Monday, 11 November 2024

க.சீ.சிவகுமார் - காற்றாடைக் கலைஞன்


எப்படி, எப்போதென்று சரியாக நினைவில்லை. 1997ஆம் ஆண்டின் பிற்பகுதி. அப்போது நான் ஈரோட்டில் இருந்தேன். ஒருநாள் பின்மதியத்தில், பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள என் அலுவலகத்துக்கு வந்தார். அவரை முன்பின் எனக்குத் தெரியாது. அநேகமாக என்.ஸ்ரீராம் சொல்லியிருக்கவேண்டும். அலுவலகத்தைப் பொறுத்தவரை நான் ஒரு அலுவலர். என் இலக்கிய முகம் யாருக்கும் தெரியாது. காட்டிக்கொள்வதுமில்லை.

நெடிய, மெலிந்த உடல்வாகு. அம்மைத் தளும்புகள் துலக்கமாகத் தெரியும் முகம். சிறிதுநேரம்கூட முகத்திலிருந்து சிரிப்பை விலக்கி வைக்கவோ, மறைக்கவோ முடியாத தன்மை. தேடி வந்த என்னைக் கண்டுகொண்டதும் அந்த முகத்தில் அப்படியொரு மலர்ச்சி. பலநாள் பழகியதுபோலொரு மகிழ்ச்சி. அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்தியா டுடேயில் முதல் பரிசு பெற்ற அவரது கதையை நான் வாசித்திருந்தேன். பேச்சைவிட சிரிப்புதான் இயல்பாகவே முந்திக்கொண்டு நின்றது. அவரது கண்கள் அலைபாய்ந்தன. அலுவலகத்தில் உள்ள எல்லோரையும் தொட்டுப் பார்த்தன. குறிப்பாக பெண்களை. தேநீருக்காகக் கீழே அழைத்துச் சென்றேன். பேருந்து ஒன்றில் தற்காலிக நடத்துனர் பணி என்று சொன்னார். யாரேனும் விடுப்பில் செல்லும்போது அழைப்பார்கள் என்றும். அந்தச் சந்திப்பின்போது இலக்கியம் குறித்து பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. அதைப் பற்றி அவர் அதிக ஆர்வமும் காட்டிக்கொள்ளவில்லை. காண்பன, கேட்பன அனைத்துமே அவருக்கு வேடிக்கைதான், கொண்டாட்டம்தான். எல்லாவற்றையுமே ரசிக்கும் தன்மை.

தொடர்ந்து அவ்வப்போது தனது பணி முடிந்த வேளைகளில் அலுவலகம் வந்தார். வந்தவுடனே அவரது கண்கள் பரபரப்புடன் பெண்களைத் தேடும். யாரேனும் ஒருவர் கண்ணில் தட்டுப்படாதபோது வெகு இயல்பாக ‘அந்த அம்மிணியைக் காணோம்’ என்று சிரித்தபடியே கேட்பார். ஒருமுறை, அவர் என் எதிரில் இருக்கும்போது சக பெண் அலுவலர் ஒருவர் என்னிடம் ஏதோ சந்தேகம் கேட்க வந்தபோது நான் ‘அப்பறம் பாத்துக்கலாம்’ என்று அனுப்பிவிட்டேன். க.சீ ‘இப்பவே பாத்துருக்கலாமே பாஸ்’ என்று சிரித்தார்.

சிவகுமாரின் இயல்பு அது. அவரது வரி ஒன்றுண்டு ‘பெண்கள் என்றாலே அழகுதான். அதென்ன அழகிய பெண் என்று சொல்லவேண்டியிருக்கிறது?’

0

தமிழினி பதிப்பகம் தொடங்கப்பட்டு புதிய எழுத்தாளர்களின் நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்த காலகட்டம் அது. வசந்தகுமாருக்கு க.சீயின் கதைகள் பிடித்திருந்தன. இரண்டு காரணங்கள். முதலாவது, பழந்தமிழ் கவிதை வரிகளும் பகடியும் இணைந்து உருவான ஒரு மொழி. இரண்டாவது, சிறுபத்திரிகைகளுக்கேயுரிய இறுக்கமான மொழியும் பாவனையும் இல்லாத இயல்பான வெளிப்படையான கூறுமுறை. க.சீ யின் கதைளை ஒவ்வொன்றாக சொல்லி வியந்திருக்கிறார். அவரது கதை வரிகள் பலவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். ‘மின்னலெனவோ, வானவில்லெனவோ வந்துபோகாது அவளில் நிரந்தர வானமாய்த் தங்கிவிட்ட யௌவனம் – துர்க்கனவுகளின் பெருங்கூடாரம். நள்ளெண் யாமங்களில் கந்தர்வரும், கிங்கரரும் கனவுகளில் ஏங்கிய சஞ்சலம். பூக்களுடன் அவள் பகிர்ந்த வேதனையை வண்டுகள் ரீங்கரித்து அலைந்தன. வீண்மீன்களை எண்ணிக்கையிடத் தலைப்பட்டாள். உடுக்குழுமத்தில் தோற்றப்பிறழ்ச்சி. தோன்றாதிருக்கும்படி பகல் ஒரு வினாடியாய்க் குறுகிவிட்டிருந்தது அவளுக்கு. அவளைத் தொட்டால் நேர்கிற அனுபவம் மரணமோ என இளைஞர்கள் பயந்தனர். தேவதை ஏறிய பெண். மங்காத் தங்கம் கொண்டு தீர்த்த வீணை. விரைவு கொண்ட எந்தத் தந்தியிலும் ஒரே சந்தம். யௌவனம். மாறாத சௌந்தர்யம். அதி ஆழத்தின் இழைகளென வடிவுகொண்ட கூந்தற்தொகையில் ஒரு நரை கண்டுவிடாதா என ஏங்கினாள்.’ (தீண்டாநாயகி)

தமிழ் புனைவுலகில் இப்படியொரு எழுத்தாளன் வருவான் என்று யோசித்ததேயில்லை என்று வியந்ததுண்டு. ‘கன்னிவாடி’ தொகுப்பு உருவான காலத்தில் க.சீ ராயப்பேட்டை அலுவலகத்தில்தான் குடியிருந்தார் என்று சொல்லவேண்டும். தேநீரும் புகையும் சிரிப்புமாகக் களைகட்டியிருந்தது தமிழினி அலுவலகம்.

நாவலோ சிறுகதையோ வசந்தகுமாருக்கு அதற்குரிய களத்தை, மனிதர்களை பார்க்கவேண்டும். கன்னிவாடிக்கும் சென்றார், யூமா வாசுகியுடன். இரண்டு நாட்கள் தங்கி சிவகுமாரின் கதைக் களங்களை, மனிதர்களைப் பார்த்து ரசித்தார். நிறைய படங்கள் எடுக்கப்பட்டன. யூமா வாசுகி ஓவியங்களை வரைந்தார். ஒரு சிறுகதைத் தொகுப்பு, இவ்வாறு படங்களுடனும் ஓவியங்களுடனும் தயாரானது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. க.சீ அப்போது அறிமுக எழுத்தாளர். அவரது முதல் தொகுப்பு. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரும் தமிழினியில் தொகுப்பு வெளியிட ஆசைப்பட்டிருந்தபோது, க.சீக்கு வசந்தகுமார் அப்படியொரு பெருமையைச் சேர்த்தார். அவர்மீது பெரிய நம்பிக்கை இருந்தது.

தொகுப்பு தயாரானதும் அதை அவரது கிராமத்திலேயே வெளியிடுவது என்று முடிவானது. அதுவொரு எளிய கிராமம். எந்த வசதிகளும் கிடையாது. ஊர் மந்தையில் புத்தக வெளியீடு நடந்தது. பதினைந்துக்கும் மேற்பட்ட நண்பர்கள். என்ன நடக்கிறது என்பதே அங்கிருந்த பலருக்கும் புரியவில்லை. கூட்டம் முடிவதற்கு முன்பே கடைசி பஸ் போய்விட்டது. எங்கே என்றாலும் காலையில்தான் போகமுடியும். விடிய விடிய அதே ஊர் மந்தையில் அரசமரத்தடியில் பேசிக் களித்தனர் நண்பர்கள். அப்படியொரு புத்தக வெளியீடு நடக்குமா என்பது சந்தேகம்தான்.

0

எழுத்தாளனுக்கு கன்னிவாடியில் என்ன வேலை? க.சீ சென்னைக்குப் போனார். அவரது இயல்புக்கு நண்பர்கள் சுலபமாக வாய்த்தனர். பாஸ்கர் சக்தி ஏற்கெனவே விகடனில் இருந்தார். க.சீயின் இயல்புக்கு சென்னை மிகவும் பிடித்திருந்தது. கவிஞர்கள் எழுத்தாளர்களின் கூடுகைகள், இரவுக் கொண்டாட்டங்கள் அவரை வசீகரித்தன. அவ்வப்போது கதைகளும் எழுதினார். ஒரு சில பத்திரிகைகளில் வேலையும் பார்த்தார்.

0

சென்னையில் ஒரு நெருக்கமான நண்பர். முப்பதாண்டு கால நட்பு. அப்போது அவர் சென்னையில் தனியாக வசித்தார். அவரது வீட்டுக்கு யாரும் எப்போது வேண்டுமானாலும் போகலாம். பூட்டியிருந்தாலும் கவலையில்லை. சிரமமில்லாமல் சாவியை எடுத்துத் திறந்து கொள்ளலாம். ஓய்வெடுக்கலாம். பிறகு முகம் கழுவியோ குளித்தோ புத்துணர்வுடன் ஒப்பனை செய்துகொண்டு வெளியேறலாம். இரவு நேரங்களில் வேறெங்கும் போக வழியில்லை என்றால் அங்கேயே தங்கலாம். வீட்டின் சமையலறையில் நல்ல காப்பி பொடியும் பாலும்கூட இருக்கும்.

அந்த நண்பரும் க.சீக்கு பழக்கமானார். அடிக்கடி வந்து போகத் தொடங்கினார். ஒரு நாள் இரவில் தங்கியிருக்கிறார். விடிந்ததும் குளித்துவிட்டு புறப்படும்போது தனது சட்டையை எடுக்கிறார். அருகில், ஹேங்கரில் இன்னொரு புதிய சட்டை. அவருக்குப் பிடித்திருக்கிறது. ‘இந்த சட்டை எனக்கு நல்லா இருக்குமில்ல’ என்று சொல்லிக்கொண்டே அணிகிறார். கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறார். ‘பாஸ், நல்லா இருக்கா?’ என்று நண்பரிடம் கேட்டுச் சிரிக்கிறார். நண்பருக்கு இதுவொன்றும் புதிய விஷயமில்லை. அறை வந்து தங்கும் பலரும் இதுபோன்று அவருக்குச் சொந்தமான பல பொருட்களை உரிமையோடு எடுத்துச் சென்றதுண்டு. அவரும் சிரித்தபடியே ‘நல்லா இருக்கு’ என்று சொன்னதும் விடைபெற்றுச் சென்றுவிட்டார். அந்த சட்டையை முதல்நாள்தான் நண்பர் வாங்கி வந்திருந்தார். ஒரு முறைகூட போட்டிருக்கவில்லை.

க.சீக்கு எல்லாமே பொதுவுடமைதான். தனிமனிதனுக்கென்று இந்த உலகில் எதுவும் சொந்தமில்லை.

0

சென்னை மல்லிகா விடுதியில் நானும் மோகனும் தங்கியிருந்தோம். திரைப்படச் சங்கங்களின் கூட்டமைப்புக்கான தேர்தலில் வாக்களிப்பதுதான் பணி. மதியமே வேலை முடிந்துவிட்டது. மாலையில் வசந்தகுமார், யூமா வாசுகி உள்ளிட்ட சில நண்பர்கள் அறையில் கூடினார்கள். பேச்சும் சிரிப்புமாய் அறை கலகலத்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு க.சீ வந்து சேர்ந்தார். தோற்றம் பற்றியோ உடை குறித்தோ பெரிய கவனமில்லாமல் குதூகலமான சிரிப்போடு உள்ளே வந்தவரை அறையின் சௌந்தர்ய கோலம் மேலும் உற்சாகப்படுத்தியது.

நாற்காலியின் மீது கிடந்த துவாலையைக் கட்டிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தார். சோப்பு மணக்க தலைதுவட்டிக்கொண்டு வந்தார். அலங்கார மேசையின் மீதிருந்த நண்பரின் வாசனை திரவியத்தை ஆசையுடன் பீச்சிக்கொண்டார். எப்போதும்போல முகம் முழுக்கச் சிரிப்பு. உதட்டில் எளிய பரவசம்.

“இதுமாதிரி வாரத்துக்கு ஒருக்கா அமைஞ்சிட்டா சொர்க்கந்தான் கவிஞரே” ஆசையுடன் தம்ளரை எடுத்து கொஞ்சுவதுபோல முத்தமிட்டார்.

அடுக்கடுக்காக கதைகள் பொங்கின. பத்திரிகை அலுவலகங்களில், சினிமா கதை விவாதங்களில், பிரபலமான நடிகரின் வீட்டில், விடுதியொன்றின் மதுக்கூடத்தில் நடந்தவைகளை அவருக்கேயுரிய பாணியில் விவரித்தார். அச்சகம் ஒன்றில் காண நேர்ந்த அழகியொருத்தியுடனான தற்காலிக காதல் தருணங்களை கண்சிமிட்டியபடியே உவகையுடன் நினைவுகூர்ந்தார். அம்மாவைப் பார்த்து நாளாயிற்று, போயிட்டு வரணும் என்று இரண்டொரு முறை சொன்னார்.

நானும் மோகனும் அன்றிரவே ஊர் திரும்பும் திட்டத்தில் இருந்தோம். அறையைக் காலி செய்யவேண்டும்.

“பாசு… இன்னிக்கு ராத்திரி இங்க தங்கிக்கலாமா?”

“காலையில எடுத்த ரூம்தான். இருக்கலாம்.”

“ஒண்ணில்ல பாசு. காலையில ஒரு கதை எழுதித் தரணும். இன்னும் ஒரு வரி எழுதல. ராத்திரி இங்க தங்கி எழுதிர்லான்னு பாக்கறேன்.”

இரவு பத்துமணிக்கு கீழே வந்து அவருக்கு விடை கொடுத்தபோது அருகில் இருந்த கடையிலிருந்து ஒரு குயர் தாளையும் வாங்கிக்கொண்டார்.

“எழுதிக் குடுத்தா ரெண்டாயிரம் கெடைக்குமில்ல சிவா?”

“ஆமா பாசு. ஆனா இந்தக் கதைக்கு பணத்தை அட்வான்ஸா வாங்கிட்டேன். செலவுமாயிருச்சு. இத நாளைக்கு குடுத்துட்டு அடுத்த கதைக்கு அட்வான்ஸ் வாங்கிர்லாம் பாசு.”

ஒரு பாக்கெட் சிகரெட், தீப்பெட்டி, வெள்ளைத்தாள் சகிதம் அறைக்கு அவர் திரும்பிப் போனார்.

சில நாட்களுக்குப் பிறகு சந்தித்தபோது அந்தக் கதையைப் பற்றி விசாரித்தபோது பதில் சொல்லாமல் சிகரெட்டைப் பற்றவைத்தபடி சிரித்தார். அன்றிரவும் அவர் அந்தக் கதையை எழுதவில்லை.

0

சென்னை அவருக்குப் பிடித்திருந்தது என்பதைவிட சென்னை அவரைப் பிடித்திருந்தது. நண்பர்கள், கொண்டாட்டம் என்று சில வருடங்கள் கழிந்தன. உருப்படியாக எதையும் எழுதவில்லை. சில தொடர்கள், ஒரு தொடர்கதை என்று சமாளித்தார். செலவுக்கு காசு கிடைத்தது. வேண்டும்போது ஒரு கதையை எழுதிக் கொடுத்தார். தேவைக்கு மட்டுமே எழுதினார்.

எழுதுவது அவருக்கு இயல்பாக வாய்த்திருந்தது. சிரமமில்லாமல் எழுதிவிட முடியும். தனிச்சிறப்பு மிக்க மொழியும் தமிழில் அரிதாகவே காணக் கிடைக்கும் பகடியும் அவருக்கு வாய்த்திருந்தன. தனி முத்திரைக்காக அவர் மெனக்கெட வேண்டியிருக்கவில்லை.

‘பத்தரை மணி பஸ்ஸூக்கு வீடு திரும்பிவிட உத்தேசம். பெருவிரல் ரேகை மடிப்பில் தாலியைக் கோர்த்துக்கொண்டு நீதிகேட்க மனைவி நல்லாள் யாருக்கும் இன்னும் நான் வாழ்க்கைப் படவில்லை.’ (மீதியுள்ள ராத்திரி)

‘ஜன்னலோர இருக்கையிலோ, நான் பயணிக்க ஏறும் பஸ்ஸிலோ அவள் காணக் கிடைப்பாள். வர்ணம் மங்கியதோர் ஓவியம்போல. ஆராதனை மறுக்கப்பட் மூளிச்சிற்பம்போல. கண்கள் ஒளிமங்கி இடுங்கியிருக்கும். தூக்கம் துறந்து விண்மீன்களில் ராகவனைத் தேடுகிறாளோ என்னவோ? சொல்லொணா வேதனைகள் என்னுள் வந்துபோகும். என்ன ஒரு வசியம் அவளிடம். கரந்துறை படலத்தில் வாழ்கிற மகாராணியைப் போன்ற வசீகரம். தாராபுரத்திற்கும் கரந்துறைப் படலத்திற்கும் சம்பந்தமுண்டென்று பாரதம் பகர்கிறது.’ (வெளிச்ச நர்த்தனம்)

‘காலத்தாற் குன்றாது கருவறை அடைகாத்த வெப்பம்’, ‘குழநதையாயிருந்த காலம் கோதி விளையாடிய நெஞ்சை குத்தி அழக் கொடுப்பினையின்றி ஊரில் மருகியிருந்தாள் அம்மா.’ (சொல் பொருள் பின் வரும்)

‘ஆடு கறக்கவும் பூனை நக்கவுமான வாழ்க்கையில் வாயையும் வயிற்றையும் கட்டிச் சேர்த்த சேமிப்புகளும் பேதாமல் கடைசியில் வேலமரங்களைச் சாய்த்துத்தான் மகளுக்கு மாங்கல்யம் கழுத்தேற்றினார்.’ (நினைவுதிர் கால மரங்கள்)

‘பொளிதலின்போது நான் கிட்டே இருந்தால் எனது ‘இனிஷியலை’ பொறிக்கச் செய்வேன். பாலர் காலக் கல்வெட்டு’ (கால வகை)

‘பாவு பிணைத்தலினூடே அவள் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறாள். அவளது பூங்கனா படுத்திருக்கிறது. ‘கொங்கு மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. கண்ணே… உன்னை கவர்மென்ட் ஸ்கூலிலாவது சேர்க்கமாட்டேனா?’ (காலம் உடன் வரும்)

ஆனால், தன் எழுத்தின் வலிமையை தனிச் சிறப்பை அவர் உணரவில்லை. அல்லது உணர்ந்தும்கூட அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆகவேதான், அதை வெறும் தேவைக்கான கருவியாக கையாண்டார்.

உண்மையில் அவரது இயல்புதான் அது. எதையுமே கொண்டாட்டமாக, அந்த நொடிக்கான அம்சமாகக் காணும் பார்வையின் வெளிப்பாடு. எதையும் ஆழமாக அணுகும் போக்குக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்தார். வாழ்க்கை ஒரு கொண்டாட்டம், ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்கவேண்டும் என்ற மனநிலை. வெகு எளிமையான ஒரு மனிதனின் போக்கு இதுதான். இன்னும் கூர்ந்து பார்க்கப் போனால் ஒரு சித்தனின் மனநிலை. அவரது பால்ய காலமும் விடலைப் பருவமும் கிராமத்தில் கழிந்தவை. வானம் பார்த்த பூமி. நிரந்தரமற்ற விவசாயம். முயற்சிகள்தான் உண்டே ஒழிய திருவினைகள் வாய்த்ததேயில்லை. பெற்றோர், உறவினர், அண்டை அயலாரின் கைக்கும் வாய்க்கும் எட்டாத வாழ்க்கை அவருக்கு உவப்பில்லாத பல அனுபவங்களைத் தந்திருக்கிறது. அண்டாமாநதியைப் போலவே எக்காலத்திலும் அந்த வாழ்க்கையில் நீர்வரத்து இருந்ததில்லை. அன்றாடத்தின் துயரை, கசப்பை பேணிக்கொண்டிருந்தால் அது காலைச் சுற்றும் நாயைப் போல நம்மிடமிருந்து விலகிப் போகாது என்பதால் அவற்றை அவர் அண்டவிடாது விரட்டிக்கொண்டே இருந்தார். அதற்கு கருவியாக அவர் கையில் இருந்தவை பகடியையும் சுயஎள்ளலும்.

எழுத்து அந்த மண்ணிலிருந்து வெளியேற உதவியது. மீட்சியின் பாதையாக அல்லாமல் தப்பித்தலின் அவசர வழியாகவே அதைக் கையாண்டதுதான் துரதிர்ஷ்டம். எழுத்தின் வழியாக எதையும் சாதிக்கவோ அடையவோ அவர் உத்தேசிக்கவேயில்லை. அன்றாடங்களின் தேவைக்கான ஒரு கருவியாகவே எழுத்தை அவர் பயன்படுத்தினார்.

நண்பர்கள் பலரும் அவருக்கு உதவினார்கள். அவரது சிறப்பை உணர்ந்தவர்கள் இப்படி வீணடிக்காதே என்று ஆலோசனை கொடுத்தார்கள். ஆனால், அவர் தன் இயல்புக்கு ஏற்பவே வாழ்ந்தார். எழுதினார்.

முதல் தொகுப்பான ‘கன்னிவாடி’யில் உள்ள பல கதைகளும் அழுத்தமானவை. உத்தரவாதமற்ற விவசாய வாழ்வின் அவலங்களைச் சொல்லின ‘நாத்து’, ‘காவு’, ‘குரங்குப் பணியாரம்’, ‘அண்டமா நதிக்கரையில் ஒரு வீடு’ போன்ற கதைகள். வேலையற்ற இளைஞனின் பாடுகளைச் சொன்னவை ‘ஊதல் இசைபட வாழ்தல்’, ‘மீதியுள்ள ராத்திரி’ உள்ளிட்ட கதைகள். ‘மேகங்கள் தீர்ப்பதில்லை’, ‘சண்முக சித்தாறு’ போன்ற கதைகளின் வரியாக அபாரமான மனிதர்களை அவர் காட்டியிருக்கிறார். ‘வெளிச்ச நர்த்தனம்’, ‘பெருந்திணையும் ஓர் அணையும்’ போன்ற காதல் கதைகளும் உண்டு.

க.சீ இன்னொரு வகைக் கதைகளையும் எழுதிப் பார்த்திருக்கிறார். உரையாடல்கள் இல்லாத, நுட்பங்கள் கூடிய சித்தரிப்புடன் தீவிரமான மொழியில் கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டவை. ‘நிணநீர்ச்சுவடி’, ‘காற்றின் கானகம்’, ‘தீண்டாநாயகி’ ஆகியன.

அவர் நாவல் எழுத முயன்றாரா என்பது தெரியவில்லை. ஆனால், தொடர் கதைகள் எழுதினார். ‘ஆதி மங்கலத்து விசேஷங்கள்’ ஜூனியர் விகடனில் வெளியானது. சுவாரஸ்யமான குணச்சித்திரங்களைக் கொண்ட ‘குண சித்தர்கள்’ தொகுப்பில் பிரமாதமான பல கதைகள் உண்டு. இந்தக் கதைமாந்தர்களை, கண்டும் கேட்டும் அறிந்த சம்பவங்களை அவர் இப்படி நட்சத்திரங்களைப்போல இறைத்துவிட்டார். அவை கண்ணைப் பறிக்கின்றன, மினுமினுக்கின்றன. ஒளிவிடுகின்றன. அண்ணாந்து பார்க்கும்போது வசீகரிக்கின்றன. ஆனால், அவை நட்சத்திரங்களாக மட்டுமே நின்றுவிடுகின்றன அல்லது உதிர்ந்துவிடுகின்றன.

நிலவை எழுத முடிந்த ஒரு கலைஞன் நட்சத்திரங்களில் மட்டுமே நிறைவடைந்துவிடுவதாய் எப்படிப் புரிந்துகொள்வது?

0

 

 


No comments:

Post a Comment

ஆங்கில மொழியாக்கத்தில் என் கதைகள்

  சிலர் தங்களது வேலைகளை மட்டும் கவனமாகவும் சிரத்தையாகவும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். அங்கீகாரம், பரிசு, விருது ஆகியவற்றைப் பற்றி ப...