Monday, 11 November 2024

புனைவின் புதிய சாத்தியங்கள் . (விஜயராவணனின் ‘இரட்டை இயேசு’ முன்னுரை)

 



0

தமிழில் இன்று எழுத வரும் இளைஞர்களின் முன்னால் இருக்கும் சவால், பன்னெடுங்காலமாய் இங்கு புனைவின் அனைத்து வகைமைகளிலும் முன்னோடிகளால் ஏற்கெனவே நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதனைகளே. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என எந்தத் துறையில் எழுத முனைந்தாலும் குறைந்தபட்சம் நூறாண்டுகளாக எழுதி நிறுவப்பட்ட படைப்புகளை கடந்து வந்தாக வேண்டும். இந்த ஆக்கங்களில் சிலவற்றையேனும் வாசித்து அவை தரும் வியப்பையும் மலைப்பையும் தாண்டி எனக்கும் சொல்ல இருக்கிறது என்று ஒரு இளைஞன் துணிவது இத்தகைய வலுவான பெரு மரபின் ஒரு கண்ணியாகும் சாத்தியம் தரக்கூடிய வசீகரம்தான்.

இந்த சவாலை சந்திக்கும்போது, ஏற்கெனவே வலுவான படைப்புகளுடன் வீற்றுள்ள புனைவின் எல்லைகளை விரிவாக்கும் முனைப்புடன் எழுதவேண்டிய தேவையுள்ளது. தமிழில் முன்பே எழுதப்பட்ட நன்கறிந்த உலகையும் வாழ்வையும் எழுதாது புதிய வகையான, இதுவரை அறிமுகமாகாத புதிய களங்களை எழுதிக் காட்டுகிறார்கள். உலகின் பல்வேறு தேசங்களை பின்புலமாகக்கொண்டு அவற்றின் கலாச்சார அம்சங்களை இணைத்து கதைகளை உருவாக்குகிறார்கள். இன்றைய புதிய தகவல் தொழில்நுட்பம் அமைத்துத் தந்திருக்கும் வசதி வாய்ப்புகளின் காரணமாக உலகெங்கும் பயணம் செய்து தாங்கள் காணும் அந்நிய நிலத்தையும் வாழ்க்கையையும் நம்பகத்தன்மையுடன் இணைக்கிறார்கள். இன்றைய இளைஞர்களின் இவ்வகையான எழுத்துகள் தமிழ் புனைவுலகுக்கு புதிய வண்ணங்களைச் சேர்க்கின்றன.

விஜயராவணனின் இத்தொகுப்பிலுள்ள கதைகள் தமிழில் எழுதப்பட்டவை என்றாலும் தமிழ் கதைகளல்ல. தமிழ் நிலத்தையோ தமிழ் வாழ்க்கையையோ இவை சொல்லவில்லை. நாம் அதிகமும் அறியாத வேறு நிலங்களில் நிகழும் வெவ்வேறு வாழ்க்கையைச் சொல்ல முனைகின்றன. அறிவியல், போர், பெருந்தொற்று, அதிகாரம் ஆகியவற்றால் உலகளாவிய மனித சமூகம் சந்திக்க நேரும் பாதிப்புகளில் இக்கதைகள் மையம் கொள்வதால் இவை தமிழில் எழுதப்பட்ட உலகக் கதைகள் என்று அடையாளப்படுத்தலாம். களங்களின் அந்நியத்தன்மையோடு இவற்றின் கதைமொழியும் இணைந்து மொழிபெயர்ப்பு கதைகளோ இவை என்ற மயக்கத்தைத் தருவதையும் கவனிக்க முடியும்.

மனித குலத்தின் நினைவடுக்குகளில் மறையாத வடுக்களை ஏற்படுத்தும் போரின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட இரு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. போர் காரணமாக நிறங்களை இழந்து அனைத்தையும் கருப்பு வெள்ளையாகக் காண்பவன் உலகெங்குமுள்ள லட்சக்கணக்கானவர்களில் ஒருவனே. போரால் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டவர்கள் எந்த தேசத்தில் எப்படிப்பட்ட நிலையிலிருந்தாலும் ‘அகதி’ என்ற அடையாளத்தை உதிர்த்துவிட முடியாது. யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒரு விதத்தில் அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டேதான் இருப்பார்கள்.

துப்பாக்கிகளுடன் எதிரெதிர் முனைகளில் நின்றபோதும் ஒரே தொட்டியிலிருந்த இரு தங்க மீன்கள் அவ்விருவரையும் இணைக்கின்றன. பாதையும் கொள்கைகளும் வேறாயினும் தொலைத்த அவரவர் பால்யத்தை அவரவர் நிலத்தில் தேடும் அவர்களது வேட்கை ஒன்றே.

நோய்த் தொற்று காலத்தில் அனைவருமே கைவிடப்பட்ட, அடுத்தவரை அஞ்சிய நிலையின் அபத்தத்தை இன்று உலகம் கடந்து வந்திருக்கிறது. ஆனால், அந்தக் கொடுங்காலம் ஏற்படுத்திய வலுவான உளச்சிக்கல்களிலிருந்து பலர் இன்னும் மீளவில்லை. அது விதைத்த அச்சம் சிலுவையின் மறுபக்கத்தில் அறையப்பட்ட இன்னொருவனைப் போல எப்போதும் தலைமீது அசைந்துகொண்டே இருக்கிறது.

துரிதமாகவும் பிசகில்லாமலும் காரியங்களை செய்துகொடுக்கும் செக்குமாட்டுத் தனத்திலிருந்து மனித எந்திரங்களை விடுவித்து அடுத்த படிநிலைக்கு அவற்றைக் கொண்டுசெல்லும் செயற்கை நுண்ணறிவைக் குறித்த விவாதங்கள் வலுபெற்றுள்ளன. துறைசார்ந்த சொல்லாடல்களுடன் தொழில்நுட்ப விபரங்களுடன் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை வாசிப்பதன் வழியாக அடையும் தெளிவை விட அறிவியல் புனைகதை ஒன்றை படிப்பதன் மூலம் இன்னும் எளிதாகப் புரிந்துகொள்வது சாத்தியம். இத்தொகுப்பிலுள்ள ‘என்றூழ்’ அத்தகைய ஒரு முக்கியமான கதை. மனிதனின் அன்றாட வாழ்விலும் அவனது அக உலகிலும் அந்தரங்கத்திலும் இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் எவ்விதமான செல்வாக்கை செலுத்த முடியும் என்பதை சொல்கிறது இக்கதை. அறிவியலையும் புராணத்தையும் இணைக்கிறது என்ற விதத்திலும் கவனிக்கத்தக்கது. தமிழில் இப்போது கவனம் பெறும் அறிவியல் புனைகதைகளின் பட்டியலில் உறுதியாக இடம்பெறும் தகுதியைக் கொண்டுள்ளது.

முற்றதிகாரம் ஒருபோதும் வரலாற்றையும் நினைவுகளையும் சகித்துக் கொள்ளாது. அவற்றை அழித்தொழிக்கவே தீர்மானிக்கும். அதிகாரத்தை எப்போதுமே கேள்வி கேட்கிறது என்பதால் கலையை அது அஞ்சுகிறது. வரலாற்றையும் நினைவுகளையும் அவற்றை மனிதனுக்குத் தொடர்ந்து நினைவூட்டும் கலைகளையும் அழித்த பிறகு எஞ்சுவது என்ன? வலுவான இந்தக் கேள்வியை எழுப்பும் ‘அகாலம்’ சிறுகதை அந்தக் கேள்விக்கு சாத்தியமான விடைகளை யோசிக்கவும் தூண்டுகிறது.

விஜயராவணனின் இக்கதைகள் யாவும் அந்நிய நிலத்தில் நிகழ்பவை. இவை முன்வைக்கும் கதைக்களங்களும் அதிகமும் நமக்குப் பரிச்சயமில்லாதவை. ஆனால், தன் நேர்த்தியான சித்தரிப்பின் மூலமாக இவற்றை நமக்கு நெருக்கமான கதைகளாக அவரால் மாற்றிவிட முடிந்திருக்கிறது.

‘இன்னொருவன்’, ‘தங்கமீன்கள்’ ஆகிய இரண்டு கதைகள் மாய யதார்த்த கதைப் பாணியில் எழுதப்பட்டவை. இவ்வகையான கதைகளில் உள்ள சவால் வாசகனிடத்தில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதுதான். தங்க மீன்களை பிரசவிக்கும் அழகியை ஒரு போர்ச் சூழலில் மிகுந்த நம்பகத்தன்மையுடன் இணைக்க முடிந்திருக்கிறது. ஆனால், ‘இன்னொருவன்’ கதையில் அந்த நம்பகத்தன்மை அமைந்து வரவில்லை என்ற சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாகவே கதையின் இறுதிப் பகுதியில் அவற்றை தொடுக்க முயன்றிருக்கிறார்.

‘ஆரஞர் உற்றன கண்’, ‘என்றூழ்’ போன்ற மரபான தமிழ்ச் சொற்றொடர்களை தலைப்பாக இட்டிருப்பது, அந்நியமான கதைகளையும் களங்களையும் தமிழ்க் கதைகளாக உணர்த்துவதற்கான முனைப்போ என யோசிக்கச் செய்கிறது.

விஜயராவணனின் முதல் தொகுப்பான ‘நிழற்காடு’ அளித்த அனுபவத்தையும் நம்பிக்கையும் மேலும் உறுதிப்படுத்துவதாக இந்த இரண்டாவது தொகுப்பிலுள்ள கதைகளுமே அமைந்துள்ளன. அதுவே ஒரு புனைகதையாளராக அவர் அடைய நினைக்கும் இலக்கை நோக்கிய அவரது பயணத்தை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

0

No comments:

Post a Comment

ஆங்கில மொழியாக்கத்தில் என் கதைகள்

  சிலர் தங்களது வேலைகளை மட்டும் கவனமாகவும் சிரத்தையாகவும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். அங்கீகாரம், பரிசு, விருது ஆகியவற்றைப் பற்றி ப...