விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருதை இன்று பெருமைப்படுத்தியிருக்கும் மதிப்பிற்க்குரிய இராசேந்திர சோழன், வண்ணநிலவன் இருவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்துக்கும் புனைவு
சாராத பிற துறைகளிலும் பெரும் பங்களித்து வரும் எழுத்தாளர்களைத் தொடர்ந்து கௌரவித்து
வரும் விளக்கு அமைப்புக்கு பாராட்டுக்கள்.
0
‘என் வாழ்க்கையே நான் விடுக்கும் செய்தி’
என்றார் காந்தி. ஒரு மனிதனின் வாழ்வே அவன் இந்தச் சமூகத்துக்கு விட்டுச் செல்லும் செய்தியாக
இருக்கமுடியும்.
ஒரு மனிதன் எழுத்தாளனாக இருந்திருக்கலாம்.
அரசியல்வாதியாக இருந்திருக்கலாம். சமூக செயல்பாட்டாளனாக இருந்திருக்கலாம். எந்தத் துறையாக
இருந்தாலும் அத்துறையில் அவன் சீரிய பங்களிப்புகளைத் தந்திருக்கலாம். ஆனால், இதையெல்லாம்
தாண்டி ஒரு மனிதனாக அவன் எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம்.
ஒரு நேர்காணலின்போது ‘வாழ்வின் பொருள்
என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?’ என்றொரு கேள்வி இராசேந்திர சோழன் அவர்களிடம்
கேட்கப்படுகிறது.
‘ஒரு மனிதன் தான் வாழும் காலத்தில்,
எவ்வளவு மனிதர்களை நேசித்தான், எவ்வளவு மனிதர்களால் நேசிக்கப்பட்டான் என்பதன் விடைதான்
வாழ்வின் சாரம், வாழ்வின் பொருள்’ என்று பதில் சொல்கிறார் இராசேந்திர சோழன்.
இராசேந்திர சோழன் ஒரு ஆசிரியர். எழுத்தாளர்.
சமூக செயல்பாட்டாளர். அரசியல்வாதி. பத்திரிகையாளர். இப்படி அவர் ஆற்றிய பணிகளைச் சொல்லிக்கொண்டே
போகலாம். ஆனால், இவற்றையெல்லாம்விட ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால், அவர் ஒரு
சமூக மனிதன். ஊருக்காக உழைத்தவர். அவர் மனிதர்களை மட்டும் நேசிக்கவில்லை.
ஒட்டுமொத்த மனிதகுலத்தையே நேசித்தவர். எனவேதான், பலராலும் நேசிக்கப்படக்கூடிய ஒருவராக
இருக்கிறார். அதைத்தான் இன்று இங்கே நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
‘நான் ஒரு தனி மனிதனல்ல, ஒரு அமைப்பாகவும்
இயங்குபவன். எனவே, அதற்கான நெறிமுறைகளோடு வாழக் கடமைப்பட்டவன்’ என்ற உணர்வை அவர் ஒருபோதும்
மறந்ததில்லை. அதற்கேற்ப மிக எளிமையாகவே அவர் வாழ்கிறார். அவருடைய தேவைகள் மிக் குறைவு.
தேவைக்கதிகமான எதையும் அவர் வேண்டியவருமில்லை. சேர்த்தவருமில்லை. அந்த எளிமைதான் அனைவரையும்
அவருடன் நெருங்கிப் பழகச் செய்தது. மக்கள் இயல்பாக அவரை அணுகுவதற்கான காரணமாகவும் அமைந்தது.
ஒரு கூட்டத்தில் பேசவேண்டும் என்று யாரேனும்
ஒரு தோழர் அவரிடம் வந்து கேட்டால் அவர் எந்த எதிர்பார்ப்புமின்றி அந்த ஊருக்குச் சென்று
கூட்டத்தில் கலந்துகொள்வார். சைக்கிளிலும் பேருந்திலும்தான் பயணம். சில நாட்களில் ஊருக்குப்
போகும் கடைசிப் பேருந்தைத் தவறவிட்டதும் உண்டு. அதுபோன்ற சமயங்களில் அதே பேருந்து நிலையத்தில்
இரவு முழுவதும் காத்திருந்து, படுத்துத் தூங்கிவிட்டு விடிகாலையில் முதல் பஸ்ஸைப் பிடித்து
ஊருக்கு சென்றுவிடுவார்.
இந்த எளிமைதான் இராசேந்திர சோழன்.
இராசேந்திர சோழன் ஒருபோதும் புகழுக்காக
ஆசைப்பட்டவரில்லை. கட்சிப் பணி, சமூகப் பணி, இலக்கியப் பணி ஆகிய எல்லாவற்றையுமே அவர்
தன் வாழ்வின் ஒரு பகுதியாகவே கருதினார். இவையெல்லாம் அன்றாட நடவடிக்கைகள், இதில் சிறப்பாகச்
சொல்ல என்ன இருக்கிறது என்று எண்ணினார். இலக்கிய விருதுகளையோ பரிசுகளையோ அவர் தேடிப்
போனதில்லை. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் விருது வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.
இந்தத் தெளிவுதான் இராசேந்திர சோழன்.
அதேபோல, எங்கும் எதிலும் அவர் தன்னை
முன்னிறுத்திக் கொண்டதில்லை. வெவ்வேறு அரசியல் இயக்கங்களில் பங்கெடுத்தபோதும், சமூக
செயல்பாடுகளில் ஈடுபட்டபோதும் அவர் தன்னை முன்னிறுத்திக் கொண்டதில்லை. தன்னை ஒருபோதும்
தலைவர் என்று எண்ணிக்கொண்டதில்லை. களத்தில் இறங்கிப் பணியாற்றும் தொண்டனாகவே இருந்திருக்கிறார்.
இந்த அடக்கம்தான் இராசேந்திர சோழன்.
ஒருபோதும் அவர் தன்னுடைய பிம்பத்தைப்
பற்றிக் கவலைப்பட்டதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், பொதுவெளியில் தன்னைப் பற்றிய
பிம்பம் எப்படி இருக்கும் என்ற கவனத்துடன் எந்தக் காரியத்தையும் அவர் செய்ததில்லை.
தனக்கு சரி என்று படும் வேலைகளை எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்தார். தனக்கு சரி என்று
படும் கருத்துகளையே அவர் சிறிதும் தயங்காமல் பேசினார், எழுதினார். தன்னுடைய சொந்த பிம்பத்துக்காக, நலனுக்காக யாருடனும்
எதனுடனும் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை.
கருத்து முரண்பாடுகள் ஏற்படும்போது எந்தவித
சமரசமும் செய்து கொண்டதில்லை அவர். 1970 முதல் 1985 வரையிலும் மார்க்சிய ஆதரவாளராக
இருந்தார். கருத்து முரண்பாடு ஏற்பட்டபோது அதிலிருந்து விலகி ‘தமிழ் தேசப் பொதுவுடமைக்
கட்சி’யைத் தொடங்கினார். 2005ம் ஆண்டு வரையிலும் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகினார். பிறகு தமிழ்த் தேச மார்க்ஸிய கட்சியைத்
தொடங்கி நடத்தினார். தமுஎச வின் நிறுவனர்களில் ஒருவர் அவர். ஆனால், கருத்து முரண்பாடு
ஏற்பட்டபோது அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்.
இந்த நேர்மைதான் இராசேந்திர சோழன்.
அரசியல், சுற்றுப்பயணங்கள், மேடைப் பேச்சுகள்,
எழுத்து என்று ஓயாத பணிகளுக்கு நடுவே அவர் தொடர்ந்து செய்துகொண்டிருந்த இன்னொரு காரியம்,
கைப்பந்தாட்டம். அவர் ஒரு கைப்பந்தாட்ட வீரர். மயிலத்தில் இருக்கும் நாட்களில் அன்றாடம்
மாலை நேரங்களில் அவர் விளையாட்டில் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. தன்னுடைய உடல் ஆரோக்கியத்தின்
மீது அக்கறை கொண்டவராய் இருந்திருக்கிறார்.
இராசேந்திர சோழன் ஒரு இலக்கியவாதியாக
தந்திருக்கும் படைப்புகளைவிட, சமூக செயல்பாட்டாளராக செய்திருக்கும் காரியங்களை விட
முக்கியமானவை ஒரு மனிதனாக தன் வாழ்வின் மூலம் இந்தச் சமூகத்துக்கு அவர் சொல்லியிருக்கும்
செய்திகளே.
எளிமையான வாழ்வு, புகழுக்காக ஆசைப்படாமை,
எங்கும் எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத அடக்கம், தன்னுடைய பிம்பத்துக்காக எதிலும்
சமரசம் செய்துகொள்ளாத நேர்மை – இவையெல்லாம்தான் அவருடைய வாழ்வு நமக்கு சொல்லும் செய்திகள்.
இச் சமூகத்துக்கு இராசேந்திர சோழன் அவர்களின் முக்கியமான பங்களிப்புகள்.
0
இன்று அவருக்கு வழங்கப்பட்டிருக்கும்
இந்த ‘விளக்கு’ விருது அவருடைய ‘புனைவல்லாத பிற பங்களிப்புகளுக்காக’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புனைவு எழுத்துகளுக்காக இராசேந்திர சோழன் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தாலும்
பொருத்தமாகவே இருந்திருக்கும். ஆனால் புனைவு சாராத அவருடைய பிற பங்களிப்புகளுக்காக
இந்த விருது வழங்கப்பட்டிருப்பது என்பது மேலும் சிறப்பானது. கூடுதலான முக்கியத்துவம்
கொண்டது. ஏனெனில், அவர் ஒரு புனைவெழுத்தாளன் மட்டுமல்ல. பத்திரிகையாளர், நாடக ஆசிரியர்,
கட்டுரையாளர் என பல்வேறு பங்களிப்புகளையும் செய்துள்ளார். எனவே, அவருடைய புனைவு அல்லாத
பிறதுறை பங்களிப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மிகப் பொருத்தமானதுதான்.
மக்களின் தேவை சார்ந்து இயங்க வேண்டுமென்பதே
அவரது எண்ணம். அதுவே அவருக்கு மன நிறைவளிக்கும் விஷயமாகவும் இருந்தது. அப்படித்தான்
அவர் தன் வாழ்வையும் பணிகளையும் அமைத்துக்கொண்டார்.
புனைவு சாராத அவரது பங்களிப்புகளை மூன்று
வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒன்று, சமூக செயல்பாடுகள் சார்ந்த எழுத்துகள்.
இரண்டாவதாக, அறிவுச் செயல்பாடுகள் சார்ந்த எழுத்துகள். மூன்றாவதாக, இலக்கியச் செயல்பாடுகள்
சார்ந்த எழுத்துகள்.
அன்றாட வாழ்வில் மக்கள் நேரடியாக சந்திக்க
நேர்ந்த பிரச்சினைகளையும் சிக்கல்களையும் தெளிவுபடுத்தும்விதமாக பல கட்டுரைகளையும்
எழுதியுள்ளார். ஒரு சமூகப் பிரச்சினைக்காக நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராடுவதும்
அதைத் தீர்ப்பதற்காக இயன்ற காரியங்களை மேற்கொள்வதும் முக்கியமான சமூகப் பணி. அதைவிட
முக்கியம் அவ்வாறான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவது.
இராசேந்திர சோழன் அவ்வாறான முக்கியமான பணிகளை மேற்கொண்டார். எப்போதெல்லாம் இந்த சமூகத்துக்கு
ஒரு தேவை இருந்ததோ, நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு
நூல்களை எழுதினார். எளிமையான விதத்தில் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதினார்.
1980களில் கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கு
அடிக்கல் நாட்டப்பட்டபோது தமிழகமெங்கும் அதைப் பற்றிய விவாதங்கள் எழுந்தன. அணுமின்
நிலையம் தேவையா இல்லையா, அதன் அணுகூலங்கள் என்ன, அபாயங்கள் என்ன என்று வெவ்வேறு விதங்களில்
பேசப்பட்டன. ஆனால், சாதாரண மக்களுக்கு இதைப் பற்றி எந்தத் தெளிவும் இருக்கவில்லை. அறிந்துகொள்வதற்கான
வழியும் இருக்கவில்லை. அவர்களின் குழப்பத்தைத் தெளிவுபடுத்தவேண்டும் என்ற எண்ணத்தில்,
கடுமையான தேடலுக்கும் வாசிப்பிற்கும் பிறகு ‘அணு ஆற்றல், அறிந்ததும் அறியாததும்’ என்ற
தலைப்பில் ஒரு நூலை எழுதினார். அணு உலை பற்றிய எல்லா தகவல்களையும் துறைசார் நிபுணர்களிடமும்
பேராசிரியர்களிடமும் கேட்டுத் தெளிந்து அந்த நூலை எழுதினார். ஒரு அறிவியல் நூலாக இல்லாமல்
அணு ஆற்றலைக் குறித்தும் அணு உலைகளின் அபாயங்கள் குறித்தும் மிக எளிமையாக எல்லோரும்
புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட நூல் அது.
தீண்டாமை, சாதியம் குறித்த விரிவான கட்டுரைகளை
வெவ்வேறு இதழ்களில் அவர் எழுதியுள்ளார். அவை நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சாதியின்
தோற்றம், மக்களிடம் அது நிலைகொண்ட வரலாறு, சாதி அரசியல், சாதிய வன்முறைகள், சாதி ஒழிப்பின்
சாத்தியங்கள் என்று சமூகத்துக்கும் சாதியத்துக்குமான பல்வேறு அம்சங்களைக் குறித்து
இக்கட்டுரைகள் பேசுகின்றன. இவை பிரச்சினைகளை மட்டும் பேசவில்லை. அதற்கான தீர்வுகளையும்
முன்வைக்கின்றன.
சாதி ஒழிப்புக்கான ஒரு வழிமுறையாக கலப்பு
மணத்தை முன்மொழிகிறார் இராசேந்திர சோழன். அதை பேச்சிலும் எழுத்திலும் மட்டும் அவர்
சொல்லவில்லை. தன் வாழ்விலும் அவர் செய்து காட்டியிருக்கிறார். அவருடைய குடும்பத் திருமணங்கள்
அனைத்துமே கலப்புத் திருமணங்களே.
பெண் விடுதலை, பெண்ணுரிமை சார்ந்து அவருடைய
சிந்தனைகள் மிக முக்கியமானவை. 35 ஆண்டுகளுக்கும் முன்பு அவர் எழுதிய ‘சிறகுகள் முளைத்து’
எனும் குறுநாவல் ஏற்படுத்திய அதிர்வுகள், இந்தச் சிந்தனைகளை வலுப்படுத்தின. இதைத் தொடர்ந்து
பல்வேறு கட்டுரைகளை எழுதச் செய்தன. முக்கியமாக பொருளியல் தளத்தில் பேசப்படுகிற அளவுக்கு
ஆண் பெண் சமத்துவம், பெண்ணுரிமை போன்ற கருத்துகள் பண்பாட்டுத் தளத்தில் பேசப்படுவதில்லை, அப்படிப் பேசப்படுபவை பழைய மதிப்பீடுகளையே தூக்கிப்
பிடித்தன, முற்போக்காக இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக வலுவாக தன் கருத்துகளை
முன்வைத்தார்.
புனைவு சாராத எழுத்துகளில் இரண்டாவது
வகை, அறிவுச் செயல்பாடுகள் சார்ந்த எழுத்துகள்.
அறிவு சார்ந்த வெற்றிடத்தை நிரப்புவது
தன் வேலை என்று கருதினார்.
சுயசிந்தனை இராசேந்திர சோழன் அவர்களின்
பலம். அவரது தனித்தன்மை. எல்லாவற்றைக் குறித்தும் சுயமான ஒரு பார்வை இருந்தது. தனது
சிந்தனையின் வழியாக தெளிவுற அறிந்த ஒன்றையே அவர் பேசினார், எழுதினார். காந்தி, பெரியார்,
அம்பேத்கர் உள்ளிட்ட அனைவரைப் பற்றியும் பொதுவெளியில் உள்ள வழக்கமான கருத்துகளையும்
புரிதல்களையும் அப்படியே எடுத்துக் கொள்ளவில்லை அவர். அவர்களைப் பற்றியும் அவர்களது
சமூகப் பங்களிப்புகள் பற்றியும் தான் புரிந்துகொண்ட வகையில் விமர்சனங்கள் கூடிய கண்ணோட்டங்களையே
வெளிப்படுத்தினார்.
இந்த சுயசிந்தனையின் அடிப்படையைக் கொண்டே
மக்கள் பிரச்சினைகளை அணுகினார். அந்தப் பிரச்சினைகளுக்கான காரணங்களைப் பற்றி சிந்தித்தார்.
அந்தக் காரணங்களையும் அவற்றைக் குறித்த குழப்பங்களையும் தெளிவுபடுத்துவது முக்கியம்
என்று எண்ணினார். எனவே, எளிமையான முறையில் அவற்றுக்கு விளக்கங்களை தருவதற்காக தொடர்ந்து
அவர் கட்டுரைகளை எழுதினார்.
‘கடவுள் என்பது என்ன?’ எனும் சிறு நூல்
அவற்றுள் ஒன்று. கடவுளை எப்படிப் புரிந்துகொள்வது, மனிதனுக்கு கடவுள் தேவையா, பக்திக்கும்
மூடநம்பிக்கைக்கும் உள்ள இடைவெளி போன்ற அடிப்படையான குழப்பங்களைத் தீர்க்கும் வகையில்
இக்கட்டுரைகள் அமைந்திருந்தன.
மொழி, மொழி அரசியல் சார்ந்த விவாதங்களிலும்
இராசேந்திர சோழன் அவர்களுக்கு தெளிவான புரிதல் இருந்தது. தூய தமிழ் என்பதில் பிடிவாதமாய்
இருக்கவேண்டியிதில்லை. மொழிக் கலப்பு என்பது இயல்பானது, வளர்ச்சிப்போக்கின் ஒரு படிநிலை
என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். ‘மொழித் தூய்மையும் இனத்தூய்மையும் வரலாற்று ரீதியாகச்
சாத்தியமில்லை’ என்று கூறியிருக்கும் அதே நேரத்தில் ‘கலப்பு என்பது சுய இழப்பு வரை
சென்றுவிடக்கூடாது’ என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறார்.
மார்க்சிய தத்துவமே அவரது வாழ்வுக்கும்
செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது. மனிதர்களையும், மனித சமூகத்தையும், இயற்கையையும்,
இந்த உலகத்தையும், பிரபஞ்சத்தையும் புரிந்துகொள்ள உதவும் சிறந்தவொரு முறையியலாக இருப்பது
மார்க்சியமே என்று உறுதியாக நம்புகிறார். மார்க்சியம் ஒரு சமூக அறிவியல். எந்தவொரு
சமூகமும் கற்கவேண்டிய, கற்றுப் புரிந்துகொள்ள வேண்டிய தத்துவம் அது என்று கூறுகிறார்.
அவ்வாறான ஒரு தத்துவத்தை எளியோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் ‘மார்க்சிய
மெய்யியல்’ என்ற நூலை எழுதியுள்ளார்.
புனைவு சாராத எழுத்துகளில் மூன்றாவது
வகை, இலக்கியச் செயல்பாடுகள் சார்ந்த எழுத்துகள்.
கலை, இலக்கியம் குறித்த தெளிவான பார்வையைக்
கொண்டவர் இராசேந்திர சோழன். செம்மலர், தீக்கதிர் போன்ற இடதுசாரிப் பத்திரிகைகளிலும்
அவரால் கதைகளை எழுத முடிந்தது. கசடதபற, அஃக், கணையாழி போன்ற இலக்கியப் பத்திரிகைகளிலும்
கதைகள் எழுத முடிந்தது. ‘க்ரியா’ அவரது ‘எட்டுக் கதைகள்’ தொகுப்பை வெளியிட்டது. அத்துடன்,
இலக்கியத்தின் பணி என்ன என்பதிலும் அவரது சிந்தனை மிகத் தெளிவாக இருந்தது.
முத்தமிழ்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டிருந்தபோதும்
தமிழ் இலக்கியத்தில் நாடகத்துக்கான முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும்
நாடகத்தை இலக்கியச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து
நடந்து வருகின்றன. இராசேந்திர சோழன் நாடகத்தின் மீது ஆர்வம் கொண்டவர். காந்தி கிராமத்தில்
பாதல் சர்க்கார் அவர்களது தலைமையில் பத்துவார காலம் நடந்த நாடகப் பயிற்சிப் பட்டறையில்
கலந்துகொண்டு நாடகம் பயின்றார். நெய்வேலி அனல் மின் நிலையத் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு
நாடகக் குழுவை அமைத்தார். புதிய கல்விக் கொள்கையை விமர்சன நோக்கில் அணுகும் ‘நாளை வெள்ளம்
வரும்’ நாடகத்தையும் நெருக்கடி நிலை அடக்குமுறைகளைப் பற்றிய ஒரு நாடகத்தையும் எழுதி
இயக்கினார். அவர் எழுதிய நாடகங்கள் ‘அஸ்வகோஷ் நாடகங்கள்’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
நாடகக் கலைக் குறித்து தமிழில் ஒரு நல்ல
நூல் இல்லை என்று உணர்ந்து அதைப் பற்றிய விரிவான புத்தகம் ஒன்றை எழுதினார். ‘அரங்க
ஆட்டம்’ என்ற அந்த புத்தகம் மூன்று பகுதிகளைக் கொண்டது. நாடகத்துக்கும் தமிழ் இலக்கியத்துக்கும்
இராசேந்திர சோழனின் முக்கியமான பங்களிப்பு என்று இந்த நூலைக் குறிப்பிடலாம்.
தொண்ணூறுகளில் தமிழ் இலக்கியத்தில் பின்
நவீனத்துவம் ஒரு பெரும் அலை வீசியது. அனைவரையும் அச்சுறுத்தியது. இளைஞர்கள் பலரும்
என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பித் திகைத்தனர். அவர்களது குழப்பத்தைத் தீர்க்கும்
வகையிலும் அச்சத்தைப் போக்கும் வகையிலும் இராசேந்திர சோழன் ஒரு நூலை எழுதினார். அதுதான்
‘பின் நவீனத்துவம் – பித்தும் தெளிவும்’ என்பது.
சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள்,
கட்டுரைகள் என்று எழுதிக் குவித்ததைத் தவிர வெவ்வேறு காலகட்டங்களில் பத்திரிகைகளிலும்
அவரது பங்களிப்புகள் இருந்துள்ளன. ‘உதயம்’, ‘பிரச்னை’ போன்ற இதழ்களில் பொறுப்பாசிரியராகவும்
இருந்திருக்கிறார். ‘மண்மொழி’ இதழின் ஆசிரியராக இருந்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தியிருக்கிறார்.
0
இராசேந்திர சோழன் மார்க்ஸை ஆதர்சமாகக்
கொண்டவர். அவரையே தனது லட்சிய மாதிரியாகக் கொண்டவர்.
மார்க்ஸ் அடிப்படையில் ஒரு கலைஞன். தத்துவத்
தேடலும் மனிதாபிமானமும் விடுதலை வேட்கையும் கொண்ட அசலான கலைஞன். இந்த சாரமே அவரை பொருளாதார,
சமூக, அரசியல் ஆய்வுகளுக்கு இட்டுச் சென்றது.
அவரை ஆதர்சமாகக் கொண்ட இராசேந்திர சோழன்
அவர்களும் மார்க்ஸைப் போலவே தன் வாழ்வை அமைத்துக்கொண்டார்.
மார்க்ஸியமும் இலக்கியத் தெளிவும் சமூக
அக்கறையும் கலந்த ஒரு மனிதர் இரா.சோ.
0
இங்கு நாம் தகுதியில்லாத பலரையும் ‘ஹீரோ’க்களாகக்
கொண்டாடுகிறது நம் தமிழ் சமூகம். தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறது. ஆனால்,
உண்மையில் சக மனிதர்களைப் புரிந்துகொண்டு, அறிவை ஜனநாயகப்படுத்தி ஒரு சமூக மனிதனாக
வாழ்ந்திருக்கும் இரா.சோ தான் உண்மையில் ஒரு ‘ஹீரோ’. இன்னும் சரியாகச் சொல்லப்போனால்
‘அன்சங்க் ஹீரோ’.
அப்படிப்பட்ட ‘அன்சங்க்’ ஹீரோவை இன்று
விளக்கு அமைப்பின் இந்த புதுமைப்பித்தன் விருதை வழங்கிக் கொண்டாடுகிறோம். இந்தக் கொண்டாட்டம்
தொடரவேண்டும். இந்தக் கொண்டாட்டங்களின் வழியாகவே இன்றைய இளைய தலைமுறையினருக்கு இந்த
உண்மையான ‘ஹீரோ’வின் சாதனைகளை, பங்களிப்புகளை
அடையாளம் காட்டமுடியும்.
0
(சென்னையில் 27.11.2022 அன்று நடைபெற்ற விளக்கு விருது விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.)
No comments:
Post a Comment