நவீன தமிழ்க் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒவ்வொருவரிடத்திலும் தங்களுக்குப்
பிடித்தமான கவிதைகளின் பட்டியலும் கவிஞர்களின் வரிசையும் கட்டாயம் இருக்கும். எனக்குப்
பிடித்தக் கவிஞர்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் இருவர் யூமா வாசுகியும் பிரான்சிஸ்
கிருபாவும்.
1980 களில் திருப்பூரில் யூமாவாசுகியைச் சந்தித்த நாளிலிருந்து அவரது கவிதைகளை
நான் அறிவேன். அவரது நண்பர்கள் நால்வர் மாஸ் கிரியேஷன்ஸ் என்ற ஓவியக் கூடத்தை திருப்பூரில்
நடத்தி வந்த காலம் அது. ஸ்கீரின் பிரிண்டிங் தொழில்நுட்பம் திருப்பூரில் கொடிகட்டிப்
பறந்திருந்த சமயம். யூமா வாசுகி அப்போது கணையாழியில் உதவி ஆசிரியராக, ஓவியராக பணியாற்றியிருந்தார்.
அவ்வப்போது திருப்பூர் வருவதுண்டு. ‘குதிரை வீரன் பயணம்’ என்ற சிறுபத்திரிக்கையைத்
தொடங்கியிருந்தார். அந்த இதழுக்கான சிறு விளம்பரம் கணையாழியில் வெளியானது. அதிலிருந்த
திருப்பூர் முகவரியைத் தேடிக்கொண்டு ஒருமாலை வேளையில் சென்றேன். படிகளில் ஏறிய சமயம்
மேலிருந்து கீழே வந்த சிறுவனிடம் விசாரித்தபோது ‘அண்ணெ ஒசக்க இருக்காங்க’ என்று உரக்கச்
சொல்லிவிட்டு ஓடினான். படிகளில் ஏறி ‘ஒசக்க’ போனேன். மொட்டைமாடியில் வேயப்பட்ட கீற்றுக்கொட்டகையின்
ஒரு மூலையில் நாற்காலியில் கால்களை மடித்துப்போட்டபடி தாடிவைத்த உருவம் ஒன்று யோசனையாக
அமர்ந்திருந்தது. உயரமான இன்னொரு இளைஞர் உற்சாகமான சிரிப்புடன் வரவேற்றார். யூமா வாசுகியைச்
சந்திக்கவேண்டும் என்று சொன்னதும் அந்த இளைஞர் ‘இதா உக்காந்துருக்காரு’ என்று தாடிக்காரரை
கைகாட்டினார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது அவர் முகத்தில் சலனமில்லை. இன்னும்
யோசனையில் ஆழ்ந்திருந்தார். இளைஞர் தன்னை ‘அறிவுச்செல்வன்’ என அறிமுகப்படுத்திக்கொண்டு
உரையாடத் தொடங்கினார். அன்றைய சந்திப்பில் நானும் யூமாவும் பேசிக்கொள்ளவே இல்லை.
ஆனால் அதைத் தொடர்ந்த சந்திப்புகளில் ‘குதிரை வீரன் பயணம்’ இதழைப் பற்றியும்
நவீன கவிதைகளைப் பற்றியும் நிறைய பேசியிருக்கிறோம். அவரது முதல் தொகுதி ‘உனக்கும் உங்களுக்கும்’
திருப்பூரிலிருந்துதான் வெளியானது. அந்த காலகட்டத்தில் தமிழ் சிறுபத்திரிக்கைகளைச்
சார்ந்த பலரும் ‘மாஸ் கிரியேஷன்ஸ்’ அறைகளில் வந்து தங்கியதுண்டு. இரண்டாவதாக ‘தோழமை
இருள்’ கவிதைத் தொகுப்பும் திருப்பூரில் இருந்த நாட்களில்தான் வெளியானது.
இரண்டுத் தொகுப்புகளிலும் உள்ள கவிதைகள் பலவற்றையும் யூமாவின் அழகிய கையெழுத்தில்
வாசித்திருக்கிறேன். ‘மாஸ் கிரியேஷன்ஸ்’ மூடப்பட்ட பிறகு அவர் சென்னை சென்றடைந்தார்.
அதன் பின்பு புதிய கவிதைகளுடன் முந்தைய இரண்டு தொகுப்புகளின் கவிதைகளையும் உள்ளடக்கி
தமிழினி வெளியீடாக ‘இரவுகளின் நிழற்படம்’ தொகுப்பு வெளியானது. அதன் பிறகு காதல் கவிதைகள்
மட்டும் அடங்கிய ‘அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ வெளிவந்தது. சில வருடங்களுக்குப்
பின்பு நியூ செஞ்சரி வெளியீடாக ‘என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்’ தொகுப்பு
வந்தது.
இன்று இவை அனைத்தும் அடங்கிய பெருந்தொகை நூலாக ‘கசங்கல் பிரதி’யைப் பார்க்கும்போது
சின்னஞ்சிறிய பச்சை இலைகள் காற்றில் அசைய பூமியைக் கண்ட உற்சாகத்துடன் வெயிலின் மின்னி
நின்ற செடியென நான் கண்ட அவரது கவிதை இன்று பெருமரமாய் வளர்ந்து நிற்பதை உணரமுடிகிறது..
வலுவான வேர்களுடன் கனத்த கிளைகளுடன் மணக்கும் மலர்களுடன் குளிர்ந்த நிழலுடன் எல்லோருக்குமான
கனிகளுடனும் நிற்கும் அந்த மரத்தின் கீழே நின்று அண்ணாந்து பார்க்கிறேன் தோளுயரம் வளர்ந்துவிட்ட
மகனைக் காணும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும்.
இன்று இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை மறுபடி வாசித்தபோது இரண்டு விஷயங்களைக்
கவனிக்க முடிகிறது. ஒன்று, யூமாவின் கவிதை உலகில் அமைந்துள்ள நான்கு தளங்கள். இரண்டாவது,
யூமா வாசுகி என்ற கவிஞன் அந்த நான்கு தளங்களில் வழியாக பயணித்து எங்ஙணம் மகாகவிஞனாகி
இருக்கிறான் என்பது.
யூமா வாசுகியின் தொடக்க நிலைக் கவிதைகள் பசிக் கலைஞன் ஒருவனின் உலகத்தைச்
சொல்பவையாக அமைந்துள்ளன. கவிதை எழுதத் தொடங்கும்போது பொதுவாக டைரி குறிப்புகளின் வழியாகவே
தொடங்க நேரும். யூமாவின் ஆரம்பகாலக் கவிதைகளில் ஒரு சில அப்படியான சுய அனுபவக் குறிப்புகளாக
அமைந்திருந்தபோதும் வெகு சீக்கிரத்திலேயே அந்நிலையைக் கடந்து பிற மனிதனின் பசியைப்
பற்றிக் கவலைப்படாத யதார்த்த உலகுக்குள் வந்துவிடுகிறார்.
இரவின் குளம்புகள்
வெற்றுக்குடல் மிதிக்கும்.
குப்பைத்தொட்டி பச்சிளம் சிசுவைக்
குதறும் நாயாகிறது பசி.
0
அன்றைக்கு அம்மா தன் கணவனை மறுபடியும்
தெருவிலிருந்து மீட்டுக்கொண்டாள்
கண்டுப்பிடித்துக் கொடுத்த சகோதரி
துணிப்பூக்களை எடுத்துக்கொண்டாள்
குடி மயக்கிய தகப்பனின் பையிலிருந்து
சில்லறைக் காசுகளைத் திருடினான் தமையன்
அப்பா குடித்துக் காலியாக்கிய சாராயப் புட்டியைக்
கைப்பற்றினேன் நான்.
0
இந்த உலகம் சரியில்லை. இங்கு வாழும் மனிதர்கள் யாரும் ஒழுங்கில்லை என்று
குறைசொல்லியபடி பசித்திருக்கும் ஒருவனுக்கு புகார் சொல்லவும் குறைசொல்லவும் நிறைய இருக்கும்.
இத்தன்மை சகமனிதர்களின் மீதான வெறுப்பாகவும் பொறாமையாகவும் சகிப்பின்மையாகவுமே சென்று
முடியும். வாழ்வின் மேல் பிடிப்பில்லாது அவநம்பிக்கையுடன் அலையச் செய்யும். இதுவே இயல்பில்
நடப்பது. இவ்வாறான உலகியல்தன்மைக்கு நேர்மாறாக அமைகிறது யூமாவின் கவிதை உலகம். அதனாலேயே
அவர் எழுதவந்த காலத்தின் பிற கவிஞர்களிடமிருந்து அவர் தனித்துவம் மிக்கவராக உருவாக
முடிந்திருக்கிறது. லௌகீகத் தளத்தில் தான் தோற்றுப் போனதாய் நினைத்து சுயவெறுப்போ அவநம்பிக்கையோ
அடைந்து அவர் புலம்பவில்லை.
நான் வாளற்றவன் காப்பற்றவன்
உடையும் உதிரமும் அற்றவன் – விதியே
உன்னைப் புதைக்கவேண்டிய
இடத்தைத் தெரிவு செய்து
சமருக்குத் தயாராகி வா.
தன் பசிக்கு உணவு கிடைக்கவில்லை என்பதால் உலகத்தின் மேலும் சகமனிதர்கள்
மீதும் அவர் வன்மம் கொள்ளவில்லை. மாறாக பெரும் கருணையும் பேரன்புமே அவரிடத்தில் ஊற்றெடுத்திருக்கிறது.
என் முதல் வார்த்தை முடிவதற்குள்
அதன் அவசியமின்மையை
உணர்த்திவிடுகிறீர்கள்
என் செயல்களிலிருந்து
உங்களுக்கேதுவான அர்த்தம் உரிப்பது
இலகுவிற்கூடிற்று உங்களுக்கு
உங்கள் பாவனை
எனக்குப் புரிவதுபோல
என்னுடையதும் ஆகுமென்ற
காத்திருப்பை நிராகரிப்பதில்
இறுதிவரை உங்களுக்கு வெற்றி
உங்கள்
உபாயங்களுக்குள் செலுத்தப்பட்டு
என் திசையழிந்து போயிற்று
என்னை ஒப்புக்கொடுக்கும் முன்பு
இதைச் சொல்ல அனுமதியுங்கள்
உங்களையும்
நான் நேசிக்கிறேன்.
0
யூமாவின் கவிதைகள் அமைந்துள்ள அடுத்த தளம் பெருநகரத்தின் நெருக்கடியில்
சிக்கித் தவிக்கும் கவிஞனின் உலகம்.
பெருநகரின் பரபரப்பிற்கும் சுயநல அவசரத்திற்கும் நடுவில் கலைஞன் விரும்பி
தேடியலையும் தனிமையின் உக்கிரத்தையும் பசி கொண்டுசேர்க்கும் தோழமையின் ஈரத்தையும் சொல்கின்றன
இக் கவிதைகள்.
நண்பர்கள் சந்திக்கையில்
வணக்கம் சொல்லிக்கொள்வதற்கு பதிலாக
இது எத்தனையாவது நாள் பட்டினியென்று
பரஸ்பரம் கேட்கிறோம்.
…
அனைவரும் தேநீர் பருகுமளவிற்கு பணம் வைத்திருக்கிற
யாராவது ஒருவர் வந்தாகவேண்டியிருக்கிறது.
எல்லோருடைய கடைசிச் சில்லறைகளையும் திரட்டி
பசி தாங்கவியலாத அல்சர்கார நண்பனுக்கு
சிற்றுண்டி வாங்கிவர ஆளனுப்புகிறோம்.
ஒண்டிக்கொள்ள ஒரு சிறு பொந்து, டிக்கெட்டில்லா ரயில் பயணங்கள், பசியைத்
தணிக்க புகையும் சிகரெட்டுகள் என துயரமும் துயரம் சார்ந்த கவிதைகளுமாய் நிறைந்துள்ளன.
‘பசியின் ஒவ்வொரு வருகையும்
முதல் முறை வீட்டிற்கு வரும் நெருங்கிய விருந்தினனைப்போல்
பூரண உபசரிப்பை எதிர்பார்க்கிறது.
வெறும் சிகரெட் புகையால்
மூழ்கடிக்கப்பட்ட அது
சேகரித்த குரோதம் முற்றி பழி தீர்க்க
குடலில் துளைகளிடும் என்றேனும் ஒரு நாள்.’
0
கொடும் பசியும் நகரத்து நெருக்கடிகள் தந்த துயரமும் சார்ந்த இரண்டு தளங்களில்
அமைந்த கவிதைகளுக்கு முற்றிலும் வேறானவை மூன்றாவது வகை கவிதைகள்.
காதல் கவிதைகள் என இவற்றை எளிமையாக அடையாளப்படுத்தலாம். ஆனால் இவை வழக்கமான
காதல் கவிதைகள் அல்ல.
பெண்ணின் அழகையும் காதலின் பித்தையும் பேருவகையுடன் கொண்டாடும் கவிதைகள்.
அபூர்வமான சொல் இணைவுகளுடனும் பீறிட்டெழும் உணர்வெழுச்சிகளுடனும் அமைந்த அபூர்வமான
கவிதைகள்.
‘அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ என்ற தலைப்பே இக்கவிதைகளின்
பெருமதிப்பைச் சொல்லும்.
நீ கல்லினுள் நீர்க்கிலுக்கம் – பாற்கடல் திரை அரவம்
விநோதாதீதம் – மேதமையுதயம்
அந்தரச் சுரப்பிகள் ஈன்ற பரிமளம் – மழைத்துளிப் பழம்
அழகு ஆர்ப்பரிக்கும் மந்தாரம்
என் துறையடைந்த சுடர்க்கூட்டம்
ஆகமத் தாமரைகள் ததும்பும் என் திருமுழுக்குத் தடாகம்
அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு.
0
தான் மயங்கித் தீராத காதல்
இரவுக் கருவாழைப் பட்டையுரித்து நுகரும்.
மனமேறியமர்ந்த கண்கள்
பஞ்சம் பிழைக்கப் பாய்கின்றன.
என் மூளைச் சாறருந்தி தெருவோடு போகிற
அய்யோ என் பெருந்திருப்பெண்ணே…
உன் வதம் திருப்பியொரு படையலிடு
போதமுற்றி உன் நிழலோடு
புரண்டு போகிறதென் சித்தம்
சுருதிக் கட்டைகளின் துன்
பருவங்கூம்பிக் கட்டவிழும் யௌவனத் துளியொன்று
சொட்டியதிர்கிற ஓசையில்
மிரண்டொடுங்குகின்றன ஊழியலைகள்
…
0
யூமா வாசுகியின் நான்காம் வகை கவிதைகள் கனிவும் குதூகலமும் தூய்மையும்
துலங்கும் குழந்தைகளின் உலகிலிருந்து ஒளியுடனும் பரிபூரணத்துடனும் மிளிர்பவை. பொதுவாக
பசியும் வேலையின்மையும் கைகூடாத காதலும் இளைஞர்களை கவிஞர்களை கொண்டுசேர்க்கும் இடம்
இருண்டது. துயரமும் தோல்வியும் அவநம்பிக்கையும் ஒன்றிணைந்த அதிலிருந்து அவர்கள் அடைவது
வெறுப்பையும் மூர்க்கத்தையுமே. ஆனால் யூமாவின் கவிதைகள் இதற்கு நேர்மாறாக எதிர்பாராத
இடத்தைச் சென்று பேரும்போதுதான் கவிஞன் என்கிற இடத்திலிருந்து மாபெரும் கவிஞன் என்ற
இடத்தை அடைகிறார்.
குழந்தைகளுக்கான சிறுவர்களுக்கான மாய உலகை கவிதையில் எழுதிக் காட்டியவர்கள்
வெகு சிலரே. யூமா வாசுகி அவர்களுள் முதன்மையானவர்.
‘உடைந்த நடைவண்டி’யில் தடுமாறி நகரும் கவிஞனின் வாழ்வை பொருள்மிக்கதாயும்
உரம்கொண்டதாயும் உருமாற்றித் தரும் தேவதைகளாக குழந்தைகள் அமைகின்றனர்.
பொருளியல் உலகில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாத ஒரு கலைஞனை பசியும்
ஆதரவின்மையும் நிராகரிக்கும் ஒரு கவிஞனை உயிர்ப்புடனும் நம்பிக்கையுடனும் அடுத்த நாளுக்கு
நகர்த்திச் செல்லும் அருமருந்தாக குழந்தைகளின் நட்பும் பிரியமும் வாய்க்கின்றது.
முதுகில் புத்தகப்பையைச் சுமக்கும் பள்ளிச் சிறுவர்களை குருவிக் குஞ்சுகளெனக்
காண்பதில் தொடங்கி,
பேருந்து நெரிசலில் சில நிமிடங்களே மடிவந்தமரும் யாருடைய குழந்தையையோ சீராட்டும்போது
பேருவகை கொள்வதாக விரிகிறது குழந்தைகளின் மேலான அவரது அளப்பரிய பிரியம்.
பக்கத்து வீட்டுச் சிறுமிக்காக முயலாக தன்னை உருமாற்றிக் கொள்ளும் கவிஞன்
சாத்தனாக தன்னைக் காண்பதும் அவ்வாறான ஒரு குழந்தையின் முன்பே.
மதுக்கடையில் வேலை செய்யும் சிறுவர்களின் பையிலிருந்து உருளும் கோலிக்
குண்டுகளையும், உணவகத்தில் உழைக்கும் சிறுவர்களின் சிறு ஓய்வு நேர மகிழ்ச்சியையும்,
பக்கத்து வீட்டில் வேலைபார்க்கும் சிறுமியின் உலகையும் யூமாவின் கவிதைகள் தாளாமையுடன்
காண்கின்றன.
சிறுவர்களின் மீதான பேரன்பும் அவர்களின் உலகத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ளும்
முனைப்புமே யூமாவின் தனித்துவம்.
0
இந்த நான்கு வகை கவிதைகளிலிருந்து யூமா வந்தடையும் ஐந்தாவது வகையே அவரை
கவிஞன் என்ற நிலையிலிருந்து மகா கவிஞன் என்கிற உயரத்துக்கு நகர்த்துகிறது.
இத்தனை காலமும் இந்த வாழ்வு கவிஞனுக்கு அளித்தது பசியும் துயரமும் கசப்பையுமே.
நியாயமாக அவன் கூடுதலான வன்மத்தையும் கசப்பையுமே சென்றடைந்திருக்க வேண்டும். மாறாக
கவிஞனுக்குள் இயல்பாக சுரக்கும் காருண்யம் மேலும் தீவிரத்துடன் ஊற்றெடுக்கிறது. அன்பும்
கருணையும் பொங்கி நிறைகிறது. கசப்பைத் தரும் வாழ்வுக்கு களிப்பைத் தரவே விளைகிறார்.
உலகின் அனைத்து மதங்களும் போதித்து நிற்பது கருணையை, சக மனிதர்களின் மீதான
அன்பை. யோகிகளும் ஞானிகளும் காலம்காலமாக உபதேசித்து வலியுறுத்துவது உயிர்களின் மீதான
கருணையை மட்டுமே. யூமா வாசுகியின் கவிதைகள் கொண்டிருப்பதும் அவ்வாறான கருணையின் ஈரத்தையே.
சக மனிதனின் மேலான அளப்பரிய நிபந்தனையற்ற அன்பின் நிழலையே.
‘நேசமெனும் ஒன்றைத் தவிர வேற்றுமொழி அறியாதவன்’ என்று அவரது கவிமனம் கனிகிறது.
‘உலகில் உள்ள எல்லோரையும் அணைத்து மகிழ உலகளாவிய கரங்கள் வேண்டும் எனக்கு’
என்று விசாலமான உள்ளம் விரும்புகிறது.
அவரது கவிதையிலகின் உச்சமாக அமையும் இக்கவிதையே அவரை மகாகவிஞனாக்குகிறது.
உலகளாவிய கரங்கள் வேண்டும் எனக்கு
எல்லோரையும் அணைத்து மகிழ
எல்லாப் பறவைகளின் சிறகுகளிலும்
என் கண்கள் இருக்கவேண்டும் அனைவரையும்
ஒருசேரக் காண்பதற்கு
போகுமிடமெல்லாம் காற்றென்
குரலையும் கொண்டுபோனால்
எல்லோருக்காகவும் பாடுவேன்
உலகத்து மண் முழுதும்
என் ஊன் கலந்து உரமாகி
பயிர் வளர்ந்து மரம் வளர்ந்து மலருண்டாகி
உங்களுக்கென்றாக வேண்டும்
உங்கள் கவலை மீன்களையெல்லாம் நீந்தவிட
பெருங்கடலாய் என் மனதிருக்கவேண்டும்
வளைந்த முதுகென்றாலும்
வலுவானதாய் வேண்டும்
உஉங்கள் சுமைகளைத் தாங்க
உங்கள் பாவங்களுக்கான
ஒட்டுமொத்தச் சம்பளம் நானே பெறவேண்டும்
உங்கள் கதவுகளைத் தட்டும்
தோல்விகளுக்கும் துயரங்களுக்கும்
என்னைச் சுட்டிவிட்டு
விடுபட்ட மான்கள்போல நீங்கள்
துள்ளியோட வேண்டும்.
அதற்கு நிகராய் என் நெஞ்சில்
மலைத்தொடர்போல திடம் வளரவேண்டும்
விளக்காகக் குடைந்த என் கபாலத்தில்
உதிரந்தோய்ந்த நாளங்களைத்
திரியாக்கிச் சுடாராகி உங்கள்
வழிக்கு விளக்காகும்
பேறு பெறவேண்டும்.
‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று உயிர்களின் மேல் வள்ளலார்
காட்டிய பரிவையும் ‘உன் துக்கத்தையெல்லாம் என்னிடம்இறக்கி வையுங்கள். உங்களுக்கு இளைப்பாறுதல்
தருவேன்’ என்று கர்த்தர் அளித்த ஆறுதலையும் ஒருசேர தருபவை யூமாவின் கவிதைகள். அதுவே
அவரை மகாகவிஞனாக்குகிறது.
0
இத்தொகுப்பின் தலைப்பு ‘கசங்கல் பிரதி’ என்று இருக்கலாம். பிரான்சிஸ் கிருபாவுக்காக
எழுதிய கவிதையின் தலைப்பு இது. ஆனால் இக்கவிதைகளிலுள்ள பரிவும் கருணையும் நிகரற்றது.
கசடற்றது. எதன் பொருட்டும் வற்றாதது.
உண்மையில் இது ‘கசங்கல் பிரதி’ அல்ல. ‘காருண்யத்தின் பிரதி’.
0
( யூமா வாசுகிக்கு மா.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டபோது அவருடைய கவிதைகள்
குறித்து ஆற்றிய உரை )
No comments:
Post a Comment