தின் பாதையே என் கதைகளின் பாதையும். மனத்துள் இருக்கும் மர்மங்களைக் கண்டறிவதென்பது வாழ்க்கையைப் புரிந்துகொள்வதுதான். ஆனால், அது அத்தனை சுலபமில்லை. இருண்ட அதன் புதிர்வழிகள் தடுமாறச் செய்யும். தலைச்சுற்ற வைக்கும். அதே சமயத்தில் எதிர்பாராத புதிய திறப்புகளையும் ஆச்சரியங்களையும் அங்கங்கே புதைத்து வைத்திருக்கும். சரியான ஒரு சொல்லோ புனைவுத் தருணமோ அந்த இடத்தில் கைவைக்கும்போது அவை திறந்துகொள்ளும். எழுதுபவனுக்கு மட்டுமல்லாமல் வாசிப்பவனுக்கும் புதிய வெளிச்சத்தைக் கொடுக்கும். இதிலுள்ள இன்னொரு வேடிக்கை என்னவென்றால் சமயத்தில் அது எழுத்தாளனின் கைகளுக்குத் தட்டுப்படாமல் வாசகனுக்கு மட்டும் வாய்க்கும் என்பதுதான்.

சிவகாமி, சக்தியோகம், ஊதாநிற விரல்கள், முனிமேடு, சீசர், முறிவு, தருணம், உடன் பிறந்தது போன்ற பல கதைகளும் மன ஆழங்களின் பல்வேறு இடுக்குகளைத் தொட்டுக் காட்டுகின்றன. ‘தீர்த்த யாத்திரை’ அவ்வாறான ஒரு அகவழிப் பயணம் தான். ஒரு கணம் ஒளியும் மறுகணம் இருளுமாய் தடுமாறச் செய்யும் இப் புதிர்வழிகளைத் தொடர்ந்து செல்வது புனைவின் பெரும் சவால். அந்தச் சவால் எனக்குப் பிடித்திருக்கிறது. இருளை நோக்கிச் செல்லும் என்னை அது ஒளியின் முன்னால் நிறுத்தும் அற்புதம் ஏதேனும் ஒரு கணம் நிகழும். அந்த ஒரு நொடிக்காகவே பல நூறு இருட்கணங்களை பதைப்புடன் கடந்து போகிறேன்.

குகையில் வாழ்ந்த காலத்திலிருந்து இன்றைய அணுயுகம் வரையுமான பாதையில் மனிதன் தொடர்ந்து தன்னை மாற்றிக்கொண்டேதான் வருகிறான். தவறுகளை உணர்ந்து சரிசெய்கிறான். ஒழுக்க நியதிகளை வகுத்து அவற்றை கடைபிடிக்கிறான். சக மனிதனுடனான உறவையும் சமூக வாழ்வையும் முடிந்தமட்டிலும் சீராக வைத்திருக்கவே விழைகிறான். ஆனாலும், அடிப்படை உயிர் விசைகளான பசியும் காமமும் அவனை எந்த நேரத்தில் என்னவிதமான காரியத்துக்குத் தூண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடிவதில்லை.

பசி, காமம் இரண்டும் செலுத்தும் மனிதனின் பாதையையே எழுத்துத் தொடர்கிறது. என் கதைகளின் வழியாக இந்த ஆதி விசைகளின் வெவ்வேறு அலைகளைத் தொட்டுப் பார்த்து உணர முயல்கிறேன். ஆண் பெண் உறவுகளின் எல்லையில்லாத முடிச்சுகளில் ஒன்றையேனும் அவிழ்த்துவிட முடியுமா என்று வெவ்வேறு விதங்களில் அந்தக் கதைகளைச் சொல்லிப் பார்க்கிறேன்.  இரவு, நிலைக் கண்ணாடி, வால்வெள்ளி ஆகிய கதைகளும் மணல் கடிகை, மனைமாட்சி நாவல்களும் அப்படிச் சொல்லிப் பார்த்தவைதான்.

பசியே மனிதனுக்கு சேர்த்துவைக்கும் ஆசையை ஏற்படுத்துகிறது. அடுத்த வேளை பசிக்கான உணவை பத்திரப்படுத்துவதில் தொடங்கி அது அடுத்தடுத்த தலைமுறைக்கு கணக்கிலடங்கா சொத்துகளை சேர்த்து வைக்கும் பேராசையாக பயங்கரமாக உருமாறியிருக்கிறது. வேலை, தொழில், வளர்ச்சி என்று வெவ்வேறு பெயர்களில் இதைச் சுட்ட முடியும் என்றாலும் அனைத்தின் ஆதார விசையும் இந்த பசியும் அதன் உபவிளைவான சுயநலமும்தான். சுயநலம் முதலில் தன் பசி ஆற்றுகிறது. தனக்கான உணவை உத்தரவாதப்படுத்தியதும் குடும்பம், பிள்ளைகளுக்கான உணவை பின் வசதிகளை உறுதிப்படுத்துகிறது. இதற்காக அது எந்த எல்லைக்கும் செல்லும். அடுத்தவனை கெடுக்கும். துரோகம் இழைக்கும். உழைப்பை நசுக்கும். இயற்கையை சுரண்டும். வளங்களைக் கொள்ளையடிக்கும். இதில் சரி, தவறுகளுக்கான கோடுகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். நான் பிறந்த, வளர்ந்த திருப்பூர் ஒரு சிற்றூர். என் கண் முன்னே அது தொழில் நகரமாக வளர்ந்தது. உழைப்பின், திறமையின் மூலமாக எப்படிப்பட்ட உயரங்களையும் எட்டலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்தது. பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது. கடும் உழைப்பின் வழியாக உலகையேத் திரும்பிப் பார்க்க வைத்த அதே நகரம்தான் அறமும் மதிப்பீடுகளும் வேகமாக சரியும் அவலத்தையும் காட்டியது. தொழில் வளர்ச்சிக்கு முன் நிலமும் நீரும் காற்றும் மாசுபடுவதோ சூழல் சீர்கெடுவதோ முக்கியம் ஒன்றுமில்லை என்ற அலட்சியத்தை அடையாளப்படுத்தியது. பெருவளர்ச்சியின் இரு பக்கங்களையும் சிறிதும் பெரிதுமாக கண்ணெதிரில் கண்டுணர முடிந்தது. என் ஆரம்ப காலச் சிறுகதைகளான இருப்பு, விளிம்பில் நிற்கிறவர்கள், இலையுதிர்காலம், விடுதலை போன்றவை இவற்றையே மையம் கொண்டிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. இதன் உச்சமாக அமைந்தது ‘மல்லி’. இவை அனைத்தும் ஒன்றிணைந்து உருவான பெருநாவலே ‘மணல் கடிகை’. ஒருவகையில், இக்கதைகள் அனைத்துமே ‘மணல் கடிகை’ நாவலின் பகுதிகளே. ‘மணல் கடிகை’யில் உள்ள திருப்பூர் இன்று இல்லை. அங்கிருந்து வெகுதூரம் நகர்ந்துவிட்டது அந்த நகரம். அந்த மாற்றங்களையும் தடுமாற்றங்களையும் சொல்ல இன்னொரு ‘மணல் கடிகை’தான் எழுதவேண்டும்.

பசி உடலின் தீயென்றால் காமம் உயிரின் நெருப்பு. இதுவே உயிர்களை உறவுகளை இயக்கும் கனல். ஆண் பெண் உறவுகளின் எண்ணற்ற கோலங்களை, திரிபுகளை, விசித்திரங்களை, உன்னதங்களை அன்றாடம் தொடர்ந்து காண்கிறோம். அதன் தொடர்ச்சியாகவே திருமணம், குடும்பம் உள்ளிட்ட சமூக நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  மாறிவரும் சமூகச் சூழலுக்கும் மதிப்பீடுகளுக்கும் ஏற்ப அவற்றின் சமகாலப் பொருத்தங்களைப் பற்றிய கேள்விகளை நம்மால் புறந்தள்ளிவிட முடியாது. குடும்ப அமைப்பு ஒரே சமயத்தில் பெரும் பாதுகாப்பையும் கூடவே பலமான கட்டுப்பாடுகளையும் தருகிற ஒன்று. திருமணம், குடும்பம் சார்ந்த சமகாலக் கேள்விகளை வெவ்வேறு கோணங்களில் எழுப்புவதன் வழியாக அதைப் பற்றிய அழுத்தமான விவாதங்களையும் அவற்றின் மூலமாக சில தெளிவுகளையும் அடைய முடியும் என்ற நோக்கில் அமைந்ததே ‘மனைமாட்சி’ நாவல்.

இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் தொழில் கைத்தறி நெசவு. என் குடும்பத் தொழிலாக இருந்த நெசவிலிருந்து வெகு வேகமாக விலகி வந்துவிட்டது கடந்த இரண்டு தலைமுறைகள். எங்கள் பகுதி முழுவதும் ஒலித்திருந்த தறிச் சத்தங்களை இன்று அக்கம்பக்கத்தில் வெகு தொலைவு வரை எங்கும் கேட்க முடியவில்லை. புதிய தலைமுறையினருக்கு தறியையும் அதன் வெவ்வேறு உப தளவாடங்களையும் கண்ணில் காட்டுவதற்குக்கூட ஒன்றும் மிச்சமில்லை. இந்தியாவின் மத்திய பகுதியிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் இடம்பெயர்ந்து தமிழகத்துக்கு வந்து சேர்ந்த ஒரு இனத்தின் அடையாளம் இன்று மாறிவிட்டது. இந்த இனக்குழுவின் பயணத்தை, வாழ்க்கையை இலக்கியத்தின் வழியாக மட்டுமே பத்திரப்படுத்த முடியும். நெசவைப் பற்றியும் நெசவாளர்களின் பாடுகளைப் பற்றியுமான என் கதைகளின் உத்தேசம் அதுதான். ‘அம்மன் நெசவு’ம் சில கதைகளும் அந்த இலக்கை நோக்கி எழுதப்பட்டவையே.

அகமும் புறமுமாய் எதிரெதிராகச் சுழன்றபோதும் இப் புனைவுகள் ஒரு வட்டத்தைப் பூர்த்தி செய்பவையாகவே இருக்கின்றன. அதன் இன்னொரு பகுதியாகவே வரலாற்றுத் தகவல்கள், சம்பவங்களிலிருந்து புதிய புனைவை உருவாக்குவது. ஏற்கெனவே எழுதப்பட்ட ஒன்றில் உள்ள இடைவெளிகளை புனைவைக் கொண்டு நிரப்புவதன் வழியாக புதிய கோணத்தில் அந்த சம்பவத்தையோ சரித்திரத்தையோ காட்டுவது. ‘மண் வீணை’, ‘கஜாரிகா’ போன்ற கதைகள் அவ்வாறு எழுதப்பட்டவையே. அதன் தொடர்ச்சியாகவே, ‘மாயப் புன்னகை’ குறுநாவல் உருவானது. இன்னும் விரிவான அளவில், சரித்திரம் சமகாலம் இரண்டையும் சேர்த்து புலி வேட்டையை களமாகக் கொண்டு எழுதப்பட்டதே ‘வேங்கை வனம்’ நாவல். இவ்வாறான ஆக்கங்கள் சில புதிய சாத்தியங்களையும் தமிழ் களத்தில் பேசப்படாத களங்களையும் முயல்வதற்கான வாய்ப்புகளைத் தருகின்றன. புற நிகழ்வுகளை, தகவல்களைப் பேசுவது போல அமைந்துள்ள இந்த ஆக்கங்கள் யாவுமே உண்மையில் அக நுட்பங்களையே தீவிரமாக உணர்த்துகின்றன.

எழுத்து எனக்குப் பிடித்தமானது. எழுதும் கணங்கள் பெரும் பரவசங்களையும் அதே நேரத்தில் அவஸ்தைகளையும் அளிப்பவை. முன்பு உத்தேசிக்காத அபூர்வமான சில கணங்கள், காட்சிகள் தன்னிச்சையாக எழுதப்படும்போது எழுதியது நானல்ல என்பதை உணர்ந்து திடுக்கிட்டிருக்கிறேன். அபூர்வமாக எப்போதாவதுதான் வாய்க்கும் அவ்வாறான புனைவின் மாயத் தருணங்களுக்காகவே அன்றாடம் தொடர்ந்து எழுதியபடியே இருக்கிறேன். என் எழுத்து எனக்குத் தரும் நிறைவில், மகிழ்ச்சியில், உணர்வில் ஒரு பகுதியை அதை வாசிக்கும் முகம் தெரியாத ஒருவர் அடைந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வரும்போது தொடர்ந்து எழுதலாம் என்ற உற்சாகமும் ஊக்கமும் பிறக்கிறது. அவ்வாறான ஒரு நிறைவையும் மகிழ்ச்சியையும் உணர்வையும் என் எழுத்து என்னிடமோ, வாசகரிடமோ எட்ட முடியாதபோது எழுதுவதை நிறுத்திவிடுவேன். அதைவிட எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் வேறென்ன நியாயத்தை செய்துவிட முடியும்?

0

ஆகஸ்ட் 2023

(கே.பி.நாகராஜன் தொகுத்து, சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘ஏன் எழுதுகிறேன்?’ நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை)

 

 

 

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...