ஜி.நாகராஜன் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தின் எந்தவொரு பரிந்துரை பட்டியலிலும் அரிதாகக் காணப்படும் ஒன்று. ‘எனக்குப் பிடித்த எழுத்தாளர்களி’ன் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறுவது அபூர்வம். ஒருவகையில் ப.சிங்காரத்தைப் போல அவரும் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட எழுத்தாளர்தான். ப.சிங்காரத்தை தமிழ் வாசகர்களுக்கு மறுபடியும் அறிமுகப்படுத்திய சி.மோகன்தான் ஜி.நாகராஜனையும் மறுகண்டுபிடிப்பு செய்தளித்தார் என்று சொல்லலாம்.
0
எண்ணிக்கையிலும்
பக்க அளவிலும் கொஞ்சமே எழுதி பேர் வாங்கிய எழுத்தாளர்கள் என்றொரு பட்டியல் எல்லா
மொழிகளிலும் உண்டு. தமிழில்
அப்படியொரு பட்டியலை யோசித்தால் உடனடியாய் நினைவுக்கு வருபவர் மௌனி.
எழுதியது மொத்தமாய் 18 கதைகள்.
புதுமைப்பித்தன் அவர் எழுத்தில் கண்டு வியந்த மேதமை பல
விளக்கங்களுக்குப் பின்னும் இன்னும் விளங்காத புதிராக சவாலாகி நிற்கிறது.
அடுத்த
பெயர் சம்பத். அவரது “இடைவெளி” நாவல்
எண்பத்தி சொச்சம் பக்கங்களையே கொண்டது. தமிழ்
நாவல் வரலாற்றில் இடைவெளிக்கென்று தனிப்பட்ட இடம் எப்போதும் உண்டு.
அவர் எழுதிய சிறுகதைகள் இரண்டு தொகுதிகளாக சமீபத்தில்
வெளியாகியுள்ளன. ‘சாமியார் ஜூவுக்குப்
போகிறார்’ கதை அவரது இடைவெளி நாவலுக்கு
இணையாகப் பேசப்படுகிறது.
“பசித்த
மானுடம்” என்ற ஒரேயொரு நாவலைத் தந்தமைக்காக தமிழில் கரிச்சான்குஞ்சுவுக்கு
முக்கியமான இடம் உண்டு.
அந்த
வரிசையில் சற்றே ஆகிருதியுடன் கட்டுமஸ்தாக வந்து சேர்ந்திருப்பவர் ஜி.நாகராஜன்.
0
24 ஆண்டுகளாக
இலக்கியப் பணி செய்து அவர் தமிழுக்குப் பங்களித்தது இரண்டு குறுநாவல்கள்,
37 கதைகள், 4 குறுங்கதைகள்
ஆகியவை. சுந்தர ராமசாமியின்
வார்த்தைகளில் சொல்வதானால் “வருடத்திற்கு அரை டன் கழித்துக்கொண்டிருக்கும்
பட்டாளத்தின் மத்தியில் நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான்
இருக்கும்.” அவரது மொழி ஆற்றலுக்கும்
அனுபவ வீச்சுக்கும் இலக்கியப் புலமைக்கும் சற்றும் நியாயம் செய்யாததே இந்த
எண்ணிக்கை.
இத்தனை
குறைந்த பக்கங்களில் அவர் எழுதிக்
காட்டியிருக்கும் இருண்ட உலகும் அதிலிருந்து எழும் கேள்விகளும் கெக்கலிப்புகளும்
நம்மை அசௌகரியப்படுத்துகின்றன. முகம்
சுளிக்கச் செய்கின்றன. நாகராஜன்
மிக இயல்பாக தன்னிச்சையாய் புழங்கும் உலகின் பக்கமாய் தலைதிருப்பவே பயம் நமக்கு.
அவர் எழுதிய ஆச்சாரமான காலகட்டத்தில் தீட்டாக
விலக்கப்பட்டிருந்த இந்த உலகும் அதன் மனிதர்களும் அவரை கவர்ந்திருக்க வேண்டும்.
யாரும் நடக்கத் தயங்கிய தெருக்களை நிழல் ஒளிர்ந்த நடைவாசல்களை
துலக்கமான பூச்சுக்களுடன் ஒயில்காட்டி நின்ற பெண்களை நான் எழுதுகிறேன் என்று
துணிந்திருக்கிறார். பிறர்
சொல்லத் துணியாததை நான் செய்கிறேன் பார் என்கிற திமிரை அவரது எழுத்தில்
உணரமுடிகிறது. மனித நாகரிகம் தொடங்கிய
காலந்தொட்டு தொடர்ந்து தவிர்க்க முடியாத பகுதியாக இருந்திருந்தபோதும் அதை
அங்கீகரிக்கவோ கண்டுகொள்ளவோ தயங்கிய கூச்சப்பட்டிருந்த பொய்யான சமூக ஒழுங்கைப்
பார்த்து எகத்தாளமாகச் சிரித்தபடியே எல்லாவற்றையும் பொதுவில் போட்டுடைத்தார்..
புறக்கடைகளில் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு உலவும்
ஒழுக்கத்தின் முகலட்சணத்தை அம்பலப்படுத்தினார்..
நாகராஜன்
அப்போதிருந்த பொதுவான சம்பிரதாயமான எழுத்துப்போக்கைக் கண்டு சலித்து
எரிச்சலுற்றிருக்க வேண்டும். ஏதோ
ஒரு விதத்தில் இலக்கியம் அசலான சமூகத்தை உள்ளபடி காட்டவில்லை என்று குறைபட்டிருக்க
வேண்டும். அவரது பொன்மொழிகளில்
அந்த எரிச்சல் தலைகாட்டியிருப்பதை ரசிக்க முடிகிறது.
“மனிதாபிமான
உணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனித
துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தைப் படைக்கவல்லது.” என்ற
அவரது எண்ணத்தின் பிண்ணனியிலேயே அவரது எழுத்தை அணுகமுடியும்.
“மனித
குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது.
ஏனெனில் சிந்திக்கும் நாய்கள் நாய் குணங்களையே உயர்வாகக்
கருதுகின்றன.”
‘மனிதனைப்
பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான்
சொல்வேன்.,’
ஆட்கூட்டத்தில்
தன்னைத் தனித்துக் காட்டும் முனைப்பாகவும்கூட இதை அணுகமுடியும்.
அடுத்த நாள் பற்றிய கற்பனைகளற்ற வாழ்வைக் குறித்த
தொலைநோக்குப் பார்வையில்லாத அன்றாடம் அந்தந்த கணத்தில் வாழ்ந்து மடியத் தயாரான
எளிய மனிதர்களைப் பற்றி ஆர்ப்பாட்டமில்லாத எழுத்து நாகராஜனுடையது.
அதேசமயத்தில் இந்த உலகத்தையும் மனிதர்களையும் அவர் போலியான
பச்சாதாபத்துடனோ அருவருப்புடனோ அணுகவில்லை. சரி
தப்பு என்று தராசைத் தூக்கவில்லை. விசாரணையோ
தீர்ப்புகளோ இல்லை. கண்ணீர்
வரவழைக்கும் சித்தரிப்புகளோ அறம் பேசும் அலட்டல்களோ கிடையாது.
அன்றாடங்களை அப்படி அப்படியே அனுபவிக்கும் மனிதர்களின் எளிய
சந்தோஷங்களை துக்கங்களை ஆற்றாமைகளை கள்ளத்தனங்களை எள்ளலும் சிரிப்பும் களிப்புமான
மொழியில் உயிர்ப்புடன் உருவாக்கித் தந்திருக்கிறார்.
இப்படியொரு
எழுத்தை வாசிக்க நேரும் நம்பிக்கைவாதிகளுக்கும் தூய கலைச் செம்மல்களுக்கும்
முகச்சுளிப்பை ஏற்படுத்தும். கலையைக்
கொண்டு மக்களின் மனதைச் சுத்திகரிக்க புறப்பட்ட கொள்கைவாதிகளின் தரப்பைப்
புறங்கையால் எத்தி நகர்த்தும் எகத்தாளமே நாகராஜனின் பலம்.
‘இது
ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள்
துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்களை, நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால்
காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால்
பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால்
அடைந்திருக்கக்கூடிய அவமானம், இவையே
அவன் வாழ்க்கை.’
நாளை
மற்றுமொரு நாளேவின் முகப்பு வாக்கியம் இது. அவனது
வாழ்க்கையைப் பற்றி சொல்லும் முகமாக மற்றவர்களின் போலியான வாழ்வைப் பற்றிய கூரிய
விமர்சனத்தை முன்வைக்கிறார் நாகராஜன்.
‘நாட்டில்
நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில்
உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் “இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?”
என்று வேண்டுமானால் கேளுங்கள். “இதையெல்லாம்
ஏன் எழுதவேண்டும்?” என்று
கேட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச்
சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான்
விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்.‘
அவரது
எழுத்தைப் பற்றி அவரிடம் சொல்லப்பட்ட அல்லது அவர் காதில் விழுந்த விமர்சனங்களுக்கு
எதிர்வினையாகத்தான் 1963ல்
குறத்தி முடுக்கு நாவலின் முகப்பு வாக்கியத்தை அவர் அமைத்திருக்கவேண்டும்.
அவரது மொத்தப் படைப்புலகத்திற்கும் இந்த வாக்கியம் அழுத்தமான
பொருள் சேர்க்கிறது.
0
நாகராஜன்
தன் எழுத்தின் வழியாக தொடர்ந்து முயல்வது மனித உறவுகள் சார்ந்து தனிமனிதன் ஏற்கும்
விசித்திரமான மனப் போக்குகளை சற்றேனும் புரிந்துகொள்ளவே. 34 கதைகளில்
பெரும்பகுதி இந்த முயற்சியின் சிறிய பகுதிகளே எனலாம். சமூக
உறவின் ஒரு பகுதியாக காலந்தொட்டு நிலவும் பரத்தமையைக் குறித்தும் அதன்மீது
பொதுச்சமூகம் காட்டும் போலியான முகத்திருப்பலைக் குறித்தும் மேலும் கூடுதல்
அழுத்தத்துடன் அணுகியிருக்கிறார்.
அவரது
முதல் சிறுகதையான ‘அணுயுகம்’
சம்பிரதாயமான சிறுகதையாக அமையாது அன்னியமான நிலத்தைக் களமாகக்கொண்டதுதான்.
எழுதப்பட்ட காலகட்டத்தில் 1957ல்
அது புதுமையானதாக அமைந்திருக்கவேண்டு.ம்.
உண்மையில் களம்தான் புதியதே தவிர அதன் உள்ளடக்கம் நாகராஜனின்
கலைமனம் எப்போதும் மையம் கொண்டிருக்கும் உளவியல் பிரச்சினைதான்.
ஆண் பெண்ணுக்கு இடையான உறவுச் சிக்கல்களே.
குறிப்பாக காமம் சார்ந்த இடறல்களே.
இந்த
வகையில் அவர் எழுதிய முதல் கதை ‘அங்கும்
இங்கும்’. தாம்பத்தியம் தம்பதிகள்
குறித்த பார்வையை புதிய நோக்கில் அணுகியுள்ளது.
காமம்
சார்ந்த மன அவசத்தைக் காட்டிய முதல் கதை ‘சுழற்சி’.
விருப்பத்துக்கும் விலகலுக்குமிடையிலான தவிப்பை ராட்டினத்தை
படிமமாகக் கொண்டு எழுதிய இந்தக் கதை நாகராஜனின் தீர்மானமின்மையையும் சொல்கிறது
என்று கொள்ள முடியும். இரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு 1961 ல்
எழுதிய ‘மிஸ் பாக்கியமும் பூர்வாசிரமும்’
அவருடைய குழப்பம் தீர்ந்ததை தெளிவாக்குகின்றன. தனிமையை
தீராத காமத்தை மிஸ் பாக்கியம் சொல்லியிருக்க ‘பூர்வாசிரமம்’
கதையே விலைமகளிரைப் பற்றிய முதல் கதை.
விலைமகளிரை
மையப்படுத்தி எழுதியவை 6 கதைகளும்
குறத்தி முடுக்கும். தனித்துவமான
முகங்களற்ற உதிரிகளை லும்பன்களை மையப்படுத்தி எழுதியவை நாளை மற்றுமொரு நாளே
நாவலும் 4 கதைகளுமே.
இவையே
நாகராஜனின் முழு உலகமாக தோற்றந்தருவதற்கு காரணம் இவற்றில் உள்ள யதார்த்தமும்
மெய்மையுமே. மற்ற கதைகள் போலன்றி இக்
கதைகள் இயல்பான நெருக்கத்தையும் இணக்கத்தையும் வாசகனுக்கு சாத்தியப்படுத்துகின்றன.
“அடுத்து வருபவன் ஆணா, அலியா,
கிழவனா, வாலிபனா,
அழகனா, குரூபியா,
முரடனா, சாதுவானவனா
என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச்
சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது” என்ற
விலைமகளிரைக் குறித்த அவரது அணுசரணையான பார்வை அவரது எழுத்தின் மனச்சாயலுக்கு வலு
சேர்ப்பதாயிருக்கிறது. “சமுதாயம்
அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன்
ஒருவனே இதைப் புரிந்துகொள்ள முடியும்.” அப்படியொரு
புரிதலே அவரது எழுத்தை அமைத்திருக்கிறது.
0
கு.அழகிரிசாமிக்கும்
முன்னதாகவே 1959இல் ‘பச்சக்குதிரை’
கதையை எழுதியிருக்கிறார். குழந்தைகளின்
உலகை மையமாகக் கொண்ட முதல் கதையாக இருக்கலாம். ஆனாலும்
நாகராஜன் மேலும் இந்த உலகை முயலவில்லை.
ஆனால் குழந்தைகளின் மீதும் அவர்களின் வாத்ஸல்யத்தின் மீதும்
பெரும் ஈர்ப்பு இருந்திருப்பதை துலக்கமாக அறிந்துகொள்ள முடிகிறது.
உறவுகள் அனைத்தும் தற்காலிகமானதும் சந்தர்ப்பவசமானதும் என்ற
மேலோட்டமான மனம்கொண்ட நாகராஜனின் கதாபாத்திரங்கள்
குழந்தைகளை மட்டும் குதூகலத்தோடும் உள்ளன்போடும் அணுகுகின்றன.
பொதுவான நாகராஜனின் உலகில் முற்றிலும் பொருந்தாத அம்சம் இது.
ஒரு வகையில் அந்த உலகின் முரட்டு யதார்த்தத்தின் வெப்பத்தைத்
தணிக்கும் காற்றாக இது உலவுவதை நம்மால் சட்டென்று உணர்ந்துகொள்ள முடிவதில்லை
போலும்.
ஜெயகாந்தனின்
‘அக்கினிப் பிரவேசம்’
நவம்பம் 1968இல் வெளியாகியுள்ளது.
நாகராஜன் எழுதிய ‘அக்கினிப்பிரவேசம்’
மார்ச் 1967இல் சாந்தி இதழில்
பிரசுரமாகியுள்ளது. சிறிய
கதை. அதை வாசித்தபோது ஜெயகாந்தனின்
கதைக்கு எதிர்வினையாக நாகராஜன் இந்தக் கதையை எழுதியிருக்கக்கூடும் என்றே
நினைத்திருந்தேன். ஆனால்
நாகராஜனே முதலில் எழுதியிருக்கிறார் என்பது உறுதியானபோது ஜெயகாந்தன் இதற்கு
எதிர்வினையாற்றினாரா என்ற கேள்வி எழுகிறது.
அக்கினிப்
பிரவேசம் நடந்துவிட்டது என்று தொடங்கும் கதை குடிசைக்குள் படுத்திருக்கும்
அம்மாவும் மகளுக்குமான உரையாடலாக நீள்கிறது.
“ஏண்டி,
நல்லாக் கணக்குப் பார்த்துச் சொல்லு.
இன்னையோட எத்தனை நாளாகுது?”
மகள்
முணுமுணுக்கிறாள். “செவ்வாய்
இருபத்தினாலு, புதன்
இருபத்தஞ்சு, வியாழன் இருபத்தாறு,
வெள்ளி இருபத்தேழு,
சனி இருபத்தெட்டு.
சரியா இருபத்தெட்டு
நாளாயிரிச்சி.”
“வழக்கமா
எத்தனை நாளாகும்?”
“இருபத்தினாலுக்கு
ஒரு நாள் தப்பினதில்லே.”
…..
“பாவி,
பழிகாரன். அவன்
வௌங்குவானா? உடம்பெல்லாம்
புழுத்துச் சாகணும்”
“இப்ப
அவனெத் திட்டி என்னம்மா பண்றது? கார்ல
ஏறியிருக்கக்கூடாது. அப்படி ஏறினபெறவும் அவன் தப்பா
நடந்துக்கிறான்னு தெரிஞ்சதும் ஓடற கார்லேந்து
குதிச்சாவது செத்து மடிஞ்சிருக்கணும். ஏம்மா,
நான் மனசால தப்புப்
பண்ணலைனியே, அது
எப்படிம்மா உண்மையாகும்? மனசு
திடமா இருந்திருந்தா
இப்படி நடந்திருக்குமா?”
….
“ஏம்மா,
மனசு வேறே, உடல்
வேறேயா?” என்று
மகள் தொடர்கிறாள்.
இரண்டும்
தனித்தனியாக அவரவர் மனதில் எழுந்த கதைகள் என்றே கொள்ளலாம். தற்செயலாக
ஒன்றுபோல் அமைந்திருக்கவேண்டும் என்றும் நம்பலாம். ஆனால்
கதைத் தலைப்பு, களம்,
சந்தர்ப்பங்கள் எல்லாமே
தற்செயலாக ஒன்றுபோல அமைய முடியும் என்பது வியப்பாக
உள்ளது.
அல்லது
அசாதாரணமானவர்களின் சிந்தனையும் ஒன்றுபோல்
அமையும்போலும்.
ஜெயகாந்தனின்
அக்கினிப்பிரவேசம் சூழலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து
விவாதங்களைக் கிளப்பி நின்றது. ஆனால்
நாகராஜன் இப்படியொரு கதையை இதற்கு முன்பே எழுதினார் என்பதே நம் சூழலில் தெரியாமல்
போனது. இதற்கு காரணம்
ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் ஆனந்தவிகடனில் வெளியானது என்பதுதான் காரணமாக
இருக்கமுடியும்.
நாகராஜன்
தனது கதையின் முடிவில் இப்படி எழுதியிருக்கிறார்.
“நமக்கென்ன
கவலை. நாம் ஓடிப் போயிடலாம்.
ஏதாவது சினிமா பார்க்கலாம். இல்லாட்டி
நீதிக் கதை படிக்கலாம்.”
0
எழுத்தில்
நாகராஜனை பாதித்த எழுத்தாளர்கள் இருவர். புதுமைப்பித்தனும்
அசோகமித்திரனும்.
நாகராஜனின்
‘ஜுரம்’
கதையில் புதுமைப்பித்தனின் செல்லம்மாளின் கணிசமான பாதிப்புள்ளது.
இரண்டுக்குமிடையே முப்பதாண்டுகள் இடைவெளி இருந்தபோதும்கூட
இதற்கும் அதற்கும் தொடர்பில்லை என்று சொல்லமுடியாத அளவுக்கு புதுமைப்பித்தனின்
நிழல் நாகராஜனின் கதையில் அடர்த்தியாக விழுந்துள்ளது.
அதேபோல
‘எங்கள் ஊர்’
கதையை வாசிக்கும்போது பித்தனின் பொன்னகரத்தை எண்ணாமல் இருக்கமுடியவில்லை.
‘டெர்லின் ஷர்ட்’
கதையிலும்கூட காஞ்சனையின் நிழலை உணரமுடிகிறது.
மௌனமும்
பித்தமும் என்ற தனிக்கட்டுரையில் மௌனி, புதுமைப்பித்தன்
இருவரது எழுத்தைப் பற்றிய தெளிவான தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
“தமிழில் உரைநடை புனைவதில் இலக்கியத்தின் பல்வேறு சாத்தியக்
கூறுகளையும் நுட்பமாக ஆராய்ந்து வெளியிட்ட பெருமை சொ.விக்குத்தான்
நிச்சயமாக உண்டு. அவர்
தனது பரிசோதனைகளை மிகவும் விரிவான கட்டுக்கோப்புக்குள் அமைத்துக்கொண்டார்.”
“திராவிட
இயக்கத்தின் மறுக்கமுடியாத சொல் வளத்தை சொ.வி
பெரியதாக நினைக்கவில்லை. ஒரு
துப்பாக்கிக் கதை எழுதி திருவள்ளுவரிடமும் கொஞ்சம் விஷமம் செய்து பார்த்த சொ.வி.
யாருடைய சொல்வளத்தாலும், சொன்னயத்தாலும்
பரவசப்பட்டுப் போகக்கூடியவரல்ல. அந்தத்
தன்னிறைவு உயர்வு பலமா பலவீனமா என்பது உண்மையில் ஒரு இயக்கவியல் பிரச்சினை.”
“சொ.வி
எழுத்தளாரது எழுத்தாளர்.” என்பதே
நாகராஜனின் கருத்து. இருவரது
எழுத்துக்களுக்கும் இடையில் தான் உணரும் வேறுபாட்டைத் தெளிபடுத்தியிருக்கிறார்.
0
அசோகமித்திரனின்
‘இன்னும் சில நாட்கள்’ தொகுப்பைப் பற்றிய விரிவான விமர்சனத்தை எழுதியிருக்கிறார்
நாகராஜன். ‘பெரும்பாலான தமிழ்நாட்டு
எழுத்தாளர்களில் அரிதே காணக்கூடிய சொற்செட்டு, புறநிலை
உணர்வு, வலிந்து எதையுமே
புகுத்தாத போக்கு, வாழ்க்கையின்
சலனத்தை உள்ளபடியே பிரதிபலிக்கும் திறன், கலையுணர்வுக்கு
அப்பாற்பட்ட நோக்கங்களிலிருந்து பூர்ணவிடுதலை இவையனைத்தும் அசோகமித்திரனின்
சிறப்புத் தன்மைகளாக எனக்குப் படுகின்றன’ என்று அசோகமித்திரனின் தனித்தன்மைகளை
கச்சிதமாக எடுத்துரைத்திருக்கிறார்.
தர்மோ
சீவராமின் ‘சதுரச் சிறகு’ பற்றிய பதிவில் ‘என்னைப் பொறுத்தமட்டில் எந்த
உணர்ச்சியையும் ‘வாய்விட்டு’ ஒரு வரியில்கூடச் சொல்லாது, பார்ப்பதற்கும்
கேட்பதற்கும் முடியுமானால், நுகரவும்
தொட்டுணரவும் வேண்டியதை மட்டும் அளவோடு தருவதே சிறந்த எழுத்து என்று இருப்பினும்,
உணர்வுக்கும் ‘புலன் கூடான’வற்றுக்கும் இடையே இருக்கவேண்டிய
விகித அளவு இன்றைய புதுமுறை எழுத்தாளர்களைச் சார்ந்தமட்டிலும் ஒரு கேந்திரப்
பிரச்சினையாகிவிட்டது. இம்முயற்சியில்
குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ள ஒருவராக அசோகமித்திரன்தான் உடனடியாக எனக்குத்
தெரிகிறார். இவ்வாறு கூறுவதன்
நோக்கம் அசோகமித்திரனுக்குப் பாராட்டுத் தெரிவிக்கவல்ல. அவர்
எழுத்தை வைத்துப் பார்க்கும்போது இவ்விலக்கியப் பிரச்சினையின் தன்மையில் சற்றுத்
தெளிவு கிடைக்கும் என்பதுதான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பல்வேறு
மாறுபட்ட கதைக்களங்களை கையாளவும் வடிவங்களில் எழுதிப் பார்க்கவும்
புதுமைப்பித்தனைப் போல எழுத முற்பட்ட நாகராஜன் மொழி நுட்பத்திலும் கச்சிதமான சூழல்
சித்தரிப்புக்கும் கதாபாத்திரங்களின் வார்ப்புக்கும் அசோகமித்திரனை
முன்மாதிரியாகக் கொண்டிருந்தார் என்று சொல்லமுடியும்.
0
தனது
கதைகளின் வடிவத்தைப் பற்றி நாகராஜனுக்கு தெளிவு இருந்திருக்கிறது.
அவரது விரிவான வாசிப்பிலிருந்து தன்னுடைய எழுத்தை எடைபோடும்
மனத்திறத்தின் வெளிப்பாடாகவே இப்படிச் சொல்கிறார். ‘இத்தொகுப்பில்
(கண்டதும் கேட்டதும்)
அடங்கியுள்ள என் கதைகளில் முழுமையாக சிறுகதை இலக்கணத்தைப்
பெற்றிருக்கும் ஒரே கதை ‘யாரோ முட்டாள் சொன்ன கதை’. மற்றவை
எல்லாம் வெறும் முயற்சிகளே. ஆங்கிலத்தில்
சொல்வதென்றால் அவற்றை sketches. Vignettes என்று
கூறலாம். இம்முயற்சிகளிலும்
என்னுடைய ஆற்றலையும் பல்வேறு குறைபாடுகளையும் காணலாம் என்பது வேறொரு விஷயம்.”
பெருமளவு
கதைகள் அளவில் சிறியவை. அதிலும்
சில மிகச் சிறியவை. உள்ளதிலேயே
அளவில் பெரிய கதை “யாரோ முட்டாள் சொன்ன கதை.” அதுவே
கச்சிதமானதாக அவர் உணர்கிறார். அவரது
பழக்கவழக்கங்கள் அவர் எழுத விரும்பியவற்றை எழுதுவதற்கு எதிராக அமைந்திருக்க
வேண்டும். குறைந்த எண்ணிக்கையும்
குறைந்த பக்கங்களும் அமைந்துபோனதற்கும் இதுவே காரணமாக இருக்கவேண்டும்.
‘அப்படியொரு
காலம் அப்படியொரு பிறவி’யின்
மல்லன், ‘நாளை மற்றுமொரு நாளே’வின்
தரகர் அந்தோணி போன்று கச்சிதமான கதாபாத்திரத்தை உயிர்ப்புடன் சித்தரிக்க முடிகிறது.
நான் செய்த நற்செயல்களின் நாயகன்போல வெவ்வேறு களங்களை
கோணங்களை உருவாக்க முடிந்திருக்கிறது. ஜுரம்
கதையைப் போல வறுமையின் யதார்த்தமான முகத்தை அதன் முழு வீச்சோடு உணர்ந்து எழுத
முடிந்திருக்கிறது. கிழவனின்
வருகை, டெர்லின் ஷர்டு போன்று
மாற்று வடிவத்தில் கதைகளை எழுதும் யோசனைகள் இருந்திருக்கின்றன.
கதைகளிலும் சரி நாவல்களிலும் சரி அவரது சூழல் சித்தரிப்புகள்
குறிப்பிடத்தக்கவை. சிற்சில
வரிகளில் அவரால் சொல்லும் இடத்தின் நிழலை ஒளியை வாசனையை வாசகனுக்குக் உணர்த்திவிட
முடிகிறது.
சிறுகதை
குறித்த அவரது முயற்சிகள் கூடிவந்து அமைந்த கதை ‘ஆண்மை’.
அவர் உயிருடன் இருந்தபோது வெளியாகாத அந்த கதை அதிர்ஷ்டவசமாக
கண்டுபிடிக்கப்பட்டு பிரசுரம் பெற்றுள்ளது. நாகராஜனின்
சிறுகதை உலகின் ஆகச்சிறந்த அந்தக் கதையே அவர் அதுவரையிலும் சொல்ல முயன்றவற்றின்
திரட்சியாக அமைந்துள்ளது. அவரால்
முடிந்திருந்தால் நாளை மற்றுமொரு நாளே நாவலின் கந்தன் அளவுக்கு ஆண்மையின்
ராஜத்தையும் அவரால் விரிவான நாவலாக அமைத்திருக்க முடியும். இரண்டும்
ஒன்றில் ஒன்று அமைந்து பொருந்தும் அடர்த்தியுடன் உள்ளன. 1963
இல் எழுதிய குறத்தி முடுக்கை அவர் பிற்காலத்தில் ராஜத்தைக்
கொண்டு எழுதியிருந்தால் அதுவும்கூட நா.ம.நாளே
அளவுக்கு காத்திரமான படைப்பாக அமைந்திருக்கக்கூடும்.
தான்
விரும்பிய களத்தையும் கதாபாத்திரங்களையும் கொண்டு அவர் எழுதிய கதைகளுக்கும் சரி,
அவற்றைத் தவிர பிற கதைகளுக்கும் சரி வாசகர்களிடையே அவை
எந்தமாதிரியான எதிர்வினைகளை ஏற்படுத்தின
என்பது தெரியவில்லை. அவரது
‘கண்டதும் கேட்டதும்’ தொகுப்புக்கு முன்னுரை எழுதிய சுந்தரராமசாமி “தன்னுடைய அனுபவ
உலகத்தின்பால் நாகராஜனுக்கு ஏற்பட்ட தீவிர அக்கறையின் விளைவுகளே இக்கதைகள்” என்று
குறிப்பிடுகிறார். ‘நாகராஜனின்
கலையோ பேதமையும் ஜாலமும் நளினமும் கொண்டது. எதிர்வீட்டு
ஜன்னலில் தோன்றி சில கணங்கள் முகச் சேட்டைகள் காட்டி, நாம்
மயங்கி நெகிழும்போது மறைந்து வெற்று ஜன்னலில் நம் பார்வையைப் பதியவைத்துத்
தவிக்கவைக்கும் குழந்தைபோன்றது.” “கதைகளைச்
சொல்லிச் சொல்லிக் கொல்ல வந்தவர் அல்ல இவர். விளக்கங்களும்
உரைகளும் விரவிவரும் உபந்நியாசம் இலக்கியக் கலை ஆகாது என்பது இவருக்குத் தெரியும்.
பின் கட்டின் சாளரம் ஒன்றைத் திறந்துவிட்டு கம்மென்று வாயை
மூடிக்கொண்டு நம்முடன் நின்றபடி உள்ளே எட்டிப்பார்க்கிறார்.
இந்தத் தருணத்தில் சாளரத்தைத் திறந்ததுதான் தான் செய்த ஒரே
காரியம் என்ற பாவத்துடன், கெட்டிச்
சாயங்கள் என்று நாம் நம்பி வரும் சில உருப்படிகள் சலவைக்கு ஆளாகின்றன.”
தனது
‘கண்டதும் கேட்டதும்’ சிறுகதைத் தொகுதியையும், குறத்தி
முடுக்கு நாவலை தானேதான் பதிப்பிக்க வேண்டியிருந்திருக்கிறது.
பிற்காலத்தில் நாளை மற்றுமொரு நாளே நாவலையும் மிகுந்த
சிரமத்துக்குப் பின் தானேதான் பதிப்பித்திருக்கிறார். சுந்தரராமசாமிக்கு
எழுதிய ஒரு கடிதத்தில் “நீங்கள் குறிப்பிடும் பதிப்பகங்கள் இரண்டும்
துடைப்பான்களைக் கொண்டுகூட என் எழுத்தைத் தொடமாட்டா,” என்று
குறிப்பிட்டிருப்பதிலிருந்து நாகராஜனின் எழுத்துக்கள் வாசக உலகிலிருந்து மட்டுமல்ல
எழுத்துலகிலும்கூட தீட்டாகக் கருதி
ஒதுக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவாகிறது.
தீட்டாக
கருதப்பட்டு ஒதுக்கப்பட்ட நாகராஜனின் எழுத்தின் தொடர்ச்சியை இன்றைய இளம்
படைப்புகளில் இன்னும் உக்கிரமாக காணமுடிகிறது. தீட்டெனப்படுவதும்
அதை ஒதுக்குதலும் தற்காலிகமானதே.
0
நாகராஜனுக்கு
எழுத்தைப் பற்றின தெளிவான தீர்க்கமான பார்வை இருந்திருக்கிறது என்பதை அவரது
கட்டுரைகளிலிருந்து கடிதங்களிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
அதேபோல எழுத்தாளர்களைப் பற்றியும் அழுத்தமான பார்வையை
வெளிப்படுத்தியிருக்கிறார். “சிறந்த
எழுத்தாளர்கள் எப்போதுமே சுய முரண்பாடுகளுக்கு அடிமையானவர்கள்.
அவர்கள் எப்போதுமே தங்களையோ பிறரையோ நேசிப்பவர்களாகவோ அல்லது
எப்போதுமே தங்களையோ பிறரையோ வெறுத்துக் கொள்பவர்களாகவோ இருப்பதில்லை.”
“எந்த எழுத்தாளரைப் பற்றியும் அவர் முதல்தர எழுத்தாளரா,
இரண்டாந்தர எழுத்தாளரா எனத் தீர்ப்பளிக்க முயல்வது சரியல்ல.
அவரது எழுத்தில் எது முதல்தர எழுத்து, எது
இரண்டாந்தர எழுத்து எனப் பகுத்தப் பார்ப்பதே சரி..”
‘புரியாத
எழுத்தை’ மதிப்பிடுவது பற்றிய அவரது எண்ணங்கள் கவனிக்கத்தக்கன.
“எளிதில் புரிவது என்பது ஒரு கலைப்பண்பாக சிலருக்குத்
தோன்றலாம். ஆனால் இத்தகைய எளிமை,
இன்றியமையாத கலைப்பண்பு என்று சொல்லமுடியாது.”
“சில எழுத்தாளர்களைப் படிப்பது ஆரம்பத்தில் எவ்வளவு கடினமாக
இருந்தாலும், அவர்கள் பிரபலமானவர்களாக
இருந்தால், ப்பொறுமைக் குணம் நமக்கு
இயல்பாக வந்துவிடுகிறது. புதிய
எழுத்தாளர்களைப் படிக்கும்போதுதான் சில சந்தேகங்கள் ஏற்படுகின்றன.”
“எந்த எழுத்தாளனைப் டிக்கும்போதும், குறிப்பாக
நமக்குப் பழக்கமில்லாத ஒரு எழுத்தாளனைப் படிக்கும்போது, அவ்வெழுத்தாளனிடத்துக்
குறைந்தபட்ச அனுதாபமும், மரியாதையும்,
பொறுமைக்குணமும் கொண்டிருத்தல் அசவியம்.
இது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் நாம் ஆற்றவேண்டிய பூர்வாங்கக்
கடமை. இதனால்
வாசகன தனது விமச்ன நோக்கைத் தூக்கி எறிந்துவிடவேண்டும் என்று பொருளாகாது.
எழுத்தாளனின் பாணி நம்முள் அழுந்திப் பிடிபடும்வரை வாசகன் தன்
விமர்சன நோக்கை அரைத் தூக்கத்தில் கிடத்தவேண்டும் என்றுதான் பொருளாகும்.”
“புற
உலக நிகழ்ச்சிகளுக்குக் குறைந்தபட்ச இடமே ஒதுக்கிவிட்டு, அந்நிகழ்ச்சிகளின்
விளைவுகளான மனநிலைகளையும் உணர்ச்சிகளையும் வாசகன் உள்ளத்தில் நேரிடையாகப் படும்படி
எழுத முயலுவது, தர்மோ சிவராம
மட்டுமின்றி, ஏனைய பல
எழுத்தாளர்களையும் தொற்றியுள்ள வியாதியாகப் படுகிறது..”
“என்னைப்
பொறுத்தமட்டில் எந்த உணர்ச்சியையும் ‘வாய்விட்டு’ ஒரு வரியில்கூடச் சொல்லாது,
பார்ப்பதற்கும் கேட்பதற்கும் முடியுமானால்,
நுகரவும் தொட்டுணரவும் வேண்டியதை மட்டும் அளவோடு தருவதே
சிறந்த எழுத்து.’
சிறந்த
எழுத்து இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற புரிதலின் தொடர்ச்சியாக தன்னுடைய
எழுத்து அப்படி அமையவேண்டும் என்று முயன்றிருக்கிறார். செறிவான
அவரது கதை வடிவங்களாக்கு அவரது புரிதலும் காரணம்.
0
நாகராஜன்
தமிழ் இலக்கியத்தின் ஆகிருதி மிகுந்த எழுத்தாளர் இல்லை. 34 கதைகளை
எழுதியிருந்தபோதும் சிறந்த சிறுகதையாளர்கள் பட்டியலில் இல்லை அவர்.
குறத்தி முடுக்கு, நாளை
மற்றுமொரு நாளே இரண்டு நாவல்களுமே அவற்றின் கதைக்களத்திற்காகவும் கதாபாத்திர
நேர்த்திக்காகவும் கட்டமைப்புக்காகவும் குறிப்பிடத்தக்கவை.. நாவல்
வடிவத்தைப் பற்றிய புரிதலோ விவாதங்களோ பெரிதாக இல்லாத காலகட்டத்தில் இவை இரண்டும்
புதிய வகைமாதிரியாக அமைந்திருந்தன. துண்டுத்
துண்டான காட்சிகள் வழியாக பொருளற்ற வாழ்வைக் குறித்த முழுமையான புரிதலைத் தரும்
முயற்சியைக் கொண்டவை. குறத்தி
முடுக்கு இன்றைய வாசிப்பில் அதன் பொலிவை இழந்திருக்கலாம். ஆனால்
நாளை மற்றுமொரு நாளே நாவல் இன்றும் அதன் புதுமையான வடிவில் சொல்லப்பட்ட விதத்தில்
நகைமிளிரும் சித்தரிப்பு நேர்த்தியில் முன்னோடி நாவலாகவே தனித்து நிற்கிறது.
இலக்கியத்தின்
விரிவான களத்தில் எழுதுபவர்கள் எல்லோரும் முன்னோடிகளாகவோ முதன்மையானவர்களாகவோ
அமைவது சாத்தியமில்லை. அவ்வப்போது
தோன்றி அபூர்வமான கதைகளையோ நாவல்களையோ கவிதைகளையோ பங்களித்து மறையும் மேதைகளும்கூட
இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களோடும்
அவர்களது பங்களிப்புகளோடு சேர்த்துப் பார்க்கும்போதுதான் ஒட்டுமொத்த இலக்கியமும்
அதன் வரலாறும் முழுமையுறும்.
தமிழ்
இலக்கியத்தில் நாகராஜனின் இடமும் அத்தகையதுதான்.
0
No comments:
Post a Comment