Tuesday, 12 November 2024

கணப்பொழுதில் மின்னி மறைந்த வெளிச்சம் - ஜி.நாகராஜன்

ஜி.நாகராஜன் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தின் எந்தவொரு பரிந்துரை பட்டியலிலும் அரிதாகக் காணப்படும் ஒன்று. ‘எனக்குப் பிடித்த எழுத்தாளர்களி’ன் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறுவது அபூர்வம். ஒருவகையில் ப.சிங்காரத்தைப் போல அவரும் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட எழுத்தாளர்தான். ப.சிங்காரத்தை தமிழ் வாசகர்களுக்கு மறுபடியும் அறிமுகப்படுத்திய சி.மோகன்தான் ஜி.நாகராஜனையும் மறுகண்டுபிடிப்பு செய்தளித்தார் என்று சொல்லலாம்.

0

எண்ணிக்கையிலும் பக்க அளவிலும் கொஞ்சமே எழுதி பேர் வாங்கிய எழுத்தாளர்கள் என்றொரு பட்டியல் எல்லா மொழிகளிலும் உண்டு. தமிழில் அப்படியொரு பட்டியலை யோசித்தால் உடனடியாய் நினைவுக்கு வருபவர் மௌனி. எழுதியது மொத்தமாய் 18 கதைகள். புதுமைப்பித்தன் அவர் எழுத்தில் கண்டு வியந்த மேதமை பல விளக்கங்களுக்குப் பின்னும் இன்னும் விளங்காத புதிராக சவாலாகி நிற்கிறது. 

அடுத்த பெயர் சம்பத். அவரது “இடைவெளி” நாவல் எண்பத்தி சொச்சம் பக்கங்களையே கொண்டது. தமிழ் நாவல் வரலாற்றில் இடைவெளிக்கென்று தனிப்பட்ட இடம் எப்போதும் உண்டு. அவர் எழுதிய சிறுகதைகள் இரண்டு தொகுதிகளாக சமீபத்தில் வெளியாகியுள்ளன. ‘சாமியார் ஜூவுக்குப் போகிறார்’ கதை அவரது இடைவெளி நாவலுக்கு இணையாகப் பேசப்படுகிறது.

“பசித்த மானுடம்” என்ற ஒரேயொரு நாவலைத் தந்தமைக்காக தமிழில் கரிச்சான்குஞ்சுவுக்கு முக்கியமான இடம் உண்டு.

அந்த வரிசையில் சற்றே ஆகிருதியுடன் கட்டுமஸ்தாக வந்து சேர்ந்திருப்பவர் ஜி.நாகராஜன்.

0

24 ஆண்டுகளாக இலக்கியப் பணி செய்து அவர் தமிழுக்குப் பங்களித்தது இரண்டு குறுநாவல்கள், 37 கதைகள், 4 குறுங்கதைகள் ஆகியவை. சுந்தர ராமசாமியின் வார்த்தைகளில் சொல்வதானால் “வருடத்திற்கு அரை டன் கழித்துக்கொண்டிருக்கும் பட்டாளத்தின் மத்தியில் நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான் இருக்கும்.” அவரது மொழி ஆற்றலுக்கும் அனுபவ வீச்சுக்கும் இலக்கியப் புலமைக்கும் சற்றும் நியாயம் செய்யாததே இந்த எண்ணிக்கை.

இத்தனை குறைந்த பக்கங்களில் அவர் எழுதிக் காட்டியிருக்கும் இருண்ட உலகும் அதிலிருந்து எழும் கேள்விகளும் கெக்கலிப்புகளும் நம்மை அசௌகரியப்படுத்துகின்றன. முகம் சுளிக்கச் செய்கின்றன. நாகராஜன் மிக இயல்பாக தன்னிச்சையாய் புழங்கும் உலகின் பக்கமாய் தலைதிருப்பவே பயம் நமக்கு. அவர் எழுதிய ஆச்சாரமான காலகட்டத்தில் தீட்டாக விலக்கப்பட்டிருந்த இந்த உலகும் அதன் மனிதர்களும் அவரை கவர்ந்திருக்க வேண்டும். யாரும் நடக்கத் தயங்கிய தெருக்களை நிழல் ஒளிர்ந்த நடைவாசல்களை துலக்கமான பூச்சுக்களுடன் ஒயில்காட்டி நின்ற பெண்களை நான் எழுதுகிறேன் என்று துணிந்திருக்கிறார். பிறர் சொல்லத் துணியாததை நான் செய்கிறேன் பார் என்கிற திமிரை அவரது எழுத்தில் உணரமுடிகிறது. மனித நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டு தொடர்ந்து தவிர்க்க முடியாத பகுதியாக இருந்திருந்தபோதும் அதை அங்கீகரிக்கவோ கண்டுகொள்ளவோ தயங்கிய கூச்சப்பட்டிருந்த பொய்யான சமூக ஒழுங்கைப் பார்த்து எகத்தாளமாகச் சிரித்தபடியே எல்லாவற்றையும் பொதுவில் போட்டுடைத்தார்.. புறக்கடைகளில் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு உலவும் ஒழுக்கத்தின் முகலட்சணத்தை அம்பலப்படுத்தினார்..

நாகராஜன் அப்போதிருந்த பொதுவான சம்பிரதாயமான எழுத்துப்போக்கைக் கண்டு சலித்து எரிச்சலுற்றிருக்க வேண்டும். ஏதோ ஒரு விதத்தில் இலக்கியம் அசலான சமூகத்தை உள்ளபடி காட்டவில்லை என்று குறைபட்டிருக்க வேண்டும். அவரது பொன்மொழிகளில் அந்த எரிச்சல் தலைகாட்டியிருப்பதை ரசிக்க முடிகிறது.

“மனிதாபிமான உணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனித துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தைப் படைக்கவல்லது.” என்ற அவரது எண்ணத்தின் பிண்ணனியிலேயே அவரது எழுத்தை அணுகமுடியும்.

“மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது. ஏனெனில் சிந்திக்கும் நாய்கள் நாய் குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன.”

‘மனிதனைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்.,’

ஆட்கூட்டத்தில் தன்னைத் தனித்துக் காட்டும் முனைப்பாகவும்கூட இதை அணுகமுடியும். அடுத்த நாள் பற்றிய கற்பனைகளற்ற வாழ்வைக் குறித்த தொலைநோக்குப் பார்வையில்லாத அன்றாடம் அந்தந்த கணத்தில் வாழ்ந்து மடியத் தயாரான எளிய மனிதர்களைப் பற்றி ஆர்ப்பாட்டமில்லாத எழுத்து நாகராஜனுடையது. அதேசமயத்தில் இந்த உலகத்தையும் மனிதர்களையும் அவர் போலியான பச்சாதாபத்துடனோ அருவருப்புடனோ அணுகவில்லை. சரி தப்பு என்று தராசைத் தூக்கவில்லை. விசாரணையோ தீர்ப்புகளோ இல்லை. கண்ணீர் வரவழைக்கும் சித்தரிப்புகளோ அறம் பேசும் அலட்டல்களோ கிடையாது. அன்றாடங்களை அப்படி அப்படியே அனுபவிக்கும் மனிதர்களின் எளிய சந்தோஷங்களை துக்கங்களை ஆற்றாமைகளை கள்ளத்தனங்களை எள்ளலும் சிரிப்பும் களிப்புமான மொழியில் உயிர்ப்புடன் உருவாக்கித் தந்திருக்கிறார்.

இப்படியொரு எழுத்தை வாசிக்க நேரும் நம்பிக்கைவாதிகளுக்கும் தூய கலைச் செம்மல்களுக்கும் முகச்சுளிப்பை ஏற்படுத்தும். கலையைக் கொண்டு மக்களின் மனதைச் சுத்திகரிக்க புறப்பட்ட கொள்கைவாதிகளின் தரப்பைப் புறங்கையால் எத்தி நகர்த்தும் எகத்தாளமே நாகராஜனின் பலம்.

‘இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்களை, நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம், இவையே அவன் வாழ்க்கை.’

நாளை மற்றுமொரு நாளேவின் முகப்பு வாக்கியம் இது. அவனது வாழ்க்கையைப் பற்றி சொல்லும் முகமாக மற்றவர்களின் போலியான வாழ்வைப் பற்றிய கூரிய விமர்சனத்தை முன்வைக்கிறார் நாகராஜன்.

‘நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் “இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள். “இதையெல்லாம் ஏன் எழுதவேண்டும்?” என்று கேட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்.‘

அவரது எழுத்தைப் பற்றி அவரிடம் சொல்லப்பட்ட அல்லது அவர் காதில் விழுந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாகத்தான் 1963ல் குறத்தி முடுக்கு நாவலின் முகப்பு வாக்கியத்தை அவர் அமைத்திருக்கவேண்டும். அவரது மொத்தப் படைப்புலகத்திற்கும் இந்த வாக்கியம் அழுத்தமான பொருள் சேர்க்கிறது.

0

நாகராஜன் தன் எழுத்தின் வழியாக தொடர்ந்து முயல்வது மனித உறவுகள் சார்ந்து தனிமனிதன் ஏற்கும் விசித்திரமான மனப் போக்குகளை சற்றேனும் புரிந்துகொள்ளவே. 34 கதைகளில் பெரும்பகுதி இந்த முயற்சியின் சிறிய பகுதிகளே எனலாம். சமூக உறவின் ஒரு பகுதியாக காலந்தொட்டு நிலவும் பரத்தமையைக் குறித்தும் அதன்மீது பொதுச்சமூகம் காட்டும் போலியான முகத்திருப்பலைக் குறித்தும் மேலும் கூடுதல் அழுத்தத்துடன் அணுகியிருக்கிறார்.

அவரது முதல் சிறுகதையான ‘அணுயுகம்’ சம்பிரதாயமான சிறுகதையாக அமையாது அன்னியமான நிலத்தைக் களமாகக்கொண்டதுதான். எழுதப்பட்ட காலகட்டத்தில் 1957ல் அது புதுமையானதாக அமைந்திருக்கவேண்டு.ம். உண்மையில் களம்தான் புதியதே தவிர அதன் உள்ளடக்கம் நாகராஜனின் கலைமனம் எப்போதும் மையம் கொண்டிருக்கும் உளவியல் பிரச்சினைதான். ஆண் பெண்ணுக்கு இடையான உறவுச் சிக்கல்களே. குறிப்பாக காமம் சார்ந்த இடறல்களே.

இந்த வகையில் அவர் எழுதிய முதல் கதை ‘அங்கும் இங்கும்’. தாம்பத்தியம் தம்பதிகள் குறித்த பார்வையை புதிய நோக்கில் அணுகியுள்ளது.

காமம் சார்ந்த மன அவசத்தைக் காட்டிய முதல் கதை ‘சுழற்சி’. விருப்பத்துக்கும் விலகலுக்குமிடையிலான தவிப்பை ராட்டினத்தை படிமமாகக் கொண்டு எழுதிய இந்தக் கதை நாகராஜனின் தீர்மானமின்மையையும் சொல்கிறது என்று கொள்ள முடியும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1961 ல் எழுதிய ‘மிஸ் பாக்கியமும் பூர்வாசிரமும்’ அவருடைய குழப்பம் தீர்ந்ததை தெளிவாக்குகின்றன. தனிமையை தீராத காமத்தை மிஸ் பாக்கியம் சொல்லியிருக்க ‘பூர்வாசிரமம்’ கதையே விலைமகளிரைப் பற்றிய முதல் கதை.

விலைமகளிரை மையப்படுத்தி எழுதியவை 6 கதைகளும் குறத்தி முடுக்கும். தனித்துவமான முகங்களற்ற உதிரிகளை லும்பன்களை மையப்படுத்தி எழுதியவை நாளை மற்றுமொரு நாளே நாவலும் 4 கதைகளுமே.

இவையே நாகராஜனின் முழு உலகமாக தோற்றந்தருவதற்கு காரணம் இவற்றில் உள்ள யதார்த்தமும் மெய்மையுமே. மற்ற கதைகள் போலன்றி இக் கதைகள் இயல்பான நெருக்கத்தையும் இணக்கத்தையும் வாசகனுக்கு சாத்தியப்படுத்துகின்றன. “அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது” என்ற விலைமகளிரைக் குறித்த அவரது அணுசரணையான பார்வை அவரது எழுத்தின் மனச்சாயலுக்கு வலு சேர்ப்பதாயிருக்கிறது. “சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்துகொள்ள முடியும்.” அப்படியொரு புரிதலே அவரது எழுத்தை அமைத்திருக்கிறது.

0

கு.அழகிரிசாமிக்கும் முன்னதாகவே 1959இல் ‘பச்சக்குதிரை’ கதையை எழுதியிருக்கிறார். குழந்தைகளின் உலகை மையமாகக் கொண்ட முதல் கதையாக இருக்கலாம். ஆனாலும் நாகராஜன் மேலும் இந்த உலகை முயலவில்லை. ஆனால் குழந்தைகளின் மீதும் அவர்களின் வாத்ஸல்யத்தின் மீதும் பெரும் ஈர்ப்பு இருந்திருப்பதை துலக்கமாக அறிந்துகொள்ள முடிகிறது. உறவுகள் அனைத்தும் தற்காலிகமானதும் சந்தர்ப்பவசமானதும் என்ற மேலோட்டமான மனம்கொண்ட நாகராஜனின் கதாபாத்திரங்கள் குழந்தைகளை மட்டும் குதூகலத்தோடும் உள்ளன்போடும் அணுகுகின்றன. பொதுவான நாகராஜனின் உலகில் முற்றிலும் பொருந்தாத அம்சம் இது. ஒரு வகையில் அந்த உலகின் முரட்டு யதார்த்தத்தின் வெப்பத்தைத் தணிக்கும் காற்றாக இது உலவுவதை நம்மால் சட்டென்று உணர்ந்துகொள்ள முடிவதில்லை போலும்.

ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ நவம்பம் 1968இல் வெளியாகியுள்ளது. நாகராஜன் எழுதிய ‘அக்கினிப்பிரவேசம்’ மார்ச் 1967இல் சாந்தி இதழில் பிரசுரமாகியுள்ளது. சிறிய கதை. அதை வாசித்தபோது ஜெயகாந்தனின் கதைக்கு எதிர்வினையாக நாகராஜன் இந்தக் கதையை எழுதியிருக்கக்கூடும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் நாகராஜனே முதலில் எழுதியிருக்கிறார் என்பது உறுதியானபோது ஜெயகாந்தன் இதற்கு எதிர்வினையாற்றினாரா என்ற கேள்வி எழுகிறது.

       அக்கினிப் பிரவேசம் நடந்துவிட்டது என்று தொடங்கும் கதை குடிசைக்குள்                 படுத்திருக்கும் அம்மாவும் மகளுக்குமான உரையாடலாக நீள்கிறது.

       “ஏண்டி, நல்லாக் கணக்குப் பார்த்துச் சொல்லு. இன்னையோட எத்தனை                     நாளாகுது?”

       மகள் முணுமுணுக்கிறாள். “செவ்வாய் இருபத்தினாலு, புதன் இருபத்தஞ்சு,                 வியாழன் இருபத்தாறு, வெள்ளி இருபத்தேழு, சனி இருபத்தெட்டு. சரியா                    இருபத்தெட்டு நாளாயிரிச்சி.”

       “வழக்கமா எத்தனை நாளாகும்?”

       “இருபத்தினாலுக்கு ஒரு நாள் தப்பினதில்லே.”

       …..

       “பாவி, பழிகாரன். அவன் வௌங்குவானா? உடம்பெல்லாம் புழுத்துச்    சாகணும்”

       “இப்ப அவனெத் திட்டி என்னம்மா பண்றது? கார்ல ஏறியிருக்கக்கூடாது.     அப்படி         ஏறினபெறவும் அவன் தப்பா நடந்துக்கிறான்னு தெரிஞ்சதும் ஓடற                         கார்லேந்து      குதிச்சாவது செத்து மடிஞ்சிருக்கணும். ஏம்மா, நான் மனசால தப்புப்      பண்ணலைனியே, அது எப்படிம்மா உண்மையாகும்? மனசு திடமா                            இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா?”

       ….

       “ஏம்மா, மனசு வேறே, உடல் வேறேயா?” என்று மகள் தொடர்கிறாள்.


இரண்டும் தனித்தனியாக அவரவர் மனதில் எழுந்த கதைகள் என்றே கொள்ளலாம். தற்செயலாக ஒன்றுபோல் அமைந்திருக்கவேண்டும் என்றும் நம்பலாம். ஆனால் கதைத் தலைப்பு, களம், சந்தர்ப்பங்கள் எல்லாமே  தற்செயலாக ஒன்றுபோல அமைய முடியும் என்பது வியப்பாக உள்ளது.

அல்லது அசாதாரணமானவர்களின் சிந்தனையும் ஒன்றுபோல் அமையும்போலும்.

ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் சூழலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து விவாதங்களைக் கிளப்பி நின்றது. ஆனால் நாகராஜன் இப்படியொரு கதையை இதற்கு முன்பே எழுதினார் என்பதே நம் சூழலில் தெரியாமல் போனது. இதற்கு காரணம் ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் ஆனந்தவிகடனில் வெளியானது என்பதுதான் காரணமாக இருக்கமுடியும். 

நாகராஜன் தனது கதையின் முடிவில் இப்படி எழுதியிருக்கிறார்.

“நமக்கென்ன கவலை. நாம் ஓடிப் போயிடலாம். ஏதாவது சினிமா பார்க்கலாம். இல்லாட்டி நீதிக் கதை படிக்கலாம்.”

0

எழுத்தில் நாகராஜனை பாதித்த எழுத்தாளர்கள் இருவர். புதுமைப்பித்தனும் அசோகமித்திரனும்.

நாகராஜனின் ‘ஜுரம்’ கதையில் புதுமைப்பித்தனின் செல்லம்மாளின் கணிசமான பாதிப்புள்ளது. இரண்டுக்குமிடையே முப்பதாண்டுகள் இடைவெளி இருந்தபோதும்கூட இதற்கும் அதற்கும் தொடர்பில்லை என்று சொல்லமுடியாத அளவுக்கு புதுமைப்பித்தனின் நிழல் நாகராஜனின் கதையில் அடர்த்தியாக விழுந்துள்ளது.

அதேபோல ‘எங்கள் ஊர்’ கதையை வாசிக்கும்போது பித்தனின் பொன்னகரத்தை எண்ணாமல் இருக்கமுடியவில்லை. ‘டெர்லின் ஷர்ட்’ கதையிலும்கூட காஞ்சனையின் நிழலை உணரமுடிகிறது.

மௌனமும் பித்தமும் என்ற தனிக்கட்டுரையில் மௌனி, புதுமைப்பித்தன் இருவரது எழுத்தைப் பற்றிய தெளிவான தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். “தமிழில் உரைநடை புனைவதில் இலக்கியத்தின் பல்வேறு சாத்தியக் கூறுகளையும் நுட்பமாக ஆராய்ந்து வெளியிட்ட பெருமை சொ.விக்குத்தான் நிச்சயமாக உண்டு. அவர் தனது பரிசோதனைகளை மிகவும் விரிவான கட்டுக்கோப்புக்குள் அமைத்துக்கொண்டார்.”

“திராவிட இயக்கத்தின் மறுக்கமுடியாத சொல் வளத்தை சொ.வி பெரியதாக நினைக்கவில்லை. ஒரு துப்பாக்கிக் கதை எழுதி திருவள்ளுவரிடமும் கொஞ்சம் விஷமம் செய்து பார்த்த சொ.வி. யாருடைய சொல்வளத்தாலும், சொன்னயத்தாலும் பரவசப்பட்டுப் போகக்கூடியவரல்ல. அந்தத் தன்னிறைவு உயர்வு பலமா பலவீனமா என்பது உண்மையில் ஒரு இயக்கவியல் பிரச்சினை.”

“சொ.வி எழுத்தளாரது எழுத்தாளர்.” என்பதே நாகராஜனின் கருத்து. இருவரது எழுத்துக்களுக்கும் இடையில் தான் உணரும் வேறுபாட்டைத் தெளிபடுத்தியிருக்கிறார்.

0

அசோகமித்திரனின் ‘இன்னும் சில நாட்கள்’ தொகுப்பைப் பற்றிய விரிவான விமர்சனத்தை எழுதியிருக்கிறார் நாகராஜன். ‘பெரும்பாலான தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் அரிதே காணக்கூடிய சொற்செட்டு, புறநிலை உணர்வு, வலிந்து எதையுமே புகுத்தாத போக்கு, வாழ்க்கையின் சலனத்தை உள்ளபடியே பிரதிபலிக்கும் திறன், கலையுணர்வுக்கு அப்பாற்பட்ட நோக்கங்களிலிருந்து பூர்ணவிடுதலை இவையனைத்தும் அசோகமித்திரனின் சிறப்புத் தன்மைகளாக எனக்குப் படுகின்றன’ என்று அசோகமித்திரனின் தனித்தன்மைகளை கச்சிதமாக எடுத்துரைத்திருக்கிறார்.

தர்மோ சீவராமின் ‘சதுரச் சிறகு’ பற்றிய பதிவில் ‘என்னைப் பொறுத்தமட்டில் எந்த உணர்ச்சியையும் ‘வாய்விட்டு’ ஒரு வரியில்கூடச் சொல்லாது, பார்ப்பதற்கும் கேட்பதற்கும் முடியுமானால், நுகரவும் தொட்டுணரவும் வேண்டியதை மட்டும் அளவோடு தருவதே சிறந்த எழுத்து என்று இருப்பினும், உணர்வுக்கும் ‘புலன் கூடான’வற்றுக்கும் இடையே இருக்கவேண்டிய விகித அளவு இன்றைய புதுமுறை எழுத்தாளர்களைச் சார்ந்தமட்டிலும் ஒரு கேந்திரப் பிரச்சினையாகிவிட்டது. இம்முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ள ஒருவராக அசோகமித்திரன்தான் உடனடியாக எனக்குத் தெரிகிறார். இவ்வாறு கூறுவதன் நோக்கம் அசோகமித்திரனுக்குப் பாராட்டுத் தெரிவிக்கவல்ல. அவர் எழுத்தை வைத்துப் பார்க்கும்போது இவ்விலக்கியப் பிரச்சினையின் தன்மையில் சற்றுத் தெளிவு கிடைக்கும் என்பதுதான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பல்வேறு மாறுபட்ட கதைக்களங்களை கையாளவும் வடிவங்களில் எழுதிப் பார்க்கவும் புதுமைப்பித்தனைப் போல எழுத முற்பட்ட நாகராஜன் மொழி நுட்பத்திலும் கச்சிதமான சூழல் சித்தரிப்புக்கும் கதாபாத்திரங்களின் வார்ப்புக்கும் அசோகமித்திரனை முன்மாதிரியாகக் கொண்டிருந்தார் என்று சொல்லமுடியும்.

0

தனது கதைகளின் வடிவத்தைப் பற்றி நாகராஜனுக்கு தெளிவு இருந்திருக்கிறது. அவரது விரிவான வாசிப்பிலிருந்து தன்னுடைய எழுத்தை எடைபோடும் மனத்திறத்தின் வெளிப்பாடாகவே இப்படிச் சொல்கிறார். ‘இத்தொகுப்பில் (கண்டதும் கேட்டதும்) அடங்கியுள்ள என் கதைகளில் முழுமையாக சிறுகதை இலக்கணத்தைப் பெற்றிருக்கும் ஒரே கதை ‘யாரோ முட்டாள் சொன்ன கதை’. மற்றவை எல்லாம் வெறும் முயற்சிகளே. ஆங்கிலத்தில் சொல்வதென்றால் அவற்றை sketches. Vignettes என்று கூறலாம். இம்முயற்சிகளிலும் என்னுடைய ஆற்றலையும் பல்வேறு குறைபாடுகளையும் காணலாம் என்பது வேறொரு விஷயம்.”

பெருமளவு கதைகள் அளவில் சிறியவை. அதிலும் சில மிகச் சிறியவை. உள்ளதிலேயே அளவில் பெரிய கதை “யாரோ முட்டாள் சொன்ன கதை.” அதுவே கச்சிதமானதாக அவர் உணர்கிறார். அவரது பழக்கவழக்கங்கள் அவர் எழுத விரும்பியவற்றை எழுதுவதற்கு எதிராக அமைந்திருக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையும் குறைந்த பக்கங்களும் அமைந்துபோனதற்கும் இதுவே காரணமாக இருக்கவேண்டும்.

‘அப்படியொரு காலம் அப்படியொரு பிறவி’யின் மல்லன், ‘நாளை மற்றுமொரு நாளே’வின் தரகர் அந்தோணி போன்று கச்சிதமான கதாபாத்திரத்தை உயிர்ப்புடன் சித்தரிக்க முடிகிறது. நான் செய்த நற்செயல்களின் நாயகன்போல வெவ்வேறு களங்களை கோணங்களை உருவாக்க முடிந்திருக்கிறது. ஜுரம் கதையைப் போல வறுமையின் யதார்த்தமான முகத்தை அதன் முழு வீச்சோடு உணர்ந்து எழுத முடிந்திருக்கிறது. கிழவனின் வருகை, டெர்லின் ஷர்டு போன்று மாற்று வடிவத்தில் கதைகளை எழுதும் யோசனைகள் இருந்திருக்கின்றன. கதைகளிலும் சரி நாவல்களிலும் சரி அவரது சூழல் சித்தரிப்புகள் குறிப்பிடத்தக்கவை. சிற்சில வரிகளில் அவரால் சொல்லும் இடத்தின் நிழலை ஒளியை வாசனையை வாசகனுக்குக் உணர்த்திவிட முடிகிறது. 

சிறுகதை குறித்த அவரது முயற்சிகள் கூடிவந்து அமைந்த கதை ‘ஆண்மை’. அவர் உயிருடன் இருந்தபோது வெளியாகாத அந்த கதை அதிர்ஷ்டவசமாக கண்டுபிடிக்கப்பட்டு பிரசுரம் பெற்றுள்ளது. நாகராஜனின் சிறுகதை உலகின் ஆகச்சிறந்த அந்தக் கதையே அவர் அதுவரையிலும் சொல்ல முயன்றவற்றின் திரட்சியாக அமைந்துள்ளது. அவரால் முடிந்திருந்தால் நாளை மற்றுமொரு நாளே நாவலின் கந்தன் அளவுக்கு ஆண்மையின் ராஜத்தையும் அவரால் விரிவான நாவலாக அமைத்திருக்க முடியும். இரண்டும் ஒன்றில் ஒன்று அமைந்து பொருந்தும் அடர்த்தியுடன் உள்ளன. 1963 இல் எழுதிய குறத்தி முடுக்கை அவர் பிற்காலத்தில் ராஜத்தைக் கொண்டு எழுதியிருந்தால் அதுவும்கூட நா.ம.நாளே அளவுக்கு காத்திரமான படைப்பாக அமைந்திருக்கக்கூடும்.

தான் விரும்பிய களத்தையும் கதாபாத்திரங்களையும் கொண்டு அவர் எழுதிய கதைகளுக்கும் சரி, அவற்றைத் தவிர பிற கதைகளுக்கும் சரி வாசகர்களிடையே அவை எந்தமாதிரியான எதிர்வினைகளை ஏற்படுத்தின  என்பது தெரியவில்லை. அவரது ‘கண்டதும் கேட்டதும்’ தொகுப்புக்கு முன்னுரை எழுதிய சுந்தரராமசாமி “தன்னுடைய அனுபவ உலகத்தின்பால் நாகராஜனுக்கு ஏற்பட்ட தீவிர அக்கறையின் விளைவுகளே இக்கதைகள்” என்று குறிப்பிடுகிறார். ‘நாகராஜனின் கலையோ பேதமையும் ஜாலமும் நளினமும் கொண்டது. எதிர்வீட்டு ஜன்னலில் தோன்றி சில கணங்கள் முகச் சேட்டைகள் காட்டி, நாம் மயங்கி நெகிழும்போது மறைந்து வெற்று ஜன்னலில் நம் பார்வையைப் பதியவைத்துத் தவிக்கவைக்கும் குழந்தைபோன்றது.” “கதைகளைச் சொல்லிச் சொல்லிக் கொல்ல வந்தவர் அல்ல இவர். விளக்கங்களும் உரைகளும் விரவிவரும் உபந்நியாசம் இலக்கியக் கலை ஆகாது என்பது இவருக்குத் தெரியும். பின் கட்டின் சாளரம் ஒன்றைத் திறந்துவிட்டு கம்மென்று வாயை மூடிக்கொண்டு நம்முடன் நின்றபடி உள்ளே எட்டிப்பார்க்கிறார். இந்தத் தருணத்தில் சாளரத்தைத் திறந்ததுதான் தான் செய்த ஒரே காரியம் என்ற பாவத்துடன், கெட்டிச் சாயங்கள் என்று நாம் நம்பி வரும் சில உருப்படிகள் சலவைக்கு ஆளாகின்றன.”

தனது ‘கண்டதும் கேட்டதும்’ சிறுகதைத் தொகுதியையும், குறத்தி முடுக்கு நாவலை தானேதான் பதிப்பிக்க வேண்டியிருந்திருக்கிறது. பிற்காலத்தில் நாளை மற்றுமொரு நாளே நாவலையும் மிகுந்த சிரமத்துக்குப் பின் தானேதான் பதிப்பித்திருக்கிறார். சுந்தரராமசாமிக்கு எழுதிய ஒரு கடிதத்தில் “நீங்கள் குறிப்பிடும் பதிப்பகங்கள் இரண்டும் துடைப்பான்களைக் கொண்டுகூட என் எழுத்தைத் தொடமாட்டா,” என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்து நாகராஜனின் எழுத்துக்கள் வாசக உலகிலிருந்து மட்டுமல்ல எழுத்துலகிலும்கூட  தீட்டாகக் கருதி ஒதுக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவாகிறது. 

தீட்டாக கருதப்பட்டு ஒதுக்கப்பட்ட நாகராஜனின் எழுத்தின் தொடர்ச்சியை இன்றைய இளம் படைப்புகளில் இன்னும் உக்கிரமாக காணமுடிகிறது. தீட்டெனப்படுவதும் அதை ஒதுக்குதலும் தற்காலிகமானதே.

0

நாகராஜனுக்கு எழுத்தைப் பற்றின தெளிவான தீர்க்கமான பார்வை இருந்திருக்கிறது என்பதை அவரது கட்டுரைகளிலிருந்து கடிதங்களிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல எழுத்தாளர்களைப் பற்றியும் அழுத்தமான பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார். “சிறந்த எழுத்தாளர்கள் எப்போதுமே சுய முரண்பாடுகளுக்கு அடிமையானவர்கள். அவர்கள் எப்போதுமே தங்களையோ பிறரையோ நேசிப்பவர்களாகவோ அல்லது எப்போதுமே தங்களையோ பிறரையோ வெறுத்துக் கொள்பவர்களாகவோ இருப்பதில்லை.” “எந்த எழுத்தாளரைப் பற்றியும் அவர் முதல்தர எழுத்தாளரா, இரண்டாந்தர எழுத்தாளரா எனத் தீர்ப்பளிக்க முயல்வது சரியல்ல. அவரது எழுத்தில் எது முதல்தர எழுத்து, எது இரண்டாந்தர எழுத்து எனப் பகுத்தப் பார்ப்பதே சரி..”

‘புரியாத எழுத்தை’ மதிப்பிடுவது பற்றிய அவரது எண்ணங்கள் கவனிக்கத்தக்கன. “எளிதில் புரிவது என்பது ஒரு கலைப்பண்பாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால் இத்தகைய எளிமை, இன்றியமையாத கலைப்பண்பு என்று சொல்லமுடியாது.” “சில எழுத்தாளர்களைப் படிப்பது ஆரம்பத்தில் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவர்கள் பிரபலமானவர்களாக இருந்தால், ப்பொறுமைக் குணம் நமக்கு இயல்பாக வந்துவிடுகிறது. புதிய எழுத்தாளர்களைப் படிக்கும்போதுதான் சில சந்தேகங்கள் ஏற்படுகின்றன.” “எந்த எழுத்தாளனைப் டிக்கும்போதும், குறிப்பாக நமக்குப் பழக்கமில்லாத ஒரு எழுத்தாளனைப் படிக்கும்போது, அவ்வெழுத்தாளனிடத்துக் குறைந்தபட்ச அனுதாபமும், மரியாதையும், பொறுமைக்குணமும் கொண்டிருத்தல் அசவியம். இது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் நாம் ஆற்றவேண்டிய பூர்வாங்கக் கடமை.  இதனால் வாசகன தனது விமச்ன நோக்கைத் தூக்கி எறிந்துவிடவேண்டும் என்று பொருளாகாது. எழுத்தாளனின் பாணி நம்முள் அழுந்திப் பிடிபடும்வரை வாசகன் தன் விமர்சன நோக்கை அரைத் தூக்கத்தில் கிடத்தவேண்டும் என்றுதான் பொருளாகும்.”

“புற உலக நிகழ்ச்சிகளுக்குக் குறைந்தபட்ச இடமே ஒதுக்கிவிட்டு, அந்நிகழ்ச்சிகளின் விளைவுகளான மனநிலைகளையும் உணர்ச்சிகளையும் வாசகன் உள்ளத்தில் நேரிடையாகப் படும்படி எழுத முயலுவது, தர்மோ சிவராம மட்டுமின்றி, ஏனைய பல எழுத்தாளர்களையும் தொற்றியுள்ள வியாதியாகப் படுகிறது..”

“என்னைப் பொறுத்தமட்டில் எந்த உணர்ச்சியையும் ‘வாய்விட்டு’ ஒரு வரியில்கூடச் சொல்லாது, பார்ப்பதற்கும் கேட்பதற்கும் முடியுமானால், நுகரவும் தொட்டுணரவும் வேண்டியதை மட்டும் அளவோடு தருவதே சிறந்த எழுத்து.’

சிறந்த எழுத்து இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற புரிதலின் தொடர்ச்சியாக தன்னுடைய எழுத்து அப்படி அமையவேண்டும் என்று முயன்றிருக்கிறார். செறிவான அவரது கதை வடிவங்களாக்கு அவரது புரிதலும் காரணம்.

0

நாகராஜன் தமிழ் இலக்கியத்தின் ஆகிருதி மிகுந்த எழுத்தாளர் இல்லை. 34 கதைகளை எழுதியிருந்தபோதும் சிறந்த சிறுகதையாளர்கள் பட்டியலில் இல்லை அவர். குறத்தி முடுக்கு, நாளை மற்றுமொரு நாளே இரண்டு நாவல்களுமே அவற்றின் கதைக்களத்திற்காகவும் கதாபாத்திர நேர்த்திக்காகவும் கட்டமைப்புக்காகவும் குறிப்பிடத்தக்கவை.. நாவல் வடிவத்தைப் பற்றிய புரிதலோ விவாதங்களோ பெரிதாக இல்லாத காலகட்டத்தில் இவை இரண்டும் புதிய வகைமாதிரியாக அமைந்திருந்தன. துண்டுத் துண்டான காட்சிகள் வழியாக பொருளற்ற வாழ்வைக் குறித்த முழுமையான புரிதலைத் தரும் முயற்சியைக் கொண்டவை. குறத்தி முடுக்கு இன்றைய வாசிப்பில் அதன் பொலிவை இழந்திருக்கலாம். ஆனால் நாளை மற்றுமொரு நாளே நாவல் இன்றும் அதன் புதுமையான வடிவில் சொல்லப்பட்ட விதத்தில் நகைமிளிரும் சித்தரிப்பு நேர்த்தியில் முன்னோடி நாவலாகவே தனித்து நிற்கிறது.

இலக்கியத்தின் விரிவான களத்தில் எழுதுபவர்கள் எல்லோரும் முன்னோடிகளாகவோ முதன்மையானவர்களாகவோ அமைவது சாத்தியமில்லை. அவ்வப்போது தோன்றி அபூர்வமான கதைகளையோ நாவல்களையோ கவிதைகளையோ பங்களித்து மறையும் மேதைகளும்கூட இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களோடும் அவர்களது பங்களிப்புகளோடு சேர்த்துப் பார்க்கும்போதுதான் ஒட்டுமொத்த இலக்கியமும் அதன் வரலாறும் முழுமையுறும்.

தமிழ் இலக்கியத்தில் நாகராஜனின் இடமும் அத்தகையதுதான்.

0

  

காருண்யத்தின் பிரதி – யூமா வாசுகியின் கவிதைகள்

 



நவீன தமிழ்க் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒவ்வொருவரிடத்திலும் தங்களுக்குப் பிடித்தமான கவிதைகளின் பட்டியலும் கவிஞர்களின் வரிசையும் கட்டாயம் இருக்கும். எனக்குப் பிடித்தக் கவிஞர்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் இருவர் யூமா வாசுகியும் பிரான்சிஸ் கிருபாவும்.

1980 களில் திருப்பூரில் யூமாவாசுகியைச் சந்தித்த நாளிலிருந்து அவரது கவிதைகளை நான் அறிவேன். அவரது நண்பர்கள் நால்வர் மாஸ் கிரியேஷன்ஸ் என்ற ஓவியக் கூடத்தை திருப்பூரில் நடத்தி வந்த காலம் அது. ஸ்கீரின் பிரிண்டிங் தொழில்நுட்பம் திருப்பூரில் கொடிகட்டிப் பறந்திருந்த சமயம். யூமா வாசுகி அப்போது கணையாழியில் உதவி ஆசிரியராக, ஓவியராக பணியாற்றியிருந்தார். அவ்வப்போது திருப்பூர் வருவதுண்டு. ‘குதிரை வீரன் பயணம்’ என்ற சிறுபத்திரிக்கையைத் தொடங்கியிருந்தார். அந்த இதழுக்கான சிறு விளம்பரம் கணையாழியில் வெளியானது. அதிலிருந்த திருப்பூர் முகவரியைத் தேடிக்கொண்டு ஒருமாலை வேளையில் சென்றேன். படிகளில் ஏறிய சமயம் மேலிருந்து கீழே வந்த சிறுவனிடம் விசாரித்தபோது ‘அண்ணெ ஒசக்க இருக்காங்க’ என்று உரக்கச் சொல்லிவிட்டு ஓடினான். படிகளில் ஏறி ‘ஒசக்க’ போனேன். மொட்டைமாடியில் வேயப்பட்ட கீற்றுக்கொட்டகையின் ஒரு மூலையில் நாற்காலியில் கால்களை மடித்துப்போட்டபடி தாடிவைத்த உருவம் ஒன்று யோசனையாக அமர்ந்திருந்தது. உயரமான இன்னொரு இளைஞர் உற்சாகமான சிரிப்புடன் வரவேற்றார். யூமா வாசுகியைச் சந்திக்கவேண்டும் என்று சொன்னதும் அந்த இளைஞர் ‘இதா உக்காந்துருக்காரு’ என்று தாடிக்காரரை கைகாட்டினார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது அவர் முகத்தில் சலனமில்லை. இன்னும் யோசனையில் ஆழ்ந்திருந்தார். இளைஞர் தன்னை ‘அறிவுச்செல்வன்’ என அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடத் தொடங்கினார். அன்றைய சந்திப்பில் நானும் யூமாவும் பேசிக்கொள்ளவே இல்லை.

ஆனால் அதைத் தொடர்ந்த சந்திப்புகளில் ‘குதிரை வீரன் பயணம்’ இதழைப் பற்றியும் நவீன கவிதைகளைப் பற்றியும் நிறைய பேசியிருக்கிறோம். அவரது முதல் தொகுதி ‘உனக்கும் உங்களுக்கும்’ திருப்பூரிலிருந்துதான் வெளியானது. அந்த காலகட்டத்தில் தமிழ் சிறுபத்திரிக்கைகளைச் சார்ந்த பலரும் ‘மாஸ் கிரியேஷன்ஸ்’ அறைகளில் வந்து தங்கியதுண்டு. இரண்டாவதாக ‘தோழமை இருள்’ கவிதைத் தொகுப்பும் திருப்பூரில் இருந்த நாட்களில்தான் வெளியானது.

இரண்டுத் தொகுப்புகளிலும் உள்ள கவிதைகள் பலவற்றையும் யூமாவின் அழகிய கையெழுத்தில் வாசித்திருக்கிறேன். ‘மாஸ் கிரியேஷன்ஸ்’ மூடப்பட்ட பிறகு அவர் சென்னை சென்றடைந்தார். அதன் பின்பு புதிய கவிதைகளுடன் முந்தைய இரண்டு தொகுப்புகளின் கவிதைகளையும் உள்ளடக்கி தமிழினி வெளியீடாக ‘இரவுகளின் நிழற்படம்’ தொகுப்பு வெளியானது. அதன் பிறகு காதல் கவிதைகள் மட்டும் அடங்கிய ‘அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ வெளிவந்தது. சில வருடங்களுக்குப் பின்பு நியூ செஞ்சரி வெளியீடாக ‘என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்’ தொகுப்பு வந்தது.

இன்று இவை அனைத்தும் அடங்கிய பெருந்தொகை நூலாக ‘கசங்கல் பிரதி’யைப் பார்க்கும்போது சின்னஞ்சிறிய பச்சை இலைகள் காற்றில் அசைய பூமியைக் கண்ட உற்சாகத்துடன் வெயிலின் மின்னி நின்ற செடியென நான் கண்ட அவரது கவிதை இன்று பெருமரமாய் வளர்ந்து நிற்பதை உணரமுடிகிறது.. வலுவான வேர்களுடன் கனத்த கிளைகளுடன் மணக்கும் மலர்களுடன் குளிர்ந்த நிழலுடன் எல்லோருக்குமான கனிகளுடனும் நிற்கும் அந்த மரத்தின் கீழே நின்று அண்ணாந்து பார்க்கிறேன் தோளுயரம் வளர்ந்துவிட்ட மகனைக் காணும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும்.

இன்று இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை மறுபடி வாசித்தபோது இரண்டு விஷயங்களைக் கவனிக்க முடிகிறது. ஒன்று, யூமாவின் கவிதை உலகில் அமைந்துள்ள நான்கு தளங்கள். இரண்டாவது, யூமா வாசுகி என்ற கவிஞன் அந்த நான்கு தளங்களில் வழியாக பயணித்து எங்ஙணம் மகாகவிஞனாகி இருக்கிறான் என்பது.

யூமா வாசுகியின் தொடக்க நிலைக் கவிதைகள் பசிக் கலைஞன் ஒருவனின் உலகத்தைச் சொல்பவையாக அமைந்துள்ளன. கவிதை எழுதத் தொடங்கும்போது பொதுவாக டைரி குறிப்புகளின் வழியாகவே தொடங்க நேரும். யூமாவின் ஆரம்பகாலக் கவிதைகளில் ஒரு சில அப்படியான சுய அனுபவக் குறிப்புகளாக அமைந்திருந்தபோதும் வெகு சீக்கிரத்திலேயே அந்நிலையைக் கடந்து பிற மனிதனின் பசியைப் பற்றிக் கவலைப்படாத யதார்த்த உலகுக்குள் வந்துவிடுகிறார்.

இரவின் குளம்புகள்

வெற்றுக்குடல் மிதிக்கும்.

குப்பைத்தொட்டி பச்சிளம் சிசுவைக்

குதறும் நாயாகிறது பசி.

0

அன்றைக்கு அம்மா தன் கணவனை மறுபடியும்

தெருவிலிருந்து மீட்டுக்கொண்டாள்

கண்டுப்பிடித்துக் கொடுத்த சகோதரி

துணிப்பூக்களை எடுத்துக்கொண்டாள்

குடி மயக்கிய தகப்பனின் பையிலிருந்து

சில்லறைக் காசுகளைத் திருடினான் தமையன்

அப்பா குடித்துக் காலியாக்கிய சாராயப் புட்டியைக்

கைப்பற்றினேன் நான்.

0

இந்த உலகம் சரியில்லை. இங்கு வாழும் மனிதர்கள் யாரும் ஒழுங்கில்லை என்று குறைசொல்லியபடி பசித்திருக்கும் ஒருவனுக்கு புகார் சொல்லவும் குறைசொல்லவும் நிறைய இருக்கும். இத்தன்மை சகமனிதர்களின் மீதான வெறுப்பாகவும் பொறாமையாகவும் சகிப்பின்மையாகவுமே சென்று முடியும். வாழ்வின் மேல் பிடிப்பில்லாது அவநம்பிக்கையுடன் அலையச் செய்யும். இதுவே இயல்பில் நடப்பது. இவ்வாறான உலகியல்தன்மைக்கு நேர்மாறாக அமைகிறது யூமாவின் கவிதை உலகம். அதனாலேயே அவர் எழுதவந்த காலத்தின் பிற கவிஞர்களிடமிருந்து அவர் தனித்துவம் மிக்கவராக உருவாக முடிந்திருக்கிறது. லௌகீகத் தளத்தில் தான் தோற்றுப் போனதாய் நினைத்து சுயவெறுப்போ அவநம்பிக்கையோ அடைந்து அவர் புலம்பவில்லை.

நான் வாளற்றவன் காப்பற்றவன்

உடையும் உதிரமும் அற்றவன் – விதியே

உன்னைப் புதைக்கவேண்டிய

இடத்தைத் தெரிவு செய்து

சமருக்குத் தயாராகி வா.

தன் பசிக்கு உணவு கிடைக்கவில்லை என்பதால் உலகத்தின் மேலும் சகமனிதர்கள் மீதும் அவர் வன்மம் கொள்ளவில்லை. மாறாக பெரும் கருணையும் பேரன்புமே அவரிடத்தில் ஊற்றெடுத்திருக்கிறது.

என் முதல் வார்த்தை முடிவதற்குள்

அதன் அவசியமின்மையை

உணர்த்திவிடுகிறீர்கள்

என் செயல்களிலிருந்து

உங்களுக்கேதுவான அர்த்தம் உரிப்பது

இலகுவிற்கூடிற்று உங்களுக்கு

உங்கள் பாவனை

எனக்குப் புரிவதுபோல

என்னுடையதும் ஆகுமென்ற

காத்திருப்பை நிராகரிப்பதில்

இறுதிவரை உங்களுக்கு வெற்றி

உங்கள்

உபாயங்களுக்குள் செலுத்தப்பட்டு

என் திசையழிந்து போயிற்று

என்னை ஒப்புக்கொடுக்கும் முன்பு

இதைச் சொல்ல அனுமதியுங்கள்

உங்களையும்

நான் நேசிக்கிறேன்.

0

யூமாவின் கவிதைகள் அமைந்துள்ள அடுத்த தளம் பெருநகரத்தின் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கவிஞனின் உலகம்.

பெருநகரின் பரபரப்பிற்கும் சுயநல அவசரத்திற்கும் நடுவில் கலைஞன் விரும்பி தேடியலையும் தனிமையின் உக்கிரத்தையும் பசி கொண்டுசேர்க்கும் தோழமையின் ஈரத்தையும் சொல்கின்றன இக் கவிதைகள்.

நண்பர்கள் சந்திக்கையில்

வணக்கம் சொல்லிக்கொள்வதற்கு பதிலாக

இது எத்தனையாவது நாள் பட்டினியென்று

பரஸ்பரம் கேட்கிறோம்.

…

அனைவரும் தேநீர் பருகுமளவிற்கு பணம் வைத்திருக்கிற

யாராவது ஒருவர் வந்தாகவேண்டியிருக்கிறது.

எல்லோருடைய கடைசிச் சில்லறைகளையும் திரட்டி

பசி தாங்கவியலாத அல்சர்கார நண்பனுக்கு

சிற்றுண்டி வாங்கிவர ஆளனுப்புகிறோம்.

ஒண்டிக்கொள்ள ஒரு சிறு பொந்து, டிக்கெட்டில்லா ரயில் பயணங்கள், பசியைத் தணிக்க புகையும் சிகரெட்டுகள் என துயரமும் துயரம் சார்ந்த கவிதைகளுமாய் நிறைந்துள்ளன.

‘பசியின் ஒவ்வொரு வருகையும்

முதல் முறை வீட்டிற்கு வரும் நெருங்கிய விருந்தினனைப்போல்

பூரண உபசரிப்பை எதிர்பார்க்கிறது.

வெறும் சிகரெட் புகையால்

மூழ்கடிக்கப்பட்ட அது

சேகரித்த குரோதம் முற்றி பழி தீர்க்க

குடலில் துளைகளிடும் என்றேனும் ஒரு நாள்.’

0

கொடும் பசியும் நகரத்து நெருக்கடிகள் தந்த துயரமும் சார்ந்த இரண்டு தளங்களில் அமைந்த கவிதைகளுக்கு முற்றிலும் வேறானவை மூன்றாவது வகை கவிதைகள்.

காதல் கவிதைகள் என இவற்றை எளிமையாக அடையாளப்படுத்தலாம். ஆனால் இவை வழக்கமான காதல் கவிதைகள் அல்ல.

பெண்ணின் அழகையும் காதலின் பித்தையும் பேருவகையுடன் கொண்டாடும் கவிதைகள். அபூர்வமான சொல் இணைவுகளுடனும் பீறிட்டெழும் உணர்வெழுச்சிகளுடனும் அமைந்த அபூர்வமான கவிதைகள்.

‘அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ என்ற தலைப்பே இக்கவிதைகளின் பெருமதிப்பைச் சொல்லும்.

நீ கல்லினுள் நீர்க்கிலுக்கம் – பாற்கடல் திரை அரவம்

விநோதாதீதம் – மேதமையுதயம்

அந்தரச் சுரப்பிகள் ஈன்ற பரிமளம் – மழைத்துளிப் பழம்

அழகு ஆர்ப்பரிக்கும் மந்தாரம்

என் துறையடைந்த சுடர்க்கூட்டம்

ஆகமத் தாமரைகள் ததும்பும் என் திருமுழுக்குத் தடாகம்

அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு.

0

தான் மயங்கித் தீராத காதல்

இரவுக் கருவாழைப் பட்டையுரித்து நுகரும்.

மனமேறியமர்ந்த கண்கள்

பஞ்சம் பிழைக்கப் பாய்கின்றன.

என் மூளைச் சாறருந்தி தெருவோடு போகிற

அய்யோ என் பெருந்திருப்பெண்ணே…

உன் வதம் திருப்பியொரு படையலிடு

போதமுற்றி உன் நிழலோடு

புரண்டு போகிறதென் சித்தம்

சுருதிக் கட்டைகளின் துன்

பருவங்கூம்பிக் கட்டவிழும் யௌவனத் துளியொன்று

சொட்டியதிர்கிற ஓசையில்

மிரண்டொடுங்குகின்றன ஊழியலைகள்

…

0

யூமா வாசுகியின் நான்காம் வகை கவிதைகள் கனிவும் குதூகலமும் தூய்மையும் துலங்கும் குழந்தைகளின் உலகிலிருந்து ஒளியுடனும் பரிபூரணத்துடனும் மிளிர்பவை. பொதுவாக பசியும் வேலையின்மையும் கைகூடாத காதலும் இளைஞர்களை கவிஞர்களை கொண்டுசேர்க்கும் இடம் இருண்டது. துயரமும் தோல்வியும் அவநம்பிக்கையும் ஒன்றிணைந்த அதிலிருந்து அவர்கள் அடைவது வெறுப்பையும் மூர்க்கத்தையுமே. ஆனால் யூமாவின் கவிதைகள் இதற்கு நேர்மாறாக எதிர்பாராத இடத்தைச் சென்று பேரும்போதுதான் கவிஞன் என்கிற இடத்திலிருந்து மாபெரும் கவிஞன் என்ற இடத்தை அடைகிறார்.

குழந்தைகளுக்கான சிறுவர்களுக்கான மாய உலகை கவிதையில் எழுதிக் காட்டியவர்கள் வெகு சிலரே. யூமா வாசுகி அவர்களுள் முதன்மையானவர்.

‘உடைந்த நடைவண்டி’யில் தடுமாறி நகரும் கவிஞனின் வாழ்வை பொருள்மிக்கதாயும் உரம்கொண்டதாயும் உருமாற்றித் தரும் தேவதைகளாக குழந்தைகள் அமைகின்றனர்.

பொருளியல் உலகில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாத ஒரு கலைஞனை பசியும் ஆதரவின்மையும் நிராகரிக்கும் ஒரு கவிஞனை உயிர்ப்புடனும் நம்பிக்கையுடனும் அடுத்த நாளுக்கு நகர்த்திச் செல்லும் அருமருந்தாக குழந்தைகளின் நட்பும் பிரியமும் வாய்க்கின்றது.

முதுகில் புத்தகப்பையைச் சுமக்கும் பள்ளிச் சிறுவர்களை குருவிக் குஞ்சுகளெனக் காண்பதில் தொடங்கி,

பேருந்து நெரிசலில் சில நிமிடங்களே மடிவந்தமரும் யாருடைய குழந்தையையோ சீராட்டும்போது பேருவகை கொள்வதாக விரிகிறது குழந்தைகளின் மேலான அவரது அளப்பரிய பிரியம்.

பக்கத்து வீட்டுச் சிறுமிக்காக முயலாக தன்னை உருமாற்றிக் கொள்ளும் கவிஞன் சாத்தனாக தன்னைக் காண்பதும் அவ்வாறான ஒரு குழந்தையின் முன்பே.

மதுக்கடையில் வேலை செய்யும் சிறுவர்களின் பையிலிருந்து உருளும் கோலிக் குண்டுகளையும், உணவகத்தில் உழைக்கும் சிறுவர்களின் சிறு ஓய்வு நேர மகிழ்ச்சியையும், பக்கத்து வீட்டில் வேலைபார்க்கும் சிறுமியின் உலகையும் யூமாவின் கவிதைகள் தாளாமையுடன் காண்கின்றன.

சிறுவர்களின் மீதான பேரன்பும் அவர்களின் உலகத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ளும் முனைப்புமே யூமாவின் தனித்துவம்.

0

இந்த நான்கு வகை கவிதைகளிலிருந்து யூமா வந்தடையும் ஐந்தாவது வகையே அவரை கவிஞன் என்ற நிலையிலிருந்து மகா கவிஞன் என்கிற உயரத்துக்கு நகர்த்துகிறது.

இத்தனை காலமும் இந்த வாழ்வு கவிஞனுக்கு அளித்தது பசியும் துயரமும் கசப்பையுமே. நியாயமாக அவன் கூடுதலான வன்மத்தையும் கசப்பையுமே சென்றடைந்திருக்க வேண்டும். மாறாக கவிஞனுக்குள் இயல்பாக சுரக்கும் காருண்யம் மேலும் தீவிரத்துடன் ஊற்றெடுக்கிறது. அன்பும் கருணையும் பொங்கி நிறைகிறது. கசப்பைத் தரும் வாழ்வுக்கு களிப்பைத் தரவே விளைகிறார்.

உலகின் அனைத்து மதங்களும் போதித்து நிற்பது கருணையை, சக மனிதர்களின் மீதான அன்பை. யோகிகளும் ஞானிகளும் காலம்காலமாக உபதேசித்து வலியுறுத்துவது உயிர்களின் மீதான கருணையை மட்டுமே. யூமா வாசுகியின் கவிதைகள் கொண்டிருப்பதும் அவ்வாறான கருணையின் ஈரத்தையே. சக மனிதனின் மேலான அளப்பரிய நிபந்தனையற்ற அன்பின் நிழலையே.

‘நேசமெனும் ஒன்றைத் தவிர வேற்றுமொழி அறியாதவன்’ என்று அவரது கவிமனம் கனிகிறது.

‘உலகில் உள்ள எல்லோரையும் அணைத்து மகிழ உலகளாவிய கரங்கள் வேண்டும் எனக்கு’ என்று விசாலமான உள்ளம் விரும்புகிறது.

அவரது கவிதையிலகின் உச்சமாக அமையும் இக்கவிதையே அவரை மகாகவிஞனாக்குகிறது.

உலகளாவிய கரங்கள் வேண்டும் எனக்கு

எல்லோரையும் அணைத்து மகிழ

எல்லாப் பறவைகளின் சிறகுகளிலும்

என் கண்கள் இருக்கவேண்டும் அனைவரையும்

ஒருசேரக் காண்பதற்கு

போகுமிடமெல்லாம் காற்றென்

குரலையும் கொண்டுபோனால்

எல்லோருக்காகவும் பாடுவேன்

உலகத்து மண் முழுதும்

என் ஊன் கலந்து உரமாகி

பயிர் வளர்ந்து மரம் வளர்ந்து மலருண்டாகி

உங்களுக்கென்றாக வேண்டும்

உங்கள் கவலை மீன்களையெல்லாம் நீந்தவிட

பெருங்கடலாய் என் மனதிருக்கவேண்டும்

வளைந்த முதுகென்றாலும்

வலுவானதாய் வேண்டும்

உஉங்கள் சுமைகளைத் தாங்க

உங்கள் பாவங்களுக்கான

ஒட்டுமொத்தச் சம்பளம் நானே பெறவேண்டும்

உங்கள் கதவுகளைத் தட்டும்

தோல்விகளுக்கும் துயரங்களுக்கும்

என்னைச் சுட்டிவிட்டு

விடுபட்ட மான்கள்போல நீங்கள்

துள்ளியோட வேண்டும்.

அதற்கு நிகராய் என் நெஞ்சில்

மலைத்தொடர்போல திடம் வளரவேண்டும்

விளக்காகக் குடைந்த என் கபாலத்தில்

உதிரந்தோய்ந்த நாளங்களைத்

திரியாக்கிச் சுடாராகி உங்கள்

வழிக்கு விளக்காகும்

பேறு பெறவேண்டும்.

 

‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று உயிர்களின் மேல் வள்ளலார் காட்டிய பரிவையும் ‘உன் துக்கத்தையெல்லாம் என்னிடம்இறக்கி வையுங்கள். உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று கர்த்தர் அளித்த ஆறுதலையும் ஒருசேர தருபவை யூமாவின் கவிதைகள். அதுவே அவரை மகாகவிஞனாக்குகிறது.

0

இத்தொகுப்பின் தலைப்பு ‘கசங்கல் பிரதி’ என்று இருக்கலாம். பிரான்சிஸ் கிருபாவுக்காக எழுதிய கவிதையின் தலைப்பு இது. ஆனால் இக்கவிதைகளிலுள்ள பரிவும் கருணையும் நிகரற்றது. கசடற்றது. எதன் பொருட்டும் வற்றாதது.

உண்மையில் இது ‘கசங்கல் பிரதி’ அல்ல. ‘காருண்யத்தின் பிரதி’.

0

( யூமா வாசுகிக்கு மா.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டபோது அவருடைய கவிதைகள் குறித்து ஆற்றிய உரை )

 

 

 

Monday, 11 November 2024

க.சீ.சிவகுமார் - காற்றாடைக் கலைஞன்


எப்படி, எப்போதென்று சரியாக நினைவில்லை. 1997ஆம் ஆண்டின் பிற்பகுதி. அப்போது நான் ஈரோட்டில் இருந்தேன். ஒருநாள் பின்மதியத்தில், பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள என் அலுவலகத்துக்கு வந்தார். அவரை முன்பின் எனக்குத் தெரியாது. அநேகமாக என்.ஸ்ரீராம் சொல்லியிருக்கவேண்டும். அலுவலகத்தைப் பொறுத்தவரை நான் ஒரு அலுவலர். என் இலக்கிய முகம் யாருக்கும் தெரியாது. காட்டிக்கொள்வதுமில்லை.

நெடிய, மெலிந்த உடல்வாகு. அம்மைத் தளும்புகள் துலக்கமாகத் தெரியும் முகம். சிறிதுநேரம்கூட முகத்திலிருந்து சிரிப்பை விலக்கி வைக்கவோ, மறைக்கவோ முடியாத தன்மை. தேடி வந்த என்னைக் கண்டுகொண்டதும் அந்த முகத்தில் அப்படியொரு மலர்ச்சி. பலநாள் பழகியதுபோலொரு மகிழ்ச்சி. அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்தியா டுடேயில் முதல் பரிசு பெற்ற அவரது கதையை நான் வாசித்திருந்தேன். பேச்சைவிட சிரிப்புதான் இயல்பாகவே முந்திக்கொண்டு நின்றது. அவரது கண்கள் அலைபாய்ந்தன. அலுவலகத்தில் உள்ள எல்லோரையும் தொட்டுப் பார்த்தன. குறிப்பாக பெண்களை. தேநீருக்காகக் கீழே அழைத்துச் சென்றேன். பேருந்து ஒன்றில் தற்காலிக நடத்துனர் பணி என்று சொன்னார். யாரேனும் விடுப்பில் செல்லும்போது அழைப்பார்கள் என்றும். அந்தச் சந்திப்பின்போது இலக்கியம் குறித்து பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. அதைப் பற்றி அவர் அதிக ஆர்வமும் காட்டிக்கொள்ளவில்லை. காண்பன, கேட்பன அனைத்துமே அவருக்கு வேடிக்கைதான், கொண்டாட்டம்தான். எல்லாவற்றையுமே ரசிக்கும் தன்மை.

தொடர்ந்து அவ்வப்போது தனது பணி முடிந்த வேளைகளில் அலுவலகம் வந்தார். வந்தவுடனே அவரது கண்கள் பரபரப்புடன் பெண்களைத் தேடும். யாரேனும் ஒருவர் கண்ணில் தட்டுப்படாதபோது வெகு இயல்பாக ‘அந்த அம்மிணியைக் காணோம்’ என்று சிரித்தபடியே கேட்பார். ஒருமுறை, அவர் என் எதிரில் இருக்கும்போது சக பெண் அலுவலர் ஒருவர் என்னிடம் ஏதோ சந்தேகம் கேட்க வந்தபோது நான் ‘அப்பறம் பாத்துக்கலாம்’ என்று அனுப்பிவிட்டேன். க.சீ ‘இப்பவே பாத்துருக்கலாமே பாஸ்’ என்று சிரித்தார்.

சிவகுமாரின் இயல்பு அது. அவரது வரி ஒன்றுண்டு ‘பெண்கள் என்றாலே அழகுதான். அதென்ன அழகிய பெண் என்று சொல்லவேண்டியிருக்கிறது?’

0

தமிழினி பதிப்பகம் தொடங்கப்பட்டு புதிய எழுத்தாளர்களின் நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்த காலகட்டம் அது. வசந்தகுமாருக்கு க.சீயின் கதைகள் பிடித்திருந்தன. இரண்டு காரணங்கள். முதலாவது, பழந்தமிழ் கவிதை வரிகளும் பகடியும் இணைந்து உருவான ஒரு மொழி. இரண்டாவது, சிறுபத்திரிகைகளுக்கேயுரிய இறுக்கமான மொழியும் பாவனையும் இல்லாத இயல்பான வெளிப்படையான கூறுமுறை. க.சீ யின் கதைளை ஒவ்வொன்றாக சொல்லி வியந்திருக்கிறார். அவரது கதை வரிகள் பலவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். ‘மின்னலெனவோ, வானவில்லெனவோ வந்துபோகாது அவளில் நிரந்தர வானமாய்த் தங்கிவிட்ட யௌவனம் – துர்க்கனவுகளின் பெருங்கூடாரம். நள்ளெண் யாமங்களில் கந்தர்வரும், கிங்கரரும் கனவுகளில் ஏங்கிய சஞ்சலம். பூக்களுடன் அவள் பகிர்ந்த வேதனையை வண்டுகள் ரீங்கரித்து அலைந்தன. வீண்மீன்களை எண்ணிக்கையிடத் தலைப்பட்டாள். உடுக்குழுமத்தில் தோற்றப்பிறழ்ச்சி. தோன்றாதிருக்கும்படி பகல் ஒரு வினாடியாய்க் குறுகிவிட்டிருந்தது அவளுக்கு. அவளைத் தொட்டால் நேர்கிற அனுபவம் மரணமோ என இளைஞர்கள் பயந்தனர். தேவதை ஏறிய பெண். மங்காத் தங்கம் கொண்டு தீர்த்த வீணை. விரைவு கொண்ட எந்தத் தந்தியிலும் ஒரே சந்தம். யௌவனம். மாறாத சௌந்தர்யம். அதி ஆழத்தின் இழைகளென வடிவுகொண்ட கூந்தற்தொகையில் ஒரு நரை கண்டுவிடாதா என ஏங்கினாள்.’ (தீண்டாநாயகி)

தமிழ் புனைவுலகில் இப்படியொரு எழுத்தாளன் வருவான் என்று யோசித்ததேயில்லை என்று வியந்ததுண்டு. ‘கன்னிவாடி’ தொகுப்பு உருவான காலத்தில் க.சீ ராயப்பேட்டை அலுவலகத்தில்தான் குடியிருந்தார் என்று சொல்லவேண்டும். தேநீரும் புகையும் சிரிப்புமாகக் களைகட்டியிருந்தது தமிழினி அலுவலகம்.

நாவலோ சிறுகதையோ வசந்தகுமாருக்கு அதற்குரிய களத்தை, மனிதர்களை பார்க்கவேண்டும். கன்னிவாடிக்கும் சென்றார், யூமா வாசுகியுடன். இரண்டு நாட்கள் தங்கி சிவகுமாரின் கதைக் களங்களை, மனிதர்களைப் பார்த்து ரசித்தார். நிறைய படங்கள் எடுக்கப்பட்டன. யூமா வாசுகி ஓவியங்களை வரைந்தார். ஒரு சிறுகதைத் தொகுப்பு, இவ்வாறு படங்களுடனும் ஓவியங்களுடனும் தயாரானது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. க.சீ அப்போது அறிமுக எழுத்தாளர். அவரது முதல் தொகுப்பு. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரும் தமிழினியில் தொகுப்பு வெளியிட ஆசைப்பட்டிருந்தபோது, க.சீக்கு வசந்தகுமார் அப்படியொரு பெருமையைச் சேர்த்தார். அவர்மீது பெரிய நம்பிக்கை இருந்தது.

தொகுப்பு தயாரானதும் அதை அவரது கிராமத்திலேயே வெளியிடுவது என்று முடிவானது. அதுவொரு எளிய கிராமம். எந்த வசதிகளும் கிடையாது. ஊர் மந்தையில் புத்தக வெளியீடு நடந்தது. பதினைந்துக்கும் மேற்பட்ட நண்பர்கள். என்ன நடக்கிறது என்பதே அங்கிருந்த பலருக்கும் புரியவில்லை. கூட்டம் முடிவதற்கு முன்பே கடைசி பஸ் போய்விட்டது. எங்கே என்றாலும் காலையில்தான் போகமுடியும். விடிய விடிய அதே ஊர் மந்தையில் அரசமரத்தடியில் பேசிக் களித்தனர் நண்பர்கள். அப்படியொரு புத்தக வெளியீடு நடக்குமா என்பது சந்தேகம்தான்.

0

எழுத்தாளனுக்கு கன்னிவாடியில் என்ன வேலை? க.சீ சென்னைக்குப் போனார். அவரது இயல்புக்கு நண்பர்கள் சுலபமாக வாய்த்தனர். பாஸ்கர் சக்தி ஏற்கெனவே விகடனில் இருந்தார். க.சீயின் இயல்புக்கு சென்னை மிகவும் பிடித்திருந்தது. கவிஞர்கள் எழுத்தாளர்களின் கூடுகைகள், இரவுக் கொண்டாட்டங்கள் அவரை வசீகரித்தன. அவ்வப்போது கதைகளும் எழுதினார். ஒரு சில பத்திரிகைகளில் வேலையும் பார்த்தார்.

0

சென்னையில் ஒரு நெருக்கமான நண்பர். முப்பதாண்டு கால நட்பு. அப்போது அவர் சென்னையில் தனியாக வசித்தார். அவரது வீட்டுக்கு யாரும் எப்போது வேண்டுமானாலும் போகலாம். பூட்டியிருந்தாலும் கவலையில்லை. சிரமமில்லாமல் சாவியை எடுத்துத் திறந்து கொள்ளலாம். ஓய்வெடுக்கலாம். பிறகு முகம் கழுவியோ குளித்தோ புத்துணர்வுடன் ஒப்பனை செய்துகொண்டு வெளியேறலாம். இரவு நேரங்களில் வேறெங்கும் போக வழியில்லை என்றால் அங்கேயே தங்கலாம். வீட்டின் சமையலறையில் நல்ல காப்பி பொடியும் பாலும்கூட இருக்கும்.

அந்த நண்பரும் க.சீக்கு பழக்கமானார். அடிக்கடி வந்து போகத் தொடங்கினார். ஒரு நாள் இரவில் தங்கியிருக்கிறார். விடிந்ததும் குளித்துவிட்டு புறப்படும்போது தனது சட்டையை எடுக்கிறார். அருகில், ஹேங்கரில் இன்னொரு புதிய சட்டை. அவருக்குப் பிடித்திருக்கிறது. ‘இந்த சட்டை எனக்கு நல்லா இருக்குமில்ல’ என்று சொல்லிக்கொண்டே அணிகிறார். கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறார். ‘பாஸ், நல்லா இருக்கா?’ என்று நண்பரிடம் கேட்டுச் சிரிக்கிறார். நண்பருக்கு இதுவொன்றும் புதிய விஷயமில்லை. அறை வந்து தங்கும் பலரும் இதுபோன்று அவருக்குச் சொந்தமான பல பொருட்களை உரிமையோடு எடுத்துச் சென்றதுண்டு. அவரும் சிரித்தபடியே ‘நல்லா இருக்கு’ என்று சொன்னதும் விடைபெற்றுச் சென்றுவிட்டார். அந்த சட்டையை முதல்நாள்தான் நண்பர் வாங்கி வந்திருந்தார். ஒரு முறைகூட போட்டிருக்கவில்லை.

க.சீக்கு எல்லாமே பொதுவுடமைதான். தனிமனிதனுக்கென்று இந்த உலகில் எதுவும் சொந்தமில்லை.

0

சென்னை மல்லிகா விடுதியில் நானும் மோகனும் தங்கியிருந்தோம். திரைப்படச் சங்கங்களின் கூட்டமைப்புக்கான தேர்தலில் வாக்களிப்பதுதான் பணி. மதியமே வேலை முடிந்துவிட்டது. மாலையில் வசந்தகுமார், யூமா வாசுகி உள்ளிட்ட சில நண்பர்கள் அறையில் கூடினார்கள். பேச்சும் சிரிப்புமாய் அறை கலகலத்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு க.சீ வந்து சேர்ந்தார். தோற்றம் பற்றியோ உடை குறித்தோ பெரிய கவனமில்லாமல் குதூகலமான சிரிப்போடு உள்ளே வந்தவரை அறையின் சௌந்தர்ய கோலம் மேலும் உற்சாகப்படுத்தியது.

நாற்காலியின் மீது கிடந்த துவாலையைக் கட்டிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தார். சோப்பு மணக்க தலைதுவட்டிக்கொண்டு வந்தார். அலங்கார மேசையின் மீதிருந்த நண்பரின் வாசனை திரவியத்தை ஆசையுடன் பீச்சிக்கொண்டார். எப்போதும்போல முகம் முழுக்கச் சிரிப்பு. உதட்டில் எளிய பரவசம்.

“இதுமாதிரி வாரத்துக்கு ஒருக்கா அமைஞ்சிட்டா சொர்க்கந்தான் கவிஞரே” ஆசையுடன் தம்ளரை எடுத்து கொஞ்சுவதுபோல முத்தமிட்டார்.

அடுக்கடுக்காக கதைகள் பொங்கின. பத்திரிகை அலுவலகங்களில், சினிமா கதை விவாதங்களில், பிரபலமான நடிகரின் வீட்டில், விடுதியொன்றின் மதுக்கூடத்தில் நடந்தவைகளை அவருக்கேயுரிய பாணியில் விவரித்தார். அச்சகம் ஒன்றில் காண நேர்ந்த அழகியொருத்தியுடனான தற்காலிக காதல் தருணங்களை கண்சிமிட்டியபடியே உவகையுடன் நினைவுகூர்ந்தார். அம்மாவைப் பார்த்து நாளாயிற்று, போயிட்டு வரணும் என்று இரண்டொரு முறை சொன்னார்.

நானும் மோகனும் அன்றிரவே ஊர் திரும்பும் திட்டத்தில் இருந்தோம். அறையைக் காலி செய்யவேண்டும்.

“பாசு… இன்னிக்கு ராத்திரி இங்க தங்கிக்கலாமா?”

“காலையில எடுத்த ரூம்தான். இருக்கலாம்.”

“ஒண்ணில்ல பாசு. காலையில ஒரு கதை எழுதித் தரணும். இன்னும் ஒரு வரி எழுதல. ராத்திரி இங்க தங்கி எழுதிர்லான்னு பாக்கறேன்.”

இரவு பத்துமணிக்கு கீழே வந்து அவருக்கு விடை கொடுத்தபோது அருகில் இருந்த கடையிலிருந்து ஒரு குயர் தாளையும் வாங்கிக்கொண்டார்.

“எழுதிக் குடுத்தா ரெண்டாயிரம் கெடைக்குமில்ல சிவா?”

“ஆமா பாசு. ஆனா இந்தக் கதைக்கு பணத்தை அட்வான்ஸா வாங்கிட்டேன். செலவுமாயிருச்சு. இத நாளைக்கு குடுத்துட்டு அடுத்த கதைக்கு அட்வான்ஸ் வாங்கிர்லாம் பாசு.”

ஒரு பாக்கெட் சிகரெட், தீப்பெட்டி, வெள்ளைத்தாள் சகிதம் அறைக்கு அவர் திரும்பிப் போனார்.

சில நாட்களுக்குப் பிறகு சந்தித்தபோது அந்தக் கதையைப் பற்றி விசாரித்தபோது பதில் சொல்லாமல் சிகரெட்டைப் பற்றவைத்தபடி சிரித்தார். அன்றிரவும் அவர் அந்தக் கதையை எழுதவில்லை.

0

சென்னை அவருக்குப் பிடித்திருந்தது என்பதைவிட சென்னை அவரைப் பிடித்திருந்தது. நண்பர்கள், கொண்டாட்டம் என்று சில வருடங்கள் கழிந்தன. உருப்படியாக எதையும் எழுதவில்லை. சில தொடர்கள், ஒரு தொடர்கதை என்று சமாளித்தார். செலவுக்கு காசு கிடைத்தது. வேண்டும்போது ஒரு கதையை எழுதிக் கொடுத்தார். தேவைக்கு மட்டுமே எழுதினார்.

எழுதுவது அவருக்கு இயல்பாக வாய்த்திருந்தது. சிரமமில்லாமல் எழுதிவிட முடியும். தனிச்சிறப்பு மிக்க மொழியும் தமிழில் அரிதாகவே காணக் கிடைக்கும் பகடியும் அவருக்கு வாய்த்திருந்தன. தனி முத்திரைக்காக அவர் மெனக்கெட வேண்டியிருக்கவில்லை.

‘பத்தரை மணி பஸ்ஸூக்கு வீடு திரும்பிவிட உத்தேசம். பெருவிரல் ரேகை மடிப்பில் தாலியைக் கோர்த்துக்கொண்டு நீதிகேட்க மனைவி நல்லாள் யாருக்கும் இன்னும் நான் வாழ்க்கைப் படவில்லை.’ (மீதியுள்ள ராத்திரி)

‘ஜன்னலோர இருக்கையிலோ, நான் பயணிக்க ஏறும் பஸ்ஸிலோ அவள் காணக் கிடைப்பாள். வர்ணம் மங்கியதோர் ஓவியம்போல. ஆராதனை மறுக்கப்பட் மூளிச்சிற்பம்போல. கண்கள் ஒளிமங்கி இடுங்கியிருக்கும். தூக்கம் துறந்து விண்மீன்களில் ராகவனைத் தேடுகிறாளோ என்னவோ? சொல்லொணா வேதனைகள் என்னுள் வந்துபோகும். என்ன ஒரு வசியம் அவளிடம். கரந்துறை படலத்தில் வாழ்கிற மகாராணியைப் போன்ற வசீகரம். தாராபுரத்திற்கும் கரந்துறைப் படலத்திற்கும் சம்பந்தமுண்டென்று பாரதம் பகர்கிறது.’ (வெளிச்ச நர்த்தனம்)

‘காலத்தாற் குன்றாது கருவறை அடைகாத்த வெப்பம்’, ‘குழநதையாயிருந்த காலம் கோதி விளையாடிய நெஞ்சை குத்தி அழக் கொடுப்பினையின்றி ஊரில் மருகியிருந்தாள் அம்மா.’ (சொல் பொருள் பின் வரும்)

‘ஆடு கறக்கவும் பூனை நக்கவுமான வாழ்க்கையில் வாயையும் வயிற்றையும் கட்டிச் சேர்த்த சேமிப்புகளும் பேதாமல் கடைசியில் வேலமரங்களைச் சாய்த்துத்தான் மகளுக்கு மாங்கல்யம் கழுத்தேற்றினார்.’ (நினைவுதிர் கால மரங்கள்)

‘பொளிதலின்போது நான் கிட்டே இருந்தால் எனது ‘இனிஷியலை’ பொறிக்கச் செய்வேன். பாலர் காலக் கல்வெட்டு’ (கால வகை)

‘பாவு பிணைத்தலினூடே அவள் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறாள். அவளது பூங்கனா படுத்திருக்கிறது. ‘கொங்கு மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. கண்ணே… உன்னை கவர்மென்ட் ஸ்கூலிலாவது சேர்க்கமாட்டேனா?’ (காலம் உடன் வரும்)

ஆனால், தன் எழுத்தின் வலிமையை தனிச் சிறப்பை அவர் உணரவில்லை. அல்லது உணர்ந்தும்கூட அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆகவேதான், அதை வெறும் தேவைக்கான கருவியாக கையாண்டார்.

உண்மையில் அவரது இயல்புதான் அது. எதையுமே கொண்டாட்டமாக, அந்த நொடிக்கான அம்சமாகக் காணும் பார்வையின் வெளிப்பாடு. எதையும் ஆழமாக அணுகும் போக்குக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்தார். வாழ்க்கை ஒரு கொண்டாட்டம், ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்கவேண்டும் என்ற மனநிலை. வெகு எளிமையான ஒரு மனிதனின் போக்கு இதுதான். இன்னும் கூர்ந்து பார்க்கப் போனால் ஒரு சித்தனின் மனநிலை. அவரது பால்ய காலமும் விடலைப் பருவமும் கிராமத்தில் கழிந்தவை. வானம் பார்த்த பூமி. நிரந்தரமற்ற விவசாயம். முயற்சிகள்தான் உண்டே ஒழிய திருவினைகள் வாய்த்ததேயில்லை. பெற்றோர், உறவினர், அண்டை அயலாரின் கைக்கும் வாய்க்கும் எட்டாத வாழ்க்கை அவருக்கு உவப்பில்லாத பல அனுபவங்களைத் தந்திருக்கிறது. அண்டாமாநதியைப் போலவே எக்காலத்திலும் அந்த வாழ்க்கையில் நீர்வரத்து இருந்ததில்லை. அன்றாடத்தின் துயரை, கசப்பை பேணிக்கொண்டிருந்தால் அது காலைச் சுற்றும் நாயைப் போல நம்மிடமிருந்து விலகிப் போகாது என்பதால் அவற்றை அவர் அண்டவிடாது விரட்டிக்கொண்டே இருந்தார். அதற்கு கருவியாக அவர் கையில் இருந்தவை பகடியையும் சுயஎள்ளலும்.

எழுத்து அந்த மண்ணிலிருந்து வெளியேற உதவியது. மீட்சியின் பாதையாக அல்லாமல் தப்பித்தலின் அவசர வழியாகவே அதைக் கையாண்டதுதான் துரதிர்ஷ்டம். எழுத்தின் வழியாக எதையும் சாதிக்கவோ அடையவோ அவர் உத்தேசிக்கவேயில்லை. அன்றாடங்களின் தேவைக்கான ஒரு கருவியாகவே எழுத்தை அவர் பயன்படுத்தினார்.

நண்பர்கள் பலரும் அவருக்கு உதவினார்கள். அவரது சிறப்பை உணர்ந்தவர்கள் இப்படி வீணடிக்காதே என்று ஆலோசனை கொடுத்தார்கள். ஆனால், அவர் தன் இயல்புக்கு ஏற்பவே வாழ்ந்தார். எழுதினார்.

முதல் தொகுப்பான ‘கன்னிவாடி’யில் உள்ள பல கதைகளும் அழுத்தமானவை. உத்தரவாதமற்ற விவசாய வாழ்வின் அவலங்களைச் சொல்லின ‘நாத்து’, ‘காவு’, ‘குரங்குப் பணியாரம்’, ‘அண்டமா நதிக்கரையில் ஒரு வீடு’ போன்ற கதைகள். வேலையற்ற இளைஞனின் பாடுகளைச் சொன்னவை ‘ஊதல் இசைபட வாழ்தல்’, ‘மீதியுள்ள ராத்திரி’ உள்ளிட்ட கதைகள். ‘மேகங்கள் தீர்ப்பதில்லை’, ‘சண்முக சித்தாறு’ போன்ற கதைகளின் வரியாக அபாரமான மனிதர்களை அவர் காட்டியிருக்கிறார். ‘வெளிச்ச நர்த்தனம்’, ‘பெருந்திணையும் ஓர் அணையும்’ போன்ற காதல் கதைகளும் உண்டு.

க.சீ இன்னொரு வகைக் கதைகளையும் எழுதிப் பார்த்திருக்கிறார். உரையாடல்கள் இல்லாத, நுட்பங்கள் கூடிய சித்தரிப்புடன் தீவிரமான மொழியில் கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டவை. ‘நிணநீர்ச்சுவடி’, ‘காற்றின் கானகம்’, ‘தீண்டாநாயகி’ ஆகியன.

அவர் நாவல் எழுத முயன்றாரா என்பது தெரியவில்லை. ஆனால், தொடர் கதைகள் எழுதினார். ‘ஆதி மங்கலத்து விசேஷங்கள்’ ஜூனியர் விகடனில் வெளியானது. சுவாரஸ்யமான குணச்சித்திரங்களைக் கொண்ட ‘குண சித்தர்கள்’ தொகுப்பில் பிரமாதமான பல கதைகள் உண்டு. இந்தக் கதைமாந்தர்களை, கண்டும் கேட்டும் அறிந்த சம்பவங்களை அவர் இப்படி நட்சத்திரங்களைப்போல இறைத்துவிட்டார். அவை கண்ணைப் பறிக்கின்றன, மினுமினுக்கின்றன. ஒளிவிடுகின்றன. அண்ணாந்து பார்க்கும்போது வசீகரிக்கின்றன. ஆனால், அவை நட்சத்திரங்களாக மட்டுமே நின்றுவிடுகின்றன அல்லது உதிர்ந்துவிடுகின்றன.

நிலவை எழுத முடிந்த ஒரு கலைஞன் நட்சத்திரங்களில் மட்டுமே நிறைவடைந்துவிடுவதாய் எப்படிப் புரிந்துகொள்வது?

0

 

 


விவேக் ஷான்பாக்கின் ‘ஒரு பக்கம் கடல்’

    0 இன்று தமிழில் பரவலாக அறியப்படும் கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாக்.   2017ஆம் ஆண்டு வெளியான ‘காச்சர் கோச்சர்’ நாவலின் வழியாக கவனத...